Jeyamohan's Blog, page 94
June 10, 2025
அறியாத நிலம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
என் மனைவி அவுஸ்திரேலியாவில் தான் வசிக்கின்றாள். சென்ற ஆண்டே நானும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டேன் இனி அவர்கள் வீசா தந்தால் செல்வதுதான். எனக்கு வெண்முரசை அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவன் “நீ போக முன்னம் ஜெயமோகன்ட அவுஸ்திரேலியா பயண அனுபவத்தின் புல்வெளி தேசம் எண்ட புத்தகம் இருக்கு வாசிச்சிரு” என்று சொல்லி இருந்தான். உண்மையில் அவன் “ஜெயமோகன்” என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. அது என்ன என்று இப்போது சொல்ல மாட்டேன் இறுதியில் சொல்லுவேன்.
ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. நான் என் அக்காவை பார்ப்பதற்காக மல்லாவியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அவள் மெசையில் இருந்த புத்தகங்களுக்கு இடையில் புத்தகம் ஒன்றின் அடிப்பகுதி மட்டும் தெரிவது போல் ஒரு புத்தகம் இருந்தது. அதில் அடியில் கறுப்பான நிழல் உருவில் புல்வெளியில் கங்காரு ஒன்று தாவ தயாரான நிலையில் பின்புலம் அந்திவானத்திற்குரிய மஞ்சள் சிவப்பு நிறங்களில் காணப்பட்டது. உள்ளுணர்வு தூண்ட அப்புத்கத்தை இழுத்து வெளியே எடுத்தவுடன் நினைத்து சரிதான் என்ற புன்னகையுடன் பார்தேன். அது 2009ம் ஆண்டு முதல் பதிப்பில் வந்த புல்வெளி தேசம் புத்தகம்.
அக்கா யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இரவல் எடுத்து வந்திருந்தாள். நூலகத்திற்குரிய பாணியில் துணி மற்றும் கடினமான அட்டை வைத்து கட்டப்பட்டிருந்தது. புத்தகத்தை திறந்து முகர்ந்து பார்தேன் பழைய புத்தகங்களுக்கே உரித்தான கிளர்ச்சி ஊட்டும் மணத்துடன் இருந்து. தாள்கள் இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அக்காவிடம் புத்தகத்தை கொண்டு சென்று வாசிக்க தருமாறு கேட்டேன். அவள் ” டேட்ட பார்,இருந்தா கொண்டு போ” என்றாள். பின் அட்டையின் உட்புறத்தில் பார்தேன் இது வரை பதினொருவர் முன்னமே எடுத்திருந்தனர். ஒப்படைப்புக்கான திகதி மே 14 என்று குறிக்கப்பட்டிருந்து. ” “இன்னும் நாலு நாள் இருக்கு வாசிச்சுட்டு தாரன்” என்று எடுத்துவந்து விட்டேன்.
நான் இதுவரை ஜெயமோகனின் பயணக்கட்டுரைகள் எதையும் வாசித்திருக்கவில்லை. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஜெயமோகனின் இணைய தளத்தின் தின பதிவுகள் அனைத்தயும் தினமும் காலையில் காலைக்கடன் முடிக்கும் வேளையில் வாசித்து முடித்து விடுவேன். அதில் நான் வாசித்த கட்டுரைகள் பொதுவாக சொல்ல வந்த விடயத்தை தெளிவாகவும் செறிவாகவும் சொல்லப்பட்டதாக இருக்கும். இப்புத்தகத்திலும் அவுஸ்திரேலியா பற்றி அவ்வாறு இருக்கும் என்றுதான் நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்த பின் அது சிறந்த அனுபவத்துடன் கூடிய பரந்த அறிதலாக இருந்து.
அவுஸ்திரேலிய விமானநிலைய கட்டுப்பாடுகளையும் காரணத்தையும் சொல்லி ஜெட்லாக்கை முறியடிப்பதற்கான டிப்சுடன் ஆரம்பித்த புத்தகம் தாவரங்கள், விலங்குகள், நிலத்தோற்றம், குடியேற்றம், போர், பொருளாதாரம், மக்கள், ஆக்கிரமிப்பு, கலைகள், தமிழ் ஆளுமைகள் என்று புத்தகத்தில் அவுஸ்திரேலியாவை பற்றி மட்டும் அல்லாமல் இந்தியாவுடன் ஒப்பிட்டு ஜெயமோகனுக்கே உரித்தான உருவகங்கள், தத்துவார்த்த சிந்தனைகளுடன் சிறந்த விவரணைகள் மூலம் விளக்கி இருந்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டுமே நான் அறியா நாடுகள் இயலுமானவரை நான் இலங்கையில் உள்ள விடயங்களை வைத்தே புரிந்து கொண்டேன். பின்வரும் விடயங்களை உதாரணமாக சொல்லலாம்.
மக்கள் வாழும் மிகச் செறிவான இடங்கள் ( செரி), இரண்டு மூன்று ஏக்கர் இடைவேளி உள்ள வீடுகள், இடைப்பட்ட சிறிய நிலப்பரப்புடைய வீடுகள் பொன்ற வேறுபாடுகளை பொதுவாக இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்திற்குள் ஒன்றரை மணித்தியால பயணத்திற்குள்ளாகவே பார்த்துவிடலாம். மற்றும் கங்காரு களை பற்றி சொல்லும் போது இந்திய மலை அணில் பற்றியும் சொல்லி இருப்பார் இலங்கையிலும் அவ்வகை அணில்கள் உண்டு மர அணில் என்று நாங்கள் அழைப்போம். பார்த்ததும் அவ்… என்று சோக்கி நிக்குமளவு adorable ஆக இருக்கும். அது இலங்கையில் மலையகத்தில் மட்டுமல்லாது அனைத்து காட்டு பிரதேசங்களிலும் உள்ளது. மல்லாவியில் உள்ள எங்கள் வீட்டிற்கு கிழமைகளில் குறைந்தது நான்கு தினங்கள்சரி வரும். பார்த்து விட்டேன் என்றால் அது போகும் வரை நானும் போவதில்லை.
*இப் புத்தகத்தில் கூறப்பட்ட விடயங்களில் 90% ஆனவை எனக்கு தெரியாத விடயங்கள். குறிப்பாக ஒன்றை சொல்வதென்றால், இது வரை நான் கூவம் என்ற வார்தையை என்றால் பொதுவாக கழிவுநீர் மற்றும் குப்பை நிறைந்து இருக்கும் நீர் நிலை அல்லது ஆறு என்று தான் நினத்திருந்தேன். வாசித்த பின் தான் அது உண்மையான ஆற்றின் பெயர் என்று தெரிந்து.
எனக்கு இப்புத்தகம் அறிதலுடன் மட்டுமல்லாது அணுக்கம் ஆவதற்கு முக்கிய காரணம் இடையிடையே உள்ள நகைச்சுவை மற்றும் அவர் மனைவியுடனான செல்லச் சீண்டல்களும் என்று சொல்லலாம்.
இப்புத்தகம் அறிதல் ஆர்வம் உள்ளவர்களுக்கான Chocolate Multipack என்று சுருக்கமாக சொல்லாம்.
எனக்கு பல நண்பர்கள் ஆசானாக உள்ளார்கள். இப்புத்தகத்தை வாசித்து முடித்தபின் என் ஆசான் நண்பன் ஆனதாக உணர்கிறேன்.
ரொனால்ட் ஹாரிசன்
எவர் தேவை?
