காவியம் – 21

இடிந்த அரண்மனை வாசல், பைத்தான்

பைத்தானில் நாங்கள் அனைவருமே ஆயிரம் ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் அரண்மனைகளின் வாசல்களின் முன்னால்தான் வாழ்ந்தோம். எல்லா பக்கமும் மூடப்பட்ட ஒரு மாளிகை என்பது உண்மையில் மாளிகையே அல்ல. அவை முழுக்க மூடிய சுவர்கள் அல்ல, மாளிகைகளே என்பது அவற்றின் முகப்பில் இருந்த வாசல்களால்தான். தொன்மையான மாபெரும் வாசல்கள், அவற்றில் ஒருபோதும் திறக்கப்படாத பெரிய கதவுகள். அந்த வாசல்களுக்கு அப்பால் நாங்கள் அறிந்த எவரும் சென்றதில்லை. அந்த வாசல்களை திறக்க முயன்றதுமில்லை. இறுக இமைமூடப்பட்ட கண்கள் போல அவை நின்றிருந்தன. ஆனால் அவற்றுக்குப் பார்வை இருந்தது. அந்த வாசல்களின் இடுக்குகள், இடிந்த மதில்களின் விரிசல்கள் வழியாக அப்பாலிருந்து எவரோ  எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களூர்க்காரர்கள் அந்த வாசல்களின் முன்னாலிருக்கும் ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் கோதாவரியின் நாககட்டத்திற்குச் சென்றனர். ஒவ்வொருநாளும் பலமுறை அவற்றைக் கடந்து சென்றனர். தொடர் பழக்கத்தால் அவற்றை பார்க்காமலாயினர். ஆனால் அவர்கள் அனைவருமே அந்த மூடிய வாசல்களின் பார்வையை தங்கள் உடல்களில், பிடரிகளில் உணர்ந்துகொண்டுதான் இருந்தனர். கனவுகளில் அவற்றைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு நடுங்கினர். சீதளை அன்னையின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டு, ஒரு குவளை நீர் அருந்தியபின் மீண்டும் படுத்துக்கொண்டனர்.

அன்றெல்லாம் எங்கள் ஊரில் எவர் வீட்டிலும் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறைக்காக சுடுகாட்டுப் பக்கத்திலிருந்த முட்புதர்க்காடுகளுக்குத்தான் ஆண்களும் பெண்களும் செல்வார்கள். பெண்கள் இரவு கவிந்த பின்பு அல்லது விடியல் நிகழ்வதற்கு முன்பு முட்டைபோன்ற கண்ணாடிக்குமிழ் கொண்ட சிறிய எண்ணை விளக்குடன் கூட்டமாக செல்வார்கள். என் இளமைப்பருவத்தில் ஓரிருவர் பாம்பு கடித்து இறந்ததும் உண்டு. ஆண்கள் எந்நேரத்திலும் செல்லலாம்.எப்போது சென்றாலும் அங்கே ஓரிருவர் இருந்துகொண்டிருப்பார்கள்.

எங்கள் ஊரின் கஞ்சா இழுக்கும் கும்பல் அந்த நாற்றத்தில் அங்கே தங்களுக்கான இடங்களை உருவாக்கிக் கொண்டு பகல் முழுக்க அமர்ந்திருக்கும். சிலர் அங்கேயே முழு வாழ்க்கையையும் செலவிடுபவர்களாகவே தோன்றுவார்கள். அங்கே மரக்கிளைகளில் சட்டைகளையும் நிஜார்களையும் கழற்றி வைத்திருப்பார்கள். பாய்விரித்து தூங்குவார்கள். அங்கே இருப்பது அவர்களுக்கு கஞ்சா இழுப்பதன் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது. அவர்கள் ஊருக்குள் வரும்போது குன்றி, தலைகுனிந்து, மெலிந்த சிறிய காலடிகளுடன் விரைவாகச் செல்வார்கள். மலநாற்றம் நிறைந்த கோதாவரிக்கரையில் அவர்கள் சிரிப்பார்கள், கூச்சலிடுவார்கள், சண்டைபோடுவார்கள்.

மிக அருகே புதர்களின் திரைக்கு அப்பால் இடைவெளிகளை மின்னச்செய்தபடி கோதாவரி சென்று கொண்டிருக்கும். அங்கிருந்து வெவ்வேறு பேச்சுக்குரல்களும் இசையும் காற்றின் அலைகள் வழியாக அடித்துக்கொண்டு வந்து காதில் விழுந்து மறையும். துண்டுத் துண்டு ஒலிகள். ஒற்றைச் சொற்கள். பாடல்களின் ஒரு வரி முனகல், இசைக்கருவியின் ரீங்கரிப்பின் ஒரு இறகு. கோதாவரி அங்கே அகன்று நீர் ஓடும் சத்தமே இன்றி அசைவில்லாத ஏரிபெருக்கு போல தெரியும். நீரின் அலையொளி சரிந்து தழைந்து நின்ற மரங்களின் இலைகளின் அடியில் நெளிந்துகொண்டிருக்கும்.

