தலாதலம்!
ஏழாம் உலகம் நாவலின் கன்னட மொழியாக்கமான தலாதலம் சென்ற 8 ஜூன் 2025 அன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது. நூல் தயாராகிவிட்டது என்று பதிப்பாளர் சொன்னார். ஆனால் அரங்கில் வெளியிடும் திட்டமேதும் இருக்கவில்லை. ரம்யா பதிப்பித்த விந்தியாவின் கதைகள் அடங்கிய விந்தியா என்னும் தீற்றல் நூல் அரங்கில் வெளியிடவிருந்தது. அவ்வாறென்றால் இதையும் வெளியிடலாம் என முடிவுசெய்யப்பட்டது. விஷ்ணுபுரம் அரங்கில் என் நூல் ஏதும் வெளியானதில்லை.
நூலை குப்பம் பல்கலையின் தமிழ் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான முனைவர் பத்மநாபன் வெளியிட கவிஞர் றாம் சந்தோஷ் பெற்றுக்கொண்டார். அரங்கில் வசுதேந்திராவும் மொழிபெயர்ப்பாளர் சாந்தி அப்பண்ணாவும் இருந்தனர்.

சாந்தி கே அப்பண்ணா கன்னடத்தின் புதிய எழுத்தாளர்களில் ஒருவர். யுவபுரஸ்கார் விருது பெற்றவர். பெரும்பாலும் எல்லா இலக்கியத்தொகுதிகளிலும் அவருடைய கதைகள் இடம்பெற்றுள்ளன. சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் சாந்தி தமிழ் கற்றார். ஏழாம் உலகம் நாவலை மொழியாக்கவேண்டும் என ஆர்வம் கொண்டு அனுமதி கோரினார். அவருடைய மொழியாக்கம் மிகச்சிறப்பானதாக உள்ளது என்றார்கள். வசுதேந்திரா ‘அது தனக்கான தனி நடை கொண்ட ஒரு இலக்கியப் படைப்பாக இப்போது உள்ளது’ என்றார்.
கன்னட விமர்சகரான தத்தாத்ரேய ‘மானுட இயல்புகளின் அடிப்படைகளை விளக்கும் நாவல் இது. இந்நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்முடனேயே இருந்துகொண்டிருப்பவர்கள் போலவே தோன்றினாலும் இந்த ஆழத்து உலகில் அவர்களின் உணர்ச்சிகளின் களம் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. ஒளிக்கும் இருட்டுக்கும் நடுவே வேறுபாடு ஏதுமில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேகூட. இந்த மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது? மிகக்கூர்மையான சித்தரிப்பும் வலுவான வண்ணவேறுபாடுகளும் கொண்டது இந்நாவல்’ என்கிறார்.
ஏழாம் உலகம் நாவலை என் முதல் நாவலாக ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்கான காரணமாக இருந்தது அதன் நேரடியாக தாக்கும் அழகியல்தான். அது மனசாட்சியுடன் கூர்மையாக உரையாடுகிறது. என் எழுத்துக்களுடன் அறிமுகமில்லாத, என் நடையோ மனப்போக்கோ தெரியாத வாசகருக்குக் கூட அது சென்று சேர்ந்துவிடும். அதிலுள்ள தரிசனமும் அழகியலும் பிடிகிடைக்காதவர்களுக்கும் அதன் மனிதாபிமான அம்சம் புரியும்.
அத்துடன் கூடுதலாக இலக்கிய அறிமுகம் உடைய வாசகர் அந்நாவலின் மெய்யியல் தளத்தை மாங்காண்டி சாமி வழியாக வந்தடைய முடியும். சமூகத்தின் மிகக்கீழ்நிலையிலுள்ளவர்களும் மிக முதல்நிலையிலுள்ள ஞானியும் ஒன்றாக இருக்கும் ஒரு சூழல் உணர்த்தும் பண்பாட்டு அம்சம் என்ன என்பதைக் கண்டடைய முடியும். அந்நாவல் பெற்றுவரும் வரவேற்பு அந்தக் கணிப்பு சரியே என உணர்த்துகிறது.
இலக்கியத்தின் அழகியலில் சில அம்சங்கள் ஓர் ஆசிரியரை நுணுக்கமாக நாம் பின் தொடர ஆரம்பித்த பிறகே பிடிகிடைக்கும். உண்மையில் அவைதான் இலக்கியத்தின் மிகச்சாரமான பகுதிகள். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் குறிப்பிட்ட உணவை தொடர்ந்து உண்பவர் அதில் கண்டடையும் சுவை வேறுபாடுகளைப் போல. நாகர்கோயில்காரர்கள் பழம்பொரியில் கண்டடையும் சுவைச்சித்திரங்களை இங்கே வந்திறங்கி , சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஒன்றை வாங்கி வாயில் திணிப்பவர் உணர முடியாது.
ஆகவேதான் சராசரியாக எங்கும் ஒரே சுவை கொண்ட உணவுகளுக்கு மட்டும் உடனடியான ஏற்பு கிடைக்கிறது. வட்டாரத்தன்மை கொண்ட சுவைகளை வெளியே உள்ள ‘ஃபுட்டிகள்’ ஒரே வரியில் ‘ஓவர் ரேட்டட்’ என்று சொல்லிவிடுகிறார்கள். இன்னொன்று ஒரு சுவையை நாம் ஏற்கனவே அறிந்த இன்னொரு சுவையுடன் இணைத்து ‘இதேமாதிரி அது, கொஞ்சம் வேற’ என்று புரிந்துகொள்வது.
