காவியம் – 41
வெற்றித்தூண், பைத்தான், சாதவாகனர் காலம் பொயு 4கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு பைத்தான் நகரின் மூடிய காட்டுக்குள் அமர்ந்திருந்த என்னிடம் சொன்னது. “என் இடது கையை பொத்தியபடி நான் இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்கினேன். என் முன் சுத்யும்னன் கண்களை இமைக்காமல் கேட்டு அமர்ந்திருந்தான். இது நான் அவனுக்குச் சொன்ன கதை.”
சமர்கள் இரவில் விழித்திருக்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை முறை. அவர்களை பிறர் வவ்வால்கள் என்று அழைத்தனர். வவ்வால்கள் பகலில் கண்ணுக்குப்படுவது அபசகுனம். வவ்வால்களும் பகலில் திகைத்து திசை மறந்து அங்குமிங்கும் முட்டிக்கொண்டு அலைக்கழியும். காகங்களால் துரத்திச் செல்லப்பட்டு சிறகு கிழிக்கப்பட்டு தரையில் விழுந்து துடிக்கும். காகங்கள் அவற்றை சூழ்ந்து கூச்சலிட்டு கொத்தி உண்ணும். சிறு குழந்தைகளுக்குரிய மின்னும் கண்களுடன், சிறு பற்களுடன், அவை கிரீச்சிட்டு துடித்து சாகும்போது கூட சிறுகுழந்தைகளுக்குரிய என்ன நிகழ்கிறதென்று தெரியாத பதைப்பு அவற்றின் முகத்தில் இருக்கும்.
இருநூறாண்டுகளுக்கு முன் அந்நகரை ஆண்ட ரஜதபுத்ர சதகர்ணியின் ஆணைப்படி இரவில் நகர் அடங்குவதற்கான மணிகள் ஒலித்த பிறகே சமர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளிக்கிளம்ப வேண்டும். விடிவெள்ளிக்கு முன்பு மீண்டும் அதே மணிகள் அதே போல ஒலிக்கும்போது அவர்கள் தங்கள் குடில்களுக்கு திரும்பியிருக்க வேண்டும். அதன் பிறகு நகரத்தில் தென்படும் சமர் உடனடியாக இழுத்து செல்லப்பட்டு நகரின் தெற்குப்பக்கம் இருந்த முள்காட்டில் கழுவிலேற்றப்படுவான்.
சமர் சாதியின் பெண்களும் குழந்தைகளும் கூட அந்த ஆணைக்கு முற்றாக கட்டுப்பட்டனர். ஆகவே அந்நகரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க சமர்கள் என்பவர்களைக் கண்ணால் பார்த்ததே இல்லை. அவர்கள் அந்நகரின் வடமேற்குச் சரிவில் கோதாவரியின் கரையில் இருந்த அரைச்சதுப்பு நிலத்தில் கோரைப்புற்களுக்கு நடுவே கோரைப்புற்களால் கட்டப்பட்ட இடையளவே உயரம் கொண்ட சிறுகுடில்களில் வாழ்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்பகுதியை நோக்குவதே தீட்டு என்று நிறுவப்பட்டிருந்தது.
சமர்கள் இரவெல்லாம் நகரில் உள்ள குப்பைகளையும் கழிவுகளையும் அள்ளி தூய்மை செய்தனர். அந்த மலினங்களை தலையில் சுமந்துகொண்டு சென்று தங்கள் சதுப்பு நிலத்தில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழிகளில் புதைத்தனர். அதன் பிறகு அங்கேயே தீமூட்டி தாங்கள் பிடித்த எலிகளைச் சுட்டு உண்டனர் அவர்களுக்கு நகரின் வெவ்வேறு இடங்களில் உப்பு தானியம் போன்றவை வைக்கப்பட்டிருக்கும், ஆண்டில் ஓரிருமுறை பழைய ஆடைகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய இடங்கள் தலைமுறைகளாக வகுக்கப்பட்டிருந்தன.
அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவர்கள் தங்கள் இடங்களில் இருளிலேயே சமைத்து உண்டனர். இரவில் நெருப்பு மூட்டி அதைச் சூழ்ந்து அமர்ந்து சிறிய பறைகளை விரல்களால் மீட்டி தாங்கள் வழிவழியாகப் பாடி வந்த கதையைப் பாடிக் கேட்டனர். அவர்கள் அந்த இருட்டிலிருந்தும், அழுக்கிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழியாக இருந்தது பாடல்கள்தான்.
