Jeyamohan's Blog, page 87

June 22, 2025

காவியம் – 63

வசிஷ்டிபுத்ர சதகர்ணி- பொயு 2

எப்படி விரைவாக எளிதாக எல்லாம் நிகழ்ந்து தான் முற்றிலும் மாறிவிட்டோம் என்று அவ்வப்போது ராம்சரண் நாயக் தனக்குத்தானே எண்ணி ஆச்சரியப்படுவதுண்டு. சாதாரணப் பேச்சில் கூட “சரியாக ஐந்து வருஷம். அது முடிந்தபோது நான் ஆள் அப்படியே இன்னொருவன்” என்று அவன் சொல்வான். ஆனால் தனியாக அமர்ந்து அந்த நாட்களை யோசித்துப் பார்ப்போம் என்று முயன்றால் அந்த மாற்றம் பல்வேறு நாட்களின் வழியாக அணுவணுவாக நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்தது. பலநூறு சித்திரவதைகள், மனக்கொந்தளிப்புகள், பல மாதங்கள் நீடித்த உச்சகட்டத் துயரம் ஆகியவற்றினூடாகவே அவன் உருமாறியிருந்தான்.

அவனுடன் சிறையில் இருந்த மாதவ் பட்டாச்சார்யா என்கிற முதியவர் சொன்னார். “இரும்பை உருக்கி அடித்து உருமாற்றுவது போல இங்கே மனிதர்களை மாற்ற வேண்டும் என்று இந்த சிறையை திறந்துவைத்த லால்பகதூர் சாஸ்திரி அந்த உரையில் சொன்னார். ஆனால் இங்கே கல்லை உருக்கி உருமாற்றுகிறார்கள். அதற்கு சாதாரண வெப்பம் போதாது. உருமாற்றிய அந்த கல்லை திரும்பி பழைய நிலைக்குக் கொண்டு வரவும் முடியாது. அது உடைந்துவிடும்.”

அது குறுகிய காலம் என்றும், விரைவான காலம் என்றும் ஏன் தோன்றுகிறது என்று ராம்சரண் எண்ணிப்பார்ப்பதுண்டு. அப்போது நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளுமே மிகத்தீவிரமானவை என்பதனால்தான் காலம் அத்தனை வேகமாக பாய்ந்தோடியிருக்கிறது. அவற்றில் பெரும்பகுதியை அவன் மறக்க நினைத்தான். மறந்தாலொழிய அவன் நிம்மதியாக தூங்க முடியாது என்று தெரிந்திருந்தான். மறந்திருந்தான், ஆனால் முழுக்க மறக்கவுமில்லை. அதையும் அவனிடம் பட்டாச்சார்யா சொன்னார்.

“எல்லாவற்றையும் நாம் மறந்துவிடுவோம். மறந்தால் மட்டும்தான் நம்மால் சிரிக்க முடியும். சிரிக்க முடிபவன் மட்டும்தான் உயிர் வாழவும் முடியும். ஆனால் நாம் மறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை மறக்கமாட்டோம். எதை மறந்தால் மட்டும் நாம் உயிரோடு இருப்போமோ அதை நம் உயிர் தானாகவே மறந்துவிடும். இலைகள் தங்களால் தாங்க முடியாத எடையை உடனே கீழே போட்டுவிடுவது போல.”

அவன் சிறை சென்றதுமே பிற கைதிகளால் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டான். உடலே ஒரு கழிவறைக் கோப்பை போல ஆகிவிட்டதாக உணர்ந்தான். ஒருமுறை தன் வாயை அடுப்பில் எரியும் கொள்ளிக்கட்டையால் பொசுக்கிக்கொண்டான். பலநாட்கள் அந்த புண்ணுடன் வாழ்ந்தான். அருவருப்பும் தன்னிரக்கமும் கலந்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற தீவிரம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

ஒவ்வொரு பொருளை பார்த்தாலும் இதைக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடியுமா என்று மட்டுமே அவன் எண்ணம் ஓடியது. கூரிய பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டான். உணவுக்கு பயன்படுத்தும் அலுமனியத்தட்டை மடித்து, அதை உடைத்து கிழித்து, ஒரு கத்தி செய்து கொண்டான். அந்தக்கத்தியைக் கொண்டு தன் கழுத்தை தானே அறுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்குரிய தனிமை அவனுக்கு வாய்க்கவில்லை. அவன் தூங்கும் அறையில் பன்னிரண்டு பேர் இருந்தார்கள். நெருக்கடியடித்துக் கொண்டுதான் தூங்கவேண்டும். கழிப்பறையில் கூட வரிசையாக இருபது முப்பது பேர் ஒரு நீண்ட கான்கிரீட் வராந்தாவில் அமர்ந்து கீழே செல்லும் ஓடையில் மலம் கழிக்க வேண்டும்.

அவனிடம் பட்டாச்சார்யா சொன்னார், “இங்கே வருபவர்கள் எல்லாருமே முதல் ஒரு வருடம் எப்படியாவது தப்பிச்செல்லவேண்டும் என்றும், அல்லது விடுதலை வாங்கிவிடவேண்டும் என்றும், இரண்டும் முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைப்பார்கள். இங்கே வரும் புதியவனை இங்குள்ள அத்தனை பேருமே மலக்குழியாக பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அது தொடர்ந்து நிகழும்போது ஒரு கட்டத்தில் அவன் அதற்குப் பழகிவிடுவான். அதை எப்படிச் சமாளிப்பது என்று கற்றுக்கொள்வான். அதன் பின் இங்கே வாழ ஆரம்பிப்பான். வாழ்வது எங்கிருந்தாலும் நுணுக்கமான சிறிய இன்பங்களும் கொண்டாட்டங்களும் கொண்டதுதான்.”

பட்டாச்சாரியா சொன்னார். “இங்கே இந்த பாலியல் வன்முறையில் இருந்து தப்ப இங்குள்ள வலிமையான ஒருவருடைய மனைவி போல ஆகிவிடுவது ஒரு வழி. சாதி சார்ந்த சின்ன குழுக்களில் இணைந்துகொள்வது இன்னொரு வழி. அப்படி நிறைய குழுக்கள் இங்கே இருக்கின்றன. சில குழுக்கள் வட்டாரம் சார்ந்தவை. சில குழுக்கள் குறிப்பிட்ட தொழில் சார்ந்தவை. அப்படி ஒரு குழுவில் சேர்ந்தால் அந்தப் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க முடியும் என்று அர்த்தமல்ல. அதன் எண்ணிக்கையை மிகவும் குறைத்துவிடமுடியும், அவ்வளவுதான். அதிலிருந்து முழுமையாகத் தப்புவதற்கு ஒரே வழி நீயும் ஒரு வலிமையானவனாக ஆவதுதான். பிறரை வதைப்பவன் இங்கே வதைபடுவதில்லை.”

அவன் வந்த முதல் நாட்களில் ஒவ்வொருவரிடமும் கெஞ்சினான். ஆனால் அங்கு நிகழும் எதைப்பற்றியும் முறையிடக்கூடாது என்று சிறையில் ஒரு நெறி இருந்தது. சிறை வார்டன்களிடம் முறையிட்டால் பதினைந்து நிமிடங்களுக்குள் அவர்கள் யார் அவனை கொடுமை செய்தார்களோ அவனிடமே சொல்லிவிடுவார்கள். அதைத் தொடர்ந்து அடியும் உதையும் விழும்.

ரத்த காயம் இல்லாமல் அடிப்பதென்பது சிறையில் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாக இருந்தது. துணியில் மணலை இறுக்கக்கட்டி அதையே ஆயுதமாகக் கொள்வார்கள். ஒருவன் வாயைப் பொத்திப் பிடித்துக்கொள்ள, இன்னொருவன் அந்த பொதியால் சுழற்றிச் சுழற்றி அடிப்பான். அடி விழும்போது ஒரு வகையான கடும் உளைச்சல் தான் ஏற்படும். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் தசைகள் ஒவ்வொரு கணமும் அதே வலியை அடைந்துகொண்டிருக்கும்.எலும்புகள் எதுவும் உடையாது. ஆனால் தசைகள் விரிசலிட்டு வீங்கி, பின்னர் வீக்கம் வடிந்து, தோலுரிந்து இயல்பான நிலையை அடைவது வரை அந்த வலி நீடிக்கும். அதற்கு சிறையில் எந்த மருந்தும் தரமாட்டார்கள். அந்த வலியுடன், இரவு முழுக்க தூங்க முடியாமல், உடம்பை அசைக்க முடியாமல், அரற்றியபடியே படுத்திருந்த நாட்கள் பல உண்டு அவனுக்கு.

அலுமினியப் பாத்திரத்தைக் கொண்டு அவன் தன் முதல் கத்தியை செய்தபோது, அவன் சாப்பிட்டு கை கழுவப்போன நேரத்தில், சிறையில் புகழ் பெற்ற முரடனான சந்துலால் சட்டென்று அவன் தோளைப் பிடித்தான். அவன் திடுக்கிட்டுத் திரும்புவதற்குள் அவன் இரு கைகளையும் இன்னொரு கையால் பிடித்து முறுக்கியபடி, இன்னொரு கையால் வாயைப் பொத்திப்பிடித்துகொண்டு அருகிலிருந்த சிறிய மறைவொன்றுக்கு இட்டுச் சென்றான். ராம்சரண் திமிறி இடது கையை விடுவித்துக்கொண்டு, அதே வீச்சில் அவனை நோக்கி சுழற்றினான். அதை ஏன் செய்தோம் ,எப்படி அது நிகழ்ந்தது என்பதெல்லாம் எப்போதுமே அவனால் யோசிக்க முடிந்ததில்லை.

அவன் அப்பா ஒருமுறை அவனிடம் சொன்னார் ”நம்முடன் நிழல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நிழல்கள் சொல்வதைத் தான் நாம் செய்கிறோம். நம்முடன் இருக்கும் நிழல் என்ன என்பது எனக்குத் தெரியாது. அது சாந்தமான நிழலாக இருக்கும். உக்கிரமான நிழலாகவும் இருக்கும். நாம் அதைத் தடுக்கவும் முடியாது. நாம் செய்வதெல்லாம் அது செய்வதுதான். நம்மிடமிருந்து நம்மை அது எடுத்துக்கொள்ளக்கூடிய தருணங்கள் உண்டு.”

தன்னை அப்போது உக்கிரமான வெறுப்பும் துணிவும் கொண்ட ஒரு நிழல் கையில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அவனுடைய இடதுகையில் இருந்த அலுமினியக் கத்தி வீச்சு மிகச்சரியாக சந்துலாலின் கழுத்து நரம்பை வெட்டியது. அவன் கழுத்தைப் பொத்தியபடி வாய் திறந்து ஏதோ சொல்ல முயன்று அப்படியே அமர்ந்து பக்கவாட்டில் சரிந்தான். விரலிடுக்குகளை மீறி கழுத்திலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்து அப்பகுதி முழுக்க பரவியது. அவன் பைஜாமாவும் சட்டையும் முழுக்க ரத்தத்தால் நனைந்தது.

தரையில் ரத்தம் ஒரு மெல்லிய துணியை சுருக்கம் நீக்கிப்பரப்புவது போல விரிவதை, ரத்தப்படலத்தின் விளிம்பு பாசிமணி போல ஒரு மினுக்கத்துடன் சுருண்டு தரையில் பரவுவதை ராம்சரண் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த தருணத்தில் அவன் அடைந்த விடுதலையைப் போன்ற ஒன்றை பிறகெப்போதுமே உணர்ந்ததில்லை. அவன் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த உணவுக்கூடத்தில் இருந்த அத்தனை பேருமே திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

அவன் கையிலிருந்த கத்தியை தூக்கி மற்ற அத்தனை பேரிடமும் காட்டினான். பிறகு அதை சந்துலாலின் உடல்மேலேயே வீசி, துப்பிவிட்டு சென்று கைகளை கழுவத் தொடங்கினான். தன்னை கூட்டிக்கொண்டு சென்று தனியாகச் சிறையில் அடைப்பார்கள், தூக்கிலிட்டுவிடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தான். ஆனால் ஒன்றும் நிகழவில்லை. அவனை பன்னிரண்டு நாட்கள் தனியாக வைத்திருந்தார்கள். அதன்பிறகு விட்டுவிட்டார்கள். சந்துலால் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டதாக எழுதப்பட்டது.

மீண்டும் பழைய அறைக்கே வந்தபோது ஒவ்வொன்றும் மாறியிருந்தன. அவனைப் பார்த்த ஒவ்வொருவரும் ஒருகணம் கழித்து தன் கண்களை விலக்கிக்கொண்டார்கள். அவன் பன்னிரண்டு பேர் தங்கும் அறையில் தனியாக இருந்தான். எல்லா அறைகளிலும் தனியாகவே இருந்தான். அவனிடம் அதுவரை பேசிக்கொண்டிருந்த பட்டாச்சாரியா பேச்சை நிறுத்திவிட்டார்.

ஆனால் மூன்றாவது நாள் அவனிடம் கேசவ் குமார் யாதவ் வந்து பேசினான். ”வா, உன்னை தலைவர் அழைக்கிறார்” என்றான்.

“தலைவர் யார்?” என்று ராம்சரண் கேட்டான்.

