தமிழ் உள்ளத்தின் ஒதுங்குதலைக் கடத்தல்

அன்பு ஜெ,

இன்று மகளுடன் யானை பார்க்க சென்றேன். பல நாட்களாக யானையைப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தாள். எனவே இங்குள்ள யானைகளின் சரணாலயத்திற்குக் கூட்டிச்சென்றேன். யானையைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வந்துவிடும். அங்கிருந்தபடியே உங்களிடம் அண்மையில் நடந்துமுடிந்த முக்கோண கதைகள் விழா குறித்து தெரிவிக்க விரும்பினேன்.

ஞாயிறு நடந்த முடிந்த முக்கோண கதைகள் மலேசிய இலக்கியச் சூழலில் ஒரு வரலாறுதான். மூவின எழுத்தாளர்களும் ஒன்றிணைந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் நடந்ததில்லை. அப்படி கலந்துரையாடல் நடந்திருந்தாலும் அதை வரலாற்றில் எப்போதும் நினைவுக்கூறும் வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டதில்லை. இந்த விழாவில் மூன்று நூல்கள் வெளியீடு கண்டன. எஸ்.எம்.ஷாகீரின் சிறுகதைகளும் சீன சிறுகதைகளும் தமிழுக்கும் தமிழில் பத்து சிறுகதைகள் மலாய் மொழிக்கும் என மொழிபெயர்க்கப்பட்டு நூலாகப் பதிப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஈராண்டு உழைப்பு. இதற்குப்பின்னால் பலரது பங்களிப்பு உண்டு. அ. பாண்டியன், ச. சரவணன் ஆகியோர் அதில் முதன்மையானவர்கள். விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி, சல்மா தினேஸ்வரி, ஆசிர் லாவண்யா, கி. இளம்பூரணன் என பலரும் முதன் முறையாக மொழிபெயர்ப்பில் முயன்று அதை நிறைவாகவும் செய்துள்ளனர்.

ஜெ, எந்த ஒரு விழாவும் தொடர் பலன்களை உருவாக்க வேண்டும் என்றே திட்டமிடுவேன். அப்படித்தான் ‘பென் மலேசியா’ இணைவும். இந்த ஆண்டு அதன் தலைவர் மஹி ராமகிருஷ்ணன். நிகழ்ச்சி வழங்கிய நேர்மறை அதிர்வு அவரை இன்னொரு உரையாடலுக்குத் தூண்டியது. இம்மாதம் 21 ஆம் திகதி மொழியாக்கம் கண்ட தமிழ் சிறுகதைகள் குறித்து மேலும் ஓர் உரையாடலுக்கான களத்தை உருவாக்கியுள்ளார். சீன, மலாய் எழுத்தாளர்கள் மொழியாக்கம் கண்ட தமிழ் சிறுகதைகள் குறித்து பேசுகின்றனர். மரினா மகாதீர் அந்நிகழ்ச்சியில் இணைவதும் அவர் அத்தொகுப்பை வாசித்து தன் கருத்தைப் பகிர்வதும் மேலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மேல் கவனத்தைப் பாய்ச்சும் என நம்புகிறேன்.

சீன சிறுகதைகளை மலாயில் மொழியாக்கம் கண்ட எழுத்தாளர் ஃபுளோரன்ஸ், தமிழ்ச் சிறுகதைகளை சீனத்தில் மொழிபெயர்க்கும் திட்டத்தோடு பத்து நூல்களை என்னிடம் பெற்றுக்கொண்டு சென்றபோது மகிழ்ச்சியில் கண்கள் பனித்துவிட்டன. மேலும் அவர் ஆங்கில வானொலி ஒன்றில் இத்தொகுப்பு குறித்த உரையாடலுக்காக ஏற்பாடு செய்து வருகிறார்.

