Jeyamohan's Blog, page 108
May 17, 2025
More classes for children.
மீண்டும் ஒரு மூளை சொடுக்கு கிடைத்தது. நன்றி. திருஷ்டாந்தம்,உவமானம் சமஸ்கிருத பாடத்தை எழுமையாக விளக்கினீர்கள் ஒரு மானுடவியல் மாணவன் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான கருத்துதான் Compassion.
ஒருமை கடிதம்In today’s environment, the most important way to overcome children’s internet addiction is to connect them with nature. America and Europe are implementing this approach. To achieve this, many classes are offered, such as bird watching, stone collecting, and learning about plants. Here our people have also made it a corporate business.
More classes for children.More classes for children.
மீண்டும் ஒரு மூளை சொடுக்கு கிடைத்தது. நன்றி. திருஷ்டாந்தம்,உவமானம் சமஸ்கிருத பாடத்தை எழுமையாக விளக்கினீர்கள் ஒரு மானுடவியல் மாணவன் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான கருத்துதான் Compassion.
ஒருமை கடிதம்In today’s environment, the most important way to overcome children’s internet addiction is to connect them with nature. America and Europe are implementing this approach. To achieve this, many classes are offered, such as bird watching, stone collecting, and learning about plants. Here our people have also made it a corporate business.
More classes for children.May 16, 2025
காரைக்குடி மரப்பாச்சி சந்திப்பு – மு.குலசேகரன்
காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பில் நிகழும் எழுத்தாளர் சந்திப்பு.
சிறப்பு விருந்தினர் மு.குலசேகரன்.
நாள் மே 18
இடம் அரிமளம் வைத்தியசாலை. சுப்ரமணியபுரம், ஏழாவது தெரு வடக்கு விரிவு காரைக்குடி
தொடர்புக்கு 9994408908
பசுமையின் பொருள்
என்னிடம் பொதுவாக சினிமாக்காரர்கள் கேட்பதுண்டு, “சென்னையிலே ஏன் சார் தங்க மாட்டேங்கிறீங்க? நம்ம தொழில் இங்கதானே?” நான் அதற்குப் பதில் சொல்வேன். “ஆமா, ஆனா தொழில்மட்டும்தான் இங்க” நான் வாழ்வது குமரிநிலத்தில். அங்கிருந்து நான் செல்லுமிடங்களில் எல்லாம் திரும்பத் திரும்பக் கண்டடைவதும் என் நிலத்தையே. விஷ்ணுபுரம் மட்டும் அல்ல, கொற்றவை மட்டும் அல்ல, வெண்முரசே கூட பெரும்பாலும் இந்நிலம் உருவாக்கிய என் அகநிலத்திலேயே நிகழ்கிறது.
இந்நிலத்தில் இருந்து என்னை விலக்காமலிருப்பது எது என எண்ணிப்பார்க்கிறேன். முதன்மையாக பசுமைதான். பசுமையை நான் கவனிக்காமலிருக்கலாம், ஆனால் மானசீகமாகப் பசுமைக்குள்ளேயே இருந்துகொண்டிருக்கிறேன். அது பசுமை இல்லாத நிலத்திற்குள் நுழையும்போதுதான் எனக்குத் தெரிகிறது. ரயில் ஆரல்வாய்மொழியை கடந்ததுமே அந்த இழப்புணர்வு உருவாகிவிடுகிறது. எண்ணங்களில் நுணுக்கமாக ஒரு மாறுதல் அமைகிறது. அதை என்னால் விளக்கமுடியாது. ஏதோ ஒன்று.
நான் இதைப் பற்றி யோசித்ததுண்டு. 1976 ல் எட்டாம் வகுப்பு மாணவனாகிய நான் ஒரு பேச்சுப்போட்டியில் பரிசு பெற்று பாரதிவிழாவுக்காக எட்டையபுரம் சென்றபோதுதான் ‘மையத்தமிழக’ எல்லைக்குள் நுழைந்தேன். இருபுறமும் வெறிச்சிட்டு காய்ந்துகிடந்த நிலம் என்னை அழச்செய்தது. என்னவென்றே தெரியாமல் கண்ணீர்விட்டபடி அதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அந்த மனநிலை இன்றும் அப்படியே நீடிக்கிறது.
நான் ஆரல்வாய்மொழி கடந்தால் அதன்பின் தென்தமிழகத்தில் எங்குமே செல்ல விரும்புவதில்லை. கூடுமானவரை தவிர்ப்பேன். முடிந்தால் மழைக்காலத்தில் மட்டும் செல்வேன். விதிவிலக்கான இடங்கள் தென்காசி, குற்றாலம் அல்லது தேனி, கம்பம். ஈரோடு, கோவைப் பகுதியை பரவாயில்லை எனலாம். ஊட்டி பிடிக்கும் என்றாலும் அங்கே செல்லும் பாதையின் சுழற்சி என்னை களைப்பாக்கிவிடும். அங்குள்ள குளிர் வெளியே இருக்கும் அனுபவத்தையே இல்லாமலாக்கிவிடுகிறது என்றும் தோன்றுவதுண்டு.