“பிரகாஷ் யாதவ். அவர் இல்லையென்றால் நீ இந்நேரம் தூக்கில் தொங்கியிருப்பாய். கொடுக்க வேண்டிய பணத்தையெல்லாம் கொடுத்து அவர்தான் சந்துலாலின் கொலையை தற்கொலையாக மாற்றினார்” என்றான்.

“அப்படியா?” என்று ராம்சரண் கேட்டான்.

“வா, உன்னுடைய நாட்கள் மாறிவிட்டன. இனி யாரும் உன்னைத் தொட முடியாது” என்றான் குமார் யாதவ்.

பிரகாஷ் யாதவ் அதே சிறையில் ஒரு தனி அறையில் விருந்தினரைப்போல தங்கியிருந்தான். அவன் அறைக்குள்ளேயே டெலபோன் பேசுவதற்கான வசதி இருந்தது. இரண்டு மின்விசிறிகள் இருந்தன. தரையில் வெண்ணிறமான மெத்தையும், அதில் செக்கச் சிவந்த கம்பளியும் விரிக்கப்பட்டிருந்தன. அவனுக்கான உணவையும் மதுவையும் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டன் வெளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தான்.

ராம்சரணை தன் எதிரில் மெத்தையில் அமர வைத்து பிரகாஷ் யாதவ் அரைப்புன்னகையுடன் ”உன்னைப் போன்றவர்கள் தான் எனக்குத் தேவை” என்றான். “இங்கே பெரும்பாலானவர்கள் கோழைகள். அவர்களுக்கு எதைப் பார்த்தாலும் பயம்தான். அவர்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் இழப்பதற்கு என்னென்னவோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கொஞ்சம் தோரணை காட்டுவார்கள், சந்துலாலைப்போல. பயந்தவர்களை மிரட்டி வாழ்வார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பம் வந்தால் அவர்களால் எதையுமே செய்ய முடியாது.”

“நான் இருபது ஆண்டுகளாக இதில் இருக்கிறேன். ஒரு கொலையோ வெட்டோ அவ்வளவு சாதாரணமானதல்ல. அதை ஒருவனுக்கு சொல்லிக் கொடுக்கமுடியாது. அந்தத் தருணத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு மனிதர்களைத் தடுக்கிறது. அதை தாண்டிச் சென்று அதை செய்பவர்கள் அப்படியே இயல்பாகவே பிறந்து வருகிறார்கள்” என்றான் பிரகாஷ்.

“நாயைத் தேர்ந்தெடுக்கும்போது இதைத்தான் எங்கள் அப்பா செய்வார். குட்டி போட்டு பெட்டை நாய் படுத்திருக்கும். மனிதர்கள் வந்தவுடன் தன் குட்டிகளை அவர்கள் எடுத்துக்கொண்டு போகட்டும் என்று சொல்லி அது விலகி நிற்கும். மனிதக் காலடியை பார்த்ததுமே எல்லா நாய்க்குட்டிகளும்  பயந்துபோய் மறைந்து கொள்ளும். ஒரு குட்டி மட்டும் முறைத்தபடி கவனமாக காலெடுத்து வைத்து மூக்கைத் தூக்கி மணம் பிடித்தபடி நிற்கும். மெல்ல உறுமும். கையால் சொடக்குப் போட்டால் மற்ற நாய்கள் விதிர்த்து நடுங்கும். ஆனால் இது குரைத்தபடி முன்னால் வரும். அப்பா அந்த நாயை மட்டும் தூக்கிக்கொண்டு வருவார். அது ஆணோ பெண்ணோ அந்த நாயைத்தான் அவர் வளர்ப்பார்.”

பிரகாஷ் சொன்னான். “எங்களுக்குப் பெரிய பண்ணை இருந்தது. அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தன. எல்லா நாய்களும் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவைதான். எங்கள் பண்ணைக்குள் நாங்கள் விரும்பாத மனிதர்களோ,பெருச்சாளிகளோ, முயல்களோ கூட வரமுடியாது. நான் மனிதர்களை அப்படித்தான் தேர்ந்தெடுக்கிறேன்.”

“எதற்கு?” என்று அவன் கேட்டான்.

பிரகாஷ் யாதவ் சிரித்தபடி “உனக்கு இன்னொரு வழி கிடையாது. இந்த ஜெயிலில் நீ இருந்தாயென்றால் இப்படியே உன் முழு வாழ்க்கையும் இதற்குள் செலவிட வேண்டியிருக்கும். உனக்காக யாரும் வெளியே வழக்கை நடத்தவில்லை என்று கேள்விப்பட்டேன். நீ இப்போது விசாரணைக் கைதியாகத்தான் இருக்கிறாய். உன்னுடைய ஃபைல்களைத் தூக்கி அப்படியே வைத்துவிட்டார்கள். பத்து ஆண்டோ, பதினைந்து ஆண்டோ யாருமே அதை திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஒரு நல்ல வக்கீல் வைத்து தொடர்ந்து நீதிமன்றத்தில் முயற்சி செய்தால்தான் அந்த வழக்கையே கையில் எடுப்பார்கள். அதன் பிறகும் பல ஆண்டுகள் ஆகும். இங்கிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக் கைதிகள்தான். சந்துலால் கூட விசாரணைக்கைதிதான்” என்றான்.

அவன் அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருந்தான். அவனுடைய அப்பா அவன் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்ட அன்றே செத்துவிட்டார். அவனுடைய அம்மாவும் தங்கையும் அவனுடைய வீட்டுக்குத்தான் சென்றார்கள். ஆனால் அவனுடைய பங்காளிகள் அவர்களுடைய பொருட்களை திருப்பி கொடுத்துவிட்டார்கள். டாக்கூர் வீட்டிலிருந்து மாடும் திரும்பி வந்துவிட்டிருந்தது. அம்மாவின் அண்ணா பக்கத்து கிராமத்திலிருந்து வந்து கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு சென்றார். அதில் கோதுமை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு அதில் சப்பாத்தியும் வெங்காயமும் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஆண்டு மிகக்குறைவான நிலத்தை அவன் அம்மாவும் தங்கையும் சேர்ந்து பயிரிட்டிருந்தார்கள். அதில் என்ன கிடைக்கும், அதைக் கொண்டு ஒரு வருடம் உயிர் வாழ முடியுமா என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் கிராமத்தில் எவருமே அவர்களிடம் பேசாமலானார்கள். அத்தனை பேரும் சிறையில் இருக்கும் அவனை பயப்படத் தொடங்கினார்கள். டாக்கூரின் ஆட்கள் யாராவது வந்து தன் குடும்பத்தில் ஏதாவது ஆபத்தை உருவாக்குவார்கள் என்று ராம்சரண் எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் பயந்துவிட்டிருந்தார்கள்.

அவர்கள் யாருமே ஒரு கொலை வரை யோசிக்காதவர்கள். டாக்கூர் வெட்டுப்பட்டு செத்துக் கிடந்தது அவர்கள் ஒவ்வொருவரையும் நிலைகுலையச் செய்திருந்தது. அவருடைய அடியாட்களிலேயே நாலைந்து பேர் உடனே கிளம்பிச் சென்று விட்டிருந்தார்கள். டாகூரின் மகன்கள் அவர் செய்த வட்டித்தொழிலை மறுபடி தொடர்ந்து செய்வதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய அம்மா அவர்களை ஊருக்கே வரவேண்டாம், பாட்னாவிலேயே தங்கிப் படித்தால் போதும் என்று சொல்லிவிட்டாள். அவள்தான் அங்கே விவசாயத்தையும் பார்த்துக்கொண்டு, பெரிய இடங்களில் கொடுத்த பணத்தை மட்டும் திரும்ப பெறுவதையும் செய்து வந்தாள்.

பிரகாஷ் சொன்னான் “நீ எங்களுடன் சேர்ந்துகொள். நீ செய்த முதல் கொலை ஒரு ஆத்திரத்தில் செய்ததாக இருக்கலாம். அதை நினைத்து நீ மனம் உடைந்து அழுதுகொண்டே இருப்பாய் என்று நினைத்தேன். இங்கே பல பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அதே போன்று திரும்ப ஒன்று நடந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தினாலேயே மீண்டும் எல்லாவிதமான சித்திரவதைகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள். நூறு முறை செத்துச் செத்துப் பிறப்பார்கள். மனநோயாளிகளாகி இங்கேயே செத்துப்போவார்கள்”

“இங்குள்ள மனநோயாளிகள் இரண்டு வகை. மனம் சிதறிப்போய் தனக்குத் தானே பேசிக்கொள்பவர்கள். மனதை மொத்தமாக இழந்து பச்சைக்காய்கறி மாதிரி ஆகி எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டு இருக்கும் முழு அசடுகள். அதில் ஒருவனாகத்தான் நீ ஆகப்போகிறாய் என்று நினைத்தேன். அந்த இரண்டாவது கொலைதான் உன் கையில் கத்தி உறுதியாக நிற்கும் என்று காட்டியது. நீ நினைப்பவை எல்லாம் உன்னைத் தேடி வரும். எங்களுடன் இருந்தால் ஒருநாள் நீ விடுதலை ஆவாய். வேறு எப்படியும் நீ வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது.” என்று பிரகாஷ் சிரித்தான்.

அந்த வரிதான் ராம்சரணை பிரகாஷிடம் சேரவைத்தது. இழப்பதற்கு ஒன்றுமில்லை. பயப்படுவதற்கும் எதுவுமில்லை. அவன் பிரகாஷ் யாதவின் குழுவில் சேர்ந்தது ஒரேநாளில் சிறைமுழுக்க தெரிந்துவிட்டது.

அவன் நடந்துவரும் போது எதிரே வந்த வார்டனாகிய சுக்பீர்சிங் “நீ என்ன பிரகாஷ் யாதவ் கோஷ்டியா?” என்று கேட்டான்.

அவன் நின்று இடையில் கைவைத்து அவனைப்பார்த்து “என்ன உனக்கு அதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா? ஏதாவது சொல்லப்போகிறாயா?” என்றான்.

“இல்லையில்லை, நான் கேட்டேன்” என்றான் சுக்பீர் சிங்.

“இனிமேல் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாய் என்றால் உன்னுடைய பிள்ளைகளுக்கு உன் உடம்புகூட திரும்பக் கிடைக்காது” என்றான் ராம்சரண்.

“இல்லையில்லை ஒரு விளையாட்டுக்கு தான் கேட்டேன்” என்று சொல்லி சுக்பீர்சிங் பயந்து பின்னடைந்து திரும்பி சென்றான். முன்பு இரண்டு முறை கைதிகளைத் தாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய அறைக்குள் ராம்சரணை இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியவன் அவன். அதன்பிறகு பிரம்பால் ஒருமணி நேரத்துக்கு மேல் அவனை அடித்து, இழுத்துச்சென்று  குழாயடியில் போட்டு உடம்பில் குளிர்ந்த நீரை ஊற்றிவிட்டு, அங்கேயே போட்டுவிட்டு சென்றவன்.

சிறையில் தனக்கு உருவான அதிகாரத்தை ராம்சரண் அறிந்தான். ஆறுமாதத்தில் அவனுக்கு பெயில் கிடைத்தது. பெயில் கிடைத்த அன்றே அவன் பாட்னாவுக்கு சென்று பிரகாஷ் யாதவ் கடையில் தங்கினான். அங்கே ஏற்கனவே பதினைந்து பேர் தங்கியிருந்தார்கள். கீழே பிரகாஷ் நடத்திவந்த நிலவிற்பனை நிறுவனத்தின் அலுவலகம் இருந்தது.

ஒரு வாரம் கடந்தபின் பாட்னாவிலிருந்து இரண்டு பேருடன் பைக்கிலேயே அவன் தன் கிராமத்திற்கு சென்றான். நேராக டாகூரின் வீட்டை அடைந்தான். பைக்கை நிறுத்திவிட்டு அவர்கள் இறங்கியதும் அங்கிருந்த வேலைக்காரர்கள் மிரண்டு போய் அவனைப் பார்த்தார்கள். பழைய குண்டர்களில் நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் அனைவருமே ஒருபக்கமாக ஒதுங்கிவிட்டார்கள்.

அவன் டாக்கூரின் வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து டாக்கூரின் மனைவி வந்து அவனைப்பார்த்து திகைத்து, கைகூப்பி நடுங்கும் குரலில் “என்ன வேண்டும்?. நாங்கள் இப்போது எந்த வம்புக்கும் போவதில்லை” என்றாள்.

அவன் சட்டென்று அவளுடைய இடுப்புச்சேலைக்குள் கைவிட்டுப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தான். தூக்கி முற்றத்தில் வீசி ஓங்கி அவள் தலையை மிதித்தான். அடிபட்டு அவள் களத்தில் கிடந்தபோது அவனுடன் வந்த பிரகாஷின் அடியாள் கையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அந்த குண்டர்களையும் வேலைக்காரர்களையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

டாக்கூரின் மனைவியை ராம்சரண் தலையிலும் நெஞ்சிலும் வயிற்றிலும் உதைத்தான். அவள் சேலையை உருவி வீசிவிட்டு அவள் மேல் காறித்துப்பினான். “நீ என்னுடைய குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு மாதம் பணம் போகவில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் உன் மகனுடைய தலையை வெட்டி இந்தத் திண்ணையில் வைப்பேன். சந்தேகமே வேண்டாம். தலைபோனால் பிறகு நீ எத்தனை அழுதாலும் திரும்பி வராது. உன்னுடைய சாதியிலோ சொந்தத்திலோ எங்காவது என்னைப்பற்றி நீ புகார் சொன்னால் உன்னுடைய மகனையும் மகளையும் வெட்டி இங்கே கொண்டு வந்து வைப்பேன். புரிகிறதா?” என்று கேட்டான்.