2006இல் நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மேல் இதழ்கள் வழியாக கவனத்தை ஏற்படுத்த முயன்றபோது இங்குள்ள தமிழ் படைப்புகளில் இலக்கியத் தன்மை என ஏதும் இல்லை எனக் கேலி செய்தவர்கள் சிலர் உள்ளனர். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழக இலக்கியம் மட்டும்தான் எனச் சொன்னவர்கள் சிலர் உள்ளனர். அதற்குக் காரணமும் உண்டு. கலைத்தன்மை அற்ற மொண்ணையான படைப்புகள் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முகங்களாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவையே உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களிடம் பரப்பப் பட்டன.  கடுமையான விமர்சனத்தின் வழியாகவே அதன் அடையாளங்களைத் தகர்க்க வேண்டியிருந்தது. அந்த பீடத்தில் வாசிப்பின் வழி நான் உணர்ந்த முதன்மையான ஆளுமைகளை நிறுத்த வேண்டியிருந்தது. அப்போது ‘வல்லினம்’ மலேசியத் தமிழ் இலக்கியத்தின் எதிர் முகம் என கற்பனையான கதைகள் உருவாகின. வல்லினம் தமிழக எழுத்தாளர்களை மட்டுமே முன்னிறுத்தி மலேசிய எழுத்தாளர்களை புறக்கணிக்கிறது எனும் எண்ணம் கொஞ்சம் காலம் வலுவாகவே இருந்தது.

பல மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஆவணப்படம் செய்து சேமித்தபோதும், அவர்களின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபோதும், மூத்த எழுத்தாளர்களுக்கு வல்லினம் விருது வழங்கியபோதும், அவர்களை நேர்காணல்கள் செய்து நூலாக ஆவணப்படுத்தியபோதும் வல்லினம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஆளுமையை விமர்சனத்தின் வழியாக அசுத்தப்படுத்துவதாகக் குரல்கள் ஒலித்தபடியே இருந்தன. இன்றும் அப்படியான மூடநம்பிக்கை சிலரிடம் இருக்கலாம் ஆனால் மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களை கவனப்படுத்தும் அமைப்பாக வல்லினம் தன்னை தன் செயல்பாடுகளால் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

ஜெ, உங்களுக்கு நினைவிருக்கலாம். 2014இல் நீங்கள் மலேசியா வந்தீர்கள். இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு கண்டன. அப்போது வல்லினத்தின் ஒரு செய்தியும் தமிழ் ஊடகத்தில் வராத காலம். வல்லினத்தில் வந்த சிறுகதை ஒன்றை சர்ச்சையாக்கி ஒட்டுமொத்தமாகவே மலேசிய தமிழர்கள் வல்லினத்திற்கு எதிர்ப்பாக இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டன. வல்லினம் அச்சிதழுக்கான உரிமம் அரசால் பரிக்கப்பட்டது. முகநூலில் மட்டுமே நிகழ்ச்சி குறித்து அறிவிப்பை செய்து அந்த நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். சரியாக எண்பது பேர் வந்திருந்தனர். எல்லாம் நினைவுண்டு.

நடந்துமுடிந்த முக்கோண கதைகள் நிகழ்ச்சியில் நான் அரங்கின் பின்னால் நின்றுக்கொண்டு சீன, மலாய் எழுத்தாளர்கள் ‘வல்லினம்’ குறித்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். வல்லினம் பணிகள் குறித்து அவர்கள் சிலாகிப்பதை ரசித்துக்கொண்டே இருந்தேன். 2014 இல் இருந்த பலரது மனநிலை 2025 இல் முற்றிலுமாக மாற நாங்கள் இடையறாது செய்யும் எங்கள் பணிகளைத் தவிர வேறு காரணமில்லை.

எந்த இக்கட்டான சூழலிலும் எங்கள் செயல்பாட்டில் எந்தப் பின்னடைவும் இருந்ததில்லை. எதற்கும் யாரிடமும் மன்றாட வில்லை. எங்களை ஏற்கச் சொல்லி கெஞ்சவில்லை. எந்த சமரசமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கிறோம். நாங்கள் செய்யும் பணியில் நம்பிக்கையுடன் இருந்தோம். எவையெல்லாம் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு நன்மை தரும் அதை செய்தோம். இளம் எழுத்தாளர்கள் நம்பிக்கையுடன் உடன் வந்தனர். மூத்த எழுத்தாளர்களுக்கு எங்களைப் புரியத் தொடங்கியது. நாங்கள் புதிய படைப்பாளிகளை விமர்சனத்தால் ஒடுக்கவில்லை; போலியான  ஆக்கங்களை அடையாளம் காட்டுகிறோம் என இப்போது அறிகின்றனர்.

