Jeyamohan's Blog, page 112
May 11, 2025
ஐரோப்பாவில் இந்திய தத்துவ அறிமுகம், இலக்கிய முகாம்
இந்திய தத்துவ சிந்தனை மரபை முழுமையறிவு அமைப்பு வழியாக சென்ற இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வகுப்புகளாக நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் ஐந்து அணிகளிலாக முந்நூற்றி இருபத்திரண்டு பேர் தொடர்ச்சியாக பங்கெடுக்கிறார்கள். தத்துவ பாடங்களின் ஆறாவது நிலை முடிந்துள்ளது.
அமெரிக்காவில் சென்ற அக்டோபரில் முதல் அறிமுக வகுப்பை நடத்தினோம். தொடர்ந்து முதல் வகுப்பு மீண்டும் வரும் அக்டோபரில் அமெரிக்காவில் வழக்கமான பூன் குன்றில் நிகழவுள்ளது. அங்கே இரண்டாவது நிலை வகுப்பும் நிகழவுள்ளது.
ஐரோப்பாவில் முதல் இந்திய தத்துவ முகாம் நிகழவுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஐரோப்பா சார்பில் இது ஒருங்கிணைக்கப் படுகிறது. இது இந்து தத்துவ முதல்நிலை அறிமுக வகுப்பு.
நான்கு நாட்கள் நிகழும் முகாமில் தத்துவ அறிமுகம் இரண்டரை நாட்கள். ஒரு நாள் இலக்கிய அரங்கம் நடத்தப்படும்.
ஆர்வமுள்ள நண்பர்கள் பதிவு செய்துகொள்ளலாம். எவரும் பங்கெடுக்கலாம்.
நடைபெறும் நாட்கள் : ஜூலை 10,11,12 மற்றும் 13.
நடைபெறும் இடம் : Salzburg, Austria
பதிவு செய்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: sharmi.neela@gmail.com
ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ராஜு
நிபந்தனைகள்1. முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாத எவரையும் அழைத்துவர அனுமதி இல்லை.
2. பங்கேற்பாளர்கள் முழு வகுப்புகளிலும் கலந்துகொள்ள வேண்டும். (தத்துவத்தில் மட்டும் ஆர்வமுடையவர்கள் தத்துவ வகுப்பில் மட்டும் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும்)
3. முன்பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட தகவல்களை அளித்து மின்னஞ்சல் செய்யவேண்டும்.
பெயர்வயதுவிலாசம்தொலைபேசி எண்4. இது செலவுப் பகிர்வு அடிப்படையில் நடத்தப்படுவது. அது பதிவு செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும்
வகுப்புகள் பற்றி* இந்த வகுப்புகள் இந்து தத்துவ இயல் பற்றியவை மட்டுமே. பௌத்த, சமண தத்துவ இயல்கள் இவ்வகுப்பில் கற்பிக்கப்படாது. மேலைத்தத்துவமும் கற்பிக்கப்படாது. அவற்றுக்கு வேறு வகுப்புகள் உள்ளன. அவை பின்னர் நடத்தப்படலாம்.
* இந்த வகுப்புகள் ‘ஆன்மிக’ வகுப்புகள் அல்ல. மதக்கல்வியும் அல்ல. தத்துவம் என பரலவாக இங்கே நம்பப்படுவது சத்சங்கம், உபன்னியாசம் போன்றவற்றையே. அவை நற்கருத்துக்களை போதனை செய்பவை. தத்துவக் கல்வி என்பது முற்றிலும் வேறொன்று.
* தத்துவக்கல்வி அறிவார்ந்தது, தர்க்கபூர்வமானது, வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்துகொள்ளப்படவேண்டியது.
* தத்துவக் கல்வி ஒற்றைப்படையானது அல்ல. எல்லா தரப்புகளையும் இணைத்துக் கற்கவேண்டியது அது. ஆகவே முரண்படும் தரப்புகளை இணையான முக்கியத்துவத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
* ஒரு தத்துவ வகுப்பு அதற்குரிய கறாரான ஒழுங்குமுறையுடன் மட்டுமே நிகழ முடியும். அதற்கான நிபந்தனைகளுக்கு ஏற்புடையவர்கள் மட்டுமே அதில் பங்குபெற முடியும்.
* முறையான தத்துவக் கல்வி என்பது உதிரிக் கருத்துக்களாக நாமறிந்த பலவற்றையும் சரியான கோணத்தில் முழுமையாக புரிந்துகொள்ள உதவியானது. அதன் முதல்தேவை என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றில் இருந்து விடுபட்டு முன்னகர்வதற்கான முனைப்பு. ஆகவே கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
* இந்த வகுப்புகள் தொடர்ந்து ஆண்டுதோறும் அடுத்தடுத்த நிலையின் வகுப்புகளாக நடத்தப்படும்.
ஜெயமோகன்
அடுத்த தலைமுறையிடம் எதைப்பேசவேண்டும்?
அடுத்த தலைமுறையிடம் பேசுவதென்பது எப்போதுமே ஒரு பெரிய சவால்தான். அறிவுரைகள் அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன. ஏனென்றால் அவர்களின் உலகில் அவை பெறுமானம் அற்றவை. அறிவுரைப்பவனின் உலகை அவர்கள் அறிவதுமில்லை. என்ன பேசவேண்டும்?
பெருங்கனவுகளின் முகப்பில்…
இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான குழப்பம் ஏற்பட்டது. அதையொட்டி ஒரு கேள்வி.
இணையத்தில் ஏராளமானவர்கள் வெண்முரசு நூல்களை படிப்பதையும், கூட்டுவாசிப்பில் ஈடுபட்டிருப்பதையும், கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். இந்தப் வெண்முரசு வெளிவந்தபோதிருந்தே அது தீவிரமாக வாசிக்கப்படுகிறது. அது முழுமையடைந்தபிறகு அதை வாசிப்பவர்கள் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள். தமிழில் எந்த ஒரு இலக்கியப்படைப்பும் இந்தவகையான தீவிரமான வாசிப்பைப் பெற்றதில்லை. உங்கள் படைப்புகளிலேயேகூட இந்த அளவுக்கு வாசிப்பு எந்த நூலுக்கும் கிடைத்ததில்லை என நினைக்கிறேன். அனேகமாக தினம் ஒரு விமர்சனமோ குறிப்போ என் பார்வைக்கு வந்துகொண்டிருக்கிறது.
வெண்முரசு (வெண்முரசு தொடங்கும்போது நான் பிளஸ்டூ படித்துக்கொண்டிருந்தேன்) பொன்னியின் செல்வன் அறிவிப்பு வந்தபோதுதான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டேன். இன்று எட்டு முறை முழுமையறிவு நிகழ்ச்சிகளுக்கு வந்துவிட்டேன். என் நட்புவட்டாரத்திலேயே பலர் வெண்முரசு முடித்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டுமுறை படித்தவர்கள் கூட இருக்கிறார்கள். நான் முதல் நான்கு நூல்களை படித்திருக்கிறேன்.
படித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைப்பற்றி ஏதேனும் சொல்வதற்கிருக்கிறது. காணொளிகளாகவும் ஒலிப்பதிவுகளாகவும் வெண்முரசு பெரும்பாலும் கிடைக்கிறது. வெண்முரசு வரிகள் தனித்தனியாக ஆயிரக்கணக்கில் இணையம் முழுக்க பரவியிருக்கின்றன. அதைக் கேட்டவர்களும் கேட்பவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். வெண்முரசு முழுமையாக இணையத்தில் கிடைத்தாலும் மொத்தநூல்களையும் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே அதற்கான ஒரு அழுத்தமான வாசகர்வட்டம் உருவாகியிருக்கிறது.
இன்றைக்கு வெண்முரசு வாசிக்கப்படுவதில்லை என்று அடிப்படை அறிவுள்ள எவரும் சொல்வதில்லை. ஆனால் வெண்முரசு வாசிப்பவர்களை உங்களுடைய பக்தர்கள், அடிப்பொடிகள், வட்டம் என்றெல்லாம் கேலிசெய்கிறார்கள்.வெண்முரசு வாசிப்பவர்கள் தங்களை பற்றி உயர்வாக எண்ணிக்கொள்கிறார்கள் என்ற வசைகள் காணக்கிடைக்கின்றன. அவர்களின் எரிச்சல் ஆற்றாமை எல்லாம் புரிகிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே எந்த நவீன இலக்கியநூலும் ஐந்தாண்டுகள் கழித்து பேசப்படுவதே இல்லை. சிலசமயம் ஆழமான நூல்கள்கூட பேசப்படுவதில்லை.
அண்மையில் வெண்முரசு பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை வாசித்துவிட்டு எனக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்த இடதுசாரி நண்பர் எரிச்சலுடன் சொன்னார். ‘இதையெல்லாம் சேத்தா அந்தாள் எழுதினத விட ரெண்டு மடங்கு இருக்கும் போலயே’. ஆனால் அது உண்மைதான்.
அதேசமயம் நான் கவனித்த ஒன்று உண்டு. பழைய பதிவுகளைத் தேடிப்பார்த்தால் வெண்முரசு வெளிவந்து கொண்டிருந்த போதும் , வெளிவந்து முடிந்த பின்னரும் , அதைப்பற்றி ஏராளமாக எதிர்த்து எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் எவரென்றே தெரியாத சிறிய எழுத்தாளர்கள் அவர்கள். ‘வெண்முரசை வரும் வாசிக்கப்போவதில்லை, யாரும் வாசிப்பதில்லை, வீம்புக்காக ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது, அதற்கு சமகாலத்துடன் எந்த உறவும் இல்லை, அதற்கு சரித்திர ஆதாரம் இல்லை, ஆகவே அது நூலக அடுக்கில் தூங்கும்’ என்றெல்லாம் சிலர் எழுதித்தள்ளியிருக்கிறார்கள். வெண்முரசை நீங்கள் அறிவித்தபோதே ஞாநி உள்ளிட்ட பலர் அப்படி எழுதியிருக்கிறார்கள். ‘காகித வீணடிப்பு’ என்றும் எழுதியிருக்கின்றனர்.
அந்த எதிர்ப்புகளுக்கும் ஏளனங்களுக்கும் பல படிநிலைகள் உள்ளன. ‘வெண்முரசு எழுதவேண்டியதே இல்லை என்றும், எவருமே வாசிக்கப்போவதில்லை’ என்றும் ‘வெட்டிவேலை’ என்றும் முதலில் சொன்னார்கள். ‘முடிக்கவே போவதில்லை’ என்று அதன்பின் சொன்னார்கள். அதன்பின் ‘அதை வாசகர்கள் கைவிட்டுவிட்டனர், எவருமே வாசிப்பதில்லை’ என்றார்கள். அதன்பின் ‘எல்லாரும் அதை மறந்துவிட்டனர்’ என்றார்கள். இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வெண்முரசு பற்றி இதெல்லாம் சொல்வதற்கு முன் அது உண்மையில் என்ன என்று கூட அவர்கள் புரட்டிப் பார்த்ததில்லை என்றே தெரிகிறது.
இன்றைக்கு அந்த எதிர்ப்பு எழுத்துக்களை ஒரே இரவில் படிக்கையில் அதை எழுதியவர்களை எண்ணி ஆச்சரியம்தான் வருகிறது. அவர்களுடைய ஆற்றாமை புரிகிறது. அவர்கள் எழுதியவற்றை அவர்களே இன்றைக்குப் படிக்கமாட்டார்கள். சரித்திரத்தில் தூசிமாதிரி இவர்கள். ஆனால் வெண்முரசு போன்ற ஒரு படைப்பை எழுதும்போது இந்த வகையான நையாண்டிகளும் எதிர்ப்புகளும் உங்களுக்குச் சோர்வை அளிக்கவில்லையா? குறைந்தபட்சம் எரிச்சலையாவது அளிக்கவில்லையா? எப்படி இந்த அற்பத்தனங்களைக் கடக்கமுடிந்தது?
நான் பெரிய விஷயங்களைச் செய்யவேண்டும் என்னும் கனவுடன் இருப்பவன். ஆனால் ஒரு சாதாரணச் செயலைச் செய்யும்போதே எனக்கெல்லாம் இந்த வகையான அற்பத்தனங்கள் அளிக்கும் கடுப்பு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இதை எப்படிக் கடப்பது?
ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஸ்ரீராம்,
உங்கள் கடிதத்தின் கடைசிப் பத்திக்காக மட்டும் இந்தப் பதில். பெரிய விஷயங்களைச் செய்யவேண்டும் என்னும் கனவு இளமை முதல் ஆட்கொண்டிருப்பதென்பது மிகப்பெரிய ஒரு ஆசி. அது வாழ்க்கையை சலிப்பற்றதாக ஆக்குகிறது. சில்லறை விஷயங்களில் சிக்கிக்கொண்டு நாட்களை வீணாக்காமல் தடுத்துவிடுகிறது. நம்மை நாமே எண்ணி நிறைவுகொள்ளச் செய்கிறது. அக்கனவுடன் வாழ்பவர்களே அளிக்கப்பட்ட வாழ்க்கையை மெய்யாகவே வாழ்கிறார்கள்.
உண்மையில் பெருங்கனவு கொண்டவர்களுக்கு மிகப்பெரிய தடை சிறிய திட்டங்களுடன் சிறியவாழ்க்கை வாழ்பவர்களே. பெருஞ்செயலுக்குக் கனவுகாணும் ஒருவன், அதற்கு முயல்பவன் அந்த சிறிய வாழ்க்கை கொண்டவர்களை அச்சுறுத்துகிறான். அவர்களை தங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சிக்கும், ஆற்றாமைக்கும் தள்ளிவிடுகிறான். ஆகவே அவர்கள் அவனை கொசுக்கள் போல மொய்த்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒரு பெரிய புறத்தடைதான்.
ஆனால் அவனுக்குரிய அகத்தடைகளுடன் ஒப்பிட இந்தப் புறத்தடைகள் ஒரு பொருட்டே அல்ல. அகத்தடைகள் பலவகை. முதல்விஷயம் அவன் செய்ய எண்ணும் அந்தப் பெருஞ்செயல் மேல் உருவாகும் அவநம்பிக்கைதான். அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பயன், அதை எவர் மதிப்பார்கள், யாராவது வாசிக்கிறார்களா, எதிர்காலம் அதை மறந்துவிடுமா என்றெல்லாம் உள்ளிருந்து ஒரு தீவிரமான சோர்வு உருவாகும். அதுவே மிகப்பெரிய அகத்தடை.
அந்தப் பெருஞ்செயலால் இழப்பவற்றைப் பற்றிய சார்ந்த ஆசையும் ஏக்கமும் அடுத்த பெருந்தடை. ஒன்றையே இலக்காக்கிச் செல்வதனால் சிறிய பலவற்றை இழந்துவிடுகிறேனா என்னும் குழப்பம் வந்துகொண்டே இருக்கும். சாமானிய வாழ்க்கையின் இன்பங்கள், சாமானியருடனான உறவு எல்லாம் இல்லாமலாகிறதா என்று அகம் தடுமாறும். உலகியலில் இருந்துகொண்டு நம் நலம்நாடும் அணுக்கமான நம் உறவுகள் அதைச் சொல்லிச் சொல்லி நம்மை பின்னுக்கிழுத்தபடியே இருப்பார்கள்.
இப்படி பல தடைகள். நுணுக்கமாகப் பார்த்தால் வெளியே நம்மைக் கடிக்கும் கொசுக்கள் அல்ல உண்மையான பிரச்சினை. அவர்கள் எளிய தொல்லைகள். ஆனால் அவர்கள் நம்முடைய முதன்மை அகத்தடையாகிய ஐயங்களைத்தான் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் கொஞ்சம் செவிகொடுத்தாலே நம் அகம் அந்த ஐயங்களால் இருள ஆரம்பித்துவிடும்.
நான் கொசுக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்களை அன்றுமின்றும் அனுதாபத்துடன் புரிந்துகொள்கிறேன். அவர்கள் எனக்கு அணுக்கமானவர்களாக இருந்தால் முற்றிலும் விலக்கிவிடுவேன். ஏனென்றால் அவர்கள் செயலாற்றுவதற்கு இடர் விளைவிக்கிறார்கள். எனக்குத் தொடர்பற்றவர்கள் என்றால் என் உலகில் அவர்கள் இல்லை என்றே எண்ணிக்கொள்வேன். ஆகவே நீங்கள் குறிப்பிடும் எதிர்ப்புகள், நையாண்டிகள், ஆலோசனைகள் எதையுமே நான் அறிந்ததே இல்லை என்பதே உண்மை.
