காவியம் – 44

கானபூதி சொன்னது. “நான் என் முன் அமர்ந்திருந்த நிஷாதனாகிய சுத்யும்னனிடம் சொன்னேன். நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலை அடைந்துவிட்டாய். நீ கேட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கதையின் கேள்விகள் திரண்டு வந்துவிட்டிருக்கின்றன. அவற்றுக்கு நீ பதில்சொல்லி வென்றாலொழிய இந்த கதைவிளையாட்டு முன்னால் செல்லாது என்று மீண்டும் சொல்கிறேன். அவன் புன்னகையுடன் சொல் என்று என்னிடம் சொன்னான்”
கானபூதி தொடர்ந்தது. நான் சுத்யும்னனின் கண்களைப் பார்த்தேன். அவற்றில் எந்த குழப்பமும் இருக்கவில்லை. கதை கேட்கும் சிறுவர்களுக்குரிய ஆர்வமே இருந்தது. கதைகள் என்றோ எங்கேயோ நிகழ்ந்தவை என பெரியவர்கள் எண்ணுகிறார்கள். உடன் நிகழ்பவை என சிறுவர்கள் எண்ணுகிறார்கள். பெரியவர்கள் கதைகளை விலகி நின்று ரசிக்கிறார்கள். சிறுவர்கள் கதைக்குள் சென்று விளையாடுகிறார்கள்.
நான் சுத்யும்னனிடம் கேட்டேன். “இரு கைகளுக்கும் சேர்த்து என் கேள்வி ஒன்றே. ஏன் குணாட்யர் இளம் வயதில் அந்த சபையை அத்தனை எளிதாக வென்றார்? ஏன் அறிவு முதிர்ந்த வயதில் தோற்றார்?”
அவன் கண்கள் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தான். பின்னர் “வல்லவர்களை இளையவன் ஒருவன் வெல்வான் என்னும் மாறாத இயற்கை விதியால் அவர் வென்றார், பின்னர் தோற்றார்” என்றான்.
நான் என் கைகளை அப்படியே வைத்துக்கொண்டு நிழல்களிடம் ”சொல்லுங்கள், சரியான பதிலா?” என்றேன்.
ஒரு நிழல் “சரிதான். அவருடைய இளமையில் வெல்லவேண்டும் என்னும் விசை அவருக்கு ஆற்றலை அளித்தது. முதுமையில் வென்றுவிட்டோம் என்னும் ஆணவம் அவருடைய ஆற்றலை அழித்தது. இரண்டும் எப்போதும் நிகழ்வதுதானே?” என்றது.
இன்னொரு நிழல் “அவர் இலக்கண ஆசிரியர். பாஷா மீமாம்சகர்கள் மொழி நிரந்தரமானது, ஆகவே இலக்கணம் மாறாதது என்று நம்பியிருப்பார்கள். ஆனால் மொழி ஒவ்வொரு முறை ஒருவரால் சொல்லப்படும்போதும் , ஒருவரால் எண்ணப்படும்போதும் நுணுக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரிய நதியில் நீரின் ஒவ்வொரு அணுவும் முன்னகர்வது போல. ஒட்டுமொத்தமாக நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை இலக்கண ஆசிரியர்கள் அறிவதில்லை. நேற்று வந்து நீராடிய ஆற்றிலேயே இன்றும் நீராடுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கணம் மாறுவது கண்ணுக்குத் தூலமாகத் தெரிய ஒரு தலைமுறைக் காலம் ஆகும். ஆகவே எல்லா இலக்கண ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையினரால் வெல்லப்படுவார்கள்” என்றது.
மூன்றாவது நிழல் “தன் வாழ்க்கை முழுக்க குணாட்யர் இலக்கணத்தை மட்டுமே பயின்றார். காவியங்களை பயிலவில்லை. இலக்கணங்கள் நனவில் கற்கப்படுபவை. காவியங்கள் கனவுகளில் கற்கப்படுபவை. அரசன் கற்றது காவியம். அரசன் கற்ற முறையை குணாட்யர் அறியவே இல்லை” என்றது.
