Jeyamohan's Blog, page 103
May 25, 2025
காவியம் – 35
உயர்குடிப்பெண், மதுரா அருங்காட்சியகம், சுடுமண் சிற்பம், சாதவாகனர் காலம். பொயு 2கானபூதி சொன்னது. திருமணம் ஆகி கணவனுடன் பாட்னாவுக்கு வந்து அந்த பெரிய மாளிகையில் அவனுடன் தங்கி, அவனுடைய மூர்க்கமான காமத்துக்கு தன்னை அளிக்கும்போது ஊர்வசி ஒரு மெல்லிய சந்தேகத்தை தன்னுள் கொண்டிருந்தாள். அவளுடைய மாதவிலக்கு தள்ளிப்போயிருந்தது. அது ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் குழந்தையா என்று அவள் பதற்றம் கொண்டிருந்தாள். தனியாக இருக்கும்போது விரல்களை விட்டு நாட்களை எண்ணிக்கொண்டிப்பதே அவள் வழக்கமாக இருந்தது ஓர் எண்ணிக்கையில் நாட்கள் சரியாக வந்தன. இன்னொரு முறை பிழையாகச் சென்றன.
தன் கணவன் பெண்களை நன்கறிந்தவன் என்பதை முதல் இரவிலேயே அவள் புரிந்துகொண்டாள். அவன் ராய்சௌத்ரியின் இன்னொரு வடிவமாக இருந்தான். பெண் அவளுக்கு உடல் மட்டும்தான். காமம் என்பது தனக்கான நுகர்வுதான். உண்மையில் அது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலையே அளித்தது. தான் எவரையும் ஏமாற்றவில்லை என்றே அவள் சொல்லிக்கொள்ள முடிந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே அவள் உடல் நலமற்று மருத்துவரை சந்தித்தபோது அவளுக்கு சிஃபிலிஸ் தொடக்க நிலையில் இருப்பதை அவர் சொன்னார். ஆனால் அஸ்வத் தேஷ்பாண்டே அதை அவன்தான் அவளுக்கு அளித்ததாக எண்ணிக்கொண்டிருந்தான். முன்னரே அவனும் அந்நோய்க்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் கருவுற்றிருப்பதை அறிந்த மருத்துவர் கருவைக் கலைப்பதே நல்லது என்றார். ஆனால் அத்தகவலை தெரிந்துகொண்ட ருக்மணி தேஷ்பாண்டே அதை உறுதியாக மறுத்துவிட்டாள். ‘இந்த வீட்டின் முதல் குழந்தையைச் சிசுப்படுகொலை செய்தால் இந்த வம்சம் அற்றுப்போய்விடும்’ என்று அவள் சொன்னாள். அந்த விவாதத்திற்குள்ளேயே நுழையாமல் அஸ்வத் தேஷ்பாண்டே ஒதுங்கிக்கொண்டான். அந்த உணர்ச்சிகரமான மிரட்டலுக்கு ஊர்வசி பணியவேண்டியிருந்தது. குழந்தை பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பிறந்தது அவளுக்கு ஆறுதலை அளித்தது. அதன் முகத்திலும் சாயலிலும் எங்கேனும் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் சாயல் உள்ளதா என்று அவள் ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை அவளைப்போலவே இருந்தமையால் நாளடைவில் அந்த சந்தேகத்திலிருந்து விலகிச் சென்றாள்.
ருக்மணி தேஷ்பாண்டே அதற்கு விஃபவ் தேஷ்பாண்டே என்று பெயரிட்டாள். ஒவ்வொன்றாக எண்ணி அஞ்சி கணக்கிட்டு, அஞ்சிய எதுவுமே நிகழாமல் ஒவ்வொன்றும் சீராக முடிய அடுத்த கணக்கிடல்களுக்கு சென்று கொண்டிருந்ததாகவே அவளுடைய திருமணத்தின் முதல் ஆண்டுகள் இருந்தன. பின்னர் அந்த ஒட்டுமொத்த நாடகத்தில் ஒரு பகுதியை மிகச்சரியாக நடிக்க அவள் கற்றுக்கொண்டாள். தன்னுடைய இடமென்ன என்று புரிந்துகொண்டு அந்த எல்லைகளை வகுத்துக்கொண்டாள்.
விஃபவ் தேஷ்பாண்டே ஒன்றாம் வகுப்பிலிருந்தே டார்ஜிலிங்கில் இருக்கும் உயர்தரமான தங்கிப் படிக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவன் வாழ்க்கை முழுக்க அங்குதான் கழிந்தது. ஓராண்டில் ஒரு மாதகாலம் அவனுக்கு விடுமுறை வந்தபோது பெரும்பகுதியை அவன் தன் பாட்டி தாத்தாவுடன் பாட்னாவில் செலவழிக்கத்தான் விரும்பினான். தன் தந்தை பணியாற்றும் தொலைதூர சிற்றூர்களுக்குச் சென்று தங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை. அவன் அடம்பிடித்து பாட்னாவிலேயே தங்கினான். அவன் அப்படி அடம்பிடிப்பதை அவன் பாட்டியும் தாத்தாவும் பெருமையாக எண்ணினர்.
அவனுடைய பார்வையில் அவனது அம்மா எப்போதும் நரம்புத் தளர்ச்சி கொண்டவள் போல இருந்தாள். அனைவரையுமே வெறுத்து விலக்கி தன்னுள் தான் ஆழ்ந்து எப்போதும் அழத்தயாராக இருப்பது போலத் தோன்றினாள். அவன் தந்தை பெரும்பாலும் வீட்டுக்கு வருவதோ தாயுடன் நெருக்கத்தை வைத்துக்கொள்வதோ இல்லை. அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் அவனை ஒரு பெரிய மனிதரை போல் நடத்தினார்கள். அவர்களை அவன் அதிகாரம் செய்ய முடியும், அதில் மெல்லிய மகிழ்ச்சியும் அடைய முடியும். ஆனாலும் அங்கே விளையாடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் மூடிக்கிடந்தன.
பாட்னாவில் விடுமுறை உற்சாகமானதாக இருந்தது அவன் தாத்தா அவனுடன் நிறைய நேரத்தை செலவழித்தார். பாட்டியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்னாவின் தெருக்களை மிக விரும்பினான். அங்கு நிகழும் கிரிக்கெட் போட்டிகள், சைக்கிள் போட்டிகள் என அவனுக்கு பொழுதுபோக்குகள் நிறைய இருந்தன. பின்னர் அவன் பாட்னாவின் கங்கைக்கரைப் படிக்கட்டுகளில் நிகழும் சீட்டாட்டங்களில் ஈடுபாடு கொண்டான். பான்பராக் போடவும், பணம் வைத்து சூதாடவும் தொடங்கினான். அவனுக்கு முதல் பெண் அனுபவமும் அங்கே ஒரு முதிய பரத்தையிடம் அமைந்தது. அதன்பின் அவன் எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவன் முகமும் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தது.
ஊர்வசி தேஷ்பாண்டே தாய் எனும் அனுபவம் இல்லாதவளாகத்தான் வாழ்ந்தாள். விஃபவ் பிறந்தபின் தொடர்ச்சியாக அவளுக்குச் செய்யப்பட்ட பாலியல் நோய்க்கான சிகிச்சைகளின் காரணமாக இரண்டுமுறை அவளுக்கு கரு கலைந்தது. நான்காவது குழந்தைக்காகத்தான் அவளை ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் இல்லத்துக்கு அனுப்பியிருந்தார்கள். அங்கு அவள் வந்த நாள் முதலே அந்தக் கருவும் கலைந்துவிடும் என்ற அச்சத்தை அடைந்தாள். அப்போது அவளுக்கு உண்மையிலேயே ஒரு குழந்தை தேவைப்பட்டது. ஏனென்றால் விஃபவ் பிறந்தபோது அந்தக் குழந்தையை அவள் வெறுத்தாள். அந்தக் குழந்தை தன் உடலில் இருந்த அனைத்து சத்தையும் உறிஞ்சி சாப்பிடுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பழைய நினைவுகள், விருப்பங்கள் வெறுப்புகள் என்று அலைக்கழித்து அந்தக்குழந்தையை அவள் குழந்தையாக ஒருபோதும் குழந்தையாகப் பார்க்க முடியாதபடி செய்தது.
அதன் பிறகு கருவுற்றபோது அந்தக்குழந்தை ஒரு பெண்ணாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அது மூன்று மாதத்தில் கலைந்தபோது கடும் அச்சம் கொண்டாள். அந்தக் குழந்தையைப் பற்றி அவள் ஏராளமான கற்பனைகள் செய்திருந்தாள். அதன் முகத்தையே அவள் பார்த்திருந்தாள். நெடுங்காலம் அவள் கனவுகளில் அந்தக் குழந்தை வந்துகொண்டிருந்தது. அவள் விழித்தெழும்போது அருகே அந்தக் குழந்தை கையாட்டி சிணுங்கியபடி கிடந்தது. திடுக்கிட்டு அவள் எழுந்து மின்விளக்கைப் போட்டால் மறைந்தது. பலமுறை அவள் அருகே இருந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனை உசுப்பி என் அருகே குழந்தையைப் பார்த்தேன் என்று சொன்னாள். எப்போதும் மது போதையில் தூங்கும் வழக்கம் கொண்டிருந்த அவன் ‘அது கனவு, பேசாமல் படு’ என்று சொல்லி குழறியபடி புரண்டு படுத்தான். இரவெல்லாம் அவள் தூங்காமல் விழித்து படுக்கையில் அமர்ந்து அந்தக்குழந்தை அங்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தவள் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் கருவுற்ற போது முந்தைய குழந்தை நினைவிலிருந்து அகன்று பிறிதொரு குழந்தை அங்கே வந்தது. அது கலைந்தபோது இரு குழந்தைகளும் அவளை துரத்தத் தொடங்கின. அவள் குழந்தைகளின் குரல்களை மாறி மாறிக் கேட்கக் கூடியவளானாள். நடந்து செல்லும்போது சட்டென்று ஒரு குழந்தையின் குரல் கேட்க நின்று திடுக்கிட்டு திரும்பிப் பார்ப்பாள். அவள் உடல் துடிக்கத்தொடங்கிவிடும். சன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாலையில் குழந்தைகளுடன் போகிறவர்களை அவள் கடைசி எல்லை வரைக்கும் கண்களால் தொடர்ந்து பார்ப்பாள்.
அவர்களில் ஏதேனும் ஒரு குழந்தை திரும்பி அவளைப் பார்த்துவிட்டால் அவள் உடல் தூக்கிவாரிப்போடும். கைகால்கள் உதறத்தொடங்கும். அது தன் குழந்தையின் பார்வை என்று அவள் உணர்வாள். ஓடிவந்து வேலைக்காரர்களிடம் பிதற்ற ஆரம்பிப்பாள். “இன்று ஒரு குழந்தை சாலையில் என்னைப் பார்த்தது. அவ்வளவு தொலைவிலிருந்து என்னைப் பார்த்தது. அதற்குள் என்னுடைய குழந்தையின் ஆவி இருக்கிறது. என்னுடைய குழந்தைதான் மறுபிறப்பாக அங்கே பிறந்திருக்கிறது. இல்லாவிட்டால் அது ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இவ்வளவு தூரத்திலிருந்து ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?” என்று புலம்புவாள்.
வேலைக்காரர்கள் அவளுடைய அர்த்தமற்ற புலம்பல்களுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருந்தார்கள். அதை எப்போதுமே அவர்கள் புன்னகையுடன் ஆமோதித்தார்கள். ”நம் குழந்தை நம்மிடம் தேடி வந்துவிடும் மேம்சாப். அது ஒருபோதும் நம்மை விட்டு விலகாது” என்று அவர்கள் சொன்னார்கள்.
மூன்றாவது குழந்தை கலைந்தபோது அவள் அந்த குழந்தையைத் தற்செயலாகப் பார்க்க வாய்த்தது. அவள் உடலில் இருந்து ரத்தச்சேற்றுடன் நழுவிய அதை தாதிகள் ஒரு வெண்ணிறமான பாத்திரத்தில் எடுத்து வைத்தபோது அரைமயக்கத்தில் எச்சில் வழிய திரும்பிய அவள் கண்முன் அது தெரிந்தது. அரை மயக்கத்திற்குரிய அத்தனை புலன்கூர்மையுடன் அவள் அதைப் பார்த்தாள். நீண்டநேரம் துல்லியமாக அதைப் பார்த்துக்கொண்டே இருந்ததுபோல் அவள் உணர்ந்தாள். ஆனால் அரைக்கணம்தான் அவள் உண்மையில் பார்த்திருந்தாள். சிறிய தலையும், மிகச்சிறிய கைகால்களுமாக சுருண்டிருந்த அது சற்றே பெரிய இறால்மீன் போலிருந்தது.
நீண்டகாலம் ஊர்வசியை அந்த சிறிய உருவம் தொடர்ந்து வந்து வதைத்தது. கனவுகளில் அவள் முன் அது தோன்றும், அதன் சிறிய மண்டையின் கண்கள் திறந்து அவளைப் பார்க்கும். புழுவின் கண்கள். புழுவின் வாய். அது ஒரு பெரிய புழு. அவளுக்கு ஒற்றைத்தலைவலி வருவதுண்டு. தலைச்சுற்றலும் குமட்டலும் எடுக்கும். வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. இருண்ட அறைக்குள் தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது அந்த இருளுக்குள் மிக அருகே அது அமர்ந்திருக்கும். கைநீட்டினால் தொட்டுவிடலாம் என்பதுபோல. ஒருமுறை கனவில் அவள் தன் அடிவயிற்றில் வாழைப்பூவுக்குள் மடல்கள் அடர்ந்திருப்பதுபோல ஏராளமான சிறு குழந்தைகள் செறிந்து தொற்றியிருப்பதைக் கண்டு அலறி விழித்துக்கொண்டாள்.
மீண்டும் கருவுற்றபோது ஊர்வசி தேஷ்பாண்டே பெரும்பாலும் டாக்டர்களிடமிருந்து டாக்டர்களுக்குச் சென்று கொண்டிருந்தாள். ”இந்தக் குழந்தையை தங்கவைக்க வேண்டும்” என்று அவள் டாக்டர் ப்ரியா முகர்ஜியிடம் சொன்னாள். ”இந்தக் குழந்தை தங்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றாள்.
”இதென்ன பேச்சு? உங்கள் கருப்பை சற்று பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருந்தால் குழந்தை பிறந்துவிடும். இதெல்லாமே வெறும் உடற்கூறியல் விஷயங்கள் இதில் தவறு சரி, பாவ புண்ணியம் ஒன்றும் கிடையாது” என்று டாக்டர் ஆறுதல் சொன்னார்.
”இத்தனை குழந்தைகள் தவறுவதென்றால் ஏதோ பெரும் பாவம் இருக்கிறது” என்று ஊர்வசி சொன்னாள். ”இவர்களுடைய குடும்பத்தில் ஏதோ ஒரு சாபம் இருக்கிறது. இல்லையென்றால் என்னுடைய குழந்தைகள் இவ்வளவு தொடர்ச்சியாக கலைந்து கொண்டிருக்காது. அந்தக் குழந்தைகளுக்கு இங்கு வந்து பிறக்க விருப்பமில்லை.” வெளிறிய முகத்துடன் டாக்டரின் கைகளைப் பற்றிக்கொண்டு “இப்படி நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்திருக்கின்றன இங்கே” என்றாள்.
அப்போது எங்கோ யாரோ பேச்சுவாக்கில் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் ஊரில் கைவிட்டுவிட்டு வந்தவர் என்ற செய்தியைச் சொன்னார்கள். அவள் அதைப் பிடித்துக்கொண்டாள். ஃபணீந்திரநாத்தின் மனைவி சோனார்கஞ்சில் விபச்சாரியாக வாழ்ந்தாள். அவள் அனைத்து சாதியினராலும் புணரப்பட்டாள். அவருடைய மகளும் எல்லா சாதியினராலும் புணரப்பட்டாள். அவர்களுடைய உடம்பு சீழ் பிடித்து அழுகி அவர்கள் அங்கே இறந்தார்கள். அவர்கள் தங்களில் உருவான குழந்தைகளை கருவறுத்துக்கொண்டே இருந்தார்கள். “அந்தக் குழந்தைகளை நான் பார்த்தேன்… நான் என் கண்களால் பார்த்தேன். ஒவ்வொன்றின் கண்களையும் நானே பார்த்தேன்” என்று அவள் டாக்டரிடம் சொல்லி அழுது மயங்கிவிழுந்தாள்.
அந்தப்பெண்களின் உடலிலிருந்து மூதாதையரின் சாபம் இந்தக் குடும்பத்தின் மேல் விழுந்திருக்கிறது என்று அவள் நம்பினாள். தன் கணவருடனான ஒரு சண்டையில் ஆக்ரோஷமாக அவனை வசைபாடும்போது அவள் சொன்ன அந்த வரி அவளுக்கே உடனே உண்மை என்று தோன்ற ஆரம்பித்து ஒவ்வொருநாளும் வளர்ந்து ஆட்கொண்டது. ஒரு சில நாட்களுக்குள் பல்வேறு சாதியினரால் புணரப்பட்டு கைவிடப்பட்டு சிதைந்து அழிந்த அந்த இரண்டு பெண்களையும் அவள் மிக அருகே என பார்க்க ஆரம்பித்தாள். அந்தப்பெண்கள் தன்னைத் தொடர்வதாக நினைக்கத் தொடங்கினாள். அவளுக்கு ஒவ்வொரு நாளும் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது.