வெண்முரசு போன்ற ஒரு படைப்பு அவர்களைச் சிறிதாக்குகிறது, அவர்களின் இருப்பையே அணுவளவாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் என்னதான் செய்யமுடியும்? அந்த ஆற்றாமையை அழுதுகூட தீர்க்கக்கூடாது என்று சொல்லக்கூடுமா என்ன? முதலில் புலம்புவர்கள். பின்னர் அந்தச்சாதனை நிகழவே இல்லை, அதை நாங்கள் பார்க்கவே இல்லை என்று பாவனை செய்வார்கள். அவர்களும் இங்கு வாழ்ந்தாகவேண்டுமே.
ஒருமுறை ஒரு சினிமா அலுவலகத்தில் பொன்னியின் செல்வன் நூல் மேஜைமேல் இருந்தது. அதை ஒரு தயாரிப்பாளர் கையில் எடுத்துப் பார்த்தார். அவரிடம் திகைப்பு ‘இது என்ன சார்?” என்று என்னிடம் கேட்டார்.
அது கதை என்றும், அதை மக்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னேன்.
‘இவ்ளவு பெரிய புக்கையா? படிக்கிறாங்களா? எவ்ளவு வருசம்சார் ஆகும் படிக்க?’ என்றார்.
அண்மையில் நான் ஐந்து நாளில் முடித்தேன் என்றேன். திகைத்துவிட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு வாட்ஸப் செய்தியையே மெதுவாக படிப்பவர் அவர்.
அவரைப் போன்றவர்களே தமிழகத்தில் 90 சதவீதம் பேர். இங்கே முகநூலில் உலவுபவர்கள் அவர்களைவிட கொஞ்சம் மேல், ஒரு பத்து பக்கம் வரை அவர்களில் சிலரால் வாசிக்கமுடியும். சோட்டா எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் மேல், அவர்கள் ஆண்டுக்கு இருநூறு பக்கம் வரை வாசிப்பார்கள். அவர்கள் தங்கள் அளவைக் கொண்டே பிற அனைவரையும் பார்ப்பவர்கள். அவர்களால் உண்மையான வாசகர்களை புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு நல்ல வாசகன் வெண்முரசு போன்ற படைப்பில் இருந்து பெறுவதென்ன, அவன் அடையும் அகநிலை என்ன என்றெல்லாம் உணரவே முடியாது. அவன் எப்படி வாசிக்கிறான் என்றுகூட புரியாது.
வெண்முரசுக்கு மட்டும் அல்ல, ஆயிரம் ஆண்டு கடந்த கம்பராமாயணத்திற்குக் கூட இன்னும் தீவிரமான வாசக உள்வட்டம் உள்ளது. நம் இம்பர்வாரி வாசகர்களின் குழுமம் கம்பராமாயணத்தை வாசித்து முடிக்கவிருக்கிறது. வெண்முரசு வாசிக்கப்பட்டு முடிந்தபின் அதே உணர்வுநிலையுடன் வாசிக்கத்தக்க இன்னொரு நூல் தேவை என எண்ணி அவர்கள் கம்பராமாயணத்துக்குச் சென்றார்கள்.
கம்பராமாயணம் என்றுமே ’பொதுமக்களால்’ படிக்கப்படாது. அந்தந்த காலத்தில் பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வந்துகொண்டே இருக்கும். கூளப்பநாயக்கன் காதலும் விறலிவிடுதூதும்தான் அவை வெளியான காலகட்டத்தில் புகழ்பெற்றவை. ஆனால் கம்பராமாயணம் அப்போதும் ஒரு தீவிர வாசகர் வட்டத்தால் படிக்கப்பட்டது. அதன் பின்னரும் பட்டது. என்றும் படிக்கப்படும். தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாக என்றும் இருந்துகொண்டிருக்கும். அதைத்தவிர்த்து தமிழை எண்ணமுடியாது.
வெண்முரசு சமகாலப் பிரச்சினைகளைப் பேசுகிறதா? சமகாலப் பிரச்சினைகளைப் பேசும் படைப்புகள் உண்டு, அவை சமகாலத்தைக் கடக்காது. சமகாலத்துக்கு அவை தேவைதான். ஆனால் மானுடனின் என்றுமுள்ள பிரச்சினைகளைப் பேசும் நூல்களே செவ்வியல் படைப்புகள். ஆகவே செவ்வியல் நூல்கள் என்றுமுள்ள ஒரு களத்தில் வைத்தே மானுடப்பிரச்சினைகளைப் பேசும்.
உதாரணமாக, கம்பராமாயணம் சோழர்கால யதார்த்ததைச் சொல்லும் காவியம் அல்ல, அதில் சோழநாடே இல்லை. கம்பராமாயணம் நிகழும் களம் வழிவழியாக வந்த தொன்மங்களுக்குரிய உலகம். தொன்மங்கள் அகாலத்தில் நிலைகொள்பவை. சிலப்பதிகாரமோ, சீவகசிந்தாமணியோகூட அப்படித்தான். அவை சமகாலத்தை காட்டுபவை அல்ல. ஆனால் கம்பராமாயணத்தில் சோழர் காலகட்டத்து எல்லா அகச்சிக்கல்களும் உண்டு. முழு மானுடகுலத்திற்குமான சிக்கல்களாக கருதியே அவற்றை கம்பன் பேசியிருப்பான்.
இலக்கியத்தில் மானுடனின் என்றுமுள்ள பிரச்சினைகளை நாடுபவர்களே செவ்வியல் நூல்களை வாசிக்கிறார்கள். சமகாலப் பிரச்சினைகளை நாடுபவர்களுக்கு செவ்வியல் படைப்பு உரியது அல்ல. அப்பிரச்சினைகள் அன்றாடம் சார்ந்தவை, அதற்கான எழுத்தும் அன்றாடம் சார்ந்ததே. அத்தகைய எழுத்துக்கள் அன்றாடம் தோன்றி, வாசிக்கப்பட்டு, மறையும். தல்ஸ்தோய் ஆனாலும், வெண்முரசு ஆனாலும், கம்பன் ஆனாலும், ஹோமர் ஆனாலும் செவ்வியலின் வாசகர்கள் முற்றிலும் வேறு. அவர்கள் என்றும் இருப்பார்கள்.
நவீனச் சூழலில் நாம் இன்னொரு மனநிலைக்கும் பழகிவிட்டிருக்கிறோம். அதை நுகர்வு மனநிலை எனலாம். நுகர்வோனைக் கருத்தில்கொண்டே எதையும் அணுகுவது. உற்பத்தி என்பது நுகர்வோனின் தேவைக்கும் ரசனைக்கும்தான் என்னும் கொள்கை. இந்த மனநிலையே நவீனத்துவத்தின் அடிப்படை. இலக்கியப் படைப்புகள் சமகால வாசகனின் வாசிப்புக்காக எழுதப்படுபவை என்பது அதன் நம்பிக்கை. அவனே அதை தீர்மானிக்கவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நவீனத்துவ (Modernist) பார்வையில் சமகால வாசகனுக்கு தொடர்புறுத்துவதற்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. அவனுக்கு தொடர்புறவில்லை என்றால் அப்பகுதி தேவையற்றது. நவீனத்துவ வாசகன் எந்த நூலை படித்தாலும் ‘கொஞ்சம் நீளம்’, ‘இன்னும் சுருக்கியிருக்கலாம்’, ‘இந்தப்பகுதி தேவையே இல்லை’, ‘இதெல்லாம் ஜாஸ்தியா இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதைக் காணலாம். நவீனத்துவம் பின்நவீனத்துவத்தால் நொறுக்கப்பட்டு, அதற்கடுத்த பின்பின்நவீனத்துவ காலமும் வந்துவிட்டது. ஆனால் அந்த மனநிலையில் உறைந்தவர்களால் வெளியேற முடியாது.
ஒரு செவ்வியல் படைப்புக்கு சமகால வாசகன் என்பவன் இல்லை. அது எப்போதைக்கும் உரிய பிரச்சினைகளைப் பேசுவது. அதற்காகவே காலம் அற்ற ஒரு கதைவெளியை எடுத்துக்கொண்டிருப்பது. ஆகவே அதன் வாசகனும் காலம்கடந்த ஒருவனே. என்றும் வந்துகொண்டே இருப்பவன் அவன். ஆகவே எந்தச் செவ்வியல் ஆக்கமும் சமகால வாசகனை இலக்காக்கி அவனுக்குப் புரியும்படியும் அவனுக்குப் பிடிக்கும் படியும் வெளிப்படாது. அது உருவாகும்போதுள்ள காலம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல.
உதாரணமாக, விஷ்ணுபுரத்தின் சிறந்த வாசகர்கள் அது வெளிவந்த பின் பிறந்தவர்கள். அது வெளிவந்த காலகட்டத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு அன்று பெருமளவில் வாசிக்கப்பட்ட பல படைப்புகளின் பேசுபொருளும் சூழலும் பழையதாகிவிட்டன. ஆகவே அவை இன்றைய இளைஞர்களால் வாசிக்கப்படுவதே இல்லை. விஷ்ணுபுரத்திற்கு அந்தச் சமகாலத்தன்மை இல்லை. அது 2030 வாக்கில்தான் ஆங்கிலத்தில் சர்வதேசப்பதிப்பாக உலகவாசகர்களை நோக்கிச் செல்லவிருக்கிறது.
வெண்முரசின் இன்றைய மிகச்சிறந்த வாசகர்கள் அது எழுதப்படும்போது சிறுவர்களாக இருந்தவர்கள். அவர்கள் பழைய வாசிப்பின் சுமை இல்லாதவர்கள். ஆகவே இயல்பாக அதனுள் நுழைய அவர்களால் முடிகிறது, அதை நுணுக்கமாக உணரமுடிகிறது. அவர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள், அவர்களுக்கு என்றும் புதியதாக வெண்முரசு இருந்துகொண்டும் இருக்கும்.
அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு, அது அழகியல் நிறைவு. செவ்வியல் நாடுவது அழகியல்நிறைவை மட்டுமே. இதை நான் திரும்பத் திரும்ப விளக்கியிருக்கிறேன். கோபுரங்களிலுள்ள அத்தனை ஆயிரம் சிற்பங்களும் எவரேனும் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. ஒட்டுமொத்தமாக அவை எல்லாம் இணைந்து ஒரு வடிவ நிறைவை உருவாக்குகின்றன, அதையே செவ்வியலும் இலக்காக்குகிறது.
ஒரு மரம் ஏன் இலைகளே இல்லாமல், கிளைதாங்காமல் பூக்கவெண்டும் என்று கேட்போமா என்ன? தேவைக்குத்தான் மலர் என்றால் எதற்கு அத்தனை மலர்கள்? அது மரத்தின் முழுமைவெளிப்பாடு, இயற்கையின் வெளிப்பாடு. அவ்வாறே எந்தச் செவ்வியல்படைப்பும் ஓர் ஆசிரியரின், ஒரு பண்பாட்டின் முழு வெளிப்பாடு. எவருமே பார்க்கவில்லை என்றாலும் மலர்கள் மலரும். எவருமே வாசிக்கவில்லை என்றாலும் செவ்வியல் நிகழும்.
உங்கள் கேள்விக்கே வருகிறேன். உங்கள் செயல் மகத்தானது எனில் அது உங்களுடைய, உங்கள் சமூகத்தின் முழுமையின் ஒரு வெளிப்பாடே. அதற்கு எவருடைய ஏற்பும் தேவையில்லை. எவரும் அதை அறியவும் தேவையில்லை. அதை நிகழ்த்தும்போது நீங்கள் மலர்ந்து கொப்பளிக்கிறீர்கள். முழுமை கொள்கிறீர்கள். அதன்பொருட்டு மட்டுமே செயல்படுங்கள். அச்செயலில் நீங்கள் அடையும் நிறைவே அதன் பயன். வெண்முரசு எழுதியதும் நான் என்னை கடந்துசென்றேன், வெண்முரசு எழுதிநிறைந்ததே எனக்கான பயன். அதன்பின் அடுத்த படைப்புகளுக்கு நகர்ந்தேன்.
உங்களில் நிகழும் அந்த உச்சத்தை எளியோர் புரிந்துகொள்ளமுடியாது. உச்சங்களையே பொதுவாக எளிய உள்ளங்களால் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே உங்கள் உலகில் அவர்களுக்கு இருப்பே தேவையில்லை. அவர்கள் வாழ்ந்து மறையும் ஒரு சிறு உலகம் உண்டு, அங்கே நீங்கள் செல்லமுடியாது. அவர்களும் இங்கு வரமுடியாது. அந்த தெளிவே பெருஞ்செயல் புரிவோனுக்கு இருந்தாகவேண்டிய அடிப்படை.
ஜெ
இம்பர்வாரி வாசகர்களின் குழுமம்(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887) இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா? மழைக்காவியம் ஊழின் பெருங்களியாட்டு – அருணா ஐந்து முகங்கள் – கடிதம் காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை வெண்முரசின் குரல்கள் அன்பெனும் மாயை -கலைச்செல்வி இளமையின் வண்ணங்கள்- கடிதம் குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன் தீ – கடிதம் மழையின் காவியம் விண்திகழ்க! கனவின் நுரை மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும் மலர் மயங்கியறியும் மெய்மை தளிர் எழுகை அன்னைவிழிநீர் அறிகணம் ஊழ்நிகழ் நிலம் எங்குமுளப் பெருங்களம் மைவெளி ஊழின் விழிமணி அனைத்தறிவோன் விழிநீரின் சுடர் மீண்டெழுவன களிற்றியானை நிரை – ஆதன் களிற்றியானை நிரை ‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவ ணன் இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன் கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன் ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை ‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை ‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன் ‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் – தமிழ் விக்கி
காவியம் – 21
இடிந்த அரண்மனை வாசல், பைத்தான்பைத்தானில் நாங்கள் அனைவருமே ஆயிரம் ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் அரண்மனைகளின் வாசல்களின் முன்னால்தான் வாழ்ந்தோம். எல்லா பக்கமும் மூடப்பட்ட ஒரு மாளிகை என்பது உண்மையில் மாளிகையே அல்ல. அவை முழுக்க மூடிய சுவர்கள் அல்ல, மாளிகைகளே என்பது அவற்றின் முகப்பில் இருந்த வாசல்களால்தான். தொன்மையான மாபெரும் வாசல்கள், அவற்றில் ஒருபோதும் திறக்கப்படாத பெரிய கதவுகள். அந்த வாசல்களுக்கு அப்பால் நாங்கள் அறிந்த எவரும் சென்றதில்லை. அந்த வாசல்களை திறக்க முயன்றதுமில்லை. இறுக இமைமூடப்பட்ட கண்கள் போல அவை நின்றிருந்தன. ஆனால் அவற்றுக்குப் பார்வை இருந்தது. அந்த வாசல்களின் இடுக்குகள், இடிந்த மதில்களின் விரிசல்கள் வழியாக அப்பாலிருந்து எவரோ எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களூர்க்காரர்கள் அந்த வாசல்களின் முன்னாலிருக்கும் ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் கோதாவரியின் நாககட்டத்திற்குச் சென்றனர். ஒவ்வொருநாளும் பலமுறை அவற்றைக் கடந்து சென்றனர். தொடர் பழக்கத்தால் அவற்றை பார்க்காமலாயினர். ஆனால் அவர்கள் அனைவருமே அந்த மூடிய வாசல்களின் பார்வையை தங்கள் உடல்களில், பிடரிகளில் உணர்ந்துகொண்டுதான் இருந்தனர். கனவுகளில் அவற்றைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு நடுங்கினர். சீதளை அன்னையின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டு, ஒரு குவளை நீர் அருந்தியபின் மீண்டும் படுத்துக்கொண்டனர்.
