Jeyamohan's Blog, page 95

June 8, 2025

மா.சின்னு

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய உரை நூல்களை எழுதினார். ‘நொய்யல் அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ தொடங்கி பல நற்பணிகளை மேற்கொண்டார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றார்.

மா.சின்னு மா.சின்னு மா.சின்னு – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 11:33

காவியம் – 49

யக்ஷன், சாதவாகனர் காலம் பொயு2 மதுரா அருங்காட்சியகம்

கானபூதி என்னிடம் சொன்னது. “நான் என்னிடம் முனிவனாகிய வால்மீகி சொன்னவற்றை சொல்கிறேன். இங்கே ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளில் ஒரு கதை இது. ஒரு கதை என்பது ஒரு கதைக்கொத்து. எல்லாக் கதையும் அப்படித்தான்.”

“வால்மீகி சொன்ன கதை எது? அவருடைய கதையா?”

”அவர் தன் கதையில் இருந்து தொடங்கினார்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது. “வால்மீக குலத்தில் மரன் என்ற பெயருடன் பிறந்த வால்மீகி ஐந்து வயது முதல் தன் தந்தையுடன் வேட்டைக்குச் செல்லத் தொடங்கியவர். தந்தையிடமிருந்து வேட்டையின் திறன்களையும், காட்டின் செய்திகளையும் அறிந்துகொண்டார். சிறந்த வேட்டைக்காரனாக அவர் வரக்கூடும் என்று அவருடைய குலத்தில் அறியப்பட்டார். ஆனால் பத்து வயதில் அவர் தனக்கே இருக்கும் ஒரு திறமையைப் பற்றி உணர்ந்துகொண்டார். அதை ஒரு விளையாட்டாக அதுவரை கருதிவந்தார், பிறரும் அவ்வாறே எண்ணினர். அது பிறரிடமில்லாத ஒரு சிறப்பு என அப்போதுதான் உணர்ந்தார்.”

மரன் குரல்களை நினைவுகொள்வதில் அவர்கள் அனைவருமே திகைத்துப்போகும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தான். ஒரே ஒருமுறை ஒரு குரலைக் கேட்டால் கூட எத்தனை காலம் கழித்தும் அப்படியே அந்தச் அச்சொற்களை திரும்பச் சொல்ல முடிந்தது. தனக்கு ஒரு சொல்கூட புரியாத சொற்றொடர்களைக்கூட அப்படியே திரும்ப ஒலித்தான். ஒருமுறை அவர்கள் வேட்டைக்குச் சென்றபோது மனிதக்குரல் கேட்டு பதுங்கிக் கொண்டார்கள். அவ்வழியாகச் சென்ற ஷத்ரியப் படைவீரர்கள் தொடர்ச்சியாக மாறிமாறிப் பேசிக்கொண்டு சென்றனர். அந்த மொழி அவர்கள் எவருக்கும் புரியவில்லை.

அவர்கள் திரும்பி வந்து ஷத்ரியர்கள் காட்டின் வழியாகச் சென்றதைப் பற்றியும், அவர்கள் பேசியதைப் பற்றியும் சொன்னார்கள். அவர்கள் பேசியதென்ன என்று குலப்பூசாரியான கீடர் கேட்டார். அவர்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் சிறுவனாகிய மரன் அந்த மொத்த உரையாடலையும் அப்படியே திரும்பச் சொன்னான். க்ஷத்ரியர்களின் மொழியை அறிந்திருந்த கீடர் அந்த உரையாடலை அவரே நின்று கேட்பதுபோல உணர்ந்தார். அருகே இருந்த கோசலநாட்டின் அரசன் அங்கே வேட்டைக்கு வரவிருப்பதாகவும், அப்பகுதியில் நீரோடைகளுக்கு அருகே அவன் தங்குவதற்கான கூடாரங்களை அமைப்பதற்குரிய இடங்களைத் தேடி அவர்கள் வந்ததாகவும் அவர் புரிந்துகொண்டார்.

அரசர்கள் வேட்டையாட வரும்போது அங்குள்ள மலைக்குடிகள் வீடுகளை கைவிட்டுவிட்டு காட்டின் ஆழத்திற்குள் சென்று மலைக்குகைகளில் பதுங்கிக் கொள்ளவேண்டும் என்பது வழக்கம். அவர்கள் சமைக்கக் கூடாது, புகை காட்டிக்கொடுத்துவிடும். கரடி அல்லது செந்நாய்களின் உலர்ந்த மலத்தை நீரில் கரைத்து தங்கள் ஆடைகளிலும் தாங்கள் செல்லும் வழியிலும் தெளித்துக்கொள்ளவில்லை என்றால் வேட்டைநாய்கள் தேடிவந்துவிடும். குழந்தைகள் அழுதாலும் கேட்காத தொலைவுக்குச் செல்லவேண்டும். குழந்தைகளுக்கு தேனை நிறையக் கொடுத்து அவர்களை தூக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும்.

அவர்கள் மலைகளில் ஊற்றுகள் உள்ள குகைகளில் பதுங்கிக்கொள்வது வழக்கம். வால்மீகி குலம் அதற்கென்று பல குகைகளை கண்டு வைத்திருந்தது. செல்லும்போது உலர்ந்த உணவு நிறைய வைத்திருக்க வேண்டும். அரசர்கள் எவ்வளவு நாட்கள் தங்குவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அரசர்கள் வேட்டையின்போது மலைக்குடிகளையும் விலங்குகள் போலவே அம்பெய்து கொன்று வீழ்த்துவார்கள். கிராமங்களை முழுமையாகவே எரித்து அழிப்பார்கள். சில சமயம் வேட்டைக்கு வந்த வீரர்கள் அன்னையரைக் கொன்றுவிட்டு குழந்தைகளை மட்டும் பிடுங்கி கொண்டுசென்று ஊரிலுள்ள விவசாயிகளுக்கு அடிமைகளாகக் கொடுத்துவிடுவார்கள். தங்கள் அம்புத்திறனை சோதித்துப்பார்ப்பதே அவர்களை எய்து வீழ்த்தித்தான்.

அவர்கள் உடனே ஊரிலிருந்து கிளம்பினார்கள். பெண்களும் குழந்தைகளும் அடர்ந்த காட்டுக்குள் இருந்த மலைக்குகை ஒன்றுக்குள் சென்றனர். ஆண்கள் உணவுப்பொதிகளைச் சுமந்தபடி தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்கிய குடில்கள் இருப்பது தெரிந்தால் அப்பகுதியில் அவர்கள் வாழ்வது தெரிந்துவிடும் என்பதனால் சிலர் மட்டும் தங்கி சிதல்புற்றுகள் போல கட்டப்பட்டிருந்த மண்வீடுகளின் மேல் மண்ணை அள்ளிக் குவித்து, அவற்றின்மேல் புல்விதைகளைத் தூவி, நீரூற்றி முளைக்க வைத்தனர். அதன்மேல் சருகுகளையும் குவித்து, வேட்டைநாய்கள் அங்கே வராதபடி சிறுத்தை மலம் கலந்த நீரையும் தெளித்துவிட்டு வந்தனர்.

அவர்களின் மூதாதையர் வாழ்ந்த அந்தக் குகைகளுக்குள் நுணுக்கமான ஓவியங்கள் நிறைந்திருந்தன. அவர்களின் கனவுகளில் வந்துகொண்டே இருக்கும் ஓவியங்கள் அவை. அவற்றில் தெளிந்த அழகிய கண்களும், இனிய சிரிப்பும் கொண்ட ஓர் உருவம் அவர்களை நோக்கிப் பேசமுயல்வதுபோல இருந்தது, அது கனவுகளில் அவர்களுடன் பேசியது.

அவர்கள் குகைகளில் தங்கியிருக்கையில் அரசன் வேட்டையாட வருவது பற்றிய தகவல் எப்படித் தெரிந்தது என்று பேசியபோது மரன் அந்தப் பேச்சை அவர்களுக்காக பலமுறை அப்படியே திரும்பச் சொன்னான். அவர்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது கீடன் “இவனுக்கு மொழி நன்றாக வருகிறது” என்றார்.

“மொழி என்றால் என்ன?” என்றான் மரன்.

“இதோ வெளியே இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக ஒரு ஓசையை பதிலாக வை. ஒவ்வொரு கல்லுக்கும் மண்ணுக்கும் ஒரு ஓசையை வை. அந்த ஓசைகளாலான ஓர் உலகம் உள்ளது. அதுதான் மொழி” என்றார் கீடர்.

மரன் மனம் மலைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

“அந்த உலகத்தைத்தான் நம் மூதாதையர் இந்தக் குகைகளுக்குள் வரைந்திருக்கிறார்கள்…” என்றார் கீடர்.

குகைக்குள் அவர்கள் எவரும் செல்வதில்லை. மரன் குகைக்குள் பிரிந்து பிரிந்து சென்றுகொண்டே இருந்த கிளைகளுக்குள் அலையத் தொடங்கினான். மொழி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான். ஒருநாள் நேருக்குநேர் பார்க்கப்போகும் ஒரு தெய்வத்தை எண்ணிக்கொள்வதுபோல. அங்கே அவன் தன்னை பிற்கால வாழ்க்கை முழுக்க தன்னை ஆட்சி செய்த தெய்வத்தை ஓவியத்தில் கண்டான், அன்றே கனவுக்குள்ளும் அதைக் கண்டுவிட்டான். அங்கே தங்கியிருந்த சில நாட்களிலேயே அவனுக்குள் பிறகு அவன் கண்டடைந்த அனைத்தும் நுழைந்து நிறைந்துவிட்டன.

ஆனால் தன்னால் பறவைகளின் ஓசைகளையோ, விலங்குகளின் ஓசைகளையோ நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை என்று அவன் அறிந்தான். தன்னுடையது மானுடமொழி மட்டுமே என்று புரிந்து கொண்டான். பிறகுதான் தன் ஆர்வம் சொற்களில் அல்ல, பொருளில் என்று உணர்ந்து கொண்டான். அதை தத்துவம் என்றும், ஞானம் என்றும் உணர்ந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் ஆகியது. அதுவரை அவன் சொற்களைக் கற்றுக்கொள்வதில் பித்தாக இருந்தான். எப்போதும் ஊர்களின் விளிம்புகளிலேயே சுற்றியலைந்தான். உடலில் பச்சைநிறம் பூசிக்கொண்டு புதர்களுக்குள் அசையாது ஒளிந்திருந்து மக்கள் பேசுவதைக் கேட்டான். நிஷாதர்கள் அனுமதிக்கப்படும் சந்தைகளுக்குச் சென்று அங்கே வணிகர்கள் பேசுவதைக் கேட்டான்.

இருபத்தெட்டு வயதில் அவன் பன்னிரு மொழிகளின் எட்டு லட்சம் சொற்களை அறிந்தவனாக இருந்தான். அந்தச் சொற்கள் அவன் உள்ளத்திற்குள் குவிந்து அவன் தலையை எடைகொண்டவனாக ஆக்கின. அவனால் தலையைத் தூக்கவே முடியவில்லை. எவருடைய கண்களையும் பார்க்க முடியவில்லை. பிறரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். பேசியபோது அவன் என்ன சொல்கிறான் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அறியாத சொற்கள் அதில் நிறைந்திருந்தன. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கியபோது அவனை நிழல்கள் பிடித்துக்கொண்டுவிட்டன என்று அவனுடைய குலத்தவர் சொன்னார்கள்.

நிழல்களால் பிடித்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பூசாரிகள் பலவகையான மீட்புச் சடங்குகளைச் செய்வதுண்டு. தெய்வங்களுக்குப் பலிகொடுத்து வேண்டிக்கொள்வது, நோன்புகள் நோற்கச் செய்வது, தொலைவில் இருந்த மாய ஊற்றுக்களுக்குக் கூட்டிச்சென்று நீராடவைப்பது. அனைத்துக்கும் பிறகும் மரன் சித்தம் பிறழ்ந்தவனாகவே இருந்தான். அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்களின் பெருக்கு அவன் வாயில் தன்னிச்சையாக வெளிவந்தபடியே இருந்தது. அவன் தூக்கத்திலும் பேசிக்கொள்ளலானான். ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை கைவிட்டனர்.