அவர்களுக்கான பிராயச்சித்தம் செய்ய வேண்டும், அவர்கள் ஆத்மா சாந்தியடையும்படி சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று அவள் கணவனிடம் சொன்னாள். ”உளறாதே” என்று அவன் கையோங்கி அடிக்க வந்தான்.
“ஆமாம், அடிக்க வாருங்கள். இப்படி நம் குழந்தைகள் சாவது எதனால் என்று நினைக்கிறீர்கள். நான் எல்லா பூசாரிகளிடமும் கேட்டுவிட்டேன். நம்மைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் சாபம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆத்மாக்களை நாம் கரையேற்றவில்லை என்றால் இந்தக்குடும்பத்தில் குழந்தைகள் வாழாது. விஃபவ் கூட ஆபத்திலிருக்கிறான் என்று ஒரு சோதிடர் சொன்னார்” என்றாள்.
அந்தக் கோபத்தில் அவள் சொன்னது இன்னும் அவளுக்குள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தது. விஃபவ் ஆபத்திலிருக்கிறான் என்று சொல்லத்தொடங்கினாள். அப்போது ஒருமுறை பாட்னாவில் படகில் கங்கையில் சென்ற விஃபவ் படகு கவிழ்ந்து நீரில் விழுந்தான். படகோட்டிகள் உடனடியாக அவனைத் தூக்கி கரையேற்றிவிட்டாலும் கூட அந்தச் செய்தி வந்தபோது அவள் மயங்கி விழுந்தாள். ஆஸ்பத்திரியில் மயக்கம் தெளிந்தவுடன் வெறிகொண்டவளாக எழுந்து அருகே நின்ற பணிப்பெண்களையும் தாதிகளையும் அடித்துக் கூச்சலிட்டாள். கண்ணாடிப் புட்டிகளையும் பாத்திரங்களையும் எடுத்து வீசினாள். அவளுக்கு மயக்க ஊசி போட்டு படுக்க வைத்தனர்.
மறுநாள் விழித்துக்கொண்டபோது அருகிருந்த கணவனை பாய்ந்து பிடித்து அவன் சட்டையைக் கிழித்து வெறிகொண்டு கூச்சலிட்டாள். ”உன்னுடைய குடும்பத்தின் சாபத்தால் என்னுடைய குடும்பம் அழிகிறது. நான் சாகிறேன். விஃபவும் சாகப்போகிறான். நீ இன்னொரு பெண்ணைக்கட்டி அவள் வாழ்க்கையையும் அழிக்கப்போகிறாய்” என்று கூச்சலிட்டாள். ”நீ பாவி. உன் குடும்பம் முழுக்க சாபம் நிறைந்திருக்கிறது… உன்னை ஆயிரம் கருக்குழந்தைகளின் ஆவிகள் துரத்திவருகின்றன… நீ நாசமாகப் போவாய்.”
அப்போது அவள் கணவனும் அதிர்ந்துவிட்டிருந்தான். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. கிழிந்த சட்டையுடன் வெளியே சென்று ஒதுங்கி நின்று புகை பிடித்துக்கொண்டிருந்தான். அவள் அலறி அலைந்து மயங்கி விழுந்தாள். தாதியரால் தூக்கி படுக்க வைக்கப்பட்டு மீண்டும் அமைதிப்படுத்தும் ஊசி போடப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்று மறைந்த இரு பெண்களுக்கும் விரிவான நீர்ச்சடங்குகளையும் பிராயச்சித்த சடங்குகளையும் பல ஆயிரம் ரூபாய் செலவில் செய்தார்கள்.
அங்கே அப்பெண்களுக்கு சடங்குகளைச் செய்த பாண்டா அவர்களிடம் “உக்கிரமான சாபம் இருக்கிறது… பெண் சாபம்” என்றார்.
“ஆமாம்” என்று அவன் சொல்வதற்குள் அவள் சொன்னாள். “அந்த சாபத்தால்தான் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.”
“பிராயச்சித்தம் செய்யவேண்டும். சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்…”
“என்னென்ன சடங்குகள்?” என்று அவள் கேட்டாள்.
“பிராமணபோஜனம்… பிராமண தானம்… இங்கே கங்கைக்கு முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரவேண்டும்”
அந்தச் சடங்குகள் செய்தபோது அவள் கணவன் அமைதியிழந்தவனாக இருந்தான். அவளுக்கு அச்சடங்குகளைச் செய்யும்போது ஒருவிதமான வஞ்சம் தீர்க்கும் இன்பம் எழுந்தது.
சடங்குகளை முடிக்கும்போது அவள் பாண்டாவிடம் “குலக்கலப்பு பாவம் அல்லவா? அதற்கும் பிராயச்சித்தம் செய்யவேண்டும் அல்லவா?” என்றாள்.
“ஆம், அது கொலைபோன்ற பாவம்… அதற்கு கண்டிப்பாக பிராயச்சித்தம் செய்யவேண்டும்”
“நீ வருகிறாயா இல்லையா?” என்று அஸ்வத் கூச்சலிட்டான்.
“நான் வருகிறேன்… எனக்கென்ன? வம்சமே அற்றுப்போகவேண்டும் என்று எழுதியிருந்தால் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?” என்று ஊர்வசி சீற்றத்துடன் சொன்னாள்.
“சாப், அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குண்டானதைச் செய்தே ஆகவேண்டும்.”
“ரத்தக்கலப்பு நடந்து குழந்தை பிறந்திருந்தால்தான் அந்தக் குலத்திற்குள் கெட்ட ரத்தம் கலந்திருப்பதாக அர்த்தமா பண்டிட்ஜி?” என்று ஊர்வசி கேட்டாள்.
“தேவையே இல்லை. ஒரு குலத்தில் ஒரு பெண்ணை கீழ்க்குலத்தான் ஒருமுறை அடைந்தான் என்றால்கூட பாவம்தான்… பழி அந்தக் குடும்பத்தை அழிக்கும்” என்றார் பாண்டா. “ஒரு துளி விந்துவில் ஒரு லட்சம் குழந்தைகள் இருக்கின்றன. அவை பிறக்காவிட்டாலும் கூட சாகமுடியும்.”
“நான் எதுவும் சொல்லவில்லை… ஊரின் அழுக்கெல்லாம் ஆற்றிலே வந்து சேர்வதுபோல இந்தக் குடும்பத்தின் பாவம் எல்லாம் என் உடம்பில் வந்து சேர்ந்துவிட்டது… என்னால் சாப்பிடமுடியவில்லை. நடமாட முடியவில்லை. என்னைச் சுற்றி இந்தப் பாவம் சாக்கடைபோல பரவியிருக்கிறது. மலம்போல நாற்றம் அடிக்கிறது” அவள் குமட்டி கங்கைப் படித்துறையிலேயே வாந்தி எடுக்க தொடங்கினாள்.
“நான் நினைத்தேன்…” என்றார் பாண்டா. அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல்படுத்தினார்.
”என்னால் முடியவில்லை பண்டிட்ஜீ… நான் செத்துக்கொண்டிருக்கிறேன். யாருக்குமே நான் சொல்வது கேட்கவில்லை. சாக்கடையில் புழுக்கள்போல இவர்கள் பாவத்திலே திளைக்கிறார்கள்.”
“வாயைமூடு நாயே” என்று அவள் கணவன் அவளை ஓங்கி அறைந்தான்.
அவள் வீறிட்டலறியபடி தன் கைகளை ஒன்றுடன் ஒன்று மோதி கண்ணாடி வளையல்களை உடைத்தாள். ஒரு கையால் நெற்றிக்குங்குமத்தை அழித்து இன்னொரு கையால் கருகுமணி மாலையை அறுத்துவீசிவிட்டு “நான் சாகிறேன்… கங்கையிலேயே சாகிறேன்” என்று கூச்சலிட்டபடி ஓடினாள்.
அஸ்வத் பாய்ந்து அவளை பிடித்து சுழற்றி தரையில் வீசினான். தரையில் படுத்து அவள் அழுதாள். தரையை கையால் அறைந்தபடி வெறிகொண்டு கத்தினாள்.
”சரி… சரி, சடங்குகளைச் செய்வோம்… பாண்டா, உங்களுக்குத் தேவையானதை தருகிறேன்… சடங்குகளைச் செய்வோம்” என்று அவன் சொன்னான்.
சடங்குகள் தொடங்கியபோது அவள் எழுந்து வீங்கிய முகத்துடன் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பகையுடன் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சடங்கு முடிந்தபின் பாண்டா அவன் கையால் மீண்டும் அவள் கழுத்தில் கருகுமணி மாலையைக் கட்டச்செய்தார்.
அதன் பிறகு சாதிக்கலப்பு செய்த அந்த இரு பெண்களும், அவர்களின் பிறக்காமலேயே செத்துப்போன குழந்தைகலும் அடங்கிவிட்டனர் என்று ஊர்வசி நினைத்தாள். எல்லாம் சீரடைந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. மீண்டும் அவள் சற்று அமைதிநிலையை அடைந்தாள். அவள் கணவன் அவளைத் தன் பிறந்த வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது அவள் சற்று நிம்மதியிழந்தாலும் கூட வேறு வழியில்லை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.
அஸ்வத் வேலைபார்த்த ஊரில் அவனுடன் தங்க அவளுக்கு பிடிக்கவில்லை. அது ஒரு பழைய பிரிட்டிஷ் காலத்து மாளிகை. பல கட்டிடங்களை ஒன்றுடன் ஒன்று ஓடுபோட்ட ஓர் இடைகழியால் இணைத்து ஒற்றைக்கட்டிடமாக ஆக்கியிருந்தார்கள். அவள் இருந்த கட்டிடத்தின் அறைக்குள் அவள் ஒரு மணியை அடித்தால் மட்டுமே வேலைக்காரர்கள் வந்தார்கள். வேலைக்காரர்களின் இடத்தில் எப்போதும் பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும். ஊர்வசி அங்கு செல்ல முடியாது. அவர்கள் அவளிருக்கும் இடத்திற்கு வரும்போது இயந்திரங்கள் போல் இருந்தார்கள்.
ஊர்வசி அங்கு இருந்த நான்கு மாத காலமும் தன்னுடைய அந்த தனித்த படுக்கை அறையிலேயே சிறையில் போல் இருந்தாள். ஆகவே பாட்னாவுக்குச் செல்லலாம் என்று கணவன் சொன்னபோது அவள் இயல்பாக ஒத்துக்கொண்டு அங்கே வந்தாள். அந்த இல்லத்தின் முன் கார் நின்றபோது முதற்கணமே அவள் ஒவ்வாமையை அடைந்தாள். வாந்தி வருவதுபோல குமட்டி வாயைப் பொத்திக்கொண்டாள். நீண்ட கார்ப்பயணமும் கர்ப்பமும்தான் காரணம் என நினைத்துக் கொண்டாள்.
“சிதைந்து அழிந்துகொண்டிருந்த உள்ளம். அதன்மேல் தொற்றி ஏறிக்கொண்டன நிழல்கள். காட்டில் நீயே பார்த்திருப்பாய். நலிந்த விலங்கின்மேல்தான் ரத்தம் உண்ணும் உண்ணிகள் பெருகும். அவற்றை அவ்விலங்கால் விலக்கக்கூட முடியாது. அது அவற்றை விரும்புவதுபோல, தன்னை அவற்றுக்கு விரும்பி அளிப்பதுபோலக்கூட தோன்றும்.” என்றது கானபூதி.
(மேலும்)
யாழ்ப்பாணன்
பாரதி ,நாமக்கல் கவிஞர் மரபிலான நவீன மரபுவழிச் செய்யுள்களை எழுதியவர். நினைவேக்கம், சமூகப்பிரச்சினைகளை கவிதைகளாக எழுதினார். யாழ்ப்பாணன் அவர்களின் கவிதைகள் எளிய நடையில் உயர்ந்த கருத்துக்கள் அழகுறப் பொதிந்தவையாக உள்ளன என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாராட்டியிருக்கிறார்.
யாழ்ப்பாணன் – தமிழ் விக்கி
May 24, 2025
முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான் !
[image error]தினமணி இதழில் 2022 ஏப்ரலில் வெளிவந்த பேட்டி.
எழுத்தாளர் ஜெயமோகன் 60 வயதை எட்டியுள்ளார் .அவரது இளமைப் பருவம், திருமணம், எழுத்து … குறித்து தினமணி வாசகர்களுக்காக மனம் திறந்து பேசுகிறார்.
உங்களின் 60 வயதை ஒட்டிய பேட்டி என்பதால் உங்கள் ஊரைப் பற்றியும் – பெற்றோர் பற்றியும் படிப்பு முதலானதைப் பற்றியும் அறியலாமா?
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருவரம்பு .அதன் அருகில் தான் திற்பரப்பு அருவி உள்ளது. திருவரம்பில் மகாதேவர் கோயில் மையமானது .அதை ஒட்டிய தொன்மையான வீடுகளில் ஒன்று என்னுடையது. எங்கள் குடும்பம் முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ‘கணபதியம் வளாகம்’ என்பது வீட்டுப் பெயர்.
‘வயக்க வீடு’ என்பது அப்பாவின் குடும்பப் பெயர்.
என் அப்பா பாகுலேயன் பிள்ளை பத்திரப்பதிவுத்துறை ஊழியராக இருந்தார்.அம்மா விசாலாட்சி நல்ல இலக்கிய வாசகி.அவருடைய அண்ணன் ஒருவர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தார். ஆகவே அம்மா இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்று மொழிகளிலும் நிறைய வாசிப்பவர் .எனக்கு இலக்கிய அறிமுகம் அம்மாவிடமிருந்து தான் .எங்கள் இல்லத்தில் நல்ல நூல் சேகரிப்பு இருந்தது. அம்மா என்னை ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். நான் இன்னொரு தொழிலையோ அடையாளத்தையோ கற்பனை செய்ததே இல்லை.
நான் வணிகவியல் இளங்கலை வரை படித்தேன். இறுதியாண்டு படிக்கும்போது என் நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டான்.
அது என்னை நிலைகுலையச் செய்தது .பல உளச்சிக்கல்களுக்கு ஆன்மிக நிலையழிவுக்கும் ஆளானேன். ஊரை விட்டு ஓடிப்போனமையால் படிப்பை முடிக்கவில்லை.
சிறுவயதில் துறவியாக ஆசைப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் .அது உண்மையா ? காசி – திருவண்ணாமலை –பழனி என்று சுற்றியதெல்லாம் எந்த ஆண்டுகளில் ?
நான் எனது 18 வயதில் ஒரு முறையும் 19 வயதில் இன்னொரு முறையும் ஊரை விட்டு ஓடிப் போனேன் .1981 82 இல் துறவியாக அலைந்திருக்கிறேன். துறவி என்று சொல்ல முடியாது. அப்போது ஆழ்ந்த உளச்சிக்கல் இருந்தது .ஆகவே தனியாக அலைந்தேன். பெரும்பாலும் சாமியார்களுடன் இருந்தேன் என்று சொல்லலாம். திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், பழனி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். குறுகிய காலம் .மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள்.
வேலைவாய்ப்பு –திருமணம் பற்றி கூறலாமா ? ரசிகையாகி – வாழ்க்கை துணைவர் ஆனவரை எப்போது சந்தித்தீர்கள்? முதலில் விருப்பத்தைத் தெரிவித்தவர் யார்? அந்த அனுபவம் ? அவரது ஊருக்குச் சென்றிருக்கிறீர்களா?
1984ஆம் ஆண்டு நவம்பரில் நான் காசர்கோடு (வடகேரளம்)தொலைபேசி நிலைய ஊழியனாக தற்காலிகப் பணியில் சேர்ந்தேன். அங்கே 1988 வரை பணியாற்றினேன். 1997 வரை தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பின்னர், நாகர்கோவில் வந்தேன். 2008 இல் தக்கலை தொலைபேசி நிலையத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். 2004 இல் திரைத்துறைக்குள் நுழைந்தேன் .அது முதல் நீண்ட விடுப்பில்தான் இருந்தேன்.
நான் தருமபுரியில் பணியாற்றும் போது 1990 இல் என் முதல் நாவல்’ ரப்பர்’ வெளிவந்தது .அகிலன் நினைவுப் பரிசு பெற்ற நாவல் அது .அந்த நாவலை வாசித்து விட்டு அப்போது மதுரை வேளாண் கல்லூரியில் மாணவியாக இருந்த அருண்மொழி நங்கை எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார். நவீன இலக்கியம் புரியாமல் அந்நியமாக இருப்பதைப் பற்றி எழுதியிருந்தார். நான் விரிவான பதில்கள் போட்டேன். பின்னர் நான் கேரளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது மதுரையில் வேளாண் கல்லூரிக்குச் சென்று அருண் மொழியைச் சந்தித்தேன். அந்த கடிதங்களில் இருந்த கூர்மையும் கூடவே இருந்த கள்ளமின்மையும்தான் நான் அவரை நோக்கிச் செல்ல காரணம். நேரில் சந்தித்தபோது பெரும் பிரியம் ஏற்பட்டது.