அவள் கைகூப்பி அழுதபடி “புரிகிறது ,புரிகிறது” என்றாள்.

“ஆயிரம் ரூபாய் ! அது உனக்கு பெரிய தொகை இல்லை என்று தெரியும் அந்த தொகையை நீ கொண்டு கொடுக்க வேண்டும். என்னுடைய தாத்தா உனக்கு எழுதிய கடன் பத்திரத்தை இப்போது எடுத்துக்கொண்டு வா” என்றான்.

“அப்படி பத்திரம் எதுவுமில்லை. உன் தாத்தா இறந்தபோது அப்படி பொய்யாகச் சொல்லி மிரட்டித்தான் இவர் வட்டி வாங்கிக்கொண்டிருந்தார். உண்மையில் அப்படி பத்திரம் எதுவுமில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் நான் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தேன். இதெல்லாம் என்னுடைய தவறில்லை. கடவுள் மீது சத்தியமாக, மா சீதா மீது சத்தியமாக, எதுவுமே எனக்கு பங்கில்லை” என்றாள்.

அவன் மீண்டும் அவள் மேல் காறித்துப்பிவிட்டு வந்து பைக்கில் ஏறிக்கொண்டான். பைக் செல்லும்போது பெருமூச்சுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். இருபக்கமும் துப்பிக்கொண்டே இருந்தான்.

அதிலிருந்து அவனுடைய வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் சென்று கொண்டிருந்தது. அவனுடைய அம்மா வீட்டை புதிதாக கூரை போட்டுக் கட்டினாள். நிலத்தை நன்றாக வேலி போட்டு ஆளை வைத்து விவசாயம் செய்தாள். பிறகு ஒரு டிராக்டரும் வாங்கிக்கொண்டாள். அவனுடைய தங்கையை உள்ளூரிலேயே ஒருவனுக்கு கட்டிக்கொடுத்தாள். ராம்சரண் அதன் பின் தன் தங்கை திருமணத்திற்கு மட்டும்தான் ஊருக்குச் சென்றான். பிரகாஷ் யாதவுடனே அவன் தங்கிவிட்டான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 11:33

கிராதம் வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நான் சமீபத்தில் வெண்முரசின் பன்னிரெண்டாவது நூலான கிராதத்தை  வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வைசம்பாயனனும் பிச்சாண்டவரும் தோன்றும் நவாலின் முதல் பகுதி சைவத்தை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளித்தது. காலபைரவர், கங்காளர், கஜஸம்ஹாரமூர்த்தி போன்ற சிவ ரூபங்களை பற்றிய எளிய புரிதலே இருந்த எனக்கு இந்த பகுதியில் வந்த தாருகாவனத்து கதை ஒவ்வொரு ரூபத்திற்கும் பின் உள்ள தத்துவத்தையும் குறியீட்டையும் உணர்த்தியது. குறிப்பாக, இருளை நேர் நின்று எதிர்கொண்டு அதை தன் உள்ளொளியால் வெல்லும் கஜஸம்ஹாரமூர்த்தி என்னை பெரிதும் பாதித்தார். பேரூர் கோவிலில் உள்ள கஜஸம்ஹாரமூர்த்தியை இப்போது வேறு கோணத்தில் பார்க்கிறேன். நல்லூழாக, இந்த அத்தியாயங்களை படிக்கும் போது காசியில் இருந்தது வேறு ஒரு ஆழ்ந்த அனுபவமாகியது.

கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை என்பது முற்றிலும் புதிய ஒன்றாக இருந்தது. இந்த கதையின் ஊற்றை பற்றி சமீபத்திய யக்ஷகான பயணத்தின் போது குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த சண்டையும் அதில் ஏற்பட்ட தோல்வியுமே அர்ஜுனனை திசை பயணம் நோக்கி கொண்டுசெல்வது சுவாரஸ்யமான அறிதலாக அமைந்தது.

ஜாதவேதனின் ஒவ்வொரு மைந்தனின் இறப்பும் ஆழ்ந்த துயரத்தை அளித்தது. ஜாதவேதனின் மைந்தனை மீட்க அர்ஜுனன் எம லோகம் செல்லும் பயணம் உக்கிர அனுபவமாக இருந்தது. மனித உடலுறுப்புகளாலான மாளிகைகள், வாள் முனைகளாலான பாதை, மலக்கடல் என அந்த உலகம் பதைப்பை அளித்தது. ஜாதவேதனின் மைந்தனின் உயிருக்கு நிகராக தன மைந்தனின் உயிரை நிகர் வைக்கும் போது அர்ஜுனனை மாவீரனாக உணர்ந்தேன்.  அதே நேரம் வரவிருக்கும் பேரழிவையும் அது உணர்த்தியது.

தன் மைந்தன் மீண்ட பின்பு ஜாதவேதனும் அவன் மனைவியும் கொள்ளும் மனமாற்றம் எரிச்சலையும் திகைப்பையும் அளித்தது. ஆனால், அந்த மாற்றத்தின் மூலமே அர்ஜுனனை போல நானும் குபேரனின் ஆற்றலை உணர்ந்தேன். குபேரனை வளராத குண்டு குழந்தையாக சித்தரித்திருந்ததை மிகவும் ரசித்தேன். ஷண்முகவேலின் குழந்தை குபேரன் ஓவியம் அற்புதம் !! பொருளை நிகர் வைக்கும் ஆட்டத்தில் குபேரனை அவனது கஞ்சத்தனத்தாலேயே அர்ஜுனன் வெல்வது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.

 மகாவாருணம் பகுதியில் வரும் பாலைநில பயணம் நான் மிகவும் ரசித்த பகுதிகளில் ஒன்று. அதில் வரும் நுண் தகவல்களும் வர்ணனைகளும் ஒரு நிகர் பயண அனுபவத்தை அளித்தது. வணிகர்களின் வருகையை நம்பி வாழும் பாலை நில மக்களின் வாழ்க்கையை அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தது போன்று உணர முடிந்தது. குறிப்பாக அவர்கள் மழையை கொண்டாடும் போதும் ஈசலை பிடித்து உண்ணும் போதும் அவர்களுடன் அருகில் இருந்தது போன்று இருந்தது. அக்கால வணிகர்கள் எவ்வளவு பெரிய சாகசக்காரர்கள் என்பதையும் இப்பகுதி காட்டியது. மாய வருணனை எதிர்கொண்டு பின் அனைத்து வணிகர் குழுக்களிடமிருந்தும் பிரிந்து அர்ஜுனன் தனியாக பாலையில் பயணம் செய்வது அவனை ஒரு மாபெரும் வீரனாக காட்டியது.

இன்றைய Dead Sea யில் வருணனை காண அர்ஜுனன் மூழ்கி செல்வது வேறு ஒரு சாகச அனுபவத்தை அளித்தது. அங்கு, ஆதித்யன், தொல் அரசன், தொல் குடித்தலைவன் என மூன்று வருணர்களையும் ஒரே ரிக்வேத மந்திரத்தால் அர்ஜுனன் வெல்வதை வேதத்தின் வேர்களை பற்றி நீங்கள் தத்துவ முகாமில் விளக்கியதுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில், கட்ச் பாலைவனத்திற்கு சென்ற போது அர்ஜுனனாக என்னை நினைத்து கொண்டு அங்கு சில நிமிடம் அலைந்து வந்தது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.  

விருத்திரனின் கதையை பிரசாந்தரும் பிரசண்டரும் கூற அவர்களின் கதையை சண்டன் கூற தாமரை இதழ் விரிப்பது போல விருத்திரனின் தொன்மம் விரிந்தபடியே சென்றது. சொல்முகம் சந்திப்பின் போது ஒவ்வொரு கதையாக பிரித்து ஆராய்ந்து தொகுக்க முயன்றோம். விருத்திரனை கொல்ல இந்திரனுக்கு உதவியதன் மூலம்  அசுரனாகிய வருணன் வேள்வியில் அவி பெற்று தேவனாக மாறுவதையும் தத்துவ கல்வியில் கற்றதுடன் இணைத்து கொள்ள முடிந்தது. பல்வேறு தொன்மங்கள் கலந்த பரவசமூட்டும் பகுதியாக மாகேந்திரம் அமைந்தது.

மலைகளுக்கு முன்பு சிறகுகள் இருந்தன என்பதும் அவற்றை இந்திரன் வெட்டிவீழ்த்தியதும் அவனிடமிருந்து தப்பிய மைனாகம் என்னும் மலையிலிருந்து தோன்றியதே திமிங்கலங்கள் என்பதும் நினைக்க நினைக்க கனவுலகில் ஆழ்த்துவதாக இருந்தது. அர்ஜுனன் கிழக்கு எல்லையில் காணும் பறக்கும் இந்திரகீல மலை இன்று வியட்நாமில் இருக்கும் ஹாலோங் பே பகுதியை எனக்கு நினைவூட்டியது.

இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் யுகம் யுகமாக நடக்கும் போர் பற்றி அறிந்தவுடன் தீடிரென ஒரு சங்கிலிதொடரை உணர முடிந்தது. முன்பு வாலி சுக்ரீவனாக இருந்தவர்கள் இப்போது அர்ஜுனன் கர்ணனாக தோன்றியுள்ளனர் என்பது மிக சுவாரஸ்யமான இணைவாக இருந்தது. மனிதனின் ஒவ்வொரு உச்ச தருணத்திலிருந்தும் ஒரு தேவன் தோன்றுகிறான் என்னும் வரி ஒரு நாள் முழுக்க என்னை ஆட்கொண்டது. அன்று என்னிலிருந்து பல தேவர்கள் தோன்றியிருக்கலாம் !! 

 கின்னரஜன்யர்களின் கதையில் வரும் ஊர்ணநாபனை பட்டடக்கல் கோவில் சிற்பத்தில் கண்டுகொண்டேன். மாய சரடால் தன் அடிமைகளை தன்னுடன் இணைத்து கட்டுப்படுத்துவது ஒரு உருவகமாகவும் ஆழ்ந்தபொருள் அளித்தது. கடைசியாக சிவனையும் பார்வதியையும் அர்ஜுனன் சந்திக்கும் நிலப்பகுதி எனக்கு பனிமனிதனில் வரும் மலையுச்சி காட்டை நினைவூட்டியது. இருநிலை அழியும் பாசுபத மெய்மையை சிவனின் தாண்டவத்தில் தானும் கரைந்து அர்ஜுனன் அடைவது ஒரு தியான அனுபவமாக இருந்தது.

பைலனும், ஜைமினியும், சுமந்துவும், வைசம்பாயனனும், உக்கிரனும் இறுதியாக தமிழ் நிலம் வந்து அங்கு மகேந்திரமலை வாழும் வியாசரை அன்னை சொல்மூலம் அடைவது நிறைவான முடிவாக இருந்தது.

தொன்மம், சாகசம், தத்துவம், தியானம் என மறக்க முடியாத அகப்பயணமாக அமைந்தது இந்நாவல்.

அன்புடன்

கார்த்திக்

கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887) இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா? மழைக்காவியம் ஊழின் பெருங்களியாட்டு  – அருணா ஐந்து முகங்கள் – கடிதம் காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை

வழிவழியாக வந்தமைவோர்

இந்திரநீலம் வாசிப்பு- கடிதம்

வெண்முரசின் குரல்கள் அன்பெனும் மாயை -கலைச்செல்வி இளமையின் வண்ணங்கள்- கடிதம் குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன் தீ – கடிதம் மழையின் காவியம் விண்திகழ்க! கனவின் நுரை மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன்

களம் அமைதல்

படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும் மலர் மயங்கியறியும் மெய்மை தளிர் எழுகை அன்னைவிழிநீர் அறிகணம் ஊழ்நிகழ் நிலம் எங்குமுளப் பெருங்களம் மைவெளி ஊழின் விழிமணி அனைத்தறிவோன் விழிநீரின் சுடர்   மீண்டெழுவன களிற்றியானை நிரை – ஆதன் களிற்றியானை நிரை ‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவ ணன் இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன் கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன் ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்  கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை ‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன் பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 11:31

Writing for our existence

Being a writer or becoming popular is not my goal. I want to hide myself, actually. But I want to express myself, like a child giving its voice while hiding in a hide-and-seek game to the finder.

Writing for our existence

 

தனிமை மற்றும் ஏகாந்தம் பற்றிய உளவியல் ரீதியான  கருத்துக்களை  எடுத்துரைதற்கு  நன்றி.தனிமையை கடந்து செல்வது எப்படி மற்றும் ஏகாந்தத்தை உணர்வது எப்படி என்ற தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் மூலமாக உதாரண படுத்தி அதன் மூலம் தனிமனித மனநலனை வளர்த்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.

