டாலஸ் சந்திப்பு, அ.முத்துலிங்கம் மற்றும்…
நலமே விழைகிறேன். டாலஸ் நண்பர்களின் இவ்வார கூடுகையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் “கடவுள் தொடங்கிய இடம்” நூலைக் குறித்து விவாதித்தோம். நிகழ்வுக்கு ஆஸ்டினிலிருந்து சௌந்தர், ராதா, கிரி, பாலா & கவிதா ஆகியோர் (உலகப் புகழ் Round Rock Donuts உடன்) வந்திருந்தார்கள். அட்லாண்டா நண்பர் சிஜோவின் (யாரிடமும் சொல்லாத) வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்வின் முடிவில் இணைந்துக்கொண்ட துருவ்–இன் (நண்பர் வெங்கட்டின் சிறுமகன்) வருகையும் அதை இரட்டிப்பாக்கியது. அப்போதுதான் சீரியஸாக சில விமர்சனக் கருத்துகளைக் கூறிமுடித்திருந்த சௌந்தர் சாரை ஒற்றைச் சொல்லில் சிறுவனாக்கும் வித்தை தெரிந்தவன்.
என் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ளவும் நிகழ்வில் வாசிக்கவும் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.
இலங்கை இனப்படுகொலைகளும் – அதற்கு சமமாகவே – எதிர்வினை வன்முறையும் சாதாரண குடிமக்களை தன் வேரிலிருந்து பிடுங்கித்துரத்தும் வேதனையான ஒரு பொழுதில் தன் குடும்பத்தால் வீட்டை விட்டு அனுப்பப்படும் நிஷாந் எனும் 19 வயது இளைஞனின் பயணமும் அவன் சந்திக்கும் மனிதர்களும் வாழ்வனுபவங்களும் அதன் மூலம் திரண்டு வரும் மானுட உண்மைகளையும் காட்டும் நாவலே “கடவுள் தொடங்கிய இடம்“.
அ. முத்துலிங்கத்தின் இப்படைப்பு விகடனில் தொடராக வெளிவந்தது. இதன் மைய கதாபாத்திரம் நிஷாந் மற்றும் அவனுடைய 13 வருட நீண்ட பயணம் ஒரு சரடு போல பல மணிகளை கோர்த்துக்கொடுக்கிறது. சிறப்பு என்னவெனில், இம்மாலை ஒரே போன்ற சீரான மணிகளால் ஆனதல்ல. ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு தன்மையும் தோற்றமும் உடையது.
என் வாசிப்பை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்.
1. உயிர்ஈரும் வாள் – என பாத்திரப்படைப்பு
இதுதான் இவர் இயல்பு என்று நாம் ஒரு முடிவுக்கு வரும்போது வேறொரு திசையில் சென்று நின்று நம்மைப் பார்த்து சிரிப்பது.
உதாரணமாக,
எச்சில் தட்டை எடுக்க மறுத்து, “நீதான் நிஷாந்த் நாயா?” என்று கேட்கும் ஜம்பரிடம், “முதல் பெயர் என்னுடையது இரண்டாவது உங்களுடையதாக இருக்கலாம்” என்று துணிச்சலாக பதிலிருக்கும் நிஷாந், பின்னர் அவரை ஒரு ஏஜெண்டாக காணும்போது அஞ்சுவது, பின்னாட்களில் எச்சில் கோப்பை கழுவுவதையே தொழிலாக கொள்வது. கம்பீரமும் துணிந்த முகமும் கொண்டவளான பெயரறியா பெண், “அது நான் இல்லை” என்று கதறுகிறார் , வீடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் – தேர்ந்து உண்ணும் – ஒரு மீனுக்காக கத்திக்குத்து வரைக்கும் செல்லும் வீர சைவ வேளாளர்தான் தன் 23 வயது மகளுக்கு கிட்காட் வாங்கியனுப்பச் சொல்கிறார். மகளுடன் கணவனிடம் செல்லும் வழியில் வேறொருவரிடம் நாட்டம் கொண்டு நிஷாந்திடம் அறை வாங்கும் ஈஸ்வரி, பின்னாளில் அவனுக்கு வேலை தருகிறாள். இரண்டே பத்தியளவுக்கு வந்தாலும், நிஷாந்தின் வாய்ப்பை பறித்து பின் சிறையிலிருந்து மன்னிப்பு கோரும் ரமேஷ் மனதில் நிற்கிறான்.இப்படி எல்லா பாத்திரங்களுமே “நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாள் ” போன்ற கூர்மையுடையவர்களே.
