Jeyamohan's Blog, page 105

May 21, 2025

முழுமையறிவு வகுப்புகளில் கற்றது என்ன?

ஓர் உரையாடல். எழுத்தாளர்கள் ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் சுசித்ராவும். முழுமையறிவு வகுப்புகளின் கற்கும் முறை, கற்பவை பற்றி. இந்திய தத்துவ இயல், இரண்டாம் நிலை முடிந்தபின் ஓர் இயல்பான உரையாடல். அந்தச் சூழல் இப்போது பார்க்கையில் அழகாக இருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:36

நிழல்கள் உடனிருக்கின்றன.

நமக்குத் தெரியாமல் மனம் எதையாவது நம்மை மீறி உணர்கிறதா? ஆம் என்பது என் அனுபவம். என் மனதின் நுண்மைதான் என்னுடைய பெரும் செல்வம். என் பெரும் சுமையும் வதையும் அதுதான்.

சென்ற மூன்று நாட்களாகவே தூக்கமே இல்லை. 17 ஆம் தேதி தொடங்கியது. ஆழ்ந்த அமைதியின்மை. என் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் நான் ஒரு மனநோயாளியா என்று தோன்றியிருக்கும். நடை சென்றபோது என்னைச் சந்தித்த ஒருவர் “என்ன சார் பிரச்சினை?” என்றார்.

“ஒண்ணுமில்லியே” என்றேன்.

“இல்லை, தானே பேசிட்டே போறீங்க”

புன்னகைத்து கடந்துசென்றேன். என்ன பிரச்சினை என்று எனக்கே தெரியவில்லை என்று சொன்னால் குழம்பிவிடுவார்.

எழுதிக்கொண்டிருக்கும் நாவல் தொடரான ‘காவியம்’ ஒரு முக்கியமான காரணம். அது வேர்களைப் பற்றிய நாவல். தளிர், இலை, பூ, காய், கனி என ஏதுமில்லை. ஆழத்தின் மௌனமும் இறுக்கமும் அழுக்கும் செறிவும் கொண்டது. ஈரமும்தான். அது என்னை கையிலெடுத்து வீசி விளையாடுகிறது.

ஆனால் எழுத்துக்கு என்னைக் கொடுப்பதொன்றும் புதியது அல்ல. வெண்முரசு நாட்களில் தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவே உள்ள கோடுவழியாகக் கடந்து சென்றிருக்கிறேன். உச்சகட்ட பொறுமையின்மை, எவருடனென்று இல்லாத சீற்றம் என அலைக்கழிந்திருக்கிறேன்.

கலை என்றோ இலக்கியமென்றோ தெரியாதவர்கள் மட்டுமே வாழும் ஒரு தேசத்தில் அதை எவரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. எழுத்தாளனை வசைபாடும் ஒரு வாய்ப்பையும் இங்குள்ள பாமரர் விடுவதுமில்லை. பைத்தியமோ குற்றவாளியோ ஆக்கிவிடுவார்கள். ஆகவே என்மேல் ஒரு நடுத்தரவர்க்க மனிதன் என்னும் வேடத்தை எடுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறேன். கூடுமானவரை மனிதர்களை தவிர்த்து வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

தூங்க முடிந்தது என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலையில் புதியதாக விழித்தெழ முடியும். இந்த அலைக்கழிப்பை நாட்களாகப் பிரித்துக் கொள்ள முடியும். து ஃபு சொன்னதுபோல, அது ஆற்றை வாளால் வெட்டுவதுபோலத்தான். ஆனால் வெட்டும் செயல் நம்முள் ஓடும் ஆற்றை துண்டுகளாக்கிவிடுகிறது.

பதினேழாம் தேதி இரவு வழக்கம்போல ஒன்பதரைக்குப் படுத்தேன். திடுக்கிட்டு எழுந்தேன். அதன்பின் தூக்கமே இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தேன். பகலில் தூங்கவில்லை. மதியத்திற்குமேல் டீயும் காபியும் குடிக்கவில்லை. காலையில் குடித்த காபி கடுமையாக ஆனதுதான் காரணமா என்றெல்லாம் யோசித்தேன். தூக்கமே இல்லை. விடிய விடிய எழுதிக்கொண்டிருந்தேன். காலை நான்கரை மணிக்கு கூடத்திலேயே சோபாவில் படுத்து இரண்டு மணிநேரம் தூங்கினேன்.

அன்று பகல் முழுக்க இருந்துகொண்டிருந்த என்னவென்று தெரியாத பதற்றத்தையும் எவர் மீதென்று தெரியாத எரிச்சலையும் அந்த தூக்கக்கலக்கம் கொஞ்சம் மங்கலடையச் செய்தது. ஒரு சினிமா பற்றிப் பேச ஒருவர் வந்திருந்தார். அது கொஞ்சம் விலக்கிச் சென்றது. அன்று பகலில் தூக்கமில்லை. தலைநிறைய எண்ணை தேய்த்து குளித்தேன். பத்து கிலோமீட்டர் நடை சென்றேன். ஆனால் அன்றும் பன்னிரண்டு மணிக்குத்தான் தூக்கம். காலை மூன்று மணிக்கே விழித்துக்கொண்டேன்.

அடுத்தடுத்த நாட்களிலும் அதேதான். தூக்கம் ஒருசில மணிநேரம் மட்டுமே. மோசமான எதையோ எதிர்பார்ப்பவன் போலிருந்தேன். என்னென்னவோ தீமைகள் வரவிருப்பதாக கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஒவ்வாதவை ஏதாவது கண்ணுக்குப் பட்டுவிடும் என்று வாட்ஸப், இணையம் என எல்லாவற்றையும் அணைத்து வைத்தேன். சரி, மனநிலை மாறட்டுமே என அருகே உள்ள பரோட்டா கடையில் இருந்து பரோட்டாவும் சிக்கனும் வாங்கிவந்து அருண்மொழியுடன் அமர்ந்து சாப்பிட்டேன். நகைச்சுவைக் கதைகள், படக்கதைகள் வாசித்தேன். அகம் அப்படியே கல்போலத்தான் இருந்தது.

தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இருந்தேன். நாவல் அதுவே கட்டின்றி வளர்ந்து செல்வதை நான் அனுமதித்தாலே போதும். அநேகமாக ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை, விரல்களை கணிப்பொறி விசைப்பலகைமேல் வைப்பதைத் தவிர. சொல்லப்போனால் நாவலில் இருந்தே மிக விலகிவிட்டேன். அதன் முந்தைய அத்தியாயம் என்ன என்றுகூட நினைவில் இல்லை. எந்தத் தொடர்ச்சியையும் யோசித்து எடுக்கவும் முடியவில்லை. ஆனால் அது எப்படியோ தானாக சரியாக வரும், வடிவம் அமையும் என முன்னர் வெண்முரசு வழியாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த நாவல் ஒருவகையான பைத்திய வெளிப்பாடு. வெளிப்பட்டாலே அது முழுமையாகிவிடுகிறது.

நேற்று முன்தினமும் நேற்றும் எரிச்சலும் பதற்றமும் அடங்கி, ஆழ்ந்த துயர் நிறைந்த மனநிலை நீடித்தது. melancholy என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரிடமாவது பேசலாம் என எண்ணினால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் தீவிரமாக இருந்தனர். கிருஷ்ணன் நண்பர்களுடன் காட்டுப்பயணம், மழைப்பயணம் என இருந்தார். குவிஸ் செந்தில் கோவை புத்தகக் கண்காட்சிப் பணிகளில். காசர்கோடு நண்பர்களை அழைத்தேன். அவர்கள் அங்கே ஏதோ திரைப்பட விழா ஒருங்கிணைப்பில் பதற்றமாக இருந்தார்கள்.

அருண்மொழியிடம் வழக்கம்போல விளையாட்டுத்தனமான சாதாரணமான உரையாடல்கள். அவை மட்டுமே ஒரே விடுதலையாக இருந்தன. மாறாத உற்சாகமும் நேர்நிலை மனநிலையும் கொண்ட ஒரு சிறுமியும், தீவிரமாகப் படிக்கும் ஓர் அறிவுஜீவியும் கலந்த ஆளுமை அவள். இந்நாட்களில் அவள் இல்லையென்றால் மூளையின் மூடி தெறித்துவிட்டிருக்கும்.

நேற்றிரவும்  தூங்காமலிருந்தேன். தமிழ்விக்கியில் இரண்டு பெரிய பதிவுகள் போட்டேன். இரண்டு பதிவுகளைச் சரி செய்தேன். மொத்தம் நான்கு நூல்களை அதற்காகப் புரட்டினேன். விடிந்துவிட்டது. காலையில் நடைசென்று டீ குடித்து சுற்றி திரும்பிவந்தேன்

வந்து சேர்ந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது காட்சன் அழைத்து அவர் மகன் மித்ரன் இறந்துவிட்டான் என்று சொன்னார். பலநிமிடங்கள் மண்டைக்குள் செய்தி ஏறவே இல்லை. பின்னர் ‘இதுதானா?’ என்று அகம் அரற்றத் தொடங்கிவிட்டது. அஞ்சலி: மித்ரன் காட்சன்

சென்ற சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று ஒரு செய்தி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அமைதியிழந்திருந்தேன். என் அம்மா இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னரே நான் கொடுங்கனவுகள் கண்டுகொண்டே இருந்ததை அடிக்கடி நினைப்பதுண்டு.

உடனிருக்கும் நிழல்களைப் பற்றி காவியம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நான் உணரும் நிழல்கள் அவை. அந்நிழல்களைப் பற்றிய மெல்லிய உணர்வையாவது அடைந்தவர்களுக்கே அந்நாவல் புரியும் என நினைக்கிறேன். சிலரே இருப்பார்கள் என்றாலும் அவர்களுக்காக அது எழுதப்பட்டுள்ளது என அவர்கள் உணர்வார்கள்.

கிளம்பி உதயமார்த்தாண்டம் அருகே காட்சனின் மனைவி இல்லத்திற்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். புத்ரசோகம் போல தாளமுடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் விசுவாசம் என்று கிறிஸ்தவர்கள் சொல்லும் ஒன்று உண்டு, முழுமையாக அர்ப்பணித்தல், அளித்துவிட்டு விடுபடுதல். காரணகாரியம் தேடி உழற்றிக் கொள்ளாமலிருத்தல். அது அவரை கைவிடாது என நினைக்கிறேன்.

இன்றிரவு தூங்க வாய்ப்புண்டு. அல்லது இந்த துயரை முற்றவைத்து, உச்சமடையச் செய்து அதுவே தன்னை குறைத்துக்கொள்ள வைக்கலாம். நெருப்பை அணைக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. மித்ரன் என் கைகளில் இன்னும் தொடுகையாகவே நீடிக்கும் குழந்தை.

இந்த நுண்ணுணர்வுகளை அடைவது வரமா சாபமா என்றால் இரண்டும்தான் என்றே சொல்வேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:35

அருணாசலக் கவிராயர்

இயலிசை நாடக இணைப்பு, தமிழிசை மீட்டுருவாக்கம் என்னும் இரு களங்களில் முன்னோடிப் பங்களிப்பாற்றியவர் அருணாசலக் கவிராயர்.தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்

அருணாசலக் கவிராயர் அருணாசலக் கவிராயர் அருணாசலக் கவிராயர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:34

காவியம் – 31

அச்சு, சாதவாகனர் காலம் பொமு 2, பைத்தான் அருங்காட்சியகம்

என்னைச் சுற்றி நிழல்கள் என் சொற்களைக் காத்து நின்றிருந்தன. கானபூதியிடம் நான் “அந்த மொழி நான் அறியாதது” என்றேன்.

“கொஞ்சம்கூட தெரியாத மொழியை எவரும் கற்கவும் முடியாது. அந்த மொழியின் ஒரு துளி உன்னில் முளைத்து எழ வேண்டும்…” என்றது. “அவ்வாறு முளைத்தெழுந்தால் மட்டுமே நீ என் மொழிக்குள் வரமுடியும்.”

“நான் என்ன செய்யவேண்டும்?” என்றேன்.

”நீ அடைந்த அச்சொல்லை பொருள் கொண்டு என்னிடம் சொல். உன் மனத்தை துரத்தி முடிவு வரைக்கும் கொண்டு போ” என்றது கானபூதி. “நாளை இரவு மீண்டும் வா… அதுவரை என் இடது கை இந்த மண்ணிலேயே இருக்கும்.”

நான் கிளம்பும்போது சக்ரவாகி என்னுடன் வந்தது. “நாங்கள் உடன் வரப்போவதில்லை. நீ தனிமையில் அலைவதே உனக்கு நல்லது. ஒரு பகல் முழுக்க உன்னுடன் இருக்கிறது.”

நான் வெளியே வந்து என் படிக்கட்டில் படுத்துக்கொண்டபோது விடியத்தொடங்கி வெளியே மக்கள் கழிப்பறைக்கும் ஆற்றங்கரைக்கும் செல்லத் தொடங்கி விட்டிருந்தார்கள். வெயில் நன்றாக எழுவது வரை நான் தூங்கினேன். அதன்பின் எழுந்து என் உணவைத் தேடிச்சென்றேன்.

எனக்குள் இருந்து அச்சொல்லின் பொருளை நான் தேடி எடுத்தாகவேண்டும். வெளியே மிஞ்சுவது ஒன்றுமில்லாத நிலையில் உள்ளே கேட்கும் குரல்கள் மிக வலுவானவை. அவை உள்ளே மிக மிகத் தொலைவில் எங்கோ இருந்து கேட்கின்றன. குரல்கள் அண்மையில் ஒலிக்கையில் அவை நம்மால் விலக்கிக் கேட்கப்படுகின்றன. மிகத் தொலைவில் ஒலிக்கையில் நாம் அவற்றை மேலும் மேலும் அணுகிக் கேட்கிறோம். மெல்லிய முணுமுணுப்பாகத்தான் அந்தக் குரல் எனக்குக் கேட்கத்தொடங்கியது. ஒரு மூச்சு நெஞ்சுக்குள் அடக்கிக்கொள்ளப்படுவதன் ஓசை. அல்லது உலர்ந்த உதடு மெல்ல பிரிவதன் அரவம்.

உதடுகளுக்குள் இருந்து வெளிவராத ஒலி மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்கள் கூட செவிகொடுக்கப்பட்டால் நமக்குள் முரசொலி போல முழங்கக்கூடும். நான் ஒலித்தவற்றை விலக்கினேன். அடியில் திகழ்ந்த ஓசைகளைச் செவிகூர்ந்தேன். அது எத்தனை தாழ்ந்திருந்ததோ அத்தனை நான் கூர்ந்து கவனித்தேன். என் செவிகள் முற்றாக மூடிவிட்டிருந்ததனால் தலைக்குள் சுண்டப்பட்ட இரும்புத்தட்டின் மீட்டல் போலொரு ரீங்காரம் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. என் தலை இறுகக் காற்றடைத்த பலூன் போல நிறைந்ததாகவும், கூடவே  எடையற்றதாகவும் இருந்தது. அங்கே ஒலிகள் எல்லாம் இணைந்து ஒரு முழங்கும் அமைதியாக மாறியிருந்தன. நான் கேட்கும் சொற்கள் எவராலும் சொல்லப்படாதவை.

என் கண்களையும் காதுகளையும் பேச்சையும் இழந்தபின் நடக்கும்போது முற்றிலும் எடையே இல்லாத தலையால்தான்  சமநிலைகொள்ள முடியாமல் ஆகிறது என்று கண்டுகொண்டேன். ஆகவே என் கையிலிருந்த கழியில் உடலை முழுக்கத் தாங்கி தலை தனியாகக் காற்றில் மிதப்பது போல விட்டு நடக்கத் தொடங்கினேன். பின்னர் என் உடலில் தலையே இல்லை என்று எண்ண ஆரம்பித்தேன். தலையில்லாத என் முண்டம் மட்டும் தள்ளாடித் தெருவில் நடந்தது. தலை கூடவே தனியாக மிதந்து வந்தது. காற்றில் அலைபாய்ந்தது. வலுவான காற்று வீசுமென்றால் அது எழுந்து பறந்து விலகிச் சென்றது. இலைகள் மேல் தொட்டுத் தொட்டு தழைந்தும் எழுந்தும் அகன்றது.

