Jeyamohan's Blog, page 98

June 3, 2025

காவியம் – 44

நாணயம் அரசியின் முகம், சாதவாகனர் காலம் பொமு1 மதுரா அருங்காட்சியகம்

கானபூதி சொன்னது. “நான் என் முன் அமர்ந்திருந்த நிஷாதனாகிய சுத்யும்னனிடம் சொன்னேன். நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலை அடைந்துவிட்டாய். நீ கேட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கதையின் கேள்விகள் திரண்டு வந்துவிட்டிருக்கின்றன. அவற்றுக்கு நீ பதில்சொல்லி வென்றாலொழிய இந்த கதைவிளையாட்டு முன்னால் செல்லாது என்று மீண்டும் சொல்கிறேன். அவன் புன்னகையுடன் சொல் என்று என்னிடம் சொன்னான்”

கானபூதி தொடர்ந்தது. நான் சுத்யும்னனின் கண்களைப் பார்த்தேன். அவற்றில் எந்த குழப்பமும் இருக்கவில்லை. கதை கேட்கும் சிறுவர்களுக்குரிய ஆர்வமே இருந்தது. கதைகள் என்றோ எங்கேயோ நிகழ்ந்தவை என பெரியவர்கள் எண்ணுகிறார்கள். உடன் நிகழ்பவை என சிறுவர்கள் எண்ணுகிறார்கள். பெரியவர்கள் கதைகளை விலகி நின்று ரசிக்கிறார்கள். சிறுவர்கள் கதைக்குள் சென்று விளையாடுகிறார்கள்.

நான் சுத்யும்னனிடம் கேட்டேன். “இரு கைகளுக்கும் சேர்த்து என் கேள்வி ஒன்றே. ஏன் குணாட்யர் இளம் வயதில் அந்த சபையை அத்தனை எளிதாக வென்றார்? ஏன் அறிவு முதிர்ந்த வயதில் தோற்றார்?”

அவன் கண்கள் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தான். பின்னர் “வல்லவர்களை இளையவன் ஒருவன் வெல்வான் என்னும் மாறாத இயற்கை விதியால் அவர் வென்றார், பின்னர் தோற்றார்” என்றான்.

நான் என் கைகளை அப்படியே வைத்துக்கொண்டு நிழல்களிடம் ”சொல்லுங்கள், சரியான பதிலா?” என்றேன்.

ஒரு நிழல் “சரிதான். அவருடைய இளமையில் வெல்லவேண்டும் என்னும் விசை அவருக்கு ஆற்றலை அளித்தது. முதுமையில் வென்றுவிட்டோம் என்னும் ஆணவம் அவருடைய ஆற்றலை அழித்தது. இரண்டும் எப்போதும் நிகழ்வதுதானே?” என்றது.

இன்னொரு நிழல் “அவர் இலக்கண ஆசிரியர். பாஷா மீமாம்சகர்கள் மொழி நிரந்தரமானது, ஆகவே இலக்கணம் மாறாதது என்று நம்பியிருப்பார்கள். ஆனால் மொழி ஒவ்வொரு முறை ஒருவரால் சொல்லப்படும்போதும் , ஒருவரால் எண்ணப்படும்போதும்  நுணுக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரிய நதியில் நீரின் ஒவ்வொரு அணுவும் முன்னகர்வது போல. ஒட்டுமொத்தமாக நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை இலக்கண ஆசிரியர்கள் அறிவதில்லை. நேற்று வந்து நீராடிய ஆற்றிலேயே இன்றும் நீராடுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கணம் மாறுவது கண்ணுக்குத் தூலமாகத் தெரிய ஒரு தலைமுறைக் காலம் ஆகும். ஆகவே எல்லா இலக்கண ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையினரால் வெல்லப்படுவார்கள்” என்றது.

மூன்றாவது நிழல் “தன் வாழ்க்கை முழுக்க குணாட்யர் இலக்கணத்தை மட்டுமே பயின்றார். காவியங்களை பயிலவில்லை. இலக்கணங்கள் நனவில் கற்கப்படுபவை. காவியங்கள் கனவுகளில் கற்கப்படுபவை. அரசன் கற்றது காவியம். அரசன் கற்ற முறையை குணாட்யர் அறியவே இல்லை” என்றது.

நான் புன்னகையுடன் என் கைகளை விரித்தேன். “இவை எல்லாமே இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்கின்றன. முதல்கேள்விக்கும் அதுவே பதிலென அமையவேண்டும். பேரறிஞர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில் சிறுவனாகிய குணபதி வென்றதும், அதே அவையில் குணாட்யராக அவன் தோல்வியடைந்ததும் ஒரே காரணத்தால்தான். அவர் அத்தனை இலக்கண இலக்கியங்களுக்கும் அடித்தளமான வேறு ஒன்றுக்கு இளமையிலேயே தன்னை முழுமையாக அளித்திருந்தார். ஆகவேதான் அவர் அனைத்தையும் விரைவில் கற்றுக்கொண்டார். அந்த அடித்தளத்தையே மொழி என்று அவர் எண்ணியிருந்தமையால் மூன்றுமாதங்களில் கற்கத் தகுந்ததே மொழியின் மேற்பரப்பு என்று உணராமல் இருந்தார்.”

சுத்யும்னன் “நான் தோல்வியடைந்தேன்” என்றான். “என் குலம் எந்த இடத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கும் என்பதைக் கண்டுகொண்டேன். அதை என்னால் மாற்றமுடியாது என்றும் உணர்ந்தேன்.”

“இந்தக் கதைவிளையாட்டை நாம் மேலும் தொடரலாம்” என்று நான் அவனிடம் சொன்னேன். “என்னிடம் இன்னும் பல்லாயிரம் கதைகள் உள்ளன.”

“ஆனால் இனி இக்கதைகளைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கதைகளை தொடர்ந்து கேட்பவர்கள் காவியகர்த்தர்கள் ஆகிறார்கள். ஒற்றைக்கதையை மட்டுமே கேட்பவர்கள்தான் வெல்லமுடியும். நான் வெல்லப் பிறந்தவன்.”

“ஆனால் முழுமையானதே உண்மை. முழுமையற்றது பொய்.” என்றேன். “ஒரு கதை எப்போதுமே ஒரு பிருஹத்கதையின் உடைந்த துண்டுதான்”

“உண்மை மேல் ஒரு கல்லும் நிலைகொள்ள முடியாது. நான் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி எழுப்ப விரும்புபவன். என் அடித்தளக் கற்கள் பொய் மீதுதான் நிலைகொள்ளும் என்றால் அதுவே எனக்குரியது.”

“உன் பேரரசு அழியும்.”

“ஆமாம், ஆனால் எல்லாமே அழியும்” என்று அவன் சொன்னான். “அழியாதது கதை மட்டுமே. நான் கதைகளை கேட்பவன் அல்ல, கதைகளின் பாத்திரமாக ஆகின்றவன் என்பதை இங்கே உன்னிடம் கதைகளைக் கேட்கும்போது உணர்ந்தேன்.”

“உன் கதையைத்தான் நான் மேலும் சொல்லவிருக்கிறேன்.”

“அது உன் பணி… என் கதையை நான் வாழ்ந்து அறிந்துகொள்கிறேன்” என்று அவன் அதே புன்னகையும் உறுதியுமாகச் சொன்னான். “விந்தையாக இல்லையா? அனைத்துக் கதைகளையும் அறிந்த பைசாசிகனாகிய நீ வெறுமே கதைகளை அறிபவனும் சொல்பவனும் மட்டும்தான். கதைகளை அறியாமல் அவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித்தான் நீ பேசியாகவேண்டும். உனக்கு வேறுவழியே இல்லை…”

நான் அவனால் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன் என்று உணர்ந்தேன். என் சிரிப்பு மறைந்தது.

சுத்யும்னன் வெடித்துச் சிரித்து “வருந்தாதே. அறிவற்றவர்களை அறிவுடையோர் போற்றிப் பாடவேண்டும் என்பது என்றுமுள்ள உலக வழக்கம்” என்றான். “ஆகவே ஒரு நெறியை உருவாக்கவிருக்கிறேன். என் ரத்தத்தில் உருவாகும் அரசில் எந்த அரசனும் மொழியைக் கற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசுபொருளாகவே இருக்கவேண்டும், பேசுபவர்கள் ஆகக்கூடாது.”

நிழல் ஒன்று அவன் தோள்மேல் கவிந்து “அக்னிபுத்ர சதகர்ணி வரை அந்த வழக்கம் தொடரும் இல்லையா?” என்று சிரித்தது.

“அதுதான் வீழ்ச்சியின் தொடக்கம்…” என்றது இன்னொரு நிழல்.

“அதை நான் மாற்றமுடியாது” என்று சுத்யும்னன் சொன்னான். “அதற்குப் பின் என்ன நிகழும் என்பதையும் நான் யோசிக்கவே போவதில்லை. நான் தொடங்கவிருக்கிறேன்… அதுதான் என் முன் உள்ள பணி…” கைகூப்பி வணங்கி, “எனக்கு என் வழியைக் காட்டியவன் நீ. என் உலகை உருவாக்கி என் முன் விரித்தவனும் நீ. நீயே என் தெய்வம். என் அரண்மனையில் உனக்காக ஓர் ஆலயம் அமைப்பேன். உன்னை என் தலைமுறைகள் தெய்வமென வணங்கும்” என்றான்.

“அக்னிபுத்ர சதகர்ணி வரை… ஆம், அதுவரை” என்று ஒரு நிழல் எக்களித்துச் சிரித்தது.

தானும் சிரித்தபடி அதை நோக்கி “அதைப்பற்றி நீங்கள் பேசி மகிழ்ந்திருங்கள்” என்று சொல்லி சுத்யும்னன் அந்தக் காட்டில் இருந்து விலகிச்சென்றான்.

நிழல்கள் அவன் பின்னால் சென்று கூச்சலிட்டன.