இலக்கிய ஆர்வம் கொண்ட அதேசமயம் சிறுமியைப் போல துறுதுறுப்பாக இருந்த அருண்மொழியை நான் மிக விரும்பினேன். என் காதலை தெரிவித்து கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துக்கு அவர் தந்தி அடித்து பதில் அளித்தார். தன் சம்மதத்தைக் கடிதம் வழியாக தெரிவித்தால் அது வந்து சேர நாலைந்து நாள்கள் ஆகுமே.
அதுவரை நான் தவிக்கக்கூடாது என அந்த தந்தியை அடித்திருந்தார். அவ்வாண்டே திருமணம் செய்து கொண்டோம். இப்போது அருண்மொழி அந்த நினைவுகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதி இருக்கிறார்.
நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி உள்ளிட்ட நிறைய குருமார்கள் மீது பிடித்தம் இருக்கிறதே ….? இவர்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள்? இவர்களைப் பற்றி அறிமுகம் என்ன?
நான் இளமையிலேயே சாவுகளைச் சந்தித்தவன்.சாவு வாழ்க்கை மேல் அடிப்படையான கேள்விகளை உருவாக்கி விடுகிறது .அவை ஆன்மீகமான அலைக்கழிவை உருவாக்கின. எனது 28 வயதுக்குள் பல துறவிகளைச் சந்தித்தேன் .அவர்கள் எனக்கு வழிகாட்டவில்லை .அது அவர்களின் பிழை அல்ல. என் உலகம் இலக்கியம். ஆகவே இலக்கியம் வழியாகவே ஓர் ஆசிரியர் என்னிடம் பேச முடியும் .இலக்கியம் நன்கறிந்த மெய்ஞானியாக நான் சந்தித்தவர் குரு. நித்ய சைதன்ய யதி .அவர் நடராஜகுருவின் மாணவர். நடராஜகுரு நாராயண குருவின் மாணவர். நடராஜகுரு மேலைத் தத்துவத்தில் சார் போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்ய சைதன்ய யதி தத்துவம், உளவியல் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். மாபெரும் இலக்கியவாதி. ஆகவே அவருக்கு நான் மாணவன் ஆனேன். அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன்.
தத்துவம் என்பது உரிய ஆசிரியர் அமையாமல் கற்றுக் கொள்ள முடியாத ஒரு துறை. ஆன்மிகம் என்பது ஆசிரியர் வழிகாட்டினாலொழிய உள்ளே செல்லவே முடியாத ஒரு களம். என் தத்துவ, ஆன்மிக தேடல்களால் நான் என் மெய்யாசிரியரைக் கண்டு கொண்டேன். இலக்கியவாதிக்கு தத்துவ அடித்தளம் இருந்தாக வேண்டும் .
தத்துவம் என்பது ஒரு பாடமாக நூல்கள் வழியாகக் கற்கத்தக்கது அல்ல. தத்துவப் படுத்தல் என்பது ஓர் அறிவுச் செயல்பாடு. அதை ஆசிரியர்தான் கற்பிக்க முடியும். எதையும் தத்துவார்த்தமாக அணுக நித்ய சைதன்ய யதியிடமிருந்து கற்றேன் . தத்துவார்த்த அணுகுமுறை என்பது எந்த விஷயமானாலும் அதன் சாராம்சம் என்ன ஒட்டுமொத்தம் என்ன என்று பார்ப்பது. அதைக் கற்பித்தவர் நித்யா தான்.
எழுத்து என்று வரும்போது உங்களது சிந்தனைப் போக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்தது ?
நான் எழுத ஆரம்பித்தது மிக இளமையில் .பள்ளி நாட்களிலேயே சிறுவர் இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன் .கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு பெயர்களில் வார இதழ்களில் கதைகள் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் எழுதுவது நின்றது. பின்னர் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்த போது மீண்டும் எழுதலானேன். 1986 இல் சுந்தர ராமசாமி அறிமுகமானார்.அவ்வாண்டே மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா அறிமுகமானார்.
இருவரும் என்னை இலக்கியத்தில் வழி நடத்தினர். சிற்றிழ்களில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். 1987 இல் கணையாழியில் ‘ நதி’ என்னும் சிறுகதையும் தீபம் இதழில் ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. கொல்லிப் பாவை இதழில் ‘கைதிகள்’ என்னும் கவிதை வெளிவந்தது
இவைதான் என் தொடக்க கால எழுத்துகள்.
என் இலக்கியப் பார்வை சுந்தர ராமசாமியும் ஆத்தூர் ரவிவர்மாவும் வடிவமைத்தது. ஓர் இலக்கியவாதி எந்த அரசியலியக்கத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த சிந்தனை முறைக்கும் முழுமையாக தன்னை அளித்துவிடக்கூடாது என்பதே என் முதல் நிலைப்பாடு.
இலக்கியவாதி முழுக்க முழுக்க தர்க்கபூர்வமாக, நடைமுறைத் தன்மையுடன் பேச வேண்டியதில்லை .அவன் உள்ளத்துக்கு தோன்றியதை எழுதவும் பேசவும் வேண்டும். அதில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம். சில விஷயங்கள் சமூகத்தால் ஏற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அவன் தன்னியல்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் க அவன் எதற்காகவும் தன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. எதற்கும் அஞ்சவும் கூடாது .என் இலக்கிய கொள்கை என்பது இதுதான் .
என் கதைகள் எல்லாமே தன்னியல்பாக வெளிவருபவை. எந்தத் திட்டமும் இருக்காது.
பெரும்பாலான சமயங்களில் ஒரு சின்ன காட்சி மட்டும் மனதில் தோன்றும். சில சமயம் வெறுமே முதல் வரி மட்டும் மனதில் எழும். உடனே எழுத ஆரம்பித்து விடுவேன் .ஆனால் நாவல்கள் அப்படி அல்ல. தெளிவான திட்டமிடல் அவற்றில் இருக்கும் .நாவலின் கரு என்பது ஓர் அடிப்படையான கேள்விதான் .அது மனதில் எழுந்ததும் நாவலின் களம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவேன்.
கதை ,நாவல் எழுதிய அனுப்பவும்?
‘விஷ்ணுபுரம் ‘ நாவலுக்கு ஏழு ஆண்டுகால ஆராய்ச்சி தேவைப்பட்டது . வெண்முரசு நாவல் தான் நான் திட்டமிடத் தொடங்கியது 1990இல் . 2014இல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகே எழுத ஆரம்பித்தேன் .நடுவே பல நூறு நூல்களை வாசித்தேன் .ஏராளமாகப் பயணம் செய்தேன். குறிப்புகள் மட்டும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் கையில் இருந்தன .ஆனால் இந்த திட்டமிடல் எல்லாமே நாவலின் வடிவம் கட்டமைப்பு சார்ந்தவை மட்டுமே. நாவலை உணர்ச்சிகளும் சரி கதாபாத்திரங்களும் சரி சித்தரிப்பும் சரி எழுத எழுத உருவாகி வருபவை மட்டுமே.
பொதுவாக ஒரே ஸ்ட்ரோக்கில் அல்லது மூச்சில் ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி விடுவீர்களா? இல்லை திருத்தங்கள் மேற்கொள்வீர்களா?
சிறுகதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் எழுதி விடுவதே என் வழக்கம் .ஏனென்றால் எனக்கே கதை தெரிந்திருக்காது. கதையை எழுத எழுத எனக்குள் அது விரிந்து வரும். அந்த ஆர்வமே எழுத வைக்கும் .அத்துடன் நான் எழுத்தை யோசித்துச் செய்வதில்லை .ஒரு கனவு போல அது நிகழ்கிறது .நடுவே விட்டு விட்டால் ஒருவேளை அப்படியே நின்று விடக்கூடும். ஆகவே எழுதிக் கொண்டே செல்வேன் .சிறுகதைகள் மட்டுமல்ல ‘குமரித்துறைவி’ போன்ற சிறிய நாவல்கள் கூட ஒரே மூச்சில் எழுதியவைதான். தொடர்ச்சியாக 30 மணி நேரம் எழுதி ‘குமரித்துறைவி’யை முடித்தேன்.
கணினியில் நேரடியாகவே டைப் செய்து விடுவீர்களா? இல்லை எழுதி வைத்து டைப் செய்கிறீர்களா?
நான் 2000 ஆம் ஆண்டில் கணிப்பொறியை வாங்கினேன். அன்று முதல் கணிப்பொறியில் நேரடியாக தட்டச்சிடுவதே வழக்கம். கையால் எழுதுவதில்லை. பேசும் வேகத்திலேயே தட்டச்சிடுவேன். ஆனால் அதற்கு முன் ‘விஷ்ணுபுரம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எல்லாம் கையால் தான் எழுதினேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று முறை செம்பிரதி எடுத்திருக்கிறேன்.
நான் படைப்புகளில் சோதனை முயற்சிகளை வேண்டுமென்றே செய்வதில்லை .ஆனால் நான் ஒரு படைப்பில் முன்வைக்கும் கேள்விகளுக்கு உகந்த முறையில் அதற்குத் தேவையான வடிவத்தை உருவாக்கிக் கொள்கிறேன். உதாரணம் விஷ்ணுபுரம் நாவல் நேரடி நிகழ்வுகளும் அந் நிகழ்வுகள் கதையாக ஆனபின் உள்ள வடிவமும் அக்கதைகள் நூல்களாக எழுதப்பட்ட வடிவ மும் ஒரே சமயம் கலந்து வருவதாக உள்ளது . அந்நாவல் நம் புராண மரபை ஆராயும் படைப்பு. புராணங்கள் அப்படித்தான் உள்ளன. அவை ஒரே சமயம் கற்பனையாகவும் வாழ்க்கையாகவும் உள்ளன. ஆகவே அவ் வடிவம் தேவையாகிறது.
நிறைய சோகங்கள் உங்கள் வாழ்க்கையில் …அதைத் திரும்பிப் பார்க்க விரும்புவீர்களா?
என் இளமைக்கால வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்தன .அவற்றிலிருந்தே எழுத்தாளன் ஆனேன். என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் அந்த நினைவுகள் கடுமையானவை. ஆனால் நான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இனி என் வாழ்க்கையில் துயரத்துடன் இருப்பதில்லை, சோம்பி இருப்பதில்லை என்று முடிவு செய்தேன் ,அதன்பின் ஒவ்வொரு நாளையும் எழுத்தும் வாசிப்பும் பயணமுமாகவே செலவிடுகிறேன். ஒரு பொழுதையும் வீணடிப்பதில்லை .எதையும் எண்ணி துயரமடைந்து செலவழிக்க எனக்கு நேரமில்லை.நான் செய்ய வேண்டிய பெரிய பணிகள் எஞ்சியிருக்கின்றன.
இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படி இருக்கிறது?
இன்றைய தமிழ்ச் சிறுகதை களத்தில் ஏராளமான புதிய குரல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.பா. திருச்செந்தாழை, ராம் தங்கம், லட்சுமி சரவணக்குமார், லெ.ரா.வைரவன், அரிசங்கர், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், கார்த்திக் பாலசுப்ரமணியம், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, ஜி. எஸ் .எஸ். வி. நவீன், கமலதேவி ,கனகலதா, குணா கந்தசாமி, மயிலன் சின்னப்பன் என பலர் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளில் பொதுவாக இன்றைய நவீன வாழ்க்கை உருவாக்கும் உறவுச் சிக்கல்கள் கருக்களாகின்றன. இன்று பெரிய அரசியல் கனவுகள் இல்லை .என் தலைமுறையில் உலகை மாற்றிவிடலாம் என்னும் நோக்கம் எழுத்துகளின் உள் கிடையாக இருந்தது. இன்றைக்கு அந்த நம்பிக்கை எவரிடமும் இல்லை .அதனால் உருவாகும் எதிர்காலக் கனவுகள் இல்லாத வெறுமை இவர்களின் பொதுவான பேசு பொருளாக உள்ளது. அதற்குரிய வடிவங்களை இவர்கள் அழுத்தமாக உருவாக்கி வருகின்றனர்.
இதேபோன்று நாவல் உலகம் ? புதிய முயற்சிகள் நடப்பதாகக் கருதுகிறீர்களா?
பெரிய அளவில் நாவல் முயற்சிகள் நிகழ்வதில்லை.புதிய தலைமுறை இன்று சிறுகதைகள் வழியாக தங்கள் மொழியையும் வடிவத்தையும் கண்டடைகிறார்கள்.சுனில் கிருஷ்ணன் எழுதிய’ நவ கண்டம் ‘நவீன் எழுதிய ‘பேய்ச்சி’, ‘சிகண்டி’, தூயன் எழுதிய ‘கதீட்ரல்’ போன்றவை அண்மையில் வெளிவந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. என் மகன் அஜிதன் எழுதிய ‘மைத்ரி’ என்னும் நாவல் இவ்வாண்டு வெளிவந்துள்ளது. எல்லா வரியும் கவிதையாக நிகழ்ந்த ஒரு அரிய படைப்பு அது.
திராவிட இயக்கங்களின் தாக்கங்கள் நிறைய உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்? எதனால் இந்த முரண் ?
திராவிட இயக்கங்களின் அரசியல் தாக்கம் ,மொழி, பண்பாட்டில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை நான் மறுப்பதில்லை. திராவிட இயக்கம் ஒரு பரப்பிய இயக்கம்.
ஒரு பரப்பிய இயக்கம் மக்களிடம் ஏற்கெனவே உள்ள நோக்கங்கள் ,கோபங்கள் ஆகியவற்றை ஒன்றாகத் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்குகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இடைநிலை சாதியினர் அதிகாரம் பெறுவதற்கு வழி வகுத்தது திராவிட இயக்கமே. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் அதனால் ஊக்கம் பெற்றன.
தமிழகத்தில் இருந்த சாதி வேற்றுமைப் பார்வைகள் தமிழ் மொழி மேல் இருந்த உதாசீனப் பார்வை ஆகியவற்றை எதிர்த்து இல்லாமலாக்கியதும் திராவிட இயக்கமே. அதை எப்போதும் ஏற்றுத்தான் பேசி வருகிறேன் .ஆனால் பரப்பியல் இயக்கம் எப்போதுமே அதற்கு முன்னால் இருந்த அறிவியக்கங்களில் இருந்தே தன் கொள்கையை எடுத்துக்கொண்டு அதை மக்களிடம் கொண்டு செல்லும்.
சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த அறிவியக்கங்களைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அதிலிருந்தே தங்கள் சிந்தனைகளை முன்னால் கொண்டு செல்ல வேண்டும். பரப்பியல் இயக்கம் எப்போதுமே கருத்துகளையும் கொள்கைகளையும் மிக மிக எளிமையாக ஆக்கிவிடும். எளிமையாக ஆக்கினால் தான் பொதுமக்களிடம் அவற்றைக் கொண்டு செல்ல முடியும் .அந்த எளிமையான கருத்துகளையும் கொள்கைகளையும் ஒட்டி சிந்திக்கும் சிந்தனையாளனும் எழுத்தாளனும் மிக மேலோட்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் எழுத்துக்களில் சமநிலை இல்லாத ஒற்றைப்படையான கோஷங்கள் நிறைந்திருக்கும். அதைத்தான் நான் நிராகரிக்கிறேன். இது நான் சொல்வது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், க .. சுப்பிரமண்யம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என அனைவருமே சொன்ன விஷயம் தான். நான் திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியல் கோஷங்களை நிராகரிக்கிறேன் .ஆனால் திராவிட இயக்கம் எந்தெந்த அறிவியக்கங்களில் இருந்து தன் கொள்கைகளை எடுத்துக் கொண்டதோ அந்த அறிவியக்கங்களை எல்லாமே ஆழ்ந்து கற்கிறேன். தமிழிசை இயக்கம் தனித்தமிழ் இயக்கம்,தனித்தமிழியக்கம், தமிழ் பதிப்பியக்கம் பற்றி எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறேன். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் முதல் இரா. இளங்குமரனார், ச. பாலசுந்தரம் வரை எத்தனை ஆளுமைகள் பற்றி மிக மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன் என்று பாருங்கள். என் அளவுக்கு அவற்றைப் பற்றி விரிவாக எழுதிய திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் இல்லை.
திருமாவளவன் பிடித்தமானவராக ஆனது எப்படி? ஆன்மிகம் சார்ந்த அவரின் கருத்துக்களை எப்படி எதிர்கொள்வீர்கள் ?அல்லது அது பற்றிய விமர்சனம் உண்டா?
