Jeyamohan's Blog, page 100
May 31, 2025
காவியம் – 41
வெற்றித்தூண், பைத்தான், சாதவாகனர் காலம் பொயு 4கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு பைத்தான் நகரின் மூடிய காட்டுக்குள் அமர்ந்திருந்த என்னிடம் சொன்னது. “என் இடது கையை பொத்தியபடி நான் இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்கினேன். என் முன் சுத்யும்னன் கண்களை இமைக்காமல் கேட்டு அமர்ந்திருந்தான். இது நான் அவனுக்குச் சொன்ன கதை.”
சமர்கள் இரவில் விழித்திருக்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை முறை. அவர்களை பிறர் வவ்வால்கள் என்று அழைத்தனர். வவ்வால்கள் பகலில் கண்ணுக்குப்படுவது அபசகுனம். வவ்வால்களும் பகலில் திகைத்து திசை மறந்து அங்குமிங்கும் முட்டிக்கொண்டு அலைக்கழியும். காகங்களால் துரத்திச் செல்லப்பட்டு சிறகு கிழிக்கப்பட்டு தரையில் விழுந்து துடிக்கும். காகங்கள் அவற்றை சூழ்ந்து கூச்சலிட்டு கொத்தி உண்ணும். சிறு குழந்தைகளுக்குரிய மின்னும் கண்களுடன், சிறு பற்களுடன், அவை கிரீச்சிட்டு துடித்து சாகும்போது கூட சிறுகுழந்தைகளுக்குரிய என்ன நிகழ்கிறதென்று தெரியாத பதைப்பு அவற்றின் முகத்தில் இருக்கும்.
இருநூறாண்டுகளுக்கு முன் அந்நகரை ஆண்ட ரஜதபுத்ர சதகர்ணியின் ஆணைப்படி இரவில் நகர் அடங்குவதற்கான மணிகள் ஒலித்த பிறகே சமர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளிக்கிளம்ப வேண்டும். விடிவெள்ளிக்கு முன்பு மீண்டும் அதே மணிகள் அதே போல ஒலிக்கும்போது அவர்கள் தங்கள் குடில்களுக்கு திரும்பியிருக்க வேண்டும். அதன் பிறகு நகரத்தில் தென்படும் சமர் உடனடியாக இழுத்து செல்லப்பட்டு நகரின் தெற்குப்பக்கம் இருந்த முள்காட்டில் கழுவிலேற்றப்படுவான்.
சமர் சாதியின் பெண்களும் குழந்தைகளும் கூட அந்த ஆணைக்கு முற்றாக கட்டுப்பட்டனர். ஆகவே அந்நகரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க சமர்கள் என்பவர்களைக் கண்ணால் பார்த்ததே இல்லை. அவர்கள் அந்நகரின் வடமேற்குச் சரிவில் கோதாவரியின் கரையில் இருந்த அரைச்சதுப்பு நிலத்தில் கோரைப்புற்களுக்கு நடுவே கோரைப்புற்களால் கட்டப்பட்ட இடையளவே உயரம் கொண்ட சிறுகுடில்களில் வாழ்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்பகுதியை நோக்குவதே தீட்டு என்று நிறுவப்பட்டிருந்தது.
சமர்கள் இரவெல்லாம் நகரில் உள்ள குப்பைகளையும் கழிவுகளையும் அள்ளி தூய்மை செய்தனர். அந்த மலினங்களை தலையில் சுமந்துகொண்டு சென்று தங்கள் சதுப்பு நிலத்தில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழிகளில் புதைத்தனர். அதன் பிறகு அங்கேயே தீமூட்டி தாங்கள் பிடித்த எலிகளைச் சுட்டு உண்டனர் அவர்களுக்கு நகரின் வெவ்வேறு இடங்களில் உப்பு தானியம் போன்றவை வைக்கப்பட்டிருக்கும், ஆண்டில் ஓரிருமுறை பழைய ஆடைகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய இடங்கள் தலைமுறைகளாக வகுக்கப்பட்டிருந்தன.
அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவர்கள் தங்கள் இடங்களில் இருளிலேயே சமைத்து உண்டனர். இரவில் நெருப்பு மூட்டி அதைச் சூழ்ந்து அமர்ந்து சிறிய பறைகளை விரல்களால் மீட்டி தாங்கள் வழிவழியாகப் பாடி வந்த கதையைப் பாடிக் கேட்டனர். அவர்கள் அந்த இருட்டிலிருந்தும், அழுக்கிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழியாக இருந்தது பாடல்கள்தான்.
முந்நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் தங்கள் தொன்மையான நிலங்களிலிருந்து கிளம்பி பிரதிஷ்டானபுரிக்கு வந்திருந்தனர். அவர்களின் நிலங்கள் தண்டகாரண்யத்துக்கு அப்பால், சர்மாவதி ஆற்றின் கரைகளில் அமைந்திருந்தன. அங்கே வேட்டையாடியும், மீன் பிடித்தும் அவர்கள் பெருகினர். கல்மாலைகளை அணிந்துகொண்டும், மலர்களாலான தலையணிகளைச் சூடிக்கொண்டும் வசந்தத்தில் மகிழ்ந்து கொண்டாடினர்ர். தங்கள் கைகளால் மென்மையான மரங்களைக் குடைந்து செய்த படகுகளில் சர்மாவதியில் மீன் பிடித்தனர். முதலைகளைக் கொன்று அந்தத் தோல்களை உரித்து பதப்படுத்தி ஆடையாக்கிக் கொண்டனர். மரத்தாலான மார்புக்கவசங்களை அணிந்துகொண்டு ஒருவருடன் ஒருவர் மற்போரிட்டனர்.
அவர்களின் காடுகளில் தேனும் அரக்கும் பிறபொருட்களும் நிரம்பியிருந்தன. சணலையும் மரப்பட்டைகளையும் நீரில் ஊறவைத்து நார்பிரித்து மரவுரி செய்து அவற்றை படகுகளில் வரும் வணிகர்களுக்கு விற்றார்கள் தேனும் அரக்கும் கொம்பும் தோலும் பிற மலைப்பொருட்களும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உப்பையும், கூரிய இரும்பு கத்திகளையும் கொவணிகர்கள் அளித்தார்கள். ஒளிரும் கற்களையும் வணிகர்கள் உப்புக்கு வாங்கிக்கொண்டனர்.
பின்னர் வடக்கே கங்கைக்கரையில் இருந்து படைகள் ஆண்டுதோறும் கிளம்பி அவர்களின் நிலங்களின்மேல் பரவின. எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கொன்று வீழ்த்தி பெண்களையும் ஆண்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு சென்றனர். அதன்பின் வந்த படைகள் அந்நிலங்களிலேயே தங்கினர். காடுகளை எரித்து அழித்து மரங்களை வெட்டி அகற்றி விளைநிலங்களாக்கினர். காட்டை அழித்து புல்வெளிகளை உருவாக்கி அங்கே மந்தைகளாக மாடுகளை வளர்க்கலாயினர். மந்தை பெருகப்பெருக அவர்களுக்கு மேலும் மேலும் நிலம் தேவைப்பட்டது
மலைக்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பழைய நிலங்களை கைவிட்டு பின்நகர்ந்து கொண்டே இருந்தனர். பின்நகர இடமில்லாதபோது அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். போரில் முழுமையான அழிவு மட்டுமே மிஞ்சும் என்று கண்டபோது அங்கிருந்து கிளம்பி புதிய நிலங்களைத் தேடி அலையத் தொடங்கினார்கள். சிறு சிறு குழுக்களாக பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் கூட்டிக்கொண்டு அவர்கள் வாழ்விற்கான இடங்களைத் தேடிச் சென்றனர். தங்கள் பழையநிலங்களில் இருந்து அவர்கள் பாடல்களை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
காடுகளில் அவர்களால் நுழைய முடியவில்லை. அங்கு ஏற்கனவே நிலைகொண்டுவிட்ட பழங்குடிகள் அம்புகளாலும் கண்ணிகளாலும் தங்கள் எல்லைகளை மூர்க்கமாகக் காத்து நின்றிருந்தனர். அவர்கள் நிலங்களுக்குள் நுழைய முற்பட்டபோது பல குழுக்கள் கொன்றழிக்கப்பட்டனர். விளைநிலங்களாக்கப்பட்ட பகுதிகள் எங்கும் அவர்கள் தலைகாட்ட முடியவில்லை. அக்கணமே அவர்கள் பிடிக்கப்பட்டு மூக்கும் செவிகளும் அறுக்கப்பட்டு அடிமைகளாகக் கொள்ளப்பட்டனர். பல ஊர்களில் பிடிபட்டவர்களின் நாக்கு அறுத்து மொழியற்றவர்களாக ஆக்கி விலங்குகள் போல விற்றனர்.
ஆகவே மீண்டும் மீண்டும் புதிய நிலங்களைத் தேடிச் சென்ற அவர்கள் நகரங்களிலேயே தங்களுக்கு இடம் இருப்பதைக் கண்டடைந்தனர். உஜ்ஜயினியிலும் காம்பில்யத்திலும் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. அந்நகரங்கள். வளர்ந்து விரிந்து கொண்டிருந்தன. அவற்றை கட்டி எழுப்பவும் தூய்மைப்படுத்தவும் பெருமளவுக்கு கைகள் தேவைப்பட்டன.
அந்நகர்களில் சமர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வலுவான உடல் கொண்டவர்கள் அல்ல. சிறிய கரிய உடலில் கூடான நெஞ்சும்,சற்றே முன்வளைந்த தோள்களும் கொண்டிருந்தனர். பரவிய மூக்கும் சிறிய கண்களும் கொண்ட முகம். கற்களைத் தூக்கி நகரங்களைக் கட்டி எழுப்பும் பணிகளுக்கு அவர்கள் உதவமாட்டார்கள் எனபதனால் அவர்கள் தூய்மைப்பணிகளுக்கு அமர்த்தப்பட்டனர்.
ஏற்கனவே அங்கு திரண்டிருந்த தூய்மைப்படுத்தும் தொழில் செய்தவர்களை அங்குள்ளோர் சமர்கள் என்றனர். புதிதாக வந்தவர்களை அவர்களுடன் இணைத்துக் கொண்டு அப்பெயரை அவர்களுக்கும் வழங்கினார்கள்.நகரங்களில் சமர்கள் தங்கள் நினைவுகளிலிருந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் இழந்தனர். பகல் வெளிச்சம் என்பதையே மறந்தனர். அவர்களின் கண்கள் ஒளியை தாளமுடியாதவை ஆயின. அவர்களின் தோல் வெளிறி, புண்களும் தேமல்களும் கொண்டதாக ஆயிற்று. அவர்களின் விரலிடுக்குகளும் வாய்முனைகளும் வெந்திருந்தன. அவர்களின் உடலில் இருந்து அழுகும் மாமிசத்தின் வாடை எழுந்தது.
எனினும் அவர்கள் அங்கே வாழ்ந்தனர். ஏனென்றால் சாகாமல் உயிர் வாழ முடியும் என்றாயிற்று. குழந்தைகள் உணவு உண்ணமுடியும் என்றாயிற்று .அவர்கள் இரவுக்குரியவர்கள் என தங்களைச் சொல்லிக்கொண்டனர். நிசாசரர் என்னும் பெயர் நூல்களில் அவர்களுக்கு அமைந்தது. கராளர் என்று உள்ளூரில் சொன்னார்கள். அவர்கள் கராளி, சியாமை, பைரவன், காளராத்ரி போன்று இரவுக்கான தெய்வங்களை உருவாக்கிக்கொண்டனர். இரவுக்கான களியாட்டுகளும் பிறந்து வந்தன.
சமர்களின் மொழியில் ஒவ்வொன்றுக்கும் வேறு பெயர்கள் இருந்தன. நாள் எனும்போது அவர்கள் இரவைக் குறித்தனர். ஒளி எனும்போது தீயை. நிழல்நாள் என்றால் பௌர்ணமி. பிற நாட்களில் எப்போதுமே அவர்கள் தங்கள் நிழல்களுடன் ஆட முடிந்ததில்லை. இரவுகளில் பிரதிஷ்டானபுரியில் ஒளி இருப்பதில்லை. மாளிகைகளின் உப்பரிகைகளில் மட்டும் சிறு விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கும். கோட்டைகளின் முகப்பில் பந்தங்கள் எரியும். நகரத்தெருக்கள் முற்றிலும் இருண்டு இருக்கும் அவர்கள் அந்த இருளுக்குள் நிழல்கள் போல் வேலை பார்த்தாக வேண்டும். நிழல்கள் என்று அவர்களை பிறர் குறிப்பிட்டபோது அவர்கள் தங்களை அசைபவர்கள் என்று சொல்லிக்கொண்டனர். அவர்கள் ஒருவகையான பைசாகர்கள் என்றும், இறந்த மனிதர்களை அவர்கள் உண்கிறார்கள் என்றும் பிரதிஷ்டானபுரியில் மக்கள் நம்பினார்கள். அவர்களில் ஒருவரை கண்ணால் பார்த்தாலே நோயுறுவது உறுதி என்று சொல்லப்பட்டது.
அன்று காலை கூர்மன் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் பிரதிஷ்டானபுரியின் தெற்குப் பெருவீதியைத் தூய்மை செய்வதற்குச் சென்றான். தலைமுறைகளாக அவர்கள் செய்துவந்த பணி அது. அவனுடன் அப்பகுதிக்கு பொறுப்பான மேலும் எட்டு குடும்பத்தினர் சேர்ந்து கொண்டார்கள். விரிந்த சாலையின் ஓரத்தில் வட்டமாக அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டார்கள். பொறுக்கி வைத்திருந்த பாக்குத் துண்டுகளை வாயிலிட்டு மென்றபடி துடைப்பங்களுடன் பணிகளுக்கு சென்றனர்.
கூர்மனிடம் அவன் தோழன் சப்தன் ”மீண்டும் வெற்றித்தூண் சாய்ந்துவிட்டது” என்றான். அது கூர்மனுக்கு ஒரு மெல்லிய நடுக்கத்தை அளித்தது. எந்த வகையிலும் அவனுடன் தொடர்புள்ளது அல்ல அது. அவன் அந்தத் தூணை அதற்கு முன் பார்த்ததும் இல்லை. அப்பகுதியைத் தூய்மை செய்பவர்கள் அதை அவனிடம் சொல்லி அவன் கற்பனை செய்திருந்ததுதான். அரசர் சூர்யபுத்ர சதகர்ணி விந்திய மலை கடந்து சென்று தட்சிணத்தை வென்றதன் பொருட்டு நிலை நிறுத்தப்படவிருந்த வெற்றித்தூண் அது. நிகரற்ற தூணாக அது அமையவேண்டும் என அரசர் எண்ணினார்.
அதற்கான கொள்கையை அவருடைய சிற்பிகள் அவரது அரச குருவிடம் இருந்து பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் விந்திய மலை மேலேறி அதற்கான கருங்கல்லை கண்டடைந்தனர். அங்கு அந்தக்கல் கோடு வரையப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. கோதாவரியின் நீர்ப்பெருக்கினூடாக தெப்பங்களில் அது இட்டு வரப்பட்டது. வரும் வழியிலேயே நான்கு முறை அது வெவ்வேறு இடங்களில் தடுக்கி நின்றது. மூன்று முறை தெப்பம் சரிந்து நீருக்குள் மூழ்கிச் சென்றது. அதை மீட்டு நகருக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியது.