முந்நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் தங்கள் தொன்மையான நிலங்களிலிருந்து கிளம்பி பிரதிஷ்டானபுரிக்கு வந்திருந்தனர். அவர்களின் நிலங்கள் தண்டகாரண்யத்துக்கு அப்பால், சர்மாவதி ஆற்றின் கரைகளில் அமைந்திருந்தன. அங்கே வேட்டையாடியும், மீன் பிடித்தும் அவர்கள் பெருகினர். கல்மாலைகளை அணிந்துகொண்டும், மலர்களாலான தலையணிகளைச் சூடிக்கொண்டும் வசந்தத்தில் மகிழ்ந்து கொண்டாடினர்ர். தங்கள் கைகளால் மென்மையான மரங்களைக் குடைந்து செய்த படகுகளில் சர்மாவதியில் மீன் பிடித்தனர். முதலைகளைக் கொன்று அந்தத் தோல்களை உரித்து பதப்படுத்தி ஆடையாக்கிக் கொண்டனர். மரத்தாலான மார்புக்கவசங்களை அணிந்துகொண்டு ஒருவருடன் ஒருவர் மற்போரிட்டனர்.
அவர்களின் காடுகளில் தேனும் அரக்கும் பிறபொருட்களும் நிரம்பியிருந்தன. சணலையும் மரப்பட்டைகளையும் நீரில் ஊறவைத்து நார்பிரித்து மரவுரி செய்து அவற்றை படகுகளில் வரும் வணிகர்களுக்கு விற்றார்கள் தேனும் அரக்கும் கொம்பும் தோலும் பிற மலைப்பொருட்களும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உப்பையும், கூரிய இரும்பு கத்திகளையும் கொவணிகர்கள் அளித்தார்கள். ஒளிரும் கற்களையும் வணிகர்கள் உப்புக்கு வாங்கிக்கொண்டனர்.
பின்னர் வடக்கே கங்கைக்கரையில் இருந்து படைகள் ஆண்டுதோறும் கிளம்பி அவர்களின் நிலங்களின்மேல் பரவின. எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கொன்று வீழ்த்தி பெண்களையும் ஆண்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு சென்றனர். அதன்பின் வந்த படைகள் அந்நிலங்களிலேயே தங்கினர். காடுகளை எரித்து அழித்து மரங்களை வெட்டி அகற்றி விளைநிலங்களாக்கினர். காட்டை அழித்து புல்வெளிகளை உருவாக்கி அங்கே மந்தைகளாக மாடுகளை வளர்க்கலாயினர். மந்தை பெருகப்பெருக அவர்களுக்கு மேலும் மேலும் நிலம் தேவைப்பட்டது
மலைக்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பழைய நிலங்களை கைவிட்டு பின்நகர்ந்து கொண்டே இருந்தனர். பின்நகர இடமில்லாதபோது அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். போரில் முழுமையான அழிவு மட்டுமே மிஞ்சும் என்று கண்டபோது அங்கிருந்து கிளம்பி புதிய நிலங்களைத் தேடி அலையத் தொடங்கினார்கள். சிறு சிறு குழுக்களாக பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் கூட்டிக்கொண்டு அவர்கள் வாழ்விற்கான இடங்களைத் தேடிச் சென்றனர். தங்கள் பழையநிலங்களில் இருந்து அவர்கள் பாடல்களை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
காடுகளில் அவர்களால் நுழைய முடியவில்லை. அங்கு ஏற்கனவே நிலைகொண்டுவிட்ட பழங்குடிகள் அம்புகளாலும் கண்ணிகளாலும் தங்கள் எல்லைகளை மூர்க்கமாகக் காத்து நின்றிருந்தனர். அவர்கள் நிலங்களுக்குள் நுழைய முற்பட்டபோது பல குழுக்கள் கொன்றழிக்கப்பட்டனர். விளைநிலங்களாக்கப்பட்ட பகுதிகள் எங்கும் அவர்கள் தலைகாட்ட முடியவில்லை. அக்கணமே அவர்கள் பிடிக்கப்பட்டு மூக்கும் செவிகளும் அறுக்கப்பட்டு அடிமைகளாகக் கொள்ளப்பட்டனர். பல ஊர்களில் பிடிபட்டவர்களின் நாக்கு அறுத்து மொழியற்றவர்களாக ஆக்கி விலங்குகள் போல விற்றனர்.
