வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்
நம் சமூகம் வாய்மொழிப் பண்பாடு கொண்டது, எழுத்துப் பண்பாட்டை அஞ்சுவது என்று முந்தைய குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன். வாய்மொழிப் பண்பாடு பிற்பட்ட, தேக்கநிலை என்றும் எழுத்துப் பண்பாட்டை நோக்கி நாம் நகர்ந்தாகவேண்டும், அதற்கு நமக்குச் சுயவிமர்சனமும், சுயபரிசீலனையும் தேவை என்றும் சொல்லியிருந்தேன். எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில். பல கேள்விகள் அதையொட்டி எனக்கு அனுப்பப்பட்டன.
பண்பாட்டு அடிப்படையில் சமூகங்கள் இரு வகையாக பகுத்துப்பார்க்கலாம். வாய்மொழிச் சமூகங்கள், எழுத்துசார் சமூகங்கள். எல்லா சமூகங்களும் தொடக்கத்தில் வாய்மொழிப் பண்பாடு கொண்டவைதான். அவற்றில் சில சமூகங்கள் தங்களை எழுத்துசார் சமூகங்களாக ஆக்கிக் கொள்கின்றன. ஐரோப்பியச் சமூகம் கிரேக்கப் பண்பாட்டின் காலம் முதலே எழுத்தை நோக்கியதாக தன்னை நகர்த்திக்கொண்ட ஒன்று. சீனச்சமூகமும், அராபியச் சமூகமும்கூட எழுத்துப் பண்பாட்டுக்குள் நீண்டகாலம் முன்னரே சென்றுவிட்டவைதான். மானுடக் கலாச்சராம் என நாம் அறியும் அனைத்தையும் விடத் தொன்மையான எகிப்தியக் கலாச்சாரம் மாபெரும் எழுத்துப் பண்பாட்டைக் கொண்டது. மாறாக இந்தியச் சமூகம் வாய்மொழிச் சமூகமாகவே நீடித்தது, இன்றும் நீடிக்கிறது.
இந்தியச் சமூகத்தில் நீண்டகால எழுத்து மரபு உண்டு. ஆனால் அது ஒரு சிறுவட்டத்திற்குள், மிகச்சிறிய அளவில்தான் என்றும் இருந்தது. இந்தியச் சமூகம் ஒட்டுமொத்தமாக வாய்மொழிச் சமூகமே. நம்முடைய முதன்மை மதநூல்களாகிய வேதங்கள் அச்சு ஊடகம் வந்தபின்னரே எழுத்துவடிவை அடைந்தன. ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்ற அனைத்துமே பேசி- கேட்கப்படும் நூல்களாகவே இருந்தன. அவற்றை வாய்மொழிமரபாக பாடிப்பரப்பும் சூதர்கள், மாகதர்கள், பாணர்கள் எல்லா காலத்திலும் இருந்தனர், இன்றும் அம்மரபு பெரும்பாலும் அப்படியே நிலைகொள்கிறது.
நம் சங்கக் கவிமரபு முழுக்கமுழுக்க வாய்மொழி சார்ந்ததே. அவை உரிய வாத்தியங்களுடன் துணையுடன் பாடப்பட்டன. சங்கம் மருவிய காலகட்டத்து காவியங்களும் சரி, அதன்பின் உருவான அறநூல்களும் சரி, பக்திக் காலகட்டத்துப் பாடல்களும் சரி, கம்பன் முதல் சேக்கிழார் வரையிலான இரண்டாவது காவியகாலகட்டமும் சரி, சிற்றிலக்கியக் காலகட்டமும் சரி செவிச்சொல் சார்ந்தவையே. நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுவடிவில்தான் எழுத்துப்பண்பாடு அறிமுகமானது.
எழுத்துவடிவம் ஏடுகளில் இருந்ததே என்று கேட்கலாம். மூலம் என்ற வகையில் நூல்களின் ஒரு எழுத்துவடிவம் பேணப்பட்டது, அவ்வளவுதான். அவை நேரடியாகப் பயிலப்பட்டது மிகக்குறைவு. மனப்பாடம் செய்யப்படவேண்டும் என்பதற்காகவே குறள், வெண்பா போன்ற செய்யுள்வடிவங்கள் பயின்று வந்தன.மிழிலும் நம் இலக்கியங்கள் அனைத்துமே செவிநுகர் கனிகள்தான். நூல்வாசிப்பு என்பது மிகமிக அரிதான, மிகச்சிறிய வட்டத்திற்குரிய ஒன்றாகவே என்றும் இருந்தது. சொல்லிக் கேட்பதுதான் நமது மரபு. கற்றலில் கேட்டல் நன்று என்றுதான் நம் மரபு அறிவுறுத்தியது.
