காவியம் – 54
பொமு2 ,பைத்தான். சாதவாகனர் காலம். யட்சன்”குணாட்யர் அருகே என் கையை பார்த்துக்கொண்டிருந்தார். நான் கதைச் சொல்லத் தொடங்கினேன்” என்று கானபூதி சொன்னது. “விந்தையான கதை இது. மிகமிக முன்னர் எப்போதோ நடந்தது. அதுவும் ஒரு விந்தையான காலம். அன்று மொத்த மானுடரின் கதையையும் தொகுத்து ஒன்றெனப் பார்க்கும் வழக்கம் உருவாகியிருக்கவில்லை. காலம் நீள்பெருக்காக ஓடிச்செல்லவுமில்லை. அன்று ஒற்றை மனிதரின் வாழ்க்கையின் ஒரே ஒரு புள்ளியை மட்டும் விரித்து விரித்து கதையாக ஆக்கினார்கள். காலத்தை பக்கவாட்டில் பரப்பிப் பரப்பி அகலமாக ஆக்கிக்கொண்டார்கள்… முன்பு சொன்ன கதையின் இன்னொரு விரிவாக்கம் இது. நீ கேட்ட கேள்விக்கான பதில் இதில் அமையலாமென்று படுகிறது.”
“சொல்” என்று குணாட்யர் சொன்னார்.
“இதுவும் அதேபோன்ற விரசகாவியம்தான்” என்றது ஆபிசாரன். ”நீ விரும்பினால் இப்போதுகூட எழுந்து விடலாம்”
அதை கையமர்த்திவிட்டு “தீமைக்கும் மனிதர்களுக்குமான உறவைப் பற்றி நீ கேட்டாய்” என்று கானபூதி சொன்னது. ”நூறு நூறாயிரம் காவியங்களில் எழுதி எழுதி கூர்மையாக்கப்பட்ட கேள்விகளும், பேசும்தோறும் மழுங்கும் பதில்களும் கொண்டது அது. கதையை நான் சொல்கிறேன். நான் கதையன்றி எதையும் சொல்பவன் அல்ல”.
கானபூதி சொல்லத் தொடங்கியது. கங்கைக்கரையில் தன் தாத்தா கட்டிய சிறிய ஆலயத்திற்கு அப்பாவுடன் அடிக்கடி அஸ்வத் சென்று வருவதுண்டு. அது ஹரீந்திரநாதுக்கு ஒரு பெருமையின் சின்னமாக இருந்தது. அங்கே தன் தந்தையின் பளிங்குச் சிலையை அவர்தான் நிறுவினார். அதை காசியிலிருந்து வரவழைத்த வைதிகர்களைக் கொண்டு பூசை செய்வித்து ஒரு தெய்வச்சிலையாகவே பிரதிஷ்டை செய்தார். அந்த விழாவிற்குப் பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அந்த சிலையையும் வழிபடத் தொடங்கினார்கள். அதற்கருகிலும் ஒரு பாண்டா அமர்ந்து பூசைகளைச் செய்து வருபவர்களை வாழ்த்தினார்.
கைகளை ஆசியளிக்கும் வடிவில் வைத்துக்கொண்டு, பத்மாசனத்தில் விரிந்த புன்னகையுடன் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே அமர்ந்திருந்தார். தலைப்பாகையும் கழுத்தில் மணிமாலையும் அணிந்திருந்த அவருடைய சிறிய பளிங்குச் சிலையின் கண்கள் மட்டும் கருப்பாக வரையப்பட்டிருந்தன. அவரை வணங்கினால் உடல் நலமும் செல்வச்செழிப்பும் உருவாவதாக பரவலாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு ஹரீந்திரநாத் பல்வேறு சிறு புலவர்களுக்கு பரிசில் கொடுத்து பாடல்களை பாடவைத்தார். அவற்றை மலிவான பதிப்புகளாக அச்சிட்டு அப்பகுதியிலேயே விற்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.
மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி அன்று ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன. அப்போது ஹரீந்திரநாத் தன் குடும்பத்துடன் அங்கு வந்து பூஜைகளில் கலந்து கொள்வார். மற்ற நாட்களில் அவ்வப்போது அவர் அங்கே வந்து பூஜைகளைச் செய்து திரும்புவதுண்டு. அதற்கு அருகிலேயே அவருக்குச் சொந்தமான ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அதில் ஒரு பிண்டு என அழைக்கப்பட்ட வயதான காவல்காரனை வைத்திருந்தார். மாலை நேரத்தில் தன் நண்பர்களுடன் வந்து கோயிலில் தந்தையை வணங்கிவிட்டு, அங்கேயே சற்றுநேரம் வணக்கங்களை ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்த பின், அந்தி இருண்டதும் அக்கட்டிடத்திற்குச் சென்று தங்கி மது அருந்துவதோ கஞ்சா பிடிப்பதோ அவரது வழக்கம். அங்கு அவர் மாமிச உணவு உண்பதும் பெண்களுடன் தங்குவதும் வெளியே எவருக்கும் தெரியவில்லை என்றாலும் அவருடைய அலுவலர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது. அதைப் பற்றிக் கேட்டால் தன் தந்தை ஃபணீந்திரநாத்தே அதையெல்லாம் செய்தவர்தான் என்று அவர் சொன்னார்.
“நாங்கள் தூய பிராமணர்கள் அல்ல, ஆகவே தான் நாங்கள் வேத வேள்விகளை நேரடியாகச் செய்வதில்லை. நாங்கள் அரசர்கள். ஷத்ரிய ரத்தம் எங்களுக்குள் ஓடுகிறது” என்று அவர் சொன்னார். “முன்பொரு காலத்தில் எங்கள் குடும்பங்களுடன் ஷத்ரியர்கள் உறவு கொள்வதுண்டு. நான் ஏதோ ஒரு அரசனின் மகனாகப் பிறந்திருக்கலாம்”.
“பிராமணர்களிடமிருந்து ஷத்ரியர்கள் உருவாவது தானே வழக்கம்?” என்று அருகில் இருந்த பங்கஜ் குமார் ஷர்மா கேட்டார்.
லாலாஜி என அழைக்கப்பட்ட கோவிந்த் பாண்டே கஞ்சா சிலும்பியை ஆழ்ந்து இழுத்து ”ஆமாம் அப்படித்தான் நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார்.
“கங்கையில் சாக்கடை கலந்தாலும் அது கங்கையே… கடவுளுக்கு அந்த நீர்தான் புனிதமானது” என்றார் அஜய்தேவ் மிஸ்ரா.
”தன்னை ஒரு ஷத்ரியர் என்று உணர்ந்தபோதுதான் என் தந்தை அவருடைய சம்ஸ்தானத்தை விட்டு வெளியேறினார். ஏனென்றால் பிராமணர்களிடம் பணிவு இருக்கவேண்டும். ஷத்ரியர்களிடம் அவர்கள் அடங்கி வாழவேண்டும். மக்களிடம் தானம் பெற்று அன்றாடத்தை நடத்த வேண்டும். ஷத்ரியர்களின் ரத்தம் ஓடிய என் தந்தைக்கு அதையெல்லாம் செய்ய மனமில்லை. இன்னொரு ஷத்ரியரை அவரால் வணங்க முடியாது. இன்னொருவரின் பரிசாலும் கொடையாலும் அவரால் வாழமுடியாது. ஆகவே தான் அவர் புதிய நிலம் நோக்கி இங்கு வந்தார். இங்கே தனக்கான ஒரு அரசாங்கத்தை அவர் உருவாக்கிக்கொண்டார்” என்று ஹரீந்திரநாத் சொன்னார்.