நான் பிறந்து வளர்ந்த தெற்கு குமரிமாவட்டம் பசுமைமாறாக் காடுகள் சூழ்ந்தது. இதை எழுதிக்கொண்டிருக்கும் மே மாத நடுவில் அங்கே பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆண்டு முழுக்க மழை உண்டு. வயல்கள் உலர்வதற்கான பருவம் இல்லை என்பதனாலேயே சிலவகை நெல் அங்கே விளையாது. வீடுகளுக்கு மேல் மரங்கள் கவிந்து காட்டுக்குள் குடியிருக்கும் உணர்வே இருக்கும். நான் பச்சை நடுவிலேயே பிறந்து வளர்ந்தவன். அப்படியென்றால் பசுமை சலிப்படையச் செய்யாதா என்ன? விசித்திரமானவைதானே நம்மை கூடுதலாகக் கவரவேண்டும்?
உண்மையில் அப்படி இல்லை. பச்சை எந்நிலையிலும் சலிப்பதில்லை. நான் பசுமையான காட்சிகள் கொண்ட திரைப்படங்களைத்தான் இளமையிலேயே விரும்பியிருக்கிறேன். பசுமையான காட்சிகள் கொண்ட ஓவியங்களில்தான் ஈடுபாடு. பசுமையை சித்தரிப்பதனாலேயே வங்கநாவல்களையும் மலையாள நாவல்களையும் விரும்பியிருக்கிறேன். சங்கப்பாடல்களில் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஒரு பெருங்கவிஞன் என நினைக்கிறேன். ஆனாலும் குறிஞ்சியின் கபிலனே எனக்கான கவிஞன்.
பசுமை என்பது வண்ணம் அல்ல. உயிரின் வெளிப்பாடு அது. அதை நம்முள் இருந்து ரசிப்பது நிறங்களை ரசிக்கும் கலைமனம் அல்ல, நம்முள் வாழும் ஆதிவிலங்கு. பசுமை என்பது அதற்கு உணவு. அடைக்கலம். செழிப்பு. பசுமையான நிலங்களில் நாய்கள் களிப்புற்று கூத்தாடுவதைக் கண்டிருக்கிறேன். மாடுகளுக்கு அவை உணவு. நாய்களுக்கு அப்படி ஏதுமில்லை. அவை பசுமையென்ற வண்ணத்தை அறிவதே இல்லை. அவை அறிவது உயிரின் பொலிவை மட்டுமே.
கோடையின் உச்சியில் இன்று காலைநடை செல்கிறேன். சென்னையில் இருந்து சைதன்யா ‘இங்கே தீப்பற்றி எரிவதுபோல் இருக்கிறது’ என்றாள். நான் கண்ணைநிறைக்கும் பெரும்பசுமை கொண்ட இடங்கள் வழியாக பார்வதிபுரத்தில் உலவிக்கொண்டிருக்கிறேன். பசுமை அருகே நின்று அதன் மேல் மானசீகமாகக் கவிழ்கிறேன். ஒரு புள்ளாக அதன்மேல் பறக்கிறேன். ஒரு மாடாக அதன்மேல் மேய்கிறேன்.
இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்லவிருக்கிறேன். கவிஞர் வேர்ட்ஸ்வர்த் பிறந்த லேக் டிஸ்ட்ரிக்டுக்கு. (Cumberland ,Cumbria). அங்கே ஒருவாரம் ஓய்வு. இங்கிலாந்தின் முதன்மைச் சிறப்பென நான் எண்ணுவது அது மொத்தமாகவே ஒரு ‘வறனுறல் அறியாச் சோலை’ என்பதுதான். ஆண்டு முழுக்க மழை. அதிலும் ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் மழை இல்லாத பொழுதே இல்லை. மூர்க்கமாக வளர்ந்த புல் பச்சைநுரை போல பரவிய வெளிகளில் மழையில் ஊறியபடி நின்று பசுக்கள் மேய்ந்துகொண்டிருக்கும். ஈரமாகச் சொட்டிக்கொண்டே இருக்கும் கூரைகளுடன் வீடுகள்.
பிரிட்டனின் இருண்ட குளிர்ந்த கிராமக்காட்சிகள் இம்ப்ரஷனிச ஓவியங்கள் போலிருக்கும். அங்கிருந்துகொண்டுதான் வேர்ட்ஸ்வெர்த் தன் கவிதைகளை எழுதியிருக்க முடியும். அங்கேதான் இயற்கையை தெய்வத்தின் இடத்தில் வைக்கும் இயற்கைவாத தரிசனங்கள் உருவாகியிருக்கமுடியும். பசுமையில் இருந்து மேலும் பசுமைக்கு ஒரு பயணம்.
கவிதைகள். சோ.விஜயகுமார் சிறப்பிதழ்
அன்புள்ள ஜெ,
மே மாத கவிதைகள் இதழ் குமரகுருபரன் விருது பெறும் சோ. விஜயகுமார் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அவரது நேர்காணல் பகுதி – 1 (நேர்காணல் செய்தவர்கள்: மதார், சதீஷ்குமார் சீனிவாசன்) இடம்பெற்றுள்ளது. கவிஞர் மதார், எழுத்தாளர் ரம்யா விஜயகுமார் கவிதைகள் பற்றி எழுதிய ‘வாயாடி’, ‘மினுங்கும் வரிகளும் உணர்வாழுவும்’ கட்டுரைகளும், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் எழுதிய ‘கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு?’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.
க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரை உள்ளது.
