நிழல்கள் உடனிருக்கின்றன.

நமக்குத் தெரியாமல் மனம் எதையாவது நம்மை மீறி உணர்கிறதா? ஆம் என்பது என் அனுபவம். என் மனதின் நுண்மைதான் என்னுடைய பெரும் செல்வம். என் பெரும் சுமையும் வதையும் அதுதான்.

சென்ற மூன்று நாட்களாகவே தூக்கமே இல்லை. 17 ஆம் தேதி தொடங்கியது. ஆழ்ந்த அமைதியின்மை. என் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் நான் ஒரு மனநோயாளியா என்று தோன்றியிருக்கும். நடை சென்றபோது என்னைச் சந்தித்த ஒருவர் “என்ன சார் பிரச்சினை?” என்றார்.

“ஒண்ணுமில்லியே” என்றேன்.

“இல்லை, தானே பேசிட்டே போறீங்க”

புன்னகைத்து கடந்துசென்றேன். என்ன பிரச்சினை என்று எனக்கே தெரியவில்லை என்று சொன்னால் குழம்பிவிடுவார்.

எழுதிக்கொண்டிருக்கும் நாவல் தொடரான ‘காவியம்’ ஒரு முக்கியமான காரணம். அது வேர்களைப் பற்றிய நாவல். தளிர், இலை, பூ, காய், கனி என ஏதுமில்லை. ஆழத்தின் மௌனமும் இறுக்கமும் அழுக்கும் செறிவும் கொண்டது. ஈரமும்தான். அது என்னை கையிலெடுத்து வீசி விளையாடுகிறது.

ஆனால் எழுத்துக்கு என்னைக் கொடுப்பதொன்றும் புதியது அல்ல. வெண்முரசு நாட்களில் தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவே உள்ள கோடுவழியாகக் கடந்து சென்றிருக்கிறேன். உச்சகட்ட பொறுமையின்மை, எவருடனென்று இல்லாத சீற்றம் என அலைக்கழிந்திருக்கிறேன்.

கலை என்றோ இலக்கியமென்றோ தெரியாதவர்கள் மட்டுமே வாழும் ஒரு தேசத்தில் அதை எவரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. எழுத்தாளனை வசைபாடும் ஒரு வாய்ப்பையும் இங்குள்ள பாமரர் விடுவதுமில்லை. பைத்தியமோ குற்றவாளியோ ஆக்கிவிடுவார்கள். ஆகவே என்மேல் ஒரு நடுத்தரவர்க்க மனிதன் என்னும் வேடத்தை எடுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறேன். கூடுமானவரை மனிதர்களை தவிர்த்து வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

தூங்க முடிந்தது என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலையில் புதியதாக விழித்தெழ முடியும். இந்த அலைக்கழிப்பை நாட்களாகப் பிரித்துக் கொள்ள முடியும். து ஃபு சொன்னதுபோல, அது ஆற்றை வாளால் வெட்டுவதுபோலத்தான். ஆனால் வெட்டும் செயல் நம்முள் ஓடும் ஆற்றை துண்டுகளாக்கிவிடுகிறது.

பதினேழாம் தேதி இரவு வழக்கம்போல ஒன்பதரைக்குப் படுத்தேன். திடுக்கிட்டு எழுந்தேன். அதன்பின் தூக்கமே இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தேன். பகலில் தூங்கவில்லை. மதியத்திற்குமேல் டீயும் காபியும் குடிக்கவில்லை. காலையில் குடித்த காபி கடுமையாக ஆனதுதான் காரணமா என்றெல்லாம் யோசித்தேன். தூக்கமே இல்லை. விடிய விடிய எழுதிக்கொண்டிருந்தேன். காலை நான்கரை மணிக்கு கூடத்திலேயே சோபாவில் படுத்து இரண்டு மணிநேரம் தூங்கினேன்.

அன்று பகல் முழுக்க இருந்துகொண்டிருந்த என்னவென்று தெரியாத பதற்றத்தையும் எவர் மீதென்று தெரியாத எரிச்சலையும் அந்த தூக்கக்கலக்கம் கொஞ்சம் மங்கலடையச் செய்தது. ஒரு சினிமா பற்றிப் பேச ஒருவர் வந்திருந்தார். அது கொஞ்சம் விலக்கிச் சென்றது. அன்று பகலில் தூக்கமில்லை. தலைநிறைய எண்ணை தேய்த்து குளித்தேன். பத்து கிலோமீட்டர் நடை சென்றேன். ஆனால் அன்றும் பன்னிரண்டு மணிக்குத்தான் தூக்கம். காலை மூன்று மணிக்கே விழித்துக்கொண்டேன்.

அடுத்தடுத்த நாட்களிலும் அதேதான். தூக்கம் ஒருசில மணிநேரம் மட்டுமே. மோசமான எதையோ எதிர்பார்ப்பவன் போலிருந்தேன். என்னென்னவோ தீமைகள் வரவிருப்பதாக கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஒவ்வாதவை ஏதாவது கண்ணுக்குப் பட்டுவிடும் என்று வாட்ஸப், இணையம் என எல்லாவற்றையும் அணைத்து வைத்தேன். சரி, மனநிலை மாறட்டுமே என அருகே உள்ள பரோட்டா கடையில் இருந்து பரோட்டாவும் சிக்கனும் வாங்கிவந்து அருண்மொழியுடன் அமர்ந்து சாப்பிட்டேன். நகைச்சுவைக் கதைகள், படக்கதைகள் வாசித்தேன். அகம் அப்படியே கல்போலத்தான் இருந்தது.

தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இருந்தேன். நாவல் அதுவே கட்டின்றி வளர்ந்து செல்வதை நான் அனுமதித்தாலே போதும். அநேகமாக ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை, விரல்களை கணிப்பொறி விசைப்பலகைமேல் வைப்பதைத் தவிர. சொல்லப்போனால் நாவலில் இருந்தே மிக விலகிவிட்டேன். அதன் முந்தைய அத்தியாயம் என்ன என்றுகூட நினைவில் இல்லை. எந்தத் தொடர்ச்சியையும் யோசித்து எடுக்கவும் முடியவில்லை. ஆனால் அது எப்படியோ தானாக சரியாக வரும், வடிவம் அமையும் என முன்னர் வெண்முரசு வழியாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த நாவல் ஒருவகையான பைத்திய வெளிப்பாடு. வெளிப்பட்டாலே அது முழுமையாகிவிடுகிறது.

நேற்று முன்தினமும் நேற்றும் எரிச்சலும் பதற்றமும் அடங்கி, ஆழ்ந்த துயர் நிறைந்த மனநிலை நீடித்தது. melancholy என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரிடமாவது பேசலாம் என எண்ணினால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் தீவிரமாக இருந்தனர். கிருஷ்ணன் நண்பர்களுடன் காட்டுப்பயணம், மழைப்பயணம் என இருந்தார். குவிஸ் செந்தில் கோவை புத்தகக் கண்காட்சிப் பணிகளில். காசர்கோடு நண்பர்களை அழைத்தேன். அவர்கள் அங்கே ஏதோ திரைப்பட விழா ஒருங்கிணைப்பில் பதற்றமாக இருந்தார்கள்.

அருண்மொழியிடம் வழக்கம்போல விளையாட்டுத்தனமான சாதாரணமான உரையாடல்கள். அவை மட்டுமே ஒரே விடுதலையாக இருந்தன. மாறாத உற்சாகமும் நேர்நிலை மனநிலையும் கொண்ட ஒரு சிறுமியும், தீவிரமாகப் படிக்கும் ஓர் அறிவுஜீவியும் கலந்த ஆளுமை அவள். இந்நாட்களில் அவள் இல்லையென்றால் மூளையின் மூடி தெறித்துவிட்டிருக்கும்.

நேற்றிரவும்  தூங்காமலிருந்தேன். தமிழ்விக்கியில் இரண்டு பெரிய பதிவுகள் போட்டேன். இரண்டு பதிவுகளைச் சரி செய்தேன். மொத்தம் நான்கு நூல்களை அதற்காகப் புரட்டினேன். விடிந்துவிட்டது. காலையில் நடைசென்று டீ குடித்து சுற்றி திரும்பிவந்தேன்

வந்து சேர்ந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது காட்சன் அழைத்து அவர் மகன் மித்ரன் இறந்துவிட்டான் என்று சொன்னார். பலநிமிடங்கள் மண்டைக்குள் செய்தி ஏறவே இல்லை. பின்னர் ‘இதுதானா?’ என்று அகம் அரற்றத் தொடங்கிவிட்டது. அஞ்சலி: மித்ரன் காட்சன்

சென்ற சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று ஒரு செய்தி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அமைதியிழந்திருந்தேன். என் அம்மா இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னரே நான் கொடுங்கனவுகள் கண்டுகொண்டே இருந்ததை அடிக்கடி நினைப்பதுண்டு.

உடனிருக்கும் நிழல்களைப் பற்றி காவியம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நான் உணரும் நிழல்கள் அவை. அந்நிழல்களைப் பற்றிய மெல்லிய உணர்வையாவது அடைந்தவர்களுக்கே அந்நாவல் புரியும் என நினைக்கிறேன். சிலரே இருப்பார்கள் என்றாலும் அவர்களுக்காக அது எழுதப்பட்டுள்ளது என அவர்கள் உணர்வார்கள்.

கிளம்பி உதயமார்த்தாண்டம் அருகே காட்சனின் மனைவி இல்லத்திற்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். புத்ரசோகம் போல தாளமுடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் விசுவாசம் என்று கிறிஸ்தவர்கள் சொல்லும் ஒன்று உண்டு, முழுமையாக அர்ப்பணித்தல், அளித்துவிட்டு விடுபடுதல். காரணகாரியம் தேடி உழற்றிக் கொள்ளாமலிருத்தல். அது அவரை கைவிடாது என நினைக்கிறேன்.

இன்றிரவு தூங்க வாய்ப்புண்டு. அல்லது இந்த துயரை முற்றவைத்து, உச்சமடையச் செய்து அதுவே தன்னை குறைத்துக்கொள்ள வைக்கலாம். நெருப்பை அணைக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. மித்ரன் என் கைகளில் இன்னும் தொடுகையாகவே நீடிக்கும் குழந்தை.

இந்த நுண்ணுணர்வுகளை அடைவது வரமா சாபமா என்றால் இரண்டும்தான் என்றே சொல்வேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.