“நீ எந்தப் போர்களில் எல்லாம் வெல்வாய், எப்போது தோற்பாய் என்று என்னால் சொல்லமுடியும்” என்று ஒரு நிழல் கூச்சலிட்டது. “அதை தெரிந்துகொண்டால் தோல்விகளை உன்னால் தவிர்க்கமுடியும்.” என்றது ஒரு நிழல்.

“உனக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் நான் இப்போதே அடையாளம் காட்டுகிறேன்” என்றது இன்னொரு நிழல்

அவன் திரும்பியே பார்க்காமல் முன்னால் செல்ல, ஒரு நிழல் கடைசிவரை அவனுடன் சென்று “நீ எடுக்கப்போகும் தவறான முடிவுகளின் பட்டியல் ஒன்றை உன்னிடம் சொல்கிறேன்” என்றது.

அவன் காட்டின் விளிம்புக்குச் செல்வது வரை அவை கூவிக்கொண்டே பின்தொடர்ந்து சென்றன. ஒரு நிழல் காட்டின் விளிம்பில் நின்ற பேராலமரத்தின் மேல் ஏறிக்கொண்டு தொலைதூரத்தில் செல்லும் அவன் செவிக்குக் கேட்கும்படி கூவியது. “இதோபார், உன் வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி அடைந்து செல்லும்போது ஒரு கணமும் மறக்கமுடியாத அவமதிப்பு ஒன்றை அடைவாய். அந்தச் சிறுமையை உன் சாகும் கணத்தில்கூட எண்ணிக்கொண்டிருப்பாய். அது என்ன என்று உனக்கு நான் சொல்கிறேன். அதை நீ தவிர்க்கமுடியும்… திரும்பிப் பார். என்னைப் பார்.”

“அவன் சென்றுவிட்டான். அவன் திரும்பிப் பார்த்திருந்தால், அல்லது சபலப்பட்டு ஒரு கணம் கால்கள் தயங்கியிருந்தால் அவன் கதைகளின் சுழலில் மீண்டும் சிக்கிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றான்” என்று கானபூதி சிரிக்கும் கண்களுடன் என்னிடம் சொன்னது. “மாவீரர்கள் அப்படித்தான். அவர்கள் ஒற்றைக் குறிக்கோள் கொண்டவர்கள், தங்களை அதிலிருந்து திசைதிருப்பிக் கொள்ள அனுமதிக்காதவர்கள்.”

“ஆனால் அவன் அவர்கள் சொல்வதையும் கேட்டிருந்தால் பலவற்றைத் தவிர்த்திருக்கலாமே?” என்றேன்.

“அது சாமானியர்களின் சிந்தனை. ஒரு கதை இன்னொரு கதைக்குத்தான் கொண்டுசெல்லும். அந்த சுழற்சியில் இருந்து விடுபடவே முடியாது.” என்று கானபூதி சொன்னது.

“சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைய அக்னிபுத்ர சதகர்ணியா காரணம்?” என்று நான் கானபூதியிடம் கேட்டேன்.

கானபூதி அதைக் கேட்க மறுத்து அசைவில்லாத பார்வையுடன் அமர்ந்திருந்தது.

சக்ரவாகி என்னிடம் “கதைவிளையாட்டில் மட்டுமே அது கதை சொல்லும்… நீ கேட்ட கேள்விக்கான பதில் இன்னும் அதன் கதைகளில் தெளிந்து வரவில்லை” என்றது.

“சாதவாகனர்களின் தோல்வி அக்னிபுத்ர சதகர்ணி மொழியறிந்த நாளில் தொடங்குகிறதா? அதையா சுத்யும்னன் தெரிந்துகொண்டு சென்றான்?” என்று நான் மீண்டும் பொதுவாக நிழல்களை நோக்கிக் கேட்டேன்.

ஆபிசாரன் என்னை நோக்கி வந்து இரு கைகளையும் மண்ணில் ஊன்றி, கண்களில் ஏளனச் சிரிப்புடன் சொன்னது. “நான் நடந்ததைச் சொல்கிறேன். எனக்கு நீ என்ன தருவாய்?”

“நீ கேட்பது என்ன?”

“நான் சொல்லும் கதையையும் நீ கேட்கவேண்டும்… முடிவுவரை எதிர்வார்த்தையே இல்லாமல் கேட்கவேண்டும்…”

“சரி, சொல்” என்றேன். “நான் இன்றிருக்கும் நிலையைவிட என்னை எந்தக்கதையும் கீழிறக்கிவிட முடியாது.”

“நான் உன்னைக் கீழிறக்குவேன் என்று ஏன் நினைக்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்ய முயல்பவன். நானே உன்னிடம் உண்மையைச் சொல்பவன்.” என்றது ஆபிசாரன்.

“சொல்” என்று நான் சொன்னேன்.

“அக்னிபுத்ர சதகர்ணி தேன்குடத்தில் விழுந்த தேனீபோல ஆனான் என்று காவியங்கள் சொல்கின்றன. இரவும் பகலும் அவன் காவியங்களையே வாசித்தான். காவியங்களை அவனுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்களை நியமித்தான். பகல் முழுக்க அவர்கள் அவனுக்குப் பாடம் நடத்தினர். இரவில் அவன் தூங்கும்போது அவன் அறைக்கு வெளியே அவன் செவிகளில் விழும்படி மகாகாவியங்களை இசைக்கலைஞர்கள் யாழுடன் சேர்த்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள்” ஆபிசாரன் சொன்னது.

பேரரசன் சதகர்ணி தானே ஒரு கவிஞனாக ஆனான். ரிதுமகோத்ஸ்வம், வர்ஷகோலாகலம், புஷ்பசம்வாதம் ஆகிய காவியங்களை எழுதி அவற்றை பிரதிஷ்டானபுரியின் அவையில் அரங்கேற்றினான். அவனே காவியப்பிரதிஷ்டான சபையின் முதன்மைக் கவிஞன் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அவனுக்கு சிறந்த மாணவர்கள் அமைந்தார்கள். அவர்கள் அவனுடைய காவியங்களை கற்று அவற்றை கலிங்கம் முதல் காம்போஜம் வரை, காசி முதல் காஞ்சிபுரம் வரை கொண்டுசென்று பரப்பினார்கள். பாரதவர்ஷமெங்கும் அவனுடைய வரிகளே புகழ்பெற்றிருந்தன.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் காவியங்கள் மேல் நம்பிக்கை இழக்கலானான். அவை வெறும் அழகிய சொற்சேர்க்கைகள் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஆனால் அதை அவனே எவரிடமும் சொல்லமுடியாத நிலை உருவாகிவிட்டது. தன் அரசியிடம் அவன் சொன்னான். ”எனக்கு சர்வ வர்மன் கற்றுத்தந்தது மிகமிக அளவுக்குட்பட்ட ஒரு கல்வி. நூற்றெட்டு பூக்களை அவர் எனக்கு அளித்தார். அதைக்கொண்டு மாலைதொடுக்கக் கற்றுத்தந்தார். நான் தொடுத்த மாலைகள் மிக அழகானவை, ஒவ்வொன்றும் புதியவை. ஆனால் நான் எங்கோ முடிவில்லாத வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட மலர்கள் பூத்த காடு ஒன்று இருப்பதை உணர்கிறேன். இங்கே நான் சிறைப்பட்டிருக்கிறேன்”

அரசி அவனுடைய அந்த மனநிலையை விரும்பினாள். அவன் சம்ஸ்கிருதக் கல்வி வழியாக விலகி நெடுந்தொலைவு சென்றுவிட்டதாக அவள் கவலை கொண்டிருந்தாள். ”சொற்களில் ஈடுபடுபவர்களுக்கு சொற்களின் உலகமே முழுமையானதாகத் தோன்றிவிடுகிறது, மெய்யுலகை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்”  என்று அவள் அவனிடம் பலமுறை சொல்லியிருந்தாள். “மெய்யுலலகுக்குச்  சற்றுச் சுவையூட்டவே சொற்கள். சொற்களில் வாழ விரும்புபவர்கள் மூன்றுவேளை உணவையும் பாயசமாகவே உண்ணவேண்டும் என எண்ணும் சிறுவர்களைப் போல.”

ஆனால் அவன் சொற்களில் இருந்து அவள் விரும்பியதுபோல மெய்யுலகை நோக்கி வரவில்லை. மேலும் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். “சொற்களில் இருந்து கனவுக்கும், கனவுகளின் வழியாக கனவுகள் ஊறும் அந்த ஆதிச்சுனைக்கும் செல்வதற்குத்தான் வழி உள்ளது” என்று அவன் அரசியிடம் சொன்னான்.

அவனிடம் வந்துசேர்ந்த கனவுத்தன்மை அவளுக்கு அச்சமூட்டியது. அவன் சொல்லில் மூழ்கிக்கிடந்தபோது இசைக்கருவியைக் கற்றுக்கொள்பவன் போலவும், சதுரங்கம் ஆடுபவன் போலவும் மாறிமாறித் தோற்றமளித்தான். உலகியலின் தர்க்கம் அவனில் இருந்து விலகினாலும் மேலும் செறிவானதும் வரையறைக்குட்பட்டதுமான இன்னொரு தர்க்கம் அவனிடம் வந்தமைந்தது. ஆனால் கனவுக்குள் அவன் நுழைந்தபோது எல்லா தர்க்கங்களையும் இழந்தவனானான். பொழுது, சூழல், சுற்றம் எதையுமே அறியாதவனாக மாறினான். அவன் சொற்களில் எந்த பொருளும் கூடவில்லை. அவன் எவரையும் பார்த்துப் பேசவுமில்லை.

அவனுக்குச் சித்தப்பிரமையா என்று அவையில் இருந்த அமைச்சர்கள் சந்தேகப்பட்டனர். மூன்று அமைச்சர்கள் வந்து அரசியிடம் அதைப்பற்றிப் பேசி அரசருக்கு மருத்துவம் பார்க்கவேண்டியதன் தேவை பற்றி அறிவுறுத்தினார்கள். அரசனின் முதல் மகனுக்கு அப்போது ஒன்பது வயது. அவனை அரசனாக்கி அரசியே ஆட்சி செய்யலாம் என்று தலைமை அமைச்சர் சொன்னார். ஆனால் அந்த முடிவை அரசியால் அப்போது எடுக்கமுடியவில்லை.