நாற்றமும் குப்பைகளும் மிகுந்த இடமாயினும் ஏனோ அது எனக்குப் பிடித்திருந்தது. அங்கே இருக்கையில் நான் எவரைப்பற்றியும் பயப்பட வேண்டியதில்லை என்று தோன்றும். மண்ணுக்கு அடியில் எலிபோல வளைபோட்டு சென்று பதுங்கியிருப்பது போல. அங்கே எனக்கான தனி இடங்கள் இருந்தன. முள்மரங்களுக்கு அடியில் பன்றிகள் தோண்டி வைத்திருக்கும் மென்புழுதிக் குழிகள். மரங்களின் கிளைக்கவைகள். எருமையின் முதுகுபோல புடைத்த ஒரு பாறை. அங்கே அமர்ந்து நான் கற்பனையில் மூழ்குவேன். எனக்கான உலகங்கள், எனக்கான மக்கள், எனக்காவே எல்லாம் நிகழும் ஓர் உலகம்

அங்கே செல்லும் வழி எங்கள் ஊரிலிருந்து புதர்களினூடாகச் சென்று, ஒற்றையடிப்பாதையாக மாறி, சரிந்து புதர்க்காடுகளை அடைந்து, இருபக்கமும் செறிந்த முள்மரங்களின் நடுவே ஊடுருருவி கோதாவரியின் கரையை அடையும். ஓடும்.  மென்புழுதி படிந்து, காலடித்தடங்களும் மாடுகளின் குளம்புச்சுவடுகளும், உலர்ந்த சாணியுமாக கிடக்கும் அந்தப்பாதை ஓர் ஓடை போல முடிவில்லாது வழிந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். நான் அந்தப்புழுதியில் நின்றபடி அது என்னை விசையுடன் எடுத்துக்கொண்டு கோதாவரி நோக்கிச் செல்வதாக எண்ணிக்கொள்வேன்.

அந்தப்பாதையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மாளிகைகளின் கருமையோடிய கற்சுவர்கள் மேல் முட்புதர்களும் புல்லும் முளைத்து கருகி சிலிர்த்த பன்றியின் பிடரிமயிர் போலிருக்கும். யாருக்கும் தெரியாத காலம் முதலே அந்த மாளிகைகள் இடிந்து கூரையற்ற சுவர்களாகவும், அவற்றில் மூடிய பெரிய கதவுகளாகவும் நின்றிருந்தன. அக்கதவுகள் வெளியே பூட்டப்பட்டிருக்கவில்லை, உள்ளிருந்து இறுகமூடப்பட்டிருந்தன. அவை பெரிய வீடுகள் என்று நான் புரிந்துகொள்ளவே பல ஆண்டுகளாகியது. சிறுவனாக இருக்கும்போது அண்ணாந்து பார்க்கையில் அவற்றின் விளிம்புக்கு மேலே மேகங்கள் ஒழுகும் நீலவானம்தான் தெரியும். அவற்றின் ஒவ்வொரு கல்லும் இரு கைகளை விரித்தாலும் அள்ளமுடியாத அளவுக்குப் பெரியவை. நீள்சதுரங்களாக வெட்டி அடுக்கப்பட்டவை.

அந்தக்கதவுகளுக்கு அப்பால் யாரோ அவற்றை மூடிவிட்டனர் என நான் எண்ணிக்கொண்டேன். அவற்றின் முன் நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன். தட்டினால் அவை திறக்கக்கூடும். தட்டவேண்டும் என்று ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே திட்டமிடத் தொடங்கினேன். ஆனால் துணிவு வரவில்லை. நான் தட்ட அவை திறப்பதுபோலவும், உள்ளே விந்தையானதோர் உலகம் எனக்காக விரிவதுபோலவும் கற்பனை செய்யத் தொடங்கினேன். அந்தக் கதவுகளுக்கு முன்னால் சிறு கற்களில் அமர்ந்து அவற்றை பார்த்துக் கொண்டிருக்கையில் என் உடல் கூன்விழுந்தது போல குறுகும். கண்கள் அரைவாசி மூடி வாய் திறந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். தெரிந்தவர்கள் பார்த்தால் என்னை வீட்டுக்குத் துரத்திவிடுவார்கள்.