அந்த ஓய்வு இல்லத்தில் அவர் தங்கும்போது அவருக்கான உணவுகள் எல்லாமே வெளியே இருந்து சமைக்கப்பட்டு கொண்டு வரப்படும். கங்கைக்கரையில் மாமிசம் சமைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ”ஆனால் ஷத்ரியர்கள் இங்கு மாமிசம் உண்ணாமலா இருந்திருப்பார்கள்? இன்று பிராமணர்கள் இந்த நதிக்கரையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் உத்தரவுகள். பாட்னாவை ஆண்ட பழைய நவாப்களின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்றவர்கள் இந்தக் கோழைகள். அந்த நாவாப்களுக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்தவர்கள் ஷத்ரியர்கள்” என்று ஹரீந்திரநாத் சொல்வார்.
தன் மகனை அவர் எப்போதாவது கோயிலுக்கு அழைத்து செல்வதுண்டு. அப்போது அவனிடம் பல்வேறு சொற்களில் அவன் ஒரு ஷத்ரியன் என்று விளக்கிக் கொண்டிருப்பார். அவருடைய ஆதாரமான கொள்கையே அதுதான். “ஷத்ரியனுக்கும் பிராமணனுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஷத்ரியன் எல்லாவற்றையும் வென்று அனுபவிக்க வேண்டியவன். பிராமணன் இங்கே உள்ள அனைத்தையும் துறந்து விண்ணில் உள்ள தெய்வீகமானவற்றை மட்டுமே அனுபவிக்க வேண்டியவன். இவர்கள் வென்று வாழ்வதற்கும், அவர்கள் துறந்து வாழ்வதற்கும் தேவையான பணத்தை சேர்த்து அளிப்பது மட்டும்தான் வைசியர்களுடைய வேலை. நாம் வைசியர்கள் அல்ல. நாம் செய்து கொண்டிருப்பது ஷத்ரியர்களுக்குரிய தொழில்.”
அஸ்வத்தின் இரண்டாவது வகுப்பு தேர்வு முடிந்தபிறகு அவனை அவர் அவனுடைய தாத்தாவின் கோயிலில் வழிபாடு செய்வதற்காக கூட்டி வந்தார். அங்கே வணங்கி முடித்து வெளியே வந்தவுடன் மீண்டும் தன் தந்தையைப் பற்றி சொல்லத்தொடங்கினார். கற்றறிந்த பிராமணர் தன் தணியாத வீரியத்தால் க்ஷத்ரியராக ஆன கதை. அன்று கூடவே யாதவனாகப் பிறந்த கிருஷ்ணன் க்ஷத்ரியனாக ஆன கதையையும் சேர்த்துக் கொண்டார். சிசுபாலனை கிருஷ்ணன் கொன்ற நிகழ்ச்சியை விவரித்தார்.
உன் தாத்தாவின் துணிச்சலும் அறிவும் அபாரமானவை. அவர் தனியாக இந்த ஊருக்கு வந்தார். அவர் கையில் ஒரு ரூபாய் கூட இருக்கவில்லை. ஆனால் தான் ஷத்ரியன் என்றும், எவரிடமிருந்தும் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் முடிவு செய்தார். ஆகவே இந்தப்படித்துறையில் அவர் வந்து நிற்கும்போது அவருக்கு உணவளிக்க பலர் முன்வந்தபோதும் கூட அவர் உணவைப் பெற்றுக்கொள்ளவில்லை. உழைத்து உண்பதும் ஷத்ரியர்களுக்கு உரியதில்லை. ஆகவே அவர் எந்த வேலையையும் செய்யவும் நினைக்கவில்லை. இந்த வழியாகச் செல்பவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களில் இருவரைப் பார்த்தவுடனே அவருக்கு ஒரு உள்வெளிச்சம் தோன்றியது. அவர்களை அருகே அழைத்து ’உன்னுடன் வரும் இவன் உன்னுடைய தாயாதி, இவன் உனக்கு துரோகம் செய்யவிருக்கிறான். உன்னை அழிப்பதற்காக திட்டம் தீட்டுகிறான். உன் மனைவியுடன் இவனுக்கு கள்ள உறவு இருக்கிறது’ என்றார்.