பல காலமாக அதை சிற்பிகள் செதுக்கிக்கொண்டே இருந்தார்கள். அப்பகுதியை தூய்மை செய்த சமர்கள் ஒவ்வொரு முறையும் இரவில் அது எந்த அளவிற்கு செதுக்கப்பட்டது என்று பார்த்தார்கள். சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் மனிதன் ஒருவன் மேலெழுவது போல கல்லிலிருந்து அது புடைத்தெழுகிறது என்று ஒருவன் சொன்னான். அதிலுள்ள சிற்பச்செதுக்குகளை மணலில் வரைந்து அவர்கள் விளக்கினார்கள்.
“அவ்வளவு பெரிய கல்தூண் எப்படி நிற்கமுடியும்?” என்று கூர்மன் கேட்டான்.
“அதில் பாதிப்பகுதி மண்ணுக்குள் தான் இருக்குமாம். எஞ்சியது மட்டும் தான் மேலே இருக்கும் மண்ணுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் நூற்று எட்டு சிற்பங்கள் உள்ளன. அனைத்துமே பூதங்கள், பைசாசர்கள். அவர்களின் இளிப்பும் வெறிப்பும் கொடியதாக இருக்கிறது. மண்ணுக்குள் அதை எப்போதைக்குமாக இறக்கிவிட்டால் எத்தனை ஆண்டுகளாயினும் அந்த பிசாசுச் சிற்பங்கள் வெளிவரப்போவதில்லை. ஆனால் அவை அங்கிருக்கும். நாம் அவற்றைப் பார்க்கவில்லை என்றாலும் அவை நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்று ஒருவன் சொன்னான்.
வெற்றித்தூணின் பணி முடிந்தபிறகு மூன்று மாதங்களுக்கு மேலாக அதை சிற்பிகள் நிலைநிறுத்த முயன்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் அது ஏதேனும் ஒரு பக்கமாகச் சரிந்தது. ஒவ்வொரு முறையும் அதிலுள்ள பிழை என்ன என்று கண்டறிந்து அதை நிறுத்தும் பொறுப்பிலிருந்த சிற்பி தண்டிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் அது பிறிதொரு பக்கமாக சரிந்தது. விழும்போதெல்லாம் ஒரு சில சிற்பிகளை பலிகொண்டது. அங்கே மறைந்த சிற்பிகளின் ஆத்மாக்கள் சுற்றிவருவதாகவும், அவைதான் திரும்ப திரும்ப பலிகொள்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
”அந்த ஆத்மாக்களுக்கு என்ன தேவையென்று கேட்கவேண்டும்,அவை கேட்கும் குருதியை மொத்தமாகக் கொடுத்து அவை நிறைவடையச் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அந்த தூணை நிலைநிறுத்த முடியும்” என்று முதியவராகிய சங்கன் சொன்னார்.
“அந்த தூணை நிலைநிறுத்த தேவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சாதவாகன அரசர்கள் அசுரகுடியில் தோன்றியவர்கள். இவர்களின் பழைய நகரங்களை தேவர்கள் அழித்தனர். இந்நகரமும் ஒருநாள் தேவர்களால் அழிக்கப்படும்” என்று இன்னொருவர் சொன்னார்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்த தூணைப்பற்றிய செய்திகளை பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதை எப்படி நிறுத்துவார்கள் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய அக்கறையாக மாறியது. அதை அவர்கள் நிறுத்தவே போவதில்லை என்று ஒருவன் சொன்னான்.
“இவர்களின் குலமூதாதையர்களாகிய அசுரர்களின் காலத்தில் இதற்கு நூறுமடங்கு பெரிய தூண்கள் நிறுத்தப்பட்டன. இவர்கள் வெறும் மானுடர்கள். அசுரர்களின் குருதி தங்களிடம் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் அதை வெளிக்காட்டுவதற்காகவே இவ்வளவு பெரிய தூணை நிறுத்த முயல்கிறார்கள். இதை ஒருபோதும் அவர்கள் நிறுத்தப்போவதில்லை” என்று கிழவியாகிய சமேலி சொன்னாள்.
ஒவ்வொருநாளும் நகரை கூட்டி குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பும்போதும் அவர்கள் அந்தப்பெரிய தூணைப்பற்றியெ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதுமே அந்நகரின் மாளிகைகள், கோட்டைகள் பற்றியே பேசினார்கள். அரசர்களையும் அரசிகளையும் படைகளையும் பற்றிய தங்கள் கற்பனைகளை விரித்து முன்வைத்தனர். நகரத்தெருக்களில் கிடக்கும் குப்பைகள், புழுதியில் படிந்திருந்த காலடிச்சுவடுகள் ஆகியவற்றில் இருந்தே அவர்கள் அந்த வரலாறுகளை உருவாக்கிக்கொண்டனர். அந்த உரையாடல் அவர்களுக்கு ஒரு நிறைவை அளித்தது. தங்கள் சிறிய வாழ்க்கைக்கு அப்பால் சென்று பெரியவற்றைப் பேசிக்கொள்கிறோம் என்னும் பெருமிதம் எழுந்தது.
அன்று இருள் விலகுவதற்கு முன்னரே அவர்கள் தங்கள் குடில்களை அடைந்து உறங்கிக்கொண்டிருந்தபோது முரசுகள் முழங்கின. அவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தனர். முரசுகள் அங்கே ஒலிக்க வாய்ப்பே இல்லை. அவை தொலைவில் நகரத்தில் ஒலிப்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் எழுந்து வெளிவருவதற்குள் படைவீரர்கள் அப்பகுதியை வளைத்துக்கொண்டனர் அவர்களுடன் வேட்டை நாய்களும் இருந்தன. அவர்களை சுற்றி வளைத்துக்கொண்ட நாய்கள் வெறியுடன் பற்களைக் காட்டி குரைத்தன. அஞ்சி நடுங்கி குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவர்கள் ஒரு சிறு திரளாக வட்டமாக அமர்ந்திருந்தனர்.
படைவீரர்கள் அவர்களை கயிறுகளை வீசி சுருக்குப்போட்டு பிடித்தனர். நூற்றெட்டு சமர் குலத்து ஆண்கள் அவ்வாறு பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒற்றைக்கூட்டமாக சேர்த்துப் பிணைக்கப்பட்டு குதிரை வீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டனர். அலறியபடியும் தடுக்கிவிழுந்து எழுந்தபடியும் அவர்கள் இழுபட்டுச் சென்றனர். நகர எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்கள் மேல் மஞ்சள் நீர் கொட்டப்பட்டு உடல் தூய்மை செய்யப்பட்டது.
அவர்கள் அந்த வெற்றித்தூண் இருந்த பகுதியை சென்றடைந்தனர். அன்று நகரில் எவருமே வெளியே வரக்கூடாது என்று அரசாணை இருந்தது. ஆகவே நகர் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. வெற்றித்தூணின் அருகே ஆபிசாரக் கடன்களைச் செய்யும் பூசகர்கள் பன்னிருவர் நின்றிருந்தனர். நீண்டு இடைவரைத் தொங்கும் சடைக்கற்றைகளும், சடைபிடித்த தாடியும், வெறிஎழுந்த சிவந்த கண்களும் கொண்டவர்கள். புலித்தோல் இடையாடை அணிந்து தோளில் கரடித்தோல் போர்த்தியவர்கள். அவர்களுடன் அவர்களின் உதவியாளர்கள் இருபதுபேர் நின்றிருந்தார்கள்.
அங்கே காலைமுதல் தொடங்கிய பூசை ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. முதியவராகிய ஆபிசாரகர் ஒருவர் அதைச் செய்துகொண்டிருந்தார். அவர் கைகாட்டியதும் கட்டி இழுத்துக் கொண்டுவரப்பட்ட சமர்களில் ஒருவனை அவிழ்த்து உந்தி முன்னால் கொண்டுசென்றனர். அவனை பிடித்து குனியவைத்து கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டினர். அவன் பின்னால் நின்ற ஒருவன் அவன் கழுத்தின் இரண்டு ரத்தக்குழாய்களையும் சிறுகத்தியால் வெட்டினான். ஊற்றுபோல பீரிட்ட ரத்தம் ஒரு குடத்தில் பிடிக்கப்பட்டது.
ரத்தக்குழாய் வெட்டுபட்டவனின் உடல் துள்ளித்துடித்தது. மூச்சுக்காற்றுடன் கலந்த குழறல்கள் ஒலித்தன. ரத்தம் முழுமையாக வெளிவருவதற்காக அவன் உடலை பின்னிலிருந்து தூக்கி தலைகீழாகப் பிடித்தனர். பிற சமர்கள் ஓலமிட்டுக் கதறி திமிறினார்கள். சிலர் மயங்கிவிழுந்தனர். ஒவ்வொருவராக இழுத்துச்செல்லப்பட்டு ரத்தம் எடுக்கப்பட்டது. பாதி செத்த சடலங்கள் அப்பால் ஒரு மாட்டுவண்டியில் குவிக்கப்பட்டன. அவை ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த வண்டி கோதாவரிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் பேய்களாகி திரும்பிவராமலிருக்கும் பொருட்டுஉடல்கள் எரியூட்டப்பட்டன.
பதினெட்டு குடங்களில் நிறைந்த மனிதரத்தம் ஊற்றப்பட்டு மந்திரகோஷத்துடன் அந்த வெற்றித்தூண் மும்முறை கழுவப்பட்டது. மறுநாள் அந்தத் தூணை சிற்பிகள் தூக்கி நிறுத்தினார்கள். அது உறுதியாக நிலைகொண்டது. “இனி இந்த யுகத்தின் முடிவு வரை இந்தத் தூண் இங்கே நிற்கும். சாதவாகனர்களின் வெற்றியை அறைகூவிக்கொண்டே இருக்கும்” என்று ராஜகுரு கபிலதேவர் சொன்னார்.
அந்நிகழ்வுக்குப் பின்னர் சர்மாவதிக்கரையில் இருந்து வந்த சமர்களின் நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோயுறத் தொடங்கினார்கள். அவர்கள் அஞ்சி நடுங்கி இரவுகளில் விழித்துக் கொண்டனர். சிலர் கோதாவரியில் பாய்ந்து உயிர்விட்டனர். பலர் காய்ச்சல்களில் மறைந்தனர். ஒருவன் இரவில் நகரில் இருந்த துர்க்கையன்னையின் கோயிலைச் சூழ்ந்திருந்த கோட்டைமேல் ஏறி காவலனின் ஈட்டிமேல் குதித்து செத்தான். இருவர் காவலர்கள் மேல் பாய்ந்து அவர்களை கடிக்கமுயன்றனர். அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டாலும் அதில் ஒரு காவலன் நோயுற்று சிலநாட்களுக்குப் பின் உயிர்விட்டான்.
அக்குடியினரை அங்கே வைத்திருப்பது மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் என்று அரசவையில் விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் அக்குடியினரை நகரின் எல்லைக்கு அப்பால் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று சொன்னார்கள். ஆனால் அரசகுரு அப்படி ஒரு சிலர் விடுவிக்கப்பட்டால் எஞ்சிய சமர்களிடம் வேலைவாங்க முடியாது என்றார். என்ன செய்வது என்று முடிவெடுக்கும்படி அரசரிடம் கோரப்பட்டது.
அரசர் சூர்யபுத்ர சதகர்ணி வந்து அமர்ந்து தாம்பூலம் கொண்டதுமே இருதரப்பும் சொல்லப்பட்டு அந்த கேள்வி அவர் முன்னால் வைக்கப்பட்டது. அவர் கையசைத்து துப்பும் கலத்தை அருகே காட்டச் சொல்லி துப்பிவிட்டு “அவர்களில் எவரும் உயிருடன் இருக்கவேண்டியதில்லை” என்று சொன்ன பிறகு அன்றைய ஓலைகளை வாசிக்கும்படி கைகாட்டினார். அவை பிற செய்திகளுக்கு திசைதிரும்பியது.
“திரும்பத் திரும்ப நிகழும் கதை இது” என்று நான் சுத்யும்னனிடம் சொன்னேன். பொத்தி வைத்த என் கையை விழிகளால் சுட்டிக்காட்டி “இந்த கதையின் வினா இதுதான். இதற்குப் பதில் சொல்லி என் கையை வெல்க. இல்லையேல் இங்கிருந்து நீ கிளம்பமுடியாது” என்றேன். “சமர்கள் அவ்வாறு கொல்லப்பட்டமைக்குக் காரணம் என்ன?”
அவன் தன் கையை என் கைமேல் வைத்து “ஆணையிட்டவன் அவர்களைப்போலவே நிஷாதனாகிய என் வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதுதான்” என்றான்.
“உண்மை, நீ வென்றுவிட்டாய்” என்று நான் சொன்னேன். “நீ என்னிடம் ஒரு கேள்வி கேட்கும் உரிமையை அடைந்துவிட்டாய்”
சுத்யும்னன் என்னை பார்த்தபோது அவன் கண்கள் மங்கலடைந்தன. சற்றுநேரம் யோசித்தபின் “கானபூதி என்னும் பிசாசே, இது என் கேள்வி. புகழ், வெற்றி அனைத்தும் உச்சமடையும்போது ஒரு புள்ளியில் வீழ்ச்சி தொடங்குகிறது. என் ரத்தத்தில் இருந்து முளைக்கும் இந்த சாதவாகனர்களின் அரசு வீழ்ச்சியடையத் தொடங்கும் அந்த முதல்புள்ளி எது?” என்றான்.
“நான் அக்கதையைச் சொல்கிறேன். அதில் உனக்கான விடை இருக்கும். அதன் கேள்விக்கு நீ பதில் சொன்னாய் என்றால் நீ விரும்பியதை நான் செய்வேன்” என்றேன்.
“நான் விரும்புவது ஒன்றுதான், அந்தக் கதையை நீ திருத்தியமைக்கவேண்டும் என்பேன். அந்த வீழ்ச்சியின் புள்ளியை மேலும் பலநூறாண்டுகளுக்கு தள்ளி வைப்பேன்” என்று அவன் புன்னகையுடன் சொன்னான்.
“கேள்” என்று நான் சொன்னேன். என் இரு கைகளையும் மண்ணில் பதித்து “கதைசொல்லும் பிசாசாகிய நான் நான் சொல்லவிருக்கும் இந்த இருகதைகளும் இரு கேள்விகளாகத் திரள்வதைக் கவனி” என்றேன்.
(மேலும்)
May 30, 2025
ஆனந்தவிகடன் பேட்டி
எது உங்களை தொடர்ந்து எழுதவைக்குது? அந்த தூண்டுதல் என்னன்னு சொல்ல முடியுமா?
அடிப்படையிலே அந்தத் தூண்டுதல் ஒண்ணுதான். ஆனா ஒவ்வொரு வயசிலேயும் அதை வேற வேறயா புரிஞ்சுக்கறோம்.சின்னப்பையனா இருந்தப்ப நான் என்னை இந்த உலகுக்கு நிரூபிக்கணும்கிறதுக்காக எழுதினேன். அப்றம் புகழ், அடையாளம் எல்லாத்துக்காகவும் எழுதினேன். இந்த வயசிலே ஒரே காரணத்துக்காகத்தான், செயலிலே உள்ள இன்பத்துக்காகவும் நிறைவுக்காகவும்.
உண்மையிலே இதுதான் அடிப்படையான காரணம். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே செயல்வடிவா இருக்கு. செயலற்றிருக்குதுன்னு நமக்கு தோணுற கல்லு, மலை எல்லாமே செயல்வடிவாத்தான் இருக்கு. செயலிலேதான் நம்மோட நிறைவு இருக்கமுடியும்.
