காவியம் – 56

நடனமங்கை.(அப்சரஸ்) சுடுமண், மதுரா அருங்காட்சியகம். சாதவாகனர் காலம். பொயு1

கானபூதி சொன்னது. “நான் குணாட்யரிடம் இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் உற்றுநோக்குவதாக எண்ணி ஒருவரை ஒருவர் உருவாக்கிக் கொண்டிருந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். மனிதர்களில் மிகச்சிலரே வாழ்கிறார்கள். எஞ்சியோர் வாழ்க்கையை நடிக்கிறார்கள். பிறன் என ஒருவர் எண்ணத்திலேயே இல்லாமல் தனக்கென ஒரு வரையறையை உருவாக்கிக்கொண்டவன் மட்டுமே வாழ்கிறான். அவன்  முற்றிலும் தனித்தவனாகவும் இருக்கிறான்.”

கானபூதி தொடர்ந்தது. ஒருநாள் அஸ்வத் பிரகாஷிடம் ”நான் ஒரு ஜோதிடரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான்.

“ஜோதிடரையா எதற்காக?” என்று பிரகாஷ் கேட்டான்.

”நீ இந்தக்கதையில் எழுதியது போல எனக்கு என்றாவது ஒரு மீட்பு இருக்குமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

”அப்படியென்றால் வீழ்ந்திருக்கிறாய் என்றுதானே நீ நினைக்கிறாய்?” என்று பிரகாஷ் கேட்டான்.

”வீழ்ந்திருப்பதாக நினைக்கவில்லை. இப்போது ஒருவகையான யதார்த்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு வகையான யதார்த்தம் தேவைப்படுகிறது. இதே யதார்த்தத்திலேயே நான் சுற்றிச் சுற்றி வாழ்ந்தேன் என்றால் சீக்கிரமே இது சலித்துவிடும். அத்துடன் இப்போது எனக்கு சமூகக்கௌரவம் என்று எதுவுமில்லை. என்னுடைய அப்பாவின் நிழலில்தான் நான் இருக்கிறேன். அப்பாவுக்கு பிறகு எனக்கென்று ஒரு சமூகக்கௌரவம் வரும்போது இப்படி ஒரு பின்னணி எனக்கிருந்தால் என் மேல் மதிப்பு கொள்ளமாட்டார்கள். எனக்கு சமூகத்தில் ஒரு கௌரவமான இடமும் தேவை என்றுதான் உறுதியாக நம்புகிறேன்.”

”அதாவது அழகான தேவதையை திருமணம் செய்து கொண்டு தேவனாக வாழவேண்டும் என்று நினைக்கிறாய் சரிதானே…” என்றான் பிரகாஷ்.

”ஆமாம், அவள் என்னை மீட்க வேண்டும். என்னை தன் கைக்குள் வைத்திருக்கவேண்டும். அவள் சொன்னதையெல்லாம் நான் கேட்கவேண்டும். அவளுடைய கணவன் என்று நான் எங்கு சென்றாலும் என்னை அனைவரும் திகைப்புடனும் மதிப்புடனும் பார்க்க வேண்டும். அதுதான் என்னுடைய கற்பனை” என்று அஸ்வத் சொன்னான்.

”அது நிகழுமா என்று நீ சோதிடரிடம் கேட்க விரும்புகிறாய் இல்லையா?” என்றான்.

”ஆமாம் உனக்கு ஏதாவது சோதிடரை தெரியுமா?” என்று அஸ்வத் கேட்டான்.

”நான் விசாரித்துச் சொல்கிறேன். இங்கே நல்ல சோதிடர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்று பிரகாஷ் சொன்னான்.

