வெளிநாடுகளில் நான்
ஒரு கடிதம் வந்தது, மிக ஆக்ரோஷமானது. எனக்கு அவ்வப்போது இத்தகைய கடிதங்கள் வரும். அவற்றை அப்படியே பிரசுரித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் ‘வேண்டாம், அவற்றிலுள்ள வசைகள் மனதை தொந்தரவு செய்கின்றன’ என்றனர். ஆகவே இப்போது அவற்றை வெளியிடுவதில்லை. வழக்கமாக ஏப்ரல் 22 வாக்கில் என் பிறந்தநாளில் வாழ்த்துக்கள் வருவதை ஒட்டி ‘இன்னுமா நீ செத்து தொலையவில்லை’ வகை கடிதங்கள் வரும். அதிகமும் அவை மதக்காழ்ப்பு கொண்டவை. ஆனால் அறம், அரசியல் கொள்கை என ஏதாவது பாவனையைச் சூடிக் கொண்டிருக்கும். தமிழகத்தில் அந்தவகை கடிதங்கள் வரும் ஒரே எழுத்தாளன் நானே என நினைக்கிறேன் (எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
என்னை தங்கள் மதங்களுக்கு எதிரானவன் என்று கற்பனைசெய்துகொள்பவர்களின் கடிதங்கள்தான் மிகுதி. என்னை பிராமண எதிர்ப்பாளன் என்றும் ,இந்து வெறுப்பாளன் என்றும், பெரியாரிய எதிர்ப்பாளன் என்றும், கிறிப்டோ கிறிஸ்தவன் என்றும் பலவகையாக வசைபாடி கடிதங்கள் வருகின்றன. வசைகள் எனக்கு புதியவை அல்ல. அவற்றிலுள்ள அந்த ஆவேசம்தான் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் விந்தையாக இருக்கும். நாட்டிலுள்ள எத்தனையோ அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லாதவர்கள் எந்த அதிகாரமும் இல்லாத ஓர் எழுத்தாளன் மேல் இத்தனை ஆவேசத்தை ஏன் காட்டுகிறார்கள்? எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் உண்மையான காரணமா?
இந்தக் கடிதம் இன்னொரு வகை. என் லண்டன் பயணக் குறிப்பை ஒட்டி எழுதப்பட்டது. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதை ‘பீற்றிக்கொள்வதற்காக’ நடத்தும் இலக்கிய அமைப்புகளை ‘ஏமாற்றி’ நான் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறேன் என்று குற்றம்சாட்டியிருந்தார் கடிதமெழுதிய பகைநண்பர். அதற்காக நான் அவர்களை நான் பொய்யாகப் புகழ்கிறேன். இது ஒரு மோசடி. இப்படி புகழுக்கு அலையும் ஆட்களை செருப்பாலடிக்கவேண்டும்…. (செப்பல் அடி! இது ஏதோ தொல்காப்பிய செய்யுள் இலக்கணம் என உண்மையில் நான் நினைத்தேன். ஓரிரு வடிகளுக்குப் பிறகுதான் பிடிகிடைத்தது) இப்படியே இன்னும் பல.
நான் அவருக்கு பதில் எழுதவில்லை. ஏனென்றால் அந்தப் பதிலால் எந்தப் பயனும் இல்லை. அதை எழுதுபவர் சீர்தூக்கி பார்த்து, உண்மையெனப் பட்டதை எழுதுபவர் அல்ல. ஏதோ ஒரு வெறுப்பு, அதற்கு இது ஒரு காரணம், அவ்வளவுதான். அந்தக் கடிதத்தின் மின்னஞ்சலை வைத்துப் பார்த்தால் அது மதக்காழ்ப்புதான். ஆனால் அதற்கு ஒரு முற்போக்கு- திராவிட முகமூடியை மாட்டிக்கொள்வது இப்போதைய மோஸ்தர். பிராமண சாதிக்காழ்ப்புக்குக்கூட இடதுசாரி முகமூடிகள் புழக்கத்தில் உள்ளன. நான் அதைப்பற்றி யோசிப்பதை விட்டுவிட்டேன். ஆனால் பின்னர் தோன்றியது, அது ஒரு பொதுப்புத்திப் பதிவாக இருக்கலாம் என. எங்காவது அது பேசப்பட்டிருக்கலாம். ஆகவே அதற்கான ஒரு பதிலை பொதுவெளியில் சொல்லலாம் என தோன்றியது.