நமக்குன்னு ஒரு செயல் இருக்கு. நம்ம மனசு முழுசா குவிஞ்சு நம்ம ஆற்றல் முழுசா வெளிப்படுற இடம் எதுவோ அதுதான் நம்மோட செயல். அது எனக்கு இலக்கியம், தத்துவம் ரெண்டும்தான். இப்ப நான் எழுதுறது அதனாலே மட்டும்தான். மனித அறிவுங்கிறது ஒரு பெரிய பிரவாகம். நான் ஒரு துளியை அதிலே சேர்க்கிறேன். அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு தோணுது. அதைச் செய்றப்ப எனக்கு நிறைவு வர்ரது அதனாலேதான்.
எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடலைன்னு பலபேர் சொல்றாங்க. எழுத்தாளனை ஏன் சமூகம் கொண்டாடணும்?
ஒரு சமூகம் எதை, யாரை முன்னுதாரணமா கொண்டிருக்குங்கிறதுதான் அந்த சமூகம் எப்படிப்பட்டதுங்கிறதுக்கான ஆதாரம். இப்ப நாம யாரை கொண்டாடுறோம்? சினிமாநடிகர்களையும் அரசியல்வாதிகளையும்தான் இல்லையா? அந்த சினிமாநடிகர்கள் வெறும் பிம்பங்கள். அரசியல்வாதிகள் ஊழல், குற்றம் ,சாதிவெறி, மதவெறி வழியா அதிகாரத்தை அடையறவங்க. அப்ப அவங்களை முன்னுதாரணமா நம்ம குழந்தைகள் முன்னாடி நிறுத்துறோம். நம்ம குழந்தைங்க ரீல்ஸ்லே மூழ்கி கிடக்கிறாங்கன்னா அதுக்கு இதான் காரணம். பள்ளிக்கூட பையன் அரிவாள் எடுத்து இன்னொரு பையனை வெட்டுறான்னா இதான் காரணம்.
இந்தச் சென்னையிலே அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. சினிமாக்காரங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு சிலை இருக்கா? இலக்கியமேதை புதுமைப்பித்தனுக்கு ஒரு ஞாபகச்சின்னம் உண்டா? அறிவை வழிபடுற ஒரு சமூகம் அவங்களைத்தானே கொண்டாடும். அவங்களைத்தானே தன்னோட பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டும்? உலகநாடுகள் முழுக்க அந்த ஊர் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும்தான் சிலைவைச்சு கொண்டாடுறாங்க. நாம அப்டி செய்றதில்லையே. நீங்க களையை விதைக்கிறீங்க, பயிர் விளையணும்னு எதிர்பார்க்கிறீங்க.
சமகாலத்திலே எழுத்தாளனை கொண்டாடணும்னா அவனை போற்றிப் புகழணும்னு அர்த்தம் இல்லை. அவன் முக்கியமானவன்னு உணரணும்னு அர்த்தம். அவனோட எழுத்துக்களைப் படிக்கிறது அவன் புத்தகங்களை வாங்கி ஆதரிக்கிறதுதான் அவனைக் கொண்டாடுறது. அவன் எழுத்தை நம்பிக்கையோட செய்யணும். எழுத்துக்கான ஆதரவு கொஞ்சமாவது சமூகத்திலே இருக்கணும். கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரிச்சதனாலேதான் கம்பராமாயணம் உண்டாச்சு. கடந்த காலத்திலே மன்னர்கள் ஆதரிச்சாங்க. இப்ப மன்னர்கள் இல்லை. இப்ப மக்கள்தான் மன்னர்கள். அதைத்தான் இலக்கியவாதியை கொண்டாடுறதுன்னு சொல்றோம்.
அப்டி கொண்டாடுறப்ப நாம கொண்டாடுறது இலக்கியத்தையும் அறிவையும்தான். அதை நம்ம பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டுறோம். அப்பதான் அவங்களிலே இருந்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உருவாகி வருவாங்க.
என் அம்மா எனக்கு வைக்கம் முகமது பஷீரைத்தான் உதாரணமாச் சுட்டிக்காட்டினாங்க. அவரை மாதிரி ஆகணும்னுதான் நான் எழுத்தாளன் ஆனேன். இன்னிக்கு என் புத்தகம் அமெரிக்காவிலே புகழ்பெற்ற பதிப்பகங்களாலே வெளியிடப்படுது. அந்த மேடையிலே நின்னுட்டு நான் தமிழிலக்கியம் பத்தி பேசறேன். அவங்க தமிழ்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. அங்க நம்ம மொழியையும் பண்பாட்டையும் கொண்டுபோயி நிறுத்துறேன். தொடக்கம் என் அம்மா வைக்கம் முகமது பஷீரை கொண்டாடினதுதான். இன்னிக்கு எழுத்தையும் எழுத்தாளரையும் கொண்டாடுங்க, நாளைக்கு உங்க பிள்ளைங்க உலக அரங்கிலே போயி நிப்பாங்க.
ஆனா இதை இங்க உள்ள அரசியல்வாதிங்களும் அவங்களோட அடிவருடிக் கும்பலும் ஒத்துக்க மாட்டாங்க. ஜனங்க இலக்கியவாதியையோ அறிவாளியையோ கொண்டாட ஆரம்பிச்சா அவங்களோட அதிகாரம் அழிய ஆரம்பிச்சிரும்னு பயப்படுவாங்க. இலக்கியவாதியை எல்லாம் கொண்டாடவேண்டாம்னு சொல்லுவாங்க. சரி, யாரைக் கொண்டாடணும்னு கேட்டா எங்களைக் கொண்டாடுங்கன்னு சொல்லுவாங்க… அவங்க கிட்டதான் அதிகாரம் பணம் எல்லாம் இருக்கு. அதனாலே தெருத்தெருவா சிலைவைச்சு, மண்டபம் கட்டி, மேடைபோட்டு பேசி அவங்களே அவங்களை கொண்டாடிக்கிடுவாங்க. வேற மாதிரி சிந்திக்கவே ஜனங்களை விடமாட்டாங்க. கொஞ்சபேராவது இவங்க உருவாக்குற இந்த மாயையிலே இருந்து வெளிவரணும். அதிகாரத்தை கொண்டாடுறதை விட்டுட்டு அறிவை கொண்டாடணும்.
அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டே வர்ர இந்தச் சூழலை எப்டி மதிப்பிடுறீங்க?
நான் திரும்பத் திரும்பச் சொல்றதுதான், அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டு வருதுன்னு சொல்றது ஒரு அப்பட்டமான பொய். அது ஒரு மாயை. நேத்தைக்கு என்னென்ன அறமதிப்பீடுகள் இருந்திச்சோ அதைவிட இன்னிக்கு பல மடங்கு அறமதிப்பீடு வளர்ந்திருக்கு. இன்னும் வளரும். இதான் வரலாற்றை பாக்கத்தெரிஞ்சவன் உறுதியாச் சொல்லும் உண்மை.
நேத்து இருந்த அற மதிப்பீடு என்ன? தீண்டாமை, சாதிவெறி, ஈவிரக்கம் இல்லாத உழைப்புச் சுரண்டல் இதெல்லாம்தானே? அந்திவரை வேலை செஞ்சுட்டு கூலிக்கு நடையாநடந்த காலம்தான் அறம் வாழ்ந்த காலமா? பண்ணையடிமை முறை, பட்டினி இதெல்லாம் அறமா?
நேத்து அறம் வாழ்ந்ததுன்னு சொல்றவன் யார்? உயர்சாதிக்காரன், பரம்பரையா உக்காந்து தின்னவன் சொல்லலாம். இப்பதான் உழைக்கிறவங்களுக்கு முறையா ஊதியம் இருக்கு. அவனும் பட்டினி இல்லாம வாழ முடியுது. அவன் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகுது, படிச்சு முன்னேற வாய்ப்பிருக்கு. அவன் சொல்ல மாட்டான்.
இப்பதான் மனுஷன் எல்லாமே சமம்ங்கிற சிந்தனை வந்திருக்கு. பெண்களுக்கு உரிமைகள் வந்திருக்கு. குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாதுங்கிற எண்ணமே ஒரு தலைமுறையாத்தான் வந்திருக்கு. நம்ம அம்மாக்கள் அப்பாக்களுக்கு அடிமையா வாழ்ந்தாங்க. இன்னிக்குள்ள பெண்கள் சுதந்திரமா இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் அ.மாதவையா முதல் பாரதி, புதுமைப்பித்தன் வரையிலான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் நம்ம சிந்தனையை மாற்றினதுதான்.
அறமதிப்பீடுகள் வளர்ந்திருக்குன்னா அதுக்குக் காரணம் மார்க்ஸ் முதல் காந்தி வரையிலான சிந்தனையாளர்கள்தான். திருவள்ளுவர் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள்தான். அவங்களோட பங்களிப்பாலேதான் நாம் இன்னிக்கு வாழுறோம். அதை கொஞ்சம்கூட உணராம என்னமோ நேத்து எல்லாமே சரியா இருந்ததுன்னு சொல்றது நன்றிகெட்டத்தனம்.
ஆமா, அறமதிப்பீடுகள் இன்னும் வளரணும். இன்னும் நெறைய மாறணும். அதுக்காகத்தான் இன்னிக்கு எழுதிக்கிட்ருக்கோம். எழுதிக்கிட்டேதான் இருப்போம்.
தொடர்ச்சியா நெறைய எழுதுறீங்க. தரமாகவும் எழுதறீங்க. எப்டி இது சாத்தியமாகிறது?
செய்க தவம்னு பாரதி சொன்னான். எது உங்க செயலோ அதை முழுமூச்சா செய்றதுதான் தவம். எனக்கு எழுத்து தவம்தான். முன்னாடி ஒருமுறை சொன்னேன். புத்தருக்கு தியானம் எதுவோ அதுதான் எனக்கு இலக்கியம்னு. எனக்கு கவனக்கலைவு கெடையாது. நேரவிரயம் கெடையாது.
நான் நெறைய எழுதுறேன், உண்மை. ஆனா உலக இலக்கியத்திலே மாஸ்டர்ஸ்னு நாம சொல்ற அத்தனைபேரும் என்னைவிட எழுதினவங்கதான். 51 வயசிலே செத்துப்போன பிரெஞ்சு எழுத்தாளர் பால்ஸாக் என்னைவிட அரைப்பங்கு ஜாஸ்தியா எழுதியிருக்கார். கொஞ்சம் இலக்கிய ரசனையும், கொஞ்சம் உலக இலக்கிய அறிமுகமும் உள்ள யாருக்கும் தெரியுறது ஒண்ணு உண்டு- நான் தமிழிலே எழுதினாலும் இன்னிக்கு உலக அளவிலே எழுதிட்டிருக்கிற முக்கியமான இலக்கியவாதிகளிலே ஒருவன்.
ஏன் நெறைய எழுதுறாங்க பெரிய இலக்கியவாதிகள்? ஏன்னா அவங்க மத்தவங்களை சந்தோஷப்படுத்த எழுதுறதில்லை. சொந்த வாழ்க்கைச்சிக்கல்களை மட்டும் எழுதுறதுமில்லை. அவங்களுக்குச் சில அடிப்படையான தத்துவக் கேள்விகள் இருக்கு. அதை ஒருபக்கம் சரித்திரத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் மனிதசிந்தனையோட பாரம்பரியத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் நம்ம பண்பாட்டிலே வைச்சுப் பார்க்கிறேன். அப்ப அது விரிஞ்சுகிட்டே போகும். அதனாலே எழுதித்தீராது. எழுத்தோட தரம் கூடிட்டே தான் போகும்.
சலிப்பில்லாத மொழி, திடமான ஒரு ஸ்டைல் இவ்ளவு சிறப்பா எப்டி வசப்பட்டுது?
மொழிநடை அல்லது ஸ்டைல்னா என்ன? நம்ம மனசுக்குள்ள ஒரு உரையாடல் ஓடிட்டே இருக்கு இல்லை? நம்ம கைரேகை போல ஒவ்வொருவருக்கும் அது ஒரு மாதிரி. நம்ம நடை அந்த மனமொழியா ஆயிட்டுதுன்னா அதான் நம்ம ஸ்டைல். ஆனால் அதை அடையறது ரொம்ப கஷ்டம். ஏன்னா நாம பேசுற, எழுதுற மொழி வெளியே இருந்து வர்ரது. அது பொதுவான மொழியாத்தான் இருக்கும். அந்த பொதுமொழிய நம்ம மொழியா மாத்தணும்னா நமக்குள்ள நாம போய்ட்டே இருக்கணும். கூடவே எழுதுற மொழிய பயிற்சி பண்ணிட்டே இருக்கணும்.
ஆனா அந்த அகமொழி கூட ஒரே மாதிரி ஆயிட வாய்ப்பிருக்கு. அப்ப நம்ம அகமொழியை நாம மாத்தணும். அதுக்கு தொடர்ச்சியா வாசிக்கணும். தொடர்ச்சியா வேற வேற அறிவுக்களங்களுக்குள்ள போய்ட்டே இருக்கணும். விஷ்ணுபுரம் எழுதுறப்ப நான் ஆலயக்கலை மரபுக்குள்ள மூழ்கி கிடந்தேன். கொற்றவை எழுதுறப்ப பழந்தமிழ் இலக்கியத்திலே வாழ்ந்தேன். பின் தொடரும் நிழலின் குரல் எழுதுறப்ப ரஷ்ய இலக்கியத்திலே இருந்தேன். இப்ப வரலாற்றுக்கு முன்னாடி இருக்கிற குகைஓவியங்களிலேயும் கற்காலத்து சின்னங்களிலேயும் வாழ்ந்திட்டிருக்கேன். அதுக்கேற்ப மொழி மாறிடுது. அதான் அது சலிக்காமலேயே இருக்கு.
நல்ல எழுத்தை எழுதணும்னா எழுத்தாளனா முழுமூச்சா வாழணும். அதுதான் ரகசியம்.
போதிய கருத்துச் சுதந்திரம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?
இந்தியாவைச் சுத்தி இருக்கிற மத்த நாடுகளோட ஒப்பிட்டுப்பாத்தோம்னா கண்டிப்பா முழுமையான கருத்துச் சுதந்திரம் இருக்கு. இங்க எழுத்தாளனை ஜெயிலுக்கு அனுப்புறதில்லை. புத்தகங்களை தடை பண்றதில்லை. தணிக்கை இல்லை.
ஆனா சில்லறை அரசியல்வாதிகள் உருவாக்குற நெருக்கடி இருக்கு. இப்ப நான் கம்யூனிச சிந்தாந்தத்த அல்லது திராவிட இயக்கச் சிந்தனையை விமர்சிச்சா உடனே என்னை சங்கின்னு சொல்லி முத்திரையடிப்பாங்க. சங்கிகளையும் கூடவே விமர்சிக்கிறேன். அவங்க என்னை தேசத்துரோகின்னும் விலைபோனவன்னும் சொல்லுவாங்க.
’எங்ககூட நின்னு நாங்க சொல்றத அப்டியே எழுது, இல்லாட்டி நீ எங்க எதிரியோட ஆளு’ இதான் நம்ம அரசியல்வாதிங்களோட அணுகுமுறை. அவங்க உருவாக்குற காழ்ப்புங்கிறது இங்க பெரிய பிரச்சினைதான். அவங்களுக்கு பெரிய ஆள்பலமும் பணபலமும் உண்டு. அதனாலே அவதூறு பண்றது ஈஸி. அதான் அவங்களோட ஆயுதம். அதைவைச்சு பயமுறுத்துறாங்க.
ஆனா நான் வாசகர்களை நம்பறேன். அவங்க எப்டியும் எங்கிட்ட வந்து சேந்திருவாங்கன்னு நினைக்கிறேன். தொண்ணூறு பேர் அரசியல் பிரச்சாரங்களை நம்பலாம், பத்துபேர் புத்தகங்களை வாங்கி வாசிச்சு நம்மகிட்ட வருவாங்க… அதான் நடந்திட்டிருக்கு.
