Jeyamohan's Blog, page 83
June 26, 2025
மனு நூற்கொடை இயக்கம்
அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு
சூழலியல் ஆவணப்படமான ‘தி கிரீன் பிளானட்‘ படத்தில் சூழலியலாளர் டேவிட் அட்டன்பரோ, ஆளிவிதைச் செடிவகையின் பரவல் குறித்து விவரித்திருப்பார். கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் நிறைந்த நகர்ப்புறப் பகுதிகளிலும்கூட அச்செடிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அங்குள்ள நெருக்கடிச்சூழல்களைத் தாக்குப்பிடித்து வளர்கின்றன. காற்று, நீர் மற்றும் விலங்குகளின் உரோமங்களில் ஒட்டிக்கொண்டு பயணித்து வருகிற சின்னஞ்சிறு விதைகள் நகர்ப்புற சாலைகள் மற்றும் சுவர்களில் உள்ள விரிசல்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
அவ்வாறு விரிசல்களுக்குள் தஞ்சமடையும் விதைகள் தகுந்த காலச்சூழல் வரும்வரை தீராப்பொறுமையுடன் காத்திருக்கின்றன. உகந்த சூழ்நிலை உருவாகி உரிய சத்துக்களும் தண்ணீரும் பெற்றடைந்த பிறகு அவ்விதைகள் முளைத்து வேர்பரப்பி வளர்ந்தெழுகின்றன. சிறுகொடிகளாகவும் படர்கொடிகளாகவும் ஆளிவிதைகள் முளைத்து ஊதாமஞ்சள் பூக்களாகப் பூத்துச் செழிக்கின்றன. நகரத்து தார்ச்சாலைகளிலும் கான்கிரீட் சுவர்களிலும் பச்சையிலைகளைப் படரவிட்டு சுருள்சுருளாக முளைத்திருக்கும் அச்செடிகள் ஒவ்வொன்றுமே… இறுகிப்போன கற்பரப்பில் நம்பிக்கையின் வெளிச்சம் படிந்த நூறாயிரம் சிறுபூக்களை மலர்த்துகின்றன.
மண்ணில் புதைந்து இருளைத்தாங்கும் சின்னஞ்சிறிய விதைகளின் கனவென்பது வானின் வெளிச்சத்தைத் தங்கள் இலைகளால் வாழ்நாள் வரைப் பருகிமகிழ்தலே. தன்னிலிருந்து இன்னொன்றாகத் தன்னையே பிறப்பித்து பல்லாயிரம் தலைமுறைகள் தாண்டி விதைகள் தங்கள் கனவுகளைக் காப்பாற்றுகின்றன. மனித மனம் இவ்வாழ்வின் மீது மீளமீள நம்பிக்கையடைவதற்கான நற்குறியீடு இது. அவநம்பிக்கையும் அறமின்மையும் பெருகத்துவங்கியுள்ள சமகாலத்தில் அன்பை முளைப்பிக்கும் செயல்கள் அனைத்துமே மானுடத்தின் மீட்சிக்கானவை. அத்தகைய மானுடச் செயல்பாடுகளின் சிறுநீட்சியே ‘மனு அறக்கட்டளை‘.
மனு அறக்கட்டளைச் செயல்பாடுகளின் நல்லசைவாக ‘மனுநூல்கொடை இயக்கம்‘ துவங்கப்படுகிறது. இச்செயலசைவின் முதன்மைநோக்கம் என்பது மிகச்சிறந்த புத்தகங்களை சமகால இளைய வாசிப்பு மனங்களுக்கு கொடையாக அளிப்பதே. புத்தகங்களைத் தேர்ந்த நேர்த்தியுடன் உருவாக்கி, அவைகளை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைத்தலே இந்நூல்கொடை இயக்கத்தின் பணியாக அமையும். வாசிப்பு எனும் முன்னெடுப்பின் வழியாக நிறைய இருதயங்களைச் செயலைநோக்கி விருப்புறச்செய்வது மனுநூல்கொடையின்அகநோக்கங்களுள் ஒன்று. முதற்கட்டமாக நான்கு புதிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பணி துவக்கமடைந்துள்ளது. அதில் முதலாவதாக வருவது தாவரயியலாளர் டாக்டர் லோகமாதேவியின் இரு நூல்கள்.
தந்தைப்பெருமரம்கல்லெழும் விதைகுக்கூ காட்டு பள்ளியில் வருகின்ற 28ம் தேதி வெளியீட்டு நிகழ்வு
எதும்மற்று பொட்டல் மலையாக இருந்த திருவண்ணாமலையை பசுமையாக மாற்றும் முயற்சியை 35 வருடங்களுக்கு முன்பு துவங்கி இப்போது வரை செயலாற்றும் சுப்பிரமணி, இந்தியாவெங்கும் மரபு விதைகளை தேடி அலையும் யாத்ரிகன் யசோக், மரபு காய்கறி உற்பத்தி சார்ந்து ஒரு பெரும் இயற்கையியல் அறிவை தன்னகத்தே வைத்து, தமிழகத்தின் எண்ணற்ற குறுங்காடுகளை உருவாக்கி வரும் கருப்பசாமி நண்பர்கள், காளிங்கராயன் பாசன பகுதிகளில் சத்தம் இல்லாமல் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்லுயிர் சூழலை காக்கும் பச்சைஇதயம் பார்த்திபன் ஆகியோர் நூலை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் துவக்கம் நீங்கள்தான். ஒவ்வொரு நாளும் நன்றியோடு நினைத்து கொள்கிறோம்.
நன்மையைத் தருவித்தலின் வழியாக ஒரு மனிதக் கனவை நம்மால் நீளாயுள் கொண்டதாக நிலைநிறுத்த முடிகிறது.
எந்த ஒரு உயிரின் தன்மையும் எல்லா உயிர்களிடமும் நிறைந்திருப்பதை நாம் அறிதலும், அந்தப் புரிதலினால் நம் அகம் நிறைதலும் இவ்வாழ்வை அருளப்பட்டதாக மாற்றுகிறது. ஏதோவொரு ஒற்றைமனிதரின் நீட்சிதான் இங்குள்ள எல்லா மனிதர்களும் என்கிற தெளிவுண்மையை நாமடைவது அக்கணம்தான். எல்லா கோட்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள். ‘எல்லா நுட்பங்களையும் ஆராய்ந்து திறனடையுங்கள். ஆனால், ஒரு மனித ஆன்மாவைத் தொடும்போது மற்றொரு மனித ஆன்மாவாகவே இருங்கள்‘ என உளவியலாளர் கார்ல் யுங் சொல்வது அந்த மானுட ஞானத்தைத்தான்.
மானுடத்தை போதிக்கும் அத்தனை தத்துவங்களையும் கைதொழுது வணங்கி மனுநூல்கொடையின் கனவாக இதை விதையூன்றுகிறோம்.
Manu Foundation
மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்
எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை தங்களுடைய பிள்ளைகள் எதையுமே படிப்பதில்லை என்றும், பெரும்பாலான நேரங்களை ஏதேனும் மின்னணு ஊடகத்தில் செலவழிக்கிறார்கள் என்றும் மனக்குறைபட்டு பெற்றோர் எழுதுபவைதான்.
தமிழ்ச்சூழலில் ஒரு பெற்றோர் அவ்வாறு உணர்வதே மிக அரிதானது. நான் பார்த்தவரை மிக இளவயதிலேயே செல்பேசிகளையும் கணிப்பொறிகளையும் குழந்தைகளின் கைகளுக்கு எடுத்துக்கொடுப்பவர்கள் பெற்றோர்தான். அவர்கள் அதில் கணிப்பொறி விளையாட்டுகளையும் சூதாட்டங்களையும் விளையாடும்போது பெற்றோர் அடையும் பரவசத்தை காண்கிறேன். குழந்தைகளின் வெறியைக் கண்டு தன் பிள்ளைகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக நினைத்துக்கொள்பவர்களை நிறையவே கண்டிருக்கிறேன். ரயிலில் ஏதேனும் ஒரு தாய் ’எந்நேரமும் கம்ப்யூட்டர் தாங்க கைய வச்சான்னா எடுக்க மாட்டான்’ என்று தாள முடியாத பெருமிதத்துடன் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
இந்த மனநிலையை உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னுடைய குழந்தைகள் ஒரு அச்சிட்ட நூலை புரட்டிப் பார்த்தால்கூட படிப்பிலிருந்து கவனம் விலகிவிடும் என்று பதறியடித்து பிடுங்கி அப்பால் வைக்கும் அதே பெற்றோர்தான் செல்போனை அவர்களிடம் எடுத்துக் கொடுத்து அதில் கொட்டிக்கிடக்கும் மின்னணு விளையாட்டுகளை விளையாட வைக்கிறார்கள். அதிலுள்ள சமூக வலைத்தளங்களிலெல்லாம் இணைந்துகொண்டு முகம் தெரியாதவர்களிடம் எல்லாம் உரையாடி என்னவென்றே தெரியாத தொடர்புகளை உருவாக்க வழியமைக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ’போர்னோகிராபி’க்குள் செல்லவும் ராஜபாதை அமைத்துக்கொடுக்கிறார்கள்.