நான் தலித் மக்கள் மீதான சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றைக் கண்கூடாகவே கண்டவன் .நம் அரசியலும் சரி அரசாங்கமும் சரி இன்று இடைநிலைச் சாதிகள் சார்ந்தவை. எல்லா அரசியல் இயக்கங்களும் இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவைதான். ஆகவே தலித் மக்களுக்காக ஓர் இயக்கம் உருவாகி வந்தபோதுதான் அந்த மக்களின் உரிமைகளைக் கூறவும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும் முடிந்தது .அந்த இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். ஆகவே அவர் ஒரு தார்மிக சக்தி என்று நம்புகிறேன். அவர் அறிவியக்கத்தின் மீது மதிப்பு கொண்டவர். பண்பட்ட மனிதர். அவருடைய அரசியலை நான் ஏற்கவில்லை .அவர் மதம், ஆன்மிகம் பற்றிச் சொல்லும் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளையே நான் சொல்லி வருகிறேன் .ஆனால் அவர் இந்து மதம், சனாதனவாதிகள் பற்றிச் சொல்லும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் உரிமை அவருக்கு உண்டு என நினைக்கிறேன் .ஆயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று பேசுபவர். அவர் இந்து மதத்தின் எல்லா கீழ்மைகளையும் தேக்க நிலைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்து மதமும் சனாதனிகளும் தங்கள் கடந்த கால கீழ்மைகளுக்காக தலைகுனிய வேண்டும். தங்களை அவற்றில் இருந்து மீட்டுக் கொள்ள வேண்டும். அவ்வகையில் நம் மனசாட்சியுடன் பேசும் குரல் அவர். அது நமக்கு வலிக்கிறது என்றால் அந்த வலி நமக்குத் தேவை. அந்த வலி நம்மை மீட்கும் சக்தி கொண்டது.
சோவியத் யூனியன் சிதைந்த போது – ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ வெளியானது .சோவியத் யூனியன் சிதைந்து 30 ஆண்டுகளும் உங்கள் நாவல் வெளிவந்த 20 ஆண்டுகளும் கடந்த நிலையில் தற்போதைய எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டி ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வெளிவந்தது .இன்று ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நாவல் புதிய தலைமுறையினரால் வாசிக்கப்படுகிறது .இன்று பலருக்கு சோவியத் ரஷ்யா என்றால் என்ன என்று தெரியவில்லை .பலர் லெனின், ஸ்டாலின் பெயர்களை எல்லாம் கூகுளில் தேடி தெரிந்து கொள்கிறார்கள். இன்னும் நூறாண்டுகளில் சோவியத் ரஷ்யாவையே இந்த நாவல் தான் தமிழில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் .ஆனால் அந்த நாவல் உருவாக்கிய கேள்விகள் என்றுமிருக்கும்.
கருத்தியல் குருட்டுத்தனம் பற்றி அந்நாவல் பேசுகிறது. ஒரு வலிமையான கருத்தியலை அதாவது கொள்கையை நாம் நம்பிவிட்டால் அதுவே சரி என தோன்றி விடுகிறது. வேறு எல்லாமே தப்பு என தோன்றுகிறது. அந்தக் கொள்கையின் பொருட்டு நாம் கொலை கூட செய்கிறோம். சொந்த பெற்றோரை, ஆசிரியர்களை அவமானம் செய்கிறோம் .ஆனால் அந்த கருத்தியல் அல்ல கு கொள்கை பின்னால் தவறாக ஆகுமென்றால் நாம் செய்த வை எல்லாம் இல்லை என ஆகி விடுமா என்ன? நாம் தனி மனிதர்கள் பத்தாயிரம் பேர் சேர்ந்து ஒன்றைச் சொன்னால் நம்மால் அதை எதிர்த்து உண்மை என்ன என்று கண்டறிய முடிவதில்லை. அதற்கான கல்வியோ உளவலிமையோ நமக்கு இருப்பதில்லை.
அப்படியென்றால் தனி மனிதனாக நாம் எப்படி உண்மையை அறிய முடியும்? இந்தக் கேள்வியைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் கேட்கிறது. அதற்கான விடையைச் சொல்கிறது. அந்நாவலில் இயேசு கிறிஸ்து வந்து அந்த விடையைச் சொல்கிறார். இன்று கம்யூனிசம் வலுவிழந்து விட்டது. ஆனால் புதிய கொள்கை வெறிகள் வந்துவிட்டன. இந்த பிரச்சினை என்றும் இருக்கும். அதைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் பேசுகிறது.
நீங்கள் வலது சரியாக இருக்கிறீர்கள் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
வலது சாரி, இடதுசாரி என்ற பிரிவினை எல்லாம் அரசியல் களத்தில் அந்தந்த சூழலில் சொல்லப்படுவது.நேற்று வரை காங்கிரஸ் வலதுசாரி கட்சி என்றார்கள். இன்றைக்கு அது இடதுசாரி என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி என்றால் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் தி.மு.க , அ.தி.மு.க. இரண்டுமே வலதுசாரிக் கட்சிகள்தான். சிந்தனையில் இப்படி எளிமையான பிரிவினை கிடையாது. சிந்தனையாளர்கள் மேல் இந்தப் பிரிவினையை போடுபவர்களுக்கு சிந்தனை துறையில் அடிப்படை அறிமுகமே இல்லை என்று தான் பொருள். உலகத்தில் உள்ள எந்த சிந்தனையாளரையும் இடதுசாரி, வலதுசாரி என பிரித்து வகைப்படுத்த முடியாது.
நீங்கள் எதிர்பார்க்கிற கருத்துச் சுதந்திரம் கிடைக்கிறதா?
கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்ற ஒன்று அல்ல. எந்த சமூகத்திலும் எதையும் சொல்லும் உரிமையில்லை. நான் உலகமெங்கும் பார்த்த வரையில் இந்தியாவில் தான் மிக மிக அதிகமான கருத்து சுதந்திரம் உள்ளது. இது இன்னமும் கல்வி அறிவில்லாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு .சிந்தனையையோ இலக்கியத்தையோ கேள்வி கூட பட்டிராத கோடானு கோடி பேர் இங்கே வாழ்கிறார்கள். சமூக ஊடகங்கள் வழியாக எந்த விஷமியும் அவர்களை எளிமையாக தூண்டிவிட முடியும் என்னும் நிலை உள்ளது. எல்லா கருத்துகளையும் விஷமிகள் வேண்டுமென்றே திரிக்கிறார்கள். ஆகவே கருத்துகளை மிகக் கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. அது ஒரு கட்டுப்பாடு. நாமே போட்டுக் கொள்ள வேண்டியது.
சாகித்ய அகாதெமியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
சாகித்ய அகாதெமி என்பது ஓர் துணை அரசு நிறுவனம் .அதில் பங்கேற்பவர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள் .அவர்களின் அதிகாரம்தான் அங்கே உள்ளது. பேராசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கிய அறிமுகமோ அடிப்படை வாசிப்போ கிடையாது .ஆகவே அவர்கள் வேறு வேறு சிபாரிசுகளுக்கு ஆட்பட்டு அடிக்கடி சாதாரணமானவர்களுக்கு விருதுகளை அளித்து விடுகிறார்கள் .வலிமையான விமர்சன இயக்கம் வழியாகவே சரியான எழுத்தாளர்களுக்கு விருதுகள் சென்று சேரும்படி செய்ய முடியும். கேரளத்திலும் கர்நாடகத்திலும் நிகழ்வது இதுதான் .
தமிழகத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த வகை அமைப்புகளில் ஊடுருவி தங்கள் சுயநல நோக்கங்களை செயல்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் நிறங்களை உடனே மாற்றிக்கொண்டு அதில் ஒட்டிக்கொள்வார்கள்.ஆகவே விமர்சகர்களின் கூர்மையான கண்காணிப்பு தேவைப்படுகிறது.
பத்ம விருதை தவிர்த்தது ஏன் ? அது உயரிய விருதல்லவா?
அரசு அளிக்கும் விருதுகளை ஏற்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. பத்ம விருதுக்காக என் நண்பர்கள் முயற்சி செய்தனர். சில முக்கியமான ஆளுமைகளின் பரிந்துரையும் இருந்தது. ஆனால் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதை ஏற்றுக் கொண்டால் நான் என் கருத்துகளை சமரசம் செய்ய வேண்டி இருக்கும் என்று தோன்றியது. ஆகவே மறுத்துவிட்டேன்.
சினிமா உலகில் உங்களது தற்போதைய இடம் நீங்கள் விரும்பியது தானா?
சினிமாவில் என்றல்ல எங்கும் நான் விரும்புவது அக்களத்தில் முதலிடத்தை . இன்று சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான்தான்.
சினிமாவில் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடிகிறதா?
சினிமாவில் நான் சாதிக்க விரும்பியது என ஏதுமில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை சராசரியானது. பொழுதுபோக்குக்காகவே அவர்கள் சினிமா பார்க்கிறார்கள். இங்கே சினிமா விமர்சகர் கூட பொது ரசனை ஒட்டிய பார்வை கொண்டிருக்கிறார்கள். சினிமா விமர்சனமே ஒரு தொழிலாக ஆகிவிட்டது .ஆகவே சினிமாவில் உள்ள நுட்பங்கள் ஆழங்கள் கவனிக்கப்படுவதில்லை.
உதாரணமாக நான் ‘பொன்னின் செல்வன்’ சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன். கடம்பூர் மாளிகைக்கும் பழையாறை மாளிகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்த்தேன். மிகச் சுருக்கமாக பிரிவின் நஞ்சு என்பதைச் சொல்லும் சில வசனங்கள் அதிலுள்ளன. அதை ஒருவராவது சொல்கிறாரா என்று பார்த்தேன். எவருமே சொல்லவில்லை.
பொத்தாம் பொதுவாக கலை இயக்கம் பரவாயில்லை, வசனங்கள் சில இடங்களில் கூர்மை .இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல இடங்களில் ஒரு கிளாசிக் ஓவியத்தன்மையை கொண்டிருந்தது. அதற்கான ஒளியை அமைத்திருந்தார். அதை ஒளிப்பதிவு சுமார் , தெளிவாக இல்லை என சிலர் எழுதினர். பொன்னியின் செல்வனை எந்த வகையில் சேர்ப்பது என்று கூட மலையாள விமர்சகர் தான் சொல்ல வேண்டி இருந்தது. அதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் ‘ போன்ற மாயாஜால படத்துடனோ அல்லது ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற குழந்தைகள் படத்துடனோ ஒப்பிடக்கூடாது. அதை ‘டிராய்’ அல்லது ‘எலிசபெத்’ போன்ற படங்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி ஒப்பிட்டால் அது அவற்றின் தரத்தை அடைந்திருப்பதைக் காணலாம். இங்கே மிக கொஞ்சம் பேர் அவர்களுக்கு உகந்த அரசியல் கருத்து சினிமாவில் சொல்லப்பட்டால் ரசிப்பார்கள் .அதுவும் நல்ல சினிமாரசனை அல்ல. ஆகவே சினிமாவில் எழுத்தாளனாக நான் செய்ய ஆசைப்படுவது ஒன்றுமில்லை. விளைவாக ஏமாற்றமும் இல்லை. நான் இயக்குநருக்கு கதையில் உதவி செய்பவன் மட்டுமே. கதையை இயக்குநரின் தேவைக்கு ஏற்ப செய்து கொடுப்பவன் ,அவ்வளவுதான். அது ஒரு தொழில். அந்தத் தொழில் மிகச் சிறப்பாகவே செல்கிறது .என் பொருளாதார சுதந்திரம் சினிமாவால் வந்தது. இலக்கியத்திலும் சிந்தனைக் களத்திலும் நான் எண்ணிய பல விஷயங்களை சினிமாவில் இருப்பதால்தான் செய்ய முடிகிறது .சினிமாவில் நான் விரும்பியது அது மட்டுமே.
அங்காடித்தெரு ,பொன்னியின் செல்வன் அனுபவங்கள் எத்தகையது?
என் முதல் வெற்றிப்படம் நான் கடவுள் .அதன்பின் அங்காடித்தெரு, சர்க்கார், பாபநாசம் என பல படங்கள் வெற்றி அடைந்தவை. நான் எழுதியவற்றில் 2.0, பொன்னியின் செல்வன் இரண்டும் சரித்திர வெற்றிகள். 2.0 படத்தை விக்ரம் படம் தான் முந்தியது.அதை இப்போது பொன்னின் செல்வன் முந்தியிருக்கிறது. தமிழ் சினிமாக்களில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களிடையே அதிக வணிக வெற்றி பெற்ற படம் இப்போதைக்கு பொன்னின் செல்வன் தான். அதற்கு படத்தின் சரித்திரம் சார்ந்த அழகியல் கண்களை நிறைக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்ததே முதன்மைக் காரணம். அடுத்தபடியாக அந்தப் படத்தை உலகம் முழுக்க கொண்டு சென்று சேர்த்த லைக்கா போன்ற மாபெரும் நிறுவனம் இரண்டாவது காரணம் .ஆனால் இணையாகவே சரளமான திரைக்கதை ஓட்டத்தை உருவாக்கியதும் காரணம். அதில் என் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் வசனங்கள் செந்தமிழில் அமைந்தாலும் எளிமையாக இருந்ததும் சுருக்கமாக இருந்ததும் வெற்றிக்குக் காரணம் .அப்படி இருந்தமையால்தான் அந்த வசனங்களை எல்லா மொழிகளிலும் நன்றாக மொழிமாற்றம் செய்ய முடிந்தது. சுருக்கமாக சப்டைட்டில் போட முடிந்தது. ஆகவே தான் உலகம் முழுக்க சென்றது. பொன்னியின் செல்வன் வசனங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் கூட சிரிப்பும் கைத்தட்டலும் விழுகின்றன. அவ் வசனங்களின் மொழியாக்க வடிவங்கள் அந்தந்த மொழிகளில் ஒற்றை வரிகளாவே புகழ்பெற்றிருக்கின்றன .அந்த வகையில் எனக்கு மிகுந்த மன நிறைவு .என் சினிமா தொழிலில் இந்த ஆண்டு ஓர் உச்சம். என் இரண்டு படங்கள் ஒரே மாத
க. கணபதிப்பிள்ளை
[image error]க. கணபதிப்பிள்ளை ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கல்வெட்டாய்வாளர். மொழியியல், ஒலிப்பியல், கல்வெட்டியல், நாடகம், இலங்கை வரலாறு என விரிவான பங்களிப்பு செய்துள்ளார்.
க. கணபதிப்பிள்ளை
க. கணபதிப்பிள்ளை – தமிழ் விக்கி
காவியம் – 34
கந்தர்வர்கள் பெண்ணை ஆட்கொள்ளுதல். மதுரா அருங்காட்சியகம். சாதவாகனர் காலம் பொயு 3கானபூதி சொன்னது. எப்போதுமே ஒருவரை நிழல்களில் ஒன்று மட்டும் சென்று பற்றிக்கொள்வதில்லை. மனிதனுக்கு இரு செவிகள். இரண்டு கண்கள். இரண்டு மூக்குத்துளைகள். ஒன்று மட்டுமே இருப்பவற்றுக்கும் இரண்டு பணிகள். இரண்டுக்கும் இடையேயான ஒத்திசைவுதான் மனிதனின் இருப்பு. அந்த இணைவைச் சிதைப்பதன் வழியாகவே நிழல்கள் மனிதனுடன் விளையாடுகின்றன.
செவி தான் நிழல்கள் மனிதனை அணுகும் முதன்மை வாசல்கள். ஏனென்றால் செவி ஏற்கனவே இரண்டாகத்தான் செயல்படுகிறது. ஒலிகளை அருகில் என்றும், தொலைவில் என்றும் அது பிரித்துக் கொண்டிருக்கிறது. வேண்டியவை, வேண்டாதவை என்று பிரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நிழல்கள் சென்று மனிதர்களை இருபக்கமும் அணுக்கமாகப் பின்தொடர்ந்து செவிகளில் பேசத்தொடங்குகின்றன. இரண்டு செவிகளிலும் இரண்டு உரையாடல்கள் தொடர்ந்து நிகழும்போது மனிதர்கள் தங்கள் ஒருமையை இழக்கத் தொடங்குகிறார்கள்.
மனிதர்கள் உள்ளம் என்பது ஒருமை கொண்டிருக்கையில் மட்டுமே பயன்படும் கருவி. விலங்குகளின் உள்ளம் வெளியே இருக்கும் பருப்பொருள் வெளியுடன் முழுமையாகத் தன்னை பிணைத்துக் கொண்டிருப்பதனால் இயல்பாகவே ஓர் ஒருமையை அடைந்து விட்டிருக்கிறது. என்றோ எப்போதோ மனிதன் தனக்குள் தனியாக இயங்கும் உள்ளம் என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டான். அதன்பின் இயல்பான ஒருமை என்று ஒன்று அவனுக்கு அமையவே இல்லை. பிரிவதன் வழியாக, சிதறுவதன் வழியாக மட்டுமே செயல்படமுடியும் என்னும் பெரும் சாபம் மானுட உள்ளம் மீது கவிந்திருக்கிறது.