என் தலை பறந்தலைவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கூரிய கற்களிலும் முட்களிலும் அது விழுந்து செல்லும்போது சட்டென்று உடைந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். செங்குத்தாக எழும் காற்றில் அது சுழன்று மேலெழுந்தபோது விடுதலை ஒன்றை உணர்ந்தேன். மேலும் மேலும் என்று தவித்தேன். அது மிகத்தொலைவில் அகன்று சென்றபோது திசைமுடிவில் சென்று மறைந்துவிடுமென்று அஞ்சினேன். அதை உடனே திரும்ப அழைக்க வேண்டுமென்று என் உடல் தவித்தது. மெய்யாகவே விலகிச் சென்றுவிடுமெனில் எஞ்சக்கூடிய நான் எதுவாக இருப்பேன். தவித்து தவித்து தெருவில் நிற்கும் என் மீது மெல்ல கருணை கொண்டு அதுவந்து பொருந்திக் கொள்ளும்போது மகிழ்ச்சியானேன். கை அசைத்து ஓசை எழுப்பினேன்.

என் தலை அதிர்ந்து கொண்டே இருந்தது. காற்றிலுள்ள ஒவ்வொரு ஓசையும் அதன் மெல்லிய ஜவ்வை வந்தடைந்தது. செவிகளும் கண்களும் பிற புலன்களும் அகத்திருக்கும் தன்னுணர்வு கொள்ளும் வெறும் பாவனைகளே என்று நான் உணர்ந்தேன். சேறு ஒரு பகுதியில் உலர்ந்து பருப்பொருளாக இருக்கிறது. மறு எல்லையில் நொதிக்கும் தண்ணீராக இருக்கிறது. என்னிலிருந்து என் தன்னுணர்வின் உலர்ந்த பகுதி மறைந்துவிட்டிருந்தது. அதுதான் பிற உலர்ந்த பகுதிகளை அறிந்து கொண்டிருந்தது. அந்த நீர் கரிய இருண்ட குளிர்ந்த எடைமிக்க எல்லா புறமும் மூடப்பட்ட குடுவைக்குள் எப்போதைக்குமென சிக்கிக்கொண்ட அந்தத் திரவம் நலுங்கிக்கொண்டே இருந்தது. அது பருப்பொருள் அல்லாத அனைத்தையும் அறியும் ஆற்றல் கொண்டிருந்தது.

மிகத் தொலைவில் கேட்கும் ஒலிகள். அவை சொற்களாக மாறத் தொடங்கியது எப்போது? எல்லா ஒலியுமே சொற்கள்தான். புரியாத மொழியனைத்தையும் ஒலி என்று பார்க்கும் பார்வையே நாம் நமக்கென விதித்துக்கொண்ட பெரிய வாழ்க்கை வட்டம். அதைவிடச் சிறிய புரிதல் வட்டமே அதை உருவாக்குகிறது. வட்டங்களுக்குள் வட்டங்களுக்குள் வட்டங்கள். வட்டங்கள் உள்ளுக்குள் சுருங்கிச் செல்லுந்தோறும் அவை செறிவடைகின்றன. புரிந்தவையாகின்றன. வெளிவட்டங்கள் நம்மால் பிழையாக புரிந்துகொள்ளப்பட்டவை. நம் வட்டங்களுக்கு வெளியே நாம் முற்றிலும் அறியாத ஒரு மாபெரும் வட்டம்.

இலைகளும் காற்றில் நகரும் மணல் பருக்களும் கூட பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் கொண்டவை. நூற்றுக்கணக்கான சொற்கள், ஆயிரக்கணக்கான சொற்கள். அவை ஒன்றையொன்று பொருள் கொள்ளச் செய்து, வளர்ந்து, ஆயிரமென பல்லாயிரமென லட்சங்களென, கோடிளெனப் பெருகிக்கொண்டிருந்தன. அச்சொற்களில் ஏதேனும் ஒன்று பொருள் தரத்தொடங்கினால் அது பிறிதொன்றை பற்றிக்கொள்ள வைக்கும். ஒன்று போதும். நான் தேடும் சொல் வேண்டாம், ஏதேனும் ஒரு சொல் போதும்.

நான் என் உடலுக்குள் ஒடுங்கி, உடலையே இரு கைகளாக மாற்றி உள்ளிருக்கும் அந்த சிறிய சுடரை பொத்தி அசைவில்லாமலாக்கி, அந்தக் குரல்களுக்கு என் அகத்தைக் கொடுத்து அமர்ந்திருந்தேன். பல்லாயிரம் சொற்கள், பல்லாயிரம் உள்ளங்களின் வெளிப்பாடுகள். அவை இங்கு உடல் கொண்டிருக்கவில்லை. வேறெங்கோ அவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கே, முச்சந்தியில் நின்று கொண்டு நான் அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த முச்சந்தி எனக்கு முழுக்கத் தாளிடப்பட்ட முற்றிலும் காலியான அறைதான்.

இளமையில் என் குடிசைப்பகுதியில் எங்கள் கட்டில் மீது காதை அழுத்திப்படுத்தால் பக்கத்துவீட்டில் பேசுவது கட்டிலின் இரும்புச் சட்டகம் வழியாக மெல்லிய முணுமுணுப்பாகக் கேட்கும். மிகச் செவி கூர்ந்தால் அது எவருடைய பேச்சென்றும், என்ன சொல்கிறார்கள் என்றுகூடத்தெரியும். இப்போது இந்த மாளிகையின் சுவர்களில் என்னை முழுதாக ஒட்டிக்கொண்டு, இச்சுவரில் வரையப்பட்ட ஓவியம்போலப் பதிந்துகொண்டு, அக்குரல்களைக் கேட்க முயல்கிறேன். இந்த அறைக்கு அப்பால் நூற்றுக்கணக்கான அறைகள். ஒவ்வொரு அறையும் இன்னொரு அறையின் குரலுக்கு தன் வெறுமையால் செவி கொண்டிருக்கிறது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு குரல்கள் கசிகின்றன.

மிக அப்பால், மிகமிகத் தொலைவில், எங்கோ குரல்கள் மட்டுமே ஆன பெருவெளி ஒன்றிருக்கிறது. அங்கிருந்து மழை பொழிந்து குடங்களை நிறைப்பது போல இந்தச் சிற்றறைகளை அந்தக் குரல்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளி முடிவில்லாதது. குரல்கள் மட்டுமேயானது. தொலைந்துபோகும் சொற்கள் எல்லாம் அங்கேதான் சென்று சேர்கின்றன. எல்லா சொற்களும் அங்கிருந்துதான் தோன்றுகின்றன.

நான் கேட்ட முதற்சொல், நான் செவிகூரும்போது துலங்கவில்லை. அதை மிகத்தொலைவிலும் மிக மங்கலாகவும் முதலில் அடையாளம் கண்டேன். அது தெரிந்தது போலிருந்தது. தெரிந்த சொல் என்பதே என்னைப் பரபரக்கச் செய்தது. ஆனால் நான் நெருங்கும் தோறும் விலகுவதாகவும் விலகும் தோறும் மெதுவாக நெருங்கி வருவதாகவும் அது என்னுடன் விளையாடியது. என்னுடைய மொத்த சொற்கிடங்கிலும் எந்தச் சொல்லும் அதனுடன் சென்று இணைந்து கொள்ளவில்லை. நான் அச்சொல்லைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது இயலாதென்று தெரிந்து கைவிட்டேன். அது இனி இல்லை என்று எனக்கே சொல்லிக்கொண்டேன்.

அந்தக் கைவிடுதல் அளித்த விடுதலையுணர்வு நிறைவை அளித்தது. எல்லாக் கைவிடுதல்களும் விடுதலைகள் தான். நாம் கைவிடுவதும் நம்மைக் கைவிடுவதும் எல்லாமே விடுதலைகள்தான். அதை மீண்டும் மீண்டும் உணர்வதே என் வாழ்வென்று ஆகிவிட்டிருக்கிறது. முற்றிலும் அதிலிருந்து விலகி விலகி விலகி நான் வந்து அமையத் தொடங்கிய பின்னர் என் மிக அருகே அச்சொல் அமர்ந்திருந்ததைக் கண்டேன். நான் நன்கறிந்திருந்ததாக, நெடுநாள் என்னுடன் இருந்ததாக, என்னுடனேயே பிறந்து வளர்ந்ததாகத் தோன்றிய அச்சொல்லை நான் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தேன்.

‘த்வி’. ஒரு மெல்லிய குருவியின் ஒலி. சட்டென்று உருமாறி மயிலின் அடிக்குரலாக ஒலித்தது. பம்பை போன்ற ஏதோ ஒரு மேளத்தின் உறுமல். கல் பாறை வெடிக்கும் ஓசை. வானம் முழுக்க நிரம்பி பல்லாயிரம் எதிரொலிகளுடன் அகன்றகன்று தொலைவின்மைக்கு செல்லும் இடியோசை. ‘த்வி’ முழங்கிக்கொண்டே இருந்தது அச்சொல். பெரிய மலைபோல ஆகியது. அதன் அருகிலேயே சிறிய கூழாங்கல் போலவும் அதுவே இருந்துகொண்டிருந்தது. ‘த்வி’

அச்சொல்லையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சில சமயம் வண்ணச் சிறுகுமிழி. சிலசமயம் சுழற்றி உள்ளிழுக்கும் மாபெரும் நீலக்கருஞ்சுழி. சில சமயம் புன்னகைக்கும் ஒரு குழந்தை முகம். சில சமயம் புல்நுனியில் நின்று நடுங்கும் பனித்துளி. சில சமயம் ஒரு துளி அனல்.

த்வி என்றொரு சொல் எந்த மொழியைச் சார்ந்தது? நான் அச்சொல்லை மெல்லக் கைநீட்டி என் விரலால் தொட்டேன். நீர்க்குமிழி போல அத்தனை மென்மையான அத்தனை நிலையற்ற ஒன்று. ஆனால் என் கைவிரலில் அதன் குமிழிப்படலம் மெல்ல அழுந்தி மீண்டது. அது புன்னகைப்பது போலிருந்தது. ஒரு கண்ணாக மாறி என்னைப் பார்ப்பது போல.

அழகிய இனிய சொல்லே. ஆயிரமாண்டு விடாது பெய்யும் ஒற்றைப்பெருமழையின் ஒரு துளி நீரே. தன்னுள் தான் நிறைந்து முழுமை கொண்ட பெருங்கடலே கூறுக, நீ யார்? இங்கு இப்போது வந்து நின்று புன்னகைப்பது எதற்காக? நீ என் இளமையிலேயே என்னை வந்தடைந்தாய். என் நினைவு தொடங்கும்போதே என்னுடன் இருந்தாய். இந்த மூடிய மாளிகையில் இருந்து என்னை நோக்கி பாய்ந்து வந்து என்னை அறைந்து வீழ்த்தினாய். என்னை காய்ச்சலில் உளறச் செய்தாய். என் கனவுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தாய். உன்னை என் தூக்கத்தில் குழறினேன். திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது நீ அகன்று சென்றுவிட்டிருந்தாய்.

த்வி என்று நான் அறிந்த பல மொழிச்சொற்கள் உள்ளன. சம்ஸ்கிருதத்தில் இரண்டு. அதுவே லத்தீனில் Duo. கிரீக்கில் Dyo. பார்ஸியில் Do ஆங்கிலத்தில் Two. உலகம் முழுக்க அச்சொல் பரவியிருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் அவ்வாறு ஒரு நிகழ்வு உண்டு என முதலில் உணர்ந்த மூதாதை அளித்த சொல் அது. அச்சொல் அவனுக்கு அப்போது அந்த அர்த்தம் என்று தோன்றியது. அந்த இணைவு எப்படி நிகழ்ந்தது? சொல்லும் பொருளும் எப்படி இணைகின்றன? சொல்லும் பொருளும்போல என்று பார்வதி பரமேஸ்வர லயத்தை காளிதாசன் சொல்கிறான். சொல்லும் பொருளும் கொள்ளும் முதல்புணர்ச்சியே பெற்றுப்பெருகி மொழியாகியது.

முதலில் அச்சொல் என இங்கு என்றும் திகழும் ஒன்றை உணர்ந்தவன் இடிவிழுந்த மரம்போல நின்று எரிந்திருப்பான். அவன் அந்த வெளிச்சத்தை மனிதகுலம் முழுக்க அதை அளித்துவிட்டு சென்றான். ஆனால் என் முன் அமர்ந்திருப்பது அவன் அளித்த அந்த அர்த்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முந்தைய சொல். முற்றிலும் தூயது. இன்னும் பெயரிடப்படாத குழந்தை போல. இது வெறும் ஒலி. இங்கே அனைத்திலும் திகழ்ந்துகொண்டிருக்கும் ஒலிகளில் ஒன்று.

த்வி, த்வ, த்வம், திவி… திரும்பத் திரும்ப அது ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அந்தச் சொல்லை என் சுட்டுவிரலில் ததும்பிக்கொண்டிருக்கும் ஒரு துளி நீர் போல ஏந்தியபடி பைத்தானின் தெருக்களில் அலைந்தேன். அதை என் முன் ஏந்தி அதில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் உருவாவதை பார்த்துக்கொண்டு அரண்மனைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.

எத்தனை தூய ஒரு சொல்! இதற்கு நான் பொருள் அளித்தே ஆகவேண்டும். ஆனால் பொருள் அளிக்காவிட்டால் இதற்கு பயனேதும் இல்லை. பொருளில்லையென்றால் இது என் உள்ளமாக ஆவதில்லை. ஆனால் என்னில் இருந்து அகல்வதுமில்லை. பொருளை ஏற்றுக்கொண்டது என்றால் இது அருளும் தெய்வம். பொருளை விலக்கியது என்றால் இது என்னை அழிக்கும் தெய்வம்.

இது எனக்குப் பொருளாகப் போவதில்லை. இது தன் முடிவற்ற சாத்தியங்களால் இது என்னைத் தொட்டு உலுக்கிக் கொண்டே இருக்கும். எனக்கொரு பெயர் போடு, பெயர் போட்ட பிறகு என்னிடம் நீ பேசமுடியும் என்று இந்தக்குழந்தை என்னிடம் சொல்கிறது. என்னைப் பிடித்து உலுக்கிக்கொண்டே இருக்கிறது. என்னைத் தூங்கவிடாமல் உதைத்துக்கொண்டோ சிணுங்கிக்கொண்டே அழுதுகொண்டோ இருக்கிறது. எத்தனை நாள், எத்தனை ஆண்டு, எத்தனை பிறவிக்காலம் அச்சொல்லுடன் இருந்தேன் என்று எனக்குத் தெரியாது. என் பொழுது என்னவாயிற்று என்றும் நான் உணரவில்லை.

எப்போதோ நான் மீண்டும் ஒரு சமநிலையை அடைந்தேன். அப்போதும் அச்சொல்லை பொருள் கொள்ள முயலாமல் அப்படியே வைத்திருந்தேன். எப்போதும் எவரிடமும் காட்ட முடியாத வைரம் ஒன்றை பொதிந்து வைத்திருக்கும் பிச்சைக்காரன் போல. தனிமையில் அதை எடுத்துப்பார்த்து அதன் ஒளியை என் முகத்தில் வாங்கி புன்னகைத்துக் கொண்டேன். மீண்டும் பொதிந்து பொதிந்து பொதிந்து ஆடைகளுக்குள்  உடலுக்குள் எங்கோ வைத்துக்கொண்டேன்.

அச்சொல் அவ்வாறு முற்றிலும் மறைந்து இல்லையென்றே ஆனபின் எப்போதோ அது வேறு ஒரு சொல்லுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இரண்டு பனித்துளிகள், இரண்டு வைரங்கள், ஒரே பார்வையென ஆகும் இரண்டு கண்கள். நான் குனிந்து அந்த இரண்டாவது சொல்லைப் பார்த்தேன். எப்படி வந்து அதனுடன் இணைந்துகொண்டது அது? அதன் பிரதிபலிப்புதானா இது? படிகக்கல்லின்  அருகே விழுந்து கிடக்கும் அதன் ஒளி போல இது அதன் நீட்சியா?

ப்ரு. ப்ரு என்னும் ஒலி. ப்ரு என்றொரு சொல் இதன் பொருள் என்ன? இதன் ஆழத்தில் முளைக்கும் விழைவுடன் இருக்கும் அந்த முளை என்ன? நேர்நிலையான ஒன்று. pro ? முன்னரே இருப்பது pre. ப்ரு. ப்ரு, ப்ர… பரந்தது. பர. திரண்டது புரு… பின்னர் அவ்விரு சொற்களையும் கொண்டு நான் அலைந்தேன். ஒரு நாள் என்பது எத்தனை நீளம். ஒருவன் தன்னுள் மட்டுமே முழுமையாக வாழ்வான் என்றால் ஆண்டுகளே கணங்களாகலாம். கணங்கள் ஆண்டுகளாகலாம். அவன் வாழ்வதும் உணர்வதும்தான் காலம் என்பது.