ஆகவே மீண்டும் மீண்டும் புதிய நிலங்களைத் தேடிச் சென்ற அவர்கள் நகரங்களிலேயே தங்களுக்கு இடம் இருப்பதைக் கண்டடைந்தனர். உஜ்ஜயினியிலும் காம்பில்யத்திலும் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. அந்நகரங்கள். வளர்ந்து விரிந்து கொண்டிருந்தன. அவற்றை கட்டி எழுப்பவும் தூய்மைப்படுத்தவும் பெருமளவுக்கு கைகள் தேவைப்பட்டன.
அந்நகர்களில் சமர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வலுவான உடல் கொண்டவர்கள் அல்ல. சிறிய கரிய உடலில் கூடான நெஞ்சும்,சற்றே முன்வளைந்த தோள்களும் கொண்டிருந்தனர். பரவிய மூக்கும் சிறிய கண்களும் கொண்ட முகம். கற்களைத் தூக்கி நகரங்களைக் கட்டி எழுப்பும் பணிகளுக்கு அவர்கள் உதவமாட்டார்கள் எனபதனால் அவர்கள் தூய்மைப்பணிகளுக்கு அமர்த்தப்பட்டனர்.
ஏற்கனவே அங்கு திரண்டிருந்த தூய்மைப்படுத்தும் தொழில் செய்தவர்களை அங்குள்ளோர் சமர்கள் என்றனர். புதிதாக வந்தவர்களை அவர்களுடன் இணைத்துக் கொண்டு அப்பெயரை அவர்களுக்கும் வழங்கினார்கள்.நகரங்களில் சமர்கள் தங்கள் நினைவுகளிலிருந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் இழந்தனர். பகல் வெளிச்சம் என்பதையே மறந்தனர். அவர்களின் கண்கள் ஒளியை தாளமுடியாதவை ஆயின. அவர்களின் தோல் வெளிறி, புண்களும் தேமல்களும் கொண்டதாக ஆயிற்று. அவர்களின் விரலிடுக்குகளும் வாய்முனைகளும் வெந்திருந்தன. அவர்களின் உடலில் இருந்து அழுகும் மாமிசத்தின் வாடை எழுந்தது.
எனினும் அவர்கள் அங்கே வாழ்ந்தனர். ஏனென்றால் சாகாமல் உயிர் வாழ முடியும் என்றாயிற்று. குழந்தைகள் உணவு உண்ணமுடியும் என்றாயிற்று .அவர்கள் இரவுக்குரியவர்கள் என தங்களைச் சொல்லிக்கொண்டனர். நிசாசரர் என்னும் பெயர் நூல்களில் அவர்களுக்கு அமைந்தது. கராளர் என்று உள்ளூரில் சொன்னார்கள். அவர்கள் கராளி, சியாமை, பைரவன், காளராத்ரி போன்று இரவுக்கான தெய்வங்களை உருவாக்கிக்கொண்டனர். இரவுக்கான களியாட்டுகளும் பிறந்து வந்தன.
சமர்களின் மொழியில் ஒவ்வொன்றுக்கும் வேறு பெயர்கள் இருந்தன. நாள் எனும்போது அவர்கள் இரவைக் குறித்தனர். ஒளி எனும்போது தீயை. நிழல்நாள் என்றால் பௌர்ணமி. பிற நாட்களில் எப்போதுமே அவர்கள் தங்கள் நிழல்களுடன் ஆட முடிந்ததில்லை. இரவுகளில் பிரதிஷ்டானபுரியில் ஒளி இருப்பதில்லை. மாளிகைகளின் உப்பரிகைகளில் மட்டும் சிறு விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கும். கோட்டைகளின் முகப்பில் பந்தங்கள் எரியும். நகரத்தெருக்கள் முற்றிலும் இருண்டு இருக்கும் அவர்கள் அந்த இருளுக்குள் நிழல்கள் போல் வேலை பார்த்தாக வேண்டும். நிழல்கள் என்று அவர்களை பிறர் குறிப்பிட்டபோது அவர்கள் தங்களை அசைபவர்கள் என்று சொல்லிக்கொண்டனர். அவர்கள் ஒருவகையான பைசாகர்கள் என்றும், இறந்த மனிதர்களை அவர்கள் உண்கிறார்கள் என்றும் பிரதிஷ்டானபுரியில் மக்கள் நம்பினார்கள். அவர்களில் ஒருவரை கண்ணால் பார்த்தாலே நோயுறுவது உறுதி என்று சொல்லப்பட்டது.