நான் புன்னகையுடன் என் கைகளை விரித்தேன். “இவை எல்லாமே இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்கின்றன. முதல்கேள்விக்கும் அதுவே பதிலென அமையவேண்டும். பேரறிஞர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில் சிறுவனாகிய குணபதி வென்றதும், அதே அவையில் குணாட்யராக அவன் தோல்வியடைந்ததும் ஒரே காரணத்தால்தான். அவர் அத்தனை இலக்கண இலக்கியங்களுக்கும் அடித்தளமான வேறு ஒன்றுக்கு இளமையிலேயே தன்னை முழுமையாக அளித்திருந்தார். ஆகவேதான் அவர் அனைத்தையும் விரைவில் கற்றுக்கொண்டார். அந்த அடித்தளத்தையே மொழி என்று அவர் எண்ணியிருந்தமையால் மூன்றுமாதங்களில் கற்கத் தகுந்ததே மொழியின் மேற்பரப்பு என்று உணராமல் இருந்தார்.”
சுத்யும்னன் “நான் தோல்வியடைந்தேன்” என்றான். “என் குலம் எந்த இடத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கும் என்பதைக் கண்டுகொண்டேன். அதை என்னால் மாற்றமுடியாது என்றும் உணர்ந்தேன்.”
“இந்தக் கதைவிளையாட்டை நாம் மேலும் தொடரலாம்” என்று நான் அவனிடம் சொன்னேன். “என்னிடம் இன்னும் பல்லாயிரம் கதைகள் உள்ளன.”
“ஆனால் இனி இக்கதைகளைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கதைகளை தொடர்ந்து கேட்பவர்கள் காவியகர்த்தர்கள் ஆகிறார்கள். ஒற்றைக்கதையை மட்டுமே கேட்பவர்கள்தான் வெல்லமுடியும். நான் வெல்லப் பிறந்தவன்.”
“ஆனால் முழுமையானதே உண்மை. முழுமையற்றது பொய்.” என்றேன். “ஒரு கதை எப்போதுமே ஒரு பிருஹத்கதையின் உடைந்த துண்டுதான்”
“உண்மை மேல் ஒரு கல்லும் நிலைகொள்ள முடியாது. நான் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி எழுப்ப விரும்புபவன். என் அடித்தளக் கற்கள் பொய் மீதுதான் நிலைகொள்ளும் என்றால் அதுவே எனக்குரியது.”
“உன் பேரரசு அழியும்.”
“ஆமாம், ஆனால் எல்லாமே அழியும்” என்று அவன் சொன்னான். “அழியாதது கதை மட்டுமே. நான் கதைகளை கேட்பவன் அல்ல, கதைகளின் பாத்திரமாக ஆகின்றவன் என்பதை இங்கே உன்னிடம் கதைகளைக் கேட்கும்போது உணர்ந்தேன்.”
“உன் கதையைத்தான் நான் மேலும் சொல்லவிருக்கிறேன்.”
“அது உன் பணி… என் கதையை நான் வாழ்ந்து அறிந்துகொள்கிறேன்” என்று அவன் அதே புன்னகையும் உறுதியுமாகச் சொன்னான். “விந்தையாக இல்லையா? அனைத்துக் கதைகளையும் அறிந்த பைசாசிகனாகிய நீ வெறுமே கதைகளை அறிபவனும் சொல்பவனும் மட்டும்தான். கதைகளை அறியாமல் அவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித்தான் நீ பேசியாகவேண்டும். உனக்கு வேறுவழியே இல்லை…”
நான் அவனால் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன் என்று உணர்ந்தேன். என் சிரிப்பு மறைந்தது.
சுத்யும்னன் வெடித்துச் சிரித்து “வருந்தாதே. அறிவற்றவர்களை அறிவுடையோர் போற்றிப் பாடவேண்டும் என்பது என்றுமுள்ள உலக வழக்கம்” என்றான். “ஆகவே ஒரு நெறியை உருவாக்கவிருக்கிறேன். என் ரத்தத்தில் உருவாகும் அரசில் எந்த அரசனும் மொழியைக் கற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசுபொருளாகவே இருக்கவேண்டும், பேசுபவர்கள் ஆகக்கூடாது.”
நிழல் ஒன்று அவன் தோள்மேல் கவிந்து “அக்னிபுத்ர சதகர்ணி வரை அந்த வழக்கம் தொடரும் இல்லையா?” என்று சிரித்தது.
“அதுதான் வீழ்ச்சியின் தொடக்கம்…” என்றது இன்னொரு நிழல்.