ஓரிருமுறை ரயிலில் இந்தப்பெற்றோருடன் பேசிப்பார்த்திருக்கிறேன். இதிலுள்ள அபாயங்களை சொல்லி புரியவைக்க முயன்றிருக்கிறேன். அவர்கள் மூர்க்கமாக ‘அதெல்லாம் அவன் ரொம்ப பிரில்லியண்ட். அவனுக்கு அதெல்லாம் தெரியும்’ என்று தவிர்த்துவிடுகிறார்கள்.
உண்மையான பிரச்னை இருப்பது நம் பெற்றோர்களிடம்தான். அவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் என்பது நவீன அறிவியல் என்ற எண்ணம் இருக்கிறது. அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. தொழில் நுட்பமே அறிவியல் என்றோ எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம் என்பது பெரும்பாலும் இன்று நுகர்வின் கருவிதான். நுகர்வியத்தைத்தான் நவீன அறிவியல் உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பெரும்பாய்ச்சல் என்ன என்று நமக்குத்தெரியாது. தகவல்சேகரிப்பு, ஆய்வில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரியாது. ஏனென்றால் நமக்கு எந்த அறிவுத்துறையில் அறிமுகம் இல்லை. ’உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைச் சொல்லுங்கள்’ என்றால் பெரும்பாலானவர்கள் செல்பேசி, தொலைக்காட்சி அல்லது ஏதாவது நுகர்வு இயந்திரங்களைத்தான் சொல்வார்கள்.
இந்த மனப்போக்கு இருப்பதனால் நுகர்வுப்பொருட்களாகிய செல்போன் போன்றவற்றின் மேல் பெரும் மோகம் நம் மக்களுக்கு இருக்கிறது. அது உண்மையில் பழங்குடிகளுக்கு புதியபொருட்களின் மீது இருக்கக்கூடிய ஒருவகையான அப்பாவித்தனமாக மோகம் தான். Gods Must Be Crazy படத்தில் வானத்தில் இருந்து விழும் கொக்கோகோலா புட்டி மீது அந்த மக்கள்ம் அடையும் வியப்பும் பரவசமும்தான் அது.. அம்மக்கள் அந்தப் புட்டியை கடவுளாக வழிபடுவதும், அது அவர்கள் வாழ்க்கையை அழிக்க ஆரம்பிப்பதும் நமது செல்போன் மோகத்துடன் ஒப்பிடப்படவேண்டியது.
இன்று செல்போன் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சமூகம் தன்னுடைய அடுத்த தலைமுறையையும் செல்போனுக்குள் கொண்டு செல்கிறது. செல்போனுக்கு அடிமையான பெற்றோருக்கு அதில் தெரிந்தது ஒன்றிரண்டு விஷயங்கள்தான். ஆனால் அவர்களின் குழந்தைகள் உள்ளே செல்லும்போது அவர்கள் மிக எளிதில் மிகப்பெரிய ஒரு வலைச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களால் கையாளப்படத்தக்க அளவுக்கு சிறியது அல்ல. எந்த ஒரு தனிமனிதனும், அவன் எத்தனை மெய்ஞானியாக இருந்தாலும் இன்றைய சமூக வலைத்தளங்களின் விரிவை, இன்றைய கணிப்பொறி சூதுகளின் உலகை, தனித்து கையாள முடியாது. தானாக விரும்பி அதிலிருந்து வெளிவரவும் முடியாது. அதற்கு அதற்கே உரிய வழிமுறைகள் தேவை. அதற்கு நீண்ட காலம் ஆகும். இன்று அதற்குள் செல்லாமல் இருப்பதே மிகச்சிறந்தது.
இவ்வாறு ஒரு சமூகத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் இதில் உழன்று கொண்டிருக்கும்போது அதில் ஒரு குழந்தை மட்டும் தனித்திருப்பதென்பது சாதாரண ஒன்றல்ல. அந்தச் சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு கட்டிடத்தின் இருக்கும் ஒரு செங்கல் மட்டும் தனித்திருப்பது போல. அந்தச் செங்கல் மீதுதான் அக்கட்டிடத்தின் மொத்த எடையும் வந்து அழுத்தும். அந்த செங்கல்லுக்கு உடையும் வாய்ப்பும் அதிகம். ஒரு குழந்தை பள்ளியில், நண்பர்கள் மத்தியில் வேறுபட்டிருப்பது என்பது பெரும் வதை. அந்த வேறுபடுத்தலின் வழியாக உருவாகும் தனிமையை வெல்லவே சற்று புத்திசாலியான குழந்தைகள் கூட பிற குழந்தைகள் விளையாடும் அதே ’கேம்ஸ்’ உலகில், ’சோஷியல் மீடியா’ உலகில் சென்று சேர்கிறார்கள்.
இதை நாம் தடுப்பது என்பது ஒருவகையில் அவர்கள் மேல் இன்னொரு வன்முறையை செலுத்துவதாகவே அமையும். தடுத்து, கட்டுப்படுத்தி இன்றைய தொழில்நுட்ப விளையாட்டுகளின், சமூக வலைத்தளங்களின் உலகிலிருந்து எந்தக்குழந்தையையும் வெளியே கொண்டு வந்துவிட முடியாது. தன்னடிமைத்தனம் (Addiction) என்று சொல்லப்படும் எதற்கும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழி என்பது மேலும் தீவிரமான ஒன்றைப் பற்றிக்கொள்வதுதான். மதுஅடிமைகள் மதுவை நிறுத்திவிட்டால் அதே அளவுக்கு ஆட்கொள்ளும் இன்னொன்றுக்கு செல்லவில்லையென்றால் அதிகபட்சம் ஓராண்டுக்குள் மீண்டும் மதுவுக்குள் திரும்பிச் செல்வார்கள். அந்த இன்னொன்று என்ன என்பதுதான் கேள்வி.
அந்த இன்னொன்று புத்தக வாசிப்பாக இருக்கலாம். புத்தகங்களுக்குள் சென்ற ஒருவர் அதன் பிறகு அந்த பிரம்மாண்டமான அறிவுலகத்தையும் வீச்சையும் விரிவையும் அறிந்த பிறகு ஒருபோதும் மின்னணு உலகத்திற்குள் வரமாட்டார்கள். ஆனால் அதில் மிகக்குறைவான பேரால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அனைவருக்கும் அது இயல்வதல்ல. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அத்தனை எளிதாக புத்தகங்களுக்குள் செல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் மின்னணு ஊடகங்களில் உள்ள மின்னும் விரைவுக்குக் கண்ணும் மனமும் பழகிவிட்டால் புத்தகத்தின் நிலைத்த உலகம் மிகமிக அன்னியமானதாக இருக்கும். காணொளிக்கு பழகிய ஒருவரால் ஒரு பக்கம்கூட படிக்கமுடியாது. ஏற்கனவே நிறைய படித்துக்கொண்டிருந்தவர் கூட அந்த திறனை இழக்கக்கூடும். குழந்தைகளால் அதிலிருந்து வெளியேறி வாசிப்புக்கு வர முடிவதேயில்லை.
குழந்தைகள் புத்தகங்களுக்குள் செல்ல வேண்டுமென்றால் அந்தப் பெற்றோர் ஏற்கனவே புத்தகங்களுக்குள் வாழ்பவர்களாக இருக்கவேண்டும். பெற்றோரில் ஒருவர் புத்தகங்களின் மீதான் வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் கூட குழந்தைகள் புத்தகங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவர்கள் மின்னணு ஊடகங்களுக்கும் இணைய வலைத் தொடர்புகளுக்கும் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நமது தமிழ்ச்சூழலில் குடும்பப்பெண்கள் குழந்தைகளை புத்தகங்களிலிருந்து அகற்றி செல்போன் உலகுக்குள் செலுத்துவதில் முழுமூச்சாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர் வாசிப்பவர்களாக இருந்து ,மிக இளம் வயதிலேயே வீட்டில் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, வாசிப்பின் சுவையை இளமையிலேயே குழந்தைகளுக்கு அளித்துவிட்டால் அவர்கள் வாசிப்பிற்குள் செல்வது மிக எளிது. மேலை நாடுகளில் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது அதுதான். இன்று அதை ஒரு இயக்கமாகவே அமெரிக்க்கா போன்ற நாடுகளில் முன்னெடுக்கிறார்கள். நமது நாட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட சிறு வாசிப்பு குழுக்களை அல்லது வாசிப்புச் சமூகங்களை உருவாக்கி அதற்குள்ளேயே குழந்தைகளை ஈடுபடுத்தி வாசிப்பு உலகிற்குள் கொண்டு வர முடியும்.