கவிதைகள். சோ.விஜயகுமார் சிறப்பிதழ்நன்றி,
ஆசிரியர் குழு
மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
காவியம் – 26
யக்ஷன், சாதவாகனர் காலம் பொமு 2 சாஞ்சிகானபூதி என்னும் பிசாசை அதன்பின் இரவுகளில் மட்டுமே நான் சந்தித்தேன். பகலில் நகரினூடாக வலுவிழந்த காலை இழுத்துக்கொண்டு, நீண்ட மூங்கில்கழிமேல் உடலின் முழு எடையையும் ஏற்றியவனாக நான் நகருக்குள் சென்று என் உணவை தேடிவந்தேன். இடிந்த மாளிகையின் புழுதி படிந்த படிகளில் சாக்குப்பை மேல் உடலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டேன். கானபூதியின் நிழலுருக்களில் ஒன்று பெரும்பாலும் என்னுடன் இருந்தது. தன் பெயர் சக்ரவாகி என அது அறிமுகம் செய்துகொண்டது.
“உன்னைப்போல் முட்டாளை நான் இதற்கு முன் சந்தித்ததே கிடையாது. சரியான முட்டாள் நீ. சொல்லப்போனால் நீ வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே இருந்திருக்கிறாய். நீ தவறவிட்ட தருணங்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்” என்று அது என்னிடம் பேசியபடியே வந்தது. “கானபூதியின் கதைகளின் புதிரை நீ விடுவிக்கவே முடியாது. ஒன்றிரண்டை தவறுதலாக நீ அவிழ்த்துவிடலாம். ஆனால் நீ தோற்பது உறுதி. தோற்றுவிட்டால் நீ என்ன ஆவாய்? முடிவடையாத அந்தக் கதை உன்மேல் ஒரு வேதாளம் போல ஏறிக்கொள்ளும். அதை நீ இறக்கி வைக்கவே முடியாது. அது உன்னை ஒவ்வொரு கணமும் துன்புறுத்திக் கொண்டிருக்கும். ஆறவே ஆறாத ரணம்போல…”
நான் அதனுடன் பேசுவதை தவிர்த்தேன். “ஏனென்று கொஞ்சம் யோசித்தாலே நீ உணர்ந்துகொள்ள முடியும். நீ யார்? காலமும் இடமும் எல்லையிடப்பட்ட வாழ்க்கை கொண்ட மானுடன். கானபூதி யார் தெரியுமா? அவன் காலமற்றவன், இடமற்றவன்… அவனால் எங்கும் செல்லமுடியும். எவருடைய உள்ளத்திற்குள்ளும் நுழையமுடியும்… அவன் அறிந்தவற்றை நீ எப்படி அறியமுடியும்?” அது என்னை தொட்டு உசுப்பியது. “மடையா, நீ இப்போதுகூட சென்று கானபூதியிடம் இந்த ஆட்டத்திற்கு நீ வரவில்லை என்று சொல்லிவிடலாம். வேறெதையாவது நீ அதனிடம் கேட்கலாம்… அவன் அளவில்லாத கருணை கொண்டவன்.”
“விலகு… தள்ளிப்போ. உன்னிடம் பேச எனக்கு மனமில்லை” என்று நான் கூவி அடிப்பதற்காக கழியை தூக்கினேன்.
சிரித்தபடி சக்ரவாகி என்னிடம் சொன்னது. “நான் நிழல், என்னை நீ என்ன செய்ய முடியும்? நான் உன்னிடம் பேசுவதை உன்னால் தடுக்கவே முடியாது… இந்நகரில் இப்படி பல்லாயிரம் பேரிடம் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் காதருகே பேசத்தொடங்குவோம். உண்மையிலேயே பேச்சு கேட்கிறதா அல்லது அது தங்கள் மனமயக்கமா என அவர்கள் குழம்புவார்கள். அந்தப்பேச்சை அவர்களால் கட்டுப்படுத்தவும் திசைமாற்றவும் முடிகிறதா என்று பார்ப்பார்கள். எந்த வகையிலும் அது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்ததும் பயந்துவிடுவார்கள். அவர்கள் எண்ணியே பார்க்காதவற்றையும் அவர்களுக்கு முற்றிலும் தெரியாதவற்றையும் நாங்கள் பேசத்தொடங்கும்போது நிலைகுலைந்துவிடுவார்கள்”