அவன் விசாரித்துச் சொன்ன சோதிடர் விஸ்வேஸ்வர் சர்மா பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் அப்பால் ஒரு சிறிய ஊரில் வாழ்ந்தார். பசுக்களும் மாட்டுவண்டிகளும் டிராக்டர்களும் நின்ற தெருவழியாகச் சென்று, முன்பக்கம் பெரிதாக அஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்ட அவருடைய இல்லத்தை அடைந்தனர். காலை வெயில் ஏறியிருந்தது. அவரைப் பார்க்க வந்தவர்கள் விடியற்காலையிலேயே வந்து சென்றிருந்தார்கள்.  விஸ்வேஸ்வர் சர்மா அவர்களின் அழைப்பை கேட்டு வெளியே வந்தார். பிரகாஷ் அவனுடைய நண்பரிடமிருந்து அவருக்கு கொண்டு வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தை அளித்தான். அவர் வாசித்துவிட்டு அங்கே கயிற்றுக் கட்டிலில் அமரச்சொன்னார். இன்னொரு கயிற்றுக்கட்டிலில் அவர் அமர்ந்தார்.

அவர்கள் இருவரும் தங்களுடைய ஜாதகத்தின் நகல்களை குறித்துக்கொண்டு வந்திருந்தார்கள். அதை அவரிடம் கொடுத்தபோது அவர் அவற்றை வாங்கி படிக்காமலேயே எடுத்துக்கொண்டு சென்று அந்த வீட்டின் முகப்பில் இருந்த திண்ணையில் பூஜைப்பகுதி போல் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சந்தனக்கட்டையாலான மணையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அந்த இரு ஜாதகக் குறிப்புகளையும் தன் முன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான தெய்வப்படங்களுக்கு முன்னால் ஒரு தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அரிசி, மலர்கள் ஆகியவற்றின் மேல் வைத்தார். ஏற்கனவே அங்கு விரிவான பூஜை நடந்திருந்தது. தூபம் கனன்று சுருள் சுருளாக புகை எழுந்து கரைந்து வந்துகொண்டிருந்தது.

சர்மா உதடுகளை மட்டுமே வேகமாக அசைத்து ஏதோ மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். விரல்களை வீணை வாசிப்பது போல அசைத்து, எதையோ எண்ணுபவர் போலவோ காற்றை அளைபவர் போலவோ செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர். பிரகாஷ் ஆர்வமில்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் அஸ்வத் நெஞ்சுமேல் குவித்த கைகளுடன் பணிவாக அமர்ந்திருந்தான்.

சுவரில் இருந்த படங்களில் சிவன், விஷ்ணு, பிள்ளையார், காலபைரவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, காளி, ஷிர்டி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர் என எல்லா வகையான தெய்வங்களும், புனிதர்களும் இருந்தனர். பெயர் தெரியாத மேலும் பல பாபாக்களின் படங்களும் இருந்தன. விஸ்வேஸ்வர் சர்மா கண்களைத் திறந்து எழுந்து வந்தபோது அவர் முகம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து முற்றிலும் விழிக்காதவர் போல் இருந்தது.

அவர் அருகே வந்து மீண்டும் அமர்ந்தபடி அந்த ஜாதகத்தை புரட்டி பார்த்தார். ஒரு சிறு பென்சிலால் ஒரு தாளில் நிறைய குறிப்புகள் எடுத்தார். அந்தக் குறிப்புகள் எல்லாமே எண்களாக இருப்பதை அஸ்வத் கவனித்தான். அந்த எண்களை ஒன்றோடொன்று கூட்டி, அவற்றை கழித்து, அதன்பிறகு ஜாதகக் குறிப்புகளை அந்த தாளையும் சுருட்டி கொண்டு சென்று அப்பால் வைக்கப்பட்டிருந்த இரும்பாலான கனல் சட்டி ஒன்றில் போட்டார். பசுக்களுக்கு பூச்சி கடிக்காமல் இருப்பதற்கான சாம்பிராணிப் புகை அதிலிருந்து எழுந்துகொண்டிருந்தது. தாள்கள் விழுந்ததுமே அதில் அனல் பற்றிக்கொண்டு எரிந்து, அணைந்து, கரிய புகைவந்து, மீண்டும் சாம்பிராணி வாசனை எழத் தொடங்கியது.