இன்னொன்று வாசிப்புக்கு இணையாக செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது. எங்களுடைய அனுபவத்தில் செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு புத்தக வாசிப்பதை விட உதவியாக இருப்பவை நேரடிச் செயல்பாடுகள் தான். அதாவது பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் போன்ற களச்செயல்பாடுகள். அவை நேரடியாக இயற்கையை அறிமுகம் செய்கின்றன. குழந்தைக்குள் இருக்கும் அறிந்துகொள்ளும் துடிப்பை, செயலாற்றும் விசையை அவை வளர்க்கின்றன. குழந்தை மிக எளிதாக அவற்றில் ஈடுபடமுடிகிறது. புத்தக வாசிப்பில் இருப்பது உடல் ரீதியான ஒரு சோம்பல், கூடவே மூளை ரீதியான ஒரு செயலூக்கம். குழந்தைகளின் உடல் மிகச்செயலூக்கமானது என்பதனால் அமர்ந்து வாசிப்பது என்பது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பகல் முழுக்க பறவையைத்தேடி காட்டுக்குள் அவர்களால் செல்ல முடியும். ஒரு தாவரத்தை அடையாளம் காண்பதற்கான முழுநாளும் தோட்டத்திற்குள் சுற்றிவர முடியும். அது அவர்களை இன்னும் தீவிரமாக ஈடுபடுத்துகிறது.
அப்படி செயல் வழியாக ஒரு கற்றலும் அதன் துணைச் செயல்பாடாக வாசிப்பும் இருக்குமென்றால் குழந்தைகளை வாசிப்புக்குள் எளிதில் கொண்டுவர முடியும் என்பது எங்களுடைய நடைமுறை அனுபவமாக இருக்கிறது. மிகக்குறைந்த அளவில் அதை செய்து பார்க்கிறோம். அச்செயல்முறை தொடர் வெற்றியைத்தான் அளித்து வருகிறது அதிகபட்சம் நூறு குடும்பங்களுக்குள் மட்டுமே எங்களுடைய இச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தின் மனநிலையை வைத்துப்பார்த்தால் அந்த நூறு குடும்பங்களே அரிதானவர்கள், தனித்தவர்கள் என்று தோன்றுகிறது. அந்த எண்ணிக்கையைப் பெருக்கவே தொடர்ந்து முயல்கிறோம்.
காவியம் – 67
கானபூதி சொன்னது. நான்கு கோட்டைகளுக்குள் எட்டு அரண்மனை வளாகங்களும், பதினெட்டு ஆலயங்களும், பன்னிரண்டு வணிகர் சந்தைகளும், இருபத்தாறு உழவர் சந்தைகளும், ஒவ்வொரு சாதிக்கும் உரிய சிற்றாலயங்களும், அவர்களுக்கான குடி சபைக் கூடங்களும், ஆயிரம் சத்திரங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கூடங்களும் கொண்ட பிரதிஷ்டானபுரிக்குள் சமர்கள் மைய வாசல்கள் எதனூடாகவும் உள்ளே நுழைய அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கான எட்டு வழிகள் வேறு இருந்தன.
கோதாவரியின் கரையின் சதுப்பில், நாணல்கள் செறிந்த சரிவில் இருந்த அவர்களின் புற்குடில்களில் இருந்து அந்த பாதைகள் தொடங்கின. கோதாவரியின் பெருக்கை வந்தடைந்த அழுக்கு நீரோடைகளின் விளிம்பினூடாக நகருக்குள் புகுந்தன. எதிரே வருபவருக்கு சுவரோடு ஒட்டி வழிவிடவேண்டிய அளவுக்குச் சிறிய பாதைகள் அவை. இருபுறமும் ஓங்கிய மாளிகைகளின் பின்புறச் சுவர்கள் குறுகிய இடைவெளிவிட்டு நின்றன. அவற்றின் நடுவே உள்ள பாதை மடிந்து மடிந்து செல்லும் சுரங்கப்பாதைகள் போல் இருண்டு, குளிர்ந்திருந்தன. பெருச்சாளிகளும் அவ்வப்போது தென்படும் காட்டுப்பூனைகளும் தவிர அங்கே சமர்கள் மட்டுமே நடமாடினர். அவர்களுக்கே அந்த வழி தெரிந்திருந்தது.
ஒவ்வொரு மாளிகையும் யானையின் குதவாய் போல சிறிய பின்வாயிலைக் கொண்டிருந்தது. அங்கே சென்று நின்று அவர்கள் தங்கள் கையிலுள்ள சிறிய மணியை ஒலிக்கவேண்டும். வாயில் திறந்து அவர்கள் உள்ளே விடப்படுவார்கள். அங்கே கழிப்பறைகளின் கற்பலகையிலுள்ள துளைக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் மரவாளியில் மலம் நிறைந்திருக்கும். வாளியில் இருந்த உமியின் மேல் விழுந்த மலத்தின்மேல் சாம்பலை போட்டு மூடி ஈ மொய்க்காமல் செய்திருப்பார்கள். வாளியில் இருந்து மலத்தை எடுத்துவந்து மரப்பீப்பாய்களில் கொட்டி அவற்றுடன் இணைந்த மாட்டுத்தோல் பட்டையை தோளில் மாட்டிக்கொண்டு, தூக்கியபடி குனிந்து நடந்து கோதாவரிக் கரைக்கு வருவார்கள்.
அவர்களின் நிலம் நோக்கிய கண்களுக்கு முன் அவர்களின் கால்கள் ஒன்றையொன்று முந்த முயல்வதுபோல எடையுடன் பதிந்து எழுந்து சென்றுகொண்டிருக்கும். கோதாவரியின் சதுப்பை வந்தடைந்ததும் அங்கே ஒவ்வொருவருக்கும் அவர்களே வெட்டி வைத்திருக்கும் குழியில் அந்த மலத்தைக் கொட்டி, பீப்பாயை கழுவி அதன்மேல் ஊற்றி, குழியின் மலத்தின் மேல் மண்போட்டு மூடிவிட்டு மீண்டும் தங்கள் குடில்களுக்குச் சென்று உணவுக்கான கலங்களுடன் அதே வழியில் நகருக்குள் நுழைவார்கள். ஒவ்வொரு இல்லத்தின் பின்வாயிலிலும் நின்று இன்னொரு வகை மணியோசையை எழுப்புவார்கள். இம்முறை மிகவும் காலம் தாழ்த்தியே அக்கதவுகள் திறக்கும். பணிப்பெண்கள் வந்து முந்தையநாள் அவ்வில்லத்தில் உண்டு மிஞ்சிய எச்சிலையும், புளித்தவையும் கெட்டவையுமான உணவையும் ஒன்றாகக் கலந்து அவர்களின் கலங்களில் கொட்டுவார்கள்.
குடிலுக்குத் திரும்பி வந்து அடுப்பு மூட்டி அந்த உணவை மீண்டும் கொதிக்கச் செய்தால் மட்டுமே உண்ண முடியும். உழைப்பும், அலைச்சலும் தனித்தனியாக என்றாலும் உணவு ஒன்றாகவே நிகழவேண்டும் என்பது சமர்களின் வழக்கம். அனைவரும் உணவுடன் திரும்பிவந்து, எல்லா உணவும் கொதித்து இறக்கப்பட்டபின் அத்தனை உணவையும் ஒன்றாகக் கலந்து அனைவருக்கும் தேவைக்கேற்ப தாமரை இலைகளில் பகிர்ந்து, கூடி அமர்ந்து உண்பார்கள். அனைத்து உணவும் அனைவருக்கும் என்பது தலாதேவியின் ஆணை. பன்றிமுகம் கொண்ட அந்த தெய்வத்தை நகரிலுள்ள உயர்குடியினர் வராஹி என்று வழிபட்டார்கள்.
கரைச்சதுப்பில் அமர்ந்து உண்பது அவர்களின் கொண்டாட்டம். மெல்லும், சுவைக்கும், உணவை பகிரும், மேலும் கோரும் ஒலிகள் அங்கே நிறைந்திருக்கும். அதன் பின் அங்கேயே நாணல்கள் மேல் மரநிழலில் படுத்து துயில்வார்கள். மாலையில் மீண்டும் நகரெங்கும் சென்று அந்நாளின் குப்பைகளை எல்லாம் அள்ளி மீண்டு வரவேண்டும். அவற்றில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்ட பின் எஞ்சியவற்றை ஆற்றங்கரைக் குழிகளில் புதைக்கவேண்டும்.
அக்குப்பைகளில் இருந்து எடுத்துச் சேர்த்த காய்களையும் கனிகளையும் கலந்து கலங்களில் புதைத்து வைத்து ஓராண்டு கழித்து எடுத்து கலங்களில் காய்ச்சி வடித்து எடுக்கப்படும் மதுவை முதலில் தலாதேவிக்குப் படைப்பார்கள். பின்னர் குடித்தலைவர் முதல் குடுவையை அருந்திவிட்டு அனைவரையும் வாழ்த்துவார். அதன்பின் ஆண்களும் பெண்களும் கூடி அமர்ந்து குடிப்பார்கள். கோதாவரியில் தூண்டிலிட்டு பிடித்த மீனையும், கரைச்சதுப்பில் கண்ணியிட்டு பிடித்த சிற்றுயிர்களையும் சுட்டு உடன் உண்பார்கள்.
