Jeyamohan's Blog, page 92
June 13, 2025
முதல் நாவலை எழுதுபவர்களுக்கு…
சென்னையைச் சேர்ந்த மானசா பதிப்பகம் என்னும் பெண்கள் பதிப்பகம் ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளது. பெண்களுக்கான நாவல்போட்டி. ஏற்கனவே நாவல்களை எழுதியவர்களும் கலந்துகொள்ளலாம். வெளிநாடுவாழ் இந்தியர்களும் எழுதலாம். இரண்டு போட்டிகள். ஒன்று மாணவர்களுக்கு. இன்னொன்று அனைவருக்கும். தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு. நூல் வெளியிடப்படும்
*
இந்தக் காணொளியில் ஒரு புதிய எழுத்தாளர் நாவலை ஏன் எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும், செய்யகூடுவது என்ன செய்யக்கூடாதது என்ன என்று பேசியிருக்கிறேன்.
தொடர்புக்கு https://www.manasapublications.com/manasalitprize
தமிழ் உள்ளத்தின் ஒதுங்குதலைக் கடத்தல்
இன்று மகளுடன் யானை பார்க்க சென்றேன். பல நாட்களாக யானையைப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தாள். எனவே இங்குள்ள யானைகளின் சரணாலயத்திற்குக் கூட்டிச்சென்றேன். யானையைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வந்துவிடும். அங்கிருந்தபடியே உங்களிடம் அண்மையில் நடந்துமுடிந்த முக்கோண கதைகள் விழா குறித்து தெரிவிக்க விரும்பினேன்.
ஞாயிறு நடந்த முடிந்த முக்கோண கதைகள் மலேசிய இலக்கியச் சூழலில் ஒரு வரலாறுதான். மூவின எழுத்தாளர்களும் ஒன்றிணைந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் நடந்ததில்லை. அப்படி கலந்துரையாடல் நடந்திருந்தாலும் அதை வரலாற்றில் எப்போதும் நினைவுக்கூறும் வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டதில்லை. இந்த விழாவில் மூன்று நூல்கள் வெளியீடு கண்டன. எஸ்.எம்.ஷாகீரின் சிறுகதைகளும் சீன சிறுகதைகளும் தமிழுக்கும் தமிழில் பத்து சிறுகதைகள் மலாய் மொழிக்கும் என மொழிபெயர்க்கப்பட்டு நூலாகப் பதிப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஈராண்டு உழைப்பு. இதற்குப்பின்னால் பலரது பங்களிப்பு உண்டு. அ. பாண்டியன், ச. சரவணன் ஆகியோர் அதில் முதன்மையானவர்கள். விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி, சல்மா தினேஸ்வரி, ஆசிர் லாவண்யா, கி. இளம்பூரணன் என பலரும் முதன் முறையாக மொழிபெயர்ப்பில் முயன்று அதை நிறைவாகவும் செய்துள்ளனர்.
ஜெ, எந்த ஒரு விழாவும் தொடர் பலன்களை உருவாக்க வேண்டும் என்றே திட்டமிடுவேன். அப்படித்தான் ‘பென் மலேசியா’ இணைவும். இந்த ஆண்டு அதன் தலைவர் மஹி ராமகிருஷ்ணன். நிகழ்ச்சி வழங்கிய நேர்மறை அதிர்வு அவரை இன்னொரு உரையாடலுக்குத் தூண்டியது. இம்மாதம் 21 ஆம் திகதி மொழியாக்கம் கண்ட தமிழ் சிறுகதைகள் குறித்து மேலும் ஓர் உரையாடலுக்கான களத்தை உருவாக்கியுள்ளார். சீன, மலாய் எழுத்தாளர்கள் மொழியாக்கம் கண்ட தமிழ் சிறுகதைகள் குறித்து பேசுகின்றனர். மரினா மகாதீர் அந்நிகழ்ச்சியில் இணைவதும் அவர் அத்தொகுப்பை வாசித்து தன் கருத்தைப் பகிர்வதும் மேலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மேல் கவனத்தைப் பாய்ச்சும் என நம்புகிறேன்.
சீன சிறுகதைகளை மலாயில் மொழியாக்கம் கண்ட எழுத்தாளர் ஃபுளோரன்ஸ், தமிழ்ச் சிறுகதைகளை சீனத்தில் மொழிபெயர்க்கும் திட்டத்தோடு பத்து நூல்களை என்னிடம் பெற்றுக்கொண்டு சென்றபோது மகிழ்ச்சியில் கண்கள் பனித்துவிட்டன. மேலும் அவர் ஆங்கில வானொலி ஒன்றில் இத்தொகுப்பு குறித்த உரையாடலுக்காக ஏற்பாடு செய்து வருகிறார்.
2006இல் நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மேல் இதழ்கள் வழியாக கவனத்தை ஏற்படுத்த முயன்றபோது இங்குள்ள தமிழ் படைப்புகளில் இலக்கியத் தன்மை என ஏதும் இல்லை எனக் கேலி செய்தவர்கள் சிலர் உள்ளனர். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழக இலக்கியம் மட்டும்தான் எனச் சொன்னவர்கள் சிலர் உள்ளனர். அதற்குக் காரணமும் உண்டு. கலைத்தன்மை அற்ற மொண்ணையான படைப்புகள் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முகங்களாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவையே உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களிடம் பரப்பப் பட்டன. கடுமையான விமர்சனத்தின் வழியாகவே அதன் அடையாளங்களைத் தகர்க்க வேண்டியிருந்தது. அந்த பீடத்தில் வாசிப்பின் வழி நான் உணர்ந்த முதன்மையான ஆளுமைகளை நிறுத்த வேண்டியிருந்தது. அப்போது ‘வல்லினம்’ மலேசியத் தமிழ் இலக்கியத்தின் எதிர் முகம் என கற்பனையான கதைகள் உருவாகின. வல்லினம் தமிழக எழுத்தாளர்களை மட்டுமே முன்னிறுத்தி மலேசிய எழுத்தாளர்களை புறக்கணிக்கிறது எனும் எண்ணம் கொஞ்சம் காலம் வலுவாகவே இருந்தது.
பல மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஆவணப்படம் செய்து சேமித்தபோதும், அவர்களின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபோதும், மூத்த எழுத்தாளர்களுக்கு வல்லினம் விருது வழங்கியபோதும், அவர்களை நேர்காணல்கள் செய்து நூலாக ஆவணப்படுத்தியபோதும் வல்லினம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஆளுமையை விமர்சனத்தின் வழியாக அசுத்தப்படுத்துவதாகக் குரல்கள் ஒலித்தபடியே இருந்தன. இன்றும் அப்படியான மூடநம்பிக்கை சிலரிடம் இருக்கலாம் ஆனால் மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களை கவனப்படுத்தும் அமைப்பாக வல்லினம் தன்னை தன் செயல்பாடுகளால் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
ஜெ, உங்களுக்கு நினைவிருக்கலாம். 2014இல் நீங்கள் மலேசியா வந்தீர்கள். இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு கண்டன. அப்போது வல்லினத்தின் ஒரு செய்தியும் தமிழ் ஊடகத்தில் வராத காலம். வல்லினத்தில் வந்த சிறுகதை ஒன்றை சர்ச்சையாக்கி ஒட்டுமொத்தமாகவே மலேசிய தமிழர்கள் வல்லினத்திற்கு எதிர்ப்பாக இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டன. வல்லினம் அச்சிதழுக்கான உரிமம் அரசால் பரிக்கப்பட்டது. முகநூலில் மட்டுமே நிகழ்ச்சி குறித்து அறிவிப்பை செய்து அந்த நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். சரியாக எண்பது பேர் வந்திருந்தனர். எல்லாம் நினைவுண்டு.
நடந்துமுடிந்த முக்கோண கதைகள் நிகழ்ச்சியில் நான் அரங்கின் பின்னால் நின்றுக்கொண்டு சீன, மலாய் எழுத்தாளர்கள் ‘வல்லினம்’ குறித்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். வல்லினம் பணிகள் குறித்து அவர்கள் சிலாகிப்பதை ரசித்துக்கொண்டே இருந்தேன். 2014 இல் இருந்த பலரது மனநிலை 2025 இல் முற்றிலுமாக மாற நாங்கள் இடையறாது செய்யும் எங்கள் பணிகளைத் தவிர வேறு காரணமில்லை.
எந்த இக்கட்டான சூழலிலும் எங்கள் செயல்பாட்டில் எந்தப் பின்னடைவும் இருந்ததில்லை. எதற்கும் யாரிடமும் மன்றாட வில்லை. எங்களை ஏற்கச் சொல்லி கெஞ்சவில்லை. எந்த சமரசமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கிறோம். நாங்கள் செய்யும் பணியில் நம்பிக்கையுடன் இருந்தோம். எவையெல்லாம் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு நன்மை தரும் அதை செய்தோம். இளம் எழுத்தாளர்கள் நம்பிக்கையுடன் உடன் வந்தனர். மூத்த எழுத்தாளர்களுக்கு எங்களைப் புரியத் தொடங்கியது. நாங்கள் புதிய படைப்பாளிகளை விமர்சனத்தால் ஒடுக்கவில்லை; போலியான ஆக்கங்களை அடையாளம் காட்டுகிறோம் என இப்போது அறிகின்றனர்.
மொழிபெயர்ப்பு பணியில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த சாதகமான வாய்ப்புகளை மலேசியாவில் பிற தமிழ் எழுத்தாளர்களும் அடையும் படியான திட்டங்களை வகுத்து செயல்படுகிறோம். அது அனைவருக்கும் பயனைக் கொடுத்துள்ளது. விரைவில் கவனப்படுத்தப்பட வேண்டிய மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
யானை நடந்து செல்லும் பாதை வனத்தின் பிற உயிர்களுக்கும் வளத்தைக் கொடுக்குமெனச் சொல்வார்கள். அது இலக்கியவாதிக்கும் பொருந்தும்தானே.
ம.நவீன்
அன்புள்ள நவீன்,
மலேசியாவில் நீங்கள் தொடங்கி வைத்திருப்பது ஒரு புதிய அத்தியாயம். நான் இதை பலமுறை இலங்கை மற்றும் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகள் சார்ந்து சொல்லியிருக்கிறேன். ஓர் ஆக்கபூர்வமான இலக்கியப் பரிமாற்றம் அங்கெல்லாம் நிகழ்வதே இல்லை. எனக்குத்தெரிந்து சிங்கள- தமிழ் இலக்கியப் பரிமாற்றம் என்பது மிகக்குறைவு, அதிலும் அண்மையில்தான் சில முயற்சிகள் நிகழ்ந்துள்ளன.
ஏன், தமிழ்நாட்டில் இன்றுவரை தென்னிந்திய மொழிகளுக்கான ஓர் இலக்கிய அரங்கு நிகழ்ந்ததில்லை. சாகித்ய அக்காதமி சில ஒப்புக்கு நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது, அவ்வளவுதான். நாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கவை பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வு, கேரளத்தில் நிகழும் துஞ்சன் தென்னிந்திய இலக்கியவிழா.
தமிழர்களுக்கு தமிழிலக்கியம் மீதே ஆர்வமில்லாத நிலையில் பிற மொழி இலக்கியங்கள் மேல் என்ன ஆர்வம் என்று கேட்கலாம். அது வருந்தத்தக்க உண்மைதான். நாம் நம் இலக்கியத்தைக் கொண்டாட ஓர் இலக்கியவிழாவை இன்னும் இங்கே நிகழ்த்தவில்லை. கேரளத்தில் நான்கு இலக்கிய விழாக்கள் உள்ளன. கே லிட்ஃபெஸ்ட், மாத்ருபூமி இலக்கிய விழா, ஹே லிட்ஃபெஸ்ட், கடத்தநாடு லிட்பெஸ்ட். கர்நாடகத்தில் இரண்டு. பெங்களூர் இலக்கிய விழா, ஹெக்கோடு இலக்கிய விழா. நமக்கு இருப்பது விஷ்ணுபுரம் விருதை ஒட்டி நிகழும் இலக்கிய விழா மட்டுமே. மேலே சொன்ன இலக்கிய விழாக்கள் ஒவ்வொன்றும் இரண்டு முதல் பத்துகோடி வரை செலவில் நிகழ்பவை. விஷ்ணுபுரம் விழா 25 லட்சம் ரூபாய்ச் செலவில் நிகழ்கிறது, அதற்கே நாங்கள் பிச்சை எடுக்கவேண்டியிருக்கிறது.
மலேசியா போன்ற நாடு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டுகூட இத்தகைய நிகழ்வுகள் முன்னர் நிகழ்ந்ததில்லை என்பது வருந்தத் தக்கதே. இப்போதேனும் நிகழ்கிறதே என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான். இப்படி ஒன்றை ஒருங்கிணைப்பது கடினம் என்றால் தமிழர்களுக்கே உரிய உள்குத்துக்களை எதிர்கொண்டு முன்செல்வது மேலும் கடினமானது. எந்தப் பாராட்டும் கிடைக்காது, அவதூறும் வசைகளும் ஏளனமுமே மிஞ்சும். நாம் செய்யவேண்டியதைச் செய்தாகவேண்டும் என்னும் உணர்வுடன் மட்டுமே இயற்றவேண்டிய கடமை இது. வாழ்த்துக்கள்.
நாம் இந்த வகையான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் பொதுவாக நிகழும் பிழைகள் என்ன? நாம் மிகமிகச் சம்பிரதாயமானவர்கள். ஒரு கோயில்விழா போலவே இவற்றை நடத்துவோம். கும்பாட்டம் கரகாட்டம் எல்லாம்கூட ஏற்பாடு செய்வோம். பெரியமனிதர்களைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பமாக இவற்றை மாற்றிக்கொள்வோம். பெரியமனிதர்களின் தயவைத் தேடுபவர்கள் முன்னின்று நடத்துவார்கள். விளைவாக இலக்கியம் ஒட்டுமொத்தமாகப் பின்னுக்குத் தள்ளப்படும்.
இத்தகைய நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு மிகக்குறைவாக இருக்கும். தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு இத்தகைய கலாச்சார நிகழ்வுகளின் முக்கியத்துவம் புரியாது. அவர்கள் மக்கள்திரள் கண்ணுக்குப் பட்டால்தான் பணம் தருவார்கள். மக்களைத் திரட்டவேண்டும் என்றால் இங்கே சினிமாதான் ஒரே வழி. ஆகவே எழுத்தாளர்களை பின்னுக்குத்தள்ளி சினிமாக்காரர்கள், மிமிக்ரி கலைஞர்கள், பட்டிமன்றத்தவர்களை முன்வைக்கவேண்டும்.