தன் ஜாதகக் குறிப்புகள் எரிவதை அஸ்வத் திகைப்புடன் பார்த்தான். விஸ்வேஸ்வர் சர்மா அஸ்வத் முகத்தைப் பார்த்து ”மனைவி வருவாள், நீ  எண்ணுவது போலவே இருப்பாள்” என்றார்.

அஸ்வத்தின் முகம் மலர்ந்தது.

அவர் ”ஆனால் உன்னுடைய ஜாதகம் காட்டுவது உன்னுடைய பெரிய கதையை. இங்கே ஒருவருடைய கதை என்பது ஒரு கதை அல்ல. இங்கே நாம் அமர்ந்திருக்கிறோம். இது என்னுடைய வீடு. ஆனால் இந்த வீட்டுக்கு வலப்புறம் கிஷன் தேஷ்பாண்டேயின் வீடு இருக்கிறது. இடதுபக்கம் பிரதாப் பாண்டேயின் வீடு இருக்கிறது. அதற்கப்பால் இன்னும் வீடுகள் இருக்கின்றன. இந்த வீடு ஒரு கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறது. இந்த ஆறு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களை இணைக்கிறது” என்றார்.

“சரி, இந்த வீடு இருக்கும் இந்த இடத்தை எடுத்துக்கொண்டால் இந்த வீட்டை எனது முப்பாட்டா கட்டுவதற்கு முன்பு இங்கே ஒரு பிராமணர் குடிசை போட்டு தங்கியிருந்தார். அவருக்குமுன் இங்கு யாரோ தங்கியிருக்கலாம். அதற்குமுன் இது காடாக இருந்திருக்கலாம். அந்த மரங்களில் குரங்குகளும் பிற விலங்குகளும் வாழ்ந்திருக்கலாம். பாம்புகள் வாழ்ந்திருக்கலாம். அதற்கும் முன் இங்கு வேறேதோ இருந்திருக்கலாம். இனி இந்த வீடு எவ்வளவு காலம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது இடிந்து இங்கு வேறொரு வீடு வரலாம். அங்கு வேறொருவர் தங்கலாம். எப்படிப்பார்த்தாலும் வாழ்க்கையின் ஒரு புள்ளி எல்லாப் பக்கமும் தொடர்பு கொண்டிருக்கிறது” என்று அவர் அவர்களை தன் பெரிய கண்களை அகல விழித்து உற்றுப்பார்த்தபடிச் சொன்னார்.

“ஜோதிடத்தின் பிரச்னையே ஒரு புள்ளியைத் தொட்டதுமே எல்லாப் பக்கமும் திறந்துகொள்ளும் என்பதுதான். அப்படித் திறந்து கொள்வனவற்றில் எந்தப்பகுதியை ஜோதிடம் கேட்க வருபவனுக்கு சொல்லவேண்டும் என்பதில்தான் ஜோதிடனின் திறமையும் மனப்பக்குவமும் உள்ளது. எல்லாவற்றையும் சொல்லக்கூடியவர்கள் நிறைய தருணங்களில் மோசமான சோதிடர்களாக தோற்றுப்போகிறார்கள். தேவையானவற்றை மட்டும் தேவையானபடி சொல்லும் சோதிடர்கள் தான் பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றார் சர்மா.

”நான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று அஸ்வத் சொன்னான்

”நான் எல்லாவற்றையும் சொல்ல விரும்புவதில்லை” என்று விஸ்வேஸ்வர் சர்மா புன்னகை இல்லாமல் சொன்னார். ”நான் ஒரு மனிதன் எப்படி முன்னால் செல்லலாம், வாழ்க்கையின் அடுத்த அடியை எப்படி வைக்கலாம், அதில் எதை கவனிக்க வேண்டும் என்பதைத் தவிர எதையுமே சொல்வதில்லை. நேற்று நடந்ததை தெரிந்து கொள்வதற்காக இங்கு வருவார்கள். அதை நான் சொல்ல மாட்டேன். நாளை என்னென்ன நடக்குமென்று கேட்பதற்காகவும் வருவார்கள். அதையும் நான் சொல்வதில்லை. நீங்கள் இங்கிருந்து சென்றதுமே உங்களைப்பற்றிய எல்லா நினைவையும் இந்தக் காகிதங்களை எறிந்ததுபோல இந்த தீயிலே எறிந்து மறந்துவிடுவேன். இல்லையென்றால் நானும் இங்கு வாழமுடியாது” என்றார்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அஸ்வத் கேட்டான்.