இந்தக் காரணத்தால்தான் இந்திய அளவிலேயே நமக்கு மிகமிகக்குறைவாகவே எழுத்துப்பிரதிகள் கிடைக்கின்றன. இத்தனை நீண்ட ஒரு பண்பாடு எத்தனை நூல்களை உருவாக்கியிருக்கவேண்டுமோ அதில் நூறிலொரு பங்கு நூல்கள் கூட நமக்கு உண்மையில் இல்லை. நம் இலக்கிய மரபு மிகப்பெரியது என நாம் நினைக்கிறோம், அது ஒரு பிரமைதான். எண்ணிப்பாருங்கள், இங்கே ஒரு நூற்றாண்டுக்கு ஒருசில நூல்களே நமக்கு இன்று கிடைக்கின்றன. பெரும்பாலான நூல்கள் வாய்மொழியில் நிகழ்ந்து அப்படியே மறைந்தன.
உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தாலே தெரியும், எத்தனை நூல்கள் அப்படி ஒரே ஒரு பிரதி மட்டும் எழுதப்பட்டு, வாய்மொழியாக பயிலப்பட்டு, அப்படியே மறைந்தன என்று. அவருடைய ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கம்பனை விட கூடுதலாக எழுதியவர். அவருடைய எந்த நூலும் நம்மிடம் இல்லை. இந்தியாவில் அப்படி பல ஆயிரம் ஆசிரியர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள். மதம் சார்ந்த நூல்களே இந்தியாவில் பெரும்பாலும் பேணப்பட்டன, மதவழிபாட்டின் ஒரு பகுதியாக. இன்று இந்திய இலக்கியத்தில் நமக்கிருக்கும் அதிகமான நூல்கள் பெரும்பாலும் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவை. இத்தனைபெரிய சிற்பங்களும் ஆலயங்களும் இருக்கும் நம்மிடம் சிற்பம், மருத்துவம் ஆகியவற்றில் நூல்கள் மிகக்குறைவு. பெரும்பாலான நூல்கள் ஏற்கனவே எழுதப்பட்டவற்றின் மறுஆக்கங்கள்
நமக்கு வரலாற்றெழுத்தே இல்லை. கிரேக்க வரலாற்றெழுத்துக்கு மூவாயிரமாண்டு தொன்மை உண்டு. அராபிய வரலாற்றெழுத்து பத்தாம் நூற்றாண்டு முதல் மிகப்பெரிய அலையாக எழுந்தது. சீன வரலாற்றெழுத்து மிகப்பிரம்மாண்டமானது, மூவாயிரமாண்டு தொன்மை கொண்டது. இந்தியாவில் வரலாற்று நூல் என எதுவுமே இல்லை — அராபிய மரபால் உருவாக்கப்பட்ட முகலாய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்கள் தவிர. நமது மாபெரும் மன்னர்கள் பற்றி எந்தச் செய்தியும் எங்குமே எழுதிவைக்கப்படவில்லை. உண்மையில் எதையுமே எழுதி வைக்கும் வழக்கம் இல்லை. நமக்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் மட்டுமே நம் வரலாற்றுக்குச் சான்று, அவையும் ஓரிரு வரிகள்.தற்செயலாகவே அவற்றில் வரலாறு இடம்பெறுகிறது. டி.டி.கோஸாம்பி சொல்கிறார், நமது ஒட்டுமொத்த கல்வெட்டுகளைச் சேர்த்தாலே ஆயிரம் பக்கம் வராது என. பல நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த பேரரசுகளேகூட ஓரிரு வரி கல்வெட்டுகளுக்கு அப்பால் ஏதும் பதிவே இல்லாமல் மறைந்து விட்டிருக்கின்றன – சாதவாகனப் பேரரசு போல, களப்பிரப் பேரரசு போல.
