Jeyamohan's Blog, page 109

May 16, 2025

கவிதைகள். சோ.விஜயகுமார் சிறப்பிதழ்

விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு

அன்புள்ள ஜெ,

மே மாத கவிதைகள் இதழ் குமரகுருபரன் விருது பெறும் சோ. விஜயகுமார் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அவரது நேர்காணல் பகுதி – 1 (நேர்காணல் செய்தவர்கள்: மதார், சதீஷ்குமார் சீனிவாசன்) இடம்பெற்றுள்ளது. கவிஞர் மதார், எழுத்தாளர் ரம்யா விஜயகுமார் கவிதைகள் பற்றி எழுதிய ‘வாயாடி’, ‘மினுங்கும் வரிகளும் உணர்வாழுவும்’ கட்டுரைகளும், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் எழுதிய ‘கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு?’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரை உள்ளது.

https://www.kavithaigal.in/

கவிதைகள். சோ.விஜயகுமார் சிறப்பிதழ்

நன்றி,

ஆசிரியர் குழு

மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2025 11:34

காவியம் – 26

யக்ஷன், சாதவாகனர் காலம் பொமு 2 சாஞ்சி

கானபூதி என்னும் பிசாசை அதன்பின் இரவுகளில் மட்டுமே நான் சந்தித்தேன். பகலில் நகரினூடாக வலுவிழந்த காலை இழுத்துக்கொண்டு, நீண்ட மூங்கில்கழிமேல் உடலின் முழு எடையையும் ஏற்றியவனாக நான் நகருக்குள் சென்று என் உணவை தேடிவந்தேன். இடிந்த மாளிகையின் புழுதி படிந்த படிகளில் சாக்குப்பை மேல் உடலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டேன். கானபூதியின் நிழலுருக்களில் ஒன்று பெரும்பாலும் என்னுடன் இருந்தது. தன் பெயர் சக்ரவாகி என அது அறிமுகம் செய்துகொண்டது.

“உன்னைப்போல் முட்டாளை நான் இதற்கு முன் சந்தித்ததே கிடையாது. சரியான முட்டாள் நீ. சொல்லப்போனால் நீ வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே இருந்திருக்கிறாய். நீ தவறவிட்ட தருணங்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்” என்று அது என்னிடம் பேசியபடியே வந்தது. “கானபூதியின் கதைகளின் புதிரை நீ விடுவிக்கவே முடியாது. ஒன்றிரண்டை தவறுதலாக நீ அவிழ்த்துவிடலாம். ஆனால் நீ தோற்பது உறுதி. தோற்றுவிட்டால் நீ என்ன ஆவாய்? முடிவடையாத அந்தக் கதை உன்மேல் ஒரு வேதாளம் போல ஏறிக்கொள்ளும். அதை நீ இறக்கி வைக்கவே முடியாது. அது உன்னை ஒவ்வொரு கணமும் துன்புறுத்திக்  கொண்டிருக்கும். ஆறவே ஆறாத ரணம்போல…”

நான் அதனுடன் பேசுவதை தவிர்த்தேன். “ஏனென்று கொஞ்சம் யோசித்தாலே நீ உணர்ந்துகொள்ள முடியும். நீ யார்? காலமும் இடமும் எல்லையிடப்பட்ட வாழ்க்கை கொண்ட மானுடன். கானபூதி யார் தெரியுமா? அவன் காலமற்றவன், இடமற்றவன்… அவனால் எங்கும் செல்லமுடியும். எவருடைய உள்ளத்திற்குள்ளும் நுழையமுடியும்… அவன் அறிந்தவற்றை நீ எப்படி அறியமுடியும்?” அது என்னை தொட்டு உசுப்பியது. “மடையா, நீ இப்போதுகூட சென்று கானபூதியிடம் இந்த ஆட்டத்திற்கு நீ வரவில்லை என்று சொல்லிவிடலாம். வேறெதையாவது நீ அதனிடம் கேட்கலாம்… அவன் அளவில்லாத கருணை கொண்டவன்.”

“விலகு… தள்ளிப்போ. உன்னிடம் பேச எனக்கு மனமில்லை” என்று நான் கூவி அடிப்பதற்காக கழியை தூக்கினேன்.

சிரித்தபடி சக்ரவாகி என்னிடம் சொன்னது. “நான் நிழல், என்னை நீ என்ன செய்ய முடியும்? நான் உன்னிடம் பேசுவதை உன்னால் தடுக்கவே முடியாது… இந்நகரில் இப்படி பல்லாயிரம் பேரிடம் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் காதருகே பேசத்தொடங்குவோம். உண்மையிலேயே பேச்சு கேட்கிறதா அல்லது அது தங்கள் மனமயக்கமா என அவர்கள் குழம்புவார்கள். அந்தப்பேச்சை அவர்களால் கட்டுப்படுத்தவும் திசைமாற்றவும் முடிகிறதா என்று பார்ப்பார்கள். எந்த வகையிலும் அது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்ததும் பயந்துவிடுவார்கள். அவர்கள் எண்ணியே பார்க்காதவற்றையும் அவர்களுக்கு முற்றிலும் தெரியாதவற்றையும் நாங்கள் பேசத்தொடங்கும்போது நிலைகுலைந்துவிடுவார்கள்”

“அவர்களின் தூக்கம் அழிந்துவிடும். எங்களிடம் கெஞ்சவும் மன்றாடவும் தொடங்குவார்கள். எங்களை அதட்டுவார்கள், வசைபாடுவார்கள். நாங்கள் பேசுவனவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவார்கள். அப்போதுதான் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அவர்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். அதுவரை அவர்களிடம் ஏதோ சிறு சிக்கல் இருப்பதாக நினைத்தவர்கள் இப்போது பைத்தியம் என நினைக்க ஆரம்பிப்பார்கள். பிடித்துக்கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டுவார்கள். தனியறைகளில் அடைத்துவைத்து நாட்கணக்கில் தூங்கச் செய்வார்கள். என்னென்னவோ சிகிச்சைமுறைகள் உள்ளன. எல்லாமே அபத்தமானவை. அந்தச் சிகிச்சையாலேயே அவர்கள் உடலும் உள்ளமும் தளர்ந்து வெறும் தசைக்குவியல்களாக ஆகிவிடுவார்கள். கண்களில் ஒளி அகன்றுவிடும். விழிகள் எங்கும் நிலைகொள்ளாமல் தாவிக்கொண்டே இருக்கும். முகம் வீங்கிப் பழுத்துவிடும். நாக்கு குழறும். ஓரிரு சொற்களுக்கே குரல் உடைந்து, கண்கலங்கி அழத்தொடங்கிவிடுவார்கள்”

“நாங்கள் அவர்களை விடவே மாட்டோம்… எங்களில் ஒருவர் ஒருவனை பற்றிக் கொண்டால் போதும், அவனை அத்தனைபேரும் சூழ்ந்துகொள்வார்கள். ஒருவன் விலகிச்சென்றால் இன்னொருவன் வந்துவிடுவான்… எங்களுக்கு மனிதர்கள் வேண்டும். மனிதர்களிடம்தான் நாங்கள் பேசமுடியும். பேசுவதன் வழியாகத்தான் நாங்கள் காலத்திலும் இடத்திலும் எங்களை பொருத்திக்கொள்ள முடியும்…” சக்ரவாகி சொன்னான். “நான் காலத்தையும் இடத்தையும் கடக்கும் ஆற்றல் கொண்டவன். ஆனால் கானபூதி போல எல்லையற்றவன் அல்ல. ஏனென்றால் நான் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்தவன், உன்னைப்போல ஒரு மானுடனாக இருந்தவன். இன்னும் மிஞ்சியிருக்கிறேன். என் உடல் எரிந்து அழிந்தது. அந்த உடலில் உருவான ஒன்று என் உடல் எரிந்தணைந்த பின்னரும் எஞ்சியிருக்கிறது. எந்த மரத்திலும் அமரமுடியாமல் வானிலேயே சிறகடித்துத் தவிக்கும் ஒரு பறவை. மனிதர்கள் எங்களுக்குச் சிறு இளைப்பாறல்கள்…”

“என்னிடமிருப்பது ஒரு எஞ்சும் ஆசை… வஞ்சம் உன்னிடம் எஞ்சியிருப்பதுபோல. சீற்றம், ஏமாற்றம், குழப்பம், கேள்வி என எது மிஞ்சியிருந்தாலும் அது அந்த உடலுடன் சேர்ந்தே தளர்ந்து வலுவிழக்கவேண்டும். அந்த உடலுடன் சேர்ந்து அதுவும் அழியவேண்டும்” சக்ரவாகி சொன்னான். “நீ செய்துகொண்டிருப்பது உன் உடலைவிடப் பெரிதாக உன் வஞ்சத்தை வளர்ப்பது… இதோ இப்போது எதிரில் ஒரு கார் வருகிறது. அதை குடிகாரன் ஒருவன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். நீ அதன் அடியில் விழுந்து சாகக்கூடும். உன்னில் எஞ்சும் அந்த உக்கிதமான வஞ்சம் எங்கே போகும்? என்னைப்போல் ஆகும்… நான் கொள்ளும் இந்த பெருந்தவிப்பை நீ புரிந்துகொள்ளவே முடியாது. இது ஆறவே ஆறாத தாகம் போல. நீ தேர்ந்தெடுத்திருப்பது அதைத்தான்.”

“நீ தேவியரை நேரில் பார்த்தாய். அதுவே நீ அடைந்த மிகப்பெரிய வாய்ப்பு. அதைத் தவறவிட்டாய். இப்போது கானபூதி அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறாய். இன்று அவன் உன்னிடம் கதை சொல்லப்போகிறான்… அந்தக் கதையில் நீ ஒருவேளை வென்றால் அவனிடம் நீ உன் உள்ளம் அடங்கவேண்டும் என்று கேள். உன் உடலுடன் சேர்ந்து உன் வஞ்சமும் மட்கி அழியவேண்டும் என்று கேள். இன்னும் சில ஆண்டுகளில் நீ செத்து அந்த படிக்கட்டின்மேல் கிடப்பாய். உன்னை தோட்டிகள் அவர்களின் மண்வெட்டியால் மலத்தை எடுப்பதுபோலத்தான் அள்ளி எடுப்பார்கள். மனிதக் கை படாமலேயே நீ சிதைக்குச் செல்வாய்… அங்கே எரிந்து சாம்பலாவாய்… கோதாவரியின் புழுதிக்கரையில் உன் மண்டையோடு புதைந்து கிடக்கும்… அப்போது இங்கே உன்னிடமிருக்கும் எதுவும் எஞ்சக்கூடாது… அதுதான் மீட்பு.”

“ஆம்” என்று நான் சொன்னேன். நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் “உண்மையிலேயே நான் ஆசைப்படுவது அதைத்தான்… எனக்கு வேறேதும் வேண்டியதில்லை” என்றேன்.

“யோசித்துப் பார். நீ என்னென்ன வாய்ப்புகளை உன் உணர்ச்சிகர மூடத்தனத்தால் தவறவிட்டாய் என்று நான் சொல்கிறேன். உன் தந்தை கொல்லப்பட்டார். அவரை இந்த நகரமே கொண்டாடியது. நீ அவருடைய மகன் என்று சொல்லியிருக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் முன் சென்று நின்றிருக்கவேண்டும். அவர்கள் உனக்கு எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் உருவாகியிருக்கும். ஏனென்றால் அவரை மறக்காமல் அவர்களால் வாழமுடியாது. அவருடைய கொலையை கைவிடாமல் அவர்கள் அரசியலில் முன்நகர முடியாது. அவர்கள் எண்ணினாலும் ஏதும் செய்யமுடியாது என அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குக் குற்றவுணர்ச்சி இருந்தது. அதை நீ தூண்டியிருக்கலாம். அவர்கள் உனக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்திருப்பார்கள்”

“இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது”

“சரி, அப்படியென்றால் இன்னொன்று செய்திருக்கலாம். நீ ராதிகாவை அழைத்துக்கொண்டு பைத்தானுக்கு வந்திருக்கலாம்… உன் தந்தையின் கட்சிக்காரர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். அதை ஒரு கட்சிப்பிரச்சினையாக ஆக்கியிருக்கலாம். உன் தந்தைக்காக எதுவும் செய்யமுடியாத குற்றவுணர்ச்சியால் அவர்கள் உங்களைப் பாதுகாத்திருப்பார்கள்”

நான் படபடப்புடன் “இல்லை” என்றேன். ஆனால் அது உண்மை என்று தெரிந்துவிட்டது. “ஆமாம், அதைச் செய்திருக்கலாம்… செய்திகளில் வந்திருந்தாலே எங்களை அவர்கள் எதுவும் செய்ய முடியாது. அவள் தமையன் ஒரு போலீஸ் உயரதிகாரி என்பதையே நான் மறந்துவிட்டேன்… என் அறிவின்மை… நான் முட்டாள். அடிமுட்டாள்” தலையில் அறைந்துகொண்டு அழுதபடி நான் அமர்ந்துவிட்டேன். “ராதிகா! ராதிகா!” என ஏங்கி அழுதேன்.

