குரு நித்யா காவிய முகாம், 2025, கடிதம்
காவிய முகாம் தந்த மன எழுச்சியில் வீட்டிற்கு திரும்பாமல் வேறு, வேறு இடங்களுக்கு சென்று விட்டு நான்காவது தத்துவ முகாமிற்கு வெள்ளிமலை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது படித்த ‘மழைக்குப்பின்’ என்ற கட்டுரை தந்த மன நகர்வில் இதை எழுதுகிறேன்.
வெள்ளிமலையில் கடந்த மூன்று வருடங்களாக காவிய முகாம் நடந்து வருகிறது. எல்லா வருடமும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வருடம் எனக்கு மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தது. முதலில் அதன் பல தரப்பட்ட தலைப்புகள். அது எனக்கு நீர் வண்ண பேழையை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு பேழையில் எத்தனை வண்ணங்கள். ஒவ்வொரு அமர்வுக்கு முன்னும் ஒரு ஆவலும், எதிர்பார்ப்பும் இருந்தது.
கவிஞர் இசை எடுத்த ‘கம்பராமாயணத்தில் காதல் பாடல்கள்’ அமர்வு காற்றில் இறகு பறந்து செல்வது போன்ற உணர்வை அளித்தது. அதே உணர்வை உள்ளடங்கிய தொனியில் பைஸ் காதிரி எடுத்த ‘கசல்’ கவிதை பாடல்கள் அமர்வும் உண்டாக்கியது. நெய்தல் தினை பாடல்கள் அமர்வில், அந்த நிலப்பெண்களின் ‘காத்திருத்தல்’ குறித்து அவர் கூறியது, சிறுகதைகளில் இசை வர்ணனைகள் அமர்விற்காக எடுத்திருந்த அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ரி’-யில் வத்ஸலா ராமுவின்(காளை) வருகைக்காக காத்திருத்தல் என்ற உணர்வுநிலை – அந்த காத்திருப்பு சங்கபாடலிலிருந்து, பண் இசை, பக்தி இயக்கம் வழியாக வளர்ந்து ராமனுக்காக காத்திருத்தலின் வலி தியாகையரின் ‘சலமேல ரா, சாகேத ராமா’ வில் செவ்வியலானதன் பின்புலம் மனதில் மின்னி மறைந்தது.
அதேபோல தமிழின் மூத்த படைப்பாளிகள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் பார்த்து உரையாடுவது, அதன் வழியாக நாம் அடையும் தெளிவு. தேவதேவன் ஒரு உணர்வு நிலையாகவே நடமாடுகிறார். அனைத்தையும் கலைத்து கலைத்து இறுதியில் எஞ்சுவதை பற்றி மட்டுமே பேசுகிறார். அப்படியே சோ.தர்மனிடம் சென்றால் நிலத்தை அகழ்ந்து ரத்தமும், சதையுமாக ஒன்றை எடுத்து வீசி எறிகிறார். இன்னொரு புறம் இளம்படைப்பாளிகள் சுனில் கிருஷ்ணன், அஜிதன், நவீன், சுசித்ரா, ரம்யா, கிரிட்டிக் விக்னேஷ் ஹரிஹரன் போன்றவர்களின் கதை குறித்த அவதானிப்புகள், ஒரு கதை அழகியல் ரீதியாக எங்கே குறைபடுகிறது, அந்த கதையை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சபையிலேயே வரையறுத்து கூறும் நுட்பம் என பல திறப்புகளை உண்டாக்ககியது. அமர்வை நடத்தியவர்களின் பார்வையால்.
காத்திரமான எதிர்வினையை பெற்ற கவிஞர் வெயில் கவிதைகள் மற்றும் சோபா சக்தியின் மாதா சிறுகதை சார்ந்த விவாதங்கள் அரங்கில் முழுமை பெறவில்லை என்றாலும் வெளியே அதுகுறித்து பலவாறு விவாதிக்கப்பட்டு, அது மனதில் வளர்ந்து கொண்டே சென்றது.
இவையெல்லாம் சேர்ந்து ஒரு அலாதியான உணர்வை மனதில் ஏற்படுத்தியது. அதை நீட்டித்து கொள்ள வேண்டும் என்று அங்கிருந்து நேராக ஊட்டி நாராயண குருகுலத்திற்கு சென்று விட்டேன். நேற்று மாலை சுவாமி வியாச பிரசாத் நடராஜ குரு எழுதிய ‘Wisdom’ – The absolute is adorable புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை படித்து காட்டினார். அதில் ஒரு இடத்தில் நடராஜ குரு
“இங்குள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்காக இல்லை, ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்ளவே இருக்கிறது”
என்று கூறியிருப்பார். அந்த வரியின் போது எனக்கு நீர் வண்ண பேழை நினைவிற்கு வந்தது. அந்தப் பேழையின் வண்ணங்கள் முயங்கி, முரணியங்கி ஒரே வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. இது எதன் பரவசம் என்று அப்போது உணர்ந்தேன்.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