பின்னர் ஒரு கணத்தில் பைத்தான் நகரின் பேருந்து நிலையம் அருகே நடுத்தெருவில் அவ்விரு சொற்களும் என்னில் இணைய என் கைத்தடியும் சட்டியும் நடுநடுங்க நின்றிருந்தேன். அங்கேயே தரையில் அமர்ந்தேன். என் உடலில் வலிப்பு உருவாகியது. யாரோ என்னை இழுத்து சாலையோரமாகப் போட்டு பேருந்துகள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். என் உடல் வலிப்பு வந்து துள்ளிக்கொண்டிருந்தது. பின்னர் எச்சில் வழிய அடங்கியது. எப்போதும் வலிப்பு அடங்கும்போது உள்ளம் துல்லியமாக இருக்கிறது. எல்லா சிந்தனைகளும் உணர்வுகளும் தேங்கி கல்லாகிவிடுகின்றன. அலைகளெல்லாம் ஒளி ஊடுருவும் படிகவெளிபோல மாறிவிடுகின்றன.

நான் மல்லாந்து வானைப்பார்த்தபடி படுத்துக்கிடந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் முகத்தைப் பார்த்தவர்கள் வியந்து சுற்றிலும் நின்று பேசிக்கொள்ளும் அதிர்வுகள் எனக்கு உடல் தோல் வழியாகவே வந்துகொண்டிருந்தன. என் முகம் தெய்வத்தைக் கண்டது போல் மலர்ந்திருக்கக் கூடும். வானில் இருந்து இறங்கி பத்து திசைகளிலும் சூழ்ந்திருக்கும் பேரிசை ஒன்றில் முற்றிலும் ஆழ்ந்து மயங்கியிருக்கும் கந்தர்வன் சிலை போல் இருந்திருக்கக் கூடும். திகட்டாத இனிப்பை அள்ளி அள்ளித் தின்றுகொண்டிருக்கும் குழந்தையின் முகம் என பொலிருந்திருக்கக் கூடும்.

இணையாத சொல் முழுக்க முழுக்க அர்த்தம் அற்றது. அல்லது நாமறியும் அர்த்தங்கள் ஏதும் அற்றது. அல்லது ஒவ்வொரு சொல்லும் முழுப்பொருளையும் கொண்டது என்பதனால் தனிப்பொருள் என ஒன்று இல்லாதது. சொற்களின் இணைவு வழியாகவே இப்பிரபஞ்சத்தை படைத்த அது, அல்லது இப்பிரபஞ்சமென ஆகி நின்றிருக்கும் அது, இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. சொற்களின் இணைவே லீலை. அதற்கு வேறு வழியில்லை. இப்பிரபஞ்சம் அதன் முடிவற்ற தன்வெளிப்பாடென்றால் அதில் ஒருகணம் ஒரு சொல். அது முடிவற்ற காலம் கொண்டது. அதன் காலம் நீள்வதும் அகல்வதுமாகும். நீள்வதிலும் அகல்வதிலும் முடிவின்மை. அதற்கு கணம் தோறும் கணங்கள் கோடி. எனவே முடிவற்ற கோடியால் முடிவற்ற கோடியைப் பெருக்கி உருவாகி முடிவின்மையில் கலந்து உருவாகும் முடிவில்லாத கணங்கள். முடிவில்லாத சொற்கள்.

ஆயினும் ஒரு சொல் இன்னொன்றுடன் முற்றிலும் தொடர்பற்றது. ஒன்று இன்னொன்றை எவ்வகையிலும் அறியாததும்கூட. ஒவ்வொரு கணத்திலும் ஒரு முழுக்காலம், முழு வெளி. ஒவ்வொரு காலவெளியிலும் முற்றிலும் புதிய ஒரு முதற்பொருள். சொற்கள் இணைவது என் அறிவென்னும் இக்கணத்தில் மட்டுமே. சொற்கள் முழுமையாகவும் என்றென்றைக்குமாகவும் இணைய முடியாது. அவை ஒன்றை ஒன்றை தொட்டுக்கொள்ளலாம். ஒன்றின் மேல் ஒன்று படியலாம். ஒன்றை ஒன்று இணைத்துக்கொண்டு பிறிதொன்றை நோக்கிச் செல்லலாம். இணைந்து இணைந்து அவை விளையாடும் முடிவில்லாத விளையாட்டினூடாக ஒற்றைப் பெருஞ்சொல்லென திரளவும் திரளலாம்.

சொல்லிணைவை வகுக்கவே மொழியிலக்கணம் எப்போதும் முயன்று வருகிறது. ஜைமினியை தொடரும் பூர்வமீமாம்சகர்களின் வியாகரண மரபு என்பது சொல்லை அதன் இணைவுச் சாத்தியங்களைக் கொண்டு மட்டும் வகுப்பதுதான். ஆனால் சொல்லிணைவை நிலையாகவும் முழுமையாகவும்  வகுத்துவிடவே முடியாதென்று ஒவ்வொரு கணமும் அது கண்டடைகிறது. ஆகவே உறுதியான ஒன்றை நம்பி இயலும் குறைந்தபட்ச வரையறை ஒன்றை அது உருவாக்கிக்கொள்கிறது. உறுதியானது என்பது இங்கு வெளியே திகழும் பருப்பொருள். அதிலிருந்து வரும் புலனறிதல். புலன் அறிதலில் இருந்து வரும் தர்க்கம்.  தர்க்கத்திலிருந்து வரும் தொடர்புறுத்தல். எல்லா சொல்லிணைவு இலக்கணங்களும் தொடர்புறுத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவானவைதான்.

ஆகவே எல்லாச் சொல்லிணக்கங்களும் சொல்லின் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவைதான். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உண்டு என்றால் அப்போதே இலக்கணம் இல்லை என ஆகிவிடுகிறது. இவ்வாறாகத்தான் இச்சொல் இன்னொன்றுடன் இணையும் என்றால் மட்டுமே அது உன்னருகே நின்றிருக்கும் இன்னொருவருக்கு புரியும் என்று இலக்கணம் சொல்கிறது. அதை நம்பும் பல்லாயிரம் கோடி சாமானியர்கள் அன்றாட வாழ்க்கையில் கோடு வழியே வழியும் நீர்போல அதில் ஒழுகி நகர்கிறார்கள். ஆனால் கவிஞன் புறப்பொருளில், புலனறிவில், தர்க்கத்தில் திகழ்பவன் அல்ல. அதற்கப்பால் ஒன்று அவனிலிருந்து வெட்டவெளி நோக்கி கை நீட்டுகிறது. அவனருகே நின்றிருக்கும் ஒருவனிடம் அது அனைத்து சொற்களையும் கடந்து தொடர்புறுத்துகிறது. ஆகவே சொல்லிணைவு இலக்கணத்தை அவன் மீறிக்கொண்டே இருக்கிறான். தூளித்தொட்டிலில் இருந்து கையையோ காலையோ வெளியே விட்ட குழந்தையே கவிஞன்.

கவிதை என்பதை இவ்வாறு வரையறையறுப்பேன். அறியப்பட்ட சொல்லிணைவு. இலக்கணங்களையும் சாத்தியக்கூறுகளையும் கடந்து நிகழும் ஒரு புதிய சொல்லிணைவு. அதற்கப்பால் ஒன்றுமில்லை. அச்சொல்லிணைவு அதுவரை இருந்த அர்த்தங்களை சிதைத்து பிறிதொன்றை உருவாக்குகிறது. அதுவரை இல்லாத ஒன்றை கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. புதுச்சொல்லிணைவு உருவாக்கும் புதிய பொருள்கொள்ளலின் சாத்தியத்தை மட்டுமே கவிஞன் உருவாக்க முடியும். அவன் பொருளை உருவாக்க முடியாது. பொருள் அவனுக்குச் சலிப்பூட்டுவது. ஏனென்றால் அது இங்கே, இப்போது என நிகழ்வது.

சொல் ஒரு பிரபஞ்சம் என்பதனால்தான் கவிஞன் படைப்பவன் என்றும், கடவுளுக்கு மறுவடிவம் என்றும் கருதப்படுகிறான். இச்சொல் இவ்வாறுதான் இணையும் என்பவன் மொழியை அறிவது ஏற்கனவே அவன் அறிந்த ஒன்றாக மட்டுமே. இவ்வாறு இங்கு நிகழும் என்றால் நிகழட்டும், இது இனி இவ்வாறே ஆகுமென்றால் ஆகட்டும் என்றே கவிஞன் அதைக் கடந்து செல்கிறான். இரு சொற்கள் இணைய முடியுமென்பதே ஓசைகளின் பெருவெளிக்கு அடியில் ஒன்று உள்ளது என்பதற்கான ஆதாரம். இணைவு எதுவும் இணைந்திணைந்து மேலே செல்லும். ஒன்றென்றேயாகியும் செல்லும். சரிந்து செல்லும் எந்த பரப்பும் கூர்மையைத்தான் சென்றடையும்.

இச்சொற்கள் இணைகின்றன. இணைந்து இன்னொன்றாகின்றன. சொல் இங்கு பிறந்துள்ளது. வியனுருவ ஆணும் பெண்ணும் முயங்குகின்றனர். ப்ரு, ப்ர, பர… பரத்தல், பரவுதல், பரு. எத்தனை சொற்களாக எந்தெந்த மொழிகளில் இது உருமாறியுள்ளது. த்வி, த்வ. பரவும் இரண்டு. இணையும் இரண்டு. புரக்கும் இரண்டு. அச்சொல்லை அப்போது பிறந்த குழந்தையை கையில் எடுக்கும் நடுக்கத்துடனும் பரவசத்துடனும் எடுத்து அதைப்பார்த்து நான் சொன்னேன். “நிலம்! நிலம்!”

நான் கானபூதியின் முன் அமர்ந்தபோது மெல்லிய புன்னகையுடன் இருந்தேன். நிழல்கள் என்னை திகைத்த பெரிய விழிகளுடன் பார்த்தன. நாகங்கள் அசைவிழந்து நின்றன. ஆபிசாரகன் கூட இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி என்னை நோக்கி அமர்ந்திருந்தான்.

“அழிவற்றவனே, முடிவிலாக் கதைகள் கொண்டவனே, உன் மொழிக்கும் என் மொழிக்கும் இடையேயான பாலம் ஒரு சொல். ப்ருத்வி” என்று நான் சொன்னேன். “அது அன்னையுடன் குழந்தையை இணைக்கும் தொப்புள் சரடு என்றும் நினைக்கிறேன்.”

இடக்கையை விரித்து தூக்கி கானபூதி சொன்னது. “ஆமாம், நீ ஜெயித்து விட்டாய்”

நிழல்கள் என்னை பாய்ந்து வந்து தழுவிக்கொண்டன. சக்ரவாகியும் சூக்ஷ்மதருவும் இருபக்கமும் என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தன.

“எங்கள் மொழியை நீ இனி புரிந்துகொள்ள முடியும்” என்று கானபூதி சொன்னது. “நீண்டநாட்களுக்கு முன்பு அதர்வன் என்னும் வேதமுனிவர் நான் சொன்ன கதையில் இருந்த அந்தச் சொல்லில் இருந்துதான் அறியவேண்டிய அனைத்தையும் அறியத் தொடங்கினார். இங்கிருந்து அந்தச் சொல்லுடன்தான் அவர் கிளம்பிச் சென்றார். அந்தச் சொல் முளைத்த சிறுமுளை என ஒரு வரியை அடைந்தார். அதர்வம் என அது பெருகியது. அதிலிருந்து ரிக் உருவாகியது. ரிக் சாமம் ஆகியது. சாமம் யஜூர் ஆகியது. பிராமணங்களும் ஆரண்யகங்களும் ஆகியது. சூத்திரங்களும் உபநிஷதங்களும் ஆகியது.”

கைகளைக் கூப்பியபடி நான் அமர்ந்திருந்தேன். என் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

“வண்டல் படிந்த கோதாவரியின் மண்ணில் இருந்து உருவான அந்த வரி இது. ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ அதுவே வேதங்களின் தொடக்கமும் மையமும் சாரமும். இப்புவி ஓர் அன்னை, நான் நிலத்தின் மகன்” என்றது கானபூதி.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:33

Hope and despair

Our society is spiritually void now. Do you believe the small number of people you are training can make any change?

Hope and despair

வெறுப்புணர்ச்சி,தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை பற்றி அருமையாக விளக்கினீர்கள்.இவை எல்லாம் அலைகடல் போல அலைகள் வந்த வண்ணம் இருக்கும்.உண்மையாக வாழ்பவன் அலையின் திசையை அறிந்து அலையின் திசையை தனக்கு சாதகமாக பாய்மரக் கப்பலை திருப்பி துடுப்பு போட்டு தான் அடைய நினைத்த கரையை சென்றடைய வேண்டும்

வெறுப்பு, கடிதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:30

May 20, 2025

அஞ்சலி: மித்ரன் காட்சன்

தினத்தந்தியில் செய்தி வந்திருக்கிறது, நான் கவனிக்கவில்லை. காட்சன் எனக்கே வாட்ஸப் செய்தி அனுப்பியிருந்தார். அதையும் நான் பார்க்கவில்லை. எழுத்தின் அலைக்கழிப்புகள். அதிலும் இப்போதைய நாவல் இருண்ட ஆழங்களை நோக்கிச் செல்வது. எனக்கு அணுக்கமான நண்பர் போதகர் காட்சனின் மகன் மித்ரன் 19 மே 2025 அன்று மறைந்தான்.

காட்சனும் அவருடைய நண்பர்கள் பதினொரு பேரும் சேர்ந்து கோதையாறு அருகே உள்ள கொடுந்துறை என்னும் ஊரில் பழங்குடியினரின் வாழ்விடத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அருகே உள்ள பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்கையில் அந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து காட்சனின் மகன் மித்ரனும், இன்னொரு சிறுவனும் காயமடைந்தனர். மித்ரன் அங்கேயே உயிரிழந்தான்.

மித்ரன் மும்பையில் ஏழாம் வகுப்பு படித்துவந்தான். போதகர் காட்சன் விடுமுறைக்காக நாகர்கோயில் வந்தபோது நிகழ்ந்தது இது.

மித்ரன் ஏழுமாதக் குழந்தையாக காட்சன் என் வீட்டுக்குக் கொண்டுவந்து என் கையில் தந்த நினைவு இன்னும் கைகளில் இருக்கிறது. அவனைக் காணும்போதெல்லாம் தழுவிக்கொள்ளாமல் இருக்க முடிந்ததில்லை. அபாரமான திறமைகள் கொண்ட சிறுவன். பணிவும் சூட்டிகையும் கலந்த சில அரிதான குழந்தைகளுண்டு. அவர்களில் ஒருவன்.

இந்தப் பிரபஞ்சப் பெருக்கில் எதற்கும் எந்த காரணகாரியத் தொடர்பையும் நாம் நம் சிறிய அறிவால் ஊகிக்கவோ விளக்கிக்கொள்ளவோ முடியாது. விளக்கமுயலும் எந்த முயற்சியும் வெறும் ஆணவமே. ஆனால் மிகப்பிரம்மாண்டமான ஒரு காரணகாரியத் தொடர்பு இருந்துகொண்டும்தான் உள்ளது.

நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. அதை அறியமுடியாமை என்று அப்படியே நிராகரித்து நாமறிந்த தர்க்கங்களில் உழல்வது. அதன் அறியமுடியாத பிரம்மாண்டத்தின் முன் பணிவதும், நம்மை ஒப்படைப்பதும். என் வழி இரண்டாவது என இன்று தெளிந்திருக்கிறேன்.

இந்த நாளில் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பறவைகளின் குரல்களைக் கேட்டுக்கொண்டு, மனம் முழுக்கக் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறேன்.  அமைக!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 19:55

தொடர்பு விடுபடுதல்…

என்னுடன் உரையாடலில் இருந்தமை, விலகியமை பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். எல்லாருமே இந்த இரண்டு நிலைகளிலும் மாறிமாறி இருப்பார்கள் என நினைக்கிறேன். கடிதங்கள் வழியாக தொடர் உரையாடலில் இருப்பவர்கள் விலகிச் செல்வதும், மீண்டும் வருவதும் அடிக்கடி நிகழ்கிறது.