அன்று காலை கூர்மன் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் பிரதிஷ்டானபுரியின் தெற்குப் பெருவீதியைத் தூய்மை செய்வதற்குச் சென்றான். தலைமுறைகளாக அவர்கள் செய்துவந்த பணி அது. அவனுடன் அப்பகுதிக்கு பொறுப்பான மேலும் எட்டு குடும்பத்தினர் சேர்ந்து கொண்டார்கள். விரிந்த சாலையின் ஓரத்தில் வட்டமாக அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டார்கள். பொறுக்கி வைத்திருந்த பாக்குத் துண்டுகளை வாயிலிட்டு மென்றபடி துடைப்பங்களுடன் பணிகளுக்கு சென்றனர்.
கூர்மனிடம் அவன் தோழன் சப்தன் ”மீண்டும் வெற்றித்தூண் சாய்ந்துவிட்டது” என்றான். அது கூர்மனுக்கு ஒரு மெல்லிய நடுக்கத்தை அளித்தது. எந்த வகையிலும் அவனுடன் தொடர்புள்ளது அல்ல அது. அவன் அந்தத் தூணை அதற்கு முன் பார்த்ததும் இல்லை. அப்பகுதியைத் தூய்மை செய்பவர்கள் அதை அவனிடம் சொல்லி அவன் கற்பனை செய்திருந்ததுதான். அரசர் சூர்யபுத்ர சதகர்ணி விந்திய மலை கடந்து சென்று தட்சிணத்தை வென்றதன் பொருட்டு நிலை நிறுத்தப்படவிருந்த வெற்றித்தூண் அது. நிகரற்ற தூணாக அது அமையவேண்டும் என அரசர் எண்ணினார்.
அதற்கான கொள்கையை அவருடைய சிற்பிகள் அவரது அரச குருவிடம் இருந்து பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் விந்திய மலை மேலேறி அதற்கான கருங்கல்லை கண்டடைந்தனர். அங்கு அந்தக்கல் கோடு வரையப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. கோதாவரியின் நீர்ப்பெருக்கினூடாக தெப்பங்களில் அது இட்டு வரப்பட்டது. வரும் வழியிலேயே நான்கு முறை அது வெவ்வேறு இடங்களில் தடுக்கி நின்றது. மூன்று முறை தெப்பம் சரிந்து நீருக்குள் மூழ்கிச் சென்றது. அதை மீட்டு நகருக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியது.
பல காலமாக அதை சிற்பிகள் செதுக்கிக்கொண்டே இருந்தார்கள். அப்பகுதியை தூய்மை செய்த சமர்கள் ஒவ்வொரு முறையும் இரவில் அது எந்த அளவிற்கு செதுக்கப்பட்டது என்று பார்த்தார்கள். சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் மனிதன் ஒருவன் மேலெழுவது போல கல்லிலிருந்து அது புடைத்தெழுகிறது என்று ஒருவன் சொன்னான். அதிலுள்ள சிற்பச்செதுக்குகளை மணலில் வரைந்து அவர்கள் விளக்கினார்கள்.
“அவ்வளவு பெரிய கல்தூண் எப்படி நிற்கமுடியும்?” என்று கூர்மன் கேட்டான்.
“அதில் பாதிப்பகுதி மண்ணுக்குள் தான் இருக்குமாம். எஞ்சியது மட்டும் தான் மேலே இருக்கும் மண்ணுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் நூற்று எட்டு சிற்பங்கள் உள்ளன. அனைத்துமே பூதங்கள், பைசாசர்கள். அவர்களின் இளிப்பும் வெறிப்பும் கொடியதாக இருக்கிறது. மண்ணுக்குள் அதை எப்போதைக்குமாக இறக்கிவிட்டால் எத்தனை ஆண்டுகளாயினும் அந்த பிசாசுச் சிற்பங்கள் வெளிவரப்போவதில்லை. ஆனால் அவை அங்கிருக்கும். நாம் அவற்றைப் பார்க்கவில்லை என்றாலும் அவை நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்று ஒருவன் சொன்னான்.
