Jeyamohan's Blog, page 90

June 17, 2025

For a new generation…

I never expected that students might read this site, but after the bird-watching and plant-watching classes, a small set of students are reading this English site. I will publish more articles for them in the future.

For a new generation…

சுசித்ரா சொன்ன ஒரு விஷயம் என்னை பெருமளவு யோசிக்க வைத்தது. தர்க்கததை முறையாகக் கற்றுக்கொள்வது என்பது இன்னொருவரிடம் விவாதிப்பதற்காக அல்ல, நாமே நமக்குள்ளே ஒன்றை விவாதித்து தெளிவுபடுத்திக்கொள்வதற்காகத்தான் என்பது மிகமுக்கியமான ஒரு கருத்து

முழுமையறிவு வகுப்புகளின் சூழல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2025 11:30

June 16, 2025

தலாதலம்!

இருளின் ஒளி

ஏழாம் உலகம் நாவலின் கன்னட மொழியாக்கமான தலாதலம் சென்ற 8 ஜூன் 2025 அன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது. நூல் தயாராகிவிட்டது என்று பதிப்பாளர் சொன்னார். ஆனால் அரங்கில் வெளியிடும் திட்டமேதும் இருக்கவில்லை. ரம்யா பதிப்பித்த விந்தியாவின் கதைகள் அடங்கிய விந்தியா என்னும் தீற்றல் நூல் அரங்கில் வெளியிடவிருந்தது. அவ்வாறென்றால் இதையும் வெளியிடலாம் என முடிவுசெய்யப்பட்டது. விஷ்ணுபுரம் அரங்கில் என் நூல் ஏதும் வெளியானதில்லை.

நூலை குப்பம் பல்கலையின் தமிழ் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான முனைவர் பத்மநாபன் வெளியிட கவிஞர் றாம் சந்தோஷ் பெற்றுக்கொண்டார். அரங்கில் வசுதேந்திராவும் மொழிபெயர்ப்பாளர் சாந்தி அப்பண்ணாவும் இருந்தனர்.

சாந்தி கே அப்பண்ணா

சாந்தி கே அப்பண்ணா கன்னடத்தின் புதிய எழுத்தாளர்களில் ஒருவர். யுவபுரஸ்கார் விருது பெற்றவர். பெரும்பாலும் எல்லா இலக்கியத்தொகுதிகளிலும் அவருடைய கதைகள் இடம்பெற்றுள்ளன. சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் சாந்தி தமிழ் கற்றார். ஏழாம் உலகம் நாவலை மொழியாக்கவேண்டும் என ஆர்வம் கொண்டு அனுமதி கோரினார். அவருடைய மொழியாக்கம் மிகச்சிறப்பானதாக உள்ளது என்றார்கள். வசுதேந்திரா ‘அது தனக்கான தனி நடை கொண்ட ஒரு இலக்கியப் படைப்பாக இப்போது உள்ளது’ என்றார்.

கன்னட விமர்சகரான தத்தாத்ரேய ‘மானுட இயல்புகளின் அடிப்படைகளை விளக்கும் நாவல் இது. இந்நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்முடனேயே இருந்துகொண்டிருப்பவர்கள் போலவே தோன்றினாலும் இந்த ஆழத்து உலகில் அவர்களின் உணர்ச்சிகளின் களம் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. ஒளிக்கும் இருட்டுக்கும் நடுவே வேறுபாடு ஏதுமில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேகூட. இந்த மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது? மிகக்கூர்மையான சித்தரிப்பும் வலுவான வண்ணவேறுபாடுகளும் கொண்டது இந்நாவல்’ என்கிறார்.

ஏழாம் உலகம் நாவலை என் முதல் நாவலாக ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்கான காரணமாக இருந்தது அதன் நேரடியாக தாக்கும் அழகியல்தான். அது மனசாட்சியுடன் கூர்மையாக உரையாடுகிறது. என் எழுத்துக்களுடன் அறிமுகமில்லாத, என் நடையோ மனப்போக்கோ தெரியாத வாசகருக்குக் கூட அது சென்று சேர்ந்துவிடும். அதிலுள்ள தரிசனமும் அழகியலும் பிடிகிடைக்காதவர்களுக்கும் அதன் மனிதாபிமான அம்சம் புரியும்.

அத்துடன் கூடுதலாக இலக்கிய அறிமுகம் உடைய வாசகர் அந்நாவலின் மெய்யியல் தளத்தை மாங்காண்டி சாமி வழியாக வந்தடைய முடியும். சமூகத்தின் மிகக்கீழ்நிலையிலுள்ளவர்களும் மிக முதல்நிலையிலுள்ள ஞானியும் ஒன்றாக இருக்கும் ஒரு சூழல் உணர்த்தும் பண்பாட்டு அம்சம் என்ன என்பதைக் கண்டடைய முடியும். அந்நாவல் பெற்றுவரும் வரவேற்பு அந்தக் கணிப்பு சரியே என உணர்த்துகிறது.

இலக்கியத்தின் அழகியலில் சில அம்சங்கள் ஓர் ஆசிரியரை நுணுக்கமாக நாம் பின் தொடர ஆரம்பித்த பிறகே பிடிகிடைக்கும். உண்மையில் அவைதான் இலக்கியத்தின் மிகச்சாரமான பகுதிகள். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் குறிப்பிட்ட உணவை தொடர்ந்து உண்பவர் அதில் கண்டடையும் சுவை வேறுபாடுகளைப் போல. நாகர்கோயில்காரர்கள் பழம்பொரியில் கண்டடையும் சுவைச்சித்திரங்களை இங்கே வந்திறங்கி , சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஒன்றை வாங்கி வாயில் திணிப்பவர் உணர முடியாது.

ஆகவேதான் சராசரியாக எங்கும் ஒரே சுவை கொண்ட உணவுகளுக்கு மட்டும் உடனடியான ஏற்பு கிடைக்கிறது. வட்டாரத்தன்மை கொண்ட சுவைகளை வெளியே உள்ள ‘ஃபுட்டிகள்’ ஒரே வரியில் ‘ஓவர் ரேட்டட்’ என்று சொல்லிவிடுகிறார்கள். இன்னொன்று ஒரு சுவையை நாம் ஏற்கனவே அறிந்த இன்னொரு சுவையுடன் இணைத்து ‘இதேமாதிரி அது, கொஞ்சம் வேற’ என்று புரிந்துகொள்வது.

இலக்கியத்தில் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சிறுகதைகள் சில அவற்றின் வலுவான கட்டமைப்பால் சட்டென்று வாசகர்களின் ஏற்பைப் பெறும். அவற்றின் மானுடநேயம் நமக்குப் பிடிக்கும். ஆனால் அவருடைய குறுநாவல்கள், நாவல்களுக்குள் செல்ல அவருடைய உலகம் கொஞ்சம் நமக்கு அறிமுகம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு கவனமும், நீடித்த வாசிப்பும் தேவையாகிறது. சிங்கரின் நாவல்களை ‘தட்டையான யதார்த்தங்கள்’ என்று சொல்லும் பல  வாசகர்களை நான் கண்டிருக்கிறேன். எனக்கு அவை மகத்தான ஆத்மவாக்குமூலங்கள். இதையே எம்.டி.ராமநாதனின் இசைக்கும் சொல்வார்கள்.

இந்தக் காரணத்தால் எந்த ஒரு இலக்கியமேதையையும் எதிர்மறைப் பிடிவாதம் வழியாக எளிதாக தோற்கடித்துவிடவும் முடியும். மகத்தான ஓர் இலக்கியப்படைப்பு நுட்பம், புதுமை என்னும் இரண்டு அம்சங்கள் கொண்டிருக்கும். எதிர்மறை இறுக்கத்துடன் அணுகும் ஒரு வாசகன் நுட்பத்தை தவறைவிடுவான், புதுமையை புரிந்துகொள்ள மாட்டான். புறக்கணிக்கும் வாசகனிடம் பேசும் ஆற்றல்கொண்ட பெரும்படைப்பு ஏதுமில்லை. ஆகவேதான் எழுத்தாளர்கள் விவாதங்களில் சிக்கி தங்களுக்கு எதிரான மனநிலையை ஈட்டிக்கொள்ளாமலிருக்கிறார்கள். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனக்கு எழுதுவதற்கான உந்துதலே கட்டற்று, கவனமற்று இருக்கையில்தான் கிடைக்கிறது. நான் மறைந்தபின் கோபதாபங்களும் இல்லாமலாகும். அதன்பின் இன்று எதிர்ப்போர் வாசிக்கட்டும்.

நான் எழுதும் நாவல்களில் உள்ள எனக்கான நுட்பங்களை வாசிக்கும் வாசகர்கள் இன்று வெளியாகியுள்ள என் படைப்புகள் வழியாக உருவாகி வருவார்கள் என நினைக்கிறேன். Stories of the true அத்தகைய வாசகர்களை The Abyss நாவலுக்கு உருவாக்கி அளித்தது. அவர்கள் மெல்லத் திரள்வார்கள், அதன்பின்னரே அகச்சிக்கல்களும், எனக்கான குறியீட்டு உலகமும் கொண்ட என் பெரிய நாவல்களுக்கு அவர்களால் வந்துசேர முடியும்.

‘ஜெயமோகன் உண்மைகளை மறைப்பதில்லை, இயற்கையின் அச்சமூட்டும் இயல்பை பச்சையாகச் சொல்கிறார். சமகால இந்தியா பற்றிய நமது புரிதல் ஜெயமோகனின் படைப்புகளை படிக்காமல் முழுமையாவதில்லை’ என்று விவேக் ஷான்பேக் சொல்கிறார்.

ஒரு படைப்பு ஆங்கிலத்தில் வெளிவருவது எத்தனை முக்கியமானது என்பது இப்போது, இத்தனை பிந்தித்தான் எனக்குப் புரிகிறது. சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கமான The Abyss தான் தொடக்கம். அந்நாவலுக்கு வந்த மதிப்புரைகள் வழியாகவே கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என பல மொழிச்சூழல்களுக்கு இந்நூல் அறிமுகமாகியிருக்கிறது. சுசித்ராவுக்கு நான் கடன்பட்டவன்.