மனஒருமையை மனிதர்கள் புறஉலகை நோக்கித் தன் அகத்தை முழுமையாகச் செலுத்திக் கொள்ளும்போது, அல்லது புறஉலகு மட்டுமே முற்றிலும் அவர்களை ஆட்கொண்டிருக்கும்போது மட்டும் அடைகிறார்கள். எளியோர் அடையும் மனஒருமை என்பது அது மட்டுமே. பசியாலும் அச்சத்தாலும் ஆட்கொள்ளப்படும்போது வேறேதும் இல்லாத நிலை வருகிறது. ஆகவே ஒவ்வொரு கணமும் வாழ்தலுக்காக போராடுபவர்கள் தவிர்க்க முடியாத மனஒருமையைக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வதற்கான போராட்டம் குறையும்போது உள்ளம் ஒருமையை இழக்கிறது. புறஉலகின் பிடியிலிருந்து அது நழுவி தனக்கான தனி அலைச்சல் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறது.
உள்ளம் அவ்வாறு விடுபட்டு அலையத்தொடங்கிய பின்னர் மானுடர் தெய்வங்களை நாடுகிறார்கள். படிகமணி மாலையையும் ருத்ராக்ஷ மாலையையும் கையில் ஏந்தி அமர்ந்து, ராம நாமத்தையோ சிவ நாமத்தையோ சொல்லி, உருட்டி உருட்டி கை வழியாக ஒழுகிச் செல்லும் காலத்தில் தன் உள்ளத்தை நிறுத்தி, ஒருமை கொள்ளச்செய்ய முயல்கிறார்கள். பலகோடி முறை இறைவனின் நாமங்களை சொல்கிறார்கள். மூடிய அறைகளின் முன் தெய்வங்களுக்கு முன் தோத்திரப்பாடல்களை பாடுகிறார்கள். கண்மூடி தியானத்திலும் யோகத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். நூல்களை பாராயணம் செய்கிறார்கள். என்னென்னவோ முறைகளில் தங்கள் உள்ளத்தை தொகுத்துக்கொள்ள இடைவிடாது முயன்று கொண்டிருப்பதே உள்ளத்தின் பிளவின் அலைக்கழிப்பில் இருந்து சற்றேனும் விடுபடுவதற்கான வழியாக இருக்கிறது.
ஆனால் உலகியல் அவ்வாறு ஒருவரை விட்டுவிடுவதில்லை. வெளியுலகில் அதன் போராட்டங்கள் இல்லாமல் ஆகும்போது அது தன்னை வெறும் உணர்வுகளாகவும் கற்பனைகளாகவும் உருமாற்றிக்கொண்டு மனிதர்களைச் சூழ்ந்துகொள்கிறது. கற்பனை எதிரிகள், கற்பனை அபாயங்கள், நிகழாத இழப்புகள் என உள்ளம் உலகியலை பெருக்கிகொண்டே இருக்கிறது. வஞ்சங்கள், துரோகங்கள், பகைகள், வெறுப்புகள், காழ்ப்புகள், சதிகள், வெற்றி, தோல்விகள் என்று புறவுலகமே அகத்தில் நுரைத்து நிறைந்து கவியத் தொடங்குகிறது. ஒருவரை ஒன்றென்று அமைய முடியாதபடி அது பத்து திசைகளிலும் திறந்து இழுத்து சிதைக்கிறது.
செல்வந்தர்களின் இல்லங்களில் பொருளீட்டுவதற்கு என்று ஒருவர் அமைந்துவிடுகிறார். அப்பொருளைக் கொண்டு வாழ்வது மட்டுமே அக்குடும்பத்தில் பிற அனைவருடைய வாழ்க்கை ஆகிறது. அவர்களின் இல்லத்துப் பெண்கள் ஆடம்பரங்களுடன், வசதிகளுடன் தனித்துவிடப்படுகிறார்கள். நீ தேடும் அனைத்தும் இதோ என்கிறது குடும்பம். ஏன் இப்படி இருக்கிறாய், நீ மகிழ்ச்சியாகத்தானே இருந்தாக வேண்டும், இதற்கு அப்பால் என்ன வேண்டும் உனக்கு என்று அதட்டுகிறது. நீ மனநோயாளி என்று குற்றம்சாட்டுகிறது. நன்றியில்லை என சீறுகிறது. இத்தனைக்குப் பிறகும் நிறைவில்லை என்றால் செத்துத்தொலை என கசப்பைக் கொட்டுகிறது.
ஆனால் புறஉலகம் இல்லாமல் வாழ்வது எளிதல்ல. போராடி, அடைந்து, ஏங்கி, தேடி, தவித்து, அடைந்து, சலித்து மீண்டும் ஏங்குவது என்ற உலகியலின் வழிகளை முழுமையாக அடைத்துவிட்டு, தேவையான அனைத்தையும் சுற்றிலும் பரப்பிவைத்துவிட்டு வாழ்ந்துகொள் என்று சொன்னால் மனிதர்களால் வாழமுடிவதில்லை. உள்ளே சிதறிப்பெருகும் அனைத்தையும் அவர்கள் எப்படி எதைக்கொண்டு தொகுத்துக் கொள்ள முடியும்? மனம் என்பது அருவமான பெருக்கு. அதைக் கட்டுப்படுத்த திட்டவட்டமான பருப்பொருட்களால் ஆன வெளியுலகம் தேவை. அது இல்லையேல் அது கரையில்லாத கொப்பளிப்புதான்.
ஆகவே செல்வந்தர்களின் இல்லத்துப் பெண்களின் உள்ளம் ஒவ்வொரு கணமும் பெருகும் நச்சு ஊற்று போன்றிருக்கிறது. நூறு நூறு கிளைகளுடன் வளரும் விஷச்செடி போலிருக்கிறது. அவர்கள் தங்களைத் தொகுத்துக்கொண்டு ஒற்றை ஆளுமையாகத் திகழும் தருணங்கள் இரண்டேதான். ஒன்று, நுகர்வு,. உணவு, ஆடை அணிகள், பிற கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் அவர்கள் தங்களை மறக்கும் தருணங்கள். இன்னொன்று, அவர்களே அகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கற்பனையான புறஉலகம் வீரியம் கொள்ளும்போது. அதாவது வஞ்சங்களின், காழ்ப்புகளின், சீற்றங்களின், கசப்புகளின் பொய்வெளி உக்கிரம் அடையும்போது.
அவர்கள் அவ்விரு தளங்களையும் அவர்கள் தங்கள் தர்க்கத்தால் தொடர்ந்து இணைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நுகர்பொருளைத் தொடர்ந்து போய், அதைக்கொண்டே வஞ்சங்களுக்கும் காழ்ப்புகளுக்கும் சென்று, அதை அதன் உச்சம் வரை கொண்டு நகர்த்தி, அங்கே உணரும் ஒரு வெறுமையில் திகைத்து அப்படியே கைவிட்டு இன்னொரு நுகர்பொருளை நோக்கி வருகிறார்கள். என் ஆடையைக் கண்டு அவள் பொறாமை கொண்டாள் என்கிறார்கள். இந்த நகை இவளை தூங்கவிடக்கூடாது என்கிறார்கள். அவளுடைய வைரம் எனக்கு இல்லையே என கண்ணீர்விடுகிறார்கள்.
இயல்பாகவே சிதறிக்கொண்டிருக்கும் மானுட உள்ளத்தைச் சிதறடிப்பது நிழல்களுக்கு மிக எளிதானது. அவர்கள் ஏற்கனவே சிதறடித்து வைத்திருக்கும் உள்ளத்தின் வெவ்வேறு தரப்புகளை எடுத்து மாறி மாறி அவர்களிடமே கூற வேண்டியதுதான் செய்ய வேண்டிய விஷயம். ஒருபோதும் அவர்கள் ஒருங்கு கூடாமல் பார்த்துக்கொள்வது மட்டும் போதும். அதுவே அவர்களை முற்றாக சிதைந்தழியச் செய்துவிடும். எனது நிழல்கள் அவ்விளையாட்டை தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பவை. ஏனென்றால் மானுடரை தங்கள் முடிவில்லாத வினாக்களுக்கு இரையாக்கி, அதன் வழியாகத் தங்கள் விடைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையே அவற்றை இங்கே வாழச்செய்கிறது.
ஊர்வசி தேஷ்பாண்டே இளமையிலேயே வலுவிழந்த உள்ளம் கொண்டவளாக இருந்தாள். இரண்டு சகோதரர்களுக்குத் தங்கையாக அவள் பிறந்தாலும் அவர்கள் இருவரும் அவளைத் தங்கள் பணிப்பெண்ணாகவே கருதினார்கள். ஏனென்றால் அவர்களின் சிற்றூரில் அவர்களால் ஏவப்படத்தக்க ஒரே மானுட உயிராக அவளே இருந்தாள். அங்கு அந்தணச் சிறுவர்கள் பிறருடன் விளையாட முடிந்ததில்லை. தந்தையிடம் சென்று மொழியும் ஆசாரங்களும் கற்றுக்கொள்வதும், தந்தையின் பூஜைகளுக்கு உதவுவதும், அவருடன் சென்று அவர் பணியாற்றிய சிறிய ஆலயங்களுக்கும் அரண்மனையின் எட்டு வழிபாட்டிடங்களுக்கும் பூசையில் உதவுவதும் மட்டுமே அவர்களின் அன்றாடம் என்று இருந்தது. தந்தையின் முன் மறுசொல்லற்ற பணிவும், பிற அனைவர் முன்னும் பணிந்த விலக்கமும் அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அன்னையை அவர்கள் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளியே இருந்து பெற்றுக்கொண்டே இருந்த அதிகாரத்தை இன்னொருவர் மேல் செலுத்துவதற்கு அவள் மட்டுமே வழியாக இருந்தாள். ஆணைகளைப்பெறுபவர் அந்த ஆணைகளின் ஒரு பகுதியையாவது திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களால் இந்த பூமியில் வாழமுடியாது. அடிமைகளே கீழ்த்தரமான ஆண்டைகளாகவும் ஆகிறார்கள்.
ஆகவே ஊர்வசி இளமையிலேயே தன் இரு அண்ணன்களிடம் இருந்தும் அடிகளையும் அவமதிப்புகளையும் பெற்று வாழ்ந்தாள். ஏழு வயது வரை அவளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே அவள் தந்தைக்கு இருக்கவில்லை. உள்ளூரின் பள்ளி ஆசிரியர் அவர்களின் வீட்டுக்குத் தேடி வந்து அவள் தந்தையிடம் அவளைப் பள்ளியில் சேர்ப்பது பற்றிக் கேட்டபோது கூட அவர் அதற்கு தயங்கினார். ஆனால் அந்தணர்கள் உலகம் முழுக்க கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், கல்வி கற்காத பெண்ணை எவருக்கும் மணம் புரிந்து கொடுக்க முடியாது என்றும் அவர் சொன்னபோது, அதை மட்டும் அஞ்சி மகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்.
ஏற்கனவே தாயிடமிருந்து மொழியும், கணிதமும் அடிப்படைக் கல்வியாகப் பெற்றிருந்த ஊர்வசி நேரடியாக இரண்டாவது வகுப்பிலேயே சேர்ந்தாள். அவளுக்கு வெல்வதற்குரிய வெளியுலகமாக இருந்தது பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட பாடங்கள் மட்டுமே. படிப்பில் அசாதாரணமான ஆற்றலை வெளிப்படுத்துபவளாக ஓரிரு ஆண்டுகளிலேயே ஊர்வசி அறியப்பட்டாள். அவளுடைய ஊரின் ஜமீன்தார் குடும்பம் அப்போது தேயிலைத் தோட்ட உடைமையாளர்களாகவும், ஊரின் எல்லா வியாபாரங்களையும் தங்கள் கைக்குள் வைத்திருப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அவளுக்கு உபகாரச் சம்பளம் அளிக்க முன்வந்தார்கள். ஆகவே பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததுமே அவள் அருகே உள்ள கல்லூரியில் சேர்ந்தாள். தந்தைக்கு அவள் கல்லூரிக்கு சென்று வருவதில் தயக்கமும் பயமும் இருந்தது. அவளைப் போன்ற அழகிகள் அப்பகுதியில் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் ஜமீன்தார் என்று அப்போதும் அழைக்கப்பட்டு வந்த பீர்பகதூர் ராய்சௌத்ரியின் பேச்சுக்குமுன் மறுசொல் எடுக்க முடியவில்லை.
ஆங்கில இலக்கியம் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஊர்வசி அவள் கல்லூரிக்குச் செல்லும் வழி முழுக்க அத்தனை இளைஞர்களாலும் கொண்டாடப்படுபவளாக திகழ்ந்தாள். கல்லூரிக்குச் செல்வது வரை அவள் தனக்கிருந்த பெண்ணெனும் கவர்ச்சியை உணர்ந்திருக்கவில்லை. ஊரில் அவளை சிறுமியென்றும், பிராமணப்பெண் என்றும் மட்டுமே பார்த்தனர். எவருடைய மகள் என்றும், எவருடைய தங்கை என்றும் மட்டுமே அவளை கருதினர். கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து காத்து கிளை விரிந்த கொன்றை மரத்தின் கீழ் மார்போடு புத்தகங்களை அணைத்துக்கொண்டு நின்றிருக்கையில் அவள் வெறும் உடல் மட்டுமாக இருந்தாள். வெண்ணிறத் தோல் மட்டுமாகவும், விரிந்த கண்கள் மட்டுமாகவும், சிவந்த உதடுகள் மட்டுமாகவும், சிவந்த சிறு பருக்கள் கொண்ட கன்னம் மட்டுமாகவும். முலைகளாகவும் தொடைகளாகவும்.
ஒவ்வொரு கண்ணும் தன்னை எப்படி தொட்டு வருடிச் செல்கிறது என்று அவளுக்குத் தெரிந்தது. அது அளித்த உளக்கிளர்ச்சியும் பரவசமும் அவளை கல்லூரி வாழ்க்கையையே ஒரு பெரிய கனவாக மாற்றிக்கொள்ளச் செய்தன. அவள் எவரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. தனியாகச் செல்வதும் இல்லை. அவளுக்கு என்று மூன்று தோழிகள் இருந்தனர். அவர்களுடன் ஓரிரு சொற்கள் பேசி, குனிந்து புன்னகைத்தபடி, எவரையுமே ஏறிட்டுப் பார்க்காமல் அவள் பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றாள். வகுப்பில் அவள் தனக்கான இடத்தில் தன் புத்தகங்களுடனும் குறிப்பேடுகளுடனும் தனியாக இருந்தாள். வகுப்பில் முழுக்கவனத்தையும் படிப்பிலேயே செலுத்தினாள். மனப்பாடம் அவளுக்கு எளிதாக அமைந்தது. ஆங்கில இலக்கியத்தில் எதையுமே அவள் புரிந்துகொள்ளவில்லை. பேசும் எதையும் செவிகளால் பெற்று உள்வாங்கிக் கொள்ளும் பயிற்சி அவளுக்கு இருக்கவில்லை. ஏனெனில் அவளுடன் எப்போதும் எவருமே பேசியதில்லை. புத்தகங்களில் கண்ணுக்குப்படும் எழுத்துகளை அப்படியே நினைவுகூர்ந்து, அச்சு எடுத்தது போன்று அழகிய எழுத்துகளில் திரும்ப எழுதிவிட அவளால் இயன்றது. ஆகவே வகுப்பில் அவள் முதலிடத்தில் இருந்தாள். ஆசிரியர்களுக்கு விருப்பமானவளாகவும் வகுப்பில் அடிக்கடி பாராட்டப்படுபவளாகவும் திகழ்ந்தாள்.
‘அழகும் அறிவும் முழுதும் அமைவது மிக அபூர்வம். இவள் கலைவாணியின் பிறப்பு’ என்று ஆசிரியர் சூரியக்குமார் மஜும்தார் வகுப்பிலேயே சொன்னார். பள்ளியில் அது ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களிடையே பிரபலம் அடைந்தது. அதுவரை அவளைக் கவனிக்காதிருந்த பள்ளியின் விளையாட்டு வீரனும் அருகிலிருந்த சம்பா ராஜ் என்னும் ஜமீந்தாரின் மகனுமாகிய ஆனந்த்குமார் ராஜ்சௌத்ரி அவளைக் கவனிக்க அது வழி வகுத்தது. அவன் நண்பர்கள் அவனுக்குரிய பெண் அவளேதான் என்று அவனிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அக்கல்லூரியில் இன்னொரு ஆண் அவளை வெல்வதென்பது அவனுக்கு இழைக்கப்படும் அவமதிப்பென்றே சித்தரித்தார்கள். அவன் அதை நம்பத்தொடங்கியதும் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்க முனைந்தான்.
ஆனந்த்குமார் அவனுடைய பதினைந்து வயது முதல் பெண்களை அறியத் தொடங்கியவன். அவன் இல்லத்திலிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பணிப்பெண்களில் அனைவரையுமே அவன் புணர்ந்திருந்தான். அவனை வளர்த்த செவிலித்தாயிலிருந்து அச்செவிலித்தாயின் இளைய மகள் வரை. அவனுக்கு பெண்களிடம் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு கல்லூரியில் அவன் குறிவைக்கும் எந்தப் பெண்ணையும் அவனால் வீழ்த்திவிட முடியுமென்றும் அவன் தன் நண்பர்களிடம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய முதன்மை ஆர்வம் வேசிகளிடம்தான் இருந்தது. வேசிகள் அளிக்கும் சரசநாடகங்களை அஞ்சி நடுங்கி படுக்கைக்கு வந்து, பிணம்போல கிடந்து, உறவுக்குப்பின் அழுதபடி எழுந்து செல்லும் எளிய பெண்கள் அளிக்கவில்லை என்று அவன் சொன்னான். ஒரே நாளில் ஊர்வசி சர்மாவை வென்றுவிடுவேன் என்று சூளுரைத்து அவன் அவளை அணுகினான்.