“அவர்களின் தூக்கம் அழிந்துவிடும். எங்களிடம் கெஞ்சவும் மன்றாடவும் தொடங்குவார்கள். எங்களை அதட்டுவார்கள், வசைபாடுவார்கள். நாங்கள் பேசுவனவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவார்கள். அப்போதுதான் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அவர்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். அதுவரை அவர்களிடம் ஏதோ சிறு சிக்கல் இருப்பதாக நினைத்தவர்கள் இப்போது பைத்தியம் என நினைக்க ஆரம்பிப்பார்கள். பிடித்துக்கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டுவார்கள். தனியறைகளில் அடைத்துவைத்து நாட்கணக்கில் தூங்கச் செய்வார்கள். என்னென்னவோ சிகிச்சைமுறைகள் உள்ளன. எல்லாமே அபத்தமானவை. அந்தச் சிகிச்சையாலேயே அவர்கள் உடலும் உள்ளமும் தளர்ந்து வெறும் தசைக்குவியல்களாக ஆகிவிடுவார்கள். கண்களில் ஒளி அகன்றுவிடும். விழிகள் எங்கும் நிலைகொள்ளாமல் தாவிக்கொண்டே இருக்கும். முகம் வீங்கிப் பழுத்துவிடும். நாக்கு குழறும். ஓரிரு சொற்களுக்கே குரல் உடைந்து, கண்கலங்கி அழத்தொடங்கிவிடுவார்கள்”
“நாங்கள் அவர்களை விடவே மாட்டோம்… எங்களில் ஒருவர் ஒருவனை பற்றிக் கொண்டால் போதும், அவனை அத்தனைபேரும் சூழ்ந்துகொள்வார்கள். ஒருவன் விலகிச்சென்றால் இன்னொருவன் வந்துவிடுவான்… எங்களுக்கு மனிதர்கள் வேண்டும். மனிதர்களிடம்தான் நாங்கள் பேசமுடியும். பேசுவதன் வழியாகத்தான் நாங்கள் காலத்திலும் இடத்திலும் எங்களை பொருத்திக்கொள்ள முடியும்…” சக்ரவாகி சொன்னான். “நான் காலத்தையும் இடத்தையும் கடக்கும் ஆற்றல் கொண்டவன். ஆனால் கானபூதி போல எல்லையற்றவன் அல்ல. ஏனென்றால் நான் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்தவன், உன்னைப்போல ஒரு மானுடனாக இருந்தவன். இன்னும் மிஞ்சியிருக்கிறேன். என் உடல் எரிந்து அழிந்தது. அந்த உடலில் உருவான ஒன்று என் உடல் எரிந்தணைந்த பின்னரும் எஞ்சியிருக்கிறது. எந்த மரத்திலும் அமரமுடியாமல் வானிலேயே சிறகடித்துத் தவிக்கும் ஒரு பறவை. மனிதர்கள் எங்களுக்குச் சிறு இளைப்பாறல்கள்…”
“என்னிடமிருப்பது ஒரு எஞ்சும் ஆசை… வஞ்சம் உன்னிடம் எஞ்சியிருப்பதுபோல. சீற்றம், ஏமாற்றம், குழப்பம், கேள்வி என எது மிஞ்சியிருந்தாலும் அது அந்த உடலுடன் சேர்ந்தே தளர்ந்து வலுவிழக்கவேண்டும். அந்த உடலுடன் சேர்ந்து அதுவும் அழியவேண்டும்” சக்ரவாகி சொன்னான். “நீ செய்துகொண்டிருப்பது உன் உடலைவிடப் பெரிதாக உன் வஞ்சத்தை வளர்ப்பது… இதோ இப்போது எதிரில் ஒரு கார் வருகிறது. அதை குடிகாரன் ஒருவன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். நீ அதன் அடியில் விழுந்து சாகக்கூடும். உன்னில் எஞ்சும் அந்த உக்கிதமான வஞ்சம் எங்கே போகும்? என்னைப்போல் ஆகும்… நான் கொள்ளும் இந்த பெருந்தவிப்பை நீ புரிந்துகொள்ளவே முடியாது. இது ஆறவே ஆறாத தாகம் போல. நீ தேர்ந்தெடுத்திருப்பது அதைத்தான்.”
“நீ தேவியரை நேரில் பார்த்தாய். அதுவே நீ அடைந்த மிகப்பெரிய வாய்ப்பு. அதைத் தவறவிட்டாய். இப்போது கானபூதி அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறாய். இன்று அவன் உன்னிடம் கதை சொல்லப்போகிறான்… அந்தக் கதையில் நீ ஒருவேளை வென்றால் அவனிடம் நீ உன் உள்ளம் அடங்கவேண்டும் என்று கேள். உன் உடலுடன் சேர்ந்து உன் வஞ்சமும் மட்கி அழியவேண்டும் என்று கேள். இன்னும் சில ஆண்டுகளில் நீ செத்து அந்த படிக்கட்டின்மேல் கிடப்பாய். உன்னை தோட்டிகள் அவர்களின் மண்வெட்டியால் மலத்தை எடுப்பதுபோலத்தான் அள்ளி எடுப்பார்கள். மனிதக் கை படாமலேயே நீ சிதைக்குச் செல்வாய்… அங்கே எரிந்து சாம்பலாவாய்… கோதாவரியின் புழுதிக்கரையில் உன் மண்டையோடு புதைந்து கிடக்கும்… அப்போது இங்கே உன்னிடமிருக்கும் எதுவும் எஞ்சக்கூடாது… அதுதான் மீட்பு.”
“ஆம்” என்று நான் சொன்னேன். நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் “உண்மையிலேயே நான் ஆசைப்படுவது அதைத்தான்… எனக்கு வேறேதும் வேண்டியதில்லை” என்றேன்.