“அதை நான் மாற்றமுடியாது” என்று சுத்யும்னன் சொன்னான். “அதற்குப் பின் என்ன நிகழும் என்பதையும் நான் யோசிக்கவே போவதில்லை. நான் தொடங்கவிருக்கிறேன்… அதுதான் என் முன் உள்ள பணி…” கைகூப்பி வணங்கி, “எனக்கு என் வழியைக் காட்டியவன் நீ. என் உலகை உருவாக்கி என் முன் விரித்தவனும் நீ. நீயே என் தெய்வம். என் அரண்மனையில் உனக்காக ஓர் ஆலயம் அமைப்பேன். உன்னை என் தலைமுறைகள் தெய்வமென வணங்கும்” என்றான்.
“அக்னிபுத்ர சதகர்ணி வரை… ஆம், அதுவரை” என்று ஒரு நிழல் எக்களித்துச் சிரித்தது.
தானும் சிரித்தபடி அதை நோக்கி “அதைப்பற்றி நீங்கள் பேசி மகிழ்ந்திருங்கள்” என்று சொல்லி சுத்யும்னன் அந்தக் காட்டில் இருந்து விலகிச்சென்றான்.
நிழல்கள் அவன் பின்னால் சென்று கூச்சலிட்டன.
“நீ எந்தப் போர்களில் எல்லாம் வெல்வாய், எப்போது தோற்பாய் என்று என்னால் சொல்லமுடியும்” என்று ஒரு நிழல் கூச்சலிட்டது. “அதை தெரிந்துகொண்டால் தோல்விகளை உன்னால் தவிர்க்கமுடியும்.” என்றது ஒரு நிழல்.
“உனக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் நான் இப்போதே அடையாளம் காட்டுகிறேன்” என்றது இன்னொரு நிழல்
அவன் திரும்பியே பார்க்காமல் முன்னால் செல்ல, ஒரு நிழல் கடைசிவரை அவனுடன் சென்று “நீ எடுக்கப்போகும் தவறான முடிவுகளின் பட்டியல் ஒன்றை உன்னிடம் சொல்கிறேன்” என்றது.
அவன் காட்டின் விளிம்புக்குச் செல்வது வரை அவை கூவிக்கொண்டே பின்தொடர்ந்து சென்றன. ஒரு நிழல் காட்டின் விளிம்பில் நின்ற பேராலமரத்தின் மேல் ஏறிக்கொண்டு தொலைதூரத்தில் செல்லும் அவன் செவிக்குக் கேட்கும்படி கூவியது. “இதோபார், உன் வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி அடைந்து செல்லும்போது ஒரு கணமும் மறக்கமுடியாத அவமதிப்பு ஒன்றை அடைவாய். அந்தச் சிறுமையை உன் சாகும் கணத்தில்கூட எண்ணிக்கொண்டிருப்பாய். அது என்ன என்று உனக்கு நான் சொல்கிறேன். அதை நீ தவிர்க்கமுடியும்… திரும்பிப் பார். என்னைப் பார்.”
“அவன் சென்றுவிட்டான். அவன் திரும்பிப் பார்த்திருந்தால், அல்லது சபலப்பட்டு ஒரு கணம் கால்கள் தயங்கியிருந்தால் அவன் கதைகளின் சுழலில் மீண்டும் சிக்கிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றான்” என்று கானபூதி சிரிக்கும் கண்களுடன் என்னிடம் சொன்னது. “மாவீரர்கள் அப்படித்தான். அவர்கள் ஒற்றைக் குறிக்கோள் கொண்டவர்கள், தங்களை அதிலிருந்து திசைதிருப்பிக் கொள்ள அனுமதிக்காதவர்கள்.”
“ஆனால் அவன் அவர்கள் சொல்வதையும் கேட்டிருந்தால் பலவற்றைத் தவிர்த்திருக்கலாமே?” என்றேன்.
“அது சாமானியர்களின் சிந்தனை. ஒரு கதை இன்னொரு கதைக்குத்தான் கொண்டுசெல்லும். அந்த சுழற்சியில் இருந்து விடுபடவே முடியாது.” என்று கானபூதி சொன்னது.
“சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைய அக்னிபுத்ர சதகர்ணியா காரணம்?” என்று நான் கானபூதியிடம் கேட்டேன்.
கானபூதி அதைக் கேட்க மறுத்து அசைவில்லாத பார்வையுடன் அமர்ந்திருந்தது.
சக்ரவாகி என்னிடம் “கதைவிளையாட்டில் மட்டுமே அது கதை சொல்லும்… நீ கேட்ட கேள்விக்கான பதில் இன்னும் அதன் கதைகளில் தெளிந்து வரவில்லை” என்றது.