தெலுங்கில் அதோலோகா என்ற பேரில் அனில் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் வெளிவந்துள்ளது. அனில்குமார் மொழியாக்கத்தில் சாயா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. என் ஆக்கங்களில் தெலுங்கில் வெளிவரும் இரண்டாவது நூல் இது. ஏற்கனவே அறம் தொகுதி நெம்மிநீலம் என்னும் பெயரில் வெளிவந்து மிகச்சிறந்த வாசிப்பை பெற்றுள்ளது.

The Abyss விரைவில் அமெரிக்காவின் டிரான்ஸிட் பதிப்பகத்தில் இருந்து சர்வதேசப்பதிப்பாக வெளிவரவுள்ளது.இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என நினைக்கிறேன். எல்லா மொழியாக்கங்களும் மிகச்சிறப்பானவை, மூலமொழியில் ஒரு புதிய நடையை உருவாக்கும் அளவுக்கு அபாரமானவை என்கிறார்கள். அது ஒரு நல்லூழ்தான்.

The Abyss வாங்க ஏழாம் உலகம் வாங்க அதோலோகம் வாங்க ஏழாம் உலகம், நான் கடவுள், The Abyss
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 11:35

க.ரா. ஜமதக்னி

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்ஸிய அறிஞர். தமிழ்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். ஜமதக்னி மொழிபெயர்த்த ‘மூலதனம்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 2009-ல் தமிழக அரசு ஜமதக்னியின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கியது

க.ரா. ஜமதக்னி க.ரா. ஜமதக்னி க.ரா. ஜமதக்னி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 11:33

காவியம் – 57

மதுரா அருங்காட்சியகம். பொயு 1 சாதவாகனர் காலம்.

அஸ்வத் முதன்முதலாக ஊர்வசியை அவள் ஊரின் சிறிய கோவிலில் பெண் பார்த்தபோது அவள் அவனுடைய நெடுங்காலக் கற்பனையில் இருந்தது போல அவனை மீட்க வந்த தேவதையாகத்தான் தோன்றினாள். திரும்பி வந்து அவளை பற்றிய கற்பனைகளை ஓட்டிக்கொண்டிருந்தபோது ஒரு தடவை பிரகாஷை நினைவு கூர்ந்தான். பிரகாஷின் அந்த திரைக்கதைதான் அவளைப் பற்றிய  தன்னுடைய எல்லாக் கற்பனைகளையும் உருவாக்கியிருக்கிறது என்று புரிந்துகொண்டிருந்தான். கடுமையானவன், கோபக்காரன், ஆனால் உள்ளே நல்லியல்பு கொண்டவனாகிய கதாநாயகன். அவன் எந்தக் களங்கமுமற்ற பேரழகியான கதாநாயகியை கண்டுகொள்கிறான். திருமண ஏற்பாடு நடந்த ஒரு மாதமும் அந்தக் கற்பனை அவனை அவ்வப்போது புன்னகைக்க வைத்துக்கொண்டே இருந்தது.

காவல்துறை வேலைகள் அவனுக்கு மிக எளிதாகவே இருந்தன. காவல்துறை வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் முன்பு அவனுக்கு இருந்ததில்லை. ஒருமுறை ஒரு நண்பருடன் சென்று ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்துவிட்டு வரும்போது அந்தச் சூழலில் இருந்த மௌனமான அதிகாரம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் வீட்டிலும் எப்போதுமே வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவன் வேலைக்காரர்களை ஏவியே வாழ்ந்தான். ஆனால் போலீஸ் துறையில் இருந்த அந்த அதிகாரம் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. போலீஸ்காரர்கள் அதிகாரிக்கு முன்பு மறுசொல் இலாது பணிந்தார்கள். அது அந்த அமைப்பு நெடுங்காலமாக உருவாக்கி வைத்திருந்த ஒரு மனநிலை.

மாறாக, அவனுடைய வேலைக்காரர்கள் மிகையான பணிவை நேரில் காட்டினார்கள். ஆனால் உரிமையாளர்கள் இல்லாதபோது அவர்களைப்பற்றி கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டார்கள். அவதூறைப் பரப்பினார்கள். முடிந்தபோதெல்லாம் திருடினார்கள். அங்கு வந்து சேரும் ஒரு புதிய வேலைக்காரன்கூட அந்தக் கேலி கிண்டல் வழியாகத்தான் தன் முதலாளிகளைப் பற்றிப் புரிந்துகொண்டான். அதன்பிறகு அவன் எவ்வளவு பணிவு காட்டினாலும் அவன் கண்ணிலும் உடல் பாவனைகளிலும் அந்த கிண்டல் ஒரு துளியேனும் இருந்துகொண்டே இருந்தது, எப்படியோ அது முதலாளிக்கும் தெரிந்திருந்தது.

அவன் தந்தையும் அதைப்பற்றி சொல்லியிருந்தார். ”நமக்கும் வேலைக்காரர்களுக்கும் உள்ள உறவென்பது  ஓர் எழுதப்பட்டாத ஒப்பந்தம். நாம் அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்  நமக்கு ஏதேனும் வேலை செய்வார்கள். அவர்கள் கொஞ்சம் திருட நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மிக கடுமையாக பிடிக்கக்கூடாது. அப்போதுதான் அவர்கள் நமக்கு பணிந்திருப்பார்கள். நமது வசைகளை கேட்டுக் கொள்வார்கள்” என்றார்

“வசை பாடாமல் அவர்களை நடத்தலாமே என்று நீ கேட்கலாம்” என்று அவரே தொடர்ந்தார். “வசை பாடாமல் இருந்தால் நமக்கு இந்த நிறுவனத்தை நடத்திய நிறைவு வராது. நமது உணர்ச்சிகளை அவ்வப்போது நாம் வெளிக்காட்டாவிட்டால் நாமும் உள்ளுக்குள் எடை மிகுந்து ஒருநாள் வெடித்துவிடுவோம். இங்கே நீண்ட காலமாகவே இந்த வசைபாடும் வழக்கமும் இருந்து வருகிறது. நம் தந்தை வசைபாடுவதை யாராவது கேட்டால் உடனடியாகச் சென்று கங்கையில் குளிக்க வேண்டும். அவ்வளவு வார்த்தைகளை பயன்படுத்துவார். இந்த வசைபாடும் வழக்கம் வழியாகத்தான் இங்கே நாம் நமது அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஜட்கா வண்டியில் கட்டிய குதிரைக்கு அடிக்காவிட்டாலும் கூட வெறுமே சாட்டையின் ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது போல.”

அவன் மனதில் அதிகாரம் உள்ள அரசுவேலைதான் முதலில் இருந்தது.  அதற்கு ஆட்சிப்பணிதான் வேண்டும் என்று பிறகு தெரிய வந்தது. அதற்காகப் படிக்கத் தொடங்கியபோது அது அத்தனை எளிது அல்ல என்று புரிந்தது. அவன் மிக நல்ல மாணவனாக இருந்தபோதும் கூட. ஆனால் பிகாரில் எந்த ஒரு தேர்வையும் உடைப்பதற்கான வழி  இருந்தது. பிகாரின் அரசியல்வாதிகள்தான் எப்போதுமே டெல்லியை ஆட்சி செய்தார்கள். ”பிகாரிலிருந்து டெல்லிக்கு சுரங்கப்பாதை உண்டு” என்று ஒரு தரகர் அவனிடம் சொன்னார். அவன் பணத்துடன் அந்த வழியாக உள்ளே நுழைந்தான்.

அதிகாரம்தான் அரசு  அமைப்பின் அடிப்படை என்று தெரிந்துகொண்டது அவனுடைய மிகச் சரியான புரிதலாக  இருந்தது. அந்த அமைப்பை அவன் திறம்பட நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அந்த அமைப்பில் ஒவ்வொரு உயரதிகாரியும் தனக்கு நேர் கீழே இருக்கும் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்பானவர். தனக்கு மேலிருக்கும் அதிகாரிக்கு மட்டுமே கடமைப்பட்டவர். பிற எதைப்பற்றியும் எப்போதுமே தெரிந்துகொள்ளவோ கவலைப்படவோ கூடாது. தன் முன் வரும் விஷயங்களை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வது வேலையை எளிதாக்கும்.  அது தன் கீழுள்ள அதிகாரியை அதிகாரப்படுத்துவது வழியாகவே முடியும். ஆனால் அவர்மேல் மட்டும் முழு அதிகாரத்தையும் கொண்டிருக்கவேண்டும்.

ஆகவே ’இதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. உங்களுடைய திறமை பற்றி எனக்குத்தெரியும்’ என்று அவன் ஒவ்வொரு கீழ் அதிகாரியிடமும் சொன்னான். அதை போலவே ’நான் பார்த்துக்கொள்கிறேன் சார். நீங்கள் தலையிட வேண்டிய அளவுக்கு இது பெரிய விஷயம் அல்ல’ என்று ஒவ்வொரு மேலதிகாரியிடமும் சொன்னான். தன் கீழுள்ள அதிகாரிகளை கண்களை நோக்கிப் பேசுவதையே தவிர்த்தான். புன்னகைப்பதோ உபச்சாரங்கள் சொல்வதோ இல்லை. கூடுமானவரை சுருக்கமான ஒற்றைச் சொற்களால் பேசினான். மறுசொல் அற்ற பணிவை அவர்களிடம் எதிர்பார்த்தான். அதையே மேலதிகாரிகளுக்கும் திரும்ப அளித்தான்.

அந்தப் பிரம்மாண்டமான எந்திரத்தின் உறுப்புகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாமல் இருந்தால் போதுமானது. அவை ஒன்றை ஒன்று இணைந்து  ஒருபோதும் வேலை பார்ப்பதில்லை. நூற்றுக்கணக்கான அகங்காரங்களின் தொகுப்புதான் அரசாங்க அதிகாரம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு வசதியானதையும் பிடித்ததையும் மட்டுமே செய்வார்கள். இன்னொருவருடன் இணையும் எண்ணமே எவருக்கும் இருப்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகவே அது ஒரே எந்திரமாகவும் இயங்கியது. அதை ஒரு எந்திரமாக ஆக்குவது அதிலுள்ள ஒருங்கிணைப்பல்ல, அந்த அமைப்பின் ஒட்டுமொத்தத்திலுள்ள நோக்கமும் அதன் விசையும் மட்டும்தான்.பலநூறு அகங்காரங்களும் சுயநலன்களும் இணைந்து ஒற்றை அதிகாரமாக ஆவதன் விந்தையே அரசு என்பது.