எளிய பெண்களை போகத்தில் பயிற்சி கொண்ட ஆனந்த்குமார் போன்றவர்கள் எளிதில் வென்றுவிட முடியும். உண்மையான காதல் கொண்டவர்கள் பொதுவாகப் பெண்களை அறியாதவர்கள். அவர்கள் தயங்கித் தடுமாறி, பெரும்பாலும் தோற்றுவிடும் இடத்தில் பெண்வேட்டையர்கள் எளிதில் ஊடுருவிச் செல்வார்கள். மெய்யான காதல் கொண்டவர்களிடம் இருக்கும் தயக்கமும் பயமும் அவர்களின் பலவீனமாக பெண்களால் புரிந்துகொள்ளப்படும். காதலர்கள் காதலியை நேருக்குநேர் கண்களால் சந்திக்க முடியாமல் அலைக்கழிவார்கள். ஆனால் காமத்தை நன்கறிந்தவர்களின் தன்னம்பிக்கையும் வெட்கமின்மையும் பெண்களால் ஆற்றலென்றும் ஆண்மையென்றும் புரிந்துகொள்ளப்படும். பெண்வேட்டையர்கள் வேட்டையை அறிந்தவர்கள். அவர்கள் பெண்களை கண்களுக்குள் நோக்கிப் பேசுவார்கள், பெண்கள் கண்களைத் தாழ்த்திக்கொள்ளச் செய்வார்கள். அதுவே முதல்வெற்றியாக அமையும்.
ஆனந்த்குமார் அவளிடம் நிமிர்ந்த தோள்களுடன், நேர்ப்பார்வையுடன், அவளுக்கென்றே சொல்லப்படுவது போன்ற ஆழ்ந்த தணிந்த குரலில் பேசினான். அவளுடைய அழகை ஒவ்வொருமுறையும் புகழ்ந்தான். அவனுடைய செல்வத்தையும் சமூக இடத்தையும் அறிந்திருந்த அவள் முன் அவன் ஒவ்வொரு நாளும் தன்னை தணித்து இறக்கிக்கொண்டும் இருந்தான். ஒரு மதயானையை தன் முன் மத்தகம் தாழ்த்தி பணிய வைத்த நிறைவை அவளுக்கு அளித்தான். அவன் பேசிய எல்லாச் சொற்களுமே அவளைப் புகழ்வதாக இருந்தன. ஆனால் நேரடியாக அவளைப் புகழ்வது போல அமையவுமில்லை. அவளிடம் அவன் பேசிய எல்லா பேச்சுமே காமத்தை மறைமுகமாக உள்ளடக்கியவையாக இருந்தன, அவளைச் சிரிக்கவும் நாணவும் வைத்தன. ஆனால் அவை எல்லைமீறாதவை என்னும் தோற்றமும் கொண்டிருந்தன.
அவன் தன்னுடைய பிழைகளை அவள் முன் அறிக்கையிட்டான். எப்படி பல பெண்களால் தான் ஏமாற்றப்பட்டு ஒழுக்கமின்மை நோக்கி செல்ல நேர்ந்தது என்றும், அதை எண்ணி எண்ணி அவன் வருந்துவதாகவும் சொல்லி, குரலிடறக் கண்ணீர் மல்கினான். அவளைப் பார்த்தபின் மற்ற பெண்களெல்லாம் வெறும் பொருளற்ற சதைப்பிண்டங்கள் என்று தோன்றுவதாகவும், தன்னுடைய எரிந்தடங்கிய சாம்பலிலிருந்து தானே உயிர்த்தெழுந்து மீண்டு வருவதாகவும் சொன்னான். அவனை வெல்லும் விருப்பத்தை அவளில் தூண்டிவிட்டு, வென்றுவிட்டதான நிறைவையும் அவளுக்கு அளித்தான். முற்றிலும் அவள் முன் பணிவதாக நடித்து, வெறும் எட்டு நாட்களில் அவளை அவன் வென்றான்.
தங்கிப் படிப்பதற்காக அவன் தந்தை அவனுக்கு அமைத்துக் கொடுத்த பங்களாவுக்கு அவளை பேசி கவர்ந்து அழைத்துச் சென்று புணர்ந்தான். அங்கே செல்லும்போதே அவள் அறிந்திருந்தாள். அவள் உள்ளம் முள்முனையில் பதைப்பும் பரவசமுமாக தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது. அவனும் அவள் அதைவிரும்பி வந்திருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான். அவள் உடலில் உள்ளே நெருப்பு எரியும் செம்புக்கலம் போல வெம்மையின் நிறமாற்றம் உருவாவதை, கண்களில் நீர்மை பரவி, மூச்சு எழுந்தடங்க, கழுத்தும் கன்னமும் புல்லரித்திருக்க, அவள் தவிப்பதை அவன் கண்டான். அவளில் இருந்து எழுந்த மெல்லிய நறுமணத்தை அவன் பெண்களில் நூறுநூறு முறை அறிந்திருந்தான். ஆனால் அவளை ஏமாற்றி, பேசிக் கட்டாயப்படுத்தி அதற்குக் கொண்டுசெல்வது போல நடித்தான்.
பின்னர் எதையோ இழந்துவிட்டோம் என்று எண்ணி அவள் அழுதபோது அவளைக் களங்கப்படுத்திவிட்டேன் என்று சொல்லி அவன் தானும் அழுதான். அவள் தன்னை சமாதானப்படுத்தும்படி செய்தான். பின்னர் தொடர்ந்து அவளைத் தவிர்த்து அவளைக் களங்கப்படுத்திய பெருந்துயரில் ஆழ்ந்திருப்பதாக நடித்தான். அவளே முன்வந்து அவனை தேற்றி மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன்னை தந்து அத்துயரிலிருந்து அவனை மீட்கும்படிச் செய்தான். விலகி அலைந்த அவனை முதலில் அவளே வந்து சமாதானம் செய்தாள். கொன்றை மரங்களின் மறைவில் அவனை அள்ளி அணைத்து முலைகளுடன் அவன் தலையைச் சேர்த்துக்கொண்டாள். அவன் விம்ம அவள் கண்ணீர் அவன் தலைமேல் சொட்டியது.
அவர்கள் உறவு ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து கொண்டே சென்றது. அவர்கள் தொடர்ந்து உறவு கொள்வது அவன் நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அந்தப் பங்களாவிலேயே அவனுடைய நண்பர்களாகவும் ஏவலர்களாகவும் தனித்து விடுதிகளில் தங்கி செலவு செய்ய முடியாத நான்கு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டுத்தான் அவன் அவளை காமத்திற்கு கொண்டு சென்றான். அவர்கள் அவனுக்கும் ஊர்வசிக்குமான உறவை வெளியே சொல்லிப் பரப்பினார்கள். அதைப்பற்றி மிக அந்தரங்கமான சில செய்திகள் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்டால் அவனுக்கு அணுக்கமானவர்கள் என காட்டிக்கொள்ள முடியும் என நினைத்தார்கள்.
அவள் அவனை உள்ளூர எங்கோ கசந்திருந்தாள். முதலில் அவன் பல பெண்களிடம் உறவு கொண்டவன் என்பது அவளுக்கொரு இனிய ஆர்வத்தையே அளித்தது. அவன் பிற பெண்களுடன் உறவு கொள்வதை எண்ணும்போதே அவளுக்குக் கிளர்ச்சி தோன்றியது. அவனுடன் பேசும்போதே அவனைக் கண்டித்துத் திருத்துவது போல அவன் பிற பெண்களுடன் கொண்ட உறவைப் பற்றி அவள் கேட்டாள். அவன் அவற்றை விவரித்து சொல்லும்போது அவள் முகம் சிவந்து, நெற்றி வியர்த்து, கிளர்ச்சி அடைவதைக் கண்டு அவள் உள்ளம் செல்லும் திசையென்ன என்று தெரிந்துகொண்டான். பெண்ணை அறிந்தவன் பெண்களுடனான எந்தப் பேச்சையும் காமத்தை உள்ளடக்கியதாக ஆக்கிக்கொள்ளவும் காமத்தை சித்தரிப்பதாக விரித்துக்கொள்ளவும் வேண்டுமென்று அறிந்திருப்பான்.
ஆனால் அவளுடன் உறவு நிலைத்த பிறகு அவன் முன்பு பிற பெண்டிரிடம் கொண்ட உறவுகள் அவளைத் துன்புறுத்தத் தொடங்கின. இப்போதும் அவனுக்கு அந்த உறவுகள் இருக்கின்றனவா என்று அவள் சந்தேகம் கொண்டாள். திரும்பத் திரும்ப அவனிடம் அதைப்பற்றி அவனிடம் கேட்டு அவனை எரிச்சலுட்டினாள். அவன் ஒவ்வொரு முறையும் உறவுக்குப்பின் ஒருமணி நேரமாவது அவளுக்கு மட்டுமே அவன் விசுவாசமாக இருப்பதாகச் சொல்லி நிரூபிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள். அவன் எத்தனை ஆதாரங்கள் அளித்தாலும் தன் கற்பனையால் அவற்றைக் கடந்து சென்றாள். அவனைக் காணாத போதெல்லாம் அவன் ஏதோ பெண்ணுடன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி அவள் கொதித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவனைக் காணும்போதும் அவள் மனம் உடைந்து கண்ணீர் விட்டது அதனால்தான். அதை அவனுக்கு முன் பிரிவுத்துயர் என்று திரித்துக் காட்டிகொள்ள அவள் முயன்றாள்.
அவளுடைய எல்லா நாடகங்களையும் அவன் அறிந்திருந்தான். ஏனெனில் இளமையிலிருந்தே பல்வேறு வடிவங்களில் அதைக் கண்டிருந்தான். பெண்பித்தர்கள் பெண்களை நன்கு அறிந்திருப்பதனாலேயே பெண்களை எளிதில் கடந்தும் செல்கிறார்கள். பெண்களில் சலிப்பு கொள்கிறார்கள். சவால் என்பதற்கு மேலாக அவர்களை ஈர்க்கும் மர்மம் ஏதும் பெண்களிடம் இருப்பதில்லை. ஒரு பெண்ணின் உள்ளத்தின் திசைகள் விரல் விட்டு எண்ணத்தக்கவையே என்று ஆனந்த்குமார் தன் நண்பர்களிடம் சொல்வதுண்டு. உடல் அன்றி ஏதும் பெண்ணிடமில்லை என்று பெண்பித்தர்கள் எண்ணுவதுண்டு. தங்களிடம் சிக்கும் பெண்களை வெறும் உடலாக ஆக்கிக்கொள்வது தாங்களே என அவர்கள் அறிவதில்லை.
ஒரு கட்டத்தில் அனைத்து பாடங்களிலும் அவள் தோல்வியடைந்தாள். அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்குப் படித்துவந்த அவள் தமையன்களுக்கு அவள் தோல்வியடைந்த தகவல்தான் முதலில் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்து அதைப்பற்றி அவர்கள் விசாரித்தபோது ஆனந்த்குமார் ராய்சௌத்ரியைப் பற்றிய செய்தியை அறிந்துகொண்டார்கள். அவளைப் படிப்பை நிறுத்தி வீட்டுக்குள் வைத்து அவளுடைய தந்தை அவளுக்கு மணமகன் தேடத்தொடங்கினார். மிகத் தொலைவில் அவளை மணம் செய்து அனுப்பிவிட வேண்டுமென்று எண்ணி அதற்கான தரகர்களை அணுகினார்கள். இரண்டுமாதங்களுக்குள்ளாகவே அஸ்வத் தேஷ்பாண்டே திருமண யோசனை அவருக்கு முன் வந்தது.
தன் மகனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியபோது தான் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தன்னுடைய சாதி எவ்வளவு முக்கியமென்பதை உணர்ந்தார். அவருடைய தந்தையை கொடைவள்ளல் என்று கொண்டாடியவர்கள், அவர் கட்டிய ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் வழிபட்டவர்கள், அவரை ஒவ்வொரு நாளும் ஏதேனும் சிறு நன்கொடைக்காக அணுகிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவர் மகனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியதுமே அவருடைய சாதியின் பின்புலமென்ன என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்தணர்களில் சற்றே படித்த, பெரிய குடும்பத்துப் பெண்ணை அவர் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க எவரும் முன்வரவில்லை. அத்துடன் போலீஸ் அதிகாரியாகிய அவன் டேராடூனில் மாட்டு இறைச்சி தின்னாமல் பயிற்சியை முடிக்க முடியாதென்று வதத்தியும் பரவியிருந்தது.
இருபது முறை திருமணம் தட்டிப்போனபிறகு மனம் சோர்ந்திருந்த ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தொலைதூரத்திலிருந்து அழகியும் படித்தவளும் பாரம்பரியம் மிகுந்த பிராமணக்குடும்பத்தில் பிறந்தவளுமாகிய ஊர்வசி சர்மாவின் ஆலோசனை வந்தபோது மறுகணமே ஒத்துக்கொண்டார். அவளுக்கு அவர்கள் நகையேதும் போட முடியாதென்று, திருமணத்தையும் மிக எளிய முறையில் நடத்தி வைக்க முடியுமென்றும் சொன்னபோது, ’அது எங்களுக்கு முக்கியமல்ல நான் சேர்த்துவைத்த பணமே என் மகனுக்கு நிறைய இருக்கிறது’ என்று சொன்னார். ’இங்கே என் மகனுக்கும் எனக்கும் இருக்கும் சமூகநிலையை பேண வேண்டிய பொறுப்பு மட்டுமே அவளுக்கு உள்ளது. அத்துடன் பிராமணர்களாகிய நாம் மதுபர்க்கப் பணம் கொடுத்துதான் மணம் புரியும் வழக்கம். ஏழைப்பிராமணர்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கும் பழக்கம் எல்லாம் நேற்று வந்தது. எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம் இல்லை’ என்றார்.
ஊர்வசி அறியாமலேயே அவளைப் பெண்பார்த்தார்கள். கோயிலுக்கு அவள் சென்று வழிபட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது கோவிலில் நின்றிருந்தவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாலும் அவள் உள்ளம் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் நினைப்பிலேயே சுழன்று கொண்டிருந்ததனால் அவள் அதைப்பொருட்படுத்தவில்லை. அடுத்த வாரமே திருமணம் நிச்சயமாகி, திருமண நாள் குறிக்கப்பட்டபோதுதான் அவளுக்கே எல்லாம் தெரிந்தது. திடுக்கிட்டு அவள் தன் தோழியினூடாக ஆனந்த்குமார் ராய்சௌத்ரிக்கு செய்தி அனுப்பினாள். அவன் பிருத்விராஜனைப்போல காரில் வந்து தன்னை தூக்கிகொண்டு செல்வதாக கற்பனை செய்துகொண்டு இருந்தாள். ஆனால் தோழி திரும்பி வந்து ராய்சௌத்ரி ஊரில் இல்லை, கிரிக்கெட் பயிற்சிக்காக பம்பாய்க்குச் சென்றிருப்பதாக சொன்னாள்.
ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் வந்ததும் தனக்கு ஏற்பட்ட பெரும் நிம்மதியை ஊர்வசி வியப்புடன் உணர்ந்தாள். பாட்னா தொலைதூரம் என்ற எண்ணமே அவளுக்கு விடுதலையை அளித்தது. வரவிருக்கும் கணவன் முகமே அவள் நினைவில் பதிந்திருக்கவில்லை, அவனைப் பற்றியோ மணவாழ்க்கையைப் பற்றியோ அவள் எண்ணவே இல்லை. கிளம்பிச்செல்வதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். கிளம்பியபின் அவள் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியை விருப்பத்துடனோ துயரத்துடனோ எண்ணிப் பார்க்கவில்லை.
(மேலும்)
A Lazy Wet Morning, Some Stray Thoughts
It is an engrossing book that gives a picture of Jeyamohan’s extraordinary life and the society of the south of India, with some interesting folk stories vastly different from East India, where I grew up. It feels like we are from a different country and a different time. The diversity of India, its society, religious practice, folklore and politics are awesome and boggle us, to say the least. Yet we have cohabited for a few thousand years, since the beginning of time. Although we see many discouraging changes around us now, I remain hopeful that we will endure forever.
A Lazy Wet Morning, Some Stray Thoughts and The Book – Of Men, Women and Witches – Journal Day 14Buy Of Men, Women and Witches
தங்கத் திருவோடு
The small speech about the scales of life is crucial to me. I have been actively seeking a meaningful life for the past few months. I know I can’t live without money and a job. I am not going to give up anything. But actually the problem is we are deeply immersed in a mad race of social status, which is entirely based on money and consumerism.
Our own scales- A letterஇது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர் இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை.