“நடுச்சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாய். ஆனால் ஒருவர்கூட உன்னை பொருட்படுத்தவில்லை. இப்படி நீ அழுவது வழக்கமாக நடப்பதுதான் என தோன்றுகிறது” என்று சக்ரவாகி சொன்னான்.

“ஆமாம், அவளை நினைக்கவே கூடாது என்றுதான் உறுதியுடன் இருக்கிறேன். நினைப்பதே இல்லை என்றுதான் எண்ணிக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எப்போது எதற்காக அழுதாலும் அவளுக்காகத்தான் அழுகிறேன். நான் அழாத நாளே இல்லை”

“உன் அழல் அடங்கவேண்டுமா? ஒரு துளி மிச்சமில்லாமல் நீ அவளை மறக்கவேண்டுமா?”

“ஆமாம், வேண்டும். இப்போது நான் விரும்புவதெல்லாமே அதை மட்டும்தான். உயிருடன் மட்கிக்கொண்டிருக்கும் என் உடலால் இந்த பெருந்துயரை தாள முடியவில்லை. போதும், இதில் இருந்து விடுபட்டாலே போதும்”

“வா, இன்றிரவு நீ கானபூதி சொல்லும் கதையின் புதிரை எப்படியாவது வென்றுவிடு… இன்று வென்றுவிட்டாய் என்றால் நீ விடுதலை அடைந்துவிட முடியும்…”

“ஆமாம், அதைத்தான் செய்யப்போகிறேன்” என்று நான் கண்ணீரை துடைத்தபடிச் சொன்னேன்.

“கானபூதியின் கதை உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்று சக்ரவாஹி சொன்னான்.

“கதாசரிதசாகரத்தில் உள்ளதுதானே?”

“ஆம், ஆனால் அதில் முழுமையாக இல்லை. காஷ்மீரில் வாழ்ந்த சோமதேவர் செவிவழியாக எவரெவரோ சொன்னதைக் கேட்டு எழுதியது அந்தக் கதை…” சக்ரவாகி சொன்னான். “உண்மையான கதை இதுதான். இதை ஒரு யக்ஷன் சொல்லிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்”

வைஸ்ரவணனாகிய குபேரனின் அவையில் இருந்த யக்ஷர்களில் ஒருவன் சுப்ரதீகன். குபேரனுக்கு இருந்த சாபம் என்பது தன் களஞ்சியத்தில் இருந்த தங்கநாணயங்களையும் வைரவைடூரியங்களையும் எண்ணிக்கொண்டே இருப்பது. பொருளை எண்ண எண்ண அவை குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணத்தொடங்கும்போது இன்பமும், எண்ணி முன்செல்கையில் பதற்றமும், எண்ணி முடிக்கும்போது சந்தேகமும் தோன்றும். மீண்டும் எண்ணத் தொடங்கவேண்டும். குபேரன் அந்த மாயச்சுழலில் சிக்கிக்கொண்டான்.

எண்ணி எண்ணி ஏங்கி குபேரன் நோயுற்றவன் ஆனான். அவன் உடல்மெலிந்து சோர்வதைக் கண்ட அவன் துணைவியாகிய பத்ரை நாரதரிடம் என்ன செய்வது என்று கேட்டாள். நாரதர் குபேரனுக்கு தினமும் நூறு கதைகள் சொல்லப்படவேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எல்லா கதைகளும் பொன்னையும் பொருளையும் பற்றியதாக இருக்கவேண்டும். அதை மட்டுமே குபேரன் கவனித்துக் கேட்பார். ஆனால் எல்லா கதைகளுமே பொன்னும் பொருளும் அளிக்கும் மகிழ்ச்சியைப் பற்றியதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே குபேரன் நிறைவடைவார். ”பொன்னை விடப்பெரியது பொன்னைப் பற்றி பேசுவதும் எண்ணுவதும். பொன்னைப்பற்றிய கதைகளால்தான் பொன் ஒளிகொள்கிறது” என்று நாரதர் சொன்னார்.

அதன்படி ஆயிரத்து எண்பது யக்ஷர்கள் கொண்ட ஒரு பெரிய சபை அமைக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருநாளும் நூற்றெட்டு கதைகள் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் பத்துநாட்களுக்கு ஒருமுறை புதிய கதை சொல்லவேண்டியிருக்கும். அங்கே காலம் முடிவற்றது என்பதனால் கதைகளுக்கும் முடிவிருக்க முடியாது. கதைகள் தனக்குப் பிடித்தமானதாக அமையாவிட்டால் குபேரன் அவையில் இருந்து எழுந்து சென்றுவிடுவான். ஆகவே ஒவ்வொரு கதையும் புதியதாக அமையவேண்டும்.

அந்த அவையில் கடைசியாக வந்து சேர்ந்த யக்ஷன் சுப்ரதீகன். மண்ணில் அவன் ஓர் ஏழை மரம்வெட்டியாக இருந்தான். காட்டுக்குள் வழிதவறிச் சென்ற அவன் அங்கே இருந்த ஆழமான தங்கச்சுரங்கத்திற்குள் விழுந்தான். பசுந்தங்கம் ஒளிரும் குழம்பாக நிறைந்திருந்த அந்த குகையை சுதன் என்னும் பூதம் காவல் காத்திருந்தது. அது பொன் என்று சுப்ரதீகனுக்குத் தெரியவில்லை. அவன் அதற்குள் இருந்து வெளிவர முயன்று தவறிவிழுந்து இறந்தான். அவன் உடல் தங்கமாக ஆகி அதில் பதிந்தது. பொன்னில் மறைந்தமையால் அவன் குபேரன் அருள் பெற்று யக்ஷனாகி குபேரபுரிக்கு வந்தான்.

சுப்ரதீகனின் தமையனாகிய தீர்க்கஜம்ஹன் தன் தம்பியை தேடி அலைந்து நீண்டநாட்களுக்குப் பின் அங்கே வந்து சேர்ந்தான். தங்கச்சுரங்கத்தில் தங்கத்தில் பதிந்து மட்கி மறைந்திருந்த சுப்ரதீகனின் எலும்புகளைக் கண்டுகொண்டான். அந்த தங்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் தன் தம்பியின் எலும்புகளை மட்டும் சேகரித்துக் கொண்டுசெல்ல அவன் முயன்றான். அப்போது அங்கே தோன்றிய அந்தப் பொன்னின் காவலனாகிய சுதன் என்னும் பூதம் அந்த பொற்குகைக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே வரமுடியும் என்று சொன்னது. தன் தம்பிக்கான நீர்க்கடனை அளித்து அவனை மீட்பதே தனக்கு முக்கியம் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அப்படியென்றால் கொஞ்சம் பொன்னை எடுத்துக்கொள் என்று சுதன் சொன்னான். தம்பியின் எலும்புகளைக் கொண்டுபோகும்போது பிறிதொன்றையும் கொண்டுசெல்லக்கூடாது என்று தீர்க்கஜம்ஹன் சொல்லிட்டான். அவனுடைய அறத்தில் மகிழ்ந்த அவனுடைய தெய்வமாகிய காளி தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது. தான் தம்பியுடன் இருக்கவேண்டும் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அவனும் யக்ஷனாக ஆகி குபேரபுரிக்கு வந்தான்.

சுப்ரதீகன் குபேரபுரியின் அவையில் மிக இளைய யக்ஷன். ஏழு வானுலகங்களில் நடந்த கதைகள் எவற்றையும் அவன் அறிந்திருக்கவில்லை. அவனிடம் சொல்வதற்குக் கதைகள் இருக்கவில்லை. அவன் மண்ணுலகில் அவன் அறிந்த கதைகளைச் சொன்னான். குபேரன் சலிப்புடன் எழுந்து சென்றுவிட்டமையால் அவன் சபையில் சிறுமையடைந்தான். துயருடன் அவன் வானில் பறந்துகொண்டிருக்கும்போது பிணந்தின்னிக் கழுகு ஒன்றைச் சுற்றி ஆயிரம் பறவைகள் பறப்பதைக் கண்டான். அந்த விந்தையை அறியும்பொருட்டு அவற்றில் ஒரு சிறு பறவையிடம் அது அந்த கழுகை தொடர்ந்து செல்வது ஏன் என்று கேட்டான். அந்தக் கழுகின் பெயர் சூலசிரஸ் என்றும், அது ஓர் அரக்கன் என்றும் அப்பறவை சொன்னது. ஊற்று நிலைக்காத ஊருணிபோல கதைகளைச் சொல்பவன் அவன், கதைகளுக்காகவே அவனுடன் அத்தனை பறவைகள் உள்ளன என்றது.

சுப்ரதீகன் ஒரு நாரையாக மாறி சூலசிரஸுடன் இணைந்து பறந்தான். அது சென்றமர்ந்த மலைப்பாறை உச்சிகளில் தானும் அமர்ந்தான். அது சொன்ன கதைகளை எல்லாம் கேட்டான். அவை தெய்வங்களும் அறியாத தொன்மையான கதைகள். அரக்கர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. அந்தக் கதைகளை அவன் குபேரனின் அவையில் சொல்லத் தொடங்கினான். அவை எல்லாமே பொன்னையும் பொருளையும் தேடிச்சென்றடைந்து மகிழ்ந்தவர்களைப் பற்றியவை. வேடர்களும், காடர்களுமான மக்கள் வெள்ளியையும் தங்கத்தையும் வைரங்கள் போன்ற அரிய கற்களையும் கண்டடைந்து அடைந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை விரித்துச் சொல்பவை. குபேரன் ஒவ்வொரு கதையையும் கேட்டு தொடையில் தட்டி ஆராவாரம் செய்தான். ஒவ்வொரு முறையும் சுப்ரதீகனை பாராட்டினான்.

பிற யக்ஷர்கள் சுப்ரதீகன் மேல் பொறாமை கொண்டார்கள். அவனிடம் இத்தனை கதைகள் எங்கிருந்து வருகின்றன என்று பேசிக்கொண்டார்கள். யக்ஷர்கள் அறிந்த விண்ணுலகின் கதைகள் பெரும்பாலானவை பொருளைத் துறப்பதைப் பற்றியவையாகவும், பொருளின் பயனின்மை பற்றியவையாகவும் இருந்தன. மண்ணுலகில் சூதர்கள் சொல்லும் கதைகளும், புலவர்கள் எழுதும் கதைகளும், முனிவர்கள் அருளுரைக்கும் கதைகளும் பொன்பொருளை நிராகரிப்பவையாகவே இருந்தன. அவற்றில் பொருளின் அழகையும் மதிப்பையும் சொல்லும் கதைகளை தேடித்தேடிக் கண்டடையவேண்டியிருந்தது. கதைகளை வெட்டியும் திருத்தியும் சொல்லவேண்டியிருந்தது. அக்கதைகளை குபேரன் முன்னரே கேட்டிருந்தான் என்பதனால் அவை அவனுக்கு எரிச்சலையும் அளித்தன. ஆனால் சுப்ரதீகன் சொல்லும் கதைகளில் எல்லாம் பொருள் முழுமுதல் தெய்வம் போல் அமர்ந்திருந்தது.