அன்றெல்லாம் எங்கள் ஊரில் எவர் வீட்டிலும் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறைக்காக சுடுகாட்டுப் பக்கத்திலிருந்த முட்புதர்க்காடுகளுக்குத்தான் ஆண்களும் பெண்களும் செல்வார்கள். பெண்கள் இரவு கவிந்த பின்பு அல்லது விடியல் நிகழ்வதற்கு முன்பு முட்டைபோன்ற கண்ணாடிக்குமிழ் கொண்ட சிறிய எண்ணை விளக்குடன் கூட்டமாக செல்வார்கள். என் இளமைப்பருவத்தில் ஓரிருவர் பாம்பு கடித்து இறந்ததும் உண்டு. ஆண்கள் எந்நேரத்திலும் செல்லலாம்.எப்போது சென்றாலும் அங்கே ஓரிருவர் இருந்துகொண்டிருப்பார்கள்.
எங்கள் ஊரின் கஞ்சா இழுக்கும் கும்பல் அந்த நாற்றத்தில் அங்கே தங்களுக்கான இடங்களை உருவாக்கிக் கொண்டு பகல் முழுக்க அமர்ந்திருக்கும். சிலர் அங்கேயே முழு வாழ்க்கையையும் செலவிடுபவர்களாகவே தோன்றுவார்கள். அங்கே மரக்கிளைகளில் சட்டைகளையும் நிஜார்களையும் கழற்றி வைத்திருப்பார்கள். பாய்விரித்து தூங்குவார்கள். அங்கே இருப்பது அவர்களுக்கு கஞ்சா இழுப்பதன் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது. அவர்கள் ஊருக்குள் வரும்போது குன்றி, தலைகுனிந்து, மெலிந்த சிறிய காலடிகளுடன் விரைவாகச் செல்வார்கள். மலநாற்றம் நிறைந்த கோதாவரிக்கரையில் அவர்கள் சிரிப்பார்கள், கூச்சலிடுவார்கள், சண்டைபோடுவார்கள்.
மிக அருகே புதர்களின் திரைக்கு அப்பால் இடைவெளிகளை மின்னச்செய்தபடி கோதாவரி சென்று கொண்டிருக்கும். அங்கிருந்து வெவ்வேறு பேச்சுக்குரல்களும் இசையும் காற்றின் அலைகள் வழியாக அடித்துக்கொண்டு வந்து காதில் விழுந்து மறையும். துண்டுத் துண்டு ஒலிகள். ஒற்றைச் சொற்கள். பாடல்களின் ஒரு வரி முனகல், இசைக்கருவியின் ரீங்கரிப்பின் ஒரு இறகு. கோதாவரி அங்கே அகன்று நீர் ஓடும் சத்தமே இன்றி அசைவில்லாத ஏரிபெருக்கு போல தெரியும். நீரின் அலையொளி சரிந்து தழைந்து நின்ற மரங்களின் இலைகளின் அடியில் நெளிந்துகொண்டிருக்கும்.
நாற்றமும் குப்பைகளும் மிகுந்த இடமாயினும் ஏனோ அது எனக்குப் பிடித்திருந்தது. அங்கே இருக்கையில் நான் எவரைப்பற்றியும் பயப்பட வேண்டியதில்லை என்று தோன்றும். மண்ணுக்கு அடியில் எலிபோல வளைபோட்டு சென்று பதுங்கியிருப்பது போல. அங்கே எனக்கான தனி இடங்கள் இருந்தன. முள்மரங்களுக்கு அடியில் பன்றிகள் தோண்டி வைத்திருக்கும் மென்புழுதிக் குழிகள். மரங்களின் கிளைக்கவைகள். எருமையின் முதுகுபோல புடைத்த ஒரு பாறை. அங்கே அமர்ந்து நான் கற்பனையில் மூழ்குவேன். எனக்கான உலகங்கள், எனக்கான மக்கள், எனக்காவே எல்லாம் நிகழும் ஓர் உலகம்
அங்கே செல்லும் வழி எங்கள் ஊரிலிருந்து புதர்களினூடாகச் சென்று, ஒற்றையடிப்பாதையாக மாறி, சரிந்து புதர்க்காடுகளை அடைந்து, இருபக்கமும் செறிந்த முள்மரங்களின் நடுவே ஊடுருருவி கோதாவரியின் கரையை அடையும். ஓடும். மென்புழுதி படிந்து, காலடித்தடங்களும் மாடுகளின் குளம்புச்சுவடுகளும், உலர்ந்த சாணியுமாக கிடக்கும் அந்தப்பாதை ஓர் ஓடை போல முடிவில்லாது வழிந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். நான் அந்தப்புழுதியில் நின்றபடி அது என்னை விசையுடன் எடுத்துக்கொண்டு கோதாவரி நோக்கிச் செல்வதாக எண்ணிக்கொள்வேன்.
அந்தப்பாதையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மாளிகைகளின் கருமையோடிய கற்சுவர்கள் மேல் முட்புதர்களும் புல்லும் முளைத்து கருகி சிலிர்த்த பன்றியின் பிடரிமயிர் போலிருக்கும். யாருக்கும் தெரியாத காலம் முதலே அந்த மாளிகைகள் இடிந்து கூரையற்ற சுவர்களாகவும், அவற்றில் மூடிய பெரிய கதவுகளாகவும் நின்றிருந்தன. அக்கதவுகள் வெளியே பூட்டப்பட்டிருக்கவில்லை, உள்ளிருந்து இறுகமூடப்பட்டிருந்தன. அவை பெரிய வீடுகள் என்று நான் புரிந்துகொள்ளவே பல ஆண்டுகளாகியது. சிறுவனாக இருக்கும்போது அண்ணாந்து பார்க்கையில் அவற்றின் விளிம்புக்கு மேலே மேகங்கள் ஒழுகும் நீலவானம்தான் தெரியும். அவற்றின் ஒவ்வொரு கல்லும் இரு கைகளை விரித்தாலும் அள்ளமுடியாத அளவுக்குப் பெரியவை. நீள்சதுரங்களாக வெட்டி அடுக்கப்பட்டவை.
அந்தக்கதவுகளுக்கு அப்பால் யாரோ அவற்றை மூடிவிட்டனர் என நான் எண்ணிக்கொண்டேன். அவற்றின் முன் நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன். தட்டினால் அவை திறக்கக்கூடும். தட்டவேண்டும் என்று ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே திட்டமிடத் தொடங்கினேன். ஆனால் துணிவு வரவில்லை. நான் தட்ட அவை திறப்பதுபோலவும், உள்ளே விந்தையானதோர் உலகம் எனக்காக விரிவதுபோலவும் கற்பனை செய்யத் தொடங்கினேன். அந்தக் கதவுகளுக்கு முன்னால் சிறு கற்களில் அமர்ந்து அவற்றை பார்த்துக் கொண்டிருக்கையில் என் உடல் கூன்விழுந்தது போல குறுகும். கண்கள் அரைவாசி மூடி வாய் திறந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். தெரிந்தவர்கள் பார்த்தால் என்னை வீட்டுக்குத் துரத்திவிடுவார்கள்.
எட்டாவது படிக்கும்போது முதல்முதலாக அந்தக் கதவைத் தட்டினேன். அது பாறைபோல அத்தனை உறுதியாக இருந்தது. அதிலிருந்து ஓசைகூட எழவில்லை. உள்ளே அதன் தாழ் அத்தனை பலமானதா என்ன? திரும்பத் திரும்ப தட்டிப்பார்த்தேன். கற்களை எடுத்து அடித்துப் பார்த்தேன். ஒருமுறை பெரிய பாறாங்கல்லை தூக்கிக் கொண்டுசென்று அறைந்துகூட பார்த்தேன். அதில் எந்த அசைவுமில்லை. பாறாங்கல் அறைந்த வடுகூட உருவாகவில்லை. கதவில் செவிசேர்த்து உள்ளே என்ன நிகழ்கிறது என்று கவனித்தேன். ஏதேதோ ஒலிகள் கேட்பது போலிருந்தது. ஒன்றும் கேட்கவில்லை என்றும் தோன்றியது.
அந்த மதிலைச் சுற்றிக்கொண்டு பின்னால் சென்றால் அங்கே சன்னல்கள் உள்ளன என்பதை நான் அதற்கும் பிறகுதான் கண்டுகொண்டேன். ஆனால் அவை மிக உயரத்தில், வானில் மிதந்து நின்றிருப்பவை போலிருந்தன. அருகே நின்ற மரத்தில் ஏறி அதன் கிளைவழியாக அந்தச் சன்னல்களை அடையமுடியும் என்று அறிந்தேன். பலமுறை ஏறிய பின்னர்தான் அந்தச் சன்னல்களை அணுக முடிந்தது. கிளை வழியாகச் சுவரின் மடிப்பில் தொற்றி ஏறி, சன்னல்களுக்கு அடியில் அமைந்த கற்பலகையின் விளிம்பில் காலை ஊன்றி, உள்ளே பார்த்தேன். அந்த நடுமதியத்திலும் இருட்டு செறிந்திருந்த புதர்க்காடுதான் உள்ளே நிறைந்திருந்தது. ஒரு பெரிய கோப்பை நிறைய கரிய நிறமுள்ள எதுவோ நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் எனக்கு உடனே வந்தது. நீண்டகாலம் அந்த படிமம் எனக்குள் இருந்தது.
உள்ளே செடிகளும் முள்மரங்களும் அவற்றில் பின்னிப்படர்ந்த தடிமனான கொடிகளும் ஒன்றாக ஆன தாவர அடர்வு. ஏராளமான புதர்ப்பறவைகள் நாய்க்குரைப்பு போல, பன்றி உறுமுவதுபோல, சிறிய தோல்கருவி போல, ஓசையிட்டுக் கொண்டிருந்தன. உள்ளே செல்ல வழியே இல்லை. அந்த சன்னல்விளிம்பில் அமர்ந்து உள்ளே இருக்கும் அந்த செறிந்த காட்டை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படி ஒரு காடு அங்கே இருப்பது வெளியே முற்றிலும் தெரியாது. இந்த ஊரில் அந்தக் காட்டை பார்த்தவர்களே சிலர்தான் இருந்திருப்பார்கள்.
அங்கே அமர்ந்திருக்கையில் என் புலன்கள் முற்றிலும் கூர்ந்திருப்பது ஓர் உச்சநிலை. எதிர்பாராமல் நம் அருகே புதர்ப்பறவை ஒன்று புதருக்குள் இருந்து கிளம்பி சிறகடித்து மேலெழுந்து கிளைகளில் அமரும். எந்நேரமும் கீரிகளைப் பார்க்கலாம். பாம்புகளும் கண்ணில் படுவதுண்டு. கல்லை எடுத்து உள்ளே வீசி எறிந்தால் சருகுகளிலிருந்து கீரியோ பாம்போ சரசரத்து வெளியே வந்து ஓடும். நரிகளும் உண்டு. நான் அதன்பிறகுதான் அந்த மாளிகைச்சுவர்கள் நேர் பின்பக்கம் இடிந்து சரிந்து கிடப்பதைக் கண்டேன். அந்த வழியாக எளிதாக உள்ளே செல்ல முடியும், ஆனால் புதர்களை வெட்டாமல் நுழையமுடியாது. அப்படி எவரும் நுழைந்த தடையமே இருக்கவில்லை.
அவை மிகப்பெரிய மாளிகைகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் கனத்த சுவர்களுக்குமேல் மிக உயரத்தில் பெரிய கூரைகள் இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு மாளிகைக்குள்ளும் எங்கள் குடியிருப்புப் பகுதியின் பாதியை அடக்க முடியும். அவற்றின் கதவுகளை உள்ளிருந்து மரங்கள்தான் மூடியிருந்தன. அவை எவரும் உள்ளே நுழைய விரும்பாதவை போல கிளைகளால் உந்திப்பிடித்திருந்தன. மரக்கிளைகள் பாம்புகள் போல பெரிய மதில்களில் பற்றி படர்ந்திருந்தன. விரிசல்களில் உருகி வழிந்தவை போல தெரிந்தன. அந்தக் கற்சுவர்களையே வேர்களும் கிளைகளும்தான் கவ்வி நிறுத்தியிருந்தன என்று தோன்றியது.
அவை அந்தப் பகுதியை ஆட்சி செய்த பழைய மன்னர்களின் அரண்மனைகள். சிலர் அவர்களை நவாப்கள் என்றனர். சிலர் சுல்தான்கள் என்றனர். சிலர் ராஜாக்கள் என்றனர். அங்கே மிகப்பெரிய போர் நடந்தது. அந்த அரண்மனைகளில் இருந்த ஆண்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டார்கள். பெண்களை கட்டி இழுத்து கொண்டுசென்றார்கள். அரண்மனைகளை முழுக்க கொள்ளையிட்டபின் ஒட்டுமொத்தமாகத் தீயிட்டனர். பல நாட்கள் தீ நின்று எரிந்தது. தீ அணைந்தபின்னர் அப்பகுதிக்கு எவருமே வரவில்லை. எப்போதாவது தவறி வந்தவர்கள் அந்த சாம்பல் படிந்த நிலத்தில். எரிந்து கருகிய கட்டிடங்களின் நடுவே, கருகிய உடல்களும் பொசுங்கிய தலைமயிருமாக சடலங்கள் அழுதபடியும் புலம்பியபடியும் அலைவதைக் கண்டனர். அவற்றின் உடல்களில் கண்கள் மட்டும்தான் எரியாமல் எஞ்சியிருந்தன.
நாககட்டம் ஒரு காலத்தில் அரசர்கள் நீராடும் படித்துறையாக இருந்தது. அரசர்கள் ஓய்வெடுக்கும் மாளிகை ஒன்று படித்துறையின் கோட்டைக்கு மேல் இருந்தது. அருகே அரசர்கள் வழிபடும் ஏழன்னையரின் ஆலயமும், அனுமானின் ஆலயமும் இருந்தன. மிகப்பெரிய கருங்கல் படித்துறையில் அரசகுடிப்பெண்கள் கோதாவரியில் நீராடினார்கள். அவர்கள் அலங்காரப்படகுகளில் நீர்ப்பரப்பின் மேல் துழாவிச்சென்று நிலவாடி மகிழ்ந்தனர். அனைத்தும் எரிந்தழிந்த பின்னரும் பௌர்ணமி நாட்களில் சிலசமயம் துடுப்போசையையும் சிரிப்பொலிகளையும் கேட்கமுடிந்தது. நிலவில் ததும்பும் அலைகளின்மேல் தொலைவில் படகுகள் மிதந்து செல்வதை காணமுடிந்தது.
பல நூறாண்டுகளாக அப்பகுதிக்கு எவருமே வராமலானார்கள். அங்கே சில தாழ்ந்த சாதியினர் தங்கள் சடலங்களை எரிக்கத் தொடங்கவே அது சுடுகாடாகியது. அதன் அருகே யாரோ ஒரு சிற்றரசர் பங்கிகள் குடியேற இடம் அளித்தார். அவர் பங்கிகளை ஔரங்காபாதில் இருந்து நகரத்தை தூய்மை செய்வதற்காக அழைத்து வந்து குடியேற்றினார். நகரம் மிக அப்பால் கோதாவரியின் இன்னொரு வளைவில் உருவாகி வந்தது. அங்கேதான் ஏக்நாத் பிறந்தார். அவருடைய சமாதி அங்கே அமைந்தது. ஏக்நாதின் சமாதிதான் பைதானை ஒரு நகரம் என ஆக்கியது. அதை பிறர் நினைவுறுவதற்கான ஒரே காரணமாகவும் அமைந்தது.
சிறையுண்டிருந்த காட்டைப் பார்த்துக்கொண்டு நான் முழுநாளும் அமர்ந்திருந்ததுண்டு. பள்ளிக்கூடத்திற்குச் சென்று அங்கே பெஞ்சுக்கு அடியில் பையை வைத்துவிட்டு ஓடி வந்து மரத்தில் ஏறிக்கொள்வேன். அப்போதே வெயில் ஏறத்தொடங்கியிருக்கும். மெல்ல மெல்ல பறவையொலிகள் அடங்கி, மரங்களின் மேல் காற்றுவீசும் ஒலி மட்டும் கேட்கும். காற்றும் நின்றுவிட்டதென்றால் தொலைவில் கோதாவரியின் படுகையில் இருந்து கலைந்த பேச்சொலிகள் மிக மெல்ல கேட்கும்.