“சாதவாகனர்களின் தோல்வி அக்னிபுத்ர சதகர்ணி மொழியறிந்த நாளில் தொடங்குகிறதா? அதையா சுத்யும்னன் தெரிந்துகொண்டு சென்றான்?” என்று நான் மீண்டும் பொதுவாக நிழல்களை நோக்கிக் கேட்டேன்.
ஆபிசாரன் என்னை நோக்கி வந்து இரு கைகளையும் மண்ணில் ஊன்றி, கண்களில் ஏளனச் சிரிப்புடன் சொன்னது. “நான் நடந்ததைச் சொல்கிறேன். எனக்கு நீ என்ன தருவாய்?”
“நீ கேட்பது என்ன?”
“நான் சொல்லும் கதையையும் நீ கேட்கவேண்டும்… முடிவுவரை எதிர்வார்த்தையே இல்லாமல் கேட்கவேண்டும்…”
“சரி, சொல்” என்றேன். “நான் இன்றிருக்கும் நிலையைவிட என்னை எந்தக்கதையும் கீழிறக்கிவிட முடியாது.”
“நான் உன்னைக் கீழிறக்குவேன் என்று ஏன் நினைக்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்ய முயல்பவன். நானே உன்னிடம் உண்மையைச் சொல்பவன்.” என்றது ஆபிசாரன்.
“சொல்” என்று நான் சொன்னேன்.
“அக்னிபுத்ர சதகர்ணி தேன்குடத்தில் விழுந்த தேனீபோல ஆனான் என்று காவியங்கள் சொல்கின்றன. இரவும் பகலும் அவன் காவியங்களையே வாசித்தான். காவியங்களை அவனுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்களை நியமித்தான். பகல் முழுக்க அவர்கள் அவனுக்குப் பாடம் நடத்தினர். இரவில் அவன் தூங்கும்போது அவன் அறைக்கு வெளியே அவன் செவிகளில் விழும்படி மகாகாவியங்களை இசைக்கலைஞர்கள் யாழுடன் சேர்த்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள்” ஆபிசாரன் சொன்னது.
பேரரசன் சதகர்ணி தானே ஒரு கவிஞனாக ஆனான். ரிதுமகோத்ஸ்வம், வர்ஷகோலாகலம், புஷ்பசம்வாதம் ஆகிய காவியங்களை எழுதி அவற்றை பிரதிஷ்டானபுரியின் அவையில் அரங்கேற்றினான். அவனே காவியப்பிரதிஷ்டான சபையின் முதன்மைக் கவிஞன் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அவனுக்கு சிறந்த மாணவர்கள் அமைந்தார்கள். அவர்கள் அவனுடைய காவியங்களை கற்று அவற்றை கலிங்கம் முதல் காம்போஜம் வரை, காசி முதல் காஞ்சிபுரம் வரை கொண்டுசென்று பரப்பினார்கள். பாரதவர்ஷமெங்கும் அவனுடைய வரிகளே புகழ்பெற்றிருந்தன.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் காவியங்கள் மேல் நம்பிக்கை இழக்கலானான். அவை வெறும் அழகிய சொற்சேர்க்கைகள் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஆனால் அதை அவனே எவரிடமும் சொல்லமுடியாத நிலை உருவாகிவிட்டது. தன் அரசியிடம் அவன் சொன்னான். ”எனக்கு சர்வ வர்மன் கற்றுத்தந்தது மிகமிக அளவுக்குட்பட்ட ஒரு கல்வி. நூற்றெட்டு பூக்களை அவர் எனக்கு அளித்தார். அதைக்கொண்டு மாலைதொடுக்கக் கற்றுத்தந்தார். நான் தொடுத்த மாலைகள் மிக அழகானவை, ஒவ்வொன்றும் புதியவை. ஆனால் நான் எங்கோ முடிவில்லாத வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட மலர்கள் பூத்த காடு ஒன்று இருப்பதை உணர்கிறேன். இங்கே நான் சிறைப்பட்டிருக்கிறேன்”
அரசி அவனுடைய அந்த மனநிலையை விரும்பினாள். அவன் சம்ஸ்கிருதக் கல்வி வழியாக விலகி நெடுந்தொலைவு சென்றுவிட்டதாக அவள் கவலை கொண்டிருந்தாள். ”சொற்களில் ஈடுபடுபவர்களுக்கு சொற்களின் உலகமே முழுமையானதாகத் தோன்றிவிடுகிறது, மெய்யுலகை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்” என்று அவள் அவனிடம் பலமுறை சொல்லியிருந்தாள். “மெய்யுலலகுக்குச் சற்றுச் சுவையூட்டவே சொற்கள். சொற்களில் வாழ விரும்புபவர்கள் மூன்றுவேளை உணவையும் பாயசமாகவே உண்ணவேண்டும் என எண்ணும் சிறுவர்களைப் போல.”