வெற்றித்தூணின் பணி முடிந்தபிறகு மூன்று மாதங்களுக்கு மேலாக அதை சிற்பிகள் நிலைநிறுத்த முயன்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் அது ஏதேனும் ஒரு பக்கமாகச் சரிந்தது. ஒவ்வொரு முறையும் அதிலுள்ள பிழை என்ன என்று கண்டறிந்து அதை நிறுத்தும் பொறுப்பிலிருந்த சிற்பி தண்டிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் அது பிறிதொரு பக்கமாக சரிந்தது. விழும்போதெல்லாம் ஒரு சில சிற்பிகளை பலிகொண்டது. அங்கே மறைந்த சிற்பிகளின் ஆத்மாக்கள் சுற்றிவருவதாகவும், அவைதான் திரும்ப திரும்ப பலிகொள்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
”அந்த ஆத்மாக்களுக்கு என்ன தேவையென்று கேட்கவேண்டும்,அவை கேட்கும் குருதியை மொத்தமாகக் கொடுத்து அவை நிறைவடையச் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அந்த தூணை நிலைநிறுத்த முடியும்” என்று முதியவராகிய சங்கன் சொன்னார்.
“அந்த தூணை நிலைநிறுத்த தேவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சாதவாகன அரசர்கள் அசுரகுடியில் தோன்றியவர்கள். இவர்களின் பழைய நகரங்களை தேவர்கள் அழித்தனர். இந்நகரமும் ஒருநாள் தேவர்களால் அழிக்கப்படும்” என்று இன்னொருவர் சொன்னார்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்த தூணைப்பற்றிய செய்திகளை பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதை எப்படி நிறுத்துவார்கள் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய அக்கறையாக மாறியது. அதை அவர்கள் நிறுத்தவே போவதில்லை என்று ஒருவன் சொன்னான்.
“இவர்களின் குலமூதாதையர்களாகிய அசுரர்களின் காலத்தில் இதற்கு நூறுமடங்கு பெரிய தூண்கள் நிறுத்தப்பட்டன. இவர்கள் வெறும் மானுடர்கள். அசுரர்களின் குருதி தங்களிடம் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் அதை வெளிக்காட்டுவதற்காகவே இவ்வளவு பெரிய தூணை நிறுத்த முயல்கிறார்கள். இதை ஒருபோதும் அவர்கள் நிறுத்தப்போவதில்லை” என்று கிழவியாகிய சமேலி சொன்னாள்.
ஒவ்வொருநாளும் நகரை கூட்டி குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பும்போதும் அவர்கள் அந்தப்பெரிய தூணைப்பற்றியெ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதுமே அந்நகரின் மாளிகைகள், கோட்டைகள் பற்றியே பேசினார்கள். அரசர்களையும் அரசிகளையும் படைகளையும் பற்றிய தங்கள் கற்பனைகளை விரித்து முன்வைத்தனர். நகரத்தெருக்களில் கிடக்கும் குப்பைகள், புழுதியில் படிந்திருந்த காலடிச்சுவடுகள் ஆகியவற்றில் இருந்தே அவர்கள் அந்த வரலாறுகளை உருவாக்கிக்கொண்டனர். அந்த உரையாடல் அவர்களுக்கு ஒரு நிறைவை அளித்தது. தங்கள் சிறிய வாழ்க்கைக்கு அப்பால் சென்று பெரியவற்றைப் பேசிக்கொள்கிறோம் என்னும் பெருமிதம் எழுந்தது.
அன்று இருள் விலகுவதற்கு முன்னரே அவர்கள் தங்கள் குடில்களை அடைந்து உறங்கிக்கொண்டிருந்தபோது முரசுகள் முழங்கின. அவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தனர். முரசுகள் அங்கே ஒலிக்க வாய்ப்பே இல்லை. அவை தொலைவில் நகரத்தில் ஒலிப்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் எழுந்து வெளிவருவதற்குள் படைவீரர்கள் அப்பகுதியை வளைத்துக்கொண்டனர் அவர்களுடன் வேட்டை நாய்களும் இருந்தன. அவர்களை சுற்றி வளைத்துக்கொண்ட நாய்கள் வெறியுடன் பற்களைக் காட்டி குரைத்தன. அஞ்சி நடுங்கி குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவர்கள் ஒரு சிறு திரளாக வட்டமாக அமர்ந்திருந்தனர்.