மற்ற யக்ஷர்கள் ரகசியமாக சுப்ரதீகனை பின்தொடர்ந்து சென்று என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அரக்கன் ஒருவனிடமிருந்தே அக்கதைகளை சுப்ரதீகன் அறிந்துகொள்வதை கண்டு அவர்கள் சான்றுகளுடன் வந்து குபேரனிடம் முறையிட்டனர். “கதைகள் என்பவை தங்களுக்கான ஆற்றல்கொண்டவை. அவை குபேரபுரியிலும் விண்ணுலகங்களிலும் ஊடுருவினால் இங்கே அவை அழியாமல் நிலைகொண்டுவிடும். இங்குள்ளோரின் எண்ணங்களை மாற்றும். ஒரு கட்டத்தில் அரக்கர்கள் விண்ணுலகைக் கைப்பற்ற அவை வழிவகுக்கும். சூலசிரஸ் திட்டமிட்டே இக்கதைகளை சுப்ரதீகன் வழியாக இங்கே அனுப்பியிருக்கிறது” என்றனர்.

குபேரன் சுப்ரதீகனை பிடித்து தன் சபைக்குக் கொண்டுவந்தான். ”சூலசிரஸிடமிருந்து நீ கதைகளைப் பெற்றது உண்மையா?” என்று கேட்டான்.

“ஆம், அவனிடம் முடிவில்லாமல் கதைகள் உள்ளன” என்று சுப்ரதீகன் அகமலர்ச்சியுடன் சொன்னான்.

“சூலசிரசை கொன்று அவன் தலையுடன் இந்த சபைக்கு நீ திரும்ப வரமுடியுமா?” என்று குபேரன் கேட்டார்.

“அரசனே, என்னாலோ உங்களாலோ எந்த தெய்வத்தாலோ ஒருபோதும் ஒரு கதையை அழிக்கமுடியாது. கதைசொல்லி என்பவன் முடிவில்லாத கதைகளின் ஊற்று. பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மம் ஒரு கதைசொல்லியே” என்று சுப்ரதீகன் சொன்னான்.

“நீ கேட்டறிந்து நினைவில்கொண்டுள்ள கதைகளின் எடையால் இனி பறக்கமுடியாமல் ஆவாய். நீ யக்ஷநிலையை இழப்பாய். மண்ணில் விந்தியமலை அடிவாரத்தில் உள்ள அடர்காட்டில் ஒரு பிசாசாகப் பிறப்பாய். அரக்க மொழியில் நீ அறிந்த கதைகளை பைசாசிக மொழியில் பேசிக்கொண்டிருப்பாய். அந்தக் கதைகளை ஒருபோதும் பிறமொழிக்கு மாற்றமுடியாதவனாக ஆவாய்“ என்று குபேரன் சாபமிட்டான்

சுப்ரதீகனின் தமையனாகிய  தீர்க்கஜம்ஹன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி “அரசே என் தம்பி தங்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில் பிழைசெய்துவிட்டான். அவனுக்காக நான் இங்கே நோன்பிருக்கிறேன். அவனுடைய சாபம் முடியும் நாளைச் சொல்லி அருளவேண்டும்” என்றான்.

மனம் இரங்கிய குபேரன், “கார்முகிலுக்கு விடுதலை என்பது பெய்தொழிவதேயாகும். இவன் அறிந்த அத்தனை கதைகளையும் எவரிடமேனும் சொல்லிவிடுவான் என்றால் இவன் விடுதலை அடைவான்… ஒரு கதை மிஞ்சியிருந்தாலும் விடுதலை அமையாது” என்று வாக்களித்தான்.

அவ்வாறுதான் சுப்ரதீகன் விந்தியமலையின் கீழே விரிந்திருந்த இந்நிலத்திற்கு வந்தான். இது அன்று அடர்ந்து செறிந்த கொடுங்காடு. இங்கே நின்றிருந்த மரம் ஒன்றில் அவன் குடியேறினான். அவனுக்கு பின்னர் கானபூதி என்ற பெயர் அமைந்தது.

”கானபூதி என்னும் இந்த பைசாசத்தின் எல்லா கதைகளும் சூலசிரஸ் என்னும் அரக்கனால் சொல்லப்பட்டவைதான் என்று சொல்லப்படுகிறது” என்று சக்ரவாகி சொன்னது. “இந்தக் கதை சித்ரகர் எழுதிய கதாரத்னமாலிகா என்னும் காவியத்தில் உள்ளது”

“நாம் ஒருவருக்கொருவர் பேசும் எல்லாக் கதைகளும் ஏதேனும் காவியத்தில் உள்ளவை. எல்லாமே சம்ஸ்கிருதக் காவியங்கள்” என்று நான் சொன்னேன். “நீயும் கானபூதியும் சொல்லும் பல நூல்கள் அழிந்துவிட்டன. இருக்கும் நூல்களில்கூட பல வரிகள் மறைந்துவிட்டன.”

”ஆம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கானபூதி கதைகளைச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது. அக்கதைகள் நினைவுகள் வழியாக உருமாறிக்கொண்டே இருக்கின்றன. நூல்களில் கூட பாடபேதங்கள் உருவாகியிருக்கின்றன”

“இந்தக் கதைகளுக்கு அப்பால் கானபூதி யார்? இவை காவியங்கள். இக்காவியங்களுக்கு அடியில் என்ன நிகழ்கிறது?”

“நீ அதை கானபூதியிடமே கேட்கலாம்” என்றது சக்ரவாகி.

அன்றிரவு நான் காட்டுக்குள் சென்றேன். என் அருகே வந்துகொண்டே இருந்த சக்ரவாகி என்னருகே விலகிக்கொண்டதை உணர்ந்தேன். அதே மரத்தடியில் கானபூதியின் அருகே நான் அமர்ந்தேன்.

”என் பொருட்டு சக்ரவாகி உன்னிடம் பேசியிருப்பான்” என்று கானபூதி சொன்னது. “நீ என்னைப் பற்றிக் காவியங்கள் சொல்வனவற்றை அறிந்திருப்பாய்…”

“அவை உண்மையா?”

“அவை ஒரு வகை கதைகள்” என்றது கானபூதி. “எல்லா கதைகளும் ஒருவகை உண்மைகள்.”

”நான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.”

“அதற்கு நீ என் மொழிக்குள் வரவேண்டும்… நான் பேசுவது பைசாசிகம். அந்த மொழியிலுள்ள என் கதைகளை இன்னொரு மொழிக்கு பெயர்க்க முடியாது.”

“ஏன்?”

“நீரை இன்னொரு கலத்திற்கு ஊற்றமுடியும். கல்லை இன்னொரு கல்லுக்குள் செலுத்தமுடியாது” என்றது கானபூதி. “அந்த மொழிக்குள் நீ வந்தால் அக்கதைகளை நான் உனக்குச் சொல்வேன். பலருக்கும் நான் கதைகள் சொல்லியிருக்கிறேன். என் கதைகள் சொல்லி முடிக்கப்படவே இல்லை.”

”ஆமாம், நான் கதைகளைக் கேட்க விரும்புகிறேன்.”

“அப்படியென்றால் நீ என் மொழிக்குள் வரவேண்டும். அதையே  உன் விருப்பம் என்று சொல்” என்றது கானபூதி. “நேற்று நீ என்னிடம் கோரிய அந்த விருப்பத்தை கைவிட்டுவிடு.”

இடி விழுந்து மரம் பற்றிக்கொள்வதுபோல அக்கணத்தில் நான் அனல்கொண்டேன். “இல்லை, என்னால் முடியாது… என்னால் முடியாது. என்னால் ஒருபோதும் முடியாது. அது மட்டும்தான் எனக்கு வேண்டும்… வேறெதுவும் வேண்டியதில்லை” என்று கூச்சலிட்டேன்.

கானபூதி தன் தெளிந்த கண்களுடன் என்னை பார்த்துப் பரிவுடன் புன்னகை செய்தது.

”பழிதான் எனக்கு வேண்டும்… பழி மட்டும்தான் வேண்டும். நீ எனக்கு வாக்களித்தாய். நீ அதை விட்டு விலகக்கூடாது. இது என் ஆணை… உன் சொல்மேல் ஆணை.”

“நான் விலகவில்லை… பைசாச சக்தியால் உன் பழியை நான் நிறைவேற்றுகிறேன்.”

“ராதிகாவின் கொலைக்கு முதற்காரணம் எவரோ அவர் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதிலேயே மிகப்பெரிய தண்டனையை அடையவேண்டும்…”

“சரி, அதையே நிகழ்த்துகிறேன்” என்றது கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2025 11:32

நெ.து.சுந்தரவடிவேலு

[image error]நெ.து. சுந்தரவடிவேலு தமிழகக் கல்வி வளர்ச்சியின் சிற்பி. இலவச மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியான மதிய உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியில் மக்கள் திட்டமாகச் செயல்படுத்தினார். காமராஜர் ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டத்தின் வரைவை திட்டக் குழுவில் முன்வைத்து அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாக்கினார். இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர். கட்டாயக் கல்வி, இலவச சீருடத் திட்டம் ஆகியவற்றுக்குச் செயல் வடிவம் தந்தார். பஞ்சாயத்துப் பள்ளிகளையும், ஓராசிரியர் பள்ளிகளையும் ஏற்படுத்தி கிராமப்புறக் குழந்தைகள் பெருமளவில் கல்வி கற்க வகை செய்தார்.

நெ.து. சுந்தரவடிவேலு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2025 11:32

பறவைகளுடன் இருத்தல்

ஒரு பறவையைப் பார்ப்பதிலும்,  அதை ரசிப்பதிலும், அதன் பெயரையும், அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் உள்ள சந்தோஷத்தையும் அன்று தெரிந்துகொண்டேன். இந்த அனுபவத்தை கொடுத்த பனங்காடை எனக்குப் பிடித்த பறவையாயிற்று.

பறவைகளுடன் இருத்தல்

 

The talk about training one’s own mind is an excellent piece. We can see a lot of professional talks on this subject. Generally they are tailor-made talks with general advice.

The way of achievement – A Letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2025 11:30

May 15, 2025

வாழ்வின் அளவுகோல் எது?

நம் வாழ்க்கை மகிழ்வாக இருக்கிறதா என்பதற்கான அளவுகோல் என்ன? ஒருவர் வாழும் வாழ்க்கை அவருடைய மனதை விடச் சிறியது என்றால் அவர் மகிவானவர் அல்ல. வாழ்க்கையை பெருக்கிக் கொள்வதே மகிழ்ச்சிக்கான வழி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 11:36

தவசதாரம்

பக்கத்துவீட்டுப் பையன் மனோஜ் “நாங்க சினிமா பாத்தோம்…” என்று கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான்.

”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன்.

உள்ளே வந்தவன் வழக்கம்போல தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களை மட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று கூவியபின் வழக்கம்போல ”கடிக்காது”என்று என்னிடம் சொன்னான்.

”உள்ள வா” என்றேன்.

”எனக்கு பிஸ்கட் வேண்டாம்”என்று உள்ளே வந்தான். ”எங்கவீட்டுல டப்பா கம்ப்யூட்டர் இருக்கே” என்று லாப்டாப்பை பார்த்துச் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். பிஸ்கட் கொடுத்ததை தின்றான்.

”என்ன படம் பாத்தே?”

அவன் வாயை துடைத்துவிட்டு ஒரு பிஸ்கட்டை சட்டைக்குள் வைத்தான் ”இது ரூபிணிக்கு”

”அவளுக்கு நான் வேற தரேன். என்ன படம்?”

”தவசதாரம். கமல் நடிச்சபடம்”

”என்னது?”

“தவசதாரம்…”

”நல்ல படமா?”.

”சூப்பர் படம்..” பாய்ந்து கீழிறங்கி ”டிசூம் டிசூம்…·பைட்டு…” என்றான்.

”என்ன கதை?”

‘கதையா?”என்றான்.

”படத்தில உள்ள கதை என்ன?”

அவன் விரல்களை நக்கி ”படத்துல கதை சொல்லலியே”என்றான்.