ஆனால் அவன் சொற்களில் இருந்து அவள் விரும்பியதுபோல மெய்யுலகை நோக்கி வரவில்லை. மேலும் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். “சொற்களில் இருந்து கனவுக்கும், கனவுகளின் வழியாக கனவுகள் ஊறும் அந்த ஆதிச்சுனைக்கும் செல்வதற்குத்தான் வழி உள்ளது” என்று அவன் அரசியிடம் சொன்னான்.
அவனிடம் வந்துசேர்ந்த கனவுத்தன்மை அவளுக்கு அச்சமூட்டியது. அவன் சொல்லில் மூழ்கிக்கிடந்தபோது இசைக்கருவியைக் கற்றுக்கொள்பவன் போலவும், சதுரங்கம் ஆடுபவன் போலவும் மாறிமாறித் தோற்றமளித்தான். உலகியலின் தர்க்கம் அவனில் இருந்து விலகினாலும் மேலும் செறிவானதும் வரையறைக்குட்பட்டதுமான இன்னொரு தர்க்கம் அவனிடம் வந்தமைந்தது. ஆனால் கனவுக்குள் அவன் நுழைந்தபோது எல்லா தர்க்கங்களையும் இழந்தவனானான். பொழுது, சூழல், சுற்றம் எதையுமே அறியாதவனாக மாறினான். அவன் சொற்களில் எந்த பொருளும் கூடவில்லை. அவன் எவரையும் பார்த்துப் பேசவுமில்லை.
அவனுக்குச் சித்தப்பிரமையா என்று அவையில் இருந்த அமைச்சர்கள் சந்தேகப்பட்டனர். மூன்று அமைச்சர்கள் வந்து அரசியிடம் அதைப்பற்றிப் பேசி அரசருக்கு மருத்துவம் பார்க்கவேண்டியதன் தேவை பற்றி அறிவுறுத்தினார்கள். அரசனின் முதல் மகனுக்கு அப்போது ஒன்பது வயது. அவனை அரசனாக்கி அரசியே ஆட்சி செய்யலாம் என்று தலைமை அமைச்சர் சொன்னார். ஆனால் அந்த முடிவை அரசியால் அப்போது எடுக்கமுடியவில்லை.
ஓர் இரவில் தன் அரண்மனையின் உப்பரிகையில் தனியாக நின்றிருந்த அரசன் கீழே வரிசையாக யாரோ செல்வதைக் கண்டான். அவர்கள் ஓசையில்லாமல் சென்றுகொண்டிருந்தார்கள். அங்கே சாலையில் விளக்குத் தூண்களின் வெளிச்சம் இருந்தாலும் அவர்களின் உருவம் ஏதும் துலங்கவில்லை. அவன் உப்பரிகையின் விளிம்பில் இருந்து கீழே தொற்றி இறங்கி சாலைக்கு வந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவர்களை காவலர்கள் எவரும் பார்க்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. காவலர்கள் அனைவருமே அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். அந்த வரிசை நேராகச் சென்று அவருடைய முப்பாட்டனால் நிறுவப்பட்ட விஜயஸ்தம்பத்தை அணுகியது. அங்கே காவலர்கள் இருவரே இருந்தார்கள். அவர்கள் விழித்திருந்தனர், ஆனால் அத்தனை பெரிய வரிசையை அவர்கள் பார்க்கவில்லை. ஒரு தூணின் மறைவில் நின்றபடி அரசன் அந்த கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த உருவங்கள் எல்லாமே நிழல்களாகவே தெரிந்தன. விளக்கொளி அவர்கள் மேல் பட்டாலும் அவர்கள் துலங்கி வரவில்லை.