2. துயர் உண்டெனினும் அழுகை இல்லை
அகதி என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னிருக்கும் மாபெரும் துயர் மட்டுமே போதும் ஒரு கண்ணீர் காவியம் படைக்க. அனால், இந்நாவல் முழுதும் எந்த ஒரு புலம்பெயர்பவரும் அழுவதில்லை. குறிப்பாக, தன் துயருக்காக. சொல்லப்போனால் துயரை வெல்லும் ஒரு தத்துவத்தை தன் வாழ்வனுபவங்களின் வழியாக நமக்களிக்கிறார்கள்.
உதாரணமாக,
ஒரு மதிப்பெண் குறைந்ததால் கனடாவுக்கு சென்று மருத்துவராகுமாறு அனுப்பப்பட்ட சபாநாதன் வாழ்நாள் முழுதும் விதவிதமான கோப்பைகளை கழுவுபவராக ஆகிறார். தன் தகப்பன் பைத்தியமாக அலையும் துயரில் இருப்பவர். சக நண்பன் இப்போது லண்டனில் நரம்பியல் மருத்துவராக இருப்பதைக் கூறும் போது “அதனாலென்ன, அவன் முதல் 5 சிறந்த மருத்துவர்களில் ஒன்று என்றால் நான் முதல் சிறந்த கோப்பைகழுவுபவர்களில் ஒருவன் ” என்கிறார். கற்பகதரு விலாஸ் ஆச்சி – ஒருமணிநேரமே தாயாக இருந்தவர், விட்டுவந்த ஒரே உறவான கணவரும் இறந்து விடுகிறார். அடுத்து என்னவென்று ஒரு தெரியாத ஒரு சூனிய வெளியிலும் தொடர்ந்து வாழ்கிறார். “சேலை நீரில் முங்கி ஈரமானபின் என்ன செய்ய முடியும்; அப்படியே விட்டால் அதுவே 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். நம் கவலைகளும் அப்படித்தான்” என்கிறார்.3. கொள்கை விளக்கங்களோ குற்றச்சாட்டோ இல்லை
தன் நிலைக்காக யாரும் யாரையும் குறை சொல்வதில்லை, எந்த அரசையும் அமைப்பையும் நேரடியாக ஆதரித்தோ எதிர்த்தோ பேசவில்லை. ஆனால், நிலைமை தெளிவாக குறிப்புணர்த்தப்படுகிறது.
உதாரணமாக,
கற்பகதரு விலாஸ் ஆச்சி தன் கதையை சொல்லும்போது – அவர்கள் வழியில் விட்டுவந்த உடல்நிலையழிந்த இந்தியரைப் பற்றி கூறிவிட்டு, அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ள மருத்துவத்தை குறித்து ஏஜென்ட் சொன்னதை கூறிவிட்டு – தன் கருத்தாக கூறுவது “ஒரு நாடு முன்னேறிய நாடு என்பதை அளக்க “அவர்கள் மனித உயிருக்கு மட்டுமல்ல ஒரு சக உயிருக்கு என்ன மதிப்பு அளிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது” என்கிறார். விபத்தில் அடிபட்ட ஒரு மூஸ் மானுக்காக போக்குவரத்தை 15 நிமிடங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸில் மீட்டுச்செல்லும் தகவலை கூறிவிட்டு – பின்னர் மேலும் பேசிவிட்டு சில பத்திகளுக்குபின் இறந்துபோன தன் கணவர் எப்படி இறந்தார் என்று கொழும்புவுக்கு அழைத்து விசாரிக்கும் போது கிடைக்கும் பதில் “செத்துத்தான் இறந்தார்“.2. மாஜிஸ்ட்ரேட் அண்ணன் கூறும் “உலகத்தில் எங்கு ஒரு மூலையில் அநீதி நடந்தாலும் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு“
4. சுவாரசியமான பாத்திரங்கள்
தற்கொலை எண்ணத்தை விரட்டும் ஷாஷா – துன்பத்தைபற்றியே எண்ணும் மனிதன் உலகில் கொட்டிக்கிடக்கும் இன்பங்களை பற்றி நினைப்பதில்லை என்கிறார். துப்பாக்கி சாவின் மேன்மை குறித்து அவரின் விளம்பர வாசகங்கள் நம்மையுமே அதற்காக ஏங்க வைப்பவை.