தனிமை, ஏகாந்தம், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 11:30

June 21, 2025

துயருற்றவர்களுக்கான ஆறுதல் எது?

துயருற்றவர்களுக்கான ஆறுதல் எது? வாழ்க்கையில் சின்னவிஷயங்கள் அளிக்கும் பேரின்பம், நிறைவு பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையைக் கொண்டே என் கருத்துக்களைச் சொல்கிறேன். அவை உண்மையில் அனுபவப்பகிர்வுகள் மட்டுமே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:36

கதையும் மெய்வாழ்வும்

அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கடந்த வாரம் ஒரு சிறுகதை எழுதினேன். மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா குறித்து. ஏறக்குறைய இறைவன் என ஒரு நாவலை எழுத அவர் திட்டமிட்டிருந்தார். அதற்குள் ஒரு கொலை வழக்கில் கைது. அக்கைதுக்குப் பின்  முன்பைவிட மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக நண்பர் சொன்னார். மேலும், கைதான நேரத்தில் என்னென்ன நடந்தது என்பதையும் கூறினார்.

நான் கிருபா எழுதிய கன்னி, சில கவிதைகளை வாசித்ததால் நண்பர் சொன்ன விஷயங்கள் பல நாள்கள் தொந்தரவைக் கொடுத்தன. எழுதாமல் இதைக் கடக்க முடியாது என நினைத்து, ‘ஏறத்தாழ கடவுள்’ எனத் தலைப்பிட்ட சிறுகதையை எழுதி மயிர் இணைய இதழில் வெளியிட்டேன். நீங்கள் வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இப்போது மனம் பெரிய வீச்சுடன் புனைவு பக்கம் திரும்பியிருக்கிறது. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போதும் சொல்வதை நினைத்துக்கொள்வேன். நமக்கு அளிக்கப்பட்ட கலையைக் கைவிட்டால் எங்கோ யாருக்கோ பதில் சொல்ல வேண்டும் என.

நன்றி.

சங்கர் சதா

ஏறத்தாழ கடவுள்

அன்புள்ள சங்கர்,

நல்ல கதை. உணர்ச்சிகரமானது. நேரடியாகவும், நுணுக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது.

மெய்வாழ்க்கைகளை ஒட்டி கதைகளை எழுதும்போது சில அடிப்படைச் சிக்கல்களைச் சந்திக்கிறோம். மெய்வாழ்க்கையை நம்மால் விருப்பபடி மாற்ற முடியாது. மெய்வாழ்க்கைகள் அளிக்கும் வாழ்க்கைப்பதிவுகள், குணச்சித்திரங்களையே நம்மால் திரும்ப எழுத முடியும். அவ்வாறென்றால் அக்கதையில் புதியவையாக எதுவும் நிகழமுடியாது. புதிய ஒன்று நிகழாமல் கலை இல்லை. ஆகவே அறியப்பட்ட கதை- அறியப்பட்ட ஆளுமைக்குள் இருந்து ஒரு புதிய தருணத்தை நம் உள்ளுணர்வோ கற்பனையோ கண்டடையவேண்டும். அப்படி கண்டடையப்பட்டவற்றின் பலத்தில் கதை நிற்கும். இக்கதையில் இறுதியில் அந்தக் கண்டடைதல் பிரபா சொல்லும் வரியில் நிகழ்கிறது.

இக்கதையின் பலவீனம் என நான் எண்ணுவது ஒன்று உண்டு. இது என் கருத்துதான் – வாசகர்களுக்கும் உங்களுக்கும் வேறுமாதிரியும் தோன்றலாம் . கதையில் வரும் கதைசொல்லி (அவனே ஆசிரியனின் குரல்)யில் இருக்கும் மிகையான உணர்ச்சிகரம் ஒரு குறைபாடாக கொள்ளலாம். அந்தத் தருணத்தில் அவன் அந்த உணர்ச்சியை அடைவது இயல்பே. ஆனால் மிகையான உணர்ச்சிகரம் இயல்பாக அமையும் வாழ்க்கைத் தருணங்களை குறைத்துவிடுகிறது. இக்கதையை வேண்டுமென்றே சாதாரணமாக, ஒரு  ‘ரிப்போர்ட்டிங்’ போல எழுதினால் உண்மையில் அந்த மிகைஉணர்ச்சிகரம் வாசகனில் உருவாக்கும் மெல்லிய விலக்கம் அல்லது அவநம்பிக்கை இல்லாமலாகி வாசகனே அந்த உணர்ச்சிகளை உருவாக்கிக் கொள்வான்.

(இக்கதையுடன் உடனடியாக ஒப்பிட்டு இந்த அம்சத்தை கவனிக்கவேண்டிய கதை அசோகமித்திரன் ஜி.நாகராஜன் பற்றி எழுதிய விரல் என்னும் சிறுகதை. மிக அடங்கிய குரலில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படுவது அக்கதை. ஆனால் மிக ஓங்கிய உணர்ச்சிகளுக்குரிய வாழ்க்கைத்தருணத்தைச் சொல்வது)

ஏன் அந்த உணர்ச்சிகரம் கலைக்கு பிசிறாக அமைகிறது? அது கதைக்கு ஒற்றைக்குரல் தன்மையை கொண்டு வருகிறது. ஒரு கவிஞனை வெவ்வேறு வாழ்க்கைக்களங்களைச் சேர்ந்த வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் அவன் எப்படிப் பொருள்படுகிறான் என்னும் யதார்த்தச் சித்திரம் உருவாகாமல் தடுத்துவிடுகிறது. அத்துடன் கதையின் உச்சம் வெளிப்படும்போது அதன்மேல் வாசகன் குவியாதபடி அதற்கு முன் வரும் உணர்ச்சிநிலைகள் தடுத்துவிடுகின்றன. வாசகன் கதைசொல்லியின் உணர்ச்சிகள், எதிர்வினைகள் நோக்கி திருப்பப்படுகிறான். கவிஞனின் சித்திரம் வாசகனில் துல்லியமாக உருவாவதை அது தடுத்துவிடுகிறது.

கதைசொல்லி கவிஞனைப் பற்றி நினைக்கும் உணர்ச்சிகரமான எண்ணங்கள், அவன் நினைவில் கவிஞன் வரும் காட்சிகள் ஆகியவை இல்லாமல் இக்கதையை கற்பனை செய்து பாருங்கள், இக்கதை மேலும் வலுவுடன் இருப்பதை நீங்கள் உணரக்கூடும். அவன் கவிஞன் என்பதும், எப்படிப்பட்ட கவிஞன் என்பதும் அவனுடைய வெறும்தோற்றம் வழியாகவே சொல்லப்பட்டிருக்கலாம். அக்கவிஞனின் புறத்தோற்றம், அவனுடைய மெய்ப்பாடுகள் மிக முக்கியம். ஒரு மகத்தான செவ்வியல் ஓவியம்போல அவன் சிறையிலிருக்கும் காட்சி, அவன் கைகளை நெஞ்சோடு கட்டியிருக்கும் காட்சி சொல்லப்பட்டிருக்கலாம். ஒரு கவிஞனாக அவனுடைய மகத்துவத்தை வாசகனே அவ்வாறு உருவாக்கிக்கொள்ள விட்டிருக்கலாம்.

ஒரு நல்லகதையை வாசித்ததும் அதை மேலும் கூர்மையாக ஆக்கிக்கொள்ள வாசக உள்ளம் விரும்பலாம். அந்தக் கோணத்திலேயே இதைச் சொல்கிறேன்.

ஜெ

விரல் அசோகமித்திரன்

 

அன்புள்ள ஜெ

இப்போதுதான் விரல் கதையை வாசிக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் சில இடங்கள் ஜி.நா.வின் கட்டற்ற வாழ்க்கையால் எதை இழந்தார் என்பது அற்புதமாக துலங்கி வருகிறது. முக்கியமாக, “இனி என்னால் எழுதவே முடியாது. யாரும் என்னை காப்பி அடிக்கவே முடியாது” வரி. அசோகமித்ரன்! தமிழ் இலக்கியத்தில் என்றும் நிலைக்கும் பெயர். வேறு என்ன சொல்ல? கதையைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

சங்கர் சதா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:35

அழகுவேல் நாடார்

அழகுவேல் நாடார், சக்தி கலாமன்றம், அண்ணா மன்றம், காமராசர் கலாமன்றம் போன்ற நாடகக் குழுக்களில் இணைந்து பங்களித்தார். ’பக்த ராமதாஸ்’, ’கடமையும் பாசமும்’ உள்ளிட்ட பல நாடகங்களைத் தயாரித்து இயக்கினார். ஆர்வமுள்ள பலருக்கு நாடகப் பயிற்சி அளித்தார். இவரிடம் நாடகப் பயிற்சி பெற்றவர்களில் சிவா, கௌத்து, தங்கவேல் செல்வராசு, சந்திரசேகரன், கோபாலன் முதலியோர் குறிப்பிடத்தகுந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

அழகுவேல் நாடார் அழகுவேல் நாடார் அழகுவேல் நாடார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:34

காவியம் – 62

காலையில் ராம்சரண் நாயக் கண் விழித்தபோது எதிரே சிவ்குமார் யாதவ் அதே கேள்வியுடன் நின்றிருந்தான். “சொல் ராம், எதற்காக அத்தனை பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் வேண்டும்? பேசிப்பேசி எல்லாவற்றையும் கடந்து விடுகிறார்கள் அல்லவா? பேசிவிட்டால் கடன் முடிந்தது என நினைக்கிறார்கள் அல்லவா?”

“இல்லை, அவர்கள் அதையெல்லாம் உண்மையாகவே நம்பித்தான் பேசுகிறார்கள்”

“நான் மனிதர்களின் பாவனைகளை எல்லா பக்கங்களையும் திருப்பிப் பார்க்கும் இடத்தில் இருக்கிறேன் ராம். நாம் பேசிக்கொள்வது நம்மை நாமே சித்தரித்துக் கொள்வதற்காக மட்டும்தான். நமக்கு ஒரு தற்காலிக அடையாளம் தேவைப்படுகிறது. இந்த கல்லூரி தரும் அடையாள அட்டை போல. இப்படி எத்தனை அடையாள அட்டைகள் வழியாகக் கடந்துசெல்கிறோம். ஒவ்வொரு அட்டையும் எத்தனை விரைவாகப் பழையதாகிறது. பழைய அடையாள அட்டைகளை எடுத்துப் பார்த்து நாம் துணுக்குறுகிறோம். பிறகு சிரிக்கிறோம். நம் கையில் இருக்கும் அடையாள அட்டையே கூட நம்மைப்போல் இல்லை..” சிவ்குமார் யாதவ் சொன்னான்.

“ஆம், ஆனால் அடையாள அட்டைகளை பிறர் நமக்கு அளிக்கிறார்கள்.”

”நம் அக அடையாளங்களை பிறருக்கு நாம் சமைத்து அளிக்கிறோம்… ஆ, இங்கே எத்தனை புரட்சியாளர்கள், எத்தனை கிளர்ச்சியாளர்கள், எத்தனை கலைஞர்கள், எத்தனை எதிர்காலச் சாதனையாளர்கள்…”

“பேசட்டுமே” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “பேசும் விடுதலையையாவது அவர்கள அடையட்டுமே.”

“ஆனால் பேசும்போது அத்தனை தீவிரமாக நிலைபாடுகள் எடுப்பதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. இவர்கள் எவருக்கும் எதுவும் பெரிதாகத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கட்சியை சேர்ந்தவர்களாக தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். காங்கிரஸோ சோஷலிஸமோ கம்யூனிசமோ எதுவுமே இவர்களுக்குத் தெரியாது” என்று சிவ்குமார் யாதவ் தொடர்ந்தான்.

”நேற்று அஜய்குமார் போஸிடம் பேசிக்கொண்டிருந்தேன். ’வினோத் மிஸ்ரா வினோத் மிஸ்ரா’ என்று கத்திக்கொண்டிருந்தான். ’யார் அவர்?’ என்று கேட்டேன். ’நக்சல்பாரி இயக்கத்தின் இப்போதைய தலைவர்’ என்றான். ’வினோத் மிஸ்ராதான் இந்தியாவை ஆளப்போகிறார்! புரட்சி வருகிறது!’ என்று தொண்டை புடைக்க கத்தினான். ’வினோத் மிஸ்ரா எப்படி இந்தியாவைக் கைப்பற்றுவார்’ என்று கேட்டால் அவனிடம் பதிலில்லை. ’எல்லாம் அவருக்குத் தெரியும்’ என்று பதில் சொன்னான்.”

”அவனிடம் ’சரி, வினோத் மிஸ்ரா என்ன சொல்கிறார்’ என்று கேட்டால் ’முதலில் நீ கட்சியில் சேர் எல்லாம் சொல்லித்தருவார்கள்’ என்றான். அவனுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. ஆனால் வினோத் மிஸ்ராவின் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளும் அடையாளம் அவனுக்குத் தேவைப்படுகிறது.” என்று சிவ்குமார் யாதவ் தொடர்ந்தான்

”அவர்கள் அத்தனை பேரும் ஏதாவது ஒன்றை அவ்வாறு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பிடித்துக் கொண்டிருப்பதாலேயே அவர்களுக்கு இன்னொன்று தெரியாமலாகிவிடுகிறது. இன்னொன்றை மறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த நிலைபாடுகளை எல்லாம் இவர்கள் நீண்டகாலம் வைத்துக் கொள்ளப் போவதில்லை. உண்மையில் அவர்கள் எதை எதிர்த்து வாதிடுகிறார்களோ அதையும் அவர்கள் தெரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே இன்றைக்கு கம்யூனிஸ்டாக இருப்பவன் நாளை ஜனசங்கத்திற்கு ஆதரவாளன் ஆகலாம். இன்று இந்திரா காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பவன் சில நாட்களுக்குள் திடீரென்று கம்யூனிஸ்டாக ஆகலாம்.”