அறுபது வயதுக்குமேல் டால்ஸ்டாய் , தாகூர் மாதிரியானவங்க உச்சகட்ட படைப்புகளைக் குடுத்திருக்காங்க… உங்களோட புதிய படைப்பு என்ன?
உண்மையிலே பாத்தா ஐம்பதை ஒட்டின வயசிலேதான் பெரிய படைப்புகளை மாஸ்டர்ஸ் எழுதியிருக்காங்க. என்னோட ஐம்பது வயசிலேதான் நான் வெண்முரசு எழுதறேன். மகாபாரதததை ஒட்டி எழுதின 26 நாவல்கள் வரிசையா… உலகிலேயே பெரிய இலக்கியப்படைப்பு அதுதான்.
ஆனா அதை எழுதி முடிச்சதுமே ஒருநாளைக்கு ஒரு கதை வீதம் 136 கதைகளை எழுதினேன். 13 தொகுதிகளா வந்திருக்கு. அப்றம் சின்ன நாவல்கள் அஞ்சு எழுதினேன்.
இப்ப கடல் நாவல் வெளிவரப்போகுது. கடல் சினிமாவுக்காக நான் ஒரு நாவல் வடிவத்தைத்தான் எழுதி மணி ரத்னத்துக்கு குடுத்தேன். பெரிய நாவல், அறுநூறு பக்கம் வரும். அந்த நாவல் புத்தகமா இப்பதான் வரப்போகுது.
இன்னொரு நாவல் எழுதிட்டிருக்கேன். காவியம்னு பேரு. இந்தியாவிலே உள்ள காவியமரபோட உண்மையான ஆழம் என்னன்னு ஆராயற ஒரு நாவல். நாவல் நடக்குற இடம் பிரதிஷ்டானபுரின்னு ஒரு பழைய நகரம். இப்ப அதோட பேரு பைத்தான். அங்கே போயி தங்கி எழுத ஆரம்பிச்சேன்…
தமிழ் இலக்கியம் உலக அளவிலே மதிக்க்கப்படுதா? தமிழ் இலக்கியத்துக்கு இன்னிக்கு இந்திய அளவிலேயாவது இருக்கிற இடம் என்ன?
என்னோட அறம்ங்கிற புத்தகம் பிரியம்வதா ராம்குமார் மொழிபெயர்ப்பிலே இங்கிலீஷ்லே வந்தது. Stories of the true ன்னு புத்தகத்தோட பேரு. மிகப்பெரிய அளவிலே வரவேற்பு கிடைச்ச புத்தகம் அது. அமெரிக்காவிலே உள்ள American Literary Tranlaters Assocoation ங்கிற அமைப்பு உலக அளவிலே ஆங்கிலத்திலே செய்யப்படுற இலக்கிய மொழிபெயர்ப்புக்கு விருது குடுக்குது. நாற்பது உலகமொழிகளிலே இருந்து இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஆறு புத்தகங்களிலே ஒண்ணா என்னோட புத்தகம் இருந்தது.
ஆனா அந்த விருது வியட்நாம் நாவலுக்குப் போச்சு. அந்த விருதுவிழாவுக்கு பிரியம்வதா போயிருந்தாங்க. அங்க உள்ளவங்க தமிழ்ங்கிற மொழியைப்பத்தியே கேள்விப்பட்டிருக்கலை. ஆனா வியட்நாம் மொழியிலே இருந்து நூத்துக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலே வந்திருக்கு. அந்த புத்தகங்களை வாசிச்சு வாசிச்சு அந்தக் கலாச்சாரம் அங்க உள்ள வாசகர்களுக்குத் தெரிஞ்சிருந்தது. அதனாலே அந்த நாவலை அவங்க கூடுதலா ரசிச்ச்சாங்க. வியட்நாம் கூட அமெரிக்கா போர் புரிஞ்சதனாலே வியட்நாம் பத்தி தெரிஞ்சிருக்குன்னு வைச்சுக்கலாம். அந்தவகையான அறிமுகம் தமிழுக்கு இல்லை.
தமிழிலே இருந்து இலக்கியங்கள் அமெரிக்காவிலே சர்வதேசப்பதிப்பா வர்ரது அனேகமா கிடையாது. சின்ன பதிப்பகங்கள் போட்ட புத்தகங்களே ஒண்ணுரெண்டுதான் அங்க வந்திருக்கு. ALTA விருதுக்குப் பிறகு என்னோட அறம் கதைகளோட மொழியாக்கமான Stories of the true ங்கிற சிறுகதைத் தொகுப்பும் வெள்ளையானை நாவலோட மொழியாக்கமான The white elephant ங்கிற புத்தகமும் அமெரிககவோட முக்கியமான பதிப்பகமான FSG நிறுவன வெளியீடா சர்வதேசப்பதிப்பா வருது. ஏழாம் உலகம் நாவலோட மொழிபெயர்ப்பு The Abyss ங்கிற பேரிலே Transit பதிப்பகம் வழியா அமெரிக்காவிலே சர்வதேசப் பதிப்பா வெளிவருது. இது தமிழுக்கு பெரிய தொடக்கம்.
ஆனா இந்த புத்தகங்களுக்கு நாம அங்க ஒரு வாசிப்பை உருவாக்கி எடுக்கணும். இயல்பா அவங்களாலே நம்ம இலக்கியத்தை வாசிக்க முடியாது. ஏன்னா நம்ம கலாச்சாரமே அவங்களுக்குத் தெரியாது. நம்ம நாட்டை அவங்க மேப்பிலேதான் பாக்கணும். அதிலே தமிழ்நாடுன்னு தனியா ஒரு ஏரியா இருக்குன்னு எடுத்துச் சொல்லணும். அதனாலே இங்கேருந்து நெறைய புத்தகங்கள் அங்க போகணும். அவங்க நெறைய வாசிக்க வாய்ப்பு இருக்கணும். அப்டிபோகணும்னா இந்த புத்தகங்கள் நெறைய விக்கணும். நான் எப்பவுமே தமிழோட நல்ல படைப்புகளை எல்லாம் தொடர்ச்சியா எல்லா மேடைகளிலேயும் முன்வைக்கிறவன்.
துருக்கி, கொரியா, ஜப்பான் படைப்புகள் அமெரிக்காவிலே நூற்றுக்கணக்கிலே வருது. நோபல் பிரைஸ் கூட வாங்குது. ஏன்னா அமெரிக்காவிலே வாழுற புலம்பெயர்ந்த துருக்கி, கொரியா, ஜப்பான் மக்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்குறாங்க. அதிலேயே ஒரு அடிப்படையான விற்பனை அமைஞ்சிருது. அதனாலே பதிப்பகங்கள் நம்பி புத்தகங்களை போடுறாங்க. தமிழ் ஜனங்களும் அதேபோல இந்த புத்தகங்களை வாங்கினா ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
ரெண்டு காரணத்துக்காக இந்த புத்தகங்களை அவங்க வாங்கணும். ஒண்ணு, அங்க பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு நம்ம பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறிமுகம்பண்ண இதான் வழி. இன்னொண்ணு, தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே அறியப்பட்டாத்தான் தமிழர்களுக்குப் பெருமை.
ஆனா ஒண்ணு, தரமான இலக்கியத்தை அங்க கொண்டுபோகணும். இங்க உள்ள வெகுஜன ரசனைக்கான எழுத்தை அங்க கொண்டுபோனா மதிக்க மாட்டாங்க. என்னோட கதைகளோட எந்த நல்ல மொழிபெயர்ப்பை குடுத்தாலும் உலகத்திலே உள்ள நல்ல இலக்கிய இதழ்களிலே வெளியாயிடுது… நல்ல பதிப்பகங்கள் பிரசுரிக்குது… ஏன்னா அதிலே அந்த தரம் உண்டு. அந்த வகையான படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம்தான் நமக்கு பெருமை…
தமிழ்விக்கின்னு ஒரு பெரிய கனவை முன்னெடுக்கிறீங்க…அடுத்த கனவு என்ன?
தமிழ்மொழிக்கு ஒரு பண்பாட்டுக் கலைக்களஞ்சியம் வேணும்னுதான் தமிழ் விக்கியை ஆரம்பிச்சோம். 2022லே வாஷிங்டனிலே வெளியீட்டுவிழா நடந்தது. இன்னிக்கு பத்தாயிரம் பதிவுகளோட மிகப்பெரிய ஒரு இணையக் கலைக்களஞ்சியமா வளந்திட்டிருக்கு… தமிழ்விக்கி சார்பிலே பெரியசாமித்தூரன் நினைவா தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய விருதை ஆண்டுதோறும் குடுக்கறோம். ஏற்கனவே மூத்த எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2010 முதல் குடுத்திட்டிருக்கோம்…
இனி ஒரு பெரிய கனவு 2026லே அமெரிக்காவிலே நவீனத் தமிழிலக்கியத்துக்காக ஒரு மாநாடு….இங்கேருந்து ஒரு ஐம்பது எழுத்தாளர்களை அங்கே கொண்டுபோயி அறிமுகம் பண்ணணும். நாம எழுதுறத அந்த ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்றது நோக்கம். இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற கவனத்தை தமிழ் இலக்கியம் மேலே திருப்பணும்னு நினைக்கிறேன்…
வாழ்க்கையோட பொருள் என்னன்னு நினைக்கிறீங்க?
நம்ம வாழ்க்கைக்கு பொருள் உண்டு, ஆனா அதை நாம அறிய முடியாது. ஏன்னா பிரபஞ்சத்துக்கு பொருள் உண்டுன்னா, இயற்கைக்கு பொருள் உண்டுன்னா, இங்க உள்ள மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருள் உண்டுன்னா அந்தப் பொருள்தான் நம்ம வாழ்க்கைக்கும் இருக்கு. எல்லாம் ஒட்டுமொத்தமா ஒண்ணுதான். நம்மாலே பிரபஞ்சத்தை அறியவே முடியாது. அதனாலே வாழ்க்கையோட பொருள் என்னான்னு கேக்கிறது பயன் இல்லாத வேலை.
நம்ம வாழ்க்கைக்கு நாம பொருளை குடுத்துக்கலாம். நமக்குள்ள என்ன ஆற்றல் இருக்குன்னு நாம உணரமுடியும். நாம செய்யவேண்டிய செயல் என்னன்னு தெரிஞ்சுகிட முடியும். அதைத் தெரிஞ்சு முழுமூச்சா அதைச்செய்றதுதான் நிறைவும் மகிழ்ச்சியும். அதுதான் நாம நம்ம வாழ்க்கைக்கு அளிக்கிற அர்த்தம். என் வாழ்க்கைக்கு அப்டி ஒரு அர்த்தத்தை என்னோட 26 வயசிலே நான் தான் குடுத்தேன். நாப்பதாண்டுகளா அதுதான் என்னோட வாழ்க்கை.
நன்றி ஆனந்தவிகடன்
பேட்டி நா.கதிர்வேலன்
விஜய ராவணன்
தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் இளம் படைப்பாளி விஜய ராவணன். குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் விஜய ராவணன் படைப்புகள் பற்றி ஓர் அரங்கு நிகழ்கிறது.
விஜய ராவணன்காவியம் – 40
சாதவாகனர் கல்வெட்டு. நானே கட், சாதவாகனர் காலம். பொய 1கானபூதி சொன்னது. தொன்மையான இந்நகரின் பெயர் பிரதிஷ்டானபுரி. சுப்ரதிஷ்டிதம் என்று அழைக்கப்பட்ட தொல்நகர் ஒன்றை மீண்டும் நிறுவியபோது இதற்கு பிரதிஷ்டானபுரி என்று பெயரிடப்பட்டது. அப்பெயர் இந்நகருக்கு வந்தமைக்குக் காரணங்கள் என பல சொல்லப்படுவதுண்டு. இந்நகரைக் கட்டிய அரக்கர் குலத்துச் சிற்பியான மயன் இது எந்நிலையிலும் அழியக்கூடாது என்பதற்காக இதற்கு ’நிலைபெறு நகர்’ என்று பெயரிட்டதாகக் புராணங்கள் சொல்கின்றன. இந்நகர் கோதாவரியின் கரையில் இருந்த உறுதியான பாறைகளின் மீது மேலும் பாறைகளை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டமையால் இப்பெயர் அமைந்தது என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. அழியாத கதைகளால் ஆனது என்பதனால் இப்பெயர் என்று இதை காவியங்கள் சொல்கின்றன.
அசுரர்களின் நகரங்களான மாகிஷ்மதியும் இலங்கையும் ஒரு காலத்தில் விண்ணில் மிதந்து நின்றிருந்தன என்று சூலசிரஸ் என்னிடம் சொன்னான். அரக்கர்களால் மேகங்களில் பறக்க முடியும். அவர்கள் தேவை என்றால் மட்டும்தான் மண்ணுக்கு வருவார்கள். பருந்துகளைப் போல மண்ணில் உள்ள அனைத்தையும் விண்ணில் இருந்தே அவர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்களில் பத்து தலைகளும் இருபது கைகளையும் கொண்ட ராவணனைப் போன்றவர்கள் உண்டு, நூறு தோள்களும் நூறு கைகளும் கொண்ட கார்த்தவீரியார்ஜுனர்களும் உண்டு. வானில் கட்டப்பட்டிருந்த மாபெரும் நகரான சுப்பிரதிஷ்டானம் பின்னர் தேவர்களால் அழிக்கப்பட்டது. அது கீழே விழுந்து உடைந்து துண்டுகளாகி மண் முழுக்கப் பரவியது. அவற்றில் எஞ்சிய ஒரு பகுதியே கோதாவரிக்கரையில் இருக்கும் இந்நகரம். இதன் பெரும்பகுதி மண்ணுக்குள் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.
நான் புதையுண்ட பெருநகர் மீது உருவான காட்டில் வாழ்ந்தேன். என் கால்களுக்குக் கீழே இருந்து விம்மல்களும், அழுகைகளும், அவ்வப்போது சிரிப்புகளும் என்னை வந்தடைந்தன. நான் ஒவ்வொரு ஓசை வழியாகவும் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துச் செல்லும் நூறு கதைகளை அறிந்தேன். கதைகள் என்னுள் பெருகிக்கொண்டே இருக்க, இங்கே வாழ்ந்தேன். கதைகளைக் கொண்டு கதைகளை அகழ்ந்தெடுத்தேன். கதைகளை வீசி கதைகளை வீழ்த்தினேன். கதைகளை தூண்டிலாக்கி கதைகளை பிடித்தேன். கதைகளை பொறியாக்கி கதைகள் சிக்குவதற்காகக் காத்திருந்தேன். எவராவது எப்போதாவது இங்கே வழிதவறி வந்தால் அவர்களிடம் பேசமுற்பட்டேன். அவர்களிடம் கதைகளைக் கேட்கவும், அவர்களிடம் கதைகளைச் சொல்லவும் நான் துடித்தேன். பெரும்பாலும் அவர்கள் என் குரலைக் கேட்டதுமே பீதியடைந்து ஓடினார்கள். ஓடும்போதே விழுந்து உயிர்விட்டவர்களும் உண்டு. என்னை அஞ்சாதவர்களிடம் மட்டுமே என்னால் பேசமுடிந்தது.