“யோசித்துப் பார். நீ என்னென்ன வாய்ப்புகளை உன் உணர்ச்சிகர மூடத்தனத்தால் தவறவிட்டாய் என்று நான் சொல்கிறேன். உன் தந்தை கொல்லப்பட்டார். அவரை இந்த நகரமே கொண்டாடியது. நீ அவருடைய மகன் என்று சொல்லியிருக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் முன் சென்று நின்றிருக்கவேண்டும். அவர்கள் உனக்கு எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் உருவாகியிருக்கும். ஏனென்றால் அவரை மறக்காமல் அவர்களால் வாழமுடியாது. அவருடைய கொலையை கைவிடாமல் அவர்கள் அரசியலில் முன்நகர முடியாது. அவர்கள் எண்ணினாலும் ஏதும் செய்யமுடியாது என அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குக் குற்றவுணர்ச்சி இருந்தது. அதை நீ தூண்டியிருக்கலாம். அவர்கள் உனக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்திருப்பார்கள்”
“இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது”
“சரி, அப்படியென்றால் இன்னொன்று செய்திருக்கலாம். நீ ராதிகாவை அழைத்துக்கொண்டு பைத்தானுக்கு வந்திருக்கலாம்… உன் தந்தையின் கட்சிக்காரர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். அதை ஒரு கட்சிப்பிரச்சினையாக ஆக்கியிருக்கலாம். உன் தந்தைக்காக எதுவும் செய்யமுடியாத குற்றவுணர்ச்சியால் அவர்கள் உங்களைப் பாதுகாத்திருப்பார்கள்”
நான் படபடப்புடன் “இல்லை” என்றேன். ஆனால் அது உண்மை என்று தெரிந்துவிட்டது. “ஆமாம், அதைச் செய்திருக்கலாம்… செய்திகளில் வந்திருந்தாலே எங்களை அவர்கள் எதுவும் செய்ய முடியாது. அவள் தமையன் ஒரு போலீஸ் உயரதிகாரி என்பதையே நான் மறந்துவிட்டேன்… என் அறிவின்மை… நான் முட்டாள். அடிமுட்டாள்” தலையில் அறைந்துகொண்டு அழுதபடி நான் அமர்ந்துவிட்டேன். “ராதிகா! ராதிகா!” என ஏங்கி அழுதேன்.
“நடுச்சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாய். ஆனால் ஒருவர்கூட உன்னை பொருட்படுத்தவில்லை. இப்படி நீ அழுவது வழக்கமாக நடப்பதுதான் என தோன்றுகிறது” என்று சக்ரவாகி சொன்னான்.
“ஆமாம், அவளை நினைக்கவே கூடாது என்றுதான் உறுதியுடன் இருக்கிறேன். நினைப்பதே இல்லை என்றுதான் எண்ணிக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எப்போது எதற்காக அழுதாலும் அவளுக்காகத்தான் அழுகிறேன். நான் அழாத நாளே இல்லை”
“உன் அழல் அடங்கவேண்டுமா? ஒரு துளி மிச்சமில்லாமல் நீ அவளை மறக்கவேண்டுமா?”
“ஆமாம், வேண்டும். இப்போது நான் விரும்புவதெல்லாமே அதை மட்டும்தான். உயிருடன் மட்கிக்கொண்டிருக்கும் என் உடலால் இந்த பெருந்துயரை தாள முடியவில்லை. போதும், இதில் இருந்து விடுபட்டாலே போதும்”
“வா, இன்றிரவு நீ கானபூதி சொல்லும் கதையின் புதிரை எப்படியாவது வென்றுவிடு… இன்று வென்றுவிட்டாய் என்றால் நீ விடுதலை அடைந்துவிட முடியும்…”
“ஆமாம், அதைத்தான் செய்யப்போகிறேன்” என்று நான் கண்ணீரை துடைத்தபடிச் சொன்னேன்.
“கானபூதியின் கதை உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்று சக்ரவாஹி சொன்னான்.
“கதாசரிதசாகரத்தில் உள்ளதுதானே?”
“ஆம், ஆனால் அதில் முழுமையாக இல்லை. காஷ்மீரில் வாழ்ந்த சோமதேவர் செவிவழியாக எவரெவரோ சொன்னதைக் கேட்டு எழுதியது அந்தக் கதை…” சக்ரவாகி சொன்னான். “உண்மையான கதை இதுதான். இதை ஒரு யக்ஷன் சொல்லிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்”
வைஸ்ரவணனாகிய குபேரனின் அவையில் இருந்த யக்ஷர்களில் ஒருவன் சுப்ரதீகன். குபேரனுக்கு இருந்த சாபம் என்பது தன் களஞ்சியத்தில் இருந்த தங்கநாணயங்களையும் வைரவைடூரியங்களையும் எண்ணிக்கொண்டே இருப்பது. பொருளை எண்ண எண்ண அவை குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணத்தொடங்கும்போது இன்பமும், எண்ணி முன்செல்கையில் பதற்றமும், எண்ணி முடிக்கும்போது சந்தேகமும் தோன்றும். மீண்டும் எண்ணத் தொடங்கவேண்டும். குபேரன் அந்த மாயச்சுழலில் சிக்கிக்கொண்டான்.