“எதையோ பேசட்டும்” என்று ராம்சரண் சொன்னான். “இத்தனை விஷயங்களை மனிதர்கள் பேச முடியும் என்பதையாவது இந்த தலைமுறையில் இவர்கள் கண்டுகொள்ளட்டும். பேசுவதைச் செயலாக்குவது எப்படி என்று அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ளட்டும்…”

“அடுத்த தலைமுறையா?” என்றான்.

“ஆமாம், எத்தனை தலைமுறைகளாக தேங்கிக்கிடக்கிறார்கள்… ஓரிரு தலைமுறையாவது ஆகும் அவர்கள் எதையாவது சொந்தமாகச் சிந்திக்கவும் செயலாக்கவும்.”

அவனும் சிவ்குமார் யாதவும் லைப்ரரியிலிருந்து பேசிக்கொண்டே சைக்கிளை உருட்டிக்கொண்டு வரும்போது தான் அவனை நோக்கி அவனுடைய கல்லூரித் தோழனாகிய கிஷன் சந்த் சைக்கிளில் வந்து, மூச்சிரைக்க அருகே இறங்கி, ”உனக்கு ஆள் வந்திருக்கிறது” என்றான்.

“ஆளா?” என்று அவன் கேட்டான்.

”ஆமாம். உன்னுடைய ஊரிலிருந்து உன்னைத் தேடி யாரோ வந்தார்கள். அவர்கள் அங்கே உனக்காக காத்திருக்கிறார்கள். உன்னை அழைத்து வரும்படி துறைத்தலைவர் சொன்னார்” என்றான்.

ராம்சரண் சைக்கிளில் ஏறி அவனுடன் விரைந்து சென்றான். அங்கே அவனுடைய பக்கத்து வீட்டுக்காரனாகிய சிறுவன் அமர்ந்திருந்தான். அவன் ஊரில் பத்தாம் வகுப்பு படிப்பவன், ஹரிராம் நாயக் என்று பெயர். அவனை ஓரிருமுறை சாலையில் சந்தித்திருக்கிறான். ’எப்படி மார்க் வாங்குவது அண்ணா?’ என்று ஒவ்வொருமுறையும் கேட்டான். ’படிக்கவேண்டியதுதான்’ ’படித்தால் மறந்துபோகிறது’ என்று அவன் சொன்னான். ’மறந்து போனால் எழுதிப்பார்த்துக்கொள் எழுதினால் மறக்காது’ என்று ராம்சரண் அவனுக்குச் சொன்னான். அதையே ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஹரிராம் அவனைப் பார்த்ததும் எழுந்து ”அப்பாவை வெட்டிவிட்டார்கள்” என்றான்.

“யார்?” என்றான் ராம்சரண். “யாரை?”

“உங்கள் அப்பாவை”

அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனம் செயலற்றிருந்தது. எங்கோ எவரோ ஏதோ செய்ததை செய்தியாக அறிவதுபோல. “யார்?” என்றான்.

ஹரிராம் ”வட்டிக்குப்பணம் கொடுப்பவர்கள்” என்றான். “டாக்கூரின் ஆட்கள்”

”வெட்டினார்களா? எங்கே?” என்று அவன் கேட்டான்.

”வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உன் தங்கையை ஒருவன் பிடித்து இழுத்தபோது உங்க அப்பா அவனை அடித்தார். அவன் சட்டென்று கையில் இருந்த அரிவாளால் அவர் தோளில் வெட்டிவிட்டான். ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.”

”எங்கே?”

ஹரிராம் ”அங்கே உள்ளூரில் அரசாங்க ஆஸ்பத்திரியில்தான். அங்கேதான் உன் தங்கையும் அம்மாவும் இருக்கிறார்கள். உன்னைக் கூட்டிவரும்படி என் அப்பா என்னிடம் சொன்னார்” என்றான்.

ராம்சரண் சைக்கிளை விடுதியில் வைத்துவிட்டு கையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவனுடன் பஸ்ஸில் கிளம்பினான். பஸ்ஸில் அமர்ந்த பிறகுதான் அவனுக்கு ஒவ்வொன்றாக உறைக்க ஆரம்பித்தது. ஆனால் அவன் என்ன கேட்டாலும் ஹரிராம் முன்பு சொன்னதையே சொன்னான். அவனுக்கு அவ்வளவுதான் தெரிந்திருந்தது. பஸ் மெதுவாக ஊர்ந்தது, உள்ளே அவன் தவித்துக்கொண்டிருந்தான்.

ராம்சரண் இருட்டுவதற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்றான். அவனது அப்பா மருந்துகளில் நினைவிழந்து தூங்கிக்கொண்டிருந்தார். சலைன் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. தோளில் மிகப்பெரிய கட்டு ரத்தக்கசிவுடன் இருந்தது. அவருடன் எவருமில்லை. வாசலில் நின்றவர் எவரையும் உள்ளே விட மறுத்துவிட்டார்.

அவன் அம்மாவும் தங்கையும் ஆஸ்பத்திரியிலேயே வராந்தாவில் பாய் விரித்து அமர்ந்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் அவன் அம்மா ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள். சாபங்களும் வசைகளும் கலந்து ஒலிக்க, ஒரு நர்ஸ் எட்டிப்பார்த்து, ”இங்கே சத்தம் போடக்கூடாது, வெளியே போங்கள்” என்று திட்டினாள்.

அவன் தங்கை குனிந்து அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவன் அவளை வெறுமே பார்த்து “ம்” என்றான். அவள் கண்களை துடைத்து புடவையால் முக்காடு போட்டு முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அவன் டாக்டரைச் சென்று பார்த்தபோது ”வெட்டு சற்று ஆழம் தான். பன்னிரண்டு தையல்கள் போட்டிருக்கிறோம்” என்றார்.

“உயிருக்கு…” என்றான்.

“உயிராபத்து இல்லை என நினைக்கிறேன்” என்று டாக்டர் சொன்னார். ”போலீஸ்காரர்கள் இங்கே வந்தார்கள். உங்களுக்கு ஏதாவது புகார் இருக்கிறதா என்று கேட்டார்கள். புகார் இருக்கிறதென்றால் ஊரிலே போய் பஞ்சாயத்திலே கலந்து பேசிய பிறகு முடிவெடுக்கச் சொன்னார்கள்…” என்றார்.

ராம்சரண் “சரி” என்றான்.

“நீங்கள் போலீஸுக்குப் புகார் கொடுப்பதென்றால்தான் நான் அதற்கேற்றபடி அறிக்கை எழுதவேண்டும்… எப்படி எழுதவேண்டும் என்று போலீஸ்காரர்கள் சொல்வார்கள். அதைப்போலத்தான் நாங்கள் எழுதுவோம். எல்லாம் உங்கள் ஊர்ப்பஞ்சாயத்துதான் முடிவெடுக்கவேண்டும்” என்றார் டாக்டர்.

ராம்சரண் ”நான் பேசிப்பார்க்கிறேன்” என்றான்.

என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. உள்ளம் பதறிக்கொண்டே இருந்தது. கையிலிருந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்து ”இதை வைத்துக்கொள். ஏதாவது தேவை இருந்தால் சொல். நான் போய் ஊரில் என்ன நடந்தது என்று விசாரித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்று பேசிவிட்டு வருகிறேன்” என்றான்.

”நீ அங்கே போகாதே. அவர்கள் உன்னையும் வெட்டிவிடுவார்கள் ,போகாதே” என்று அவனுடைய அம்மா அவனைக் கட்டிக்கொண்டு அலறி அழுதாள்.

”ஒன்றுமில்லை இது ஒரு சாதாரண காயம்தான். அப்பா தேறிவிடுவார். நாம் செய்யவேண்டியதைச் செய்வோம். நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. அவர்கள் இன்னும் மேலேறிவிடுவார்கள். பேசாமலிரு. ஊரில் நமக்கும் ஆளிருக்கிறது. நாம் பார்ப்போம்” என்று சொன்னான்.

அவன் ஊருக்கு வந்த போது ஊரே காலியாக இருப்பது போலிருந்தது தெருவில் அநேகமாக எவருமே இல்லை. டீக்கடையில் இருந்த ஒருவர் கூட அவனைப் பார்த்ததும் எழுந்து விலகிச் சென்றார். அவன் தன் வீட்டுக்கு போனபோது திகைத்தான். வீட்டில் மாடுகள் இல்லை. எந்தப்பொருளுமே வீட்டில் இல்லை. சிறிய, தாழ்வான ஓட்டுக்கூரையிடப்பட்ட அந்த வீடு இரண்டு சிறிய அறைகளும் ஒரு சமையலறையும் கொண்டது. சமையலறையில் பாத்திரங்கள் கூட இல்லாமல் வீடு முற்றிலும் காலியாக இருந்தது. ஓரிரண்டு பழைய துணிகளும், உடைந்த மண் சட்டிகளும்தான் கிடந்தன.

அவன் அந்த வீட்டுக்குள் சுற்றிவந்துவிட்டு வெளியே வந்தான். வெளியே அவனைப் பார்த்து நின்ற ஒருவர் அவனைப் பார்க்காதது போல விலகிச் செல்ல ”வீட்டை யார் கொள்ளையடித்தது? வீட்டிற்கு வந்தது யார்? எங்கள் மாடு எங்கே? மாடு எங்கே?” என்று கத்தினான்.

எதிர்வீட்டைச் சேர்ந்த ஒருவர் எட்டிப்பார்த்தார். அவன் அவரை அப்பாவின் நெருக்கமான நண்பர் என்று நினைத்திருந்தான். நீண்ட காலமாகவே அவர்கள் இருவரும் சேர்ந்து சந்தைக்கு செல்வதும், தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும் உண்டு. அவர் ”இங்கே நின்று சத்தம் போட்டு என்ன பிரயோஜனம்? வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மாட்டை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். உன் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் உன்னுடைய தாயாதிகள்தான் எடுத்தார்கள்” என்றார்.

“யார்?” என்று ராம்சரண் கேட்டான். அவன் உடல் நடுக்கம் கொண்டிருந்தது.

அவர் குரலைத் தாழ்த்தி ”உன் தாயாதிகளை அவர்கள் சரிசெய்துவிட்டார்கள். இங்கே நடந்த சண்டைக்கு அவர்கள் மட்டும்தான் சாட்சி. உன் அப்பாவை வெட்டியவன் புதிய மனிதன், பெரிய மீசை வைத்திருந்தான், கருப்பாக இருந்தான் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள். அப்படி யாருமே இந்தப்பகுதியில் கிடையாது. வெட்டியது யாரென்றும் எல்லாருக்கும் தெரியும். டாக்கூரின் ஆள் அவன். அவன் அப்படி பலபேரை வெட்டியவன். அதனால் தான் இங்கே அவர்களால் வட்டித்தொழில் செய்ய முடிகிறது” என்றார்.

சட்டென்று தீப்பற்றிக் கொண்டதுபோல உடல் முழுக்க கிளம்பிய வெறியுடன் ராம்சரண் ஓடிச்சென்று தாயாதியின் வீட்டு முன் நின்று கூச்சலிட்டான். ”வெளியே வாருங்கள்… டேய் வெளியே வாருங்கள்… என் வீட்டைக்கொள்ளையடித்தது யார் எனக்கு இப்போது தெரியவேண்டும்?” என்றான்.

அவனுடைய அப்பாவின் பெரியம்மாவின் மகன் வெளியே வந்து ”இங்கே நின்று சத்தம் போட்டால் நான் டாக்கூரிடம் கூப்பிட்டு சொல்வேன். ஏற்கனவே அவரிடம் நான் சொல்லிவிட்டேன். நானும் உன் அப்பாவுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒரு பைசா அவர் திருப்பித் தந்தது கிடையாது. எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்று பார்க்கத்தான் நான் உள்ளே சென்றேன். எனக்கு கொடுத்த பணத்துக்கு உன் வீட்டில் இருந்த மிச்சத்தை நான் வசூல் செய்துகொண்டேன். டாக்கூரிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டேன். டாக்கூருக்குத் தெரியும்” என்றான்.

”டாக்கூரைச் சொல்லி பயமுறுத்துகிறாயா என்ன?” என்று ராம்சரண் கத்தினான்.

”நீ பயப்பட மாட்டாய். உனக்கு ஜெயின்களின் ஆதரவு இருக்கும். ஆனால் டாக்கூருக்கு இங்கே எல்லாரையும் தெரியும். டாக்கூரிடம் பேசிய பிறகுதான் நான் என் பணத்தை வசூல் செய்துகொண்டேன். இந்த வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள் என்று அவர்தான் என்னிடம் சொன்னார்” என்றான் அவனுடைய பங்காளி.