கடைசியாக இங்கே விளம்பரதாரர்களே மேடையேறி முன்னால் நிற்கும் வழக்கமும் உண்டு. ஆர்வமுள்ள பெரியமனிதர்களை கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கௌரவிக்க மேடையேற்றுவது மிக நல்லது – அது சமூகம் அளிக்கும் கௌரவம். ஆனால் அவர்கள் மைக் பிடித்து பேச ஆரம்பிப்பதும், கருத்து உதிர்ப்பதும், ஆலோசனைகளை வழங்குவதும் அபத்தம். ஆனால் தமிழக மேடைகளில் நிகழ்வது அதுதான்.
இந்தக் காரணத்தால்தான் நம் நிகழ்வுகள் பற்றி வெளிமாநில, வெளிமொழி அறிவுஜீவிகளுக்கு இளக்காரமான பார்வை உள்ளது. எங்கள் விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு வந்த பலர் “ஒரு தமிழ் நிகழ்வு இப்படி நிகழும் என எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். எப்படி நிகழும் என எதிர்பார்த்தீர்கள் என்று நான் கேட்பேன். சிரித்துச் சமாளிப்பார்கள்.
ஒருவர் மட்டும் சொன்னார். “காலதாமதம், நிகழ்ச்சிநிரல் குளறுபடி, சம்பந்தமற்றவர் மேடையேறி இஷ்டத்துக்குப் பேசுவது, பெரியமனிதர்களை தாஜா செய்வது, சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆக்ரமிப்பு, எந்த வகையிலும் தீவிரமே இல்லாத கொண்டாட்ட மனநிலை, உதாசினமான அரங்கு ஆகியவைதான் தமிழ் நிகழ்வுகளின் இலக்கணம். நான் பலமுறை பார்த்தது உண்டு. உலகத்தில் எங்கே தமிழர்களின் நிகழ்வு நடைபெற்றாலும் இதுதான் நடைமுறை”
“அவை எவையும் நிகழக்கூடாது என்று கவனித்துத்தான் எங்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளோம்” என்று நான் பதில் சொல்வேன்.
இந்தவகையான நிகழ்வுகளை நம் வழக்கமான தமிழ்ச்சங்கங்கள் வழியாக நடத்த முடியாது. அவற்றின் அதிகார அடுக்குகள், ஆட்சித் தொடர்புகள் , நிதிக்கொடையாளர்களின் எதிர்பார்ப்புகள் என பெரிய அழுத்தங்கள் உண்டு. ‘பொதுமக்கள்’ பங்கேற்பு இன்றி அவர்கள் செயல்பட முடியாது, பொதுமக்களின் பொதுரசனைக்குச் சமரசம் செய்யாமலிருக்கவும் முடியாது. வல்லினம் போன்ற தீவிர இலக்கிய அமைப்பே இந்தச் சாதனையை நிகழ்த்த முடியும்.
நீங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி அளித்த நம்பிக்கையைப் புரிந்துகொள்கிறேன். அரைநம்பிக்கையுடன், குறைந்த எதிர்பார்ப்புடன் நிகழ்வுக்கு வந்த மலேய, சீன மொழிப் படைப்பாளிகள் அடைந்த வியப்பையும் ஆர்வத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்கிறேன். முயற்சி வெல்க.
ஜெ\
அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1
அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2
அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3
ஏ.ஜி. சுப்பிரமணியன்
ஏ.ஜி. சுப்பிரமணியன் சிறார்களுக்காகப் பல பாடல்களையும், நாடகங்களையும், நூல்களையும் எழுதினார். நர்சரி, ஆரம்பக் கல்வி, முதியோர் கல்விக்கான பாட நூல்களை எழுதினார். அழ. வள்ளியப்பா, தமிழ்வாணன் வரிசையில் சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்த முன்னோடி எழுத்தாளராக அறியப்படுகிறார்.
காவியம் – 54
பொமு2 ,பைத்தான். சாதவாகனர் காலம். யட்சன்”குணாட்யர் அருகே என் கையை பார்த்துக்கொண்டிருந்தார். நான் கதைச் சொல்லத் தொடங்கினேன்” என்று கானபூதி சொன்னது. “விந்தையான கதை இது. மிகமிக முன்னர் எப்போதோ நடந்தது. அதுவும் ஒரு விந்தையான காலம். அன்று மொத்த மானுடரின் கதையையும் தொகுத்து ஒன்றெனப் பார்க்கும் வழக்கம் உருவாகியிருக்கவில்லை. காலம் நீள்பெருக்காக ஓடிச்செல்லவுமில்லை. அன்று ஒற்றை மனிதரின் வாழ்க்கையின் ஒரே ஒரு புள்ளியை மட்டும் விரித்து விரித்து கதையாக ஆக்கினார்கள். காலத்தை பக்கவாட்டில் பரப்பிப் பரப்பி அகலமாக ஆக்கிக்கொண்டார்கள்… முன்பு சொன்ன கதையின் இன்னொரு விரிவாக்கம் இது. நீ கேட்ட கேள்விக்கான பதில் இதில் அமையலாமென்று படுகிறது.”
“சொல்” என்று குணாட்யர் சொன்னார்.
“இதுவும் அதேபோன்ற விரசகாவியம்தான்” என்றது ஆபிசாரன். ”நீ விரும்பினால் இப்போதுகூட எழுந்து விடலாம்”
அதை கையமர்த்திவிட்டு “தீமைக்கும் மனிதர்களுக்குமான உறவைப் பற்றி நீ கேட்டாய்” என்று கானபூதி சொன்னது. ”நூறு நூறாயிரம் காவியங்களில் எழுதி எழுதி கூர்மையாக்கப்பட்ட கேள்விகளும், பேசும்தோறும் மழுங்கும் பதில்களும் கொண்டது அது. கதையை நான் சொல்கிறேன். நான் கதையன்றி எதையும் சொல்பவன் அல்ல”.
கானபூதி சொல்லத் தொடங்கியது. கங்கைக்கரையில் தன் தாத்தா கட்டிய சிறிய ஆலயத்திற்கு அப்பாவுடன் அடிக்கடி அஸ்வத் சென்று வருவதுண்டு. அது ஹரீந்திரநாதுக்கு ஒரு பெருமையின் சின்னமாக இருந்தது. அங்கே தன் தந்தையின் பளிங்குச் சிலையை அவர்தான் நிறுவினார். அதை காசியிலிருந்து வரவழைத்த வைதிகர்களைக் கொண்டு பூசை செய்வித்து ஒரு தெய்வச்சிலையாகவே பிரதிஷ்டை செய்தார். அந்த விழாவிற்குப் பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அந்த சிலையையும் வழிபடத் தொடங்கினார்கள். அதற்கருகிலும் ஒரு பாண்டா அமர்ந்து பூசைகளைச் செய்து வருபவர்களை வாழ்த்தினார்.
கைகளை ஆசியளிக்கும் வடிவில் வைத்துக்கொண்டு, பத்மாசனத்தில் விரிந்த புன்னகையுடன் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே அமர்ந்திருந்தார். தலைப்பாகையும் கழுத்தில் மணிமாலையும் அணிந்திருந்த அவருடைய சிறிய பளிங்குச் சிலையின் கண்கள் மட்டும் கருப்பாக வரையப்பட்டிருந்தன. அவரை வணங்கினால் உடல் நலமும் செல்வச்செழிப்பும் உருவாவதாக பரவலாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு ஹரீந்திரநாத் பல்வேறு சிறு புலவர்களுக்கு பரிசில் கொடுத்து பாடல்களை பாடவைத்தார். அவற்றை மலிவான பதிப்புகளாக அச்சிட்டு அப்பகுதியிலேயே விற்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.
மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி அன்று ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன. அப்போது ஹரீந்திரநாத் தன் குடும்பத்துடன் அங்கு வந்து பூஜைகளில் கலந்து கொள்வார். மற்ற நாட்களில் அவ்வப்போது அவர் அங்கே வந்து பூஜைகளைச் செய்து திரும்புவதுண்டு. அதற்கு அருகிலேயே அவருக்குச் சொந்தமான ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அதில் ஒரு பிண்டு என அழைக்கப்பட்ட வயதான காவல்காரனை வைத்திருந்தார். மாலை நேரத்தில் தன் நண்பர்களுடன் வந்து கோயிலில் தந்தையை வணங்கிவிட்டு, அங்கேயே சற்றுநேரம் வணக்கங்களை ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்த பின், அந்தி இருண்டதும் அக்கட்டிடத்திற்குச் சென்று தங்கி மது அருந்துவதோ கஞ்சா பிடிப்பதோ அவரது வழக்கம். அங்கு அவர் மாமிச உணவு உண்பதும் பெண்களுடன் தங்குவதும் வெளியே எவருக்கும் தெரியவில்லை என்றாலும் அவருடைய அலுவலர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது. அதைப் பற்றிக் கேட்டால் தன் தந்தை ஃபணீந்திரநாத்தே அதையெல்லாம் செய்தவர்தான் என்று அவர் சொன்னார்.
“நாங்கள் தூய பிராமணர்கள் அல்ல, ஆகவே தான் நாங்கள் வேத வேள்விகளை நேரடியாகச் செய்வதில்லை. நாங்கள் அரசர்கள். ஷத்ரிய ரத்தம் எங்களுக்குள் ஓடுகிறது” என்று அவர் சொன்னார். “முன்பொரு காலத்தில் எங்கள் குடும்பங்களுடன் ஷத்ரியர்கள் உறவு கொள்வதுண்டு. நான் ஏதோ ஒரு அரசனின் மகனாகப் பிறந்திருக்கலாம்”.
“பிராமணர்களிடமிருந்து ஷத்ரியர்கள் உருவாவது தானே வழக்கம்?” என்று அருகில் இருந்த பங்கஜ் குமார் ஷர்மா கேட்டார்.
லாலாஜி என அழைக்கப்பட்ட கோவிந்த் பாண்டே கஞ்சா சிலும்பியை ஆழ்ந்து இழுத்து ”ஆமாம் அப்படித்தான் நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார்.
“கங்கையில் சாக்கடை கலந்தாலும் அது கங்கையே… கடவுளுக்கு அந்த நீர்தான் புனிதமானது” என்றார் அஜய்தேவ் மிஸ்ரா.
”தன்னை ஒரு ஷத்ரியர் என்று உணர்ந்தபோதுதான் என் தந்தை அவருடைய சம்ஸ்தானத்தை விட்டு வெளியேறினார். ஏனென்றால் பிராமணர்களிடம் பணிவு இருக்கவேண்டும். ஷத்ரியர்களிடம் அவர்கள் அடங்கி வாழவேண்டும். மக்களிடம் தானம் பெற்று அன்றாடத்தை நடத்த வேண்டும். ஷத்ரியர்களின் ரத்தம் ஓடிய என் தந்தைக்கு அதையெல்லாம் செய்ய மனமில்லை. இன்னொரு ஷத்ரியரை அவரால் வணங்க முடியாது. இன்னொருவரின் பரிசாலும் கொடையாலும் அவரால் வாழமுடியாது. ஆகவே தான் அவர் புதிய நிலம் நோக்கி இங்கு வந்தார். இங்கே தனக்கான ஒரு அரசாங்கத்தை அவர் உருவாக்கிக்கொண்டார்” என்று ஹரீந்திரநாத் சொன்னார்.
அந்த ஓய்வு இல்லத்தில் அவர் தங்கும்போது அவருக்கான உணவுகள் எல்லாமே வெளியே இருந்து சமைக்கப்பட்டு கொண்டு வரப்படும். கங்கைக்கரையில் மாமிசம் சமைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ”ஆனால் ஷத்ரியர்கள் இங்கு மாமிசம் உண்ணாமலா இருந்திருப்பார்கள்? இன்று பிராமணர்கள் இந்த நதிக்கரையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் உத்தரவுகள். பாட்னாவை ஆண்ட பழைய நவாப்களின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்றவர்கள் இந்தக் கோழைகள். அந்த நாவாப்களுக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்தவர்கள் ஷத்ரியர்கள்” என்று ஹரீந்திரநாத் சொல்வார்.
தன் மகனை அவர் எப்போதாவது கோயிலுக்கு அழைத்து செல்வதுண்டு. அப்போது அவனிடம் பல்வேறு சொற்களில் அவன் ஒரு ஷத்ரியன் என்று விளக்கிக் கொண்டிருப்பார். அவருடைய ஆதாரமான கொள்கையே அதுதான். “ஷத்ரியனுக்கும் பிராமணனுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஷத்ரியன் எல்லாவற்றையும் வென்று அனுபவிக்க வேண்டியவன். பிராமணன் இங்கே உள்ள அனைத்தையும் துறந்து விண்ணில் உள்ள தெய்வீகமானவற்றை மட்டுமே அனுபவிக்க வேண்டியவன். இவர்கள் வென்று வாழ்வதற்கும், அவர்கள் துறந்து வாழ்வதற்கும் தேவையான பணத்தை சேர்த்து அளிப்பது மட்டும்தான் வைசியர்களுடைய வேலை. நாம் வைசியர்கள் அல்ல. நாம் செய்து கொண்டிருப்பது ஷத்ரியர்களுக்குரிய தொழில்.”
அஸ்வத்தின் இரண்டாவது வகுப்பு தேர்வு முடிந்தபிறகு அவனை அவர் அவனுடைய தாத்தாவின் கோயிலில் வழிபாடு செய்வதற்காக கூட்டி வந்தார். அங்கே வணங்கி முடித்து வெளியே வந்தவுடன் மீண்டும் தன் தந்தையைப் பற்றி சொல்லத்தொடங்கினார். கற்றறிந்த பிராமணர் தன் தணியாத வீரியத்தால் க்ஷத்ரியராக ஆன கதை. அன்று கூடவே யாதவனாகப் பிறந்த கிருஷ்ணன் க்ஷத்ரியனாக ஆன கதையையும் சேர்த்துக் கொண்டார். சிசுபாலனை கிருஷ்ணன் கொன்ற நிகழ்ச்சியை விவரித்தார்.
உன் தாத்தாவின் துணிச்சலும் அறிவும் அபாரமானவை. அவர் தனியாக இந்த ஊருக்கு வந்தார். அவர் கையில் ஒரு ரூபாய் கூட இருக்கவில்லை. ஆனால் தான் ஷத்ரியன் என்றும், எவரிடமிருந்தும் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் முடிவு செய்தார். ஆகவே இந்தப்படித்துறையில் அவர் வந்து நிற்கும்போது அவருக்கு உணவளிக்க பலர் முன்வந்தபோதும் கூட அவர் உணவைப் பெற்றுக்கொள்ளவில்லை. உழைத்து உண்பதும் ஷத்ரியர்களுக்கு உரியதில்லை. ஆகவே அவர் எந்த வேலையையும் செய்யவும் நினைக்கவில்லை. இந்த வழியாகச் செல்பவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களில் இருவரைப் பார்த்தவுடனே அவருக்கு ஒரு உள்வெளிச்சம் தோன்றியது. அவர்களை அருகே அழைத்து ’உன்னுடன் வரும் இவன் உன்னுடைய தாயாதி, இவன் உனக்கு துரோகம் செய்யவிருக்கிறான். உன்னை அழிப்பதற்காக திட்டம் தீட்டுகிறான். உன் மனைவியுடன் இவனுக்கு கள்ள உறவு இருக்கிறது’ என்றார்.