இரவில் நெடுநேரம் அவர்களில் சிலர் பாடிக்கொண்டிருப்பார்கள். நீர்க்காயின் குடுவையில் தவளைத் தோலும் பெருச்சாளித் தோலும் சேர்த்து செய்யப்பட்ட குறுமுழவையும், துடியையும் உடன் முழக்குவார்கள். இளையோர் ஆடத்தொடங்குவர். அப்பாடல்களில் உயிர்நீத்து கோதாவரியில் கரைந்து மறைந்த அவர்களின் மூதாதையர் எழுந்து வந்தனர். அவர்களின் நூற்றெட்டு தெய்வங்களும், ஆயிரத்தொரு பூதங்களும், பன்னிரண்டாயிரத்து எட்டு பேய்களும் எழுந்து வந்தன. அவை நிழல்களாக மாறி அவர்களுடன் சேர்ந்து நடனமிட்டன.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆடிக்களைத்து விழுவது வரை அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அவர்கள் அனைவரும் உறங்கிவிட்ட பின்னர் அப்பாடலை மூதாதையரும் தெய்வங்களும் பூதங்களும் பேய்களும் சேர்ந்து தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும். விடியும்வரை நாணல்பூக்கள் இளங்காற்றில் அப்பாடலுக்கு அசைந்துகொண்டிருக்கும்.
தமி இளமையில் சமர்களியிலேயே சிறந்த பாடகியாகவும், அனைவரும் விழுந்தபின் இறுதியாக களைத்து மண்ணில் சரியும் நடனக்காரியாகவும் இருந்தாள். அவளுடைய குரல் மூங்கில்கீறி உருவாக்கப்பட்ட சீனி என்னும் இசைக்கருவிபோல கூர்மையாக ஒலித்தது. அதன் ஓசை கோதாவரியின் அலைதிகழ்ந்த நீர்ப்பரப்பின் மேல் காற்றில் ஏறி நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கே இரவில் பெரும்பறவைகள் போல பாய்விரித்து சென்றுகொண்டிருக்கும் வணிகர்களின் படகுகளைச் சென்றடைந்தது. அவர்கள் அது ஏதோ நீர்த்தெய்வத்தின் குரல் என எண்ணி அஞ்சி எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தனர். காற்றலைகளுக்கு ஏற்ப எழுந்தமைந்தும், கரைந்து மறைந்து மீண்டுவந்தும் அக்குரல் அவர்களுடன் விளையாடியது. கரையின் இருளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டும், அஞ்சி சொல்லிழந்து குறுகியமர்ந்தும் அவர்கள் அப்பாடலைக் கேட்டனர்.
ஒருநாள் அத்தனைபேரும் சரிந்தபின்னரும் தமி அதே வேகத்துடன் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நிலவொளி நிறைந்த இரவில் தன் பாடல் அலைகளாக காற்றிலேறி கோதாவரியின்மேல் செல்வதை அவள் கண்ணால் கண்டாள். அதை பிடிப்பதற்காக அவள் அதன்பின்னால் ஓடினாள். நீரில் பாய்ந்து அதை துரத்திச்சென்றாள். அவள் செல்லுந்தோறும் அவள் குரல் அவளிடமிருந்து விலகி விலகிச்சென்றது. ஏழுநாட்களுக்குப் பின் அவள் திரும்பி வந்தபோது இன்னொருத்தியாக இருந்தாள். அவள் அதன் பின் எவரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, எவரிடமும் உரையாடவில்லை.
அதன்பின் அவள் பாடிய பாடல்கள் முற்றிலும் அறியாத மொழியில் அமைந்திருந்தன. அந்த மொழியை சமர்கள் முன்னரே அறிந்திருந்தனர், அது பைசாசங்களின் மொழி. அவர்கள் குடியில் அவ்வப்போது எவரேனும் திடீரென்று அந்த மொழியைப் பேசத்தொடங்கி விடுவதுண்டு. அவர்கள் கோதாவரியின் மறு கரையில் இருந்த காட்டுக்குள் வழிதவறிச் சென்றோ, கோதாவரியில் நீர்ப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு மீளும்போதோ அந்த மொழி அவர்களுக்குள் குடியேறியிருக்கும். அவர்கள் பைசாசங்களைப் பார்த்துவிட்டிருப்பார்கள்.
தமி கருவுற்றபோது அவளுக்கு கணவன் என எவரும் இருக்கவில்லை. சமர்களில் அது அனுமதிக்கப்பட்டிருந்தது. அவள் ஆற்றைக் கடந்துசென்று பைசாசத்துடன் கூடி அக்கருவை அடைந்தாள் என்று சலை சொன்னாள். “அந்தக் குழந்தையைப் பாருங்கள். அதன் கரிய உருவமும் வாயிலுள்ள வெண்பற்களும் பிசாசுக்குரியவை. அந்தக் கண்கள் பிசாசின் கண்கள்…”
தமி ஒவ்வொரு நாளும் தன்னுள் திரும்பிச்சென்றுகொண்டே இருந்தாள். அவள் கோதாவரியின் ஒரு சுழி என ஆகிவிட்டதாகச் சலை சொன்னாள். அருகே சென்றால் பிறரையும் இழுத்து தன் ஆழத்துக்குக் கொண்டுசென்றுவிடுவாள் என்று தோன்றினாள். அவள் மகன் அவள்மேல் எந்நேரமும் ஒட்டியிருந்தான். அவளுக்கு முதுக்குப்பின் இரண்டு விழிகள் முளைத்துவிட்டதுபோல. அவள் கடந்துசெல்லும்போது அவனுடைய பார்வையே அவர்களைத் தொட்டுச்சென்றது. அவர்கள் எவரையும் பார்க்காத கண்கள் என்றும், அவர்கள் அனைவரையும் நன்கறிந்த கண்கள் என்றும் ஒரே சமயம் தோன்றச்செய்தவை.
எப்போதும் நகருக்குள் முதலில் நுழைபவள் தமிதான். விடிவெள்ளி தோன்றியதுமே அவள் தன் பீப்பாயை ஒரு தோளிலும் மகனை மறுதோளிலும் சுமந்தபடி இருண்ட பாதையினூடாக கூன்விழுந்த சிற்றுடலுடன் விரைந்து அடிவைத்து செல்வாள். அவளுடைய இல்லங்களைத் தூய்மைசெய்து முடிக்க அவள் நான்குமுறை கோதாவரிக் கரைக்கு வந்துசெல்லவேண்டியிருக்கும். முதற்காலையின் ஒளி எழும்போது அவள் பணி முடிந்துவிட்டிருக்கும். அதன்பின் குளித்துவிட்டு, உணவுக்கான மண்கலத்துடன் மீண்டும் நகருக்குள் நுழைவாள்.
செல்லும் வழியெங்கும் அவள் தன் மகனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். தான் அறிந்த கதைகளை, தன் கண்முன் காண்பவற்றை அவள் சொல்லிக்கொண்டே சென்றாள். ஆனால் பேச்சின் நடுவே அவள் தன்னை முற்றிலுமாக இழந்தாள். நீண்டநேரம் கடந்து அவளுக்கு தன்னுணர்வு வரும்போது அவள் அது வரை பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஆனால் என்ன பேசினாள் என்பதே நினைவில் மீளவில்லை. உண்மையில் பேசிக்கொண்டிருந்தாளா? அல்லது வெறும் ஒலிகளை எழுப்பினாளா? இரவுகள் வெளியே காற்று சுழன்றடிக்கும்போது அவள் தன் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் தூக்கத்தில் ஆழ்ந்தாள். கனவில் அவள் அவனிடம் வேறொரு மொழியில் பேசிக்கொண்டிருந்தாள். அவளே அந்த மொழியை கண்டு திகைத்து விழித்துக்கொண்டாள். அவள் மகன் விழித்த கண்களுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் என்ன கேட்டுக்கொண்டிருந்தான் என அவள் வியந்தாள்.
தன் உள்ளம் பித்துகொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அந்தப் பித்தைத்தான் மகனுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேனா என அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். அவள் நீண்டநாள் உயிர்வாழப்போவதில்லை. அவள் உடல் நலிந்துவருவதிலேயே அது தெரிந்தது. அவள் இறந்த பின் அவன் என்ன ஆவான்? அவனால் எவரிடமும் பேசமுடியவில்லை. எழுந்து நிற்கக்கூட கால்களில் ஆற்றல் இல்லை. ஆடையில் இறங்கிய பேன் அதற்கேற்ப உருமாறிவிடுவதுபோல அவன் அவளுடைய உடலுடன் இணைந்து விட்டான் என்று சலை சொன்னாள். “ஆடைப்பேன் ஆடையுடன் அழியும்” என்றாள். ஆனால் அவளுக்கு வேறுவழி இருக்கவில்லை.