படைவீரர்கள் அவர்களை கயிறுகளை வீசி சுருக்குப்போட்டு பிடித்தனர். நூற்றெட்டு சமர் குலத்து ஆண்கள் அவ்வாறு பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒற்றைக்கூட்டமாக சேர்த்துப் பிணைக்கப்பட்டு குதிரை வீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டனர். அலறியபடியும் தடுக்கிவிழுந்து எழுந்தபடியும் அவர்கள் இழுபட்டுச் சென்றனர். நகர எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்கள் மேல் மஞ்சள் நீர் கொட்டப்பட்டு உடல் தூய்மை செய்யப்பட்டது.
அவர்கள் அந்த வெற்றித்தூண் இருந்த பகுதியை சென்றடைந்தனர். அன்று நகரில் எவருமே வெளியே வரக்கூடாது என்று அரசாணை இருந்தது. ஆகவே நகர் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. வெற்றித்தூணின் அருகே ஆபிசாரக் கடன்களைச் செய்யும் பூசகர்கள் பன்னிருவர் நின்றிருந்தனர். நீண்டு இடைவரைத் தொங்கும் சடைக்கற்றைகளும், சடைபிடித்த தாடியும், வெறிஎழுந்த சிவந்த கண்களும் கொண்டவர்கள். புலித்தோல் இடையாடை அணிந்து தோளில் கரடித்தோல் போர்த்தியவர்கள். அவர்களுடன் அவர்களின் உதவியாளர்கள் இருபதுபேர் நின்றிருந்தார்கள்.
அங்கே காலைமுதல் தொடங்கிய பூசை ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. முதியவராகிய ஆபிசாரகர் ஒருவர் அதைச் செய்துகொண்டிருந்தார். அவர் கைகாட்டியதும் கட்டி இழுத்துக் கொண்டுவரப்பட்ட சமர்களில் ஒருவனை அவிழ்த்து உந்தி முன்னால் கொண்டுசென்றனர். அவனை பிடித்து குனியவைத்து கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டினர். அவன் பின்னால் நின்ற ஒருவன் அவன் கழுத்தின் இரண்டு ரத்தக்குழாய்களையும் சிறுகத்தியால் வெட்டினான். ஊற்றுபோல பீரிட்ட ரத்தம் ஒரு குடத்தில் பிடிக்கப்பட்டது.
ரத்தக்குழாய் வெட்டுபட்டவனின் உடல் துள்ளித்துடித்தது. மூச்சுக்காற்றுடன் கலந்த குழறல்கள் ஒலித்தன. ரத்தம் முழுமையாக வெளிவருவதற்காக அவன் உடலை பின்னிலிருந்து தூக்கி தலைகீழாகப் பிடித்தனர். பிற சமர்கள் ஓலமிட்டுக் கதறி திமிறினார்கள். சிலர் மயங்கிவிழுந்தனர். ஒவ்வொருவராக இழுத்துச்செல்லப்பட்டு ரத்தம் எடுக்கப்பட்டது. பாதி செத்த சடலங்கள் அப்பால் ஒரு மாட்டுவண்டியில் குவிக்கப்பட்டன. அவை ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த வண்டி கோதாவரிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் பேய்களாகி திரும்பிவராமலிருக்கும் பொருட்டுஉடல்கள் எரியூட்டப்பட்டன.
பதினெட்டு குடங்களில் நிறைந்த மனிதரத்தம் ஊற்றப்பட்டு மந்திரகோஷத்துடன் அந்த வெற்றித்தூண் மும்முறை கழுவப்பட்டது. மறுநாள் அந்தத் தூணை சிற்பிகள் தூக்கி நிறுத்தினார்கள். அது உறுதியாக நிலைகொண்டது. “இனி இந்த யுகத்தின் முடிவு வரை இந்தத் தூண் இங்கே நிற்கும். சாதவாகனர்களின் வெற்றியை அறைகூவிக்கொண்டே இருக்கும்” என்று ராஜகுரு கபிலதேவர் சொன்னார்.