அவர்கள் குழம்பி மாறி மாறிப் பேச ஆரம்பித்தார்கள். திட்டவட்டமாக அவர் அவனிடம் சொன்னார். ’இந்த பங்காளி உனக்கு துரோகம் செய்கிறான். இதை உனக்கு சொன்னதற்காக நீ ஐந்து அணாக்கள் பணம் கொடு. துரோகம் செய்யவில்லை என்றால் அந்த ஐந்து அணாவை என்னிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நான் இங்கு தான் இருப்பேன்.’ அவர்கள் அவர் பிராமணர் என்றதனால்தான் அடிக்கவில்லை. ஆனால் ஐந்து அணாவை கொடுத்துவிட்டார்கள். குழம்பிப்போய் அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.
ஆனால் மறுநாள் அவன் திரும்பி வந்து அவரிடம் ’என்னைக் காப்பாற்றினீர்கள் பண்டிட்ஜீ’ என்று சொல்லி காலில் விழுந்தான். ’நேற்று என்னுடன் வந்த பங்காளி பாதியிலேயே காணாமல் போனான். நான் வீட்டுக்குப் போய் என் கணக்குகளைச் சரிபார்த்து கொண்டிருந்தேன். அன்று இரவே என் மனைவி நகைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கல்கத்தாவுக்கு போய்விட்டாள். அவர்கள் என் தொழிலையே கைப்பற்ற நினைத்திருந்தார்கள். நான் உங்கள் வார்த்தையால் தப்பிவிட்டேன்.’
அவன் அவருக்கு நிறையப் பணம் கொடுத்தான். உன் தாத்தா அந்தப் பணத்தைக்கொண்டு தான் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்யத்தொடங்கினார். தேவையானவர்களுக்கு பண உதவிகள் செய்வார். அந்த உதவி பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கு திரும்ப உதவி செய்வார்கள் அவ்வாறு தான் அவர் இவ்வளவு செல்வத்தை ஈட்டினார்.
வீரம் அவருடைய இயல்பிலேயே இருந்தது அவருடைய வீரத்தைக்கண்டு இங்கிருந்த நவாப்கள் அஞ்சினார்கள். அவரை அழிக்க முயன்றார்கள். அவர் வெள்ளைக்காரர்களிடம் கூட்டு சேர்ந்துகொண்டார். அவருடைய வீரமும் விவேகமும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார்கள். அவரும் வெள்ளைக்காரர்கள் இங்கு ஆட்சி செய்வதற்கான எல்லா உதவிகளையும் செய்தார். இப்பகுதியையே அவருக்கு நாடாக அளித்து, ராவ்பகதூர் பட்டமும் கொடுத்து அவரை இங்கே ஆட்சி செய்ய வைக்கவேண்டுமென்று வெள்ளைக்காரர்கள் நினைத்திருந்தபோதுதான் அவர் இறந்துபோனார்.
“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இந்தப்பகுதி வேறு வகையான ஆட்சிக்குள் சென்றது இல்லையென்றால் இந்தப்பகுதியை ஆட்சி செய்யக்கூடிய அரசராக அவர் இருந்திருப்பார். நாம் இப்பகுதியின் அரசர்களாக இருந்திருப்போம்” என்று ஹரீந்திரநாத் தன் மகனிடம் சொன்னார். அவன் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்துக்கொண்டு வந்தான்.
அஸ்வத் அந்த சிறிய பளிங்குச் சிலையை ஒவ்வொரு முறையும் ஒரு விந்தையான உணர்வுடன் தான் பார்ப்பது வழக்கம். அவர் கங்கைக்கரையில் விற்கப்படும் மண்ணாலான சிறிய பண்டா பொம்மையைப் போலிருப்பதாக அவன் நினைத்தான். அவருடைய புருவங்கள் இரண்டும் தவறாக வரையப்பட்டிருந்தன. கண்கள் கருமையாக வரையப்பட்டிருந்ததால் அவர் சந்தேகத்துடனும் பயத்துடனும் அனைவரையும் பார்ப்பது போலிருந்தது. ஆனால் தந்தை சொன்ன கதைகளின் வழியாக அவன் வேறொரு ஃபணீந்திரநாத்தை கற்பனை செய்துகொண்டான். அவர் ஹனுமான் போல திரண்ட தோள்களுடன் இருந்தார்.
அன்று அவர்கள் வழிபட்டு முடித்ததும் அவனை காரில் வீட்டுக்குக் கொண்டு செல்ல ஆணையிட்டுவிட்டு ஹரீந்திரநாத் தன் கேளிக்கைக் கட்டிடத்துக்கு சென்றார். அவனை வீட்டுக்குக் கொண்டு சென்ற கார் சாலையில் ஒரு முனை திரும்பும்போது ஒரு சுவரில் முட்டியது. சுவருக்குரியவன் வந்து சத்தம் போடத்தொடங்க, டிரைவர் இறங்கி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது பயந்துபோன அஸ்வத் கதவைத் திறந்து வெளியே இறங்கி மீண்டும் கங்கைக்கரைக்கு ஓடிவந்து ,அவனுக்கு ஏற்கனவே தெரிந்த அவன் அப்பாவின் வீட்டுக்குச் சென்றான். அங்கேதான் அவர் இருக்கிறார் என்று அவர் டிரைவரிடம் பேசுவதிலிருந்து அவனுக்குத் தெரிந்திருந்தது.
அங்கு வாசலில் செருப்புகளும் குடைகளும் இருந்தன. வாசல் காவலனாயிருந்த பிண்டு தென்படவில்லை. அவன் அவர் மாடியிலிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டு மெதுவாக மாடியேறிச் சென்றான். மாடியில் பேச்சுக்குரல்களும் சிரிப்பொலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. அங்கே பெண்களும் இருப்பது போலிருந்தது. அம்மாவும் வேலைக்காரிகளும் அங்கே வந்துவிட்டார்களா என்று யோசித்தபடி அவன் முன்னால் சென்றபோது பிண்டு ஒரு சிறு ஜன்னலை கொஞ்சம் திறந்து, அதனூடாக ஒரு கண்ணை மட்டும் வைத்து உள்ளே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
சற்று நேரத்தில் பிண்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனைக் கவனிக்காமல் படியிறங்கிப் போனதும் அவன் சென்று அந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தான். அங்கே அவனுடைய அப்பா இன்னொரு நடுவயதான கரிய நிறம் கொண்ட பெண்ணுடன் நிர்வாணமாக இருந்தார். அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களுடைய உடலில் இருந்து அவனால் கண்களை விலக்கமுடியவில்லை. அந்தக்காட்சி அளித்த படபடப்பையும் மனக்கிளர்ச்சியையும் தன் வாழ்நாள் முழுக்க மறந்ததும் இல்லை.
அதன்பின் அவன் உள்ளத்தை உருவாக்கியதே அந்தக்காட்சிதான் என்று அவனே பலமுறை நினைத்துக் கொண்டதுண்டு. வேறு எதையுமே நினைக்க முடியாமல் அவன் மாறினான். அவனுடைய தந்தைமேல் வெறுப்பு எதுவும் வரவில்லை. மாறாக அவருடைய தோற்றத்தில் வளர்ந்த ஒருவனாக தன்னை கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்தான். எப்போதுமே தன்னை நாற்பது வயது கடந்த ஒருவனாகவே மனதுக்குள் எண்ணியிருந்தான். மிக இளமையிலேயே அவன் கண்கள் பெண்களுக்காக துழாவிப் பரபரக்கத் தொடங்கின. அந்தப்பெண்ணின் சாயல் கொண்ட பெண்களை தொடர்ந்து அவன் கண்கள் தேடிக்கொண்டே இருந்தன .அத்தகைய ஒரு பெண்ணை பார்த்ததுமே முதல் திடுக்கிடல் உருவாவது அவனுடைய அனுபவங்களில் மிக முக்கியமானதாக இருந்தது.
அவன் தந்தையுடன் இருந்த அந்தப் பெண் கிராமங்களில் இருந்து வந்து கங்கைக்கரையில் கடைகள் வைத்து சிறுவியாபாரங்கள் செய்து வாழும் பல பெண்களில் ஒருத்தி. அவர்கள் அனைவருக்குமே பொதுவான ஒரு தோற்றம் இருந்தது. அவர்கள் வலுவான உடல் கொண்டவர்களாகவும், உருண்ட முகம் கொண்டவர்களாகவும், புடைத்து நிற்கும் கண்களும் பெரிய பற்களும் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் எந்த வகையான தயக்கமும் அச்சமுமில்லாத ஒரு மூர்க்கம் இருந்தது. அவர்கள் பொருட்களை வாங்குபவர்களிடம் பணிவாகவும் அன்பாகவும் பேசுவது போலத்தோன்றினாலும் கூட, எந்தக்கணமும் சட்டென்று உக்கிரமான வசைகளை வீசி அவர்களின் விதைப்பைகளை கைகளால் அள்ளிப்பற்றிக் கொள்ள முடியும். அந்தப் பிடியை எதன் பொருட்டும் விடாமல் கூச்சலிட்டு சண்டைபோட முடியும். அவர்களுக்குப் பணிந்தால் ஒழிய அவர்களிடம் இருந்து தப்பவும் முடியாது.
அஸ்வத் தனது பதினாறாவது வயதில் தன்னுடைய தந்தை கட்டிய மாளிகையில் அதே அறையில் அதே போன்ற ஒரு பெண்ணுடன் உறவு கொண்டான். அதை பிண்டுதான் ஏற்பாடு செய்து அழைத்து வந்தான். அதற்காக அவனுக்கு இருபது ரூபாய் பணம் கொடுத்தான். அந்த உறவு அவன் மனதைக் கொந்தளிக்கச் செய்தது. அவள் வருவதற்காக காத்திருந்தபோது அவன் வியர்த்து, கால்களும் கைகளும் வழுக்க, நெஞ்சு ஓடும் ஒலியைக் கேட்டபடி அந்த அறைக்குள் சுற்றிவந்துகொண்டிருந்தான். வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று பலமுறை முடிவெடுத்தாலும் அவனைத் தவிர அக்கட்டிடத்தில் எவரும் இருக்கவில்லை. அவன் தந்தை வியாபாரத்துக்காக லக்னோ சென்றிருந்தார். அவருடைய நண்பர்கள் அவர் இல்லாதபோது வருவதில்லை.
சற்று நேரத்தில் அந்தப்பெண் வந்து சிறுவனாகிய அவனைப் பார்த்தபின் வெடித்து சிரித்து அவன் தோளைப்பிடித்து அழுத்தியபோது அவன் உடல் நடுங்கி குரல் உள்ளே இழுத்துக்கொண்டது. அவளைத் திருப்பி அனுப்பத்தான் முயன்றான். அப்போது பேச முடியவில்லை. ஆனால் அவள் மிக இயல்பாக அவனைக் கையிலெடுத்துக் கொண்டாள். அதன் பின் அவன் தான் ஒரு சிறுவனல்ல, ஆணென்று தெரிந்துகொண்டான். அவள் சென்றபிறகு ஒரு மிதப்பையும் ஆணவத்தையும் உணர்ந்தான். தன் உடல் பெரிதாகிவிட்டதாகவும், ஓங்கி அறைந்து ஒரு மனிதனை அங்கேயே வீழ்த்திவிடமுடியும் என்பது போலவும் எண்ணிக்கொண்டான். கங்கையின் படிக்கட்டினூடாக நடந்துசெல்லும்போது தன்னை அத்தனை பேரும் அஞ்சவேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தன்னிடம் பணிந்து வளைந்துதான் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
குடிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நேராக சுக்ராமிடம் சென்று பத்து ரூபாயை நீட்டி கொடு என்றான். சுக்ராமின் கண்கள் மாறின. அவன் ஏதோ சொல்ல வந்தான்.பிறகு பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு சிறிய அலுமினியக் கோப்பையில் நிறமற்ற திரவத்தை விட்டு அவனுக்கு நீட்டினான். அவன் அதற்கு முன் நாட்டுச்சாராயம் குடித்ததில்லை. அது தீ போல எரிந்தபடி உள்ளே இறங்கும் என்றும், வயிற்றுக்குள் சென்று அங்குள்ள குடல்களையெல்லாம் பற்றிய எரியவைக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும்; அது ஒரு கசப்பான குமட்டும் திரவமாகத்தான் அவனுக்கு தெரிந்தது. தண்ணீரைக் குடித்து சுக்ராம் கொடுத்த காரமான பொரிகடலையை வாய்க்குள் போட்டு மென்றபோது அந்தக் குமட்டலும் நின்றுவிட்டது. அவன் எந்த மயக்கத்தையோ தள்ளாட்டத்தையோ உணரவில்லை. ஆனால் குடித்திருக்கிறோம் என்று உணர்வு வந்ததும் அவனுக்கு நிறைவும் மேலும் பெருமிதமும் ஏற்பட்டது.
படிக்கட்டில் வந்து அமர்ந்து அங்கே சென்றுகொண்டிருந்த பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் எந்தப் பெண்ணை மறுபடியும் கொண்டு வரச் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து, அந்தக் கற்பனையால் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டான். ஒவ்வொரு பெண்ணையும் வெறும் உடல் மட்டுமாக அவன் பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அவன் உடல் அமர்ந்த நிலையிலேயே தள்ளாடத் தொடங்கியது. தலை கனமாக ஆகி, முன்பு காய்ச்சலின்போது அவன் உணர்ந்த எடையின்மையும் ததும்பலும் உருவாகியது. கையை ஊன்றி அவன் எழுந்தபோது அப்படியே பின்னால் சாய்ந்து விழுந்துவிட்டான். கையைத் தலைக்கு வைத்துக்கொண்டு அங்கேயே படுத்தான்.
இரண்டு மணி நேரத்துக்குப்பிறகு எழுந்தபோது சுற்றிலும் நல்ல இருட்டு இருந்தது. நீராட வந்தவர்கள் எல்லாம் திரும்பிச் சென்றிருந்தார்கள். வியாபாரிகள் மட்டும் இருந்தனர். கோயிலில் மட்டும் வெளிச்சமும் சில அசைவுகளும் இருந்தன. அவனுக்கு கடுமையாகப் பசித்தது. நடக்க முடியாதபடி உடல் தள்ளாடினாலும்கூட நின்று நின்று அவன் தன்னுடைய கட்டிடத்துக்கு திரும்பி வந்தான். உள்ளே நுழையும்போது பிண்டுவிடம் சாப்பாடு வாங்கி வரச்சொன்னான். இறைச்சி வேண்டும் என்று குறிப்பாகச் சொன்னான். அன்றிரவு இறைச்சி உணவை வயிறு புடைக்க உண்டுவிட்டு, கட்டிலில் படுத்து தன்னினைவில்லாமல் மறுநாள் வெயில் எழும் வரைக்கும் தூங்கினான்.