விஸ்வேஸ்வர் சர்மா “நெடுங்காலம் முன்பு நடந்த ஒரு கதை இது…” என்றார். ”நெடுந்தூரத்தில் ஒரு நகரம். அந்த நகரத்தில் ஒரு வெற்றித்தூணை அந்தக் கால அரசர் ஒருவர் உருவாக்கினார். அவர் தென்திசை சென்று வென்று வந்ததற்கான புகழ் அந்தத் தூண் வழியாக காலகாலமாக நிலைகொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அந்தத் தூணை எத்தனை முயன்றாலும் மண்ணில் நிறுத்த முடியவில்லை அது ஒவ்வொரு பக்கமாக சரிந்துகொண்டே இருந்தது. அங்கே அரசவையில் ஒரு ஜோதிடர் இருந்தார். அந்த ஜோதிடர் அவருக்கொரு ஆலோசனை சொன்னார். நூற்றெட்டு மனித உயிர்களை பலி கொடுத்து அந்த ரத்தத்தால் அந்தத் தூணைக் கழுவினால் அந்தத் தூணில் ஒட்டியிருக்கும் தீய தேவதைகள் எல்லாம் அமைதியடையும், ஆயிரமாண்டுக்காலம் அவை வெளியே வரவே வராது என்றார்.”

அந்த தூணில் செதுக்கப்பட்டிருந்தவை பூதகணங்கள், பைசாசங்கள் போன்ற பாதாள தேவதைகள். ”அவை இங்கே நமக்கு முன்னரே இருந்துகொண்டிருந்தன. அவற்றுக்கும் நம் உலகுக்கும் தொடர்பில்லை. ஆனால் அவற்றுக்கு நாம் கல்லில் உருவம் கொடுத்த உடனே அவை நம் உலகுக்குள் வந்துவிட்டன. நம்மைப்போலவே தாகமும் பெற்றுவிட்டன. அவற்றுக்கு தாகசாந்தி செய்யாமல் அந்தத் தூணை நிறுத்தமுடியாது” என்றார் ஜோதிடர் .

அரசர் “நூற்றெட்டு பேரின் ரத்தம் தானே? இந்தபோரில் நாம் நாற்பதாயிரம் பேரை களப்பலி கொடுத்தோம். உடனே நூற்றெட்டு வீரர்களை கூட்டி வாருங்கள்” என்றார்.

அமைச்சர் ”நூற்றெட்டு வீரர்களை அப்படி பலிகொடுக்கமுடியாது” என்று தயங்கினார். ”போர்க்களத்தில் ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் சாகலாம். ஆனால் அது வீரம். விலங்குகளைப் போல வீரர்களை பலிகொடுத்தால் பிற வீரர்கள் மனச்சோர்வு அடைவார்கள். நம்மீது அவர்களுடைய நம்பிக்கை இல்லாமலாகும். அரசனுக்காக உயிர்கொடுப்பேன், அது எனக்கு வீரன் என்ற பெயரையும் சொர்க்கத்தையும் அளிக்கும் என்று ஒவ்வொரு வீரனும் நினைக்கும்போதுதான் ஓர் அரசு வாழும். அரசன் விரும்பினால் விளையாட்டுக்குக் கூட தன் உயிரை எடுப்பான் என்று ஒரு படைவீரன் நினைத்தானென்றால் அந்தப்படை தன் அடிப்படையான நம்பிக்கையை இழக்கிறது. அதை ஒருபோதும் செய்யக்கூடாது” என்றார்.