கோதாவரியின் காற்று சட்டென்று ஒரு தனிக்குரலை அள்ளிக்கொண்டு வந்து வீசும். நம் செவிகளுக்குப் பின்னாலிருந்து எவரோ நமக்கு மட்டுமே எதையோ சொல்லிச் சென்றுவிடுவதைப்போல. “அதேதான்!” என்று ஒரு பெண்குரல் ஒருமுறை சொன்னது. “பார்த்தீர்களா அப்பா!” என்று ஒரு குழந்தைக் குரல். பெரும்பாலும் பெண்குரல்கள் அல்லது குழந்தைகளின் குரல்கள்தான். அவைதான் கூர்மையானவை. கோதாவரிக்கரையில் வாழ்பவர்கள் அனைவருக்கும் அப்படி கோதாவரி வீசியெறியும் உதிரிக்குரல் சொற்கள் பற்றித் தெரியும்.
அச்சொற்களில் சில அந்த திறந்த சன்னல்கள் வழியாக உள்ளே சென்று, அங்கே சுவர்மடிப்புகளில் பட்டு திரும்பி வருவதை முதல்முறையாகக் கேட்டபோது நான் திடுக்கிட்டு மரத்தின் மேலிருந்து விழப்போனேன். நெஞ்சு உரச, கிளையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். பிறகு படபடப்புடன் இறங்கி ஓடி வீடு திரும்பிவிட்டேன். காடு மண்டிய கட்டிடப்பகுதிக்குள் இருந்து ஒரு குரல் என்னிடம் “அதுதானே!” என்றது. நான் அந்தச் சொல்லை திரும்பத் திரும்ப என்னுள் ஓட்டிக்கொண்டிருந்தேன். அங்கே யாரோ எதையோ சொல்கிறார்கள். நாம் பதில் சொல்வதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
மீண்டும் நான் மாளிகைகளை அணுக பல நாட்கள் தாண்டின. அந்த அச்சமே ஈர்ப்பாக ஆகியது. துணிவைத் திரட்டிக் கொண்டு மீண்டும் சென்றபோது முதல்முறை சென்றதைவிட என் உடல் உச்ச தீவிரத்துடன் இருந்தது. மேலேறி அமர்ந்து அந்தக் குரலுக்காக காத்திருந்தேன். காடு வழக்கமான ஒலிகளுடன் இருந்தது. அதற்காக காத்திருந்து, சலித்து, அந்த ஓசைகளை மட்டுமே கவனித்து, அவை என்னென்ன என்று புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கையில் அங்கிருந்து குரல் எழுந்தது “அம்மா!”
இம்முறை அது எப்படி வருகிறது என்பதை நன்றாகவே புரிந்துகொண்டேன். எவரையாவது மேலேற்றி அமரச்செய்து, அந்த ஒலி வரும்போது காட்டி, திகிலுறச் செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அங்கே ஒரு பெண் வாழ்கிறாள். அகே அவள் இருந்த மாளிகையில் வாழ்ந்தவள். பேரழகி, ஒரு குழந்தையின் தாய். அவளை நவாப்களின் படைகள் கொன்றன. அவள் குழந்தையையும் கொன்று அந்த உடலை அவள் மேலேயே போட்டுவிட்டுச் சென்றன. வெட்டப்பட்ட அவளுடைய கை நகர்ந்து வந்து துடித்துச்சாகும் குழந்தையை தழுவிக்கொண்டது. அவர்கள் அங்கேயே பேய்களாக வாழ்கின்றனர். உள்ளே நிறைந்திருக்கும் நிழல்களில் கலந்து இரண்டு நிழல்களாக.
அதன்பின் நான் அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினேன். அந்தப்பெண்ணின் முகத்தை, அவள் ஆடைகளை, நகைகளை விரிவாக என்னுள் வரைந்து எடுத்தேன். அந்தக்குழந்தை ஆண். ஐந்து வயதான சிறுவன். அவனும் சரிகையாடைகளும் சரிகைத் தொப்பியும் அணிந்திருந்தான். அந்தக்கதையை நான் விதவிதமாக வளர்த்துக் கொண்டேன். எத்தனை கொடூரமாக முடியுமோ அத்தனை கொடூரமாக அவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தனர். அந்தக் கொடூரம் எனக்குச் சலிப்பை அளித்தபோது அவர்கள் இனியவர்களாக எனக்குள் மீண்டு வந்தனர்.
அப்போது ஒருமுறை ஒரு தனிச்சொல் காட்டுக்குள் இருந்து தெறித்ததுபோல் எழுந்து வந்தது. “யார்?” என்று நான் திடுக்கிட்டு கேட்டே விட்டேன். பறவையின் ஒலியாக இருக்குமோ? இல்லை வேறேதாவதா? பறவையின் ஒலிதான். மீண்டும் செவிகூர்ந்து அமர்ந்திருந்தேன். பறவை என்றால் மீண்டும் கேட்கும். மீண்டும் அதே குரல், அதே சொல். தெளிவாகவே அது சொல்தான். அறியாத மொழியிலானாலும் ஒரு சொல்தான் அது. என் உடல் வியர்த்துவிட்டது. நான் கிளைகளைப் பற்றிக்கொண்டு இறங்கும்போது என் கைகள் நடுங்கி நான் விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. மீண்டும் அச்சொல் மிகத்துல்லியமாக ஒலித்தபோது நான் கைகளை விட்டுவிட்டு கீழே குதித்துவிட்டேன்.
என் கால்களில் நன்றாகவே அடிபட்டுவிட்டது. எழுந்து நின்றபோது முதுகில் வலி சொடுக்கியது. தலைசுழன்று ஒரு பக்கமாக என் உடலை தள்ளியது. எழுந்து மரத்தைப் பிடித்துக்கொண்டு நின்றேன். மீண்டும் மீண்டும் தள்ளாடி விழப்போனேன். ஆனால் மாளிகையின் அருகே இருந்து அகன்று மசூதியின் சுவரை அடைந்து அதன் அருகே அமர்ந்தேன். தலைசுழன்றமையால் படுத்துக் கொண்டேன். மீண்டும் எழுந்து நின்றும் நடந்தும் என் வீட்டை அடைந்தேன்.
அம்மாவிடம் நான் விழுந்துவிட்டேன் என்று சொன்னேன். அம்மா பக்கத்துவீட்டு மருத்துவக் கிழவியை வரவழைத்து என்னை காட்டினாள். அவள் என் முதுகைத் தடவிப்பார்த்தபோது நான் வலியில் அலறினேன். அவள் முதுகெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் எண்ணை போட்டுக்கொண்டு பத்துநாட்கள் படுத்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். நான் மீண்டெழ பதினெட்டு நாட்களாயின. அதற்குள் இரண்டுமுறை காய்ச்சல் வந்து சென்றது. எங்கே விழுந்தேன் என்று நான் அம்மாவிடம் சொல்லவேயில்லை.
அதன்பின் நான் மாளிகைகளுக்குள் பார்த்ததில்லை. அபூர்வமாகவே நாககட்டத்திற்குச் சென்றேன். அப்போதெல்லாம் அப்பகுதியை விரைந்து கடந்து விடுவேன். மூடிய மாளிகை வாசல்கள் என்னை நெடுந்தொலைவுக்குப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். அவை என் கனவுகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. மூடிக்கிடக்கும் பெருங்கதவுகள். எப்போதும் திறக்க வாய்ப்பற்றவை. அவற்றை இங்கே எவரும் கற்பனையில்கூட திறந்து பார்க்கவில்லை. எத்தனை விசித்திரம், ஒரு நகரத்தை நோக்கி இன்னொரு நகரம் தன் எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.
மூடுண்ட நகரத்தில் இருந்து பைத்தான் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. அதன் புதிய கட்டுமானங்கள் எல்லாமே அப்பால் அணைக்கட்டை நோக்கிச் செல்லும் பெரிய சாலையின் இரு பக்கங்களிலும்தான் அமைந்தன. நானும் புதிய பைத்தான் நோக்கித்தான் சென்றேன். பைத்தானிலிருந்து வெளியே சென்றேன், ஔரங்காபாதுக்கு, பனாரஸுக்கு. ஆனால் மூடுண்ட நகரம் என்னுள் இருந்தது. எனக்குள் மூடிய கதவுகள் கனவாக எழுவதுண்டு. ‘எப்போதைக்குமாக மூடிக்கொண்ட கதவுகள்’ என்று நான் ஒருமுறை என் நாட்குறிப்பில் எழுதினேன். உண்மையில் நாட்குறிப்பில் எழுதவில்லை, நாட்குறிப்பில் அவ்வாறு எழுதுவதாகக் கனவு கண்டேன். ‘எல்லா வாசல்களும் மூடிய மாளிகைகள்’
என்னுள் எப்போதும் இருந்த கனவு அக்கதவுகளைத் திறப்பதைப் பற்றித்தான். நான் எனக்குள்ளேயே எழுதி அழித்துவிட்ட நூற்றுக்கணக்கான கவிதைகளில் அந்த கரு திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது. காசி வித்யாபீடத்திற்குச் சென்ற முதல் ஆண்டில், என்னை ஒரு காவியகர்த்தனாக கற்பனை செய்துகொண்டு உலவிய நாட்களில் ஒரு பெருங்காவியத்தின் முகப்புக் காட்சியை துளித்துளியாக உருவாக்கினேன். நாட்கணக்கில் வெவ்வேறு மரத்தடிகளிலும், நூலகங்களிலும் அமர்ந்து அந்தக் காட்சியை அழித்து அழித்து செம்மைப் படுத்திக்கொண்டேன்.
ஆனால் அதை எழுதத் தொடங்கியபோது அது வெறும் செய்யுளாக ஆகியது. வழக்கமான சொல்லாட்சிகளும், அணிகளும்தான் வந்தமைந்தன. அதை திரும்ப வாசித்தபோது நான் படித்த சம்ஸ்கிருத காவியங்களின் சலிப்பூட்டும் நகலாக இருந்தது. வெறியுடன் அக்காகிதங்களை கிழித்து குப்பைக்கூடைக்குள் போட்டேன். ஶ்ரீகர் மிஸ்ரா அக்கிழிசல்களில் எதையாவது படித்துவிடக்கூடும் என்று சந்தேகப்பட்டு குப்பைக்கூடையில் இருந்து பொறுக்கி கழிப்பறைக் குவளைக்குள் போட்டு உள்ளே செலுத்தினேன். நானே அவற்றை விழுங்கித் தண்ணீர் குடிப்பதுபோல குமட்டி வந்தது.
ஆனால் அப்போதும் அந்தத் தொடக்கம் எனக்கு மகத்தானதாகவே இருந்தது. சம்ஸ்கிருத காவியங்கள் அவ்வப்போது நவீன காலகட்டத்திலும் எழுதப்படுவதுண்டு. ஆனால் அவை பழைய சம்ஸ்கிருதப் பொற்காலத்தை திரும்ப உருவாக்க முயன்றன. பழைய கருப்பொருட்கள், பழைய சொற்சேர்க்கைகள், அந்தப் பழைய கனவு. என் காவியம் சமகாலத்தில் இருந்து தொடங்கியது. பைதானின் நகரம் வழியாக சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன். காசியில் இருந்து வந்த இசைக்கலைஞன் அவன். காவியம் பயின்றவன், தனியன், கனவுகாண்பவன். நகரத்தின் இரவில் அவனுக்கு ஒதுங்க இடமில்லை. அந்நகரில் அவனை அறிந்த எவரும் இல்லை.
கோடைகாலம், நகரத்தெருக்களில் நல்ல நெரிசல். அன்று அமாவாசை நாள். விரைவிலேயே இருட்டு விழத் தொடங்கிவிட்டது. நகரத்தின் விளக்குகள் சுடர்விடுகின்றன. விளக்குகளின் மஞ்சள் நிற ஒளியில் நகரத்தின் குப்பைகளும் அழுக்குகளும் வறுமையும் மறைந்துவிடுகின்றன. பூச்சிகள் எல்லாம் பொன்னிறமாக சுடர்விடுகின்றன. அவன் தனிமையின் தளர்வு கொண்ட காலடிகளுடன் நடந்து கோதாவரிக் கரைக்கு சென்று அங்கே நாககட்டத்தின் விரிந்த படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறான். படிக்கட்டுகளில் பகல்வெயிலின் வெம்மை. கோதாவரி மெலிந்து ஓடைபோல வழிந்துகொண்டிருக்கிறது. பறவைகள் காற்றை உந்தி உந்திப் பறந்து கூடணைந்துகொண்டே இருந்தன.
விரைவிலேயே வானம் இருண்டுவிட்டது. செறிந்த விண்மீன்களின் ஒளியில் நதியில் மட்டும் உள்வெளிச்சம் அலையடித்தது. நகரின் ஒலிகள் அடங்கத் தொடங்கின. கைவிடப்பட்ட கவிஞன் பல நாட்களாக உணவு உண்டிருக்கவில்லை. மெலிந்த அவன் உடல் தளர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. நகரத்தில் எங்கோ இரவுக்கான சங்கொலி. அதன்பின் நகரம் வெறும் தொலைதூர வெளிச்சங்களாக மட்டுமே மிஞ்சியது. அவன் கோதாவரியின் படிகளில் படுக்கலாமென்றுதான் எண்ணி வந்தான். ஆனால் கொசுக்கள் வந்து அவனை மொய்த்தன. அவனுடைய பழைய நினைவுகள் போல அவை அவன் குருதியை நாடி வந்தன.
அவன் எழுந்து புழுதிபடிந்த பாதையின் வழியாக நடந்தான். அதன் இரு பக்கமும் மூடிய வாசல்கள் நின்றன. இடிந்த மதில்களுக்குமேல் கூரைகள் இல்லாத மாளிகைகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அவன் மேற்கொண்டு நடக்கமுடியாமல் ஒரு மாளிகையின் முகப்பில் இருந்த கல்படி மேல் அமர்ந்தான். ஆழ்ந்த இருட்டால் அப்பகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. அங்கே தெருவிளக்குகள் ஏதுமில்லை. எவராவது தனக்கு உணவும் நீருமாக வரமாட்டார்களா என அவன் எண்ணினான். அவ்வெண்ணத்தின் கையறுநிலையை எண்ணி புன்னகைத்தான்.
அப்போது ஒரு மணியோசை கேட்டது. அவன் திகைத்து எழுந்து நின்றான். மணியோசை மெய்யாகவே கேட்டதா என வியந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான். மணியோசை மீண்டும் முழங்கியது. மாளிகையின் கதவுகள் மெல்ல திறந்து விரிந்தன. உள்ளே நெய்விளக்குகளின் பொன்னிற ஒளி. மின்னும் ஆடைகளும் நகைகளும் அணிந்த பெண்களும், தலைப்பாகை அணிந்து கூர்மை சுடர்விடும் வேல்களை ஏந்திய ஆண்களும் அவனை நோக்கி வந்தனர். வானில் முழுநிலவு எழுந்து நின்றது. அவனை நோக்கி பொன்னிற முகபடாம் அணிந்த களிற்றுயானை நீர்த்துளி போல தன் உடலில் ததும்பித் ததும்பி வந்தது. அதன் மேல் அவனே அமர்ந்திருந்தான்.
ஒவ்வொரு முறை அந்த இடத்தை எழுதும்போதும் நான் புன்னகைப்பதுண்டு. என்றோ ஒருநாள் என்னால் அதை எழுதிவிடமுடியும், அது எழுதப்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் என் முழு வாழ்க்கையையும் நான் அதையொட்டியே உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த எண்ணம் எழும்போது அந்த ஒற்றைச் சொல் என்னை வந்து அறையும். நான் என் கனவிலிருந்து விழித்துக்கொண்டு சோர்வுடனும் சலிப்புடனும் தலைதாழ்த்தி அமர்ந்திருப்பேன். அந்தச் சொல்தான் உண்மையான தொடக்கம். அதை அறியாமல் நான் அந்த மாளிகைகளைப் பற்றி எதையும் எழுதிவிட முடியாது. அந்தக் கதவைத் திறக்கும் அடையாளச் சொல் அதுதான். அது என்னை வந்தடைந்திருக்கிறது. ஆனால் அதை என்னால் கையாள முடியவில்லை.