மரன் அந்தக்காட்டிலேயே அலைந்து திரிந்தான். கிடைக்கும் உணவுகளை உண்டான், உடல் ஓய்ந்தபோது படுத்தான். பெரும்பாலும் ஊர்களின் எல்லைகளிலேயே அவன் இருந்தான். சிலர் அவனை கல்லால் அடித்து துரத்தினார்கள். சிலர் ஏதாவது உணவை எறிந்து கொடுத்தார்கள். அவன் முடி வளர்ந்து சடையாகியது. உடலில் அணிந்திருந்த தோலாடைகள் மட்கி உடலோடு ஒட்டிக்கொண்டன. உடலில் இருந்து மட்கும் இலைகளின் வாடை எழுந்தது. அவனை மக்களில் சிலர் பைசாசிகன் என்றும் அழைக்கலாயினர்.

அந்நாட்களில் ஒருமுறை மரன் காட்டின் விளிம்பில் புதருக்குள் அமர்ந்திருந்தபோது ஒரு குரலைக் கேட்டான். அது பாடிக்கொண்டிருந்தது, ஆனால் எந்தச் சொல்லும் இல்லை. சொற்களையே கேட்டு, சொற்களில் மூழ்கியிருந்த அவன் சித்தம் அதைக்கேட்டு திகைத்தது. அதைச் சொற்களாக ஆக்கிக்கொள்ள அவன் அகம் தவித்தது. அதில் தோற்றுச் சலித்ததும் அவன் அருகே இருந்த ஒரு கல்லை எடுத்துக்கொண்டு வெறியுடன் கூச்சலிட்டபடி அந்த இசையை எழுப்பிக்கொண்டிருந்தவரை நோக்கி ஓடினான்.

நாரதமரபு என்று சொல்லப்படும் சொற்கள் இல்லாத பாடல்முறையை நாதயோகமாக பயின்றுவந்த ஒரு துறவி அவர். நாரதர் என்னும் அடைமொழியை அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள். சுருதநாரதர் அவன் ஓடிவருவதைப் பார்த்து பாடியபடியே புன்னகையுடன் நின்றார். அவன் அருகே வந்து அவரைப் பார்த்தபடி நின்றபின், அந்தக் கல்லை கீழே போட்டான். பிறகு குழறியகுரலில் ”அது என்ன மொழி?” என்று கேட்டான்.

அவன் நான்கு மொழியின் வெவ்வேறு சொற்களைக் கலந்து அவ்வாறு கேட்டான். நான்கு மொழியையும் அறிந்திருந்த சுருதநாரதர் “நான் பாடுவதுதான் ஆதிமொழி. கைக்குழந்தைகளின் மொழி. விலங்குகளின் மொழி, உனக்கு வலித்தாலோ, மட்டற்ற மகிழ்ச்சி அமைந்தாலோ உன் உதடுகள் பேசும் மொழியும் இதுதான். ஆற்றுப்பெருக்கு தேங்கி குளங்களாக ஆவதுபோல இந்த மொழியைத் தான் துண்டுகளாக ஆக்கி சொற்களாக மாற்றியிருக்கிறார்கள்” என்றார்.

அவன் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான். பின்னர் அவர் முன் பணிந்து கண்ணீருடன் “என்னைச் சொற்களில் இருந்து விடுவியுங்கள்” என்றான்.

”ஆட்கொள்ளும் எதுவும் தெய்வமே” என்று சுருதநாரதர் சொன்னார். “நீ அந்த தெய்வத்தை தவம் செய். அது உனக்கு அருளும்”

“எனக்குத் தவம் செய்யத் தெரியாதே… எனக்குக் கற்றுக்கொடுங்கள்”

“தவம் செய்யத் தெரியாத உயிர்களே இல்லை. முட்டைமேல் அமர்ந்திருக்கும் பறவைகூடத்தான் தவம் செய்கிறது. கூட்டுப்புழு தவம் செய்கிறது” என்றார் சுருதநாரதர். “உன்னைக் குவித்துக்கொள், அதுதான் தவம். ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொல். அது ஒரு சரடுபோல ஆகி அனைத்துச் சொற்களையும் கோத்து உனக்கு ஒரு சீரான மனத்தை உருவாக்கித் தரும், அதுதான் மந்திரம்”

“எந்த மந்திரம்… எனக்கு மந்திரம் உபதேசியுங்கள்” என்று மரன் கேட்டான்.

“நீ தான்தோன்றி. உனக்கு இன்னொருவர் சொல்லும் மந்திரம் தேவையில்லை. உன் செவியில் நீ கேட்ட முதல் சொல்லே உன் மந்திரம்.”

“என் அம்மா நான் கைக்குழந்தையாக இருக்கும்போது என் பெயரை என் செவியில் சொன்னாள். அதை நான் நினைவு வைத்திருக்கிறேன்…”

“அதையே சொல்” என்று சுருதநாரதர் வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அதன் பின் மூன்று ஆண்டுக்காலம் மரன் தன் பெயரையே இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தத் தவம் முழுமையடைந்தபோது துவர்க்கும் கனி இனிப்படைவதுபோல அவர் கனிந்தார். காட்டில் இருந்து கிளம்பி ஊர்களுக்குள் சென்றார். அவருடைய ஞானத்தால் அவர் முனிவரானார். முனிவர்களுக்கு மூலம் இல்லை என்பதனால் அவர் எவர் என்று யாரும் கேட்கவில்லை. செல்லுமிடங்களில் அவர் கேட்ட எல்லா நூல்களையும் அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சரயு நதியின் கரையில், சித்ரகூட மலைக்குச் செல்லும் வழியில் தன் ஆசிரமத்தைக் கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். அவருக்கு வால்மீகி முனிவர் என்ற பெயர் அமைந்துவிட்டிருந்தது. பதினெட்டு மாணவர்கள் அவருடன் இருந்தனர். அப்போது ஒருநாள் கோசலத்தை ஆட்சி செய்த தசரதனின் மகனாகிய ராகவ ராமன் தன் அரசுப்பட்டத்தை துறந்து, மனைவி சீதையுடனும் தம்பியுடனும் அவ்வழியாக சித்ரகூடம் சென்றான். அவன் வால்மீகியைப் பற்றி அறிந்து ஓர் இரவு அவருடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டான். வால்மீகி அவனை விருந்தினருக்கான குடிலில் தங்கவைத்தார். அந்தியில் அவருடைய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டபின் அவர்கள் மறுநாள் காலையில் சித்ரகூடத்திற்குச் சென்றனர்.

பின்னர் நீண்டநாட்கள் கழித்துத்தான் அவர் சீதையைக் கண்டார். அந்த கால இடைவெளியில் நிகழ்ந்தவை எவற்றையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருநாள் அவர் தன் மாணவர்களுடன் சரயுவில் நீராடச் சென்றபோது அங்கே நாணல்களின் நடுவே ஒரு பாறையில் கருவுற்றவளவான ஒரு பெண் உடலைக் குறுக்கிக்கொண்டு, மரவுரியால் தலையை போர்த்தியபடி, அமர்ந்திருப்பதைக் கண்டார். அவள் யார் என்று பார்க்க அவர் தன் மாணவர்களை அனுப்பினார். அவர்கள் வந்து அது அயோத்தியின் அரசன் ராகவ ராமனின் மனைவி சீதை என்றும், காட்டுக்குள் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அவர் பதறிப்போய் அருகே சென்று அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டுவந்து தன் ஆசிரமத்தில் தங்கச் செய்தார்.

சீதையை மனம் தேற்றி பேசவைக்க பலநாட்கள் ஆகியது. அவளிடமிருந்துதான் அவர் அனைத்தையும் தெரிந்துகொண்டார். அவள் விதேகநாட்டின் அரசரும், வேதஞானியுமாகிய ஜனகரின் வளர்ப்பு மகள்.  தனக்கு ஒரு மகன் இல்லாததனால் அதர்வவேத நெறிப்படி புத்ரகாமேஷ்டி வேள்வி ஒன்றைச் செய்ய எண்ணினார். அந்த வேள்வி கன்னிநிலம் ஒன்றில்தான் செய்யப்பட முடியும் என்பதனால் தொலைவில் இருந்த கோரைப்புல் செறிந்த காடு ஒன்று அதற்காகக் கண்டடையப்பட்டது. அந்நிலத்தை உழுது புரட்டும் பணியை முதல் கொழு பிடித்து அவர் தொடங்கி வைத்தபோது புதருக்குள் ஓர் அழுகுரல் கேட்டது. அவர் புதர்களுக்குள் சென்று பார்த்தபோது அங்கே பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைப் பெற்றபின் இறந்திருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையே தன் வேள்வியின் பயன் என்று எண்ணி அதை எடுத்துவந்து தன் மகளாக்கிக் கொண்டார்.

அந்தக் குழந்தை வராஹியை தெய்வமாக வழிபடுபவர்களும், கலப்பைக் கொழுவை குல அடையாளமாகக் கொண்டவர்களுமாகிய மிருத்திகர் என்ற தொல்குடியைச் சேர்ந்தது என்று இறந்த பெண்ணின் உடலில் இருந்த பச்சைகுத்திய அடையாளங்களில் இருந்து தெரிந்தது. கர்ப்பிணியான அவள் வழிதவறி அங்கே வந்து இறந்திருக்கிறாள். மிருத்திகர்கள் தொன்மையான அசுரகுடியைச் சேர்ந்தவர்கள். மிருத்திகாவதி என்னும் அசுரநகரம் மண்ணில் விழுந்து சிதறியபோது தெறித்த துண்டுகளில் ஒன்று தங்களுடையது என்பது அவர்களின் நம்பிக்கை. நிஷாதகுலத்தைச் சேர்ந்த அக்குழந்தையை அரசர் இளவரசியாக ஆக்கமுடியாது என்று அந்தணர்களும் அமைச்சர்களும் சொன்னார்கள்.

ஆனால் ஜனகர் வேதங்களையும் உபவேதங்களையும் கற்றவர். அவருடைய ஏழுதலைமுறை முன்னோர் அதர்வவேத அறிஞர்களாக திகழ்ந்தார்கள். அவர்களின் சபையில் வேதவிவாதங்கள் பலநூறாண்டுகளாக நடந்துவந்தன. அதர்வவேத நெறிகளின்படி அவளை தன் மகளாக ஏற்றுக்கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று அவர் சொன்னார். அவர் வேதத்தின் “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்ற முதல் மந்திரத்தைச் சொன்னபடி கொழுவைப் பிடித்த அதே கணத்தில்தான் குழந்தையின் அழுகையைக் கேட்டார். அதுவே அக்குழந்தை அவர் மகள் என்பதற்கான வேதங்களின் ஏற்பு என்று சொன்னார்.

சில மாதங்கள் நீண்ட அந்த விவாதம் ஜனகர் ஒரு பெரிய பூதவேள்வியை நிகழ்த்தி, அதில் தர்ப்பைப்புல்லில் இந்திரன் முதலிய தேவர்களை நேரில் வரவழைத்து, குழந்தைக்குப் பெயரிடச் செய்ததுடன் அடங்கியது. வராகியின் பெயர்களில் ஒன்றாகிய சீதா என்று அவளுக்கு பெயரிடப்பட்டது. உழுபவள் என்று அதற்குச் சொற்பொருள். வைதேகி என்றும் ஜானகி என்றும் அவள் அழைக்கப்பட்டாள். அவள் வந்துசேர்ந்தபின் ஒவ்வொரு நாளும் மழை பெய்து விதேகம் செழித்தது. அதன் கருவூலமும் களஞ்சியமும் மழைக்கால ஏரிபோல எக்கணமும் உடைந்துவிடும் என அச்சமூட்டியபடி வளர்ந்தன என்று கவிஞர்கள் பாடினார்கள்.