ஒருநாள் அவள் அவனை தூக்கிக்கொண்டு மலத்தொட்டியுடன் திரும்ப நடக்கும்போது ஒரு மெல்லிய குரல் ஏதோ சொன்னது. அவள் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். அவள் செவிகளுக்குள் அக்குரல் ஒலித்தது. அவள் உடலில் இருந்தே எழுவதுபோன்ற குரல். அவள் திகைப்புடன் சுற்றிலும் பார்த்தாள். இருண்ட அப்பாதையில் எவரும் இல்லை. மீண்டும் அது கேட்டபோதுதான் அவன் அதைச் சொல்வதை அறிந்து அதிர்ந்தாள். அவனை சுழற்றி தரையில் வைத்து அவன் உதடுகளைப் பார்த்தாள். அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவள் அதுவரை கேட்காத மொழி. ஆனால் கனவில் அவள் கேட்ட மொழி அல்ல அது. அது மானுடமொழிதான்.
அச்சொற்களை அவன் எப்போது கேட்டான்? அவள் அவர்கள் செல்லும் வழிகளை முழுக்க மீண்டும் மீண்டும் தன் எண்ணத்தில் ஓடவிட்டுப் பார்த்தாள். ஒருமுறை அவனை அவள் அந்த சிறுபாதையின் ஓரிடத்தில் ஒரு கல்லின் மேல் அமரச்செய்துவிட்டு ஓர் இல்லத்திற்குள் நுழைந்தாள். திரும்பி வந்து பார்த்தபோது அவன் அங்கில்லை. அவனை காட்டுப்பூனை கொண்டுசென்றிருக்கலாம் என அவள் அஞ்சினாள். கூச்சலிட்டபடி அந்தச் சிறு சந்தினூடாக முன்னும் பின்னும் ஓடினாள்.
அவன் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தான். ஒரு மாளிகையின் அடியில் அழுக்குநீர் வருவதற்காக போடப்பட்டிருந்த மடை வழியாக நுழைந்து அப்பால் சென்று அங்கே அமர்ந்து அப்பால் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் மண்டியிட்டு அந்த மடையினூடாக தவழ்ந்து சென்று அவன் காலைப்பிடித்து இழுத்தாள். அவன் வழுக்கி அவளிடம் வந்தபோது அவன் உடல் மறைத்திருந்த மடை திறந்து அப்பால் நிறைந்திருந்த ஒளி தெரிந்தது. அது ஒரு கூடம் என்று தோன்றியது. அங்கே பலர் எதையோ ஓதும் ஒலி கலைந்து முழக்கமாக கேட்டது. அங்கே அவர்கள் பூஜை போல எதையோ செய்துகொண்டிருந்தார்கள்.
அவன் அந்த முழக்கத்தை மட்டும்தான் கேட்டிருந்தான், அதை மொழியாக மாற்றிக்கொண்டுவிட்டான். அவன் பேச ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவளால் புரிந்துகொள்ள முடியாத பேச்சு அது. அவள் அதை எவரும் கேட்கக்கூடாதே என்று அஞ்சினாள். நெருப்பை வணங்குபவர்கள் பாடும் சொற்களை அவள் குடியினர் செவிகளால் கேட்டால் அச்செவிகளில் ஈயம் உருக்கி ஊற்றப்படவேண்டும் என்ற விதி உண்டு என அவள் அறிந்திருந்தாள். அச்சொற்களைச் சொல்லும் சமர்களின் நாக்குகள் வெட்டி தீயிலிடப்படவேண்டும் என்று அந்நகரில் ஆணை இருந்தது. அவன் சொல்வது அந்தச் சொற்களைத்தானா?
அவன் உதடுகளில் அச்சொற்கள் எப்போதுமிருந்தன. அவன் தூங்கும்போதும் அச்சொற்கள் அவன் உதடுகளை அசையச்செய்தன. அவள் அவனருகே விழித்து அமர்ந்து அவன் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏன் அச்சொற்கள் ஏன் அவனிடம் வந்துசேர்ந்தன? புழுக்களுக்கு ஓர் உயிர், விலங்குகளுக்கு இரண்டு உயிர், பறவைகளுக்கு மூன்று உயிர், மனிதர்களுக்கு நான்கு உயிர், சொற்களுக்கு நூறு உயிர் என அவள் அறிந்திருந்தாள். சொற்கள் உயிரிழப்பதில்லை. அவை ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நாவிலும் வேறு உயிர்களை அடைகின்றன. அச்சொற்கள் அவனை தேர்ந்தெடுத்திருக்கின்றன. அவனை அவை அழைத்துச் செல்கின்றன. எங்கே?
அவள் ஒருகணம் தன்மேல் குளிர்ந்த நீரலை வந்து அறைந்ததுபோல் உணர்ந்தாள். கொழுந்து விட்டெரியும் தீயில் தன் மகனின் உடல் எரிந்து துடித்து துவள்வதைக் கண்டாள். ஊன் வெந்து, கொழுப்பு நீலத்தழலாகி, கபாலம் வெடிப்பதை அருகென நோக்கினாள். நெஞ்சில் கைவைத்து அலறிக்கொண்டு எழுந்து நின்றாள். பின்னர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அருகே அமர்ந்து அவன் உதடுகளை இரு விரல்களால் பற்றி அவற்றின் அசைவை நிறுத்தினாள். அப்போது அவன் விரல்கள் அசைந்தன, அவ்வசைவில அச்சொற்கள் இருந்தன. அவன் மெலிந்த கால்களின் அசைவிலும் அச்சொற்கள் திகழ்ந்தன.
அவள் அவன் அருகே அமர்ந்து விடியும்வரை அழுதுகொண்டிருந்தாள். தன்னால் ஒன்றும் செய்யமுடியாதென்று உணர்ந்தாள். ’கோதாவரியை அதில் வாழும் மீன்கள் திசைதிருப்ப முடியாது’ என்பது அவள்குடியின் பழமொழி. முதல் ஒளி வானில் விடிந்த நேரத்தில் தன் மகனை தோளிலேற்றிக்கொண்டு கோதாவரியின் பெருக்கை நோக்கி நின்றபோது அவள் உள்ளம் அடங்கியிருந்தது. அதில் ஒரு சொல்கூட எஞ்சியிருக்கவில்லை.
அதன்பின் அவள் அமைதியாக தன் வேலைக்குச் சென்று மீண்டாள். தன் முதுகின்பின் மகன் இருப்பதையே மறந்துவிட்டவள் போலிருந்தாள். அவன் தொடர்ந்து அச்சொற்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். அவை அவளுக்குள்ளும் வெளியிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அவள் அவனை தனியாக விடவே இல்லை. சுமைதூக்கும்போதும், உணவுச்சட்டியை ஏந்திச்செல்லும்போதும் எப்போதும் தன் தோளிலேயே வைத்திருந்தாள். தரையில் இறங்க அவன் முயன்றபோதெல்லாம் அவனை உறுமி, அதட்டி மீண்டும் அமரச்செய்தாள்.
ஒருநாள் அவள் மலப்பீப்பாயை சுழற்றி தோளிலேற்றும்பொருட்டு குனிந்த போது அவன் அவள் தோளில் இருந்து வழுக்கி இறங்கிவிட்டான். அவளால் தோல்வார்களை விடுவித்து எடைமிக்க பீப்பாயை உடனே நிலத்தில் வைக்க முடியவில்லை. அதற்குள் அவன் விழுந்தும் எழுந்தும் ஓட ஆரம்பித்தான். அவள் திரும்பியபோது அவன் சுவரை கையால் தொட்டுக்கொண்டும் பிடித்துக்கொண்டும் இரண்டு கால்களால் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஒருகணம் அதை நம்ப முடியாமல் நின்றபின் அவள் அவனைத் தொடர்ந்து ஓடினாள். அப்போதுதான் எடையில்லாமல் ஓடுவதற்கு தன் உடல் பழகியிருக்கவில்லை என உணர்ந்தாள். கால்கள் தடுக்கி மீண்டும் மீண்டும் அவள் அழுக்குநீரில் விழுந்தாள். கூன்விழுந்த அவளால் நிலத்தையே பார்க்கமுடிந்தது. ஆகவே சுவர்களில் முட்டிக்கொண்டாள். பின்னர் மூச்சிரைக்க அழுதபடி அமர்ந்தாள். கைகளை விரித்து ”மால்யா! மால்யா!” என அழைத்து கதறினாள்.
அவன் மறைந்துவிட்டிருந்தான். அவள் அவன் சென்றிருக்கக்கூடிய வழிகளை எண்ணிக் கணக்கிட்டு அந்த இடுங்கிய பாதையினூடாகத் தேடினாள். பின்னர் ஒரு கணத்தில் அவன் எங்கிருப்பான் என அவளுக்கு தெரிந்தது. அவள் அங்கே சென்றபோது அந்த அழுக்குநீர் மடைக்குள் அவன் தவளைபோல செறிந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
அவள் அதற்குள் நுழைந்து அவன் கால்களைப் பற்றி இழுத்தாள். அவன் அவள் பிடியை உதறி அவளை உதைத்தான். அவள் “வா! வந்துவிடு… வேண்டாம்!” என்று முனகியபடி அவனை மீண்டும் மீண்டும் இழுக்க அவன் அவளை ஓங்கி உதைத்து உறுமினான். அப்போது அவ்வொலியைக் கேட்ட ஒருவன் மறுபக்கம் ஒளியை மறைத்தபடி குனிந்து பார்த்தான். அவர்களைக் கண்டதும் அவன் அஞ்சியவன் போல குளறியபடி கூச்சலிட்டான்.
