முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான் !

[image error]தினமணி இதழில் 2022 ஏப்ரலில் வெளிவந்த பேட்டி.


எழுத்தாளர் ஜெயமோகன் 60 வயதை எட்டியுள்ளார் .அவரது இளமைப் பருவம், திருமணம், எழுத்துகுறித்து தினமணி வாசகர்களுக்காக மனம் திறந்து பேசுகிறார்.

உங்களின் 60 வயதை ஒட்டிய பேட்டி என்பதால் உங்கள் ஊரைப் பற்றியும்பெற்றோர் பற்றியும் படிப்பு முதலானதைப் பற்றியும் அறியலாமா?

எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருவரம்பு .அதன் அருகில் தான் திற்பரப்பு அருவி உள்ளது. திருவரம்பில் மகாதேவர் கோயில் மையமானது .அதை ஒட்டிய தொன்மையான வீடுகளில் ஒன்று என்னுடையது. எங்கள் குடும்பம்  முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ‘கணபதியம் வளாகம்’ என்பது வீட்டுப் பெயர்.
‘வயக்க வீடு’ என்பது அப்பாவின் குடும்பப் பெயர்.

என் அப்பா பாகுலேயன் பிள்ளை பத்திரப்பதிவுத்துறை ஊழியராக இருந்தார்.அம்மா விசாலாட்சி நல்ல இலக்கிய வாசகி.அவருடைய அண்ணன் ஒருவர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தார். ஆகவே அம்மா இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்று மொழிகளிலும் நிறைய வாசிப்பவர் .எனக்கு இலக்கிய அறிமுகம் அம்மாவிடமிருந்து தான் .எங்கள் இல்லத்தில் நல்ல நூல் சேகரிப்பு இருந்தது. அம்மா என்னை ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். நான் இன்னொரு தொழிலையோ அடையாளத்தையோ கற்பனை செய்ததே இல்லை.

நான் வணிகவியல் இளங்கலை வரை படித்தேன். இறுதியாண்டு படிக்கும்போது என் நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டான்.
அது என்னை நிலைகுலையச் செய்தது .பல உளச்சிக்கல்களுக்கு ஆன்மிக நிலையழிவுக்கும் ஆளானேன். ஊரை விட்டு ஓடிப்போனமையால் படிப்பை முடிக்கவில்லை.

சிறுவயதில் துறவியாக ஆசைப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் .அது உண்மையா ? காசிதிருவண்ணாமலைபழனி என்று சுற்றியதெல்லாம் எந்த ஆண்டுகளில் ?

நான் எனது 18 வயதில் ஒரு முறையும் 19 வயதில் இன்னொரு முறையும் ஊரை விட்டு ஓடிப் போனேன் .1981 82 இல் துறவியாக அலைந்திருக்கிறேன். துறவி என்று சொல்ல முடியாது. அப்போது ஆழ்ந்த உளச்சிக்கல் இருந்தது .ஆகவே தனியாக அலைந்தேன். பெரும்பாலும் சாமியார்களுடன் இருந்தேன் என்று சொல்லலாம். திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், பழனி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். குறுகிய காலம் .மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள்.

வேலைவாய்ப்புதிருமணம் பற்றி கூறலாமா ? ரசிகையாகிவாழ்க்கை துணைவர் ஆனவரை எப்போது சந்தித்தீர்கள்? முதலில் விருப்பத்தைத் தெரிவித்தவர் யார்? அந்த அனுபவம் ? அவரது ஊருக்குச் சென்றிருக்கிறீர்களா?

1984ஆம் ஆண்டு நவம்பரில் நான் காசர்கோடு (வடகேரளம்)தொலைபேசி நிலைய ஊழியனாக தற்காலிகப் பணியில் சேர்ந்தேன். அங்கே 1988 வரை பணியாற்றினேன். 1997 வரை தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பின்னர், நாகர்கோவில் வந்தேன். 2008 இல் தக்கலை தொலைபேசி நிலையத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். 2004 இல் திரைத்துறைக்குள் நுழைந்தேன் .அது முதல் நீண்ட விடுப்பில்தான் இருந்தேன்.

