“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…

நான் 2016 ல் சிங்கப்பூரில் எழுத்தாளர்- பேராசிரியராக சில மாதங்கள் பணியாற்றியபோது பொதுவான மாணவர்கள், மற்றும் காட்சிக்கலைப் பேராசிரியர்களுக்காக சினிமா பற்றி ஒரு வகுப்பை எடுக்கவேண்டியிருந்தது. நான் சினிமாக்காரன் என்பதனால் அதற்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் மிகுதியாக இருந்தது. கதையில் இருந்து திரைக்கதையும் திரைக்கதையில் இருந்து சினிமாவும் உருவாவதைப் பற்றி இரண்டு மணிநேரம் வகுப்பெடுத்தேன். சினிமா பற்றி நான் நடத்திய ஒரே வகுப்பு அதுதான்.

அவ்வகுப்புக்காக முன்னரே தயாரித்துக்கொண்டு சென்றிருந்தேன். இரண்டு காட்சித்துண்டுகளை அங்கே காண்பித்தேன். நான்கடவுள், மற்றும் கடல் படங்களில் இருந்து. முதலில் ஏழாம் உலகம் நாவலில் இருந்து ஒரு பகுதியை வாசித்தேன். பிச்சைக்காரர்களின் உலகுக்குள் நாவல் செல்லும் அந்த நரகக் காட்சி. அதன்பின் அதையொட்டி நான் கடவுள் சினிமாவுக்காக நான் எழுதிய திரைக்கதைக் காட்சி. அதன்பின் அந்தக்காட்சி படத்தில் எப்படி வந்தது என்று. நாவலில் அது வெவ்வேறு பார்வைகளின் வழியாக துண்டுதுண்டாக வெளிவரும். திரைக்கதையில் ஓர் இடம், ஒரே காட்சிக்கோணமாக எழுதப்பட்டது.

ஆனால் சினிமாவில் அது ஒரே நீளமான ஷாட். தாண்டவன் நடந்து வந்து பாதாளத்திற்கு இறங்கி உள்ளே சென்றுகொண்டே இருப்பான். முதலில் நம் பார்வையில் அவன். அதன்பின் அவன் பார்வையில் அந்த உலகம். அது இரண்டு ஷாட்கள். ஆனால் ஒரே ஷாட் ஆக இணைக்கப்பட்டிருந்தன. நவீன எடைகுறைந்த காமிராக்கள் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அக்காட்சி ஓர் அற்புதம். பாதாளம் என்பதை அனுபவமாக ஆக்கிக் காட்டியது அது. இன்று திரைப்பட மாணவர்கள் அக்காட்சியை தனியாக கூர்ந்து பயில்கிறார்கள்.

அதேபோன்று ஒரு காட்சி கடலில். நான் கடல் கதையை மணி ரத்னம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாவலாகவே எழுதினேன். என் எல்லா நாவல்களையும்போல அது அடிப்படையான ஒரு கேள்வியில் இருந்து வெடித்துக் கிளைபிரிந்து வளர்ந்து சென்ற ஒரு படைப்பு. அதை அவரும் நானும் திரைக்கதையாக்கினோம். அவர் அதை இயக்கினார்.

நாவலில் இருந்து ஒரு காட்சியை வாசித்தேன். சாம் கிராமத்தாரால் சிறைக்கு அனுப்பப்படும் காட்சி. அது ஒரு சிலுவையேற்றம்தான். அதில் காட்டிக்கொடுக்கும் யூதாஸ்தான் செலினா. நாவலில் அது ஓர் உணர்ச்சிகரமான நினைவுகூரல், அல்லது நாடகீயத் தன்னுரை. அந்தக் காட்சியின் திரைக்கதை வடிவம் ஒரு காட்சிச்சித்தரிப்பு. ஆனால் அது சினிமாவில் பல உள்ளோட்டங்கள் கொண்டது. அந்த தேவாலயம், அதன் படிக்கட்டுகளினூடாக சாம் மேலேறுவது. அங்கிருந்த முகங்கள். ஒரு மேலைச் செவ்வியல் ஓவியத்திற்குரிய ஒளிப்பதிவு.

அனைத்திற்கும் மேலாக செலினா பொன்னொளியில் தேவதையாக கட்டப்பட்டிருந்தாள். திரைக்கதையில் இல்லாமல் இயக்குநர் காட்சி வழியாக உருவாக்கிய கூடுதல் அர்த்தம் அது. அவள் யூதாஸ் அல்ல மக்தலீனாதான் என்று அவர் காட்சி வழியாக அடிக்கோடிட்டிருந்தார். சினிமா என்னும் textஇன் subtext அது.(உண்மையில் சினிமாக்கல்வி என்பது இவற்றை எல்லாம் அடையாளம் காணக் கற்றுக்கொள்வதுதான்).

நீண்ட இடைவெளிக்குப்பின் கடல் சினிமாவின் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வணிகரீதியாக தோல்வியடைந்த சினிமாவை அதில் பணியாற்றிய எல்லாரும் மறக்க விரும்புகிறார்கள். நானும்தான். கடல் நாவலின் விரிவை சினிமா சுருக்கமாகவே முன்வைக்க முடிந்தது. கிறிஸ்தவத் தொன்மவியலில் அறிமுகமே அற்ற தமிழ் ரசிகர்களால் அதை உள்வாங்க முடியவில்லை. காதல் – வில்லன் என்ற அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று கடல் சினிமாவை மிக விரும்பிக் கொண்டாடும் ஒரு சிறு இளைய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.

ஆகவே கடல் நாவலை நூலாக வெளியிட்டாலென்ன என்னும் எண்ணம் உருவானது. பல கணிப்பொறிகள் மாறியதனால் நாவல் என்னிடம் இல்லை. மணி ரத்னத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களில்தான் இருந்தது. பல வடிவங்களில் மாற்றங்களுடன். அவற்றை தொகுத்து நாவலை முழுமையாக்கினேன். இப்போது வெளிவருகிறது.

இது வேறொரு அனுபவம். நாவல் என்பது மிகப்பெரிய பேசுதளம் கொண்டது. அதில் ஏராளமான சினிமாக்கள் அடங்கியுள்ளன. விரிந்து விரிந்து செல்லும் அதன் கதைப்பின்னல். உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடான எண்ணங்கள், தன்னுரைகள், உரையாடல்கள். பிரம்மாண்டமான காட்சிப்பரப்புகள். இது பாவம்- மீட்பு என்னும் மகத்தான மானுடநாடகத்தின் சித்தரிப்பு.

சினிமாவாக வெளிவந்த ஒரு படைப்பு பத்தாண்டுகளுக்குப் பின் நாவலாக வருவதென்பது மிக அரிதாகவே நிகழ்வது. தமிழில் முன்னுதாரணம் ஏதுமில்லை. சினிமா நாவல் என்னும் இரு கலைகளை புரிந்துகொள்ள இது உதவலாம். இரு கலைகளின் வழியாக மானுடனின் அழியாத துயரையும், என்றுமுள மீட்பையும் உணரவும் உதவும் என நினைக்கிறேன்.

கடல் வாங்க

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.