பெரும்பாலான குற்றங்கள் பிகாரில் அந்த சிற்றூர்களில் ஊர்ப்பஞ்சாயத்துகளால் சாதி அடிப்படையிலும் பணபலத்தாலும் தீர்த்துவைக்கப்பட்டன. படுகொலைகள், ஆயுதமேந்திய கொள்ளை போன்ற சில விஷயங்கள் மட்டுமே போலீஸிடம் வந்தன. போலீஸ் அவற்றையும் கீழ்நிலையிலேயே சமரசம் பேசி முடித்துவைத்தது. மிக அரிதாகத்தான் ஒரு செய்தித்தாள் புயல் கிளம்பி, மேலதிகாரிகள் தலையிடும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது. அந்தப் பிரச்னையையும்கூட அதற்கே உரிய மரபான வழிகளின் வழியாக போலீஸ் கையாண்டது. அந்த பதிந்துபோன  வழி அப்படியே தொடர்கிறதா என்று மட்டுமே அஸ்வத் பார்த்துக்கொண்டால் போதுமானதாக இருந்தது.

அஸ்வத்திடம் அவனுடைய மேலதிகாரி ஒருமுறை சொன்னார். ”போலீஸ் வேலை மிக எளிதாக இருக்கும் ஊரென்பது உத்தரப்பிரதேசமும் பிகாரும்தான். ஏனென்றால் பழையகால நிலப்பிரபுத்துவ அமைப்பு அப்படியே இங்கே இருக்கிறது. அதன் உள்ளூர் கட்டமைப்பை மீறி போலீஸிடம் எதுவும் வருவதில்லை. வந்தாலும் அதையெல்லாம் கீழ்நிலைப் போலீஸே செய்து முடித்து விடுகிறது. நாம் நேரடியாக அரசியல்வாதிகளுக்கு பதில் சொன்னால் போதுமானது. தெற்கு மாநிலங்களில் போலீஸ் நீதிமன்றத்துக்கு பணிகிறது. ஒவ்வொரு குற்றத்தையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு குற்றங்களை நிரூபிக்க வேண்டும். தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். அங்குதான் சட்டமும், மரபுகளும் எல்லாம் வருகின்றன. போலீஸ் குன்றிப்போவதும் செயலற்றவனாவதும் நீதிமன்றத்தின் முன்னால்தான். போலீஸின் பெரும்பாலான வேலைகள் நீதிமன்றத்திற்காகத்தான். நாம் இங்கு நீதிமன்றத்திற்கு மிகக்குறைவான வழக்குகளைத்தான் கொண்டு செல்கிறோம். அப்படி கொண்டுசெல்லும் வழக்குகளில்கூட மிகப்பெரும்பாலானவை நீதிமன்றத்தில் இருக்கும் ஊழல்கள் வழியாக முடிவு செய்யப்படுகின்றன.”

அங்கு நீதிமன்றத்தால் பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்யப்படும் வழக்குகளே எவை, அதற்கு பணம் அளிக்க வசதியற்ற ஏழைகளின் வழக்குகள் எவை என்று போலீஸ்காரர்களுக்கு தெரிந்திருந்தது. ஆகவே அதற்குரிய விகிதத்தில் நீதிமன்றத்துக்கு வழக்குகளை கொண்டு சென்றார்கள். எண்ணிக்கை அடிப்படையிலும், சதவீத அடிப்படையிலும் எந்த வெளிப்பார்வையாளனுக்கும் திருப்தி வரும் வரும்படியாக வழக்குகள் நீதிமன்றத்துக்குக்கொண்டு செல்வது என்பது பிரிட்டிஷ் காலம் முதல்  நடைமுறையில் இருந்தது. பிகாரின் நீதிமன்றங்களில் பெரும்பாலான ஏழைகள் உடனடியாக தண்டனை பெற்றார்கள். கீழிருந்து மேல் வரை அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. தண்டனை கிடைக்காவிட்டால் விசாரணை கைதிகளாகவே சிறையில் ஆயுள் தண்டனையைவிட அதிக காலம் வாழ்பவர்களும் இருந்தார்கள்.

சாதியிலோ பணத்திலோ அதிகாரத்திலோ ஏதேனும் தகுதி கொண்டவர்கள் மிக எளிதாக நீதிமன்றத்திலிருந்து தப்ப முடிந்தது. அதன் வழியாக உண்மையான அதிகாரம் எவருடையது என்பது நகரங்களிலிருந்து சிற்றூர் வரைக்கும் தெள்ளத் தெளிவாக ஒவ்வொருவருக்கும் தெளிவாகிக் கொண்டிருந்ததனால் பணமும் சாதியும் கொண்டவர்களே ஒரு சமானமான அரசாங்கமாக மாறினார்கள். அவர்களுக்கு எதிராக ஒரு குரல்கூட கீழிருந்து மேல்வரை வரவில்லை.

”இங்கு இரண்டு அரசாங்கங்கள் உள்ளன” என்று தெற்கிலிருந்து வந்த மேலதிகாரியான தம்பி ராஜ்குமார் அவனிடம் சொன்னார். ”வரி பெற்றுக்கொண்டு, போலீஸ் நீதிமன்றம் எல்லாம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு அதிகாரம். சிறு கிராமங்களிலிருந்து பெரிய நகரங்கள் வரை அந்தந்த பகுதிகளை கட்டுக்குள் வைத்திருக்கும்  இன்னொரு அதிகாரம். இந்த இரண்டு அதிகாரங்களில் இரண்டாவது அதிகாரம்தான் உண்மையானது நேரடியானது, வலுவானது. ஏனென்றால் அது தன்னிச்சையாக உருவாகி வந்திருக்கிறது. அந்த அதிகாரத்துடன் அரச அதிகாரம் முரண்படும்போது தான் பிரச்னைகள் வருகின்றன. ”

சிரித்தபடி மீசையை நீவிக்கொண்டு அவர் சொன்னார். “தெற்கே உள்ள மாநிலங்களில் உள்ளூர் பணக்காரர்களுக்கும், நகரங்களில் மாஃபியாக்களுக்கும் அரசாங்கத்திடம் மோதல் உருவாவதை அடிக்கடிக்  கேள்விப்படுகிறோம். அது உண்மையில் இரண்டு வகையான அரசாங்கங்களுக்கு இடையேயான மோதல். ஆனால் பிகாரில் இந்த இரண்டு அரசாங்கங்களும் முழுமையாக ஒன்றை ஒன்று ஒத்துக்கொண்டு, ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இரண்டாவது அதிகாரத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்தலில் நின்று வென்று முதல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இத்தனை முழுமையான ஒத்திசைவு இருக்கும்போது இங்கே முழுமையான அமைதி இருக்கிறது. முழுமையான அமைதி முழுமையான அடக்குமுறையில்தான் சாத்தியமாகும் என்று புரிந்துகொண்டால் பிகாரை நன்கு தெரிந்துகொண்டதாகும்.”

”இந்த அமைப்பு பிகாரில் நாமறிந்து இருநூறாண்டுகளாக இருக்கிறது. இங்கே முகலாய அரசு உருவான காலம் முதலே சிறு அதிகாரங்கள்தான் மொத்த நாட்டையும் கட்டுக்குள் வைத்திருந்தன. இன்றைக்கு ஒரு பஞ்சாயத்து என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தான் பழைய ஜமீன்தார்களின் நிலம் இருந்திருக்கிறது. அவர்கள் அந்த வட்டத்தில் எல்லாவகையிலும் அரசர்கள். அவர்களுக்குமேல் சிற்றரசர்கள். அச்சிற்றரசர்களுக்கு அப்பால் எங்கோ டெல்லியில் ஒரு பேரரசு. அவர்களுக்கிடையே முழுமையான ஒத்திசைவு இருந்ததனால் இங்கே எப்போதும் எந்தப் பிரச்னையும்  இருந்ததில்லை.” தம்பி ராஜ்குமார் தொடர்ந்தார்.

“அவர்களிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொண்டபோது பிரிட்டிஷார் அந்த அமைப்பை எந்த வகையிலும் கலைக்கவில்லை. அந்த அமைப்பு வேறொருவகையில் இப்போதும் அப்படியே நீடிக்கிறது என்று புரிந்து கொண்டால்போதும். இனி நீண்டநாட்கள் இப்படியே இது நீடிக்கும். நாளை என்றாவது இது கலைய நேரிட்டால்தான் இதனுடைய உறுப்புகள் ஒன்றோடொன்று உரசி அராஜகம் உருவாகும், அழிவும் உருவாகும்.”

“அவ்வப்போது இந்த அமைப்புகளை கலைப்பதற்கான முயற்சிகள் இங்கு நடந்ததுண்டு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுபதில் உருவாக்கிய முழுப்புரட்சியும் சரி, அதற்கு முன்னால் வினோத் மிஸ்ரா போன்றவர்களால் உருவாக்கப்பட்ட நக்சலைட் புரட்சியும் சரி, அதற்கான சில முயற்சிகள்தான். அவை அசட்டுத்தனமானவையும்கூட. ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பிறகு இனி ஒன்று இங்கே சாத்தியமாகுமா என்றே தெரியவில்லை. அந்த இயக்கத்தில் இருந்தவர்களே இன்று இரண்டாவது அதிகாரத்தில் தலைவர்கள் ஆகிவிட்டனர். இந்த அமைதி நம்மைப் போன்றவர்களுக்கு மிக வசதியானது. நாம் இதை மாற்றப்போவதில்லை. நாம் புரட்சியாளர்கள் அல்ல. நாம் இதை நடத்துபவர்கள்தான். நாம் நடத்துவதற்கு ஒன்றுமில்லை, இது தானாகவே நடக்கும். ஆகவே உனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய் மகிழ்ச்சியாக இரு. நீ அதிருஷ்டக்காரன் என்று நினைத்துக்கொள்” என்று தம்பி ராஜ்குமார் சிரித்தார்.