அவர்கள் குழம்பி மாறி மாறிப் பேச ஆரம்பித்தார்கள். திட்டவட்டமாக அவர் அவனிடம் சொன்னார். ’இந்த பங்காளி உனக்கு துரோகம் செய்கிறான். இதை உனக்கு சொன்னதற்காக நீ ஐந்து அணாக்கள் பணம் கொடு. துரோகம் செய்யவில்லை என்றால் அந்த ஐந்து அணாவை என்னிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நான் இங்கு தான் இருப்பேன்.’ அவர்கள் அவர் பிராமணர் என்றதனால்தான் அடிக்கவில்லை. ஆனால் ஐந்து அணாவை கொடுத்துவிட்டார்கள். குழம்பிப்போய் அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.
ஆனால் மறுநாள் அவன் திரும்பி வந்து அவரிடம் ’என்னைக் காப்பாற்றினீர்கள் பண்டிட்ஜீ’ என்று சொல்லி காலில் விழுந்தான். ’நேற்று என்னுடன் வந்த பங்காளி பாதியிலேயே காணாமல் போனான். நான் வீட்டுக்குப் போய் என் கணக்குகளைச் சரிபார்த்து கொண்டிருந்தேன். அன்று இரவே என் மனைவி நகைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கல்கத்தாவுக்கு போய்விட்டாள். அவர்கள் என் தொழிலையே கைப்பற்ற நினைத்திருந்தார்கள். நான் உங்கள் வார்த்தையால் தப்பிவிட்டேன்.’
அவன் அவருக்கு நிறையப் பணம் கொடுத்தான். உன் தாத்தா அந்தப் பணத்தைக்கொண்டு தான் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்யத்தொடங்கினார். தேவையானவர்களுக்கு பண உதவிகள் செய்வார். அந்த உதவி பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கு திரும்ப உதவி செய்வார்கள் அவ்வாறு தான் அவர் இவ்வளவு செல்வத்தை ஈட்டினார்.
வீரம் அவருடைய இயல்பிலேயே இருந்தது அவருடைய வீரத்தைக்கண்டு இங்கிருந்த நவாப்கள் அஞ்சினார்கள். அவரை அழிக்க முயன்றார்கள். அவர் வெள்ளைக்காரர்களிடம் கூட்டு சேர்ந்துகொண்டார். அவருடைய வீரமும் விவேகமும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார்கள். அவரும் வெள்ளைக்காரர்கள் இங்கு ஆட்சி செய்வதற்கான எல்லா உதவிகளையும் செய்தார். இப்பகுதியையே அவருக்கு நாடாக அளித்து, ராவ்பகதூர் பட்டமும் கொடுத்து அவரை இங்கே ஆட்சி செய்ய வைக்கவேண்டுமென்று வெள்ளைக்காரர்கள் நினைத்திருந்தபோதுதான் அவர் இறந்துபோனார்.
“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இந்தப்பகுதி வேறு வகையான ஆட்சிக்குள் சென்றது இல்லையென்றால் இந்தப்பகுதியை ஆட்சி செய்யக்கூடிய அரசராக அவர் இருந்திருப்பார். நாம் இப்பகுதியின் அரசர்களாக இருந்திருப்போம்” என்று ஹரீந்திரநாத் தன் மகனிடம் சொன்னார். அவன் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்துக்கொண்டு வந்தான்.
அஸ்வத் அந்த சிறிய பளிங்குச் சிலையை ஒவ்வொரு முறையும் ஒரு விந்தையான உணர்வுடன் தான் பார்ப்பது வழக்கம். அவர் கங்கைக்கரையில் விற்கப்படும் மண்ணாலான சிறிய பண்டா பொம்மையைப் போலிருப்பதாக அவன் நினைத்தான். அவருடைய புருவங்கள் இரண்டும் தவறாக வரையப்பட்டிருந்தன. கண்கள் கருமையாக வரையப்பட்டிருந்ததால் அவர் சந்தேகத்துடனும் பயத்துடனும் அனைவரையும் பார்ப்பது போலிருந்தது. ஆனால் தந்தை சொன்ன கதைகளின் வழியாக அவன் வேறொரு ஃபணீந்திரநாத்தை கற்பனை செய்துகொண்டான். அவர் ஹனுமான் போல திரண்ட தோள்களுடன் இருந்தார்.