அறிவுச்செயல்பாட்டில் உள்ளவர்கள் இதை விரிவாகவே பார்க்கலாம். நமது மரபில் பிரதிசெய்யும் வழக்கம் இருந்தது, ஆனால் பாடவேறுபாடு பார்க்கப்பட்டதாக எந்தக்குறிப்பும் இல்லை. ஏனென்றால் எழுதப்படும் நூல் மாறாதது, மாற்றமில்லாமல் அது பேணப்படவேண்டும் என்னும் எண்ணமே நமக்கு இருந்ததில்லை. நமது எல்லா நூல்களும் பாடபேதம் மலிந்தவை. வெள்ளையர் இங்கு வந்து அவர்கள் பாடவேறுபாடு நோக்கி திரட்டியவையே நாம் வைத்திருக்கும் மகாபாரதம், ராமாயணம் எல்லாமே. அந்த முறைமையை அடியொற்றி அறிஞர்கள் பாடவேறுபாடு நோக்கிப் பதிப்பித்தவையே நாம் தமிழில் வைத்திருக்கும் இலக்கியங்கள்.
நம் பக்தி மரபிலேயே மிக அண்மைக்காலம் வரை அதில் எழுத்துப்பண்பாட்டுக்கு, புத்தகங்களுக்கு இடமே இல்லை. வழிபாடுகளின் தோத்திரங்களும் மந்திரங்களும் வாய்மொழியாகவே பயிலப்பட்டன. நம் முன்னோர் பெரும்பக்தர்கள். ஆனால் பக்தி சார்ந்த ஒரு நூலைக்கூட கண்ணால் பார்த்திராதவர்கள். திருமுறைகள், பிரபந்தங்கள்கூட வாய்மொழியாகவே கற்கப்பட்டு பாடப்பட்டன. நாம் ஏதேனும் பக்தி நூல்களை நமக்காக வாங்கி வைக்க ஆரம்பித்ததே இருபதாம் நூற்றாண்டில்தான். இன்றுகூட ஏதேனும் ஒரு பக்திநூல் வீட்டில் இருக்கும் இந்துக்கள் ஐந்து சதவீதம்பேர் கூட இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்திநூலையேனும் படித்த பக்தனாகிய இந்து அரிதிலும் அரிதானவர். அத்தனை கிறிஸ்தவ இல்லத்திலும் பைபிள் இருக்கும் , ஏனென்றால் கிறிஸ்தவம் எழுத்து சார்ந்தது- இதுதான் நான் சொல்லவரும் வேறுபாடு.
ஐரோப்பிய எழுத்து மரபைப் பார்க்கையில் ஓர் இந்தியனாக தாழ்வுணர்ச்சியே உருவாகிறது. எகிப்தியப் பண்பாட்டைப் பார்க்கையில் குன்றிபோகிறேன். கிருஷ்ணனின் சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க இரண்டாம் ராம்சேயின் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு செயலும் எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. நமக்கு கிருஷ்ணனைப் பற்றிக் கிடைப்பவை எல்லாம் நீண்டகாலம் வாய்மொழியில் இருந்து, தொன்மமாக வளர்ந்து, பின்னர் பாடலாகப் பாடப்பட்ட கதைகள் மட்டும்தான். எகிப்தில் இரண்டாம் ராம்சே கட்டிய ஒரு ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளே சில ஆயிரம் பக்கங்களுக்கு நீள்பவை.
இங்கே இருந்த அறிவுமரபு வாய்மொழிப் பண்பாட்டைச் சார்ந்தது. புலவர்கள்கூட ‘பாடி’ பரிசில் பெற்றவர்கள்தான். சங்கப்பாடல்கள் முழுக்க கவிஞர்களைப் பாடகர்களாகவே சொல்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை அப்படித்தான். நம் சமூகத்தில் கவிஞர்களின் இடம் என்பது அரசர்களையும், தெய்வத்தையும் புகழ்பவன் என்பதுதான். அது பழைய இனக்குழுக்களில் உள்ள குலப்பாடகனின் இன்னொரு வடிவம் அன்றி வேறல்ல. இன்றும்கூட குமரிமாவட்டத்திலும், கொங்கு வட்டாரத்திலும் குலப்பாடகர்கள் உள்ளனர். அவர்கள் குலங்களைப் புகழவேண்டியவர்கள். அதாவது ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ மரபு.