”பின்ன கதை சொல்றேன்னு சொன்னே?”

”அது எங்கம்மா சொன்ன கதைல்லா?”

”என்ன கதை?”

”தவசதாரம் கதை”

இப்போது எனக்கே சற்று குழம்பியது.சரி, வேறு இடத்தில் ஆரம்பிப்போம் என்று யோசித்து ”படத்துல உனக்கு ரொம்ம்ப பிடிச்சது என்ன?” என்றேன்

”டான்ஸ¤” என்றான்.

”என்ன டான்ஸ்?”

”அக்கா ஜட்டி போட்டுட்டு ஒரு கம்பிய பிடிச்சிட்டு இப்டியே ஆடுவாங்களே… கால் எல்லாம் இப்டி இருக்குமே…” அவன் கதவை பிடித்து ஆடிக்காட்டினான்.

சரிதான் , விளையும் பயிர்.

”அப்றம்?”

”அந்த அக்காதான் மூணுசக்கர சைக்கிளிலே போற தாத்தாவை பென்சிலாலே குத்தி குன்னுட்டாங்க…சாகிறப்ப அந்த தாத்தா சிரிச்சார். ஏன்ன அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?”

”சரி”

”அது ரூபிணி ஓட்டுகிற மூணுசக்கர சைக்கிள் கடையாது. பெரிய அங்கிஸ்ல் ஓட்டுற சைக்கிள். அப்பா எனக்கு வாங்கி குடுத்தா அதுல ஏறி நான் உங்க வீட்டுக்கு வருவேன்”

சைக்கிளை திசைதிருப்பாமல் முடியாது. ”அத தவசதாரத்திலே ·பைட் உண்டுல்ல?”

”நெறைய ·பைட் உண்டு. கையிலே ஒரு கத்தி வச்சிருக்கான்ல அத வச்சு கழுத்த அறுத்துருவான்…”

”ஆரு?”

”டாய் சோல்ஜர்…வாய இப்டி வச்சுகிட்டு பேசுவான்…பிஸ்கத்த உள்ள வச்சுட்டு பேசுவோமே அப்டி…உங்க வீட்டுல ஐஸ்கிரீம் உண்டா?”.

”கெடையாதே”என்றேன்.

”டாய் சோல்ஜர் ஹெலிகாப்டரிலே வந்து ஸ்பைடர்மேன் மாதிரி கம்பிய வீசி அப்டியே கிர்ருன்னு வந்திருவான். ரொம்ப கெட்டவன். காரு ஓடுறப்ப தரையில தீ வரும் தெரியுமா? ஏன்னா அமெரிக்கால எல்லாம்  தரையில எல்லாம் தீயா போட்டு வச்சிருப்பாங்க இல்ல?”

”யாரு சொன்னாங்க?”

”எங்க அப்பா”

”நீ கேட்டியா?”

”ஆமா. .. தீயிலே காலு சுடாது” அவன் மீண்டும் கையை நக்கி ”அப்பா என்னை படம்பாருடாண்ணு சொல்லி கிள்ளினார்”

துரத்தல் நடக்கும்போதே கேட்டிருப்பான் போல, அதுதான் அந்த அவசர விஞ்ஞானப் பதில்.

”அப்றம் எவ்ளோ தண்ணி…ஜுனாமி…அந்த ஜுனாமி வரும்போது குட்டிக் குட்டி கப்பல்லாம் ஆடும்..அதெல்லாம் ஜிராபிஸ்…”

”என்னது?”

”எங்கப்பா சொன்னார். டாய் சோல்ஜர் மேலே கம்பு குத்திடும்.கொடி கட்டின கொம்பு..ஆகஸ்ட் பி·ப்டீந்து கொடி இருக்கே அது…”

”என்னதுண்ணு உங்க அப்பா சொன்னார்? ஜிராபியா?”

”ஜிரா·பி…இல்ல, ஜிரா·பிஸ்… கம்ப்யூட்டரிலே செய்வாங்களே”

”ஓ” என்று புரிந்துகொண்டு ”பாட்டி?” என்றேன்.

”பாட்டி எப்டி?”

”எந்தப் பாட்டி?”

”·போட்டோ வச்சிருப்பாங்களே?”

”படத்துலே பாட்டி கடையாது. அசின் தான் உண்டு. அவுங்க பொம்மைய வச்சுகிட்டு பெருமாளேண்ணு பாட்டு பாடி கா·பின்லே போட்டு மூடிருவாங்க… சினிமால எல்லாம் காட்டுவாங்களே டெட்பாடிய கா·பீன்ல போட்டு மூடி ப்ரேயர் பண்ணி மண்ண அள்ளி போட்டு…” .

”சரி, பாட்டி இருந்தாங்க மனோஜ்..நீ பாத்தே”

அவன் ஐயத்துடன் ”அசினா?” என்றான்

”பாட்டி பாட்டி.. ” நானே நடித்து காட்டினேன். “ஆராவமுது ஆராவமுதன் எம்புள்ள!”

”ஆ, ஒண்ணுக்குப்போகனும்ணு சொல்லுவாங்களே”

”ஆமா அவங்கதான்”

”அவங்க நல்ல பாட்டி”என்றான் சுருக்கமாக.

”தாடிவச்சுகிட்டு ஒருத்தர் டான்ஸெல்லாம் ஆடுவாரே” என்று எடுத்துக் கொடுத்தேன்.

”ரூபிணிக்கு ரெண்டு பிஸ்கட் வேனுமாம்…அவ இல்லேண்ணா அழுவா”

”சரி குடுக்கேன்…இந்த தசாவதாரத்ல- இல்ல தவசதாரத்தில ஒரு மாமா பெரிய தொப்பிவச்சு தாடியோட வந்து டான்ஸ் ஆடுவாங்களே…”

”ஆமா..சுடிதார் போட்டிருப்பாங்களே, அவங்கதானே?” என்றான் உற்சாக வேகத்துடன். ”வெத்தில போட்டு துப்புவாங்க…அக்குத்தாத்தா மாதிரி…” எழுந்து எம்பிக்குதித்து ”அப்றம் கயித்த கட்டிகிட்டு இப்டியே ஜம்ப் பண்ணி… சூப்பர் பாட்டு..ஜுனாமியிலே ஒரு கொழந்தைசெத்துப்போச்சு. கறுப்புமாமா வந்து கால் மாட்டி.. மக்களேண்ணு கூப்பிடுவாரே”

”உசரமான ஒருத்தர் கூடவருவாரே”

”ஆமா…அவர் காலிலே கம்பு கட்டிட்டு நடக்கிறார். எங்கப்பா சொன்னார். மூஞ்சியிலே மாஸ்க் போட்டிருப்பார். எதுக்காக உடம்பிலே ஊசி குத்துறாங்க?”

”யார?”

“தாடி வச்சவர?”

”அவரு நல்லவருல்லா? அதனால கெட்ட ராஜா ஊசியால குத்துறார்.”

”சாமிசெலைய கடலில போட்டுட்டாங்க..போட்டுல போயி… அப்றம் ஜுனாமியிலே ஜிராபிஸ் வந்தபோது…”

”என்னது?” என்றேன், துணுக்குற்று.

”தண்ணி…நெறைய தண்ணி வந்ததுல்ல அப்ப…கார்லாம் போட்டுமாதிரி போச்சு..ஆனா கார் மிதக்காது முழுகிரும்.போட்டுதான் மிதக்கும்…ஒரு பிஸ்கெட் எனக்கா?”

”சாப்பிடு”என்றேன். ”உங்கம்மா என்ன கதை சொன்னாங்க?”

”எந்த கதை?”

”தவசதாரம் கதை?”

”சாமிசெலை ஒடைஞ்சதனால கடலில தூக்கி போட்டுட்டாங்கள்ல? அது அப்டியே ஜிரா·பிஸ்ல, இல்ல, ஜுனாமியிலே திரும்பிவந்திட்டுது. கன்யாகுமரியிலே நாம செருப்ப தூக்கி போட்டா திரும்பி வந்திரும்ல? சுகுணா அக்காவோட செருப்பு வரல்லை. அவ அழுதா…”

”அப்றம் அந்த செலையை என்ன செஞ்சாங்க?”

”மறுபடியும் கடலில ஆழமா கொண்டு போட்டிருவாங்க…அம்மா சொன்னாங்க” .

என்ன ஒரு தெள்ளதெளிவான கதை.

”ஒரு ·பிஷ் கூட அப்ப அங்க நீந்திட்டிருந்திச்சே?”

பிஸ்கட் தின்னப்பட்டு வாய் துடைக்கப்படும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அதன் பின் ”…அந்தப்படத்துல கமல் எத்தனை வேஷத்தில நடிச்சிருக்காரு தெரியுமா?”என்றேன்.

”எத்தனை?”

”ப்ப்ப்பத்து!”

இவ்ளவுதானா என்ற பாவனையுடன் அடுத்த பிஸ்கட்டை எடுத்தான். ”அது ரூபிணிக்குல்ல?”

”அவளுக்கு பிஸ்கட் பிடிக்காது”

தின்று முடிப்பது வரை மீண்டும் காத்திருந்தேன்.

”ஆனை அக்காவை தூக்கி குச்சியிலே குத்திவச்சது. டாய் சோல்ஜர் அவளை டுமீல்னு”

”அந்த டாய் சோல்ஜர் யாரு தெரியுமா? அது கமல்தான்.அப்றம் அந்த உசரமான ஆள் அவரும் கமல்தான். அப்றம் கராத்தே சண்டை போடுவாரே அவரும் கமல்தான்…”

”தீ மேலே கார் ஓட்டிட்டு போறவர்?” என்றான்.

”அவரும் கமல்தான். அந்த பாட்டிகூட கமல்தான்…”

”பாட்டி வேஷம் போடல்லை…எப்பமுமே பாட்டியாத்தான் இருக்காங்க..” என்றான்.

எப்படி விளக்குவது? ”…அந்த பாட்டி …அதாவது அந்த பாட்டிக்குள்ள கமல் மாமா இருக்காங்க…”

சொல்லியிருக்கக் கூடாது. பீதியுடன் ”உள்ரயா ?”என்றான்.

”ஆமாம்”என்றேன் பலவீனமாக.

”தின்னுட்டாங்களா?”

என்னடா சிக்கலாகப்போய் விட்டது என்று எண்ணி ”கன்யாகுமரியில பயில்வான் பொம்மைக்குள்ள பொயி நீ போய் கையை ஆட்டியிருக்கேல்ல அத மாதிரி..” என்றேன்.

அவன் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. ”பாட்டி அழுதாங்க…நல்ல பாட்டி..கைமட்டும் அவளோ பெரிசு… வையாபுரி குச்சிமேல ஓடுறப்ப கீழ விழுந்திட்டான்”

”பத்து வேஷம் நடிச்சிருக்காங்க தெரியுமா?”

”யாரு?”

”கமல்” .

”கமல் யாரு இதில?”

”அதான் பைக் ஓட்டுவாரே…அசின்கூட…அவருதான் மத்த எலலருமே…” என்றேன்

”அந்த டாய் சோல்ஜர் உசரமான ஆள் எல்லாருமே கமல்தான்”

”அப்ப கமல் யாரு?”

எனக்கே தசாவதாரத்தின் கதை கேயாஸ் ஆகிவிட்டதனால் பையனை அனுப்பிவிடலாம் என்று எண்ணினேன்.

அவனே ”எங்கம்மா கூப்பிடுறாங்க…”என்று கட்டிலில் இருந்து இறங்கி ”உங்க கம்பூட்டர் குடுப்பிங்களா? படம்பாத்துட்டு குடுக்கிறேன்” என்றான்.

”அது உடைஞ்சிரும்” என்றேன் ”உங்கப்பாகிட்ட கேளு”

”எங்கப்பா கிட்ட பைசா இல்லியே. அவரு பூவர் மேன்….பூவர் மேன் ஹேஸ் நோ மனி. எங்க மிஸ் சொன்னாங்க”

”சரி”என்றேன். ”அவர் கிட்ட நான் சொல்றேன்”

அவன் வெளியே போய் ”ஈரோ கடிக்குமா?”என்று கேட்டபின் ”ஈரோ! ஈரோ!”என்று குரல்கொடுத்து கேட்டருகே போனான். என்னை நோக்கி திரும்பி ”நாங்க சினிமா படம்பாத்தமே…”என்றான் “சூப்பர் படம்”

“என்ன படம்?”