எண்ணி எண்ணி ஏங்கி குபேரன் நோயுற்றவன் ஆனான். அவன் உடல்மெலிந்து சோர்வதைக் கண்ட அவன் துணைவியாகிய பத்ரை நாரதரிடம் என்ன செய்வது என்று கேட்டாள். நாரதர் குபேரனுக்கு தினமும் நூறு கதைகள் சொல்லப்படவேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எல்லா கதைகளும் பொன்னையும் பொருளையும் பற்றியதாக இருக்கவேண்டும். அதை மட்டுமே குபேரன் கவனித்துக் கேட்பார். ஆனால் எல்லா கதைகளுமே பொன்னும் பொருளும் அளிக்கும் மகிழ்ச்சியைப் பற்றியதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே குபேரன் நிறைவடைவார். ”பொன்னை விடப்பெரியது பொன்னைப் பற்றி பேசுவதும் எண்ணுவதும். பொன்னைப்பற்றிய கதைகளால்தான் பொன் ஒளிகொள்கிறது” என்று நாரதர் சொன்னார்.
அதன்படி ஆயிரத்து எண்பது யக்ஷர்கள் கொண்ட ஒரு பெரிய சபை அமைக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருநாளும் நூற்றெட்டு கதைகள் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் பத்துநாட்களுக்கு ஒருமுறை புதிய கதை சொல்லவேண்டியிருக்கும். அங்கே காலம் முடிவற்றது என்பதனால் கதைகளுக்கும் முடிவிருக்க முடியாது. கதைகள் தனக்குப் பிடித்தமானதாக அமையாவிட்டால் குபேரன் அவையில் இருந்து எழுந்து சென்றுவிடுவான். ஆகவே ஒவ்வொரு கதையும் புதியதாக அமையவேண்டும்.
அந்த அவையில் கடைசியாக வந்து சேர்ந்த யக்ஷன் சுப்ரதீகன். மண்ணில் அவன் ஓர் ஏழை மரம்வெட்டியாக இருந்தான். காட்டுக்குள் வழிதவறிச் சென்ற அவன் அங்கே இருந்த ஆழமான தங்கச்சுரங்கத்திற்குள் விழுந்தான். பசுந்தங்கம் ஒளிரும் குழம்பாக நிறைந்திருந்த அந்த குகையை சுதன் என்னும் பூதம் காவல் காத்திருந்தது. அது பொன் என்று சுப்ரதீகனுக்குத் தெரியவில்லை. அவன் அதற்குள் இருந்து வெளிவர முயன்று தவறிவிழுந்து இறந்தான். அவன் உடல் தங்கமாக ஆகி அதில் பதிந்தது. பொன்னில் மறைந்தமையால் அவன் குபேரன் அருள் பெற்று யக்ஷனாகி குபேரபுரிக்கு வந்தான்.
சுப்ரதீகனின் தமையனாகிய தீர்க்கஜம்ஹன் தன் தம்பியை தேடி அலைந்து நீண்டநாட்களுக்குப் பின் அங்கே வந்து சேர்ந்தான். தங்கச்சுரங்கத்தில் தங்கத்தில் பதிந்து மட்கி மறைந்திருந்த சுப்ரதீகனின் எலும்புகளைக் கண்டுகொண்டான். அந்த தங்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் தன் தம்பியின் எலும்புகளை மட்டும் சேகரித்துக் கொண்டுசெல்ல அவன் முயன்றான். அப்போது அங்கே தோன்றிய அந்தப் பொன்னின் காவலனாகிய சுதன் என்னும் பூதம் அந்த பொற்குகைக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே வரமுடியும் என்று சொன்னது. தன் தம்பிக்கான நீர்க்கடனை அளித்து அவனை மீட்பதே தனக்கு முக்கியம் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அப்படியென்றால் கொஞ்சம் பொன்னை எடுத்துக்கொள் என்று சுதன் சொன்னான். தம்பியின் எலும்புகளைக் கொண்டுபோகும்போது பிறிதொன்றையும் கொண்டுசெல்லக்கூடாது என்று தீர்க்கஜம்ஹன் சொல்லிட்டான். அவனுடைய அறத்தில் மகிழ்ந்த அவனுடைய தெய்வமாகிய காளி தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது. தான் தம்பியுடன் இருக்கவேண்டும் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அவனும் யக்ஷனாக ஆகி குபேரபுரிக்கு வந்தான்.
சுப்ரதீகன் குபேரபுரியின் அவையில் மிக இளைய யக்ஷன். ஏழு வானுலகங்களில் நடந்த கதைகள் எவற்றையும் அவன் அறிந்திருக்கவில்லை. அவனிடம் சொல்வதற்குக் கதைகள் இருக்கவில்லை. அவன் மண்ணுலகில் அவன் அறிந்த கதைகளைச் சொன்னான். குபேரன் சலிப்புடன் எழுந்து சென்றுவிட்டமையால் அவன் சபையில் சிறுமையடைந்தான். துயருடன் அவன் வானில் பறந்துகொண்டிருக்கும்போது பிணந்தின்னிக் கழுகு ஒன்றைச் சுற்றி ஆயிரம் பறவைகள் பறப்பதைக் கண்டான். அந்த விந்தையை அறியும்பொருட்டு அவற்றில் ஒரு சிறு பறவையிடம் அது அந்த கழுகை தொடர்ந்து செல்வது ஏன் என்று கேட்டான். அந்தக் கழுகின் பெயர் சூலசிரஸ் என்றும், அது ஓர் அரக்கன் என்றும் அப்பறவை சொன்னது. ஊற்று நிலைக்காத ஊருணிபோல கதைகளைச் சொல்பவன் அவன், கதைகளுக்காகவே அவனுடன் அத்தனை பறவைகள் உள்ளன என்றது.