விலகிச்செல்வதற்குத் தனிப்பட்ட காரணங்கள் சில இருக்கலாம். நான் பதில் அளிக்காமலிருப்பது, அல்லது தாமதமாவது காரணமாக இருக்கலாம். உண்மையில் இன்று எல்லா கடிதங்களுக்கும் பதிலளிப்பது குறைந்துவிட்டது. காரணம் நான் தொடர்ச்சியாக தத்துவக்கல்வி, இலக்கியவாசிப்பு, எழுத்து என என் மூளையை முழுக்க நிரப்பி வைத்திருக்கிறேன். வயதாகிறது, இனி அதிக நேரமில்லை என்னும் எண்ணமும் உள்ளது.

ஆனால் கடிதங்களுக்கு பதில் இல்லை என்பதனால் எவரையேனும் நான் பொருட்படுத்தவில்லை என்று பொருள் இல்லை. நான் ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்கிறேன், அவற்றைப் பற்றி சிந்திக்கிறேன், அவற்றை எழுதியவர்களுடன் நுட்பமாக உடனிருக்கிறேன். அவை எனக்கு மனிதர்களை அறிய முக்கியமான வாசல்கள். அவர்களுடன் நானும் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

என் அணுகுமுறை ‘பரிவானது’ அல்ல. எனக்கு அது கைவரவில்லை என நினைக்கிறேன். நான் அறிந்தவரை சுந்தர ராமசாமியோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, பி.கே.பாலகிருஷ்ணனோ பரிவானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு விழுமியத்தை, ஒரு கனவை முன்வைத்தார்கள். அதைப் பகிர்ந்துகொள்ளவே முயன்றனர். அதை மட்டுமே அவர்கள் பரிந்து ஊட்டினார்கள். எனக்கும் இன்னும் பலருக்கும். அந்த விழுமியங்கள், கனவுகள் வழியாக தங்களை தொகுத்துக்கொண்டவர்கள் பலர். மீட்டுக்கொண்டவர்கள் பலர். அவர்களின் நினைவில்தான் அந்த ஆசிரியர்கள் பரிவானவர்களாக நீடிக்கிறார்கள்.

அந்த விழுமியத்தையோ கனவையோ எட்டும் ஆர்வமோ முயற்சியோ இல்லாமல் மீண்டும் மீண்டும் வீழ்ச்சி அடைபவர்கள், அதையே சொல்லிப் புலம்புபவர்கள், எப்போதுமே ஒரு தளர்ந்த உளநிலையில் இருப்பவர்கள் உண்டு. அவர்கள் மேல் அந்த ஆசிரியர்களுக்குப் பரிவு ஏதும் இருக்கவில்லை என்று கண்டிருக்கிறேன். எளிதாக அவர்களை அந்த ஆசிரியர்கள் கடந்து சென்றனர்.

உதாரணமாக ஒருவர் ‘என்னால் வாசிக்க முடியவில்லை’ என்று சொன்னால் வாசிப்பதற்கான வழிகளை சொல்லி அவர்களை சு.ரா ஆற்றுப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். அப்படிப் பலர் உண்டு. ஆனால் அவர் சொன்ன எதையுமே செய்து பார்க்காமல் மீண்டும் மீண்டும் தன் சோர்வையே சொல்லிக்கொண்டிருந்த ஒருவரை சுந்தர ராமசாமி மென்மையாக ‘நீங்க ஏன் உங்க சர்ச்சிலே போயி ஃபாதர் கிட்ட பேசக்கூடாது? அவருதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்’ என்று தவிர்ப்பதைக் கண்டேன்.

தமிழிலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்யும் ஒருவரிடம் அந்த வரி சொல்லப்படுவது என்பது மிகக் கடுமையானது. அது அந்தப் பெண்மணிக்கும் புரிந்தது. அவர் முகம் சிவந்தது. அவரை சு.ரா. அவமதித்துவிட்டதாகவே எனக்கும் பட்டது. அப்பெண்மணி பின்னர் சுராவிடம் வரவும் இல்லை. (ஆனால் அவர் பிறகு அதிதீவிர கிறிஸ்தவராக, அசட்டுத்தனமான மதபோதனை செய்பவராக ஆனார். சு.ராவின் கணிப்புதான் சரி என எனக்குத் தெரிந்தது)

நித்ய சைதன்ய யதி அனைவரிடமும் பரிவு காட்டியவர். எவரிடமும். மிகக்கீழ்நிலையில் திளைக்கும் உள்ளம் கொண்டவர்களிடமும். அறிவியக்கம் அவருக்கு முக்கியமே அல்ல. அதுபோல் நான் இருக்கவேண்டும் என விரும்பினேன். என்னால் முடியவில்லை. அதற்கு வேறொரு உளநிலை தேவை. எதனாலும் பாதிக்கப்படாமல் விலகி நின்றிருக்கவேண்டும். நித்யா மிகுந்த பரிவுடன் வெளிப்பட்டார், ஆனால் அவர் பரிவானவரா? அவர் உண்மையில் இங்கிருக்கும் எவரையேனும் எவ்வகையிலேனும் பொருட்படுத்தினாரா?

நான் எனக்கு எழுதப்படும் கடிதங்களில் அறிவார்ந்த தவிப்பும் தேடலும் இருந்தால் அவர்களை என்னவர்களாகக் கொள்கிறேன். வெறுமே வாழ்க்கைப் பிரச்சினைகளை எழுதுபவர்களைக் கூட அன்புடன் தொட்டுக்கொள்கிறேன். தனிமையின் வெளிப்பாடுகளை எழுதுபவர்களுக்குக் கூடுமானவரை அணுக்கமாக இருக்க நினைக்கிறேன். ஆனால் அறிவார்ந்த ஆர்வமே இல்லாத, வெறும் கடிதங்களில் உள்ளம் படிவதில்லை. மேலோட்டமான வம்புகள், சீண்டல்கள், அரட்டைகளில் இருந்து உடனே விலகிவிடுகிறேன்.

என்னிடம் உரையாடுபவர்கள் என் எழுத்துக்களை, பேச்சுக்களை எல்லாம் அவர்களுடனான என் உரையாடலாகவே கொள்ளவேண்டும். அவர்கள் என்னிடம் பேசியவற்றுக்கு நான் அவற்றில் பதில் சொல்லியிருக்கலாம். என்னுள் அந்த பதில் உருவாக சற்று காலம் பிந்தியிருக்கலாம். அந்த பதில் வேறு சிலவற்றுடன் இணைந்து வெளிப்பட்டிருக்கலாம்.

இன்னொரு வகை விலக்கம் என்பது, என்னுடன் உரையாடிக்கொண்டிருப்பவர் தன் உரையாடலை வேறு திசைக்குக் கொண்டு செல்வது. அல்லது தனக்குள் நிகழ்த்த ஆரம்பிப்பது.  அல்லது தானாகவே எழுதவோ வேறெவ்வகையிலாவது வெளிப்படவோ ஆரம்பிப்பது. அதுவும் இயல்பானதுதான். அங்கே ஏதாவது ஒரு புள்ளியில் அசைவின்மை உருவானால், முன்னகரும் வழி மூடி நின்றுவிட்டால் திரும்பி வந்து மீண்டும் அந்த உரையாடலைத் தொடங்கலாம். அதுவும் இயல்பானதே.

அரிதாகச் சிலர் உண்டு. ஆர்வத்துடன் அணுகி வந்து உரையாட முற்படுவார்கள். ஆனால் நான் சொல்லும் ஏதேனும் ஒரு கருத்தால் ‘புண்பட்டு’ விலகிவிடுவார்கள். பிற படைப்பாளிகள் பற்றி ‘அப்டி அவர் சொன்னதோட சப்னு போயிடுச்சு. படிக்கிறத விட்டுட்டேன்’ என்று சொல்பவர்களை அடிக்கடிப் பார்க்கிறேன். என்னைப்பற்றியும் சொல்வார்களாக இருக்கும். இது ஒரு முதிர்ச்சியற்ற நிலை. இப்படிச் சொல்பவருக்கு 35 வயதுக்கும் குறைவு என்றால் அவர் முதிர்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. மேலே என்றால் அவ்வளவுதான், முடிந்த கதை.

ஓர் எழுத்தாளர் நாம் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதையே சொல்லவேண்டும் என்றும், நாம் ஏற்கனவே நம்புவதையே சொல்லவேண்டும் என்றும் எதிர்பார்ப்பதைப் போல அசட்டுத்தனம் வேறில்லை. நாம் ஓர் எழுத்தாளரை வாசிப்பதே அவருடைய உலகுக்குள் நுழைவதற்காகத்தான். அவரை நம் கட்சியில் சேர்ப்பதற்காக அல்ல. அவருடன் விவாதிப்பதே அவர் சொல்வதை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான். அவரை நோக்கிச் சென்றுதான் அவரை புரிந்துகொள்கிறோம்.

நாம் ஏற்கனவே பூரணமான ஞானத்தையும் உலகப்புரிதலையும் அடைந்துவிட்டோம் என்றும், அதனுடன் ஒத்துப்போகும் நபர்களே நமக்குத் தேவை என நம்புகிறவர்கள் முகநூலில்தான் அதைத் தேடவேண்டும். இலக்கியம் என்பது தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே இருப்பவர்களுக்கான களம். வளர்ச்சி என்பது ஒவ்வொரு கணமும் தான் இருந்துகொண்டிருக்கும் நிலையை நிராகரித்து முன்னகர்வதுதான்.

ஓர் எழுத்தாளர் நம் சாதியைப் பற்றி விமர்சனம் செய்தால் நாம் புண்படுகிறோம் என்றால், நாம் கொண்டாடும் மனிதர்களை விமர்சனம் செய்தால் நாம் சீற்றம் அடைகிறோம் என்றால், நாம் சிந்தனைக்குள் நுழைவதற்கான தகுதியையே அடையவில்லை என்றே பொருள். கருத்துக்களை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்முடைய எளிய சுய அடையாளங்களே நமக்கு பெரிதாக உள்ளன.

எந்த ஒரு புதிய கருத்தும் நமக்கு ஒரு அதிர்வையே அளிக்கும். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்துநிலைகளை அது உலுக்கும். சிலசமயம் நம் அடித்தளத்தையே உடைத்துச் சரித்துவிடும். புதிய சிந்தனை என்பது நமக்கு உடனடியாகப் புரியாமலிருக்கலாம். நம் தர்க்கத்திற்கு ஒத்துவராமல் இருக்கலாம். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்துக்களுடன் பொருந்தாமல் இருக்கலாம். அது நம்மை சீண்டி கொந்தளிக்கச் செய்யலாம். பொறுமையிழக்க வைக்கலாம். எரிச்சல் மூட்டலாம், ஒவ்வாமையை அளிக்கலாம். ஆங்கிலத்தில் rupture என்று இந்நிலையை பல ஆசிரியர்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

சிந்தனையில் ஆர்வமுள்ளவர், கற்கவிரும்புபவர் அச்சிந்தனைகளை, அல்லது அவற்றைச் சொல்பவரை உடனடியாக எதிர்க்க மாட்டார். வெறுப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார். தன் அகக்கொந்தளிப்பினூடாக அக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள, தன்னை அதை நோக்கி நகர்த்திக்கொள்ள, தர்க்கபூர்வமாக அதை அணுக மட்டுமே முயல்வார்.

தன் தரப்பை கல்லாக உறையவைத்துக்கொண்டு, அதை எந்நிலையிலும் உடையாமல் பேணிக்கொண்டு, சிந்தனையில் செயல்படுபவர் உண்மையில் சிந்தனைக்கு எதிரானவர். அவர் சிந்தனைக் களத்தில் இல்லை, அவர் நிலைகொண்டுவிட்ட சிந்தனைகளின் விசுவாசி மட்டுமே. மதம், அரசியல், சாதி போன்ற எவ்வளவோ காரணங்களுக்காக இப்படி கல்லான சிந்தனையைக் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் என்னிடம் அணுகினால் வந்த விரைவிலேயே திரும்பிச் செல்வதை கடந்த முப்பதாண்டுகளாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது அவர்களின் பிரச்சினை, நான் செய்வதற்கொன்றும் இல்லை.

‘ஜெயமோகனின் கருத்துகள் மேல் எனக்குக் கடுமையான முரண்பாடுகள் உண்டு, ஆனால்…’ என்று சொல்லும் இளைஞர்களை நான் கொஞ்சம் ஒவ்வாமையுடன் விலக்கி நிறுத்துவது வழக்கம். ஏனென்றால் கற்றுக்கொண்டு விரியவேண்டிய வயதில், எதையும் முழுமையாகவும் விரிவாகவும் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, உறுதியான நிலைபாடுகளை எடுத்துக்கொண்டும் அதை அறிவித்துக்கொண்டும் செயல்படுபவர்கள் சிந்தனைக்கும் கலைக்கும் எதிரான உளநிலை கொண்டவர்கள். அவர்களில் நூற்றுக்கு ஒருவரே ஏதேனும் வகையில் தன்னை உடைத்துக்கொண்டு உண்மையான சிந்தனை அல்லது கலை நோக்கி வரமுடியும். அந்த ஒருவருக்காக அந்த நூறுபேரிடமும் நான் நேரம் செலவிட முடியாது.

இறுதியாக ஒன்று உண்டு. தனக்கு என் மனதில், அல்லது என் சூழலில் முக்கியத்துவம் இல்லையோ என்னும் எண்ணம் கொண்டு விலகுபவர்களும் சிலர் உண்டு. அது ஒரு தாழ்வுணர்ச்சி மட்டுமே. உண்மையான சிந்தனையார்வம் உடையவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா என்பது எவ்வகையிலும் முக்கியமானதாகத் தோன்றாது. எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை.

ஏனென்றால் சிந்தனையார்வம் உடையவர் ‘தான்’ என நினைப்பது தன் தனிப்பட்ட ஆளுமையை அல்ல. தன் சிந்தனைகளைத்தான். அந்த சிந்தனைகள் மதிக்கப்படவேண்டும் என அவர் எண்ணுவதிலை, அவை ஏற்கப்படவேண்டும் என்றே எண்ணுவார். அவற்றை தீவிரமாக முன்வைப்பார். பிறரது எதிர்ப்பும் அலட்சியமும் அவரை இன்னும் தீவிரமாக ஆக்கும். தன் தரப்பை அவர் மேலும் மேலும் செறிவாக்கிக் கொள்ளவே முயல்வார்.

உண்மையில் சிந்தனைக் களம் ஒரு போர்நிலம். அது திருமணவீடு அல்ல, உங்களை மதிப்பதற்கு. உங்கள் ஆயுதங்களுடன் நுழைந்து போரிட்டு வென்று நீங்கள் அடையும் இடம்தான் உங்களுக்கு. உங்களை வெல்ல எப்போதும் எதிர்த்தரப்பு இருந்துகொண்டும் இருக்கும். அதனுடன் விவாதித்துத்தான் நாம் கற்றுக்கொள்கிறோம். அதனுடன் போராடித்தான் நாம் ஆற்றல்கொண்டவர் ஆகிறோம். நான் என் இளமையில் என்னை எந்தெந்த ஆளுமைகள் மதித்தார்கள் என்று கணக்கிட்டதே இல்லை. என் கருத்துலகை முழுமையாக்கிக் கொள்ள மட்டுமே முயன்றேன். அதற்கான தீவிரமான செயல்பாட்டில் இருந்தேன். செயல்பாடு வழியாகவே நமக்கான அடையாளம் உருவாகி வரும். அதுவே மதிப்பு பெறும்.

என்னுடன் ஒருவர் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் ஏன் என அவர்தான் நுணுகி ஆராயவேண்டும். அது அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதற்கான சான்று. அவர் உள்நோக்கிய பயணத்தால் அந்த விலக்கத்தை அடைந்தார் என்றால் அது மிக இயல்பானது, அவர் மீண்டும் வருவதும் இயல்பே. பிற காரணங்கள் என்றால் அவர்தான் அவற்றை ஆராய்ந்து தெளியவேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:35

காவியம் – 30

சாதவாகனர் நாணயம், பொமு 2, ஜூனார் அருங்காட்சியகம்

”இந்த வாய்ப்பை நீ இறுதியானது என்றே கொள்ளலாம், கானபூதியிடமிருந்து இனியொரு சலுகை உனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது.

