காவியம் – 43

குணாட்யர் தன் பதினேழாவது வயதில் சாதவாகன அரசில், அக்னிபுத்ர சதகர்ணியின் காவியப்பிரதிஷ்டான் என்னும் பேரவையின் தலைமைப் புலவராக அமர்ந்தார். நிகரற்ற பேரறிஞர் என்றும், சந்தேகத்திற்கு இடமற்ற தெய்வஅருள் கொண்டவர் என்றும் அவரை பிரதிஷ்டானபுரியின் அறிஞர்களும் கவிஞர்களும் புகழ்ந்தார்கள். மெல்ல மெல்ல அந்தப் புகழ் தெற்கே விஜயபுரி முதல் வடக்கே உஜ்ஜயினி வரை பரவியது. சூரியபுத்ர சதகர்ணியின் புகழுக்கு நிகராக அவர் புகழ் விளங்கியது. அரண்மனைக்கு அருகிலேயே அவருக்கும் ஓர் அரண்மனை அளிக்கப்பட்டது. அங்கே அவர் தன் இரண்டு மனைவியருடன் குடியேறினார். அவருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தன. தங்கப்பூணிட்ட பல்லக்கில் வெள்ளி மிதியடிகள் அணிந்து அவர் காவிய அரங்குக்குச் சென்றார். முதல்முறையாக பிரதிஷ்டானபுரியின் காவிய அரங்கில் அரசருக்கு இணையான ஓர் இருக்கை அவைத்தலைவராகிய அவருக்கும் அமைக்கப்பட்டது.
அவரிடம் நூறு மாணவர்கள் கல்வி கற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதை அவர் அளித்திருந்தார். புலர்காலையில் விடிவெள்ளிக்கு கீழே, கோதாவரியின் கரையில் அமர்ந்து அவர் அவர்களுக்குப் பாடம் சொன்னார். அதன்பின் இரவில் குளிர் ஏறும்வரை தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்தினார். எந்த நூலையும் அவர் நினைவிலிருந்தே எடுத்தார். ஒருபோதும் ஒருமுறை சொன்னதை பிறிதொரு முறை சொன்னதில்லை. கற்பதில் பின்தங்கிய மாணவனை சிறு தயக்கம் கூட இல்லாமல் தன்னிடமிருந்து அகற்றினார். அவரிடம் மாணவராகச் சேர்வதற்காக தொலைதூரத்தில் காந்தாரத்தில் இருந்தும், காமரூபத்தில் இருந்தும் கூட மாணவர்கள் தேடி வந்தனர். அவருடைய பார்வையை அடைவதற்காக அவர் செல்லும் வழியெங்கும் காத்திருந்தார்கள். அவர் காலடி பட்ட மண்ணை அள்ளிக் கொண்டுசென்று பள்ளிகளில் தூவினால் கல்வி சிறக்கும் என்ற நம்பிக்கை உருவாகியது.
குணாட்யருக்கு குணதேவன், நந்திதேவன் என்னும் இரு மாணவர்கள் அமைந்தார்கள். அவர் அந்த இரு கால்களின் வழியாக நடமாடுகிறார் என்று பிரதிஷ்டானபுரியில் சொல்லப்பட்டது. தொடக்கநிலை மாணவர்களுக்கு குணதேவன் வியாகரணமும், நந்திதேவன் காவியமும் பாடம் நடத்தினார்கள். அவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே குணாட்யரை அணுக ஒப்புதல் அளிக்கப்பட்டது. குணாட்யரின் ஒரு வாழ்த்தை பெறுவதென்பது பிரதிஷ்டானபுரியின் வணிகர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் தலைமுறைப் புகழை அளிப்பது என்று நம்பினார்கள். பொன்னும் பொருளும் அளித்து அவரிடமிருந்து நான்கு வரிச் செய்யுட்களை பெற்றுக்கொண்டனர். அந்நம்பிக்கை பரவி நெடுந்தொலைவுகளில் இருந்து செய்யுளுக்கான மன்றாட்டு ஓலையுடனும் பொருளுடனும் தூதர்கள் பிரதிஷ்டானபுரிக்கு குணாட்யரைத் தேடிவந்தார்கள்.
