கால் மேல்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்துகொண்டதுதான். குரு சௌந்தர் போன்ற யோக ஆசிரியர்கள் சொல்லித்தருவதும்தான். யோகத்தில் பல வடிவங்கள் இதற்கென்றே உள்ளன. ஆனால் நான் அதையே ’சொந்தமாகக் கண்டுகொண்டு’ செய்ய ஆரம்பித்தது அண்மையில். அதாவது ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு.
இப்போது அறுபத்தி மூன்று ஆகிறது. அறுபத்துநான்கு நடக்கிறது என்றும் சொல்லலாம். முதுமை என்று சொல்லிக்கொள்ள தயக்கம், இந்தக் காலகட்டத்திற்கு இது முதுமை அல்ல. ஆனால் சென்ற தலைமுறை அறிஞர்களின் வரலாற்றை எழுதும்போது பெரும்பாலானவர்கள் மறைந்த வயது என்பது தெரியவருகிறது. அவர்களின் வாழ்க்கைமுறையில் இருந்து நாம் பெரிதாக மாறிவிடவில்லை.
அண்மையில் வெள்ளிமலையில் நிகழ்ந்த ஓர் உரையில் டாக்டர் தங்கவேல் (சித்தா) சொன்னார், இப்போது வாழ்நாள் கூடியிருக்கிறது. அதற்கு முதன்மைக் காரணம் மருத்துவம் என்னும் எண்ணம் மருத்துவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்ல. முதன்மைக் காரணம் நோய் பற்றிய அறிவு உருவானதும் அது பரவலாக ஆனதும்தான்.
எனக்கு அது உடனடியாக உண்மையெனத் தெரிந்தது. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் நாம் குடிநீர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு முன்பு வரை தண்ணீர் தெளிவாக இருந்தால் குடிப்போம். டீக்கடைகளில் சிமெண்ட் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை உடனிருக்கும் பிளாஸ்டிக் மக்கில் அள்ளி எல்லாரும்தான் குடித்துக் கொண்டிருந்தோம். (தாயைப்பழித்தாலும் தண்ணியப் பழிக்கக்கூடாது)
சென்ற பத்தாண்டுகளாக, குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பின்னர்தான், சுவாசநோய்கள் காற்றுவழியாகப் பரவுகின்றன என்பது பரவலாக அறியவும் ஏற்கவும்பட்டிருக்கிறது. ஒரு பஸ்ஸிலோ ரயிலிலோ எவராவது முகத்தை மூடாமல் தும்மினால் உடனே ஒதுங்கிக்கொண்டு முகம் சுளிக்கிறார்கள். வசைபாடுவதுகூட உண்டு. அண்மைக்காலம் வரை ஜலதோஷம் என்பது குளிர்ச்சியால் வரும் நோய் என்றுதான் நம்பிவந்தோம்.இப்போதும் கைமருத்துவர்கள் அதைத்தான் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் மருந்துவிற்பனையில் பாதி மழைக்கால வயிற்றுப்போக்கு, வைரல் காய்ச்சல்களுக்கான மாத்திரைகள். இன்று அவை மிகமிகக் குறைந்து விட்டிருக்கின்றன. ஆனால் வட இந்தியாவில் பார்த்தால், குறிப்பாக அண்மையில் பைத்தானில் கவனித்தேன், சகட்டுமேனிக்கு எல்லா தண்ணீரையும் குடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பொதுவெளியில் மலம் கழிப்பது இன்னும் உள்ளது என்றாலும் உக்கிரமான பிரச்சாரம் வழியாக பெரும்பகுதி குறைந்துள்ளது. வட இந்தியாவிலும் அரசு முன்னெடுத்த கழிப்பறை இயக்கம் கண்கூடான பயன்களை அளித்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனாலும் குடிசைகள் இருக்கும் வரை முற்றாக தவிர்க்கமுடியாது.
அதேபோன்றுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுகள். அண்மைக்காலமாக உணவு பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொப்பை என்பது ஆரோக்கியம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். நிறைய உண்பது உடல்நலத்தைக் கெடுக்கும் என்பது படிக்காத மக்கள் வரைச் சென்று சேர்ந்துவிட்டது. நல்ல உணவு என்பது பழங்களும் காய்கறிகளும் நிறைந்தது என்று தெரியாதவர்கள் இல்லை.
அதற்கிணையான ஒரு விழிப்புணர்வு நம்முடைய அமர்தல், படுத்தல் பற்றியும் வந்தாகவேண்டும். நாம் ஒருநாளில் பெரும்பாலான நேரத்தை அமர்ந்தே செலவழிக்கிறோம். அது நம் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என அறிவதில்லை. கூன்போட்டு அமர்வதனால் உருவாகும் மூச்சுக்குறைவு மூளைக்கு ஆக்ஸிஜனை எப்படி குறைக்கிறது, கழுத்தை நீட்டி அமர்வதனால் உருவாகும் வலிகள் என்னென்ன, நீண்டநேரம் அமர்வதன் பிழைகளால் வரும் முதுவலிகளும், மூட்டுவலிகளும் எப்படிப்பட்டவை ஆகியவை நிறைய இன்னும் பேசப்படவேண்டும்.