நம் குலப்பாடககளுடைய சமூக அந்தஸ்து என்பது இசைக்கலைஞர்களுக்குச் சமானமானது. நாம் இசைக்கலைஞர்களை எப்படி நடத்தினோம்? திருமணங்களில் வந்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு நாதஸ்வரக் கலைஞர்கள் சந்தனம் பூசிவிடவேண்டும் என ஒரு வழக்கம் இருந்தது. அதை எதிர்த்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. இசைக்கலைஞர் சபையில் அமர்ந்து பாடுவதையே பதினெட்டாம் நூற்றாண்டுவரை நாம் அனுமதித்ததில்லை. இலக்கியம், கலை பற்றி இன்றும் நம் மனதில் நீடிக்கும் பிம்பம் என்பது அந்த வாய்மொழிக் கலாச்சாரத்தில் இருந்து வந்தடைந்தது. நமக்குப் பிடித்ததைச் சொல்லி நம்மை மகிழ்விப்பவனே கலைஞன், கவிஞன் என நாம் நினைக்கிறோம். நமது பேச்சாளர்கள், கவியரங்கக் கவிஞர்கள் அந்த மனநிலைக்கு ஒத்துப்போகிறார்கள். ஆகவே அவர்களைக் கொண்டாடுகிறோம்.
எழுத்துப்பண்பாட்டில் வேரூன்றியது கிரேக்கக் கலாச்சாரம். வாய்மொழிப் பண்பாட்டில் இருந்து முளைத்த கிறிஸ்தவம் அங்கே சென்றபோது அதுவும் தன்னை எழுத்துப்பண்பாட்டுக்குள் செலுத்திக்கொண்டது. தொடர்ச்சியாக அந்த எழுத்துப் பண்பாட்டின் பரிணாமத்தை அங்கே பார்க்கலாம். அதன் இயல்புகள் என சிலவற்றை வரையறை செய்யலாம்.
இந்த எழுத்து மரபை கண்கூடாக நாம் பார்ப்பது கிரேக்கச் சிலைகளிலும் கிறிஸ்தவச் சிலைகளிலும். குறிப்பாக ரோமில் எங்கு பார்த்தாலும் தேவதைகளும் புனிதர்களும் நூலையோ, ஏட்டுச்சுருளையோ ஏந்தி நின்றிருக்கிறார்கள். கைகளால் நூலை சுட்டிக்காட்டுகிறார்கள். ‘இது எழுதப்பட்டுள்ளது’ என்ற அறிவுறுத்தல் எங்கும் தெரிந்துகொண்டே இருக்கிறது. அதுவே அது அதிகாரபூர்வமானது என்பதற்கான ஆதாரம். அந்த மனநிலையே எழுத்துவடிவப் பண்பாட்டின் அடிப்படையானது.
எழுத்துவடிவப் பண்பாடு கொண்ட ஐரோப்பாதான் ‘நவீன எழுத்தாளன், சிந்தனையாளன், கவிஞன், கலைஞன்’ என்னும் இன்றைய அடையாளத்தை உருவாக்கியது. இந்த அடையாளத்திற்கும் நம் மரபில் உள்ள கவிஞன், கலைஞன் என்னும் அடையாளங்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதை தெளிவாக வரையறை செய்துகொள்ளாமல் நாம் பேசவே முடியாது.
நம் மரபில் கவிஞர்கள், கலைஞர்களுக்கு இரண்டு வகை அடையாளங்கள்தான். மிக அரிதாகச் சிலர் தெய்வீக அடையாளம் அடைகிறார்கள். எஞ்சியோர் வெறுமே மகிழ்விப்போர், புகழ்வோர் ஆக நீடிக்கிறார்கள். குலப்பாடகர்கள், பூசாரிகள் என இரண்டு அடையாளங்கள் வாய்மொழி மரபில் உண்டு. அந்த அடையாளங்களின் மறுவடிவங்கள்தான் இவை இரண்டும்.
பூசாரி தெய்வத்துடன் நேரடியாகத் தொடர்புடையவன், தெய்வமே அவன் வழியாகப் பேசுகிறது, அவன் தெய்வீகமானவன். கவிஞர்களிலும் கலைஞர்களிலும் சிலர் அந்த அடையாளத்தை அடைகிறார்கள். திருவள்ளுவர் அல்லது சேக்கிழார் உதாரணம். எஞ்சியோர் புகழ்பாடிகள் மட்டுமே. தெய்வத்தன்மையை அடைபவர்கள் அதை பெரும்பாலும் மத அடையாளம் வழியாகவே அடைகிறார்கள். இன்றும் இந்த பேதம் உள்ளது. நம் பேச்சாளர்களில் புலவர் கீரனோ, சுகிசிவமோ புகழ்பாடிகள், பாணர்கள் மட்டும்தான். ஞானியார் சுவாமிகளோ, மறைமலையடிகளோ பூசாரிகள், தெய்வீகக்குரல் கொண்டவர்கள்.