எட்டாவது படிக்கும்போது முதல்முதலாக அந்தக் கதவைத் தட்டினேன். அது பாறைபோல அத்தனை உறுதியாக இருந்தது. அதிலிருந்து ஓசைகூட எழவில்லை. உள்ளே அதன் தாழ் அத்தனை பலமானதா என்ன? திரும்பத் திரும்ப தட்டிப்பார்த்தேன். கற்களை எடுத்து அடித்துப் பார்த்தேன். ஒருமுறை பெரிய பாறாங்கல்லை தூக்கிக் கொண்டுசென்று அறைந்துகூட பார்த்தேன். அதில் எந்த அசைவுமில்லை. பாறாங்கல் அறைந்த வடுகூட உருவாகவில்லை. கதவில் செவிசேர்த்து உள்ளே என்ன நிகழ்கிறது என்று கவனித்தேன். ஏதேதோ ஒலிகள் கேட்பது போலிருந்தது. ஒன்றும் கேட்கவில்லை என்றும் தோன்றியது.

அந்த மதிலைச் சுற்றிக்கொண்டு பின்னால் சென்றால் அங்கே  சன்னல்கள் உள்ளன என்பதை நான் அதற்கும் பிறகுதான் கண்டுகொண்டேன். ஆனால் அவை மிக உயரத்தில், வானில் மிதந்து நின்றிருப்பவை போலிருந்தன. அருகே நின்ற மரத்தில் ஏறி அதன் கிளைவழியாக அந்தச் சன்னல்களை அடையமுடியும் என்று அறிந்தேன். பலமுறை ஏறிய பின்னர்தான் அந்தச் சன்னல்களை அணுக முடிந்தது. கிளை வழியாகச் சுவரின் மடிப்பில் தொற்றி ஏறி, சன்னல்களுக்கு அடியில் அமைந்த கற்பலகையின் விளிம்பில் காலை ஊன்றி, உள்ளே பார்த்தேன். அந்த நடுமதியத்திலும் இருட்டு செறிந்திருந்த புதர்க்காடுதான் உள்ளே நிறைந்திருந்தது. ஒரு பெரிய கோப்பை நிறைய கரிய நிறமுள்ள எதுவோ நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் எனக்கு உடனே வந்தது. நீண்டகாலம் அந்த படிமம் எனக்குள் இருந்தது.

உள்ளே செடிகளும் முள்மரங்களும் அவற்றில் பின்னிப்படர்ந்த தடிமனான கொடிகளும் ஒன்றாக ஆன தாவர அடர்வு. ஏராளமான புதர்ப்பறவைகள் நாய்க்குரைப்பு போல, பன்றி உறுமுவதுபோல, சிறிய தோல்கருவி போல, ஓசையிட்டுக் கொண்டிருந்தன. உள்ளே செல்ல வழியே இல்லை. அந்த சன்னல்விளிம்பில் அமர்ந்து உள்ளே இருக்கும் அந்த செறிந்த காட்டை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படி ஒரு காடு அங்கே இருப்பது வெளியே முற்றிலும் தெரியாது. இந்த ஊரில் அந்தக் காட்டை பார்த்தவர்களே சிலர்தான் இருந்திருப்பார்கள்.

அங்கே அமர்ந்திருக்கையில் என் புலன்கள் முற்றிலும் கூர்ந்திருப்பது ஓர் உச்சநிலை. எதிர்பாராமல் நம் அருகே புதர்ப்பறவை ஒன்று புதருக்குள் இருந்து கிளம்பி சிறகடித்து மேலெழுந்து கிளைகளில் அமரும். எந்நேரமும் கீரிகளைப் பார்க்கலாம். பாம்புகளும் கண்ணில் படுவதுண்டு. கல்லை எடுத்து உள்ளே வீசி எறிந்தால் சருகுகளிலிருந்து கீரியோ பாம்போ சரசரத்து வெளியே வந்து ஓடும். நரிகளும் உண்டு. நான் அதன்பிறகுதான் அந்த மாளிகைச்சுவர்கள் நேர் பின்பக்கம் இடிந்து சரிந்து கிடப்பதைக் கண்டேன். அந்த வழியாக எளிதாக உள்ளே செல்ல முடியும், ஆனால் புதர்களை வெட்டாமல் நுழையமுடியாது. அப்படி எவரும் நுழைந்த தடையமே இருக்கவில்லை.

அவை மிகப்பெரிய மாளிகைகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் கனத்த சுவர்களுக்குமேல் மிக உயரத்தில் பெரிய கூரைகள் இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு மாளிகைக்குள்ளும் எங்கள் குடியிருப்புப் பகுதியின் பாதியை அடக்க முடியும். அவற்றின் கதவுகளை உள்ளிருந்து மரங்கள்தான் மூடியிருந்தன. அவை எவரும் உள்ளே நுழைய விரும்பாதவை போல கிளைகளால் உந்திப்பிடித்திருந்தன. மரக்கிளைகள் பாம்புகள் போல பெரிய மதில்களில் பற்றி படர்ந்திருந்தன. விரிசல்களில் உருகி வழிந்தவை போல தெரிந்தன. அந்தக் கற்சுவர்களையே வேர்களும் கிளைகளும்தான் கவ்வி நிறுத்தியிருந்தன என்று தோன்றியது.

