விருதுகள், ஏற்பதும் மறுப்பதும்
அன்புள்ள ஜெ.,
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போது தாமதமாக அளிக்கப்பட்ட சிறிய விருது என்று ஏற்க மறுத்துவிட்டார். அது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. விருதுகள் வெவ்வேறு காரணங்களுக்காக மறுக்கப்பட்டிருக்கின்றன. நீங்களே விருதுகளை ஏற்க மறுத்திருக்கிறீர்கள்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருதுகள் அவ்வாறு ஏற்க மறுக்கப்பட்டிருக்கின்றதா? அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
*
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
விருதுகளை ஏற்பதுபோலவே மறுப்பதும் இயல்பான ஒன்றுதான். விருது மறுப்பை பரபரப்பான வம்பாக ஆக்கிக்கொள்ள வேண்டியதில்லை. அது விருது அளிக்கும் நிறுவனம் மீதான விமர்சனமாக இருந்தாகவேண்டும் என்பதுமில்லை. இதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன்.
விருதுகள் ஒருவருக்கு ஓர் அமைப்பால் அளிக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோல், அதன் செயல்பாடுகள் ஆகியவற்றில் நமக்கு மதிப்பு இருந்தால் அந்த விருதை நாம் ஏற்கிறோம். அதுவே முதன்மையான அடிப்படை.
எனக்கு முப்பது வயதிருக்கையிலேயே ஓர் அமைப்பு எனக்கு விருதை அறிவித்தபோது மறுத்துள்ளேன். ஒரு விருதுப் பட்டியலில் கோவி. மணிசேகரனும் நானும் இருந்தோம். அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோலை நான் ஏற்கமுடியாது என வெளிப்படையாகவே அறிவித்து மறுத்துவிட்டேன். .அந்த மறுப்பறிக்கை சுபமங்களாவில் வெளிவந்தது. அப்போது அது விவாதமாக ஆகியது.
அந்த பட்டியலில் இன்குலாப் இருந்தார். அவரை ஓர் இலக்கியவாதியாகவே நான் என்றும் கருதியதில்லை, அவர் எளிய அரசியல்கோஷங்களை எழுதிய அரசியல்வாதி மட்டுமே. ஆனால் அந்த அரசியல் நேர்மையானது என்பதனால் அவருடன் விருதை ஏற்பது எனக்கு கௌரவம், கோவி மணிசேகரன் அப்படி அல்ல என்று அப்போது குறிப்பிட்டேன்.
அவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் அந்த அமைப்பின் அளவுகோலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருள். கோவி.மணிசேகரன் வணிக எழுத்தாளர். வணிக எழுத்திலேயே அடிப்படைத் தரம் இல்லாத கீழ்நிலைக் கேளிக்கையாளர் என்பது என் மதிப்பீடு. இப்படி விருது வழங்கும் அமைப்பின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லையேல் மறுக்கலாம்.
இன்னொன்று, அவ்விருது அளிக்கும் அமைப்பின் அடையாளத்துடன் தனிப்பட்ட காரணங்களால் உடன்பாடில்லை என்றால் மறுக்கலாம். 1998 வாக்கில் எனக்கு இந்திய அளவில் அளிக்கப்படும் ஓர் உயர்விருது அறிவிக்கப்படுவதாக சொன்னார்கள். ஆனால் அது மதஅரசியல் சார்ந்த பின்புலம் கொண்ட விருது. நான் மதத்தையும் மெய்யியலையும் தெளிவாக வேறுபடுத்திக்கொண்ட காலம் அது. ஆகவே மறுத்துவிட்டேன்.
அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அருண்மொழியின் நகைகள் எல்லாம் அடகில் இருந்த காலம் அது. அது பெரிய தொகை. அதை மறுப்பதை அவளிடம் சொன்னால் என்ன சொல்வாள் என நான்குநாட்கள் குழம்பி கடைசியில் கருத்து கேட்டேன். ’உனக்கு வேணாம்னா விட்டிரு’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு மறுகணம் பக்கத்துவீட்டுச் சிறுவனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள். இன்னொரு முறை யோசிக்கவோ பேசவோ இல்லை. ஆனால் நான் மேலும் பத்துநாட்கள் அந்த பெருந்தொகை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன்.