நாங்கள் இந்த அமைப்பை தீவிரமான சிறு குழுவுக்காகவே நடத்த விரும்புகிறோம். இதன் தீவிரம் தளர அனுமதிக்கக்கூடாது என எண்ணுகிறோம். ஆகவே நம் சூழலில் உள்ள பொதுவான அக்கறையின்மை, சோம்பல், மேலோட்டமான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டவர்களை தவிர்க்க முயல்கிறோம். அத்தகையவர்கள் கல்வியை விட அசௌகரியங்களை முதன்மையாகக் கருதுவார்கள். குறைகளை மட்டுமே சொல்வார்கள். சிறிய ஒரு காரணத்துக்காகவரே பதிவுசெய்த நிகழ்வை தவிர்ப்பார்கள். ஒரு சினிமா ரிலீஸ் ஆகிறது என்பதற்காகவே நிகழ்ச்சிகளை தவிர்த்தவர்கள் உண்டு. ஆகவே கொஞ்சம் கறாராகவே இருக்கிறோம்.
எவர் தேவை?I was reading your short articles about Advaita. I am 80 years old and was listening to the general discourse on Advaita in Tamil Nadu. My impression is that Advaita was abducted by casteism and religion in Tamil Nadu again.
Revival of Advaita -A letterயுவனுக்கு இயல்
கனடா இயல் விருது 2025 ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சந்திரசேகருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கியத் தோட்ட விருது பெறும் ரவி சுப்ரமணியனுக்கும், புனைவிலக்கியத்திற்காக விருது பெறு இரவி அருணாசலத்திற்கும் வாழ்த்துக்கள்.
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி ரவி சுப்ரமணியம் தமிழ் விக்கியுவன் சந்திரசேகர் காணொளி
June 9, 2025
குமரகுருபரன் விருது விழா 2025
ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் அமைப்பைப் பொறுத்தவரை விழாக்களால் தான் அடையாளப் படுத்தப்படுகிறது. இப்போது கிட்டத்தட்ட ‘உலகெங்கும்’ என்றுகூட சொல்லமுடியும். மே மாதம் குரு நித்யா அரங்கு .(இந்த ஆண்டு அது ஜூனில் வரும் வாரம்). அடுத்து உடனே ஜூன் மாதம் குமரகுருபரன் விருது. ஜூலையில் குருபூர்ணிமா. இந்த ஆண்டு ஜூலையில் ஐரோப்பிய இலக்கிய முகாம். ஆகஸ்டில் தமிழ்விக்கி- தூரன் விருது. அக்டோபரில் அமெரிக்காவில் இலக்கியமுகாம். டிசம்பரில் விஷ்ணுபுரம் விருது. “ஜனவரி முதல் ஏப்ரல் வரை சும்மா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது சார்” என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜூனில் இரு நிகழ்வுகள். குரு நித்யா கருத்தரங்கை ஜூனுக்கு தள்ளிவைத்தோம், அதை ஊட்டியில் நடத்தலாமென்னும் எண்ணத்துடன். அது முடியாது போனமையால் (எங்கள் நிகழ்வுகளின் எண்ணிக்கைதான் காரணம்) இரண்டு விழாக்கள் ஒரே மாதம் அமைந்துவிட்டன. இந்த ஆண்டும் ஒரு அபாரமான நண்பர்கூடுகையாக அமைந்தது.
எங்கள் நிகழ்வுகளின் இரண்டு சிறப்புகள், பொதுவாக இங்கே நிகழும் பிற விழாக்களில் இருந்து கற்றுக்கொண்டவை. ஒன்று நீளமான உரைகளுடன் நீண்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துவதில்லை. உரைகளுடன் கூடிய நிகழ்வுகள் 2 மணி நேரத்திற்குள் முடியும். பகல் முழுக்க நிகழும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களும் பங்குகொள்ளும் உரையாடல் அமர்வுகள். அவை விறுவிறுப்பாக நிகழும், உரைகள் அளிக்கும் சலிப்பு இருப்பதில்லை. இரண்டு, பங்கேற்பாளர்களின் நூல்களைப் பற்றி முன்னரே அறிவிப்போம். அவற்றை பலர் வாசித்துவிட்டு வந்திருப்பார்கள். ஆகவே விவாதம் பயனுள்ள முறையிலேயே நிகழும்.
இந்த இரு காரணங்களால் எங்கள் விழாக்களில் வாசகர் பங்கேற்பு எப்போதுமே மிகுதி. அரங்கு நிறைந்து ஒரு பகல் முழுக்க தீவிரமான இலக்கியவிவாதம் நிகழ்வது என்பது தமிழகத்தில் மிக அரிதான ஒன்று. நான் இதை அனைவருக்கும் பொதுவாகவே சொல்வேன். நம் இலக்கிய நிகழ்வுகள் வாசகர்களை கருத்தில் கொண்டவையாக அமையவேண்டும்.அவர்களுக்குச் சுவாரசியமானவையாகவும், அவர்கள் எழுந்து செல்லும்போது யோசித்துக்கொண்டுசெல்ல சிலவற்றை அளிப்பவையாகவும் அமையவேண்டும்.
விந்தியா எனும் தீற்றல் வெளியீடுஇலக்கியவாசகர்கள் இலக்கிய நிகழ்வுகளால் சலிப்புற்றிருக்கிறார்கள், அவர்களை வரச்செய்யவேண்டும் என்றால் அவர்களை எண்ணியே நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவேண்டும் என நாம் உணர்ந்தாகவேண்டும். அதற்கான சில நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
நேரக் கட்டுப்பாட்டை மீறியும் உள்ளடக்கமில்லாமலும் பேசும் பேச்சாளர்களை தவிர்த்துவிடவேண்டும். அவர்கள் எவர் என நமக்கெல்லாமே தெரியும். காகிதங்களைப் பார்த்து நீண்டநேரம் வாசிப்பதுபோல மேடையை வீணடிக்கும் செயல் வேறு இல்லை.வீண் பேச்சுக்களை தவிர்க்கவேண்டும். ‘ஜாலியாக’ப் பேசுவது என்ற பாவனையில் பேசப்படும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அப்போது அரங்கினர் சிரித்தாலும்கூட பிறகு நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அரங்கில் வேடிக்கை, மகிழ்ச்சி, சிறிய சீண்டல்கள் எல்லாம் இருக்கலாம். ஆனால் ஓர் உரை முழுமையாகவே அப்படி அமைந்துவிடவே கூடாது. வாசகர்கள் அறிய, சிந்திக்க ஏதேனும் இல்லாத ஓர் உரை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீளுமென்றால் அது வீண்.எக்காரணம் கொண்டும் அழைப்பிதழில் பேச்சாளர் என்று பெயர் குறிப்பிடப்படாத எவரும் பேசக்கூடாது. கேள்வி என எழுந்து பேசுபவர்கள்கூட இரண்டு நிமிடங்களுக்குமேல் பேச அனுமதிக்கப்படலாகாது. அரங்க விவாதங்கள் திசைதிருப்பப்படலாகாது. பலசமயம் மேடையில் இருக்கும் முக்கியமானவர்களை பார்த்து நிகழ்வுக்கு வருபவர்கள் சம்பந்தமே இல்லாதவர்கள் அரங்கை கையிலெடுப்பதைக் கண்டு வெறுத்துப் போகிறார்கள்.’தூண்டில் புழு மாதிரி எழுத்தாளர்களை காட்டிட்டு நாம கவ்விட்டா அவனுக பேச ஆரம்பிச்சிடறானுக’ என்று ஒரு நண்பர் ஒரு நிகழ்வு பற்றிச் சொன்னார்.நேரம் அமைப்பாளரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். தொடங்க சிலசமயம் சில நிமிடங்கள் தாமதமாகலாம். முடிப்பது சரியான நேரத்தில் நிகழவேண்டும். பங்கேற்பாளர்கள் பலர் தொலைவில் இருந்து வருபவர்கள்.குமரகுருபரன் அரங்கில் காலை பதினொரு மணிக்கெல்லாம் திரும்பிப் பார்த்தபோது அரங்கு நிறைந்திருப்பதைக் கண்டேன். இரவு ஏழரை மணிக்கு நிகழ்ச்சி முடியும் வரை அந்தத் திரள் அப்படியே இருந்தது. நடுவே அளிக்கப்பட்ட இரண்டு மணிநேர இடைவெளியில்கூட அரங்கிலும் சுற்றிலும் நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வு ஓர் இலக்கிய அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுவது. ஆனால் பங்கேற்பாளர்கள் எல்லாவகையான கருத்தியல் சார்புகளையும், இலக்கிய எண்ணங்களையும் கொண்டவர்கள் என்பதை அந்தக் கூட்டத்தைப் பார்த்தே ஒருவர் உணரமுடியும். (இல்லை, ஒரே இலக்கியக் குழுதான் இது என சொல்வீர்கள் என்றால் தமிழில் இலக்கியம் என்பதே இந்தக் குழுவுக்குள்தான் என்றுதான் பொருளாகும்) எல்லா தரப்பினரும் வந்திருந்தனர் என்பதனால் எல்லா இடங்களிலும் விவாதங்கள். காலையில் நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே விவாதங்கள் தொடங்கிவிட்டன என்று கேள்விப்பட்டேன்.
