ஐரோப்பாவில் இந்திய தத்துவ அறிமுகம், இலக்கிய முகாம்
இந்திய தத்துவ சிந்தனை மரபை முழுமையறிவு அமைப்பு வழியாக சென்ற இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வகுப்புகளாக நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் ஐந்து அணிகளிலாக முந்நூற்றி இருபத்திரண்டு பேர் தொடர்ச்சியாக பங்கெடுக்கிறார்கள். தத்துவ பாடங்களின் ஆறாவது நிலை முடிந்துள்ளது.
அமெரிக்காவில் சென்ற அக்டோபரில் முதல் அறிமுக வகுப்பை நடத்தினோம். தொடர்ந்து முதல் வகுப்பு மீண்டும் வரும் அக்டோபரில் அமெரிக்காவில் வழக்கமான பூன் குன்றில் நிகழவுள்ளது. அங்கே இரண்டாவது நிலை வகுப்பும் நிகழவுள்ளது.
ஐரோப்பாவில் முதல் இந்திய தத்துவ முகாம் நிகழவுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஐரோப்பா சார்பில் இது ஒருங்கிணைக்கப் படுகிறது. இது இந்து தத்துவ முதல்நிலை அறிமுக வகுப்பு.
நான்கு நாட்கள் நிகழும் முகாமில் தத்துவ அறிமுகம் இரண்டரை நாட்கள். ஒரு நாள் இலக்கிய அரங்கம் நடத்தப்படும்.
ஆர்வமுள்ள நண்பர்கள் பதிவு செய்துகொள்ளலாம். எவரும் பங்கெடுக்கலாம்.
நடைபெறும் நாட்கள் : ஜூலை 10,11,12 மற்றும் 13.
நடைபெறும் இடம் : Salzburg, Austria
பதிவு செய்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: sharmi.neela@gmail.com
ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ராஜு
நிபந்தனைகள்1. முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாத எவரையும் அழைத்துவர அனுமதி இல்லை.
2. பங்கேற்பாளர்கள் முழு வகுப்புகளிலும் கலந்துகொள்ள வேண்டும். (தத்துவத்தில் மட்டும் ஆர்வமுடையவர்கள் தத்துவ வகுப்பில் மட்டும் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும்)
3. முன்பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட தகவல்களை அளித்து மின்னஞ்சல் செய்யவேண்டும்.
பெயர்வயதுவிலாசம்தொலைபேசி எண்4. இது செலவுப் பகிர்வு அடிப்படையில் நடத்தப்படுவது. அது பதிவு செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும்
வகுப்புகள் பற்றி* இந்த வகுப்புகள் இந்து தத்துவ இயல் பற்றியவை மட்டுமே. பௌத்த, சமண தத்துவ இயல்கள் இவ்வகுப்பில் கற்பிக்கப்படாது. மேலைத்தத்துவமும் கற்பிக்கப்படாது. அவற்றுக்கு வேறு வகுப்புகள் உள்ளன. அவை பின்னர் நடத்தப்படலாம்.
* இந்த வகுப்புகள் ‘ஆன்மிக’ வகுப்புகள் அல்ல. மதக்கல்வியும் அல்ல. தத்துவம் என பரலவாக இங்கே நம்பப்படுவது சத்சங்கம், உபன்னியாசம் போன்றவற்றையே. அவை நற்கருத்துக்களை போதனை செய்பவை. தத்துவக் கல்வி என்பது முற்றிலும் வேறொன்று.
* தத்துவக்கல்வி அறிவார்ந்தது, தர்க்கபூர்வமானது, வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்துகொள்ளப்படவேண்டியது.
* தத்துவக் கல்வி ஒற்றைப்படையானது அல்ல. எல்லா தரப்புகளையும் இணைத்துக் கற்கவேண்டியது அது. ஆகவே முரண்படும் தரப்புகளை இணையான முக்கியத்துவத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
* ஒரு தத்துவ வகுப்பு அதற்குரிய கறாரான ஒழுங்குமுறையுடன் மட்டுமே நிகழ முடியும். அதற்கான நிபந்தனைகளுக்கு ஏற்புடையவர்கள் மட்டுமே அதில் பங்குபெற முடியும்.
* முறையான தத்துவக் கல்வி என்பது உதிரிக் கருத்துக்களாக நாமறிந்த பலவற்றையும் சரியான கோணத்தில் முழுமையாக புரிந்துகொள்ள உதவியானது. அதன் முதல்தேவை என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றில் இருந்து விடுபட்டு முன்னகர்வதற்கான முனைப்பு. ஆகவே கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
* இந்த வகுப்புகள் தொடர்ந்து ஆண்டுதோறும் அடுத்தடுத்த நிலையின் வகுப்புகளாக நடத்தப்படும்.
ஜெயமோகன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