“தவசதாரம்!” அவன் கற்பனை பைக்கை கிளப்பி டுர்ர் என்று சென்றான்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம்  Jun 30, 2008 )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 11:35

பூ.ஆலாலசுந்தரம் செட்டியார்

பூ.ஆலாலசுந்தரம் செட்டியார், எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட நூல் தேர்வாளராக இருந்து மாணவர்கள் சிறந்த நூல்களைப் பயில உதவினார். மாணவர்கள் எம்.லிட். பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். பல கல்லூரிகளில் புறத்தேர்வாளராகப் பணிபுரிந்தார். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் தொடங்க உதவிகரமாகச் செயல்பட்டவராக அறியப்படுகிறார்

பூ.ஆலாலசுந்தரம் செட்டியார் பூ.ஆலாலசுந்தரம் செட்டியார் பூ.ஆலாலசுந்தரம் செட்டியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 11:33

காவியம் – 25

நாகமரம், சாதவாகனர் காலம். பொமு 2. பாவ்னி

நான் நன்கறிந்திருந்த பெயர். எந்த காவிய வாசகனும் அறிந்திருப்பான். எனக்கு வியப்புக்குப் பதிலாக குழப்பம்தான் வந்தது. “கானபூதி என்ற பெயர் கதாசரித சாகரத்தில் வருகிறது” என்று நான் சொன்னேன்.

“ஆம், சோமதேவர் அந்நூலை எழுதுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே என் பெயர் காவியங்களில் இடம்பெற்றிருந்தது. உண்மையில் அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அப்பெயர் காவியங்களில்  சொல்லப்பட்டிருந்தது. நீ தேடிச்செல்ல முடிந்தால் தொன்மையான மகாபாரதப் பிரதியில் மகாசூதரான உக்ரசிரவஸ் என்னைப் பற்றி நூற்றிப் பன்னிரண்டு செய்யுள்கள் எழுதியிருப்பதைக் காணலாம். அவருடைய தந்தையான மாகதர் ரோமஹர்ஷ்ணர் இயற்றிய மகாபாரத சம்புவில் என்னை பற்றி நாநூறு வரிகள் இருந்தன. நான் சொன்ன ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளை அவர்கள் மகாபாரத கதைப்பெருக்கில் இணைத்தனர்.”

”அவை இப்போது கிடைப்பதில்லை” என்று நான் சொன்னேன்.

“மகாவியாசனாகிய கிருஷ்ண துவைபாயனன் என்னை நன்கு அறிந்திருந்தார். நான் சொன்ன முந்நூறுக்கும் மேற்பட்ட கதைகளை அவர் தன் காவியத்தில் எழுதினார். அவருக்கும் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நான் கபிலரின் சாங்கிய சூத்திரத்திலும் கணாதரின் வைசேஷிக சூத்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறேன். தொல்வேதமாகிய ரிக் நான் சொன்ன பல கதைகளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. அதற்கும் மூத்த அதர்வவேதத்தில் என் பெயர் உள்ளது. நான் சொன்ன நூறுகதைகள் பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. இளைஞனே, வேதங்களின் வேர் என்னிடமிருந்தே தோன்றியது.”

“இன்று அவை எல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளன என நினைக்கிறேன். உன் பெயரில் அவை இல்லை.”

“நான் இருந்துகொண்டேதான் இருக்கிறேன். வேதங்கள் பிறப்பதற்கும் பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கே இருக்கிறேன். வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் உண்ட மனிதர்கள் தங்கள் பண்படாத கைகளால் கல்லெடுத்து கற்பாறைமேல் அறைந்து அறைந்து உருவாக்கிய குகை ஓவியங்களில் என் உருவம் உள்ளது. இங்கே மானுடர் விலங்கின் ஒலிகளில் இருந்து தங்கள் மொழியைத் திரட்டிக்கொண்டபோது நான் உடனிருந்தேன். அவர்கள் நா வளைத்து முதற்சொல் பேசும்போதே நான் இருந்துகொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.”

“கானபூதி என்ற பெயரை சோமதேவர்தான் பதிவுசெய்திருக்கிறார். அது அவரது புனைவு என்றுதான் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்” என்றேன்.

“சோமதேவர் வாழ்ந்த காலத்தில் என் கதைகள் பல்லாயிரமாகச் சிதறி பாரதநிலம் முழுக்கப் பரவிவிட்டிருந்தன. என் பெயர் எங்கெங்கோ எப்படியெல்லாமோ குறிப்பிடப்பட்டது. ஒவ்வொருவரும் என் கதைகளை அவர்களுக்கு உகந்த வடிவில் சமைத்துக் கொண்டனர், என்னை விரும்பியபடிப் புனைந்துகொண்டனர். எவையுமே நான் அல்ல, எல்லாமே நான்தான்” என்றது கானபூதி. ”என் வரலாற்றை நான் முழுமையாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் இருந்துகொண்டே இருக்கிறேன் என்ற ஒரே வரிதான் என் வரலாறு. என்னை எங்கெங்கு எவரெவர் எப்படியெல்லாம் பார்த்தனர் என்பதை வேண்டுமென்றால் என் வரலாறு என உனக்காகச் சொல்லலாம்”

கானபூதி என்றால் காட்டின் பரவசம் என்று பொருள். எனக்கு அப்பெயரை போட்டவர் வேதங்களில் மூத்ததாகிய அதர்வவேதத்தை உருவாக்கியவரும், பிருகு குலத்தவருமான அதர்வர். அவருடைய செய்யுள்கள் அதர்வம் எனப்பட்டன. அவர் தவம் செய்து அச்செய்யுட்களை இயற்றிய காட்டுக்கு அதர்வ வனம் என்று பெயர் அமைந்தது.

அதர்வரின் முன்னோர் மேற்கிலிருந்து வந்தவர்கள். அங்கே அவர்கள் நெருப்பை வழிபடும் குடியினரின் பூசாரிகளாக இருந்தனர். நெருப்பை அழியாமல் காத்துக்கொள்ளும் பொறுப்பு கொண்டவர்கள்.

பிருகு மரபைச் சேர்ந்த பிராசீன ஃபர்ஹிஸின் மகனும் விபாவசு என்ற இயற்பெயர் கொண்டவருமான அதர்வர் தன் இளமையில் மேற்கே ஆகுரம் என்னும் நிலத்தில், பாலையில் தீயின் ஆலயமாக அம்மக்களால் வழிபடப்பட்ட தொல்குகையில், அணையா அனலை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார். ஒருநாள் காலையில் எதிரில் வசந்தம் தோன்றியிருந்த புல்வெளியை இளவெயிலின் ஒளியில் கண்டு மகிழ்ந்து, அங்கு புதியதாக ஒலிக்கத் தொடங்கிய குயிலின் பாடலில் தன்னை மறந்து அமர்ந்திருந்தார்.

அப்போது நெருப்பு அணைவதுபோல குறுகிப் புகைவிடும் வாசனையை உணர்ந்ததும் திடுக்கிட்டு சுற்றுமுற்றுப் பார்த்தபோது அருகே விறகும் எண்ணையும் தீர்ந்திருப்பதைக் கண்டார். வெயிலில் காய்ந்து கிடந்த நரியின் எச்சத்தை பொறுக்கி தீயிலிட்டு அதை அணையாமலாக்கினார். அதன்பின் குகைக்குள் தேடி எண்ணையையும் விறகையும் கொண்டுவந்து தீயைப் பேணினார்.

வேட்டைக்குச் சென்றிருந்த அவர் தந்தை ஃபர்ஹிஸும் மூன்று தமையன்களும் திரும்பி வந்தபோது அனலில் இருந்து கெட்ட வாசனை எழுவதைக் கண்டார்கள். தந்தை சீற்றத்துடன் ”தீயில் எதை போட்டாய்?” என்று கேட்டார்.

நடந்ததை விபாவசு சொன்னார்.

“கீழ்மகனே, நெய்யும் அவியும் அளித்துப் பேணவேண்டிய தெய்வத்தையா இழிவு செய்தாய்?” என்று தந்தை சீறினார்.

“நெருப்பு நான் அளித்த அவியை விரும்பி பெற்று உண்டதைக் கண்டேன். காட்டில் அது பற்றி ஏறும்போது அதற்கு எதுவும் விலக்கல்ல என்று பார்த்திருக்கிறேன். நெருப்புக்கு மானுடரைப்போல விருப்பும் வெறுப்பும் இருந்ததென்றால் அது எவ்வண்ணம் தெய்வமாகும்?” என்று விபாவசு சொன்னார். ”மண் அனைத்து அழுக்குகளையும் ஏற்று அமுதமாக ஆக்கி தாவரங்களுக்கு அளிக்கவில்லையா? அவை மலர்களும் கனிகளும் ஆகவில்லையா? அதே மலினங்களை நெருப்பு விண்ணவருக்குரிய அமுதமென ஆக்கும் என்று ஏன் கொள்ளக்கூடாது?”

தந்தை அவர் சொன்ன சொற்களால் மேலும் சீற்றம் அடைந்தார். “தெய்வத்திற்கு வேறுபாடில்லை மூடா. ஆனால் மனிதர்கள் உணரும் அந்த வேறுபாடு தெய்வங்கள் உருவாக்கியதே. உன் தந்தைக்கும் தாய்க்கும் அளிக்காத ஒன்றை நீ தெய்வத்திற்கு அளிப்பாயா என்ன? தெய்வங்களுக்குரியவை நறுமணங்கள், இனிய உணவுகள், மலர்கள், தூயநீர் என்று நம் மூதாதையர் வகுத்திருக்கின்றனர்” என்று கூச்சலிட்டார். “இதோ நம் தெய்வத்தைப் பார். ஒளி மட்டுமேயானது. அழகும் மங்கலமும் மட்டுமே கொண்டது… நீ மலினத்தை வீசினாலும் மலினப்படாதது. நீ அந்த தெய்வத்தை அவமதித்தாய்.”

மகனின் தலையில் தர்ப்பைப் புல்லால் அடித்து “என் தெய்வத்தை அவமதித்த நீ, என் தெய்வத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட நிலத்திற்குச் செல். இனி என் கண்ணில் நீ படக்கூடாது” என்று பர்ஹிஸ் சாபமிட்டார்.

ஒரு சிறு மண்குடுவையில் தீயுடன் விபாவசு கிழக்கு நோக்கி வந்தார். பாலைநிலங்களைக் கடந்து, பெருநதியோடும் நிலம் ஒன்றை அடைந்தார். அங்கே புல்லில் குடில்கட்டித் தங்கினார். அங்கே கர்த்தம தொல்குடியின் பிரஜாபதியாகிய கிருதரின் மகளாகிய சாந்தியை மணம் புரிந்துகொண்டார். ததீசி என்னும் மைந்தனைப் பெற்றெடுத்தார்.

அவர் உள்ளத்தில் தந்தையின் சாபம் எரிந்துகொண்டே இருந்தது. தான் செய்ததும் சொன்னதும் உண்மையில் பிழையா என்று உள்ளம் உழற்றிக்கொண்டே இருந்தது. தெய்வங்கள் அழுக்கையும் மலினங்களையும் விரும்புவதில்லையா? நோய்களும், சாவும் தெய்வங்களின் உருவாக்கம் அல்லவா?

தன் அறுபதாவது ஆண்டு வரை விபாவசு அலைந்து திரிந்து அத்தனை முனிவர்களிடமும் கற்றறிந்தவர்களிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொன்னார்கள். எவரும் அறுதியாக ’ஆம், அதுவே, அவ்வாறே’ என்று ஒன்றைச் சொல்லவில்லை.