அந்த விவாதம் அரங்கில் தொடர்ந்து நடைபெற்றது. விஜயராவணன், ரம்யா அரங்கிலும் சரி; றாம் சந்தோஷ், சசி இனியன் அரங்கிலும் சரி தொடர்ச்சியாக மாறுபட்ட கோணங்களில் கேள்விகள் எழுந்தன. பெரும்பாலான கேள்விகள் ‘நாம் இதை இப்போ அரங்கு தொடங்குறதுக்கு முன்னாடியே பேசினோம்’ என்று தொடங்கின. கேள்விகளில் ஒரு பகுதி எதிர்நிலை கொண்டவையாகவும் இருந்தன. ரம்யா, விஜயராவணன், றாம் சந்தோஷ், சசி இனியன் நால்வருமே அவற்றை எதிர்கொண்டார்கள். றாம் சந்தோஷ் ஒரு வகையான மெல்லிய அங்கதத்துடன் பதில் சொன்னார். விஜய் ராவணனும், ரம்யாவும் தீவிரமாகவும் அகவயமாகவும் பதில் சொன்னார்கள். சசி இனியன் பல பதில்களை அரங்கிலேயே யோசித்து சற்று தாமதித்துப் பதில் சொன்னார்.
மனுஷ்யபுத்திரன், போகன் சங்கர், வெய்யில் ஆகியோரின் அமர்வு ஒரு தன்னியல்பான பொதுவிவாதம் எப்படி நிகழுமோ அப்படி நிகழ்ந்தது. அதில் என்ன பேசுபொருள் முதன்மைப்படும் என முன்னர் சொல்ல முடியாது. எங்கே முரண்பாடு நிகழுமென்றும் வகுக்கமுடியாது. அந்த தன்னியல்பான தன்மையே இந்தவகையான விவாதங்களின் அழகு. முரண்பாடுகள் உணர்ச்சிகரமாகக்கூட ஆகலாம், கருத்துவிவாதம் என்னும் எல்லையைக் கடக்காதவரை அவை மிக ஆக்கபூர்வமானவையே. இந்த விவாதம் அத்தகைய ஒரு நல்ல நிகழ்வு.
பேசுபொருளுக்கு சற்றே விலகி அவ்விவாதத்தில் மையம்கொண்டது ‘இளம் கவிஞர்கள் இதுவரையிலான கவிதைமரபை கல்விநீக்கம் (unlearn)செய்யவேண்டும் என்னும் வெய்யிலின் கருத்துக்கு மனுஷ்யபுத்திரன் அளித்த எதிர்வினை, போகன் அளித்த பதில், தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் ஆகியவை. மூவருமே தெளிவாகவும் உறுதியாகவும் தங்கள் தரப்பைப் பேசினார்கள். அது வாசகர்கள் மேற்கொண்டு யோசிக்கவேண்டிய ஒரு புள்ளி. ஒவ்வொருவருக்கும் அதில் ஒரு பார்வை இருக்கலாம். அவர்கள் அதை பிறருடன் விவாதித்து வளர்க்கலாம்.
நண்பர் வசுதேந்திராவின் அரங்கு அவருடைய மோகனசாமி (தமிழில் கே.நல்லதம்பி )என்னும் நூலை ஒட்டியே பெரிதும் நிகழ்ந்தது. அவருடைய தன்வரலாற்றுத்தன்மை கொண்ட கதைகள அவை. தன்னை ஒரு பால்புதுமையினர் என அறிவித்துக்கொண்ட அவர் அதன் விளைவுகளையும், அதன் அவசியத்தையும் விரிவாகவே பேசினார். வசுதேந்திரா நடை – கூறுமுறை இரண்டிலும் அசோகமித்திரனுக்கு அணுக்கமானவர். ஆனால் விரிவான வரலாற்றுநாவல்களை இப்போது எழுதி வருகிறார். வசுதேந்திராவின் உரையாடல் இயல்பான ஒழுக்கு கொண்டதாகவும், உணர்ச்சிகரமானதாகவும் இருந்தது.
இந்த அரங்கில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. என்னுடைய ஏழாம் உலகம் நூலின் கன்னட மொழியாக்கம் சாந்தி கே அப்பண்ணா அவர்களால் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ் கற்று, தமிழில் இருந்து தன் முதல் கன்னட மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மொழியாக்கம் மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். மேடையில் அதை வெளியிட பெற்றுக்கொண்டார்.
இன்னொரு நூல் விந்தியா என்னும் தீற்றல். ரம்யாவின் நீலி மின்னிதழ் பெண்ணிய இலக்கியத்தை முன்வைத்து வருகிறது. அதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மறைந்துபோன (அல்லது ரம்யாவின் பார்வையில் மறைக்கப்பட்ட) பெண் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. நீலி பதிப்பகத்தின் முதல் நூல் இது. விந்தியா எழுதியது ஐம்பது- அறுபதுகளில். ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்குப் பின் அவருடைய படைப்புகள் மீண்டும் வெளியாகின்றன.