அஸ்வத் தன் ஆட்சி நிகழ்ந்த பகுதிகளில் அலுவலகப்பணியை மதியத்திற்கு மேல் ஒருபோதும் செய்ததில்லை. எப்போதுமே அவன் அந்த உள்ளூர் செல்வந்தர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை மட்டுமே செய்தான். அவர்கள்  முறைப்படி அவனுக்கு சேரவேண்டிய பங்கை தவறாமல் அளித்து வந்தார்கள். அதற்கான எல்லா வழிமுறைகளும் தெளிவாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தன. அவன் அந்தப்பணத்தை கொண்டு வந்து ஹரீந்திரநாத்துக்கு கொடுக்கவேண்டியதில்லை. ஆகவே ஒவ்வொரு இடத்திலும் பணத்தை அள்ளி இறைத்து வாழ்ந்தான். அவனுக்கு கிளர்ச்சி ஏற்படுத்தும் பெண்கள் நிறைந்த ஊரிலேயே எப்போதும்  இருந்தான்.

முதலில் வன்முறையும் கீழ்மை நிறைந்த பெண்களில் ஈடுபட்ட அவன் மனம் பிறகு பெண்கள் மீது வன்முறையை செலுத்தி மகிழ்வதாக மாறியது. பெண்களை துன்புறுத்தி அவர்கள் அலறும்போது மட்டுமே அவனால் காமக்கிளர்ச்சி கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியது. அந்த மனநிலையுடன் அவன் ஊர்வசியை மணந்து கொண்டபோது முன்பு அவனே கற்பனை செய்துகொண்டிருந்ததுபோல அந்த திருமணநாளுக்குப்பின்  அவன் முழுமையாக பிறிதொருவனாக ஆகிவிடமுடியவில்லை. முதலிரவில் ஊர்வசியுடன் ஒரு பெரிய குற்ற ஒப்புதலை அளித்து ,அவளிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்று, கண்ணீர் விட்டு அழுது, அவளால் தேற்றப்பட்டு, புதிய வெளிச்சத்தை பார்த்தபடி காலையில் எழவேண்டும் என்னும் கனவு அசட்டுத்தனமானது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எப்போதுமே உண்மை பிறிதொன்றாக இருக்கும் என்று பகல்கனவு காணும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆகவே பகல்கனவுக்கும் உண்மைக்கும் தொடர்பே இல்லாமல் இருப்பதை அறியும்போது எவரும் ஏமாற்றமோ சலிப்போ அடைவதில்லை.

முதல் இரவில் ஊர்வசி அவனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தலைகுனிந்து உடலை இறுக்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவன் தொட்டபோதும், வெவ்வேறு கேள்விகள் கேட்டபோதும் எல்லாம் ஓரிரு வார்த்தைகளை முணுமுணுப்பாகச் சொல்லி தலையசைத்து, குனிந்த தலை நிமிராமலேயே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவன் அவளில் சலிப்படைந்து, காமத்தை நோக்கி செல்லத் தொடங்கியபோது அவள் இன்னும் தன் உடலை இறுக்கிக்கொண்டாள். அவன் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்கியபோது திகிலுடன் ஒன்றைத் தெரிந்துகொண்டான், அவன் உடல் எந்த வகையிலும் கிளர்ச்சி அடையவில்லை. அவனால் அதைச் செயல்படுத்தவே முடியவில்லை. அந்தத் தன்னுணர்வு அவன் மேல் குளிர்நீரை ஊற்றி முழுமையாகவே நனைந்த துணிபோல ஆக்கியது.

இருட்டில் நிர்வாணமாக உடல் பிணைத்து காமத்திற்கு முயன்றபோது ஊர்வசி இயல்பாக கையை எடுப்பது போல் எடுத்து அவனுடைய ஆணுறுப்பை தொட்டுச் சென்றபோது அவனுக்கு ஒன்று தெரிந்தது, அவளுக்கு காமம் பற்றி முன்னரே நேரடியாகவே தெரிந்திருந்தது. அவனுக்கு காமஉணர்ச்சி எழவில்லை என்பதை அவள் புரிந்துகொண்டுவிட்டாள். அந்த அறிதல் அவனுக்கு அப்போது நிம்மதியை அளித்து, அவனை விடுதலை செய்தது. அதன்பின் அவளை கிழித்து உண்ணும் புலி போலக் கையிலெடுத்தான். அவள் வலியால் அலறத் தொடங்கியபோது அவனுக்கு வழக்கமான கிளர்ச்சியும், உடல் இறுக்கமும் ஏற்பட்டன. எப்போதும் தன்னிடம் அகப்படும் ஒரு பெண்ணை அவன் எப்படி வதைத்து அனுபவிப்பானோ அதைப்போல அவளிடம் நடந்துகொண்டான்.

பின்னர் எழுந்து சென்று புகை பிடித்தபடி பால்கனியில் நின்றபடி கீழே ஓடும் வண்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையில் நள்ளிரவில் கூட அவ்வப்போது ஓரிரு இருசக்கர வண்டிகள் ஓடுவதுண்டு. ஒவ்வொரு வெளிச்சமும் வளைந்து சுழன்று அவன் மேல் பட்டு போகும்போது ஒரு புதிய எண்ணம் தோன்றி மறைவது போலிருந்தது. அப்போது அவன் ஓர் எண்ணத்தை அடைந்தான். அவளுக்கு ஆணுடன் காமம் புதியதல்ல என்பதில் ஐயமில்லை. ஆனால் யார்? அவள் அவனை அவளுடைய முந்தைய ஆணுடன் ஒப்பிட்டுக்கொள்கிறாளா? அவனுக்கு ஏமாற்றப்பட்ட உணர்ச்சி ஏற்படவில்லை, அவன் அவளுடைய முந்தைய ஆணைவிட மேலானவனா என்னும் எண்ணம் மட்டுமே நீடித்தது.

ஆனால் அந்த எண்ணத்துடன் அவன் மூர்க்கமாக போராடினான். அப்படி  இருக்க வாய்ப்பே இல்லை. அவள் வளர்ந்த சூழல் ,குடும்பப் பின்னணி ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் அவள் இன்னொரு ஆணை  கண்களைப் பார்த்து பேசியிருக்கவே வாய்ப்பில்லை. உடன்பிறந்தவர்களின் முன்னால் கூட தன் முக்காட்டை இழுத்துவிடாமல் சென்று நின்றிருக்க முடியாது. அந்த எண்ணத்தை போராடிப் போராடி அவன் அழித்துக்கொண்டான். அதற்கு அடுத்த நாட்களில் அவ்வப்போது அந்த எண்ணம் அவனுக்கு எழுந்தபோது மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் அவளிடம் அதைப்பற்றி கேட்டான். ஆனால் அவள் சலித்தவள் போலவோ, ஆழ்ந்து துயருற்றவள் போலவோ, தன்னுடைய எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு உள்ளே பதுங்கி இருந்தாள். அவளிடமிருந்து ஒரு புன்னகையையோ, முழுமையான ஒரு சொற்றொடரையோ அவனால் பெற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவளுடனான காமம் அதே போன்ற வன்முறையுடன் மட்டுமே நிகழ முடிந்தது. அவள் தன்னை இன்னொருவனுடன் ஒப்பிடக்கூடாது என்னும் உணர்வே அந்த வன்முறையை பெருக்கியது. சில நாட்களுக்குப்பின் அவன் ஒன்றைத் தெரிந்துகொண்டான். அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் அவளைப்போன்ற பெண்களுடன் ஓர் ஆண் காமம் கொள்ள முடியாது. அவர்களால் ஆணுடன் சரசமாட முடியவில்லை. சிரிக்கவோ புன்னகைக்கவோ கூட முடியவில்லை. சிறு கொஞ்சல் கூட அவளிடமிருந்து வரவில்லை. அத்தனை இறுக்கமாக உடலை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மூடிய வாசல்களை உடைத்து திறந்து உள்ளே நுழைவது தவிர வேறெவ்வகையிலும் அடைய முடியாது. ஆயிரம் ஆண்டுகளாக அவளைப்போன்ற பெண்கள் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களின் கணவர்கள் அப்படித்தான் அவர்களை அடைந்திருக்கவும் வேண்டும்.

அவன் அவளை அவ்வாறு மிக இயல்பாக கையாளத் தொடங்கியபோதுதான் அவளுக்கு சிபிலிஸ் நோய் இருப்பதை மருத்துவர் சொன்னார். அதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திருமணத்திற்கு ஆறுமாதம் முன்னரே அவனுக்கு அந்நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து அவன் ரகசியமாக சிகிச்சை எடுத்துவந்தான். ஊசி போடுவதன் சுற்று முடிந்து மாத்திரைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவன் டாக்டரிடம் தனக்கு அந்த நோய் வந்து கட்டுக்குள் இருப்பதாக முந்தைய டாக்டர் சொன்னதாகச் சொன்னான். கட்டுக்குள் இருந்தாலும் நோய் தொற்ற முடியும், முழுமையாக உங்களுடம்  அந்தத் தொற்று விலகியிருக்காது அது ஓர் உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.

முதல் முறையாக அந்தக் குற்ற உணர்வால் அவன் ஊர்வசியிடம் கனிவையும் நெருக்கத்தையும் அடைந்தான். அவளை ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினான். ஒருமுறை அவளிடம் காரில் செல்லும்போது தணிந்த குரலில் தனக்கு அந்த நோய் இருந்தது என்றும், தன்னிடமிருந்து அவளுக்கு அது வந்திருக்க முடியும் என்றும் சொல்லி அவள் தன்னை மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அவள் கை நீட்டி தன்னை தொடுவாள் என்றும், ஆறுதலாக ஏதேனும் சொல்வாள் என்றும் எதிர்பார்த்தான். அல்லது அழுவாள் என்றும் சீற்றத்துடன் ஏதாவது சொல்வாள் என்றுகூட எண்ணினான். அவள் மேலும் முக்காட்டை முகத்தின் மேல் இழுத்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.அவள் அழுகிறாளா என்று காரை ஓட்டியபடி அவன் ஓரக்கண்ணால் திரும்பித் திரும்பி பார்த்தான். அவள் இறுகிய உடலுடன் தலைகுனிந்து அசையாது அமர்ந்திருந்தாள். எரிச்சலுடன் அவன் வழக்கம் போல் காருக்குள்ளேயே காலடியில் துப்பியபடி அதை ஓட்டினான்.