மறுநாள் காலை அவன் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய உள்ளே அவன் முழுக்க மாறிவிட்டிருந்தான். ருக்மிணி அவனை இரவெல்லாம் பல இடங்களில் தேடியிருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டபடி அவனை நோக்கி வந்தாள். ஆனால் அவளிடம் நுணுக்கமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவனை பார்க்காமல் பொதுவாக “சாப்பிடுகிறாயா?” என்று கேட்டபடி நாற்காலியின் விரிப்பைச் சரிசெய்தாள். அதன்பின் உள்ளே போய்விட்டாள்.
எப்போதுமே அவன் ருக்மிணியைப் பொருட்படுத்தியதில்லை. மிக அபூர்வமாகத்தான் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். ருக்மிணி ஆண்கள் புழங்கும் வீட்டின் முகப்பிற்கு வருவதில்லை. ஆண்கள் தேவையில்லாமல் வீட்டுக்குள் செல்வது அங்கே வழக்கமில்லை. ருக்மிணியை நேரிட்டுப் பார்க்காமல் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு, எப்போதும் எரிச்சலுடனும் சலிப்புடனும் அவளிடம் பேசும் பாவனையை அவன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். பெண்களிடமே அப்படித்தான் பேசவேண்டுமென்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.
அவன் தந்தை எப்போதும் ருக்மிணியிடம் ஒற்றை வரிகளில் தான் பேசினார். ஆணைகளை இடும்போதோ, அறிவுரைக்கும்போதோ உரக்க வசைபாடும் தொனியில் அவளை அழைத்து பேசினார். அவளை அழைக்கும்போது பெயர் சொல்லாமல் ஒற்றை ஓசையால் அதட்டி அழைத்தார். விலகிச்செல்ல வேண்டுமென்று சொல்லும்போது சுட்டுவிரலை அசைத்து போகும்படி சொன்னார் அவளுக்கு தேவையான அனைத்தையும் அவர் அளித்தார். பணம் பயணத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் அவள் விரும்பியபடி தான் நடந்தன. ஆனால் அவள் அவரிடம் அவர் விரும்பாத ஒன்றை சொல்ல முடியும் என்ற வாய்ப்பை மட்டும் அவர் ஒருபோதும் அளிக்கவில்லை.
அந்தப் பாதுகாப்பு வளையத்தை ஆண்கள் தனக்காக உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று அதைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமலேயே அஸ்வத் அறிந்திருந்தான். அந்த நாளுக்குப் பிறகு அந்த வளையம் எதற்காக என்பதை அவனே புரிந்துகொண்டான். அந்த நாள் காலையிலேயே அவன் மாறியிருப்பதை அவன் அம்மாவும் தெரிந்துகொண்டாள். அவன் அவளிடம் பேசும்போது அவ்வப்போது குரலில் குழைவும் சில சமயங்களில் மெல்லிய கிண்டலும் வருவதுண்டு. எப்போதாவது அவள் அவனருகே வந்து இயல்பாக அவன் தோளை தொடவும் அவன் தலைமுடியை வருடவும் செய்வதுண்டு. ஆனால் அந்த நாளுக்குப்பிறகு அவள் அவனிடம் கனிவுடனோ சிரிப்புடனோ ஒரு முறையும் பேசியதில்லை. அவனை அதன்பிறகு அவள் தொட்டதே இல்லை.
நெடுங்காலத்துக்கு பிறகு அவன் எண்ணிப்பார்த்தபோது, அந்த நாள் காலையில் திரும்பி வந்த அவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவனுக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு தெரிந்துவிட்டது என்று அவன் புரிந்துகொண்டான். அது எப்படி அவளுக்குத் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. எப்படியோ அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது என்று மட்டும் தான் என்று அவனால் சொல்லிக்கொள்ள முடிந்தது. அவன் அவளை முழுக்கவே மறந்து அவளில்லாத உலகத்தில் வாழத்தொடங்கினான்.
ஒவ்வொன்றாக அவனுக்கு பழக்கங்கள் தொடங்கின. அதன்பிறகு தான் அவன் சிகரெட் பிடிக்கத் தொடங்கினான். அவன் குடிப்பதும் சிகரெட் பிடிப்பதும் ஆறுமாதத்திற்குள் ஹரீந்திரநாத்துக்கு தெரிந்துவிட்டது. அவருடைய வேலைக்காரர்கள் அதை சொன்னபோது அதை அவர்கள் பொருட்படுத்தாதது போல் இருந்தார். பிறகு ஒரே ஒருமுறை அவனிடம் அவன் கண்களைப் பார்க்காமல் பேரெடுகளை திருப்பியபடியே “சில பழக்கங்கள் உடல் நலத்தையும் விரைவிலேயே அழித்துவிடக்கூடியவை. நமக்கு அவற்றின் மேல் ஒரு கட்டுப்பாடு வேண்டும். தன் உடல் மேலும் உள்ளத்தின் மேலும் கட்டுப்பாடுள்ளவன் மட்டும் தான் ஷத்ரியன் எனப்படுவான்” என்றார்.
அவன் அழுத்தமான குரலில் ”தெரியும்” என்றபோது நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் அதன்பிறகு அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அவர் உள்ளூர அவனை அஞ்சத்தொடங்கியதும் அந்நாளுக்குப் பிறகுதான்.
(மேலும்)
Why did Advaita not oppose the caste system?
I was listening to your discourses on Vedanta and Indian thought. I had a prolonged question in my mind about Vedanta. Maybe this question will be in the minds of everyone who emerged from the lower levels of our society.
Why did Advaita not oppose the caste system?பறவைபார்த்தல் பற்றிய காணொளி கண்டேன். அருமையான விளக்கம். இன்றைய குழந்தைகளின் மிகப்பெரிய சிக்கலே அவர்கள் எதையுமே சில நிமிடங்களுக்குமேல் கவனிப்பது கிடையாது என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் நொடிகள் மட்டுமே நீடிக்கும் காணொளிகளைத்தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்ககள்
பறவை பார்த்தல் – கடிதம்June 12, 2025
அஞ்சலி: ஜெயதேவன்
கவிஞர், இதழாளர், ஆசிரியர் என பலமுகம் கொண்டவரான ஜெயதேவன் அண்மைக்காலமாக முகநூலில் அரசியல் பதிவுகள், கவிதைப்பதிவுகள் வழியாக பரவலாக அறிமுகம் ஆகியிருந்தார். இன்று 12 ஜூன் 2025 அன்று மறைந்தார். அஞ்சலி
ஏர் இந்தியா விபத்து
ஏர் இந்தியா விமானம் அகமதாபாதில் விபத்துக்கு உள்ளானது ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. ஏனென்றால் என் அகத்தில் இந்த பயம் இருந்துகொண்டே இருந்தது. ஏர் இந்தியாவின் விமானங்களின் மிக மோசமான நிர்வாகம், சொல்லப்போனால் இப்படி ஒரு நிர்வாகம் இருக்கமுடியும் என்பதே நிர்வாகவியல் நிபுணர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம், எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாக இருந்தது.
சென்ற முறை நான் அமெரிக்கா சென்றபோது நண்பர் விஸ்வநாதன் எனக்கும் அருண்மொழிக்கும் ஏர் இந்தியாவில்தான் டிக்கெட் போட்டிருந்தார். அதை சரியாகக் கவனிக்கவில்லை. டிக்கெட்டை பார்த்து ஏர் இந்தியா என்றதுமே ஏர் இந்தியா என்றால் பயணம் ரத்து, அமெரிக்கா வரப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அருண்மொழி விஸ்வநாதனிடம் சொல்லி டிக்கெட்டை ரத்துசெய்து எமிரேட் விமானத்தில் டிக்கெட் போட்ட பின்னரே கிளம்பினேன்.
அதில் கொஞ்சம் பணம் இழப்புதான். நண்பர்களுக்கு வருத்தமும் இருந்திருக்கும். ஆனால் எனக்கு ஏர் இந்தியா அனுபவங்கள் அப்படிப்பட்டவை. நான் இரண்டு முறைதான் வெளிநாட்டில் இருந்து வரும் ஏர் இந்தியாவில் பயணம் செய்திருக்கிறேன். இரண்டுமே சிங்கப்பூரில் இருந்து. உள்நாட்டில் கடந்த இருபதாண்டுகளில் மூன்றே முறை. ஏர் இந்தியாவை கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். ஏர் இந்தியா டிக்கெட் மட்டும்தான் இருக்கிறது என்றால் பயணத்தை தவிர்த்துவிடுவேன்.
நான் மிகைப்படுத்துவதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். சும்மா இணையத்தில் தேடிப்பாருங்கள். ஏர் இந்தியாவின் நிர்வாகக்குளறுபடிகள் பற்றி பயணிகளின் புகார்கள் ஒருவாரம் ஒன்றாவது கண்ணில் படும். முதலில் விமானம் தூய்மைப்படுத்தப்படுவதே இல்லை. ஒரு பயணம் முடிந்து விமானம் நின்றால் முந்தைய பயணத்தின் அத்தனை குப்பைகளுடனும் அடுத்த பயணத்தில் நாம் அந்த இருக்கைகளில் அமரவேண்டும். கழிவறைகள் நாறும். தூய்மைப்படுத்த வேண்டிய ஊழியர்கள் அதைச் செய்வதில்லை. வேறு எந்த விமானமும் அசுத்தமாக இருப்பதில்லை.
அதைவிட கஷ்டம் இருக்கைகள் உடைந்து இருக்கும் என்பது. உடைந்த இருக்கைகளில் பத்துப்பதினைந்து மணிநேரம் பயணம் செய்வது நினைத்தே பார்க்கமுடியாது. ஆனால் அதைவிட ஓர் இருக்கை உடைந்திருப்பதை ஆண்டுக்கணக்கில் சரிசெய்யாமல் விமானத்தை ஓட்டும் ஒரு நிறுவனம் எப்படி அந்த விமானத்தைப் பேணும் என்னும் சந்தேகம்தான்.
James Q. Wilson மற்றும் George L. Kelling ஆகியோர 1982 ல் முன்வைத்த உடைந்த சன்னல் கொள்கை இந்த விஷயத்தில் ஒரு நல்ல நடைமுறை உதாரணம் என்பது என் எண்ணம். அவர்கள் அதை ஒரு நகரில் சிறிய குற்றங்களை கடுமையாக ஒடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அதைப்பற்றி ருட்கர் பிரக்மான் சொன்னதில்தான் எனக்கு உடன்பாடு. ஆனால் சேவைத்துறைகளில் அது முக்கியமான கொள்கை. ஒரு கட்டிடத்தில் ஒரு சன்னல் கண்ணாடி உடைந்திருந்து அது மாதக்கணக்கில் சரிசெய்யப்படாமல் இருந்தால் அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது, அந்த உடைந்த சன்னல் நிர்வாகக்குளறுபடி மற்றும் உதாசீனத்தின் அடையாளம் என்பது அக்கொள்கை.
ஒரு விமானத்தில் ஓர் இருக்கை ஆண்டுக்கணக்கில் சரிசெய்யப்படவில்லை, பலமுறை புகார்கள் வந்து, ஊடகங்களில் பேசப்பட்ட பிறகும் கூட என்றால் அது தவறோ பிழையோ அல்ல, குற்றகரமான உதாசீனம். அது மிகப்பெரிய அபாயங்களுக்கு இட்டுச்செல்லக்கூடியது. அதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தது, அதன் ஊழியர்கள் இன்றும் அரசு ஊழியர்களின் அதே மனநிலையில் இருக்கிறார்கள்.
இந்தியாவின் நிர்வாகவியலில் உடைந்த சன்னல் கொள்கைக்கு இன்று வரை இடமில்லாமலிருக்கிறது. ஒரு நட்சத்திர விடுதியில் முன்பதிவுசெய்தபின் இரவில் சென்று அறைகேட்டால் தப்பான இடத்தில் தேடிவிட்டு ‘சாரி சார், உங்களுக்கு அறை பதிவுசெய்யப்படவில்லை’ என்கிறார்கள். ‘பதிவுசெய்யாமல் இங்கே நான் வரமாட்டேன். தேடிப்பாருங்கள்’ என்றால் மீண்டும் ‘உங்கள் பெயர் இல்லை சார்’ என்கிறார்கள். நிர்வாகியிடம் புகார் சொன்னால் அவர் வந்து தேடிவிட்டு ‘சாரி சார் ,பிரீமியம் புக்கிங்கில் இருக்கிறது’ என அறை கொடுக்கிறார். இது எனக்கு அடிக்கடி நிகழும் அனுபவம்.
ஒரு ‘சாரி’யோடு எல்லாம் முடிந்துவிடுகிறது. அந்தப்பிழையின் வேர் கண்டுபிடிக்கப்படுவதில்லை, அந்தப் பிழை களையப்படுவதே இல்லை. அந்த ஓட்டலில் எல்லாமே தப்பாகத்தான் இருக்கும். நான் இப்படி குளறுபடி செய்த ஒரு ஓட்டலில் நிர்வாகியிடம் சொன்னேன். “இங்கே எல்லாமே தப்பாகத்தான் இருக்கும்” அவர் சீண்டப்பட்டார். “சாரி சார், நீங்கள் எங்களை தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றார். “சரி வாருங்கள், அறையைக் காட்டுங்கள்” என்றேன். அறையில் ஏஸி வேலை செய்யவில்லை. இன்னொரு அறையை காட்டினார். அங்கே தண்ணீர்க்குழாய் சரியாக மூடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது. ஊழியர்களை கண்டமானிக்கு வசைபாடினார். உண்மையில் அது நிர்வாகப்பிரச்சினை, ஊழியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல.
உண்மையில் இந்தச் சிக்கல் இந்திய உள்ளத்திற்குப் புரிவதே இல்லை. ‘ஒரு விமானத்திலே சீட் கொஞ்சம் சரியலையாம், ரொம்ப இது பண்ணிக்கிடுறாரு. அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டியதுதானே?’ என்பதுதான் இங்கே உள்ள மனநிலை. ஏர் இந்தியாவின் குளறுபடிகள் பற்றி இணையதளங்களில் பயணிகளின் குமுறல்கள் பதிவாகும்போதெல்லாம் பலர் எதிர்வினையாற்றுவது இப்படித்தான். எங்கும் உள்ள இந்த நிர்வாகக் குளறுபடிகளால்தான் நெரிசல்களில் சாகிறார்கள். விபத்துக்களில் சாகிறார்கள். இந்த விமான விபத்து கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாகவே ஏர் இந்தியாவின் மேல் தொடர்ச்சியாக பயணிகள் முன்வைத்த குறைகளின் அடிப்படையாக அமைந்த அந்த உதாசீனத்தால் நிகழ்ந்ததுதான்.