இந்த வகையான விழாக்களின் முக்கியத்துவம் பற்றி எப்போதுமே சொல்லிவருகிறேன். இவற்றில் பேசப்படும் விஷயங்களை நாம் நூல்களில் வாசிக்கலாம். அவை உடனடியாகக் காணொளியாகவும் கிடைக்கின்றன. ஆனால் நேரடி நிகழ்வு உருவாக்கும் உணர்வுநிலைகளே வேறு. அவை நாம் இலக்கியம் என்னும் ஒரு பேரியக்கத்தின் உறுப்புகள் என நமக்குக் காட்டுகின்றன. நம் கவனம் அங்கே ஒருங்கு குவிவதைப்போல எங்கும் நிகழ்வதில்லை. நட்புகளை அடைகிறோம், பேணிக்கொள்கிறோம். இலக்கியச்சூழலில் இருக்கும் எவருக்கும் இயல்பாக உருவாகும் தனிமையுணர்வும், அர்த்தமின்மை உணர்வும் இந்தவகையான சந்திப்புகளால்தான் இல்லாமலாகின்றன என்பது என் முப்பது வருட அனுபவம். இந்த இணைய அடிமை சூழலில் நாம் பிடிவாதமாக எல்லாவகையான நேர்ச்சந்திப்புகளையும், நேரடி நிகழ்வுகளையும் நிகழ்த்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
மாலை நிகழ்வில் சோ.விஜயகுமார் பரிசை அவருடைய அம்மா மேடைக்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அவர் அம்மா உடல்நலம் குன்றியநிலையிலும் மேடையேறி விருதைப் பெற்றுக்கொண்டார். அது போகன் உள்ளிட்ட அனைவரையும் உணர்ச்சிகரமானவர்களாக ஆக்கியது. மாலைநிகழ்வை நண்பர் சிறில் அலெக்ஸ் ஒருங்கிணைத்தார்.
சரியாக ஏழரை மணிக்கு நிகழ்வு முடிந்தது. வழக்கம்போல சிறிதுநேரம் பொதுவான சந்திப்புகள், முகமன்கள், புகைப்படங்கள், விடைபெறல்கள். நிறைவான இன்னொரு விழா.
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்போது சென்னையில் இன்னொரு அமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். வெவ்வேறு படைப்பாளிகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் கருத்தரங்குகள் அவை. ஆகவே நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் தேர்ச்சி அடைந்துவிட்டிருக்கின்றனர். நண்பர் காளி பிரசாத் இந்நிகழ்வை முன்னின்று நடத்தினார். எல்லா முடிவுகளும் அவருடையவையே. நான் காவியம் எழுதும் உணர்வுநிலையில் இருந்தமையால் எட்டாம்தேதி காலையில்தான் நிகழ்வையே கவனித்தேன். நண்பர்கள் சண்முகம், ராஜகோபாலன், ராகவ் ஆகியோர் உடன்நின்று நிகழ்வை வெற்றிகரமானதாக்கினர்.
ஆண்டுதோறும் குமரகுருபரன் நினைவுக்காக இவ்விழாவை நிகழ்த்த ஒத்துழைக்கும் கவிதா சொர்ணவல்லிக்கும் ஒரு நன்றி சொல்லவேண்டும்.
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது வழங்குதல் நிகழ்வு. டாக்டர் நடராஜன் அவர்களின் குமரகுருபரன் நினைவு உரை. விருது ஏற்புரை
விஜயலட்சுமி உரை
போகன் சங்கர் உரை.
வசுதேந்திரா உரை
ஜெயமோகன் உரை
காவியம் – 50
(பைசாசம்.சாதவாகனர் காலம், பொமு:2, டெல்லி அருங்காட்சியகம்)
கானபூதி சொன்னது. “வான்மீகி என்னிடம் அவருடைய காவியத்தின் முழுக்கதையையும் சொன்னார். தசரதன் அடைந்த சாபத்தில் தொடங்கி, கைகேயிக்கு அவர் அளித்த வாக்குறுதி என நீண்டு, ராமனின் பிறப்பு, அவன் முடிதுறந்தது, காட்டுக்கு வந்தது, குகனைச் சந்தித்தது, சூர்ப்பனகையை அவன் கேலிசெய்தது, மாரீசனைக் கொன்றது, ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது, ஜடாயுவிடமிருந்து அச்செய்தியை ராமன் அறிந்துகொண்டது, வாலியைக் கொன்றது, வானரப்படையை திரட்டி இலங்கைமேல் படைகொண்டு சென்றது என கதை நீண்டது.”
அந்தக் கதையை அவர் சொல்லி முடித்ததும் அவர் என்னிடம் “என் காவியம் இன்று கவிஞர்களால் பாரதமெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது என்று அறிந்தேன். நீயும் கேட்டிருக்கலாம்.”
நான் புன்னகையுடன் அவரிடம் சொன்னேன். “நான் கதைகள் நிகழும்போதே அவற்றை உள்நுழைந்து அறியும் பைசாசிகன். என் நிழல்கள் தசரதனுடன் இருந்தன, ராமனையும் பின்தொடர்ந்தன”.
வால்மீகி பெருமூச்சுடன் “இருக்கலாம்” என்றார். “என்னால் அந்தக் கதையை எப்படி அப்படி நுணுக்கமான செய்திகளுடன் எழுதமுடிந்தது என்று வியப்படைகிறார்கள். நான் அக்கதையை சீதையிடமிருந்து கேட்டிருக்கலாமென்றால் அவளும் அவற்றில் பெரும்பகுதி நிகழ்வுகளில் உடனிருக்கவில்லை.”
“நான் இந்தவழியாகச் சென்ற தெற்குநிலத்து நிஷாத குலப்பெண் ஒருத்தியின் செவிகளில் பேசினேன். அவள் உள்ளத்தில் நான் நுழைவதற்குரிய ஒரு விரிசல் இருந்ததைக் கண்டு உள்ளே நுழைந்தேன். அவளிடம் நான் இந்தக் கதையை முழுமையாகவே சொன்னேன். அவளுடைய கனவுகளில் இருந்து அவள் பெற்ற மகனின் கனவுகளுக்கு இந்தக் கதை நேரடியாகச் சென்றது. என் மொழியை திருத்தி புரிந்துகொண்டு இக்கதையை அவன் முழுமையாக தன்னுள் இருந்து எடுத்துக்கொள்ள நீண்டநாட்களாகியது” என்று நான் சொன்னேன்.
வால்மீகி வியப்படையவில்லை. “என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் எல்லாமே எனக்கு முன்னரே தெரிந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. நான் மொழிகளைக் கற்கும்போது நான் கற்ற வேகத்தைகக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். ஆனால் நான் புதிதாகக் கற்கவில்லை, ஒவ்வொரு சொல்லையும் நினைவுகூர மட்டுமே செய்தேன்.”
“நான் உங்கள் காவியத்தின் மறுபக்கத்தை நான் உங்கள் மாணவராகிய லோமஹர்ஷணரின் வழியில் வந்த மூன்றாவது தலைமுறையை சேர்ந்த லோமஹர்ஷணருக்குச் சொன்னேன்” என்று நான் சொன்னேன். “அவர் உங்கள் நூலுக்கு நீட்சியாக உத்தரகாண்டம் ஒன்றை எழுதினார். அது உங்கள் நூலுக்கான மறுப்பும் கூட. ராவணனைப் பற்றி நீங்கள் எழுதியவை ஒரு பக்கம்தான். அரக்கர்குலத்துப் பேரரசருக்கு தனக்கான வரலாறும் பெருமையும் உண்டு. அவருடைய உள்ளம் வெளிப்பட்டது லோமஹர்ஷணரின் காவியத்தில்தான்.”
தொடர்ந்து, “அதன் பின் எத்தனையோ ராமாயணக் கதைகள், காலந்தோறும் ஒன்று. ஒன்று இன்னொன்றை மறுத்தும் திருத்தியும் திரித்தும் தன்னை உருவாக்கிக் கொண்டது. கதைகளுக்கு அப்படியொரு இயல்புண்டு, அவை கதைசொல்லியிடமிருந்து விலகிச்செல்லும். கதைசொல்லியைத்தான் அவை முதலில் நிராகரிக்கும்… லோமஹர்ஷணரின் காவியம் பின்னர் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டது என்பதையும் நான் அவருக்குச் சொன்னேன். அவர் மனம் சோர்ந்து துங்கபத்ரையின் கரையில் அமர்ந்து உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்டார்” என்று நான் சொன்னேன்.
