நம்மைச்சுற்றி புன்னகை.
இரு சந்திப்புகளில் இரு கேள்விகள் நினைவுக்கு வருகின்றன. 1986 ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் கேட்டார். “போஸ்டர்லாம் படிப்பீங்களா?”
நான் “ஆமாம், போஸ்டர் போர்டு ஒண்ணையும் விடமாட்டேன். சின்னவயசிலே இருந்தே பழக்கம். இப்ப தனியா அதுக்காக மெனெக்கெட வேண்டாம். கண்ணு பராக்கு பாத்திட்டேதான் இருக்கும். சிரிக்கிறதுக்கு உண்டான ஒண்ணையுமே தவறவிடமாட்டேன்”
“எழுத்தாளன் ஆகிறதுக்கான முதல் தகுதி அது. கூடவே வித்தியாசமான எது காதிலே விழுந்தாலும் பதிவு பண்ணிக்கிடுறது… சமீபத்திலே அப்டி என்ன கேட்டீங்க?”
“சார், இப்ப இங்க நடந்து வாறப்ப ஒருத்தன் சொன்னான், ‘பணக்காரன் குண்டியக் காட்டினா அத கன்னம்னு நினைச்சுக்கிட்டாப் போரும்’னுட்டு… சிரிச்சுட்டேதான் வந்தேன்”
சுரா வெடித்துச் சிரித்துவிட்டார். “அபாரமான survival strategy யா இருக்கே”
பின்னர் 1995ல் சுஜாதாவைச் சந்தித்தேன். அவர் கேட்டார், “விளம்பரங்களை எல்லாம் படிப்பீங்களா?”
“ஆமா” என்றேன். “இப்பகூட சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவங்களோட தலைமுறைச் சண்டைய பாத்துக்கிட்டேதான் வந்தேன்” அவருக்குப் பரிசாக ‘மலையாள இட்சிணி வசிய தந்திரக்கலை’ என்ற நூலை பழைய நூலை கொண்டுசென்றிருந்தேன்.
“இதெல்லாம் படிப்பீங்களா?” என்றார்
“அப்டி தனியா ஆர்வமில்லை. ஆனா எல்லாத்திலேயும் ஆர்வம் உண்டு” என்றேன்.
சிரித்து “எல்லாத்தையும் பாக்கற கண்ணுதான் எழுத்தாளனோட அஸெட். வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சாப் போதும். வெளியுலகத்தை எழுதிரலாம்…” என்றார்.
என் இயல்பே வேடிக்கை பார்ப்பதுதான். இன்னது என்றில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பேன். ஆகவே ஏதாவது கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கும். விந்தையான எழுத்துப்பிழைகள். அசாதாரணமான அறிவிப்புகள். சாலைகளில் நடப்பவற்றை கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் அவற்றில் முடிவில்லாத வேடிக்கைகள் உண்டு. நான் நிறையவே எழுதியிருக்கிறேன்.
பார்வதிபுரம் வழியாக விடியற்காலையில் நடை. ஒரு போர்டு. Seconedend phone available. அதென்ன? ஹை எண்ட் கார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஹை எண்ட் செல்போன் உண்டா? இது இரண்டாம் வகையா? நானறியாத புதிய மொழி நாகர்கோயிலில் சந்தடிசாக்கில் உருவாகிவிட்டதா? இத்தனைக்கும் ஒருவாரம் வெளியே போய்வந்தேன், அவ்வளவுதான்.
நாகர்கோயிலில் கடைப்பெயர்களே விந்தையானவை. El Shadai என்று ஒரு கடைக்கு பெயர். இணையத்தில் தேடினால் ஸ்பானிஷ் மொழியில் கடை என்று பொருள். ’பாரேரிபொரம் சங்சன்’ எப்போது லத்தீனமேரிக்கா தொடர்பை அடைந்தது? மாய யதார்த்தம்தான் என்றாலும் ஒரு மரியாதை வேண்டாமா?
பார்வதிபுரத்தில் இப்போது நான் அதிகாலை டீ குடிக்கும் கடைக்குப் பெயர் Under de Bridge. பிரெஞ்சு நெடி. ஸ்பானிஷே வந்தபின் பிரெஞ்சுக்கு என்ன? (பழைய கருப்பட்டிக் காப்பிக்கடையில் ஒரு புதிய டீ மாஸ்டர் ஆட்டுக்காம்பை பிழிவதுபோல அதிகாலை டீயை பிழிந்து போட்டு குமட்ட வைத்தபின் அந்த போர்டை பார்த்தாலே குமட்டல் வரத்தொடங்கிவிட்டது)
இங்கே பெயர்களை எழுதும் முறை எங்களுக்கே உரியது. நாகர்கோயிலின் புகழ்பெற்ற நகைக்கடையின் பெயர் கெங்கா ஜூவல்லர்ஸ். அதென்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டபோது ’கங்கா என்பது இந்த சொல்லின் திரிபு’ என்று நான் பதில் சொன்னேன். லட்சுமி என்றும் லக்ஷ்மி என்றும் தமிழ்நாட்டார் தவறாகச் சொல்லும் லெக்ஷ்மி என்னும் சரியான பெயரில் ஒரு கடை. ஆங்கிலத்திலும் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு கடையின் பெயர் ஒரு முழு பத்தி இருந்தது. கடையின் வரலாறு, பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய முழு விவரத்தையே ஏன் பெயராக வைக்கக்கூடாது? திருவனந்தபுரம் போகும் வழியில் அந்தக் காலத்தில் சாண்டீஸ் ஆண்ட் கஸின்ஸ் என்று ஒரு கடை இருந்தது, சன்ஸ் தான் இருக்கவேண்டும் என்பதில்லையே?
பார்வதிபுரம் வழியாக தினமும் காலைநடை செல்கிறேன். இன்று வரை சிரிப்பூட்ட ஏதேனும் ஒன்று சிக்காமல் திரும்ப வந்ததில்லை. இங்கே நம்மைச் சுற்றி என்னென்னவோ நடந்துகொண்டிருக்கிறது. நாம் சம்பந்தப்பட்டது மட்டும்தான் முக்கியமானது என எந்த அடிப்படையில் நம முடிவுசெய்கிறோம் என்றுதான் புரியவில்லை. நான் பார்த்தவரை ஓர் உண்மை உண்டு. நாம் சம்பந்தப்படாதவைதான் உண்மையிலெயே சுவாரசியமானவை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