தமி மகனை வெறியுடன் இழுத்து எடுத்துக்கொண்டு மடையில் இருந்து வெளியே வந்தாள். அப்பால் கூச்சல்களும் ஆணையோலிகளும் கேட்டன. எவரோ ஒரு மணியை விரைவாக அடித்தனர். அவள் அவனை அள்ளி நெஞ்சோடு அணைத்தபடி இடுங்கலான அழுக்குப்பாதையில் விழுந்தும் எழுந்தும் மூச்சொலி முழக்கமிட ஓடினாள். விரைந்து ஓடமுடியாமல் நெஞ்சு உடையும்படி மூச்சு அழுந்த அப்படியே கீழே விழுந்தாள். அவளை துரத்தி எவரோ வரும் ஓசைகள் எங்கெங்கோ எதிரொலிகளாக கேட்டன. அவள் புரண்டு பெருகிச்செல்லும் கழிவுநீரோடைக்குள் விழுந்தாள். அது சரிந்த நிலத்தில் விசையுடன் சுழித்தும் எழுந்தமைந்து அலைகொண்டு கோதாவரி நோக்கி ஓடியது. அவளையும் அவனையும் அது கவ்வித் தூக்கிக் கொண்டு சென்றது.
செல்லுந்தோறும் அதில் பிற கழிவோடைகள் இணைந்துகொள்ள நீர் பெருகி மேலும் விசைகொண்டது. அவர்களை அது பாறைகளில் முட்டிச் சுழற்றியும், கரைகளில் அறைந்து திரும்ப இழுத்தும் கொண்டுசென்றது. ஒசையுடன் அருவியென நீர் விழுந்துகொண்டிருந்த ஓரு பள்ளத்திற்குள் தூக்கி வீசியது. அதன் சுழியிலிருந்து எழுந்து தலையை நீருக்குமேல் தூக்கியபோது மால்யன் தன் அன்னையின் தலையில் முன்நெற்றியில் ஒரு சிவந்த வாய் திறந்திருப்பதுபோல புண் உருவாகியிருப்பதைக் கண்டான். அவள் மீண்டும் நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அலறியபடி அவளை நோக்கி நீந்திச்சென்றான். அவனுடைய மெலிந்த கைகால்களால் நீரின் விசையை ஆளமுடியவில்லை. அவன் மீண்டும் நீரில் மூழ்கினான்.
ஓடை அவனை கோதாவரியை நோக்கி தூக்கி வீசியது. ஆற்றுநீரில் விழுந்து அவன் ஆழத்திற்குள் சுழற்றிச் செலுத்தப்பட்டான். அவனைச்சுற்றி மட்கிய இலைகளும் குப்பைகளும் சுழன்றன. ஆனால் நீர் ஒளிகொண்டிருந்தது. மிக அப்பால் அவன் ஆழம் நோக்கிச் சுழன்று சுழன்று செல்லும் தமியைக் கண்டான்.
(மேலும்)
க.அ.செல்லப்பன்
திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது, அதற்கு நிதியுதவி அளித்த முதல் பத்து பேரில் செல்லப்பனும் ஒருவர். ‘தி.மு.க. வரலாறு’, ‘மாநில சுயாட்சி’ போன்ற நூல்களை பாரி நிலையம் மூலம் பதிப்பித்து வெளியிட்டார்.
க.அ.செல்லப்பன் – தமிழ் விக்கி
சென்னையில் ஒரு வாசிப்புக் குழுமம்
உங்களை சென்னையில் குமரகுருபரன் விருது விழாவில் சந்தித்தல் பெருமகிழ்சி. உங்களின் எழுத்துக்கள் என்றுமே செயலின் ஊக்கம். எழுதின் மூலமாக அனைத்து வழிகாடலுக்கும் நன்றி.
சென்னை போன்ற பெருநகரில், வேலை சார்ந்து குடிபெயர்ந்த இளைஞர்கள் பல்லாயிரம். வேலையின் தீவிரம், நிறுவனத்தில் அழுத்தம் , கிடைக்கும் வார இறுதிகளிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு என நாட்கள் தள்ளி, சமூக வலைதள வம்புகளில் தலையை விட்டு, நேரமே இல்லை என புலம்பும் இளைஞர்கள் மிகுதி. வாசிப்பில் ஆர்வம் மிக மிக அபூர்வம்.
ஒரு செயலூகமாக முன்னெடுபாக, வாசிப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், அனைத்து சனிக்கிழமைகளிலும் அண்ணா நகர் டவர் பார்க்கில் கூடி, காலை 6.30 முதல் 9.30 முதல் வாசித்து, பின் நண்பகல் வரை புத்தகங்கள் பற்றி உரையாடுகிறோம். ‘ Tower Reads’ என்ற இந்த வாசிப்பு குழுமம் திரு.கிருஷ்ணா அவர்களால் முன்னெடகபட்டு, 90 வாரங்களை தொட்டு தொடர்ந்து நடக்கிறது. இங்கு குறிப்பிட்ட கூறும்படியாக, தீவிர தமிழ் இலக்கிய புத்தகங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு , உங்களது ‘ அறம் ‘ என எழுத்தாளர்களின் சிறந்த, எளிய படைப்பினை அறிமுகப்படுதி, இலக்கிய வாசிப்பை முன்னெடுகிறோம்.
இங்க கூடும் சராசரி இளைஞர்களின் வயது 30கும் குறைவே. பூங்காவில் நடக்கும் முதியோர்களுக்கு நாங்கள் இன்றும் ஏலியன்கள். அவ்வபோது வந்து தங்கள் உலகியல் சாதனைகளை ஓதி விட்டு அறிவுரை கூறிவிட்டு செல்வார்கள். நாங்களும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
எழுத்தாளர்கள் செல்வேந்திரன், மனுஷ், லக்ஷ்மிஹர் எங்களை சந்தித்து , உரையாடி ஊக்கமளித்தனர்.
நான் இந்த குழுமம், தொடர் வாசிப்பு , உரையாடல்கள் மூலம் அறிந்த சில புரிதல்கள்,
1. வாசித்ததை விவாதிக்கும் போது, கற்பனை மற்றும் புரிதல் விரிகிறது. அவர்வர்கள் தங்களுக்கு உகந்தவாறு நூல்களை பற்றி தொகுத்து கொள்ள உதவுகிறது.
2. நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் எளிதாக வசப்படுகிறது.
3. வாரம் முழுக்க கடும் மூளை/தொழில்நுட்ப உழைப்பில் உழன்று சோர்வுக்கையில், வார இறுதியில் சந்திக்கும் உற்சாகமும், வாசிக்க தன்முனைப்பு உருவாகிறது.
4. இலக்கியம் படித்தாலும் அந்நியமாக உணரும் நிலை வாய்க்காமல், சமூக நட்பு, குழு செயலூகம் கிடைக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/towerreads?igsh=MWhkazZkZzBmaGZldQ==
உங்களது வாழ்த்து எங்களை போல் இளம் வாசகர்களுக்கு விலைமதிப்பற்றது.
நன்றி,
கவின்
வாழப்பாடி, சேலம்.
kavin.selva@outlook.comஎழுத்தும் மனச்சோர்வும், கடிதம்
நான் உளச்சோர்வுக்கு மருந்தாக, டாக்டர் சொன்னபடி, நிறைய எழுதுபவள். அது எனக்கு உதவுகிறது. ஆனால் அதைப் பிரசுரிப்பதும் மற்றவர்கள் படிப்பதும் நல்ல விஷயம் அல்ல என்று தோன்றுகிறது. அது இன்னும் உளச்சோர்வைத்தானே அளிக்கும்?
எழுத்தும் சோர்வும், கடிதம்
You have a perfect balance of thought, and you are telling both the merits and demerits very clearly. I think you got this balance from your guru, who placed himself between east and west.
A perfect balanceJune 25, 2025
புதுவை வெண்முரசு கூடுகை – 83
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 83 வது அமர்வு 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் நண்பர் செ.அமுர்தவல்லி உரையாற்றுவார்.
நிகழ்விடம் :
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி:
வெண்முரசு நூல் – 9.
“வெய்யோன்”
பகுதி 6 விழிநீரனல்- 46 – 51
அத்தியாயம். (1 – 6 )
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இ.எம்.எஸ் என்னும் மெய்யான அறிஞர்.
அறிஞர் போன்ற சொற்களை நான் சாதாரணமாக எவரையும் குறிப்பிட பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் இளமைக்காலம் முதல் மெய்யாகவே பேரறிஞரான இ.எம்.எஸை பார்த்து வளர்ந்தவன் நான். இ.எம்.எஸ் இன்று இல்லை. அவருடைய அரசியலும் மங்கி வருகிறது. ஆனால் அவர் பெயர்சொல்லும் மகத்தான நூல்கள் நான்கு இன்னும் சிலநூறாண்டுகள் நீடிக்கும். பெரும் செவ்வியல் ஆக்கங்கள் அவை. அவற்றால்தான் அவர் அறிஞர் என்னும் அடையாளத்தை அடைகிறார்.