அதன் அருகே உடன் வந்த இன்னொரு சூக்ஷ்மதரு என்னும் நிழல். “நீ தோற்பாய் என்று உறுதி இருப்பதனால்தான் கானபூதி இந்த வாய்ப்பை உனக்கு அளிக்கிறது. இப்படி எத்தனையோ பேரை அது தோற்கடித்திருக்கிறது.”

“தோற்றவர்கள் என்ன ஆவார்கள்? அவர்கள் பிசாசுகளால் உண்ணப்படுவார்கள் என்று கதைகள் சொல்கின்றன” என்றேன்.

“அறிவின்மை” என்று சுபர்ணி என்னும் நிழல் சொன்னது. “நிழல்களாகிய நாங்கள் உங்கள் பருப்பொருள் உலகிலேயே இல்லை. உங்கள் உடல்கள் எங்களுக்கு உண்மையில் கண்ணுக்கே படுவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவை இல்லாதவைதான். உங்கள் உடல்கள் வழியாக நாங்கள் அப்பால் கடந்துசென்றால் அதை நீங்கள் அறியக்கூட முடியாது.”

சூக்ஷ்மதரு “நாங்கள் உங்கள் உயிரை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…” என்றது.

“எப்படி?” என்றேன்.

“அதை உனக்கு விளக்கவே முடியாது. நீ உடலுடன் இருக்கும் வரை உன்னால் எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாது.”

“நீ விரைவில் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வாய்” என்று ஆபிசாரன் என்னும் நிழல் இளித்தபடி சொன்னது.

நான் நிழல்களுடன் நன்கு பழகிவிட்டிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு குணம் கொண்டிருந்தன. ஆபிசாரனைப்போல எரிச்சலூட்டும் சில நிழல்களும் இருந்தன.

“தோற்றவர்களிடம் நாங்கள் கேள்விகளைத்தான் மிச்சம் வைக்கிறோம். அந்தக் கேள்வி அவர்களை வாழவிடாது. அதைப்பற்றி யோசித்து யோசித்து அவர்கள் அனைத்தில் இருந்தும் விலகுவார்கள். அனைவரிடமிருந்தும் அந்நியப்படுவார்கள். உண்ணாமல் உறங்காமல் உடல்நலிவார்கள். அவர்கள் இறந்தபின்னரும் அந்தக் கேள்வி எஞ்சுவதனால் இங்கேயே நிழல்களாக ஆகிவிடுவார்கள்.”

மீண்டும் சக்ரவாகி சொன்னது. “இன்று உன்னிடம் கானபூதி என்ன கேட்கப்போகிறது என்று என்னால் சொல்ல முடியும்.”

“என்ன?”

“காவியங்களில் உள்ள ஒரு கேள்வியை… ஆனால் அந்த விடை காவியங்களில் இருக்காது. நீ காவியங்களை துழாவித் துழாவி சலிப்பாய். காவியங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேடி எடுத்துச் சொன்னால் தோற்றுவிடுவாய்.”

“நாம் ஏன் இப்போதே பேசவேண்டும்? கானபூதி என்னிடம் கேட்கும் வரை நான் காத்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

இரவு கனத்து வந்தது. வானில் நட்சத்திரங்கள் செறிந்துகொண்டே இருந்தன. காற்றில் நாகபடங்களாக தங்கள் அசல் உருவுக்கு மாறிவிட்டிருந்த மரங்களின் இலைகள் அசைந்தன. நாங்கள் கானபூதிக்காகக் காத்திருந்தோம்.

“அது கோதாவரியின் மேல் பறந்தலைய விரும்புவது. பகலில் பருந்தாகவும், இரவில் வௌவாலாகவும்” என்று சக்ரவாகி சொன்னது. “கோதாவரி இப்போதிருப்பதை விட நூறு மடங்கு பெரிய நீர்ப்பெருக்காக இருப்பதை அது பார்த்திருக்கிறது.”

மரத்தின் உருவம் மெல்லத்திரண்டு கானபூதி எழுந்து வந்தது. அதன் கண்கள் என்னை நோக்கிப் புன்னகைத்தன. என்னருகே நின்ற நிழல்களை நோக்கியபின் என்னிடம் “வருக” என்றது. “நாம் இன்று நம் ஆடலை மீண்டும் தொடங்கவிருக்கிறோம் அல்லவா?”

“ஆம்”

“நான் உன்னை மீண்டும் விளையாட அழைத்தது நீ உன்னை மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவே” என்று கானபூதி சொன்னது. “ஆகவே இந்த ஆட்டம் அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை.”

“ஆம், எனக்குத் தெரியும்.”

“நான் இருக்கும் இந்த நகரத்தைப் பற்றி உனக்குச் சொல்லியாகவேண்டும்” என்று கானபூதி சொன்னது. கைகள் இரண்டையும் மண்ணில் பதியவைத்தபின் சொல்லத் தொடங்கியது. ”இங்கிருந்து வடமேற்கே விந்திய மலையடுக்குகள் உள்ளன. திரயம்பகேஸ்வர் மலைநிலத்தில் இருந்து கோதாவரி பெருகி இறங்குகிறது. அது மலைச்சரிவுகளில் இருந்து சமநிலத்தை அடைந்து விரைவை இழந்து அகன்று செல்லத் தொடங்கும் இடத்தில் உள்ளது இந்நகரம்.”

இப்பகுதி முன்பு அடர்ந்த பெருங்காடாக இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை கோதாவரி பெருகி பாம்பின் பத்தி போல அகன்று இப்பகுதியை முழுமையாக நிறைக்கும். காடு நீரில் பாதிமூழ்கி நின்றிருக்கும். வண்டலைப் படியச்செய்தபடி நீர் வடிந்ததும் புதர்களும் கொடிகளும் இடைவெளியில்லாமல் நுரைபோல முளைத்துப் பெருகி மேலெழும். இங்கு வாழ்ந்த எல்லா விலங்குகளும் மரங்களில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பக் கற்றுக்கொண்டிருந்தன. மண்புழுக்கள் கூட.

வெள்ளத்திற்குப் பிந்தைய சேற்றுநிலம் கோதாவரியின் கருப்பையின் நிணம் போன்றது. கல்லையும் முளைக்கச் செய்யும் உயிர்நிறைந்தது அது என்று பின்னர் கவிஞர்கள் பாடினார்கள். கோதாவரி தானே வண்டலைக் கொண்டு நிறைத்து நிறைத்து கரையை மேடாக்கியது. தானே ஓடி ஓடி தன் வழியை ஆழமாக்கியது. நிலம் மேடானபோது இங்கே முதலில் வேடர்கள் குடிவந்தனர். வெள்ளமில்லா காலங்களில் வேட்டையாட வந்து இந்நிலத்தை நன்கறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் சிற்றூர்கள் இப்பகுதியெங்கும் முளைத்தன. பின்னர் அவ்வூர்கள் இணைந்து ஒரு சமூகம் ஆயின.

வேட்டையர்களிடமிருந்து வேளாண்மை செய்பவர்கள் உருவானார்கள். விதைகளை சேர்த்து வைத்து விதைத்தாலே அறுவடை செய்யலாம் என்னும் அளவுக்கு வளம் மிக்க நிலம் இது. மிக விரைவிலேயே இது விளைநிலங்களாகியது. வேளாண்மக்களின் ஊர்கள் உருவாயின. சந்தைகளும் சாலைகளும் பிறந்தன. ஊர்த்தலைவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் இணைந்து தங்கள் தலைவரை தெரிவுசெய்தனர். அவன் இப்பகுதியின் ஆட்சியாளனாக ஆனான்.

உங்கள் நூல்களில் மகாபாரதத்தின் வனபர்வத்தில் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பிரயாகை, பிரதிஷ்டானம், காம்பில்யம், அஸ்வதரம், போகவதி ஆகியவை நீராடியாக வேண்டிய புனிதத்தலங்கள் என்கிறது. பாணினியின் இலக்கணநூலான அஷ்டாத்யாயியில் இந்நகரை பற்றிய குறிப்பு உள்ளது. ஆனால் இந்நகர் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துகொண்டிருக்கிறது. இந்நூலைப் பற்றி உங்கள் நூல்கள் சொல்வதை உனக்கு நினைவூட்டவே சொல்கிறேன்.

இது அசுரர்களின் நிலம், இங்கே உருவானவை அசுரர்களின் அரசுகள். துவஸ்த மனுவின் மகனும், அசுரர் வம்சத்து அரசனுமான சுத்யும்னனால் இந்நகரம் உருவாக்கப்பட்டது. நூற்றெட்டு அசுர குலங்களைச் சேர்ந்த்த நாற்பத்து நாலாயிரம் பேர் இந்நகரை உருவாக்குவதற்காக உழைத்தார்கள். மலைகளில் இருந்து வெட்டி எடுத்த மரங்களையும், கற்களையும் கோதாவரியின் தெப்பங்கள் வழியாகக் கொண்டுவந்து இங்கே அடுக்கி இதை கட்டினார்கள். பன்னிரண்டாயிரம் அசுரச் சிற்பிகள் அசுர சிற்பியான மயனின் வழிவந்த மிருண்மயனின் தலைமையில் இங்கே பணியாற்றினார்கள்.

இதைக் கட்டும்போது ஒவ்வொருவருக்கும் சந்தேகமிருந்தது, இந்நகர் நிலைக்குமா? ஏனென்றால் இதற்கு முன் இவ்வாறு கட்டப்பட்டு வானுயர்ந்து எழுந்த ஏராளமான அசுரப்பெருநகரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டிருந்தன. ஆகவே சுத்யும்னன் தன் மூதாதையான  துவஸ்த மனுவை நோக்கித் தவமிருந்தான். பதினெட்டுநாள் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் கோதாவரிக்கரையில் அவன் செய்த தவத்தின் முடிவில் துவஸ்த மனு தோன்றினார். அவன் அவரிடம் இந்நகர் ஒருபோதும் அழியக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான். அவர் “இந்நகர் வெல்லப்படலாம், அழிக்கப்படலாம், ஆனால் அருகம்புல் வேர் போல எப்போதும் எஞ்சியிருக்கும், ஒருபோதும் முழுமையாக அழியாது” என்று வரம் கொடுத்தார்.

அந்தச் சொல்லை ஏற்று இந்நகரை கட்டி முடித்தான் சுத்யும்னன். என்றென்றும் நிலைபெறும் நகர் என்னும் பொருளில் இந்நகருக்கு பிரதிஷ்டானபுரி என்று சுத்யும்னனின் ஆசிரியரும் பிரஹஸ்பதி முனிவரின் வழிவந்தவரும் சாங்கிய மகாதரிசனத்தில் ஞானியுமான பரமேஷ்டி பெயரிட்டார். ஏனென்றால் இங்கே ஏற்கனவே சுப்பிரதிஷ்டானம் என்னும் அசுரர்களின் தலைநகர் இருந்தது. அது இடிந்து அழிந்து மண்ணுக்குள் சென்றுவிட்டது. அதன் மீதுதான் இந்தப் புதிய நகரம் கட்டப்பட்டது. இங்கே அடித்தளம் போடுவதற்காக அகழ்ந்தபோதெல்லாம் பழைய நகரங்களின் இடிபாடுகள் கிடைத்தன.

பிரதிஷ்டானபுரி அழியாதவரம் கொண்டது என்ற பேச்சே அந்நகர் வளர்வதற்குக் காரணமாகியது. பல திசைகளில் இருந்தும் அசுர வம்சங்களைச் சேர்ந்தவர்களும் நிஷாதர்களும் நாடோடிகளும் அங்கே வந்துசேர்ந்து கொண்டே இருந்தனர். மழைக்கால ஏரிபோல நகர் பெருகிக்கொண்டே இருந்தது என்று பிரதிஷ்டான வைபவம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும் இந்நகரம் அழியும் என்று சிலர் சொன்னார்கள். “மாமரம் பூப்பதும் அசுரநகர் பொலிவதும் ஒன்றுதான்” என்று ஒரு பிராமணக் கவிஞர் பாடிய வரியை எவராவது எப்போதாவது சொன்னார்கள்.

அந்த அச்சத்திற்குக் காரணம் நினைவுகளில் நீடித்த அழிந்த நகரங்கள். கரையான் புற்றுகளில் இருந்து மண்ணை எடுத்துக் குழைத்து மாபெரும் கரையான் புற்றுகளின் அதே வடிவில் கட்டப்பட்ட வால்மீகபௌமா என்னும் தொல்நகர்தான் துவஸ்தமனுவின் மைந்தனாகிய விருத்திரனால் கட்டப்பட்ட முதல் தலைநகர். துவஸ்த மனுவின் முதல் மைந்தராகிய விஸ்வரூபன் இந்திரனால் கொல்லப்பட்டு விஸ்வபிந்து என்ற பெயருடைய அவனுடைய மலைநகரும் அழிக்கப்பட்ட பின் அவர் தன் இளையமைந்தன் விருத்திரனுக்கு எந்த ஆயுதத்தாலும் வெல்லமுடியாத நகர் ஒன்றைப் படைக்க ஆணையிட்டார். விருத்திரன் அழியாதது எது என்று தன் குலப்பூசகரிடம் கேட்டான். அழிவற்றது சிதல்புற்று என்று அவர் சொன்னார். அதன்படியே அந்நகர் கட்டப்பட்டது. வால்மீகபௌமா அந்தப் பெருநகர் புற்று போல ஒவ்வொரு நாளும் தானாகவே வளர்ந்தது. அவ்வளர்ச்சியை அந்தணரும் ஷத்ரியரும் அஞ்சினர். அவர்கள் வேள்விசெய்து இந்திரனிடம் மன்றாடினர். அந்நகரை  இந்திரனின் வேண்டுதலின்படி பெருகிவந்த கடல் அலைகள் அழித்தன.

அதன் பின் எத்தனையோ நகரங்கள் இந்திரனாலும் அவன் வழிபட்ட தெய்வங்களாலும் அழிக்கப்பட்டன. களிமண்ணாலான மிருத்திகாவதி, நர்மதை நதிக்கரையில் ஹேகயர்கள் அமைத்த பெருநகரமான மாகிஷ்மதி, சூரபத்மன் ஆட்சி செய்த வீரமகேந்திரபுரி, சுமாலியால் கட்டப்பட்டதும் ராவணப்பிரபு ஆட்சிசெய்ததுமான மாநகர் இலங்கை… அவ்வாறு அறிந்தும் அறியப்படாமலும் மறைந்தவை பல ஆயிரம் நகரங்கள் என்று பரமேஷ்டி சொன்னார். அவை உடைந்து விண்ணில் இருந்து உதிர்ந்து சிதறியவை போல அடர்காடுகளுக்குள் சேற்றில் புதைந்தும், தாவரப்பசுமையில் மறைந்தும் கிடக்கின்றன.

பிரதிஷ்டானபுரி அழியவில்லை. சுத்யும்னனின் சோமகுலம் அங்கே வேரூன்றியது. அவன் மகன் புரூரவஸில் இருந்து மன்னர்களின் வரிசை உருவாகிக்கொண்டே இருந்தது. அஸ்மக ஜனபதத்தின் தலைமையிடமாக அது திகழ்ந்தது. பின்னர் மூலகப் பெருங்குடியின் நிலங்களை அது தன்னுள் இணைத்துக்கொண்டது. பெரும்போர்களை அது கண்டது. பலமுறை அதன் கோட்டைகள் உடைக்கப்பட்டன, மாளிகைகள் தீயிடப்பட்டன. அதன் தெருக்களில் பிணங்கள் அழுகி மட்கி எலும்புகளாயின. ஆனால் சிதைவில் இருந்து அது முளைத்துக்கொண்டே இருந்தது.

அந்த நிலைபெற்ற தன்மையின் ரகசியம் பரமேஷ்டியால் சுத்யும்னனுக்கும் அவன் வழிவந்த அரசர்களுக்கும் சொல்லப்பட்டிருந்தது. பரமேஷ்டி சுத்யும்னனிடம் சொன்னார், “நம் மூதாதையரின் நகரங்கள் அழிந்தமைக்கான காரணம் இதுவே. அவர்கள் ஆண்மை நிறைந்தவர்கள், ஆகவே நெகிழ்வு அறியாதவர்கள். நெகிழாதவை உடைய வேண்டியிருக்கும் என்பது பிரபஞ்ச நெறி. ஆண் கூறு புருஷன், பெண்கூறு பிரகிருதி. ஆண்மையும் பெண்மையும் இணையாக இருக்கும் அமைப்பே அழியாதது. ஆண்மை நிலைகொள்ளும் ஆற்றல் என்றால் பெண்மையே மீண்டெழும் விசை. தன்னில் இருந்து தானே முளைத்தெழுவதை எவராலும் அழிக்கமுடியாது.”