தங்கத் திருவோடு
May 23, 2025
காணொளி உலகில் வாசிப்பு
வழக்காமான கேள்விதான். இது காணொளிகளின் யுகம். இப்போது வாசிப்பு எப்படி சாத்தியம்? உண்மையில் வாசிக்கத்தான் முடியுமா? வாசித்துத்தான் தெரிந்துகொள்ள முடியுமா? காணொளிகளே போதாதா? இளையதலைமுறை அது போதும் என நினைக்கிறது.அதற்கான என் பதில்.
மானின் நிழல்
நாவல்கள் எழுதும்போது முற்றிலும் அந்த மனநிலையிலேயே இருந்துகொண்டிருப்பேன். வெண்முரசின் இறுதிக்கட்ட நாவல்களில் போரிலும் பேரழிவிலும் வாழ்ந்துகொண்டிருந்தேன். உச்சகட்ட கொந்தளிப்பின் நாட்கள் அவை. இப்போது எழுதிக்கொண்டிருப்பது காவியம், தொன்மமும் சமகால வரலாறும் ஒன்றையொன்று ஊடுருவும் படைப்பு.
அதில் நிழல்களைப் பற்றி வந்துகொண்டே இருக்கிறது. நிழல்கள் எப்படி நம்மை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன, ஆட்கொள்கின்றன என்னும் சித்தரிப்பு. முதல் அத்தியாயமே நிழல்களைப் பற்றிய அச்சமூட்டும் சித்தரிப்பு வழியாகத்தான். நான் சொல்லும் நிழல்களை fantoms என்று சொல்லலாம். உள்ளுருவகங்கள். கற்பனைகள், கனவுகள், பேய்கள் – எவையோ சில. நாவல் நிழல்கள் ஆட்கொள்ளும் உள்ளத்தினூடாக முன்னகர்கிறது.
அந்த மனநிலையில், உள்ளூர நாவலின் தொடர்ச்சி ஓடிக்கொண்டிருக்க எதையோ செய்துகொண்டிருந்தபோது இந்நிழலைப் பார்த்தேன். கொம்பில்லாத மான் ஒன்று காதுகளை பின்னால் மடித்து மேய்ந்துகொண்டிருந்தது. ஒரு கணம் திடுக்கிட்டு பின்னகர்ந்துவிட்டேன். சற்று நடுக்கம் விலகியபிறகுதான் முழுத்தோற்றத்தையும் கவனித்தேன். தண்ணீர்க்குழாய். நான் பல்தேய்த்துக் கொண்டிருந்தேன்.
இளமையிலேயே எனக்கு நிழல்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு. சிறுவனாக இருக்கையில் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு, வாயில் விரலை வைத்துச் சப்பிக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டு முழுப்பகலும் நின்றிருப்பேன் என்று என் அம்மா சொல்வாள். நான் என்ன பார்க்கிறேன் என்றே கண்டுபிடிக்க முடியாது. வெறும் தோட்டத்தையும் பாதையையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் என்ன பார்த்தேன் என்று என்னால் இன்று சொல்லிவிட முடியும். ஏனென்றால் என் நினைவில் நிறைந்திருப்பவை இரண்டு வயதுக்குள் நான் பார்த்த நிழல்கள். மரங்களின், விலங்குகளின், பறவைகளின் நிழல்கள். அவை இணைந்தும் பிரிந்தும், வெவ்வேறு ஒளிக்கோணங்களிலும் உருவாகும் நிழலுருவங்கள். அவற்றில் நான் பார்த்த அரக்கர்கள், தேவதைகள், பறக்கும் குதிரைகள், தரையில் இழையும் முதலைகள், எங்கும் நெளிந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் நாகங்கள்.
நிழல்கள் என் படைப்புகளில் நிறைந்திருப்பதை என் வாசகர்கள் அறியமுடியும். என்னால் ஏன் ஒரு பொருளை நாம் அதன் நிழலை தவிர்த்துவிட்டுப் பார்க்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. திரும்பத் திரும்ப ஒவ்வொன்றையும் அதன் நிழலையும் இணைத்தே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் என் இந்த மனநிலையைப் பகிரும் ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான். செல்லம்மாள் கதையின் உச்சமே அவள் நெஞ்சைப் பிடுங்குவதுபோல வந்து நின்றிருக்கும் பிரமநாயகம் பிள்ளையின் கையின் நிழல்தான்.
தொடக்க காலக் கதைகளில் ஒன்றில் வெளியே செல்லும் அசைவுகள் நிழலாக தலைகீழாக அறைக்குள் அசைவும் ஒரு சித்திரம் உண்டு. அது நானேதான். இருண்ட அறையை மூடி, சிறு துளை வழியாக சுவரில் விழும் நிழல்களைப் பார்த்தபடி காசர்கோடு நகரில் முழுநாளும் நான் அமர்ந்திருப்பதுண்டு.
நிழலாட்டம் என்றே ஒரு கதை எழுதியிருக்கிறேன். நிழலையே மையமாக்கி எழுதப்பட்ட கதை டார்க்தீனியம். பிறகும் எண்ணிப்பார்க்கையில் எத்தனை நிழல்கள். ஒரு கதையில் பல விளக்குகளில் நிழல்கள் பெருகும் ஓர் உருவத்தை எழுதியிருக்கிறேன். அசையும் விளக்கொளியில் நிழல்கள் சுழன்றுவரும் காட்சி.
என் இளமையில் மண்ணெண்ணை விளக்குகள்தான். என் வீட்டில்கூட மின்விளக்கு வரவில்லை. மண்ணெண்ணை விளக்கு நிழல்களை உருவாக்குவது. என் வீடெங்கும் நிழல்கள் நடமிட்டுக்கொண்டிருக்கும். அம்மா கையில் சிறிய மண்ணெண்ணை விளக்குடன் நடமாடுவாள். அம்மாவின் நிழல் பெருகி அவள் தலைக்குமேல் படமெடுத்து உடன் சென்றுகொண்டிருக்கும். சுவர்களில் மடிந்து அவளை நோக்கி குனிந்து வரும்.
காட்சிகளை நிழல்கள் முழுமையாக்குகின்றன. அத்துடன் நிழல்கள் தங்களுக்கே உரிய ஓர் உலகைக் கொண்டிருக்கின்றன. இப்படி எண்ணிப்பாருங்கள், இங்கே ஒருவரால் உருவங்களைப் பார்க்கமுடியாது, நிழல்களை மட்டுமே பார்க்கமுடியும் என்றால் அவர் அடையும் உலகம் எத்தகையதாக இருக்கும்? நிழல்கள் அப்போது அவற்றின் மூல உருவங்களால் வரையறை செய்யப்படாது. அவை சுதந்திரமடைந்துவிட்டிருக்கும். முற்றிலும் புதிய அர்த்தங்களை உருவாக்கியிருக்கும்.
ஒரு தண்ணீர்க்குழாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மான் ஆகிறது. அது நம் காட்சியின் அமைப்பு. அந்த தர்க்கம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் அறிந்ததுதான் இப்பிரபஞ்சமா என்ன? ஒரு தண்ணீர்க்குழாய் மான் என்று தன்னை நமக்கு காட்டுவதில் நாமறியாத ஏதேனும் விளையாட்டு இருக்குமா?
காவியம் – 33
யக்ஷன், யக்ஷி,கிளி- சாதவாகனர் காலம், பொயு2 மதுரா அருங்காட்சியகம்கிருஷ்ணதீர்த் என்னும் சிற்றரசுக்கு அவத் நாட்டில் இருந்து பதினெட்டு பிராமணர்கள் நூற்றெட்டு நாட்கள் இடைவிடாமல் நடந்து கங்கையைக் கடந்து சென்று சேர்ந்தார்கள். அவர்கள் அவத் நாட்டில் அதற்குமுன் நூறு தலைமுறைக் காலமாக வாழ்ந்தவர்கள். அங்கே அவர்கள் வைதிகர்களாகவும் பௌராணிகர்களாகவும் சோதிடர்களாகவும் பணியாற்றினார்கள். ஒவ்வொருவருக்கும் வகுக்கப்பட்டிருக்கும் எளிமையான அன்றாடத்தை அணுவின்றி திரும்ப நிகழ்த்துவதே வாழ்வென்று கருதி அவ்வாறு வாழ்ந்தார்கள்.
ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்து வாழும் வாழ்விலுள்ள நிறைவென்பதே அதில் கேள்விகளே இல்லை என்பதனால் உருவாவதுதான். ஒரு செயல் எதன்பொருட்டு? ஓர் உறவின் பொருளென்ன? ஒரு நிகழ்வின் விளைவென்ன? இத்தகைய எல்லாக் கேள்விக்கும் ’அதுவே வழிவழியாக நிகழ்வது. முன்னோர் என்ன செய்தார்களோ அதுவே உண்மை. முன்னோர் என்ன எண்ணினார்களோ அதுவே விடை’ என்ற எளிய பதில் அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது.
அங்கே பிறந்த ஒவ்வொரு குழந்தையும் நூறு ஆயிரம் பதில்களுடன்தான் பிறந்தது. கேள்விகளை பிறகுதான் உருவாக்கிக்கொண்டது. அந்தக் கேள்விகள் பதில்களின் மேல் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அப்பதில்களை உண்டு அதில் அமர்ந்து வாழ்ந்தன. ஒரு நாடு என அவத் சிறு குட்டையாகத் தேங்கிப்போன ஒன்று. அவ்வண்ணம் தேங்கிப்போன ஆயிரம் பல்லாயிரம் குட்டைகளாலானதாக இருந்தது ஜம்புத்வீபம் என்று நெடுங்காலமாக அழைக்கப்பட்ட பாரதநிலம். அவத் அருகிருக்கும் இன்னொரு பெரிய குட்டையுடன் எப்போதாவது வெள்ளம் வரும்போது மட்டுமே தொடர்பு கொண்டது. ஒவ்வொரு வெள்ளத்திலும் அதில் தேங்கியிருந்த சிறிதளவு நீர் பெருக்குடன் கலந்தது. வெள்ளத்திற்கு பின் மேலும் சேறும் மேலும் குப்பையும் பெற்றது.
தேங்கியிருந்தமையினாலேயே மேல் பகுதி தெளிந்தும் அடிப்பகுதி கலங்கியும் அது நீடித்தது. தேக்கத்தின் மீது தோன்றும் அசைவில்லாத வானம் அமைதி என்றும் தெளிவு என்றும் அழகு என்றும் பொருள் கொள்ளப்பட்டது. சேற்றிலிருந்து முளைவிட்டெழுந்த குவளையும் தாமரையும் அழகுகள் என்றும் தெய்வபீடங்கள் என்றும் கருதப்பட்டன. ஒவ்வொரு சிறு தேங்கலிலும் அங்கேயே முளைத்து வளரும் பாசிகளும் சிற்றுயிர்களும் இருந்தன. அதிலேயே பிறந்து அதிலேயே மடிந்து அடுத்த தலைமுறைக்கு உணவாகி மறையும் மீன்கள் வாழ்ந்தன.
அவ்வண்ணம் அவத் நாட்டை ஆட்கொண்ட ஒரு வெள்ளம் சுல்தான்களின் படையெடுப்பு. அது அந்நகரின் மீது பிறிதொரு கொடியை பறக்கவிட்டது என்பதற்கு அப்பால் உண்மையான மாற்றங்கள் எதையும் நிகழ்த்தவில்லை. உழவர்கள் என்றும்போல உழுது, நாலில் ஒரு பங்கையோ, இரண்டு பங்கையோ, மூன்று பங்கையோ வரி செலுத்தினர். வணிகர்கள் எப்போதும் போல வாங்கி விற்று அடைந்த லாபத்தில் ஒரு சிறு பங்கை வெளிக்காட்டி அதற்கு பாதியை வரியெனக் கட்டி எஞ்சியவற்றை தங்கள் உடைமையென எண்ணி அவற்றை எவ்வகையிலும் பயன்படுத்த முடியாதவர்களாக மகிழ்ந்திருந்தனர். சிலர் பிடிபட்டு சித்ரவதைக்கு ஆளாகி முற்றாக இழந்தனர். மீண்டும் நம்பிக்கையை ஈட்டிக்கொண்டு பொருள் சேர்க்கத்தொடங்கினர்.
ஷத்ரியர்கள் படையெடுத்து வந்த எதிரியுடன் மோதி போரிட்டு, தோற்ற பின்னர் அவர்களுக்கே தங்கள் வேல்களையும் வாள்களையும் அளித்து அவர்களுக்கு கீழே முன்பு போன்றே படைவீரர்களாக தொடர்ந்தனர். போரிடுவதன்றி வேறொன்றும் தெரியாதவர்களுக்கு படையென்ற ஒன்று அடையாளமாகவும் பாதுகாப்பாகவும் தேவைப்பட்டது, மனிதர்களுக்கு கூரை தேவைப்படுவது போல. அரசும், நிர்வாகமும் அப்படியே நீடித்தன.
இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டப்பவர்கள் அந்தணர்கள் மட்டுமே. எளிய மக்களை நம்பி ஊர்களில் வாழ்ந்த அந்தணர்கள் தங்கள் தலைக்கு மேல் கொடிகளின் இடமாற்றம் நிறமாற்றம் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. ஆனால் அரண்மனையை நம்பி வாழ்ந்த அந்தணர்கள் தங்கிய மரம் முறிக்கப்பட்ட பறவைகள் போல் சட்டென்று வெற்று வானில் சுழன்று பறக்க நேரிட்டது. அவர்கள் அங்கிருந்து வாய்ப்புள்ள திசைகளை நோக்கி சென்றார்கள்.
அவர்களின் ஒரு சிறு குழு ஒவ்வொரு புதிய நாடாகத் தேடி தேடி கிழக்கு நோக்கிச் சென்று கொண்டே இருந்தது. படகுகளில் நெடுந்தூரம் பயணம் செய்து அவர்கள் பாடலிபுத்திரத்தை அடைந்தனர். அங்கிருந்து படகினூடாக கயைக்கு சென்றனர். ஒவ்வொரு நிலத்திலும் அவர்களுக்கு முன்னரே வந்த அந்தணர்கள் குடியேறியிருந்தனர். சில இடங்களில் அவர்கள் விரும்பப் படவில்லை. இறுதியாக அவர்கள் கண்டடைந்தது அன்று வங்காளத்தை ஆண்டிருந்த அரசர்களின் கீழ் சிற்றசர்களாகப் பணிபுரிந்த கிருஷ்ணதீர்த் என்னும் மிகச்சிறிய அரசை. அது ஓர் அரசே அல்ல, ஒரு நிலக்கிழாரின் ஆதிக்கப்பகுதி மட்டுமே. ஆனால் அன்றைய வங்காளத்தின் நிலைகுலைந்த அரசியல்சூழலில் அவர்கள் அங்குமிங்கும் கப்பங்களைக் கட்டி, அனைவருக்கும் பணிந்து கொடியையும் கிரீடத்தையும் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணதீர்த் அரசில் அதற்கு முன் அந்தணரென்று இருவரே இருந்தனர். கிருஷ்ணதீர்த் எவ்வகையிலும் பொருளோ சிறப்போ கொண்டதாக இருக்கவில்லை. பழம்பெருமை என்றும் அதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அதன் சிற்றரசர்கள் அருகிலிருந்த துர்காபூர் என்னும் சிற்றரசின் உறவினர்கள். துர்காபூர் சிற்றரசர் வேட்டைக்கு சென்றபோது ஒரு அழகிய இளம்பெண்ணைக் கண்டு அக்கணமே தூக்கி தன் குதிரைமேல் அமர்த்தி தன் அரண்மனைக்கு கொண்டு சென்றார் என்றும், அவளுடைய கணவனும் குழந்தைகளும் குடும்பத்தினரும் திரண்டு சென்று அரசரிடம் நியாயம் கேட்டு மன்றாடினார்கள் என்றும் பேச்சுக்கதைகளின் படி சொல்லப்பட்டது.
துர்க்காபூரின் சிற்றரசர் தன் புதிய மனைவியின் அழகில் மயங்கியிருந்தமையால் அவள் உறவினர்களைக் கொல்லத் துணியவில்லை. தன் குழந்தைகள் முன்பு போல மாடு மேய்த்து வாழ்வது தன் புதிய கணவருக்கு இழுக்கு என்று புதிய அரசி சொல்லி அவரை ஏற்க வைத்தாள். ஆகவே அவ்விரு குழந்தைகளுக்கும் தொலைதூரத்தில் சதுப்பு நிலமாகிய சமர்பூர் என்னும் இடம் அளிக்கப்பட்டது. அங்கே அறுபது குடிசைகளும் நூற்று ஐம்பது மீனவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் கங்கையில் மீன் பிடித்து அவற்றை தலையிலேற்றி உள் கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பவர்கள்.
சமர்ப்பூருக்கு குடிவந்த புதிய ஆட்சியாளர்கள் அப்பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்கள் பிடிக்கப்படும் மீன்களுக்கும் விற்கப்படும் மீன்களுக்கும் வரிகொண்டனர். அதைக்கொண்டு தங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டார்கள். அந்தக் குலவரிசையில் வந்த ராம்பகதூர் என்னும் ஆட்சியாளர் கங்கைக்கரைச் சதுப்பில் ஒரு பெரிய கால்வாயை வெட்டி கங்கைக்கு கொண்டு செல்வதன் வழியாக அச்சதுப்பை வரளச்செய்ய முடியும் என்று கண்டு கொண்டார். சதுப்பு வறண்டதும் அது வளமான விளைநிலமாக மாறியது. அதை அங்கு வந்து குடியேறும் விவசாயிகளுக்கு அளித்தார்.