ஆனால் ஓரிரு வாரங்களுக்குப்பிறகு அவள் அந்த நோய் பற்றிய எந்தத் தகவலையுமே வீட்டில் எவரிடமும் சொல்லவில்லை என்று தெரிந்துகொண்டபோது அவள் மேல் மெல்லிய அன்பை மீண்டும் அடைந்தான். வாழ்நாள் முழுக்க அவளுடன் அந்த ஊசலாட்டத்திலேயே இருந்தான். அவள் கருவுற்றபோது முதல் சிலமாதங்கள் அவன் அவளிடம் கனிவும் நெருக்கமும் அடைந்தான். ஆனால் கரு வளர வளர தனிமையும் கண்ணீருமாக அவள் மேலும் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். குழந்தை பிறந்த போது முதற்சில மாதங்கள் குழந்தை மீதும் அவள் மீதும் ஒரு நெருக்கத்தையும் அன்பையும் அடைந்தான். ஆனால் குழந்தை சற்று வளர்ந்தபோது அவள் அதைத் தவிர வேறு எதையுமே யோசிக்க முடியாதவளாக ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டாள். அதன் பின் மகன் தங்கிப்படிக்கும் பள்ளிக்கு சென்றுவிட்டபோது அவன் அவளிடமிருந்து முற்றாக அகன்று தனக்கான உலகத்தில் சுழலத் தொடங்கினான்.

ஆனால் எங்கோ ஓரிடத்தில் அவள் தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. தன் உலகம் எவ்வளவு கீழ்மையானது என்று அவளுக்கு தெரிவித்தால் அவள் சீண்டப்படுவாள் என்று தோன்றி அவளுடைய அறிதலுக்குள் தன் காமமும் வன்முறையும் நிறைந்த உலகத்தைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுக்க முயன்றான். அவள் தன்னை வசைபாடினால்கூட அது அக்கறைதான் என்று எண்ணிக்கொண்டான். அவள் அதைத் தெரிந்துகொள்ள மறுத்துவிட்டாள். ஒன்றைத் தெரிந்துகொள்ள மறுப்பவரிடம் அதை தெரியவைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவன் உணர்ந்துகொண்டான். அவள் எல்லா வாசல்களையுமே தனக்காக மூடி வைத்திருக்கிறாள், தன்னை எப்போதுமே அவள் கவனிப்பதில்லை என்று புரிந்துகொண்டபிறகு அவன் முழுமையாகவே அவளிடமிருந்து விலகிச் சென்றான்.

ஆனால் அவனுக்குள் ஒரு கை அவளை நோக்கி நீண்டு தவித்துக்கொண்டே இருந்தது என்று அவன் அறியும் தருணங்கள் இருந்தன. அவன் அவளால் சீண்டப்பட்டு, அவள் எரிச்சலோ சீற்றமோ அடைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பிறகு அதை உணர்வான். அப்போதெல்லாம் இரவு முழுக்க சிகரெட் பிடித்துக்கொண்டும் துப்பிக்கொண்டும் இருட்டைப் பார்த்து நின்றிருப்பான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 11:32

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா, கவிதைவிவாதம்- கடிதங்கள்

குமரகுருபரன் விருது விழா 2025 குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்  சமகால கவிதை, அயல் இலக்கியம்- இரு உரையாடல் அரங்குகள் சிறுகதை, கவிதை அமர்வுகள்- காணொளிகள்

ஜெ

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் மிகமிகக் குறைவாகவே இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். சென்னையில் நிகழும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகள் மாபெரும் நேரவிரயங்கள். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், பேச்சுத்திறனும் இல்லாமல் நிகழ்த்தப்படும் நீண்டநேர பேச்சுக்கள்தான் அங்கே நிகழ்கின்றன. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா எந்த விதமான சலிப்பும் இல்லாமல் ஒரு முழுநாளும் நிகழ்ந்தது என்பது அதிசயம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இப்படித்தான் நிகழ்ந்து வருகிறது என்பது இன்னொரு அதிசயம்.

2011 ல் பூமணிக்கு நீங்கள் எடுத்த விழாவில் நான் கலந்துகொண்டேன். அன்று முதல் இன்று வரை அதே ஒழுங்கும், கட்டுப்பாடும், இலக்கியம் மீதான கவனமும் ஆச்சரியம் அளிக்கின்றன. இன்னொரு விஷயம், இந்த விழா இப்படிச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒரு காரணம் வந்திருக்கும் அரங்கு. இலக்கிய ஆர்வமும் இலக்கியத்தின் மேல் அர்ப்பணிப்பும் உடையவர்கள் மட்டுமே கொண்ட அரங்கு அது. நன்றிகூறல் நிக்ழும்போதுகூட அரங்கிலே கூட்டம் அப்படியே இருந்தது. நுட்பமான இலக்கியச் செய்திகளையும் பகடிகளையும்கூட உடனே ரசித்து எதிர்வினை அளித்தது. பாராட்டுகள்.

தெய்வநாயகம், பெரம்பூர்

அன்புள்ள ஜெ,

அந்திமழை இதழில் விஷ்ணுபுரம் குமரகுருபரன் நிகழ்ச்சிப்பதிவைப் பார்த்தேன். விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. ஆனால் அந்த விவாதம் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே புள்ளியில் கொஞ்சம் சம்பந்தமில்லாமல் சுற்றிவந்ததுபோல் இருந்தது. தமிழின் மூன்று முக்கியமான கவிஞர்களின் உரையாடலில் இன்னும் கொஞ்சம் ஆழமாக கவிதை எழுதுவதன் சிக்கல்கள், சவால்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

ஶ்ரீரங்கராஜன்

தமிழ்நாடு இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது!-ஜெயமோகன்  (அந்திமழை)

அன்புள்ள ஶ்ரீ,

இந்தவகையான விவாதங்கள் இன்ன திசையில்தான் செல்லவேண்டும் என எவரும் முன்னரே சொல்லமுடியாது. எதிர்பார்க்கவும்கூடாது. அந்த தருணத்தில் எது திரண்டு வருகிறதோ அதுதான் விவாதப்பொருள். அந்த விவாதப்பொருள் உண்மையில் சூழலில் ஏற்கனவே முனைகொண்டுள்ள பிரச்சினையாகத்தான் இருக்கும். அது தெளிவற்ற ஒரு சிந்தனையாக இருந்து அங்கே விவாதமுகமாக ஆகிறது. அந்தத் தற்செயல் முக்கியமானது. அதுவே நாம் எதிர்பார்க்கவேண்டியது. தவறான விவாதம் என்பது இரண்டுதான். ஒன்று, தனிப்பட்ட தாக்குதல்கள். இரண்டு, சம்பிரதாயமான பேச்சுக்கள்.

ஜெ

கல்விநீக்கம் – ஒரு விவாதம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 11:31

தினம் மூன்று இணையப்பக்கங்கள்

முழுமையறிவுக்கான இணையப்பக்கங்கள் இவை. இவை தொடர்ந்து வெளிவருவது, ஒருநாளும் தவறாமலிருப்பது என்பது முழுமையறிவு இயக்கத்தின் நேர்த்திக்கான சான்று. ஆகவே இவை வெளிவருகின்றன.

தினம் மூன்று இணையப்பக்கங்கள்

I listened to your speech on quality of life. I have similar thoughts, which I got from my own life. Your words gave my thought a correct form; thank you for that. We never think about the quality of life these days. We imagine a good future, and living our present for that, we lose our present for that future. We work, we save, and we strive—this is the life we have today.

About the quality of life
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 11:30

இந்திய மரபிசைப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்திய கர்நாடக இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு பங்கேற்றவர்களுக்கு ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது என்று எதிர்வினைகள் வந்தன. மீண்டும் அவ்வகுப்பு நிகழவிருக்கிறது

நம்மில் பலருக்கும் கர்நாடக இசையை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் உண்டு. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியுமா என்னும் சந்தேகமும் இருக்கும். அது மிகச்சிக்கலானது என்ற பிரமையும் உண்டு. உண்மையில் மரபிசையை ரசிக்க ஒரு நல்ல தொடக்கம் அமைந்தாலே போதுமானது. அதற்கு மூன்றுநாட்கள் நடக்கும் 16 மணிநேரப் பயிற்சி வகுப்பு மிக உதவியானது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கர்நாடக இசையின் முதன்மை ராகங்களின் ஒரு அறிமுகம் நிகழும். அதை நினைவில் நிறுத்த உதவும் கீர்த்தனைகளும், சினிமாப்பாடல்களும் கேட்கச்செய்யப்படும். இசை கேட்பதற்கான அந்த தொடக்கம் நிகழ்ந்தால் நம்மையறியாமலேயே நாம் பாடல்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம். மரபிசையின் மாபெரும் உலகுக்குள் நுழைவதற்கான வாசல் அது.

நாள் ஜூலை 18 ,19 மற்றும் 20 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

இசைநாட்கள் மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

 

ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. குரு.சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.

இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகளுடன் ஒரு நாள் மாலை நிகழ்வாக நடைபெறும்.

குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்.

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

பௌத்தம்- தியானம்- அறிமுக வகுப்பு

வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

செப்டெம்பர்

ஜூன்27, 28 மற்றும் 29  (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியப்பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.

சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.

நாள் ஜூலை4,5 மற்றும் 6 

programsvishnupuram@gmail.com

யோகப்பயிற்சி.தொடக்கநிலை.

பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் என றிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.

அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.

நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.

நாள் ஜூலை 11, 12, 13

programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்

ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.

ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.

அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.

ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.

நாள் ஜூலை 25, 26 மற்றும் 27

programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 00:04

June 15, 2025

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நூற்றாண்டு தொடக்கம்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நூறாண்டு அகவை இந்த நாளுடன் தொடங்குகிறது. நம் காலகட்டத்தின் மாபெரும் அரசியல் ஆளுமை என நான் நினைப்பது அவரைத்தான். பணிவும் வணக்கமும்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 20:13

பொழுதுபோகாமையிலிருந்து நேர மேலாண்மைக்கு

என் வாழ்க்கையில் இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று பொழுதுபோக்கு என்பதுதான். பொழுதுபோகாத நிலை எனக்கு வந்ததே இல்லை. மிகச்சரியாக பொழுதை வகுத்துப் பயன்படுத்தும் வாழ்க்கையையே இது வரை வாழ்ந்திருக்கிறேன்.