வால்மீகி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.
“என்ன ஆயிற்று உங்கள் காவியத்திற்கு?” என்று நான் கேட்டேன். “கதைசொல்லத் தொடங்கினீர்கள், முடித்துவிடுங்கள்”
“அது சீதையின் கதை. ஷத்ரியர்களின் வெற்றிக்கதை அல்ல. நிஷாதர்குலத்து அன்னையின் துயரத்தின் கதை” என்று வால்மீகி சொன்னார். “அதை நான் சீதையிடம் அளித்தேன். நான் தெற்குநோக்கிய பயணம் ஒன்றை தொடங்குவதாக இருந்தேன். ஒரு காவியம் அதன் ஆசிரியனிடம் விட்டுச்செல்லும் வெறுமை என்னில் நிறைந்திருந்தது. இனி நான் அதில் செய்ய ஒன்றுமில்லை. அதை எழுதுவதற்காகத்தான் நான் இளமைமுதல் மொழியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். என் பணியும் முடிந்தது என்று பட்டது” வான்மீகி தொடர்ந்தார்.
நான் சீதையிடம் சொன்னேன். “மகளே, இந்த சுவடிகள் உன்னிடம் இருக்கட்டும். இது உன் கதை மட்டும் அல்ல. உன் அன்னையரின் கதையும், இனி வரப்போகும் உன் மகள்களின் கதையும்கூட. அவர்கள் இங்கே வாழவேண்டும் என்றால் இந்தக்கதை இங்கே நிலைகொள்ளவேண்டும். உனக்கு நிகழ்ந்த துயரமெல்லாம் வரவிருக்கும் உன் மகள்களுக்கான விடுதலையின் பொருட்டுதான் என்று எண்ணிக்கொள். இதோ உன் கதையை பூமியெனும் தாயின் கதையாகவே நான் விரித்து எழுதியிருக்கிறேன். இந்தக் காவியத்தை நீ படித்துப்பார்.”
சீதை அந்நூலைப் பெற்றுக்கொண்டாள். அவள் அதை படித்து முடிப்பது வரை நான் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அவள் அதை பன்னிரு நாளில் படித்து முடித்தாள். என்னை அவள் தன் மகன்களை அனுப்பி அழைத்துவரச் சொன்னாள். அவளை சரயுவின் கரையில் சந்தித்தேன். அவள் முகம் தெளிந்து புன்னகை மலர்ந்திருப்பதைக் கண்டேன். சரயுவில் இரண்டு நாரைகள் விளையாடிக்கொண்டிருந்தன.
“இது என்றும் வாழும் காவியம். நானும் என் அன்னையரும் சொல்ல விரும்புவன அனைத்தையுமே சொல்லிவிட்டீர்கள். இனி நீங்களே ஆதிகவிஞர் என்று அழைக்கப்படுவீர்கள்” என்று சொல்லி அவள் தன் கையில் இருந்த மகிழமலர் ஒன்றை எனக்கு அளித்தாள்.
அதை வாங்கி என் சடைக்கொண்டையில் சூடிக்கொண்டேன். “மகளே, எவர் இந்த நூலை வரும் தலைமுறைகளுக்குக் கொண்டுசென்று சேர்க்கிறார்களோ அவர்களிடம் இதை உன்னுடைய சொல் என்று கூறிக் கையளித்துவிடு. இனி நீ செய்யத்தக்கது அதுவே” என்றேன். அன்று மாலையே நான் என் ஆசிரமத்தில் இருந்து எங்கே செல்கிறேன் என்று எவரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.
நான் பல ஆண்டுகள் பயணம் செய்தேன். பல ஊர்களிலும், காடுகளிலும் வாழ்ந்தேன். பல மலைகளையும் நதிகளையும் கடந்தேன். இயற்கையாகவே எனக்கு சமாதி அமையும் என நினைத்தேன். என் உயிர் பிடிவாதமாக உடலில் தங்கியிருந்தபோது அதன் நோக்கம்தான் என்ன என்று வியந்துகொண்டிருந்தேன். அலைந்து திரியும் கதைசொல்லிகளிடம் இருந்து பின்னர் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தி உண்மையா என பலரிடம் விசாரித்து உறுதிசெய்துகொண்டேன்.
நான் கிளம்பி சில ஆண்டுகளுக்குப் பின் அயோத்தியின் ராமன் அஸ்வமேத வேள்வி ஒன்றைச் செய்தான். அவனுடைய குதிரையை பிடித்துக் கட்ட பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலுள்ள எந்த அரசர்களும் துணியவில்லை. லட்சுமணனும், பரதனும் ,சத்ருக்னனும் குதிரையுடன் படைகொண்டு சென்றார்கள். அந்தக் குதிரை சரயு நதிக்கரைக்கு வந்தபோது லவனும் குசனும் அதைப் பிடித்துச் சென்றார்கள்.
அதை மீட்பதற்காக வந்த சத்ருக்னனை லவன் ஒற்றைக்கு ஒற்றைப் போருக்கு அழைத்தான். அவன் தோற்று பின்வாங்கிய செய்தியை அறிந்து பரதன் போருக்கு வந்தான். அவனும் தோற்கடிக்கப்பட்டதும் இறுதியாக லட்சுமணனும் போருக்கு வந்து தோற்றான். அவர்கள் தாங்களே கொண்டுவந்த அம்புகளை பயனபடுத்தினார்கள். லவனும் குசனும் அருகே இருந்த நாணல்களையே அம்புகளாகப் பயன்படுத்தினார்கள். அம்புகள் தீர்ந்தன, நாணல்கள் முடிவே அற்றவை. நான் கற்றுத்தந்த விற்கலைதான் அவர்களை வெல்லவைத்தது.
இறுதியாக ராமன் அவர்களுடன் போரிடுவதற்காக வந்தான். ஒற்றையர் போரில் லவனையும் குசனையும் தன் தம்பிகளால் வெல்லமுடியவில்லை என்ற செய்தியே அவனுக்கு ஒரு சந்தேகத்தை உருவாக்கியிருந்தது. லவனும் குசனும் நடந்தவற்றைச் சீதையிடம் சொன்னார்கள். சீதை தன் கையில் இருந்த நான் இயற்றிய காவியத்தை அளித்து “வருபவர் உங்கள் தந்தை. அவரை நீங்கள் தோற்கடிக்கக் கூடாது. அடிபணிந்து இந்தக் காவியத்தை அவரிடம் கொடுங்கள்” என்றாள்.
அதன்படி தங்களிடம் போருக்கு வந்த ராமனைச் சந்தித்து, காலடியை வணங்கி, லவனும் குசனும் அந்தக் காவியத்தை அளித்தனர். அதை படித்ததும் ராமன் மகிழ்ந்து அவர்களை தன் மகன்களாக ஏற்றுக்கொண்டான். அவர்கள் தன் மகன்கள் என்பதற்கு காவியத்தின் ஏற்பு போதும் என்று அவன் அறிவித்தான். அச்செய்தியை அறிவிக்க லவனும் குசனும் சீதையைத் தேடி வந்தனர். சீதை முன்னரே கிளம்பியிருந்தாள். அவர்கள் அவளுடைய காலடியை தொடர்ந்து அவளை தேடிச்சென்றார்கள். அவள் காட்டில் இருந்த மிருச்சத்வாரம் என்னும் அடியில்லாத ஆழம் கொண்ட பிலத்தில் குதித்து மறைந்துவிட்டதை அறிந்தார்கள்.