குணாட்யரை எதிர்க்கவோ, அவருடன் சமானமாக நின்று உரையாடவோ அந்த சபையில் எவருக்குமே துணிவிருக்கவில்லை. முதல்நாளிலேயே அவர் தன்னை யார் என காட்டிய பின்னர் அவருடைய ஆற்றல் மேல் சந்தேகம் எழவேயில்லை. ஆனால் அந்த அவையில் ஒவ்வொருவரும் ஒருநாள் அவரை வெல்வதைப் பற்றியே ரகசியமாகக் கனவு கண்டார்கள். பெரும்புலவர்கள் குணாட்யரை வென்று, அவர் அவையில் சிறுமை எய்தி கண்ணீருடன் நின்றிருக்கும் காட்சியை அகக்கண்ணில் கற்பனை செய்து மெய்சிலிர்ப்படைந்தனர். இளைஞர்கள் என்றோ ஒருநாள் அந்த அவையில் அவர்கள் குணாட்யரை வெல்லமுடியும் என்ற பகற்கனவு காமம் சார்ந்த பகற்கனவுகளை விடவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை அறிந்தனர். ஒவ்வொருவரும் அதற்கான தருணங்களை கற்பனை செய்தாலும் அப்படியொன்று அமையும் என்று எண்ணியிருக்கவே இல்லை.
குணாட்யரை அரசர் தன் சபையின் அரிய ரத்தினங்களில் ஒன்று என நினைத்தார். அவரைப் பற்றிய எல்லா பெருமையும் தன் பெருமையே என எண்ணினார். குணாட்யருக்கு தனக்கு சமானமான ஆடையும் நகைகளும் அளித்து அணியச் செய்தார். ஒரு முறை தொலைநாடான சீனாவில் இருந்து வந்த தூதன் ஒருவன் முதலில் குணாட்யரை அரசர் என்று எண்ணி வணங்கி அவரிடம் பேசத் தொடங்கியபோது சபையினர் திடுக்கிட்டனர். ஆனால் அரசர் சிரித்தபடி “அவரும் இந்த நாட்டின் சக்ரவர்த்திகளில் ஒருவர்தான்” என்று சொன்னார். அந்தச் சொற்றொடர் நாடெங்கும் பரவி குணாட்யரின் புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டுசென்றது.
குணாட்யர் எந்த அரசவையிலும் எந்தக் கவிஞரும் எப்போதுமே பெற்றிராத பெரும்புகழையும் இடத்தையும் பெற்று வாழ்ந்திருந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது இது. அரசர் அக்னிபுத்ர சதகர்ணி, பிரதிஷ்டானபுரியின் எந்த அரசரையும் போலவே எழுதவும் படிக்கவும் அறிந்தவர் அல்ல. சொல் பயில்வதற்கு முன்னரே வில் பயில்பவர்கள் அவர்கள் என்று குறிப்பிடப்படுவது வழக்கம். அவர்களுக்கு மொழியால் செய்யப்படவேண்டிய அனைத்தையும் செய்வதற்கு புலவர்களும் அமைச்சர்களும், கற்றுச்சொல்லிகளும், தூதர்களும் ஏராளமான பேர் இருந்தார்கள். மொழிகளைக் கற்பதும், நூல்களை பயில்வதும் அரசரை மென்மையானவராக ஆக்கிவிடும் என்று நம்பப்பட்டது. ஈட்டியின் மிகக்கூரிய முனை போல் ஒரு நாட்டிற்கே அரசன் அமைந்தாகவேண்டும் என்ற பழமொழி புழக்கத்தில் இருந்தது.