சாகசக்கார ஜெயகரன் – வசீகரமான ஆண். சாகசமே தன்வாழ்வென துணிந்து தேர்பவன். அவர் காதலி சிமோனா – நீலக்கண் அழகி; மணியம் செல்வனின் பாதி முக ஓவியம் ஒரு அற்புதம். சென்றஆண்டு பூன் முகாமில் தனது யோகா அனுபவங்களை குறித்து பேசும்போது நண்பர் பிரதீப் யோகா மூலம் தான் இரண்டு அங்குலம் வளர்ந்திருப்பதாக சொன்னார். நண்பர் அருணும் ரோயிங் செய்ததன் மூலம் அதையே உணர்ந்ததாக சொன்னார். தன் சாகச கதை சொல்லி முடித்து எழுந்த ஜெயகரனும் வரும்போது இருந்த உயரத்தை விட இன்னும் கூடுதலாக இருந்தார் என்பது நிஷாந்தின் கூற்று. யோகா ரோயிங் மட்டுமில்லை, பியர் குடித்து சாகச கதை சொன்னாலும் உயரமாகலாம் போல.
ஜெர்மன் நண்பர் சத்யன் – வேடிக்கையான இளைஞன். “சந்தோஷமான விஷயங்கள் மட்டும் இன்று, மற்றதெல்லாம் நாளைக்கு” என்ற அவன் தத்துவம் யோசிக்க வேண்டிய ஒன்று.
கனகலிங்கம் – நிலஅளவையாளர், அதன் முக்கியத்துவம் குறித்து பெரிதாக விளக்குபவர், ஆனால் அளவில்லாமல் பேசுபவர். அவர் மகன், ஏஜென்ட் உட்பட எல்லோரும் அஞ்சுவது அவரின் அளவுக்குமீறிய பேச்சுக்குத்தான். ஆனால், கடினமான பாதையாகிய ஆம்ஸ்டர்டாம் வழி கனடாவை அவர் எளிதாக கடக்கிறார் – வோட்காவின் துணையுடன்.
அறை முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்திருக்கும் புஷ்பநாதன் ரஷ்யப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் சண்டைபோடுகிறார். எப்படியும் அவளுக்கு புரியப்போவதில்லை எனும் போது எதற்காக நல்ல வசவு சொற்கள் இல்லாத ஆங்கிலம் என்று தமிழின் திறமான சொற்களை பயன்படுத்தியும் அடங்காத அவளிடம் இருந்து தப்பியோடுகிறார், வீர சைவ வேளாளர். சிறு வாய்சண்டையில் கேயாரை குத்திக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். அடிதாங்காமல் அவர்தான் கொன்றார் என்று வாக்குமூலம் கொடுத்த நிஷாந் பின்னர் அவரை சிறையில் சென்று சந்திக்கும்போது மகளுக்கு கிட்காட் வாங்கி அனுப்பச்சொல்கிறார்.
பிரான்ஸில் இருக்கும் மகளிடம் செல்லும் சந்திரா மாமி – வாசிப்பும் நுண்ணுணர்வும் உள்ளவர், பறவைகளின், பூக்களின் பெயர்கள் தெரிந்தவர்; சிக்கலில் மாட்டும் குழுவினரை காப்பாற்றும் அறிவுள்ளவர். எத்தனையோ இன்னல்களை தன் வாழ்வில் சந்திருந்தாலும் ஒரேயொரு சுடுசொல் பொறுக்காமல் உயிர்விடுகிறார்.
செகாவின் அகவ்யா போன்ற அகல்யா – சங்க கவிதைகள் சொல்பவள், விண்மீன்களுக்கு நடுவில் முத்தமிடுபவள், எதையும் ஒருக்கா படிச்சா மறக்காதவள் – இறுதியில் அவனை மறந்து விட்டுச் செல்கிறாள்.
நிஷாந்துக்கு பல வேளைகளில் அறிவுரை கூறும் அம்பிகாபதி மாஸ்ரர், இறுதியில் நிஷாந்த் கனடா வர காதலியாக உடன் வரும் சைவபட்சி சகுந்தலா என மேலும் பல பாத்திரங்கள் மனதை கவர்கின்றன.
எனினும், தனிப்பட்டளவில் என் மனதிற்கு உகந்தவராக உள்ளது உக்ரைன் வீடு சொந்தக்கார மனுசி தான் . தன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் யாரென்று தெரியாது. எனினும் அவர்களோடு அன்புடன் இருக்கிறார். ரஷ்ய மொழி கற்றுக்கொடுக்கிறார். சமகோன் வோட்கா கொடுக்கிறார் ; பெருநாளுக்கு 12 வகையான உணவுப்பொருட்களை அனுப்புகிறார். ஏமாற்றி சென்றபின்னர் மீண்டும் சென்று சந்திக்கும் நிஷாந்தை கட்டிக்கொண்டு கண்ணீர் விடுகிறார். மற்றவர்களை போலன்றி, அவருக்கு ஒரு தங்கும் இடம் உண்டு, தொழில் உண்டு எனினும் அன்பு செய்யவும், பெறவும் ஆளில்லை. அவரும் ஒருவிதத்தில் ஏதுமற்றவர் தான்.