அவை அந்தப் பகுதியை ஆட்சி செய்த பழைய மன்னர்களின் அரண்மனைகள். சிலர் அவர்களை நவாப்கள் என்றனர். சிலர் சுல்தான்கள் என்றனர். சிலர் ராஜாக்கள் என்றனர். அங்கே மிகப்பெரிய போர் நடந்தது. அந்த அரண்மனைகளில் இருந்த ஆண்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டார்கள். பெண்களை கட்டி இழுத்து கொண்டுசென்றார்கள். அரண்மனைகளை முழுக்க கொள்ளையிட்டபின் ஒட்டுமொத்தமாகத் தீயிட்டனர். பல நாட்கள் தீ நின்று எரிந்தது. தீ அணைந்தபின்னர் அப்பகுதிக்கு எவருமே வரவில்லை. எப்போதாவது தவறி வந்தவர்கள் அந்த சாம்பல் படிந்த நிலத்தில். எரிந்து கருகிய கட்டிடங்களின் நடுவே, கருகிய உடல்களும் பொசுங்கிய தலைமயிருமாக சடலங்கள் அழுதபடியும் புலம்பியபடியும் அலைவதைக் கண்டனர். அவற்றின் உடல்களில் கண்கள் மட்டும்தான் எரியாமல் எஞ்சியிருந்தன.

நாககட்டம் ஒரு காலத்தில் அரசர்கள் நீராடும் படித்துறையாக இருந்தது. அரசர்கள் ஓய்வெடுக்கும் மாளிகை ஒன்று படித்துறையின் கோட்டைக்கு மேல் இருந்தது. அருகே அரசர்கள் வழிபடும் ஏழன்னையரின் ஆலயமும், அனுமானின் ஆலயமும் இருந்தன. மிகப்பெரிய கருங்கல் படித்துறையில் அரசகுடிப்பெண்கள் கோதாவரியில் நீராடினார்கள். அவர்கள் அலங்காரப்படகுகளில் நீர்ப்பரப்பின் மேல் துழாவிச்சென்று நிலவாடி மகிழ்ந்தனர். அனைத்தும் எரிந்தழிந்த பின்னரும் பௌர்ணமி நாட்களில் சிலசமயம் துடுப்போசையையும் சிரிப்பொலிகளையும் கேட்கமுடிந்தது. நிலவில் ததும்பும் அலைகளின்மேல் தொலைவில் படகுகள் மிதந்து செல்வதை காணமுடிந்தது.

பல நூறாண்டுகளாக அப்பகுதிக்கு எவருமே வராமலானார்கள். அங்கே சில தாழ்ந்த சாதியினர் தங்கள் சடலங்களை எரிக்கத் தொடங்கவே அது சுடுகாடாகியது. அதன் அருகே யாரோ ஒரு சிற்றரசர் பங்கிகள் குடியேற இடம் அளித்தார். அவர் பங்கிகளை ஔரங்காபாதில் இருந்து நகரத்தை தூய்மை செய்வதற்காக அழைத்து வந்து குடியேற்றினார். நகரம் மிக அப்பால் கோதாவரியின் இன்னொரு வளைவில் உருவாகி வந்தது. அங்கேதான் ஏக்நாத் பிறந்தார். அவருடைய சமாதி அங்கே அமைந்தது. ஏக்நாதின் சமாதிதான் பைதானை ஒரு நகரம் என ஆக்கியது. அதை பிறர் நினைவுறுவதற்கான ஒரே காரணமாகவும் அமைந்தது.

சிறையுண்டிருந்த காட்டைப் பார்த்துக்கொண்டு நான் முழுநாளும் அமர்ந்திருந்ததுண்டு. பள்ளிக்கூடத்திற்குச் சென்று அங்கே பெஞ்சுக்கு அடியில் பையை வைத்துவிட்டு ஓடி வந்து மரத்தில் ஏறிக்கொள்வேன். அப்போதே வெயில் ஏறத்தொடங்கியிருக்கும். மெல்ல மெல்ல பறவையொலிகள் அடங்கி, மரங்களின் மேல் காற்றுவீசும் ஒலி மட்டும் கேட்கும். காற்றும் நின்றுவிட்டதென்றால் தொலைவில் கோதாவரியின் படுகையில் இருந்து கலைந்த பேச்சொலிகள் மிக மெல்ல கேட்கும்.

கோதாவரியின் காற்று சட்டென்று ஒரு தனிக்குரலை அள்ளிக்கொண்டு வந்து வீசும். நம் செவிகளுக்குப் பின்னாலிருந்து எவரோ நமக்கு மட்டுமே எதையோ சொல்லிச் சென்றுவிடுவதைப்போல. “அதேதான்!” என்று ஒரு பெண்குரல் ஒருமுறை சொன்னது. “பார்த்தீர்களா அப்பா!” என்று ஒரு குழந்தைக் குரல். பெரும்பாலும் பெண்குரல்கள் அல்லது குழந்தைகளின் குரல்கள்தான். அவைதான் கூர்மையானவை. கோதாவரிக்கரையில் வாழ்பவர்கள் அனைவருக்கும் அப்படி கோதாவரி வீசியெறியும் உதிரிக்குரல் சொற்கள் பற்றித் தெரியும்.

