காவியம் – 35

உயர்குடிப்பெண், மதுரா அருங்காட்சியகம், சுடுமண் சிற்பம், சாதவாகனர் காலம். பொயு 2

கானபூதி சொன்னது. திருமணம் ஆகி கணவனுடன் பாட்னாவுக்கு வந்து அந்த பெரிய மாளிகையில் அவனுடன் தங்கி, அவனுடைய மூர்க்கமான காமத்துக்கு தன்னை அளிக்கும்போது ஊர்வசி ஒரு மெல்லிய சந்தேகத்தை தன்னுள் கொண்டிருந்தாள். அவளுடைய மாதவிலக்கு தள்ளிப்போயிருந்தது. அது ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் குழந்தையா என்று அவள் பதற்றம் கொண்டிருந்தாள். தனியாக இருக்கும்போது விரல்களை விட்டு நாட்களை எண்ணிக்கொண்டிப்பதே அவள் வழக்கமாக இருந்தது ஓர் எண்ணிக்கையில் நாட்கள் சரியாக வந்தன. இன்னொரு முறை பிழையாகச் சென்றன.

தன் கணவன் பெண்களை நன்கறிந்தவன் என்பதை முதல் இரவிலேயே அவள் புரிந்துகொண்டாள். அவன் ராய்சௌத்ரியின் இன்னொரு வடிவமாக இருந்தான். பெண் அவளுக்கு உடல் மட்டும்தான். காமம் என்பது தனக்கான நுகர்வுதான். உண்மையில் அது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலையே அளித்தது. தான் எவரையும் ஏமாற்றவில்லை என்றே அவள் சொல்லிக்கொள்ள முடிந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே அவள் உடல் நலமற்று மருத்துவரை சந்தித்தபோது அவளுக்கு சிஃபிலிஸ் தொடக்க நிலையில் இருப்பதை அவர் சொன்னார். ஆனால் அஸ்வத் தேஷ்பாண்டே அதை அவன்தான் அவளுக்கு அளித்ததாக எண்ணிக்கொண்டிருந்தான். முன்னரே அவனும் அந்நோய்க்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் கருவுற்றிருப்பதை அறிந்த மருத்துவர் கருவைக் கலைப்பதே நல்லது என்றார். ஆனால் அத்தகவலை தெரிந்துகொண்ட ருக்மணி தேஷ்பாண்டே அதை உறுதியாக மறுத்துவிட்டாள். ‘இந்த வீட்டின் முதல் குழந்தையைச் சிசுப்படுகொலை செய்தால் இந்த வம்சம் அற்றுப்போய்விடும்’ என்று அவள் சொன்னாள். அந்த விவாதத்திற்குள்ளேயே நுழையாமல் அஸ்வத் தேஷ்பாண்டே ஒதுங்கிக்கொண்டான். அந்த உணர்ச்சிகரமான மிரட்டலுக்கு ஊர்வசி பணியவேண்டியிருந்தது. குழந்தை பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பிறந்தது அவளுக்கு ஆறுதலை அளித்தது. அதன் முகத்திலும் சாயலிலும் எங்கேனும் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் சாயல் உள்ளதா என்று அவள் ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை அவளைப்போலவே இருந்தமையால் நாளடைவில் அந்த சந்தேகத்திலிருந்து விலகிச் சென்றாள்.

ருக்மணி தேஷ்பாண்டே அதற்கு விஃபவ் தேஷ்பாண்டே என்று பெயரிட்டாள். ஒவ்வொன்றாக எண்ணி அஞ்சி கணக்கிட்டு, அஞ்சிய எதுவுமே நிகழாமல் ஒவ்வொன்றும் சீராக முடிய அடுத்த கணக்கிடல்களுக்கு சென்று கொண்டிருந்ததாகவே அவளுடைய திருமணத்தின் முதல் ஆண்டுகள் இருந்தன. பின்னர் அந்த ஒட்டுமொத்த நாடகத்தில் ஒரு பகுதியை மிகச்சரியாக நடிக்க அவள் கற்றுக்கொண்டாள். தன்னுடைய இடமென்ன என்று புரிந்துகொண்டு அந்த எல்லைகளை வகுத்துக்கொண்டாள்.