பொழுதுபோகாமையிலிருந்து நேர மேலாண்மைக்கு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:36

வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்

எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில்

நம் சமூகம் வாய்மொழிப் பண்பாடு கொண்டது, எழுத்துப் பண்பாட்டை அஞ்சுவது என்று முந்தைய குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன். வாய்மொழிப் பண்பாடு பிற்பட்ட, தேக்கநிலை என்றும் எழுத்துப் பண்பாட்டை நோக்கி நாம் நகர்ந்தாகவேண்டும், அதற்கு நமக்குச் சுயவிமர்சனமும், சுயபரிசீலனையும் தேவை என்றும் சொல்லியிருந்தேன். எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில். பல கேள்விகள் அதையொட்டி எனக்கு அனுப்பப்பட்டன.

பண்பாட்டு அடிப்படையில் சமூகங்கள் இரு வகையாக பகுத்துப்பார்க்கலாம். வாய்மொழிச் சமூகங்கள், எழுத்துசார் சமூகங்கள். எல்லா சமூகங்களும் தொடக்கத்தில் வாய்மொழிப் பண்பாடு கொண்டவைதான். அவற்றில் சில சமூகங்கள் தங்களை எழுத்துசார் சமூகங்களாக ஆக்கிக் கொள்கின்றன. ஐரோப்பியச் சமூகம் கிரேக்கப் பண்பாட்டின் காலம் முதலே எழுத்தை நோக்கியதாக தன்னை நகர்த்திக்கொண்ட ஒன்று. சீனச்சமூகமும், அராபியச் சமூகமும்கூட எழுத்துப் பண்பாட்டுக்குள் நீண்டகாலம் முன்னரே சென்றுவிட்டவைதான். மானுடக் கலாச்சராம் என நாம் அறியும் அனைத்தையும் விடத் தொன்மையான எகிப்தியக் கலாச்சாரம் மாபெரும் எழுத்துப் பண்பாட்டைக் கொண்டது. மாறாக இந்தியச் சமூகம் வாய்மொழிச் சமூகமாகவே நீடித்தது, இன்றும் நீடிக்கிறது.

இந்தியச் சமூகத்தில் நீண்டகால எழுத்து மரபு உண்டு. ஆனால் அது ஒரு சிறுவட்டத்திற்குள், மிகச்சிறிய அளவில்தான் என்றும் இருந்தது. இந்தியச் சமூகம் ஒட்டுமொத்தமாக வாய்மொழிச் சமூகமே. நம்முடைய முதன்மை மதநூல்களாகிய வேதங்கள் அச்சு ஊடகம் வந்தபின்னரே எழுத்துவடிவை அடைந்தன. ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்ற அனைத்துமே பேசி- கேட்கப்படும் நூல்களாகவே இருந்தன. அவற்றை வாய்மொழிமரபாக பாடிப்பரப்பும் சூதர்கள், மாகதர்கள், பாணர்கள் எல்லா காலத்திலும் இருந்தனர், இன்றும் அம்மரபு பெரும்பாலும் அப்படியே நிலைகொள்கிறது.

நம் சங்கக் கவிமரபு முழுக்கமுழுக்க வாய்மொழி சார்ந்ததே. அவை உரிய வாத்தியங்களுடன் துணையுடன் பாடப்பட்டன. சங்கம் மருவிய காலகட்டத்து காவியங்களும் சரி, அதன்பின் உருவான அறநூல்களும் சரி, பக்திக் காலகட்டத்துப் பாடல்களும் சரி, கம்பன் முதல் சேக்கிழார் வரையிலான இரண்டாவது காவியகாலகட்டமும் சரி, சிற்றிலக்கியக் காலகட்டமும் சரி செவிச்சொல் சார்ந்தவையே. நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுவடிவில்தான் எழுத்துப்பண்பாடு அறிமுகமானது.

எழுத்துவடிவம் ஏடுகளில் இருந்ததே என்று கேட்கலாம். மூலம் என்ற வகையில்  நூல்களின் ஒரு எழுத்துவடிவம் பேணப்பட்டது, அவ்வளவுதான். அவை நேரடியாகப் பயிலப்பட்டது மிகக்குறைவு. மனப்பாடம் செய்யப்படவேண்டும் என்பதற்காகவே குறள், வெண்பா போன்ற செய்யுள்வடிவங்கள் பயின்று வந்தன.மிழிலும் நம் இலக்கியங்கள் அனைத்துமே செவிநுகர் கனிகள்தான். நூல்வாசிப்பு என்பது மிகமிக அரிதான, மிகச்சிறிய வட்டத்திற்குரிய ஒன்றாகவே என்றும் இருந்தது. சொல்லிக் கேட்பதுதான் நமது மரபு. கற்றலில் கேட்டல் நன்று என்றுதான் நம் மரபு அறிவுறுத்தியது.

இந்தக் காரணத்தால்தான் இந்திய அளவிலேயே நமக்கு மிகமிகக்குறைவாகவே எழுத்துப்பிரதிகள் கிடைக்கின்றன. இத்தனை நீண்ட ஒரு பண்பாடு எத்தனை நூல்களை உருவாக்கியிருக்கவேண்டுமோ அதில் நூறிலொரு பங்கு நூல்கள் கூட நமக்கு உண்மையில் இல்லை. நம் இலக்கிய மரபு மிகப்பெரியது என நாம் நினைக்கிறோம், அது ஒரு பிரமைதான். எண்ணிப்பாருங்கள், இங்கே ஒரு நூற்றாண்டுக்கு ஒருசில நூல்களே நமக்கு இன்று கிடைக்கின்றன. பெரும்பாலான நூல்கள் வாய்மொழியில் நிகழ்ந்து அப்படியே மறைந்தன.

உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தாலே தெரியும், எத்தனை நூல்கள் அப்படி ஒரே ஒரு பிரதி மட்டும் எழுதப்பட்டு, வாய்மொழியாக பயிலப்பட்டு, அப்படியே மறைந்தன என்று. அவருடைய ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கம்பனை விட கூடுதலாக எழுதியவர். அவருடைய எந்த நூலும் நம்மிடம் இல்லை. இந்தியாவில் அப்படி பல ஆயிரம் ஆசிரியர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள். மதம் சார்ந்த நூல்களே இந்தியாவில் பெரும்பாலும் பேணப்பட்டன, மதவழிபாட்டின் ஒரு பகுதியாக. இன்று இந்திய இலக்கியத்தில் நமக்கிருக்கும் அதிகமான நூல்கள் பெரும்பாலும் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவை. இத்தனைபெரிய சிற்பங்களும் ஆலயங்களும் இருக்கும் நம்மிடம் சிற்பம், மருத்துவம் ஆகியவற்றில் நூல்கள் மிகக்குறைவு. பெரும்பாலான நூல்கள் ஏற்கனவே எழுதப்பட்டவற்றின் மறுஆக்கங்கள்

நமக்கு வரலாற்றெழுத்தே இல்லை. கிரேக்க வரலாற்றெழுத்துக்கு மூவாயிரமாண்டு தொன்மை உண்டு. அராபிய வரலாற்றெழுத்து பத்தாம் நூற்றாண்டு முதல் மிகப்பெரிய அலையாக எழுந்தது. சீன வரலாற்றெழுத்து மிகப்பிரம்மாண்டமானது, மூவாயிரமாண்டு தொன்மை கொண்டது. இந்தியாவில் வரலாற்று நூல் என எதுவுமே இல்லை — அராபிய மரபால் உருவாக்கப்பட்ட முகலாய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்கள் தவிர. நமது மாபெரும் மன்னர்கள் பற்றி எந்தச் செய்தியும் எங்குமே எழுதிவைக்கப்படவில்லை. உண்மையில் எதையுமே எழுதி வைக்கும் வழக்கம் இல்லை. நமக்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் மட்டுமே நம் வரலாற்றுக்குச் சான்று, அவையும் ஓரிரு வரிகள்.தற்செயலாகவே அவற்றில் வரலாறு இடம்பெறுகிறது. டி.டி.கோஸாம்பி சொல்கிறார், நமது ஒட்டுமொத்த கல்வெட்டுகளைச் சேர்த்தாலே ஆயிரம் பக்கம் வராது என. பல நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த பேரரசுகளேகூட ஓரிரு வரி கல்வெட்டுகளுக்கு அப்பால் ஏதும் பதிவே இல்லாமல் மறைந்து விட்டிருக்கின்றன – சாதவாகனப் பேரரசு போல, களப்பிரப் பேரரசு போல.

அறிவுச்செயல்பாட்டில் உள்ளவர்கள் இதை விரிவாகவே பார்க்கலாம். நமது மரபில் பிரதிசெய்யும் வழக்கம் இருந்தது, ஆனால் பாடவேறுபாடு பார்க்கப்பட்டதாக எந்தக்குறிப்பும் இல்லை. ஏனென்றால் எழுதப்படும் நூல் மாறாதது, மாற்றமில்லாமல் அது பேணப்படவேண்டும் என்னும் எண்ணமே நமக்கு இருந்ததில்லை. நமது எல்லா நூல்களும் பாடபேதம் மலிந்தவை. வெள்ளையர் இங்கு வந்து அவர்கள் பாடவேறுபாடு நோக்கி திரட்டியவையே நாம் வைத்திருக்கும் மகாபாரதம், ராமாயணம் எல்லாமே. அந்த முறைமையை அடியொற்றி அறிஞர்கள் பாடவேறுபாடு நோக்கிப் பதிப்பித்தவையே நாம் தமிழில் வைத்திருக்கும் இலக்கியங்கள்.

நம் பக்தி மரபிலேயே மிக அண்மைக்காலம் வரை அதில் எழுத்துப்பண்பாட்டுக்கு, புத்தகங்களுக்கு இடமே இல்லை. வழிபாடுகளின் தோத்திரங்களும் மந்திரங்களும் வாய்மொழியாகவே பயிலப்பட்டன. நம் முன்னோர் பெரும்பக்தர்கள். ஆனால் பக்தி சார்ந்த ஒரு நூலைக்கூட கண்ணால் பார்த்திராதவர்கள். திருமுறைகள், பிரபந்தங்கள்கூட வாய்மொழியாகவே கற்கப்பட்டு பாடப்பட்டன. நாம் ஏதேனும் பக்தி நூல்களை நமக்காக வாங்கி வைக்க ஆரம்பித்ததே இருபதாம் நூற்றாண்டில்தான். இன்றுகூட ஏதேனும் ஒரு பக்திநூல் வீட்டில் இருக்கும் இந்துக்கள் ஐந்து சதவீதம்பேர் கூட இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்திநூலையேனும் படித்த பக்தனாகிய இந்து அரிதிலும் அரிதானவர். அத்தனை கிறிஸ்தவ இல்லத்திலும் பைபிள் இருக்கும் , ஏனென்றால் கிறிஸ்தவம் எழுத்து சார்ந்தது- இதுதான் நான் சொல்லவரும் வேறுபாடு.