முதல் விஷயம், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அழைக்கப்படுபவர்களில் சினிமா, டிவி சார்ந்தவர்களே மிகப்பெரும்பான்மை. பட்டிமன்றப் பேச்சாளர்கள், மதச்சொற்பொழிவாளர்கள் அடுத்தபடியாக. அண்மையில் சாதாரண மிமிக்ரி கலைஞர்கள், டிவிப் பாடகர்கள் அழைக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் அல்லது அறிஞர்கள் அனேகமாக அழைக்கப்படுவதே இல்லை. அண்மையில்தான் ஓரிரு எழுத்தாளர்கள் அரிதாக நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். (அதிலும் என் பங்கு சிறிது உண்டு. இலக்கிய அமைப்புகள் எவரை எல்லாம் அழைக்கிறார்கள் என்று நான் கடுமையாகத் தொடர்ந்து எழுதி அந்த அமைப்புகளுக்கு ஓர் அழுத்தத்தை உண்டுபண்ணினேன் என நினைக்கிறேன்).
ஆனால் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டால் மட்டுமே சிலர் கொதித்துக் கிளம்புகிறார்கள். அந்த எழுத்தாளர் தகுதியற்றவர் என்பார்கள். இன்னும் ’தரமான’ எழுத்தாளரை அழைத்திருக்க வேண்டும் என்பார்கள். அந்த எழுத்தாளர் மேல் இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்பார்கள். ஏதேதோ ‘அறிவார்ந்த’ காரணங்களை கண்டுபிடிப்பார்கள். வேறு எவர் அழைக்கப்பட்டாலும் தோன்றாத ஒவ்வாமை எழுத்தாளர்கள் வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டால் ஒருவருக்குத் தோன்றுகிறது என்றால் அது என்ன வகையான மண்டை? அவர்களின் பிரச்சினை உண்மையில் என்ன?
தமிழகத்தில் டிவி, சினிமா, அரசியல் தளங்களைச் சேர்ந்தவர்கள் தவிர எவரையுமே முக்கியமானவர்களாக எண்ணாதவர்களே எண்ணிக்கையில் மிகுதி. மற்ற எவர் கொஞ்சம் கவனம் பெற்றாலும் அடிவயிற்றை எக்கி வசைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏனென்றால் டிவி, சினிமா, அரசியலாளர்களை இவர்கள் அஞ்சி வழிபடுகிறார்கள். நாக்கில் நீர் சொட்ட பின்னால் அலைகிறார்கள். நாளெல்லாம் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளன், அறிஞன் என்பவன் தங்களைப் போன்ற சமானியன்தான் என நினைக்கிறார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் எப்போதுமே இலக்கியம், அறிவியக்கம் என ஒன்றை இவர்கள் அறிந்ததே இல்லை. ஆகவே, அவன் எப்படி தனக்கில்லாத முக்கியத்துவத்தைப் பெறலாம் என திகைக்கிறார்கள். இதுதான் அடிப்படையான உணர்வு. இது இங்கே தமிழகத்திலும் உள்ளதுதான். வெளிநாட்டிலும் இதே மனநிலையுடன் குடியேறி, இதே பாமரத்தனத்துடன் வாழ்பவர்கள் நம்மவர்கள்.
சரி அதை விடுவோம். என்னைப் பற்றிச் சொல்கிறேனே, நான் இதுவரை எந்த தமிழ் அமைப்பின் அழைப்பையும் ஏற்று வெளிநாடு சென்றதில்லை. பல்வேறு தமிழ் அமைப்புகளில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது. முற்றிலும் தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம் நான் அந்த அமைப்புகளின் கடுமையான விமர்சகன் என்பதுதான்.அமைப்புகள் எழுத்தாளனை அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நானே அவ்வழைப்புகளை ஏற்கக்கூடாது, என் கோரிக்கையின் சாரம் இல்லாமலாகிவிடும்.