அவளை கோசலத்தை ஆட்சி செய்த ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகன் ராமன் மணந்தான். அவனே தசரதனின் முதல்மகன் என்பதனால் தந்தைக்குப் பிறகு அவனே முடிசூட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசன் கேகயத்து அரசியான தன் இரண்டாவது மனைவிக்கு அவள் மகனை முடிசூட்டுவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தான். ஆகவே இறுதிநேரத்தில் மூத்தவன் தன் தம்பியுடன் காட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. அவனுடன் சீதையும் அவன் தம்பியும் உடன் சென்றனர்.

காட்டிற்கு வந்த அவர்களைத்தான் வால்மீகி சந்தித்தார். சித்ரகூடத்தில் தங்கியிருந்த போது அவளை அரக்கர் குலத்து அரசன் ராவணன் கவர்ந்துகொண்டு சென்றான். அவள் பூமிதேவி, மண்ணை ஆற்றலுள்ளவன் கவரலாம், ஆளமுடிந்தவன் ஆளலாம் என்று அரக்கர் குலத்து அரசன் சொன்னான். அவளை அவன் காமத்திற்கு இரையாக்கவில்லை, அவள் தன் அரசியாகவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தான். மண்மகளை அவன் வென்றால்தான் அவன் வெற்றி முழுமையடையும் என்று எண்ணினான்.

அவள் அரக்கர்களின் தலைநகரமான இலங்கையில் சிறைப்பட்டிருந்த செய்தியை அறிந்து அவள் கணவன் ராமன் வானரர் என்னும் குலத்தைச் சேர்ந்த காட்டு மனிதர்களை படையாகத் திரட்டிச் சென்று, ராவணனை தோற்கடித்து அவளை மீட்டுவந்தான். அயோத்தி திரும்பிய பின் அவன் தம்பி அரியணையை விட்டுக்கொடுக்க அவன் அரசனானான். ஆனால் அவளை க்ஷத்ரிய நாட்டின் அரசியாக ஆக்க முடியாது என்று அயோத்தியின் அந்தணர்களும், சில குடித்தலைவர்களும் சொன்னார்கள். அவள் பூமியின் மகள், விண்ணிலிருந்து அவளுக்கு ஏற்பு இல்லை என்றார்கள். சூரியனின் கதிரோ, இந்திரனின் இடிமின்னலோ, அக்னியோ அவளை ஏற்கவேண்டும் என்று சொன்னார்கள். ராமன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்தான். அதில் விண்ணிலிருந்து இறங்கி தர்ப்பையில் பற்றிக்கொண்ட அக்னி அவளை ஏற்றுக்கொண்டு வாழ்த்தியது. அவள் அயோத்தியின் அரசி ஆனாள். அவள் துயரம் முடிவுற்றது என்று தோன்றியது.

ஆனால் அவள் கருவுற்றபோது அந்தக் கரு தங்கள் அரசனுடையதுதானா என்ற அலர் ஊரில் கிளம்பியது. இம்முறை அது எளிய குடிமக்களிடமிருந்து திரண்டு வந்தது. அவள் பல ஆண்டுகாலம் அரக்கர்களின் காவலில் இருந்தவள். அரக்கர்கள் நெறிகளை கடைப்பிடிப்பார்கள் என்று கேள்விப்பட்டதுமில்லை. அவள் பெற்றுத்தரும் குழந்தையை எப்படி அரசனாக ஏற்கமுடியும் என்றனர் மக்கள். அளிக்கப்படும் அனைத்து அழுக்குகளையும் ஏற்றுக்கொள்வது பூமி. அவள் பூமிமகள், அவள் நெறியும் அதுவே. ஆகவே அவள் பெறும் குழந்தைகள் அரசனுடைய குருதியைச் சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பில்லை என்றனர். அந்தச் செய்தியை அறிந்ததும் ராமன் அவளைத் துறந்து மீண்டும் காட்டுக்கு அனுப்பி விட்டான். விரும்பினால் அரக்கரோ பிறரோ அவளைக் கவர்ந்துசெல்லட்டும் என்று அவன் எண்ணினான்.

‘கண்நோய் வந்தவனுக்கு தீபம் போல அவள் அவனுக்கு ஒவ்வாமையை அளித்தாள்’ என்று வால்மீகி என்னிடம் சொன்னார். ’மண்ணையும் பொன்னையும் போலவே இந்த நகர்மக்கள் பெண்ணையும் நடத்துகிறார்கள். மண்ணை உடைமையென நினைக்காத மக்களே பெண்ணையும் மதிப்புடன் எண்ணுவார்கள். அவர்களின் குலங்களில் மட்டுமே பெண் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்’ என்றார்.

அவ்வாறுதான் சீதை வால்மீகியின் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்தாள். அவள் ராமனைப் பற்றி கசந்து ஏதும் சொல்லவில்லை. தனிமையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் சரயுவில் கழுத்து பின்னி காதல்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாரைகளைப் பார்த்து நின்றபோது, ஒரு கணத்தில் அறியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைந்து விம்மி அழத்தொடங்கினாள். அருகே நின்றிருந்த வால்மீகி அதைக் கண்டார். அவள் அருகே சென்று “அழாதே மகளே, உன் துயரங்கள் முடியும்” என்றார்.

“நான் இரண்டு முறை உயிர்கொண்டு மீண்டு வந்தேன். இனி அது நிகழாது. நான் முழுமையாக இறந்துவிட்டேன்” என்று சீதை சொன்னாள்.

அவளைப் பார்த்ததும் அது உண்மை என்று வால்மீகி அறிந்தார். அவள் கண்களின் ஒளி அணைந்துவிட்டிருந்தது. உடல் வெளிறி மெலிந்திருந்தது. அவள்மேல் ஏற்கனவே சாவு வந்து படிந்துவிடிருந்தது.

அவர் அன்றிரவு நீண்டநேரம் தூங்காமலிருந்தார். பின்னர் விடியலில் சற்று தூங்கினார். அரைவிழிப்பில் அவருக்குள் தோன்றிய வரிதான் ’மாநிஷாத’ என தொடங்கும் பாடல். அதை அவர் ஓர் ஏட்டில் குறித்துப் போட்டார். ’காதலில் மயங்கிய பறவைகளில் ஒன்றை கொன்ற நீ ஊழிக்காலம் வரை நிலையிலாது அலைவாய்’ என்ற வரி எவருக்கான சாபம் என்று அவருக்குத் தெரியவில்லை. தன் நாவில் எழுந்த முதல் கவிதைவரியே சாபமாக அமைந்ததை எண்ணும்போது திகைப்படைந்தார். அதை எவரிடமும் சொல்லாமல் வைத்துக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் சீதை அவருடைய ஆசிரமத்தில் நலிந்தபடியே வந்தாள். அவர் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் சென்று சேரவில்லை. அவள் கருமுதிர்ந்து இரண்டு ஆண்குழந்தைகளைப் பெற்றாள். அவர்களுக்கு லவன் என்றும் குசன் என்று பெயர் சூட்டப்பட்டது. நிஷாதர்களின் மொழியில் உப்பு என்றும் புல் என்றும் அப்பெயர்களுக்குப் பொருள். அப்பெயர்களைச் சூட்டியவள் அவளே. நிலத்தின் அழியாத உயிர் என திகழ்பவை அவை.

அக்குழந்தைகளைப் பெற்றதும் அவள் முழுமையாக அவர்களை மறந்தாள். தனக்கான சிறிய குடிலில் இரவும் பகலும் தனியாகவே இருந்தாள். எவரிடமும் எப்போதும் பேசவில்லை. எவரையும் பார்க்கவுமில்லை. அவள் எதையேனும் பார்க்கிறாளா என்றே சந்தேகமாக இருந்தது. அவள் இறந்துவிட்டபின் அவளுடைய நிழல்தான் அங்கே வாழ்கிறதா என்று அவருடைய மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அவள் எதற்காகவோ காத்திருக்கிறாள் என்று அவருக்கு ஒரு சமயம் தோன்றியது.

வால்மீகி லவனையும் குசனையும் வளர்த்துக்கொண்டிருந்தார். அவர்களுக்காக என்றோ தான் மறந்துவிட்ட விற்கலையை நினைவுகூர்ந்து கற்பித்தார். வால்மீகிகள் மட்டுமே அறிந்த நாணல்களை அம்புகளாக்கும் வித்தையை அவர்களுக்குப் பயிற்றுவித்தார். மொழியையும் நூல்களையும் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் துடிப்பான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்பதை எவரும் சொல்லக்கூடாது என்று தன் மாணவர்களிடம் ஆணையிட்டிருந்தார். அவர்களிடம் அதைச் சொல்லவேண்டியவள் அவர்களின் தாய்தான். எந்தவகையில் எப்போது சொல்லவேண்டும் என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும் என்றார்.

அவர் ஒவ்வொரு நாளும் இரவில் தான் எழுதிய அந்த இரண்டுவரிக் கவிதையை நினைவுகூர்ந்தார். அதை மறந்துவிட்டு தூங்க முயன்று நெடுநேரம் விழித்திருந்தார். அதன்பின் அவர் ஒன்று கவனித்தார், சரயுவில் அதன் பிறகு நாரைகள் வந்திறங்கவே இல்லை. அது அவரிடம் விசித்திரமான ஒரு பதற்றத்தை உருவாக்கியது. அந்த அமைதியின்மை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது. அவளுடைய கண்ணீர் இந்த மண்ணில் விழுந்திருக்கிறது என்று ஒருநாள் ஓர் எண்ணம் வந்தபோது அவரால் அமர்ந்திருக்கவே முடியவில்லை.

தனியாகக் காட்டில் நீண்டதொலைவு அலையும் வழக்கம் அவரில் உருவாகியது. அது அவருக்கு தொடர்பற்ற எண்ணங்களை உருவாக்கி அகத்திலும் அலையச் செய்தது. அச்சமும் துயரமும் அளிக்கும் ஒன்றிலேயே குவிந்துவிட்ட சிந்தனையை அப்படிச் சிதறடித்துக் கொண்டபோது ஆறுதலடைந்தார். அவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ எங்கே பயின்ற வரி என நினைவு மயங்கியது. எவரோ தலைக்குமேல் இருந்து அதை தூக்கி தன் மேல் போட்டதுபோல தோன்றியது.

எண்ணிச் சலித்து திரும்ப வந்தபோது உடல் நன்றாகக் களைத்திருந்தது. மாலைவகுப்பை நடத்தமுடியாதபடி பிந்தியிருந்தமையால் அவருடைய மாணவனாகிய ரோமஹர்ணன் அவருக்குப் பதிலாக வகுப்பை நடத்தி முடித்திருந்தான். அவர் இரவு பழங்கள் மட்டுமே உண்ணுபவர். அன்று அதை மறுத்துவிட்டு தர்ப்பைப்புல் மெத்தைமேல் படுத்துக்கொண்டார். அவருக்கு அருகே, கண்ணால் பார்த்துவிடலாம் போல அந்த வரி அமர்ந்திருந்தது. ’மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’

‘நாம் அவள் மைந்தர்கள்’ என்று உரக்கச் சொன்னபடி எழுந்து அமர்ந்தார். பூர்ஜமரப் பட்டையாலான சுவடியையும், வண்ணத்தூரிகையையும், மையையும் எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்கினார். விடியும்போது அவர் எண்பது பாடல்களை எழுதி முடித்திருந்தார். விடிந்தபின் தன் குடிலை விட்டு வெளியே வந்து எழத்தொடங்கிய சூரியனைப் பார்த்து ‘வரந்தருபவனாகிய சூரியனே இருளை அகற்றுக! உன் ஒளியால் என் புலன்களை நிரப்புக! மகத்தான சிந்தனைகள் என்னில் எழுவதாக! ஆம், என்னில் எழுவதாக!” என்று பிரார்த்தனை செய்தார்.