முதுமையில் முற்றிலும் உள்ளம் தளர்ந்து அவர் தன் நிலத்தையும் குடும்பத்தையும் துறந்து கிளம்பினார். நதிகளைக் கடந்து, காடுகளைத் தாண்டி  நான் இருக்கும் இந்தக் காட்டுக்கு வந்தார். இந்தக் காடு அன்று கானம் என்ற பெயரிலேயே அறியப்பட்டது. இதில் நான் குடியிருந்த மரத்தடியில் வந்து அமர்ந்தார்.

விபாவசு அன்று அறுபதாண்டு நிறைவை அடைந்திருந்தார். ஒரு புருஷாயுள் முடிந்த பின்னரும் அதே அறியாமையுடன் அடுத்த வாழ்வுக்குச் செல்லவிருப்பதை எண்ணி உளம் சோர்ந்தார். நான் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டு அந்த மரத்தில் ஒளிந்திருந்தேன். அவர் முன் மரத்தில் இருந்து இரண்டு கனிகளை உதிரச்செய்தேன். அவர் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். கசக்கும் எட்டிமரமும் இனிக்கும் மாமரமும் இரண்டு நாகங்கள் போல பின்னிப்பிணைந்து பெரிய மரமாக வளர்ந்திருப்பதைக் கண்டார்.

“ஞானிகளையும் முனிவர்களையும் தேடிச்சென்று சலித்துவிட்டேன். இனியவையும் அழகியவையும் பொருளற்றவை என்று உறுதியாக அறிகிறேன். என் ஆத்மாவை இதோ கசப்புகளுக்கும் இருட்டுகளுக்கும் அழுக்குகளுக்கும் அளிக்கிறேன்” என்றபடி அந்த எட்டிப்பழத்தை எடுத்து உண்ணப்போனார்.

நான் அவரிடம் அப்போதுதான் பேசினேன். “பயணியே, நான் இந்த மரத்தில் இருக்கும் பிசாசு… இந்த கனியை உண்டாய் என்றால் நீ உன்னை எனக்கு அளிக்கிறாய்” என்றேன்.

அவரிடம் பயமே தோன்றவில்லை. அவருடைய கண்கள் தெளிவாக இருந்தன. என்னை நேருக்குநேராகப் பார்த்தார்.

“உனக்காவது நான் பயன்படுவேன் என்றால் அப்படி ஆகட்டும்” என்றபடி அவர் அந்த கசப்புக்கனியை உண்டு முடித்தார். நான் அவர் முன் தோன்றினேன். “உங்களுக்கு நான் செய்யவேண்டியது என்ன?” என்று கேட்டேன்.

“என் உள்ளத்தில் என் ஏழு வயது முதல் இருந்து வரும் கேள்வி இது. என் தந்தை அந்த கேள்வியை எனக்குள் உருவாக்கினார். அதன் விடைதேடி இதுநாள் வரை தவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கேள்வியுடன் நான் இறந்தால் என் இப்பிறவி வீணாகியது என்றே பொருள்… எனக்கு அதற்கான விடை தேவை” என்றார் விபாவசு.

நான் சொன்னேன் “நான் கதைகளை மட்டுமே அறிந்தவன். நானறிந்த கதைகளைச் சொல்கிறேன். உங்களுக்கான விளக்கம் எந்தக் கதையில் இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.”

அவ்வாறாக நான் அவருக்கு பதினாறாயிரத்தெட்டு கதைகளைச் சொன்னேன். அவற்றில் ஒரு கதையில் அவர் “ஆம்” என்று சொல்லி தலையசைத்தார். அது சதானீகனின் கதை. எழுந்து முகம் தெளிந்து “இதுதான் அதற்கான பதில். இதுவே போதும்” என்றார். என்னை வணங்கிவிட்டுக் கிளம்பிச் சென்றார். அவர் என்னிடமிருந்து அறிந்த மெய்ஞானத்தை காட்டின் இன்பம் என்று சொன்னார். என் பெயரையே பின்னர் கானபூதி என்று குறிப்பிட்டார்.

கானபூதி சொன்னது “திரும்பிச் சென்ற விபாவசு அதர்வம் என பின்னர் அழைக்கப்பட்ட காட்டில் சென்றமர்ந்து தவம் செய்தார். ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவர் விழித்தெழுந்து ஒரு செய்யுளை இயற்றினார். அவ்வாறு அவர் நாநூற்று எண்பது செய்யுள்களை இயற்றினார். அவை அதர்வ வேதம் என தொகுக்கப்பட்டன. அவர் அதர்வர் என்று பெயர் பெற்றார்.”

நான் “ஆனால் அவற்றில் ஒரு பகுதி அழிந்திருக்கலாம், சிலவே அதர்வ வேதத்தில் உள்ளன என்று சொல்லப்படுகிறது” என்றேன்.

“ஓடும் நதியில் வெறுங்கையால் நீரள்ளுவது போன்றதுதான் அவர்கள் என்னிடமிருந்து கொள்வது. கொள்வதைவிட வழிவது மிகுதி” என்றார் கானபூதி. “ஆனால் அதுவே ஒவ்வொரு முனிவரின் சொல்லுக்கும் நிகழ்கிறது. ஒவ்வொரு நூலுக்கும் அதுவே விதி”

“நீ அவருக்குச் சொன்ன அந்தக் கதை என்ன?”

“அதை நான் உனக்குச் சொல்வேன்” என்றது கானபூதி. “ஆனால் நான் சொல்லும் எந்தக் கதையிலும் இறுதியில் ஒரு புதிர் இருக்கும். அந்த கேள்விக்கான விடையைச் சொல்லாவிட்டால் அக்கதை அப்பொழுதே உனக்கு மறந்துவிடும். நான் இன்னொரு கதையைச் சொல்லவும் மாட்டேன். அப்படித்தான் நான் அதர்வருக்கு பதினாறாயிரத்து எட்டுக் கதைகளையும் சொன்னேன்.”

“சொல்” என்று நான் சொன்னேன்.

“அது சதானீகனின் கதை” என்று கானபூதி சொன்னது.

“அப்படி ஒரு குறிப்பு அதர்வவேதத்தில் உள்ளது, அதை ஷெர்பாட்ஸ்கி ஆராய்ந்திருக்கிறார். ஆனால் அந்தக் கதை வேறெந்த நூலிலும் இல்லை. அது என்னவென்றே எவருக்கும் தெரியாது”

“அது இதுதான்” என்று கானபூதி சொல்லத்தொடங்கியது.

*

ரிஷி தீர்க்கவீக்ஷனின் நூறு மகன்களில் ஒருவன் சதானீகன். ரிஷி தீர்க்கவீக்ஷன் அனைத்தும் பொன்னாலானதாகிய குபேரனின் உலகுக்குச் செல்வதாக தவம் செய்தார். நூறாண்டு தவம் செய்து முடிந்தபின்னரும் குபேரன் தோன்றவில்லை. ஆகவே ஆயிரமாண்டுக்காலம் உள்முகமாகத் தவம் செய்தார்.

தவத்தின் இறுதியில் குபேரன் அவர் முன் ஒரு பொன்னிறமான முகிலாகத் தோன்றினான். “நீ என் உலகுக்கு வரவேண்டும் என்றால் இந்தக் காடு பொன்னாலானதாக ஆகவேண்டும். ஹிரண்யவனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களே என்னை வந்தடைய முடியும். செய்யவேண்டும். ஹிரண்யதபஸ் நிறைவடைகையில் நீ என் உலகை அடையலாம்” என்றான்.

ஒரு காட்டையே பொன்னாலானதாக ஆக்குவது எப்படி? ரிஷி தீர்க்கவீக்ஷன் தன் மைந்தர்களுக்கு அதற்கான வழிகளைத் தேடும்படி ஆணையிட்டார். பொன்னுடன் வரவில்லை என்றால் திரும்பி வரவே வேண்டாம், இது எந்த மகனும் மீறவே முடியாத தந்தையின் ஆணை என்றார். பொன் இல்லாமல் திரும்ப வருபவர்களை சாபமிட்டு ஆயிரமாண்டுக் காலம் இருட்டில் வீழ்த்திவிடுவேன் என்று தர்ப்பைப்புல்லை நீட்டி அவர் கூவினார்.

நூறு மைந்தர்களும் பல திசைகளிலாகப் பிரிந்து சென்று தந்தைக்காகப் பொன் தேடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் வணிகர்களிடமிருந்து ஆயிரம் பொன்னை கொடையாகப் பெற்றான். இன்னொருவன் பன்னிரண்டாயிரம் கழஞ்சுப் பொன்னை ஈட்டினான். ஒருவன் பேரரசன் ஒருவனிடமிருந்து நூறு கோவேறு கழுதைகள் சுமக்கும் அளவுக்குப் பொன்னைப் பெற்றான். இன்னொருவன் தவம் செய்து பொற்கனி நிறைந்த சுரங்கம் ஒன்றையே கண்டடைந்தான்.

ஆனால் ஒரு காட்டையே பொன்னால் உருவாக்கும் அளவுக்கு அவர்களிடம் பொன் சேரவில்லை. ஆகவே அவர்கள் மனமுடைந்தனர். ஒவ்வொருவராக கங்கையில் குதித்து உயிர்துறந்தார்கள். இறுதி மைந்தனாகிய சதானீகன் நீண்டநாட்கள் அலைந்தும் ஒரு கழஞ்சுப் பொன்னைக்கூட அவனால் சேர்க்கமுடியவில்லை. ஆகவே உண்ணாநோன்பிருந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்து அவன் காட்டுக்குச் சென்றான். அடர்ந்த காட்டுக்குள் புகுந்து தான் மடிந்து மண்ணுடன் கலந்துவிட உகந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கே அவன் ஒரு மரத்தைக் கண்டான். அதன் வேர்க்குவை மென்மையானதாக இருந்தமையால் அந்த மரத்தடியில் அமர்ந்து வேர்க்குழிக்குள் தன் உடலை சுருட்டி ஒடுக்கிக்கொண்டான். தன்னை தானே இறுக்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு மயங்கினான்.

அப்போது அந்த மரத்தின் வேர்களில் மெல்லிய அதிர்வு இருப்பதை அவன் உணர்ந்தான். அதன்பிறகுதான் அது மரமல்ல ஒரு மாபெரும் நாகம் என்று தெரிந்துகொண்டான். ஏராளமான நாகங்கள் மண்ணில் அதன் வேர்களாக பரவியிருந்தன. அதன் அடிமரம் செதில்களால் அடர்ந்ததாக இருந்தது. நூறு தலைகள் கொண்ட அந்த நாகம் படமெடுத்து விரிந்து நின்றிருந்தது. அதன் நாக்குகள் காற்றில் துடித்துப் பறந்தன.

அவன் எழுந்து அந்த மரத்தைப் பார்த்தான். அச்சமில்லாமல் அவ்வாறு நிற்பதை அந்த மரம் திகைப்புடன் பார்த்தது. அதன் ஒரு தலை தணிந்து வந்து அவனை கூர்ந்தது. அவன் அஞ்சாமல் அதன் கண்களைப் பார்த்தான். ”நீ எங்கள் நஞ்சை ஏற்று உயிர்துறக்க வேண்டியிருக்கும்… எங்கள் நஞ்சை அடைந்தவர்கள் நாங்கள் வாழும் பாதாள உலகுக்கு வரவேண்டியிருக்கும்… அது அசுரர்களும் அரக்கர்களும் வாழ்வது. நீ மானுடன், அந்தணன். நீ ஒருபோதும் விண்ணுலகங்களுக்கு மீளமுடியாது” என்றது அந்நாகம்.

”நான் சலித்துவிட்டேன். விண்ணுலகம் தவம் செய்து செல்லவேண்டியதாக உள்ளது. ஆழம் எளிதாக வந்து சேர்கிறது. எதற்காக நான் விண்ணுக்குச் செல்லவேண்டும்?” என்று சதானீகன் கேட்டான்.

“ஏனென்றால் வேர்களை எவரும் அறிவதில்லை. கிளைகளையும் இலைகளையும் மக்கள் பார்க்கிறார்கள். பூக்களை விரும்புகிறார்கள். கனிகளை சுவைத்து மகிழ்கிறார்கள். ஒளியும் அழகும் அவற்றுக்கே உரியவை. இருளும் அழுக்கும் மட்டுமே வேர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று நாகம் சொன்னது.