அச்சொற்களில் சில அந்த திறந்த சன்னல்கள் வழியாக உள்ளே சென்று, அங்கே சுவர்மடிப்புகளில் பட்டு திரும்பி வருவதை முதல்முறையாகக் கேட்டபோது நான் திடுக்கிட்டு மரத்தின் மேலிருந்து விழப்போனேன். நெஞ்சு உரச, கிளையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். பிறகு படபடப்புடன் இறங்கி ஓடி வீடு திரும்பிவிட்டேன். காடு மண்டிய கட்டிடப்பகுதிக்குள் இருந்து ஒரு குரல் என்னிடம் “அதுதானே!” என்றது. நான் அந்தச் சொல்லை திரும்பத் திரும்ப என்னுள் ஓட்டிக்கொண்டிருந்தேன். அங்கே யாரோ எதையோ சொல்கிறார்கள். நாம் பதில் சொல்வதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

மீண்டும் நான் மாளிகைகளை அணுக பல நாட்கள் தாண்டின. அந்த அச்சமே ஈர்ப்பாக ஆகியது. துணிவைத் திரட்டிக் கொண்டு மீண்டும் சென்றபோது முதல்முறை சென்றதைவிட என் உடல் உச்ச தீவிரத்துடன் இருந்தது. மேலேறி அமர்ந்து அந்தக் குரலுக்காக காத்திருந்தேன். காடு வழக்கமான ஒலிகளுடன் இருந்தது. அதற்காக காத்திருந்து, சலித்து, அந்த ஓசைகளை மட்டுமே கவனித்து, அவை என்னென்ன என்று புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கையில் அங்கிருந்து குரல் எழுந்தது “அம்மா!”

இம்முறை அது எப்படி வருகிறது என்பதை நன்றாகவே புரிந்துகொண்டேன். எவரையாவது மேலேற்றி அமரச்செய்து, அந்த ஒலி வரும்போது காட்டி, திகிலுறச் செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அங்கே ஒரு பெண் வாழ்கிறாள். அகே அவள் இருந்த மாளிகையில் வாழ்ந்தவள். பேரழகி, ஒரு குழந்தையின் தாய். அவளை நவாப்களின் படைகள் கொன்றன. அவள் குழந்தையையும் கொன்று அந்த உடலை அவள் மேலேயே போட்டுவிட்டுச் சென்றன. வெட்டப்பட்ட அவளுடைய கை நகர்ந்து வந்து துடித்துச்சாகும் குழந்தையை தழுவிக்கொண்டது. அவர்கள் அங்கேயே பேய்களாக வாழ்கின்றனர். உள்ளே நிறைந்திருக்கும் நிழல்களில் கலந்து இரண்டு நிழல்களாக.

அதன்பின் நான் அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினேன். அந்தப்பெண்ணின் முகத்தை, அவள் ஆடைகளை, நகைகளை விரிவாக என்னுள் வரைந்து எடுத்தேன். அந்தக்குழந்தை ஆண். ஐந்து வயதான சிறுவன். அவனும் சரிகையாடைகளும் சரிகைத் தொப்பியும் அணிந்திருந்தான். அந்தக்கதையை நான் விதவிதமாக வளர்த்துக் கொண்டேன். எத்தனை கொடூரமாக முடியுமோ அத்தனை கொடூரமாக அவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தனர். அந்தக் கொடூரம் எனக்குச் சலிப்பை அளித்தபோது அவர்கள் இனியவர்களாக எனக்குள் மீண்டு வந்தனர்.

அப்போது ஒருமுறை ஒரு தனிச்சொல் காட்டுக்குள் இருந்து தெறித்ததுபோல் எழுந்து வந்தது. “யார்?” என்று நான் திடுக்கிட்டு கேட்டே விட்டேன். பறவையின் ஒலியாக இருக்குமோ? இல்லை வேறேதாவதா? பறவையின் ஒலிதான். மீண்டும் செவிகூர்ந்து அமர்ந்திருந்தேன். பறவை என்றால் மீண்டும் கேட்கும். மீண்டும் அதே குரல், அதே சொல். தெளிவாகவே அது சொல்தான். அறியாத மொழியிலானாலும் ஒரு சொல்தான் அது. என் உடல் வியர்த்துவிட்டது. நான் கிளைகளைப் பற்றிக்கொண்டு இறங்கும்போது என் கைகள் நடுங்கி நான் விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. மீண்டும் அச்சொல் மிகத்துல்லியமாக ஒலித்தபோது நான் கைகளை விட்டுவிட்டு கீழே குதித்துவிட்டேன்.