விஃபவ் தேஷ்பாண்டே ஒன்றாம் வகுப்பிலிருந்தே டார்ஜிலிங்கில் இருக்கும் உயர்தரமான தங்கிப் படிக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவன் வாழ்க்கை முழுக்க அங்குதான் கழிந்தது. ஓராண்டில் ஒரு மாதகாலம் அவனுக்கு விடுமுறை வந்தபோது பெரும்பகுதியை அவன் தன் பாட்டி தாத்தாவுடன் பாட்னாவில் செலவழிக்கத்தான் விரும்பினான். தன் தந்தை பணியாற்றும் தொலைதூர சிற்றூர்களுக்குச் சென்று தங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை. அவன் அடம்பிடித்து பாட்னாவிலேயே தங்கினான். அவன் அப்படி அடம்பிடிப்பதை அவன் பாட்டியும் தாத்தாவும் பெருமையாக எண்ணினர்.

அவனுடைய பார்வையில் அவனது அம்மா எப்போதும் நரம்புத் தளர்ச்சி கொண்டவள் போல இருந்தாள். அனைவரையுமே வெறுத்து விலக்கி தன்னுள் தான் ஆழ்ந்து எப்போதும் அழத்தயாராக இருப்பது போலத் தோன்றினாள். அவன் தந்தை பெரும்பாலும் வீட்டுக்கு வருவதோ தாயுடன் நெருக்கத்தை வைத்துக்கொள்வதோ இல்லை. அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் அவனை ஒரு பெரிய மனிதரை போல் நடத்தினார்கள். அவர்களை அவன் அதிகாரம் செய்ய முடியும், அதில் மெல்லிய மகிழ்ச்சியும் அடைய முடியும். ஆனாலும் அங்கே விளையாடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் மூடிக்கிடந்தன.

பாட்னாவில் விடுமுறை உற்சாகமானதாக இருந்தது அவன் தாத்தா அவனுடன் நிறைய நேரத்தை செலவழித்தார். பாட்டியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்னாவின் தெருக்களை மிக விரும்பினான். அங்கு நிகழும் கிரிக்கெட் போட்டிகள், சைக்கிள் போட்டிகள் என அவனுக்கு பொழுதுபோக்குகள் நிறைய இருந்தன. பின்னர் அவன் பாட்னாவின் கங்கைக்கரைப் படிக்கட்டுகளில் நிகழும் சீட்டாட்டங்களில் ஈடுபாடு கொண்டான். பான்பராக் போடவும், பணம் வைத்து சூதாடவும் தொடங்கினான். அவனுக்கு முதல் பெண் அனுபவமும் அங்கே ஒரு முதிய பரத்தையிடம் அமைந்தது. அதன்பின் அவன் எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவன் முகமும் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தது.

ஊர்வசி தேஷ்பாண்டே தாய் எனும் அனுபவம் இல்லாதவளாகத்தான் வாழ்ந்தாள். விஃபவ் பிறந்தபின் தொடர்ச்சியாக அவளுக்குச் செய்யப்பட்ட பாலியல் நோய்க்கான சிகிச்சைகளின் காரணமாக இரண்டுமுறை அவளுக்கு கரு கலைந்தது. நான்காவது குழந்தைக்காகத்தான் அவளை ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் இல்லத்துக்கு அனுப்பியிருந்தார்கள். அங்கு அவள் வந்த நாள் முதலே அந்தக் கருவும் கலைந்துவிடும் என்ற அச்சத்தை அடைந்தாள். அப்போது அவளுக்கு உண்மையிலேயே ஒரு குழந்தை தேவைப்பட்டது. ஏனென்றால் விஃபவ் பிறந்தபோது அந்தக் குழந்தையை அவள் வெறுத்தாள். அந்தக் குழந்தை தன் உடலில் இருந்த அனைத்து சத்தையும் உறிஞ்சி சாப்பிடுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பழைய நினைவுகள், விருப்பங்கள் வெறுப்புகள் என்று அலைக்கழித்து அந்தக்குழந்தையை அவள் குழந்தையாக ஒருபோதும் குழந்தையாகப் பார்க்க முடியாதபடி செய்தது.