நான் காசி வித்யாபீடத்தில் பயிலும்போதெல்லாம் அந்த சொல்லுக்காக என்னுள்ளே ஒரு விழிப்பு இருந்து கொண்டிருந்தது. நான் அங்கே கற்ற மொழிகளில் என் பிரக்ஞை அதற்காக அளைந்துகொண்டே இருந்தது. காசியில் நான் சம்ஸ்கிருதமும் பிராகிருதமும் கற்றேன். ஆகவே பாலியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழிலும் திராவிட மொழிகளிலுமுள்ள சொற்கள் என் செவிகளில் விழுந்துகொண்டே இருந்தன. எந்தச் சொல்லும் அச்சொல்லை நினைவுறுத்தி என் அகத்தை திடுக்கிடச் செய்யவில்லை. பின் அச்சொல்லை தேடுவதை நான் விட்டுவிட்டேன், ஆனால் என் ஆழம் அதை தேடிக்கொண்டேதான் இருந்தது.
உண்மையில் அச்சொல்லை நான் பல நூறு முறை கேட்டிருந்தேன். என் அம்மாவின் வாயில் இருந்து. அவளில் அந்தப் பிசாசு தோன்றிய நாளில்கூட. ஆனால் அப்போதெல்லாம் அந்த மொழியை நான் என் பிரக்ஞையால் முட்டி முட்டி பொருள்கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். என் ஆழம் அதை முழுமையாகத் தவிர்த்து விலகி நின்று தவித்துக்கொண்டிருந்தது. அவ்வாறு நிகழும்போது அது முடியவேண்டும் என்ற பதைப்பு, முடிந்ததும் விடுதலை, மறுகணமே அதை ஒட்டுமொத்தமாக என் நினைவில் இருந்து அகற்றி என்னை வேறெங்கோ நகர்த்திக்கொள்வேன்.
அதை நான் கனவுகளில் உளறியிருக்கிறேன். ஓரிருமுறை ராதிகா என்னை தூக்கத்தில் இருந்து உசுப்பி “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டதுண்டு. “என்ன?” என்று நான் கேட்பேன். “ஏதோ சொன்னாய்…” என்று சொல்லும்போது அவள் முகம் மிரண்டிருக்கும் “என்ன சொன்னேன்?” என்று நான் கேட்பேன். “ஏதோ ஒரு மொழி… நான் அறிந்த மொழியே அல்ல… ஒரு சொல். அதைக்கூட நான் மறந்துவிட்டேன். உண்மையில் யாரோ புதிய ஒருவர் அறைக்குள் வந்த பேசியதுபோல் இருந்தது. உன் குரலே அல்ல”
என் கண்களும் செவிகளும் அழிந்து, என் உடல் செயலிழந்து, வெறும் சித்தம் மட்டுமாக நான் எஞ்சியபோதுதான் அச்சொல்லை நான் கவனித்தேன். என் அம்மாவிடம் அந்த அறியாத மொழி மீண்டும் தோன்றியபோது. அதில் ஒலித்துப் பெருகிச்சென்ற அறியாத பலநூறு சொற்களில் ஒன்றாக அதுவும் வெளிவந்தது. நான் அப்போது அச்சொல் கைநீட்டினால் தொட்டுவிடலாம் என்பதுபோல பருப்பொருளாக மிக அண்மையில் அசைவிலாது நிற்பதாக உணர்ந்தேன்.
(மேலும்)
இசைநாட்கள்
ரயில் நிலையத்தில் குழுமியபோதே இனியதொரு மன நிலைக்கு வந்திருந்தோம். நித்தியவனம் அடையும் வரையில் உற்சாகமாக உரையாடிக்கொண்டு சென்றோம். கர்நாடக இசை அறிமுகம் உள்ள சில நண்பர்களும், யோகி அண்ணா தவில், விக்னேஸ்வரன் மிருதங்கம், அட்சயா மற்றும் நிரஞ்சன் புல்லாங்குழல் என்று அறிந்த பல இசை கலைஞர்களும் பெயர் அறியாத சில கலைஞர்களும் வகுப்பில் இருந்தனர்.
இசைநாட்கள்I am 67 now. I lost my wife 13 years ago, and I have been feeling extremely lonely for more than 10 years. My children are in foreign countries. I was with them for some years but felt lonelier there. Here, I am also alone.
Finding our own God.May 10, 2025
காணொளிகளின் தேவை என்ன?
அன்புள்ள ஜெ.
நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பின் அவசியத்தை முன்வைத்து வருபவர். வாசிப்புக்கு ஈடு சொல்ல ஏதுமில்லை என்பதையே சொல்லிவருகிறீர்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உங்கள் தளத்தில் பெரும்பகுதி காணொளிகளாக உள்ளது. காணொளிகளின் வழியாக அறிந்துகொள்வதை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா என்ன?
கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
காணொளிகள் உங்களைப் போன்றவர்களுக்காகத்தான். ‘பெரும்பகுதி’ என்ற சொல்லை புத்தகவாசிப்பாளரான அறிவியக்கவாதி சாதாரணமாக பயன்படுத்த மாட்டார். அதன் பொருளை அறிந்திருப்பார்.
இந்த தளத்தில் ஏற்கனவே வெளிவந்துகொண்டிருக்கும் வாசிப்புக்குரிய விஷயங்கள் அப்படியே தொடர்ச்சியாக வெளிவருகின்றன. எதுவும் குறையவில்லை. தினமும் ஒரு கட்டுரை, நாவல் தொடர், கடிதங்கள், வேறு இதழ்களுக்கான இணைப்புகள். கடிதங்களே பலசமயம் தனிக்கட்டுரை அளவுக்குத் தீவிரமானவை. காணொளிகள் இரண்டு நாட்களுக்கு ஒன்றுதான் வெளியிடப்படுகின்றன.
அண்மையில் www.unified wisdom.guru, (தமிழ்) www.unifiedwisdom.today (ஆங்கிலம்) தளங்களும் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடுப்புகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுகின்றன. அந்த தளங்களிலும் கடிதங்களும், கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. அவற்றையும் சேர்த்தால் வாசிப்புக்கானவை கூடியிருக்கின்றன. ஏற்கனவே உள்ளவற்றுடன் காணொளிகள் ‘கூடுதலாக’த்தான் இடம்பெறுகின்றன.
இவற்றை முழுக்க வாசிப்பவர்கள் குறைவு, ஆகவே வாசிப்பதற்கான விஷயங்களை குறைக்கவேண்டும் என்னும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்படுவதுண்டு. முன்பு கட்டுரைகளைச் சிறிதாக எழுதுங்கள் என்று என்னிடம் சொன்னவர்கள் அவர்கள். அன்று நான் சொன்ன அதே பதில்தான். சிறிய, எளிய கட்டுரைகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, அங்கே செல்லுங்கள். இங்கே தீவிரமே எப்போதும் இருக்கும்.
உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு வந்த தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா? என்ற கட்டுரை. ஓர் ஆய்வுக்கட்டுரை அளவு விரிவானது. பல தொடுப்புகள் கொண்டது. விரிவான சித்திரத்தை அளிப்பது. இணையத்தில் மேலோட்டமாக உலவுபவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள். முதலிரு பத்திகளை அவர்கள் கடப்பதில்லை. அவர்களின் மூளையை வம்புகள்தான் சீண்டிச் சுறுசுறுப்பாக ஆக்கும். அந்தக் கட்டுரைக்கு வாசகர்கள் குறைவு என எனக்கும் தெரியும், ஆனால் அவை இங்கே வெளிவரும்.
என்னைப் பொறுத்தவரை அறிவார்ந்த தலைப்புகள் இங்கே பேசப்பட்டிருக்க வேண்டும். அதன் பதிவு இருக்கவேண்டும். அதற்காக மட்டுமே முயல்கிறேனே ஒழிய சென்றடைவது என் முதன்மை இலக்கு அல்ல. வாசிக்காவிட்டால் வாசிக்காதவரின் பிரச்சினை அது. தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் எதையும் வாசிப்பதில்லை. எழுத்தாளர்களே தினம் ஒரு வெட்டி சினிமா, மணிக்கணக்காக சீரியல், இரவு பகலாக முகநூலும் யுடியூப் ஷார்ட்ஸ்களும் என்றுதான் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி நான் எப்படி கவலைப்பட முடியும்? வாசிப்பவர்களுக்கு, தேடி வருபவர்களுக்கு ஒரு தலைப்பு கிடைக்கவில்லை என ஆகக்கூடாது. அதற்காகவே இத்தனை வாசிப்புப் பகுதிகள்.
நான் தொடர்ச்சியாக புதிய வாசகர்களை உள்ளே கொண்டுவந்துகொண்டே இருப்பவன். 1992 முதல் என் பணிகளில் ஒரு பகுதி அது. என் வழியாக உள்ளே வந்த இலக்கிய வாசகர்களின் இரண்டு தலைமுறைகளை நான் பார்த்துவிட்டேன். அதன் பொருட்டே இலக்கிய விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள், இலக்கிய அறிமுகங்கள். நான் நடத்தும் இலக்கிய விவாதங்களுக்குக் கூட இலக்கியத்தை அறிமுகம் செய்வது என்னும் நோக்கம் உண்டு. புதிய வாசகர் சந்திப்புகளும் அந்நோக்கம் கொண்டவை. அவை உருவாக்கிய புதியவாசகர்களின் அலை விஷ்ணுபுரம் அமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றது. அவற்றில் பங்கேற்ற பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகள்.
அறிமுகத்திற்கு அப்பாலும் சில தேவைப்படுகின்றன என்ற உணர்வு முன்னரே இருந்தது. தத்துவத்தை கட்டுரைகள், நூல்கள் வழியாக பயிற்றுவிக்கவே முடியாது என நான் அறிந்திருந்தேன். அதற்கு வகுப்புகள்தான் தேவை. அதற்கென்றே அமைந்த முழுநேர வகுப்புகள், தொடர் வகுப்புகள். நேரடியாக ஆசிரியர் கற்பிக்கும் வகுப்புகள். நான் தத்துவத்தை வகுப்புகள் வழியாகவே கற்றுக்கொண்டேன். நூல்கள் வழியாக அதைக் கற்கவே முடியாது – கற்ற எவரையும் நான் கண்டதுமில்லை. மேலோட்டமான தகவல்களை, கற்றோம் என்னும் போலி நம்பிக்கையை மட்டுமே நூல்கள் அளிக்கும். ஒரு வகுப்பில், ஆசிரியரிடமிருந்து அடிப்படை கற்றல்முறையை கற்றபின் நூல்களைக் கற்பதே சரியான வழி.
அவற்றை நிகழ்த்தும் திட்டம் 2010 முதல் இருந்தது 2022ல்தான் வாய்ப்பு அமைந்தது. முழுமையறிவு அமைப்பும் வகுப்புகளும் தொடங்கின. தமிழில் தத்துவத்தை நவீனப்பார்வையில் தொடர்ச்சியாகக் கற்பிக்கும் அமைப்பே இல்லை. எந்தக் கல்விநிலையமும் அதில் ஈடுபடவில்லை. தமிழகத்திலேயே அதற்காக நடத்தப்படும் ஒரே அமைப்பு முழுமையறிவுதான். (ஐரோப்பாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் இதற்கென்றே வந்து பங்கெடுத்துச் செல்பவர்கள்கூட உண்டு). ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன. 150 வகுப்புகள் கடந்துவிட்டன. இப்படி தொடர் வகுப்புகள் இன்று இந்தியாவில் எங்கும் நிகழவில்லை என்றுதான் என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் நடத்தும்படி கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் மட்டுமல்ல, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்துகூட தொடர் கோரிக்கைகள் உள்ளன.
அப்போதுதான் ஒன்று தெரிந்தது, தமிழில் கலைகள் மற்றும் இலக்கியத்தின் அடிப்படைகள் கூட எங்கும் கற்பிக்கப்படவில்லை என. வாசகன், எழுத்தாளன் என்னும் இரு நிலைகளிலும் ஒரு நவீன அறிவுஜீவிக்கு அவசியமானவை அவை. ஆகவே எல்லா தளங்களிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பின் மேலும் ஒன்று தெரிந்துகொண்டேன். ஏற்கனவே இங்கே எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்களுக்கு எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லை. புதியதாக எதுவுமே அவர்களைக் கவர்வதில்லை. சமூக வலைத்தளங்களின் இடைவிடாத வம்புகளின் உலகில் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். வம்புகள், தங்களை விதவிதமாகப் புனைந்து முன்வைப்பது ஆகியவற்றில் மட்டுமே அவர்களின் உள்ளம் செல்கிறது. அவர்கள் வாசிப்பதுகூட வம்பளப்பதற்காக மட்டுமே. அவர்களிடம் எதையும் கொண்டுசெல்ல முடியாது.
ஆனால் புதியவர்கள் தேடி வந்துகொண்டே இருந்தனர். ஆர்வமும் தீவிரமான வாசிப்பும் கொண்டவர்கள். ஒன்றும் தெரியாமல் வந்து ஆறே மாதங்களில் தீவிர வாசகர்களாக ஆனவர்கள் பலர். இன்று ஏறத்தாழ ஆயிரம் பேருக்குமேல் எங்கள் வகுப்புகளில் பங்குகொள்கிறார்கள். அவ்வெண்ணிக்கை வளர்கிறது. அவர்களே எதிர்காலம். எங்கள் வகுப்புகளை நோக்கி புதிய வாசகர்களை ஈர்க்கும் நோக்கத்துடன்தான் இக்காணொளிகள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் வழியாக பலநூறு புதிய வாசகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். மிக இளைய வயதினர்கூட.
ஏன் காணொளி? இன்றைய சூழலில் பயணத்துக்கு ஏராளமான நேரம் செலவாகிறது. பலர் எதையேனும் கேட்பது, பார்ப்பது அப்போதுதான். சலிப்பை வெல்ல எதையாவது தேடிக் கேட்கிறார்கள், பார்க்கிறார்கள். ஆனால் அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்களுக்கு சீக்கிரமே அவற்றிலும் சலிப்பு வருகிறது. கொஞ்சம் மாறுபட்ட எதையாவது தேடுகிறார்கள். அவர்களே இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உரியவர்கள். அவர்களிடம் சென்றடைபவை காணொளிகளே. பல சமயம் யூடியூபின் ‘லாகிர்தமே’ புதியவர்களை கண்டடைந்து எங்களை அறிமுகம் செய்கிறது.
இக்காணொளிகளில் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றின் அவசியமும், அவற்றின் அடிப்படைகளும் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றி நம்முடைய அரசியலாளர்கள் உருவாக்கும் எதிர்மறை எண்ணங்கள் களையப்படுகின்றன. அறிவியக்கச் செயல்பாடு என்பதன் பெருமிதமும் நிறைவும் முன்வைக்கப்படுகிறது. இவை வாசிப்புக்கு மாற்று அல்ல, வாசிப்பை பிரச்சாரம் செய்பவை என்பது கேட்பவர்கள் எவருக்கும் தெரியும்.
தொடர்ச்சியாக இந்த தளத்தை வாசிப்பவர்களுக்குக் கூட இந்தக் காணொளிகள் முக்கியமானவை. புதிய நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் அடிப்படைக் கருதுகோள்கள் விளக்கப்படுகின்றன.
அத்துடன் ஒன்று உண்டு. நல்ல வாசகன் தனக்கான இலக்கிய ஆசிரியனுடன் உரையாடிக்கொண்டேதான் இருப்பான். அந்த உரையாடலை தொடர்ச்சியாக நிகழ்த்த இக்காணொளிகளின் வழியாக வாய்ப்பு அமைகிறது. அது எத்தனை தீவிரமான உணர்வுநிலையை உருவாக்குகிறது என வாசகர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்றாடத்தின் சலிப்பூட்டும் சுழற்சிக்கு வெளியே ஒரு தனிப்பட்ட உரையாடல் ஒன்று இவற்றின் வழியாக இலக்கியத்திலும் தத்துவத்திலும் நிகழ்கிறது. நாள் முழுக்க அந்த உரையாடல் அவர்களின் மனதின் ஆழத்தில் நீடிக்கிறது.
பொதுவாக, அறிவியக்கத்துடன் இருந்துகொண்டே இருக்க முயலும் வாசகர்களுக்குரியவை இந்தக் காணொளிகள். இன்றைய தொழிற்சூழல், அன்றாடச்சூழலில் அது பெரிய ஒரு போராட்டம். எளிய கேளிக்கைகளிலும் முகநூல் வம்புகளில் உழல்பவர்களுக்கு இவற்றின் தேவை இல்லை. அவற்றை உதறி தீவிரமான தளத்தில் கொஞ்சமேனும் நாளைச் செலவிட வேண்டும் என விழைபவர்களுக்கு மட்டும் உரியவை இவை.