“என் காவியத்தின் தொடக்கத்தின் இரண்டு காண்டங்களையும், இறுதியின் மூன்று காண்டங்களையும் அகற்றிவிட்டு எஞ்சிய பகுதியையே சீதை தன் மகனிடம் அளித்தாள். அவள் அகற்றிய ஐந்து காண்டங்களையும் அவள் தன்னுடன் எடுத்துக்கொண்டு மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள்” என்று வால்மீகி சொன்னார். “நான் இயற்றிய முதல் இரு காண்டங்களில் மண்ணே முதன்மைத் தெய்வம் என்று சொல்லியிருந்தேன். அதர்வத்தின் அழியாத மெய்ஞானத்தை முன்வைத்திருந்தேன். இறுதிக்காண்டத்தில் மண்ணையும் பெண்ணையும் உடைமையாக்கி, சூதாட்டப் பொருளாக்கி விளையாடுவதன் கீழ்மையை வெளிப்படுத்தியிருந்தேன்.”
“தொடக்கமும் முடிவும் இல்லாத என் காவியம் ராமனின் வெற்றியைப் பாடும் நூல் என்றே அவனுடைய அவைப்புலவர்களுக்குத் தோன்றியது. அந்தக் காவியத்திற்கு முதலில் ஒரு நாந்தியையும் இறுதியில் ஒரு ஃபலச்சுருதியையும் சேர்த்து, இராமவிஜயம் என்று பெயரிட்டு, அவர்கள் அயோத்தியின் அவையில் அரங்கேற்றினார்கள். என் மாணவர்களில் லோமஹர்ஷணன் தவிர பிறர் அனைவரும் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். அந்த காவியமே லவனையும் குசனையும் பட்டத்து இளவரசர்களாக மக்கள் ஏற்கும்படிச் செய்தது. அவர்கள் அதை ராமாயணம் என்றனர்.”
“ஆம், சீதாயணம் என்றால் சீதையின் பயணம், அது சரியான தலைப்பு. ராமாயணம் என்பது பொருந்தாத தலைப்பு அல்லவா” என்று நான் சொன்னேன். “மக்களுக்கு அதன் முதல் தலைப்பு தெரிந்திருக்கிறது என்பதற்கான சான்று அப்பெயர்தான்.”
வால்மீகி கசப்பான புன்னகையுடன் “இதோ பாரதம் முழுக்க நிஷாதர்களின் கதைகளில் அவர்களின் குலங்களை அழித்தவனைப் புகழும் இழிந்தவனாக அறியப்படுகிறேன். அந்தணர்களாலும் ஷத்ரியர்களாலும் பொய்யாகப் புகழப்படுகிறேன், ஆனால் அவர்களின் கோயில்களில் எனக்கு இன்னும் இடமில்லை” என்றார்.
“உங்கள் காவியத்தில் விடுபட்டவைதான் லோமஹர்ஷணரின் உத்தரகாண்டத்தில் உள்ளன” என்று நான் சொன்னேன். “அவருக்கு உங்கள் காவியம் உண்மையில் என்ன என்று தெரியாது. நான் அதைப்பற்றிச் சொன்ன கதைகளைத்தான் அவர் எழுதினார். ஆனால் அதை தான் எழுதியதாகச் சொல்லவில்லை. நீங்களே எழுதியதாகவும், அக்கதையை நீங்களே அவரிடம் சொன்னதாகவும் சொல்லி தன் மகனுக்குக் கற்பித்தார். அவருடைய தலைமுறைகள் வழியாக அந்தக்கதைகள் வளர்கின்றன.”
“எந்தப் பயனுமில்லை” என்று வால்மீகி சொன்னார். “என்னை எரித்துக்கொண்டே இருப்பது சீதையின் மனநிலை பற்றிய எண்ணம்தான். அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எண்ணவில்லை. தன்னைப் போன்றவர்களின் துயர் பற்றி கவலைப்படவே இல்லை. மண்ணைப் பற்றியும் கருதவில்லை. அவள் முன் இருந்த ஒரே எண்ணம் தன் மகன்கள் அரசாளவேண்டும் என்பது மட்டும்தான். அத்தனை சிறியதா தாயின் உள்ளம்? அது அத்தனை சிறிதாக இருப்பதனால்தான் இங்கே இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவா?”
நான் சிரித்தபடி “என்னைக் கேட்கிறீர்களா?” என்றேன்.
“கதையில் எப்போதுமே கேள்வி உண்டு. நான் சொன்ன இந்த பெரிய கதையில் திரண்டுவந்த கேள்வி இதுதான்” என்று வால்மீகி சொன்னார்.
நான் “என்னைக் கதைசொல்லும் பிசாசு என்கிறார்கள்” என்றேன். “என்னால் எந்தத் தத்துவமும் தரிசனமும் சொல்லமுடியாது. கதையை மட்டுமே சொல்லமுடியும். நீங்கள் விரும்பினால் பதிலுக்கு நான் ஒரு கதையை மட்டும் சொல்கிறேன்.”
“சொல்” என்றார் வால்மீகி.
“இது பாடலிபுத்திரம் என்னும் நகரில், அதன் பெயர் பாட்னா என்று மருவியபின் நிகழ்ந்தது” என்று நான் சொல்லத் தொடங்கினேன். “அங்கே ஃபணீந்திரநாத் என்னும் வைதிகர் தன்னை வணிகராக ஆக்கிக் கொண்டார். அவருடைய மகன் ஹரீந்திரநாத் வணிகத்தில் மேலும் வெற்றிபெற்றார். அவர் மனைவி ருக்மிணியையும் அவர் மகன் அஸ்வத்தையும் பற்றிய கதை இது” நான் கதையை விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்க அவர் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.
ருக்மிணிக்கு அஸ்வத் நிகழ்த்திய கொலை பற்றிய செய்தியை ஹரீந்திரநாத்தான் சொன்னார். அதற்கு முன்புதான் ஹரீந்திரநாத்துக்கும் அவளுக்கும் கடுமையான பூசல் நடைபெற்றிருந்தது. அந்த சண்டை பல மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ராதிகா காசிக்குச் சென்று படிக்க முடிவெடுத்தது முதல். அந்த சண்டையின்போதுதான் ருக்மிணியின் பிடிவாதத்தையும் ஆவேசத்தையும் ஹரீந்திரநாத் முதல்முறையாகச் சந்தித்தார். முதலில் அவர் திகைத்தாலும் அதன்பிறகு அவர் மேலும் மூர்க்கம் கொண்டவராக ஆனார்.
ராதிகா மேற்படிப்பு படிப்பதை ஹரீந்திரநாத் முற்றிலும் விரும்பவில்லை. அவளை திருமணம் செய்து அனுப்ப நினைத்தார். நகரின் முக்கியமான செல்வந்தரும், வணிகவரித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவருமான ஹரிதாஸ் தேஷ்பாண்டே அவளை தன் மகனுக்காக கேட்டார். அவன் அமெரிக்காவில் உயர்படிப்பு படித்துக்கொண்டிருந்தான். படித்த அழகான முற்போக்கான பெண் தேவை என்று சொல்லியிருந்தான். அவளைப் பற்றி அவன் அக்கா சொல்ல அவனே ராதிகா படித்த கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்த்தான். அவள் அப்போது பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவன் அந்த தோற்றத்தில் அவளைப் பார்தததுமே காதல்கொண்டான்.