நூல்கள் கற்களால் ஆன உண்மைக்குச் சமானமாக சொற்களாலான ஓர் உண்மையை உருவாக்கிக் காட்டுகின்றன. சொற்களாலான உண்மையை சொல்லறிந்தவர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும். அந்த இயல்பால் சொற்களை அறிந்தவர்கள் அந்த உலகிலேயே திளைக்கவும், பிறவற்றை பொய் என மறுக்கவும் முனைகிறார்கள். கற்களாலான உண்மை எந்த வகையிலும் அவற்றை அறிபவர்களால் மாற்றிக்கொள்ளக் கூடியது அல்ல. பார்ப்பவர் மறைந்து, சொற்களும் அழிந்தாலும் கற்கள் அவ்வாறே நிலைகொள்ளும். அரசன் அறியவேண்டியவை சொற்களாலானான உண்மைகளையே என்று தொன்மையான சாங்கிய நூலான சாமுத்ரிகரின் அர்த்தவின்யாஸம் குறிப்பிட்டது.
சதகர்ணிகள் எப்போதும் சாங்கிய மெய்ஞானத்தையே தங்கள் முதன்மையறிவாகக் கொண்டிருந்தனர். த்வஷ்டமனுவின் குடிவந்தவரும், அசுரர்களுக்கும் நாகர்களுக்கும் முதல்குருவுமாகிய கபில மாமுனிவர் பாதாளத்தில் இருந்து எழுதி அளித்த சாங்கிய சூத்ரங்கள் என்னும் நூலே அவர்களின் முதல்நூல். அந்நகரை நிறுவிய பரமேஷ்டி என்னும் முனிவர் ’தொட்டறியப்படாதவை எல்லாம் உற்றறியவும் முடியாதவையே’ என்று தன்னுடைய சாங்கிய யோகப் பிரபாவம் என்னும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவைகளில் சதகர்ணிகள் அடிக்கடிச் சொல்வதுண்டு. ‘அஸ்பர்ஸ்யமஃபாவ!:’ என்னும் அந்த வரியை தங்களுக்குத் தாங்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளவேண்டும் என்றும் அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அக்னிபுத்ர சதகர்ணியின் பட்டத்தரசி அவரால் வடக்கே காம்போஜத்தில் இருந்து மணம் செய்துகொள்ளப்பட்டவள். காம்போஜத்திடம் சதகர்ணிகள் பலகாலமாக பெண் கேட்டுக்கொண்டிருந்தாலும் சதகர்ணிகள் பிறப்பால் குறைவுபட்டவர்கள் என்று காம்போஜத்தினர் எண்ணினார்கள். அக்னிவர்ணிகள் என அழைக்கப்பட்டிருந்த காம்போஜத்தினர் சிவந்த நெடிய உடலும், கூர்மையான மூக்கும், நீலக்கண்களும் கொண்டவர்கள். அக்னியின் பிறப்பான விபாவசு அவர்களின் முதல் குரு. பிராசீனபர்ஹிஸ் என்னும் தர்ப்பையில் வாழும் அனல் அவர்களின் தெய்வம். அனல் மண்ணிலுள்ளவற்றை எரிப்பது, விண்ணுக்குச் செல்லத் துடித்துக்கொண்டே இருப்பது. ஆகவே மண்ணிலுள்ள தெய்வங்களை வழிபடுபவர்களும், இறந்தால் மண்ணுக்கே திரும்புபவர்களும் ஆன எவரையும் அவர்கள் இழிவானவர்களாகவே எண்ணினார்கள்.
அதிலும் சதகர்ணிகள் நிஷாதர்களிடமிருந்து தோன்றியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததாக இருந்தது. பெண் மறுக்கப்பட்டதும் அக்னிபுத்ர சதகர்ணி தன் படையுடன் கிளம்பிச் சென்று காம்போஜத்தை தோற்கடித்தார். மூன்று நாட்களுக்குள் முறையாக முதல் இளவரசியை மணம் செய்து தராவிட்டால் நகரைச் சூறையாடுவதாக அறிவித்தார். அந்த அச்சுறுத்தல் நிலைகொள்வதற்காக ஒவ்வொரு கால் நாழிகைக்கு ஒருமுறையும் முரசை ஒலிக்கவிட்டு நேரம் குறைந்துகொண்டே இருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தார். இறுதியில் காம்போஜம் பணிந்தது. மூத்த இளவரசி வித்யுத் த்வனியை அவருக்கு முறையாக மணம் புரிந்து கொடுத்தனர். அந்த மண விழா காம்போஜத்தில் மூன்றுநாட்கள் நடைபெற்றது. நகரிலுள்ள அனைவருக்கும் சதகர்ணி விருந்தளித்துப் பரிசுகளும் கொடுத்தார். அரசியுடன் பிரதிஷ்டானபுரிக்குத் திரும்பி வந்தார்.