மொழிபெயர்ப்பு பணியில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த சாதகமான வாய்ப்புகளை மலேசியாவில் பிற தமிழ் எழுத்தாளர்களும் அடையும் படியான திட்டங்களை வகுத்து செயல்படுகிறோம். அது அனைவருக்கும் பயனைக் கொடுத்துள்ளது. விரைவில் கவனப்படுத்தப்பட வேண்டிய மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.

யானை நடந்து செல்லும் பாதை வனத்தின் பிற உயிர்களுக்கும் வளத்தைக் கொடுக்குமெனச் சொல்வார்கள். அது இலக்கியவாதிக்கும் பொருந்தும்தானே.

 

ம.நவீன்

அன்புள்ள நவீன்,

மலேசியாவில் நீங்கள் தொடங்கி வைத்திருப்பது ஒரு புதிய அத்தியாயம். நான் இதை பலமுறை இலங்கை மற்றும் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகள் சார்ந்து சொல்லியிருக்கிறேன். ஓர் ஆக்கபூர்வமான இலக்கியப் பரிமாற்றம் அங்கெல்லாம் நிகழ்வதே இல்லை. எனக்குத்தெரிந்து சிங்கள- தமிழ் இலக்கியப் பரிமாற்றம் என்பது மிகக்குறைவு, அதிலும் அண்மையில்தான் சில முயற்சிகள் நிகழ்ந்துள்ளன.

ஏன், தமிழ்நாட்டில் இன்றுவரை தென்னிந்திய மொழிகளுக்கான ஓர் இலக்கிய அரங்கு நிகழ்ந்ததில்லை. சாகித்ய அக்காதமி சில ஒப்புக்கு நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது, அவ்வளவுதான். நாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கவை பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வு, கேரளத்தில் நிகழும் துஞ்சன் தென்னிந்திய இலக்கியவிழா.

தமிழர்களுக்கு தமிழிலக்கியம் மீதே ஆர்வமில்லாத நிலையில் பிற மொழி இலக்கியங்கள் மேல் என்ன ஆர்வம் என்று கேட்கலாம். அது வருந்தத்தக்க உண்மைதான். நாம் நம் இலக்கியத்தைக் கொண்டாட ஓர் இலக்கியவிழாவை இன்னும் இங்கே நிகழ்த்தவில்லை. கேரளத்தில் நான்கு இலக்கிய விழாக்கள் உள்ளன. கே லிட்ஃபெஸ்ட், மாத்ருபூமி இலக்கிய விழா, ஹே லிட்ஃபெஸ்ட், கடத்தநாடு லிட்பெஸ்ட். கர்நாடகத்தில் இரண்டு. பெங்களூர் இலக்கிய விழா, ஹெக்கோடு இலக்கிய விழா. நமக்கு இருப்பது விஷ்ணுபுரம் விருதை ஒட்டி நிகழும் இலக்கிய விழா மட்டுமே. மேலே சொன்ன இலக்கிய விழாக்கள் ஒவ்வொன்றும் இரண்டு முதல் பத்துகோடி வரை செலவில் நிகழ்பவை. விஷ்ணுபுரம் விழா 25 லட்சம் ரூபாய்ச் செலவில் நிகழ்கிறது, அதற்கே நாங்கள் பிச்சை எடுக்கவேண்டியிருக்கிறது.

மலேசியா போன்ற நாடு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டுகூட இத்தகைய நிகழ்வுகள் முன்னர் நிகழ்ந்ததில்லை என்பது வருந்தத் தக்கதே. இப்போதேனும் நிகழ்கிறதே என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான். இப்படி ஒன்றை ஒருங்கிணைப்பது கடினம் என்றால் தமிழர்களுக்கே உரிய உள்குத்துக்களை எதிர்கொண்டு முன்செல்வது மேலும் கடினமானது. எந்தப் பாராட்டும் கிடைக்காது, அவதூறும் வசைகளும் ஏளனமுமே மிஞ்சும். நாம் செய்யவேண்டியதைச் செய்தாகவேண்டும் என்னும் உணர்வுடன் மட்டுமே இயற்றவேண்டிய கடமை இது. வாழ்த்துக்கள்.

நாம் இந்த வகையான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் பொதுவாக நிகழும் பிழைகள் என்ன? நாம் மிகமிகச் சம்பிரதாயமானவர்கள். ஒரு கோயில்விழா போலவே இவற்றை நடத்துவோம். கும்பாட்டம் கரகாட்டம் எல்லாம்கூட ஏற்பாடு செய்வோம். பெரியமனிதர்களைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பமாக இவற்றை மாற்றிக்கொள்வோம். பெரியமனிதர்களின் தயவைத் தேடுபவர்கள் முன்னின்று நடத்துவார்கள். விளைவாக இலக்கியம் ஒட்டுமொத்தமாகப் பின்னுக்குத் தள்ளப்படும்.