வீட்டுக்குள் இருந்து அவனுடைய பெரியப்பா எட்டிப்பார்த்து “டேய், இங்கே வம்பு செய்யாதே. நீ ஏதாவது கேட்பதாக இருந்தால் டாக்கூரிடம் போய் கேள்” என்றார்.

”கேட்கிறேன், கேட்காமல் விடமாட்டேன்” என்று ராம்சரண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைக்கிள்களில் இரண்டு பேர் அவன் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றார்கள். இருவருமே டாக்கூரின் ஆட்கள் என்று அவன் அறிந்திருந்தான். வட்டிக்கு சண்டை போடுவதற்காக அவன் வீட்டுக்கு ஏற்கனவே வந்தவர்கள் தான் அவர்கள்.

”உன்னுடைய சாதிக்காரர்கள் டாக்கூர் வீட்டில் இருக்கிறார்கள். டாக்கூர் உன்னைக் கூட்டி வரச்சொன்னார். அங்கேயே பஞ்சாயத்து பேசிவிடலாம் என்றார்” என்று அவர்களில் குண்டன் சொன்னான்.

ராம்சரண் ”என்ன பஞ்சாயத்து?” என்றான்.

”பஞ்சாயத்து பேசாமல் போலீஸுக்கு போய்விடுவாயா நீ? உன்னுடைய சாதிக்காரர்களில் எல்லாப் பெரிய மனிதர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அங்கே வந்து பேசு. அவர்கள் போலீஸுக்கு புகார் செய்து கொள்ளலாம் என்று சொன்னால் தாராளமாக நீ புகார் செய்துகொள். யாராக இருந்தாலும் அவரவர் சாதிக்குரிய பஞ்சாயத்து என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும். அதுதான் ஊர் ஒழுங்கு” என்று குண்டன் சொன்னான்.

அவனை தோளில் பிடித்து உந்தி ”சைக்கிளில் ஏறிக்கொள்” என்று இன்னொருவன் சொன்னான்.

”வேண்டாம்” என்று ராம்சரண் சொன்னான்.

”பிறகென்ன? நடந்து வரப்போகிறாயா? சரி, நட… சீக்கிரம் போகவேண்டும். அங்கே உனக்காக காத்திருக்கிறார்கள்” என்றான் குண்டன்.

ராம்சரண் சைக்கிளில் மௌனமாக ஏறிக்கொண்டான். சைக்கிள் கிராமத்தின் ஊடுவழிகளின் வழியாக சென்றபோது பலர் வீடுகளில் இருந்து எட்டிப்பார்த்தார்கள். ஒருவரோடொருவர் மெல்லப் பேசிக்கொண்டார்கள்.

சைக்கிள் டாக்கூரின் பண்ணைவீட்டுக்கு போகிறது என அவன் அறிந்தான். அவருக்கு இருபத்தைந்து ஏக்கருக்கு மேல் பெரிய வயல் இருந்தது. அதன் நடுவே ஓட்டுக்கூரை போட்ட கொட்டகையும், சிமிண்ட் தளம் போட்ட களமும், பெரிய கிணறும் இருந்தன.

சைக்கிள் நெருங்கும்போது அங்கே பத்துப்பதினைந்து பேர் அமர்ந்திருப்பது தெரிந்தது. இரண்டு டிராக்டர்களும் ஒரு ஜீப்பும் அங்கே நின்றன. அவர்கள் சைக்கிளில் வருவதைக் கண்டதும் ஒருவன் வந்து கம்பி கேட்டை திறந்தான்.

சைக்கிளில் போய் இறங்கியவுடன் ராம்சரண் அங்கே அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தான். அவனுடைய சாதியின் வயோதிகர்கள் எல்லாருமே அங்கிருந்தார்கள். பெரிய வெள்ளைநிற முண்டாசு கட்டிக்கொண்டு, அழுக்கு வெள்ளைச் சட்டையும் பைஜாவுமாக குந்தி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் ஏற்கனவே டீ குடித்து, பீடா போட்டிருந்தார்கள். பலர் தரையில் ரத்தம்போல துப்பிவைத்திருந்தனர்.

அவன் இறங்கி அவர்களை நோக்கிச் சென்றான். அவன் கால்கள் தளர்ந்து நடக்கமுடியாமல் தள்ளாடினான். தலைக்குள் ஓர் ரீங்காரம் நிறைந்திருப்பது போல் இருந்தது. ஆனால் அங்கிருந்த ஒவ்வொன்றையும் அத்தனை கூர்மையாக அவன் பார்த்து, கணக்கிட்டு, நினைவில் பதித்துக்கொண்டிருந்ததை அவன் நீண்டநாட்களுக்குப் பிறகுதான் உணர்ந்தான்.

அவன் சாதியின் பெரியவர்களில் ஒருவர் அவனைப் பார்த்து ”உன் விஷயம் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் இப்போதே பேசி முடித்துவிடுவோம்” என்றார்.

இன்னொருவர் பீடாவை துப்பியபின் ”உன்னுடைய மாட்டை திருப்பிக் கொடுத்து விடுவதாக டாக்கூர் சொல்கிறார். உன்னிடம் ஏதாவது மிச்சம் இருந்தால் அதைக்கொடுத்து மாட்டை வாங்கிக்கொண்டு போ. அதுதான் நல்ல வழி. இப்போது நாம் செய்யக்கூடியது நம்முடைய மாட்டை மீட்பதுதான். மாடில்லாமல் உன் அப்பா எப்படி விவசாயம் செய்யமுடியும்?” என்றார்.

அவன் எதுவுமே யோசிக்க முடியாமல் கையும் காலும் நடுங்கியபடி அவர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

ஒருவர் “நீ சின்னப் பையன்… நாங்கள் உன் நல்லதுக்காகவே சொல்வோம்” என்றார்.

உள்ளிருந்து பெரிய டாக்கூர் வெளியே வந்தார். நீண்ட சட்டையும் பைஜாமாவும் அணிந்து, பாதி நரைத்த பெரிய மீசையுடன், சிவந்து களைத்த கண்களுடன், எல்லா உள்ளூர் நிலக்கிழார்களும் எப்படி இருப்பார்களோ அப்படி இருந்தார். தடிமனான சுருட்டை இழுத்தபடி வந்து கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து அவர்களை ஒவ்வொருவராக பார்த்து தலையசைத்தார். அனைவரும் அவருக்கு எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் ஒவ்வொருவரையாக அமரும்படி சொன்னார்.

அவர்கள் அமர்ந்ததும் திரும்பி தன் வேலைக்காரனிடம் ”எல்லாருக்கும் காபி கொடுத்தாகிவிட்டதா?” என்று கேட்டார்.

”எல்லாரும் டீ குடித்துவிட்டார்கள்” என்று அவன் சொன்னான்.

”பீடா போட்டுக்கொள்ளுங்கள்…” என்று அவர் சொன்னார். “நம் வீடுதேடி வந்திருக்கிறீர்கள்…”

“எல்லாரும் எடுத்துக்கொண்டோம்” என்று கிழவர்கள் சொன்னார்கள்.

டாகூரின் வேலைக்காரர்களும் அடியாட்களும் சற்றுத்தள்ளி நின்றனர். அவர்களில் ஒருவன் மிகப்பெரிய அரிவாள் ஒன்றை அனைவரும் பார்க்கும்படி தரையில் ஊன்றி ,அதன்மேல் கையை வைத்திருந்தான்.

அவ்வளவு நேரமும் அவர் அவன் அங்கே நிற்பதை திரும்பிப் பார்க்கவே இல்லை. ”அப்புறம்…?” என்று அவர் கேட்டபிறகு முதியவர் ஒருவர் அவனை சுட்டிக்காட்டி ”இவன் தான்” என்றார்.

அவர் அவனைத் திரும்பிப்பார்த்து மீசையை நீவினார். அவருடைய மூக்கு பருக்களுடன் பெரிதாக இருந்தது. ஒரு கண் மட்டும் மெல்லச் சுருங்கி, உதடு மெல்ல அசைந்தது. துப்புவதற்காக அங்குமிங்கும் பார்த்தபோது ஒருவன் சட்டியை நீட்டினான்.

அதில் துப்பிவிட்டு ”நீயா? நீ பள்ளிக்கூடத்தில் படிப்பவன்தானே? பணம் வாங்கினால் முறையாக அதற்கு வட்டி கொடுக்கவேண்டும், அல்லது பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும். அதுதானே நியாயம்? உன் பள்ளிக்கூடத்தில் அதைத்தானே சொல்லிக் கொடுக்கிறார்கள்?” என்றார்.

அவன் பேசாமல் நின்றான்.

அவர் “நியாயம் என்பது எல்லாருக்கும் பொதுதானே? பணத்தை திருப்பிக் கேட்கப் போகிறவர்களை அடிப்பதும் வெட்ட வருவதும் எந்த ஊர் வழக்கம்?” என்றார்.

”அப்பா ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அபாயமான நிலையில் இருக்கிறார்” என்று சொன்னபோது அவனுடைய குரல் உடைந்தது.

”அது அவருடைய விதி. சண்டைக்கு போகும் போது நம்மால் ஒற்றைக்கு ஒற்றை நின்று சண்டை போடமுடியுமா என்று பார்க்கவேண்டும். முடியாவிட்டால் அப்படித்தான்” என்று அவர் சொன்னார்.

“என் அப்பா அப்படி சண்டை போடுபவர் அல்ல…” என்றான் ராம்சரண்.

“அப்படியென்றால் நான் பொய் சொல்கிறேன் இல்லையா? நான் திருட்டுப்பயல் இல்லையா? அதையா சொல்கிறாய்?”

அவன் கைநீட்டி அவரிடம் மன்றாடினான். ”நான் அப்படிச் சொல்லவில்லை. இந்தக் காலம் மாறிவிட்டது. இதெல்லாம் நியாயமில்லை. நானோ என் அப்பாவோ உங்களிடம் பணம் வாங்கவில்லை” என்றான்.

”உங்கள் பரம்பரை என்னிடம் பணம் வாங்கியிருக்கிறது. எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

அவன் ”அதற்கு நாங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகளாகப் பணம் கட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

டாக்கூர் ”அப்படியென்றால் நிலத்தை விட்டுவிட்டு ஓடு. அதன்பிறகு பணம் கட்ட வேண்டியதில்லை” என்றார்.

”என்ன பேச்சு இது மாட்டை திருப்பிக்கொடுத்தால் பேச்சு முடிகிறது, நாங்களும் கிளம்புவோம்” என்று பெரியவர் சொன்னார்.

“மாடா? எந்த மாடு? இவன் என்ன சொல்கிறான் கேட்டீர்கள் அல்லவா? இவன் பணமே வாங்கவில்லையாமே….” என்றார் டாக்கூர். “இனி இவனிடம் எனக்குப் பேச்சில்லை… எல்லாரும் கிளம்புங்கள்.”

ராம்சரண் அழுகை கலந்த குரலில் ”இது நியாயமா? உங்கள் வீட்டிலும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் கல்லூரியிலேயே படிக்கிறார்கள். உங்கள் மகள் கூட அங்கேதான் படிக்கிறாள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இதெல்லாம் நியாயமா?” என்றான்.

அவருக்குள் அந்தப் பேச்சு எதை தொட்டது, எப்படிச் சீண்டியது என அவன் பின்னர் பலமுறை எண்ணிப்பார்த்தது உண்டு. பாய்ந்து எழுந்து ”டேய், என் மகளைப்பற்றி எதற்கு பேசுகிறாய் நீ? நீ அவளைப் பார்த்தாயா? கல்லூரியில் நீ அவளிடம் பேசினாயா?” என்று அவர் கூச்சலிட்டார். திரும்பி தன் அடியாட்களை பார்த்து ”சுபாவைப் பற்றி பேசுகிறான், அயோக்கிய நாய்” என்றார்.

“இல்லை, நான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை…” என்று ராம்சரண் சொன்னான்.

”இதோ பார், திரும்பி நீ கல்லூரிக்குப்போய் என் மகளையோ மகனையோ பார்த்தாய் என்றால் அதன் பிறகு உன் தங்கை இங்கே தாசியாக இருப்பாள் புரிகிறதா?” என்று அவர் கேட்டார். “ஏற்கனவே எங்கள் ஆட்களில் ஒருவன் அவளை குறிபார்த்துவிட்டான்…ஜாக்ரதை.”

”டேய், முதலில் நீ படிப்பை நிறுத்து” என்று அவர் அடியாள்களில் ஒருவன் உரக்க கத்தினான்.

”இவனை விடக்கூடாது… திரும்ப இவன் கல்லூரிக்கு போககூடாது. போனால் உங்கள் மகளைப் பார்க்காமலிருக்க மாட்டான். உங்கள் மகளைச் சொல்லி மிரட்டுகிறான் பார்த்தீர்களா?” என்று இன்னொருவன் சொன்னான்.

”மிரட்டுகிறானா? டேய், உன் நிலத்தை நான் எடுத்துக்கொண்டேன். மாடு இங்கதான் இருக்கும். உன் தங்கையையும் அம்மாவையும் இங்கே அடிமை வேலை பார்க்கச் சொல். கையில்லாத உன் அப்பா என்ன வேலை செய்யப்போகிறார்?” என்றபடி ”அவ்வளவுதான் பேச்சு முடிந்தது” என்று டாகூர் திரும்பினார்.