அந்நாட்களில் ஒருமுறை, கோதாவரியில் நீர் பெருகிச் சென்று பின் வடிந்து சேற்றுப்பரப்பாக இந்நிலம் ஆகிவிட்டிருந்தபோது, முதிரா இளைஞன் ஒருவன் முழங்கால் வரை புதைந்த சேற்றை அளைத்தபடி நடந்து, விழுந்து கிடந்த பெரிய மரங்களின் மேல் ஏறித் தாவி, கிளைகளில் இருந்து கிளைகளுக்குத் தொற்றிக்கொண்டு, இங்கே வந்தான். என் அருகே வந்தபோது அவன் தளர்ந்து விட்டிருந்தான். இந்த மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு மூச்சிளைத்தவன் அப்படியே சரிந்து விழுந்தான். நான் அவனை கூர்ந்து பார்த்தேன். அவன் உடலெங்கும் ரத்தம் உலர்ந்த காயங்கள் இருந்தன. நெஞ்சில் ஓர் அம்பு ஆழமாகப் பதிந்திருந்தது. அவன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அவனை நான் உலுக்கி எழுப்பினேன். என்னை அவன் பார்த்தபோது காய்ச்சலில் சிவந்திருந்த கண்களில் அச்சம் எழவில்லை. “நீ பைசாசம் அல்லவா? அப்படியென்றால் நான் இறந்துவிட்டேனா? என் முன்னோர்களுடன் வந்து சேர்ந்துவிட்டேனா?” என்று கேட்டான். “என் முன்னோர்கள் ஒரு கதைசொல்லும் பிசாசை அறிவார்கள். அதை அவர்கள் கனவுகளில் கண்டிருக்கிறார்கள். அது பாதாளத்தில் வாழ்வது… நீ அதுதானா?”
“உன் முன்னோர்கள் பாதாளத்திலா வாழ்கிறார்கள்?” என்று நான் கேட்டேன்.
“ஆமாம், நாங்கள் நிஷாதர்கள். எங்களை எரிப்பதில்லை, புதைக்கிறார்கள். ஏனென்றால் என் முன்னோர் விதைகளாக புதைந்து வேர்களாக மண்ணுக்குள் பரவுபவர்கள்… நீ யார்? பாதாளத்தில் வாழும் பிசாசா?” என்று அவன் கேட்டான்.
“நான் கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு. ஆனால் நான் வாழ்வது இங்கேதான்” என்று நான் சொன்னேன்.
“என்னை என் முன்னோருடன் சேர்த்துவிடு” என்று அவன் சொன்னான். “உன் கண்கள் அழகானவை. நீ என்னை கருணையுடன் பார்க்கிறாய்…”
அவனை நான் காப்பாற்றினேன். விழித்ததும் அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து தன் நெஞ்சில் கைவைத்தான். அவனுடைய புண்கள் பொருக்கோடியிருந்தன. அவன் மேல் நான் ஒரு பெரிய கொம்புத்தேன் கூட்டை தொங்கவிட்டிருந்தேன். அதிலிருந்து தேன் அவன் மேல் வழிந்துகொண்டிருந்தது. தேன் அவன் புண்களை ஆற்றியது. தேனையும் இலைகளில் இருந்து சொட்டிய மழைநீரையும்தான் அவன் சிலநாட்களாக மயக்கநிலையில் குடித்துக்கொண்டிருந்தான்.
“கானபூதி என்னும் பிசாசே, நீதான் என்னை காப்பாற்றினாய். நீ என் மூதாதையைப் போல. உன்னை வணங்குகிறேன்” என்று அவன் கூவினான்.
அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே நான் அவன் முன் தோன்றினேன். “நீ நலம்பெற்று விட்டாய்… உன் ஊருக்குத் திரும்பிச் செல்” என்று சொன்னேன்.
“என் ஊர் இப்போது இல்லை. எங்கள் ஊர்கள் எவையும் இப்போது இல்லை. அவற்றை எரியூட்டிவிட்டனர். இந்நகரின் தாழ்ந்த சதுப்புநிலம் முழுக்க நிஷாதர்களாகிய நாங்கள்தான் வாழ்ந்தோம். இப்போது என் குலமும் குடும்பமும் அழிந்துவிட்டன. நான் மட்டும் தப்பி இந்தக் காட்டுக்குள் ஓடிவந்தேன்” என்று அவன் சொன்னான்.
“என்ன நடந்தது?” என்று நான் அவனிடம் கேட்டேன். “என்னிடம் சொல். நான் உனக்கு உதவுகிறேன்”
“உன்னால் அவர்களை எதிர்க்க முடியுமா? அல்லது எனக்காக வந்து போராடத்தான் முடியுமா?”
”என்னால் கதைகளைச் சொல்லமுடியும். உனக்கான கதைகளை நான் அளிப்பேன். கதைகள்தான் எல்லாமே. வெல்லும் கதைகளும் தோற்கும் கதைகளும் மட்டும்தான் இங்கே உள்ளன”
அவன் சொன்னான். “நாங்கள் நிஷாதர்கள். இந்நிலம் முழுக்க நாங்களே வாழ்ந்தோம். ஒரு காலத்தில் இது நிஷதநாடு என்றே அழைக்கப்பட்டது… எங்கள் குடியில் அரசர்களும் பேரரசர்களும்கூட வாழ்ந்ததுண்டு. புகழ்பெற்ற மன்னன் நளன் நிஷாதன் என்று நீ அறிந்திருப்பாய்”
“ஆம்” என்று நான் சொன்னேன்.
“நாங்கள் விந்திய மலையின் மேல் வாழ்ந்த பழங்குடியினரின் வம்சத்தில் தோன்றியவர்கள். எங்கள் அன்னையர் இந்த கோதாவரியில் மலையிலிருந்து மிதந்து வந்தவர்கள். அங்கே மலையில் வாழும் எங்கள் முதற்குடிகள் தங்கள் பெண்களில் ஒருத்தியை கோதாவரிக்கு அளிப்பதுண்டு. அவளை ஆடை அணிகள் அணிவித்து, கல்மாலைகள் சூட்டி, மூங்கில் தெப்பத்திலேற்றி, கோதாவரியில் விட்டு விடுவார்கள். அந்தப் பெண்கள் கோதாவரியில் வரும்போது அசுரர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டு மனைவியாக்கப் படுவார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அசுரர்களாக இருப்பதில்லை. மனிதர்கள் என்பதனால் அவர்களை மண்ணில் வாழவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தந்தையராக அசுரர்கள் அமைந்தார்கள்.
சுப்ரதிஷ்டானத்தை ஆட்சி செய்த அசுரர்களின் ஆட்சிக்காலத்தில் எங்கள் பெண்கள் தங்கத்தில் மாலைகள் அணிந்திருந்தார்கள். வெள்ளியில் காலணிகள் அணிந்தார்கள். எங்கள் இல்லத்தில் பெரிய மாடங்கள் அமைத்திருந்தன. அங்கே அசுர குலத்தின் கொடிகள் பறந்தன. இரவுகளில் விண்ணில் பெரிய சிறகுகளுடன் அசுர குலத்து தந்தையர் பறந்து வந்து எங்கள் மாளிகை முற்றங்களில் இறங்கி எங்கள் அன்னையருடன் கூடி வாழ்ந்தார்கள். எங்கள் மாடங்களின் பெரிய உப்பரிகைகளில் அசுரர்கள் வந்துவிட்டால் பெரிய விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும் என்று மரபிருந்தது. நட்சத்திரங்களைப் பார்ப்பது போல பிற ஊர்க்காரர்கள் தொலைவிலிருந்து எங்கள் மாளிகையின் விளக்குகளைப் பார்ப்ப்பார்கள்.
அசுர குலம் அழிக்கப்பட்டது. அசுரர்கள் தீராத ஆசையும் வீரமும் கொண்டவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் விண்ணிலிருந்த நகரங்களை மிகப்பெரிதாக கட்டிக்கொண்டே இருந்தார்கள். அவை நுரைபோலவும் மேகங்களைப் போலவும் பெருகிக்கொண்டே இருந்தன. சுப்ரதிஷ்டானம் அந்தியின் ஒளியில் வானில் தீப்பற்றி எரிவதுபோல சுடர்விட்டது. அசுரர்களின் வளர்ச்சியைக் கண்டு இந்திரன் அஞ்சி விஷ்ணுவிடமும் சிவனிடமும் சென்று முறையிட்டார். “மண்ணில் இருந்து வளர்வது எதுவும் விண்ணை நோக்கித்தான் வருகிறது. எல்லைமீறி வளர்வது விண்ணை அழித்துவிடும்… விண்ணவர்கள் அழிந்தால் தெய்வங்களும் இல்லை” என்றான்.
சிவன் தன்னுடைய சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு அசுரர்களைக் கொல்வதற்கு கிளம்பியபோது விஷ்ணு அவரைத் தடுத்தார். ”இப்போது அவர்களை நம்மால் வெல்ல முடியாது. அவர்களுடைய ஆற்றல் ஓங்கியிருக்கிறது. அவர்கள் நம்பிக்கையும் உறுதியாக இருக்கிறது. நம்பிக்கையும் ஆற்றலும் இணைவது காற்றும் தீயும் இணைவது போல. அவர்களின் நம்பிக்கை குறையட்டும்; அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களின் நம்பிக்கை இப்போது பெருகிக்கொண்டிருக்கிறது. தடையில்லாமல் பெருகும் நம்பிக்கை கொண்டவர்கள் அழியும் நிலையில் இருக்கிறார்கள். மண்ணில் எவரும் தன்னைத்தான் நம்பக்கூடாது. தன்னைவிட பெரிதொன்றை நம்பவேண்டும். அசுரர்கள் தங்களை மட்டுமே நம்புபவர்கள். தங்களை மட்டுமே நம்புபவர்கள் பெருகிப் பெருகி ஏதோ ஒரு இடத்தில் தங்கள் எல்லைகளைக் கடப்பார்கள். தாங்கள் இந்தப்பிரபஞ்சத்தில் எந்த அளவோ அதைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது அவர்களின் பலவீனமாக மாறும். அங்கிருந்து அவர்களின் வீழ்ச்சி தொடங்கும்”.
விஷ்ணு சொன்னார் “ஒரு கோட்டை ஏற்கனவே சரியத்தொடங்கிவிட்டதென்றால் அதை இடிப்பது மிக எளிது. இவர்களின் நகரங்களின் எடை கூடிக்கொண்டிருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் அவை விண்ணில் மிதக்க முடியாமல் ஆகும். மண் நோக்கி இறங்கத் தொடங்கும். அவர்கள் எதையோ ஒன்றைச் செய்து அதை மீண்டும் விண்ணில் ஏற்றிவிடலாம் என்று நினைப்பார்கள். அவற்றின் அளவையும் எடையையும் குறைத்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு வரவே வராது. அவர்களின் ஆணவம் அதற்கு ஒத்துக்கொள்ளாது. அத்தருணத்தில் நாம் தாக்குவோம். அவர்களை வெல்வோம்” என்று விஷ்ணு சொன்னார்.
ஆகவே பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் சிவனும் விஷ்ணுவும் இந்திரன் முதலிய தேவர்களும் காத்திருந்தார்கள். மாகிஷ்மதி முதலில் எடைமிகுந்து சரியத் தொடங்கியது. அதை தேவர்கள் விஷ்ணுவின் தலைமையில் சூழ்ந்து தாக்கினார்கள். நூறு ஆண்டுகள் நடந்த போரில் மாகிஷ்மதி பற்றி எரிந்து உடைந்து துண்டுகளாக மண்ணில் சரிந்தது. மாகிஷ்மதியை ஆண்ட அசுரர்களின் ஆதிக்கம் முடிவடைந்தது. அவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு மண்ணில் வீழ்த்தப்பட்டனர். ஆயிரம் கைகள் கொண்டவர்கள் ஆலமரங்களாக மண்ணில் முளைத்தெழுந்தனர். நூறு கைகள் கொண்டவர்கள் அரசமரங்களாக ஆனார்கள். அவர்கள் பெருங்காடுகளாக மாறி தங்கள் உடைந்த நகரங்களைத் தழுவி மேலெழுந்து செறிந்து வானத்தின் கீழ் பசுமைகொண்டு நின்றிருந்தார்கள். ஒருவரையொருவர் வேர்களாலும் கிளைகளாலும் பற்றிக் கொண்டு காற்றில் ஓலமிட்டு சுழன்றாடினர்.
அதன்பின் ஒவ்வொரு நகரமாக விழுந்தது. இறுதியாக சுப்பிரதிஷ்டானம் விழுந்தது. மண்ணில் விழுந்த சுப்பிரதிஷ்டானத்தை வென்ற தேவர்கள் எட்டாக பகுத்தனர். அதன் மையப்பகுதிக்கு யாதவன் ஒருவனின் குலம் உரிமைகொண்டது. அந்த யாதவன் தன் கன்றுகளை மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் இசைப்பதுண்டு. ஒவ்வொரு முறை புல்லாங்குழலை வாயில் வைப்பதற்கு முன்பும் அவன் வானை நோக்கி ‘சந்திரனுக்கு இந்த இசை அர்ப்பணம்’ என்று சொல்வான். ஒவ்வொரு இரவிலும் சந்திரன் எழுந்ததுமே தன்னந்தனியாக அமர்ந்து அவன் இசைக்கத் தொடங்குவான். சந்திரனே அவனுடைய இசையை ஒவ்வொரு நாளும் கேட்டு மகிழத் தொடங்கினான். நூறாண்டுகள் அந்த யாதவன் சந்திரனுக்காக இசைப்பதை ஒரு தவம் என்று இயற்றிக்கொண்டிருந்தான்.
கீழே விழுந்த நகரங்களை தேவர்கள் பங்கிட்டபோது அவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய பங்கை அளித்தனர். சூரியனுக்கான பங்கை சூரியவம்சத்தை சேர்ந்த மன்னர்கள் அடைந்தார்கள். சந்திரனுக்குரிய பங்கை சந்திரனுக்குரிய மன்னர்கள் அடைந்தார்கள். மாகிஷ்மதி, சுப்பிரதிஷ்டானம் ஆகியவற்றில் சந்திரனுக்கு கிடைத்த பங்கை அவர் தனக்கு இசை படைத்து தவம் செய்த அந்த யாதவனின் வாரிசுகளுக்கு அளித்தார். அவ்வாறுதான் சுப்பிரதிஷ்டானத்தில் யாதவர்களின் அரசகுலம் உருவானது. அவர்கள் எங்கள் சாதியினரின் மாளிகைகளை பிடுங்கிக்கொண்டார்கள். எங்களை அடித்து துரத்தி கோதாவரியின் சதுப்புக்கு இடம் பெயரச்செய்தார்கள். எங்கள் மாளிகைகளை அவர்கள் தங்கள் அரண்மனையின் தலைநகரமாக மாற்றிக்கொண்டார்கள். அங்கே அவர்களின் கொடிகள் பறந்தன.
எங்களை அவர்கள் இருண்டவர்கள் என்றும் அழுக்கானவர்கள் என்றும் சொன்னார்கள். தங்கள் குழந்தைகளிடம் எங்களைப்பற்றி அவ்வாறு சொல்லி வளர்த்தனர். ஆகவே தலைமுறைகளாக அவர்கள் எங்களை வெறுத்தனர். நாம் அஞ்சுபவர்களை வெறுக்கிறோம். வெறுப்பவர்களை அருவருக்கிறோம். அருவருப்பவர்களை அழிப்பதற்கு அவர்கள் அருவருப்பானவர்கள் என்பதே போதிய காரணமாக ஆகிறது. அவர்கள் ஏதேனும் காரணங்கள் சொல்லி எங்களைத் தாக்கிக்கொண்டே இருந்தனர். உண்பதற்கான உணவும் ஒடுங்குவதற்கான குடிலும் அன்றி எதுவுமே எங்களிடம் மிஞ்சக்கூடாது என்று அவர்கள் எண்ணினர். சற்றேனும் நாங்கள் தலையெடுத்தால் அவர்களின் தெய்வங்களை அவமதித்ததாகவோ, அவர்களின் நகரத்தை அசுத்தம் செய்ததாகவோ, அவர்களின் குலத்தில் ஊடுருவ முயன்றதாகவோ சொல்லி எங்களை தாக்கினார்கள். ‘அடிபட்ட பாம்பின் வால் நெளிந்தால் தலையில் மீண்டும் அடி’ என்று ஒரு பழமொழி அவர்களிடம் இருந்தது.