அன்று அவர்கள் வழிபட்டு முடித்ததும் அவனை காரில் வீட்டுக்குக் கொண்டு செல்ல ஆணையிட்டுவிட்டு ஹரீந்திரநாத் தன் கேளிக்கைக் கட்டிடத்துக்கு சென்றார். அவனை வீட்டுக்குக் கொண்டு சென்ற கார் சாலையில் ஒரு முனை திரும்பும்போது ஒரு சுவரில் முட்டியது. சுவருக்குரியவன் வந்து சத்தம் போடத்தொடங்க, டிரைவர் இறங்கி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது பயந்துபோன அஸ்வத் கதவைத் திறந்து வெளியே இறங்கி மீண்டும் கங்கைக்கரைக்கு ஓடிவந்து ,அவனுக்கு ஏற்கனவே தெரிந்த அவன் அப்பாவின் வீட்டுக்குச் சென்றான். அங்கேதான் அவர் இருக்கிறார் என்று அவர் டிரைவரிடம் பேசுவதிலிருந்து அவனுக்குத் தெரிந்திருந்தது.
அங்கு வாசலில் செருப்புகளும் குடைகளும் இருந்தன. வாசல் காவலனாயிருந்த பிண்டு தென்படவில்லை. அவன் அவர் மாடியிலிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டு மெதுவாக மாடியேறிச் சென்றான். மாடியில் பேச்சுக்குரல்களும் சிரிப்பொலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. அங்கே பெண்களும் இருப்பது போலிருந்தது. அம்மாவும் வேலைக்காரிகளும் அங்கே வந்துவிட்டார்களா என்று யோசித்தபடி அவன் முன்னால் சென்றபோது பிண்டு ஒரு சிறு ஜன்னலை கொஞ்சம் திறந்து, அதனூடாக ஒரு கண்ணை மட்டும் வைத்து உள்ளே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
சற்று நேரத்தில் பிண்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனைக் கவனிக்காமல் படியிறங்கிப் போனதும் அவன் சென்று அந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தான். அங்கே அவனுடைய அப்பா இன்னொரு நடுவயதான கரிய நிறம் கொண்ட பெண்ணுடன் நிர்வாணமாக இருந்தார். அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களுடைய உடலில் இருந்து அவனால் கண்களை விலக்கமுடியவில்லை. அந்தக்காட்சி அளித்த படபடப்பையும் மனக்கிளர்ச்சியையும் தன் வாழ்நாள் முழுக்க மறந்ததும் இல்லை.
அதன்பின் அவன் உள்ளத்தை உருவாக்கியதே அந்தக்காட்சிதான் என்று அவனே பலமுறை நினைத்துக் கொண்டதுண்டு. வேறு எதையுமே நினைக்க முடியாமல் அவன் மாறினான். அவனுடைய தந்தைமேல் வெறுப்பு எதுவும் வரவில்லை. மாறாக அவருடைய தோற்றத்தில் வளர்ந்த ஒருவனாக தன்னை கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்தான். எப்போதுமே தன்னை நாற்பது வயது கடந்த ஒருவனாகவே மனதுக்குள் எண்ணியிருந்தான். மிக இளமையிலேயே அவன் கண்கள் பெண்களுக்காக துழாவிப் பரபரக்கத் தொடங்கின. அந்தப்பெண்ணின் சாயல் கொண்ட பெண்களை தொடர்ந்து அவன் கண்கள் தேடிக்கொண்டே இருந்தன .அத்தகைய ஒரு பெண்ணை பார்த்ததுமே முதல் திடுக்கிடல் உருவாவது அவனுடைய அனுபவங்களில் மிக முக்கியமானதாக இருந்தது.