நான் தருமபுரியில் பணியாற்றும் போது 1990 இல் என் முதல் நாவல்’ ரப்பர்’ வெளிவந்தது .அகிலன் நினைவுப் பரிசு பெற்ற நாவல் அது .அந்த நாவலை வாசித்து விட்டு அப்போது மதுரை வேளாண் கல்லூரியில் மாணவியாக இருந்த அருண்மொழி நங்கை எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார். நவீன இலக்கியம் புரியாமல் அந்நியமாக இருப்பதைப் பற்றி எழுதியிருந்தார். நான் விரிவான பதில்கள் போட்டேன். பின்னர் நான் கேரளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது மதுரையில் வேளாண் கல்லூரிக்குச் சென்று அருண் மொழியைச் சந்தித்தேன். அந்த கடிதங்களில் இருந்த கூர்மையும் கூடவே இருந்த கள்ளமின்மையும்தான் நான் அவரை நோக்கிச் செல்ல காரணம். நேரில் சந்தித்தபோது பெரும் பிரியம் ஏற்பட்டது.

இலக்கிய ஆர்வம் கொண்ட அதேசமயம் சிறுமியைப் போல துறுதுறுப்பாக இருந்த அருண்மொழியை நான் மிக விரும்பினேன். என் காதலை தெரிவித்து கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துக்கு அவர் தந்தி அடித்து பதில் அளித்தார். தன் சம்மதத்தைக் கடிதம் வழியாக தெரிவித்தால் அது வந்து சேர நாலைந்து நாள்கள் ஆகுமே.
அதுவரை நான் தவிக்கக்கூடாது என அந்த தந்தியை அடித்திருந்தார். அவ்வாண்டே திருமணம் செய்து கொண்டோம். இப்போது அருண்மொழி அந்த நினைவுகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதி இருக்கிறார்.

நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி உள்ளிட்ட நிறைய குருமார்கள் மீது பிடித்தம் இருக்கிறதே ….? இவர்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள்? இவர்களைப் பற்றி அறிமுகம் என்ன?

நான் இளமையிலேயே சாவுகளைச் சந்தித்தவன்.சாவு வாழ்க்கை மேல் அடிப்படையான கேள்விகளை உருவாக்கி விடுகிறது .அவை ஆன்மீகமான அலைக்கழிவை உருவாக்கின. எனது 28 வயதுக்குள் பல துறவிகளைச் சந்தித்தேன் .அவர்கள் எனக்கு வழிகாட்டவில்லை .அது அவர்களின் பிழை அல்ல. என் உலகம் இலக்கியம். ஆகவே இலக்கியம் வழியாகவே ஓர் ஆசிரியர் என்னிடம் பேச முடியும் .இலக்கியம் நன்கறிந்த மெய்ஞானியாக நான் சந்தித்தவர் குரு. நித்ய சைதன்ய யதி .அவர் நடராஜகுருவின் மாணவர். நடராஜகுரு நாராயண குருவின் மாணவர். நடராஜகுரு மேலைத் தத்துவத்தில் சார் போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்ய சைதன்ய யதி தத்துவம், உளவியல் ஆகியவற்றில்  முனைவர் பட்டம் பெற்றவர். மாபெரும் இலக்கியவாதி. ஆகவே அவருக்கு நான் மாணவன் ஆனேன். அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன்.

தத்துவம் என்பது உரிய ஆசிரியர் அமையாமல் கற்றுக் கொள்ள முடியாத ஒரு துறை. ஆன்மிகம் என்பது ஆசிரியர் வழிகாட்டினாலொழிய உள்ளே செல்லவே முடியாத ஒரு களம். என் தத்துவ, ஆன்மிக தேடல்களால் நான் என் மெய்யாசிரியரைக் கண்டு கொண்டேன். இலக்கியவாதிக்கு தத்துவ அடித்தளம் இருந்தாக வேண்டும் .

தத்துவம் என்பது ஒரு பாடமாக நூல்கள் வழியாகக் கற்கத்தக்கது அல்ல. தத்துவப் படுத்தல் என்பது ஓர் அறிவுச் செயல்பாடு. அதை ஆசிரியர்தான் கற்பிக்க முடியும். எதையும் தத்துவார்த்தமாக அணுக நித்ய சைதன்ய யதியிடமிருந்து கற்றேன் .  தத்துவார்த்த அணுகுமுறை என்பது எந்த விஷயமானாலும் அதன் சாராம்சம் என்ன ஒட்டுமொத்தம் என்ன என்று பார்ப்பது. அதைக் கற்பித்தவர் நித்யா தான்.

எழுத்து என்று வரும்போது உங்களது சிந்தனைப் போக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்தது ?

நான் எழுத ஆரம்பித்தது மிக இளமையில் .பள்ளி நாட்களிலேயே சிறுவர் இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன் .கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு பெயர்களில் வார இதழ்களில் கதைகள் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் எழுதுவது நின்றது. பின்னர் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்த போது மீண்டும் எழுதலானேன். 1986 இல் சுந்தர ராமசாமி அறிமுகமானார்.அவ்வாண்டே மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா அறிமுகமானார்.