எங்கள் கதைகள்தான் எங்களைக் காத்தன. எங்களிடம் நாங்கள் பிறப்பாலேயே இழிவானவர்கள், இயல்பிலேயே அசுத்தமானவர்கள், அறிவற்றவர்கள், அச்சமும் மூர்க்கமும் மட்டுமே கொண்டவர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. அதை எங்கள் அகம் நம்பாமல் காத்தவை எங்கள் கதைகள். மாகிஷ்மதியில் பறந்த எங்கள் கொடிகளை நாங்கள் கனவுகளில் பார்த்துக்கொண்டேதான் இருந்தோம். ஆகவே நூறுமுறை தேர்ச்சக்கரங்கள் ஏறிச் சென்றபின்னரும் சிதைந்த உடலுடன் உயிருடனிருக்கும் பாம்பு போல நாங்கள் துடித்து நெளிந்துகொண்டேதான் இருந்தோம். எங்கள் நஞ்சு எப்போதும் மிச்சமிருந்தது. கண்கள் எப்போதும் விழித்துப் பார்த்துக்கொண்டேதான் இருந்தன.
வழக்கமான ஒரு சிறுபூசல்தான். எங்கள் குலத்தைச் சேர்ந்த ஒருவனை யாதவன் காலால் உதைத்து அழுக்குநீர் ஓடைக்குள் தள்ளிவிட்டான். சீற்றத்துடன் எழுந்த அவன் அழுக்குநீரை அள்ளி அந்த யாதவன் மேல் வீசினான். ஆளும் குலத்தவன்மேல் அழுக்குநீர் வீசப்பட்டது என்ற செய்தி பரவியதும் அவர்கள் திரண்டு ஆயுதங்களுடன் வந்து எங்களை தாக்கினார்கள். கண்ணில்பட்டவர்களை எல்லாம் கொன்றனர். குடிசைகளைக் கொளுத்தினர். இம்முறை நாங்கள் என் தலைமையில் திருப்பித் தாக்கினோம். நான் பல ஆண்டுகளாகவே பொறுமையிழந்திருந்தேன். என்னுடன் நூறு இளைஞர்கள் இருந்தனர். எங்களைத் தாக்கவந்த முதல் அணியை நாங்கள் அடித்து துரத்தினோம். அவர்கள் சென்று பெரும்படையாக மீண்டும் வந்தனர்.
“எங்களிடம் சீற்றம் மட்டுமே இருந்தது. ஆயுதங்கள் இல்லை. நாங்கள் இருந்த இடம் பள்ளமானது. அங்கே நின்று போரிடுவதற்குக் கூட இடமில்லை. என் துணிச்சலால் என் குலத்திற்கே முழுமையான அழிவை கொண்டுவந்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். மனம் உடைந்து அழுதபடி “என் கண்ணெதிரே எனக்கு வேண்டியவர்கள் அனைவருமே அழிவதைக் கண்டேன்… இனி நான் அங்கே திரும்ப கூடாது. நான் காட்டில் செத்து அழிவதே சரியானது” என்றான்.
நான் அவனிடம் “நான் உனக்கு அழியாத கதை ஒன்றை தருகிறேன்” என்றேன். “வீரியம் மிக்க விதை போன்றது இந்தக் கதை. இது முளைக்கும், இதை நம்பி உன் குடியினர் வாழமுடியும். இது உனக்கு படையும் ஆயுதமுமாக மாறும்.”
என் இடது கையை மண்ணில் வைத்து “இது ஒரு கதை. என் கதைகள் எல்லாமே இரட்டைக்கதைகள். ஒன்றுடன் ஒன்று இணைபவை, பிரிபவை, அதனூடாக எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவை…” என்றேன்.
வலதுகையை மண்ணில் வைத்து “இது இன்னொரு கதை. இந்தக் கதைகளில் திரண்டுவரும் கேள்விகள் உண்டு. அக்கேள்விகளுக்கு நீ விடையளித்தாய் என்றால் மட்டும்தான் இக்கதைகள் உன்னுடன் வரும். நீ விடையளிக்கவில்லை என்றால் இந்தக் காட்டைப் பற்றி நீ கொண்டிருக்கும் எல்லா நினைவுகளும் மறைந்து இங்கே வழியறியாமல் சிக்கிக்கொள்வாய்… இங்கேயே எவரும் அறியாமல் செத்து மண்ணில் புதைவாய். ஆம் என்றால் உன் கையை மண்ணில் பதித்துக்கொள்” என்றேன்.
“ஆம், இதையும் எங்கள் கதைகளில் சொல்லியிருக்கிறார்கள்” என்றபடி அவன் தன் கையை மண்ணில் பதியவைத்துக்கொண்டான்.
“துவஸ்த மனுவின் மகனும் அசுரர்குடியின் அரசனுமான சுத்யும்னனால் கட்டப்பட்டது பிரதிஷ்டானபுரி” என்று நான் கதை சொல்லத் தொடங்கினேன். “அதற்கு முன் அங்கிருந்த தொல்நகரமாகிய சுப்பிரதிஷ்டானம் அசுரர்களால் உருவாக்கப்பட்டது. இறுதியாக அது யாதவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. யாதவ மன்னனும் தத்துவ ஞானியுமான கிருஷ்ணணின் வம்சத்தில் வந்தவர்கள் அந்த ஆட்சியாளர்கள். லவணர்கள் என்னும் தொன்மையான அசுரர் குடியில் இருந்து உருவாகி வந்தது கிருஷ்ணனின் யாதவகுலம். அவர்கள் கடல்கொண்ட துவாரகையை ஆட்சி செய்தார்கள். அவர்கள் பாணாசுரனின் குடியிலும், சம்பராசுரனின் குடியிலும் பெண்கொண்டனர். துவாரகையை இழந்தபின் தெற்கே பரவினர். விந்தியமலையின் அடிவாரத்தில் கோதாவரியின் கரையில் தொன்மையான பிரதிஷ்டானபுரியை அவர்கள் மீண்டும் எழுப்பினர்.”
ஆயிரம் ஆண்டுகள் யாதவர்கள் சுப்பிரதிஷ்டானத்தை ஆட்சி செய்தார்கள். அவர்களின் குலம் பெருகி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிக்கொண்டே இருந்தது. நெடுந்தொலைவுக்கு அவர்கள் பரவியபோது அவர்களின் மொழி திரிபடைந்து வெவ்வேறு மொழிகளாகியது. சென்ற இடங்களில் அவர்கள் பெண்களை வென்று மணம் கொண்டபோது நிறமும் முகமும் மாறின. அவர்கள் தங்களை ஒன்றாக்கும் கதைகளையும் மறந்தனர். எனவே காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாதவர்களானார்கள். அவர்களில் எவர் வல்லமைகொண்டார்களோ அவர்கள் மற்றவர்களின் நிலங்களை வென்று பேரரசர்களாக ஆக விரும்பினார்கள். ஆகவே படைகொண்டு சென்று தாக்கினார்கள். நகர்களைக் கொள்ளையிட்டனர். பெண்களை கவர்ந்தனர். ஆண்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர்.
நூறாண்டுகள் யாதவர்களின் அரசுகள் மாறிமாறிப் போரிட்டு ஆற்றலிழந்தன. அப்போது வடமேற்கே இருந்து சகர்கள் என்னும் சிவந்த இனத்தவர் அவர்களின் நாடுகளைத் தாக்கினார்கள். அதன் பின் சுண்ணம்போல் வெளுத்த ஹூணர்கள் தாக்கினார்கள். மலையில் இருந்து பாறைக்கூட்டம் சரிந்து சமவெளியை அடைந்து அனைத்தையும் நொறுக்குவதுபோல அவர்கள் யாதவ அரசுகளின் மேல் இறங்கினர். அவர்கள் சென்ற வழியில் அழிவுகளும் இடிபாடுகளும் தவிர எதுவுமே எஞ்சவில்லை. வடக்கில் இந்திரப்பிரஸ்தம் வீழ்ந்தது. காம்பில்யமும், உஜ்ஜையினியும் வீழ்ந்தன. ஒவ்வொரு நகரமாக சரிந்து, ஒன்று இன்னொன்றின் மேல் விழுவதுபோல வீழ்ச்சியை விரைவாக்கின.
இறுதியாக சுப்பிரதிஷ்டானமும் வீழ்ந்தது. அந்நகரை சகர்களின் படைகள் பன்னிரு நாட்கள் சூறையாடின. அரண்மனைகளை இடித்து தீவைத்தன. ஆண்கள் மூக்கு வெட்டப்பட்டு, நெற்றியில் சூடுபோடப்பட்டு அடிமைகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். விதைப்பைகளில் துளையிடப்பட்டு அதனூடாக கயிறு செலுத்தப்பட்டு ஒருவரோடு ஒருவர் சேர்த்துக் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் போர்வீரர்களிடையே பங்கிடப்பட்டனர். முதியவர்கள் கொன்று கோதாவரியில் வீசப்பட்டனர். பிரதிஷ்டானபுரி அழுகும் பிணங்களும் புகைந்துகொண்டிருக்கும் கட்டிடங்களுமாக எஞ்சியது. அங்கே எஞ்சிய இடிபாடுகளிலும் குப்பைகளிலும் இருந்து பொறுக்கி உண்ணும் சிலர் மட்டுமே வாழ்ந்தனர்.
அப்போது காட்டில் இருந்து அசுரகுடியைச் சேர்ந்த இளைஞனான சுத்யும்னன் தன்னை ஆதரிக்கும் காட்டுமனிதர்கள் சிலருடன் வந்து அந்நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவன் அழிந்து மறைந்த நகரை மீண்டும் கட்டி எழுப்பினான். துவஸ்தமனுவின் வம்சத்தில் வந்தவன் என தன்னை அறிவித்துக்கொண்ட சுத்யும்னன் விரைவாக அங்கே வலுவான ஓர் அரசை உருவாக்கினான். ஏனென்றால் படைவீரர்களாகிய யாதவர்கள் கொல்லப்பட்டபோது நிஷாதர்களும் பிறரும் காடுகளுக்குள் சென்று பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவன் அழைப்பை ஏற்று வந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர். பிற ஊர்களில் இருந்தும் நிஷாதர்கள் அங்கே வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். அவர்களுக்கு நூற்றாண்டுகளாக அடக்கிவைக்கப்பட்ட சீற்றமும் ஆங்காரமும் இருந்தது.
சுத்யும்னனின் அவைக்கு அறிஞர்களும் ஞானிகளும் வந்தனர். பிரஹஸ்பதி முனிவரின் வழிவந்தவரும் சாங்கிய மகாதரிசனத்தில் ஞானியுமான பரமேஷ்டி அவனுடைய முதன்மை ஆசிரியரானார். அவருடைய வழிகாட்டலில் அங்கே கோதாவரியின் கரையில் தான் கட்டிய புதிய நகரத்திற்கு சுத்யும்னன் பிரதிஷ்டானபுரி என்று பெயரிட்டான். அவனுடைய சோமகுலம் அங்கே பெருகியது. அவன் மகன் புரூரவஸில் இருந்து மன்னர்களின் வரிசை உருவாகிக்கொண்டே இருந்தது. அஸ்மக ஜனபதத்தின் தலைமையிடமாக அது திகழ்ந்தது. பின்னர் மூலகப் பெருங்குடியின் நிலங்களை அது தன்னுள் இணைத்துக்கொண்டது.
“அஸ்மாகர்களின் வம்சத்தில் வந்த நான்கு குலங்களைச் சேர்ந்த மன்னர்கள் பிரதிஷ்டானபுரியை ஆட்சி செய்தனர். அஸ்மாகர்களின் நான்காவது வம்சமே சாதவாகனர் என அழைக்கப்பட்டது. நூறுதேர்களைக் கொண்டவர்கள் என்று அதற்குப் பொருள். அதன் முதல் மாமன்னன் பிரதிவிந்தியன் சதகர்ணி என பெயர் பெற்றான்.” என்று நான் சொன்னேன்.
அவன் என்னைப் பார்த்தபடி கதையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தான்.
நான் என் வலக்கையை கண்களால் சுட்டிக்காட்டிச் சொன்னேன் “இந்தக் கதையின் கேள்வி இது. சுத்யும்னன் யார்?”
அவன் என் கண்களை கூர்ந்துநோக்கி “நான்தான்” என்றான்.
(மேலும்)
தங்கப்புத்தகம், அஜிதன் உரையாடல்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் ஐரோப்பிய வட்டம் சார்பாக நடைபெற்ற ‘தங்க புத்தகம்‘ குறித்த உரையாடல் நிகழ்வில் அஜிதனின் உரை நுட்பமாகவும் தெளிவாகவும் இருந்தது. புனைவு களியாட்ட கதைகளில் அடர்ந்த தத்துவ செறிவு நிறைந்த கதைகள் தங்க புத்தக தொகுதியிலேயே அதிகம் உள்ளன.
இந்த கதைகளின் நுண் பிரதிகளை தத்துவத்தில் தேர்ச்சியும் படைப்பூக்கமும் கொண்ட புனைவெழுத்தாளருமான அஜிதன் தன் உரையில் சுட்டிக்காட்டினார். விரிவான தத்துவ பின்புலத்தில் நவீன(நவினத்துவ அல்ல) இலக்கிய அழகியலுடன் எழுதும் இலக்கிய வகைமையை தமிழில் உருவாக்கியவர் ஜெயமோகன். தத்துவத்தை தவிர்த்தல் என்ற நவீனத்துவ அழகியலுக்கு நேரேதிரானது இது.
தத்துவ கொள்கைகள் விளக்கப்படும் அலிகரி(Allegory) என்ற மரபான வடிவத்திலிருந்து இலக்கிய உத்திகளின் மூலமாக உயர்ந்த கதைகளாக( fable) இவை உறுமாறுவதை பற்றி சொன்னார். இத்தொகுப்பினுள் நுழைய அசோகமித்திரனின் ‘பிரயாணம்‘ ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். அரேபிய பாலைவன படிமம் சூபி தத்துவத்திற்கும், அடர் காடு வேதாந்தத்திற்கும் எப்படி பொருத்தமோ , திபெத்திய பனி நிலம் பெளத்த சூனிய தரிசனத்தை பிரதிபலிக்கும் படிமமாக அமைகிறது.
முடிவில்லாத மாற்றமே பிரபஞ்ச தர்மமாக பெளத்தம் சொல்கிறது(அநிச்சா). அதனாலேயே பிரதி எடுக்க இயலாததாகவும் ஆகிறது.
‘கரு‘ கதை தன்னுள் ஏற்படுத்திய ஆழ்ந்த பாதிப்பையும், அடையாளம்( identity) மற்றும் மறுப்பு (negative) முதலான மேலை தத்துவ கருதுகோள்கள் முதல் பெளத்த –வேதாந்தம் இணையும், மாறுபடும் இடங்கள் வரை அழகான விளக்கம் கொடுத்தார். தீவிர தத்துவ பார்வையுடன் மட்டும் அல்ல மாறுபட்ட வாசக கோணங்களிலும் அணுக தக்க சாத்திய கூறுகள் உள்ள தொகுப்பு இது. வாசக சட்டகத்தை விரிவாக்கிய அஜிதனுக்கும் நிகழ்வை ஒருங்கிணைந்த ஷர்மிளா மற்றும் ஸ்ரீராம் இருவருக்கும் நன்றிகள்.