சுப்ரதீகன் ஒரு நாரையாக மாறி சூலசிரஸுடன் இணைந்து பறந்தான். அது சென்றமர்ந்த மலைப்பாறை உச்சிகளில் தானும் அமர்ந்தான். அது சொன்ன கதைகளை எல்லாம் கேட்டான். அவை தெய்வங்களும் அறியாத தொன்மையான கதைகள். அரக்கர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. அந்தக் கதைகளை அவன் குபேரனின் அவையில் சொல்லத் தொடங்கினான். அவை எல்லாமே பொன்னையும் பொருளையும் தேடிச்சென்றடைந்து மகிழ்ந்தவர்களைப் பற்றியவை. வேடர்களும், காடர்களுமான மக்கள் வெள்ளியையும் தங்கத்தையும் வைரங்கள் போன்ற அரிய கற்களையும் கண்டடைந்து அடைந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை விரித்துச் சொல்பவை. குபேரன் ஒவ்வொரு கதையையும் கேட்டு தொடையில் தட்டி ஆராவாரம் செய்தான். ஒவ்வொரு முறையும் சுப்ரதீகனை பாராட்டினான்.
பிற யக்ஷர்கள் சுப்ரதீகன் மேல் பொறாமை கொண்டார்கள். அவனிடம் இத்தனை கதைகள் எங்கிருந்து வருகின்றன என்று பேசிக்கொண்டார்கள். யக்ஷர்கள் அறிந்த விண்ணுலகின் கதைகள் பெரும்பாலானவை பொருளைத் துறப்பதைப் பற்றியவையாகவும், பொருளின் பயனின்மை பற்றியவையாகவும் இருந்தன. மண்ணுலகில் சூதர்கள் சொல்லும் கதைகளும், புலவர்கள் எழுதும் கதைகளும், முனிவர்கள் அருளுரைக்கும் கதைகளும் பொன்பொருளை நிராகரிப்பவையாகவே இருந்தன. அவற்றில் பொருளின் அழகையும் மதிப்பையும் சொல்லும் கதைகளை தேடித்தேடிக் கண்டடையவேண்டியிருந்தது. கதைகளை வெட்டியும் திருத்தியும் சொல்லவேண்டியிருந்தது. அக்கதைகளை குபேரன் முன்னரே கேட்டிருந்தான் என்பதனால் அவை அவனுக்கு எரிச்சலையும் அளித்தன. ஆனால் சுப்ரதீகன் சொல்லும் கதைகளில் எல்லாம் பொருள் முழுமுதல் தெய்வம் போல் அமர்ந்திருந்தது.
மற்ற யக்ஷர்கள் ரகசியமாக சுப்ரதீகனை பின்தொடர்ந்து சென்று என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அரக்கன் ஒருவனிடமிருந்தே அக்கதைகளை சுப்ரதீகன் அறிந்துகொள்வதை கண்டு அவர்கள் சான்றுகளுடன் வந்து குபேரனிடம் முறையிட்டனர். “கதைகள் என்பவை தங்களுக்கான ஆற்றல்கொண்டவை. அவை குபேரபுரியிலும் விண்ணுலகங்களிலும் ஊடுருவினால் இங்கே அவை அழியாமல் நிலைகொண்டுவிடும். இங்குள்ளோரின் எண்ணங்களை மாற்றும். ஒரு கட்டத்தில் அரக்கர்கள் விண்ணுலகைக் கைப்பற்ற அவை வழிவகுக்கும். சூலசிரஸ் திட்டமிட்டே இக்கதைகளை சுப்ரதீகன் வழியாக இங்கே அனுப்பியிருக்கிறது” என்றனர்.
குபேரன் சுப்ரதீகனை பிடித்து தன் சபைக்குக் கொண்டுவந்தான். ”சூலசிரஸிடமிருந்து நீ கதைகளைப் பெற்றது உண்மையா?” என்று கேட்டான்.
“ஆம், அவனிடம் முடிவில்லாமல் கதைகள் உள்ளன” என்று சுப்ரதீகன் அகமலர்ச்சியுடன் சொன்னான்.
“சூலசிரசை கொன்று அவன் தலையுடன் இந்த சபைக்கு நீ திரும்ப வரமுடியுமா?” என்று குபேரன் கேட்டார்.
“அரசனே, என்னாலோ உங்களாலோ எந்த தெய்வத்தாலோ ஒருபோதும் ஒரு கதையை அழிக்கமுடியாது. கதைசொல்லி என்பவன் முடிவில்லாத கதைகளின் ஊற்று. பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மம் ஒரு கதைசொல்லியே” என்று சுப்ரதீகன் சொன்னான்.
“நீ கேட்டறிந்து நினைவில்கொண்டுள்ள கதைகளின் எடையால் இனி பறக்கமுடியாமல் ஆவாய். நீ யக்ஷநிலையை இழப்பாய். மண்ணில் விந்தியமலை அடிவாரத்தில் உள்ள அடர்காட்டில் ஒரு பிசாசாகப் பிறப்பாய். அரக்க மொழியில் நீ அறிந்த கதைகளை பைசாசிக மொழியில் பேசிக்கொண்டிருப்பாய். அந்தக் கதைகளை ஒருபோதும் பிறமொழிக்கு மாற்றமுடியாதவனாக ஆவாய்“ என்று குபேரன் சாபமிட்டான்
சுப்ரதீகனின் தமையனாகிய தீர்க்கஜம்ஹன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி “அரசே என் தம்பி தங்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில் பிழைசெய்துவிட்டான். அவனுக்காக நான் இங்கே நோன்பிருக்கிறேன். அவனுடைய சாபம் முடியும் நாளைச் சொல்லி அருளவேண்டும்” என்றான்.