அன்று தொடங்கி முந்நூற்றி ஐம்பது நாட்களில் அவர் அவளுடைய கதையை எழுதி முடித்தார். அது மண்ணின் கதை. மண் வெறும் உடைமையென்றும் ஆனதன் வரலாறு. அதன் முடிவில்லாத கருணை  வெறும் பொறுமை என்று புரிந்துகொண்டதன் கதை.  அதர்வரின் சொல்லில் தொடங்கிய அந்தக் காவியம் சீதையின் பிறப்பு முதல் அவள்  சிறுமைப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வெளிறி அழிந்துகொண்டிருந்தது வரை வந்து நிறைவடைந்தது.

அன்னையின் கண்ணீர் மண்ணில் விழுந்தபின் கிரௌஞ்சங்கள் வராமலாயின. அவற்றுக்காகவே பெய்யும் மழை பொய்த்தது. வயல்கள் வறண்டு மணல்பரப்புகளாக ஆயின. ஊற்றுகள் காய்ந்து உப்பரித்தன. விலங்குகளும் பறவைகளும் விலகிச் சென்றன. அரசர்களின் அரண்மனையிலும் வறுமை வந்து சேர்ந்தது. அவர்கள் நிமித்திகர்களிடம் கேட்டபோது பூமியின் அளவிடமுடியாத பொறுமை அகன்றுவிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவளுடைய முலை வற்றிவிட்டது. கண்ணீரும் நின்று விட்டிருக்கிறது. அவள் அருளினாலொழிய இனி மண்ணில் மழைத்துளி விழவாய்ப்பில்லை.

தன் காவியத்தின் உச்சமாக, ஐம்பத்தாறு நாட்டின் க்ஷத்ரிய அரசர்களும் ராமன் தலைமையில் வரிசையாக வந்து தங்கள் மணிமுடி சூடிய தலைகளை சீதையின் முன் மண்பட வைத்து வணங்கி மன்னிப்பைக் கோரும் காட்சியை வால்மீகி எழுதியிருந்தார். ஆனால் சீதை மனம் இரங்கவில்லை. அந்தணர்கள் வந்து அவளைப் பணிந்து கழுவாய் செய்வதாகச் சொன்னார்கள். வைசியர்கள் தங்கள் பொன்னை முழுக்க கைவிடுவதாகச் சொல்லி அழுதார்கள். மேழிகளைத் தூக்கிக்கொண்டு விவசாயிகளும், தாகத்தால் நாக்கு வறண்டு தள்ளாடிய மாடுகளை இழுத்துக்கொண்டு ஆயர்களும் வந்தார்கள். எவரையும் அவள் பார்த்ததாகவே தெரியவில்லை.

இறுதியாக கையில் இறந்துபோன குட்டிக்குரங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு கவிஞன் ஒருவன் வந்தான். தாகத்தால் தவித்த அந்தக் குரங்குக்குட்டி அருகே சென்ற பாம்பின் உடலின் மினுமினுப்பை நீர் என்று நினைத்து குனிந்து நக்கியது, பாம்பால் கடிபட்டு இறந்தது. ‘அன்னையை நம்பித்தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. அன்னை மடிமேல் தான் நிற்கின்றன. அன்னை மீதான முழுமையான நம்பிக்கையால்தான் அன்னையை மறக்கின்றன. ஆனால் அன்னை கைவிட்டபின் அவை அனைத்தையுமே நம்புகின்றன’ என்றான்.

சீதை குனிந்து அந்த குரங்குக் குட்டியைப் பார்த்தாள். அவள் முகத்தில் கனிந்த புன்னகை வந்தது. அவள் அந்த குரங்குக்குட்டியை மெல்ல தொட்டபோது அது எழுந்து நின்றது. அதன் வாய் தாகத்தால் திறந்தது. அவள் அதை அருகே இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு முலையூட்டினாள். தாகம் மிகுந்த குரங்கு குட்டி அவள் முலைப்பாலை வேகமாக வாய்நுரைக்கக் குடித்தது.

’அசோகவனத்தின் தனிமையில் என்னை தேடிவந்தாய். நீண்டகாலத்திற்குப் பின் என்னைச் சிரிக்கவும் வைத்தாய். அன்று நான் உன்னிடம் கொண்ட கடன் இது’ என்று சீதை அதன் மெல்லிய பிடரியை வருடியபடிச் சொன்னாள். ’இந்தப் பூமியில் என் மேல் மிச்சமின்றி அன்புவைத்த வேறொருவர் இல்லை. துயரற்றவனும் துயர்நீக்குபவனும் ஆகுக.’

வால்மீகியின் காவியம் இந்த வரிகளுடன் முடிந்தது. ‘அவளுடைய முலைசுரக்கத் தொடங்கியதும் வானத்தில் மேகங்கள் திரண்டு மழைகொட்டத்தொடங்கியது.’

“சீதாயனம் முடிவில் மண்ணைப் புகழும் பன்னிரு துதிச்செய்யுள்களை தொடர்ச்சியாக கொண்டிருந்தது. வராகியை வணங்கும் தொன்மையான மக்கள் மண்ணைப் போற்றிப் பாடும் பாடல்களை ஒட்டி அமைந்த செய்யுட்கள் அவை” கானபூதி சொன்னது “ஆனால் அந்தக் காவியம் அல்ல பின்னர் நீடித்த நூல். வால்மீகி எழுதிய காவியம் இன்றில்லை.”

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 11:32

A virtual conversation

I am watching your videos regularly. I am an elderly man, now in my 90s. I can’t read because of an eye problem. I can listen and dream. At one point, I realized that social media was giving me negative emotions and ideas. They cater to individuals who lead a dull and prosaic life and yearn for a surge of adrenaline.

A virtual conversation

ருட்கர் பிரக்மான் புத்தகம் நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி.தமிழில் நாகலெட்சுமி சண்முகம் “மனித குலம் நம்பிக்கை ஊட்டும் வரலாறு.”என்ற புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கும் நன்றி.

தீமை – ஒரு கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 11:30

June 7, 2025

இன்று குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா

கவிஞர் சோ. விஜயகுமார் இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை பெறுகிறார். விருதுவிழா வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.

சிறப்பு விருந்தினராக கன்னட -ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். நிகழ்வில் கவிஞர் போகன் சங்கர், கவிஞர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கெடுக்கிறார்கள்.

காலைமுதல் இலக்கிய அரங்கம் நிகழும். இந்நிகழ்வில் சிறுகதை அரங்கில் விஜய ராவணன் மற்றும் ரம்யா படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும், கவிதை அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் மற்றும் சசி இனியன் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும் நிகழ்கின்றன.

ஒரு விவாத அரங்கில் கவிதை பற்றி கவிஞர் போகன் சங்கர், வெய்யில் ஆகியோருடன் மனுஷ்யபுத்திரனும் கலந்துகொள்கிறார். வசுதேந்திராவுடன் ஓர் அமர்வும் உள்ளது.

நண்பர்கள் காலைமுதல் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்

ஜெ

சோ. விஜயகுமார் தமிழ் விக்கி குமரகுருபரன் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது

 

 

 

சென்னை சிறுகதை அரங்கு ஐந்து பைசா வரதட்சிணை – வசுதேந்திரா விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா விருந்தினர், வசுதேந்திரா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:36

நம்மைச்சுற்றி புன்னகை.

இரு சந்திப்புகளில் இரு கேள்விகள் நினைவுக்கு வருகின்றன. 1986 ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் கேட்டார். “போஸ்டர்லாம் படிப்பீங்களா?”

நான் “ஆமாம், போஸ்டர் போர்டு ஒண்ணையும் விடமாட்டேன். சின்னவயசிலே இருந்தே பழக்கம். இப்ப தனியா அதுக்காக மெனெக்கெட வேண்டாம். கண்ணு பராக்கு பாத்திட்டேதான் இருக்கும். சிரிக்கிறதுக்கு உண்டான ஒண்ணையுமே தவறவிடமாட்டேன்”

“எழுத்தாளன் ஆகிறதுக்கான முதல் தகுதி அது. கூடவே வித்தியாசமான எது காதிலே விழுந்தாலும் பதிவு பண்ணிக்கிடுறது… சமீபத்திலே அப்டி என்ன கேட்டீங்க?”

“சார், இப்ப இங்க நடந்து வாறப்ப ஒருத்தன் சொன்னான், ‘பணக்காரன் குண்டியக் காட்டினா அத கன்னம்னு நினைச்சுக்கிட்டாப் போரும்’னுட்டு… சிரிச்சுட்டேதான் வந்தேன்”

சுரா வெடித்துச் சிரித்துவிட்டார். “அபாரமான survival strategy யா இருக்கே”

பின்னர் 1995ல் சுஜாதாவைச் சந்தித்தேன். அவர் கேட்டார், “விளம்பரங்களை எல்லாம் படிப்பீங்களா?”

“ஆமா” என்றேன். “இப்பகூட சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவங்களோட தலைமுறைச் சண்டைய பாத்துக்கிட்டேதான் வந்தேன்” அவருக்குப் பரிசாக ‘மலையாள இட்சிணி வசிய தந்திரக்கலை’ என்ற நூலை பழைய நூலை கொண்டுசென்றிருந்தேன்.

“இதெல்லாம் படிப்பீங்களா?” என்றார்

“அப்டி தனியா ஆர்வமில்லை. ஆனா எல்லாத்திலேயும் ஆர்வம் உண்டு” என்றேன்.

சிரித்து “எல்லாத்தையும் பாக்கற கண்ணுதான் எழுத்தாளனோட அஸெட். வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சாப் போதும். வெளியுலகத்தை எழுதிரலாம்…” என்றார்.

என் இயல்பே வேடிக்கை பார்ப்பதுதான். இன்னது என்றில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பேன். ஆகவே ஏதாவது கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கும். விந்தையான எழுத்துப்பிழைகள். அசாதாரணமான அறிவிப்புகள். சாலைகளில் நடப்பவற்றை கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் அவற்றில் முடிவில்லாத வேடிக்கைகள் உண்டு. நான் நிறையவே எழுதியிருக்கிறேன்.

பார்வதிபுரம் வழியாக விடியற்காலையில் நடை. ஒரு போர்டு. Seconedend phone available. அதென்ன? ஹை எண்ட் கார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஹை எண்ட் செல்போன் உண்டா? இது இரண்டாம் வகையா? நானறியாத புதிய மொழி நாகர்கோயிலில் சந்தடிசாக்கில் உருவாகிவிட்டதா? இத்தனைக்கும் ஒருவாரம் வெளியே போய்வந்தேன், அவ்வளவுதான்.

நாகர்கோயிலில் கடைப்பெயர்களே விந்தையானவை. El Shadai என்று ஒரு கடைக்கு பெயர். இணையத்தில் தேடினால் ஸ்பானிஷ் மொழியில் கடை என்று பொருள். ’பாரேரிபொரம் சங்சன்’ எப்போது லத்தீனமேரிக்கா தொடர்பை அடைந்தது? மாய யதார்த்தம்தான் என்றாலும் ஒரு மரியாதை வேண்டாமா?

