கதையும் மெய்வாழ்வும்
அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கடந்த வாரம் ஒரு சிறுகதை எழுதினேன். மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா குறித்து. ஏறக்குறைய இறைவன் என ஒரு நாவலை எழுத அவர் திட்டமிட்டிருந்தார். அதற்குள் ஒரு கொலை வழக்கில் கைது. அக்கைதுக்குப் பின் முன்பைவிட மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக நண்பர் சொன்னார். மேலும், கைதான நேரத்தில் என்னென்ன நடந்தது என்பதையும் கூறினார்.
நான் கிருபா எழுதிய கன்னி, சில கவிதைகளை வாசித்ததால் நண்பர் சொன்ன விஷயங்கள் பல நாள்கள் தொந்தரவைக் கொடுத்தன. எழுதாமல் இதைக் கடக்க முடியாது என நினைத்து, ‘ஏறத்தாழ கடவுள்’ எனத் தலைப்பிட்ட சிறுகதையை எழுதி மயிர் இணைய இதழில் வெளியிட்டேன். நீங்கள் வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இப்போது மனம் பெரிய வீச்சுடன் புனைவு பக்கம் திரும்பியிருக்கிறது. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போதும் சொல்வதை நினைத்துக்கொள்வேன். நமக்கு அளிக்கப்பட்ட கலையைக் கைவிட்டால் எங்கோ யாருக்கோ பதில் சொல்ல வேண்டும் என.
நன்றி.
சங்கர் சதா
ஏறத்தாழ கடவுள்அன்புள்ள சங்கர்,
நல்ல கதை. உணர்ச்சிகரமானது. நேரடியாகவும், நுணுக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது.
மெய்வாழ்க்கைகளை ஒட்டி கதைகளை எழுதும்போது சில அடிப்படைச் சிக்கல்களைச் சந்திக்கிறோம். மெய்வாழ்க்கையை நம்மால் விருப்பபடி மாற்ற முடியாது. மெய்வாழ்க்கைகள் அளிக்கும் வாழ்க்கைப்பதிவுகள், குணச்சித்திரங்களையே நம்மால் திரும்ப எழுத முடியும். அவ்வாறென்றால் அக்கதையில் புதியவையாக எதுவும் நிகழமுடியாது. புதிய ஒன்று நிகழாமல் கலை இல்லை. ஆகவே அறியப்பட்ட கதை- அறியப்பட்ட ஆளுமைக்குள் இருந்து ஒரு புதிய தருணத்தை நம் உள்ளுணர்வோ கற்பனையோ கண்டடையவேண்டும். அப்படி கண்டடையப்பட்டவற்றின் பலத்தில் கதை நிற்கும். இக்கதையில் இறுதியில் அந்தக் கண்டடைதல் பிரபா சொல்லும் வரியில் நிகழ்கிறது.
இக்கதையின் பலவீனம் என நான் எண்ணுவது ஒன்று உண்டு. இது என் கருத்துதான் – வாசகர்களுக்கும் உங்களுக்கும் வேறுமாதிரியும் தோன்றலாம் . கதையில் வரும் கதைசொல்லி (அவனே ஆசிரியனின் குரல்)யில் இருக்கும் மிகையான உணர்ச்சிகரம் ஒரு குறைபாடாக கொள்ளலாம். அந்தத் தருணத்தில் அவன் அந்த உணர்ச்சியை அடைவது இயல்பே. ஆனால் மிகையான உணர்ச்சிகரம் இயல்பாக அமையும் வாழ்க்கைத் தருணங்களை குறைத்துவிடுகிறது. இக்கதையை வேண்டுமென்றே சாதாரணமாக, ஒரு ‘ரிப்போர்ட்டிங்’ போல எழுதினால் உண்மையில் அந்த மிகைஉணர்ச்சிகரம் வாசகனில் உருவாக்கும் மெல்லிய விலக்கம் அல்லது அவநம்பிக்கை இல்லாமலாகி வாசகனே அந்த உணர்ச்சிகளை உருவாக்கிக் கொள்வான்.