ஐரோப்பிய எழுத்து மரபைப் பார்க்கையில் ஓர் இந்தியனாக தாழ்வுணர்ச்சியே உருவாகிறது. எகிப்தியப் பண்பாட்டைப் பார்க்கையில் குன்றிபோகிறேன். கிருஷ்ணனின் சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க இரண்டாம் ராம்சேயின் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு செயலும் எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. நமக்கு கிருஷ்ணனைப் பற்றிக் கிடைப்பவை எல்லாம் நீண்டகாலம் வாய்மொழியில் இருந்து, தொன்மமாக வளர்ந்து, பின்னர் பாடலாகப் பாடப்பட்ட கதைகள் மட்டும்தான். எகிப்தில் இரண்டாம் ராம்சே கட்டிய ஒரு ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளே சில ஆயிரம் பக்கங்களுக்கு நீள்பவை.

இங்கே இருந்த அறிவுமரபு வாய்மொழிப் பண்பாட்டைச் சார்ந்தது. புலவர்கள்கூட ‘பாடி’ பரிசில் பெற்றவர்கள்தான். சங்கப்பாடல்கள் முழுக்க கவிஞர்களைப் பாடகர்களாகவே சொல்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை அப்படித்தான். நம் சமூகத்தில் கவிஞர்களின் இடம் என்பது அரசர்களையும், தெய்வத்தையும் புகழ்பவன் என்பதுதான். அது பழைய இனக்குழுக்களில் உள்ள குலப்பாடகனின் இன்னொரு வடிவம் அன்றி வேறல்ல. இன்றும்கூட குமரிமாவட்டத்திலும், கொங்கு வட்டாரத்திலும் குலப்பாடகர்கள் உள்ளனர். அவர்கள் குலங்களைப் புகழவேண்டியவர்கள். அதாவது ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ மரபு.

நம் குலப்பாடககளுடைய சமூக அந்தஸ்து என்பது இசைக்கலைஞர்களுக்குச் சமானமானது. நாம் இசைக்கலைஞர்களை எப்படி நடத்தினோம்? திருமணங்களில் வந்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு நாதஸ்வரக் கலைஞர்கள் சந்தனம் பூசிவிடவேண்டும் என ஒரு வழக்கம் இருந்தது. அதை எதிர்த்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. இசைக்கலைஞர் சபையில் அமர்ந்து பாடுவதையே பதினெட்டாம் நூற்றாண்டுவரை நாம் அனுமதித்ததில்லை.  இலக்கியம், கலை பற்றி இன்றும் நம் மனதில் நீடிக்கும் பிம்பம் என்பது அந்த வாய்மொழிக் கலாச்சாரத்தில் இருந்து வந்தடைந்தது. நமக்குப் பிடித்ததைச் சொல்லி நம்மை மகிழ்விப்பவனே கலைஞன், கவிஞன் என நாம் நினைக்கிறோம். நமது பேச்சாளர்கள், கவியரங்கக் கவிஞர்கள் அந்த மனநிலைக்கு ஒத்துப்போகிறார்கள். ஆகவே அவர்களைக் கொண்டாடுகிறோம்.

எழுத்துப்பண்பாட்டில் வேரூன்றியது கிரேக்கக் கலாச்சாரம். வாய்மொழிப் பண்பாட்டில் இருந்து முளைத்த கிறிஸ்தவம் அங்கே சென்றபோது அதுவும் தன்னை எழுத்துப்பண்பாட்டுக்குள் செலுத்திக்கொண்டது. தொடர்ச்சியாக அந்த எழுத்துப் பண்பாட்டின் பரிணாமத்தை அங்கே பார்க்கலாம். அதன் இயல்புகள் என சிலவற்றை வரையறை செய்யலாம்.

எல்லாவற்றையுமே எழுதி வைத்துக்கொள்வது. வரலாறு, அறிவியல், இலக்கியம் முதல் அன்றாடச்செய்திகள் வரை.எழுதப்பட்டது தூய்மையானது, மாறாதது, அழியாதது என்னும் நம்பிக்கை. எழுத்தை தெய்வீகமாகக் கருதுதல். ஆகவே எழுதப்பட்டவற்றில் தொடர்ச்சியாகப் பிழைகளைக் களைந்துகொண்டே இருத்தல்.சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துப் பண்பாட்டுடன் தொடர்பு இருத்தல். அவர்கள் நேரடியாக எழுதவோ படிக்கவோ செய்யவில்லை என்றாலும் புத்தகத்துடன் தொடர்பு இருந்துகொண்டே இருத்தல்.மொத்தச் சமூகத்திற்கும் எழுத்து வாசிப்பு என்னும் செயல்பாட்டின்மேல் மதிப்பு உருவாகியிருத்தல்.

இந்த எழுத்து மரபை கண்கூடாக நாம் பார்ப்பது கிரேக்கச் சிலைகளிலும் கிறிஸ்தவச் சிலைகளிலும். குறிப்பாக ரோமில் எங்கு பார்த்தாலும் தேவதைகளும் புனிதர்களும் நூலையோ, ஏட்டுச்சுருளையோ ஏந்தி நின்றிருக்கிறார்கள். கைகளால் நூலை சுட்டிக்காட்டுகிறார்கள். ‘இது எழுதப்பட்டுள்ளது’ என்ற அறிவுறுத்தல் எங்கும் தெரிந்துகொண்டே இருக்கிறது. அதுவே அது அதிகாரபூர்வமானது என்பதற்கான ஆதாரம். அந்த மனநிலையே எழுத்துவடிவப் பண்பாட்டின் அடிப்படையானது.

எழுத்துவடிவப் பண்பாடு கொண்ட ஐரோப்பாதான் ‘நவீன எழுத்தாளன், சிந்தனையாளன், கவிஞன், கலைஞன்’ என்னும் இன்றைய அடையாளத்தை உருவாக்கியது. இந்த அடையாளத்திற்கும் நம் மரபில் உள்ள கவிஞன், கலைஞன் என்னும் அடையாளங்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதை தெளிவாக வரையறை செய்துகொள்ளாமல் நாம் பேசவே முடியாது.

நம் மரபில் கவிஞர்கள், கலைஞர்களுக்கு இரண்டு வகை அடையாளங்கள்தான். மிக அரிதாகச் சிலர் தெய்வீக அடையாளம் அடைகிறார்கள். எஞ்சியோர் வெறுமே மகிழ்விப்போர், புகழ்வோர் ஆக நீடிக்கிறார்கள். குலப்பாடகர்கள், பூசாரிகள் என இரண்டு அடையாளங்கள் வாய்மொழி மரபில் உண்டு. அந்த அடையாளங்களின் மறுவடிவங்கள்தான் இவை இரண்டும்.

பூசாரி தெய்வத்துடன் நேரடியாகத் தொடர்புடையவன், தெய்வமே அவன் வழியாகப் பேசுகிறது, அவன் தெய்வீகமானவன். கவிஞர்களிலும் கலைஞர்களிலும் சிலர் அந்த அடையாளத்தை அடைகிறார்கள். திருவள்ளுவர் அல்லது சேக்கிழார் உதாரணம். எஞ்சியோர் புகழ்பாடிகள் மட்டுமே. தெய்வத்தன்மையை அடைபவர்கள் அதை பெரும்பாலும் மத அடையாளம் வழியாகவே அடைகிறார்கள்.  இன்றும் இந்த பேதம் உள்ளது. நம் பேச்சாளர்களில் புலவர் கீரனோ, சுகிசிவமோ புகழ்பாடிகள், பாணர்கள் மட்டும்தான். ஞானியார் சுவாமிகளோ, மறைமலையடிகளோ பூசாரிகள், தெய்வீகக்குரல் கொண்டவர்கள்.

ஐரோப்பிய மரபு கிரேக்க காலகட்டத்திலேயே ‘தத்துவஞானி’ என்னும் உருவகத்தை அடைந்துவிட்டது. தெய்வத்தன்மை ஏதும் ஏற்றப்படாமல், தன் சிந்தனையின் ஆற்றலாலேயே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துபவன் அவன். தொடர்ந்து வந்த கிறிஸ்தவ மரபில் கிறிஸ்தவத்தின் எல்லைக்குள் மட்டுமே தத்துவஞானிகளும் கலைஞர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் அந்த மதக்கட்டுப்பாடு உடையத் தொடங்கியது. சுதந்திரமான தத்துவசிந்தனையாளன், எழுத்தாளன், கலைஞன் என்னும் ஆளுமை உருவகங்கள் உருவாகி வந்தன.

இந்த ஆளுமைகளை உருவகம் செய்வது என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக ஐரோப்பாவில் நிகழ்ந்த ஓர் அறிவுச் செயல்பாடு. ரஸ்கின் எழுதிய Modern Painters போன்ற நூல்கள், பாஸ்வெல் எழுதிய Life of Samuel Johnson போன்ற வாழ்க்கை வரலாறுகள், எழுத்தாளனை கதைநாயகனாகக் கொண்ட ஏராளமான தொடக்ககால நாவல்கள் என அந்த உருவகத்தை நிறுவியவை பலநூறு நூல்கள்தான்.

அந்த அறிவியக்கம் எழுத்தாளன் என்பவன் தனித்தன்மை கொண்ட ஆளுமை என்றும், அவன் ஒருவகையான சமூக அன்னியன் என்றும், அவனுடைய இயல்பு சமூகத்துடன் ஒத்துப்போவது அல்ல சமூகத்துடன் முரண்படுவதுதான் என்றும், அவனுடைய மீறல்களும் கலகங்களுமே அவனை எழுதச்செய்கின்றன என்றும் நிறுவியது. சமூகத்திற்குப் பிடித்ததைச் சொல்பவன் அல்ல எழுத்தாளன், சமூகத்தை விமர்சிப்பவன் என்று நிலைநாட்டியது. எழுத்தாளனும் கலைஞனும் தத்துவஞானியும் சமூகத்தின் வழிகாட்டிகளே ஒழிய, சமூகத்தின் சார்பாக பேசும் பிரதிநிதிகள் அல்ல என்று விளக்கியது. அரசியல்வாதிகளோ ,அரசர்களோ ,மதகுருக்களோ அல்ல; உண்மையில் சமூகத்தின் சிந்தனையை உருவாக்குபவர்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களுமே என நிலைநாட்டியது.