அந்த வெற்றியை பிரதிஷ்டானபுரி ஏழுநாட்கள் கொண்டாடியது. பன்னிரு சிறு காவியங்கள் அந்த வெற்றியைப் பற்றி காவ்யபிரதிஷ்டானத்தின் கவிஞர்களால் இயற்றப்பட்டன. ‘காம்போஜ விஜயம்,’ ’அக்னி பரிணயம்,’ ‘ஆக்னேயோத்ஸ்வம்,’ ஆகிய மூன்று காவியங்களும் அவற்றில் சிறந்தவை என அறியப்பட்டன. ஏறகனவே சதகர்ணிக்கு ஏழு அரசியர் இருந்தாலும் காம்போஜத்தின் இளவரசி பட்டத்தரசியாக பட்டம் சூட்டப்பட்டாள். அவள் தங்குவதற்கு காம்போஜவிலாசம் என்னும் பெரிய அரண்மனை கோதாவரியின் கரையில் கட்டப்பட்டது. அதற்குத் தனியாகக் காவல்படையும், அரணும் உருவாக்கப்பட்டது. அவை முழுக்க அரசியின் ஆணையில் இருந்தன. அரசர் சதகர்ணியே அரசியிடம் ஒப்புதல் பெற்றுத்தான் அவளைப் பார்க்கமுடியும் என்னும் நிலை இருந்தது.
ஒரு நிலவுநாளில் அரசர் அக்னிபுத்ர சதகர்ணி தன் அரசியுடன் உப்பரிகையில் இளங்காற்றில் அமர்ந்து சரசமாடிக் கொண்டிருந்தார். அரசியின் நான்கு அந்தரங்கமான சேடிகளும் உடனிருந்தார்கள். அரசி காவியங்களிலும் அலங்கார சாஸ்திரத்திலும் பயிற்சி பெற்றவள். ஓவியம் வரைவதிலும் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி கொண்டிருந்தாள். அரசி ‘தோளைத் தொட்டுச் செல்லும் கோதாவரியின் காற்றா கூந்தலில் விளையாடும் நிலவொளியா எது குளிர்ந்த மென்மையான பட்டு?’ என்று அப்போது அவள் உருவாக்கிய ஒரு கவிதை வரியை சொன்னாள். அவளுடைய தோழிகள் அதைப் பாராட்டி ’ஆகா!’ என்ற ஒலி எழுப்பினார்கள்.
அரசர் ஏதேனும் சொல்லவேண்டும் என விரும்பினார். எனக்கு கற்பனைகளைவிட உண்மையே முக்கியமானது என்ற பொருளில் ஏதேனும் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தார். நிலவும் காற்றும் அருவமானவை, நீ தொட்டறியத்தக்கவளாக என் அருகே இருக்கிறாய் என்று கூறவேண்டும் என்று முயன்றார். ஆனால் அதற்குரிய சொற்கள் நினைவுக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அடிக்கடிச் சொன்ன சொல்லாட்சி நாவில் எழுந்தது. ஆனால் அதை ’அஸ்பர்ஸ்யம் அஃபாவம்’ என்று சொல்வதற்குப் பதிலாக நாக்கு தடுமாறி ‘அஸ்பர்ஸ்யம் அனுஃபாவம்’ என்று சொன்னார். அரசி “ஃபவது; அஸ்பர்ஸ்யம் ஃபவான்” என்றாள். அவள் தோழிகள் உரக்கச் சிரித்தபடி விலகி ஓடினார்கள்.