பார்வதிபுரத்தில் இப்போது நான் அதிகாலை டீ குடிக்கும் கடைக்குப் பெயர் Under de Bridge. பிரெஞ்சு நெடி. ஸ்பானிஷே வந்தபின் பிரெஞ்சுக்கு என்ன? (பழைய கருப்பட்டிக் காப்பிக்கடையில் ஒரு புதிய டீ மாஸ்டர் ஆட்டுக்காம்பை பிழிவதுபோல அதிகாலை டீயை பிழிந்து போட்டு குமட்ட வைத்தபின் அந்த போர்டை பார்த்தாலே குமட்டல் வரத்தொடங்கிவிட்டது)

இங்கே பெயர்களை எழுதும் முறை எங்களுக்கே உரியது. நாகர்கோயிலின் புகழ்பெற்ற நகைக்கடையின் பெயர் கெங்கா ஜூவல்லர்ஸ். அதென்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டபோது ’கங்கா என்பது இந்த சொல்லின் திரிபு’ என்று நான் பதில் சொன்னேன். லட்சுமி என்றும் லக்ஷ்மி என்றும் தமிழ்நாட்டார் தவறாகச் சொல்லும் லெக்ஷ்மி என்னும் சரியான பெயரில் ஒரு கடை. ஆங்கிலத்திலும் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னொரு கடையின் பெயர் ஒரு முழு பத்தி இருந்தது. கடையின் வரலாறு, பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய முழு விவரத்தையே ஏன் பெயராக வைக்கக்கூடாது? திருவனந்தபுரம் போகும் வழியில் அந்தக் காலத்தில் சாண்டீஸ் ஆண்ட் கஸின்ஸ் என்று ஒரு கடை இருந்தது, சன்ஸ் தான் இருக்கவேண்டும் என்பதில்லையே?

பார்வதிபுரம் வழியாக தினமும் காலைநடை செல்கிறேன். இன்று வரை சிரிப்பூட்ட ஏதேனும் ஒன்று சிக்காமல் திரும்ப வந்ததில்லை. இங்கே நம்மைச் சுற்றி என்னென்னவோ நடந்துகொண்டிருக்கிறது. நாம் சம்பந்தப்பட்டது மட்டும்தான் முக்கியமானது என எந்த அடிப்படையில் நம முடிவுசெய்கிறோம் என்றுதான் புரியவில்லை. நான் பார்த்தவரை ஓர் உண்மை உண்டு. நாம் சம்பந்தப்படாதவைதான் உண்மையிலெயே சுவாரசியமானவை.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:35

ரா.ஶ்ரீ.தேசிகன்

புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு தேசிகன் எழுதிய முன்னுரை நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். புதுமைப்பித்தனின் தாவிச்செல்லும் அலட்சியமான நடையும், இரக்கமற்ற நையாண்டியும், வடிவச்சோதனை முயற்சிகளும் அன்றிருந்த இலக்கியவாசகர்களால் துடுக்குத்தனமானவை என்றும், திரிபுபட்ட சுவை கொண்டவை என்றும் பார்க்கப்பட்டன. அன்றிருந்த முற்போக்குப் பார்வை கொண்டவர்கள் கூட அதை அராஜக நோக்கு கொண்ட எழுத்து, நச்சிலக்கியம் என வரையறை செய்தனர். அப்போது மரபார்ந்த பார்வைகொண்டவரும், ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவரும், மிகக்கறாரான இலக்கிய அணுகுமுறைகொண்டவருமான கல்வியாளர் ஒருவர் அளித்த முன்னுரை பரவலான ஏற்பை உருவாக்கியது. நவீனத்தமிழிலக்கிய அழகியல் தமிழில் தொடக்கம் பெற அது வழிவகுத்தது.

ரா.ஶ்ரீ.தேசிகன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:33

காவியம் – 48

அரசன் அரசி, கன்ஹனஹள்ளி, பொயு 1 சாதவாகனர் காலம்

பைத்தானின் சுவர்சூழ்ந்த காட்டுக்குள் கானபூதி என்னிடம் சொன்னது. “குணாட்யரிடம் நான் கதை சொன்னது பாட்னாவில் நடைபெற்ற அந்தக் குறிப்பிட்டக் குடும்பத்தின் கதைகளுக்காக அல்ல, அவை எங்கும் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பவைதான். கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கும் ஒருவன் அவற்றை எப்படியும் அறிந்துவிட முடியும். கதைகள் என்பவை கடலில் அலைகள் போல ஒரு முடிவிலியில் இருந்து வந்துகொண்டே இருப்பவை என்பதை அவன் உணர்வதற்காகவே நான் அவரிடம் அதையெல்லாம் சொன்னேன். எந்தக் கதையும் புதியது அல்ல. ஒரே கதை திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஒரு கதை முற்றிலும் புதியது என்றால் ஒருபோதும் மனிதர்களால் அதை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அனுபவிக்காத ஒரு வாழ்க்கையை எவராலும் அறியவே முடியாது.”

நான் “இந்தக் காட்டின் தனிமையில், இரவில், நிழல்கள் சூழ நான் அறிந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்?” என்றேன். “நான் ஏன் வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த கேள்விகளைக் கேட்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. நான் கேட்க விரும்புவது ஒன்றை மட்டுமே. ராதிகாவைப் பற்றி. அவளுக்கு நிகழ்ந்த அநீதியைத் தவிர எதையும் என் உள்ளம் பொருட்படுத்தவே இல்லை. எங்கிருந்து எப்படி அது தொடங்கியது, எப்படியெல்லாம் அது விரிந்தது, ஏன் அவளை பலிகொண்டது என்று மட்டும்தான் நான் அறியவிரும்புகிறேன்.”

அவளைப் பற்றிப் பேசியதும் என் சீற்றம் மீண்டும் எழுந்தது. “எல்லா விளக்கங்களும் ஒரு நிகழ்வை தர்க்கபூர்வமான ஒன்றாகவோ, நிகழ்ந்தேயாக வேண்டிய ஒன்றாகவோ, இயல்பானதாகவோ சித்தரித்துவிட முயல்பவைதான். ஆனால் எத்தனை விளக்கினாலும் ஓர் அநீதியை அப்படிக் காட்டிவிட முடிவதேயில்லை” என்றேன்.

“இங்கே போர்களில் பலகோடிப் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பஞ்சங்களில் சாகவிடப்பட்டிருக்கிறார்கள். கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றது கானபூதி. “நீ வரலாறு என்று சொல்லும் பரப்பு முழுக்க பெண்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறார்கள், விற்கப்பட்டிருக்கிறார்கள், கொடிய வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொன்று வீசப்பட்டிருக்கிறார்கள். ஒரு சாவு மிகச்சில நாட்களுக்குள் மறக்கப்படுவதாகவே இருந்திருக்கிறது. நீ ஒரே ஒரு பெண்ணின் கொலைக்கான எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தாகவேண்டும் என்று நினைக்கிறாய்.”

“எனக்கு நெருக்கமானவள் இவள். நான் என் கண்முன் இவள் சாவைப் பார்த்தேன்” என்று நான் சொன்னேன். “இந்த ஒரே ஒரு பெண்ணின் சாவின் புதிர்களை மட்டும் தீர்க்கப் பார்ப்போம். எல்லா புதிர்களையும் அல்ல. அது வரலாற்றுக்குள் சென்றுகொண்டே இருக்கும் என்று எனக்குத் தெரியும். மிக நெருக்கமான கேள்விகளுக்கு மட்டுமாவது பதில் தேடுவோம்.”

“தேடி என்ன செய்யப்போகிறாய்? நீ உன் வஞ்சத்தை இழக்காதது வரை உனக்கு விடுதலை இல்லை.”

“எனக்கு விடுதலை தேவையில்லை” என்று நான் சொன்னேன். “இந்த வஞ்சம் மட்டுமே நான் அவளுக்காக இப்போது செய்யமுடிவது.”

ஆபிசாரன் “அவன் சொல்வது சரிதான். இந்த உலகில் எவருமே வஞ்சத்தைச் சுமந்து அலைவதில்லை என்பதுதான் உண்மை. சுயநலத்துக்காக வஞ்சத்தைக் கைவிடுகிறார்கள், பயந்து போய் விட்டு விலகுகிறார்கள், தன்னியல்பாகவே மறந்துவிடுகிறார்கள். இவனிடமிருக்கும் இந்த ஆறாத வஞ்சம் என்பது ஒரு வைரம் போலச் சுடர்விடுகிறது என்று எனக்குப் படுகிறது” என்றது.

“ஒருவேளை, உன் வஞ்சம் அவளுக்காக அல்ல, உனக்காகத்தான் என்று சொல்லலாமா?” என்று சக்ரவாகி கேட்டது.

நான் திகைத்து அதை திரும்பிப் பார்த்தேன்.

“அநீதி இழைக்கப்பட்டவன் நீ. நூறு தலைமுறைகளாக இழிவும் துயரும் மட்டுமே உன் குலத்திற்கு இருந்தன. நீ உன் ஞானத்தால் மேலெழுந்து வந்தபோது மீண்டும் மலக்குழியிலேயே தூக்கி வீசப்பட்டாய், இல்லையா?”

நான் பற்களை இறுகக்கடித்து, கைவிரல்களை சுருட்டிப்பிடித்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

சூக்ஷ்மதரு “ஒருவன் தனக்காக கொள்ளும் வஞ்சம் என்பது விலங்குகளுக்குரிய உணர்வு. தனக்கு இழைக்கப்பட்டால்தான் அநீதியின் தீவிரம் ஒருவனுக்குப் புரியும் என்றால் அவன் நீதிமானா என்ன?” என்றது.

“எனக்குத் தெரியவில்லை” என்று நான் தாழ்ந்த குரலில் சொன்னேன். “நான் நீதிமான் அல்ல. நான் அறத்துக்காக போராடுபவனும் அல்ல. இந்த வஞ்சத்தைக்கூட நானே ஏந்திக்கொண்டிருக்கவில்லை. இது என்னை விடவில்லை… என் உடலில் பிடித்த தீ போல இது என்னை வதைத்து அழித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் யாரேனும் இதை அணைத்தீர்கள் என்றால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சிதான் அடைவேன்…”

இரு கைகளையும் விரித்து அழுகையுடன் உரக்கக் கத்தினேன். “யாருக்காக நான் இத்தனை வஞ்சம் கொண்டிருக்கிறேன்? ராதிகாவுக்காகவா? எனக்காகவா? என் அப்பாவுக்காகவா? இல்லை, தலைமுறை தலைமுறைகளாக மலக்குழியில் வாழ்ந்த என் முன்னோர்களுக்காகவா?” என் தலையில் வெறிகொண்டு கழியால் அறைந்தபடி புலம்பினேன். “எனக்குத் தெரியவில்லை… உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.”

“அதற்கு விளக்கமாக நான் ஒரு கதையைச் சொல்கிறேன்” என்று கானபூதி சொன்னது.

“இல்லை, கதைகள் போதும். நான் இங்கிருந்து எங்காவது கிளம்பிச்செல்ல விரும்புகிறேன்… என் பாழடைந்த உடலுக்குள் குமுறும் ஆத்மாவுடன் அப்படியே மட்கி மண்ணில் மறைந்துவிடுகிறேன்… இதையெல்லாம் தெரிந்து நான் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை” நான் கழியை ஊன்றி எழுந்தேன்.

“ஒருவேளை நீ இன்னும் பழிவாங்கவேண்டியவர்கள் இருக்கலாம். அவர்கள் நுட்பமாக தப்பித்துக்கொண்டிருக்கலாம்” என்று ஆபிசாரன் சொன்னது.

நான் “யார்?” என்றேன்.

“அதை என் கதையில் சொல்கிறேன்… என்னால் கதைகளை மட்டும்தான் சொல்ல முடியும்” என்றது கானபூதி.

“சொல்” என்றபடி நான் மீண்டும் அமர்ந்தேன். கழியை என் கால்கள் மேல் வைத்துக்கொண்டேன். நிழல்கள் என்னைச் சூழ்ந்து அமர்ந்தன.

“நீண்டகாலத்திற்கு முன்பு நான் ஒருவரைக் காட்டில் கண்டேன்” என்று கானபூதி சொன்னது. “நீண்ட சடைமுடிகளும் சடைபிடித்த தாடியும் கொண்டவர். மரவுரி ஆடை அணிந்திருந்தார். வடக்கே எங்கிருந்தோ கிளம்பியவர் ஏழு காடுகளைக் கடந்து, விந்திய மலைகளை நோக்கிச் செல்லும் பயணத்தில் கோதாவரியைக் கண்டு, அதன் கரைவழியாக நடந்து என் காட்டுக்கு வந்தார். அது முன்பு அதர்வர் வந்த அதே பாதை… அதர்வரைப் போலன்றி இவர் மிக முதியவராக இருந்தார். மூப்பின் தளர்வால் இமைகள் பாதி மூடியிருந்தன. மூக்கு தளர்ந்து மீசைமேல் வளைந்திருந்தது. கைவிரல்கள் வேர்கள் போல முடிச்சுவிழுந்து ஒன்றுடனொன்று ஏறியிருந்தன.”