எல்லாமே நமக்கு நாலைந்து நாள் செய்தி. ‘செத்தவன் சாகிறான், இருக்கிறவன் வாழணும்ல? எல்லாம் அவனவன் தலையெழுத்து’ என்று கடந்துசெல்கிறோம். இந்த விபத்துக்கும் வழக்கம்போல தலைவர்கள் இரங்கல், நஷ்டடஈடு அறிவிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என ஒரு வாரம் போகும். அப்படியே மறந்து அடுத்த விபத்துக்குச் சென்றுவிடுவோம். இது எவருடைய அலட்சியம் என்று கண்டுபிடிக்கப்படாது. எவருமே தண்டிக்கப்பட மாட்டார்கள். எந்த நிர்வாகியின் குறைபாடு என்பது பேச்சுக்கே வராது. ஏர் இந்தியா எந்த ஒரு புகாருக்கும் வழக்கமான ஒரு ‘வருந்துகிறோம்’ டெம்ப்ளேட் வைத்திருக்கிறது. அதுதான் இங்கும் சொல்லப்படும், கொஞ்சம் விரிவாக. இருநூற்றைம்பதுபேர் சாவதென்பது ஒரு பெரிய எண்ணிக்கை என்பதனால்.
நாம் செய்யக்கூடுவது ஒன்றே. நாம் சம்பந்தப்பட்ட துறைகளில் சிறிய நிர்வாகச் சிக்கல்களைக்கூட கவனிக்க வேண்டும். அவை மிகப்பெரிய நிர்வாகப் போதாமைகளின் அடையாளங்கள் என உணரவேண்டும். எங்கும் எல்லா வேலையும் ‘சமாளிக்கப்படுவதே’ இங்கே வழக்கம். சிறந்த பணி, முழுமையான பணி என்னும் பேச்சே இங்கே இல்லை. பிழையின்மை என்பதுதான் உண்மையில் இயல்பான சரியான நிலை. பிழை என நிகழ்வதெல்லாமே எவரோ செய்யும் தவறுகள்தான். தவறுகள் கண்டடையப்படவேண்டும், களையப்பட வேண்டும், தண்டிக்கப்படவும் வேண்டும்.
இந்த விமானப்பாதுகாப்பு விஷயத்தில், மிகச்சிறிய செயலிலானாலும், கவனக்குறைவாக இருந்த அத்தனைபேரும் கொலையாளிகள்தான். சமாளிப்பது என்பது பிழைகளையும் குளறுபடிகளையும் ஏற்றுக்கொள்வதுதான். அது எப்போதுமே அழிவுக்கான பாதை. தருணத்தில், இந்த உயிர்களை சாட்சியாக்கி, நாம் சொல்லிக்கொள்ளவேண்டியது அதுதான்.
பா.ஜம்புலிங்கம்
பௌத்த ஆய்வாளர். சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர். களப்பணிகளில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளார்.
பா. ஜம்புலிங்கம் – தமிழ் விக்கி
காவியம் – 53
சுடுமண் சிற்பம். பொமு1 சாதவாகனர் காலம். மதுரா”குணாட்யர் என்னை நோக்கி வந்து இடையில் கைவைத்துக்கொண்டு நின்று அக்கேள்வியைக் கேட்டார். நான் புன்னகைத்தபடி பேசாமல் அமர்ந்திருந்தேன். அவர் உரக்க அதட்டி மீண்டும் கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரைச் சூழ்ந்து நிழல்கள் சிரிக்கும் கண்களுடன் நின்றிருந்தன” என்று கானபூதி சொன்னது.
“சொல், அவர் மீண்டும் தன் மாணவரைச் சந்தித்தாரா? அவர் செய்த பிழை என்ன என்று அவருக்கு அப்போதாவது புரிந்ததா?” என்றார் குணாட்யர்.
நான் ”கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழக்கம் எனக்கில்லை. நான் கதைகளையே சொல்வேன்” என்றேன்.
”சரி, சொல்” என்றார்.
“உட்கார்” என்றபடி நான் அமர்ந்தேன். அவரும் அமர்ந்தார். நான் கைகளை மண்ணில் வைத்தேன்.
”இரண்டு கைகளையுமா? நான் ஒரு கேள்வியைத்தான் கேட்டேன்”
“எந்த உருவத்திற்கும் நிழலுண்டு. இரண்டிரண்டாகவே இங்கே அனைத்தும் உள்ளன” என்றேன்.
குணாட்யர் எரிச்சலுடன் தலையசைத்து “சரி, தொடங்கு” என்றார்.
“தன் குடிலுக்கு வியாசமானசம் என்று பெயரிட்டிருந்தார் ரோமஹர்ஷணர். அவருடைய மாணவர்கள் சுமதி, அக்னிவர்ச்சஸ், மித்ராயுஸ், சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என ஆறுபேரும் முதன்மையாக அமைய நூறு மாணவர்கள் அவரிடம் காவியம் பயின்றார்கள். மூன்றாண்டுக்கு ஒருமுறை புதிய மாணவர்கள் வந்தனர். அவர்கள் கதைசொல்லிகளாக மாறி பாரதநிலமெங்கும் பரவிச்சென்று கொண்டிருந்தார்கள்.” என்று நான் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
ஒரு நாள் அந்தண மாணவனாகிய சாவர்ணி மாணவர்களுக்கு ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் அவ்வழியாகச் சென்ற ரோமஹர்ஷ்ணர் நின்று செவிகூர்ந்தார். குழப்பத்துடன் கையசைத்து அவரை அழைத்து “அந்த வரிகள் வியாசமகா காவியத்தில் இல்லை. அந்தக் கதையே காவியத்தில் இல்லை. நீ வேறேதோ காவியத்தை குழப்பிக்கொண்டிருக்கிறாய். என்ன ஆயிற்று?” என்றார்.
“இல்லை ஆசிரியரே. இங்கு வந்து தங்கிச்செல்லும் சூதர்களிடமிருந்து நான் இதை கற்றேன். இந்த கதையும், இவ்வரிகளும் வியாசரின் மூலநூலில் உள்ளவையே.”
“நீ எனக்குக் கற்பிக்கிறாயா? அப்படி இல்லை, நானறியாத வியாசகாவியமா?” என்று ரோமஹர்ஷ்ணர் சீறினார்.
“நீங்கள் மறந்திருக்கலாம், அல்லது…” என்று தயங்கிய சாவர்ணி “அல்லது உங்களுக்குச் சொல்லாத பகுதிகளை எஞ்சிய மாணவர்களுக்கு வியாசமுனிவர் கற்பித்திருக்கலாம்… இதுபோல பல விடுபடல்கள் நீங்கள் கற்பிக்கும் வியாசகாவியத்தில் உள்ளன. நான் அவற்றை இங்கு வந்த பாடகர்களிடமிருந்து கற்று இங்கே வரும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறேன்” என்று சொல்லி மீண்டும் தயங்கி “நான் வியாசரின் நோக்கத்தை அறியவில்லை. ஆகவே இந்த பகுதிகளை அந்தணரோ ,ஷத்ரியரோ ஆன மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கிறேன். நிஷாத மாணவர்களுக்கு நீங்கள் கற்பித்த வடிவிலேயே கற்பிக்கிறேன்” என்றார்.
கடும் சினத்துடன் தன் குடிலுக்குத் திரும்பிய ரோமஹர்ஷணர் தன் ஆறுமாணவர்களையும் அங்கே வரவழைத்தார். அவர்களில் எவரெல்லாம் அந்த கூடுதல் கதைகளை கற்பிக்கிறார்கள் என்று கேட்டார். நிஷாதகுலத்தைச் சேர்ந்தவனாகிய அகிருதவிரணன் தவிர அனைவருமே வேறுவடிவத்தைத்தான் கற்பித்தார்கள்.
சீற்றத்துடன் “இவை பொய்யான பகுதிகள். இவை மகாவியாசன் அறியாமல் அவன் காவியத்தில் சேர்க்கப்பட்டவை. அதற்கு நமக்கு உரிமை இல்லை. இனிமேல் இந்த வரிகள் இங்கே கற்பிக்கப்படலாகாது. நான் கற்பித்த பாடமே இங்கே திகழவேண்டும்” என்று அவர் ஆணையிட்டார்.
ஆனால் அவருடைய மாணவர்களில் அகிருதவிரணன் மட்டுமே தலையசைத்தான். பிறர் பேசாமல் நின்றனர்.
“நீங்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையா? ”என்று ரோமஹர்ஷணர் கேட்டார்.
“வியாசரின் காவியம் ஐவருக்குச் சொல்லப்பட்டது. ஐவரும் சேர்ந்து எதைக் கற்பிக்கிறார்களோ அதுவே முழுமையானது. நாங்கள் முழுமையையே விரும்புகிறோம்” என்று அக்னிவர்ச்சஸ் சொன்னார்.
சாம்சபாயனன் “வியாசர் சிலவற்றை உங்கள் குலத்தவர் கற்கவேண்டியதில்லை என எண்ணியிருந்தால் அது பிழையல்ல” என்றார்.
“அக்காவியத்தை எழுதியவரே மீனவப்பெண்ணின் மகன்தான்” என்று ரோமஹர்ஷணர் சொன்னார்.
“அவர் அந்தணராகிய பராசர முனிவரின் மகன். அந்தணருக்கு ரத்தமரபு தந்தை வழியாகவே. தாய் வெறும் கருப்பைதான்” என்றார் மித்ராயுஸ்.
“இதை யார் சொன்னார்கள்? எங்கே இது சொல்லப்பட்டுள்ளது?”
“வியாசரே அவருடைய காவியத்தில் இதைச் சொல்கிறார்” என்று சுமதி சொன்னார். “வைசம்பாயனரின் மரபினர் கற்கும் பாடத்தில் மிகத்தெளிவாகவே இது சொல்லப்பட்டுள்ளது”
“இது பிழையானது, வேண்டுமென்றே கதை திரிக்கப்படுகிறது” என்றார் ரோமஹர்ஷணர், ஆனால் அவருடைய குரல் தழைந்து உடைந்திருந்தது.
“இந்தக் கதையை வியாசர் உங்களிடமிருந்து மறைத்திருக்கலாம்” என்று அக்னிவர்ச்சஸ் சொன்னார். “வியாச மகாகாவியத்தில் போர்க்களக் காட்சியில் கடோத்கஜன் கொல்லப்படும் காட்சியில் மகாஞானியாகிய கிருஷ்ணனே அதைச் சொல்கிறான். முழுமையான ஞானத்தையும், முழுமையான வெற்றியையும் நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் அடையக்கூடாது, அவர்கள் அதை அடைவார்கள் என்றால் கொல்லப்படவேண்டும், கர்ணனால் கடோத்கஜன் கொல்லப்படவில்லை என்றால் தன் கையால் கொன்றிருக்க நேரிட்டிருக்கும் என்று கிருஷ்ணன் சொல்கிறார்”
”என்ன அறிவின்மை இது… யாதவ மன்னன் கிருஷ்ணனின் மகன்களே அசுரகுடியில் மணம்புரிந்தவர்கள். அவருடைய பெயரக்குழந்தைகள் அசுரர்கள். அவருக்காக படைகொண்டுவந்து களம்நின்றவர்கள் அசுரர்கள்” என்றார் ரோமஹர்ஷணர்.
“அது அறத்தை நிலைநாட்ட படை வேண்டும் என்பதற்காக அவர் செய்த ஒரு சூழ்ச்சி மட்டுமே” என்றார் சாவர்ணி. “அறத்தின் கொடி கடைசியாக மேலேறவேண்டும் என்பதே முக்கியம். அதற்காகச் செய்யப்படும் சிறு அறமீறல்கள் அறமென்றே கொள்ளப்படும். யானையின் உடலில் இருக்கும் உண்ணிகளும் சிற்றுயிர்களும் எல்லாம் இணைந்ததே யானை என்று வியாசரின் மொழி உள்ளது.”
“கடோத்கஜனின் வழியில் வந்தவர்களை அரசகுடியினராக ராஜசூயத்தில் அமர்த்தியிருக்கிறார் ஜனமேஜயன். அவர்கள் க்ஷத்ரியப் பெண்களை மணந்திருக்கிறார்கள்” என்று அவருடைய மாணவன் அகிருதவிரணன் சொன்னான்.
“ஒரே பசுவில் நாம் பால்குடிக்கிறோம், ஈக்கள் ரத்தம் குடிக்கின்றன, ஆகவே நாமும் ஈக்களும் உறவாக முடியாது என்று வியாசகாவியம் சொல்கிறது” என்றார் மித்ராயுஸ்.
பிரமித்துப் போய் ரோமஹர்ஷணர் அமர்ந்திருந்தார். மறுநாளே அகிருதவிரணன் தவிர மற்ற மாணவர்கள் அவருடைய குருகுலத்தில் இருந்து கிளம்பிச்சென்றார்கள். அவருடன் அகிருதவிரணர் மட்டும் எஞ்சினார். நிஷாதர்களல்லாத மாணவர்களும் அகன்றபின்னர் ஒரு சிலர் மட்டுமே மிஞ்சியிருந்தார்கள்.
அவர் வியாச மாகாவியத்தின் பிற வடிவங்கள் என்னென்ன என்று அதன்பின்னர்தான் விசாரிக்கத் தொடங்கினார். வியாசரின் காவியம் அதற்குள் மும்மடங்கு பெரிதாகியிருந்தது. அதில் வைசம்பாயனர் கத்ரு மற்றும் வினதையின் கதையில் இருந்து தொடங்கி, பிரஜாபதிகளின் வரலாற்றை இணைத்து, யயாதியில் தொடங்கி அஸ்தினபுரியின் முந்தைய அரசர்களின் கதைகளை எல்லாம் விரிவாக பாடிச் சேர்த்திருந்தார். அத்ரி நூறு அறநூல்களை அதில் சேர்த்திருந்தார். யுதிஷ்டிரர் வனவாசம் சென்றபோது அந்நூல்களை எல்லாம் வெவ்வேறு முனிவர்களிடமிருந்து கேட்டதாக சொல்லப்பட்டிருந்தது. விதுரரும், பீஷ்மரும் வெவ்வேறு தருணங்களில் சொல்லும் அறவுரைகள் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தன. ஜைமினி வைதிக மரபின் பல துணைக்கதைகளைச் சேர்த்திருந்தார். சுமந்து ஒவ்வொரு கதைக்கும் முற்பிறவிக்கதைகளை இணைத்தார்.
அவர்கள் ஒருவர் இணைத்ததை இன்னொருவர் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே ஒருவர் சேர்த்த கதைக்கு பிற மூவரே சான்று என்று அவை சபைகளில் ஏற்பு பெற்றிருந்தன. அக்கதைகள் வழியாக யாதவர்கள் அனைவரும் தந்தைமுறையில் க்ஷத்ரியர்கள் என்று நிறுவப்பட்டிருந்தது. பாண்டவர்களின் பிறப்புக்கு தெய்வங்களே நேரடிக் காரணம் என்று சொல்லப்பட்டிருந்தது. வீரர்கள் அனைவருக்கும் அந்தணர்களோ முனிவர்களோ முதல் தந்தையர்களாக காட்டப்பட்டிருந்தது. அறமீறல்கள் அனைத்துமே முற்பிறவியின் சாபங்களால் நிகழ்ந்தேயாக வேண்டியவை என்று வாதிடப்பட்டிருந்தது.