ஏதோ பிழையாகச் சொல்லிவிட்டோம் என்று அரசருக்குப் புரிந்தது. என்ன சொல்லிவிட்டோம் என்று புரியவில்லை. பொதுவாகச் சிரித்துக்கொண்டு அந்தத் தருணத்தைக் கடந்தார். அதன்பின்னரும் அவளுடன் பேசி இரவைக் கழித்தபிறகுதான் திரும்பினார். ஆனால் அவள் கண்களிலும் தோழிகளின் கண்களிலும் சிரிப்பு எஞ்சியிருப்பது தெரிந்தது. அதை எண்ணியபடியே திரும்பி வந்தார். தன் அறையிலும் பிறகு அரசவையிலும் துயருற்றவராகவும் எண்ணங்களில் உழல்பவராகவும் இருந்தார். நாலைந்து நாட்கள் ஆகியும் அந்த தனிமையும் துயரும் நீடிப்பதைக் கண்டு அமைச்சர்கள் விசாரித்தாலும் ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு தன் அவையிலேயே மிக வயதில் இளையவனாகிய ஒரு பிராமணப் பண்டிதனை அழைத்து அவனிடம் சாதாரணமாக விசாரிப்பதுபோல அதன் பொருளைக் கேட்டார். “இது ஒரு நாடகத்தில் வரும் காட்சி. ஓர் ஆணும் பெண்ணும் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றார்.
அவன் “கல்வி கற்றவளாகிய ஒரு பெண் கல்வியில்லாத காட்டுமிராண்டியான ஒருவனை இவ்வாறு ஏளனம் செய்கிறாள்” என்றான். “அவள் சொன்ன கவிதைவரியை புரிந்துகொள்ளாமல் அவன் தீண்டத்தகாதவற்றின் மேல் கருணை காட்டவேண்டும் என்கிறான். அவள் ஆம், தீண்டத்தகாதவர் தாங்களே என்கிறாள்” என்றான்.
அதன்பிறகு பேசமுடியாமல் சதகர்ணி நடுங்கத் தொடங்கினார். அவனை அனுப்பிவிட்டு அப்படியே தன் படுக்கையறைக்குச் சென்று படுத்துவிட்டார். எட்டு நாட்கள் அவர் உடலில் காய்ச்சல் இருந்தது. தூக்கத்திற்கு விழிப்புக்கும் நடுவே அவர் அலைக்கழிந்தார். ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தார். அஸ்பர்ஸ்யம் என்னும் சொல் அடிக்கடி வந்ததை வைத்து ஏதோ பிசாசை அவர் கண்டு அஞ்சிவிட்டதாக அரசவை மருத்துவன் சொன்னான்.
அவன் அளித்த மருந்துகளால் தொடர்ச்சியாக இரவும் பகலும் தூங்கி, எட்டு நாட்களுக்குப் பின் தேறிவந்தார். அரசவைக்குச் செல்வதை தவிர்த்து தன் படுக்கையறையிலேயே இருந்த அவர் தலைமைப் புலவர் குணாட்யரை அங்கே வரவழைத்தார். அவரிடம் நிகழ்ந்ததைச் சொன்னார். “நான் வரும் மூன்று மாத காலம் என் நாட்டை பார்ப்பதற்காக படைகளுடன் செல்லப்போகிறேன். திரும்பி வரும்போது நான் சம்ஸ்கிருத மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் செய்யுள் இயற்றவும் கற்றிருக்கவேண்டும். அரசியை மீண்டும் சந்திக்கும்போது நான் சம்ஸ்கிருதம் அறிந்தவனாக இருக்கவேண்டும்” என்றார்.