ஐரோப்பிய மரபு கிரேக்க காலகட்டத்திலேயே ‘தத்துவஞானி’ என்னும் உருவகத்தை அடைந்துவிட்டது. தெய்வத்தன்மை ஏதும் ஏற்றப்படாமல், தன் சிந்தனையின் ஆற்றலாலேயே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துபவன் அவன். தொடர்ந்து வந்த கிறிஸ்தவ மரபில் கிறிஸ்தவத்தின் எல்லைக்குள் மட்டுமே தத்துவஞானிகளும் கலைஞர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் அந்த மதக்கட்டுப்பாடு உடையத் தொடங்கியது. சுதந்திரமான தத்துவசிந்தனையாளன், எழுத்தாளன், கலைஞன் என்னும் ஆளுமை உருவகங்கள் உருவாகி வந்தன.
இந்த ஆளுமைகளை உருவகம் செய்வது என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக ஐரோப்பாவில் நிகழ்ந்த ஓர் அறிவுச் செயல்பாடு. ரஸ்கின் எழுதிய Modern Painters போன்ற நூல்கள், பாஸ்வெல் எழுதிய Life of Samuel Johnson போன்ற வாழ்க்கை வரலாறுகள், எழுத்தாளனை கதைநாயகனாகக் கொண்ட ஏராளமான தொடக்ககால நாவல்கள் என அந்த உருவகத்தை நிறுவியவை பலநூறு நூல்கள்தான்.
அந்த அறிவியக்கம் எழுத்தாளன் என்பவன் தனித்தன்மை கொண்ட ஆளுமை என்றும், அவன் ஒருவகையான சமூக அன்னியன் என்றும், அவனுடைய இயல்பு சமூகத்துடன் ஒத்துப்போவது அல்ல சமூகத்துடன் முரண்படுவதுதான் என்றும், அவனுடைய மீறல்களும் கலகங்களுமே அவனை எழுதச்செய்கின்றன என்றும் நிறுவியது. சமூகத்திற்குப் பிடித்ததைச் சொல்பவன் அல்ல எழுத்தாளன், சமூகத்தை விமர்சிப்பவன் என்று நிலைநாட்டியது. எழுத்தாளனும் கலைஞனும் தத்துவஞானியும் சமூகத்தின் வழிகாட்டிகளே ஒழிய, சமூகத்தின் சார்பாக பேசும் பிரதிநிதிகள் அல்ல என்று விளக்கியது. அரசியல்வாதிகளோ ,அரசர்களோ ,மதகுருக்களோ அல்ல; உண்மையில் சமூகத்தின் சிந்தனையை உருவாக்குபவர்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களுமே என நிலைநாட்டியது.
எழுத்தாளன் , சிந்தனையாளன், கலைஞன் பற்றிய ஐரோப்பிய உருவகத்தை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம். ‘எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் சமூகத்திற்கு பிடித்தமானவர்களாக நடந்துகொள்ள வேண்டியதில்லை, சமூகம்தான் அவர்களைக் கவனித்து அவர்களின் சிந்தனைகளைப் பரிசீலித்து அவர்களை தொடர்ந்து செல்ல முயலவேண்டும். அவர்கள் சமூகத்திற்கு ‘சேவை’ செய்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் போக்கில் தங்கள் கலையையும் சிந்தனையையும் முன்னெடுப்பவர்கள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளால், எழுத்துக்களால் சமூகத்திற்கு உடனடியாக என்ன பயன் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு சிந்தனைக்கான வாய்ப்பு இருந்தால் ஒரு சிந்தனையாளன் அதை நிகழ்த்துவான். சில சமயம் அச்சிந்தனை அழிவை அளிப்பதாகக்கூட இருக்கலாம், அதை இன்னொரு சிந்தனை எதிர்த்து வெல்லும். ஆனால் சிந்திப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஒரு சமூகம் அதன் எழுத்தாளர்கள் வழியாக பரிசீலிக்கவேண்டும். Stem cell போல ஒரு சமூகத்தின் வளரும் விளிம்புதான் எழுத்தாளர்களும் கலைஞர்களும். அவர்களை சமூகம் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அவர்களை தங்கள் அப்போதைய தேவைகளை நிறைவேற்றவேண்டியவர்கள் என எண்ணக்கூடாது’
சமூகம் எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் தத்துவஞானிக்கும் சிந்திக்கவும், செயலாற்றவும் தேவையான சுதந்திரச் சூழலை அளிக்கவேண்டும். அவனை மதிக்கவும், சிந்தனையாளனாகவும் எழுத்தாளனாகவும் மட்டுமே அவன் தன் வாழ்வௌ அமைத்துக் கொள்வதற்கான அடிப்படைகளை அளிக்கவும் வேண்டும். இதெல்லாம் இருநூறாண்டுகளில் ஐரோப்பாவில் மெல்லமெல்ல நிறுவப்பட்ட மனநிலைகள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அங்கே ஏற்கனவே இருந்த எழுத்துப் பண்பாடு.
இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எழுத்தாளன் வசைபாடப்படுவதைப் பார்த்தாலே நம் சூழலில் இன்னமும் இந்தக் கருத்துக்கள் வந்தடையவில்லை என்பது தெரியும். ‘எழுத்தாளனால் சமூகத்திற்கு என்ன பயன்?’ ‘எழுத்தாளன் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும்’ ‘மக்களுக்குப் பயனுள்ளவற்றை எழுதவேண்டும்’ ‘எழுத்தாளனை சமூகம் கட்டுப்படுத்தவேண்டும்’ ‘எழுத்தாளன் வேலைசெய்து பிழைக்கவேண்டியதுதானே’ ‘எழுதி கல்லா கட்டுகிறான்’ என்றெல்லாம்தான் இங்கே குரல்கள் எழுகின்றன. இங்கே எழுத்தாளன் சமூகத்தைப் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என எண்ணுகிறார்கள். தங்கள் சாதி, மதம், அரசியல்தலைமை, தங்களுக்குப் பிடித்த நடிகன் ஆகிய எதை ஓர் எழுத்தாளன் விமர்சனம் செய்தாலும் கொதிக்கிறார்கள். எழுத்தாளன் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்து, தாங்கள் நம்புவதையே தானும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே கல்லூரிக்கல்வி பெற்றவர்கள்கூட எழுத்தாளனுக்கு தங்களைவிட கூடுதலாக ஏதேனும் தெரிந்திருக்கக்கூடும் என நினைப்பதில்லை. அவன் ‘கதை எழுதுறவன்’ அவ்வளவுதான். எழுத்தாளனை திருத்தியமைக்க, அவனுக்கு வழிகாட்ட, அவனுக்கு அறிவுரை சொல்ல அத்தனைபேருமே தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாமே பழைய வாய்மொழி மரபைச் சேர்ந்த மனநிலையில் இருந்து எழுபவை. அதாவது தொன்மையான பழங்குடி மனநிலையின் வெளிப்பாடுகள்.
ஆனால் பழைய வாய்மொழி மரபுக்கு, பழங்குடி மரபுக்கு, சில நம்பிக்கைகளும் சில அறங்களும் உண்டு. அவையும் இவர்களிடம் இல்லை. பழைய வாய்மொழி மரபு ‘சொல்வெளிப்பாடு’ கொண்டவனை, அதாவது ‘சரஸ்வதி கடாட்சம் கொண்டவனை’, அதாவது கலைஞனையும் எழுத்தாளனையும் அவமதிக்காது. அவன் ஏதாவது வசையாகவோ சாபமாகவோ சொல்லிவிட்டால் அது தீங்கு என நம்பும். ஒருபோதும் கலைஞனையும் எழுத்தாளனையும் கீழ்த்தரமாக வசைபாடாது. இன்று சமூக வலைத்தளங்களுக்கு வந்து எழுத்தாளனை வசைபாடும் கும்பலின் பெற்றோர் எவரும் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்கள் கூசாமல் செய்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாய்மொழிப் பண்பாட்டை இழந்துவிட்டவர்கள், எழுத்துவழிப் பண்பாட்டை கற்றுக்கொள்ளாதவர்கள்.