அந்த விளக்கங்கள் அஸ்தினபுரியின் அரசர்களுக்கு தேவையானவை என்பதனால் அவை அரச ஆதரவுடன் நிலைநிறுத்தப்பட்டன. கூடவே அரசகுடிக்கு ஒவ்வாதவை அனைத்துமே நீக்கம் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டுக்கும் அந்த திருத்தங்கள் கூடிக்கூடி வந்திருப்பதை ரோமஹர்ஷணர் கண்டார். அவை நிஷாதர்களை ஒவ்வாதவர்களாக விலக்கி, யாதவர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்குமான இணைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தன.
ஒருநாள் தன் குருகுலத்தை கைவிட்டுவிட்டு ரோமஹர்ஷ்ணர் கிளம்பி சுகவனத்தை அடைந்தார். அங்கே தன் மகன் சுகனின் மாணவர்களால் பராமரிக்கப்ப்பட்ட வியாசர் இறுதிப்படுக்கையில் இருந்தார். அவரை அவர்கள் வியாசரின் அருகே கொண்டுசென்றார்கள்.
“முதலாசிரியர் சொற்களின் உலகில் சிரஞ்சீவியாக மாறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று மாணவர்கள் சொன்னார்கள்.
படுக்கையில் வியாசர் மெலிந்து வற்றி சிறு கரிய சுள்ளி போல கிடந்தார். அவர் அருகே அமர்ந்த ரோமஹர்ஷணர் குருவந்தனத்தை மெல்லிய குரலில் சொன்னார்.
“அவர் எதையும் கேட்பதில்லை, பேசுவதுமில்லை. பல ஆண்டுகளாக அப்படித்தான்” என்றார் ஒரு மாணவர்.
ஆனால் ரோமஹர்ஷணரின் குரலைக் கேட்டு வியாசரின் கண்கள் திறந்தன. அவர் உதடுகளில் ஒரு புன்னகை விரிந்தது. அவருடைய கை அசைந்து ரோமஹர்ஷணரை நோக்கி வந்தது. ஒரு மாணவன் வந்து அந்தக் கையை மெல்ல எடுத்தான். அவருடைய கண்களின் குறிப்பை உணர்ந்து அதை தூக்கி ரோமஹர்ஷணரின் தலைமேல் வைத்தான்.
“மிதக்கவிடு…” என்று வியாசர் சொன்னார்.
அவருடைய உதடுகளை கூர்ந்து பார்த்த மாணவன் அதை உரக்கச் சொன்னான். ரோமஹர்ஷணருக்கு அது புரியவில்லை.
வியாசர் மீண்டும் “ஒழுகட்டும்” என்றார்.
ரோமஹர்ஷ்ணர் கைகூப்பினார். வியாசர் கண்களை மூடிக்கொண்டார். அவர் கால்களை தொட்டு தலைமேல் வைத்துவிட்டு ரோமஹர்ஷ்ணர் கிளம்பினார்.
ஆனால் அவர் தன் குருகுலத்திற்குச் செல்லவில்லை. தெற்குநோக்கிச் செல்லத் தொடங்கியவர் பிறகு மீண்டு வரவில்லை. அவரைப்பற்றிய எந்தச் செய்தியையும் எவரும் அறியவில்லை.
அப்படிக் கிளம்பிச் செல்லும்போது ரோமஹர்ஷணருக்கு எழுபது வயது தாண்டியிருந்தது. அவர் வியாசர் தன் காவியத்தை முடித்தபிறகுதான் நிஷாத குலத்தைச் சேர்ந்தவளாகிய மரீசியை மணம்புரிந்தார். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமலிருந்தது. அக்குழந்தை பிறந்து அதற்கு நான்கு மாதம் நடக்கும்போதுதான் ரோமஹர்ஷணர் தெற்கே கிளம்பிச்சென்று மறைந்தார். அக்குழந்தைக்கு சியாமன் என்று பெயரிடப்பட்டிருந்தது.
சியாமனை அகிருதவிரணன் வளர்த்தான். பல்முளைப்பதற்குள்ளாகவே குழந்தை சொல் பேசத் தொடங்கியது. ஒருமுறை செவிகளில் கேட்கும் எதையும் அப்படியே திருப்பிச் சொன்னது. எத்தனை காலமானாலும் மறக்காமலிருந்தது. ஒரு வயது முடிந்ததும் அது வியாசமாகாவியத்தையே சொல்லத் தொடங்கியது. திகைக்கச்செய்யும் செவித்திறன் கொண்டிருந்த அதற்கு உக்ரசிரவஸ் என்று அகிருதவிரணன் பெயரிட்டான்.
தன் பதினேழு வயதுக்குள் வியாசகாவியத்தின் எல்லா வடிவங்களையும் கற்றறிந்தவராக உக்ரசிரவஸ் இருந்தார். பாரதநிலத்திலுள்ள எல்லா கதைகளையும் அறிந்திருந்தார். எப்போதும் எவராலும் சொல்லப்படாத கதைகள்கூட அவருக்குத் தெரிந்திருந்தன. எங்கோ எவரோ ஒரு கதையை நினைத்தால்கூட அவர் அதை அறிந்துவிடுவார் என்றார்கள். பல்லாயிரம் விதைகள் நிறைந்த நிலம் போன்று முடிவில்லாத கதைகள் கொண்டது அவருடைய உள்ளம் என்று சூதர்கள் சொன்னார்கள்.
தாய் மரீசியும், ஆசிரியரான அகிருதவிரணனும் மறைந்தபின் உக்ரசிரவஸ் கிளம்பி வடக்கே சென்றார். அவரை சூதர்கள் கூடும் ஞானவனமாகிய நைமிசாரண்யத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவர் அவர்களுக்குக் கதைகள் சொல்லத் தொடங்கினார். வியாசகாவியமாக அறியப்பட்டிருந்த கதைத்தொகுப்பில் இருந்து மறைந்துபோன எல்லா கதைகளும் திரும்பி வந்தன. வியாசர்கூட அறியாத ஆயிரக்கணக்கான கதைகள் வந்து சேர்ந்துகொண்டன.
ஆனால் உக்ரசிரஸ் சொன்ன வியாசகாவியத்துடன் பாரதவர்ஷம் தொடர்ச்சியாகப் போரிட்டுக்கொண்டே இருந்தது. அது மேலும் பற்பலத் தலைமுறைக்காலம் திருத்தப்பட்டது, கதைகள் வெட்டிச்சுருக்கப்பட்டன. பலகதைகளைச் சொல்வதே சாவுத்தண்டனைக்குரிய குற்றம் என்று அரசர்களால் அறிவிக்கப்பட்டது. தண்டனைகள் வழியாகவும் பரிசுகள் வழியாகவும் சூதர்களின் நினைவுகள் தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டன. ஆனால் உக்ரசிரவஸின் சொற்கள் அழியவில்லை. அவற்றை தொலைதூரக் காடுகளில் நிஷாதர்கள் பாடலாகப் பாடினார்கள், கூத்துகளாக ஆடினார்கள். நால்வகைச் சாதியினரும் அவற்றை தங்கள் பேச்சுகளில் எப்போதுமே வைத்திருந்தார்கள்.
”உக்ரசிரவஸ் சொன்ன கதைகள் அகற்றவே முடியாத குரல்களாக நீடித்தன. நீண்ட காலம் கழித்து அவை ஜைனர்களாலும் பௌத்தர்களாலும் எழுதி நூல்வடிவமாக ஆக்கப்பட்டன” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். “ஆனால் எவருக்கு எவை தேவையோ அவை மட்டுமே அவர்களால் பேணப்படுகின்றன. நிஷாதர்களே அரசர்களானபோது அவர்கள் நிஷாதர்களின் கதைகளை மறந்தனர். தங்களை க்ஷத்ரியர்கள் என்று காட்டும் கதைகளைப் புனைந்துகொண்டனர்.”
“பாரதத்தில் அரசுகளை உருவாக்கிய ஒவ்வொருவருக்காகவும் வியாசகதை விரித்தும் திரித்தும் எழுதப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதைவடிவம் உருவானது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது உடைமாற்றிக்கொண்டது என்று அறிஞர்கள் சொன்னார்கள். விண்ணில் இருந்து உடைந்து விழுந்த அசுரர்களின் நகரங்களைப் போலவே அதுவும் என்றனர். அதன் துண்டுகள் ஆங்காங்கே புதிய நகரங்களாக உள்ளன. ஆயினும் பெரும்பகுதி மண்ணுக்குள் புதையுண்டு மறைந்துவிட்டது” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன்.
குணாட்யர் சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். பின்னர் “நான் எப்போதுமே இதை உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு காவியத்தைப் படிக்கும்போதும் இதற்கு அடியில் இன்னொரு காவியம் உண்டு என்னும் எண்ணமே எனக்கு எழுந்தது. நான் படித்த பெரும்பாலான காவியங்களின் அடியில் இருந்தது வியாசகாவியம். வியாசகாவியத்தைப் படிக்கும்போது அதில் ஊடுருவி ஒலிக்கும் வேறு குரல்களை மிகத்தெளிவாகவே நான் அடையாளம் கண்டேன். என்னால் எது வைசம்பாயனுடையது, எது அத்ரியின் குரல், எது ஜைமினி எழுதியது, சுமந்து சேர்த்தது என்ன என்று பிரித்துவைக்கமுடியும். அதை என் மாணவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”
“வியாசகாவியத்தில் வியாசனுக்கு இணையான இன்னொரு அறியப்படாத கவிஞன் இருந்துகொண்டே இருக்கிறான் என்று நான் என் மாணவர்களிடம் சொல்வதுண்டு” என்று குணாட்யர் தொடர்ந்து சொன்னார். ”அவன் வியாசனின் நிழல். வியாசனை நிரப்புபவன், ஆனால் வியாசனின் எதிர்நிலை. அவன் யார் என்று நானே யோசித்ததுண்டு. மகாசூதர் என அழைக்கப்படும் உக்ரசிரவஸ் வியாசகாவியத்தின் கதைசொல்லி என்றும், பல கதைகளை அவரே உள்ளே நுழைத்திருக்கக் கூடும் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். உண்மையில் அந்த எண்ணம் வியாச்காவியத்தைப் பயில்பவர்கள் அனைவருக்கும் உண்டு.”
குணாட்யர் சொன்னார். ஒருமுறை சதகர்ணிகளின் அவையில் பேசிய பிரபாகர பட்டர் என்னும் அறிஞர் நகுஷப்பிரஸ்னம் பற்றிப் பேசும்போது அது சூதர்களின் கருத்து, வியாசனுடையது அல்ல என்று சொன்னார். ‘குலம் என்பது பிறப்பால் அமைவது அல்ல; அந்தணன் என்றும் க்ஷத்ரியன் என்றும் வைசியன் என்றும், சூத்திரன் என்றும் மனிதர்கள் தங்கள் செயல்கள் வழியாகவே உருவாகிறார்கள்’ என்று நகுஷனுக்கு யுதிஷ்டிரன் சொன்ன வரியை வாசித்து அதை வியாசர் எழுதியிருக்க வாய்ப்பில்லை, பின்னர் உக்ரசிரவஸ்தான் அதைச் சேர்த்தார் என்றார். அதன் செய்யுளமைப்பும் சொல்லிணைவு முறையும் வியாசருடையதல்ல என்று நிரூபிக்க முயன்றார்.
நான் எழுந்து ”ஆதிகவி வால்மீகி பிறப்பால் யார்? மீனவப்பெண் பெற்ற மகன் அல்லவா வியாசன்? எத்தனை ஞானிகள் வேடர்களாகவும் காடர்களாகவும் பிறந்து வேதஞானம் எய்தினர் என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அதை வியாசர் எழுதாமலிருக்கலாம், ஆனால் அதுதான் வியாசரின் எண்ணம். உக்ரசிரவஸ் எழுதியவை எல்லாமே வியாசர் எழுதி, பின் மறைந்தவை. அல்லது அவர் எழுத எண்ணி எழுதாமல் விட்டவை” என்று சொன்னேன்.
எங்களுக்குள் விவாதம் நீண்டநேரம் நிகழ்ந்தது. சபையிலுள்ளவர்கள் அனைவருமே பிரபாகரரை ஆதரிப்பதைத்தான் என்னால் காணமுடிந்தது. வியாசகாவியத்திலுள்ள யக்ஷபிரஸ்னம் முதலிய பகுதிகள் எல்லாமே உக்ரசிரவஸால் இயற்றப்பட்டவை என்று ஸ்ரீதர சார்வபௌமன் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அனைவருமே கைதூக்கி அதை ஏற்று ஒலியெழுப்பினார்கள்.
குணாட்யர் சொன்னார் “அவ்வாறென்றால் உக்ரசிரவஸ் இன்னொரு வியாசர். வியாசரின் தொடர்ச்சி அவர். அவர் இன்றி வியாசர் நிறைவடையவில்லை என்று நான் சொன்னேன். அவையிலிருந்தவர்கள் என்னை ஏளனம் செய்து ஒலியெழுப்பினார்கள். என்னை மறுப்பவர்கள் எழுந்து பேசுங்கள் என்று நான் அறைகூவினேன். எவருமே எனக்கு எதிராக கோல்தூக்கி எழவில்லை. என்னை ஆதரிப்போர் யார் என்று மீண்டும் கேட்டேன். ஒரு குரல்கூட உயரவில்லை”
“உக்ரசிரவஸ் இயற்றியவற்றில் மிகச்சிறு பகுதி மட்டுமே இன்றுள்ள வியாசகாவியத்தில் உள்ளது. இன்ற் பயிலப்படும் காவியத்தின் பெரும்பகுதி வியாசரின் நான்கு மாணவர்களாலும் அவர்களின் மாணவர்களின் தலைமுறைகளாலும் இயற்றிச் சேர்க்கப்பட்டதுதான்” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். “வியாசகாவியத்திற்கு அடியில் அறியப்படாத வேர்ப்பரப்பாக அந்த நிழல்காவியம் விரிந்து கிடக்கிறது. அந்த வேர்விரிவு தெற்கே குமரிமுனை முதல் வடக்கே இமையப்பனிமலை வரை, கிழக்கே மணிபூரகம் முதல் மேற்கே காந்தாரம் வரை பரவியிருக்கிறது.”
அதன்பின் நான் கைகளை அசைத்து “கதையில் இருந்து எழும் முதற் கேள்வி இது குணாட்யரே. சொல்லுங்கள், வியாசர் வைசம்பாயனர் முதலியோர் தன் சொற்களை மாற்றியமைப்பார்கள் என்று அறிந்திருந்தாரா?”