இருவரும் என்னை இலக்கியத்தில் வழி நடத்தினர். சிற்றிழ்களில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். 1987 இல் கணையாழியில் ‘ நதி’ என்னும் சிறுகதையும் தீபம் இதழில் ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. கொல்லிப் பாவை இதழில் ‘கைதிகள்’ என்னும் கவிதை வெளிவந்தது
இவைதான் என் தொடக்க கால எழுத்துகள்.

என் இலக்கியப் பார்வை சுந்தர ராமசாமியும் ஆத்தூர் ரவிவர்மாவும் வடிவமைத்தது. ஓர் இலக்கியவாதி எந்த அரசியலியக்கத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த சிந்தனை முறைக்கும் முழுமையாக தன்னை அளித்துவிடக்கூடாது என்பதே என் முதல் நிலைப்பாடு.

இலக்கியவாதி முழுக்க முழுக்க தர்க்கபூர்வமாக, நடைமுறைத் தன்மையுடன் பேச வேண்டியதில்லை .அவன் உள்ளத்துக்கு தோன்றியதை  எழுதவும் பேசவும் வேண்டும். அதில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம். சில விஷயங்கள் சமூகத்தால் ஏற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அவன் தன்னியல்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் க அவன் எதற்காகவும் தன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. எதற்கும் அஞ்சவும் கூடாது .என் இலக்கிய கொள்கை என்பது இதுதான் .

என் கதைகள் எல்லாமே தன்னியல்பாக வெளிவருபவை. எந்தத் திட்டமும் இருக்காது.

பெரும்பாலான சமயங்களில் ஒரு சின்ன காட்சி மட்டும் மனதில் தோன்றும். சில சமயம் வெறுமே முதல் வரி மட்டும் மனதில் எழும். உடனே எழுத ஆரம்பித்து விடுவேன் .ஆனால் நாவல்கள் அப்படி அல்ல. தெளிவான திட்டமிடல் அவற்றில் இருக்கும் .நாவலின் கரு என்பது ஓர் அடிப்படையான கேள்விதான் .அது மனதில் எழுந்ததும் நாவலின் களம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவேன்.

கதை ,நாவல் எழுதிய அனுப்பவும்?

‘விஷ்ணுபுரம் ‘ நாவலுக்கு ஏழு ஆண்டுகால ஆராய்ச்சி தேவைப்பட்டது . வெண்முரசு நாவல் தான் நான் திட்டமிடத் தொடங்கியது 1990இல் . 2014இல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகே எழுத ஆரம்பித்தேன் .நடுவே பல நூறு  நூல்களை வாசித்தேன் .ஏராளமாகப் பயணம் செய்தேன். குறிப்புகள் மட்டும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் கையில் இருந்தன .ஆனால் இந்த திட்டமிடல் எல்லாமே நாவலின் வடிவம் கட்டமைப்பு சார்ந்தவை மட்டுமே. நாவலை உணர்ச்சிகளும் சரி கதாபாத்திரங்களும் சரி சித்தரிப்பும் சரி எழுத எழுத உருவாகி வருபவை மட்டுமே.

பொதுவாக ஒரே ஸ்ட்ரோக்கில் அல்லது மூச்சில் ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி விடுவீர்களா? இல்லை திருத்தங்கள் மேற்கொள்வீர்களா?

சிறுகதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் எழுதி விடுவதே என் வழக்கம் .ஏனென்றால் எனக்கே கதை தெரிந்திருக்காது. கதையை எழுத எழுத எனக்குள் அது விரிந்து வரும். அந்த ஆர்வமே எழுத வைக்கும் .அத்துடன் நான் எழுத்தை யோசித்துச் செய்வதில்லை .ஒரு கனவு போல அது நிகழ்கிறது .நடுவே விட்டு விட்டால் ஒருவேளை அப்படியே நின்று விடக்கூடும். ஆகவே எழுதிக் கொண்டே செல்வேன் .சிறுகதைகள் மட்டுமல்ல ‘குமரித்துறைவி’ போன்ற சிறிய நாவல்கள் கூட ஒரே மூச்சில் எழுதியவைதான். தொடர்ச்சியாக 30 மணி நேரம் எழுதி ‘குமரித்துறைவி’யை முடித்தேன்.

கணினியில் நேரடியாகவே டைப் செய்து விடுவீர்களா? இல்லை எழுதி வைத்து டைப் செய்கிறீர்களா?