எழுத்தாளன் , சிந்தனையாளன், கலைஞன் பற்றிய ஐரோப்பிய உருவகத்தை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம். ‘எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் சமூகத்திற்கு பிடித்தமானவர்களாக நடந்துகொள்ள வேண்டியதில்லை, சமூகம்தான் அவர்களைக் கவனித்து அவர்களின் சிந்தனைகளைப் பரிசீலித்து அவர்களை தொடர்ந்து செல்ல முயலவேண்டும். அவர்கள் சமூகத்திற்கு ‘சேவை’ செய்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் போக்கில் தங்கள் கலையையும் சிந்தனையையும் முன்னெடுப்பவர்கள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளால், எழுத்துக்களால் சமூகத்திற்கு உடனடியாக என்ன பயன் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு சிந்தனைக்கான வாய்ப்பு இருந்தால் ஒரு சிந்தனையாளன் அதை நிகழ்த்துவான். சில சமயம் அச்சிந்தனை அழிவை அளிப்பதாகக்கூட இருக்கலாம், அதை இன்னொரு சிந்தனை எதிர்த்து வெல்லும். ஆனால் சிந்திப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஒரு சமூகம் அதன் எழுத்தாளர்கள் வழியாக பரிசீலிக்கவேண்டும். Stem cell போல ஒரு சமூகத்தின் வளரும் விளிம்புதான் எழுத்தாளர்களும் கலைஞர்களும். அவர்களை சமூகம் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அவர்களை தங்கள் அப்போதைய தேவைகளை நிறைவேற்றவேண்டியவர்கள் என எண்ணக்கூடாது’ 

சமூகம் எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் தத்துவஞானிக்கும் சிந்திக்கவும், செயலாற்றவும் தேவையான சுதந்திரச் சூழலை அளிக்கவேண்டும். அவனை மதிக்கவும், சிந்தனையாளனாகவும் எழுத்தாளனாகவும் மட்டுமே அவன் தன் வாழ்வௌ அமைத்துக் கொள்வதற்கான அடிப்படைகளை அளிக்கவும் வேண்டும். இதெல்லாம் இருநூறாண்டுகளில் ஐரோப்பாவில் மெல்லமெல்ல நிறுவப்பட்ட மனநிலைகள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அங்கே ஏற்கனவே இருந்த எழுத்துப் பண்பாடு.

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எழுத்தாளன் வசைபாடப்படுவதைப் பார்த்தாலே நம் சூழலில் இன்னமும் இந்தக் கருத்துக்கள் வந்தடையவில்லை என்பது தெரியும். ‘எழுத்தாளனால் சமூகத்திற்கு என்ன பயன்?’ ‘எழுத்தாளன் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும்’ ‘மக்களுக்குப் பயனுள்ளவற்றை எழுதவேண்டும்’ ‘எழுத்தாளனை சமூகம் கட்டுப்படுத்தவேண்டும்’ ‘எழுத்தாளன் வேலைசெய்து பிழைக்கவேண்டியதுதானே’ ‘எழுதி கல்லா கட்டுகிறான்’ என்றெல்லாம்தான் இங்கே  குரல்கள் எழுகின்றன. இங்கே எழுத்தாளன் சமூகத்தைப் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என எண்ணுகிறார்கள். தங்கள் சாதி, மதம், அரசியல்தலைமை, தங்களுக்குப் பிடித்த நடிகன் ஆகிய எதை ஓர் எழுத்தாளன் விமர்சனம் செய்தாலும் கொதிக்கிறார்கள். எழுத்தாளன் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்து, தாங்கள் நம்புவதையே தானும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே கல்லூரிக்கல்வி பெற்றவர்கள்கூட எழுத்தாளனுக்கு தங்களைவிட கூடுதலாக ஏதேனும் தெரிந்திருக்கக்கூடும் என நினைப்பதில்லை. அவன் ‘கதை எழுதுறவன்’ அவ்வளவுதான். எழுத்தாளனை திருத்தியமைக்க, அவனுக்கு வழிகாட்ட, அவனுக்கு அறிவுரை சொல்ல அத்தனைபேருமே தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாமே பழைய வாய்மொழி மரபைச் சேர்ந்த மனநிலையில் இருந்து எழுபவை. அதாவது தொன்மையான பழங்குடி மனநிலையின் வெளிப்பாடுகள்.

ஆனால் பழைய வாய்மொழி மரபுக்கு, பழங்குடி மரபுக்கு, சில நம்பிக்கைகளும் சில அறங்களும் உண்டு. அவையும் இவர்களிடம் இல்லை. பழைய வாய்மொழி மரபு ‘சொல்வெளிப்பாடு’ கொண்டவனை, அதாவது ‘சரஸ்வதி கடாட்சம் கொண்டவனை’, அதாவது கலைஞனையும் எழுத்தாளனையும் அவமதிக்காது. அவன் ஏதாவது வசையாகவோ சாபமாகவோ சொல்லிவிட்டால் அது தீங்கு என நம்பும். ஒருபோதும் கலைஞனையும் எழுத்தாளனையும் கீழ்த்தரமாக வசைபாடாது. இன்று சமூக வலைத்தளங்களுக்கு வந்து எழுத்தாளனை வசைபாடும் கும்பலின் பெற்றோர் எவரும் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்கள் கூசாமல் செய்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாய்மொழிப் பண்பாட்டை இழந்துவிட்டவர்கள், எழுத்துவழிப் பண்பாட்டை கற்றுக்கொள்ளாதவர்கள்.

நான் மீண்டும் சொல்வது இதையே. நம் குடும்பங்களில், நம் சமூகச் சூழலில் இன்றும் நீடிப்பது நமது தொன்மையான வாய்மொழிப் பண்பாட்டின் மனநிலை மட்டுமே. அது எழுத்துக்கு எதிரானது. நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்து எதையாவது வாசித்தால் முதல் எதிர்ப்பு உங்கள் பெற்றோரிடமிருந்துதான் வரும், காரணம் இதுதான். ‘நமக்கு எதுக்கு அதெல்லாம், நாம நம்ம பொழைப்பைப் பார்ப்போம்’ என்னும் அணுகுமுறை அவருகளுடையது. உங்கள் நண்பர்கள் வாசிப்பை கேலி செய்வார்கள், ‘ஆமா பெரிய ஷேக்ஸ்பியர்’ என்பார்கள். ஆனால் மணிக்கணக்கில் காணொளிகளில் ஊறிக்கிடப்பார்கள். அதுதான் நம் வாய்மொழிப்பண்பாட்டு உளநிலை

நாம் அதில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். எழுத்துப்பண்பாட்டை, அதன் மனநிலைகளை நோக்கிச் சென்றே ஆகவேண்டும். வாய்மொழிப் பண்பாடு இலக்கியத்தை மரபான தெய்வீக வெளிப்பாடு அல்லது புகழ்பாடல் மரபு என்று மட்டுமே பார்ப்பது. நவீன எழுத்துப் பண்பாடு என்பது இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் வளரும் விளிம்பு என்று பார்ப்பது, அதற்கான சுதந்திரத்தை அளிப்பது. அந்த மனநிலை உருவானாலொழிய நம்மால் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை மதிக்க முடியாது. அந்த மதிப்பு இன்று தமிழில் அறவே இல்லை என்பதனால்தான் இங்கே வாசிப்பு என்பது இத்தனை குறைவாக இருக்கிறது. வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்மை பற்றிய குற்றவுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ இல்லை, மாறாக பெருமை உள்ளது. வாசிப்புக்கு எதிரான மனநிலை நம் சமூகம் முழுக்க உள்ளது.

நாம் நம் குழந்தைகளுக்கும் அந்த வாய்மொழிப்பண்பாட்டின் எழுத்து எதிர்ப்பு மனநிலையை புகுத்துகிறோம். நான் ஆச்சரியத்துடன் கவனிப்பது ஒன்று உண்டு, எழுத்துப் பண்பாட்டின் உச்சமான அமெரிக்காவில் குடியேறிய நம்மவர் அங்கேயும் இதே எழுத்துக்கு எதிரான மனநிலையுடன் நீடிக்கிறார்கள், அங்கும் வாய்மொழி மரபினரையே விருந்தினராக அழைத்துக் கொண்டாடுகிறார்கள், எழுத்தாளர்களை வசைபாடுகிறார்கள், பிள்ளைகளுக்கு எழுத்துப்பண்பாட்டை அறிமுகம் செய்ய மறுக்கிறார்கள். இந்த மனநிலையை நாம் கடந்தே ஆகவேண்டும்.

இந்தக் கருத்துக்களைச் சொல்லும்போது இவை வாய்மொழி மனநிலையில் ஊறிவந்தவர்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் எனக்குத் தெரியும். ஓர் எழுத்தாளன் தங்களை, தங்கள் பண்பாட்டையும் சமூகத்தையும் புகழ மறுக்கிறான் என்றே நினைத்துச் சீற்றம் கொள்வார்கள், வசைபாடுவார்கள்.தங்கள் மரபின் சில பெயர்களைச் சொல்லி தாங்கள் ஏற்கனவே பண்பாட்டின் உச்சத்தில் இருப்பதாக கூச்சலிடுவார்கள். பண்பாட்டின் அடிப்படை அறிந்தவன் எழுத்தாளனை வசைபாட மாட்டான் என்றுகூட அவர்களிடம் சொல்ல முடியாது. நான் இதை எழுதுவது இன்று கொஞ்சம் எழுத்துமரபுக்குள் வந்துவிட்ட, கொஞ்சம் ஐரோப்பிய எழுத்துப் பண்பாட்டின் சாயலை அடைந்துவிட்ட சிறுபான்மையினரிடம்தான். இங்கே என்ன நிகழ்கிறது என்று அவர்கள் அறிந்துகொள்ளவும், இங்கிருந்து முன்னே செல்லவேண்டிய திசையை அறியவும் அவர்களுக்கு இவ்விவாதம் உதவலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.