இக்காணொளிகள் ’இணைய வகுப்புகள்’ அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். இவை ‘வாசிப்புக்கு மாற்றாக’ கொள்ளத்தக்கவை அல்ல. எவையுமே ஒரு கட்டுரையின் பேச்சு வடிவங்கள் அல்ல. எல்லாமே ‘சிந்தனைச் சீண்டல்கள்’ மட்டும்தான். அதிகபட்சம் இருபது நிமிடம் ஓடுபவை. ஒரு கேள்வியை, யோசிக்கவேண்டிய ஒரு கோணத்தை, ஒரு புதிய கருத்தை மட்டும் முன்வைப்பவை. அவற்றை கேட்பவர்கள் மேலே செல்லமுடியும். கட்டுரைகள் வழியாக, நூல்களினூடாக…
ஜெ
ஆர்மேனியன் சர்ச்
இந்தியாவிலுள்ள மிகப் பழங்கால திருச்சபைகளுள் ஒன்று. 1712-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்மேனியன் பழைய சர்ச் சென்னையிலுள்ள ஜார்ஜ் டவுன் ஆர்மேனியன் வீதியில் அமைந்துள்ளது. அதன் பின் அவ்வளாகம் 1772-ம் ஆண்டு மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மணி கோபுரம் (belfry) மற்றும் அதனுள் அமைந்துள்ள ஆறு மணிகள் என்னும் அமைப்பு வரலாற்று மற்றும் கலை முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆர்மேனியன் சர்ச் – தமிழ் விக்கி
காவியம் – 20
சாதவாகனர் காலம், பைத்தான் அருங்காட்சியகம் பொமு1கருப்பைக்குள் நான் நன்றாகச் சுருண்டு, உடலை இறுக்கிப் படுத்திருந்தேன். என்னைச் சுற்றி குருதியும் சலமும் ஓடும் ஓசை நிறைந்திருந்தது. திரிதாழ்த்தி பொத்தி வைக்கப்பட்ட விளக்குக்குள் சிறு சுடரின் குமிழ் எரிவது போல என்னுடைய பிரக்ஞை மட்டும் விழித்திருந்தது. கருப்பையில் இருந்து கரிய நீர் வெளியேறும் இருண்ட குழாயினூடாக ஒரு கை பாம்பு போல என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன். அது என்னைப் பற்றி இழுக்க முயல்கிறதென்று தோன்றியது. அதை தவிர்க்கும் பொருட்டு நான் என்னை மேலும் இறுக்கிக்கொண்டு பின்நகர்ந்தேன்.
அந்தக் கொக்கி என் உடலில் சிக்கிக்கொண்டது. நான் அழுதேன் என்றாலும் ஓசை வெளிவரவில்லை. வழுவழுப்பான ரத்தமும் நிணநீரும் கலந்த பாதையினூடாக தலைகீழாக விரைந்து வழுக்கிச் சென்று வெளியே விழுந்தேன். என் மேல் அந்தத் திரவம் கொட்டியது. மங்கலான ஓசைகள் கேட்டன. வெவ்வேறு குரல்கள், வண்டிகளின் ஓசைகள், பறவைகள் கலைந்து எழுப்பும் சத்தம். என் மேல் வெளிக்காற்று பட்டபோது குளிரடித்தது. நான் என் உடலை இறுக்கிக் கொண்டேன்.
யாரோ என்னைத் தூக்கி எடுத்தார்கள். என் கண்களையும் மூக்கையும் அழுத்திப் பிடித்து பிழிந்தனர். என் கால்களைப் பிடித்து தலைகீழாகத் தூக்கி மெல்ல உலுக்கினார்கள். என் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கரிய குழம்பு போன்ற ஒன்று வெளியே கொட்டியது. நான் இருமுறை இருமியபின் வீறிட்டு அழத்தொடங்கினேன். கண்களைத் திறந்தபோது மங்கலான வண்ண அசைவுகள் என்னைச் சுற்றி நிறைந்திருப்பதைக் கண்டேன். கைகால்களை உதறிக்கொண்டு வீரிட்டு அழத்தொடங்கினேன்.அந்த அழுகையின் விசையினாலேயே வலிப்பு வந்து கைகால்கள் இழுத்துக்கொள்ளத் துடித்தேன்.
மீண்டும் யாரோ என்னைத் தூக்கினார்கள். என் மேல் உலர்ந்த துணி போல் ஏதோ ஒன்று போர்த்தப்பட்டது. என்னை நீர் விட்டு கழுவியபின் அழுத்தித் துடைக்கத் தொடங்கினார்கள். பின்னர் உலர்ந்த துணியால் என்னை நன்றாகச் சுருட்டினர். அந்த இதமான அணைப்பில் நான் என்னை மீண்டும் இறுக்கி ஒடுக்கிக்கொண்டேன். மெல்ல மெல்ல சூழலை இழந்து உள்ளிருக்கும் அந்த மெல்லிய சுடர் மட்டுமாக மாறினேன்.
ஏரிக்கு உள்ளே குழாய்க்குள் நான் சிக்கிக்கொண்டிருந்ததை காலையில் அங்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் யாரோதான் பார்த்தனர். அவர்களுடன் வந்த நாய்களில் ஒன்று ஓடைக்குள் எட்டிப்பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் ஓடைக்குள் இறங்கி இடுப்புவரை கரிய சேற்றில் நடந்து வந்து உள்ளே தலைநீட்டி பார்த்தபோது என்னுடைய உருவத்தை கண்டுகொண்டார். என்னை அவர் பிணம் என முதலில் நினைத்தார், அப்படி பிணங்கள் அங்கே வந்து சிக்கிக்கொள்வது வழக்கம். ஆனால் அவர் கம்பால் குத்தியபோது நான் முனகியபடி என்னைச் சுருட்டிக்கொண்டேன்.
அவர்கள் நீண்ட கம்பியை உள்ளே போட்டு என்னை இழுத்து வெளியே எடுத்தார்கள். ஆம்புலன்ஸ் வந்து நான் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே என் உடல் தூய்மைப்படுத்தப்பட்டு, காயங்களில் தையல் போடப்பட்டது. ஆனால் ஆற்றல்மிக்க டெட்டனஸ் ஊசிகள் பல போடப்பட்டாலும் அனைத்து காயங்களும் அழுக்குநீர் பட்டு சீழ் கட்டி வீங்கின. என் உடலே பழுத்த கனி போல சிவந்து பெரிதாயிற்று. பத்து நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருந்தது. குருதியில் தொற்று முற்றிவிட்டதென்றும் நான் உயிர் பிழைக்கமாட்டேன் என்றும் மருத்துவர்கள் நினைத்தார்கள். ஆனால் கண்பார்வையையும் செவிப்புலனையும் இழந்து, இடதுகையும் இடதுகாலும் செயலற்றுவிட, நாக்கு இழுத்துக்கொண்டு குரல்நாண்கள் தளர்ந்து பேச்சும் நின்றுவிட நான் உயிருடன் எஞ்சினேன்.
என் புகைப்படங்கள் நாளிதழில் வெளிவர, தமிழரசன் அதைக்கண்டு என்னை வந்து பார்த்தார். கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ராதிகாவின் உடல் மூன்றுநாட்கள் கழித்து ஏரியில் மிதந்தது. எங்களைப் பற்றிய செய்தி ஒரு வாரத்திற்கும் மேலாக ஊடகங்களில் பேசப்பட்டது. அது ஆணவக்கொலை என்று தமிழரசனும் என் தோழர்களும் சொன்னார்கள். போலீஸ் சூப்பரிண்டெண்டை சென்று சந்தித்து புகார் அளித்தனர். முதல்வரின் நேரடி ஆணையின் அடிப்படையில் அதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. ராதிகாவின் அம்மாவும் அப்பாவும் விசாரணைக்கு வந்தனர். ராதிகாவின் பெற்றோர் விசாரணை அதிகாரி முன் அழுது மயங்கிவிழுந்தனர்.
கடைசியாக நான் காவல்நிலையத்திற்குச் சென்றிருந்தேன் என்று தமிழரசன் சொன்னதுதான் திரும்பத் திரும்ப விசாரிக்கப்பட்டது. நாங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஆவணங்கள் சரிபார்த்தபின் திரும்பிவிட்டோம் என்று காவல்நிலையத்தில் சொன்னார்கள். விசாரணை மெல்ல மெல்ல விசையிழந்தது. ஏனென்றால் நான் முற்றிலும் தன்னிலை இழந்தவனாக இருந்தேன். எந்த நினைவும் என்னிடம் இருக்கவில்லை. போலீஸும் தமிழரசனும் திரும்பத் திரும்ப முயன்றபோதிலும் என்னிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நான் வெறும் குழறல் ஓசைகளை மட்டுமே எழுப்பிக்கொண்டிருந்தேன். என் நாக்கும் செயலிழந்திருப்பதை அதன்பின்னர்தான் மருத்துவர்கள் உணர்ந்தனர்.
நான் இரண்டுமாதக் காலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தேன். அதன்பின் காப்பகத்தில் எட்டுமாதம் இருந்தேன். பிறகு போலீஸார் என்னை ரயில் வழியாக பைத்தானுக்குக் கொண்டுசென்றனர். அங்கு நான் வந்து சேர்ந்த நாளில் என்னைப் பார்க்க பெருங்கூட்டமாக என் சாதியினர் குழுமினர். என்னுடைய நிலையை இந்தியக் குடியரசுக் கட்சி ஓர் அரசியல் பிரச்னையாக மாற்றிக்கொண்டது. பலமாதக் காலம் என்னுடைய படங்கள் ஔரங்கபாத்திலும் பைத்தானிலும் அருகிலிருக்கும் பிற ஊர்களிலும் சுவரொட்டிகளில் இடம் பெற்றன. எந்தச் சொற்களும் வந்தடையாத இருட்டுக்குள் நான் ஒடுங்கி சுருண்டிருந்தேன். என் சொற்கள் அனைத்தும் எனக்குள்ளேயே ஒன்றை ஒன்று துரத்திச் சுழன்று கொண்டிருந்தன.
ஒவ்வொன்றாக அடங்கத் தொடங்கின. அடங்கியே ஆகவேண்டும். அந்த வழக்கு அப்படியே மூடப்பட்டது. நான் மறக்கப்பட்டேன். பைத்தானில் இரண்டு ஆண்டுகள் வரைக்கும் முற்றிலும் தன்னினைவில்லாமல்தான் இருந்தேன். என் அம்மா என்னை கைக்குழந்தைபோலப் பார்த்துக்கொண்டாள். மெதுவாக தொடர்புகள் எல்லாம் அறுந்தன. ஒவ்வொரு நாளும் சுற்றிலுமிருந்த வீடுகள் மாறிக்கொண்டே இருக்க என் வீடு மட்டும் பாழடைந்துகொண்டே இருந்தது. அதில் ஒரு கட்டிலில் மட்கிய நெடி வீசும் படுக்கையில் தூணில் சாய்ந்தவனாக பகலெல்லாம் அமர்ந்திருந்தேன். இரவில் அதிலேயே தூங்கினேன். பகலும் இரவும் இல்லாமலாகி, நான் தூங்குவதும் விழிப்பதுமே நாள் என மாறியது.
என் அம்மா இறந்தபிறகு முற்றிலும் வருமானமில்லாதவனானேன். அண்டை வீட்டார் அளித்த உணவில் ஓரிரு மாதம் வாழ்ந்தேன். ஒரு மழைக்காலத்தில் என் வீட்டின் ஒரு பக்கம் இடிந்து சரிந்தது. அங்கிருந்த அனைவரும் நகருக்குள் மேடான பகுதிகளில் குடியேறினர்.நானும் அவர்களுடன் சென்றேன். மழைக்காலம் முழுக்க அரசு அளித்த உணவை உண்டோம். மீண்டும் நான் தள்ளாடியும் தவழ்ந்தும், உள்ளுணர்வொன்றாலேயே வழி கண்டு, திரும்பி வந்தபோது என் வீட்டில் வேறு எவரோ செப்பனிட்டுக் குடியேறியிருந்தனர்.
அதன் பின் தங்க இடமின்றி நான் கைத்தடியுடன் கிளம்பி என் கால்கள் அறிந்த பைத்தானின் தெருக்களினூடாக சுற்றி உணவு பெற்று வந்தேன். மழைச்சாரலில் ஒருநாள் நான் பைத்தானின் நாககட்டத்திற்குச் செல்லும் வழியில் இருந்த மாளிகைகளில் ஒன்றின் முகப்பிலிருந்த படிக்கட்டில் தங்கலானேன். படுப்பதற்குரிய ஓர் அழுக்கு சணல் சாக்கு, அதற்குமேல் போர்த்திக்கொள்வதற்குரிய நீலநிறமான பிளாஸ்டிக் தாள், உணவை பெறுவதற்கு ஒரு மண்சட்டி, என் உடலிலேயே மட்கிக்கொண்டிருந்த நாலைந்து அடுக்கு பழைய சட்டைகள், ஒரு கைத்தடி என என் உடைமைகள் குறைந்தன. எனக்குரிய வாழ்க்கைச் சுழற்சியொன்று உருவாயிற்று. அதன் வழியாகக் காலம் நிகழ்ந்துகொண்டே இருந்தது, எனக்குள்ளும் வெளியிலும்.
அந்த வழியே செல்பவர்கள் அந்த மாளிகைமுகப்பில் மாறாதிருக்கும் ஒன்றாக என்னைக் கண்டனர். என்னை விழிதிருப்பிப் பார்ப்பவர்களே அரிதானார்கள். அவ்வப்போது எனக்கு உணவளித்து, பார்க்கும்போதெல்லாம் தொட்டு தன்னை அறிவித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தனர். பைத்தான் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தது. எனது சாதிக்காரர்கள் அங்கிருந்து வேறெங்காவது சென்று வேறெதாவது வேலை செய்தாகவேண்டுமென்ற நிலைமை வந்தது. எனது தலைமுறையினர் பைத்தானிலிருந்து வெளியேறினர். உருவாகி வந்த தலைமுறையினர் என்னை விழியிழந்த, செவிமங்கிய, சொல்லற்ற பிச்சைக்காரனாக மட்டுமே அறிந்திருந்தார்கள்.
முப்பதாண்டுகளில் நானே என்னை அவ்வாறு மட்டுமே உணர்பவனாக ஆனேன். என்றோ ஒரு நாள் இந்தத் தெருக்களில் எங்கள் சாதியிலேயே பண வசதிகொண்ட ஒருவரின் மகனாக இருந்தேன் என்றும், ஒருவேளை கூட பட்டினியை அறியாதவனாக இங்கு வளர்ந்தேன் என்றும், ஔரங்கபாதுக்கும் பனாரஸுக்கும் சென்று உயர்கல்வி கற்றேன் என்றும், நான்கு மொழிகளில் ஆழ்ந்த படிப்பு கொண்டிருந்தேன் என்றும் நானே எண்ணிப்பார்க்க முடியவில்லை. அப்படி எண்ணமுடியாமையினால்தான் நான் வாழ்ந்தேன்.
அந்த அடையாளங்கள் கொண்டவனை நான் வேறொருவனாக ,வேறெங்கோ இருப்பவனாக மாற்றிக்கொண்டேன். என் இன்பங்களெல்லாம் அவனுக்குரியவையாகவும், நிகழ்காலத்தின் எனது இழிவும் துன்பமும் எதுவும் அவனுக்கு உரியதல்ல என்றும் பிரித்துக்கொண்ட பிறகுதான் அவனை ஒரு நினைவாக என்னால் வைத்துக்கொள்ள முடிந்தது. அவன் இவனை அறியவே இல்லை. இவன் அவனை மிக இப்பால் நின்று ஒரு கதையின் கதாபாத்திரம்போல இணைந்தும் விலகியும் பார்த்துக்கொண்டிருந்தான்.