குணாட்யர் “ஆம், எந்த ஆசிரியனும் மாணவர்களை அறிந்திருப்பான்” என்றார். “தான் காவியம் இயற்றும்போது ஒரு சொல்கூட மறுப்பு தெரிவிக்காத மாணவன் எதிர்காலத்தில் அதை மாற்றிக்கொள்வான் என்றும் அவர் உணர்ந்திருப்பார்.”
“சரியான பதில்” என்று சொல்லி நான் அவரை தோளில் தட்டிச் சிரித்தேன். “இதோ இரண்டாவது கேள்வி. உக்ரசிரவஸின் மாற்றங்களை வியாசர் ஏற்றுக்கொண்டிருப்பாரா?”
“உக்ரசிரவஸை அவர் ரோமஹர்ஷணரிடமே பார்த்திருப்பார். தோன்றவிருக்கும் செவிகளை முன்னரே உணர்ந்துதான் ரோமஹர்ஷணரை தன் மாணவராக ஏற்றிருப்பார்” என்று குணாட்யர் பதில் சொன்னார்.
“மிகச் சரியான பதில்… இறுதியில் அவர் ரோமஹர்ஷணருக்குச் சொன்ன சொற்களில் கூட அந்தக் குறிப்பே இருந்தது” என்று நான் சொன்னேன். குணாட்யரை தழுவி அவர் செவிகளைப் பிடித்து இழுத்து “நீ அறிஞன்… இலைகளை கண்டு வேர்களின் எண்ணிக்கையைச் சொல்ல எவரால் முடிகிறதோ அவனே மெய்யான அறிஞன்” என்றேன்.
குணாட்யர் “நான் எதையுமே புதியதாகக் கற்கவில்லை என்று தோன்றுகிறது. நான் கற்ற பின்னர்தான் கற்றவற்றை அறியத் தொடங்கினேன். வேர்களுடன்தான் நான் பிறந்திருக்கிறேன். எல்லாமே என்னுள் இருந்து முளைத்தெழுந்தவைதான். நீரூற்றியதை மட்டுமே இந்நகரமும் ஆசிரியர்களும் செய்திருக்கிறார்கள்.”
“உன்னுள் இருக்கும் வேர்கள் அனைத்தையும் நான் முளைக்கச் செய்கிறேன்…. உக்ரசிரவஸ் அறிந்த அனைத்தையும் நீ அறியச் செய்கிறேன்…” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். ”நீ என் கதைகளை முழுமையாக வாங்கிக்கொள்ளும் பெரிய கலம் என்று உணர்கிறேன்”
பைத்தானின் மாளிகைக்குள் செறிந்திருந்த காட்டில் நான் கானபூதியின் கதையைக் கேட்டு அமர்ந்திருந்தேன்.
“குணாட்யரிடம் நான் வியாச காவியம் முளைத்தெழுந்த வேர்நிலம் என திகழ்ந்த அந்த ஆதிகதைகளை சொல்லத் தொடங்கினேன். மண்ணில் இருந்து ஒவ்வொரு மணல்துளியாக எடுத்தேன். ஒரு மணலுக்கு ஒரு கதை வீதம் அவருக்குச் சொன்னேன். காட்டின் மணல்பரப்பே குறைந்து வந்தது. அவர் அமர்ந்திருந்த மண் குழிந்து குழிந்து ஆழமாகியது. அவர் கழுத்தளவு புதைந்தார், நெற்றிவரைப் புதைந்தார். கதைகளில் அவர் மூழ்கிப்போனார்” என்றது கானபூதி.
நான் “கதைகளில் புதைவதென்பது ஆழ நடப்படுவதுதானே?” என்றேன்.
“ஆமாம்” என்று கானபூதி சொன்னது. “நான் சொன்ன இக்கதை உனக்கென திரட்டிக்கொண்ட கேள்விகள் இவை. முதல் கேள்வி இது. வியாசர் மாணவர்களை தெரிவுசெய்வதில் பிழை இயற்றினாரா?”
ஆபிசாரன் என் செவியில் “ஆம், அவர் தன் சொல்லை அழிக்கும் மாணவர்களைத் தேர்வுசெய்தார். அவர் தனக்கு அந்தணர்களின் சபையில் ஏற்பு தேவை என நினைத்தார். ஆகவே அந்தணர்களை மாணவர்களாக ஏற்றுக்கொண்டார்” என்றது
நான் யோசித்து, அதை அப்பால் தள்ளிய பின்பு தலைநிமிர்ந்து கானபூதியிடம் “இல்லை, சரியான கதைகேட்பவர் என எவருமில்லை. இருந்தால் அவர் வியாசரின் நாக்கு மட்டுமேயாக எஞ்சிய ரோமஹர்ஷணர்தான். அவரிடம் அந்நூலை அளித்திருந்தால் ஆதிகவி வால்மீகி செய்த பிழையையே தானும் செய்திருப்பார். சிதைவே வளர்ச்சி. வளர்ச்சியே வாழ்வு. மாறாதது மறையும். அப்பிழையைச் செய்யக்கூடாது என்ற தெளிவால்தான் வியாசர் தனக்கான மாணவர்களை தெரிவுசெய்தார்” என்றேன். “அந்த மாணவர்கள் வியாசரின் மறுவுருவங்கள் அல்ல. அன்றிருந்த சமூகத்தின் பிரதிநிதிகள் அவர்கள். அன்றிருந்த ஒவ்வொரு தரப்பும் அவருடைய மாணவர்களாக அவர் முன் அமர்ந்திருந்தது.”
“அவர் தன் சமகாலத்தின் முன் தன்னுடைய காவியத்தை படையலிட்டுவிட்டுச் சென்றார். தெரிந்து திட்டமிட்டு அதைச் செய்தார், அது சரியானது என்றே இதுவரையிலான காலம் காட்டுகிறது” என்று நான் தொடர்ந்தேன். “எந்தக் கவிஞனும் அதைத்தான் செய்யமுடியும். ஒரு நூலை அச்சமூகம் எப்படிப் படிக்கிறது, எப்படி விரித்துக் கொள்கிறது, எவற்றை மறுக்கிறது என அவன் முடிவுசெய்யவே முடியாது. காட்டை நம்பி மரங்கள் தங்களை விதைத்துக் கொள்கின்றன.”
”உண்மை” என்று கானபூதி சொன்னது. “இரண்டாவது கேள்வி இது. இங்குள்ளப் பெருங்காவியங்களுக்கு அடியில் அறியப்படாத மாபெருங்காவியங்கள் உள்ளன என்று குணாட்யர் உணர்ந்தது பிழையா? உண்மை என்றால் அவை ஏன் புதைக்கப்படுகின்றன?”
“குணாட்யர் உணர்ந்தது உண்மை” என்று நான் சொன்னேன். “ஆனால் அவை புதைக்கப்படவில்லை, இயல்பாகவே புதைகின்றன. ஒவ்வொரு கட்டிடமும் புதையுண்ட அடித்தளத்தாலானது. தன் எடையால் அது அடித்தளத்தை மேலும் புதைத்துக் கொண்டே இருக்கிறது”
“உண்மை” என்று கானபூதி சொன்னது.
“நாம் காவியங்களில் படிப்பது சொல்லப்பட்டவற்றை அல்ல, சொல்லப்படாதவற்றை. த்வனி என்று அதை காவியமீமாம்சை சொல்கிறது. சொல்லப்பட்டவை துளி என்றால் த்வனி கடல். சொல்லப்பட்டவை முடிவுள்ளவை என்றால் சொல்லப்படாதவை முடிவிலி வரை செல்பவை. இந்தப் பூமியிலுள்ள பல்லாயிரம் பல்லாயிரம் காவியங்களிலும், கவிதைகளிலும், கதைகளிலும் உள்ள த்வனிகளை ஒன்றாக்கினால் உருவாகும் ஒரு மாபெரும் காவியம் இங்கே நாம் அனைவரின் உள்ளத்திலும் உறைந்துள்ளதா? அதைக் கொண்டுதான் நாம் இந்த காவியங்களையும் கவிதைகளையும் கதைகளையும் பொருள்கொள்கிறோமா?” என்றேன்
“நாம் விரும்பும் காவியங்களுக்கு அடியில் நாம் விரும்பாதவற்றாலான காவியம் ஒன்று உண்டு. நாம் அழகென்றும் உயர்வென்றும் எண்ணும் அனைத்துக்கும் அடியில் நஞ்சாலும் மலத்தாலும் நெருப்பாலுமான பிறிதுசில உண்டு” என்று நான் தொடர்ந்து சொன்னேன். ”நஞ்சும் மலமும் நெருப்புமான அது ஒரு வைதரணி… ஆறல்ல கடல். அந்த பெருகிச்சுழிக்கும் கொடிய வெளியைக் கடந்து அமுதும் நஞ்சும் ஒன்றேயான ஒன்றை நாம் அடையக்கூடும்… மனிதர்களுக்கு இங்கே இவை எல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதனாலேயே இவற்றுக்கு அப்பால் ஆழத்திலுள்ள அதுவும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பொருள். அளவற்ற துன்பம் மனிதர்களுக்கு சாத்தியமாகிறது என்பதனாலேயே அளவற்ற இன்பமும் சாத்தியம்தான் என்றாகிறது.”
பேச்சை இழந்து நான் நிறுத்திக் கொண்டேன். கானபூதியும் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் பேசாமல் நீண்டநேரம் அமர்ந்திருந்தோம். அமைதியைக் கலைத்து சக்ரவாகி சொன்னது “நீ ஒரு கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுவிட்டாய்”
ஆபிசாரன் “இல்லை, அவர் கிளம்பிச்செல்லவும்கூடும்” என்றது. “உண்மையில் அதுவே நல்லது”
சூக்ஷ்மதரு “அவரிடம் கேள்வி உள்ளது” என்றார்.
நான் கானபூதியிடம் “நான் ஒரு கேள்வியை யோசித்தேன்” என்றேன். “ஆனால் என் அகத்தில் அந்தக் கேள்வியை உந்தி விலக்கிவிட்டு முன்னால் வந்த இன்னொரு கேள்வி இது. என்னால் இந்தக் கேள்விகளில் இருந்து மீளவே முடியாது”
“சொல்” என்றது கானபூதி.
“மனிதர்களில் சிலர் இனியவையும் உயர்வானைவையும் ஆனவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறர்கள். ஆனால் அவர்களை விட பற்பல மடங்கு மனிதர்கள் கொடியவையும் கீழானவையும் ஆனவற்றையே நாடிச் செல்கிறார்கள். ஒரு தவம்போல அவற்றை விரும்பிச் செய்கிறார்கள். அவர்களைச் செலுத்தும் அந்த உணர்வுதான் என்ன? தீமையிலுள்ள அந்த பெரும் கவர்ச்சி எது? கொடியவை அளிக்கும் பேரின்பம் என ஒன்று உண்டா?” என்று நான் சொன்னேன். “இன்னும் தெளிவாகவே கேட்கிறேன். ராதிகாவைக் கொன்றவர்கள் அந்தக் கொலையை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தங்கள் உள்ளங்களில் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தக் கொலையை செய்யும்போது நூறுமுறை பயிற்சி செய்த நாடகத்தை நடிப்பதுபோல் இருந்தார்கள். தீமையில் உறையும் அந்த மகிழ்ச்சியின் ஊற்று என்ன?”
கானபூதியின் கண்கள் கனிந்தன. “என்னிடம் இதே கேள்வியைத்தான் குணாட்யரும் கேட்டார்” என்றது. “துரியோதனனின் சபையில் திரௌபதி சிறுமைசெய்யப்பட்ட போது அங்கிருந்த சாமானியப் படைவீரர்கள், அவைமூத்தவர்கள், அமைச்சர்கள் போன்றவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று அவர் கேட்டார்”
“நான் அவருக்குச் சொன்ன கதையை இப்போது உனக்குச் சொல்கிறேன்” என்று சொல்லி கானபூதி தன் இரு கைகளையும் நிலத்தின்மேல் வைத்தது.
(மேலும்)
டாலஸ் சந்திப்பு, அ.முத்துலிங்கம் மற்றும்…
நலமே விழைகிறேன். டாலஸ் நண்பர்களின் இவ்வார கூடுகையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் “கடவுள் தொடங்கிய இடம்” நூலைக் குறித்து விவாதித்தோம். நிகழ்வுக்கு ஆஸ்டினிலிருந்து சௌந்தர், ராதா, கிரி, பாலா & கவிதா ஆகியோர் (உலகப் புகழ் Round Rock Donuts உடன்) வந்திருந்தார்கள். அட்லாண்டா நண்பர் சிஜோவின் (யாரிடமும் சொல்லாத) வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்வின் முடிவில் இணைந்துக்கொண்ட துருவ்–இன் (நண்பர் வெங்கட்டின் சிறுமகன்) வருகையும் அதை இரட்டிப்பாக்கியது. அப்போதுதான் சீரியஸாக சில விமர்சனக் கருத்துகளைக் கூறிமுடித்திருந்த சௌந்தர் சாரை ஒற்றைச் சொல்லில் சிறுவனாக்கும் வித்தை தெரிந்தவன்.
என் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ளவும் நிகழ்வில் வாசிக்கவும் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.
இலங்கை இனப்படுகொலைகளும் – அதற்கு சமமாகவே – எதிர்வினை வன்முறையும் சாதாரண குடிமக்களை தன் வேரிலிருந்து பிடுங்கித்துரத்தும் வேதனையான ஒரு பொழுதில் தன் குடும்பத்தால் வீட்டை விட்டு அனுப்பப்படும் நிஷாந் எனும் 19 வயது இளைஞனின் பயணமும் அவன் சந்திக்கும் மனிதர்களும் வாழ்வனுபவங்களும் அதன் மூலம் திரண்டு வரும் மானுட உண்மைகளையும் காட்டும் நாவலே “கடவுள் தொடங்கிய இடம்“.
அ. முத்துலிங்கத்தின் இப்படைப்பு விகடனில் தொடராக வெளிவந்தது. இதன் மைய கதாபாத்திரம் நிஷாந் மற்றும் அவனுடைய 13 வருட நீண்ட பயணம் ஒரு சரடு போல பல மணிகளை கோர்த்துக்கொடுக்கிறது. சிறப்பு என்னவெனில், இம்மாலை ஒரே போன்ற சீரான மணிகளால் ஆனதல்ல. ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு தன்மையும் தோற்றமும் உடையது.
என் வாசிப்பை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்.
1. உயிர்ஈரும் வாள் – என பாத்திரப்படைப்பு
இதுதான் இவர் இயல்பு என்று நாம் ஒரு முடிவுக்கு வரும்போது வேறொரு திசையில் சென்று நின்று நம்மைப் பார்த்து சிரிப்பது.