வாசு
ஆம்ஸ்டர்டாம்.
Can we separate religion from philosophy?
I am listening. your talks on YouTube almost every everyday. I think you are trying to separate the philosophy of religion from religion. Is it really possible to do so? I am skeptical in this matter.
Can we separate religion from philosophy?த்துவம் என்றால் வாழ்க்கையையே தர்க்கபூர்வமாக அறிவதற்கான அடிப்படைப் பயிற்சி என அறிந்துகொண்டேன். உண்மையில் இன்றைக்கு நம் கல்விமுறையில் அடிப்படைத் தத்துவக்கல்வி கண்டிப்பாக இருந்தாகவேண்டும். நமக்கு எத்தனை படித்தாலும் தர்க்கசிந்தனையே இல்லாமலிருப்பதற்கான காரணமே தத்துவப்பயிற்சி இல்லாமலிருப்பதுதான்.
வரலாறு, தத்துவம் கடிதம்குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா
கவிஞர் சோ. விஜயகுமார் இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை பெறுகிறார். விருதுவிழா வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.
சிறப்பு விருந்தினராக கன்னட -ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். நிகழ்வில் கவிஞர் போகன் சங்கர், கவிஞர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கெடுக்கிறார்கள்.
காலைமுதல் இலக்கிய அரங்கம் நிகழும். இந்நிகழ்வில் சிறுகதை அரங்கில் விஜய ராவணன் மற்றும் ரம்யா படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும், கவிதை அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் மற்றும் சசி இனியன் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும் நிகழ்கின்றன.
ஒரு விவாத அரங்கில் கவிதை பற்றி கவிஞர் போகன் சங்கர், வெய்யில் ஆகியோருடன் மனுஷ்யபுத்திரனும் கலந்துகொள்கிறார். வசுதேந்திராவுடன் ஓர் அமர்வும் உள்ளது.
நண்பர்கள் காலைமுதல் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்
ஜெ
சோ. விஜயகுமார் தமிழ் விக்கி குமரகுருபரன் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது
May 29, 2025
இலக்கியம் என்னும் மாபெரும் கல்வி
தமிழ்ச்சூழலின் பெரும் சிக்கல்களில் ஒன்று இலக்கியம் என்பது நற்போதனை அல்லது பொழுதுபோக்கு என்றுதான் நாம் குடும்பங்களிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எல்லாம் சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த முன்முடிவுகளில் இருந்து நம் உள்ளங்களை மீட்டு இலக்கியம் என்பது ஓர் உயர்தரக் கல்வி என்பதை உணராதவரை இலக்கியம் நோக்கி வரவே நம்மால் முடியாது.
காவியம் – 39
பைசாசம், சாதவாகனர் காலம் பொயு 2 மதுரா அருங்காட்சியகம். சுடுமண்கானபூதி தன் வலது உள்ளங்கையை மண்ணில் பொத்தி வைத்துக்கொண்டு சொன்னது. “வழக்கம்போல இதுவும் இரண்டு ஓட்டங்களாக பின்னிச் செல்லும் கதை…” இடது உள்ளங்கையை மண்ணில் பொத்திக்கொண்டு தொடர்ந்தது. “இந்தக் கதையின் இன்னொரு பக்கம் இது… நான் எதைச் சொல்லப்போகிறேன் என்று இப்போது எனக்கே தெரியாது.”
நான் தலையசைத்தேன்.
“மிகத்தொன்மையான கதை இது. எவரெவரோ சொல்லி, எவரெவரோ மாற்றி, எங்கெல்லாமோ முட்டி எதிரொலித்து அலையலையாகச் சென்றுகொண்டே இருப்பவை கதைகள்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது.
ஷட்ஜன், ரிஷபன், காந்தாரன், மத்மயன், பஞ்சமன், தைவதன், நிஷதன் என்று ஏழு வித்யாதரர்கள் இருந்தார்கள். இவர்கள் எழுவருக்கும் சேர்ந்து விண்ணில் செல்லும்போது ஒரு பேரழகியாகிய கந்தர்வ கன்னியைப் பார்த்து காமம் கொண்டனர். அவள் பெயர் சுருதி. உள்ளத்தால் எழுவருமே அவளை புணர்ந்தனர். அவர்களின் கனவுகளில் அவள் தோன்றி எழுவருக்கும் மனைவியாக ஆனாள். அவர்கள் எழுவரும் அவளை மணக்கும்படி தனித்தனியாக அவளிடம் கேட்டார்கள். எவரை மணப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. எழுவரையும் அவள் தன் கனவில் புணர்ந்திருந்தாள்.
ஆகவே அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். சிவன் அவள் முன் தோன்றியதும் தான் செய்யவேண்டியது என்ன என்று அவள் கேட்டாள். அவள் எழுவருக்கும் மனைவியாக ஆவதுதான் ஒரே வழி என்று சிவன் சொன்னார். ஒருவருடன் இருக்கையில் இன்னொருவரை எண்ணாமலிருந்தாலே அவள் கற்பு தவறாதவள் ஆவாள் என்றார். அதன்படி அவள் எழுவரையும் மணந்துகொண்டாள். ஒவ்வொருவருக்காகவும் அவள் ஒவ்வொரு உருவத்தையும் எடுத்துக் கொண்டாள்.
ஆனால் ஒருபோதும் அவள் ஒருவருடன் இருக்கையில் இன்னொருவரை எண்ணாமல் இருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து கொண்ட வேறுபாடே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஷட்ஜனுடன் இருக்கவேண்டும் என்றால் ரிஷபனை எண்ணி அவனிடமிருந்து அவனை வேறுபடுத்தியே ஆகவேண்டியிருந்தது. ரிஷபனையோ காந்தாரனிடமிருந்து வேறுபடுத்த வேண்டியிருந்தது. ஆகவே ஒருவனிடம் கூடும்போது எழுவர் மீதும் அவள் உள்ளம் தாவிச் சென்றுகொண்டே இருந்தது. அவர்களும் அவளை உணர்ந்து கொண்டனர். அவர்கள் எழுவரையும் இணைப்பவள் அவளே என்று அறிந்தனர். அவர்கள் அவளைப் புணர்ந்து எழுபத்திரண்டு குழந்தைகளை ஈன்றனர்.
அந்தக் கதையை சிவன் கைலாயமலையில் வைத்து பார்வதியிடம் சொன்னார். கதை முடிந்தபின் “தேவி, இந்தக் கேள்விக்கு பதில் சொல். சுருதி கற்பு நெறி கொண்டவளா இல்லையா?” என்றார். “சரியான பதிலைச் சொல்வாய் என்றால் கீழே மண்ணுலகில் மானசசரோவரத்தில் ஒரு வாடாத பொற்தாமரை மலரும்”
கதை தொடங்கியபோது சிவனின் காலடியில் தாழம்பூ வடிவில் குடியிருப்பவனாகிய புஷ்பதந்தன் என்னும் சிவகணத்தான் அங்கே வந்தான். அவனை வாசலில் காவலுக்கு நின்ற நந்தி தடுத்தார். புஷ்பதந்தன் அவருடன் சண்டையிட்டான். அதன்பின் திரும்பிச் சென்று தாழம்பூ மணமாக மாறினான். உள்ளே ஈசனுடன் இருந்த தேவி “நல்ல மணம்” என்று அதை முகர்ந்தபோது அவன் அவளருகே சென்றுவிட்டான். அந்தக் கதையை அவன் முழுமையாகக் கேட்டான்.
சிவனின் கேள்விக்கு பார்வதி “அவள் கற்பிழந்தவள்தான்” என்று பதில் சொன்னாள்.
“அவ்வாறென்றால் அவள் ஏன் கற்பிழந்த பெண்களுக்கான இருண்ட உலகை அடையவில்லை? கந்தர்வப் பெண்களுக்குரிய ஒளியும் அழகும் உடையவளாகவே நீடிக்கிறாளே?” என்றார் சிவன்.
“அவள் கற்பிழந்திருந்தாலும் ஏழு கணவர்களையும் ஒருங்கிணைப்பவளாக இருக்கிறாள். அவள் இல்லையென்றால் அவர்கள் சிதறி அழிவார்கள். விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருங்கே நீர் உண்ணும் ஊருணிக்கு அந்தக் கொடையாலேயே பேரழகு உருவாகிறது” என்று பார்வதி சொன்னாள்.
ஆனால் அவள் குனிந்து பார்த்தபோது மானசசரோவரத்தில் பொன்மலர் பூத்திருக்கவில்லை. சிவன் புன்னகைத்தார். மனம் வாடிய பார்வதி துயருடன் திரும்பிச் சென்றாள்.
அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த புஷ்பதந்தன் தன் மனைவி ஜயையிடம் அந்தக் கதையைச் சொன்னான். “அன்புக்குரியவளே நீ சொல், உன் பதில் என்ன?”
ஜயை நீண்டகாலம் முன்பு மண்ணில் ஒரு மாபெரும் கிழங்காக விளைந்தவள். அந்தக் கிழங்கைக் கண்டு திகைத்த மலைக்குடிகள் அது இறைவனுக்குரியது என்று படைத்தார்கள். அது கைலாயத்தில் ஒரு பெண் பூதகணமாக மாறியது. புஷ்பதந்தனுக்கு மனைவியாகியது.
ஜயை புன்னகைத்து “எனக்கு விண்ணுலகின் நெறிகள் என்ன என்று தெரியாது. ஆனால் நான் முளைத்தெழுந்த பாதாளத்தின் அறம் என்ன என்று தெரியும். அதை நான் சொல்லமுடியும்” என்றாள்.
“சொல்” என்றான் புஷ்பந்தந்தன்.
“அவள் கற்புள்ளவள்தான். ஏனென்றால் அவள் மக்களைப் பெற்றுப் பெருகினாள். பெருங்கற்பு என்பது பேறுடைமைதான்” என்றாள் ஜயை.
மறுநாள் மானசரோவரில் நீராடுவதற்காகச் சென்ற பார்வதி அங்கே ஒரு பொற்தாமரை விரிந்து ஒளிவிடுவதைக் கண்டாள். அந்த பொற்தாமரையிடம் அவள் “நீ யார்?” என்று கேட்டாள்.
“என் பெயர் கீதை” என்று அவள் சொன்னாள் “நேற்றிரவு கைலாயத்தில் ஒரு பெண் என் அன்னை சுருதியைப்பற்றி சொன்ன ஓர் உண்மையே நான் ஆக இங்கே மலர்ந்திருக்கிறது. இனி இது மானுடர்க்குரியதாக என்றும் இருக்கும்.”
சீற்றத்துடன் பார்வதி சிவனை நோக்கிச் சென்றாள். தவத்தில் இருந்த சிவனிடம் சென்று மூச்சிரைக்க “நான் பிழையாகச் சொன்னதை திருத்திய பெண் யார்? என்னிடம் மட்டும் சொன்ன அக்கதையை இன்னொருவர் எப்படி அறிந்தனர்? உங்களுக்கு இன்னொரு மனைவி உண்டு என்று நானறிந்தது உண்மையா?” என்றாள்.
சிவன் சிரித்து “சுருதி கற்புள்ளவளா என்ற கேள்விக்கு நேற்று பதில் சொன்னவர் யார்?” என்றார்.
அருகே நின்ற ஜயை “அது என்னிடம் என் கணவர் கேட்ட கேள்வி… நான் அதற்குப் பதில் சொன்னேன்” என்றாள்.
“அதுதான் அங்கே பொன்மலராக விரிந்தது” என்றார் சிவன்.
“அந்தக்கதையை இவள் கணவன் எப்படி அறிந்தான்? அவர் எப்படி உள்ளே வந்தான்?” என்று பார்வதி சீறினாள்.
அங்கே தாழம்பூ வடிவில் இருந்த புஷ்பதந்தன் பணிந்து “தேவி, ஈசன் உங்களுக்குச் சொன்ன கதையை தெரிந்துகொண்டாக வேண்டும் என்னும் ஆவலில் தாழம்பூவின் மணமாக அருகே வந்தேன். உங்களிடம் அவர் சொன்ன கதையைக் கேட்டேன்” என்றான்.
பார்வதி மேலும் கோபம் கொண்டாள். ”கணவனும் மனைவியும் இருக்கும் இடத்தில் எப்படி அந்நியனாகிய நீ நுழையலாம்” என்று அவனை கண்டித்தாள்.
“பூதகணங்கள் இறைவனின் பாதத்தின் தூசுத்துகள்கள்… ஆகவே எப்போதும் உடனிருக்கலாம்” என்று புஷ்பதந்தன் சொன்னான்.
அதைப் பார்வதி ஏற்றுக்கொள்ளவில்லை. ”நீ இப்படி இங்கே இறைவன் சொன்ன எத்தனை கதைகளைக் கேட்டாய்?” என்றாள்.
“தேவி, நான் இங்கே சதகோடி கதைகளைக் கேட்டேன்…” என்று புஷ்பதந்தன் சொன்னான். “கதைகளைக் கேட்கும் ஆர்வத்தால்தான் நான் அவற்றைச் செவிகொண்டேன்…”
“அவற்றில் உனக்கு நினைவிருப்பவை எவை?”
“எல்லாமே ஒரு சொல் மறக்காமல் நினைவில் கொண்டிருக்கிறேன்” என்று புஷ்பதந்தன் சொன்னான்.
”மண்ணில் ஐந்து பூதங்களிலும் ஆத்மாவிலும் வாழ்க்கை நிகழ்கிறது. அதில் இருந்து ஒலி மட்டுமே வானை அடைகிறது. மண்ணில் இருந்து விண்ணை அடைபவை கதைகள். விண்ணுலகங்கள் கதைகளால் ஆனவை. இங்கு அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன. நீ கேட்ட கதைகள் மண்ணில் லட்சம் கதைகளாக திகழ்கின்றன. நீ இப்போதே மண்ணில் மானுடனாக பிறப்பாய். அந்த லட்சம் கதைகளையும் கேட்டு அறிவாய்” என்று பார்வதி சாபமிட்டாள்.
புஷ்பதந்தன் அவள் காலடியில் பணிந்து “தேவி, நான் எப்போது திரும்புவேன்?” என்று கேட்டான்.
“நீ கேட்ட அந்த லட்சம் கதைகளையும் முழுக்க அங்கே விட்டுவிட்டால்தான் உனக்கு விடுதலை. உன் கதைகளை முழுக்க ஒரு சொல் விடாமல் கேட்டு, ஒரு சொல் மறக்காமல் நினைவில் வைத்திருப்பவன் ஒருவனைச் சந்தித்தால் அவனிடம் அனைத்தையும் சொல். உன் அகம் முழுமையாக ஒழியும்போது நீ வெறும் ஒலியாக மாறுவாய். பஞ்சபூதங்களாலான உடலை அங்கே விட்டு மந்திரவடிவமாக விண்ணில் எழுந்து இங்கே வருவாய்” என்று பார்வதி சொன்னாள்.
“நான் இந்த விந்தியமலைக் காட்டில் இந்த நிழல்கள் சூழ இருந்துகொண்டிருக்கையில் ஒருநாள் ஒரு முதியவர் தள்ளாடிய நடையுடன் வந்து இந்த மரத்தடியில் அமர்ந்தார்” என்று கானபூதி தொடர்ந்து அந்தக்கதையைச் சொன்னது.