என் கால்களில் நன்றாகவே அடிபட்டுவிட்டது. எழுந்து நின்றபோது முதுகில் வலி சொடுக்கியது. தலைசுழன்று ஒரு பக்கமாக என் உடலை தள்ளியது. எழுந்து மரத்தைப் பிடித்துக்கொண்டு நின்றேன். மீண்டும் மீண்டும் தள்ளாடி விழப்போனேன். ஆனால் மாளிகையின் அருகே இருந்து அகன்று மசூதியின் சுவரை அடைந்து அதன் அருகே அமர்ந்தேன். தலைசுழன்றமையால் படுத்துக் கொண்டேன். மீண்டும் எழுந்து நின்றும் நடந்தும் என் வீட்டை அடைந்தேன்.

அம்மாவிடம் நான் விழுந்துவிட்டேன் என்று சொன்னேன். அம்மா பக்கத்துவீட்டு மருத்துவக் கிழவியை வரவழைத்து என்னை காட்டினாள். அவள் என் முதுகைத் தடவிப்பார்த்தபோது நான் வலியில் அலறினேன். அவள் முதுகெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் எண்ணை போட்டுக்கொண்டு பத்துநாட்கள் படுத்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். நான் மீண்டெழ பதினெட்டு நாட்களாயின. அதற்குள் இரண்டுமுறை காய்ச்சல் வந்து சென்றது. எங்கே விழுந்தேன் என்று நான் அம்மாவிடம் சொல்லவேயில்லை.

அதன்பின் நான் மாளிகைகளுக்குள் பார்த்ததில்லை. அபூர்வமாகவே நாககட்டத்திற்குச் சென்றேன். அப்போதெல்லாம் அப்பகுதியை விரைந்து கடந்து விடுவேன். மூடிய மாளிகை வாசல்கள் என்னை நெடுந்தொலைவுக்குப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். அவை என் கனவுகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. மூடிக்கிடக்கும் பெருங்கதவுகள். எப்போதும் திறக்க வாய்ப்பற்றவை. அவற்றை இங்கே எவரும் கற்பனையில்கூட திறந்து பார்க்கவில்லை. எத்தனை விசித்திரம், ஒரு நகரத்தை நோக்கி இன்னொரு நகரம் தன் எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.

மூடுண்ட நகரத்தில் இருந்து பைத்தான் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. அதன் புதிய கட்டுமானங்கள் எல்லாமே அப்பால் அணைக்கட்டை நோக்கிச் செல்லும் பெரிய சாலையின் இரு பக்கங்களிலும்தான் அமைந்தன. நானும் புதிய பைத்தான் நோக்கித்தான் சென்றேன். பைத்தானிலிருந்து வெளியே சென்றேன், ஔரங்காபாதுக்கு, பனாரஸுக்கு. ஆனால் மூடுண்ட நகரம் என்னுள் இருந்தது. எனக்குள் மூடிய கதவுகள் கனவாக எழுவதுண்டு. ‘எப்போதைக்குமாக மூடிக்கொண்ட கதவுகள்’ என்று நான் ஒருமுறை என் நாட்குறிப்பில் எழுதினேன். உண்மையில் நாட்குறிப்பில் எழுதவில்லை, நாட்குறிப்பில் அவ்வாறு எழுதுவதாகக் கனவு கண்டேன். ‘எல்லா வாசல்களும் மூடிய மாளிகைகள்’

என்னுள் எப்போதும் இருந்த கனவு அக்கதவுகளைத் திறப்பதைப் பற்றித்தான். நான் எனக்குள்ளேயே எழுதி அழித்துவிட்ட நூற்றுக்கணக்கான கவிதைகளில் அந்த கரு திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது. காசி வித்யாபீடத்திற்குச் சென்ற முதல் ஆண்டில், என்னை ஒரு காவியகர்த்தனாக கற்பனை செய்துகொண்டு உலவிய நாட்களில் ஒரு பெருங்காவியத்தின் முகப்புக் காட்சியை துளித்துளியாக உருவாக்கினேன். நாட்கணக்கில் வெவ்வேறு மரத்தடிகளிலும், நூலகங்களிலும் அமர்ந்து அந்தக் காட்சியை அழித்து அழித்து செம்மைப் படுத்திக்கொண்டேன்.

ஆனால் அதை எழுதத் தொடங்கியபோது அது வெறும் செய்யுளாக ஆகியது. வழக்கமான சொல்லாட்சிகளும், அணிகளும்தான் வந்தமைந்தன. அதை திரும்ப வாசித்தபோது நான் படித்த சம்ஸ்கிருத காவியங்களின் சலிப்பூட்டும் நகலாக இருந்தது. வெறியுடன் அக்காகிதங்களை கிழித்து குப்பைக்கூடைக்குள் போட்டேன். ஶ்ரீகர் மிஸ்ரா அக்கிழிசல்களில் எதையாவது படித்துவிடக்கூடும் என்று சந்தேகப்பட்டு குப்பைக்கூடையில் இருந்து பொறுக்கி கழிப்பறைக் குவளைக்குள் போட்டு உள்ளே செலுத்தினேன். நானே அவற்றை விழுங்கித் தண்ணீர் குடிப்பதுபோல குமட்டி வந்தது.