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது இரு கவிஞர்களுக்கு அளிப்பதாகச் சொன்னபோது அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் மறைந்த குமரகுருபரனுடன் கடுமையான மோதல் இருந்தது என்றும், அவரைப்பற்றி கடுமையாக எதிர்வினை ஆற்றியதும் உண்டு என்றும், ஆகவே விருதை ஏற்பது சரியாக இருக்காது என்றும் சொன்னார்கள். என்னையே குமரகுருபரன் இரவில் பக்கார்டி துணையுடன் வசைபாடியதுண்டு, காலையில் மன்னிப்பு கோரியதும் உண்டு, அதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொன்னேன். அவர்கள் உறுதியாக இருந்தனர். அது இயல்பான முடிவு என எடுத்துக்கொண்டேன்.
விருது சார்ந்த கொள்கைகள் ஒருவருக்கு இருக்கலாம். உதாரணமாக, அரசு சார்ந்த விருதுகளை ஏற்பதில்லை என்பது என் கொள்கை. அந்த கொள்கையை நான் கொஞ்சம் கொஞ்சமாகவே வந்தடைந்தேன். ஏனென்றால் அவ்விருதுகளை, அரசை விமர்சிக்கும் உரிமையை இழக்கிறேன் என்று பட்டது. அந்த முடிவை வந்தடைந்தபின் அதை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளேன். பத்மஸ்ரீ உட்பட அரசு விருதுகள் பெற முடியுமா என்று கேட்ட்கப்பட்டபோது மறுத்தேன். அது சரியான முடிவே என உறுதியாக உள்ளேன்.
அப்படி ஒரு மறுப்பு விஷ்ணுபுரம் விருதுக்கும் வந்தது. ராஜேந்திர சோழனுக்கு விருது அளிப்பதாக சொன்னபோது அவர் மறுத்தார். என் மேல் பெருமதிப்புண்டு என்றும், ஆகவேதான் என் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதாகவும், விஷ்ணுபுரம் அமைப்பின் இலக்கியச் செயல்பாடுகள் மீதும் மதிப்புண்டு என்றும், ஆனால் விருதை ஏற்கமுடியாது என்றும் சொன்னார்.அவர் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி என்னும் அமைப்பை நடத்திவந்தார். விஷ்ணுபுரம் போன்ற விருதுகளை ஏற்பதென்பது கட்சிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றார். தமிழ்த்தேசிய பொதுவுடைமை என்னும் கருத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத எந்த அமைப்புடனும் இணைந்து எவ்வகையிலும் செயல்படமுடியாது என்றார். அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என ஏதுமில்லை, கட்சியுடன் கலந்தே முடிவெடுக்கமுடியும் என்றார்.
அதை நான் ஏற்றுக்கொண்டேன். விஷ்ணுபுரம் நிகழ்வில் அவர் உரையாற்ற வேண்டும், மேடையிலேயே விருதை மறுப்பதென்றாலும் செய்யலாம் என்று கோரினேன். விருதை வீணாக்கவேண்டாம், வேறு ஒருவருக்கு அளிக்கலாம் என்றார். அவர் மேடையில் பேச வருவதாகச் சொன்னார், வந்தால் நேரடி அரசியல் பேசக்கூடாது என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன் இலக்கியப் பார்வை தமிழ்த்தேசியம் சார்ந்தது, அதைச் சொல்வேன் என்றார். ஏனென்றால் எந்த மேடையையும் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர் கட்சியின் கொள்கை. அவருடைய உரை தனிப்பட்ட எவரையும் தாக்குவதாக இல்லை என்றால் சரிதான் என்று நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவருடைய உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
(ஆனால் வந்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்கும் என பின்னர் தோன்றியது. அவர் உட்பட தமிழ்த்தேசியர்கள் தீவிரமான தெலுங்கு எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு அரசியலுக்குள் சென்றுகொண்டிருந்த காலம் அது. எங்கள் மேடைகள் அத்தகைய விவாதங்கள் நோக்கிச் செல்லவேண்டியதில்லை என்பதே என் தரப்பு. அந்த அரங்கு அந்த பரிசுபெறும் படைப்பாளியை நோக்கிக் குவிவதாக, இலக்கியம் மட்டுமே பேசப்படுவதாக அமையவேண்டும் என நினைக்கிறேன். இது நான் இப்போது உறுதியாக உள்ள கருத்து)
விருது என்பது ‘பரிசு’ அல்ல. அது ஓர் ஏற்பு மட்டுமே. ஒரு குழு அல்லது அமைப்பு தன்னுடைய பொதுவான இலக்கிய ரசனையின் அடிப்படையில் விருதை வழங்குகிறது. அது ஒரு சமூக ஏற்புதான். எந்த சமூகச் செயல்பாட்டுக்கும் சமூகத்தின் தரப்பில் இருந்து ஓர் ஏற்பு அவசியம்.