5. தெறிப்புகள் & எழுப்பும் வினாக்கள்
பூட்டனின் பூட்டனிடம் டச்சுக்காரர்கள் பிடுங்கிய பணத்தை கணக்கு வைத்து அகதி பணமாக வசூலிக்கும் மாஜிஸ்ட்ரேட் அண்ணன், தகப்பனின் எண்ணத்திற்கு எதிர்திசையில் வாழ்க்கையால் உந்தப்பட்டு அவரின் முடிவுக்கு வருந்தும் சபாநாதன் இருவரின் அத்தியாயங்களும் முடிவும் ஒரு கிளாசிக்.
அறிவார்ந்த பகடிகள் அங்கங்கே தெரித்தபடியே இருக்கிறது.
உதாரணமாக
புதியவர்கள் சேர்ந்த உடன் அறையின் சராசரி புத்திக்கூர்மை பாதியாக குறைந்தது. பிதாகரஸ் பிளேட்டோ போன்ற அதிஉன்னத மூளைகள் பிறந்த நாட்டின் சாதாரண மூளைகள் முடிவெடுக்கமுடியாமல் யோசிப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது;நாளைக்கே வேலையை தொடங்குகிறேன் என்னும் சபாநாதனிடம் அவர் முதலாளி, “அதென்ன நாளைக்கு? உன் அறிவு இரண்டு மடங்காக ஆகிவிடுமா? இன்றைக்கே தொடங்கு” என்கிறார்நூலின் பெறுமதிகளாக எனக்குத் தோன்றுவது,
வாழ்க்கை எப்படியும் வாய்ப்பு தரும். அதில், நம் தெரிவுகள் நம்மை வழிநடத்தும்சரி தவறு நன்மை தீமை நேர்மை என்பதெல்லாம் மிகவும் relative. குறிப்பாக நேர்மை. வேண்டிய எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது அல்ல, இல்லாத போது என்னவாக இருக்கிறோம் அல்லது இருப்போம் என்பது அச்சுறுத்தும் வினாவாக நிற்கிறது.நம் மூக்கோட்டை அளவு வாழ்வு அதன் அனுபவங்கள் அதன் மூலம் நாம் கொடுக்கும் விளக்கங்கள் எல்லாம் எவ்வளவு குறைவுபட்டவை என்பதை கண் முன் நிறுத்தியது.6. விமர்சனப் பார்வை
நாவலில் எனக்கு உறுத்தலாக இருந்தது பல்வேறு பாத்திரங்களே. தனித்தனியாக ஈர்த்தாலும், அவர்களின் பங்களிப்பு குறித்து எனக்கு சில கேள்விகள் உள்ளன.அவற்றை விவாதித்து அல்லது மீண்டும் படித்து விளங்கி கொள்ள வேண்டும். பல்வேறு வகையான வாசகர்களை கொண்ட பிரபல இதழில் வரும் தொடர்கதை என்பது நாவலின் ஒழுக்குக்கு செலுத்த வாய்ப்பிருக்கிற ஆதிக்கம் குறித்த கேள்விகளும் எழுகிறது.
நண்பர்களே, ஒரு தாய் தன்னைப் பிரிந்திருக்கும் தன் மகனை/மகளை நினைக்கையில் அவர்களின் பிறந்துவிட்ட, கண்ணால் கண்டுவிட்ட, கையால் தொட்டுவிட்ட குழந்தைகளையே நினைவில் மீட்டெடுப்பதாகவே கூறப்படும். ஆனால், நிஷாந்தின் அம்மாவோ தானும் பிரிந்து எங்கோ வாழும் தன் மகனும் சேர்ந்து வாழ்ந்ததை கூறும்போது “நீயும் நானும் ஒன்பது மாதங்கள் இந்த ஒரே உடலை பகிர்ந்துகொண்டோம்” என்று தன் கருவாகவே அவனை கொள்வது ஆசிரியரின் கவித்துவத்திற்கு ஒரு உதாரணம்.
இந்த அளவு நுண்ணுணர்வு நிரம்பிய படைப்பாளியை கண்டுகொண்டது நல்லூழ். அவரை நாம் மேலும் அணுகியறிய இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று கோருகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி,
டாலஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