விவசாயிகள் விளைவித்த கரும்பும் நெல்லும் சமர்ப்பூரை வளம் கொண்டதாக்கின. அதன்பின் மேலும் விவசாயிகள் அங்கு வந்தனர். மேலும் கால்வாய்களினூடாக கங்கை நீர் வடியச்செய்து கங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. புதிய விளைநிலங்கள் உருவாகி வந்தன. ஆயிரம் வீடுகளும் இருபத்தெட்டாயிரம் குடிமக்களும் கொண்டதாக சமர்ப்பூர் மாறியபோது அந்தப்பகுதியின் பெயரை அரசர் கிருஷ்ணதீர்த் என்று மாற்றிக்கொண்டார். கங்கையில் ஒரு படித்துறையும் சிறியகோயிலும் கட்டி அது புனிதமானது என அறிவித்தார். அரசகுடும்பம் அங்கேதான் முன்னோருக்கு நீர்க்கடன்கள் செய்தது.
துர்க்காபூர் சிற்றரசருக்கு கப்பம் கட்டி அவரிடம் இருந்தே கிருஷ்ணதீர்த்தின் அரசர் என்னும் பட்டத்தையும், கொடியையும், சிம்மாசனத்தையும், கிரீடம் வைக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டார். அதன்பின் அப்பகுதி வங்காள நவாப்களின் ஆட்சிக்குச் சென்றபோது நவக்கிராமம் என்று பெயர் பெற்றது. ஒன்பது தனி ஊர்களாக பிரிந்தது. அதன்பின் வெள்ளையர்கள் தலையெடுத்தார்கள். எல்லாக்காலகட்டத்திலும் முறையாகக் கப்பம் கட்டும் காரணத்தினாலேயே தங்கள் தலைக்குமேல் என்ன நிகழ்கிறதென்று தெரியாமலேயே அதன் அரசர்கள் அங்கே வாழ்ந்தார்கள். அதுவே அப்பகுதியை வளமாக வாழச்செய்தது. சிற்றரசர்கள் நாணல்கள் போல. வெள்ளம் சென்ற தடம் அவற்றின் வளைவின் திசையிலேயே தெரியும்.
அங்கு வந்து சேர்ந்த அந்தணர்கள் அரசரின் அவையால் வரவேற்கப்பட்டனர். அரசர் ராம்பகதூர் சிங் தனக்கான கொடியடையாளத்தையும் முடியடையாளத்தையும் பெற்றுக் கொண்டு அதிக காலம் ஆகவில்லை. அவர் மகன் தேஜ்வீர் சிங் ஆட்சி அமைத்திருந்தார். தனக்கென ஓர் அந்தணர் அவை வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தபோது அந்தக்குழு அங்கே வந்தது. அவர்களுக்குரிய சிறுவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அவர்கள் அரண்மனையில் ஒவ்வொரு நாளும் வந்து அரசருக்கு பள்ளியெழுச்சியும் நீராட்டும் பாடவேண்டுமென்றும், அவை கூடும்போது அரசரின் புகழ் பாடும் கவிதைகளையும் சோதிட ஊகங்களையும் கூற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது. இரவில் பள்ளி உறக்கத்திற்கு பாடிவிட்டு அவர்கள் தங்கள் வீடு திரும்பலாம். அவர்களுக்குரிய பாலும் நெய்யும் காய்கறிகளும் ஒவ்வொரு நாளும் குடியானவர்களால் கொண்டு கொடுக்கப்பட்டன. அவர்களுக்குரிய நெல் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் களஞ்சியங்களுக்கு வந்து சேர்ந்தது. அவ்வப்போது அரண்மனையிலிருந்து சிறு பரிசில்களும் அவர்களுக்குக் கிடைத்தன.
அவர்கள் அங்கு வந்த எட்டாவது மாதத்தில், ஒவ்வொருவரும் நீண்ட அலைக்கழிப்பையும் பயணத்தின் இழப்புகளையும் துயரங்களையும் மறந்து அந்நிலத்தில் படிந்து வாழத்தொடங்கிய காலத்தில், அந்தணர்களில் ஒருவரான சசீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மனைவியை அரசர் ஆலயத்திலிருந்து வெளிவரும்போது ஒரு தூணின் மறைவில் பாதி முகமாகவும் ஒரு கண்ணாகவும் பார்த்தார். அன்றிரவே அவருடைய தூதர்கள் வந்து அவளை அரசரின் படுக்கைக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டார்கள். திடுக்கிட்டுப் போன சசீந்திரநாத் தன்னுடைய அந்தணர் குழு தலைவரிடம் சென்று முறையிட்டார். அந்தணர் குழுக்கள் ஆலயத்தின் பின்பக்கம் கங்கையின் கரையில் தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட நிலத்தில் அமர்ந்து அதை விவாதித்தனர். தனது சொற்களுக்கு சாட்சியாக ஒரு அகல் விளக்கை அவர்கள் ஏற்றி வைத்திருந்தனர். நிகழ்வதென்ன, செய்யவேண்டியதென்ன என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அவர்களின் தலைவராகிய ராமானந்த் சர்மா கைநீட்டி உரத்த குரலில் சொன்னார். “ஒன்று நாம் வகுத்துக்கொள்வோம். நாம் இந்நிலத்திலிருந்து இங்கு இனி கிளம்பிச்செல்வதாக இல்லை. ஏனெனில் இங்கிருந்து நாற்பது நாட்கள் நடந்தால் கடல் வருகிறது. அதுவரைக்கும் எந்த நாட்டில் நமக்கு இடமிருக்கும் என்று நமக்குத் தெரியாது. கடலுக்குச் சென்று அங்கே மூழ்கி இறப்பதா இங்கு நீடிப்பதா என்று தான் நாம் பேசவேண்டும்.”
“நாம் கிழக்காகச் செல்வோம்” என்று எவரோ சொன்னார்.
“கிழக்காகச் சென்றால் வெறும் மூங்கில்களும் மஞ்சள் முகம் கொண்ட மிலேச்சர்களும் நிறைந்த காமரூபம் மட்டும்தான் வருகிறது. அங்கு செல்ல விரஜர்களாகிய அந்தணர்களுக்கு அனுமதியில்லை. விரிஜ நாட்டிலும் கௌடநாட்டிலும் மட்டுமே நாம் வாழவேண்டும் என்பது நம் முன்னோர் வகுத்த வழி.”
”அப்படியென்றால் நமது பெண்களை அரசர்களுக்கு அனுப்புவதும் முன்னோர் வகுத்த வழியா?” என்று அவர் கேட்டார்.
“நமது பெண்கள் என்று கூறியவர் யார்?” என்று அவரை நோக்கி ராமானந்த் சர்மா திரும்பினார். ”நாம் இங்கு பெண்களுடன் வரவில்லை. நம்முடைய பெண்களையும் பெண்குழந்தைகளையும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அளித்துவிட்டு நாம் மட்டுமே கிளம்பி வந்தோம். அதுதான் பல்லாயிரம் ஆண்டுக்காலம் நம்முடைய மரபு. அதுதான் நம்மால் செய்யக்கூடியதும் கூட. தெரியாத ஊர்களுக்கு பெண்களைக் கூட்டிச்செல்வது அவர்களை அழிப்பதுதான். நாம் இங்கு மணந்துகொண்டிருக்கும் மனைவிகள் இங்குள்ள வெவ்வேறு குலங்களிலிருந்து நம்மால் விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்…”
“நாம் அதை முன்னரும் செய்திருக்கிறோம்… பெண்களை தானம்பெற நமக்கு அனுமதி உண்டு” என்று ஒருவர் சொன்னார்.
“அந்தணனின் குலம் என்பது அவனுடைய குருதியால் மட்டுமே கணக்கிடப்பட வேண்டும். அவனுடைய விந்துவை ஏந்தும் கருப்பை அவன் குலத்தை தீர்மானிப்பதில்லை. இது தொல்புராணங்கள் அனைத்தும் சொல்லும் நெறியாகும். மகாபாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் எந்தக் கதையை எடுத்துப் பார்த்தாலும் இதை நீங்கள் பார்க்கலாம். மீனவப்பெண்ணாகிய சத்யவதியில் பிறந்த குழந்தைகள் மீனவனாகக் கருதப்படவில்லை. ஷத்ரியராகவே கருதப்பட்டன. அந்தணர் பொன்னையும் பெண்ணையும் தானமாகப் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக்கொண்டவற்றை தன் அந்தண நோன்பால் அவன் தனக்குரியதாக அவன் ஆக்கிக்கொள்ளலாம்”
ராமானந்த் சர்மா தொடர்ந்து சொன்னார் “பொன் அது ஈட்டப்பட்டமையால் தன்னில் சேர்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பாவங்களையும் அந்தணனை வந்தடைந்ததும் இழக்கிறது. ஆகவே அந்தணன் திருடனிடமிருந்தும், கொலைகாரனிடமிருந்தும், கொடியவனாகிய அரசனிடமிருந்தும் கூட பொன்னைப் பெற்றுக்கொள்ளலாம். எக்குலத்திலிருந்தும் பெண்ணை ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொண்ட பெண்கள் அந்தணன் கைபட்டு அவன் வேள்வி மிச்சத்தை உண்டு அந்தண விந்துவை ஏற்கும் தகுதி பெறுகிறார்கள். அவர்கள் கருவில் பிறக்கும் குழந்தைகள் அந்தண குலத்தைச் சேர்ந்தவையாகின்றன. எந்நிலையிலும் அப்பெண்கள் அந்தண தகுதியை அடையமுடியாதென்பது உண்மை. ஆனால் அவர்களின் குருதியில் முளைத்தவை அந்தணத் தகுதி கொண்டவையேதான். அவ்வாறுதான் இங்கே நாம் பெண்களை மணம் கொண்டோம்.”
“இவர்கள் இங்குள்ள வேளாண்குடியினர்” என்று ஒருவர் சொன்னார்.
“ஆமாம், ஆனால் இந்த அரசு அமைந்து, இந்த அரசர் இவர்களுக்கு வேளாண்நிலத்தை உருவாக்கி அளிப்பதற்கு முன்பு இவர்கள் அனைவருமே சமர்களாக இருந்தனர்” என்று ராமானந்த் சர்மா சொன்னார்.
“அந்தணப் பெண்களை நாம் அரசர்களுக்கு அளிக்க ஒப்புதல் உண்டா?” என்று இளைய அந்தணர் கேட்டார்.
ராமானந்த் சர்மா பதிலை யோசித்துவிட்டே வந்திருந்தார். “அதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை. அது பழிபாவமும் ஆகும். ஆனால் அதற்கு பரிகாரங்கள் உண்டு. அரசனிடம் சென்று வந்த பெண்ணை ஒரு மாதகாலம் விலக்கி தனியாகக் குடிலில் வைக்கலாம். அவள் கருவுற்றால் அது அரசரின் கருவாகக் கருதப்படும். அது அரசரின் குழந்தையென்றே அவர் பொறுப்பேற்க வேண்டும். ஒருமாதம் அவள் கருவுறாவிட்டால் அவளுக்கான மீட்புச் சடங்குகளைச் செய்து அவளை மீண்டும் அந்த அந்தணனே தன் மனைவியாக்கிக் கொள்ளலாம்” என்றார்.
“இது அரசருக்குப் பிடித்தமானதாகவே இருக்கும்” என்று ஒருவர் குரல் மட்டுமாகச் சொன்னார்.
“நாம் சொல்வதை நம் தெய்வங்கள் ஏற்கவில்லை என்றால் இந்த விளக்கு அணைந்துவிடும்” என்றார் ராமானந்த் சர்மா. “நம் சொற்களுக்கு அக்னியே சாட்சி. நாம் அனைவரும் சுடர்தொட்டு இதை சங்கல்பமாக ஏற்போம்”
அது அங்குள்ள அனைவருக்கும் உவப்பானதாக இருந்தது. அவ்வாறாக அவளை அலங்கரித்து அரண்மனைக்கு அனுப்பி வைத்தனர். அதுவே ஒருசடங்காக மாறியது. அவர்களின் பெண்கள் அனைவரும் ஒரு சுழற்சி முறையில் அரண்மனைக்குச் சென்று வந்தனர். அவர்கள் கருவுற்றாலும் கூட ஒரு மாதம் கழித்து அவள் கருவுற்றாளா என்று நோக்கும் பொறுப்பிலிருந்த சலவைக்காரி கருவுறவில்லை என்று அறிவிக்கவேண்டும் என்பதும், அவள் மீண்டும் கங்கைக்கரையில் நிகழும் ஒரு சிறுசடங்கினூடாக தன் முந்தைய கணவனுக்கே மனைவியாவாள் என்பதும் மறைமுகமாக ஏற்கப்பட்டது. அரசரிடமிருந்து ஒரு பெண்கூட கருவுறவில்லை.
சில ஆண்டுகளுக்குள் அரண்மனைக்குச் செல்லும் பெண்கள்தான் அழகிகள் என்பதும், அவர்களுக்கு உயர்ந்த பரிசுகளும் அவர்களின் கணவர்களுக்கு அரசரின் அனுதாபமும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகியது. அதற்காக தங்கள் பெண்களை அலங்கரித்து கோயில்களுக்கு அனுப்பவும் தொடங்கினார்கள். அரசரிடம் அப்பெண்களைப் பற்றிச் சொல்லி ஈடுபாட்டை உருவாக்க பாங்கர்கள் உருவானார்கள். அவர்கள் அப்பெண்களை வர்ணித்தும், அவர்கள் எழுதுவதுபோலவும் விரகதாபக் கவிதைகள் எழுதி அரசரிடம் அளித்தார்கள். அந்தக் கவிதைகள் பல தலைமுறைகளாக பெருகி அது அங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே அறியப்பட்டது.
கிருஷ்ணதீர்த் நவக்கிராமமாக ஆனபோது ஒவ்வொன்றும் தனித்தனி ஜமீன்தார்களின் ஆட்சிக்கு அளிக்கப்பட்டன. கிருஷ்ணதீர்த் ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கே ஜமீன்குடும்பங்களாக ஆனார்கள். அவர்கள் தங்களுக்குள் மணவுறவுகளை மேற்கொண்டனர். அவற்றில் ஒன்றான சுமாங் வங்காளத்தில் காலிம்போங் மாவட்டத்தில் அமைந்திருந்தது. அது உண்மையில் ஒரு காடு, பின்னர் ஒரு தேயிலைத் தோட்டமாக ஆகியது. அதன் ஆட்சியாளராக இருந்த ராஜ்பகதூர் ராய்சௌதுரி குடும்பம் தங்களை பழைய கிருஷ்ணதீர்த் அரசகுடும்பத்தின் நேரடி வம்சம் என்று சொல்லிக்கொண்டது.
ஆனால் பிரிட்டிஷ் காப்டன் ஒருவன் அங்கே புலி வேட்டைக்கு வந்தபோது ராஜ்பகதூர் ராய்சௌதுரியின் மூதாதையான கோபால்நாத் அவரை தன் இல்லத்தில் தங்கவைத்ததாகவும், கோபால்நாத்தின் இளம் அழகியான இரண்டாவது மனைவி தீப்சிகா காப்டனுடன் எட்டு இரவுகளைச் செலவிட்டதாகவும், அரசகுடும்பத்தினர் தன்னை போதிய அளவு உபசரிக்கவில்லை என்று சீற்றம் கொண்டிருந்த காப்டன் ஜமீன் உரிமையை பறித்து கோபால்நாத்துக்கு வழங்கியதாகவும் அவர் கோபால்நாத் ராய்சௌதுரி என்ற பெயருடன் அப்பகுதியின் ஜமீன்தாராக ஆனதாகவும் ஊரில் கதைகள் ரகசியமாக பேசப்பட்டன. ராய்சௌதுரி குடும்பத்தில் அவ்வப்போது நீலக்கண்களும் சிவப்புப்பூனைமுடியுமாக குழந்தைகள் பிறப்பது சான்றாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
சுமாங்கை ஆட்சி செய்த ராய்சௌதுரி குடும்பம் கிருஷ்ணதீர்த்தில் இருந்து மூன்று பிராமணக்குடும்பங்களை குடியேற்றி ஊரிலுள்ள துர்க்கை, ராதாகிருஷ்ணன், சிவன் என்னும் மூன்று கோயில்களை பூஜைசெய்யும் பொறுப்பை அளித்தது. அவர்கள் அரண்மனையில் சோதிடர்களாகவும் கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். அரச அறிவிப்புகளையும் கடிதங்களையும் எழுதினர். அரசகுடும்பத்து குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகவும் பணியாற்றினார்கள். பின்னர் அங்குள்ள செல்வந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கும் சம்ஸ்கிருதமும் வங்காளமொழியும் கணிதமும் கற்பித்தனர். அந்தக் குடும்பங்களில் ஒன்றில்தான் ஊர்வசி பிறந்தாள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