நான் 2000 ஆம் ஆண்டில் கணிப்பொறியை வாங்கினேன். அன்று முதல் கணிப்பொறியில் நேரடியாக தட்டச்சிடுவதே வழக்கம். கையால் எழுதுவதில்லை. பேசும் வேகத்திலேயே தட்டச்சிடுவேன். ஆனால் அதற்கு முன் ‘விஷ்ணுபுரம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எல்லாம் கையால் தான் எழுதினேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று முறை செம்பிரதி எடுத்திருக்கிறேன்.

நான் படைப்புகளில் சோதனை முயற்சிகளை வேண்டுமென்றே செய்வதில்லை .ஆனால் நான் ஒரு படைப்பில் முன்வைக்கும் கேள்விகளுக்கு உகந்த முறையில் அதற்குத் தேவையான வடிவத்தை உருவாக்கிக் கொள்கிறேன். உதாரணம் விஷ்ணுபுரம் நாவல் நேரடி நிகழ்வுகளும் அந் நிகழ்வுகள் கதையாக ஆனபின்  உள்ள வடிவமும் அக்கதைகள் நூல்களாக எழுதப்பட்ட வடிவ மும் ஒரே சமயம் கலந்து வருவதாக உள்ளது . அந்நாவல் நம் புராண மரபை ஆராயும் படைப்பு. புராணங்கள் அப்படித்தான் உள்ளன. அவை ஒரே சமயம் கற்பனையாகவும் வாழ்க்கையாகவும் உள்ளன. ஆகவே அவ் வடிவம் தேவையாகிறது.

நிறைய சோகங்கள் உங்கள் வாழ்க்கையில்அதைத் திரும்பிப் பார்க்க விரும்புவீர்களா?

என் இளமைக்கால வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்தன .அவற்றிலிருந்தே எழுத்தாளன் ஆனேன். என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் அந்த நினைவுகள் கடுமையானவை. ஆனால் நான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இனி என் வாழ்க்கையில் துயரத்துடன் இருப்பதில்லை, சோம்பி இருப்பதில்லை என்று முடிவு செய்தேன் ,அதன்பின் ஒவ்வொரு நாளையும் எழுத்தும் வாசிப்பும் பயணமுமாகவே செலவிடுகிறேன். ஒரு பொழுதையும் வீணடிப்பதில்லை .எதையும் எண்ணி துயரமடைந்து செலவழிக்க எனக்கு நேரமில்லை.நான் செய்ய வேண்டிய பெரிய பணிகள் எஞ்சியிருக்கின்றன.

இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படி இருக்கிறது?

இன்றைய தமிழ்ச் சிறுகதை களத்தில் ஏராளமான புதிய குரல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.பா. திருச்செந்தாழை, ராம் தங்கம், லட்சுமி சரவணக்குமார், லெ.ரா.வைரவன், அரிசங்கர்,  விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், கார்த்திக் பாலசுப்ரமணியம், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி,  ஜி. எஸ் .எஸ். வி. நவீன், கமலதேவி ,கனகலதா, குணா கந்தசாமி, மயிலன் சின்னப்பன் என பலர் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளில் பொதுவாக இன்றைய நவீன வாழ்க்கை உருவாக்கும் உறவுச் சிக்கல்கள் கருக்களாகின்றன. இன்று பெரிய அரசியல் கனவுகள் இல்லை .என் தலைமுறையில் உலகை மாற்றிவிடலாம் என்னும் நோக்கம் எழுத்துகளின் உள் கிடையாக இருந்தது. இன்றைக்கு அந்த நம்பிக்கை எவரிடமும் இல்லை .அதனால் உருவாகும் எதிர்காலக் கனவுகள் இல்லாத வெறுமை இவர்களின் பொதுவான பேசு பொருளாக உள்ளது. அதற்குரிய வடிவங்களை இவர்கள் அழுத்தமாக உருவாக்கி வருகின்றனர்.

இதேபோன்று நாவல் உலகம் ? புதிய முயற்சிகள் நடப்பதாகக் கருதுகிறீர்களா?

பெரிய அளவில் நாவல் முயற்சிகள்  நிகழ்வதில்லை.புதிய தலைமுறை இன்று சிறுகதைகள் வழியாக தங்கள் மொழியையும் வடிவத்தையும் கண்டடைகிறார்கள்.சுனில் கிருஷ்ணன் எழுதிய’ நவ கண்டம் ‘நவீன் எழுதிய ‘பேய்ச்சி’, ‘சிகண்டி’, தூயன் எழுதிய ‘கதீட்ரல்’ போன்றவை அண்மையில் வெளிவந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. என் மகன் அஜிதன் எழுதிய ‘மைத்ரி’ என்னும் நாவல் இவ்வாண்டு வெளிவந்துள்ளது. எல்லா வரியும் கவிதையாக நிகழ்ந்த ஒரு அரிய படைப்பு அது.