குணாட்யர் மென்மையாக புன்னகைத்து “தேசபரியடனம் என்னும் அந்நிகழ்வை மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தெற்கே நம் எல்லையில் அமராவதி வரைக்கும் சென்று வரலாம். அதற்குள் சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் செய்யுட்களை புரிந்துகொள்ளவும் பயில முடியும்… பிழையற்ற செய்யுள் எழுதவேண்டும் என்றால் மீண்டும் ஒரு மூன்றாண்டுக்காலம் தேவை” என்றார்.
அரசர் மனம் சோர்ந்து “அவ்வளவு கடினமா?” என்றபின் தேவையில்லை என தலையசைத்தார்.
குணாட்யர் திரும்பிச் செல்லும்போது தன் மாணவர்களிடம் அரசர் கேட்டதைப் பற்றிச் சொல்லிச் சிரித்தார். “மூன்று மாதங்களில் கற்கத்தகுந்த அறிவை வைத்துக் கொண்டுதான் கவிஞர்களும் புலவர்களும் இங்கே வைரங்கள் அணிந்து தங்கப்பூணிட்ட பல்லக்கில் அலைகிறார்கள் என்று எண்ணியிருக்கிறார், பாவம்” என்றார்.
“நாம் அவரிடம் ஒரு மாதத்தில் போர்க்கலைகள் அனைத்தையும் கற்கமுடியுமா என்று கேட்கலாம்” என்றார் குணதேவர்.
“பதினைந்து நாட்களில் கருவுற்று குழந்தைபெற வழியுண்டா என்று கேட்பது இன்னும் சிறந்தது” என்றார் நந்திதேவர்.
அவர்களின் மாணவர்கள் நடுவே அரசரின் அந்த அறியாமை ரகசியக் கேலியாக உலவியது. குணாட்யர் அதை மறந்துவிட்டார். ஆனால் நகரமே அதைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டிருந்தது. ஒற்றர்கள் வழியாக அது அரசரின் செவிகளுக்கும் வந்தது. அரசர் அதை வெளியே சொல்லமுடியாமல் உள்ளம் புழுங்கினார்.
ஒரு வாரம் கழித்து அவையில் எழுந்த ரத்னாகரர் “அரசே, இந்த அவையில் என் தோழரான சர்வ வர்மன் என்னும் அறிஞனை அறிமுகம் செய்ய என்னை அனுமதிக்கவேண்டும்… இவர் அடிப்படை மொழியறிவு இல்லாத ஒருவருக்கு மூன்று மாதங்களில் சொல், எழுத்து, பொருள், அணி, யாப்பு ஆகியவற்றைக் கற்பித்து அவரை மொழியறிஞராக ஆக்கும் ஆற்றல் கொண்டவர்” என்றார்.
தலைமைப் புலவர் ஆனபின் குணாட்யரால் எந்தவகையிலும் பொருட்படுத்தப்படாத மனத்தாங்கல் குணாட்யர் மேல் ரத்னாகரருக்கு இருந்தது. தன் அலங்காரசாஸ்திர நூலை அரங்கேற்றம் செய்ய குணாட்யர் உதவவேண்டும் என்று அவர் வந்து கோரியபோது அந்நூலில் நூற்றிப்பதினெட்டு பிழைகள் உள்ளன என்று சொல்லி குணாட்யர் தவிர்த்துவிட்டார்.
ரத்னாகரர் சொல்வதென்ன என்று சபையில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அரசர் சீற்றம் அடைந்து “இது விளையாடுவதற்குரிய சபை அல்ல” என்றர்.
ரத்னாகரர் “அவ்வாறு தன்னால் கற்பிக்க முடியாமல் போனால் தன்னை அரசர் தலைவெட்டிக் கொல்ல ஆணையிடலாம் என்கிறார். அவர் க்ஷத்ரியர் ஆனதனால் அவ்வாறு செய்ய நூல் ஒப்புதலும் உண்டு” என்றார்.
“அவர் அரசவைக்கு வரட்டும்” என்று அரசர் சொன்னார்.