ஒருகணம் என்ன நடந்தது என்று அவனுக்குப் தெரியவில்லை. அந்த மாதிரி தருணங்களை பிறகு தொடர்ந்து அவன் அடைந்திருக்கிறான். எல்லா சந்தர்ப்பத்திலும் ஒரு கணத்தில் முற்றிலும் பிறிதொன்று, ஒருபோதும் அறியாத ஒன்று, வெளியே இருந்து வந்து தன்மேல் ஏறுவதாக அவனுக்குத் தோன்றியதுண்டு. அவன் குனிந்து அருகே நின்றிருந்தவனின் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி ஓங்கி ஒரே வெட்டில் டாக்கூர் கழுத்தை வெட்டினான்.

ஹக் என்னும் மூச்சு ஒலியுடன், திகைத்த கண்களுடன், கழுத்தைப் பொத்தியபடி அவர் விழுந்து கைகால்கள் உதைத்துக்கொண்டு துடிக்கத் தொடங்கினார். இன்னொரு அடியாள் திகைத்து, குழம்பி, தடுமாறியபடி அவனை நோக்கி வர, அதே வீச்சில் அவன் தலையையும் வெட்டினான். இரண்டு பேரும் விழுந்தவுடன் பிறர் சிதறி ஓடினார்கள்.

கையில் அரிவாளுடன் நின்று அவன் உரக்க கத்தினான்.

“இதோ பார், நான் ஜெயிலுக்குப் போவேன். ஆனால் என்னுடைய் அப்பா அம்மா இங்கேதான் இருப்பார்கள். என்னுடைய மாடு திரும்பி வந்தாகவேண்டும். என் வீட்டிக்கு ஒருவன் கூட வட்டிக்காக இனி வரக்கூடாது. எவனாவது இதில் குறுக்கே வந்தான் என்றால் ஜெயிலில் இருந்து வெளியே வந்து மறுபடியும் அவர்களைக் கொல்வேன். அவர்கள் குடும்பத்தையே கொல்வேன். ஒவ்வொரு குழந்தையையும் வெட்டிக் கொல்வேன். அரிவாள் இனிமேல் எப்போதும் என் கையில்தான் இருக்கும் ஜாக்கிரதை.”

ஒவ்வொருவரும் வெவ்வேறு தொலைவில் நின்று அவனை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த நாளை பிறகு ராம்சரண் தன் உள்ளத்தில் கணம் கணமாக மீட்டிக்கொண்டது உண்டு. அன்று அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது, குரல் உடைந்திருந்தது, ஆனால் இன்னொரு பக்கம் அவன் கை உறுதியாக இருந்தது, அவன் வெட்டு மிகக்கச்சிதமாக விழுந்தது. அவன் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களையும் பார்த்துப் பேசினான். அவர்கள் ஒவ்வொருவரும் அவன் கண்களை ஒரு கணமேனும் பார்த்தனர். அவர்கள் அக்கண்களில் எதைக் கண்டார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அகம்நடுங்கி விட்டிருந்தனர். அந்த அச்சத்தை அவன் கண்டான். அது அவனை உள்ளூர நிறைவுகொள்ளச் செய்தது. கையில் அரிவாளுடன் அவன் திரும்பி நடந்தபோது ஒவ்வொரு காலடியிலும் அவன் உறுதியடைந்து கொண்டே இருந்தான்.

இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் இறந்தவனாகிய சிவ்குமார் யாதவ் பதற்றத்துடன் அவன் கூடவே நடந்துவந்தான். “என்ன செய்துவிட்டாய்? இதையா நீ செய்யவேண்டும்? ராம், அவ்வளவு பேசியதெல்லொம் இதற்காகவா?” என்று அவனிடம் கேட்டான். “உன் கையெல்லாம் ரத்தம் ராம். உன் உடை ரத்தத்தால் நனைந்து ஒட்டியிருக்கிறது. நீ கசாப்புக்கடைக்காரன் போலிருக்கிறாய். நாம் அவ்வளவு பேசியது இதற்காகவா?”

“எனக்குத் தெரியவில்லை… எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்று ராம்சரண் பதில் சொன்னான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:33

குரு நித்யா காவிய முகாம், 2025, கடிதம்

அன்பு ஜெ, 

காவிய முகாம் தந்த மன எழுச்சியில் வீட்டிற்கு திரும்பாமல் வேறு, வேறு இடங்களுக்கு சென்று விட்டு நான்காவது தத்துவ முகாமிற்கு வெள்ளிமலை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது படித்த ‘மழைக்குப்பின்’ என்ற கட்டுரை தந்த மன நகர்வில் இதை எழுதுகிறேன். 

வெள்ளிமலையில் கடந்த மூன்று வருடங்களாக காவிய முகாம் நடந்து வருகிறது. எல்லா வருடமும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வருடம் எனக்கு மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தது.  முதலில் அதன் பல தரப்பட்ட தலைப்புகள். அது எனக்கு நீர் வண்ண பேழையை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு பேழையில் எத்தனை வண்ணங்கள். ஒவ்வொரு அமர்வுக்கு முன்னும் ஒரு ஆவலும், எதிர்பார்ப்பும் இருந்தது. 

கவிஞர் இசை எடுத்த ‘கம்பராமாயணத்தில் காதல் பாடல்கள்’ அமர்வு காற்றில் இறகு பறந்து செல்வது போன்ற உணர்வை அளித்தது. அதே உணர்வை உள்ளடங்கிய தொனியில் பைஸ் காதிரி எடுத்த ‘கசல்’ கவிதை பாடல்கள் அமர்வும் உண்டாக்கியது. நெய்தல் தினை பாடல்கள் அமர்வில், அந்த நிலப்பெண்களின் ‘காத்திருத்தல்’ குறித்து அவர் கூறியது, சிறுகதைகளில் இசை வர்ணனைகள் அமர்விற்காக எடுத்திருந்த அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ரி’-யில் வத்ஸலா ராமுவின்(காளை) வருகைக்காக காத்திருத்தல் என்ற உணர்வுநிலை – அந்த காத்திருப்பு சங்கபாடலிலிருந்து, பண் இசை, பக்தி இயக்கம் வழியாக வளர்ந்து ராமனுக்காக காத்திருத்தலின் வலி தியாகையரின் ‘சலமேல ரா, சாகேத ராமா’ வில் செவ்வியலானதன் பின்புலம் மனதில் மின்னி மறைந்தது. 

அதேபோல தமிழின் மூத்த படைப்பாளிகள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் பார்த்து உரையாடுவது, அதன் வழியாக நாம் அடையும் தெளிவு. தேவதேவன் ஒரு உணர்வு நிலையாகவே நடமாடுகிறார். அனைத்தையும் கலைத்து கலைத்து இறுதியில் எஞ்சுவதை பற்றி மட்டுமே பேசுகிறார். அப்படியே சோ.தர்மனிடம் சென்றால் நிலத்தை அகழ்ந்து ரத்தமும், சதையுமாக ஒன்றை எடுத்து வீசி எறிகிறார். இன்னொரு புறம் இளம்படைப்பாளிகள் சுனில் கிருஷ்ணன், அஜிதன், நவீன், சுசித்ரா, ரம்யா, கிரிட்டிக் விக்னேஷ் ஹரிஹரன் போன்றவர்களின் கதை குறித்த அவதானிப்புகள், ஒரு கதை அழகியல் ரீதியாக எங்கே குறைபடுகிறது, அந்த கதையை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சபையிலேயே வரையறுத்து கூறும் நுட்பம் என பல திறப்புகளை உண்டாக்ககியது. அமர்வை நடத்தியவர்களின் பார்வையால்.

 

காத்திரமான எதிர்வினையை பெற்ற கவிஞர் வெயில் கவிதைகள் மற்றும் சோபா சக்தியின் மாதா சிறுகதை சார்ந்த விவாதங்கள் அரங்கில் முழுமை பெறவில்லை என்றாலும் வெளியே அதுகுறித்து பலவாறு விவாதிக்கப்பட்டு, அது மனதில் வளர்ந்து கொண்டே சென்றது.

இவையெல்லாம் சேர்ந்து ஒரு அலாதியான உணர்வை மனதில் ஏற்படுத்தியது. அதை நீட்டித்து கொள்ள வேண்டும் என்று அங்கிருந்து நேராக ஊட்டி நாராயண குருகுலத்திற்கு சென்று விட்டேன். நேற்று மாலை சுவாமி வியாச பிரசாத் நடராஜ குரு எழுதிய ‘Wisdom’ – The absolute is adorable புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை படித்து காட்டினார். அதில் ஒரு இடத்தில் நடராஜ குரு 

“இங்குள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்காக இல்லை, ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்ளவே இருக்கிறது” 

என்று கூறியிருப்பார். அந்த வரியின் போது எனக்கு  நீர் வண்ண பேழை நினைவிற்கு வந்தது. அந்தப் பேழையின் வண்ணங்கள் முயங்கி, முரணியங்கி ஒரே வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. இது எதன் பரவசம் என்று அப்போது உணர்ந்தேன்.

பணிவன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:32

தத்துவமும் சாதியமும்

நான் வேதாந்தம் உட்பட ஆன்மிக தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். அதற்கான சிறு குழுக்களிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் காலம்செல்லச் செல்ல ஒன்று தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சித்தாந்தமும் அதற்கான சாதியப் பின்புலம் கொண்டது. இங்கே அத்வைதம் என்றால் ஐயர்கள். விசிஷ்டாத்வைதம் என்றால் ஐயங்கார்கள். சைவசித்தாந்தம் என்றால் பிள்ளைமார் அல்லது முதலியார்கள். அவ்வளவுதான்.

தத்துவமும் சாதியமும்

 

Unbeknownst to us, Gulliver’s Travels and Alice in Wonderland were written as polemical works, which later became classics. Some of Immanuel Kant’s and Hegel’s polemical works are considered outstanding philosophical treatises.  

 

Polemics and literature
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2025 11:30

June 20, 2025

வெளிநாடுகளில் நான்

ஒரு கடிதம் வந்தது, மிக ஆக்ரோஷமானது. எனக்கு அவ்வப்போது இத்தகைய கடிதங்கள் வரும். அவற்றை அப்படியே பிரசுரித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் ‘வேண்டாம், அவற்றிலுள்ள வசைகள் மனதை தொந்தரவு செய்கின்றன’ என்றனர். ஆகவே இப்போது அவற்றை வெளியிடுவதில்லை. வழக்கமாக ஏப்ரல் 22 வாக்கில் என் பிறந்தநாளில் வாழ்த்துக்கள் வருவதை ஒட்டி ‘இன்னுமா நீ செத்து தொலையவில்லை’ வகை கடிதங்கள் வரும். அதிகமும் அவை மதக்காழ்ப்பு கொண்டவை. ஆனால் அறம், அரசியல் கொள்கை என ஏதாவது பாவனையைச் சூடிக் கொண்டிருக்கும். தமிழகத்தில் அந்தவகை கடிதங்கள் வரும் ஒரே எழுத்தாளன் நானே என நினைக்கிறேன் (எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)

என்னை தங்கள் மதங்களுக்கு எதிரானவன் என்று கற்பனைசெய்துகொள்பவர்களின் கடிதங்கள்தான் மிகுதி. என்னை பிராமண எதிர்ப்பாளன் என்றும் ,இந்து வெறுப்பாளன் என்றும், பெரியாரிய எதிர்ப்பாளன் என்றும், கிறிப்டோ கிறிஸ்தவன் என்றும் பலவகையாக வசைபாடி  கடிதங்கள் வருகின்றன. வசைகள் எனக்கு புதியவை அல்ல. அவற்றிலுள்ள அந்த ஆவேசம்தான் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் விந்தையாக இருக்கும். நாட்டிலுள்ள எத்தனையோ அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லாதவர்கள் எந்த அதிகாரமும் இல்லாத ஓர் எழுத்தாளன் மேல் இத்தனை ஆவேசத்தை ஏன் காட்டுகிறார்கள்? எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் உண்மையான காரணமா?

இந்தக் கடிதம் இன்னொரு வகை. என் லண்டன் பயணக் குறிப்பை ஒட்டி எழுதப்பட்டது.  வெளிநாட்டுவாழ் தமிழர்கள் பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதை ‘பீற்றிக்கொள்வதற்காக’ நடத்தும் இலக்கிய அமைப்புகளை ‘ஏமாற்றி’ நான் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறேன் என்று குற்றம்சாட்டியிருந்தார் கடிதமெழுதிய பகைநண்பர். அதற்காக நான் அவர்களை நான் பொய்யாகப் புகழ்கிறேன். இது ஒரு மோசடி. இப்படி புகழுக்கு அலையும் ஆட்களை செருப்பாலடிக்கவேண்டும்…. (செப்பல் அடி! இது ஏதோ தொல்காப்பிய செய்யுள் இலக்கணம் என உண்மையில் நான் நினைத்தேன். ஓரிரு வடிகளுக்குப் பிறகுதான் பிடிகிடைத்தது) இப்படியே இன்னும் பல.