திராவிட இயக்கங்களின் தாக்கங்கள் நிறைய உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்? எதனால் இந்த முரண் ?

திராவிட இயக்கங்களின் அரசியல் தாக்கம் ,மொழி, பண்பாட்டில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை நான் மறுப்பதில்லை. திராவிட இயக்கம் ஒரு பரப்பிய இயக்கம்.
ஒரு பரப்பிய இயக்கம் மக்களிடம் ஏற்கெனவே உள்ள நோக்கங்கள் ,கோபங்கள் ஆகியவற்றை ஒன்றாகத் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்குகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இடைநிலை சாதியினர் அதிகாரம் பெறுவதற்கு வழி வகுத்தது திராவிட இயக்கமே. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் அதனால் ஊக்கம் பெற்றன.

தமிழகத்தில் இருந்த சாதி வேற்றுமைப் பார்வைகள் தமிழ் மொழி மேல் இருந்த உதாசீனப் பார்வை ஆகியவற்றை எதிர்த்து இல்லாமலாக்கியதும் திராவிட இயக்கமே. அதை எப்போதும் ஏற்றுத்தான் பேசி வருகிறேன் .ஆனால் பரப்பியல் இயக்கம் எப்போதுமே அதற்கு முன்னால் இருந்த அறிவியக்கங்களில் இருந்தே தன் கொள்கையை எடுத்துக்கொண்டு அதை மக்களிடம் கொண்டு செல்லும்.

சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த அறிவியக்கங்களைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அதிலிருந்தே தங்கள் சிந்தனைகளை முன்னால் கொண்டு செல்ல வேண்டும். பரப்பியல் இயக்கம் எப்போதுமே கருத்துகளையும் கொள்கைகளையும் மிக மிக எளிமையாக ஆக்கிவிடும். எளிமையாக ஆக்கினால் தான் பொதுமக்களிடம் அவற்றைக் கொண்டு செல்ல முடியும் .அந்த எளிமையான கருத்துகளையும் கொள்கைகளையும் ஒட்டி சிந்திக்கும் சிந்தனையாளனும் எழுத்தாளனும் மிக மேலோட்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் எழுத்துக்களில் சமநிலை இல்லாத ஒற்றைப்படையான கோஷங்கள் நிறைந்திருக்கும். அதைத்தான் நான் நிராகரிக்கிறேன். இது நான் சொல்வது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், க .. சுப்பிரமண்யம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என அனைவருமே சொன்ன விஷயம் தான். நான் திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியல் கோஷங்களை நிராகரிக்கிறேன் .ஆனால் திராவிட இயக்கம் எந்தெந்த அறிவியக்கங்களில் இருந்து தன் கொள்கைகளை எடுத்துக் கொண்டதோ அந்த அறிவியக்கங்களை எல்லாமே ஆழ்ந்து கற்கிறேன். தமிழிசை இயக்கம் தனித்தமிழ் இயக்கம்,தனித்தமிழியக்கம், தமிழ் பதிப்பியக்கம் பற்றி எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறேன். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் முதல் இரா. இளங்குமரனார், ச. பாலசுந்தரம் வரை எத்தனை ஆளுமைகள் பற்றி மிக மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன் என்று பாருங்கள். என் அளவுக்கு அவற்றைப் பற்றி விரிவாக எழுதிய திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் இல்லை.

திருமாவளவன் பிடித்தமானவராக ஆனது எப்படி? ஆன்மிகம் சார்ந்த அவரின் கருத்துக்களை எப்படி எதிர்கொள்வீர்கள் ?அல்லது அது பற்றிய விமர்சனம் உண்டா?