என் மரத்தடியில் அவர் அமர்ந்ததும் நான் அவரை வழக்கம்போல பயமுறுத்த முயன்றேன். அவர் சற்றும் பயப்படவில்லை. மாறாக திகைத்தவர் போல எழுந்து “இந்த மொழியை நான் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.

நான் அவர் முன் தோன்றினேன். “என் பெயர் கானபூதி. இந்த காட்டில் வாழும் பைசாசிகன்” என்றேன்.

“நான் எப்படி உன் மொழியை புரிந்துகொள்கிறேன்?” என்று அவர் கேட்டார்.

“உங்கள் அம்மாவோ மூதாதையோ இந்தக் காட்டில் வாழ்ந்திருக்கலாம்” என்றேன். “நான் அவர்களிடம் பேசியிருக்கலாம்…. நான் எல்லா காட்டுவாசிகளுடனும் பேசியிருப்பேன்”

“ஆமாம், என் அம்மா தெற்கிலிருந்து வந்தவள் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். அவளுடைய உடல்வலிமை அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. அவர் அவளைப் பார்க்கும்போது அவள் தான் வேட்டையாடிக் கொன்ற ஓர் எருமையை தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். என் அப்பா அவளை கண்டு வியந்து அவளருகே சென்றார். அவள் அவரை தாக்கவந்தபோது எதிர்த்து நின்றார். அந்திவரை அவர்கள் போரிட்டனர். இருவருமே வெல்லாதவர்கள் ஆனபோது அவர்கள் காமம் கொண்டனர். அவ்வாறுதான் நான் பிறந்தேன்” என்று அவர் சொன்னார்.

அம்மாவைப் பற்றிப் பேசியதும் மலர்ந்து , நினைவுகள் மேலெழும் விசையுடன் அவர் சொன்னார். “என் அம்மாவுடன் தெற்கில் இருந்து அவள் மேல் ஏறிக்கொண்ட ஒரு நிழல் கூடவே இருந்தது. அவ்வப்போது அவள் முற்றிலும் அந்த நிழலால் ஆட்கொள்ளப்பட்டாள். அப்போது வெறிகொண்டு அறியாத மொழியில் ஊளையிட்டு பேசினாள். நான் பிறந்த ஓராண்டிலேயே அவள் இறந்துவிட்டாள். அவளைப் பற்றி என் அப்பாதான் என்னிடம் சொன்னார்.”

நான் புன்னகைத்து “இங்கே நான் பேசும் மொழியை அவள் கேட்டிருக்கலாம். இந்த மரத்தடியிலேயே கூட அமர்ந்திருக்கலாம்” என்றேன்.

“அதனால்தான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதும் தெற்கே போகும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். என் உயிர் இந்த மரத்தடியிலேயே போகும் என்றாலும் நல்லதுதான்.”

“நீங்கள் யார்? ஏன் உயிரைவிட முடிவெடுத்தீர்கள் ?” என்று நான் கேட்டேன்.

“மரன் என்று பெயர்கொண்டவன் நான். வால்மீகி என்னும் வேட்டுவக் குலத்தில் பிறந்தவன், ஆகவே இன்று அப்பெயராலேயே அறியப்படுகிறேன்” என்று அவர் சொன்னார்.

“நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வழியாகச் செல்லும் பயணிகளிடமிருந்து என் பணியாளர்களாகிய நிழல்கள் உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வந்து என்னிடம் சொன்னார்கள்” என்றேன்.

“என்ன சொன்னார்கள்?” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார்.

“காலம் தன் முன்னங்கால்களை மடக்கி மண்டியிட்டு துதிக்கை தூக்கி வாழ்த்தும் மாகவிஞன் நீங்கள் என்றார்கள். ஒவ்வொரு சொல்லும் மாணிக்கமாக அமைந்த காவியம் ஒன்றை இயற்றியிருக்கிறீர்கள் என்றார்கள். கண்ணீரையும் ரத்தத்தையும் தேனாக மாற்றும் வித்தை அறிந்தவர் என்றார்கள்.”

“இன்னும் சிலர் என்ன சொன்னார்கள்?” என்று அவர் நிலத்தைப் பார்த்தபடிக் கேட்டார்.

“அவர்கள் வேடர்கள். இந்தக் காட்டில் வந்து தங்கி வேட்டையாடி உணவுண்டு உறங்கிய அவர்களின் நடுவே என் நிழல்களில் ஒன்றாகிய அபிசப்தன் இருட்டில் இலைப்பாயில் தானும் ஒருவனாக படுத்துக் கொண்டான்.” என்று நான் சொல்லத் தொடங்கினேன்

அவர்கள் மறுநாள் காலையில் கிளம்பி மேலும் தெற்கே செல்வதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் தூங்கிவிட்டிருந்தனர். அபிசப்தன் இருட்டில் “இந்தக் காட்டிலேயே நாம் ஏன் தங்கியிருக்கக் கூடாது? இங்கே விலங்குகள் அதிகமாக உள்ளன. அருகே நதி ஓடுகிறது. நாம் செல்லும் தெற்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. அங்கிருந்து நம்மைப்போன்ற நிஷாதர்கள் பிழைப்புதேடி வடக்கே வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றது.

முதியவனாகிய வேடன் ஒருவன் அப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னான். வேடர்குலமாகிய வால்மீகத்தில் பிறந்தவர் நீங்கள். புற்றுமண் எடுத்து புற்று போலவே வீடுகட்டிக்கொள்ளும் உங்கள் குலம் இப்போதைய மனுவின் முந்தையவரான த்வஸ்த மனுவில் இருந்து உருவானது என்றான். இந்திரனால் கொல்லப்பட்ட அசுரச்சக்கரவர்த்தியாகிய விருத்திரனை மூதாதையாகக் கொண்டவர்கள் நீங்கள். விரித்திரனின் வால்மீகம் என்ற நகரம் அழிந்தபிறகு நீங்கள் நூற்றெட்டு குலங்களாகச் சிதறி காட்டில் வேடர்களாக வாழ ஆரம்பித்தீர்கள்.

அந்தக் குலத்தில் பிறந்த நீங்கள் இயல்பான அறிவால் கல்வியில் மேம்பட்டவராக ஆனீர்கள். தவம் செய்து முனிவராக மாறினீர்கள். உங்களுக்கு பிராமணர்கள் மாணவர்களாக அமைந்தார்கள். பரத்வாஜன் என்னும் மாணவருடன் நீங்கள் கங்கைக்கரையில் தாமஸா என்னும் சிற்றாறில்தான் குளிப்பது வழக்கம். மிகமெல்ல செல்லும் குளிர்ந்த கரிய நீர் கொண்டது அந்த ஆறு. ஆகவே அதற்கு அப்பெயர். நீங்கள் அதன் அருகே உங்கள் ஆடைகளைக் கழற்றி பரத்வாஜனிடம் கொடுத்துவிட்டு முழுநிர்வாணமாக ஆற்றில் இறங்கப் போகும்போது அந்த நீரில் இரண்டு அன்னப்பறவைகள் கழுத்தோடு கழுத்து பிணைத்து நீராடுவதைக் கண்டீர்கள். அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றுவிட்டீர்கள்.

சட்டென்று ஒரு அம்பு வந்து ஆண்பறவையைத் தைத்தது. அது துடித்தபடி நீரில் மூழ்கியது. அதைக்கண்டு அஞ்சி சிறகடித்த பெண்பறவை நெஞ்சு உடைந்து அழுதது. அந்த ஓலத்தைக் கேட்டு மனம் கொந்தளித்து நீங்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே ஒரு நிஷாதன் வில்லுடன் நிற்பதைக் கண்டீர்கள். கோபம் தாங்கமுடியாமல் ஒரு கை நீரை அள்ளி வீசி சாபமிட்டீர்கள். ‘மாநிஷாதப் பிரதிஷ்டா…’ என தொடங்கும் இரண்டு வரிப்பாடல்… ‘காதல்மோகம் கொண்டு மெய்மறந்திருக்கும் பறவையைக் கொன்ற காட்டுமிராண்டியே நீ இனி முடிவில்லாத காலம் நிலையற்று அலைந்து திரிவாய்’ என்றீர்கள். அந்தச் சாபத்தால் நிஷாதர்கள் எந்த இடத்திலும் நிலையாகத் தங்கமுடியாமலாகியது என்று அந்த முதியவர் சொன்னார்.

அந்த முதியவனிடம் அபிசப்தன் கேட்டது. “நம் குலத்தைச் சேர்ந்தவர் நம்மை ஏன் சாபமிடவேண்டும்? வேட்டையாடுவது நம் தொழில் என்று அவருக்குத் தெரியாதா என்ன? வேட்டையாடி உணவுதேடவில்லை என்றால் நம் குழந்தைகள் பட்டினியால் சாகும் என்று அவர் அறிந்திருக்கவில்லையா?”

அதற்கு முதியவேடன் “அவரே வேட்டையாடியவர்தான்” என்று பதில் சொன்னான்.

மேலும் சிலர் விழித்துக்கொண்டு முதியவர் சொல்லும் கதையைக் கேட்டனர்.

அபிசப்தன் கேட்டான் “எப்படி ஒருவர் அத்தனை எளிதாக வேர்களை மறக்கமுடிகிறது?”

அதற்கு முதியவர் பதில் சொன்னார். “அவர் கற்ற கல்வி அவரை மாற்றிவிட்டது. கல்வி அகங்காரத்தை அளிக்கிறது. அகங்காரம் சாமானியர்களிடமிருந்து விலக்குகிறது. வேர்கள் அழகற்றவை, மலர்களே இனியவை என நம்பச்செய்கிறது.”

“ஆமாம், நான் நிறையபேரை பார்த்துவிட்டேன்” என்று அபிசப்தன் சொன்னான்.

“அவர் தவம் செய்து உயர்குடிகளில் ஒருவராக ஆகிவிட்டார். உயர்குடிகள் அவரை தங்களுடையவர் என்று சொல்ல ஆரம்பித்தனர். மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு சென்று மாளிகைகளுக்கு மேல், உப்பரிகைகளில் நடுவதுபோன்றது அந்தக் கல்வி. நிலத்திற்காகவும் பெண்ணுக்காகவும் மனிதர்களை கொன்று குவிப்பது தர்மம் என்றும், அதிகம் பேரை கொன்றவன் மாவீரன் என்றும் அவரை நம்பச்செய்தது அது. அறியாத ஆயுதங்களால் காட்டில் வாழும் எளியவர்களை கொல்பவர்கள் பல்லாயிரம் ஆண்டு நிலைகொள்ளும் நகரங்களை அமைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறார். பசித்த குழந்தைகளின் உணவுக்காக ஒரு பறவையைக் கொல்பவன் முடிவில்லாக் காலம் வரை நிலமில்லாமல் அலையவேண்டும் என்று சாபம் இடுகிறார்.”

அந்த பதிலைக் கேட்டு இருட்டுக்குள் பல பெருமூச்சுகள் எழுந்தன. அதற்குள் எவரோ அபிசப்தனை அடையாளம் கண்டுவிட்டனர். “இங்கே ஒரு நிழல்தான் படுத்திருக்கிறது… அதுதான் உங்களிடம் பேசுகிறது” என்று கூச்சலிட்டனர்.

அவர்கள் பாய்ந்து எழுந்து அம்பையும் வில்லையும் எடுப்பதற்குள் அபிசப்தன் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.

அவர்கள் “யார் நீ? எதற்காக இதையெல்லாம் கேட்கிறாய்?” என்றார்கள்.