நான் அவருக்கு பதில் எழுதவில்லை. ஏனென்றால் அந்தப் பதிலால் எந்தப் பயனும் இல்லை. அதை எழுதுபவர் சீர்தூக்கி பார்த்து, உண்மையெனப் பட்டதை எழுதுபவர் அல்ல. ஏதோ ஒரு வெறுப்பு, அதற்கு இது ஒரு காரணம், அவ்வளவுதான். அந்தக் கடிதத்தின் மின்னஞ்சலை வைத்துப் பார்த்தால் அது மதக்காழ்ப்புதான். ஆனால் அதற்கு ஒரு முற்போக்கு- திராவிட முகமூடியை மாட்டிக்கொள்வது இப்போதைய மோஸ்தர். பிராமண சாதிக்காழ்ப்புக்குக்கூட இடதுசாரி முகமூடிகள் புழக்கத்தில் உள்ளன. நான் அதைப்பற்றி யோசிப்பதை விட்டுவிட்டேன். ஆனால் பின்னர் தோன்றியது, அது ஒரு பொதுப்புத்திப் பதிவாக இருக்கலாம் என. எங்காவது அது பேசப்பட்டிருக்கலாம். ஆகவே அதற்கான ஒரு பதிலை பொதுவெளியில் சொல்லலாம் என தோன்றியது.

முதல் விஷயம், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அழைக்கப்படுபவர்களில் சினிமா, டிவி சார்ந்தவர்களே மிகப்பெரும்பான்மை. பட்டிமன்றப் பேச்சாளர்கள், மதச்சொற்பொழிவாளர்கள் அடுத்தபடியாக. அண்மையில் சாதாரண மிமிக்ரி கலைஞர்கள், டிவிப் பாடகர்கள் அழைக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் அல்லது அறிஞர்கள் அனேகமாக அழைக்கப்படுவதே இல்லை. அண்மையில்தான் ஓரிரு எழுத்தாளர்கள் அரிதாக நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். (அதிலும் என் பங்கு சிறிது உண்டு. இலக்கிய அமைப்புகள் எவரை எல்லாம் அழைக்கிறார்கள் என்று நான் கடுமையாகத் தொடர்ந்து எழுதி அந்த அமைப்புகளுக்கு ஓர் அழுத்தத்தை உண்டுபண்ணினேன் என நினைக்கிறேன்).

ஆனால் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டால் மட்டுமே சிலர் கொதித்துக் கிளம்புகிறார்கள். அந்த எழுத்தாளர் தகுதியற்றவர் என்பார்கள். இன்னும் ’தரமான’ எழுத்தாளரை அழைத்திருக்க வேண்டும் என்பார்கள். அந்த எழுத்தாளர் மேல் இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்பார்கள். ஏதேதோ ‘அறிவார்ந்த’ காரணங்களை கண்டுபிடிப்பார்கள். வேறு எவர் அழைக்கப்பட்டாலும் தோன்றாத ஒவ்வாமை எழுத்தாளர்கள் வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டால் ஒருவருக்குத் தோன்றுகிறது என்றால் அது என்ன வகையான மண்டை? அவர்களின் பிரச்சினை உண்மையில் என்ன?

தமிழகத்தில் டிவி, சினிமா, அரசியல் தளங்களைச் சேர்ந்தவர்கள் தவிர எவரையுமே முக்கியமானவர்களாக எண்ணாதவர்களே எண்ணிக்கையில் மிகுதி. மற்ற எவர் கொஞ்சம் கவனம் பெற்றாலும் அடிவயிற்றை எக்கி வசைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏனென்றால் டிவி, சினிமா, அரசியலாளர்களை இவர்கள் அஞ்சி வழிபடுகிறார்கள். நாக்கில் நீர் சொட்ட பின்னால் அலைகிறார்கள். நாளெல்லாம் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளன், அறிஞன் என்பவன் தங்களைப் போன்ற சமானியன்தான் என நினைக்கிறார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் எப்போதுமே இலக்கியம், அறிவியக்கம் என ஒன்றை இவர்கள் அறிந்ததே இல்லை. ஆகவே, அவன் எப்படி தனக்கில்லாத முக்கியத்துவத்தைப் பெறலாம் என திகைக்கிறார்கள். இதுதான் அடிப்படையான உணர்வு. இது இங்கே தமிழகத்திலும் உள்ளதுதான். வெளிநாட்டிலும் இதே மனநிலையுடன் குடியேறி, இதே பாமரத்தனத்துடன் வாழ்பவர்கள் நம்மவர்கள்.

சரி அதை விடுவோம். என்னைப் பற்றிச் சொல்கிறேனே, நான் இதுவரை எந்த தமிழ் அமைப்பின் அழைப்பையும் ஏற்று வெளிநாடு சென்றதில்லை. பல்வேறு தமிழ் அமைப்புகளில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது. முற்றிலும் தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம் நான்  அந்த அமைப்புகளின் கடுமையான விமர்சகன் என்பதுதான்.அமைப்புகள் எழுத்தாளனை அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நானே அவ்வழைப்புகளை ஏற்கக்கூடாது, என் கோரிக்கையின் சாரம் இல்லாமலாகிவிடும்.

ஆனால் எனக்கு வெளிநாட்டுவாழ் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் நடத்தும் எந்த ஒரு பண்பாட்டு -இலக்கிய அமைப்புகள் மேலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ‘அவரவர் பிழைப்பை அவரவர் பார்க்கும்’ ஒரு காலகட்டத்தில் இப்படி பண்பாட்டு அமைப்புகளை நடத்துவதே மிக அரிதான ஒரு பொதுச்செயல்பாடுதான். அதில் என்னதான் போதாமைகள் இருந்தாலும் அச்செயல்பாடுகள் வழியாகவே ஒரு பண்பாடு தன்னை தக்கவைத்துக் கொள்கிறது. ஆகவே அதில் ஈடுபடும் அனைவருமே என்னுடைய மதிப்பிற்குரியவர்கள்தான்.

என்னுடைய எல்லா செயல்பாடுகளோடும் கூடுமானவரை மற்ற அமைப்புகளை இணைத்துக்கொண்டு செல்லவே முயல்கிறேன். அதற்காக எப்போதுமே திறந்த உள்ளத்துடன் முயல்கிறேன். அப்படி எல்லா அமைப்புகளுக்கும் நானே எழுதியிருக்கிறேன். என் செயல்பாடுகள் மேல் கடும் காழ்ப்புகளை வெளியிட்டவர்கள், தடைகளைச் செய்தவர்களின் அமைப்புகளுக்குக் கூட கடிதங்கள் எழுதி ஆதரவு கோரியிருக்கிறேன். என் செயல்பாடுகளால் அவர்களின் உள்ளம் மாறியிருக்கலாமே. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமலிருந்தாலும் என் செயல்பாடுகள் நிகழும், அதை நிகழ்த்தியும் காட்டுகிறேன். ஆனால் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மேலும் சிறப்பாக நிகழும். அவர்களும் தங்கள் செயல்பாடுகளை சிறப்பாக அமைக்க முடியும்.

நான் செய்த எல்லா வெளிநாட்டுப் பயணங்களும் என்னுடைய மிகநெருக்கமான நண்பர்களின் அழைப்பால்தான். சிலசமயம் அவர்கள் என்னை அழைக்க ஏதாவது அமைப்பின் கடிதங்களைப் பெற்றிருக்கலாம். என் நண்பர்களுடன் எனக்கிருக்கும் உறவு இலக்கியம் சார்ந்தது மட்டும் அல்ல. ஆண்டு முழுக்க நீடிக்கும் உரையாடல், தொடர்ந்து பல செயல்களில் இணைந்து செயல்படும் இசைவு, குடும்ப ரீதியான அணுக்கம் கொண்டவர்கள் அவர்கள். அண்மையில் இந்த நட்புகளை ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பாகத் திரட்டிக்கொண்டிருக்கிறோம், அந்த அடையாளத்துடன் உலகளாவச் செயல்படுகிறோம். ஆக, இன்று என்னை அழைப்பது நானே உருவாக்கிய என் அமைப்புதான்.

வேறு அமைப்புகள் சார்ந்து பயணம் செய்கிறேனா? அவ்வப்போது உண்டு. அண்மையில் ஷார்ஜா புத்தகவிழாவுக்கு சென்றுவந்திருந்தேன். அது அந்த இலக்கியவிழாவின் அழைப்பு. என் மலையாளப் பதிப்பாளர் டிசி புக்ஸ் ஏற்பாடு செய்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விழாக்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறேன். அனேகமாக எல்லா இலக்கியவிழாக்களுக்கும் எனக்கு முப்பதாண்டுகளாகவே அழைப்பு வருவதுண்டு. என் பெயர் தெரியாத இந்திய இலக்கிய அமைப்புகல் மிக அரிதானவை. ஆனால் ஆங்கிலத்தில் என் நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் கலந்துகொள்வதில் பயனில்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இன்று ஆங்கில நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இன்று இந்தியா முழுக்க அறியப்படும் எழுத்தாளன். எல்லா மொழிகளிலும் மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அத்துடன் என் இலக்கிய முகவரும் பதிப்பாளரும் எனக்கு இலக்கியவிழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவிற்கு விசா கிடைக்க அங்குள்ள அமைப்பு ஒன்றின் அழைப்பு தேவை. ஆகவேதான் எழுத்தாளர்கள் அமைப்புகளின் அழைப்பை ஏற்கிறார்கள். நான் முதன்முதலாக அமெரிக்கா சென்றபோது அப்படி ஓர் அழைப்புக்காக அங்குள்ள தமிழ்ச்சங்கத்தை அணுகினார்கள் என் நண்பர்கள்- வெறும் ஒரு ‘லெட்டர்பேட் கடிதத்துக்காக’ மட்டும். அது மறுக்கப்பட்டது. அதன்பின் அவர்களே ஒரு லெட்டர்பேட் அமைப்பை உருவாக்கி அந்த அழைப்பின் பேரில் என்னை அழைத்தனர். அங்கே நான் சென்றபின் செல்லுமிடமெல்லாம் என் இணையதளம் வழியாக நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்து, நாங்களே சந்திப்புகளை உருவாக்கினோம். பெரும்பாலும் நண்பர்களின் இல்லங்களில். அரிதாக சமூகக் கூடங்களி. பல ஊர்களில் அங்குள்ள எந்த நிகழ்ச்சிக்கும் வராத கூட்டம் என்னுடன் உரையாட வந்தது. அந்த வாசகர்களைக் கொண்டே இன்று விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

நான் சில இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவற்றைப் பார்த்தபிறகுதான் இந்த வசையர் தன் கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆனால் நான் அந்த அமைப்புகளின் அழைப்பின் பேரில், அவர்களின் செலவில் அங்கே செல்லவில்லை. நான் உள்ளூரில் இருப்பதை அறிந்து அவர்கள் அழைத்தார்கள். அந்த அமைப்பில் இருக்கும் ஏதேனும் நண்பர் வேண்டியவர் என்றால் அவருக்காக அங்கே சென்று அந்த கூட்டங்களில் கலந்துகொண்டதுண்டு. அது நட்புக்காக மட்டுமே.

என்னை இன்று அழைப்பவர்கள் ‘பிரபலங்களுடன் இணைந்து நிற்க விரும்பும் சாமானியர்கள்’ அல்ல. நாங்கள் இன்று ஓர் இலக்கிய அமைப்பாக இணைந்திருக்கிறோம். இதிலுள்ள ஒவ்வொருவரும் சிறந்த வாசகர்கள். ஒருவேளை அமெரிக்காவிலோ பிறநாடுகளிலோ உள்ள மிகச்சிறந்த இலக்கியவாசகர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் பொது அடையாளத்தின் கீழே ஒருங்கிணைந்திருக்கிறோம். ஆண்டு முழுக்க, அனேகமாக எல்லா வாரமும் இலக்கிய நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இடைவிடாமல் இலக்கிய உரையாடல்நிகழ்வுகளை நடத்தும் ஒரே அமைப்பு எங்கள் அமைப்புதான். இலக்கியம், கலாச்சாரம் சேர்ந்து சர்வதேச அளவிலேயே செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். ஆண்டுதோறும் அமெரிக்காவில் தத்துவ – இலக்கிய முகாம்கள் நிகழ்கின்றன. ஐரோப்பாவிலும் தொடரவிருக்கிறோம். அந்த வாசகர்கள் அளவுக்கு தகுதியும் ஈடுபாடும் கொண்டவர்கள் தமிழ்நாட்டிலேயே குறைவுதான்.

(இலக்கியவாசகர்களும் இலக்கியவாதிகளும் பேசிக்கொள்கிறார்கள். சந்திக்கிறார்கள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள். பயணங்கள் செய்கிறார்கள். இதில் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத அரசியல் அடிமாட்டுத் தொண்டர்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் எங்காவது இவர்களின் அரசியல் சலம்பல்கள் நிகழும் இடங்களில் தலைகாட்டியிருக்கிறோமா?)

ஆகவே வசைபாடுபவர்களிடம் ஒரு கோரிக்கை. அவ்வப்போது அவர்கள் மற்ற எழுத்தாளர்களையும் வசைபாடலாமே. நான் வசைகள் வழியாகவே இத்தனை அறியப்படுகிறேன். புகழை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதுதானே முறை?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.