ஓர்  இரவில் தன் அரண்மனையின் உப்பரிகையில் தனியாக நின்றிருந்த அரசன் கீழே வரிசையாக யாரோ செல்வதைக் கண்டான். அவர்கள் ஓசையில்லாமல் சென்றுகொண்டிருந்தார்கள். அங்கே சாலையில் விளக்குத் தூண்களின் வெளிச்சம் இருந்தாலும் அவர்களின் உருவம் ஏதும் துலங்கவில்லை. அவன் உப்பரிகையின் விளிம்பில் இருந்து கீழே தொற்றி இறங்கி சாலைக்கு வந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.

அவர்களை காவலர்கள் எவரும் பார்க்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. காவலர்கள் அனைவருமே அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். அந்த வரிசை நேராகச் சென்று அவருடைய முப்பாட்டனால் நிறுவப்பட்ட விஜயஸ்தம்பத்தை அணுகியது. அங்கே காவலர்கள் இருவரே இருந்தார்கள். அவர்கள் விழித்திருந்தனர், ஆனால் அத்தனை பெரிய வரிசையை அவர்கள் பார்க்கவில்லை. ஒரு தூணின் மறைவில் நின்றபடி அரசன் அந்த கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த உருவங்கள் எல்லாமே நிழல்களாகவே தெரிந்தன. விளக்கொளி அவர்கள் மேல் பட்டாலும் அவர்கள் துலங்கி வரவில்லை.

அவர்கள் ஏதோ முனகலாக பாடியபடி, கைகளை நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து, சிற்றடி வைத்து விஜயஸ்தம்பத்தைச் சுற்றிவந்தார்கள். அவர் பார்த்துக்கொண்டு நின்றதைக் கூட அவர்கள் அறியவில்லை. அதன்பின் அதைச்சூழ்ந்து அமர்ந்தனர். அமர்ந்தபடியே நெஞ்சில் கைவைத்து முன்னும் பின்னும் அசைந்தாடி முனகலான ஒலியில் பாடினர்.

அவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொருட்டு அரசன் அருகே சென்றான். அருகே செல்லச் செல்ல அவர்கள் மேலும் தெளிவற்றவர்களாக ஆனார்கள். அவர்கள் ஆண்களா, பெண்களா, ஆடைகள் அணிந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. மேலும் அவர் அணுகியபோது ஓர் உருவம் அவனைப் பார்த்துவிட்டது. அது திடுக்கிட்டு எழ, சட்டென்று அத்தனைபேரும் எழுந்து அவனைப் பார்த்தனர். அவன் அசையாமல் நிற்க அவர்களும் அசைவின்றி நின்றனர். நீரில் தெரியும் பிம்பங்கள்போல அவர்கள் மெல்ல அசைந்தாலும் அசைவிலாதிருந்தனர்.

அவர்களில் ஓர் உருவம் திரண்டு அவனை நோக்கி வந்தது. அது ஒரு முதியவர். அவர் அவரசனின் அருகே வந்து “நீங்கள் அரசர் அல்லவா?” என்றார்.

“ஆம்” என்று சதகர்ணி சொன்னான்.  “இந்நிலத்தை ஆட்சி செய்பவன்.”

“நாங்கள் ஆட்சி செய்யப்பட்டவர்கள்” என்று முதியவன் சொன்னான். “இந்த வெற்றித்தூணை மண்ணுடன் இறுக்கி நிலைநிறுத்தியிருப்பது சமர்களாகிய எங்கள் ரத்தம்.”

அக்னிபுத்ர சதகர்ணி அன்று கண்ட அந்தக் காட்சியை பின்னர் அவரே எழுதிய ’போதோதய வைபவம்’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறான். அங்கே காலையில் மயங்கிக்கிடந்த அவனை காவலர்கள் அரண்மனைக்குக் கொண்டுசென்றனர். பலநாட்கள் காய்ச்சலில் பிதற்றிக்கொண்டிருந்த அவன் நலமடைந்தபின் மிகமிக அமைதியானவன் ஆனான். ஓராண்டுக்காலம் ஒரு வார்த்தைகூட எவரிடமும் பேசவில்லை.

ஆனால் அதுவரை ஆட்சியில் அவனுக்கு இருந்த ஆர்வமின்மை மறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அரசவைக்கு வந்து முழுநேரமும் இருந்தான். எல்லாச் சொற்களையும் கூர்ந்து கேட்டான். தன் ஆணைகளை எழுத்தில் சுருக்கமாக அளித்தான். அந்த வரிகளைப் படித்த அமைச்சர்கள் மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அவை வெளியிடப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். அவற்றுக்கு மறுவார்த்தை இருக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டார்கள்.

மேலும் ஓராண்டுக்குப் பின் அக்னிபுத்ர சதகர்ணி பிரதிஷ்டானபுரியில் இருந்து தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் கிளம்பி வடக்கே பயணம் செய்து, கனகபதம் என்று அப்போதும் சாஞ்சி என்று பிற்பாடும், அழைக்கப்பட்ட சிறு குன்றில் அமைந்த புத்தபீடிகையை அடைந்து அங்கே இருந்த விகாரையில் தங்கினார். அங்கே சாக்கிய மாமுனிவர் வந்து தர்மசம்போதனை செய்த இடத்தில் செந்நிறமான கற்களால் கவிழ்ந்த கலத்தின் வடிவில் மகதத்தின் மாமன்னர் அசோகரால் கட்டப்பட்டிருந்த தூபி நின்றிருந்தது. நாற்பத்தொரு நாட்கள் அங்கே நோன்பிருந்த பிறகு அந்த தூபியைச் சுற்றிவந்து அக்னிபுத்ர சதகர்ணி பௌத்தமதத்தை ஏற்றார். கொல்லாமை உட்பட அவர்களின் எட்டு நெறிகளையும் தனக்காக வகுத்துக்கொண்டார்.

அவர் திரும்பி வந்தபோது அவருடன் பதினெட்டு புத்தபிக்ஷுக்களும் வந்தனர். அவர்கள் தங்களுடன் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட சிறிய புத்தர்சிலை ஒன்றையும் கொண்டுவந்தனர். தர்மசக்கரத்தை உருட்டும் கைகளுடன் அமர்ந்திருந்த அந்தச் சிலை கோதாவரிக்கரையில் அரசனால் உருவாக்கப்பட்ட புத்தபீடிகையில் நிறுவப்பட்டது. அரசன் தர்மத்தை ஏற்றுக்கொண்டதை நிறுவுவதற்காக கோதாவரியின் கரையில் அரசனால் ஒரு தூபி நிறுவப்பட்டது. ஓராண்டுக்குள் அரசகுலத்தினரும், அமைச்சர்களும், அவைப்புலவர்களும் பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டனர். ஏழாண்டுகளில் பிரதிஷ்டானபுரியே பௌத்தநகரமாக ஆகியது.

தான் ஆட்சி செய்யும் நாடெங்கும் பௌத்தத்தை கொண்டுசெல்ல சதகர்ணி முயன்றார். அரசநாணயங்களில் புத்தரின் முகம் இடம்பெற்றது. புத்தநெறியைக் கற்பிக்கும் மடாலயங்கள் உருவாக்கப்பட்டன. பிரதிஷ்டானபுரியைச் சுற்றி அமைந்த மலைப்பாறைகளைக் குடைந்து மிகப்பெரிய சைத்யங்களும் விகாரங்களும் அமைக்கப்பட்டன. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதிய பிக்ஷுக்களுடன் தங்கி சாக்கிய தர்மத்தைப் பயின்றார்கள். அங்கிருந்து அவர்கள் தர்மத்தின் செய்தியுடன் அறியாத நிலங்களை நோக்கிச் சென்றார்கள்.

ஒவ்வொருநாளும் குடைவரைகள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அங்கே தர்மசம்போதனை முத்திரையுடன் புத்தரும், அறநிலையாகிய ஸ்தூபியும் அமைந்திருந்தன. அந்த குடைவரைகள் அமைந்த இடங்களை இணைத்துக்கொண்டு செல்லும் கழுதைப்பாதைகள் மலையிடுக்குகளின் வழியாக உருவாக்கப்பட்டன. அக்னிபுத்ர சதகர்ணியின் வம்சத்தினர் அனைவருமே பௌத்தர்களாகத் திகழ்ந்தார்கள். அவன் வம்சத்தில் வந்த கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சியின்போது சாதவாகனர்களின் நிலத்தில் பௌத்தம் சென்றடையாத இடமே இல்லை என்ற நிலை உருவானது.

கௌதமிபுத்ர சதகர்ணி நாடெங்கும் தர்மஸ்தம்பங்களை நாட்டினார். குடைவரைகளிலும் பாறைகளிலும் தர்மத்தின் செய்திகளை எழுதிவைத்தார். பௌத்த தர்மத்தை முன்னெடுத்த பேரரசர்களில் அசோக மகாச்சக்ரவர்த்திக்குச் சமானமானவராக அவரை கவிஞர்கள் போற்றினார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் சாதவாகனர்களின் அரசுடன் புதிய அரசர்கள் தாங்களே விரும்பி வந்து இணைந்து கொண்டார்கள். போரில்லாமலேயே அப்பேரரசு வளர்ந்தது. அவ்வாறு இணைந்த நாடுகளுக்கு பெரிய வணிகப்பாதைகள் அமைந்தன. வணிகம் பெருகி செல்வம் குவிந்தது. கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயங்களே பாரதநிலம் முழுக்க புழக்கத்தில் இருந்தன.

ஆபிசாரன் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டியபடி கேட்டது. “இந்தக் கதையிலும் கேள்வி உள்ளது. சொல், ஏன் அக்னிபுத்ர சதகர்ணி பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டார்?”

நான் புன்னகையுடன் ”சுத்யும்னன் சொன்ன அதே பதில்தான்” என்றேன். “நிஷாதர்களின் குலத்தில் உருவானவன் அவன் என்பதுதான் காரணம்”

“ஆ! சிறந்த பதில்!” என்றது ஆபிசாரன். கானபூதியிடம் “இவருக்குக் கதைகளைக் கேட்கும் தகுதி உள்ளது, நான் சொல்கிறேன், எல்லா தகுதிகளும் உள்ளன” என்றது.