“சரி, அப்படியென்றால் நூற்றெட்டு சிறைக்கைதிகளை கொண்டு வாருங்கள்” என்றார் அரசர்.

“சிறைக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் நமது ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல. பலர் கொடும் குற்றவாளிகள். தீராத நோயாளிகளும் அவர்களில் உண்டு. அங்கக்குறைவு இல்லாதவர்களும் அவர்களில் மிகக் குறைவு. அவர்களைத் தேர்ந்தெடுத்து பலிகொடுப்பது சரியல்ல. அவர்களின் ஆவிகள் இங்குதான் இருக்கும். தூய மனிதர்களைத்தான் நாம் தெய்வங்களுக்கு பலிகொடுக்க முடியும். ஏற்கனவே கீழ்மையில் உழல்பவர்களை அல்ல” என்று அமைச்சர் சொன்னார்.

”வேறென்ன செய்வது? நூற்றெட்டு குடிமக்களை நமது நாட்டிலிருந்து பிடித்து வரப்படலாம்” என்றார் அரசர்

”சாதாரணகுடிகள் அரசன் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். தங்களை அரசன் காப்பாற்றுவான் என்று அவர்கள் நினைக்கவேண்டும். நூற்றெட்டு பேரை இழுத்து வந்து பலிகொடுத்தால் அது ஒரு கதையாக மாறும். அந்தக் கதை தலைமுறை தலைமுறைகளாக நீடித்து அரசன் மேல் நம்பிக்கை இல்லாமல் செய்யும். ஒருபோதும் எளிய மக்கள் தங்களை அரசன் பலிகொடுக்கிறான் என்ற எண்ணத்திற்கு வரக்கூடாது. அதன் பிறகு எந்த ஒரு நோயோ, விபத்தோ, போரோ நிகழ்ந்தாலும் அரசர் தங்களை சாகவிட்டுவிட்டார் என்றுதான் இந்த மக்கள் நம்புவார்கள். ஒரு சிறு அச்சம் உருவானாலே கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுவார்கள்”

”பிறகு என்ன தான் செய்வது?” என்று அரசன் சீற்றத்துடன் கேட்டான்.

”நூற்றெட்டு சமர்களை பலி கொடுக்கலாம்” என்றார் அமைச்சர்.

”அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லவா ?” என்று அவர் கேட்டார்.

”ஆமாம் ஆனால் அவர்களை நல்ல நீராட்டி, தூய்மைச் சடங்குகள் செய்து,  நகரத்துக்குள்ளே கொண்டு வரலாம். அவர்களை சமர்களாக்கியது அரசாணைதான். அவர்களை தூயவர்களாக்குவதற்கும் அரசாணை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் ஆக்கியது புரோகிதர்களின் சடங்கு. அதே போன்ற புரோகிதர்களின் சடங்கு அவர்களை தீண்டக்கூடியவர்களாக ஆக்கலாம். அவர்களை பலிகொடுக்கலாம். பலிகொடுக்கப்பட்டவர்கள் சமர்களல்லாமலாகி மோக்ஷத்தை அடைந்தார்கள் என்று சொல்லலாம். சமர்களுக்கும் அது மிகப்பெரிய விடுதலையாக இருந்தது அமைந்தது என்றும் சொல்லலாம்” என்றார் அமைச்சர்.

அரசன் யோசித்தான்.

“சோதிடப்படி சமர்களிலேயே மிகச்சிறந்தவர்களான நூற்றெட்டு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஷத்ரியர்களாக மாற்றித்தான் அந்தப் பலி கொடுக்கப்பட்டது என்றும் நிறுவலாம். அந்தச் சமர்களை தெய்வங்களே தேர்ந்தெடுத்தன என்றும் சொல்லலாம். சமர்களே அதை காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கும் நாம் விடுதலை அளித்ததாகவே நமது குடிகளும் நினைப்பார்கள். எல்லாவகையிலும் இது சிறந்தது” என்று அமைச்சர் சொன்னார்.