அதன் பிறகு கருவுற்றபோது அந்தக்குழந்தை ஒரு பெண்ணாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அது மூன்று மாதத்தில் கலைந்தபோது கடும் அச்சம் கொண்டாள். அந்தக் குழந்தையைப் பற்றி அவள் ஏராளமான கற்பனைகள் செய்திருந்தாள். அதன் முகத்தையே அவள் பார்த்திருந்தாள். நெடுங்காலம் அவள் கனவுகளில் அந்தக் குழந்தை வந்துகொண்டிருந்தது. அவள் விழித்தெழும்போது அருகே அந்தக் குழந்தை கையாட்டி சிணுங்கியபடி கிடந்தது. திடுக்கிட்டு அவள் எழுந்து மின்விளக்கைப் போட்டால் மறைந்தது. பலமுறை அவள் அருகே இருந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனை உசுப்பி என் அருகே குழந்தையைப் பார்த்தேன் என்று சொன்னாள். எப்போதும் மது போதையில் தூங்கும் வழக்கம் கொண்டிருந்த அவன் ‘அது கனவு, பேசாமல் படு’ என்று சொல்லி குழறியபடி புரண்டு படுத்தான். இரவெல்லாம் அவள் தூங்காமல் விழித்து படுக்கையில் அமர்ந்து அந்தக்குழந்தை அங்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தவள் என்பது போல் அமர்ந்திருந்தாள்.

மீண்டும் கருவுற்ற போது முந்தைய குழந்தை நினைவிலிருந்து அகன்று பிறிதொரு குழந்தை அங்கே வந்தது. அது கலைந்தபோது இரு குழந்தைகளும் அவளை துரத்தத் தொடங்கின. அவள் குழந்தைகளின் குரல்களை மாறி மாறிக் கேட்கக் கூடியவளானாள். நடந்து செல்லும்போது சட்டென்று ஒரு குழந்தையின் குரல் கேட்க நின்று திடுக்கிட்டு திரும்பிப் பார்ப்பாள். அவள் உடல் துடிக்கத்தொடங்கிவிடும். சன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாலையில் குழந்தைகளுடன் போகிறவர்களை அவள் கடைசி எல்லை வரைக்கும் கண்களால் தொடர்ந்து பார்ப்பாள்.

அவர்களில் ஏதேனும் ஒரு குழந்தை திரும்பி அவளைப் பார்த்துவிட்டால் அவள் உடல் தூக்கிவாரிப்போடும். கைகால்கள் உதறத்தொடங்கும். அது தன் குழந்தையின் பார்வை என்று அவள் உணர்வாள். ஓடிவந்து வேலைக்காரர்களிடம் பிதற்ற ஆரம்பிப்பாள். “இன்று ஒரு குழந்தை சாலையில் என்னைப் பார்த்தது. அவ்வளவு தொலைவிலிருந்து என்னைப் பார்த்தது. அதற்குள் என்னுடைய குழந்தையின் ஆவி இருக்கிறது. என்னுடைய குழந்தைதான் மறுபிறப்பாக அங்கே பிறந்திருக்கிறது. இல்லாவிட்டால் அது ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இவ்வளவு தூரத்திலிருந்து ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?” என்று புலம்புவாள்.

வேலைக்காரர்கள் அவளுடைய அர்த்தமற்ற புலம்பல்களுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருந்தார்கள். அதை எப்போதுமே அவர்கள் புன்னகையுடன் ஆமோதித்தார்கள். ”நம் குழந்தை நம்மிடம் தேடி வந்துவிடும் மேம்சாப். அது ஒருபோதும் நம்மை விட்டு விலகாது” என்று அவர்கள் சொன்னார்கள்.

மூன்றாவது குழந்தை கலைந்தபோது அவள் அந்த குழந்தையைத் தற்செயலாகப் பார்க்க வாய்த்தது. அவள் உடலில் இருந்து ரத்தச்சேற்றுடன் நழுவிய அதை தாதிகள் ஒரு வெண்ணிறமான பாத்திரத்தில் எடுத்து வைத்தபோது அரைமயக்கத்தில் எச்சில் வழிய திரும்பிய அவள் கண்முன் அது தெரிந்தது. அரை மயக்கத்திற்குரிய அத்தனை புலன்கூர்மையுடன் அவள் அதைப் பார்த்தாள். நீண்டநேரம் துல்லியமாக அதைப் பார்த்துக்கொண்டே இருந்ததுபோல் அவள் உணர்ந்தாள். ஆனால் அரைக்கணம்தான் அவள் உண்மையில் பார்த்திருந்தாள். சிறிய தலையும், மிகச்சிறிய கைகால்களுமாக சுருண்டிருந்த அது சற்றே பெரிய இறால்மீன் போலிருந்தது.