நான் “குணாட்யரைப் பற்றி இங்கே பைசாசிகர் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன ஆனார்?” என்றேன்.

“நீ கேட்ட கேள்வி வேறொன்று. பெண்களைப் பற்றியது.”  என்று சக்ரவாகி சொன்னது “அதற்கு மட்டும்தான் பைசாசிகர் கதைகளின் வழியாக பதில் சொல்வார்…”

”என்ன கேள்வி என்று நான் சொல்கிறேன்” என்றது சூக்ஷ்மதரு “அன்னையர் எங்கே ஏன் குழந்தைகளைக் கைவிடுகிறார்கள், அதுதான் உன் கேள்வி.”

ஆபிசாரன் அவர்களை உந்தி விலக்கி என்னருகே வந்தது “குணாட்யரைப் பற்றி நான் சொல்கிறேன். குணாட்யர் தன் இல்லத்துக்குச் சென்றார். அழுதபடியே தன் பின்னால் வந்த தன் மாணவர்கள் அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னார். அவருடைய இரண்டு அணுக்க மாணவர்கள் மட்டுமே அவருடன் இருந்தனர். குணதேவனிடம் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் தன் இரு காதுகளையும் குத்தி உடைக்கும்படியும், நந்திதேவனிடம் தன் கண்களை இன்னொரு கொதிக்கும் ஊசியால் குத்திவிடும்படியும் ஆணையிட்டார்.”

”அவர்கள் தயங்கி அழுதார்கள். ஆனால் அது குருவின் ஆணை என்று அவர் சொன்னபோது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எழுத்தாணியால் அவருடைய காதுகளையும் கண்களையும் அழித்தனர். அவர் தனக்கு அவர்கள் செய்யவேண்டியதென்ன என்று விளக்கிய பின்னர், தன் இடையில் இருந்த பாக்குவெட்டும் கத்தியால் தன் நாக்கை வெட்டிக்கொண்டார். அந்த நாக்கை அவர்கள் கோதாவரியின் கரையில் இருந்த நாமகளின் கோயிலுக்குக் கொண்டுசென்று, அதிகாலையின் வேள்வியில் தேவியின் முன்னால் எரிந்துகொண்டிருந்த அக்னிகுண்டத்தில் இட்டனர். அது இளநீலமாக எரிந்து வானத்திற்குச் சென்றது”

ஆபிசாரன் தொடர்ந்தான். “அவர்கள் அவர் ஆணையிட்டபடி அவரை கைகளைப் பிடித்து இட்டுச் சென்று கோதாவரியின் மறுகரையில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் விட்டனர். அதன்பின் திரும்பிப் பார்க்காமல் நடந்து பிரதிஷ்டானபுரிக்கு மீண்டு வந்தனர். அவர்கள் அதன்பிறகு காவியப்பிரதிஷ்டான சபைக்கு செல்லவில்லை. ஆற்றங்கரையிலேயே குடில்கள் அமைத்து அங்கே தங்களைத் தேடிவந்தவர்களுக்கு இலக்கணமும் காவியமும் கற்றுக்கொடுத்தபடி வாழ்ந்தனர். காவியசபையின் தலைவராக சர்வசர்மன் ஆனான். ரத்னாகரன் அவனுடைய துணைவனாக சபையில் அமர்ந்தான்.”

“சிலநாட்கள் குணாட்யரைப் பற்றி பிரதிஷ்டானபுரியில் பேசிக்கொண்டார்கள். அவரது கதைகளை கவிஞர்கள் பாடல்களாக எழுதி தெருக்களில் பாடினார்கள். அந்தப் பாடல்களும் கதைகளும் பாரதம் முழுக்க பரவின. அதன்பின் குணாட்யர் மறக்கப்பட்டார். அவரை காவியங்களில் மட்டுமே நினைவுகூர்ந்தனர். அவரை காட்டில் புலி தின்றுவிட்டது என்றும், யக்ஷர்களோ பைசாசிகர்களோ கொன்றுவிட்டார்கள் என்றும் பேசப்பட்டது” ஆபிசாரன் சொன்னான். “நிகழ்காலம் அப்படிப்பட்டது. அது எதிர்காலத்தை அறியாதது, இறந்தகாலத்தை மறந்துவிடுவது.”

நான் கானபூதியிடம் “உன் கதையைச் சொல்” என்றேன்.

“நான் சொல்லவிருப்பது குணாட்யரின் கதையைத்தான். அவரை நான் காட்டில் சந்தித்தேன்” என்று கானபூதி சொல்லத்தொடங்கியது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:33

ஆறு தாரகைகள்

யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆறு தாரகைகள் – முத்து மதிப்புரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:31

சிந்தனையின் எதிரிகள்

நான் புதியதாக படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகன். கல்லூரி மாணவனாக இருக்கிறேன். உங்களுடைய ஆனந்தவிகடன் பேட்டியை வாசித்தேன். மிகச்சிறந்த பேட்டியாக இருந்தது. அதில் நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே யோசிக்கவேண்டியவை. ஆனால் அதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாமே கடுமையான வசைகளாக இருந்தன. கீழ்த்தரமான நிலையிலே அமைந்திருந்தன. இந்த மாதிரியான வசைகள் ஏன் வருகின்றன? ஒரு கருத்து ஏன் இப்படி இவர்களால் வசைபாடப்படுகிறது. 

சிந்தனையின் எதிரிகள்

Once I was an avid reader; I used to read 200 pages daily. Now I am struggling to read for my essential qualification. I think the majority of the people in our age are actually in this condition.

About reading
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:30

June 2, 2025

தீமையே அடிப்படை மனித இயல்பா?

‘மானுடத்தின் இருண்ட ஆழங்களுக்குள் செல்லும் படைப்பு இது’ என்றுதான் பெரும்பாலான நவீன இலக்கியங்களின் பின்னட்டைக்குறிப்புகள் சொல்கின்றன. உண்மையில் மனிதனின் ஆதாரமான இயல்பு தீமையா? அதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறதா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2025 11:36

விருதுகள், ஏற்பதும் மறுப்பதும்

அன்புள்ள ஜெ.,

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போது தாமதமாக அளிக்கப்பட்ட சிறிய விருது என்று ஏற்க மறுத்துவிட்டார். அது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. விருதுகள் வெவ்வேறு காரணங்களுக்காக மறுக்கப்பட்டிருக்கின்றன. நீங்களே விருதுகளை ஏற்க மறுத்திருக்கிறீர்கள்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருதுகள் அவ்வாறு ஏற்க மறுக்கப்பட்டிருக்கின்றதா? அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் நிலைப்பாடு என்ன?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

*

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

விருதுகளை ஏற்பதுபோலவே மறுப்பதும் இயல்பான ஒன்றுதான். விருது மறுப்பை பரபரப்பான வம்பாக ஆக்கிக்கொள்ள வேண்டியதில்லை. அது விருது அளிக்கும் நிறுவனம் மீதான விமர்சனமாக இருந்தாகவேண்டும் என்பதுமில்லை. இதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன்.

விருதுகள் ஒருவருக்கு ஓர் அமைப்பால் அளிக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோல், அதன் செயல்பாடுகள் ஆகியவற்றில் நமக்கு மதிப்பு இருந்தால் அந்த விருதை நாம் ஏற்கிறோம். அதுவே முதன்மையான அடிப்படை.

எனக்கு முப்பது வயதிருக்கையிலேயே ஓர் அமைப்பு எனக்கு விருதை அறிவித்தபோது மறுத்துள்ளேன். ஒரு விருதுப் பட்டியலில் கோவி. மணிசேகரனும் நானும் இருந்தோம். அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோலை நான் ஏற்கமுடியாது என வெளிப்படையாகவே அறிவித்து மறுத்துவிட்டேன். .அந்த மறுப்பறிக்கை சுபமங்களாவில் வெளிவந்தது. அப்போது அது விவாதமாக ஆகியது.

அந்த பட்டியலில் இன்குலாப் இருந்தார். அவரை ஓர் இலக்கியவாதியாகவே நான் என்றும் கருதியதில்லை, அவர் எளிய அரசியல்கோஷங்களை எழுதிய அரசியல்வாதி மட்டுமே. ஆனால் அந்த அரசியல் நேர்மையானது என்பதனால் அவருடன் விருதை ஏற்பது எனக்கு கௌரவம், கோவி மணிசேகரன் அப்படி அல்ல என்று அப்போது குறிப்பிட்டேன்.

அவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் அந்த அமைப்பின் அளவுகோலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருள். கோவி.மணிசேகரன் வணிக எழுத்தாளர். வணிக எழுத்திலேயே அடிப்படைத் தரம் இல்லாத கீழ்நிலைக் கேளிக்கையாளர் என்பது என் மதிப்பீடு. இப்படி விருது வழங்கும் அமைப்பின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லையேல் மறுக்கலாம்.

இன்னொன்று, அவ்விருது அளிக்கும் அமைப்பின் அடையாளத்துடன் தனிப்பட்ட காரணங்களால் உடன்பாடில்லை என்றால் மறுக்கலாம். 1998 வாக்கில் எனக்கு இந்திய அளவில் அளிக்கப்படும் ஓர் உயர்விருது அறிவிக்கப்படுவதாக சொன்னார்கள். ஆனால் அது மதஅரசியல் சார்ந்த பின்புலம் கொண்ட விருது. நான் மதத்தையும் மெய்யியலையும் தெளிவாக வேறுபடுத்திக்கொண்ட காலம் அது. ஆகவே மறுத்துவிட்டேன்.

அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அருண்மொழியின் நகைகள் எல்லாம் அடகில் இருந்த காலம் அது. அது பெரிய தொகை. அதை மறுப்பதை அவளிடம் சொன்னால் என்ன சொல்வாள் என நான்குநாட்கள் குழம்பி கடைசியில் கருத்து கேட்டேன். ’உனக்கு வேணாம்னா விட்டிரு’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு மறுகணம் பக்கத்துவீட்டுச் சிறுவனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள். இன்னொரு முறை யோசிக்கவோ பேசவோ இல்லை. ஆனால் நான் மேலும் பத்துநாட்கள் அந்த பெருந்தொகை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன்.

விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது இரு கவிஞர்களுக்கு அளிப்பதாகச் சொன்னபோது அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் மறைந்த குமரகுருபரனுடன் கடுமையான மோதல் இருந்தது என்றும், அவரைப்பற்றி கடுமையாக எதிர்வினை ஆற்றியதும் உண்டு என்றும், ஆகவே விருதை ஏற்பது சரியாக இருக்காது என்றும் சொன்னார்கள். என்னையே குமரகுருபரன் இரவில் பக்கார்டி துணையுடன் வசைபாடியதுண்டு, காலையில் மன்னிப்பு கோரியதும் உண்டு, அதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொன்னேன். அவர்கள் உறுதியாக இருந்தனர். அது இயல்பான முடிவு என எடுத்துக்கொண்டேன்.

விருது சார்ந்த கொள்கைகள் ஒருவருக்கு இருக்கலாம். உதாரணமாக, அரசு சார்ந்த விருதுகளை ஏற்பதில்லை என்பது என் கொள்கை. அந்த கொள்கையை நான் கொஞ்சம் கொஞ்சமாகவே வந்தடைந்தேன். ஏனென்றால் அவ்விருதுகளை, அரசை விமர்சிக்கும் உரிமையை இழக்கிறேன் என்று பட்டது. அந்த முடிவை வந்தடைந்தபின் அதை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளேன். பத்மஸ்ரீ உட்பட அரசு விருதுகள் பெற முடியுமா என்று கேட்ட்கப்பட்டபோது மறுத்தேன். அது சரியான முடிவே என உறுதியாக உள்ளேன்.

அப்படி ஒரு மறுப்பு விஷ்ணுபுரம் விருதுக்கும் வந்தது. ராஜேந்திர சோழனுக்கு விருது அளிப்பதாக சொன்னபோது அவர் மறுத்தார். என் மேல் பெருமதிப்புண்டு என்றும், ஆகவேதான் என் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதாகவும், விஷ்ணுபுரம் அமைப்பின் இலக்கியச் செயல்பாடுகள் மீதும் மதிப்புண்டு என்றும், ஆனால் விருதை ஏற்கமுடியாது என்றும் சொன்னார்.அவர் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி என்னும் அமைப்பை நடத்திவந்தார். விஷ்ணுபுரம் போன்ற விருதுகளை ஏற்பதென்பது கட்சிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றார். தமிழ்த்தேசிய பொதுவுடைமை என்னும் கருத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத எந்த அமைப்புடனும் இணைந்து எவ்வகையிலும் செயல்படமுடியாது என்றார். அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என ஏதுமில்லை, கட்சியுடன் கலந்தே முடிவெடுக்கமுடியும் என்றார்.

அதை நான் ஏற்றுக்கொண்டேன். விஷ்ணுபுரம் நிகழ்வில் அவர் உரையாற்ற வேண்டும், மேடையிலேயே விருதை மறுப்பதென்றாலும் செய்யலாம் என்று கோரினேன். விருதை வீணாக்கவேண்டாம், வேறு ஒருவருக்கு அளிக்கலாம் என்றார். அவர் மேடையில் பேச வருவதாகச் சொன்னார், வந்தால் நேரடி அரசியல் பேசக்கூடாது என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன் இலக்கியப் பார்வை தமிழ்த்தேசியம் சார்ந்தது, அதைச் சொல்வேன் என்றார். ஏனென்றால் எந்த மேடையையும் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர் கட்சியின் கொள்கை. அவருடைய உரை தனிப்பட்ட எவரையும் தாக்குவதாக இல்லை என்றால் சரிதான் என்று நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவருடைய உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

(ஆனால் வந்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்கும் என பின்னர் தோன்றியது. அவர் உட்பட தமிழ்த்தேசியர்கள் தீவிரமான தெலுங்கு எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு அரசியலுக்குள் சென்றுகொண்டிருந்த காலம் அது. எங்கள் மேடைகள் அத்தகைய விவாதங்கள் நோக்கிச் செல்லவேண்டியதில்லை என்பதே என் தரப்பு. அந்த அரங்கு அந்த பரிசுபெறும் படைப்பாளியை நோக்கிக் குவிவதாக, இலக்கியம் மட்டுமே பேசப்படுவதாக அமையவேண்டும் என நினைக்கிறேன். இது நான் இப்போது உறுதியாக உள்ள கருத்து)

விருது என்பது ‘பரிசு’ அல்ல. அது ஓர் ஏற்பு மட்டுமே. ஒரு குழு அல்லது அமைப்பு தன்னுடைய பொதுவான இலக்கிய ரசனையின் அடிப்படையில் விருதை வழங்குகிறது. அது ஒரு சமூக ஏற்புதான். எந்த சமூகச் செயல்பாட்டுக்கும் சமூகத்தின் தரப்பில் இருந்து ஓர் ஏற்பு அவசியம்.

விருதுகளின் நோக்கங்கள் இரண்டு. முதலில் ஓர் இலக்கியவாதியை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுதல். ஆகவேதான் விஷ்ணுபுரம் அமைப்பின் விருதுகளுடன் விரிவான விமர்சனங்களும், நூல்வெளியீடும், ஆவணப்படமும் நிகழ்கின்றன. பெரிய விழா எடுக்கப்படுகிறது, மற்ற மொழிகளில் இருந்து படைப்பாளிகள் அழைக்கப்படுகிறார்கள், செய்திகள் வெளிவரச் செய்யப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதும், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை புதியவாசகர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் எங்கள் நோக்கம்.

இரண்டாவது நோக்கம், ஓர் எழுத்தாளரிடம் வாசகர்களாக நின்று உங்களை வாசிக்கிறோம், உங்களை அணுகி வருகிறோம் என அறிவிப்பது. மூத்த படைப்பாளிகளுக்கு அத்தகைய ஓர் அறிவிப்பு எத்தனை நம்பிக்கையை, ஊக்கத்தை அளிக்கிறது என்பதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். இளம்படைப்பாளிகளுக்கு அந்த வாசகக்குரல் நம்பிக்கையூட்டுகிறது, அதிலுள்ள எதிர்பார்ப்பு ஓர் அறைகூவலாகவும் அமைகிறது. இங்கே எழுத்தாளர்கள் மூத்தவர்களானாலும் இளையோரானாலும் பொருட்படுத்தப்படாமலேயே உள்ள சூழலில் இந்த ஏற்பு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

இதையொட்டி நாங்கள் அமைக்கும் இலக்கிய அரங்கமும் இந்த நோக்கம் கொண்டதுதான். படைப்பாளிகளை வாசகர் முன் நிறுத்துவதே அதன் நோக்கம். இத்தனை பேர் ஆர்வமாகவும் தீவிரமாகவும் வாசிக்கிறார்கள் என்று அந்தப் படைப்பாளிகளுக்குத் தெரியவேண்டும், அது எழுத்துக்கு அளிக்கும் ஊக்கம் அளப்பரியது. விருதை ஒட்டி நிகழும் எங்கள் அரங்கு இலக்கிய விவாதங்களுக்குரியது அல்ல, சக இலக்கியவாதிகள் பேசுவதற்கானது அல்ல. அது வாசகர்களுக்குரியது. இலக்கிய விவாதங்களுக்கான அரங்குகளை தனியாக நிகழ்த்துகிறோம். குரு நித்யா ஆய்வரங்கம்போல. அவை ஓர் ஆண்டில் ஐம்பதுக்குமேல் நிகழ்கின்றன, இப்போது உலகமெங்கும்.

தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு புள்ளியில் எவரேனும் படிக்கிறார்களா, இல்லை சும்மா நாமே நமக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் எழும். ஏனென்றால் எங்குமே வாசகர்களை அவன் சந்திக்க முடியாது. இந்த அரங்குகளில் அவை நிறைந்து அமர்ந்திருக்கும் வாசகர்களை அந்த எழுத்தாளர்களுக்கு காட்டுகிறோம், அவர்களிடம் நேரட்சியாக உரையாடச் செய்கிறோம். அதுவும் ஒரு வகை விருதுதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2025 11:35

காவியம் – 43

யக்ஷி, சாதவாகனர் காலம். யெல்லேஸ்வரம் பொயு 2

குணாட்யர் தன் பதினேழாவது வயதில் சாதவாகன அரசில், அக்னிபுத்ர சதகர்ணியின் காவியப்பிரதிஷ்டான் என்னும் பேரவையின் தலைமைப் புலவராக அமர்ந்தார். நிகரற்ற பேரறிஞர் என்றும், சந்தேகத்திற்கு இடமற்ற தெய்வஅருள் கொண்டவர் என்றும் அவரை பிரதிஷ்டானபுரியின் அறிஞர்களும் கவிஞர்களும் புகழ்ந்தார்கள். மெல்ல மெல்ல அந்தப் புகழ் தெற்கே விஜயபுரி முதல் வடக்கே உஜ்ஜயினி வரை பரவியது. சூரியபுத்ர சதகர்ணியின் புகழுக்கு நிகராக அவர் புகழ் விளங்கியது. அரண்மனைக்கு அருகிலேயே அவருக்கும் ஓர் அரண்மனை அளிக்கப்பட்டது. அங்கே அவர் தன் இரண்டு மனைவியருடன் குடியேறினார். அவருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தன. தங்கப்பூணிட்ட பல்லக்கில் வெள்ளி மிதியடிகள் அணிந்து அவர் காவிய அரங்குக்குச் சென்றார். முதல்முறையாக பிரதிஷ்டானபுரியின் காவிய அரங்கில் அரசருக்கு இணையான ஓர் இருக்கை அவைத்தலைவராகிய அவருக்கும் அமைக்கப்பட்டது.