இலக்கியத்தில் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சிறுகதைகள் சில அவற்றின் வலுவான கட்டமைப்பால் சட்டென்று வாசகர்களின் ஏற்பைப் பெறும். அவற்றின் மானுடநேயம் நமக்குப் பிடிக்கும். ஆனால் அவருடைய குறுநாவல்கள், நாவல்களுக்குள் செல்ல அவருடைய உலகம் கொஞ்சம் நமக்கு அறிமுகம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு கவனமும், நீடித்த வாசிப்பும் தேவையாகிறது. சிங்கரின் நாவல்களை ‘தட்டையான யதார்த்தங்கள்’ என்று சொல்லும் பல வாசகர்களை நான் கண்டிருக்கிறேன். எனக்கு அவை மகத்தான ஆத்மவாக்குமூலங்கள். இதையே எம்.டி.ராமநாதனின் இசைக்கும் சொல்வார்கள்.
இந்தக் காரணத்தால் எந்த ஒரு இலக்கியமேதையையும் எதிர்மறைப் பிடிவாதம் வழியாக எளிதாக தோற்கடித்துவிடவும் முடியும். மகத்தான ஓர் இலக்கியப்படைப்பு நுட்பம், புதுமை என்னும் இரண்டு அம்சங்கள் கொண்டிருக்கும். எதிர்மறை இறுக்கத்துடன் அணுகும் ஒரு வாசகன் நுட்பத்தை தவறைவிடுவான், புதுமையை புரிந்துகொள்ள மாட்டான். புறக்கணிக்கும் வாசகனிடம் பேசும் ஆற்றல்கொண்ட பெரும்படைப்பு ஏதுமில்லை. ஆகவேதான் எழுத்தாளர்கள் விவாதங்களில் சிக்கி தங்களுக்கு எதிரான மனநிலையை ஈட்டிக்கொள்ளாமலிருக்கிறார்கள். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனக்கு எழுதுவதற்கான உந்துதலே கட்டற்று, கவனமற்று இருக்கையில்தான் கிடைக்கிறது. நான் மறைந்தபின் கோபதாபங்களும் இல்லாமலாகும். அதன்பின் இன்று எதிர்ப்போர் வாசிக்கட்டும்.
நான் எழுதும் நாவல்களில் உள்ள எனக்கான நுட்பங்களை வாசிக்கும் வாசகர்கள் இன்று வெளியாகியுள்ள என் படைப்புகள் வழியாக உருவாகி வருவார்கள் என நினைக்கிறேன். Stories of the true அத்தகைய வாசகர்களை The Abyss நாவலுக்கு உருவாக்கி அளித்தது. அவர்கள் மெல்லத் திரள்வார்கள், அதன்பின்னரே அகச்சிக்கல்களும், எனக்கான குறியீட்டு உலகமும் கொண்ட என் பெரிய நாவல்களுக்கு அவர்களால் வந்துசேர முடியும்.
‘ஜெயமோகன் உண்மைகளை மறைப்பதில்லை, இயற்கையின் அச்சமூட்டும் இயல்பை பச்சையாகச் சொல்கிறார். சமகால இந்தியா பற்றிய நமது புரிதல் ஜெயமோகனின் படைப்புகளை படிக்காமல் முழுமையாவதில்லை’ என்று விவேக் ஷான்பேக் சொல்கிறார்.
ஒரு படைப்பு ஆங்கிலத்தில் வெளிவருவது எத்தனை முக்கியமானது என்பது இப்போது, இத்தனை பிந்தித்தான் எனக்குப் புரிகிறது. சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கமான The Abyss தான் தொடக்கம். அந்நாவலுக்கு வந்த மதிப்புரைகள் வழியாகவே கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என பல மொழிச்சூழல்களுக்கு இந்நூல் அறிமுகமாகியிருக்கிறது. சுசித்ராவுக்கு நான் கடன்பட்டவன்.
தெலுங்கில் அதோலோகா என்ற பேரில் அனில் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் வெளிவந்துள்ளது. அனில்குமார் மொழியாக்கத்தில் சாயா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. என் ஆக்கங்களில் தெலுங்கில் வெளிவரும் இரண்டாவது நூல் இது. ஏற்கனவே அறம் தொகுதி நெம்மிநீலம் என்னும் பெயரில் வெளிவந்து மிகச்சிறந்த வாசிப்பை பெற்றுள்ளது.
The Abyss விரைவில் அமெரிக்காவின் டிரான்ஸிட் பதிப்பகத்தில் இருந்து சர்வதேசப்பதிப்பாக வெளிவரவுள்ளது.இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என நினைக்கிறேன். எல்லா மொழியாக்கங்களும் மிகச்சிறப்பானவை, மூலமொழியில் ஒரு புதிய நடையை உருவாக்கும் அளவுக்கு அபாரமானவை என்கிறார்கள். அது ஒரு நல்லூழ்தான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