(இக்கதையுடன் உடனடியாக ஒப்பிட்டு இந்த அம்சத்தை கவனிக்கவேண்டிய கதை அசோகமித்திரன் ஜி.நாகராஜன் பற்றி எழுதிய விரல் என்னும் சிறுகதை. மிக அடங்கிய குரலில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படுவது அக்கதை. ஆனால் மிக ஓங்கிய உணர்ச்சிகளுக்குரிய வாழ்க்கைத்தருணத்தைச் சொல்வது)
ஏன் அந்த உணர்ச்சிகரம் கலைக்கு பிசிறாக அமைகிறது? அது கதைக்கு ஒற்றைக்குரல் தன்மையை கொண்டு வருகிறது. ஒரு கவிஞனை வெவ்வேறு வாழ்க்கைக்களங்களைச் சேர்ந்த வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் அவன் எப்படிப் பொருள்படுகிறான் என்னும் யதார்த்தச் சித்திரம் உருவாகாமல் தடுத்துவிடுகிறது. அத்துடன் கதையின் உச்சம் வெளிப்படும்போது அதன்மேல் வாசகன் குவியாதபடி அதற்கு முன் வரும் உணர்ச்சிநிலைகள் தடுத்துவிடுகின்றன. வாசகன் கதைசொல்லியின் உணர்ச்சிகள், எதிர்வினைகள் நோக்கி திருப்பப்படுகிறான். கவிஞனின் சித்திரம் வாசகனில் துல்லியமாக உருவாவதை அது தடுத்துவிடுகிறது.
கதைசொல்லி கவிஞனைப் பற்றி நினைக்கும் உணர்ச்சிகரமான எண்ணங்கள், அவன் நினைவில் கவிஞன் வரும் காட்சிகள் ஆகியவை இல்லாமல் இக்கதையை கற்பனை செய்து பாருங்கள், இக்கதை மேலும் வலுவுடன் இருப்பதை நீங்கள் உணரக்கூடும். அவன் கவிஞன் என்பதும், எப்படிப்பட்ட கவிஞன் என்பதும் அவனுடைய வெறும்தோற்றம் வழியாகவே சொல்லப்பட்டிருக்கலாம். அக்கவிஞனின் புறத்தோற்றம், அவனுடைய மெய்ப்பாடுகள் மிக முக்கியம். ஒரு மகத்தான செவ்வியல் ஓவியம்போல அவன் சிறையிலிருக்கும் காட்சி, அவன் கைகளை நெஞ்சோடு கட்டியிருக்கும் காட்சி சொல்லப்பட்டிருக்கலாம். ஒரு கவிஞனாக அவனுடைய மகத்துவத்தை வாசகனே அவ்வாறு உருவாக்கிக்கொள்ள விட்டிருக்கலாம்.
ஒரு நல்லகதையை வாசித்ததும் அதை மேலும் கூர்மையாக ஆக்கிக்கொள்ள வாசக உள்ளம் விரும்பலாம். அந்தக் கோணத்திலேயே இதைச் சொல்கிறேன்.
ஜெ
விரல் அசோகமித்திரன்
அன்புள்ள ஜெ
இப்போதுதான் விரல் கதையை வாசிக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் சில இடங்கள் ஜி.நா.வின் கட்டற்ற வாழ்க்கையால் எதை இழந்தார் என்பது அற்புதமாக துலங்கி வருகிறது. முக்கியமாக, “இனி என்னால் எழுதவே முடியாது. யாரும் என்னை காப்பி அடிக்கவே முடியாது” வரி. அசோகமித்ரன்! தமிழ் இலக்கியத்தில் என்றும் நிலைக்கும் பெயர். வேறு என்ன சொல்ல? கதையைக் குறிப்பிட்டதற்கு நன்றி.
சங்கர் சதா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