நீண்டகாலம் ஊர்வசியை அந்த சிறிய உருவம் தொடர்ந்து வந்து வதைத்தது. கனவுகளில் அவள் முன் அது தோன்றும், அதன் சிறிய மண்டையின் கண்கள் திறந்து அவளைப் பார்க்கும். புழுவின் கண்கள். புழுவின் வாய். அது ஒரு பெரிய புழு.  அவளுக்கு ஒற்றைத்தலைவலி வருவதுண்டு. தலைச்சுற்றலும் குமட்டலும் எடுக்கும். வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. இருண்ட அறைக்குள் தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது அந்த இருளுக்குள் மிக அருகே அது அமர்ந்திருக்கும். கைநீட்டினால் தொட்டுவிடலாம் என்பதுபோல. ஒருமுறை கனவில் அவள் தன் அடிவயிற்றில் வாழைப்பூவுக்குள் மடல்கள் அடர்ந்திருப்பதுபோல ஏராளமான சிறு குழந்தைகள் செறிந்து தொற்றியிருப்பதைக் கண்டு அலறி விழித்துக்கொண்டாள்.

மீண்டும் கருவுற்றபோது ஊர்வசி தேஷ்பாண்டே பெரும்பாலும் டாக்டர்களிடமிருந்து டாக்டர்களுக்குச் சென்று கொண்டிருந்தாள். ”இந்தக் குழந்தையை தங்கவைக்க வேண்டும்” என்று அவள் டாக்டர் ப்ரியா முகர்ஜியிடம் சொன்னாள்.  ”இந்தக் குழந்தை தங்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றாள்.

”இதென்ன பேச்சு? உங்கள் கருப்பை சற்று பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருந்தால் குழந்தை பிறந்துவிடும். இதெல்லாமே வெறும் உடற்கூறியல் விஷயங்கள் இதில் தவறு சரி, பாவ புண்ணியம் ஒன்றும் கிடையாது” என்று டாக்டர் ஆறுதல் சொன்னார்.

”இத்தனை குழந்தைகள் தவறுவதென்றால் ஏதோ பெரும் பாவம் இருக்கிறது” என்று ஊர்வசி சொன்னாள். ”இவர்களுடைய குடும்பத்தில் ஏதோ ஒரு சாபம் இருக்கிறது. இல்லையென்றால் என்னுடைய குழந்தைகள் இவ்வளவு தொடர்ச்சியாக கலைந்து கொண்டிருக்காது. அந்தக் குழந்தைகளுக்கு இங்கு வந்து பிறக்க விருப்பமில்லை.” வெளிறிய முகத்துடன் டாக்டரின் கைகளைப் பற்றிக்கொண்டு “இப்படி நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்திருக்கின்றன இங்கே” என்றாள்.

அப்போது எங்கோ யாரோ பேச்சுவாக்கில் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் ஊரில் கைவிட்டுவிட்டு வந்தவர் என்ற செய்தியைச் சொன்னார்கள். அவள் அதைப் பிடித்துக்கொண்டாள். ஃபணீந்திரநாத்தின் மனைவி சோனார்கஞ்சில் விபச்சாரியாக வாழ்ந்தாள். அவள் அனைத்து சாதியினராலும் புணரப்பட்டாள். அவருடைய மகளும் எல்லா சாதியினராலும் புணரப்பட்டாள். அவர்களுடைய உடம்பு சீழ் பிடித்து அழுகி அவர்கள் அங்கே இறந்தார்கள். அவர்கள் தங்களில் உருவான குழந்தைகளை கருவறுத்துக்கொண்டே இருந்தார்கள். “அந்தக் குழந்தைகளை நான் பார்த்தேன்… நான் என் கண்களால் பார்த்தேன். ஒவ்வொன்றின் கண்களையும் நானே பார்த்தேன்” என்று அவள் டாக்டரிடம் சொல்லி அழுது மயங்கிவிழுந்தாள்.