அவர்கள் ஏதோ முனகலாக பாடியபடி, கைகளை நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து, சிற்றடி வைத்து விஜயஸ்தம்பத்தைச் சுற்றிவந்தார்கள். அவர் பார்த்துக்கொண்டு நின்றதைக் கூட அவர்கள் அறியவில்லை. அதன்பின் அதைச்சூழ்ந்து அமர்ந்தனர். அமர்ந்தபடியே நெஞ்சில் கைவைத்து முன்னும் பின்னும் அசைந்தாடி முனகலான ஒலியில் பாடினர்.
அவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொருட்டு அரசன் அருகே சென்றான். அருகே செல்லச் செல்ல அவர்கள் மேலும் தெளிவற்றவர்களாக ஆனார்கள். அவர்கள் ஆண்களா, பெண்களா, ஆடைகள் அணிந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. மேலும் அவர் அணுகியபோது ஓர் உருவம் அவனைப் பார்த்துவிட்டது. அது திடுக்கிட்டு எழ, சட்டென்று அத்தனைபேரும் எழுந்து அவனைப் பார்த்தனர். அவன் அசையாமல் நிற்க அவர்களும் அசைவின்றி நின்றனர். நீரில் தெரியும் பிம்பங்கள்போல அவர்கள் மெல்ல அசைந்தாலும் அசைவிலாதிருந்தனர்.
அவர்களில் ஓர் உருவம் திரண்டு அவனை நோக்கி வந்தது. அது ஒரு முதியவர். அவர் அவரசனின் அருகே வந்து “நீங்கள் அரசர் அல்லவா?” என்றார்.
“ஆம்” என்று சதகர்ணி சொன்னான். “இந்நிலத்தை ஆட்சி செய்பவன்.”
“நாங்கள் ஆட்சி செய்யப்பட்டவர்கள்” என்று முதியவன் சொன்னான். “இந்த வெற்றித்தூணை மண்ணுடன் இறுக்கி நிலைநிறுத்தியிருப்பது சமர்களாகிய எங்கள் ரத்தம்.”
அக்னிபுத்ர சதகர்ணி அன்று கண்ட அந்தக் காட்சியை பின்னர் அவரே எழுதிய ’போதோதய வைபவம்’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறான். அங்கே காலையில் மயங்கிக்கிடந்த அவனை காவலர்கள் அரண்மனைக்குக் கொண்டுசென்றனர். பலநாட்கள் காய்ச்சலில் பிதற்றிக்கொண்டிருந்த அவன் நலமடைந்தபின் மிகமிக அமைதியானவன் ஆனான். ஓராண்டுக்காலம் ஒரு வார்த்தைகூட எவரிடமும் பேசவில்லை.
ஆனால் அதுவரை ஆட்சியில் அவனுக்கு இருந்த ஆர்வமின்மை மறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அரசவைக்கு வந்து முழுநேரமும் இருந்தான். எல்லாச் சொற்களையும் கூர்ந்து கேட்டான். தன் ஆணைகளை எழுத்தில் சுருக்கமாக அளித்தான். அந்த வரிகளைப் படித்த அமைச்சர்கள் மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அவை வெளியிடப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். அவற்றுக்கு மறுவார்த்தை இருக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டார்கள்.
மேலும் ஓராண்டுக்குப் பின் அக்னிபுத்ர சதகர்ணி பிரதிஷ்டானபுரியில் இருந்து தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் கிளம்பி வடக்கே பயணம் செய்து, கனகபதம் என்று அப்போதும் சாஞ்சி என்று பிற்பாடும், அழைக்கப்பட்ட சிறு குன்றில் அமைந்த புத்தபீடிகையை அடைந்து அங்கே இருந்த விகாரையில் தங்கினார். அங்கே சாக்கிய மாமுனிவர் வந்து தர்மசம்போதனை செய்த இடத்தில் செந்நிறமான கற்களால் கவிழ்ந்த கலத்தின் வடிவில் மகதத்தின் மாமன்னர் அசோகரால் கட்டப்பட்டிருந்த தூபி நின்றிருந்தது. நாற்பத்தொரு நாட்கள் அங்கே நோன்பிருந்த பிறகு அந்த தூபியைச் சுற்றிவந்து அக்னிபுத்ர சதகர்ணி பௌத்தமதத்தை ஏற்றார். கொல்லாமை உட்பட அவர்களின் எட்டு நெறிகளையும் தனக்காக வகுத்துக்கொண்டார்.