கழுமாடன்,வாள்- இரு நாடகங்கள் கோவையில்
அன்புள்ள ஜெ.,
கோவை மெய்க்களம் நாடகக் குழு தங்களின் ‘வாள்’ மற்றும் ‘கழுமாடன்’ நாடகங்களை மீண்டும் கோவையில் வரும் ஜூன் 29ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்ற இருக்கிறது.
ஹோப்ஸ் காலேஜ் அருகில் நிகழ்த்துக் கலைகளுக்கென புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மேடை-The Stage’ என்ற அரங்கில் காலை 11.00 மணிக்கு நாடகம் துவங்கும்.
சென்ற டிசம்பர் விஷ்ணுபுரம் விருது விழாவில் இந்நாடகங்களை காணத் தவறியவர்களுக்கும் கண்டவர்கள் நவீன அரங்கில் மீண்டும் காணவும் ஒரு வாய்ப்பு.
ஆர்வமுள்ளவர்கள், நண்பர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
நரேன்
இன்றைய கதைகளில் ஒருமைச்சிதைவு
இன்றைய கதைகளின் சித்தரிப்புச் சிக்கல்கள்
நீண்ட நாட்களுக்கு முன்பு, நான் அன்று உறுப்பினராக இருந்த காசர்கோடு திரைப்பட குழுமத்தில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்களை பார்ப்பதுண்டு. அவை வெவ்வேறு தூதரகங்கள் வழியாகவும், திரைக்குழுமம் வழியாகவும் இந்தியா முழுக்க சுழற்சியில் இருக்கும் படங்கள். ஹங்கேரிய, ருமேனிய படங்களே மிகுதி. சிற்றிதழ்கள் போலவே அவை ஒருவகையான சிறுசினிமாக்கள் என்று சொல்லலாம். மிகக்குறைவான செலவில் ஆனால் மிகுந்த தீவிரத்துடனும் ஆழ்ந்த கருப்பொருளுடனும் எடுக்கப்படுபவை. அவ்வாறு பார்த்த ஒரு படம் The Unknown Soldier`s Patent Leather Shoes.
இன்று ஒரு வாசகன் உணர்வதைவிட கலாச்சார ரீதியான அழுத்தம் கொண்ட படம் அது. புல்கேரியாவை ஆக்ரமித்திருந்த ஜெர்மானிய ஃபாஸிச படைகள் தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, விரட்டப்படுகின்றன. புல்கேரியா மீட்கப்படுகிறது. நாடே பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை மீண்டதை எண்ணி களியாட்டமிடுகையில் ஒரு பெண் மட்டும் துயரத்தில் இருக்கிறாள். அங்கு தங்கியிருந்த ஜெர்மானிய படையிலிருந்த ஒரே ஒரு படைவீரனிடம் அவளுக்கு உறவிருந்தது. அவன் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனுடைய நினைவுமட்டும் அவளிடம் எஞ்சியிருக்கிறது. அரசியல் வரலாறு ஆகியவற்றுக்கு அப்பால் மானுட உள்ளம் கொள்ளும் உறவு வேறொன்றாக, இது எதையுமே அறியாததாக இருக்கிறது.
அந்தப்படத்தை இங்கு இப்போது நினைவுகூர்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிக மங்கலாகவே எனக்கு அப்படம் நினைவில் இருக்கிறது. அந்தப்படம் ஃப்ரான்ஸ் மீண்ட களியாட்டத்தையே பெரும்பாலும் காட்சி பதிவுகளாக கொண்டிருந்தது. படம் முழுக்க உடல்கள் நடனமிட்டுக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் உடல்கள் அல்ல. என் நினைவில் எஞ்சுபவை உடல்களின் கீழ்ப்பகுதி மட்டும்தான். ஏனெனில் அந்தப்படம் முழுக்க ஒரு ஐந்தாறு வயது சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவனுடைய பார்வைக் கோணத்தில்தான் மொத்தக் காட்சியும் அமைந்துள்ளது. ஆகவே பெரும்பாலான காட்சிகள் அவனுடைய பார்வையின் உயரம் அளவுக்கு அக்கூட்டத்தின் இடுப்புக்குக் கீழ்ப்பகுதிகளும் கால் பகுதிகளும் தெரியும்படியாக வைக்கப்பட்டிருந்தன.
ஜப்பானிய இயக்குநர் ஒசு வின் பெரும்பாலான படங்கள் காமிரா கிட்டத்தட்ட தரையில் வைக்கப்பட்ட கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் தரையில் அமர்வது ஜப்பானிய பண்பாடு, அவருடைய படங்களில் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்கள் தரையில்தான் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது காமிராவும் அதேபோல அசைவில்லாமல் தரையில் அமர்வதுதான் இயல்பாகத்தான் இருக்கும். ஏனெனில் ஒரு சினிமா என்பது அதிலுள்ள ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வைக்கோணம் வழியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நல்ல இயக்குநரின் படங்களில் அந்தக் காமிராக் கோணம் எப்போதும் தெளிவாகப் பேணப்பட்டிருப்பதை பார்க்கலாம். இதை யார் பார்க்கிறார்கள், எந்த கோணத்தில் என்பது திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியமைப்புக்கும் முக்கியமானது.
அண்மையில் இளம்படைப்பாளிகள் எழுதும் சிறுகதைகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். குறிப்பாக பெயர்களைச் சொல்லி எதிர்விமர்சனத்தை வைத்து எவரையும் வருந்தச்செய்ய விரும்பவில்லை. மிகக்குறைவாகவே கவனம் கிடைக்கும் நம் சூழலில் எதிர்மறை விமர்சனம் என்பது சட்டென்று ஒரு சோர்வை அளித்துவிடக்கூடும் என்பதனால். ஆனால் இந்த விஷயத்தை கவனப்படுத்த விரும்புகிறேன்.
தினமணிக்கதிர், விகடன் போன்ற இதழ்களில் வரும் சிறுகதைகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கும் ஓர் இயல்பு அக்கதை சட்டென்று ஆசிரியர் பார்வைக்கு சென்று, அந்தக்கோணத்தில் ஒருபகுதி சொல்லப்பட்ட பிறகு மீண்டும் கதைமாந்தரின் கோணத்துக்கு திரும்பி வரும் என்பது தான்.
‘சந்திரன் விளையாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு உற்சாகமாக இருந்தது. ஏனென்றால் அப்போது கோடை விடுமுறை. அவனுடைய நண்பர்கள் எல்லாம் விளையாட வந்திருந்தார்கள். அவர்கள் தேரடியில் ஒரு பழைய சைக்கிள் வைத்து உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள்’
என்று ஆரம்பிக்கும் ஒரு கதை சந்திரனுடைய ஆளுமை, பார்வை ஆகியவற்றை முன்வைத்துவிடுகிறது. ஆனால் சட்டென்று கதை ஆசிரியர் கோணத்தில் திரும்பி –
‘சந்திரனுக்கு வயது எட்டு. மெலிந்த உடல் .கூடுகட்டிய நெஞ்சு. ஓர் அழுக்கான கால்சராயை சணல்கயிற்றை போட்டு இடுப்பில் முடிந்து வைத்திருந்தான்’
என்று மாறுகிறது என்று கொள்வோம். (நான் ஓர் உதாரணத்துக்காக இப்படி எழுதியிருக்கிறேன்) இது மிகப்பெரிய ஒரு அழகியல் பிறழ்வு. வாசகன் சந்திரனைப் பார்த்துவிட்டான். அதன் பிறகு சந்திரனுடைய உலகம் சந்திரனுடைய கண் வழியாக விரிவதுதான் அவனுக்கு இயல்பானதாக இருக்கும். மொத்தக் காட்சியையும் சந்திரனாக நின்று விவரிக்கும் கதையின் ஆசிரியர் சட்டென்று தன் வடிவில் உள்ளே வந்து சந்திரனை உட்படுத்தி அக்காட்சியை கூறத் தொடங்கும்போது உண்மையில் பார்வைக்கோணம் இரண்டாகிறது. அது புனைகதையின் மிகப்பெரிய விரிசலாக மாறிவிடுகிறது.
இந்தப்பிழையை முன்பு சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் செய்வதில்லை. ஏனெனில் அன்று பேரிதழ்- சிற்றிதழ் என்ற வேறுபாடு பெரிதாக இருந்தது. பேரிதழ்களில் எழுதி தேர்ந்து அங்கிருந்து சிற்றிதழ் எழுத்துக்கு வருபவர்கள் அநேகமாக எவருமே இருப்பதில்லை. சிற்றிதழில் எழுதுபவர்கள் சிற்றிதழ் சார்ந்த ஒரு வாசிப்பை அடைந்து, முன்னோடி எழுத்தாளர்களை மையமாக்கிய அன்றிருந்த ஏதேனும் ஒரு இலக்கிய குழுமத்தை சார்ந்து எழுத வந்தவர்களாக இருப்பார்கள். சுந்தர ராமசாமியிடம் இருந்தோ, தேவதேவனிடம் இருந்தோ, தேவதச்சனிடமிருந்தோ, ஞானக்கூத்தனிடமிருந்தோ, அசோகமித்திரனிடமிருந்தோ நேரடியாகவே சிறுகதைக் கலையைப் பயின்று எழுத வந்திருப்பார்கள். அவர்கள் சந்திக்கும் வடிவப்பிரச்னைகளும் பிழைகளும் வேறு உண்டென்றாலும் இது போன்ற அடிப்படைப் பிழைகள் அமைவதில்லை.