அந்தப்பெண்களின் உடலிலிருந்து மூதாதையரின் சாபம் இந்தக் குடும்பத்தின் மேல் விழுந்திருக்கிறது என்று அவள் நம்பினாள். தன் கணவருடனான ஒரு சண்டையில் ஆக்ரோஷமாக அவனை வசைபாடும்போது அவள் சொன்ன அந்த வரி அவளுக்கே உடனே உண்மை என்று தோன்ற ஆரம்பித்து ஒவ்வொருநாளும் வளர்ந்து ஆட்கொண்டது. ஒரு சில நாட்களுக்குள் பல்வேறு சாதியினரால் புணரப்பட்டு கைவிடப்பட்டு சிதைந்து அழிந்த அந்த இரண்டு பெண்களையும் அவள் மிக அருகே என பார்க்க ஆரம்பித்தாள். அந்தப்பெண்கள் தன்னைத் தொடர்வதாக நினைக்கத் தொடங்கினாள். அவளுக்கு ஒவ்வொரு நாளும் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது.

அவர்களுக்கான பிராயச்சித்தம் செய்ய வேண்டும், அவர்கள் ஆத்மா சாந்தியடையும்படி சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று அவள் கணவனிடம் சொன்னாள். ”உளறாதே” என்று அவன் கையோங்கி அடிக்க வந்தான்.

“ஆமாம், அடிக்க வாருங்கள். இப்படி நம் குழந்தைகள் சாவது எதனால் என்று நினைக்கிறீர்கள். நான் எல்லா பூசாரிகளிடமும் கேட்டுவிட்டேன். நம்மைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் சாபம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆத்மாக்களை நாம் கரையேற்றவில்லை என்றால் இந்தக்குடும்பத்தில் குழந்தைகள் வாழாது. விஃபவ் கூட ஆபத்திலிருக்கிறான் என்று ஒரு சோதிடர் சொன்னார்” என்றாள்.

அந்தக் கோபத்தில் அவள் சொன்னது இன்னும் அவளுக்குள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தது. விஃபவ் ஆபத்திலிருக்கிறான் என்று சொல்லத்தொடங்கினாள். அப்போது ஒருமுறை பாட்னாவில் படகில் கங்கையில் சென்ற விஃபவ் படகு கவிழ்ந்து நீரில் விழுந்தான். படகோட்டிகள் உடனடியாக அவனைத் தூக்கி கரையேற்றிவிட்டாலும் கூட அந்தச் செய்தி வந்தபோது அவள் மயங்கி விழுந்தாள். ஆஸ்பத்திரியில் மயக்கம் தெளிந்தவுடன் வெறிகொண்டவளாக எழுந்து அருகே நின்ற பணிப்பெண்களையும் தாதிகளையும் அடித்துக் கூச்சலிட்டாள். கண்ணாடிப் புட்டிகளையும் பாத்திரங்களையும் எடுத்து வீசினாள். அவளுக்கு மயக்க ஊசி போட்டு படுக்க வைத்தனர்.

மறுநாள் விழித்துக்கொண்டபோது அருகிருந்த கணவனை பாய்ந்து பிடித்து அவன் சட்டையைக் கிழித்து வெறிகொண்டு கூச்சலிட்டாள். ”உன்னுடைய குடும்பத்தின் சாபத்தால் என்னுடைய குடும்பம் அழிகிறது. நான் சாகிறேன். விஃபவும் சாகப்போகிறான். நீ இன்னொரு பெண்ணைக்கட்டி அவள் வாழ்க்கையையும் அழிக்கப்போகிறாய்” என்று கூச்சலிட்டாள். ”நீ பாவி. உன்  குடும்பம் முழுக்க சாபம் நிறைந்திருக்கிறது… உன்னை ஆயிரம் கருக்குழந்தைகளின் ஆவிகள் துரத்திவருகின்றன… நீ நாசமாகப் போவாய்.”