குணாட்யர் அதுவரை அதைக் கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அரசர் அனுமதித்ததும் அவர் எரிச்சலுடன் எழுந்து “சபையை ஏமாற்ற நினைப்பவர் அந்த மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை… இந்த மண்ணில் எவராலும் எவருக்கும் மூன்றுமாதங்களில் சம்ஸ்கிருதத்தை முழுமையாகக் கற்பிக்க முடியாது” என்றார்.
அரசர் “அவர் சபைக்கு வரட்டும். ஏமாற்ற எண்ணினால் அவர் தன் தலையை இழப்பார்…” என்றார். “இந்த உலகம் மிகப்பெரியது. இங்கே முடிவில்லாமல் விந்தைகள் உள்ளன. முடிவில்லாமல் சாத்தியங்களும் உள்ளன.”
ரத்னாகர் சர்வவர்மனை அவைக்குக் கூட்டிவந்தார். கட்டான உடலுடன் போர்வீரர் போலிருந்த சர்வ வர்மன் க்ஷத்ரியர்களுக்குரிய ஆடையும் இரும்புநகைகளும் அணிந்திருந்தான்.
அரசர் அவனிடம் “இங்கே ரத்னாகரர் சொன்னது உண்மையா? மூன்று மாதங்களில் ஒருவருக்கு உங்களால் சம்ஸ்கிருதமொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்பிக்க முடியுமா?” என்றார்.
“மூன்றுமாதம்கூட தேவையில்லை, ஓரிரு நாட்கள் குறையலாம்” என்றான் சர்வ வர்மன்.
அந்த அலட்சியத்தைக் கண்ட குணாட்யர் கடும் சீற்றத்துடன் “எந்த மனிதனாலும் அது இயலாது… என் சொற்கள் மேல் ஆணை” என்றார்.
“என்னால் முடியும். என் சொற்கள் மேல் ஆணை” என்று சர்வவர்மன் சொன்னான்.
“நீ தோற்றால் நீ சாகவேண்டியதில்லை. ஆனால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க நீ என் மிதியடிகளை உன் தலையில் கிரீடம்போல அணிந்திருக்கவேண்டும். சம்மதமா?” என்று குணாட்யர் கேட்டார்.
“சம்மதம். நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள்?”என்று அவன் கேட்டான்.
“நான் தோற்றால் நான் அறிந்த எல்லா மொழிகளையும் முழுக்கவே மறப்பேன் என்று உறுதி சொல்கிறேன்.” என்றார் குணாட்யர்.
“நீங்கள் மொழிகளை மறப்பதற்கு யார் சாட்சி?” என்று சர்வ வர்மன் கேட்டான்.
குணாட்யர் அத்தருணத்தில் தோன்றிய வெறியுடன் முன்னால் வந்து “நான் தோற்றால் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் என் இரு கண்களையும் காதுகளையும் குத்திக்கொள்வேன். கத்தியால் என் நாக்கை அரிந்து வீசுவேன். எந்த மொழியும் எனக்குள் வராது, எந்த மொழியும் என்னைவிட்டு வெளியே ஒலிக்காது” என்றார். தன் ஏட்டுப்பெட்டி மேல் கையை வைத்து “ஆணை! ஆணை! ஆணை!” என்று கூவினார்.
சபை திகைத்துவிட்டது. எவராலும் எதுவும் பேசமுடியவில்லை. முதன்மைக் கவிஞரான புஷ்பவாசர் மட்டும் அருகில் இருந்தவருடன் “நல்லது, உயிர்தப்பினான். குணாட்யரின் மிதியடிகளை எப்படி அவனுக்கான தலையணியாகச் செய்வது என்றுதான் இனிமேல் யோசிக்கவேண்டும்” என்றார்.
அவையில் இருந்து தன் இல்லத்துக்கு செல்லும்போது குணாட்யர் தன் மாணவர்கள் சர்வவர்மன் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளம் அமைதியிழந்திருந்தது. ஏதோ ஒன்று விரும்பத் தகாததாக நிகழவிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த அமைதியின்மை அதன்பின் ஒவ்வொரு நாளும் கூடிக்கூடி வந்தது.