அவன் தந்தையுடன் இருந்த அந்தப் பெண் கிராமங்களில் இருந்து வந்து கங்கைக்கரையில் கடைகள் வைத்து சிறுவியாபாரங்கள் செய்து வாழும் பல பெண்களில் ஒருத்தி. அவர்கள் அனைவருக்குமே பொதுவான ஒரு தோற்றம் இருந்தது. அவர்கள் வலுவான உடல் கொண்டவர்களாகவும், உருண்ட முகம் கொண்டவர்களாகவும், புடைத்து நிற்கும் கண்களும் பெரிய பற்களும் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் எந்த வகையான தயக்கமும் அச்சமுமில்லாத ஒரு மூர்க்கம் இருந்தது. அவர்கள் பொருட்களை வாங்குபவர்களிடம் பணிவாகவும் அன்பாகவும் பேசுவது போலத்தோன்றினாலும் கூட, எந்தக்கணமும் சட்டென்று உக்கிரமான வசைகளை வீசி அவர்களின் விதைப்பைகளை கைகளால் அள்ளிப்பற்றிக் கொள்ள முடியும். அந்தப் பிடியை எதன் பொருட்டும் விடாமல் கூச்சலிட்டு சண்டைபோட முடியும். அவர்களுக்குப் பணிந்தால் ஒழிய அவர்களிடம் இருந்து தப்பவும் முடியாது.
அஸ்வத் தனது பதினாறாவது வயதில் தன்னுடைய தந்தை கட்டிய மாளிகையில் அதே அறையில் அதே போன்ற ஒரு பெண்ணுடன் உறவு கொண்டான். அதை பிண்டுதான் ஏற்பாடு செய்து அழைத்து வந்தான். அதற்காக அவனுக்கு இருபது ரூபாய் பணம் கொடுத்தான். அந்த உறவு அவன் மனதைக் கொந்தளிக்கச் செய்தது. அவள் வருவதற்காக காத்திருந்தபோது அவன் வியர்த்து, கால்களும் கைகளும் வழுக்க, நெஞ்சு ஓடும் ஒலியைக் கேட்டபடி அந்த அறைக்குள் சுற்றிவந்துகொண்டிருந்தான். வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று பலமுறை முடிவெடுத்தாலும் அவனைத் தவிர அக்கட்டிடத்தில் எவரும் இருக்கவில்லை. அவன் தந்தை வியாபாரத்துக்காக லக்னோ சென்றிருந்தார். அவருடைய நண்பர்கள் அவர் இல்லாதபோது வருவதில்லை.
சற்று நேரத்தில் அந்தப்பெண் வந்து சிறுவனாகிய அவனைப் பார்த்தபின் வெடித்து சிரித்து அவன் தோளைப்பிடித்து அழுத்தியபோது அவன் உடல் நடுங்கி குரல் உள்ளே இழுத்துக்கொண்டது. அவளைத் திருப்பி அனுப்பத்தான் முயன்றான். அப்போது பேச முடியவில்லை. ஆனால் அவள் மிக இயல்பாக அவனைக் கையிலெடுத்துக் கொண்டாள். அதன் பின் அவன் தான் ஒரு சிறுவனல்ல, ஆணென்று தெரிந்துகொண்டான். அவள் சென்றபிறகு ஒரு மிதப்பையும் ஆணவத்தையும் உணர்ந்தான். தன் உடல் பெரிதாகிவிட்டதாகவும், ஓங்கி அறைந்து ஒரு மனிதனை அங்கேயே வீழ்த்திவிடமுடியும் என்பது போலவும் எண்ணிக்கொண்டான். கங்கையின் படிக்கட்டினூடாக நடந்துசெல்லும்போது தன்னை அத்தனை பேரும் அஞ்சவேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தன்னிடம் பணிந்து வளைந்துதான் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
குடிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நேராக சுக்ராமிடம் சென்று பத்து ரூபாயை நீட்டி கொடு என்றான். சுக்ராமின் கண்கள் மாறின. அவன் ஏதோ சொல்ல வந்தான்.பிறகு பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு சிறிய அலுமினியக் கோப்பையில் நிறமற்ற திரவத்தை விட்டு அவனுக்கு நீட்டினான். அவன் அதற்கு முன் நாட்டுச்சாராயம் குடித்ததில்லை. அது தீ போல எரிந்தபடி உள்ளே இறங்கும் என்றும், வயிற்றுக்குள் சென்று அங்குள்ள குடல்களையெல்லாம் பற்றிய எரியவைக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும்; அது ஒரு கசப்பான குமட்டும் திரவமாகத்தான் அவனுக்கு தெரிந்தது. தண்ணீரைக் குடித்து சுக்ராம் கொடுத்த காரமான பொரிகடலையை வாய்க்குள் போட்டு மென்றபோது அந்தக் குமட்டலும் நின்றுவிட்டது. அவன் எந்த மயக்கத்தையோ தள்ளாட்டத்தையோ உணரவில்லை. ஆனால் குடித்திருக்கிறோம் என்று உணர்வு வந்ததும் அவனுக்கு நிறைவும் மேலும் பெருமிதமும் ஏற்பட்டது.