அதேபோல தூக்கம் சார்ந்த விழிப்புணர்வும் இன்னும் சரியாக திரளவில்லை. நல்ல தூக்கம் என்பது இயல்பாக உருவாகவேண்டியது. குறைந்தது ஐந்து மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்கு ஏழுமணி நேரம் தூங்கவேண்டும். ஆழ்ந்த தூக்கமே உண்மையில் தூக்கம். சீரான தூக்கம் என்பது ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பதன் வழியாகவே உருவாகும். கூகிள் வாட்ச் போன்றவை ஒரு சிறு வட்டத்தில் அந்த விழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றன.
இதயநோய்கள் இளம்வயதில் வருவதற்கு உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களுக்கு இணையாகவே அமர்தல் சிக்கல்களும் தூக்கச்சிக்கல்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் தூக்கம் பற்றியாவது ஓரளவு சொல்லி விளக்கிவிடலாம். அமர்தல் பிரச்சினை பற்றி விளக்குவது கடினம்.
நாளெல்லாம் அமர்ந்திருப்பவரின் கால் தொங்கவிடப்பட்ட நிலையில் உள்ளது .அங்கே செல்லும் ரத்தம் முழுக்க திரும்ப இழுக்கப்பட்டு உடலெங்கும் செல்வதில்லை. அங்கே ரத்தத் தேக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பருமனானவர்கள், இதயத்தின் ஆற்றல் குறைந்துவரும் முதியவயதில் உள்ளவர்கள். தொங்கவிட்டுக்கொண்டே இருத்தல், நின்றுகொண்டே இருத்தலால் ரத்தக்குழாய்கள் பருத்து வெரிக்கோஸ் என்னும் சிக்கல் உருவாகிறது. இன்றைய முதிய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் உண்டு.
அனைத்துக்கும் மேலாக மூளைக்கு போதிய ரத்தம் செல்லாததனால் உருவாகும் மனக்களைப்பு முக்கியமான பிரச்சினை. அது இதனால் என நாம் அறிவதில்லை. ‘சரி ஒரு டீயைப் போடுவோம்’ என்றோ ’ஆறுதலா ஒரு சிகரெட்’ என்றோதான் நம் எண்ணம் ஓடுகிறது.
அண்மைக்காலம் வரை நான் ஒன்றரை அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை இடைவெளி விடுவதைத்தான் செய்துவந்தேன். ஒருநாளில் 10 மணி நேரம் வரை எழுதவும் வாசிக்கவும் செய்பவன். ஆகவே இடைவெளிகளில் நானே கீழே சென்று டீ போட்டு கொண்டுவந்து குடிப்பேன். மொட்டைமாடியில் ஒரு சின்ன நடைபோட்டுக் கொண்டே வந்திருக்கும் போன்களை அழைத்துப் பேசுவேன். மொட்டைமாடியை கூட்டிப்பெருக்குவதும் உண்டு. அதுவே போதுமானதாக இருந்தது.
ஆறுமாதம் முன்பு இரண்டு மணிநேர வாசிப்பு. அதுவும் வேதாந்த தத்துவம். மூளைச் சலிப்பு வந்தது. நல்ல வெயிலில் வெளியே போக முடியாமல் வீட்டுக்குள் சுற்றியபடி பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் படுக்கலாம் என்று படுத்தேன். காலடியில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதன்மேல் காலை வைத்து படுத்தேன். பத்தே நிமிடத்தில் புத்துணர்ச்சி அடைந்தேன். எழுந்து மீண்டும் வாசிக்கலானேன்.
அதையே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிக் கொண்டேன். காலை தூக்கி சுவர்மேல் சாய்த்து வைத்தபடி கட்டிலில் படுத்துக்கொள்வேன். மூன்று பாட்டு கேட்கும் நேரம். அல்லது ஒரு சின்னக் குறட்டை வருவது வரை ஒரு சிறு தூக்கம். மூளை களைப்பை இழந்து தெள்ளத்தெளிவாக ஆகிவிடுகிறது என்பதைக் கவனித்தேன். அமர்ந்திருக்கும்போது உருவாகும் முதுகுவலியும் இல்லை. உடலும் புத்துணர்ச்சி அடைந்தது.
இப்போது ஒருநாளில் மூன்று முறையாவது அதைச் செய்கிறேன். பத்து நிமிடம் வீதம்தான். பகல்தூக்கம் இல்லை, ஆகவே இரவில் பத்துமணிக்கே தூங்கிவிடுகிறேன். வயதானதால் உருவாவதா என நான் கண்காணித்துக் கொண்டிருந்த சிறிய மூளைக்களைப்பு அறவே இல்லை. ஆச்சரியம்தான்.
கால்களில் தேங்கும் ரத்தம் திரும்ப உடலுக்கு வருகிறது, மூளைக்கு அதிக ரத்தமும் ஆக்ஸிஜனும் செல்கிறது. அதுவே இந்த எளிய பயிற்சியின் ரகசியம். நான் இணையத்தில் வாசித்தால் உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்யலாம் என்று சொல்கிறார்கள். உலகம் முழுக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. நீண்டநேரம் கார் ஓட்டுபவர்கள் அவசியம் செய்யவேண்டிய பயிற்சியாக அமெரிக்காவில் வலியுறுத்தப்படுகிறது.
https://health.clevelandclinic.org/benefits-of-legs-up-the-wall
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