அவரிடம் நூறு மாணவர்கள் கல்வி கற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதை அவர் அளித்திருந்தார். புலர்காலையில் விடிவெள்ளிக்கு கீழே, கோதாவரியின் கரையில் அமர்ந்து அவர் அவர்களுக்குப் பாடம் சொன்னார். அதன்பின் இரவில் குளிர் ஏறும்வரை தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்தினார். எந்த நூலையும் அவர் நினைவிலிருந்தே எடுத்தார். ஒருபோதும் ஒருமுறை சொன்னதை பிறிதொரு முறை சொன்னதில்லை. கற்பதில் பின்தங்கிய மாணவனை சிறு தயக்கம் கூட இல்லாமல் தன்னிடமிருந்து அகற்றினார். அவரிடம் மாணவராகச் சேர்வதற்காக தொலைதூரத்தில் காந்தாரத்தில் இருந்தும், காமரூபத்தில் இருந்தும் கூட மாணவர்கள் தேடி வந்தனர். அவருடைய பார்வையை அடைவதற்காக அவர் செல்லும் வழியெங்கும் காத்திருந்தார்கள். அவர் காலடி பட்ட மண்ணை அள்ளிக் கொண்டுசென்று பள்ளிகளில் தூவினால் கல்வி சிறக்கும் என்ற நம்பிக்கை உருவாகியது.

குணாட்யருக்கு குணதேவன், நந்திதேவன் என்னும் இரு மாணவர்கள் அமைந்தார்கள். அவர் அந்த இரு கால்களின் வழியாக நடமாடுகிறார் என்று பிரதிஷ்டானபுரியில் சொல்லப்பட்டது. தொடக்கநிலை மாணவர்களுக்கு குணதேவன் வியாகரணமும், நந்திதேவன் காவியமும் பாடம் நடத்தினார்கள். அவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே குணாட்யரை அணுக ஒப்புதல் அளிக்கப்பட்டது. குணாட்யரின் ஒரு வாழ்த்தை பெறுவதென்பது பிரதிஷ்டானபுரியின் வணிகர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் தலைமுறைப் புகழை அளிப்பது என்று நம்பினார்கள். பொன்னும் பொருளும் அளித்து அவரிடமிருந்து நான்கு வரிச் செய்யுட்களை பெற்றுக்கொண்டனர். அந்நம்பிக்கை பரவி நெடுந்தொலைவுகளில் இருந்து செய்யுளுக்கான மன்றாட்டு ஓலையுடனும் பொருளுடனும் தூதர்கள் பிரதிஷ்டானபுரிக்கு குணாட்யரைத் தேடிவந்தார்கள்.

குணாட்யரை எதிர்க்கவோ, அவருடன் சமானமாக நின்று உரையாடவோ அந்த சபையில் எவருக்குமே துணிவிருக்கவில்லை. முதல்நாளிலேயே அவர் தன்னை யார் என காட்டிய பின்னர் அவருடைய ஆற்றல் மேல் சந்தேகம் எழவேயில்லை. ஆனால் அந்த அவையில் ஒவ்வொருவரும் ஒருநாள் அவரை வெல்வதைப் பற்றியே ரகசியமாகக் கனவு கண்டார்கள். பெரும்புலவர்கள் குணாட்யரை வென்று, அவர் அவையில் சிறுமை எய்தி கண்ணீருடன் நின்றிருக்கும் காட்சியை அகக்கண்ணில் கற்பனை செய்து மெய்சிலிர்ப்படைந்தனர். இளைஞர்கள் என்றோ ஒருநாள் அந்த அவையில் அவர்கள் குணாட்யரை வெல்லமுடியும் என்ற பகற்கனவு காமம் சார்ந்த பகற்கனவுகளை விடவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை அறிந்தனர். ஒவ்வொருவரும் அதற்கான தருணங்களை கற்பனை செய்தாலும் அப்படியொன்று அமையும் என்று எண்ணியிருக்கவே இல்லை.

குணாட்யரை அரசர் தன் சபையின் அரிய ரத்தினங்களில் ஒன்று என நினைத்தார். அவரைப் பற்றிய எல்லா பெருமையும் தன் பெருமையே என எண்ணினார். குணாட்யருக்கு தனக்கு சமானமான ஆடையும் நகைகளும் அளித்து அணியச் செய்தார். ஒரு முறை தொலைநாடான சீனாவில்  இருந்து வந்த தூதன் ஒருவன் முதலில் குணாட்யரை அரசர் என்று எண்ணி வணங்கி அவரிடம் பேசத் தொடங்கியபோது சபையினர் திடுக்கிட்டனர். ஆனால் அரசர் சிரித்தபடி “அவரும் இந்த நாட்டின் சக்ரவர்த்திகளில் ஒருவர்தான்” என்று சொன்னார். அந்தச் சொற்றொடர் நாடெங்கும் பரவி குணாட்யரின் புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டுசென்றது.

குணாட்யர் எந்த அரசவையிலும் எந்தக் கவிஞரும் எப்போதுமே பெற்றிராத பெரும்புகழையும் இடத்தையும் பெற்று வாழ்ந்திருந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது இது. அரசர் அக்னிபுத்ர சதகர்ணி, பிரதிஷ்டானபுரியின் எந்த அரசரையும் போலவே எழுதவும் படிக்கவும் அறிந்தவர் அல்ல. சொல் பயில்வதற்கு  முன்னரே வில் பயில்பவர்கள் அவர்கள் என்று குறிப்பிடப்படுவது வழக்கம். அவர்களுக்கு மொழியால் செய்யப்படவேண்டிய அனைத்தையும் செய்வதற்கு புலவர்களும் அமைச்சர்களும், கற்றுச்சொல்லிகளும், தூதர்களும் ஏராளமான பேர் இருந்தார்கள். மொழிகளைக் கற்பதும், நூல்களை பயில்வதும் அரசரை மென்மையானவராக ஆக்கிவிடும் என்று நம்பப்பட்டது. ஈட்டியின் மிகக்கூரிய முனை போல் ஒரு நாட்டிற்கே அரசன் அமைந்தாகவேண்டும் என்ற பழமொழி புழக்கத்தில் இருந்தது.

நூல்கள் கற்களால் ஆன உண்மைக்குச் சமானமாக சொற்களாலான ஓர் உண்மையை உருவாக்கிக் காட்டுகின்றன. சொற்களாலான உண்மையை சொல்லறிந்தவர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும். அந்த இயல்பால் சொற்களை அறிந்தவர்கள் அந்த உலகிலேயே திளைக்கவும், பிறவற்றை பொய் என மறுக்கவும் முனைகிறார்கள். கற்களாலான உண்மை எந்த வகையிலும் அவற்றை அறிபவர்களால் மாற்றிக்கொள்ளக் கூடியது அல்ல. பார்ப்பவர் மறைந்து, சொற்களும் அழிந்தாலும் கற்கள் அவ்வாறே நிலைகொள்ளும். அரசன் அறியவேண்டியவை சொற்களாலானான உண்மைகளையே என்று தொன்மையான சாங்கிய நூலான சாமுத்ரிகரின் அர்த்தவின்யாஸம் குறிப்பிட்டது.

சதகர்ணிகள் எப்போதும் சாங்கிய மெய்ஞானத்தையே தங்கள் முதன்மையறிவாகக் கொண்டிருந்தனர். த்வஷ்டமனுவின் குடிவந்தவரும், அசுரர்களுக்கும் நாகர்களுக்கும் முதல்குருவுமாகிய கபில மாமுனிவர் பாதாளத்தில் இருந்து எழுதி அளித்த சாங்கிய சூத்ரங்கள் என்னும் நூலே அவர்களின் முதல்நூல். அந்நகரை நிறுவிய பரமேஷ்டி என்னும் முனிவர் ’தொட்டறியப்படாதவை எல்லாம் உற்றறியவும் முடியாதவையே’ என்று தன்னுடைய சாங்கிய யோகப் பிரபாவம் என்னும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவைகளில் சதகர்ணிகள் அடிக்கடிச் சொல்வதுண்டு. ‘அஸ்பர்ஸ்யமஃபாவ!:’ என்னும் அந்த வரியை தங்களுக்குத் தாங்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளவேண்டும் என்றும் அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அக்னிபுத்ர சதகர்ணியின் பட்டத்தரசி அவரால் வடக்கே காம்போஜத்தில் இருந்து மணம் செய்துகொள்ளப்பட்டவள். காம்போஜத்திடம் சதகர்ணிகள் பலகாலமாக பெண் கேட்டுக்கொண்டிருந்தாலும் சதகர்ணிகள் பிறப்பால் குறைவுபட்டவர்கள் என்று காம்போஜத்தினர் எண்ணினார்கள். அக்னிவர்ணிகள் என அழைக்கப்பட்டிருந்த காம்போஜத்தினர் சிவந்த நெடிய உடலும், கூர்மையான மூக்கும், நீலக்கண்களும் கொண்டவர்கள். அக்னியின் பிறப்பான விபாவசு அவர்களின் முதல் குரு. பிராசீனபர்ஹிஸ் என்னும் தர்ப்பையில் வாழும் அனல் அவர்களின் தெய்வம். அனல் மண்ணிலுள்ளவற்றை எரிப்பது, விண்ணுக்குச் செல்லத் துடித்துக்கொண்டே இருப்பது. ஆகவே மண்ணிலுள்ள தெய்வங்களை வழிபடுபவர்களும், இறந்தால் மண்ணுக்கே திரும்புபவர்களும் ஆன எவரையும் அவர்கள் இழிவானவர்களாகவே எண்ணினார்கள்.