ஆனால் அப்போதும் அந்தத் தொடக்கம் எனக்கு மகத்தானதாகவே இருந்தது. சம்ஸ்கிருத காவியங்கள் அவ்வப்போது நவீன காலகட்டத்திலும் எழுதப்படுவதுண்டு. ஆனால் அவை பழைய சம்ஸ்கிருதப் பொற்காலத்தை திரும்ப உருவாக்க முயன்றன. பழைய கருப்பொருட்கள், பழைய சொற்சேர்க்கைகள், அந்தப் பழைய கனவு. என் காவியம் சமகாலத்தில் இருந்து தொடங்கியது. பைதானின் நகரம் வழியாக சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன். காசியில் இருந்து வந்த இசைக்கலைஞன் அவன். காவியம் பயின்றவன், தனியன், கனவுகாண்பவன். நகரத்தின் இரவில் அவனுக்கு ஒதுங்க இடமில்லை. அந்நகரில் அவனை அறிந்த எவரும் இல்லை.

கோடைகாலம், நகரத்தெருக்களில் நல்ல நெரிசல். அன்று அமாவாசை நாள். விரைவிலேயே இருட்டு விழத் தொடங்கிவிட்டது. நகரத்தின் விளக்குகள் சுடர்விடுகின்றன. விளக்குகளின் மஞ்சள் நிற ஒளியில் நகரத்தின் குப்பைகளும் அழுக்குகளும் வறுமையும் மறைந்துவிடுகின்றன. பூச்சிகள் எல்லாம் பொன்னிறமாக சுடர்விடுகின்றன. அவன் தனிமையின் தளர்வு கொண்ட காலடிகளுடன் நடந்து கோதாவரிக் கரைக்கு சென்று அங்கே நாககட்டத்தின் விரிந்த படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறான். படிக்கட்டுகளில் பகல்வெயிலின் வெம்மை. கோதாவரி மெலிந்து ஓடைபோல வழிந்துகொண்டிருக்கிறது. பறவைகள் காற்றை உந்தி உந்திப் பறந்து கூடணைந்துகொண்டே இருந்தன.

விரைவிலேயே வானம் இருண்டுவிட்டது. செறிந்த விண்மீன்களின் ஒளியில் நதியில் மட்டும் உள்வெளிச்சம் அலையடித்தது. நகரின் ஒலிகள் அடங்கத் தொடங்கின. கைவிடப்பட்ட கவிஞன் பல நாட்களாக உணவு உண்டிருக்கவில்லை. மெலிந்த அவன் உடல் தளர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. நகரத்தில் எங்கோ இரவுக்கான சங்கொலி. அதன்பின் நகரம் வெறும் தொலைதூர வெளிச்சங்களாக மட்டுமே மிஞ்சியது. அவன் கோதாவரியின் படிகளில் படுக்கலாமென்றுதான் எண்ணி வந்தான். ஆனால் கொசுக்கள் வந்து அவனை மொய்த்தன. அவனுடைய பழைய நினைவுகள் போல அவை அவன் குருதியை நாடி வந்தன.

அவன் எழுந்து புழுதிபடிந்த பாதையின் வழியாக நடந்தான். அதன் இரு பக்கமும் மூடிய வாசல்கள் நின்றன. இடிந்த மதில்களுக்குமேல் கூரைகள் இல்லாத மாளிகைகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அவன் மேற்கொண்டு நடக்கமுடியாமல் ஒரு மாளிகையின் முகப்பில் இருந்த கல்படி மேல் அமர்ந்தான். ஆழ்ந்த இருட்டால் அப்பகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. அங்கே தெருவிளக்குகள் ஏதுமில்லை. எவராவது தனக்கு உணவும் நீருமாக வரமாட்டார்களா என அவன் எண்ணினான். அவ்வெண்ணத்தின் கையறுநிலையை எண்ணி புன்னகைத்தான்.

அப்போது ஒரு மணியோசை கேட்டது. அவன் திகைத்து எழுந்து நின்றான். மணியோசை மெய்யாகவே கேட்டதா என வியந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான். மணியோசை மீண்டும் முழங்கியது. மாளிகையின் கதவுகள் மெல்ல திறந்து விரிந்தன. உள்ளே நெய்விளக்குகளின் பொன்னிற ஒளி. மின்னும் ஆடைகளும் நகைகளும் அணிந்த பெண்களும், தலைப்பாகை அணிந்து கூர்மை சுடர்விடும் வேல்களை ஏந்திய ஆண்களும் அவனை நோக்கி வந்தனர். வானில் முழுநிலவு எழுந்து நின்றது. அவனை நோக்கி பொன்னிற முகபடாம் அணிந்த களிற்றுயானை நீர்த்துளி போல தன் உடலில் ததும்பித் ததும்பி வந்தது. அதன் மேல் அவனே அமர்ந்திருந்தான்.