அவர் திரும்பி வந்தபோது அவருடன் பதினெட்டு புத்தபிக்ஷுக்களும் வந்தனர். அவர்கள் தங்களுடன் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட சிறிய புத்தர்சிலை ஒன்றையும் கொண்டுவந்தனர். தர்மசக்கரத்தை உருட்டும் கைகளுடன் அமர்ந்திருந்த அந்தச் சிலை கோதாவரிக்கரையில் அரசனால் உருவாக்கப்பட்ட புத்தபீடிகையில் நிறுவப்பட்டது. அரசன் தர்மத்தை ஏற்றுக்கொண்டதை நிறுவுவதற்காக கோதாவரியின் கரையில் அரசனால் ஒரு தூபி நிறுவப்பட்டது. ஓராண்டுக்குள் அரசகுலத்தினரும், அமைச்சர்களும், அவைப்புலவர்களும் பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டனர். ஏழாண்டுகளில் பிரதிஷ்டானபுரியே பௌத்தநகரமாக ஆகியது.
தான் ஆட்சி செய்யும் நாடெங்கும் பௌத்தத்தை கொண்டுசெல்ல சதகர்ணி முயன்றார். அரசநாணயங்களில் புத்தரின் முகம் இடம்பெற்றது. புத்தநெறியைக் கற்பிக்கும் மடாலயங்கள் உருவாக்கப்பட்டன. பிரதிஷ்டானபுரியைச் சுற்றி அமைந்த மலைப்பாறைகளைக் குடைந்து மிகப்பெரிய சைத்யங்களும் விகாரங்களும் அமைக்கப்பட்டன. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதிய பிக்ஷுக்களுடன் தங்கி சாக்கிய தர்மத்தைப் பயின்றார்கள். அங்கிருந்து அவர்கள் தர்மத்தின் செய்தியுடன் அறியாத நிலங்களை நோக்கிச் சென்றார்கள்.
ஒவ்வொருநாளும் குடைவரைகள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அங்கே தர்மசம்போதனை முத்திரையுடன் புத்தரும், அறநிலையாகிய ஸ்தூபியும் அமைந்திருந்தன. அந்த குடைவரைகள் அமைந்த இடங்களை இணைத்துக்கொண்டு செல்லும் கழுதைப்பாதைகள் மலையிடுக்குகளின் வழியாக உருவாக்கப்பட்டன. அக்னிபுத்ர சதகர்ணியின் வம்சத்தினர் அனைவருமே பௌத்தர்களாகத் திகழ்ந்தார்கள். அவன் வம்சத்தில் வந்த கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சியின்போது சாதவாகனர்களின் நிலத்தில் பௌத்தம் சென்றடையாத இடமே இல்லை என்ற நிலை உருவானது.
கௌதமிபுத்ர சதகர்ணி நாடெங்கும் தர்மஸ்தம்பங்களை நாட்டினார். குடைவரைகளிலும் பாறைகளிலும் தர்மத்தின் செய்திகளை எழுதிவைத்தார். பௌத்த தர்மத்தை முன்னெடுத்த பேரரசர்களில் அசோக மகாச்சக்ரவர்த்திக்குச் சமானமானவராக அவரை கவிஞர்கள் போற்றினார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் சாதவாகனர்களின் அரசுடன் புதிய அரசர்கள் தாங்களே விரும்பி வந்து இணைந்து கொண்டார்கள். போரில்லாமலேயே அப்பேரரசு வளர்ந்தது. அவ்வாறு இணைந்த நாடுகளுக்கு பெரிய வணிகப்பாதைகள் அமைந்தன. வணிகம் பெருகி செல்வம் குவிந்தது. கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயங்களே பாரதநிலம் முழுக்க புழக்கத்தில் இருந்தன.
ஆபிசாரன் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டியபடி கேட்டது. “இந்தக் கதையிலும் கேள்வி உள்ளது. சொல், ஏன் அக்னிபுத்ர சதகர்ணி பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டார்?”
நான் புன்னகையுடன் ”சுத்யும்னன் சொன்ன அதே பதில்தான்” என்றேன். “நிஷாதர்களின் குலத்தில் உருவானவன் அவன் என்பதுதான் காரணம்”
“ஆ! சிறந்த பதில்!” என்றது ஆபிசாரன். கானபூதியிடம் “இவருக்குக் கதைகளைக் கேட்கும் தகுதி உள்ளது, நான் சொல்கிறேன், எல்லா தகுதிகளும் உள்ளன” என்றது.
நான் “குணாட்யரைப் பற்றி இங்கே பைசாசிகர் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன ஆனார்?” என்றேன்.