அதிலும் சதகர்ணிகள் நிஷாதர்களிடமிருந்து தோன்றியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததாக இருந்தது. பெண் மறுக்கப்பட்டதும் அக்னிபுத்ர சதகர்ணி தன் படையுடன் கிளம்பிச் சென்று காம்போஜத்தை தோற்கடித்தார். மூன்று நாட்களுக்குள் முறையாக முதல் இளவரசியை மணம் செய்து தராவிட்டால் நகரைச் சூறையாடுவதாக அறிவித்தார். அந்த அச்சுறுத்தல் நிலைகொள்வதற்காக ஒவ்வொரு கால் நாழிகைக்கு ஒருமுறையும் முரசை ஒலிக்கவிட்டு நேரம் குறைந்துகொண்டே இருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தார். இறுதியில் காம்போஜம் பணிந்தது. மூத்த இளவரசி வித்யுத் த்வனியை அவருக்கு முறையாக மணம் புரிந்து கொடுத்தனர். அந்த மண விழா காம்போஜத்தில் மூன்றுநாட்கள் நடைபெற்றது. நகரிலுள்ள அனைவருக்கும் சதகர்ணி விருந்தளித்துப் பரிசுகளும் கொடுத்தார். அரசியுடன் பிரதிஷ்டானபுரிக்குத் திரும்பி வந்தார்.

அந்த வெற்றியை பிரதிஷ்டானபுரி ஏழுநாட்கள் கொண்டாடியது. பன்னிரு சிறு காவியங்கள் அந்த வெற்றியைப் பற்றி காவ்யபிரதிஷ்டானத்தின் கவிஞர்களால் இயற்றப்பட்டன. ‘காம்போஜ விஜயம்,’ ’அக்னி பரிணயம்,’ ‘ஆக்னேயோத்ஸ்வம்,’ ஆகிய மூன்று காவியங்களும் அவற்றில் சிறந்தவை என அறியப்பட்டன. ஏறகனவே சதகர்ணிக்கு ஏழு அரசியர் இருந்தாலும் காம்போஜத்தின் இளவரசி பட்டத்தரசியாக பட்டம் சூட்டப்பட்டாள். அவள் தங்குவதற்கு காம்போஜவிலாசம் என்னும் பெரிய அரண்மனை கோதாவரியின் கரையில் கட்டப்பட்டது. அதற்குத் தனியாகக் காவல்படையும், அரணும் உருவாக்கப்பட்டது. அவை முழுக்க அரசியின் ஆணையில் இருந்தன. அரசர் சதகர்ணியே அரசியிடம் ஒப்புதல் பெற்றுத்தான் அவளைப் பார்க்கமுடியும் என்னும் நிலை இருந்தது.

ஒரு நிலவுநாளில் அரசர் அக்னிபுத்ர சதகர்ணி தன் அரசியுடன் உப்பரிகையில் இளங்காற்றில் அமர்ந்து சரசமாடிக் கொண்டிருந்தார். அரசியின் நான்கு அந்தரங்கமான சேடிகளும் உடனிருந்தார்கள். அரசி காவியங்களிலும் அலங்கார சாஸ்திரத்திலும் பயிற்சி பெற்றவள். ஓவியம் வரைவதிலும் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி கொண்டிருந்தாள். அரசி ‘தோளைத் தொட்டுச் செல்லும் கோதாவரியின் காற்றா கூந்தலில் விளையாடும் நிலவொளியா எது குளிர்ந்த மென்மையான பட்டு?’ என்று அப்போது அவள் உருவாக்கிய ஒரு கவிதை வரியை சொன்னாள். அவளுடைய தோழிகள் அதைப் பாராட்டி ’ஆகா!’ என்ற ஒலி எழுப்பினார்கள்.

அரசர் ஏதேனும் சொல்லவேண்டும் என விரும்பினார். எனக்கு கற்பனைகளைவிட உண்மையே முக்கியமானது என்ற பொருளில் ஏதேனும் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தார். நிலவும் காற்றும் அருவமானவை, நீ தொட்டறியத்தக்கவளாக என் அருகே இருக்கிறாய் என்று கூறவேண்டும் என்று முயன்றார். ஆனால் அதற்குரிய சொற்கள் நினைவுக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அடிக்கடிச் சொன்ன சொல்லாட்சி நாவில் எழுந்தது. ஆனால் அதை ’அஸ்பர்ஸ்யம் அஃபாவம்’ என்று சொல்வதற்குப் பதிலாக நாக்கு தடுமாறி ‘அஸ்பர்ஸ்யம் அனுஃபாவம்’ என்று சொன்னார். அரசி “ஃபவது; அஸ்பர்ஸ்யம் ஃபவான்” என்றாள். அவள் தோழிகள் உரக்கச் சிரித்தபடி விலகி ஓடினார்கள்.

ஏதோ பிழையாகச் சொல்லிவிட்டோம் என்று அரசருக்குப் புரிந்தது. என்ன சொல்லிவிட்டோம் என்று புரியவில்லை. பொதுவாகச் சிரித்துக்கொண்டு அந்தத் தருணத்தைக் கடந்தார். அதன்பின்னரும் அவளுடன் பேசி இரவைக் கழித்தபிறகுதான் திரும்பினார். ஆனால் அவள் கண்களிலும் தோழிகளின் கண்களிலும் சிரிப்பு எஞ்சியிருப்பது தெரிந்தது. அதை எண்ணியபடியே திரும்பி வந்தார். தன் அறையிலும் பிறகு அரசவையிலும் துயருற்றவராகவும் எண்ணங்களில் உழல்பவராகவும் இருந்தார். நாலைந்து நாட்கள் ஆகியும் அந்த தனிமையும் துயரும் நீடிப்பதைக் கண்டு அமைச்சர்கள் விசாரித்தாலும் ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டார்.

எட்டு நாட்களுக்குப் பிறகு தன் அவையிலேயே மிக வயதில் இளையவனாகிய ஒரு பிராமணப் பண்டிதனை அழைத்து அவனிடம் சாதாரணமாக விசாரிப்பதுபோல அதன் பொருளைக் கேட்டார். “இது ஒரு நாடகத்தில் வரும் காட்சி. ஓர் ஆணும் பெண்ணும் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றார்.

அவன் “கல்வி கற்றவளாகிய ஒரு பெண் கல்வியில்லாத காட்டுமிராண்டியான ஒருவனை இவ்வாறு ஏளனம் செய்கிறாள்” என்றான்.  “அவள் சொன்ன கவிதைவரியை புரிந்துகொள்ளாமல் அவன் தீண்டத்தகாதவற்றின் மேல் கருணை காட்டவேண்டும் என்கிறான். அவள் ஆம், தீண்டத்தகாதவர் தாங்களே என்கிறாள்” என்றான்.

அதன்பிறகு பேசமுடியாமல் சதகர்ணி நடுங்கத் தொடங்கினார். அவனை அனுப்பிவிட்டு அப்படியே தன் படுக்கையறைக்குச் சென்று படுத்துவிட்டார். எட்டு நாட்கள் அவர் உடலில் காய்ச்சல் இருந்தது. தூக்கத்திற்கு விழிப்புக்கும் நடுவே அவர் அலைக்கழிந்தார். ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தார். அஸ்பர்ஸ்யம் என்னும் சொல் அடிக்கடி வந்ததை வைத்து ஏதோ பிசாசை அவர் கண்டு அஞ்சிவிட்டதாக அரசவை மருத்துவன் சொன்னான்.

அவன் அளித்த மருந்துகளால் தொடர்ச்சியாக இரவும் பகலும் தூங்கி, எட்டு நாட்களுக்குப் பின் தேறிவந்தார். அரசவைக்குச் செல்வதை தவிர்த்து தன் படுக்கையறையிலேயே இருந்த அவர் தலைமைப் புலவர் குணாட்யரை அங்கே வரவழைத்தார். அவரிடம் நிகழ்ந்ததைச் சொன்னார். “நான் வரும் மூன்று மாத காலம் என் நாட்டை பார்ப்பதற்காக படைகளுடன் செல்லப்போகிறேன். திரும்பி வரும்போது நான் சம்ஸ்கிருத மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் செய்யுள் இயற்றவும் கற்றிருக்கவேண்டும். அரசியை மீண்டும் சந்திக்கும்போது நான் சம்ஸ்கிருதம் அறிந்தவனாக இருக்கவேண்டும்” என்றார்.

குணாட்யர் மென்மையாக புன்னகைத்து “தேசபரியடனம் என்னும் அந்நிகழ்வை மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தெற்கே நம் எல்லையில் அமராவதி வரைக்கும் சென்று வரலாம். அதற்குள் சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் செய்யுட்களை புரிந்துகொள்ளவும் பயில முடியும்… பிழையற்ற செய்யுள் எழுதவேண்டும் என்றால் மீண்டும் ஒரு மூன்றாண்டுக்காலம் தேவை” என்றார்.

அரசர் மனம் சோர்ந்து “அவ்வளவு கடினமா?” என்றபின் தேவையில்லை என தலையசைத்தார்.

குணாட்யர் திரும்பிச் செல்லும்போது தன் மாணவர்களிடம் அரசர் கேட்டதைப் பற்றிச் சொல்லிச் சிரித்தார். “மூன்று மாதங்களில் கற்கத்தகுந்த அறிவை வைத்துக் கொண்டுதான் கவிஞர்களும் புலவர்களும் இங்கே வைரங்கள் அணிந்து தங்கப்பூணிட்ட பல்லக்கில் அலைகிறார்கள் என்று எண்ணியிருக்கிறார், பாவம்” என்றார்.

“நாம் அவரிடம் ஒரு மாதத்தில் போர்க்கலைகள் அனைத்தையும் கற்கமுடியுமா என்று கேட்கலாம்” என்றார் குணதேவர்.

“பதினைந்து நாட்களில் கருவுற்று குழந்தைபெற வழியுண்டா என்று கேட்பது இன்னும் சிறந்தது” என்றார் நந்திதேவர்.

அவர்களின் மாணவர்கள் நடுவே அரசரின் அந்த அறியாமை ரகசியக் கேலியாக உலவியது. குணாட்யர் அதை மறந்துவிட்டார். ஆனால் நகரமே அதைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டிருந்தது. ஒற்றர்கள் வழியாக அது அரசரின் செவிகளுக்கும் வந்தது. அரசர் அதை வெளியே சொல்லமுடியாமல் உள்ளம் புழுங்கினார்.