உதாரணமாக,
எச்சில் தட்டை எடுக்க மறுத்து, “நீதான் நிஷாந்த் நாயா?” என்று கேட்கும் ஜம்பரிடம், “முதல் பெயர் என்னுடையது இரண்டாவது உங்களுடையதாக இருக்கலாம்” என்று துணிச்சலாக பதிலிருக்கும் நிஷாந், பின்னர் அவரை ஒரு ஏஜெண்டாக காணும்போது அஞ்சுவது, பின்னாட்களில் எச்சில் கோப்பை கழுவுவதையே தொழிலாக கொள்வது. கம்பீரமும் துணிந்த முகமும் கொண்டவளான பெயரறியா பெண், “அது நான் இல்லை” என்று கதறுகிறார் , வீடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் – தேர்ந்து உண்ணும் – ஒரு மீனுக்காக கத்திக்குத்து வரைக்கும் செல்லும் வீர சைவ வேளாளர்தான் தன் 23 வயது மகளுக்கு கிட்காட் வாங்கியனுப்பச் சொல்கிறார். மகளுடன் கணவனிடம் செல்லும் வழியில் வேறொருவரிடம் நாட்டம் கொண்டு நிஷாந்திடம் அறை வாங்கும் ஈஸ்வரி, பின்னாளில் அவனுக்கு வேலை தருகிறாள். இரண்டே பத்தியளவுக்கு வந்தாலும், நிஷாந்தின் வாய்ப்பை பறித்து பின் சிறையிலிருந்து மன்னிப்பு கோரும் ரமேஷ் மனதில் நிற்கிறான்.இப்படி எல்லா பாத்திரங்களுமே “நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாள் ” போன்ற கூர்மையுடையவர்களே.
2. துயர் உண்டெனினும் அழுகை இல்லை
அகதி என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னிருக்கும் மாபெரும் துயர் மட்டுமே போதும் ஒரு கண்ணீர் காவியம் படைக்க. அனால், இந்நாவல் முழுதும் எந்த ஒரு புலம்பெயர்பவரும் அழுவதில்லை. குறிப்பாக, தன் துயருக்காக. சொல்லப்போனால் துயரை வெல்லும் ஒரு தத்துவத்தை தன் வாழ்வனுபவங்களின் வழியாக நமக்களிக்கிறார்கள்.
உதாரணமாக,
ஒரு மதிப்பெண் குறைந்ததால் கனடாவுக்கு சென்று மருத்துவராகுமாறு அனுப்பப்பட்ட சபாநாதன் வாழ்நாள் முழுதும் விதவிதமான கோப்பைகளை கழுவுபவராக ஆகிறார். தன் தகப்பன் பைத்தியமாக அலையும் துயரில் இருப்பவர். சக நண்பன் இப்போது லண்டனில் நரம்பியல் மருத்துவராக இருப்பதைக் கூறும் போது “அதனாலென்ன, அவன் முதல் 5 சிறந்த மருத்துவர்களில் ஒன்று என்றால் நான் முதல் சிறந்த கோப்பைகழுவுபவர்களில் ஒருவன் ” என்கிறார். கற்பகதரு விலாஸ் ஆச்சி – ஒருமணிநேரமே தாயாக இருந்தவர், விட்டுவந்த ஒரே உறவான கணவரும் இறந்து விடுகிறார். அடுத்து என்னவென்று ஒரு தெரியாத ஒரு சூனிய வெளியிலும் தொடர்ந்து வாழ்கிறார். “சேலை நீரில் முங்கி ஈரமானபின் என்ன செய்ய முடியும்; அப்படியே விட்டால் அதுவே 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். நம் கவலைகளும் அப்படித்தான்” என்கிறார்.3. கொள்கை விளக்கங்களோ குற்றச்சாட்டோ இல்லை
தன் நிலைக்காக யாரும் யாரையும் குறை சொல்வதில்லை, எந்த அரசையும் அமைப்பையும் நேரடியாக ஆதரித்தோ எதிர்த்தோ பேசவில்லை. ஆனால், நிலைமை தெளிவாக குறிப்புணர்த்தப்படுகிறது.
உதாரணமாக,
கற்பகதரு விலாஸ் ஆச்சி தன் கதையை சொல்லும்போது – அவர்கள் வழியில் விட்டுவந்த உடல்நிலையழிந்த இந்தியரைப் பற்றி கூறிவிட்டு, அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ள மருத்துவத்தை குறித்து ஏஜென்ட் சொன்னதை கூறிவிட்டு – தன் கருத்தாக கூறுவது “ஒரு நாடு முன்னேறிய நாடு என்பதை அளக்க “அவர்கள் மனித உயிருக்கு மட்டுமல்ல ஒரு சக உயிருக்கு என்ன மதிப்பு அளிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது” என்கிறார். விபத்தில் அடிபட்ட ஒரு மூஸ் மானுக்காக போக்குவரத்தை 15 நிமிடங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸில் மீட்டுச்செல்லும் தகவலை கூறிவிட்டு – பின்னர் மேலும் பேசிவிட்டு சில பத்திகளுக்குபின் இறந்துபோன தன் கணவர் எப்படி இறந்தார் என்று கொழும்புவுக்கு அழைத்து விசாரிக்கும் போது கிடைக்கும் பதில் “செத்துத்தான் இறந்தார்“.2. மாஜிஸ்ட்ரேட் அண்ணன் கூறும் “உலகத்தில் எங்கு ஒரு மூலையில் அநீதி நடந்தாலும் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு“
4. சுவாரசியமான பாத்திரங்கள்
தற்கொலை எண்ணத்தை விரட்டும் ஷாஷா – துன்பத்தைபற்றியே எண்ணும் மனிதன் உலகில் கொட்டிக்கிடக்கும் இன்பங்களை பற்றி நினைப்பதில்லை என்கிறார். துப்பாக்கி சாவின் மேன்மை குறித்து அவரின் விளம்பர வாசகங்கள் நம்மையுமே அதற்காக ஏங்க வைப்பவை.
சாகசக்கார ஜெயகரன் – வசீகரமான ஆண். சாகசமே தன்வாழ்வென துணிந்து தேர்பவன். அவர் காதலி சிமோனா – நீலக்கண் அழகி; மணியம் செல்வனின் பாதி முக ஓவியம் ஒரு அற்புதம். சென்றஆண்டு பூன் முகாமில் தனது யோகா அனுபவங்களை குறித்து பேசும்போது நண்பர் பிரதீப் யோகா மூலம் தான் இரண்டு அங்குலம் வளர்ந்திருப்பதாக சொன்னார். நண்பர் அருணும் ரோயிங் செய்ததன் மூலம் அதையே உணர்ந்ததாக சொன்னார். தன் சாகச கதை சொல்லி முடித்து எழுந்த ஜெயகரனும் வரும்போது இருந்த உயரத்தை விட இன்னும் கூடுதலாக இருந்தார் என்பது நிஷாந்தின் கூற்று. யோகா ரோயிங் மட்டுமில்லை, பியர் குடித்து சாகச கதை சொன்னாலும் உயரமாகலாம் போல.
ஜெர்மன் நண்பர் சத்யன் – வேடிக்கையான இளைஞன். “சந்தோஷமான விஷயங்கள் மட்டும் இன்று, மற்றதெல்லாம் நாளைக்கு” என்ற அவன் தத்துவம் யோசிக்க வேண்டிய ஒன்று.
கனகலிங்கம் – நிலஅளவையாளர், அதன் முக்கியத்துவம் குறித்து பெரிதாக விளக்குபவர், ஆனால் அளவில்லாமல் பேசுபவர். அவர் மகன், ஏஜென்ட் உட்பட எல்லோரும் அஞ்சுவது அவரின் அளவுக்குமீறிய பேச்சுக்குத்தான். ஆனால், கடினமான பாதையாகிய ஆம்ஸ்டர்டாம் வழி கனடாவை அவர் எளிதாக கடக்கிறார் – வோட்காவின் துணையுடன்.
அறை முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்திருக்கும் புஷ்பநாதன் ரஷ்யப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் சண்டைபோடுகிறார். எப்படியும் அவளுக்கு புரியப்போவதில்லை எனும் போது எதற்காக நல்ல வசவு சொற்கள் இல்லாத ஆங்கிலம் என்று தமிழின் திறமான சொற்களை பயன்படுத்தியும் அடங்காத அவளிடம் இருந்து தப்பியோடுகிறார், வீர சைவ வேளாளர். சிறு வாய்சண்டையில் கேயாரை குத்திக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். அடிதாங்காமல் அவர்தான் கொன்றார் என்று வாக்குமூலம் கொடுத்த நிஷாந் பின்னர் அவரை சிறையில் சென்று சந்திக்கும்போது மகளுக்கு கிட்காட் வாங்கி அனுப்பச்சொல்கிறார்.
பிரான்ஸில் இருக்கும் மகளிடம் செல்லும் சந்திரா மாமி – வாசிப்பும் நுண்ணுணர்வும் உள்ளவர், பறவைகளின், பூக்களின் பெயர்கள் தெரிந்தவர்; சிக்கலில் மாட்டும் குழுவினரை காப்பாற்றும் அறிவுள்ளவர். எத்தனையோ இன்னல்களை தன் வாழ்வில் சந்திருந்தாலும் ஒரேயொரு சுடுசொல் பொறுக்காமல் உயிர்விடுகிறார்.
செகாவின் அகவ்யா போன்ற அகல்யா – சங்க கவிதைகள் சொல்பவள், விண்மீன்களுக்கு நடுவில் முத்தமிடுபவள், எதையும் ஒருக்கா படிச்சா மறக்காதவள் – இறுதியில் அவனை மறந்து விட்டுச் செல்கிறாள்.
நிஷாந்துக்கு பல வேளைகளில் அறிவுரை கூறும் அம்பிகாபதி மாஸ்ரர், இறுதியில் நிஷாந்த் கனடா வர காதலியாக உடன் வரும் சைவபட்சி சகுந்தலா என மேலும் பல பாத்திரங்கள் மனதை கவர்கின்றன.
எனினும், தனிப்பட்டளவில் என் மனதிற்கு உகந்தவராக உள்ளது உக்ரைன் வீடு சொந்தக்கார மனுசி தான் . தன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் யாரென்று தெரியாது. எனினும் அவர்களோடு அன்புடன் இருக்கிறார். ரஷ்ய மொழி கற்றுக்கொடுக்கிறார். சமகோன் வோட்கா கொடுக்கிறார் ; பெருநாளுக்கு 12 வகையான உணவுப்பொருட்களை அனுப்புகிறார். ஏமாற்றி சென்றபின்னர் மீண்டும் சென்று சந்திக்கும் நிஷாந்தை கட்டிக்கொண்டு கண்ணீர் விடுகிறார். மற்றவர்களை போலன்றி, அவருக்கு ஒரு தங்கும் இடம் உண்டு, தொழில் உண்டு எனினும் அன்பு செய்யவும், பெறவும் ஆளில்லை. அவரும் ஒருவிதத்தில் ஏதுமற்றவர் தான்.
5. தெறிப்புகள் & எழுப்பும் வினாக்கள்
பூட்டனின் பூட்டனிடம் டச்சுக்காரர்கள் பிடுங்கிய பணத்தை கணக்கு வைத்து அகதி பணமாக வசூலிக்கும் மாஜிஸ்ட்ரேட் அண்ணன், தகப்பனின் எண்ணத்திற்கு எதிர்திசையில் வாழ்க்கையால் உந்தப்பட்டு அவரின் முடிவுக்கு வருந்தும் சபாநாதன் இருவரின் அத்தியாயங்களும் முடிவும் ஒரு கிளாசிக்.
அறிவார்ந்த பகடிகள் அங்கங்கே தெரித்தபடியே இருக்கிறது.
உதாரணமாக
புதியவர்கள் சேர்ந்த உடன் அறையின் சராசரி புத்திக்கூர்மை பாதியாக குறைந்தது. பிதாகரஸ் பிளேட்டோ போன்ற அதிஉன்னத மூளைகள் பிறந்த நாட்டின் சாதாரண மூளைகள் முடிவெடுக்கமுடியாமல் யோசிப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது;நாளைக்கே வேலையை தொடங்குகிறேன் என்னும் சபாநாதனிடம் அவர் முதலாளி, “அதென்ன நாளைக்கு? உன் அறிவு இரண்டு மடங்காக ஆகிவிடுமா? இன்றைக்கே தொடங்கு” என்கிறார்நூலின் பெறுமதிகளாக எனக்குத் தோன்றுவது,
வாழ்க்கை எப்படியும் வாய்ப்பு தரும். அதில், நம் தெரிவுகள் நம்மை வழிநடத்தும்சரி தவறு நன்மை தீமை நேர்மை என்பதெல்லாம் மிகவும் relative. குறிப்பாக நேர்மை. வேண்டிய எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது அல்ல, இல்லாத போது என்னவாக இருக்கிறோம் அல்லது இருப்போம் என்பது அச்சுறுத்தும் வினாவாக நிற்கிறது.நம் மூக்கோட்டை அளவு வாழ்வு அதன் அனுபவங்கள் அதன் மூலம் நாம் கொடுக்கும் விளக்கங்கள் எல்லாம் எவ்வளவு குறைவுபட்டவை என்பதை கண் முன் நிறுத்தியது.6. விமர்சனப் பார்வை
நாவலில் எனக்கு உறுத்தலாக இருந்தது பல்வேறு பாத்திரங்களே. தனித்தனியாக ஈர்த்தாலும், அவர்களின் பங்களிப்பு குறித்து எனக்கு சில கேள்விகள் உள்ளன.அவற்றை விவாதித்து அல்லது மீண்டும் படித்து விளங்கி கொள்ள வேண்டும். பல்வேறு வகையான வாசகர்களை கொண்ட பிரபல இதழில் வரும் தொடர்கதை என்பது நாவலின் ஒழுக்குக்கு செலுத்த வாய்ப்பிருக்கிற ஆதிக்கம் குறித்த கேள்விகளும் எழுகிறது.
நண்பர்களே, ஒரு தாய் தன்னைப் பிரிந்திருக்கும் தன் மகனை/மகளை நினைக்கையில் அவர்களின் பிறந்துவிட்ட, கண்ணால் கண்டுவிட்ட, கையால் தொட்டுவிட்ட குழந்தைகளையே நினைவில் மீட்டெடுப்பதாகவே கூறப்படும். ஆனால், நிஷாந்தின் அம்மாவோ தானும் பிரிந்து எங்கோ வாழும் தன் மகனும் சேர்ந்து வாழ்ந்ததை கூறும்போது “நீயும் நானும் ஒன்பது மாதங்கள் இந்த ஒரே உடலை பகிர்ந்துகொண்டோம்” என்று தன் கருவாகவே அவனை கொள்வது ஆசிரியரின் கவித்துவத்திற்கு ஒரு உதாரணம்.
இந்த அளவு நுண்ணுணர்வு நிரம்பிய படைப்பாளியை கண்டுகொண்டது நல்லூழ். அவரை நாம் மேலும் அணுகியறிய இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று கோருகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி,
டாலஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