பரமேஷ்டி அவருக்கு தொல்முனிவராகிய கபிலர் அளித்த சாங்கிய மந்திரத்தை கற்பித்தார். அதன்படி நூற்றெட்டுநாள் ஊழ்கத்தில் இருந்த சுத்யும்னன் இளா என்னும் பெண்ணாக மாறினான். வளர்பிறையில் ஆண் என்றும் தேய்பிறையில் பெண் என்றும் திகழ்ந்தான் என்று பிரதிஷ்டான வைபவம் என்னும் நூல் சொல்கிறது. சுத்யும்னனை இந்திரனின் படைகள் வானில் இடிமின்னலென திரண்டு வந்து அழித்தன. இந்திரனை வணங்கும் அரசர்கள் வடக்கே உஜ்ஜயினி வழியாக வந்து நகரைக் கைப்பற்றிக்கொண்டார்கள். தோல்வி அடைந்த சுத்யும்னன் காட்டுக்குச் சென்று இளாவாக மாறினான். இளாவின் அழகின்மேல் காதல் கொண்ட தேவனாகிய புதன் அவளுக்கு உதவிசெய்தான். இளா படைதிரட்டி வந்து மீண்டும் நகரை கைப்பற்றினாள்.

ஒவ்வொரு முறை தோற்கடிக்கப்படுகையிலும் த்வஸ்த மனுவின் வம்சத்தில் வந்த மன்னர்கள் உடையவில்லை, நெளிந்து உருமாறினர். ஓடையாகப் பெருகி மீண்டும் வந்தனர். ஆகவே பிரதிஷ்டானபுரி அழியவே இல்லை. அஸ்மாகர்களின் வம்சத்தில் வந்த நான்கு குலங்களைச் சேர்ந்த மன்னர்கள் பிரதிஷ்டானபுரியை ஆட்சி செய்தனர். அவர்களின் காலகட்டத்தில் பிரதிஷ்டானபுரி வெல்லமுடியாத நகர் என்று பெயர் பெற்றுவிட்டிருந்தது. வடக்கே கங்கையின் கரையில் உருவாகிவந்த யாதவ அரசுகளும் பின்னர் பேருருக்கொண்டு வந்த மகதப்பேரரசும் பிரதிஷ்டானபுரியை வெல்லமுடியவில்லை.

அஸ்மாகர்களின் நான்காவது வம்சமே சாதவாகனர் என அழைக்கப்பட்டது. நூறுதேர்களைக் கொண்டவர்கள் என்று அதற்குப் பொருள். அதன் முதல் மாமன்னன் விந்தியமலைக்கு நிகரானவன் என்னும் பொருளில் பிரதிவிந்தியன் என அழைக்கப்பட்டான். ஐம்பது சிற்றரசர்களின் வாழ்த்துகளை ஆண்டுதோறும் பெறும் அரியணையில் அமர்ந்தமையால் அவன் நூறு காதுகள் கொண்டவன் என்று போற்றப்பட்டு, சதகர்ணி என பெயர் பெற்றான். அவன் புகழின் உச்சத்தில் இருந்தபோது வடக்கே கோஸாம்பியை ஆட்சி செய்த தனமித்ரனின் படை வந்து பிரதிஷ்டானபுரியை வென்றது.

காட்டுக்குள் தன் படையுடன் பின்வாங்கிச்சென்ற பிரதிவிந்திய சதர்கணி அங்கே தன் முன்னோர் காட்டிய வழியில் நாகனிகை என்ற பெண்ணாக மாறி திரும்பி வந்து மீண்டும் பிரதிஷ்டானபுரியை வென்றார். காட்டுக்குள் சென்ற பிரதிவிந்திய சதகர்ணி அங்கே நாகர்குலத்துப் பெண்ணான நாகனிகையை மணந்ததாகவும், சதகர்ணி மறைந்தபின் அவளே படைகொண்டுவந்து பிரதிஷ்டானபுரியை வென்றதாகவும் சொல்லப்பட்டாலும் அவைக்கவிஞர்களும் தெருப்பாடகர்களும் சதகர்ணியே முதல் அரசர் சுத்யும்னரின் வழியில் பெண்ணுருக்கொண்டு வந்து அரசியென அமர்ந்ததாக பாடி நிறுவினர்.

நாகனிகை பிரதிஷ்டானபுரியைச் சுற்றி நான்கு பெரிய கோட்டைகளை கட்டினாள். முதல் மதில் மரத்தாலானது. இரண்டாவது மதில் மண்ணாலானது. மூன்றாவது மதில் கல்லால் ஆனது. நான்காவது மதில் ஒன்றோடொன்று பிணைத்து கட்டப்பட்ட முள்மரங்களாலான குறுங்காடால் ஆனது. அதைச்சூழ்ந்து கோதாவரியின் நீர் வந்து நிறைந்திருந்த அகழியும் அதற்கப்பால் காப்புக்காடுகளும் இருந்தன. வடக்கே கங்கைக்கரையில் இருந்து வந்த ஏழு ஆக்னேயபதங்களும், மேற்கே உஜ்ஜயினியில் இருந்து வந்த மிருச்சகடிகாபதம் என்னும் பெருஞ்சாலையும் இணைந்து ஒன்றாகி அதன் கிழக்கு வாயிலை வந்தடைந்தன. விந்தியமலையில் இருந்து நாகனிகையின் பெயர்தாங்கிய நாகனிகாகட்டம் என்னும் மலைப்பாதை வழியாக இறங்கிவந்த கழுதைப்பாதை நகரின் மேற்குவாயிலை வந்தடைந்தது.

ஒவ்வொரு கோட்டைக்கும் ஓர் அடையாளமும் அதைக் குறிக்கும் பெயரும் இருந்தன. முதல் வெளிக்கோட்டை சக்ரமரியாதம் என்றும் அதன் வாயில் சக்ர மகாத்துவாரம் என்றும் அழைக்கப்பட்டது. அதன் முகப்பில் ஒன்பதுமுனைகள் கொண்ட சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது உள்மதில் ஷட்சிருங்க வியூகம் என்றும் அதன் நுழைவாயில் ஷட்சிருங்கத் துவாரம் என்றும் பெயர்கொண்டிருந்தது. ஆறு மலைகளின் சின்னம் அந்த வாயிலில் பொறிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது மதில் அர்த்தசந்த்ர விருத்தம் என்றும், அதன் வாயில் சந்த்ரத்வாரம் என்றும் அழைக்கப்பட்டது. மலைகளுக்குமேல் நிலவு எழும் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளித்தகடு அதன்மேல் பதிக்கப்பட்டிருந்தது. நான்காவது மதில் திரிரத்னகோசம் என்றும், அதன் வாயில் திரிரத்ன ஶ்ரீமுகம் என்றும் அழைக்கப்பட்டது. மூன்று வைரங்கள் பொறிக்கப்பட்ட பொற்தகடு அதன் முகப்பில் அமைந்திருந்தது.

முதல் மதிலுக்குள் உழவர்களும், தொழில்செய்பவர்களும் வாழ்ந்தனர். இரண்டாவது மதிலுக்கு அப்பால் வணிகர்களும், அவர்களுக்குரிய சந்தைகளும் இருந்தன. மூன்றாவது மதிலுக்குள் படைச்சாதியினரும் அவர்களின் பயிலகங்களும் அவர்களுக்குரிய ஆலயங்களும் அமைந்திருந்தன. நான்காவது மதிலுக்குள் அரசகுலத்தவரும் அந்தணரும் தங்கள் தெய்வங்களுடன் வாழ்ந்தனர். அங்கே வேதவேள்விகள் நாளுக்கு மூன்றுமுறை நிகழ்ந்தன. நாளுக்கு ஐந்து வேளை ஆலயப்பூசைகளின் மணியோசைகள் ஒலித்தன. நகருக்குள் நுழைவதற்கு நான்கு பெரிய வாசல்கள் இருந்தன. ஒன்றில் அரசகுடியினரும், பிறிதொன்றில் வணிகர்களும், மூன்றாவதில் படைவீரர்களும், நான்காவது வாயிலில் உழுகுடிகளும் நுழைந்து வெளியேறும்படி வகுக்கப்பட்டிருந்தது.

கானபூதி என்னைக் கூர்ந்து நோக்கிச் சொன்னது. “நீ பிறந்து வளர்ந்த நகரைப் பற்றி உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ நடந்த மண்ணில் அந்நகரம் புதைந்து கிடக்கிறது. நீ பேசிய மொழியில் அந்நகரின் வரலாறு சிதறி ஊடுருவியிருக்கிறது. அந்நகரில் நீ நுழைவதற்குரிய வாசலை திறக்கும் சாவி உன்னைச் சுற்றியே இருக்கிறது.”

நான் அதை ஏற்பதாக முகம் காட்டினேன்.

”இதுவரை நான் சொல்லிக்கொண்டிருந்தவை உங்கள் நூல்களைப் பற்றி மட்டுமே. என் கதையை நான் சொல்லத் தொடங்கவில்லை. அவற்றை நீ கேட்கவேண்டும் என்றால் உன் செவிகளைப் பற்றி நான் அறிந்தாகவேண்டும்.”

நான் தலையசைத்தேன்.

”ஆகவே நீ சொல். உன் நகரின் கடந்தகாலத்தை திறக்கும் சாவி எங்குள்ளது?”

நான் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து நேர் முன்னால் மண்ணைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

என் காதில் முணுமுணுப்பாக “உன் மொழியை அளைந்து அளைந்து பார், அது ஒரு சொல்லாக இருக்கும். அச்சொல்லை நீ சொல்லியிருப்பாய்” என்றது சக்ரவாகி.

மறுபக்கம் சூக்ஷ்மதரு “அது பருவடிவமான நகரத்தைப் பற்றியது. எனவே அது ஒரு பொருளாகவே இருக்கமுடியும். இந்நகரில் அது எங்கோ இருக்கிறது. மண்ணில் புதைந்து கிடக்கலாம். அல்லது ஒவ்வொரு நாளும் காலில் இடறுவதாகக்கூட இருக்கலாம்” என்றது.

ஆபிசாரன் சிரித்து “உன்னால் ஏற்கனவே அது அறியப்பட்டது என்றால் இப்போது நினைவுக்கு வந்திருக்கும். இனிமேல் அறியப்படவேண்டியது என்றால் அதற்கு உனக்கு நேரமில்லை” என்றது.

“விலகு” என்று அவனை சூக்ஷ்மதரு தள்ளி விலக்கியது.

சக்ரவாகி “இங்கே அமர்ந்து யோசிப்பதில் அர்த்தமில்லை. இந்த இரவு வெளுப்பதற்குள் சொல்லிவிடுவதாக கானபூதியிடம் சொல். உனக்கு நகரில் தேடுவதற்கான நேரம் கிடைக்கும். கூடவே நீ உனக்குள் உன் மொழியை துழாவிப் பார்ப்பதற்கான தனிமையும் கிடைக்கும்.”

நான் “எனக்கு விடியும்வரை பொழுதுகொடு” என்றேன்.

“அதை நீ எடுத்துக் கொள்ளலாம்… விடிவெள்ளி தோன்றிவிட்டால் அதன்பின் நீ இங்கே நுழையமுடியாது” என்றது கானபூதி.

“சரி” என்று நான் சொன்னேன். கையை ஊன்றி எழுந்து வெளியே நடந்தேன். மூன்று நிழல்களும் என்னைத் தொடர்ந்துவந்தன.

சக்ரவாகி “நீ இளமைமுதல் சென்ற இடங்களை எல்லாம் நினைத்துப் பார்… எங்கோ அது உன்னை தொட்டிருக்கும்… தொடாமலிருக்க வாய்ப்பே இல்லை” என்றது.

சூக்ஷ்மதரு “உன் அம்மாவின் நாவில் இருந்து வெளிப்பட்ட மொழி உங்கள் மொழியில் ஊடுருவியிருக்கும். அவற்றில் எங்கோ அச்சொல் இருக்கிறது. உன் மொழியிலுள்ள புதிய சொற்களை தேடிப்பார். ஆனால் பல சொற்கள் உன் மொழியில் வேறு பொருள் பெற்று புழக்கத்தில் இருக்கும். ஆகவே சொற்களை அர்த்தங்களை நீக்கி வெறும் ஒலிகளாக எண்ணிப்பார்” என்றது.

“அல்லது நீ விடிந்தபின் என்ன செய்யலாம், தப்பியோட என்ன வழி என்றுகூட யோசிக்கலாம்” என்று ஆபிசாரன் என் பின்னாலிருந்து சிரித்தது.

நான் நகரில் நடக்கத் தொடங்கினேன். என் இளமைமுதல் நான் அறிந்த அனைத்து இடங்களுக்கும் சென்றேன். என் சாதியினரின் வீடுகள் மங்கலான மின்விளக்குகளுடன் தூங்கிக் கொண்டிருந்தன. என் வாசனையை உணர்ந்து குரைக்கத் தொடங்கிய நாய்கள் நிழல்களின் அசைவை உணர்ந்து அஞ்சி ஊளையிட்டபடி வால் தாழ்த்தி பின்னால் சென்றன. வீட்டுக்குள் குழந்தைகள் விழித்துக்கொண்டு சிணுங்கி அழுதன. கர்ப்பிணிகள் அச்சம்தரும் கனவு கண்டு வியர்த்து எழுந்து அமர்ந்தனர். அவர்களைப் பிறர் சமாதானம் செய்யும் ஓசை கேட்டது.

நான் நகர் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். என் இளமை முதல் என் கால் தொட்ட இடங்களை எல்லாம் மீண்டும் கால்களால் தொட்டு அவற்றை நினைவில் விரித்துப் பார்த்தேன். என்னை வியக்கச் செய்தவை, அல்லது சர்வசாதாரணமாக நான் கையாண்டவை. எவரோ எதுவோ என்னிடம் சொன்ன பொருட்கள். வெற்றுப்பொருட்களாக அமைதியில் கிடந்தவை. ஒரு சிறுபொருளைக் கூட விடவில்லை. கூடவே என்னுள் நான் அறிந்த எங்கள் மொழியில் இருந்த எல்லா சொற்களையும் எடுத்து நோக்கிக்கொண்டே இருந்தேன்.

”இரவு முடிந்துகொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள் இடம் மாறுகின்றன” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது.

“உடலால் நடப்பதுதான் நேரத்தை இழுத்துக் கொள்கிறது. உள்ளத்தை மட்டும் ஓட்டு” என்றது சூக்ஷ்மதரு.

“ஒன்றுசெய்யலாம், இனி காலில் மொழியையும் நினைவில் மண்ணையும் இடம் மாற்றிக்கொள்ளலாம்” என்றது ஆபிசாரன்.

நான் எழுந்து “அது நல்ல வழி… என் கால்களில் மொழி இருக்கட்டும்” என்றேன். மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.

“நான் உன்னை முட்டாளாக்க முயன்றேன்” என்றது ஆபிசாரன்.

“இல்லை அது ஒரு நல்ல வழி” என்று நான் சொன்னேன்.

என் கால்கள் அறிந்த சொற்கள், அறியாத சொற்கள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தன. நான் சென்றடைந்த இடம் நன்கறிந்ததாக இருந்தது.

“இது ஸ்தம்பம்… விஜயஸ்தம்பம்” என்று சக்ரவாகி சொன்னது. “சாதவாகனர்களின் வெற்றித்தூண் இது. அவர்கள் தெற்கே காஞ்சீபுரம் வரை வந்து வெற்றி கொண்டதற்காக இங்கே நாட்டப்பட்டது.”

நான் என் ஆரம்பப் பள்ளி நாட்களில் அங்கே ஆசிரியருடன் முதல்முறையாக வந்தேன். அதன் பிறகு பலமுறை வந்திருக்கிறேன். ஐந்தாள் உயரமான கல்தூண் அது. ஆழமாக நடப்பட்ட அதன் அடியில் ஒரு கல்லால் ஆன மண்டபம். அதன் மேல் இடுப்பில் தொற்றிக்கொண்டது போல இன்னொரு சிறுமண்டபம். சிறிய சிற்பங்கள்.

“இதன் அடிப்பகுதி பாதாளம். நடுப்பகுதி மானுட உலகம். மேலே விண்ணுலகங்கள்” என்று ஆசிரியர் ராம்தாஸ் ஷிண்டே சொன்னார். மாணவர்கள் பாதாளத்தை தடவிப் பார்த்தனர். அந்த மண்டபத்தின் மேல் தொற்றி ஏறி மேலுலகங்களை நோக்கிச் செல்ல முயன்றபோது அவர் பிரம்பால் அடித்து இறக்கிவிட்டார்.