கல்தூண் போன்ற மனிதர்கள் உண்டு. தளிர்க்கொடி போல் நெகிழ்பவர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவ்விரு எல்லைகளுக்கும் நடுவே முற்றிலும் நெகிழமுடியாதவர்களாகவும், முற்றிலும் உறுதியானவர்கள் அல்லாதவர்களாகவும் வாழ்கிறார்கள். மனிதன் எந்த அளவு கற்பனை உடையவனோ அந்த அளவுக்கு அவன் தன்னை உருமாற்றிக்கொள்ள முடியும். தன்னை வெவ்வேறு வகையில் பிரித்து விரும்பியபடிச் சித்தரித்துக்கொள்ள முடியும். வாழ்வென்பது நம்மை நாமே சித்தரித்துக்கொள்வது மட்டும்தான். இங்கே எவராயினும் உள்ளே ஒன்றும் வெளியே பிறிதொன்றுமாக குறைந்தது இரண்டு சித்தரிப்புகள் கொண்டவர்களே. உள்ளே பெருகிச்செல்லும் சித்தரிப்புகள் கொண்டவர்களே பெரிய வாழ்க்கை வாழ்பவர்கள்.
நாற்புறமும் நம்மை அழுத்திப் பிசைந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது முடிவின்மை திகழும் பெருவெளி. அதன் எடையை நம் ஒவ்வொரு அணுவும் அறியும். நம் உடல் மட்டும் என்ன? எத்தனை அழுத்தங்களும் எடைகளும் சேர்ந்து அவ்வடிவை நமக்கு அளித்துள்ளன! கற்பிளவுக்குள் முட்டைபொரித்து உருவாகும் தவளை காகிதக்கிழிசலால் உருவான தவளை உருவம்போல சப்பையான வடிவை எடுத்துக் கொள்கிறது. உடைந்த பாறையில் இருந்து அது வெளியே வந்து விழுந்து திகைத்த கண்களுடன் மண்ணில் படிந்து கிடக்கிறது. அதன்மேல் அப்போதும் அந்தப் பாறையின் எடை நுண்ணிய வடிவில் இருந்துகொண்டிருக்கிறது.
எந்த நிலையிலும் நாம் உயிர்வாழ முடியும். எதை இழந்த பின்னரும் நம்மில் எஞ்சுவது எதுவோ அது நம்மை உயிர்வாழ வைக்க முடியும். பெருமிதம் மட்டுமல்ல சிறுமையுணர்வுகூட உயிர்வாழ்வதற்கான காரணமாக அமையக்கூடும். பெருங்கசப்பும், ஏமாற்றமும், துயரும்கூட நமக்குள் உயிர்பெய்து நம்மை வாழச்செய்யும் விசையென அமையலாம். வாழ்வதற்கு இயலாத கீழ்நிலை என ஒன்று இல்லை. அந்நிலைக்கு செல்வது வரை அது நம்மால் இயலுமா என்றே நாம் எண்ணியிருப்போம். ஆனால் நம்மால் இயலும், மெல்ல மெல்ல நாம் மாறமுடியும். ஒரே நாளில் கூட நாம் மாறிவிட முடியும்.
எங்கும் நாம் வாழ்வோம். எப்படியும் நாம் வாழ்வோம். அதற்குரிய சொற்களை உருவாக்கிக் கொள்வோம். ஒரு வீம்பு, அது நான் நான் நான் என்று அரற்றிக் கொண்டிருக்கும். ஒரு பெருமிதம் அது நானல்ல நானல்ல நானல்ல என்று உறுமிக்கொண்டும் இருக்கும். இங்கிருக்கிறேன், ஆனால் இது நான் அல்ல. நான் வாழ்வது பிறருக்காக. ஆகவே நான் தியாகி. நான் வாழ்வது கொள்கைக்காக, ஆகவே நான் அக்கொள்கையேதான். நான் வாழ்வது அன்புக்காக அல்லது வஞ்சத்துக்காக. எத்தனையோ பாவனைகளினூடாக நாம் வாழ்வோம். நாம் வாழ்வதை நாம் மட்டுமே அறிந்திருக்கையில்கூட நாம் வாழ்வோம்.
அந்த வெறுமையில் நான் எனும் சொல் அத்தனை அரிதாகிறது. அத்தனை இனிதாகிறது. நான் என்று சொல்லக்கூட முடியாதவன், நீ என அவனிடம் சொல்லும் ஒரு குரலைக்கூட கேட்காதவன் கொள்ளும் நான் என்னும் உணர்வு எத்தனை விசைகொண்டது. அது எரிந்து எரிந்து வானளாவ நிலைகொள்ளும் இடங்கள் உண்டு. கசந்த நச்சுக்கடல்போல அலையடிப்பதும் உண்டு.
இதோ இந்த அழுக்கு நிறைந்த, ,சிதைந்த உடலுக்குள் இப்படி ஓர் உள்ளம் இருப்பதை இன்று நான் அன்றி யாரும் அறியமாட்டார்கள். இங்கு ஒருநாள் நான் இறந்து கிடக்கும்போது அந்த உள்ளம் இங்கிருந்து மறைந்ததும் எவருக்கும் தெரியாது. அந்த உடலை கோதாவரியின் கரையில் எங்காவது எரிமூட்டி விடுவார்கள். அதன்பிறகு எதுவும் எஞ்சியிருக்காது. ஆயினும் இது இருக்கும் வரை இது முழுமையானது தான். இது இருக்கும் வரை இதற்கொரு நோக்கமும் இருக்கக்கூடும்.
ஒரு நாளில் ஒருமணி நேரம் கூட என் உணவைத் தேடுவதற்கு எனக்கு தேவை இருக்காது பெரும்பாலும் உணவுக்கடைகளில் சப்பாத்தியோ குருமாவோ எனக்கு போட்டு விடுவார்கள். பெரும்பாலும் முந்தைய நாள் பிசைந்து மிஞ்சிய மாவில் செய்ததாக இருக்கும் அந்த சுவைக்கு நான் பழக்கப்பட்டுவிட்டேன். அதன்பின் இங்கு வந்து அமர்ந்தால் உடல் தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக அவ்வப்போது புரண்டு படுப்பது தவிர நான் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. அதன் பின் நான் உடல் அல்ல, வெறும் உள்ளம்.
பருப்பொருட்களை அறியாத ஓர் அந்தர நிகழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் என் உள்ளத்தில் வாழ்க்கை ஒன்று மயங்கி இன்னொன்றாக ஆகமுடியும். ஒன்றன் மேல் ஒன்று படிந்துவிட முடியும். அதில் சிறுசிறு மாற்றங்களுடன் என்னை நான் திரும்பத் திரும்ப உருவாக்கிக்கொண்டே இருந்தேன். பைத்தானின் பங்கிகளின் பகுதியில் கனவுகளில் வாழ்ந்த சிறுவனாக, மராத்தி பயிலும் மாணவனாக, இந்திப்பாடல்களினூடாக மொழியின் முதற்சுவையை அறிந்தவனாக, உருதுவும் மராத்தியும் இந்தியும் சம்ஸ்கிருதமும் கற்றுக்கொண்டிருந்த கல்லூரி மாணவனாக சம்ஸ்கிருதப் பேரறிஞர் ஒருவரின் கீழ் ஆய்வு செய்தவனாக.
ஆனால் அத்துடன் என் நினைவு மிகச்சரியாகத் திரும்பிவிடும். நான் ராதிகாவை நினைப்பதே இல்லை. தற்செயலாகக்கூட அந்நினைவில் சென்று முட்டிக்கொள்வதில்லை. அவள் மிக அரிதாக என் கனவுகளில் மட்டுமே வந்தாள். மஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து முற்றிலும் பூத்த கொன்றை ஒன்று வருவது போல அதே நாணி பக்கவாட்டில் சரிந்த பார்வை. அருகே வந்து என் கைகளைப்பற்றிக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் ’ஹலோ’ என்று சொல்வது போல.
நாங்கள் இருவரும் அமர்ந்து மைதிலி சரண் குப்தாவின் ஒரு கவிதையை செப்பனிட்டோம். கல்லூரியின் உணவகத்தில் அமர்ந்து கையில் ஒரு காப்பிக்கோப்பையுடன் ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தோம். சென்னையின் தெருக்களில் கைகோர்த்தபடி நடந்தோம். கருங்கலில் கட்டப்பட்ட அங்குள்ள ஆலயத்தின் பிரகாரத்தை மிக மெதுவாகக் காலைத்தூக்கி வைத்து சுற்றிவந்தோம். இரவில் படுக்கையில் ஒருவர் உடலை இன்னொருவர் உடலால் இறுக்கிக்கொண்டு ஒன்றில் நிகழும் அதிர்வையும் கொப்பளிப்பையும் இன்னொன்றில் நிரப்பிக்கொண்டு ஒருவர் இன்னொருவரை மிக ஆழமாக உணர்ந்துகொண்டு சற்றே விலகி நின்று அவ்விணைவை வேடிக்கை பார்த்துக்கொண்டு…
அவள் என் கனவில் வந்தால் நான் திடுக்கிட்டு விழித்துக்கொள்வேன். நீண்ட நேரம் என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் படுத்திருப்பேன். அதன்பின் கை நீட்டி என் கழியை எடுத்து எனது காலில் ஓங்கி அடிப்பேன். அந்த வலி என் உடலை அதிரச்செய்யும்போது கல் விழுந்த தண்ணீரில் பிம்பம் மறைவது போல அவள் முற்றிலும் மறைந்து போவாள். இனி நீண்ட நாளைக்கு அவள் வரப்போவதில்லை. இனி நீண்ட நாளைக்கு எனக்கு அமைதியின்மையும் இல்லை.
இந்தப் பெருஞ்சுழற்சியில் முற்றிலும் தேவையற்ற ஒரு வருகை அவளுடையது. அவள் எங்கோ இருந்துகொண்டிருக்கிறாள் என்று தான் என்னால் எண்ண முடிந்தது. ஏனெனில் ஸ்ரீகர் மிஸ்ராவின் மாணவனாக ஆய்வு செய்துகொண்டிருந்த அவனும் எங்கோ இருந்தான். அவர்கள் வாழும் உலகம் வேறெங்கோ இருந்தது. எவர் சொல்ல முடியும்? இங்கு பருப்பொருளாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம் மட்டுமே உண்மையில் உள்ளதென்றும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வாழ்வுகள் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கவில்லை என்றும்?
பிரபஞ்சங்கள் ஒன்றின் மேல் ஒன்றென ஒட்டப்பட்டு உருவாக்கப்படும் காகித அட்டை போல என்று ஒருமுறை ஸ்ரீகர் மிஸ்ரா சொன்னார் . “நூறு தீபங்களின் நடுவே வைக்கப்பட்ட பொருளின் நூறு நிழல்கள் போன்றவை இப்பிரபஞ்சங்கள். பிரபஞ்சங்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த முதல் உருவம் எங்குள்ளதென்று எவரால் சொல்லமுடியும்? இங்குள்ளது அதுவே என்றும் பிற அனைத்தும் மாயை என்றும் எண்ணுகிறோம். ஒருவேளை இங்குள்ளது அந்நிழல்களில் ஒன்றுதான் என்றால்? யாருக்குத்தெரியும்?”
அவரது வழக்கமான உளறல்; அன்று அவர் உருவாக்கும் அந்த அழகிய சொற்சேர்க்கைகளுக்காக மட்டும்தான் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் எண்ணத்தில் அவை எழுகையில் அவை உண்மை என்று அத்தனை அழுத்தமாக என்னில் தோன்றியது. அவ்வாறன்றி வேறெவ்வாறும் இருக்க முடியாது. இருக்க முடியுமெனில் இங்கு எதற்குமே பொருள் கிடையாது. இந்தப் பொருள்வய உலகில் பொருள்வய உடலுடன் இருக்கும் இந்த இருப்பு மட்டுமே மெய்யெனில் இதற்குள் உள்ளமென்று ஒன்றிருக்கத் தேவையில்லை. இது உண்மையல்ல என்பதற்கு இதற்குள் உள்ளமென்று ஒன்று இருப்பதே சான்று.
இதோ அழுத்தமான காலடிகளுடன் நடந்து போகும் இந்த தடித்த மனிதன் பார்க்கும் மட்கிப்போன இந்த உடல்தான் உண்மையெனில் அது பொய்யென்று என்னைப்போல் அறிந்தவர் யார்? இங்கிருப்பவன் பிறிதொருவன். முற்றிலும் வேறொருவன். இவன் செல்லும் தொலைவுகள் இவர்கள் உணராதவை. அவன் அறிந்தவை இவர்களின் தலைமுறைகள் தலைமுறைகள் கூட எண்ணாதவை. நான் இந்த மாபெரும் மாளிகைகளின் இடிபாடுகளில் ஒண்டியிருப்பவன் அல்ல, இந்த மாளிகையின் தலைவன். இங்கே அரசனைப்போல் வாழ்பவன்.
(மேலும்)
சித்தரிப்பும், கவிதையும்- எம்.ஶ்ரீனிவாசன்
சோ.விஜயகுமாரின் கவிதைகளை நான் வாசித்ததில்லை. அப்பெயர் அறிமுகமும் இல்லை. குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் அவர் கவிதைகளை இணையம் வழியாகத் தேடி வாசித்தேன். அவருடைய கவிதைகளில் வடிவ ஒருமையற்ற ஒழுக்கு உள்ளது. அது நவீனக் கவிதைக்குரியது அல்ல. நவீனக்கவிதை ஒரு சொல் கூடுதலாகச் சொல்லப்பட்டாலும் வாசகனின் உலகுக்குள் தன் கையையோ காலையோ நீட்டிவிருகிறது என்று படுகிறது. அது வாசகனில் ஓர் எதிர்ப்பை உருவாக்கி விடுகிறது.
உதாரணமாக இந்தக் கவிதை
அம்மா எனும் இரகசிய இரைப்பைமுதல் முதலாகப் பருகத்
தரப்பட்ட முலையில்தான்
சதையின் வாசனை அறிமுகமானது
எல்லாவற்றிற்கும் முன்பாக
எல்லாவற்றையும் விட மூர்க்கமாக.
ஒரு மதிகெட்ட மத்தியானத்தில்
அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு
பாலாடையைக் கொடுத்தபோதுதான்
நிராகரிப்பும் ஏமாற்றமும் பரிச்சயமாகின.
இல்லாத பூச்சாண்டி பிடித்துப்போவான் என்றாள்
நான் முதல்முதலாகப் பயந்தேன்
இதுதான் கடைசிக் கவளமென்றாள்.
அன்று பொய்யும் நானும் சந்தித்தோம்
நான் தூங்கியதாய் நம்பிய ஓரிரவில்
அவள் கிசுகிசுத்த குரலில் முனகினாள்
கள்ளத்தனத்தைக் காதுகூடாகக் கேட்டேன்.
ஒருமுறை பிடிவாதம் பிடித்ததற்காய்
விறகைக்கொண்டு சூடு போட்டாள்
பின் அவளேதான் கண்ணீர் மல்க
மருந்து போட்டாள்.
நேசம் போன்று நோகடிக்கும் ஆயுதமில்லை
இந்த வரி அந்தத் தழும்பு பரிசளித்தது
நீதான் என் ஒரே உலகமென்றவளுக்கு
இன்னோர் உயிர் கிடைத்தபோது
அதையும் நேசித்தாள்.
ஒரே நேரத்தில் இருவர்மேல் காதல் வருமென
அவள் சொல்லிக்கொடுக்கவில்லை
ஆனாலும் கற்றுக்கொண்டேன்
இன்றேகூட உனக்கும் அவருக்கும்
சண்டை வந்தால் அவரோடுதான் போவேன்
உன்னைப் பிடிக்கும்
ஆனாலும் உனக்காக ஒருபோதும்
நான் என்னைப் பணையம் வைக்க மாட்டேனென
அடிக்கடி சொல்வாள்.
நான் சந்தித்த முதல் துரோகமும்
மிகப்பெரிய துரோகமும் அதுதான்
நேசத்தின் அதே நிலத்தில்
அவளது வேரின் அருகில்
அரளிச் செடியை அன்றுதான்
ரகசியமாய்ப் பதியம் போட்டேன்.
ஊருக்கே தலைவாரியபடி வம்புக்கதை பேசுபவள்
யாருமற்ற நேரத்தில் சீப்புக்குப் பேன் பார்த்தபடி
எதையோ புலம்பிக்கொண்டிருப்பாள்.