அந்த கல்யாணம் ஹரீந்திரநாத்துக்கு மிகப்பிடித்திருந்தது. ஆனால் ராதிகா அதை உறுதியாக மறுத்துவிட்டாள். “எனக்கு எந்த பாண்டேயையும் பார்க்கவேண்டாம்” என்று உதடுகளைச் சுழித்தபடிச் சொன்னாள்.
அவளிடம் அதைச்சொன்னபோது அவள் அதை மறுப்பாள் என ருக்மிணி எதிர்பார்த்திருந்தாள். அவளுக்கு அந்த மறுப்பு ஒரு நிறைவையும் அளித்தது.
ராதிகா சொன்னதை அவள் ஹரீந்திரநாதிடம் சொன்னபோது அவர் வெறிகொண்டார். “நீதான் சரியாகச் சொல்லவில்லை… உனக்கு அவள் நன்றாக வாழ்வதில் விருப்பமில்லை…” என்று கத்தினார்.
“அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள்” என்று அவள் திரும்பக் கத்தியபோது அவர் திடுக்கிட்டார். கையை ஓங்கியபடி அடிக்கச் சென்றபோது அவள் அசையாமல் உற்றுப் பார்த்தபடி நின்றாள். அவர் கை தளர்ந்தது.
அவர் சீற்றத்துடன் வெளியே சென்றார். பின்னர் தன் கணக்குப்பிள்ளையைக் கொண்டு ராதிகாவிடம் பேசவைத்தார். அவள் மறுத்தது மட்டுமல்லாமல் டாக்டரேட் படிப்பதற்காக காசிக்கு பதிவுசெய்துவிட்டதாகவும் சொன்னாள்.
அச்செய்தியை கணக்குப்பிள்ளை சொல்லிக் கேட்டதும் “அவள் இந்த வீட்டைவிட்டு வெளியே போகமாட்டாள்” என்று ஹரீந்திரநாத் கத்தினார்.
“ஏன் போனால் என்ன? அவளுடைய படிப்பு என்ன என்று அவளுக்குத்தானே தெரியும்?” என்று ருக்மிணி மகளை ஆதரித்தாள்.
“நீதான் அவளைக் கெடுக்கிறாய்… அவள் கெட்டுச்சீரழிந்தால் நீதான் பொறுப்பு” என்றார் ஹரீந்திரநாத்.
“இந்த வீட்டில் கெடுவதற்கு அவள் மட்டும்தானே மிச்சம்?” என்றாள் ருக்மிணி.
அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் திகைத்துப் பார்த்துக்கொண்டு ஹரீந்திரநாத் நிற்க அவள் அலட்சியமாகத் திரும்பிச் சென்றாள்.
அந்தச் சண்டை அவர்கள் மூவர் நடுவே தீவிரமாக நடைபெற்றது. அஸ்வத் அப்போது வெளியே வேலையில் இருந்தான், பாட்னாவுடன் தொடர்பே இல்லை. ராதிகா எதையும் பொருட்படுத்தவில்லை. அவளிடம் ஹரீந்திரநாத் “இந்த வீடும் பணமும் இல்லையென்றால் நீ யார் என்று யோசித்துப்பார்” என்றார்.
அவள் அவரிடம் “நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போ என்று சொன்னால் நான் அப்படியே கிளம்பிச் சென்றுவிடுவேன். அவ்வளவுதான்” என்றாள்.
அத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்று தெரிந்தாலும் ஹரீந்திரநாத் தொடர்ச்சியாக பிடிவாதம் பிடித்துச் சண்டையிட்டார். சண்டை முழுக்கவே ருக்மிணியிடம்தான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகிக் கொண்டே வந்தாள்.
ஒருமுறை அவர் அவளை அறையப்போனபோது “அடியுங்கள், எல்லாம் இதற்குத்தானே முடியும்?” என்றாள்.
அவர் திகைத்து நின்று “என்னடி? என்ன சொன்னாய்? எது என்னால் முடியாது? சொல், எது முடியாது?” என்று கூச்சலிட்டார்.
அவள் உதட்டைச் சுழித்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவர் அவள் பின்னால் ஓடிச்சென்று நடுக்கூடத்தில் நின்று கெட்டவார்த்தைகள் சொல்லி கத்தினார். அவள் தன் பூஜையறைக்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.
அவர் அன்று மாலை நன்றாகக் குடித்துவிட்டு வந்தார். அவளை அழைத்து வசைபாடி எச்சரித்தார். அவள் அவரை ஏளனமாகப் பார்த்தபடி பேசாமல் நின்றாள். “அவள் என் மகள் அல்ல. நீ சோரம்போய் பிறந்தவள் அவள்” என்று அவர் கூவினார்.
“சரி, அதற்கென்ன?” என்று அவள் சொன்னாள்.
அவர் அவளை அடிக்க ஆரம்பிக்க அவள் அடிகளை வாங்கியபடி பேசாமல் நின்றாள். அவர் உடைந்துபோய் கட்டிலில் அமர்ந்துகொண்டு தன் தலையை தானே கையால் அறைந்தபடி “நான் சாகிறேன்… செத்து ஒழிகிறேன்” என்று கதறி அழுதார்.
ராதிகா கிளம்பிச் செல்வதை அவரால் தடுக்கமுடியவில்லை. அவள் சென்றபிறகு பணமும் அனுப்பினார். ஆனால் வேறுவிஷயங்களைச் சொல்லி அவளிடம் பூசலிடத் தொடங்கினார். தினமும் குடித்துவிட்டு வந்து ஏதேனும் ஒன்றில் தொடங்கி ,இரவு பிந்தும் வரை கத்தி கூச்சலிட்டு அழுது ஓய்ந்தார்.
ஒருநாள் இரவு “நீ ஒரு வேசி… சரியான வேசி நீ…” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
“சரி, நான் போகலாமா?” என்று அவள் கேட்டாள்.
“வேசி என்று சொன்னால் வேசிக்கு மட்டும்தான் கோபம் வராது” என்று ஹரீந்திரநாத் சொன்னார்.
“எனக்கு ஒன்றுமில்லை… இந்த வயதில் ஆண்கள் இப்படியெல்லாம் பேச ஆரம்பிப்பார்கள் என்று என் மாமியார் முன்னரே சொல்லியிருக்கிறார்.”
“எந்த வயதில்? சொல்லடி, எந்த வயதில்?” என்று அவர் கையை ஓங்கியபடி அவளை நோக்கி வந்தார்.
“வேசிகளை தேடிப்போகமுடியாத வயதில்… காயகல்பம் மாத்திரை ஒன்றும் பலிக்காத வயதில்… போதுமா?”
அவர் திகைத்து நின்று பின் சரமாரியாகக் கெட்டவார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார். அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.
அதன் பின் பலமாத காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அவள் அவருக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்தாள். அவர் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவ்வப்போது அவர் வீட்டில் சாப்பிடாமலிருந்தார். வேண்டுமென்றே பட்டினி கிடந்தார். அவள் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் மிதமிஞ்சி குடிப்பதைக்கூட பொருட்படுத்தவில்லை.
அப்போதுதான் அஸ்வத் வழக்கில் சிக்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டார். அஸ்வத்தே சொல்லி அதை அவனுடைய உதவியாளனாகிய ஹரிராம் சிங் அவரிடம் அழைத்துச் சொன்னான். அதைக் கேட்டபோது முதலில் ஒரு நிம்மதிதான் ஹரீந்திரநாத்துக்கு ஏற்பட்டது. பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்ததைப் போல.
அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போதே என்ன பேசுவது என்று திட்டமிட்டு வகுத்துக்கொண்டுவிட்டார். வண்டியில் இருந்து இறங்கி ஆவேசமாக வீட்டுக்குள் சென்றபோது அவருடைய கோபம் வளர்ந்தது. “எங்கே அவள்? ஏய், ருக்மிணி” என்று கூச்சலிட்டார்.
அவள் வந்ததும் அவள் முகத்தில் காறித்துப்பியபடி “உன் மகன் செய்தது என்ன என்று தெரியுமா? என்ன செய்தான் தெரியுமா? ஒரு சாதாரணச் சிறுமி… ஒரு சிறுமியை அவன் என்ன செய்தான் தெரியுமா? கெடுத்துக் கொன்று வீசியிருக்கிறான். காமப்பேய்… அவனை தூக்கில்போடவேண்டும் என்று சொல்லிவிட்டேன். அவனை கழுவில் ஏற்றவேண்டும்… ஃபணீந்திரநாத் குடும்பத்தில் பிறந்த வாரிசு… த்தூ” என்று கொப்பளித்தார்.
அந்த உணர்ச்சிகள் அவருடையவை அல்ல. பல மாத காலமாக அவர் இருந்துவந்த கொந்தளிப்பு அப்படி அப்போது வெளிப்பட்டது. அந்த உணர்ச்சி வெளிப்பட்டதும்தான் அவரே அதை உணர்ந்தார். மேலும் அதை வளர்த்துக் கொண்டார்.
“நான் இனி உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை. ஃபணீந்திரநாத்தின் மகன் என்று நான் சொல்லிக்கொள்வதே அசிங்கம்… இப்போதே நான் சாகவேண்டும். அவ்வளவுதான்” என்று தலையில் அறைந்தபடி அழுதுகொண்டே சோபாவில் அமர்ந்தார்.
அவள் அவரைப் பார்த்தபடி நிதானமான குரலில் “அப்படி என்ன நடந்தது? போலீஸ் என்றால் ஆயிரம் பழி சொல்வார்கள். நாமே நம் பிள்ளையைப் பற்றி சொல்லக்கூடாது… அவன் அப்படிப்பட்டவன் அல்ல. எனக்குத்தெரியும்” என்றாள். அந்த நிலைபாட்டை அந்தக் கணம்தான் அவள் எடுத்திருந்தாள்.
நான் கதை கேட்டுக்கொண்டிருந்த வால்மீகியிடம் கேட்டேன். “இந்தக் கதை வக்ரோபிருசி கொண்டது, உங்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம்.”
“இல்லை, புதியதாகப் பிடுங்கிய கிழங்குபோல் இருக்கிறது” என்று புன்னகையுடன் வால்மீகி சொன்னார். “அழகான கிழங்கு என ஒன்று இல்லை. கிழங்குகளின் அளவுக்கு உயிர்த்துடிப்பு எந்த கனியிலும் காயிலும் இருப்பதில்லை.”
நான் கேட்டேன் “அப்படியென்றால் இந்தக் கதையில் இருந்து ஒரு கேள்வி. அதுவே உங்களுக்கான விடையும் ஆகலாம்.”
“கேள்” என்று வால்மீகி சொன்னார்.
“மனிதர்கள் எதன் அடிப்படையில் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்கிறர்கள்?”
வால்மீகி சிரித்தபடி “மனிதர்கள் முடிவே எடுப்பதில்லை” என்றார்.
“சரியான பதில்” என்று நான் சொன்னேன். பாய்ந்து அவர் மடியில் ஏறி அமர்ந்து அவர் தாடியைப் பிடித்து இழுத்து முத்தமிட்டு “நீ கனிந்தவன்… நீ ஒரு ஞானி… சரியான திருடனடா நீ…” என்றேன்.
“உன் சிரிப்பையும் கண்களையும்போல அழகான எந்த மலருமில்லை இந்த பூமியில்” என்று அவர் சொன்னார். “நான் இறக்கப்போகிறேன். எனக்குத் தெரிகிறது. நீ என்னுடன் இரு.”
“சரி”
“கதை சொல்லிக்கொண்டே இரு”
“சொல்கிறேன்” என்று நான் சொன்னேன். “உங்கள் கதபாத்திரங்களிலேயெ உங்களுக்குப் பிடித்தது எது? நான் அதன் கதையை சொல்கிறேன். அவன் இங்கே இருப்பான்…”
“அனுமனின் கதையைச் சொல். சூரியனைக் கவ்வ ஆசைப்பட்ட அந்தக் குட்டிக்குரங்கின் கதை” என்றார் வால்மீகி “மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களுமே மிகையானவை, பொய்யானவை, எந்த அர்த்தமும் அற்றவை…”
“ஆம், செல்லக்குரங்கு… குட்டிக்குரங்கு … அது போல உயிர்ததும்பும் ஒன்று இந்தப் பூமிப்படைப்புகளில் உண்டா? பாடுகிறேன், தூங்குங்கள்.”
நான் அவருடைய நெஞ்சிலும் வயிற்றிலும் மென்மையாகத் தட்டியபடி குட்டிக்குரங்கின் கதையைச் சொன்னேன். அப்போது மரங்களின் மேல் நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து கூடிவிட்டன. அவை என் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தன. முகம்நிறைந்த புன்னகை அப்படியே நிலைத்திருக்க ஆதிகவி மறைந்தார்.
(மேலும்)
விலக்குவது என்னும் அடிப்படை
இன்னொரு நண்பர் நிகழ்வில் தனக்கு உணவுசார்ந்த ஒரு தனிவசதி தேவை என்றார். அவருக்கும் நீங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று செய்தி வந்தது, அவருடைய மின்னஞ்சல் தடைசெய்யப்பட்டது. இந்த கடுமை தேவையா? இந்த வகையான அமைப்பு அனைவரையும் அணைத்துக்கொண்டு செல்வதுதானே சரியானது?
Your questions about his movies are poignant; he, as usual, answers without connecting with any controversy. But people who knew his moves can understand what he meant.
Mani Ratnam- A letterJune 8, 2025
சிறுகதை, கவிதை அமர்வுகள்- காணொளிகள்
சிறுகதையாசிரியர் சந்திப்பு அமர்வு. சிறுகதையாசிரியர்களாக பரவலாக வாசிக்கப்படும் விஜய் ராவணன், ரம்யா இருவரும் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்கள். விஜயபாரதி ஒருங்கிணைத்தார்.
இன்று எழுதிவரும் முக்கியமான இளங்கவிஞர்களான றாம் சந்தோஷ், சசி இனியன் ஆகியோருடனான சந்திப்பு. கவிஞர் ஆனந்த் குமார் ஒருங்கிணைத்தார்.
சமகால கவிதை, அயல் இலக்கியம்- இரு உரையாடல் அரங்குகள்
சமகாலக் கவிதைகளில் சமகாலம் இருக்கிறதா, இல்லை என்றால் ஏன் என்ற தலைப்பிலான உரையாடல் பல திசைகளுக்கும் நீண்டு சென்றது. போகன் சங்கர், வெயில் , மனுஷ்யபுத்திரனுடன். இன்னொரு அரங்கில் கன்னட எழுத்தாளரும் பால்புதுமையினருக்கான பேச்சாளருமான வசுதேந்திரா வாசகர்களுடன் உரையாடினார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