“ஆம், அது நல்ல யோசனைதான்” என்று அரசன் சொன்னான்.

விஸ்வேஸ்வர சர்மா அஸ்வத்திடம் சொன்னார் ”அவ்வாறு நூற்றெட்டு சமர்கள் பலிகொடுக்கப்பட்டனர். அந்தத் தூண் இங்கு எங்கோ இன்னும்கூட நின்றுகொண்டிருக்கிறது. அது விழுந்துவிட்டிருந்தால் பிரச்சினை இல்லை, அது முடிந்த கதை. ஆனால் அது நின்றிருக்கிறது”

அந்தக்கதையை ஏன் அவர் தன்னிடம் சொல்கிறார் என்று தெரியாமல் அஸ்வத் கைகளை ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தபடி கேட்டிருந்தான்.

”அன்று அவ்வாறு அரசனுக்கு சோதிடம் உரைத்தவர் ஒரு பிராமணர். அவர் பெயர் என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் மீது நூற்றெட்டு சமர்களின் சாபம் விழுந்திருக்கிறது. அந்த பிராமணர் திரும்பத் திரும்ப இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் உயர்குடியில் பிறந்து, கீழ்மை நோக்கிச் சென்று, கீழ்மையிலேயே மறைந்து கொண்டிருக்கிறார். பிறவிபிறவியாக நிகழ்கிறது இது. பெருங்கலைகள், உயர்ந்த இலக்கியங்கள், மெய்ஞானம் அனைத்தையும் தேடிச் செல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில்தான் அவர் பிறக்கிறார். குறைவற்ற செல்வம் கொண்டவராகவும் இருக்கிறார். ஆனால் எதுவுமே அவருக்குப் பயன்படுவதில்லை. அவர் சென்று பொருந்துவதற்கு கீழ்மைதான் உகந்ததாக இருக்கிறது. கீழ்மை தவிர எதிலும் அவருக்கு ஆர்வமில்லை”

“ஏனெனில் அந்த சோதிடர் வேறு குடியில் பிறந்து உயர்ந்த பண்பாட்டை கற்று மிக உயர்ந்த இடத்தில் இருந்தபோது கூட தன் ஓர் ஆழத்தில் ஒரு ரகசிய ஆசையாக கீழ்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அது வேறெவருக்குமே தெரியாது. மிக அணுக்கமானவர்களிடம் கூட அவர் சொன்னதில்லை. ஆனால் அவருடைய தனிப்பட்ட பகற்கனவுகள் எல்லாமே கொடியவையும் இருண்டவையுமாக இருந்தன. அவர் சமர்களை வெறுத்தது அதனால்தான். அவர் உண்மையில் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் வாழும் அழுக்கான உலகிற்கு சமானமான ஒன்றில்தான் அவர் உள்ளம் தடையின்றி திளைத்தது. அதனாலேயே அவர் அவர்களை வெறுத்தார். அந்தத் தருணத்தில் அப்படி ஒன்றை சொல்வதன் வழியாக தனக்கு ஒரு தூய்மை அடையாளம் கிடைக்கும் என்று எண்ணினார்” விஸ்வேஸ்வர் சர்மா தொடர்ந்து சொன்னார்.

“எந்தவகையிலும் அவருடைய அந்தரங்கத்தை இன்னொருவர் அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தும் கூட, எங்கோ எப்போதோ எவரோ அதை அறிந்துகொள்வார் என்று அவர் நினைத்தார். ஒருவர் தன் கண்களைப் பார்த்து பேசினாலோ, தன் முகம் பார்த்து சற்றே புன்னகைத்தாலோ, அவருக்குள் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. தன்னை அவர் அறிந்துகொண்டாரா என்று பலமுறை சோதித்து இல்லையென்று உறுதி செய்துகொள்வது வரை அவர் பதற்றம் அடைந்துகொண்டிருந்தார். உறுதி செய்துகொண்டபிறகும் கூட மெல்லிய சந்தேகம் நீடித்தது. ஆகவே தூய்மையில் வெறிகொண்ட அந்தணர் ஒருவர் என்று அவர் தன்னை காட்டிக்கொள்ள விரும்பினார். அவ்வாறுதான் பலிகொடுப்பது பற்றிய அந்த ஜோதிடத்தை அவர் சொன்னார்”