நான் தலித் மக்கள் மீதான சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றைக் கண்கூடாகவே கண்டவன் .நம் அரசியலும் சரி அரசாங்கமும் சரி இன்று இடைநிலைச் சாதிகள் சார்ந்தவை. எல்லா அரசியல் இயக்கங்களும் இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவைதான். ஆகவே தலித் மக்களுக்காக ஓர் இயக்கம் உருவாகி வந்தபோதுதான் அந்த மக்களின் உரிமைகளைக் கூறவும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும் முடிந்தது .அந்த இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். ஆகவே அவர் ஒரு தார்மிக சக்தி என்று நம்புகிறேன். அவர் அறிவியக்கத்தின் மீது மதிப்பு கொண்டவர். பண்பட்ட மனிதர். அவருடைய அரசியலை நான் ஏற்கவில்லை .அவர் மதம், ஆன்மிகம் பற்றிச் சொல்லும் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளையே நான் சொல்லி வருகிறேன் .ஆனால் அவர் இந்து மதம், சனாதனவாதிகள் பற்றிச் சொல்லும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் உரிமை அவருக்கு உண்டு என நினைக்கிறேன் .ஆயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று பேசுபவர். அவர் இந்து மதத்தின் எல்லா கீழ்மைகளையும் தேக்க நிலைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்து மதமும் சனாதனிகளும் தங்கள் கடந்த கால கீழ்மைகளுக்காக தலைகுனிய வேண்டும். தங்களை அவற்றில் இருந்து  மீட்டுக் கொள்ள வேண்டும். அவ்வகையில் நம் மனசாட்சியுடன் பேசும் குரல் அவர். அது நமக்கு வலிக்கிறது என்றால் அந்த வலி நமக்குத் தேவை. அந்த வலி நம்மை மீட்கும் சக்தி கொண்டது.

சோவியத் யூனியன் சிதைந்த போது – ‘பின் தொடரும் நிழலின் குரல்வெளியானது .சோவியத் யூனியன் சிதைந்து 30 ஆண்டுகளும் உங்கள் நாவல் வெளிவந்த 20 ஆண்டுகளும் கடந்த நிலையில் தற்போதைய எண்ணம் எவ்வாறு இருக்கிறது?

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டி ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வெளிவந்தது .இன்று ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நாவல் புதிய தலைமுறையினரால் வாசிக்கப்படுகிறது .இன்று பலருக்கு சோவியத் ரஷ்யா என்றால் என்ன என்று தெரியவில்லை .பலர் லெனின், ஸ்டாலின் பெயர்களை எல்லாம் கூகுளில் தேடி தெரிந்து கொள்கிறார்கள். இன்னும் நூறாண்டுகளில் சோவியத்  ரஷ்யாவையே இந்த நாவல் தான் தமிழில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் .ஆனால் அந்த நாவல் உருவாக்கிய கேள்விகள் என்றுமிருக்கும்.

கருத்தியல் குருட்டுத்தனம் பற்றி அந்நாவல் பேசுகிறது. ஒரு வலிமையான கருத்தியலை அதாவது கொள்கையை நாம் நம்பிவிட்டால் அதுவே சரி என தோன்றி விடுகிறது. வேறு எல்லாமே தப்பு என தோன்றுகிறது. அந்தக் கொள்கையின் பொருட்டு நாம் கொலை கூட செய்கிறோம். சொந்த பெற்றோரை, ஆசிரியர்களை அவமானம் செய்கிறோம் .ஆனால் அந்த கருத்தியல் அல்ல கு கொள்கை பின்னால் தவறாக ஆகுமென்றால் நாம் செய்த வை எல்லாம் இல்லை என ஆகி விடுமா என்ன?  நாம் தனி மனிதர்கள் பத்தாயிரம் பேர் சேர்ந்து ஒன்றைச் சொன்னால் நம்மால் அதை எதிர்த்து  உண்மை என்ன என்று கண்டறிய முடிவதில்லை. அதற்கான கல்வியோ உளவலிமையோ நமக்கு இருப்பதில்லை.

அப்படியென்றால் தனி மனிதனாக நாம் எப்படி உண்மையை அறிய முடியும்? இந்தக் கேள்வியைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் கேட்கிறது. அதற்கான விடையைச் சொல்கிறது. அந்நாவலில் இயேசு கிறிஸ்து வந்து அந்த விடையைச் சொல்கிறார். இன்று கம்யூனிசம் வலுவிழந்து விட்டது. ஆனால் புதிய கொள்கை வெறிகள் வந்துவிட்டன. இந்த பிரச்சினை என்றும் இருக்கும். அதைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் பேசுகிறது.

நீங்கள் வலது சரியாக இருக்கிறீர்கள் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

வலது சாரி, இடதுசாரி என்ற பிரிவினை எல்லாம் அரசியல் களத்தில் அந்தந்த சூழலில்  சொல்லப்படுவது.நேற்று வரை காங்கிரஸ் வலதுசாரி கட்சி என்றார்கள். இன்றைக்கு அது இடதுசாரி என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி என்றால் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் தி.மு.க , அ.தி.மு.க. இரண்டுமே வலதுசாரிக் கட்சிகள்தான்.   சிந்தனையில் இப்படி எளிமையான பிரிவினை கிடையாது. சிந்தனையாளர்கள் மேல் இந்தப் பிரிவினையை போடுபவர்களுக்கு சிந்தனை துறையில் அடிப்படை அறிமுகமே இல்லை என்று தான் பொருள். உலகத்தில் உள்ள எந்த சிந்தனையாளரையும் இடதுசாரி, வலதுசாரி என பிரித்து வகைப்படுத்த முடியாது.