“அழியாத நிழலாகிய என் பெயர் அபிசப்தன்… நீங்கள் சொன்னவை உங்களால் மறக்கப்படலாம். உங்கள் தலைமுறைகளுக்கு தெரியாமலேயே போகலாம். நான் இருக்கும் வரை அக்கதைகள் இருக்கும். ஊழிமுடிவு வரை இங்கே நானும் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு மரத்தின் மேல் ஒரு காற்றின் சலசலப்பாக பாய்ந்து படர்ந்து அங்கிருந்து விலகினான்.

வால்மீகியிடம் நான் தொடர்ந்து சொன்னேன். “அசுரர்களையும் அரக்கர்களையும் அநீதியாகக் கொன்ற க்ஷத்ரியவர்களை புகழ்ந்து அசுரனும் அரக்கனுமாகிய நிஷாதன் எழுதிய காவியம் என்று உங்கள் நூலைப் பற்றி ஒரு தென்னகத்துக் கவிஞன் சொல்வதையும் என் நிழலாகிய விக்ருதன் கேட்டிருக்கிறான். நிஷாதனின் நாவால் பாடப்பட்டவன் என்பதனாலேயே க்ஷத்ரியனாகிய ராமன் அழியாத புகழ்பெற்றான், பாரதத்தில் அவன் பெயரை தெரியாத ஒருவர்கூட இல்லை என்று அவன் சொன்னான்.”

வால்மீகி செருமிக்கொண்டு “அவன் சொன்னது சரிதான்” என்றார். மீண்டும் செருமிக்கொண்டார். எழுந்து செல்லவிருப்பது போன்ற ஓர் அசைவு அவர் உடலில் எழுந்தது.

“நீங்களிட்ட அந்த சாபத்தில் இரண்டு சொற்கள் வரமருளும் மந்திரம் போன்றவை. இரண்டு சொற்கள் சாபங்கள். பிரதிஷ்டா என்னும் சொல்லும் காமமோகிதம் என்னும் சொல்லும் ஷத்ரியர்களுக்கு நீங்கள் அளித்த வரங்கள். மா நிஷாத என்னும் இரு சொற்கள் நீங்கள் உங்கள்மீதே போட்டுக்கொண்ட சாபம்” என்று நான் சொன்னேன். “நிலையற்று காலம் முழுக்க அலையவிதிக்கப்பட்டவர் நீங்கள்தான் அல்லவா?”

அவர் எழுந்துவிட்டார். ஏதோ சொல்லவந்தவர் போல கையைத் தூக்கியவர் தளர்த்திக் கொண்டார்.நெஞ்சு விம்மி விம்மி தணிந்தது.

நான் மேலும் ஓர் உதை விட விரும்பினேன். “சம்புகன் என்னும் சூத்திர முனிவரின் கதையை நீங்கள் கேட்டாகவேண்டும்” என்றேன்.

அவர் கண்கள் சுருங்க “யாரவன்?” என்றார்.

“நீங்கள் அறிய வாய்ப்பில்லை. அவர் சூத்திரகுடியில் பிறந்தார். தன் குடிக்குரிய தொழிலைச் செய்யாமல் இளமையிலேயே மொழியின் அழகில் ஈடுபட்டிருந்தார். செவியில் விழுந்த ஒவ்வொரு சொல்லையும் நினைவில் வைத்திருந்தார். அவற்றை இணைத்து அவரே மொழிகளை உருவாக்கிக் கற்றுக்கொண்டார்.”நான் புன்னகைத்து “உங்களைப் போலவே” என்றேன்.

வால்மீகி “உம்” என்றார்.

“பதினேழு வயதில் தன் கிராமத்தில் இருந்து கிளம்பிய சம்புகன் பிச்சையெடுத்து சுற்றியலைந்தான். சுடுகாடுகளில் இரவு தங்கினான். காட்டில் கிடைத்தவற்றை உண்டான். ஆனால் மொழிகளைக் கற்றுக்கொண்டான். நாற்பது வயதுக்குள் அவன் நூறு நூல்களை மனப்பாடம் செய்துவிட்டான்” என்று மீண்டும் கதை சொல்ல தொடங்கினேன்.

சம்புகன் தன் நினைவில் நிறைந்திருந்த பல்லாயிரம் நூல்களின் மெய்யை உணர்வதற்காக அடர்ந்த காட்டில் மரத்தின் மேல் ஒரு குடிலைக் கட்டிக்கொண்டு தங்கினான். அங்கே நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை காட்டில் சேகரித்த காய்கனிகளையும் தேனையும் உண்டு, தன் நினைவில் இருந்த ஒவ்வொரு நூலாக எடுத்து, ஒவ்வொரு சொல்லாக அறிந்து, அவற்றின் மெய்மையை விரித்துக்கொண்டே சென்றான்.

அந்நாளில் ஒருமுறை ஓர் அந்தணர் அங்கே வந்தார். தன் மகன் இறந்த துயரத்தில் இருந்த அவர் அவன் மறைந்தமைக்கு என்ன காரணம் என்று தேடிக்கொண்டிருந்தார். தொங்கும் முனிவர் என அழைக்கப்பட்ட சம்புகனைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் தனக்கு ஒரு பதிலைச் சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையுடன் சென்று அவனைப் பார்த்தார். சம்புகன் ஒரு சூத்திரன் என பார்வையிலேயே உணர்ந்தார். தனக்கு கைவராத ஞானம் சூத்திரனுக்கு எப்படி அமைந்தது என்று அவர் கொதித்தார்.

சீற்றத்துடன் சென்று அரசனின் அவையை அடைந்தார். அழுதபடி அந்த அரசில் அதர்மம் கொடியேறிவிட்டது என்று கூச்சலிட்டார். சூத்திரனுக்கு தவம் செய்ய தர்மத்தின் ஒப்புதல் இல்லை. தர்மத்தை மீறி தவம் செய்யும் சம்புகன் என்னும் சூத்திரனால் தர்மம் சிதைந்தமையால் தன் மகன் இறந்தான் என்று தர்மதேவனாகிய யமன் தன்னிடம் சொன்னதாகச் சொல்லி கதறினார்.

“சீற்றமடைந்த அரசன் வாளுடன் சென்று சம்புகனின் தலையைக் கொய்தான். அந்த தலையைக்கொண்டு வந்து தன் கோட்டைமுன் வைத்து பிறருக்கு எச்சரிக்கை விடுத்தான்” என்று நான் சொன்னேன். “அந்த அரசனின் பெயர் ராகவ ராமன். உங்கள் காவியத்தின் நாயகன்.”

“ராமன் அதைச் செய்யவில்லை. அது பொய்க்கதை” என்று அவர் கூச்சலிட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“எல்லா கதைகளையும் போல அதுவும் கதை… ராமனும் நீங்களும் மறைந்து ஐம்பது தலைமுறைக்குப்பின் எழுதப்பட்டது. உங்கள் காவியத்தின் உத்தரகாண்டத்தில் சேர்க்கப்பட்டது” என்று நான் சொன்னேன்.

“அதெப்படி சேர்க்கமுடியும்? வேடன் தவம் செய்து முனிவனாகி ராமன் கதையை எழுதலாம் என்றால், அந்த காவியமே அவன் புகழுக்கு ஆதாரம் என்றால், அந்த ராமன் எப்படி தவம் செய்த சூத்திரனைக் கொல்லமுடியும்? அக்கதையைக் கேட்பவர்கள் மூடர்களா என்ன?“ என்று அவர் உடைந்த குரலில் கேட்டார்.

“ஒருவேளை நீங்கள் எழுதிய ராமன் வேறு அந்த ராமன் வேறு என்று இருக்கலாம். அதுவே உண்மையான ராமனாக இருக்கலாம். நீங்கள் அறிந்த ராமன் சீதை சொன்ன ராமன் அல்லவா? காதல்கொண்ட மனைவி அறிந்த ராமனா குடிகள் அறிந்த ராமன்? அந்தணர் போற்றும் ராமன்?”

“ஆம்” என்று வால்மீகி சொன்னார். “நானறிந்தது அவள் சொன்னதை மட்டும்தான். ஆனால் அந்த புதிய கதையை எப்படி என் காவியத்தில் சேர்க்கலாம்? அதை எப்படி என் சொல் என ஆக்கலாம்?”

“அது காவியங்களின் இயல்பு. எந்தக் காவியமும் எழுதி முடிக்கப்படுவதில்லை. நீங்கள் இயற்றிய காவியம் தலைமுறைகள் தோறும் வளரும்…” என்று நான் சொன்னேன்.

“அதற்கு நானா பொறுப்பு?”

“ஆமாம், நீங்களேதான் பொறுப்பு. காவியத்தை எழுதிவிட்டீர்கள். அதை எங்கே நிறுத்தவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை, நிறுத்தும் ஆற்றலும் இல்லை. நீங்கள் உங்கள் காலத்துக்குக் கட்டுப்பட்டவர். காவியம் காலம் கடந்தது.”

வால்மீகியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டேன். அவர் தொண்டையை செருமிச் செருமி அந்த அழுகையை வெல்ல முயன்றார்.

“சம்புகன் உண்மையில் சூத்திரன்கூட அல்ல. அவன் நத்தைக்குடியைச் சேர்ந்த வேடன். சிதல்புற்றுக் குடியைச் சேர்ந்த உங்கள் வேடரினத்தின் நூற்றெட்டு பிரிவுகளில் ஒன்று அது.”

“போதும்” என்று வால்மீகி சொன்னார். பின்னர் தளர்ந்தவராக அவர் மரத்தடியில் அமர்ந்தார்.

நான் அவர் அருகே அமர்ந்தேன். “உங்கள் அழியாத சொற்களால் உங்கள் இனத்தவர் காலம் காலமாக புழுவுக்குரிய வாழ்க்கையை வாழும்படிச் செய்தீர்கள்” என்றேன்.

“இல்லை, நான் எழுதிய அந்த இரட்டைவரியின் பொருள் அது அல்ல. அது வேறொரு தருணத்திற்காக நான் இயற்றிய செய்யுள்… அது வேறு” என்று வால்மீகி சொன்னார்.

“காவியம் எப்படிப் படிக்கப்படவேண்டும் என்றும் நீங்கள் சொல்லமுடியாது” என்று நான் சொன்னேன். “உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது. காவியத்தை எழுதாமலிருந்திருக்கலாம்.”

“நான் எழுதத் தொடங்கியது ராமனின் கதையை அல்ல. நான் எழுதியது பிருத்வியின் கதையை” என்று வால்மீகி சொன்னார். “நான் தொடங்கிய வரி அதர்வவேதத்தில் இருந்தது. மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய: அந்த வரியில் இருந்து நான் சென்றடைந்தது கண்ணீரில் நனைந்திருந்த அவள் முகம். மண்ணின் மகள் அவள்… நான் இயற்றியது அவள் கதையை மட்டும்தான்…“ வால்மீகி சொன்னார் “பிருத்வ்ய பிருத்வ்ய என்ற சொல்லை மட்டும் சொல்லிச் சொல்லி தவம் செய்து அவள் கண்ணீரைக் கண்டேன். அதை என்றைக்கும் என இங்கே நிலைநிறுத்திவிடவேண்டும் என்று எண்ணி அதை எழுதினேன்.”

நான் அவர் சொல்லப்போவதைக் கேட்க அமர்ந்தேன். அரிதாகவே எனக்குக் கதை சொல்பவர்கள் அமைகிறார்கள்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:33

விஷ்ணுபுரம் குமரகுருபரன் கவிதை அரங்கு

சென்னை சிறுகதை அரங்கு

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு வழங்கப்படுகிறது. விழா 8 ஜூன் 2025 அன்று காலை முதல் சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.

இந்த அரங்கில் கவிஞர்களுடனான உரையாடல் அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் கலந்துகொள்கிறார்.