நான் அவரை பயமுறுத்துவதற்காக அவர் முன் ஒரு நிழலாக அசைந்தேன். மரத்தில் ஒரு புடைப்பாக எழுந்தேன். பைசாசிக மொழியில் உறுமினேன். களைத்துத் தூங்கிக்கொண்டிருந்த அவர் விழித்தெழுந்து என்னைப் பார்த்தார். வழக்கமாக பயணிகள் அஞ்சி நடுங்கி எழுந்து ஓடுவதையே கண்டிருக்கிறேன். அவர் புன்னகையுடன் “நீ சொன்ன இந்தச் சொற்களில் நான்கை நான் விஜயபுரியில், கிரிவல்லபன் என்னும் வணிகன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவனுக்கு பேய்பிடித்திருந்தது. நிழல்கள் அவனுள் இருந்து பேசிக்கொண்டிருந்தன என்றனர். அப்படியென்றால் நீ அந்த நிழல்களில் ஒருவனா?” என்று கேட்டார்.
நான் அவர் முன் உருக்கொண்டு “ஆம், பைசாசிகனாகிய என் பெயர் கானபூதி” என்றேன். “நான் என் நிழல்படையுடன் வாழும் காடு இது. இங்கே நாங்கள் வைதிகர்கள் வருவதை விரும்புவதில்லை. அவர்களைக் கொன்று எலும்புகளை வைத்து தாயம் விளையாடுவது எங்கள் வழக்கம்.”
“நான் வைதிகன் அல்ல” என்று அவர் சொன்னார்.
“அப்படியென்றால் நீங்கள் யார்? பார்க்க அந்தணர் போலிருக்கிறீர்கள்” என்று நான் சொன்னேன். “நீங்கள் அந்தணர்தான். உயிருக்காக பொய் சொல்கிறீர்கள். நான் அதை நம்பப் போவதில்லை…”
என் நிழல்படைகள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன. அவை வெறித்த கண்களும், இளித்த வாயுமாக நடனமிட்டன.
“என் பெயர் வரருசி…” என்று அவர் சொன்னார். “என் கதையைச் சொல்கிறேன் நான் அந்தணனா என்று நீ சொல்லவேண்டும். நீ நான் அந்தணனே என்று நிறுவினால் நான் என் உடலை உனக்கு அளிக்கிறேன்… நாம் இந்த ஆட்டத்தை ஆடுவோம்.”
கதைகளை வைத்து ஆடுவதில் இருந்து என்னால் தப்பவே முடியாது. ஆகவே நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். அவர் தன் கையை மண்ணில் வைத்தார். நான் என் கையை மண்ணில் வைத்தேன்.
”நான் விண்ணில், புஷ்பதந்தன் என்னும் சிவகணமாக இருந்து சாபத்தால் மண்ணுக்கு வந்தேன் என்று என் ஜாதகத்தைக் கணித்த சமீகன் என்னும் சோதிடன் சொன்னான். அந்தக் கதையைச் சொல்கிறேன்” என்று அவர் சொல்லத் தொடங்கினார்.
நான் கௌசாம்பி என்னும் நகரில் சோமதத்தன் என்னும் பிராமணனின் மகனாகப் பிறந்தேன். என் தாய் வசுதத்தை. ஆனால் என் தந்தைக்கு ஒரு சாபம் இருந்தது. அவர் பிராமணனாகப் பிறந்தவர். காட்டில் அவர் வேதம் பயிலும்போது தொலைவில் ஒரு வேடன் மானிறைச்சியைச் சுடும் வாசனை வந்தது. கடும் உண்ணாநோன்பிருந்து வேதம் கற்றுக்கொண்டிருந்த அவருடைய நாக்கில் எச்சில் ஊறி அவருடைய வேதச் சொல் திரிபடைந்தது. அதை அவருடைய ஆசிரியர் கண்டார்.
என் தந்தை வேதம் கற்பதில் முதல் மாணவராக திகழ்ந்தார். ஒருமுறை கேட்டதை மறுமுறை அப்படியே சொல்லும் ஆற்றல்கொண்டிருந்த அவரை ஆசிரியர் மிக விரும்பினார். ஆனாலும் தவறு நிகழ்ந்ததனால் சீற்றம்கொண்ட ஆசிரியர் ”நீ இனிமேல் வளர்பிறைக் காலத்தில் வேடனாகவும் தேய்பிறைநாட்களில் அந்தணனாகவும் இருப்பாய். வேடனாக உன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும்போது ஒரு சொல் எஞ்சாமல் வேதங்களை மறப்பாய். அந்தணனாக இருக்கும்போது வேடனாக வாழ்ந்ததன் பாவங்கள் உன்னை தொடராது” என்று சாபம் அளித்தார்.
அது சாபம் அல்ல, வரம். என் தந்தை தன் விருப்பங்களை எல்லாம் வேடனாக நிறைவுசெய்துகொண்டார். ஊன் உண்டார், காட்டில் அலைந்தார், விரும்பிய பெண்களை புணர்ந்தார். ஆகவே அந்தணனாக இருந்தபோது அவருக்கு எந்த சலனமும் இல்லாமல் உள்ளத்தைக் குவிக்கமுடிந்தது. ஆகவே அவர் நிகரற்ற வேத பண்டிதராக விளங்கினார். அவரை அரசர்கள் கொண்டாடினார்கள். வேதசபைகளில் அவரைக் கண்டு அனைவரும் வணங்கினார்கள். அவர் அக்னிசிகன் என்னும் வேடனாகக் காட்டில் பாதிநாட்கள் அலைவதை எவரும் அறிந்திருக்கவில்லை.
காட்டில் அலைகையில் என் தந்தை அங்கே ஒரு காட்டுப்பெண்ணைப் பார்த்து அவளை ராட்சசத மணமுறைப்படி தூக்கிச் சென்று புணர்ந்தார். அவள் பெயர் கராளி. ஆனால் அவள் வசுதத்தை என்ற பெயருள்ள ஒரு அந்தண முனிவரின் மகள். அவருடைய அன்றாட வேள்விக்கான சமித்துகளை சேகரிக்க காட்டுக்குள் சென்றவள் அங்கே இரு மான்கள் புணர்வதை வேடிக்கை பார்த்து நேரம் மறந்து நின்றுவிட்டாள். அவள் திரும்பி வந்தபோது வேள்வி தாமதமானதலால் சினந்த தந்தை அவளை ஓராண்டுக் காலம் காட்டுப்பெண்ணாக அலையும்படி சாபம் இட்டார். அதன்படி அவள் அங்கிருந்த காட்டுமக்களுடன் சென்று அவர்களின் குடிலில் தங்கி வாழ்ந்து வந்தாள். கனிகளும் கிழங்குகளும் சேகரிக்க அவள் காட்டுக்குள் வந்தபோதுதான் என் தந்தை அவளைப் பார்த்தார்.
என் தாய் காட்டுப்பெண்ணாக வாழ்வதன் கடைசிநாளில் அவளை என் தந்தை புணர்ந்தார். அவள் தன் தந்தையிடம் திரும்பிச் சென்று அந்தணப்பெண்ணாக வாழத் தொடங்கியதும் என்னைக் கருவுற்றாள். குழந்தையுடன் அவள் காம்பில்யத்தில் வைதிகராக திகழ்ந்த என் தந்தையைத் தேடிவந்தாள். குழந்தையையும் தன்னையும் ஏற்கும்படி கோரினாள். அவள் அந்தணப் பெண்ணாகவும் என் தந்தை அந்தணராகவும் இருந்தமையால் அவளை அவர் மணந்துகொண்டார். நான் அந்தணனாக காம்பில்யத்தில் வளர்ந்தேன். வேதங்களையும் வேதாங்கங்களையும் கற்றுக்கொண்டேன். என் ஏழுவயதில் ஒரே ஒருமுறை நான்கு வேதங்களையும் ஓதக்கேட்டு முழுக்க அப்படியே மனப்பாடம் செய்தேன். ஆகவே மகாவைதிகன் என அறியப்பட்டேன்.
வேடனாக காட்டுக்குச் சென்ற என் தந்தை அங்கே புலியால் கொல்லப்பட்டார். நான் என் தாயுடன் வளர்ந்தேன். காம்பில்யத்தில் புகழ்பெற்ற வைதிகனாகவும், அரச சபைகளில் மதிக்கப்படுபவனாகவும் திகழ்ந்தேன். உரிய ஆசிரியர்களைத் தேடி அலைந்து அறுபத்துமூன்று கலைகளையும் கற்றுக்கொண்டேன். உபவர்ஷன் என்னும் பிராமணனின் மகளாகிய உபகோசை என்னும் பெண்ணை முதலில் மணந்தேன். அவளில் எனக்கு விதேகன், வித்யவான், வித்யாதீர்த்தன், வித்யாசாகரன், வித்யுத்ப்ரபன், வித்யுதாக்ஷன், வித்யுமாலி, வித்யுந்தரன், வித்யோதன், விதாதா, வினதன், விந்த்யன் என பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர்.
அதன்பின் நான் தெற்கே சென்றேன். கேரளத்து நிலத்தில் ஆதி என்னும் சண்டாள குலத்துப் பெண்ணை மணந்தேன். அவளிலும் எனக்கு பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மேழத்தூர் அக்னிஹோத்ரி, ரஜகன், உளியனூர் பெருந்தச்சன், வாயில்லாக்குந்நில் அப்பன், வள்ளுவன், காரய்க்கல் மாதன், வடுதலையன், உப்புகூற்றன், பாணன், நாறாணத்து பிராந்தன், அகவூர்சாத்தன், பாக்கனார் என்னும் பன்னிருவரின் வழிவந்தவர்கள் அங்கே பன்னிரு குலங்களாகப் பெருகியிருக்கின்றனர். பறைச்சிபெற்ற பன்னிருகுலத்தார் என அறியப்படுகிறார்கள்.
உபகோசையில் நான் பெற்ற பன்னிருவரில் பதினொருவர் வைதிகர்கள், விதேகன் என்னும் முதல்மைந்தன் வேடன். ஆதியில் நான் பெற்ற பன்னிருவரில் முதல்மைந்தன் வைதிகனாகிய மேழத்தூர் அக்னிஹோத்ரி. இன்று அவன் குலம்தான் அங்கே வேதங்களுக்கு அதிகாரம் கொண்டிருக்கிறது. எஞ்சியோர் வேடமிட்டு ஆடுதல், தச்சு, வேட்டை என எல்லா தொழிலும் செய்கிறார்கள்” என்று வரருசி சொன்னார். “இப்போது சொல், நான் பிராமணனா அல்லவா?”
நான் திகைத்து அமர்ந்திருந்தேன். முடிவற்ற கதைகளைக் கொண்ட என்னால் அந்தக் விடுகதைக்குப் பதில் சொல்லமுடியவில்லை. அவர் புன்னகையுடன் “சொல்” என்றார்.
நான் கையை விலக்கிக்கொண்டு “எனக்குத் தெரியவில்லை, தோற்றேன்” என்றேன்.
அவர் தன் கையை விலக்காமல் புன்னகைத்து “நான் கங்கை, யமுனை, கோதாவரி சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்று ஏழு பேராறுகள் ஓடும் முழு நிலத்தையும் நடந்தே அறிந்தேன். அங்கே நிறைந்து நின்ற வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொண்டேன். என்னிடம் இந்த உலகம் நிகழ்வதைப் பற்றிய ஒருலட்சம் கதைகள் உள்ளன. அவற்றை நான் உனக்குச் சொல்கிறேன். அக்கதைகளில் ஏதோ ஒன்றில் நீ கேட்டதற்குப் பதில் உண்டு” என்றார். “ஆனால் ஒருமுறை சொன்ன கதையை திரும்பச் சொல்ல மாட்டேன். நடுவே கதையை நிறுத்தினால் மீண்டும் தொடங்கவும் மாட்டேன்.”
“எனக்கு வேறு வழியில்லை…” என்று நான் சொன்னேன்.
அவர் கதைகளைச் சொல்லத் தொடங்கினார். நான் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொல்லி முடித்தபோது என் ஐயம் தீர்ந்திருந்தது. அவர் கையை எடுத்துக் கொண்டு “இறுதிச் சொல் எப்போதும் ஓம்” என்றார்.
“என்ன சொன்னார்? அவர் என்ன சொன்னார்?” என்று நிழல்கள் என் காதருகே கிசுகிசுத்தன.
“அது இந்த ஒரு லட்சம் கதைகளில் ஒரு வரி அல்ல, இந்த ஒரு லட்சம் கதைகளின் ஒட்டுமொத்தம்” என்று நான் சொன்னேன்.
அவர் தன் பொட்டலத்துடன் எழுந்துகொண்டார். “நான் இந்தக் கதைகளை எல்லாம் ஒரு சொல் மிச்சமில்லாமல் எவரிடமேனும் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆணை. ஒரு சொல் தவறவிடாமல் கேட்கும் ஒருவரிடம் மட்டுமே சொல்லவும் வேண்டும். இதோ அந்த தேடல் முடிவடைந்தது. இனி என்னிடம் கதைகள் இல்லை” என்றார்.
”ஆனால் அத்தனை கதைகளும் என்னிடம் வந்து நிறைந்துவிட்டன. சூலசிரஸ் சொன்ன கதைகளுடன் இங்கே நான் வாழத்தொடங்கியபோது வந்துசேர்ந்த கதைகளும் இணைந்து என்னிடம் இப்போது முடிவில்லாத கதைகள் உள்ளன. நான் எப்படி இவற்றில் இருந்து விடுபடுவேன்?”
அவர் “அதுவும் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது” என்றார் வரருசி. “புஷ்பதந்தன் பார்வதியால் சாபமிடப்பட்டபோது அவனுடைய நண்பனாகிய மால்யவான் அவனுக்காக பரிந்து பேசினான். தேவி, காலடிப் புழுதிக்கு தனக்கான பாதை என ஒன்று உண்டா என்று அவன் கேட்டான். தேவி சினம்கொண்டு அவனையும் மண்ணில் பிறக்கும்படிச் சாபமிட்டாள். அவன் உன்னைத் தேடிவருவான். இதே ஐயத்தை உன்னிடம் அவன் கேட்பான். அவனிடம் இக்கதைகளைச் சொல்….”
நான் “நான் காத்திருக்கிறேன்” என்றேன். “காத்திருப்பது ஒன்றையே நான் அறிந்திருக்கிறேன்.”
“காத்திருக்கும்போது சொல்லப்பட்டவைதான் கதைகள். கதைகள் சொல்பவர்கள் அனைவருமே காத்திருப்பவர்கள்தான்” என்றபின் வரருசி கிளம்பிச் சென்றார்.
சுவையை வரமாகப் பெற்றவர், சொற்சுவையிலும் கதைச்சுவையிலும் திளைத்தவர். அனைத்தையும் கைவிட்டுவிட்டு எடையற்றவராக நடந்து பாதராணயரின் பதரி தவநிலையத்தை அடைந்தார். அங்கே தன் தவத்தால் தேவியை நீலநிறமான காளி வடிவில் அக்னியில் வரவழைத்தார். தன் உடலை அவளுக்கு உண்பதற்காக அளித்தார். அவர் உடல் அழிந்ததும் தேவி இளஞ்சிவப்பு நிறமான பார்வதியாகத் தோன்றினாள். அவளுக்கு தன் ஆத்மாவை அவர் அளித்தார். தேவி அவரை குட்டியானையின் தந்தம்போன்ற அழகான தாழைமடலாக ஆக்கி கையிலெடுத்துக்கொண்டாள். அவர் விண்ணுலகுக்கு திரும்பிச் சென்றார்.
“நான் மீண்டும் காத்திருக்கலானேன். என்னைத் தேடி மால்யவானின் மானுடப்பிறப்பு வந்து இங்கே அமர்வது வரை” என்று கானபூதி சொன்னது. “அது இரண்டாவது கதை”
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