விருதுகளின் நோக்கங்கள் இரண்டு. முதலில் ஓர் இலக்கியவாதியை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுதல். ஆகவேதான் விஷ்ணுபுரம் அமைப்பின் விருதுகளுடன் விரிவான விமர்சனங்களும், நூல்வெளியீடும், ஆவணப்படமும் நிகழ்கின்றன. பெரிய விழா எடுக்கப்படுகிறது, மற்ற மொழிகளில் இருந்து படைப்பாளிகள் அழைக்கப்படுகிறார்கள், செய்திகள் வெளிவரச் செய்யப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதும், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை புதியவாசகர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் எங்கள் நோக்கம்.
இரண்டாவது நோக்கம், ஓர் எழுத்தாளரிடம் வாசகர்களாக நின்று உங்களை வாசிக்கிறோம், உங்களை அணுகி வருகிறோம் என அறிவிப்பது. மூத்த படைப்பாளிகளுக்கு அத்தகைய ஓர் அறிவிப்பு எத்தனை நம்பிக்கையை, ஊக்கத்தை அளிக்கிறது என்பதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். இளம்படைப்பாளிகளுக்கு அந்த வாசகக்குரல் நம்பிக்கையூட்டுகிறது, அதிலுள்ள எதிர்பார்ப்பு ஓர் அறைகூவலாகவும் அமைகிறது. இங்கே எழுத்தாளர்கள் மூத்தவர்களானாலும் இளையோரானாலும் பொருட்படுத்தப்படாமலேயே உள்ள சூழலில் இந்த ஏற்பு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
இதையொட்டி நாங்கள் அமைக்கும் இலக்கிய அரங்கமும் இந்த நோக்கம் கொண்டதுதான். படைப்பாளிகளை வாசகர் முன் நிறுத்துவதே அதன் நோக்கம். இத்தனை பேர் ஆர்வமாகவும் தீவிரமாகவும் வாசிக்கிறார்கள் என்று அந்தப் படைப்பாளிகளுக்குத் தெரியவேண்டும், அது எழுத்துக்கு அளிக்கும் ஊக்கம் அளப்பரியது. விருதை ஒட்டி நிகழும் எங்கள் அரங்கு இலக்கிய விவாதங்களுக்குரியது அல்ல, சக இலக்கியவாதிகள் பேசுவதற்கானது அல்ல. அது வாசகர்களுக்குரியது. இலக்கிய விவாதங்களுக்கான அரங்குகளை தனியாக நிகழ்த்துகிறோம். குரு நித்யா ஆய்வரங்கம்போல. அவை ஓர் ஆண்டில் ஐம்பதுக்குமேல் நிகழ்கின்றன, இப்போது உலகமெங்கும்.
தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு புள்ளியில் எவரேனும் படிக்கிறார்களா, இல்லை சும்மா நாமே நமக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் எழும். ஏனென்றால் எங்குமே வாசகர்களை அவன் சந்திக்க முடியாது. இந்த அரங்குகளில் அவை நிறைந்து அமர்ந்திருக்கும் வாசகர்களை அந்த எழுத்தாளர்களுக்கு காட்டுகிறோம், அவர்களிடம் நேரட்சியாக உரையாடச் செய்கிறோம். அதுவும் ஒரு வகை விருதுதான்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