அந்நிகழ்வுக்குப் பின்னர் சர்மாவதிக்கரையில் இருந்து வந்த சமர்களின் நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோயுறத் தொடங்கினார்கள். அவர்கள் அஞ்சி நடுங்கி இரவுகளில் விழித்துக் கொண்டனர். சிலர் கோதாவரியில் பாய்ந்து உயிர்விட்டனர். பலர் காய்ச்சல்களில் மறைந்தனர். ஒருவன் இரவில் நகரில் இருந்த துர்க்கையன்னையின் கோயிலைச் சூழ்ந்திருந்த கோட்டைமேல் ஏறி காவலனின் ஈட்டிமேல் குதித்து செத்தான். இருவர் காவலர்கள் மேல் பாய்ந்து அவர்களை கடிக்கமுயன்றனர். அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டாலும் அதில் ஒரு காவலன் நோயுற்று சிலநாட்களுக்குப் பின் உயிர்விட்டான்.
அக்குடியினரை அங்கே வைத்திருப்பது மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் என்று அரசவையில் விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் அக்குடியினரை நகரின் எல்லைக்கு அப்பால் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று சொன்னார்கள். ஆனால் அரசகுரு அப்படி ஒரு சிலர் விடுவிக்கப்பட்டால் எஞ்சிய சமர்களிடம் வேலைவாங்க முடியாது என்றார். என்ன செய்வது என்று முடிவெடுக்கும்படி அரசரிடம் கோரப்பட்டது.
அரசர் சூர்யபுத்ர சதகர்ணி வந்து அமர்ந்து தாம்பூலம் கொண்டதுமே இருதரப்பும் சொல்லப்பட்டு அந்த கேள்வி அவர் முன்னால் வைக்கப்பட்டது. அவர் கையசைத்து துப்பும் கலத்தை அருகே காட்டச் சொல்லி துப்பிவிட்டு “அவர்களில் எவரும் உயிருடன் இருக்கவேண்டியதில்லை” என்று சொன்ன பிறகு அன்றைய ஓலைகளை வாசிக்கும்படி கைகாட்டினார். அவை பிற செய்திகளுக்கு திசைதிரும்பியது.
“திரும்பத் திரும்ப நிகழும் கதை இது” என்று நான் சுத்யும்னனிடம் சொன்னேன். பொத்தி வைத்த என் கையை விழிகளால் சுட்டிக்காட்டி “இந்த கதையின் வினா இதுதான். இதற்குப் பதில் சொல்லி என் கையை வெல்க. இல்லையேல் இங்கிருந்து நீ கிளம்பமுடியாது” என்றேன். “சமர்கள் அவ்வாறு கொல்லப்பட்டமைக்குக் காரணம் என்ன?”
அவன் தன் கையை என் கைமேல் வைத்து “ஆணையிட்டவன் அவர்களைப்போலவே நிஷாதனாகிய என் வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதுதான்” என்றான்.
“உண்மை, நீ வென்றுவிட்டாய்” என்று நான் சொன்னேன். “நீ என்னிடம் ஒரு கேள்வி கேட்கும் உரிமையை அடைந்துவிட்டாய்”
சுத்யும்னன் என்னை பார்த்தபோது அவன் கண்கள் மங்கலடைந்தன. சற்றுநேரம் யோசித்தபின் “கானபூதி என்னும் பிசாசே, இது என் கேள்வி. புகழ், வெற்றி அனைத்தும் உச்சமடையும்போது ஒரு புள்ளியில் வீழ்ச்சி தொடங்குகிறது. என் ரத்தத்தில் இருந்து முளைக்கும் இந்த சாதவாகனர்களின் அரசு வீழ்ச்சியடையத் தொடங்கும் அந்த முதல்புள்ளி எது?” என்றான்.
“நான் அக்கதையைச் சொல்கிறேன். அதில் உனக்கான விடை இருக்கும். அதன் கேள்விக்கு நீ பதில் சொன்னாய் என்றால் நீ விரும்பியதை நான் செய்வேன்” என்றேன்.
“நான் விரும்புவது ஒன்றுதான், அந்தக் கதையை நீ திருத்தியமைக்கவேண்டும் என்பேன். அந்த வீழ்ச்சியின் புள்ளியை மேலும் பலநூறாண்டுகளுக்கு தள்ளி வைப்பேன்” என்று அவன் புன்னகையுடன் சொன்னான்.
“கேள்” என்று நான் சொன்னேன். என் இரு கைகளையும் மண்ணில் பதித்து “கதைசொல்லும் பிசாசாகிய நான் நான் சொல்லவிருக்கும் இந்த இருகதைகளும் இரு கேள்விகளாகத் திரள்வதைக் கவனி” என்றேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