ஒவ்வொரு முறை அந்த இடத்தை எழுதும்போதும் நான் புன்னகைப்பதுண்டு. என்றோ ஒருநாள் என்னால் அதை எழுதிவிடமுடியும், அது எழுதப்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் என் முழு வாழ்க்கையையும் நான் அதையொட்டியே உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த எண்ணம் எழும்போது அந்த ஒற்றைச் சொல் என்னை வந்து அறையும். நான் என் கனவிலிருந்து விழித்துக்கொண்டு சோர்வுடனும் சலிப்புடனும் தலைதாழ்த்தி அமர்ந்திருப்பேன். அந்தச் சொல்தான் உண்மையான தொடக்கம். அதை அறியாமல் நான் அந்த மாளிகைகளைப் பற்றி எதையும் எழுதிவிட முடியாது. அந்தக் கதவைத் திறக்கும் அடையாளச் சொல் அதுதான். அது என்னை வந்தடைந்திருக்கிறது. ஆனால் அதை என்னால் கையாள முடியவில்லை.

நான் காசி வித்யாபீடத்தில் பயிலும்போதெல்லாம் அந்த சொல்லுக்காக என்னுள்ளே ஒரு விழிப்பு இருந்து கொண்டிருந்தது. நான் அங்கே கற்ற மொழிகளில் என் பிரக்ஞை அதற்காக அளைந்துகொண்டே இருந்தது. காசியில் நான் சம்ஸ்கிருதமும் பிராகிருதமும் கற்றேன். ஆகவே பாலியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழிலும் திராவிட மொழிகளிலுமுள்ள சொற்கள் என் செவிகளில் விழுந்துகொண்டே இருந்தன. எந்தச் சொல்லும் அச்சொல்லை நினைவுறுத்தி என் அகத்தை திடுக்கிடச் செய்யவில்லை. பின் அச்சொல்லை தேடுவதை நான் விட்டுவிட்டேன், ஆனால் என் ஆழம் அதை தேடிக்கொண்டேதான் இருந்தது.

உண்மையில் அச்சொல்லை நான் பல நூறு முறை கேட்டிருந்தேன். என் அம்மாவின் வாயில் இருந்து. அவளில் அந்தப் பிசாசு தோன்றிய நாளில்கூட. ஆனால் அப்போதெல்லாம் அந்த மொழியை நான் என் பிரக்ஞையால் முட்டி முட்டி பொருள்கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். என் ஆழம் அதை முழுமையாகத் தவிர்த்து விலகி நின்று தவித்துக்கொண்டிருந்தது. அவ்வாறு நிகழும்போது அது முடியவேண்டும் என்ற பதைப்பு, முடிந்ததும் விடுதலை, மறுகணமே அதை ஒட்டுமொத்தமாக என் நினைவில் இருந்து அகற்றி என்னை வேறெங்கோ நகர்த்திக்கொள்வேன்.

அதை நான் கனவுகளில் உளறியிருக்கிறேன். ஓரிருமுறை ராதிகா என்னை தூக்கத்தில் இருந்து உசுப்பி “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டதுண்டு. “என்ன?” என்று நான் கேட்பேன். “ஏதோ சொன்னாய்…” என்று சொல்லும்போது அவள் முகம் மிரண்டிருக்கும் “என்ன சொன்னேன்?” என்று நான் கேட்பேன். “ஏதோ ஒரு மொழி… நான் அறிந்த மொழியே அல்ல… ஒரு சொல். அதைக்கூட நான் மறந்துவிட்டேன். உண்மையில் யாரோ புதிய ஒருவர் அறைக்குள் வந்த பேசியதுபோல் இருந்தது. உன் குரலே அல்ல”

என் கண்களும் செவிகளும் அழிந்து, என் உடல் செயலிழந்து, வெறும் சித்தம் மட்டுமாக நான் எஞ்சியபோதுதான் அச்சொல்லை நான் கவனித்தேன். என் அம்மாவிடம் அந்த அறியாத மொழி மீண்டும் தோன்றியபோது. அதில் ஒலித்துப் பெருகிச்சென்ற அறியாத பலநூறு சொற்களில் ஒன்றாக அதுவும் வெளிவந்தது. நான் அப்போது அச்சொல் கைநீட்டினால் தொட்டுவிடலாம் என்பதுபோல பருப்பொருளாக மிக அண்மையில் அசைவிலாது நிற்பதாக உணர்ந்தேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.