ஆனால் எனக்கு வெளிநாட்டுவாழ் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் நடத்தும் எந்த ஒரு பண்பாட்டு -இலக்கிய அமைப்புகள் மேலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ‘அவரவர் பிழைப்பை அவரவர் பார்க்கும்’ ஒரு காலகட்டத்தில் இப்படி பண்பாட்டு அமைப்புகளை நடத்துவதே மிக அரிதான ஒரு பொதுச்செயல்பாடுதான். அதில் என்னதான் போதாமைகள் இருந்தாலும் அச்செயல்பாடுகள் வழியாகவே ஒரு பண்பாடு தன்னை தக்கவைத்துக் கொள்கிறது. ஆகவே அதில் ஈடுபடும் அனைவருமே என்னுடைய மதிப்பிற்குரியவர்கள்தான்.
என்னுடைய எல்லா செயல்பாடுகளோடும் கூடுமானவரை மற்ற அமைப்புகளை இணைத்துக்கொண்டு செல்லவே முயல்கிறேன். அதற்காக எப்போதுமே திறந்த உள்ளத்துடன் முயல்கிறேன். அப்படி எல்லா அமைப்புகளுக்கும் நானே எழுதியிருக்கிறேன். என் செயல்பாடுகள் மேல் கடும் காழ்ப்புகளை வெளியிட்டவர்கள், தடைகளைச் செய்தவர்களின் அமைப்புகளுக்குக் கூட கடிதங்கள் எழுதி ஆதரவு கோரியிருக்கிறேன். என் செயல்பாடுகளால் அவர்களின் உள்ளம் மாறியிருக்கலாமே. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமலிருந்தாலும் என் செயல்பாடுகள் நிகழும், அதை நிகழ்த்தியும் காட்டுகிறேன். ஆனால் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மேலும் சிறப்பாக நிகழும். அவர்களும் தங்கள் செயல்பாடுகளை சிறப்பாக அமைக்க முடியும்.
நான் செய்த எல்லா வெளிநாட்டுப் பயணங்களும் என்னுடைய மிகநெருக்கமான நண்பர்களின் அழைப்பால்தான். சிலசமயம் அவர்கள் என்னை அழைக்க ஏதாவது அமைப்பின் கடிதங்களைப் பெற்றிருக்கலாம். என் நண்பர்களுடன் எனக்கிருக்கும் உறவு இலக்கியம் சார்ந்தது மட்டும் அல்ல. ஆண்டு முழுக்க நீடிக்கும் உரையாடல், தொடர்ந்து பல செயல்களில் இணைந்து செயல்படும் இசைவு, குடும்ப ரீதியான அணுக்கம் கொண்டவர்கள் அவர்கள். அண்மையில் இந்த நட்புகளை ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பாகத் திரட்டிக்கொண்டிருக்கிறோம், அந்த அடையாளத்துடன் உலகளாவச் செயல்படுகிறோம். ஆக, இன்று என்னை அழைப்பது நானே உருவாக்கிய என் அமைப்புதான்.
வேறு அமைப்புகள் சார்ந்து பயணம் செய்கிறேனா? அவ்வப்போது உண்டு. அண்மையில் ஷார்ஜா புத்தகவிழாவுக்கு சென்றுவந்திருந்தேன். அது அந்த இலக்கியவிழாவின் அழைப்பு. என் மலையாளப் பதிப்பாளர் டிசி புக்ஸ் ஏற்பாடு செய்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விழாக்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறேன். அனேகமாக எல்லா இலக்கியவிழாக்களுக்கும் எனக்கு முப்பதாண்டுகளாகவே அழைப்பு வருவதுண்டு. என் பெயர் தெரியாத இந்திய இலக்கிய அமைப்புகல் மிக அரிதானவை. ஆனால் ஆங்கிலத்தில் என் நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் கலந்துகொள்வதில் பயனில்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இன்று ஆங்கில நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இன்று இந்தியா முழுக்க அறியப்படும் எழுத்தாளன். எல்லா மொழிகளிலும் மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அத்துடன் என் இலக்கிய முகவரும் பதிப்பாளரும் எனக்கு இலக்கியவிழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்துகிறார்கள்.