அப்போது அவள் கணவனும் அதிர்ந்துவிட்டிருந்தான். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. கிழிந்த சட்டையுடன் வெளியே சென்று ஒதுங்கி நின்று  புகை பிடித்துக்கொண்டிருந்தான். அவள் அலறி அலைந்து மயங்கி விழுந்தாள். தாதியரால் தூக்கி படுக்க வைக்கப்பட்டு மீண்டும் அமைதிப்படுத்தும் ஊசி போடப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்று மறைந்த இரு பெண்களுக்கும் விரிவான நீர்ச்சடங்குகளையும் பிராயச்சித்த சடங்குகளையும் பல ஆயிரம் ரூபாய் செலவில் செய்தார்கள்.

அங்கே அப்பெண்களுக்கு சடங்குகளைச் செய்த பாண்டா அவர்களிடம் “உக்கிரமான சாபம் இருக்கிறது… பெண் சாபம்” என்றார்.

“ஆமாம்” என்று அவன் சொல்வதற்குள் அவள் சொன்னாள். “அந்த சாபத்தால்தான் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.”

“பிராயச்சித்தம் செய்யவேண்டும். சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்…”

“என்னென்ன சடங்குகள்?” என்று அவள் கேட்டாள்.

“பிராமணபோஜனம்… பிராமண தானம்… இங்கே கங்கைக்கு முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரவேண்டும்”

அந்தச் சடங்குகள் செய்தபோது அவள் கணவன் அமைதியிழந்தவனாக இருந்தான். அவளுக்கு அச்சடங்குகளைச் செய்யும்போது ஒருவிதமான வஞ்சம் தீர்க்கும் இன்பம் எழுந்தது.

சடங்குகளை முடிக்கும்போது அவள் பாண்டாவிடம் “குலக்கலப்பு பாவம் அல்லவா? அதற்கும் பிராயச்சித்தம் செய்யவேண்டும் அல்லவா?” என்றாள்.

“ஆம், அது கொலைபோன்ற பாவம்… அதற்கு கண்டிப்பாக பிராயச்சித்தம் செய்யவேண்டும்”

“நீ வருகிறாயா இல்லையா?” என்று அஸ்வத் கூச்சலிட்டான்.

“நான் வருகிறேன்… எனக்கென்ன? வம்சமே அற்றுப்போகவேண்டும் என்று எழுதியிருந்தால் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?” என்று ஊர்வசி சீற்றத்துடன் சொன்னாள்.

“சாப், அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குண்டானதைச் செய்தே ஆகவேண்டும்.”

“ரத்தக்கலப்பு நடந்து குழந்தை பிறந்திருந்தால்தான் அந்தக் குலத்திற்குள் கெட்ட ரத்தம் கலந்திருப்பதாக அர்த்தமா பண்டிட்ஜி?” என்று ஊர்வசி கேட்டாள்.

“தேவையே இல்லை. ஒரு குலத்தில் ஒரு பெண்ணை கீழ்க்குலத்தான் ஒருமுறை அடைந்தான் என்றால்கூட பாவம்தான்… பழி அந்தக் குடும்பத்தை அழிக்கும்” என்றார் பாண்டா. “ஒரு துளி விந்துவில் ஒரு லட்சம் குழந்தைகள் இருக்கின்றன. அவை பிறக்காவிட்டாலும் கூட சாகமுடியும்.”

“நான் எதுவும் சொல்லவில்லை… ஊரின் அழுக்கெல்லாம் ஆற்றிலே வந்து சேர்வதுபோல இந்தக் குடும்பத்தின் பாவம் எல்லாம் என் உடம்பில் வந்து சேர்ந்துவிட்டது… என்னால் சாப்பிடமுடியவில்லை. நடமாட முடியவில்லை. என்னைச் சுற்றி இந்தப் பாவம் சாக்கடைபோல பரவியிருக்கிறது. மலம்போல நாற்றம் அடிக்கிறது” அவள் குமட்டி கங்கைப் படித்துறையிலேயே வாந்தி எடுக்க தொடங்கினாள்.

“நான் நினைத்தேன்…” என்றார் பாண்டா. அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல்படுத்தினார்.

”என்னால் முடியவில்லை பண்டிட்ஜீ… நான் செத்துக்கொண்டிருக்கிறேன். யாருக்குமே நான் சொல்வது கேட்கவில்லை. சாக்கடையில் புழுக்கள்போல இவர்கள் பாவத்திலே திளைக்கிறார்கள்.”

“வாயைமூடு நாயே” என்று அவள் கணவன் அவளை ஓங்கி அறைந்தான்.