“நான் இருளிலும் அழுக்கிலும் வாழ்கிறேன். எத்தனை கீழ்மையானது ஒருவன் வானை நோக்கி ஏங்குவது. அதன்பொருட்டு தவம் செய்வது!” என்று சதானீகன் சொன்னான்.

“நாங்கள் பிரஜாபதியாகிய தக்ஷனின் மைந்தர்கள். நூற்றுவர் இணைந்து இங்கே ஓர் உருவமாக இருக்கிறோம். நாகங்களின் மகிழ்வென்பது தழுவிக்கொள்ளுதல், நடனமிடுதல். நீ எங்கள் மகிழ்வை கலைக்கிறாய்.”

“என்னையும் உங்கள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று சதானீகன் சொன்னான்.

தட்சநாகர்களில் ஒருவன் குனிந்து வந்து சதானீகனை தீண்டினான். நஞ்சு தன் உடலெங்கும் பரவியபோது தன் உடல் பொன்னாலானதாக ஆவதை சதானீகன் உணர்ந்தான். முழுக்க பொன்னாகி அவன் சுடர்விடத் தொடங்கினான். அவன் அங்கிருந்த ஒரு கூழாங்கல்லைத் தொட்டபோது அது பொன்னாகியது.

அவன் தட்சநாகர்களை வணங்கி தன் தந்தையிடம் சென்றான். அவர் தவம் செய்த காட்டின் அனைத்து மரங்களையும் பாறைகளையும் மண்ணையும் தொட்டு தங்கமாக ஆக்கினான். அந்த பொற்காட்டில் அவர் அமர்ந்து தவம் செய்து குபேரனின் உலகைச் சென்றடைந்தார்.

குபேரனிடம் அவர் கேட்டார். “செல்வத்தின் தலைவனே, என் மகன் கொண்டுவந்த அந்தப் பொன் எங்குள்ளது?”

“அமுதை விளைவிக்கும் நஞ்சு அது” என்று குபேரன் பதில் சொன்னான். “கனிகளில் சுடர்விடும் பொன்னும், தளிர்களில் மின்னும் பொன்னும், வேர்களில் கசப்பென்றும் நஞ்சென்றும்  உள்ளன”

சதானீகனிடம் அவன் தந்தை தன்னுடன் குபேரபுரிக்கு வரும்படி கோரினார். தன் பிற மகன்களை குபேரனின் அருளால் அவர் குபேரபுரிக்கு வரவழைத்தார்.

சதானீகன் மறுத்துவிட்டான். “பொன்பூத்த அந்நகர் இந்த மரத்தின் வேர்களில் இருந்து உருவானது. நான் வேரில் வாழ்கிறேன்” என்றான். “இந்நிலம் அன்னை, நாமனைவரும் மைந்தர்கள்”

சதானீகன் பொன்னிறமான நாகமாக ஆனான். நாகங்களின் பாதாள உலகில் அவன் பொன்னிறமான நாகமாக அழியாத வாழ்வு பெற்றான். அவனை மணந்த நாகனிகை என்னும் நாகப்பெண் முட்டையிட்டு பன்னிரண்டாயிரம் குழந்தைகளைப் பெற்றாள். சதானீகனின் பன்னிரண்டாயிரம் கோடி மைந்தர்கள் இன்றும் வாழ்கின்றனர். மண்ணை அகழ்ந்தால் வரும் பல்லாயிரம் வேர்களில் ஒன்று பொன்னொளி கொண்டிருப்பதைக் காணலாம். நிலவு பெருகும் இரவுகளில் சிலர் பொன்னாக வழிந்தோடும் சதானீகனின் மைந்தர்களில் ஒருவனை கண்டிருக்கிறார்கள்.

நான் கானபூதியின் கதை முடிந்ததும் கேட்டேன். ”அதர்வர் இதுவே போதும் என்று எழுந்த இடம் எது? அப்போது நீ சொன்ன வரி என்ன?”

கானபூதி சொன்னது “ஒரு சொல்…” புன்னகையுடன் “அது அதர்வத்தில் உள்ளது. அதை நான் இப்போது உன்னிடம் சொல்லப்போவதில்லை” என்றது.

நான் “ஒரு சொல் முளைத்துத்தான் வேதம் முழுமையும் உருவாகியது என்பார்கள்” என்றேன்.

கானபூதி சொன்னது “வேதங்களில் முதன்மையானதும் தொன்மையானதும் அதர்வம்தான். ஏனென்றால் அதுதான் அமுதையும் அமுதின் அன்னையாகிய நஞ்சையும் கொண்டுள்ளது.”

கானபூதி தன் வலக்கையை மண்ணில் பொத்தி வைத்துக்கொண்டு, என் அருகே ஒளிரும் விழிகளுடன் முகத்தைக் கொண்டுவந்து கானபூதி கேட்டது. “சொல், இதுதான் என் கேள்வி. பல்லாயிரம் உயிர்களில் நாகம் மட்டும் தன்னுள் ஏன் பொன்னைக் கொண்டிருக்கிறது?”

“நானறிந்த உண்மையைத்தான் நான் சொல்லமுடியும்… அது இதுவே” என்று நான் சொன்னேன். “தன்னைத் தானே முழுமையாக அணைத்து முத்தமிட முடிந்தது நாகம் மட்டுமே. பொன் அதற்குள் மட்டுமே ஊற முடியும்”

கானபூதி கையை விலக்கி  “சரியான விடை” என்று சொல்லிக்கொண்டு சிரித்தபடி பாய்ந்து வந்து என்னை அணைத்தது. சிறுகுழந்தையை கொஞ்சுவதுபோல என்னை மாறி மாறி  முத்தமிட்டபடி தூக்கிக்கொண்டு சுழன்றது. என்னைச் சூழ்ந்து நிழல்கள் சிரித்துக் கூச்சலிட்டபடி நடனமிட்டன.

என்னை நிலத்தில் விட்டு என்னருகே நின்று கானபூதி கேட்டது. “சொல், உனக்கு என்ன வேண்டும்?”

நான் அந்தக் கேள்வியை எதிர்பார்த்து எண்ணியிருந்த அனைத்தும் முற்றிலும் மறந்துவிட்டிருந்தன. வெற்றுவிழிகளால் நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சொல், நீ கேட்பதை என்னால் அளிக்கமுடியும்…”

என்னை அறியாமலேயே என்னுள் இருந்து ஒரு விம்மல்தான் வெளிப்பட்டது. நான் அழுதபடியே தளர்ந்து மண்ணில் அமர்ந்து கொண்டேன். என் தலையை கையால் அறைந்தபடி “என்னால் முடியவில்லை. என்னால் இதைக் கடக்கவே முடியவில்லை… என்னால் சற்றும் தாளமுடியவில்லை… சிறுமையாக இருக்கலாம். கீழ்மையாக இருக்கலாம். விண்ணகம் வந்து நின்றிருந்தால்கூட நான் இதைத்தான் கேட்பேன்… இதை மட்டும்தான் கேட்பேன்” என்று அழுதேன்.

“சொல், நீ விரும்புவது என்ன?” என்றது கானபூதி.

“நீ பிசாசு… உன்னால் முடியும். எனக்குத் தேவை பைசாசிக சக்திகள்தான்” என்று ஆங்காரத்துடன் கூவியபடி நான் எழுந்தேன். “என் உள்ளம் ராதிகா என்னும் சொல்லில் இருந்து விலகவே இல்லை. அவளை தவிர எதுவும் எனக்கு பொருட்டில்லை. அவள் கொல்லப்பட்டாள். கருக்குழந்தையுடன் வெட்டி வீழ்த்தப்பட்டாள். நெஞ்சில் ஒரு சொல் அறுபட்டு நிற்க அவள் செத்துவிழுந்தாள்… நான் அவளை அந்தச் சாவுக்கு இட்டுச்சென்றேன். அந்த விதியை அவளுக்கு அளித்தவன் நான்”

“பழி தெய்வங்களுக்கு மட்டுமே உரியது என்பார்கள்” என்று நான் கண்ணீரை துடைத்தபடிச் சொன்னேன். என் பற்கள் கிட்டித்திருந்தமையால் சொற்கள் குழறலாக வந்தன. “மனிதர்கள் பழிகளை எல்லாம் தெய்வங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்பார்கள். பழிவாங்கும் மனிதன் தன்மேல் புதுப்பழியை ஏற்றிக்கொள்கிறான் என்று நூல்கள் திரும்பத் திரும்பச் சொல்வதை நான் அறிவேன். பழிவாங்குவதனூடாக அழலை அவிக்கமுடியாதென்றும், பழிதீர்த்தல் அழலை நூறுமடங்கு பெருக்கும் என்றும் நானும் நம்புகிறேன். தெய்வங்களையும் ஊழையும் நம்பி தீங்குகளை மறந்து முன்னால் செல்பவனே வாழமுடியும். ஆயினும் நான் பழிவாங்கியே ஆகவேண்டும்”

“பழி மறக்க என்னால் இயலாது. என் அன்னை அளித்த முலைப்பால் அனைத்தாலும், என் தந்தை சொன்ன அத்தனை சொற்களாலும், நான் கற்ற அனைத்து நூல்களும் சொல்லும் அறத்தாலும் என் வஞ்சத்தைக் கடந்து செல்லவே முயன்றேன். என் உடல் முற்றிலும் மூடிவிட்டிருக்கிறது. எல்லா பக்கமும் சுவர்சூழ்ந்த, கதவுகளும் சன்னல்களும் அற்ற, ஒரு சிறுவிரிசல்கூட இல்லாத சிறைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எனினும் என் அகம் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. எந்த உளநடிப்பும் எனக்கு உதவவில்லை” சொல்லச் சொல்ல நான் சீற்றமடைந்தபடியே சென்றேன்.

“கணம்கூட நில்லாமல், துளிகூடக் குறையாமல் பெருகிக்கொண்டே செல்லும் இந்த வஞ்சம் என்பது என்னுடையது அல்ல என்று இப்போது உணர்கிறேன். இது தெய்வங்களுக்குரியது, அல்லது ஊழுக்குரியது. இதை நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. எனக்கு பழிதான் வேண்டும்.”

“நீ கோருவதை நான் அளிப்பேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார். இந்த வஞ்சத்தால் நீ அடைவதொன்றுமில்லை. மறைந்தவள் அடைவதும் ஒன்றுமில்லை. முற்றிலும் வீணான ஒன்று இது.” என்றதுன் கானபூதி.

“இல்லை, வீண் அல்ல. சில வஞ்சங்கள் வீணே அல்ல” என்று நான் கூச்சலிட்டேன். எட்டி கானபூதியின் கையைப் பிடித்தேன். “நான் அடைவது என்ன என்றா? சொல்கிறேன். நீதி என்றும் அறம் என்றும் சொல்லப்படும் ஒன்றின்மேல் நம்பிக்கையை அடைகிறேன். இங்கே ஒவ்வொன்றும் நிகர் செய்யப்படும் என்னும் உறுதியை அடைகிறேன். இங்கே எந்தத் துளிக் கண்ணீரும் வீணல்ல என்னும் தரிசனத்தை அடைகிறேன். இன்று நான் அடைய விரும்புவது அது ஒன்றே.”

மீண்டும் என் நெஞ்சைக் கிழித்தபடி ஒரு விம்மல் எழுந்தது. குரல் இடறியதனால் என்னால் பேசமுடியவில்லை. நெஞ்சு அதிர்ந்துகொண்டே இருக்க நான் குனிந்து அமர்ந்தேன். என்னைச் சுற்றி நிழலுருக்கள் திகைத்தவை போல நின்றிருந்தன.