அமெரிக்காவிற்கு விசா கிடைக்க அங்குள்ள அமைப்பு ஒன்றின் அழைப்பு தேவை. ஆகவேதான் எழுத்தாளர்கள் அமைப்புகளின் அழைப்பை ஏற்கிறார்கள். நான் முதன்முதலாக அமெரிக்கா சென்றபோது அப்படி ஓர் அழைப்புக்காக அங்குள்ள தமிழ்ச்சங்கத்தை அணுகினார்கள் என் நண்பர்கள்- வெறும் ஒரு ‘லெட்டர்பேட் கடிதத்துக்காக’ மட்டும். அது மறுக்கப்பட்டது. அதன்பின் அவர்களே ஒரு லெட்டர்பேட் அமைப்பை உருவாக்கி அந்த அழைப்பின் பேரில் என்னை அழைத்தனர். அங்கே நான் சென்றபின் செல்லுமிடமெல்லாம் என் இணையதளம் வழியாக நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்து, நாங்களே சந்திப்புகளை உருவாக்கினோம். பெரும்பாலும் நண்பர்களின் இல்லங்களில். அரிதாக சமூகக் கூடங்களி. பல ஊர்களில் அங்குள்ள எந்த நிகழ்ச்சிக்கும் வராத கூட்டம் என்னுடன் உரையாட வந்தது. அந்த வாசகர்களைக் கொண்டே இன்று விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
நான் சில இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவற்றைப் பார்த்தபிறகுதான் இந்த வசையர் தன் கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆனால் நான் அந்த அமைப்புகளின் அழைப்பின் பேரில், அவர்களின் செலவில் அங்கே செல்லவில்லை. நான் உள்ளூரில் இருப்பதை அறிந்து அவர்கள் அழைத்தார்கள். அந்த அமைப்பில் இருக்கும் ஏதேனும் நண்பர் வேண்டியவர் என்றால் அவருக்காக அங்கே சென்று அந்த கூட்டங்களில் கலந்துகொண்டதுண்டு. அது நட்புக்காக மட்டுமே.
என்னை இன்று அழைப்பவர்கள் ‘பிரபலங்களுடன் இணைந்து நிற்க விரும்பும் சாமானியர்கள்’ அல்ல. நாங்கள் இன்று ஓர் இலக்கிய அமைப்பாக இணைந்திருக்கிறோம். இதிலுள்ள ஒவ்வொருவரும் சிறந்த வாசகர்கள். ஒருவேளை அமெரிக்காவிலோ பிறநாடுகளிலோ உள்ள மிகச்சிறந்த இலக்கியவாசகர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் பொது அடையாளத்தின் கீழே ஒருங்கிணைந்திருக்கிறோம். ஆண்டு முழுக்க, அனேகமாக எல்லா வாரமும் இலக்கிய நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இடைவிடாமல் இலக்கிய உரையாடல்நிகழ்வுகளை நடத்தும் ஒரே அமைப்பு எங்கள் அமைப்புதான். இலக்கியம், கலாச்சாரம் சேர்ந்து சர்வதேச அளவிலேயே செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். ஆண்டுதோறும் அமெரிக்காவில் தத்துவ – இலக்கிய முகாம்கள் நிகழ்கின்றன. ஐரோப்பாவிலும் தொடரவிருக்கிறோம். அந்த வாசகர்கள் அளவுக்கு தகுதியும் ஈடுபாடும் கொண்டவர்கள் தமிழ்நாட்டிலேயே குறைவுதான்.
(இலக்கியவாசகர்களும் இலக்கியவாதிகளும் பேசிக்கொள்கிறார்கள். சந்திக்கிறார்கள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள். பயணங்கள் செய்கிறார்கள். இதில் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத அரசியல் அடிமாட்டுத் தொண்டர்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் எங்காவது இவர்களின் அரசியல் சலம்பல்கள் நிகழும் இடங்களில் தலைகாட்டியிருக்கிறோமா?)
ஆகவே வசைபாடுபவர்களிடம் ஒரு கோரிக்கை. அவ்வப்போது அவர்கள் மற்ற எழுத்தாளர்களையும் வசைபாடலாமே. நான் வசைகள் வழியாகவே இத்தனை அறியப்படுகிறேன். புகழை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதுதானே முறை?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