படிக்கட்டில் வந்து அமர்ந்து அங்கே சென்றுகொண்டிருந்த பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் எந்தப் பெண்ணை மறுபடியும் கொண்டு வரச் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து, அந்தக் கற்பனையால் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டான். ஒவ்வொரு பெண்ணையும் வெறும் உடல் மட்டுமாக அவன் பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அவன் உடல் அமர்ந்த நிலையிலேயே தள்ளாடத் தொடங்கியது. தலை கனமாக ஆகி, முன்பு காய்ச்சலின்போது அவன் உணர்ந்த எடையின்மையும் ததும்பலும் உருவாகியது. கையை ஊன்றி அவன் எழுந்தபோது அப்படியே பின்னால் சாய்ந்து விழுந்துவிட்டான். கையைத் தலைக்கு வைத்துக்கொண்டு அங்கேயே படுத்தான்.
இரண்டு மணி நேரத்துக்குப்பிறகு எழுந்தபோது சுற்றிலும் நல்ல இருட்டு இருந்தது. நீராட வந்தவர்கள் எல்லாம் திரும்பிச் சென்றிருந்தார்கள். வியாபாரிகள் மட்டும் இருந்தனர். கோயிலில் மட்டும் வெளிச்சமும் சில அசைவுகளும் இருந்தன. அவனுக்கு கடுமையாகப் பசித்தது. நடக்க முடியாதபடி உடல் தள்ளாடினாலும்கூட நின்று நின்று அவன் தன்னுடைய கட்டிடத்துக்கு திரும்பி வந்தான். உள்ளே நுழையும்போது பிண்டுவிடம் சாப்பாடு வாங்கி வரச்சொன்னான். இறைச்சி வேண்டும் என்று குறிப்பாகச் சொன்னான். அன்றிரவு இறைச்சி உணவை வயிறு புடைக்க உண்டுவிட்டு, கட்டிலில் படுத்து தன்னினைவில்லாமல் மறுநாள் வெயில் எழும் வரைக்கும் தூங்கினான்.
மறுநாள் காலை அவன் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய உள்ளே அவன் முழுக்க மாறிவிட்டிருந்தான். ருக்மிணி அவனை இரவெல்லாம் பல இடங்களில் தேடியிருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டபடி அவனை நோக்கி வந்தாள். ஆனால் அவளிடம் நுணுக்கமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவனை பார்க்காமல் பொதுவாக “சாப்பிடுகிறாயா?” என்று கேட்டபடி நாற்காலியின் விரிப்பைச் சரிசெய்தாள். அதன்பின் உள்ளே போய்விட்டாள்.
எப்போதுமே அவன் ருக்மிணியைப் பொருட்படுத்தியதில்லை. மிக அபூர்வமாகத்தான் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். ருக்மிணி ஆண்கள் புழங்கும் வீட்டின் முகப்பிற்கு வருவதில்லை. ஆண்கள் தேவையில்லாமல் வீட்டுக்குள் செல்வது அங்கே வழக்கமில்லை. ருக்மிணியை நேரிட்டுப் பார்க்காமல் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு, எப்போதும் எரிச்சலுடனும் சலிப்புடனும் அவளிடம் பேசும் பாவனையை அவன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். பெண்களிடமே அப்படித்தான் பேசவேண்டுமென்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.