நான் மீண்டும் சொல்வது இதையே. நம் குடும்பங்களில், நம் சமூகச் சூழலில் இன்றும் நீடிப்பது நமது தொன்மையான வாய்மொழிப் பண்பாட்டின் மனநிலை மட்டுமே. அது எழுத்துக்கு எதிரானது. நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்து எதையாவது வாசித்தால் முதல் எதிர்ப்பு உங்கள் பெற்றோரிடமிருந்துதான் வரும், காரணம் இதுதான். ‘நமக்கு எதுக்கு அதெல்லாம், நாம நம்ம பொழைப்பைப் பார்ப்போம்’ என்னும் அணுகுமுறை அவருகளுடையது. உங்கள் நண்பர்கள் வாசிப்பை கேலி செய்வார்கள், ‘ஆமா பெரிய ஷேக்ஸ்பியர்’ என்பார்கள். ஆனால் மணிக்கணக்கில் காணொளிகளில் ஊறிக்கிடப்பார்கள். அதுதான் நம் வாய்மொழிப்பண்பாட்டு உளநிலை
நாம் அதில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். எழுத்துப்பண்பாட்டை, அதன் மனநிலைகளை நோக்கிச் சென்றே ஆகவேண்டும். வாய்மொழிப் பண்பாடு இலக்கியத்தை மரபான தெய்வீக வெளிப்பாடு அல்லது புகழ்பாடல் மரபு என்று மட்டுமே பார்ப்பது. நவீன எழுத்துப் பண்பாடு என்பது இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் வளரும் விளிம்பு என்று பார்ப்பது, அதற்கான சுதந்திரத்தை அளிப்பது. அந்த மனநிலை உருவானாலொழிய நம்மால் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை மதிக்க முடியாது. அந்த மதிப்பு இன்று தமிழில் அறவே இல்லை என்பதனால்தான் இங்கே வாசிப்பு என்பது இத்தனை குறைவாக இருக்கிறது. வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்மை பற்றிய குற்றவுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ இல்லை, மாறாக பெருமை உள்ளது. வாசிப்புக்கு எதிரான மனநிலை நம் சமூகம் முழுக்க உள்ளது.
நாம் நம் குழந்தைகளுக்கும் அந்த வாய்மொழிப்பண்பாட்டின் எழுத்து எதிர்ப்பு மனநிலையை புகுத்துகிறோம். நான் ஆச்சரியத்துடன் கவனிப்பது ஒன்று உண்டு, எழுத்துப் பண்பாட்டின் உச்சமான அமெரிக்காவில் குடியேறிய நம்மவர் அங்கேயும் இதே எழுத்துக்கு எதிரான மனநிலையுடன் நீடிக்கிறார்கள், அங்கும் வாய்மொழி மரபினரையே விருந்தினராக அழைத்துக் கொண்டாடுகிறார்கள், எழுத்தாளர்களை வசைபாடுகிறார்கள், பிள்ளைகளுக்கு எழுத்துப்பண்பாட்டை அறிமுகம் செய்ய மறுக்கிறார்கள். இந்த மனநிலையை நாம் கடந்தே ஆகவேண்டும்.
இந்தக் கருத்துக்களைச் சொல்லும்போது இவை வாய்மொழி மனநிலையில் ஊறிவந்தவர்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் எனக்குத் தெரியும். ஓர் எழுத்தாளன் தங்களை, தங்கள் பண்பாட்டையும் சமூகத்தையும் புகழ மறுக்கிறான் என்றே நினைத்துச் சீற்றம் கொள்வார்கள், வசைபாடுவார்கள்.தங்கள் மரபின் சில பெயர்களைச் சொல்லி தாங்கள் ஏற்கனவே பண்பாட்டின் உச்சத்தில் இருப்பதாக கூச்சலிடுவார்கள். பண்பாட்டின் அடிப்படை அறிந்தவன் எழுத்தாளனை வசைபாட மாட்டான் என்றுகூட அவர்களிடம் சொல்ல முடியாது. நான் இதை எழுதுவது இன்று கொஞ்சம் எழுத்துமரபுக்குள் வந்துவிட்ட, கொஞ்சம் ஐரோப்பிய எழுத்துப் பண்பாட்டின் சாயலை அடைந்துவிட்ட சிறுபான்மையினரிடம்தான். இங்கே என்ன நிகழ்கிறது என்று அவர்கள் அறிந்துகொள்ளவும், இங்கிருந்து முன்னே செல்லவேண்டிய திசையை அறியவும் அவர்களுக்கு இவ்விவாதம் உதவலாம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