சர்மா தொடர்ந்தார். ”ஒருவரின் மறுபிறப்பென்பது அவருடைய உள்ளிருக்கும் மறைமுக ஆசைக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுவதுதான். அவர் மேல் நூற்றெட்டு சமர்களின் சாபம் விழுந்திருக்கிறது. அந்த சாபம் அவரை தட்டி ஒரே குழியில் விழவைக்கிறது அதிலிருந்து அவ்வளவு எளிதாக மீளமுடியாது”

பிரகாஷ் அமைதியிழந்து அசைந்தான்.

சர்மா அஸ்வத்திடம் “ஆனால் இத்தனை தொலைவு தேடி வந்து என்னிடம் இதை கேட்கும் எண்ணம் உனக்கு வந்ததே ஒருவேளை இப்பிறப்பில் அந்த மீட்சியை நீ தொடங்கிவைக்கலாம் என்பதனாலாக இருக்கும். இவ்வளவு தொலைவுக்கு நீ சென்றுவிட்டது அந்த சாபத்தால்தான். ஆனால் இனிமேல் நீ மீள முடியும். சற்றும் சபலமற்ற உறுதியுடன் எஞ்சிய வாழ்க்கையை நீ கழிப்பாய் என்றால் உன்னால் மீண்டுவிட முடியும்” என்றார்.

அஸ்வத் ஒன்றூம் சொல்லவில்லை. பிரகாஷ் ”அவன் செய்வான். அவன் அதற்காகத்தான் வந்திருக்கிறான்” என்றான்.

”உனக்கு நீ விரும்பியது போல மனைவி அமைவாள். அவளை நீ உனது மீட்புக்கான தேவதையாகக் கொண்டால் தலைமுறை தலைமுறையாக பிறந்து பிறந்து நீ திளைத்துக் கொண்டிருக்கும் இந்த சேற்றிலிருந்து நீ விடுபடமுடியும்” என்றார் விஸ்வேஸ்வர் சர்மா. ”மலத்தில் தவறுதலாக முட்டை போட்டுவிட்ட பட்டாம்பூச்சியின் புழு மலப்புழுவாக வளர்வதைப் போலத்தான் இது. அதற்கு சிறகு முளைத்தால் அது பறந்து எழுந்துவிட முடியும்.”

அவருக்குரிய தட்சிணையை கொடுத்துவிட்டு இருவரும் திரும்பிவரும்போது வெகுநேரம் பேசமுடியவில்லை.

சட்டென்று அஸ்வத் உரக்க சிரித்து ”அவர் சொன்ன ஓர் உவமை நன்றாக இருந்தது” என்றான். ”மலப்புழுவுக்குச் சிறகு முளைப்பது…”

பிரகாஷ் ”அவர்கள் இது போன்று நினைவில் நிற்கும் எதையாவது சொல்ல விரும்புவார்கள்” என்றான்.

அஸ்வத் சிரித்து “அவர் சொன்னதில் எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்றுதான். ரகசிய ஆசைதான் ஒருவனை மறுபிறப்புக்கு ஆளாக்குகிறது என்றால் அடுத்தபிறவியில் நீ நான்தான்” என்றான்.

பிரகாஷ் ஒன்றும் சொல்லவில்லை மென்மையாக புன்னகைத்தான். அஸ்வத் அந்த நிலைகுலைவை சிரித்தும் கேலி செய்தும் கடந்து செல்ல விரும்புகிறான் என்று அவனுக்குத் தெரிந்தது. அந்த பயணம் முழுக்க அஸ்வத் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டே இருந்தான். ஆனால் அந்த நாளுக்குப் பின் அவர்களின் நெருக்கம் மறைந்துவிட்டது. சந்திக்கும்போது பொதுவாகப் பேசிக்கொண்டார்களே ஒழிய சேர்ந்து அமர்ந்து உரையாடும் தருணத்தையே தவிர்த்தார்கள்.