நீங்கள் எதிர்பார்க்கிற கருத்துச் சுதந்திரம் கிடைக்கிறதா?

கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்ற ஒன்று அல்ல. எந்த சமூகத்திலும் எதையும் சொல்லும் உரிமையில்லை. நான் உலகமெங்கும் பார்த்த வரையில் இந்தியாவில் தான் மிக மிக அதிகமான கருத்து சுதந்திரம் உள்ளது. இது இன்னமும் கல்வி அறிவில்லாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு .சிந்தனையையோ இலக்கியத்தையோ கேள்வி கூட பட்டிராத கோடானு கோடி பேர் இங்கே வாழ்கிறார்கள். சமூக ஊடகங்கள் வழியாக எந்த விஷமியும் அவர்களை எளிமையாக தூண்டிவிட முடியும் என்னும் நிலை உள்ளது. எல்லா கருத்துகளையும் விஷமிகள் வேண்டுமென்றே திரிக்கிறார்கள். ஆகவே கருத்துகளை மிகக் கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. அது ஒரு கட்டுப்பாடு. நாமே போட்டுக் கொள்ள வேண்டியது.

சாகித்ய அகாதெமியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

சாகித்ய அகாதெமி என்பது ஓர் துணை அரசு நிறுவனம் .அதில் பங்கேற்பவர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள் .அவர்களின் அதிகாரம்தான் அங்கே உள்ளது. பேராசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கிய அறிமுகமோ அடிப்படை வாசிப்போ கிடையாது .ஆகவே அவர்கள் வேறு வேறு சிபாரிசுகளுக்கு ஆட்பட்டு அடிக்கடி சாதாரணமானவர்களுக்கு விருதுகளை அளித்து விடுகிறார்கள் .வலிமையான விமர்சன இயக்கம் வழியாகவே சரியான எழுத்தாளர்களுக்கு விருதுகள் சென்று சேரும்படி செய்ய முடியும். கேரளத்திலும் கர்நாடகத்திலும் நிகழ்வது இதுதான் .

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த வகை அமைப்புகளில் ஊடுருவி தங்கள் சுயநல நோக்கங்களை செயல்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் நிறங்களை உடனே மாற்றிக்கொண்டு அதில் ஒட்டிக்கொள்வார்கள்.ஆகவே விமர்சகர்களின் கூர்மையான கண்காணிப்பு தேவைப்படுகிறது.

பத்ம விருதை தவிர்த்தது ஏன் ? அது உயரிய விருதல்லவா?

அரசு அளிக்கும் விருதுகளை ஏற்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. பத்ம விருதுக்காக என் நண்பர்கள் முயற்சி செய்தனர். சில முக்கியமான ஆளுமைகளின் பரிந்துரையும் இருந்தது. ஆனால் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதை ஏற்றுக் கொண்டால் நான் என் கருத்துகளை சமரசம் செய்ய வேண்டி இருக்கும் என்று தோன்றியது. ஆகவே மறுத்துவிட்டேன்.

சினிமா உலகில் உங்களது தற்போதைய இடம் நீங்கள் விரும்பியது தானா?

சினிமாவில் என்றல்ல எங்கும் நான் விரும்புவது அக்களத்தில் முதலிடத்தை . இன்று சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான்தான்.

சினிமாவில் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடிகிறதா?

சினிமாவில் நான் சாதிக்க விரும்பியது என ஏதுமில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை சராசரியானது. பொழுதுபோக்குக்காகவே அவர்கள் சினிமா பார்க்கிறார்கள். இங்கே சினிமா விமர்சகர் கூட பொது ரசனை ஒட்டிய பார்வை கொண்டிருக்கிறார்கள். சினிமா விமர்சனமே ஒரு தொழிலாக ஆகிவிட்டது .ஆகவே சினிமாவில் உள்ள நுட்பங்கள் ஆழங்கள் கவனிக்கப்படுவதில்லை.

உதாரணமாக நான் ‘பொன்னின் செல்வன்’ சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன். கடம்பூர் மாளிகைக்கும் பழையாறை மாளிகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்த்தேன். மிகச் சுருக்கமாக பிரிவின் நஞ்சு என்பதைச் சொல்லும் சில வசனங்கள் அதிலுள்ளன. அதை ஒருவராவது சொல்கிறாரா என்று பார்த்தேன். எவருமே சொல்லவில்லை.