ஆனால் விகடன் குமுதத்தில் வரும் கதைகள் எப்போதும் இப்பிழைகளுடன் இருந்து வந்தன. சிவசங்கரி, அனுராதா ரமணன் போன்ற பல நூறு கதைகள் எழுதிய படைப்பாளிகளிடம் சர்வசாதாரணமாக இந்தப்பிழைகள் சுட்டிக்காட்டப்படவோ திருத்தப்படவோ செய்யாமல் நீடித்தன. அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் அதையே திரும்ப செய்தனர். இன்று அந்தப் பேரிதழ்ச் சூழலில் இருந்து அந்தக் கதைகளை மட்டுமே படித்து, சிற்றிதழ் சார்ந்த எதையுமே படிக்காமல், நவீன இலக்கிய அறிமுகமே இல்லாமல், கதைகளை எழுதுபவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் கதைகள் பேரிதழ்களில் வெளியாகாமல் இணைய இதழ்களிலும், இடைநிலை இதழ்களிலும் வெளியாகின்றன. இக்கதைகள் அவற்றின் கருப்பொருளுக்காகவோ அல்லது அவை அளிக்கும் எளிமையான சுவாரசியத்துக்காகவோ சிலரால் இலக்கியப் படைப்புகளாக முன்வைக்கப்படுகின்றன. அப்போதுதான் இந்த முதிரா வடிவத்தன்மை மிகப்பெரிய சிக்கலாக வந்து அமைகிறது.
பார்வைக்கோணம் ஏன் பேணப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஒரு படைப்பு வாசகனை உள்ளிழுத்துக் கொண்டு செல்வது, அவனுடைய நம்பிக்கையைப் பெறுவது என்பது மிக முக்கியமானது. இதை அக்கதையின் ஆசிரியர்தான் சொல்கிறார் என்று சொல்லும்போதே அதில் பொம்மலாட்டக்காரனின் விரல் தெரிவது போன்று ஒரு நெருடல் உருவாகிவிடுகிறது. மொத்தக்கதையையும் ஆசிரியரே சொல்லும் கதைகள் உண்டு. ‘கடவுளின் பார்வை’ கொண்ட கதைகள் என்பார்கள் அவற்றை. அவற்றுக்கு தனியான ஒரு பார்வைக்கோணமும், கூறுமுறை ஒத்திசைவும் உண்டு. கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் கண்வழியாகக் கதை சொல்லப்படும் என்றால், அப்படி அக்கதை வாசகனுக்கு தன்னை காட்டிவிட்டால் அதன் பின் அக்கோணம் மாறுபட முடியாது.
கதைமாந்தரின் கோணம் ஏன் பொதுவாக கதைகளில் பயன்படுத்தப்படுகிறது என்றால் அந்த கோணம் வாசகனை கதைச்சூழலுக்குள் கொண்டு செல்கிறது, அங்கு வாழவைக்கிறது என்பதனால்தான். சில கதைகளில் வெளிப்படையாகவே அது கதைமாந்தரில் ஒருவருடைய பார்வை என்று இருக்கலாம். சிலசமயம் இயல்பாக அது அக்கதையில் தோன்றலாம். ஒரு கதாபாத்திரத்தின் பார்வையே அந்தக் கதையை நிகழ்த்துகிறது என்றால் அதிலுள்ள எல்லாத் தரவுகளுக்கும், காட்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் அக்கதாபாத்திரத்தின் ஆளுமை ஒரு நியாயத்தையும் ஓர் ஒழுங்கையும் அளித்துவிடுகிறது. ஒரு கதைசொல்லியை கதைக்குள் கதாபாத்திரமாக நிறுத்திக்கொண்டோமென்றால் அக்கதையில்என்ன உணர்வு வெளிப்படும், என்ன காட்சி வெளிப்படும், எவை சொல்லப்படும், எவை வெளியே விடப்படும் என்பது அக்கதாபாத்திரத்தின் இயல்பினாலேயே வரையறுக்கப்பட்டுவிடுகிறது. சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நாவல்களில் சிந்திக்கும் கதாபாத்திரங்கள் அவ்வாறுதான் உருவாகின்றன. ஒரு சிந்தனையின் வெவ்வேறு தரப்புகளை முன்வைக்கும் கதாபாத்திரங்களை நாம் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் காண்கிறோம். தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களில் ஆசிரியருக்கு நெருக்கமானது எது என வாசகர் எளிதில் அறியமுடியும்.
உதாரணமாக, சந்திரனின் பார்வையில் அந்தக்கதை சொல்லப்படுமென்றால் அந்த தெருவிலுள்ள ஒரு பெண்ணின் காதல் தோல்வி அவ்வளவாகச் சொல்லப்படாது. ஏனெனில் அந்த வயது சிறுவனுக்கு அது புரிவதுமில்லை, அவ்வளவு ஆர்வமூட்டுவதும் இல்லை. அங்குள்ள ஒரு சமூகப் பிரச்னை அவனை எந்தவகையிலும் பாதிக்காது, ஆகவே அவன் பேச்சில் அது வராது. அவனுடைய கோணம், அவனுடைய உள்ளம் அக்கதைக்கு அபாரமான ஓர் ஒருமையை அளிக்கும். ஆனால் ஒரு ஆறுவயதுப் பையனுடைய பார்வையில் தெரியும் ஒரு சமூகச் சூழல் அங்கே திறம்பட சொல்லப்படுமென்றால் மிகக்குறைவாகச் சொல்லப்பட்டு வாசகனின் ஊகம் வழியாக ஒரு விரிந்த சித்திரம் உருவாகக்கூடும்.
உண்மையில் சிறுவர்களின் பார்வையில் கதை சொல்லப்படுவதென்பது குறைத்துச் சொல்லி நிறைய ஊகிக்க வைப்பதற்கு மிக வசதியான ஒரு எழுத்துமுறை. தான் சொல்வதென்ன என்று சொல்பவனுக்கு தெரியாது, ஆனால். வாசகனுக்கு அது தெரியுமென்பது அழகிய கலையமைதியை உருவாக்குகிறது. நான் அத்தகைய பல கதைகளை எழுதியிருக்கிறேன். நிழலாட்டம், கிளிக்காலம், பூமியின் முத்திரைகள் போன்ற பல குறுநாவல்கள். புனைவுக்களியாட்டில் பல கதைகள். அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகள் இந்த அழகியலுக்குச் சிறந்த உதாரணம். (நான் இத்தகைய பிழையை தொடர்ந்து செய்துவரும் ஓர் இளம்படைப்பாளியிடம் இதைப்பற்றிப் பேசும்போது என் கதைகளைச் சுட்டிக்காட்டினேன். அவர் என் கதைகளில் ஒன்றைக்கூட படித்ததில்லை என்று தெரிந்தது. அசோகமித்திரனின் ஒரு கதைகூட அவர் கவனத்திற்கு வந்திருக்கவில்லை)
ஒரு கலைப்படைப்பிற்கு மிக அவசியமானதும், ஆசிரியன் அடைவதற்கு மிகக்கடினமானதுமானதும் ’வடிவ ஒருமை’தான். அந்த வடிவ ஒருமை இவ்வாறு ஒரு பார்வைக்கோணத்தை தெளிவாக ஆசிரியன் வரையறுத்துக்கொள்ளும்போது இயல்பாகவே வந்தமைந்துவிடுகிறது. கதையின் தொடர்ச்சியும் சகஜமாக ஆகிறது. அந்த கதைசொல்லும் கதாபாத்திரத்தை அல்லது கதையை உணர்ந்து நிகழ்த்தும் கதாபாத்திரத்தை மட்டும் தொடர்ந்து போனால் போதும். அனைத்து நிகழ்வுகளுக்குமிடையே இயல்பான தொடர்ச்சியும் அதன் மூலம் வடிவ ஒருமையும் அமைந்துவிடும். மாறாக ஆசிரியன் தனக்குத் தெரிந்தவற்றை சொல்ல வேண்டுமென்பதற்காகவோ, கதைப்பின்னணியையோ குணச்சித்திரங்களையோ சொல்லிவிடவேண்டும் என்பதற்காகவோ அந்தப் பார்வைக்கோணத்தை விட்டு வெளியே சென்றானென்றால் அது வாசகனின் கற்பனையின் ஒருமையை உடைத்துவிடும். அது வடிவச்சிதைவு. எல்லா வடிவச்சிதைவுகளும் வாசகனில் ஒவ்வாமையையே உருவாக்கும்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