இத்தகைய நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு மிகக்குறைவாக இருக்கும். தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு இத்தகைய கலாச்சார நிகழ்வுகளின் முக்கியத்துவம் புரியாது. அவர்கள் மக்கள்திரள் கண்ணுக்குப் பட்டால்தான் பணம் தருவார்கள். மக்களைத் திரட்டவேண்டும் என்றால் இங்கே சினிமாதான் ஒரே வழி. ஆகவே எழுத்தாளர்களை பின்னுக்குத்தள்ளி சினிமாக்காரர்கள், மிமிக்ரி கலைஞர்கள், பட்டிமன்றத்தவர்களை முன்வைக்கவேண்டும்.

கடைசியாக இங்கே விளம்பரதாரர்களே மேடையேறி முன்னால் நிற்கும் வழக்கமும் உண்டு. ஆர்வமுள்ள பெரியமனிதர்களை கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கௌரவிக்க மேடையேற்றுவது மிக நல்லது – அது சமூகம் அளிக்கும் கௌரவம். ஆனால் அவர்கள் மைக் பிடித்து பேச ஆரம்பிப்பதும், கருத்து உதிர்ப்பதும், ஆலோசனைகளை வழங்குவதும் அபத்தம். ஆனால் தமிழக மேடைகளில் நிகழ்வது அதுதான்.

இந்தக் காரணத்தால்தான் நம் நிகழ்வுகள் பற்றி வெளிமாநில, வெளிமொழி அறிவுஜீவிகளுக்கு இளக்காரமான பார்வை உள்ளது. எங்கள் விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு வந்த பலர்  “ஒரு தமிழ் நிகழ்வு இப்படி நிகழும் என எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். எப்படி நிகழும் என எதிர்பார்த்தீர்கள் என்று நான் கேட்பேன். சிரித்துச் சமாளிப்பார்கள்.

ஒருவர் மட்டும் சொன்னார். “காலதாமதம், நிகழ்ச்சிநிரல் குளறுபடி, சம்பந்தமற்றவர் மேடையேறி இஷ்டத்துக்குப் பேசுவது, பெரியமனிதர்களை தாஜா செய்வது, சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆக்ரமிப்பு, எந்த வகையிலும் தீவிரமே இல்லாத கொண்டாட்ட மனநிலை, உதாசினமான அரங்கு ஆகியவைதான் தமிழ் நிகழ்வுகளின் இலக்கணம். நான் பலமுறை பார்த்தது உண்டு. உலகத்தில் எங்கே தமிழர்களின் நிகழ்வு நடைபெற்றாலும் இதுதான் நடைமுறை”

“அவை எவையும் நிகழக்கூடாது என்று கவனித்துத்தான் எங்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளோம்” என்று நான் பதில் சொல்வேன்.

இந்தவகையான நிகழ்வுகளை நம் வழக்கமான தமிழ்ச்சங்கங்கள் வழியாக நடத்த முடியாது. அவற்றின் அதிகார அடுக்குகள், ஆட்சித்  தொடர்புகள் , நிதிக்கொடையாளர்களின் எதிர்பார்ப்புகள் என பெரிய அழுத்தங்கள் உண்டு. ‘பொதுமக்கள்’ பங்கேற்பு இன்றி அவர்கள் செயல்பட முடியாது, பொதுமக்களின் பொதுரசனைக்குச் சமரசம் செய்யாமலிருக்கவும் முடியாது. வல்லினம் போன்ற தீவிர இலக்கிய அமைப்பே இந்தச் சாதனையை நிகழ்த்த முடியும்.

நீங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி அளித்த நம்பிக்கையைப் புரிந்துகொள்கிறேன். அரைநம்பிக்கையுடன், குறைந்த எதிர்பார்ப்புடன் நிகழ்வுக்கு வந்த மலேய, சீன மொழிப் படைப்பாளிகள் அடைந்த வியப்பையும் ஆர்வத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்கிறேன். முயற்சி வெல்க.

ஜெ\

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.