நான் அந்தத் தூணின் செதுக்குகளை நுணுக்கமாகவே பார்த்ததுண்டு. அது வழக்கமான ஒரு தூண் என்றே எனக்குப்பட்டது. பாதாளம், விண்ணுலகம் என்பதெல்லாம் வெறும் கற்பனை என்றும்.

“இந்தத் தூணா சாவி?” என்றது ஆபிசாரன். “சற்றுப் பெரிய சாவிதான்!”

”வாயை மூடு” என்று சக்ரவாகி சொன்னது. “நீ அதில் எதையாவது பார்க்கவேண்டுமா என்ன?”

“ஆமாம்” என்று நான் சொன்னேன். அதை என் நினைவில் நுணுக்கமாக விரித்துக் கொண்டே இருந்தேன். எதுவுமே அரிதாகத் தென்படவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நெருங்குகிறேன் என்று தெரிந்தது. பின்னர் நினைவு அதை தொட்டுவிட்டது.

என் பதினேழு வயதில் ஒருமுறை அதன் மேல் ஏற முயன்றேன். நெஞ்சு உரச தொற்றி மேலேறியபோது கை வழுக்கிவிட்டது. கீழே அந்தக் கல்மண்டபத்தின் கூர்முனை. நெஞ்சு பதற அள்ளி இறுக்கிப் பற்றிக்கொண்டு சறுக்கிக் கீழிறங்கினேன். அப்போது அந்தக்கோணத்தில் என் கையில் உரசிச்சென்ற அந்தத் தூணின் செதுக்குகளில் ஒன்று என் விரல்களில் துலங்கி வந்தது. அதன்பிறகே அதை நான் நினைவுகூர்ந்தேன்.

“போகலாம்… அதுதான் சாவி” என்று நான் சொன்னேன்.

நாங்கள் திரும்பிச் சென்றோம். “நீ என்ன கண்டுபிடித்தாய்? அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இன்னொரு முறையும் தேடிப்பார். இந்த ஒன்றை மட்டுமே நம்பிச் செல்லாதே” என்றது ஆபிசாரகன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் காட்டுக்குள் புகுந்து அந்த மரத்தடியை அடைந்து கானபூதியின் முன் அமர்ந்தோம். காடு முழுக்க நாகங்களின் கண்கள் எங்களை நோக்கி மின்னிக் கொண்டிருந்தன. நாக்குகள் பறந்துகொண்டிருந்தன.

தன் கைகளை மண்ணில் பொத்தி ஊன்றியடி அமர்ந்திருந்த கானபூதி “சொல்” என்றது.

“அது ஒரு சொல். ஆனால் அது ஓர் அடையாளச் சின்னமாக அந்த தூணில் இருந்தது. பிரதிஷ்டானபுரியின் ஒன்பது முனைகொண்ட சக்கரம், ஆறு மலைமுடிகள், சந்திரன், மூன்று ரத்தினங்கள் என்னும் நான்கு அடையாளங்களும் அச்சொல்லின் ஒலியின் எழுத்துகள்தான். அந்த அடையாளங்கள் அவர்களின் நாணயங்கள் அனைத்திலும் இருப்பவையும்கூட. அச்சொல்லே அந்நகரின் நுழைவாயில்… அது பைசாசிக மொழியின் சொல்” என்று நான் சொன்னேன்.

வலக்கையை திறந்து “உண்மை” என்று கானபூதி சொன்னது. “அச்சொல்லின் பொருளைச் சொல். இடக்கையிலுள்ள கேள்வி அதுதான்.”

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:34

கக்கன்

[image error]இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய அரசியலமைப்பு சட்டசபையின் உறுப்பினர். தமிழக காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித் துறை, உணவு, வேளாண்மை போன்ற துறைகளின் அமைச்சராகப் பணிபுரிந்தார். தீண்டாமைக்கு எதிரான போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார். மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பாசனக் கால்வாய்கள் பெருகக் காரணமானவர்.

கக்கன் கக்கன் கக்கன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:32

காண்டீபத்தில் கைக்கிளை மெய்ப்பாடுகள் – – இராச.மணிமேகலை

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887)

மகாபாரதக் கதையின் மறுஆக்கமாக வெண்முரசு நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் படைத்துள்ளார். காவிய மரபின் இலக்கணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற உரைநடைக் காவியமாக வெண்முரசு திகழ்கிறது.  இந்நாவல் 26 தொகுதிகளைக் கொண்டது. வெண்முரசு நாவல் வரிசையில், எட்டாவது தொகுதி காண்டீபம் ஆகும். இந்நாவல் அர்ஜுனின் வீரசாகசங்களையும், பிறரால் அடைய முடியாத அரிய மகளிரைத் தடைகளைத் தகர்த்து, திருமணம் புரிந்த விதங்களைப் பற்றியும் பேசுகிறது. காண்டீபத்தில் அர்ஜுனின் மனைவியர் சுபகை, உலூபி. சித்ராங்கதை, சுபத்திரை ஆவர். இவர்களில் சுபகை அரண்மனைச் சேடிப்பெண். மற்றவர்கள் அரச குலத்தவர்கள் ஆவர்.

முதலாவதாக, சுபகையின் பாத்திரப் படைப்பு. சுபகை யாதவஅரசி சுபத்திரையின் அரண்மனைச் சேடியருள் ஒருத்தி ஆவாள். காண்டீபத்தின் கதைப்போக்கும் கதைமாந்தர்களும் ஆசிரியர் கூற்றாகவே சொல்லப்பட்டிருக்க, சுபகையின் பாத்திரப் படைப்பு மட்டும் ‘தன் கூற்றாகவே’ இந்நாவலில் அமைந்திருப்பது திட்டமிட்டதா, தற்செயலா என்கிற ஐயம் எழுகிறது. ஏனெனில் யாருமற்றவளாக காட்டப்படும் சுபகை தன்னைப் பற்றியும், அர்ஜுனன் பற்றியும் முதியசேடியிடமும், மாலினியிடமும் இந்நாவல் முழுக்கப் பேசுகிறாள். அதைப் போலவே இடைநாழியில் இருவரும் நோக்கெதிர் நோக்கி, அர்ஜுனனால் அவள் தெரிவு செய்யப்பட்டு, கொள்வாரும் கொடுப்பாரும் இன்றி (காந்தருவம்?) அவனுடன் இணைகிறாள்.

இங்கே,  ‘இங்குள்ள அத்தனை இளம்பெண்களைப் போலவே உடல் பூத்து முலை எழுந்த நாள் முதலே நானும் அவரைத் தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் விழிகளுக்கு உகந்தவள் ஆவேனோ என்று என்னையே மதிப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர் விழி வழியாகவே என்னைச் சமைத்திருந்தேன்’ என்கிற சுபகையின் கூற்று இவளைத் தொல்காப்பியக் கைக்கிளைத் திணைக்கு உரியவளாக எண்ணச் செய்கிறது. மேலும் இவளின் அகப்புற உணர்வு நிலைகளைத் தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடுகளோடு பொருத்திப் பார்க்கவும் தூண்டுகிறது.

இதனடிப்படையில் இக்கட்டுரை 1.மெய்ப்பாடு வரையறைகள் 2.கைக்கிளை வரையறைகள் 3.கைக்கிளை மெய்ப்பாட்டுக்கூறுகள் — சுபகை ஓர் ஒப்பீடு என்ற மூன்று நிலைகளில் அமைகிறது.

மெய்ப்பாடு வரையறைகள்

தொல்காப்பியர் மெய்ப்பாடு என்பது

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை  மாந்தர்க் கல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் என்னருங் குரைத்தே”    (தொல்.மெய்.27)

என்று மெய்ப்பாட்டியியலிலும்,

 

“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்”

என்று செய்யுளியலிலும் கூறுகிறார்.                          (தொல்.செய்.202)

 

“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பாடென்ப  மெய்யுணர்ந்தோரே”

என்கிறது செயிற்றியம்.

திருவள்ளுவம் ‘குறிப்பறிதல்’ என்று பொருட்பாலிலும், காமத்துப் பாலிலும் பேசுகிறது.

ஒன்பான் சுவை, நவரசம் என்ற சொல்லாக்கங்கள் மெய்ப்பாடு என்ற பொருள் தருவனவே. ஒருவர் தன் மனதில் நினைக்கின்ற ஒன்றைத் தன் ஐவகைப் பொறிகளால் பிறர்க்கு வெளிப்படச் செய்வதே மெய்ப்பாடாகும். நாடகம், நாட்டியம், சினிமா போன்றவை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் கருவிகள் ஆகும். “பாலுணர்வு சார்ந்த உளவியல் செய்திகளே மெய்ப்பாடாகும்” என்பார் தமிழண்ணல் (தொல்.பொருள்.தொகுதி 1 தமிழண்ணல் உரை பக்.8,9)

கைக்கிளை வரையறைகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப”                       ( தொல். அக. நுற்பா.1)

 

“காமஞ்சாலா இளமையோன் வயின்

ஏமஞ்சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்

சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”               (தொல் அகத். 53)

என்று தொல்காப்பியர் அகத்திணையியலில் குறிப்பிடுகின்றார்.

“காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் அமையாத இடும்பை எய்தி, புகழ்தலும் பழித்தலுமாகிய இருதிறத்தால், தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்ந்து, சொல் எதிர் பெறானாய்த்தானே சொல்லி இன்புறுதல், கைக்கிளைக் குறிப்பு.  ‘பொருந்தித் தோன்றும் என்றதனால் அகத்தோடு பொருந்துதல்’ கொள்க. என்னை? காமஞ்சாலா, என்றதனால் தலைமைக்கு குற்றம் வராதாயிற்று. ‘புல்லித் தோன்றும்’ என்றதனால் புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது, காமம் சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணார் உரை செய்துள்ளார்.

தொல்காப்பியர் அகனைந்திணைக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறிய பின்னர்,

‘அவையும் உளவே அவையலங்கடையே’              (தொல்.மெய்.21)

 

என்ற நுற்பாவை வைத்தார். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர்,  “என் எனின் கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள; நடுவணைந்திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் என்றவாறு.

அவையலங்கடை என்றமையான் பாடாண் பாட்டிற் கைக்கிளையும் கொள்ளப்படும்… பிற்கூறிய அவை என்பன களவும் கற்புக்குறியன. முன் கூறிய அவை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங்கடையும் அவையும் உளவே என மாற்றிக் கூட்டுக” என்றதனால் புகுமுகம் புரிதல் முதலாக கையறவுரைத்தல் ஈறாக 24 மெய்ப்பாடுகளும், ‘இன்பத்தை வெறுத்தல் முதலாக கலக்கமும் அதுவே’ என்பது ஈறாக 20 மெய்ப்பாடுக் கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்திற்று எனக் கருதமுடிகிறது

“கைக்கிளை என்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை; இஃது ஏழாவதன் தொகை. எனவே ஒருதலைக் காமமாயிற்று” என்பது நச்சினார்க்கினியர் உரை.

“கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்”     (நம்பி .அக.நூற்பா.3)

“காட்சி ஐயம் துணிபு குறிப்பென

மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை”           (நம்பி.கள.நூற்பா.3)

 

“தண்டாக் காதல் தளரியல் தலைவன்

வண்டார் விரும்பிய வகையுரைத்தன்று”    (புறப்.வெண்.கொளு.45)

“கெடாத அன்பினையும், நுடங்கும் இயல்பினையும் உடையவள் ஒருத்தி தலைவனுடைய வளவிய மாலையினைப் பெறுதற்கு ஆசைப்பட்ட வகையினை உரைப்பது”  என்பார் ஐயனாரிதனார்.

வ.சுப. மாணிக்கனார் தம் ‘தமிழ்க்காதல்’ என்ற நூலில் “கைக்கிளை என்ற தொடருக்கு சிறிய உறவு என்பது பொருள். சிறிய என்றால் இழிந்த என்னும் பொருளன்று. அவ்வுறவு நிற்கும் காலம் சிறியது என்பது கருத்து.

அகத்திணையியலில், கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை இவற்றின் இலக்கணங்களை தொல்காப்பியர் கூறிற்றிலர். ஆண்டு கூறியிருப்பவை இலக்கணம் அல்ல; அவ்விரு திணை பற்றிய காதற் செய்கைகள்” எனக் கூறிய கருத்துகள் கைக்கிளைத் திணையைத் தெளிவுற விளக்குகிறது எனலாம்.

மேற்காட்டிய வரையறைகளின்படி தொல்காப்பியமும்,  நம்பியகப் பொருளும் கைக்கிளைத் திணையை ஆண்மகனுக்குரியதாக காட்டுவதைக் காணமுடிகிறது. ‘அச்சமும் நாணமும் மடனும் பெண்பாற்குரிய’ என்பதனால் (தொல்.கள.8) தன் காதலை முந்துறுத்துக் காட்டுதல் மகளிர்க்கில்லை என்பது பெறப்படுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை ஆணுக்கு மட்டுமன்றி பெண்பாற்கும் உரியதாக கைக்கிளையை வரையறுக்கிறது. பிற்காலத்தில் தனிவகை சிற்றிலக்கியமாக மட்டுமல்லாமல் தூது, உலா, கலம்பகம், குறவஞ்சி முதலானவற்றில் கைக்கிளை ஓர் உறுப்பாகவும் காணப்படுகிறது. நாலாயிரத் திவ்யபிரபந்த, தேவாரப் பாடல்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயக நாயகி பாவத்தில் கைக்கிளைத் திணையைப் பாடியிருப்பதைக் காணலாம். இவ்வாறு கைக்கிளை இலக்கணம் பல்வேறு காலக்கட்டத்தில் பலவகையான கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்திருப்பதைக் காணமுடிகிறது.

கைக்கிளை மெய்ப்பாடுக் கூறுகள் சுபகை ஓர் ஓப்பீடு

மேற்காட்டிய மெய்ப்பாடு மற்றும் கைக்கிளை வரையறைகளின் அடிப்படையில் சுபகை எவ்வகையிலெல்லாம் கைக்கிளைக் கூறுகளுள் பொருந்துகிறாள் என்று இக்கட்டுரை ஆராய்வதோடு காண்டீபவழிக் காட்சிப்படுத்துகிறது

காட்சி 1

அன்று நான் அரண்மனை இடைநாழியில் நடந்து சென்றேன். என்னெதிரே இளையபாண்டவர் வந்தார்….. என் அருகே வந்து கண்களை நோக்கி என் பெயரென்ன என்று கேட்டார். ‘நீ நாணம் கொண்டு சொல் மறந்திருப்பாயே’ என்றாள் முதியசேடி. உடனே பதறி நாக்கைக் கடித்துக் கொண்டு ‘அய்யய்யோ’ என்றேன். எனக்கு மட்டுமேயான புன்னகையுடன் குனிந்து என்ன என்றார். நான் தலை குனிந்து நின்றேன். சொல் என்றார். அவரது பார்வை என் முகத்திலும் மார்பிலுமாக இருந்ததைக் கண்டேன்.” இப்போதும் பாதி ஆண்களின் பார்வை உன் மார்பில்தானே இருக்கிறது’ என்றாள் முதியவள். இங்கு  சுபகை முதிய சேடியிடம் முதன் முதலில் அர்ஜுனனும் அவளும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட காட்சியைக் கூறும்போது வெளிப்படும் கைக்கிளை வகைகளையும், மெய்ப்பாட்டினையும் காணமுடிகிறது.

“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்று உடைத்து”

 

“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”

 

காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் என்ற கைக்கிளையின் வகைகளை இந்த இரண்டு திருக்குறள்களும் தெளிவுற விளக்குகின்றன.

 

“முதிர்கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,

பெயல் துளி முகிழ்என, பெருத்த நின் இளமுலை

மயிர் வார்ந்த வரி முன்கை மடநல்லாய் நிற் கண்டார்

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ?  உணராயோ?