தனிமையின் உக்கிரத்தைத் தணிக்க
அவளருகில் பலமுறை தண்ணீர் வைத்ததுண்டு
மதுவை அருந்துவதற்குச்
சத்தியமாய் நான் காரணமல்ல.
பாவாடை நாடாவால் இறுக்கப்பட்ட
அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்
அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அவிழ்க்கப்பட்ட அரிசி மூட்டையிலிருந்துஅனுதினமும் அவள்
என்னைத்தான் அளந்தாள்
என்னையேதான் சமைத்தாள்
சிறிது சிறிதாக என்னை உண்டு செரித்தாள்.
ஓர் இலையை லாவகமாய்த் தரை சேர்க்கும்
அந்திக்காற்று போல
எல்லாத் தன்மைகளுக்கும்
ஒரு புடவையின் நுனியில் விழும்
வழவழத்த முடிச்சு போல
எல்லாத் துயர்களுக்கும்
எல்லாவற்றிற்கும் அவள்தான் பழக்கினாள்.
என் தாயைப் போலப் பார்த்துக்கொள்
என்றபோது ஒருத்தி
நான் உன் தாய்போலல்ல
அந்தளவிற்கு நல்லவளும் அல்ல என்றாள்
ஓத்தா எனும் வார்த்தைக்குச்
சிரிக்கத் தொடங்கியது அப்படித்தான்.
என் அம்மாவின் பதின் பருவமே எனப் பிதற்றியபோது
முத்தத்திலிருந்து விலகிய ஒருத்தி
அதன்பிறகு
என் கண்களைச் சந்திக்கவில்லை
அம்மாவிற்கு மாதவிடாய்
ஏன் சீக்கிரமே நின்றுபோனதென
அறிந்தது அப்போதுதான்.
உன் அம்மாவை நான் பார்த்துக்கொள்வேன்
உன்னை எவ்வளவு பிடிக்குமோ
அதே அளவிற்கு உன் அம்மாவையும் பிடிக்கும் என்றவள்
நான் கொலை செய்யும் முன்னே
செத்துப்போனாள்
அம்மா இறந்துபோவதாக
அடிக்கடி கனவு வர ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.
அம்மா அழுகக்கூடாதென்றுதான்
எனக்கடுத்து உடைந்தழுகிய கருமுட்டையை
அரளிச் செடி அருகே புதைத்து வைத்தேன்
அதன் பூக்களின் வண்ணம்
முட்டையிலிருந்து வந்தது.
அவள் பைத்தியக்காரத்தனமாக
ஏதும் செய்யக்கூடாதென்று
பூச்சிக்கொல்லியைச்
செடியின் வேரில் ஊற்றி வைத்தேன்.
உணவைச் செரிக்கும் அமிலத்தின் நதியில்
அவளது வயிற்றுக்குள் மிதந்தபிறகுதான்
இங்கு வந்து சேர்ந்தேன்
அவள் என்னை அடிக்கடி அணைத்துக்கொண்டாள்
அடிக்கடி முத்தமிட்டாள்
அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக
உண்டு செரித்தேன்
அவள் நடந்து நடந்து
தள்ளாடித் தள்ளாடி
தவழ்ந்து தவழ்ந்து
என் இரைப்பைக்குள் வந்து சேர்ந்தாள்.
இரைப்பை எனப் பெயரிடப்பட்ட
கல்லறைப் பலகைக்கு அருகில்
என் பெயருள்ள ஒரு கள்ளிச் செடியும்
ரத்தச் சிவப்பான பூக்களோடு
பெயரற்ற ஓர் அரளிச் செடியும் இருப்பது
யாருக்கும் தெரியாது
என் இரைப்பைக்கு
அம்மாவின் பெயர் வந்ததும்.
(நன்றி நீலம் இதழ்)
இந்தக் கவிதையின் நீளத்தை இக்கவிதை நியாயப்படுத்துகிறதா, இந்தக் கவிதையின் எந்தெந்த பகுதிகள் வாசகனின் கற்பனை நிகழவேண்டிய களத்திற்குள் நீட்டிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் முதலில் விவாதிக்கவேண்டிய விஷயம் என்று படுகிறது.இந்த நீளம் ஏன் வருகிறது? இக்கவிதையின் மையமாக, ஈட்டியின் கூர்முனை போல, வருவது அம்மாவும் இரைப்பையும் என்னும் புதுமையான படிமம். ஒரே சமயம் விந்தையாகவும், அதேசமயம் நம்பகமாகவும் இருப்பதே அதன் ஆற்றல். அதனால்தான் இந்தக் கவிதை நல்ல படைப்பாக ஆகிறது.
அம்மா நம் வயிற்றுடன் இணைந்தவள். அம்மாவின் வயிற்றுடன் நாம் இணைந்துள்ளோம். வயிறு என்பது primordial ஆன ஒன்று. உயிர்களின் முதல் உறுப்பு அதுதான். அதனாலேயே அது ஒரு archetype. அதிலிருந்து பிறந்த படிமம் ஆதலால் இது வலுவானதாக இருக்கிறது.
ஆனால் இந்தக் கவிதையிலுள்ள பல படிகளினாலான சித்தரிப்புகளுக்கு அந்தப் படிமத்துடன் என்ன தொடர்பு? அந்தப் படிமத்தை விட்டு பல படிகளாகக் கீழிறங்கி அம்மாவுக்கும் கவிதைசொல்லிக்குமான உறவு, அம்மா கவிதைசொல்லியின் பிற உறவுகளில் ஊடுருவுதல் என பல நிலைகளில் பரந்து செல்கிறது.
அப்படி பரந்து செல்லவேண்டுமென்றால் இது ஒரு குறுங்காவியமாக அமைந்திருக்கவேண்டும். குறுங்காவியம் என்றால் இந்த ஒற்றைப் படிமம் போதாது. பல படிமங்களின் தொடுப்புதான் குறுங்காவியம். படிமங்களை தொடுப்பதற்கு ஒரு கதை அல்லது narration என்பதுதான் குறுங்காவியங்களின் பொதுவான வழிமுறை. அல்லது படிமங்களின் உள்ளார்ந்த பொதுத்தன்மையையே சரடாகக் கொள்ளலாம். ஆனால் பெருங்கவிஞர்களே அதைச்செய்ய முடியும். ஒரே ஒரு படிமத்தை விரிவான ஒரு சித்தரிப்பின் பகைப்புலத்தில் பொருத்தி ஒரு குறுங்காவியத்தை அமைக்க முடியாது. அப்படியென்றால் இது ஒரு நீள் கவிதைதான். அதாவது நீண்டுபோன ஒரு கவிதை.
அந்த சித்தரிப்புகள் எல்லாமே சாதாரணமான பேச்சு ஆக உள்ளன. அவற்றில் கவித்துவமே இல்லை. அந்த மையப்படிமத்தின் சாயல்கொண்ட துணைப்படிமங்கள் கூட இல்லை. அல்லது நுணுக்கமான வாழ்க்கைத் தருணங்களோ அதைப்போன்ற கவனிப்புகளோ இருக்கலாம், அவையுமில்லை. அந்தச் சித்தரிப்புகள் எளிமையானவையாக உள்ளன. அம்மாவுடனான உறவின் திரிபுகள், அம்மாவால் உருவான உறவின் திரிபுகளை இத்தனை நீட்டிச் சொல்ல இக்கவிதைக்குள் இடம் இல்லை.
ஒரு நல்ல கவிஞனின் உண்மையான சவாலே இதில்தான் உள்ளது. கவிதையற்ற பகுதிகளை தீட்டித் தீட்டிக் கூர்மையாக்கி, கவிதை நிகழ்ந்த பகுதிகளுக்குக் கிட்டத்தட்ட அருகே கொண்டுவருதலில் என்று சொல்லுவேன். கவிதை அதுபாட்டுக்கு தானாக வந்தமைந்துவிடும். கவிதையற்ற பகுதிகளை கவிதை நோக்கிக் கொண்டுச்செல்லத்தான் மொழிப்பயிற்சி, வடிவப்பயிற்சி எல்லாம் தேவை.
யாப்பு முறையில் எழுதப்படும் கவிதைகளுக்கு யாப்பு என்ற பொதுவான ஓசையமைப்பு அளிக்கும் வசதி உண்டு. புதுக்கவிதைக்கு அது இல்லை. புதுக்கவிதையில் அவ்வாறு கவிதையற்ற பகுதியை எப்படி தீட்டுவது என கவிஞன் மட்டுமே முடிவெடுக்க முடியும். செறிவான, சுருக்கமான உரைநடையை அமைக்கவேண்டும். அது கொஞ்சம் நீண்டால்கூட கவிதையை நெரிக்க ஆரம்பித்துவிடும். மையப்படிமத்தின் சாயலைக் கொண்ட பிற படிமங்களை உருவாக்கலாம். அந்த உணர்ச்சிநிலைகளை கொஞ்சம் நீட்டலாம். (மனுஷ்யபுத்திரன் அதைத்தான் செய்கிறார்) பொதுவாக சுருக்கமான flat ஆன சித்தரிப்பை அளிப்பதுதான் நல்லது.
விஜயகுமாரின் இந்தக் கவிதையில் அந்த சித்தரிப்புப் பகுதிகளில் மொழி கூர்மையில்லாமல் சாதாரணமான பேச்சுபோல உள்ளது. கவிதை வாசகன் சலிப்புடன் ஸ்க்ரோல் செய்து கீழே வரும்படி அமைந்துள்ளது. அதுதான் இக்கவிதையின் மிகப்பெரிய பலவீனம்.
முதல் முதலாகப் பருகத்
தரப்பட்ட முலையில்தான்
சதையின் வாசனை அறிமுகமானது
என்ற தொடக்க வரி ஒரு நல்ல கவிதைக்குரியது. அதற்கான உள்ளார்ந்த ஓசைநயமும் கொண்டது.
அதன்பிறகு வரும் சித்தரிப்புகளில் பல மிகச் சாதாரணமானவை. உதாரணமாக
‘நீதான் என் ஒரே உலகமென்றவளுக்கு இன்னோர் உயிர் கிடைத்தபோது அதையும் நேசித்தாள்.ஒரே நேரத்தில் இருவர்மேல் காதல் வருமென அவள் சொல்லிக்கொடுக்கவில்லைஆனாலும் கற்றுக்கொண்டேன்.இன்றேகூட உனக்கும் அவருக்கும் சண்டை வந்தால் அவரோடுதான் போவேன் உன்னைப் பிடிக்கும் ஆனாலும் உனக்காக ஒருபோதும் நான் என்னைப் பணையம் வைக்க மாட்டேனென அடிக்கடி சொல்வாள்.’
என்ற பத்தி ஒரு கவிதையில் இடபெறத்தக்கதே அல்ல.அது ஒரு சாதாரணமான பேச்சு அல்லது நினைவுதான். அத்தகைய நான்கைந்து பத்திகள் இக்கவிதையில் உள்ளன.
உணவைச் செரிக்கும் அமிலத்தின் நதியில்
அவளது வயிற்றுக்குள் மிதந்தபிறகுதான்
இங்கு வந்து சேர்ந்தேன்.
என்ற வரியில்தான் தொடக்கவரியின் தீவிரமான கவித்துவத்தை இக்கவிதை மீண்டும் சென்று சந்திக்கிறது. அங்கே உச்சமும் கொள்கிறது. ஆனால் அதன்பின்னரும் கவிதை நீள்கிறது.
இக்கவிதையின் இரண்டாவது சிக்கல் தன்னியல்பாக எழுதும் படிமத்திற்கும், மூளையால் சிந்தித்து உருவாக்கப்படும் படிமத்திற்கும் இடையிலான மோதல். அரளிச்செடி, பூச்சிக்கொல்லி எல்லாமே கட்டமைக்கப்பட்ட படிமங்கள். கவிதையில் கட்டமைக்கப்பட்ட படிமங்களுக்கு இடமில்லை. ஒரு முதன்மைப் படிமத்தை வலுப்படுத்த அவை வரலாம். தனியாக வந்தால் வாசகனுக்கு அவை ஒவ்வாமையையே ஊட்டும். கவிதையை வாசிக்க வருபவன் சிறந்த வாசகன். கவிஞனை விடவும் சிந்தனை ஆற்றல் கொண்டவர்கள்தான் பெரும்பாலும். அவர்களுக்குக் கவிஞனின் சிறிய மூளையை கண்டால் சலிப்புதான் உருவாகும்.
கடைசியாக கவிதை நிகழ்ந்தபின் அதை கவிஞனே தொகுத்துப் பேசி முடிப்பது என்பது நவீனக்கவிதையில் ஒரு பிழை. (ஆனால் பழைய ரொமாண்டிக் கவிதைகளில் அந்த முறை உள்ளது)
இரைப்பை எனப் பெயரிடப்பட்ட
கல்லறைப் பலகைக்கு அருகில்
என் பெயருள்ள ஒரு கள்ளிச் செடியும்
ரத்தச் சிவப்பான பூக்களோடு
பெயரற்ற ஓர் அரளிச் செடியும் இருப்பது
யாருக்கும் தெரியாது
என் இரைப்பைக்கு
அம்மாவின் பெயர் வந்ததும்.
என அந்த இயற்கைப் படிமத்தையும் செயற்கைப் படிமங்களையும் இணைக்கும் தொகுப்புடன் முடிகிறது என்பது இக்கவிதையின் பலவீனங்களில் இறுதியானது.
தமிழ்க்கவிதை பற்றி விரிவான விமர்சனங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன. க.நா.சு, பிரமிள், சுந்தர ராமசாமி (பசுவையா), ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய பல ஆயிரம் பக்கங்கள் நீளும் கவிதை விவாதங்கள் உள்ளன. சுகுமாரன், விக்ரமாதித்யன் போன்ற பல கவிஞர்கள் கவிதைகளைப் பற்றிய மதிப்புரைகளிலும் முன்னுரைகளிலும் கவிதை பற்றிப் பேசியிருக்கின்றனர். கவிதை எழுதவரும் இளங்கவிஞர்கள் அவற்றையும் படிக்கவேண்டும்.
கவிதை தன்னிச்சையாக வரும். எழுதுபவன் கவிஞனாக இருந்தால்போதும். ஆனால் அது சரியான கவிதையாக இருக்கவேண்டும் என்றால் அதிலுள்ள கவிதையல்லாத பகுதிகள் கவிஞனால் கவிதைக்கு அருகே கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்குத்தான் கவிதையின் வடிவம், மொழி ஆகியவற்றை பயிலவேண்டும். கவிதை அழகியலை கூர்ந்து பார்க்கவேண்டும்.
அந்த வகையான வாசிப்பு மிகக்குறைந்துவிட்டதோ என்று இளைஞர்களின் கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம் நினைப்பதுண்டு. நானிருக்கும் நாட்டில் இதற்கெல்லாம் முறையான வகுப்புகளே உண்டு. நான் வாசிக்க நேர்ந்த பல கவிதைகள் கவிஞனின் பயிற்சியின்மையால் நழுவவிடப்பட்டவை. அந்தப் போதாமையை இந்தக் கவிதையை வாசிக்கும்போதும் உணர்ந்தேன். அவர்கள் காத்திரமான கவிதை விவாதங்களை வாசிப்பதை விட எளிய அரட்டைகளையே நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
இந்தக் கவிதை இப்போதிருக்கும் நிலையிலும் முக்கியமான கவிதையே. ஏனென்றால் உண்மையான ஓர் உணர்வுநிலை, அதை வெளிப்படுத்தும் ஒரு வலுவான படிமம் இக்கவிதையில் நிகழ்ந்துள்ளது. கவிஞனுக்கே எங்கே கவிதை நிகழ்ந்துள்ளது என்று பிரித்தறியவும், அதை முன்வைக்க பிற பகுதிகளை கூர்மையாக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என்பதன் சான்றாக இக்கவிதை உள்ளது.
இளங்கவிஞர்களுக்கான விருது என்பது ஒரு அங்கீகாரம் அல்ல. அது ஒரு கவனப்படுத்தல்தான். அதற்கான தகுதி கொண்ட கவிஞர் என்றுதான் விஜயகுமாரை நினைக்கிறேன். அவர்மேல் வாசகர்களின் கவனம் விழும்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைத்து மேலே செல்லவேண்டிய பொறுப்பும் அவருக்கு உள்ளது. இளங்கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.
எம்.ஶ்ரீனிவாஸ்
இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