மறுநாளே சர்வசர்மன் அரசருடன் நகருக்கு வெளியே இருந்த குடிலில் குடியேறினான். அங்கே அவன் அரசருக்குக் மொழிப்பாடங்களைக் கற்பிக்கிறான் என்று ஏவலர்கள் சொன்னார்கள். ஆனால் அவன் கற்பிக்கும் முறை விசித்திரமானதாக இருந்தது. அவன் இரவும் பகலும் எந்நேரமும் அரசரின் அருகிலேயே இருந்தான். ஆட்சிப்பணிகளை நிறுத்திவிட்டு அரசர் பகல் முழுக்க கல்விக்காக அளித்தார். சர்வவர்மன் அரசரின் அருகே இருந்து அவர் செவியில் பாடங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான். அரசர் அவற்றை கவனிக்கவோ, பதில் சொல்லவோ வேண்டியதில்லை. ஆனால் வேறு எவரும் எக்காரணம் கொண்டும் அரசரிடம் பேசக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது.
நீராடும் போதும், உணவு அருந்தும்போதும், பெண்களுடன் கூடும்போதும்கூட அவன் அவர் காதில் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் இரவில் தூங்கும்போதும் அவன் அருகே அமர்ந்து பாடங்களைச் சொன்னான். பின்னிரவில் சர்வசர்மன் தூங்க வேண்டியிருந்தபோது ரத்னாகரர் அந்தப் பாடங்களை அரசரின் அருகே அமர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாடங்கள் காதில் விழாத நேரமே இருக்கவில்லை. ஓரிரு நாட்களிலேயே அரசரின் உதடுகள் எப்போதும் தானாகவே அசைந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கத் தொடங்கின.
என்ன நிகழ்கிறது என்றே குணாட்யரால் உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கு ஆறுநாட்களுக்கு முன் அரச சபைக்கு வந்த அரசர் தனக்கு சம்ஸ்கிருத மொழி நன்கு தெரியும் என்றும், செய்யுள் இயற்றமுடியும் என்றும், அவையில் யார் வேண்டுமென்றாலும் தன்னை சோதனைசெய்து பார்க்கலாம் என்றும் சொன்னார். சபையில் இருந்த எவரும் எழுந்து எதையும் கேட்க துணியவில்லை. அனைவரும் குணாட்யரைப் பார்த்தனர்.
குணாட்யர் எழுந்து “செந்நிற இதழ்கொண்ட மலரின் புல்லிவட்டம் கருமைகொண்டிருப்பது எவரிட்ட சாபம்?” என்று ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகளைச் சொன்னார்.
அரசன் புன்னகைத்து “தம்பமும் கேசரங்களும் கருமையென வெளிப்படுவதனால் அல்லிகள் மகிழ்ந்து சிவக்கின்றன என்பதாலா?” என்று ஈரடியைச் சொல்லி அக்கவிதையை முடித்தான்.
குணாட்யர் அதன் பின் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. பின்னர் சட்டென்று எழுந்து கைகளைக் கூப்பி அவையை வணங்கிவிட்டு வெளியே நடந்தார்.
அரசன் பதறி எழுந்து தூய சம்ஸ்கிருதத்தில் “அவைக்கவிஞர் குணாட்யர் என் மேல் பெரும்பழியை ஏற்றி வைக்கலாகாது… இங்கே நீங்கள் சொன்ன வஞ்சினத்தை நான் நிராகரிக்கிறேன்… இந்த அவையே உங்களிடம் மன்றாடுகிறது” என்று கெஞ்சியபடி பின்னால் சென்றான். “உங்கள் மொழி தெய்வங்களால் அருளப்பட்டது… அதை அழிக்க உங்களுக்கு உரிமை இல்லை. இந்த நாட்டின்மேல் பெரும் சாபத்தை விட்டுச்செல்கிறீர்கள் புலவரே” என்று கைகூப்பி அழுதான்.
ஆனால் அந்தச் சபையில் ஒருவர் கூட எழுந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவர் செல்வதை கண்களால் தொடர்ந்தபடி பொம்மைகள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