அவன் தந்தை எப்போதும் ருக்மிணியிடம் ஒற்றை வரிகளில் தான் பேசினார். ஆணைகளை இடும்போதோ, அறிவுரைக்கும்போதோ உரக்க வசைபாடும் தொனியில் அவளை அழைத்து பேசினார். அவளை அழைக்கும்போது பெயர் சொல்லாமல் ஒற்றை ஓசையால் அதட்டி அழைத்தார். விலகிச்செல்ல வேண்டுமென்று சொல்லும்போது சுட்டுவிரலை அசைத்து போகும்படி சொன்னார் அவளுக்கு தேவையான அனைத்தையும் அவர் அளித்தார். பணம் பயணத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் அவள் விரும்பியபடி தான் நடந்தன. ஆனால் அவள் அவரிடம் அவர் விரும்பாத ஒன்றை சொல்ல முடியும் என்ற வாய்ப்பை மட்டும் அவர் ஒருபோதும் அளிக்கவில்லை.
அந்தப் பாதுகாப்பு வளையத்தை ஆண்கள் தனக்காக உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று அதைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமலேயே அஸ்வத் அறிந்திருந்தான். அந்த நாளுக்குப் பிறகு அந்த வளையம் எதற்காக என்பதை அவனே புரிந்துகொண்டான். அந்த நாள் காலையிலேயே அவன் மாறியிருப்பதை அவன் அம்மாவும் தெரிந்துகொண்டாள். அவன் அவளிடம் பேசும்போது அவ்வப்போது குரலில் குழைவும் சில சமயங்களில் மெல்லிய கிண்டலும் வருவதுண்டு. எப்போதாவது அவள் அவனருகே வந்து இயல்பாக அவன் தோளை தொடவும் அவன் தலைமுடியை வருடவும் செய்வதுண்டு. ஆனால் அந்த நாளுக்குப்பிறகு அவள் அவனிடம் கனிவுடனோ சிரிப்புடனோ ஒரு முறையும் பேசியதில்லை. அவனை அதன்பிறகு அவள் தொட்டதே இல்லை.
நெடுங்காலத்துக்கு பிறகு அவன் எண்ணிப்பார்த்தபோது, அந்த நாள் காலையில் திரும்பி வந்த அவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவனுக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு தெரிந்துவிட்டது என்று அவன் புரிந்துகொண்டான். அது எப்படி அவளுக்குத் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. எப்படியோ அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது என்று மட்டும் தான் என்று அவனால் சொல்லிக்கொள்ள முடிந்தது. அவன் அவளை முழுக்கவே மறந்து அவளில்லாத உலகத்தில் வாழத்தொடங்கினான்.
ஒவ்வொன்றாக அவனுக்கு பழக்கங்கள் தொடங்கின. அதன்பிறகு தான் அவன் சிகரெட் பிடிக்கத் தொடங்கினான். அவன் குடிப்பதும் சிகரெட் பிடிப்பதும் ஆறுமாதத்திற்குள் ஹரீந்திரநாத்துக்கு தெரிந்துவிட்டது. அவருடைய வேலைக்காரர்கள் அதை சொன்னபோது அதை அவர்கள் பொருட்படுத்தாதது போல் இருந்தார். பிறகு ஒரே ஒருமுறை அவனிடம் அவன் கண்களைப் பார்க்காமல் பேரெடுகளை திருப்பியபடியே “சில பழக்கங்கள் உடல் நலத்தையும் விரைவிலேயே அழித்துவிடக்கூடியவை. நமக்கு அவற்றின் மேல் ஒரு கட்டுப்பாடு வேண்டும். தன் உடல் மேலும் உள்ளத்தின் மேலும் கட்டுப்பாடுள்ளவன் மட்டும் தான் ஷத்ரியன் எனப்படுவான்” என்றார்.
அவன் அழுத்தமான குரலில் ”தெரியும்” என்றபோது நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் அதன்பிறகு அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அவர் உள்ளூர அவனை அஞ்சத்தொடங்கியதும் அந்நாளுக்குப் பிறகுதான்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