“நீ கேட்ட கேள்வி வேறொன்று. பெண்களைப் பற்றியது.” என்று சக்ரவாகி சொன்னது “அதற்கு மட்டும்தான் பைசாசிகர் கதைகளின் வழியாக பதில் சொல்வார்…”
”என்ன கேள்வி என்று நான் சொல்கிறேன்” என்றது சூக்ஷ்மதரு “அன்னையர் எங்கே ஏன் குழந்தைகளைக் கைவிடுகிறார்கள், அதுதான் உன் கேள்வி.”
ஆபிசாரன் அவர்களை உந்தி விலக்கி என்னருகே வந்தது “குணாட்யரைப் பற்றி நான் சொல்கிறேன். குணாட்யர் தன் இல்லத்துக்குச் சென்றார். அழுதபடியே தன் பின்னால் வந்த தன் மாணவர்கள் அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னார். அவருடைய இரண்டு அணுக்க மாணவர்கள் மட்டுமே அவருடன் இருந்தனர். குணதேவனிடம் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் தன் இரு காதுகளையும் குத்தி உடைக்கும்படியும், நந்திதேவனிடம் தன் கண்களை இன்னொரு கொதிக்கும் ஊசியால் குத்திவிடும்படியும் ஆணையிட்டார்.”
”அவர்கள் தயங்கி அழுதார்கள். ஆனால் அது குருவின் ஆணை என்று அவர் சொன்னபோது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எழுத்தாணியால் அவருடைய காதுகளையும் கண்களையும் அழித்தனர். அவர் தனக்கு அவர்கள் செய்யவேண்டியதென்ன என்று விளக்கிய பின்னர், தன் இடையில் இருந்த பாக்குவெட்டும் கத்தியால் தன் நாக்கை வெட்டிக்கொண்டார். அந்த நாக்கை அவர்கள் கோதாவரியின் கரையில் இருந்த நாமகளின் கோயிலுக்குக் கொண்டுசென்று, அதிகாலையின் வேள்வியில் தேவியின் முன்னால் எரிந்துகொண்டிருந்த அக்னிகுண்டத்தில் இட்டனர். அது இளநீலமாக எரிந்து வானத்திற்குச் சென்றது”
ஆபிசாரன் தொடர்ந்தான். “அவர்கள் அவர் ஆணையிட்டபடி அவரை கைகளைப் பிடித்து இட்டுச் சென்று கோதாவரியின் மறுகரையில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் விட்டனர். அதன்பின் திரும்பிப் பார்க்காமல் நடந்து பிரதிஷ்டானபுரிக்கு மீண்டு வந்தனர். அவர்கள் அதன்பிறகு காவியப்பிரதிஷ்டான சபைக்கு செல்லவில்லை. ஆற்றங்கரையிலேயே குடில்கள் அமைத்து அங்கே தங்களைத் தேடிவந்தவர்களுக்கு இலக்கணமும் காவியமும் கற்றுக்கொடுத்தபடி வாழ்ந்தனர். காவியசபையின் தலைவராக சர்வசர்மன் ஆனான். ரத்னாகரன் அவனுடைய துணைவனாக சபையில் அமர்ந்தான்.”
“சிலநாட்கள் குணாட்யரைப் பற்றி பிரதிஷ்டானபுரியில் பேசிக்கொண்டார்கள். அவரது கதைகளை கவிஞர்கள் பாடல்களாக எழுதி தெருக்களில் பாடினார்கள். அந்தப் பாடல்களும் கதைகளும் பாரதம் முழுக்க பரவின. அதன்பின் குணாட்யர் மறக்கப்பட்டார். அவரை காவியங்களில் மட்டுமே நினைவுகூர்ந்தனர். அவரை காட்டில் புலி தின்றுவிட்டது என்றும், யக்ஷர்களோ பைசாசிகர்களோ கொன்றுவிட்டார்கள் என்றும் பேசப்பட்டது” ஆபிசாரன் சொன்னான். “நிகழ்காலம் அப்படிப்பட்டது. அது எதிர்காலத்தை அறியாதது, இறந்தகாலத்தை மறந்துவிடுவது.”
நான் கானபூதியிடம் “உன் கதையைச் சொல்” என்றேன்.
“நான் சொல்லவிருப்பது குணாட்யரின் கதையைத்தான். அவரை நான் காட்டில் சந்தித்தேன்” என்று கானபூதி சொல்லத்தொடங்கியது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