றாம் சந்தோஷ் – தமிழ்விக்கி

இணைப்புகள்

தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன் றாம் சந்தோஷ் கவிதைகள் உயிர்மை றாம் சந்தோஷ் கனலி இதழ் கட்டுரைகள்  றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் ‘சட்டை வண்ண யானைகள் றாம் சந்தோஷ் கவிதைகள் றாம் சந்தோஷ் இணையப்பக்கம் மூர்க்கத்தின் வேறுவேறு தேவதைகள் றாம் சந்தோஷ் உறவின் மூன்று தடையங்கள் றாம் சந்தோஷ்

8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் காலை முதல் நிகழும் இலக்கிய அரங்கில் கவிஞர் சசி இனியன் கலந்துகொள்கிறார்.

சசி இனியன் தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:31

பறவைத்தியானம் – சர்வா

குருஜியின் யோகா வகுப்பில் தியானமுறை பயிற்சியில் கண்களை மூடிக் கொண்டு பறவைகளின் ஓசையை கேட்கும்படி சொல்வது நினைவில் வந்தது.  ஒரு படி மேலாக பறவைப் பார்த்தல் அறிமுக வகுப்பு எனக்கு பெரிய வாசலை திறந்து வைத்தது. இப்போது விடியற்காலை பறவைகளின் ஓசைகள் தான் என்னை எழுப்பிவிடுகின்றன.

பறவைத்தியானம்

I too had a prolonged doubt about literature; I used to ask myself the same question. How is it that literature does not seem to cultivate individuals and improve society?

T he use of literature- A letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 11:30

June 6, 2025

கால் மேல்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்துகொண்டதுதான். குரு சௌந்தர் போன்ற யோக ஆசிரியர்கள் சொல்லித்தருவதும்தான். யோகத்தில் பல வடிவங்கள் இதற்கென்றே உள்ளன. ஆனால் நான் அதையே ’சொந்தமாகக் கண்டுகொண்டு’ செய்ய ஆரம்பித்தது அண்மையில். அதாவது ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு.

இப்போது அறுபத்தி மூன்று ஆகிறது. அறுபத்துநான்கு நடக்கிறது என்றும் சொல்லலாம். முதுமை என்று சொல்லிக்கொள்ள தயக்கம், இந்தக் காலகட்டத்திற்கு இது முதுமை அல்ல. ஆனால் சென்ற தலைமுறை அறிஞர்களின் வரலாற்றை எழுதும்போது பெரும்பாலானவர்கள் மறைந்த வயது என்பது தெரியவருகிறது. அவர்களின் வாழ்க்கைமுறையில் இருந்து நாம் பெரிதாக மாறிவிடவில்லை.

அண்மையில் வெள்ளிமலையில் நிகழ்ந்த ஓர் உரையில் டாக்டர் தங்கவேல் (சித்தா) சொன்னார், இப்போது வாழ்நாள் கூடியிருக்கிறது. அதற்கு முதன்மைக் காரணம் மருத்துவம் என்னும் எண்ணம் மருத்துவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்ல. முதன்மைக் காரணம் நோய் பற்றிய அறிவு உருவானதும் அது பரவலாக ஆனதும்தான்.

எனக்கு அது உடனடியாக உண்மையெனத் தெரிந்தது. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் நாம் குடிநீர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு முன்பு வரை தண்ணீர் தெளிவாக இருந்தால் குடிப்போம். டீக்கடைகளில் சிமெண்ட் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை உடனிருக்கும் பிளாஸ்டிக் மக்கில் அள்ளி எல்லாரும்தான் குடித்துக் கொண்டிருந்தோம். (தாயைப்பழித்தாலும் தண்ணியப் பழிக்கக்கூடாது)

சென்ற பத்தாண்டுகளாக, குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பின்னர்தான், சுவாசநோய்கள் காற்றுவழியாகப் பரவுகின்றன என்பது பரவலாக அறியவும் ஏற்கவும்பட்டிருக்கிறது. ஒரு பஸ்ஸிலோ ரயிலிலோ எவராவது முகத்தை மூடாமல் தும்மினால் உடனே ஒதுங்கிக்கொண்டு முகம் சுளிக்கிறார்கள். வசைபாடுவதுகூட உண்டு. அண்மைக்காலம் வரை ஜலதோஷம் என்பது குளிர்ச்சியால் வரும் நோய் என்றுதான் நம்பிவந்தோம்.இப்போதும் கைமருத்துவர்கள் அதைத்தான் சொல்கிறார்கள்.

தமிழகத்தின் மருந்துவிற்பனையில் பாதி மழைக்கால வயிற்றுப்போக்கு, வைரல் காய்ச்சல்களுக்கான மாத்திரைகள். இன்று அவை மிகமிகக் குறைந்து விட்டிருக்கின்றன. ஆனால் வட இந்தியாவில் பார்த்தால், குறிப்பாக அண்மையில் பைத்தானில் கவனித்தேன், சகட்டுமேனிக்கு எல்லா தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பொதுவெளியில் மலம் கழிப்பது இன்னும் உள்ளது என்றாலும் உக்கிரமான பிரச்சாரம் வழியாக பெரும்பகுதி குறைந்துள்ளது. வட இந்தியாவிலும் அரசு முன்னெடுத்த கழிப்பறை இயக்கம் கண்கூடான பயன்களை அளித்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனாலும் குடிசைகள் இருக்கும் வரை முற்றாக தவிர்க்கமுடியாது.

அதேபோன்றுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுகள். அண்மைக்காலமாக உணவு பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொப்பை என்பது ஆரோக்கியம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். நிறைய உண்பது உடல்நலத்தைக் கெடுக்கும் என்பது  படிக்காத மக்கள் வரைச் சென்று சேர்ந்துவிட்டது. நல்ல உணவு என்பது பழங்களும் காய்கறிகளும் நிறைந்தது என்று தெரியாதவர்கள் இல்லை.

அதற்கிணையான ஒரு விழிப்புணர்வு நம்முடைய அமர்தல், படுத்தல் பற்றியும் வந்தாகவேண்டும். நாம் ஒருநாளில் பெரும்பாலான நேரத்தை அமர்ந்தே செலவழிக்கிறோம். அது நம் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என அறிவதில்லை. கூன்போட்டு அமர்வதனால் உருவாகும் மூச்சுக்குறைவு மூளைக்கு ஆக்ஸிஜனை எப்படி குறைக்கிறது, கழுத்தை நீட்டி அமர்வதனால் உருவாகும் வலிகள் என்னென்ன, நீண்டநேரம் அமர்வதன் பிழைகளால் வரும் முதுவலிகளும், மூட்டுவலிகளும் எப்படிப்பட்டவை ஆகியவை நிறைய இன்னும் பேசப்படவேண்டும்.

அதேபோல தூக்கம் சார்ந்த விழிப்புணர்வும் இன்னும் சரியாக திரளவில்லை. நல்ல தூக்கம் என்பது இயல்பாக உருவாகவேண்டியது. குறைந்தது ஐந்து மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்கு ஏழுமணி நேரம் தூங்கவேண்டும். ஆழ்ந்த தூக்கமே உண்மையில் தூக்கம். சீரான தூக்கம் என்பது ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பதன் வழியாகவே உருவாகும். கூகிள் வாட்ச் போன்றவை ஒரு சிறு வட்டத்தில் அந்த விழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றன.

இதயநோய்கள் இளம்வயதில் வருவதற்கு உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களுக்கு இணையாகவே அமர்தல் சிக்கல்களும் தூக்கச்சிக்கல்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் தூக்கம் பற்றியாவது ஓரளவு சொல்லி விளக்கிவிடலாம். அமர்தல் பிரச்சினை பற்றி விளக்குவது கடினம்.

நாளெல்லாம் அமர்ந்திருப்பவரின் கால் தொங்கவிடப்பட்ட நிலையில் உள்ளது .அங்கே செல்லும் ரத்தம் முழுக்க திரும்ப இழுக்கப்பட்டு உடலெங்கும் செல்வதில்லை. அங்கே ரத்தத் தேக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பருமனானவர்கள், இதயத்தின் ஆற்றல் குறைந்துவரும் முதியவயதில் உள்ளவர்கள். தொங்கவிட்டுக்கொண்டே இருத்தல், நின்றுகொண்டே இருத்தலால் ரத்தக்குழாய்கள் பருத்து வெரிக்கோஸ் என்னும் சிக்கல் உருவாகிறது. இன்றைய முதிய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் உண்டு.

அனைத்துக்கும் மேலாக மூளைக்கு போதிய ரத்தம் செல்லாததனால் உருவாகும் மனக்களைப்பு முக்கியமான பிரச்சினை. அது இதனால் என நாம் அறிவதில்லை. ‘சரி ஒரு டீயைப் போடுவோம்’ என்றோ ’ஆறுதலா ஒரு சிகரெட்’ என்றோதான் நம் எண்ணம் ஓடுகிறது.

அண்மைக்காலம் வரை நான் ஒன்றரை அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை இடைவெளி விடுவதைத்தான் செய்துவந்தேன். ஒருநாளில் 10 மணி நேரம் வரை எழுதவும் வாசிக்கவும் செய்பவன். ஆகவே இடைவெளிகளில் நானே கீழே சென்று டீ போட்டு கொண்டுவந்து குடிப்பேன். மொட்டைமாடியில் ஒரு சின்ன நடைபோட்டுக் கொண்டே வந்திருக்கும் போன்களை அழைத்துப் பேசுவேன். மொட்டைமாடியை கூட்டிப்பெருக்குவதும் உண்டு. அதுவே போதுமானதாக இருந்தது.

ஆறுமாதம் முன்பு இரண்டு மணிநேர வாசிப்பு. அதுவும் வேதாந்த தத்துவம். மூளைச் சலிப்பு வந்தது. நல்ல வெயிலில் வெளியே போக முடியாமல் வீட்டுக்குள் சுற்றியபடி பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் படுக்கலாம் என்று படுத்தேன். காலடியில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதன்மேல் காலை வைத்து படுத்தேன். பத்தே நிமிடத்தில் புத்துணர்ச்சி அடைந்தேன். எழுந்து மீண்டும் வாசிக்கலானேன்.

அதையே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிக் கொண்டேன். காலை தூக்கி சுவர்மேல் சாய்த்து வைத்தபடி கட்டிலில் படுத்துக்கொள்வேன். மூன்று பாட்டு கேட்கும் நேரம். அல்லது ஒரு சின்னக் குறட்டை வருவது வரை ஒரு சிறு தூக்கம். மூளை களைப்பை இழந்து தெள்ளத்தெளிவாக ஆகிவிடுகிறது என்பதைக் கவனித்தேன். அமர்ந்திருக்கும்போது உருவாகும் முதுகுவலியும் இல்லை. உடலும் புத்துணர்ச்சி அடைந்தது.

இப்போது ஒருநாளில் மூன்று முறையாவது அதைச் செய்கிறேன். பத்து நிமிடம் வீதம்தான். பகல்தூக்கம் இல்லை, ஆகவே இரவில் பத்துமணிக்கே தூங்கிவிடுகிறேன். வயதானதால் உருவாவதா என நான் கண்காணித்துக் கொண்டிருந்த சிறிய மூளைக்களைப்பு அறவே இல்லை. ஆச்சரியம்தான்.

கால்களில் தேங்கும் ரத்தம் திரும்ப உடலுக்கு வருகிறது, மூளைக்கு அதிக ரத்தமும் ஆக்ஸிஜனும் செல்கிறது. அதுவே இந்த எளிய பயிற்சியின் ரகசியம். நான் இணையத்தில் வாசித்தால் உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்யலாம் என்று சொல்கிறார்கள். உலகம் முழுக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. நீண்டநேரம் கார் ஓட்டுபவர்கள் அவசியம் செய்யவேண்டிய பயிற்சியாக அமெரிக்காவில் வலியுறுத்தப்படுகிறது.

https://health.clevelandclinic.org/benefits-of-legs-up-the-wall

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.