….. ……

நீயும் தவறு இலை நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறு இலர்

நிறை அழிகொல்யானை நீர்க்கு விட்டாங்கு

பறை அறைந்தல்லது செல்லற்க என்னா

இறையே தவறு உடையான் ”                (கலி. குறிஞ்சிக்கலி.20)

 

“அழகிய மயிர் வரிசையுடையை நின் முன்னங்கைகள்! நின் முலைகள் தாம் என்ன? முற்றின கோங்கின் இளமுகையோ? அடிபரந்து விளங்கும் குரும்பைகளோ? மழைத்துளி விழும்போது கிளம்பும் பெருத்த நின் இளமுலைகள் இவை போலிருக்கின்றன தாம்! ஆனால் கண்டவரின் உயிரை அவை வாங்கும் என்பதை நீ அறிவாயோ மாட்டாயோ?

நான் சொல்வதைக் கேளேன்! ஏதுந் சொல்லாது அகன்று போகின்றாயே? நீயும் குற்றமுடையவள் அல்லள்; இப்படி நின்னை உலவவிட்ட சுற்றத்தாரும் தவறுடையவரல்லர்; யார் குற்றம் என்பாயேல், ‘மதங்கொண்ட கொல்லும் யானையை நீர்த்துறைக்கு விட்டால் முற்படப் பறையறைந்து அதன்பின்னர் அனுப்புவார்களே! அதுபோல நின்னையும் முன்பே பறைச்சாற்றி செல்லவிடல் வேண்டும்’ என ஆணையிடாத இந்நாட்டு மன்னனே பெரிதும் தவறு உடையவன்”.

இக்கலித்தொகைப் பாடலின் தலைவனும் தலைவியும் நோக்கெதிர் நோக்கும் காட்சி, காண்டீபத்தின் அர்ஜூனனும் சுபகையும் நோக்கும் காட்சியை ஒத்தது. இவ்விரு இடங்களிலும்  புகுமுகம் புரிதல்’ மெய்ப்பாடு பொருந்தி வருவதைக் காணமுடிகிறது.

காட்சி 2

“ஒவ்வொரு முறையும் யாதவ அரசியைப் பார்த்துவிட்டு செல்லும்போது மான்கண் சாளரம் வழியாக நான் பார்ப்பேன். இந்த மகளிர் மாளிகையில்  பல நூறு நெஞ்சங்கள் ஏங்கி நீள் மூச்சிடும். பல நூறு முலைகள் விம்மும்… என்னை நேரில் அவர் காண்பாரென்றால் அக்கணமே அடையாளம் கண்டுக்கொள்வார். தன் குழற் கற்றையில் அருமலர் போல் சூடிக்கொள்வார் என்று கற்பனை செய்தேன் .ஒன்றும் நிகழவில்லை… எண்ணி எண்ணி நான் வணங்கிய தெய்வம் என்னை ஏற்கவில்லை… அவர் விழி வழியாகவே நான் என்னை சமைத்திருந்தேன் என்பதனால் ஏந்தியிருந்தவை எல்லாம் வெறும் கனவே என்று தோன்றியது.”

 

“சூடுவேன் பூங்கொன்றைச் சூழச் சிவன்திரண்தோள்

கூடுவேன் கூடி மயங்கி நின்று

ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாழுவேன் பேர்த்தும் மலர்வேன்..”.

இறைவனது இன்பம் பெற விழைவாரது நிலையிலுள்ள, நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்ட மாணிக்கவாசகரின் திருவம்மானைத்  தலைவியின் அகவுணர்வுகள், அர்ஜுனன்பால் தீராக்காதல் கொண்ட சுபகையின் கலங்கிமொழிதல், புலம்பித்தோன்றல் மெய்ப்பாடுகளோடு ஒப்புநோக்கத்தக்கது.

காட்சி 3

“என்னைக் கடந்து சென்ற இளம்சேடி ஒருத்தி என்னடி இளையவர் உன்னைத் தேர்வு செய்துவிட்டாராமே! என்றாள்.. எங்கும் கால் நிலைக்கவில்லை. எப்பொருளிலும் விழி பொருந்தவில்லை. படிகளில் ஏறினேன். இடைநாழி தோறும் தூண்களைத் தொட்டபடி ஓடினேன்… ஓடும்போதே நான் துள்ளுவதை அறிந்தேன். மகளிர் மாளிகைக்குள் சென்று சேடியர் பணியாற்றும் இடங்களுக்கெல்லாம் அலைந்தேன்… ஒவ்வொரு கணமும் நான் மலர்ந்து கொண்டிருந்தேன். வெறும் சிரிப்பையே விடையென அளித்தேன்… பின்னர் தடையற்ற வெறும் உவகை மட்டுமென அது மாறியது… என்னுள்ளிலிருந்து எழுந்து கதவைத் திறந்து காற்றென விரைந்து வசந்தமாளிகையை அடைந்த ஒருத்தியை அசைவற்ற உடலுடன் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுபகை நீ இன்று மாலை அவரது வசந்த மாளிகைக்குச் செல்லப்போகிறாய். “கிளம்பு” என்றாள் தோழி.

“முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆருர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

………………………….. …………………..

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!”

 

திருவாருர்ப் பெருமாளின் திருப்பெயரைக் கேட்டவுடன் வசமிழந்த, மிக்க அன்புடையவளான தலைவி ஒருத்தியின் தன்மையை நாயக நாயகி பாவத்தில் திருநாவுக்கரசர் பாடிய இப்பாடல் பெண்பாற் கைக்கிளையில் அமைந்த பாடலாகும். இப்பகுதியில் காதல் கைம்மிகல், கரந்திடத் தொழில், கையறவு உரைத்தல் என்ற மெய்ப்பாடுகளால் சுபகை பித்தியாகி அகம் அழிகிறாள்.

 

காட்சி 4

“காதல் ஏற்கப்படாத பெண்ணின் கண்ணீர் அது. ஆண்களுக்கு ஆயிரம் உலகங்கள்.  பெண்களுக்கு காதல் கொண்ட ஆணன்றி வேறுலகம் ஏது? அவர் ஏற்கவில்லை என்றால் பிறிதென ஒன்றுமில்லை….. அன்றிரவெல்லாம் இல்லாமல் ஆவதைப் பற்றி எண்ணிக் கொண்டே என் அறையில் இருந்தேன். எழுந்து ஓடி அவ்விருளில் கலந்து மறைந்துவிட விரும்பினேன்… அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன்… மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப் படுமென்றால் அவை என்னச்செய்யும்?… இரவு முழுக்க அங்கெல்லாம் இருள் நிறைந்திருந்தது என்பதை என்னால் எண்ணமுடியவில்லை… சூழ்ந்த பறவைகளின் ஒலிகளெல்லாம் நீருக்குள் கேட்பவைப் போல் அழுந்தி ஒலித்தன.  என்னதென்றே தெரியாத எடை மிக்க எண்ணங்களால் ஆனது என் நெஞ்சம்”.

கலித்தொகைத் தலைவி ஒருத்தி மனங்கலங்கிக் கூறும் பாடல் ஒன்று இக்காட்சியோடு தொடர்புடையது என்பது நினைவுகூரத்தக்கது.

“பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை

திங்களுள் தோன்றியிருந்த குறுமுயால்

எங்கேள் இதனகத்துள் வழிக் காட்டீமோ

காட்டீ யாயிற் கதநாய் கொளுவுவேன்

வேட்டுவ ருள்வழிச் செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த

என்னல்லல் தீரா யெனின்”                        (கலித் .144)

காதல் மிகுதியால் அஃறிணைப் பொருட்களை நோக்கி கேட்குந  போலவும்,  கிளக்குந போலவும்  கூறும் தலைவியின் கூற்றெல்லாம் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இங்கே சுபகை அர்ஜூனனின் நினைவினால் ஆங்கு நெஞ்சழிதல், கலக்கம் போன்ற மெய்ப்பாடுகளின் வசமாகிறாள்

 

காட்சி 5

”ஆம் பிறிதொரு ஆடவன் என்னைத் தொடக்கூடாது என்று எண்ணினேன். அந்த முத்தைச் சுற்றி வெறும் சிப்பியாக என்னை ஆக்கிக் கொண்டேன். ஓர் இரவுதான் அதன்பின் அவர் என்னை அழைக்கவில்லை. நான் செல்லவும் இல்லை” என்றாள் சுபகை. ’வாழ்வெனப் படுவது வருடங்களா என்ன? ஓரிரவு என்று சொல்வதே மிகைதான். அப்பெயர் எழுந்து அவர் இதழில் திகழ்ந்த அந்தக் கணம்தான் அது”… எத்தனை காலமாயிருக்கும்? காலம் செல்லச்செல்ல அந்த ஒரு நாள் அவளுக்குள் முழுவாழ்க்கையாக விரிந்து அகன்று பரவியிருக்கிறது. பல்லாயிரம் அனுபவங்களும், அச்சங்களும், ஐயங்களும், உவகைகளும் உள எழுச்சிகளுமாக அவனுடன் வாழ்ந்த முடிவற்ற தருணங்கள்.

அர்ஜுனனுடன் வாழ்ந்த அந்த ஓர் இரவு அவளுள் எத்தனை உணர்வு நிலைகளைக் கிளர்த்தியிருக்கும் என்பதை பின்வரும் குறுந்தொகைப் பாடல்களோடு ஒப்பிட்டுக் காணமுடிகிறது.

”யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ          (குறுந். 25)

 

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோட் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே          (குறுந். 3)

 

அர்ஜுனன் பெரும் பெண்விழைவு கொண்டவன் என்று அறிந்தவள்தான் சுபகை. ஆனாலும் அவன்மேல் கொண்ட தூய அன்பின் தன்மை குறுந்தொகைத் தலைவியின் காதலுக்கு சற்றும் குறைந்ததன்று. அதனாலேயே அவள் புரையறம் தெளிதல், அருள்மிக  உடைமை, கட்டுரை இன்மை என்ற மெய்ப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டவளாகிறாள்.

 

காட்சி 6

அன்று இரவு நான் தூங்கவில்லை. குளிர்ந்த கரியமை போல என்னை சூழ்ந்திருந்தது இரவு. அறுபடாத ஒரு குழலோசை போல .உள்ளத்தை ஒற்றைச் சொல்லென ஓரிரவு  முழுக்க உணர்வது பிறகு எந்நாளும் எனக்கு வாய்த்ததில்லை… இவ்விரவினில் இங்கிருப்பவள் அவரது காதலி அல்லவா என்று எண்ணிக் கொண்டேன். அவ்வெண்ணத்தின் எழுச்சி தாளாது நெஞ்சைப் பற்றிக் கொண்டு இருளில் அழுதேன்… ஒருகணமென கடந்து சென்றது அந்த இரவு. ஆம் இன்று நினைக்கும்போது அது ஒரு இமைப்புத்தான் அது என்று எண்ணுகிறேன்… முற்றிருளுக்குள் கண்களை முடி அவ்விரவை திரும்ப நிகழ்த்த முயன்றேன்… அருகே வா என்றழைக்கையில் அடம் பிடித்து விலகி நிற்கும் குழந்தை போன்று இருந்தது”.

“நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓஒயான் மன்ற துஞ்சா தேனே”                                                   (குறுந். 6)

 

ஆய்மணிப் பைம்பூன் அலங்கு தார்க்கோதயைக்

காணிய சென்று கதவு அடைத்(ந்)தேன்  நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வருஞ் செல்லும் பேருமென் நெஞ்சு             (முத்தொள் 8)

 

இங்கு கண்துயில் மறுத்தல், துன்பத்துப் புலம்பல், பிரிவாற்றாமை, ஆகிய மெய்ப்பாடுகளால் சுபகை நெஞ்சொடு கிளத்தும் நிலையினைக் காணமுடிகிறது.

காண்டீபம் நாவலின் தொடக்கமே அர்ஜுனன் சுபகைக்கு இடையிலான உறவுநிலையில் இருந்துதான் தொடங்குகிறது. சுபகை தன்னுள் கிளர்த்தும் உணர்வு நிலைகளைத் தன்கூற்றாவே இந்நாவலில் பேசுகிறாள். இந்நாவலில் அர்ஜுனனின் நாயகியர் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பைச் சுபகையிடம் காண முடிகிறது.

”சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய  வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக் கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரமென்பது தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது பிறிதொருவரி நிழலென வாழ்வது பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே சேடிக்கு அதுவும் இல்லை” .(வெண்முரசு, மாமலர்,70) என்பது சேடிப்பெண்ணின் வாழ்க்கை நிலையாக இருக்கிறது. ஆனால் சுபகை என்ற சேடிப்பெண் அர்ஜுனனை மட்டுமே மனதில் வரித்தாள். ஓரிரவு மட்டுமே அவளுடன் வாழ்ந்தாள். தன்னை ஆத்மார்த்தமாக அவனிடம் ஒப்படைத்தாள். நாவலின் தொடக்கம் போலவே முடிவும் இவர்களின் உறவுநிலையின் உண்மைத்தன்மையோடு நிறைவுறுவதை அர்ஜுனனின் கூற்றாகக் காணமுடிகிறது.

”உன்னை நினைவுகூர்ந்த அனைத்துத் தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக  இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல்தளர்ந்து, தோல்சுருங்கி, கூந்தல் நரைத்த முதியவளாகி இருந்தாய்… இந்தக் காண்டீபத்தை தூக்கிவிட்டு எறிந்து விட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான். ‘அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்‘ என்றாள் சுபகை. “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டுமே இடம் உள்ளது” என்றான்”. பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர் வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்”, என்று முன்பொருமுறை உலூபியிடம் கூறுகிறான் அர்ஜூனன். அவனைப் போலவே சுபகை “அந்த ஓர் இரவில் அவர் என் வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை… ஐயமே இல்லை. அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன்” என்று மாலினிதேவியிடம் கூறுகிறாள். இருவரும் மாறிப்புக்கு  இதயம் எய்திய இந்த நிலையே  இறுதிப்பகுதியில் சுபகையிடம், “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டுமே இடம் உள்ளது” என்று  அவனைச்  சொல்ல வைக்கிறது. அவனுடைய மனப்பீடத்தில் சுபகையை மட்டும்  அமர்த்திப் பார்க்கும் காட்சி மூலமாக கைக்கிளைத் திணையிலிருந்து அன்பின் ஐந்திணை  நிலைக்கு உயர்த்தப்படுகிறாள் சுபகை.

காதலின் அழகியலை, பரிமாணத்தை, தன் அகவுணர்வுகளை நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை தன் கூற்றாகவே சொல்லும் சுபகையின் பாத்திரப் படைப்பு மிகச்சிறப்பான ஒன்று என்றே கூறலாம்.

இலக்கியம் என்பது வாசிப்பவனின் கருத்து விவரிப்புகளை, சிந்தனைகளைத் தூண்டுவது; படைப்பாளி யோசித்திருக்காத கோணத்தில் அவரவர் வாழ்க்கை முறைகளோடும், ரசனைகளோடும் படைப்பில் பொருத்திப் பார்த்து இன்புற்று மகிழ்வது. ஒரு சிறந்த படைப்பாளனின் இலக்கியத்தை ‘திண்ணிதின் உணரும் உணர்வுடைய வாசகனால் மட்டுமே அனுபவித்து, இன்புற்று, மகிழமுடியும். அந்தக் கோணத்தில் தொல்காப்பியம் மெய்ப்பாடுகளை இன்றைய உரைநடைக் காவியமாம் வெண்முரசில் பொருத்திப்பார்க்க இடமளிக்கிறது. எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் பொதுவான இம்மெய்ப்பாடுகள், காதலாகி, கசிந்து, கற்பாகி வாழ்க்கையை சிறப்புடையதாக்குகிறது.

 

இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா? மழைக்காவியம் ஊழின் பெருங்களியாட்டு  – அருணா ஐந்து முகங்கள் – கடிதம் காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை

வழிவழியாக வந்தமைவோர்

இந்திரநீலம் வாசிப்பு- கடிதம்

வெண்முரசின் குரல்கள் அன்பெனும் மாயை -கலைச்செல்வி இளமையின் வண்ணங்கள்- கடிதம் குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன் தீ – கடிதம் மழையின் காவியம் விண்திகழ்க! கனவின் நுரை மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன்

களம் அமைதல்

படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும் மலர் மயங்கியறியும் மெய்மை தளிர் எழுகை அன்னைவிழிநீர் அறிகணம் ஊழ்நிகழ் நிலம் எங்குமுளப் பெருங்களம் மைவெளி ஊழின் விழிமணி அனைத்தறிவோன் விழிநீரின் சுடர்   மீண்டெழுவன களிற்றியானை நிரை – ஆதன் களிற்றியானை நிரை ‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவ ணன் இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன் கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன் ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்  கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை ‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன் பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.