அவள் வீறிட்டலறியபடி தன் கைகளை ஒன்றுடன் ஒன்று மோதி கண்ணாடி வளையல்களை உடைத்தாள். ஒரு கையால் நெற்றிக்குங்குமத்தை அழித்து இன்னொரு கையால் கருகுமணி மாலையை அறுத்துவீசிவிட்டு “நான் சாகிறேன்… கங்கையிலேயே சாகிறேன்” என்று கூச்சலிட்டபடி ஓடினாள்.

அஸ்வத் பாய்ந்து அவளை பிடித்து சுழற்றி தரையில் வீசினான். தரையில் படுத்து அவள் அழுதாள். தரையை கையால் அறைந்தபடி வெறிகொண்டு கத்தினாள்.

”சரி… சரி, சடங்குகளைச் செய்வோம்… பாண்டா, உங்களுக்குத் தேவையானதை தருகிறேன்… சடங்குகளைச் செய்வோம்” என்று அவன் சொன்னான்.

சடங்குகள் தொடங்கியபோது அவள் எழுந்து வீங்கிய முகத்துடன் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பகையுடன் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சடங்கு முடிந்தபின் பாண்டா அவன் கையால் மீண்டும் அவள் கழுத்தில் கருகுமணி மாலையைக் கட்டச்செய்தார்.

அதன் பிறகு சாதிக்கலப்பு செய்த அந்த இரு பெண்களும், அவர்களின் பிறக்காமலேயே செத்துப்போன குழந்தைகலும் அடங்கிவிட்டனர் என்று ஊர்வசி நினைத்தாள். எல்லாம் சீரடைந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. மீண்டும் அவள் சற்று அமைதிநிலையை அடைந்தாள். அவள் கணவன் அவளைத் தன் பிறந்த வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது அவள் சற்று நிம்மதியிழந்தாலும் கூட வேறு வழியில்லை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.

அஸ்வத் வேலைபார்த்த ஊரில் அவனுடன் தங்க அவளுக்கு பிடிக்கவில்லை. அது ஒரு பழைய பிரிட்டிஷ் காலத்து மாளிகை. பல கட்டிடங்களை ஒன்றுடன் ஒன்று ஓடுபோட்ட ஓர் இடைகழியால் இணைத்து ஒற்றைக்கட்டிடமாக ஆக்கியிருந்தார்கள். அவள் இருந்த கட்டிடத்தின் அறைக்குள் அவள் ஒரு மணியை அடித்தால் மட்டுமே வேலைக்காரர்கள் வந்தார்கள். வேலைக்காரர்களின் இடத்தில் எப்போதும் பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும். ஊர்வசி அங்கு செல்ல முடியாது. அவர்கள் அவளிருக்கும் இடத்திற்கு வரும்போது இயந்திரங்கள் போல் இருந்தார்கள்.

ஊர்வசி அங்கு இருந்த நான்கு மாத காலமும் தன்னுடைய அந்த தனித்த படுக்கை அறையிலேயே சிறையில் போல் இருந்தாள். ஆகவே பாட்னாவுக்குச் செல்லலாம் என்று கணவன் சொன்னபோது அவள் இயல்பாக ஒத்துக்கொண்டு அங்கே வந்தாள். அந்த இல்லத்தின் முன் கார் நின்றபோது முதற்கணமே அவள் ஒவ்வாமையை அடைந்தாள். வாந்தி வருவதுபோல குமட்டி வாயைப் பொத்திக்கொண்டாள். நீண்ட கார்ப்பயணமும் கர்ப்பமும்தான் காரணம் என நினைத்துக் கொண்டாள்.

“சிதைந்து அழிந்துகொண்டிருந்த உள்ளம். அதன்மேல் தொற்றி ஏறிக்கொண்டன நிழல்கள். காட்டில் நீயே பார்த்திருப்பாய். நலிந்த விலங்கின்மேல்தான் ரத்தம் உண்ணும் உண்ணிகள் பெருகும். அவற்றை அவ்விலங்கால் விலக்கக்கூட முடியாது. அது அவற்றை விரும்புவதுபோல, தன்னை அவற்றுக்கு விரும்பி அளிப்பதுபோலக்கூட தோன்றும்.” என்றது கானபூதி.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.