“ஏனென்றால்…” என்று நான் கம்மிய குரலில் சொன்னேன். “ஏனென்றால் அந்த உறுதிப்பாடு இல்லையென்றால் இங்கே எதுவுமே இல்லை. இங்கே வாழ்வென்பதே இல்லை. தின்று குடித்து புணர்ந்து சாகும் கீழ்மை மட்டுமே உள்ளது…” நான் கைதூக்கி கூச்சலிட்டேன். “அந்த உறுதிப்பாடுதான் கடவுள். கடவுள் இல்லை என்றால் அனைத்தும் அனுமதிக்கப்பட்டு விடுகிறது என்று தஸ்தயேவ்ஸ்கி சொன்னான். அந்த உலகில் எதற்கும் பொருளில்லை. அந்த உலகம் வரக்கூடாது. அதற்காக ஒவ்வொருவரும் பழிவாங்கியே ஆகவேண்டும். இனி பழிகளை தெய்வத்திற்கு விடுவதைப் போல மடமை வேறில்லை. பழிகளை மானுடர் வாங்கவேண்டிய யுகம் இது. கடவுளை மனிதர்கள் இந்த மண்ணில் நிலைநிறுத்த வேண்டிய காலம் இது”

“உன் விருப்பம் அதுவென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நீ இதனால் அடைவது என ஒன்றும் இல்லை. இதன்பொருட்டு நீ எண்ணி எண்ணி வருந்துவாய். இதன் வழியாக நீ மீளா இருளுக்குள் சென்றமைவாய். அதை நான் இப்போது சொல்லியாகவேண்டும்.”

நான் ஏளனத்தால் முகம் இழுபட “நீ அஞ்சுகிறாய்… அல்லது உன்னால் முடியாது. உன் குழந்தைக் கண்களும் இனிய சிரிப்பும் காட்டுவது அதையே. உன்னால் அதைச் செய்ய முடியாது…அதுதான் உண்மை”

“நீ நான் பிசாசு என்பதை மறந்துவிட்டாய்” என்று கானபூதி சொன்னது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 11:33

Birds and nature 

Myself Sahana from Chennai ,studying 9th grade. I visited Nithyavanam for bird watching class along with my younger  brother Krithik maanav and mother Preethi and this is my first time.

Birds and nature 

 

ஒரு இந்திய தத்துவ வகுப்புக்கு சென்று வந்தது போன்ற உணர்வு. கருத்துக்களை எடுத்து கூறிய விதம் தர்க்கரீதியாக இருந்தது.It is a hard nut to crack. என்பார்கள் .ஓரளவுக்கு தர்க்க சாஸ்திரத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.நிறைய தத்துவம் சம்பந்தமான  வாசிப்பு தேவை.ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகமும் இருக்கும்.தர்க்க சாஸ்திரமும் இருக்கும்.

கடவுள், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 11:30

May 14, 2025

வெறும் உரைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலம் அறிய விழைகிறேன்.முழுமையறிவு காணொளிகள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. நண்பர்கள் பலர் உங்களை இக்காணொளிகள் வழியாக அறிந்துகொண்டு வருகிறார்கள். என்னிடம் அவற்றைப் பற்றிக் கேட்கும்போதும் உரையாடும்போதும் மனம் மகிழ்கிறது. மிக முக்கியமாக, அவர்களை மூலகட்டுரைகளை நோக்கியும் இலக்கியப் படைப்புகளை நோக்கியும் இவை கொண்டு செல்கின்றன.

இவை அனைத்தையும் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற ஒலி பகிரும் தளங்களில் வெளியிட்டால் மேலும் பலரை சென்றடையும் என்று நினைக்கிறேன். காதில் அணியும் கேட்பான் அனைவரிடமும் சென்றுவிட்ட இக்காலகட்டத்தில் ‘பாஸிவ் லிசனிங்‘ என்பது இளைஞர்கள், பொதுப் போக்குவரத்துப் பயணிகள், கார்/பைக் ஓட்டிகள் இடையே பெருவாரியாகப் பெருகியுள்ளது.  எனவே உங்கள் உரைகள் மேலும் பலதரப்பட்ட மக்களிடையே சென்று சேர இது நிச்சயம் வழிவகுக்கும்.

அதற்கான வழிமுறைகள் என்னவென்று இனிமேல் தான் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஒப்புதல் கிடைத்தால் நானும் எனது நண்பனும் இப்பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறோம். ஒரு புதிய கணக்கு தொடங்கி அதில் இதுவரை வந்த மொத்த காணொளிகளையும் ஒலிக் கோப்புகளாக பதிவேற்றுகிறோம். பணி முடிந்ததும் அதன் நுழைவு ஐடியையும் கடவுச்சொல்லையும் உங்களிடம் பகிர்கிறோம். நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் உங்களுக்கும் குழுவினருக்கும் வசதியாக இருக்கும்.

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்கள் பதில் கடிதம் வந்ததைக் கண்டு துள்ளி எழுந்த காலைப் பொழுதை உவகையுடன் எண்ணிக்கொள்கிறேன். அனுமதி அளித்தமைக்கு மிக்க நன்றி. ஸ்பாடிபையில் சானல் தொடங்கி முதல்கட்டமாக 20 பதிவுகள் இட்டுள்ளேன். புத்த முழுநிலவு நாளில் இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்து வரும் குரு பூர்ணிமாவுக்குள் இதுவரை வந்த அனைத்து காணொளிகளையும் பதிவேற்றி விடுகிறேன்.

இப்பணிக்காக மீண்டும் உங்கள் காணொளிகளை முழுக்க கண்டது உங்களுடன் முழுநாள் செலவழித்து உரையாடியதைப் போன்ற உணர்வை அளித்தது . முன்னர் அடிக்கடி உங்களுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த நான், திடீரென ஏதோ ஒரு மனத்தடையினால் நிறுத்திவிட்டேன். தளத்தைத் தினமும் வாசிப்பது, வெண்முரசில் உலாவுவது என எல்லாம் வழக்கம்போல நடந்தாலும், பழைய உரையாடல் மனநிலைக்குப் பலமுறை முயன்றும் செல்ல முடியவில்லை. இக்காணொளிகள் அந்த தடையை உடைத்தெறிய உதவியாய் இருந்தன. கட்டுரை, கதை வாசிப்பதுடன் இதுவும் இப்போது அன்றாடத்தில்  ஒன்றாகிவிட்டது.

அனைத்திற்கும் நன்றி!

கிஷோர்

ஒலிவடிவில் முழுமையறிவு உரைகளைக் கேட்க

Spotify Channel Link : https://open.spotify.com/show/0y50fkVMI8NARfZz82LQ13?si=eztqLs1GQWidvX0Zud4iRw

அன்புள்ள கிஷோர்,

நன்றி.

வெறும் ஒலியாகக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. என்ன வேறுபாடு என்று பார்த்தேன். காணொளியாகக் கேட்கையில் இன்னொருவருடன் உரையாடுவதுபோல தோன்றுகிறது. வெறும் ஒலிவடிவமாகக் கேட்கும்போது எனக்கு நானே தனிப்பட்ட முறையில் உரையாடிக் கொள்வதுபோலத் தோன்றுகிறது. ஒருவேளை இரண்டுமே சரியாக இருக்கலாம். நன்றி.

இப்படி ஒலிவடிவாகக் கேட்பதன் அவசியம் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். காணொளிகளை ஒலிவடிவாகவே அவர் கேட்பதாகச் சொன்னார். காணொளிகளை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு என்றார். படிப்பது, பார்ப்பது ஆகியவற்றுக்கு அதற்கான நேரம் ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. கேட்பது பிற பணிகளுக்கு நடுவே நிகழும்.

இன்றைய வாழ்க்கையில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் வேலைகள், மூளை தேவையில்லாத வேலைகளே மிகுதி. எப்படியோ நம் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் இப்படி செலவிடப்படும்படி ஆகிவிட்டிருக்கிறது. பொழுதை அப்படிச் செலவிடுவது நம்மைச் சலிப்புக்குச் செலுத்துகிறது.

கடந்த காலகட்டங்களிலும் இத்தகைய எளிய வேலைகள்தானே இருந்தன என்று கேட்கலாம். உண்மை. ஆனால் இன்று கூடவே வேறு இரண்டு விஷயங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. ஒன்று தனிமை. இன்னொன்று நம் அறிவுத்தரத்தின் வளர்ச்சி.

சென்ற காலகட்டங்களில் மக்கள் தனியாக இல்லை. கிராமங்களில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் எளிய வேலைகளைச் செய்பவர்கள் கூட்டமாக, குழுவாக இருந்தார்கள். பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். சில வேலைகளில் பாடல்களும் இணைந்திருந்தன. நாம் இன்று நமக்கு அணுக்கமான சிறு சூழலுக்கு வெளியே முற்றிலும் தனித்திருக்கிறோம்.

சென்ற காலங்களில் மக்கள் என்ன வேலை செய்தார்களோ அதே அளவுதான் அவர்களின் அகமும் அறிவும் இருந்தது. அதில் நிறைவடைந்திருந்தனர். இன்று நாம் என்ன வேலை செய்கிறோமோ, எந்தவகையான அன்றாடம் கொண்டிருக்கிறோமோ அதைவிட நம் அகமும் அறிவுத்தரமும் அதிகம். ஆகவே நம்மில் பெரும்பகுதி நம் வேலையிலும் அன்றாடத்திலும் ஒட்டாமல் அப்பால் எஞ்சி நிற்கிறது. அது ஒன்றும் செய்யாமல் இருக்கிறது, சலிப்படைகிறது.

அதற்காகவே நாம் சமூகவலைத்தளங்களை நாடுகிறோம். அவை அளிக்கும் பலவகையான செய்திகளில் ஈடுபடுகிறோம். அவை உருவாக்கும் பொதுவான கருத்துகளை நம் சிந்தனைகளாக கொள்கிறோம். இதுவே சராசரி. பெரும்பாலும் எவரும் அதைக் கடப்பதில்லை. அதைக் கடந்து வருபவர் ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர். அவர் அந்தச் சராசரியாலும் சலிப்படைந்திருக்கிறார். தனக்கான சொந்தச் சிந்தனைகளை நாடுகிறார். தன்னை மெய்யாகவே தூண்டும் சிந்தனைகளை கேட்க விரும்புகிறார். நான் உத்தேசிப்பது அவர்களை மட்டுமே.

இந்த ஒலிப்பதிவுகள் காணொளிகளை விட தெளிவாக இருப்பதுபோல் உள்ளன. இவை இன்னும் அழுத்தமாக ஒருவரின் செவிகளுடன் பேசும் என நான் நினைக்கிறேன். இப்போது இவற்றைக் கேட்கையில் இவற்றில் உள்ள தயக்கங்களே எனக்கு அதிகமாக கவனத்தில் படுகின்றன. அவை நான் யோசிக்கும் இடைவெளிகள். சொல்லுக்காக, கருத்துக்காக, மானசீகமாக எதிரே இருப்பவரின் எதிர்வினைக்காக தயங்கும் இடங்கள் அவை.

இளமையில் என் சிந்தனைப் பயிற்சி என்பது சுந்தர ராமசாமியுடனும், ஆற்றூர் ரவிவர்மாவுடனும், பி.கே.பாலகிருஷ்ணனுடனும், எம்.கங்காதனுடனும், ஜி.குமாரபிள்ளையுடனும், இறுதியாக குரு நித்ய சைதன்ய யதியுடனும் தொடர்ச்சியான உரையாடலில் இருந்தது. அவர்கள் என்னுடன் பேசியது கொஞ்சம். நான் அவர்களுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டது மிக அதிகம். அவர்கள் எவரும் இன்று இல்லை. ஆனால் அவர்களுடன் நான் கொண்ட உரையாடல் இதுவரை அறுபடவில்லை.

இன்று காலை 5 மணிக்கு எழுந்து காலைநடை சென்றபோது சுந்தர ராமசாமியின் ஒரு பழைய பேச்சை எண்ணி, அவருக்கான என் மறுப்பையும் ஏற்பையும், விரிவாக்கத்தையும் அவரிடமே சொல்லிக்கொண்டு சென்றேன். அவர் என்னுடன் இருப்பதுபோல் இருந்தது.

என்னுடன் என் நண்பர்கள் கொண்டுள்ள அந்த உரையாடல் அறுபடாமல் நீள ஒரு தொடர்பூடகமாக இந்த உரைகள் இருக்கும் என்றால் நல்லது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.