பொத்தாம் பொதுவாக கலை இயக்கம் பரவாயில்லை, வசனங்கள் சில இடங்களில் கூர்மை .இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல இடங்களில் ஒரு கிளாசிக் ஓவியத்தன்மையை கொண்டிருந்தது. அதற்கான ஒளியை அமைத்திருந்தார். அதை ஒளிப்பதிவு சுமார் , தெளிவாக இல்லை என சிலர் எழுதினர். பொன்னியின் செல்வனை எந்த வகையில் சேர்ப்பது என்று கூட மலையாள விமர்சகர் தான் சொல்ல வேண்டி இருந்தது. அதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் ‘ போன்ற மாயாஜால படத்துடனோ அல்லது  ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற குழந்தைகள் படத்துடனோ ஒப்பிடக்கூடாது. அதை ‘டிராய்’ அல்லது ‘எலிசபெத்’ போன்ற படங்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி ஒப்பிட்டால் அது அவற்றின் தரத்தை அடைந்திருப்பதைக் காணலாம். இங்கே மிக கொஞ்சம் பேர் அவர்களுக்கு உகந்த அரசியல் கருத்து சினிமாவில்  சொல்லப்பட்டால் ரசிப்பார்கள் .அதுவும் நல்ல சினிமாரசனை அல்ல. ஆகவே சினிமாவில் எழுத்தாளனாக நான் செய்ய ஆசைப்படுவது ஒன்றுமில்லை. விளைவாக ஏமாற்றமும் இல்லை. நான் இயக்குநருக்கு கதையில் உதவி  செய்பவன் மட்டுமே. கதையை இயக்குநரின் தேவைக்கு ஏற்ப செய்து கொடுப்பவன் ,அவ்வளவுதான். அது ஒரு தொழில். அந்தத் தொழில் மிகச் சிறப்பாகவே செல்கிறது .என் பொருளாதார சுதந்திரம் சினிமாவால் வந்தது. இலக்கியத்திலும் சிந்தனைக் களத்திலும் நான் எண்ணிய பல விஷயங்களை சினிமாவில் இருப்பதால்தான் செய்ய முடிகிறது .சினிமாவில் நான் விரும்பியது அது மட்டுமே.

அங்காடித்தெரு ,பொன்னியின் செல்வன் அனுபவங்கள் எத்தகையது?

என் முதல் வெற்றிப்படம் நான் கடவுள் .அதன்பின் அங்காடித்தெரு, சர்க்கார், பாபநாசம் என பல படங்கள் வெற்றி அடைந்தவை. நான் எழுதியவற்றில் 2.0, பொன்னியின் செல்வன்  இரண்டும் சரித்திர வெற்றிகள். 2.0 படத்தை விக்ரம் படம் தான் முந்தியது.அதை இப்போது பொன்னின் செல்வன் முந்தியிருக்கிறது. தமிழ் சினிமாக்களில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களிடையே அதிக வணிக வெற்றி பெற்ற படம் இப்போதைக்கு பொன்னின் செல்வன் தான். அதற்கு படத்தின் சரித்திரம் சார்ந்த அழகியல் கண்களை நிறைக்கும்படி  காட்சிப்படுத்தப்பட்டிருந்ததே முதன்மைக் காரணம். அடுத்தபடியாக அந்தப் படத்தை உலகம் முழுக்க கொண்டு சென்று சேர்த்த லைக்கா போன்ற  மாபெரும் நிறுவனம் இரண்டாவது காரணம் .ஆனால் இணையாகவே சரளமான திரைக்கதை ஓட்டத்தை உருவாக்கியதும் காரணம். அதில் என் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் வசனங்கள் செந்தமிழில் அமைந்தாலும் எளிமையாக இருந்ததும் சுருக்கமாக இருந்ததும் வெற்றிக்குக் காரணம் .அப்படி இருந்தமையால்தான் அந்த வசனங்களை எல்லா மொழிகளிலும் நன்றாக மொழிமாற்றம் செய்ய முடிந்தது. சுருக்கமாக சப்டைட்டில் போட முடிந்தது. ஆகவே தான் உலகம் முழுக்க சென்றது. பொன்னியின் செல்வன் வசனங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் கூட சிரிப்பும் கைத்தட்டலும் விழுகின்றன. அவ் வசனங்களின் மொழியாக்க வடிவங்கள் அந்தந்த மொழிகளில் ஒற்றை வரிகளாவே புகழ்பெற்றிருக்கின்றன .அந்த வகையில் எனக்கு மிகுந்த மன நிறைவு .என் சினிமா தொழிலில் இந்த ஆண்டு ஓர் உச்சம். என் இரண்டு படங்கள் ஒரே மாத

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.