கல்லூரி முடித்தபின் பிரகாஷை அஸ்வத் சந்திக்கவில்லை. அவன் போலீஸ் அதிகாரியாகி, திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையில் நெடுந்தொலைவு சென்றபிறகு ஒருமுறை பிரகாஷை ஒரு  கிராமத்தில் பள்ளி ஆசிரியராக சந்தித்தான். பிரகாஷ் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். நாற்பது வயதிலேயே ஐம்பது வயதான உடல் தோற்றம் அவனுக்கு வாய்த்திருந்தது. நெற்றியில் நீண்ட திலகமும், கன்னங்களில் நெடுங்காலம் பீடாபோட்ட உப்பலும் இருந்தன. தடித்த கண்ணாடி போட்டிருந்தான். தோள்கள் முன்னால் வளைந்து, தொந்தி போட்டு, நடக்கும்போது ஒரு கூனல் விழுந்தது.

சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு அவ்வழியே காரில் கடந்து சென்ற அஸ்வத்தால் பிரகாஷை அடையாளம் காண முடியவில்லை. தாண்டிச்சென்றபிறகு தான் அது யார் என்று தெரிந்தது. காரை பின்னால் எடுக்கச் சொல்லி,  வந்து இறங்கி ”நீ பிரகாஷ் தானே?” என்று கேட்டான்.

பிரகாஷ் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டு ”ஆ! நீயா?” என்றபின் தன் பிள்ளைகளைக் காட்டி ”என்னுடைய குழந்தைகள்” என்றான். “நமஸ்காரம் சொல்” என்று குழந்தைகளிடம் சொல்ல அவை கண்களைச் சுருக்கியபடி முனகின.

”வா, உன்னைப்பார்த்து நெடுங்காலம் ஆகிறது. உனக்குத் திருமணம் அழைப்பிதழ் அனுப்புவதற்காக உன் ஊருக்கு ஆளனுப்பியிருந்தேன். அங்கே யாருமில்லை என்று சொன்னார்கள்”

“ஆமாம், கடை நொடித்து போய் அப்பாவும் நானும் கிளம்பிவிட்டோம். நல்லவேளையாக எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது, இப்போது நன்றாக இருக்கிறோம்” என்றான் பிரகாஷ்.

அஸ்வத் அவர்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு ஒரு காப்பி சாப்பிட்ட பிறகு, பிரகாஷை தன்னுடன் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த தங்கும் விடுதிக்கு சென்று அங்கு இரவு ஆகும் வரை பேசிக்கொண்டிருந்தான்.

”நீ எண்ணியது போல உனக்கு ஒரு அழகான தேவதை வந்துவிட்டாள்” என்று பிரகாஷ் சொன்னான். “சோதிடம் பலித்தது. அன்றைக்கு அது ஒரு சாபம் போல் இருந்தது…”

அஸ்வத் “உன்னை கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்றான்.

”நம்முடன் படித்த பிரஜ்நாத் போஸ் என்னிடம் உன் திருமணம் பற்றிச் சொன்னான். மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் வரமுடியாத நிலை அப்போது” என்றான். “தேவதை வரவேண்டும் என்று விதியிருந்தால் வருவாள்”

சற்று நேரம் யோசித்த பிறகு அஸ்வத் ”தேவதை வந்தது உண்மைதான் ஆனால் தேவதையை என்னால் அணுக முடியவில்லை. நான் அவ்வளவு தூரம் என்னை இறுக்கிக் கொண்டுவிட்டேன். தேவதையை காமம் வழியாக அணுக முடியாது. காமமன்றி வேறொன்று எனக்குத் தெரியவும் தெரியாது” என்றபின் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபின் “ஒரு தேவதையை மிக எளிதாக பிசாசாக ஆக்க முடியும் என்று கண்டு கொண்டேன்” என்றான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.