ஒரு வாரம் கழித்து அவையில் எழுந்த ரத்னாகரர் “அரசே, இந்த அவையில் என் தோழரான சர்வ வர்மன் என்னும் அறிஞனை அறிமுகம் செய்ய என்னை அனுமதிக்கவேண்டும்… இவர் அடிப்படை மொழியறிவு இல்லாத ஒருவருக்கு மூன்று மாதங்களில் சொல், எழுத்து, பொருள், அணி, யாப்பு ஆகியவற்றைக் கற்பித்து அவரை மொழியறிஞராக ஆக்கும் ஆற்றல் கொண்டவர்” என்றார்.

தலைமைப் புலவர் ஆனபின் குணாட்யரால் எந்தவகையிலும் பொருட்படுத்தப்படாத மனத்தாங்கல் குணாட்யர் மேல் ரத்னாகரருக்கு இருந்தது. தன் அலங்காரசாஸ்திர நூலை அரங்கேற்றம் செய்ய குணாட்யர் உதவவேண்டும் என்று அவர் வந்து கோரியபோது அந்நூலில் நூற்றிப்பதினெட்டு பிழைகள் உள்ளன என்று சொல்லி குணாட்யர் தவிர்த்துவிட்டார்.

ரத்னாகரர் சொல்வதென்ன என்று சபையில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அரசர் சீற்றம் அடைந்து “இது விளையாடுவதற்குரிய சபை அல்ல” என்றர்.

ரத்னாகரர் “அவ்வாறு தன்னால் கற்பிக்க முடியாமல் போனால் தன்னை அரசர் தலைவெட்டிக் கொல்ல ஆணையிடலாம் என்கிறார். அவர் க்ஷத்ரியர் ஆனதனால் அவ்வாறு செய்ய நூல் ஒப்புதலும் உண்டு” என்றார்.

“அவர் அரசவைக்கு வரட்டும்” என்று அரசர் சொன்னார்.

குணாட்யர் அதுவரை அதைக் கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அரசர் அனுமதித்ததும் அவர் எரிச்சலுடன் எழுந்து “சபையை ஏமாற்ற நினைப்பவர் அந்த மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை… இந்த மண்ணில் எவராலும் எவருக்கும் மூன்றுமாதங்களில் சம்ஸ்கிருதத்தை முழுமையாகக் கற்பிக்க முடியாது” என்றார்.

அரசர் “அவர் சபைக்கு வரட்டும். ஏமாற்ற எண்ணினால் அவர் தன் தலையை இழப்பார்…” என்றார். “இந்த உலகம் மிகப்பெரியது. இங்கே முடிவில்லாமல் விந்தைகள் உள்ளன. முடிவில்லாமல் சாத்தியங்களும் உள்ளன.”

ரத்னாகர் சர்வவர்மனை அவைக்குக் கூட்டிவந்தார். கட்டான உடலுடன் போர்வீரர் போலிருந்த சர்வ வர்மன் க்ஷத்ரியர்களுக்குரிய ஆடையும் இரும்புநகைகளும் அணிந்திருந்தான்.

அரசர் அவனிடம் “இங்கே ரத்னாகரர் சொன்னது உண்மையா? மூன்று மாதங்களில் ஒருவருக்கு உங்களால் சம்ஸ்கிருதமொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்பிக்க முடியுமா?” என்றார்.

“மூன்றுமாதம்கூட தேவையில்லை, ஓரிரு நாட்கள் குறையலாம்” என்றான் சர்வ வர்மன்.

அந்த அலட்சியத்தைக் கண்ட குணாட்யர் கடும் சீற்றத்துடன் “எந்த மனிதனாலும் அது இயலாது… என் சொற்கள் மேல் ஆணை” என்றார்.

“என்னால் முடியும். என் சொற்கள் மேல் ஆணை” என்று சர்வவர்மன் சொன்னான்.

“நீ தோற்றால் நீ சாகவேண்டியதில்லை. ஆனால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க நீ என் மிதியடிகளை உன் தலையில் கிரீடம்போல அணிந்திருக்கவேண்டும். சம்மதமா?” என்று குணாட்யர் கேட்டார்.

“சம்மதம். நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள்?”என்று அவன் கேட்டான்.

“நான் தோற்றால் நான் அறிந்த எல்லா மொழிகளையும் முழுக்கவே மறப்பேன் என்று உறுதி சொல்கிறேன்.” என்றார் குணாட்யர்.

“நீங்கள் மொழிகளை மறப்பதற்கு யார் சாட்சி?” என்று சர்வ வர்மன் கேட்டான்.

குணாட்யர் அத்தருணத்தில் தோன்றிய வெறியுடன் முன்னால் வந்து “நான் தோற்றால் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் என் இரு கண்களையும் காதுகளையும் குத்திக்கொள்வேன். கத்தியால் என் நாக்கை அரிந்து வீசுவேன். எந்த மொழியும் எனக்குள் வராது, எந்த மொழியும் என்னைவிட்டு வெளியே ஒலிக்காது” என்றார். தன் ஏட்டுப்பெட்டி மேல் கையை வைத்து “ஆணை! ஆணை! ஆணை!” என்று கூவினார்.

சபை திகைத்துவிட்டது. எவராலும் எதுவும் பேசமுடியவில்லை. முதன்மைக் கவிஞரான புஷ்பவாசர் மட்டும் அருகில் இருந்தவருடன் “நல்லது, உயிர்தப்பினான். குணாட்யரின் மிதியடிகளை எப்படி அவனுக்கான தலையணியாகச் செய்வது என்றுதான் இனிமேல் யோசிக்கவேண்டும்” என்றார்.

அவையில் இருந்து தன் இல்லத்துக்கு செல்லும்போது குணாட்யர் தன் மாணவர்கள் சர்வவர்மன் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளம் அமைதியிழந்திருந்தது. ஏதோ ஒன்று விரும்பத் தகாததாக நிகழவிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த அமைதியின்மை அதன்பின் ஒவ்வொரு நாளும் கூடிக்கூடி வந்தது.

மறுநாளே சர்வசர்மன் அரசருடன் நகருக்கு வெளியே இருந்த குடிலில் குடியேறினான். அங்கே அவன் அரசருக்குக் மொழிப்பாடங்களைக் கற்பிக்கிறான் என்று ஏவலர்கள் சொன்னார்கள். ஆனால் அவன் கற்பிக்கும் முறை விசித்திரமானதாக இருந்தது. அவன் இரவும் பகலும் எந்நேரமும் அரசரின் அருகிலேயே இருந்தான். ஆட்சிப்பணிகளை நிறுத்திவிட்டு அரசர் பகல் முழுக்க கல்விக்காக அளித்தார். சர்வவர்மன் அரசரின் அருகே இருந்து அவர் செவியில் பாடங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான்.  அரசர் அவற்றை கவனிக்கவோ, பதில் சொல்லவோ வேண்டியதில்லை. ஆனால் வேறு எவரும் எக்காரணம் கொண்டும் அரசரிடம் பேசக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது.

நீராடும் போதும், உணவு அருந்தும்போதும், பெண்களுடன் கூடும்போதும்கூட அவன் அவர் காதில் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் இரவில் தூங்கும்போதும் அவன் அருகே அமர்ந்து பாடங்களைச் சொன்னான். பின்னிரவில் சர்வசர்மன் தூங்க வேண்டியிருந்தபோது ரத்னாகரர் அந்தப் பாடங்களை அரசரின் அருகே அமர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாடங்கள் காதில் விழாத நேரமே இருக்கவில்லை. ஓரிரு நாட்களிலேயே அரசரின் உதடுகள் எப்போதும் தானாகவே அசைந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கத் தொடங்கின.

என்ன நிகழ்கிறது என்றே குணாட்யரால் உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கு ஆறுநாட்களுக்கு முன் அரச சபைக்கு வந்த அரசர் தனக்கு சம்ஸ்கிருத மொழி நன்கு தெரியும் என்றும், செய்யுள் இயற்றமுடியும் என்றும், அவையில் யார் வேண்டுமென்றாலும் தன்னை சோதனைசெய்து பார்க்கலாம் என்றும் சொன்னார். சபையில் இருந்த எவரும் எழுந்து எதையும் கேட்க துணியவில்லை. அனைவரும் குணாட்யரைப் பார்த்தனர்.

குணாட்யர் எழுந்து “செந்நிற இதழ்கொண்ட மலரின் புல்லிவட்டம் கருமைகொண்டிருப்பது எவரிட்ட சாபம்?” என்று ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகளைச் சொன்னார்.

அரசன் புன்னகைத்து “தம்பமும் கேசரங்களும் கருமையென வெளிப்படுவதனால் அல்லிகள் மகிழ்ந்து சிவக்கின்றன என்பதாலா?” என்று ஈரடியைச் சொல்லி அக்கவிதையை முடித்தான்.

குணாட்யர் அதன் பின் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. பின்னர் சட்டென்று எழுந்து கைகளைக் கூப்பி அவையை வணங்கிவிட்டு வெளியே நடந்தார்.

அரசன் பதறி எழுந்து தூய சம்ஸ்கிருதத்தில் “அவைக்கவிஞர் குணாட்யர் என் மேல் பெரும்பழியை ஏற்றி வைக்கலாகாது… இங்கே நீங்கள் சொன்ன வஞ்சினத்தை நான் நிராகரிக்கிறேன்… இந்த அவையே உங்களிடம் மன்றாடுகிறது” என்று கெஞ்சியபடி பின்னால் சென்றான். “உங்கள் மொழி தெய்வங்களால் அருளப்பட்டது… அதை அழிக்க உங்களுக்கு உரிமை இல்லை. இந்த நாட்டின்மேல் பெரும் சாபத்தை விட்டுச்செல்கிறீர்கள் புலவரே” என்று கைகூப்பி அழுதான்.

ஆனால் அந்தச் சபையில் ஒருவர் கூட எழுந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவர் செல்வதை கண்களால் தொடர்ந்தபடி பொம்மைகள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2025 11:33

ரம்யா

எழுத்தாளர், நீலி இணைய இதழின் ஆசிரியர், நீலி பதிப்பக உரிமையாளர் ரம்யா 8 ஜூன் 2025 அன்று நிகழும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் கலந்துகொள்கிறார். சோ.விஜயகுமார் இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதைப் பெறுகிறார்.

ரம்யா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2025 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.