மனம் இரங்கிய குபேரன், “கார்முகிலுக்கு விடுதலை என்பது பெய்தொழிவதேயாகும். இவன் அறிந்த அத்தனை கதைகளையும் எவரிடமேனும் சொல்லிவிடுவான் என்றால் இவன் விடுதலை அடைவான்… ஒரு கதை மிஞ்சியிருந்தாலும் விடுதலை அமையாது” என்று வாக்களித்தான்.
அவ்வாறுதான் சுப்ரதீகன் விந்தியமலையின் கீழே விரிந்திருந்த இந்நிலத்திற்கு வந்தான். இது அன்று அடர்ந்து செறிந்த கொடுங்காடு. இங்கே நின்றிருந்த மரம் ஒன்றில் அவன் குடியேறினான். அவனுக்கு பின்னர் கானபூதி என்ற பெயர் அமைந்தது.
”கானபூதி என்னும் இந்த பைசாசத்தின் எல்லா கதைகளும் சூலசிரஸ் என்னும் அரக்கனால் சொல்லப்பட்டவைதான் என்று சொல்லப்படுகிறது” என்று சக்ரவாகி சொன்னது. “இந்தக் கதை சித்ரகர் எழுதிய கதாரத்னமாலிகா என்னும் காவியத்தில் உள்ளது”
“நாம் ஒருவருக்கொருவர் பேசும் எல்லாக் கதைகளும் ஏதேனும் காவியத்தில் உள்ளவை. எல்லாமே சம்ஸ்கிருதக் காவியங்கள்” என்று நான் சொன்னேன். “நீயும் கானபூதியும் சொல்லும் பல நூல்கள் அழிந்துவிட்டன. இருக்கும் நூல்களில்கூட பல வரிகள் மறைந்துவிட்டன.”
”ஆம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கானபூதி கதைகளைச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது. அக்கதைகள் நினைவுகள் வழியாக உருமாறிக்கொண்டே இருக்கின்றன. நூல்களில் கூட பாடபேதங்கள் உருவாகியிருக்கின்றன”
“இந்தக் கதைகளுக்கு அப்பால் கானபூதி யார்? இவை காவியங்கள். இக்காவியங்களுக்கு அடியில் என்ன நிகழ்கிறது?”
“நீ அதை கானபூதியிடமே கேட்கலாம்” என்றது சக்ரவாகி.
அன்றிரவு நான் காட்டுக்குள் சென்றேன். என் அருகே வந்துகொண்டே இருந்த சக்ரவாகி என்னருகே விலகிக்கொண்டதை உணர்ந்தேன். அதே மரத்தடியில் கானபூதியின் அருகே நான் அமர்ந்தேன்.
”என் பொருட்டு சக்ரவாகி உன்னிடம் பேசியிருப்பான்” என்று கானபூதி சொன்னது. “நீ என்னைப் பற்றிக் காவியங்கள் சொல்வனவற்றை அறிந்திருப்பாய்…”
“அவை உண்மையா?”
“அவை ஒரு வகை கதைகள்” என்றது கானபூதி. “எல்லா கதைகளும் ஒருவகை உண்மைகள்.”
”நான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.”
“அதற்கு நீ என் மொழிக்குள் வரவேண்டும்… நான் பேசுவது பைசாசிகம். அந்த மொழியிலுள்ள என் கதைகளை இன்னொரு மொழிக்கு பெயர்க்க முடியாது.”
“ஏன்?”
“நீரை இன்னொரு கலத்திற்கு ஊற்றமுடியும். கல்லை இன்னொரு கல்லுக்குள் செலுத்தமுடியாது” என்றது கானபூதி. “அந்த மொழிக்குள் நீ வந்தால் அக்கதைகளை நான் உனக்குச் சொல்வேன். பலருக்கும் நான் கதைகள் சொல்லியிருக்கிறேன். என் கதைகள் சொல்லி முடிக்கப்படவே இல்லை.”
”ஆமாம், நான் கதைகளைக் கேட்க விரும்புகிறேன்.”
“அப்படியென்றால் நீ என் மொழிக்குள் வரவேண்டும். அதையே உன் விருப்பம் என்று சொல்” என்றது கானபூதி. “நேற்று நீ என்னிடம் கோரிய அந்த விருப்பத்தை கைவிட்டுவிடு.”
இடி விழுந்து மரம் பற்றிக்கொள்வதுபோல அக்கணத்தில் நான் அனல்கொண்டேன். “இல்லை, என்னால் முடியாது… என்னால் முடியாது. என்னால் ஒருபோதும் முடியாது. அது மட்டும்தான் எனக்கு வேண்டும்… வேறெதுவும் வேண்டியதில்லை” என்று கூச்சலிட்டேன்.
கானபூதி தன் தெளிந்த கண்களுடன் என்னை பார்த்துப் பரிவுடன் புன்னகை செய்தது.
”பழிதான் எனக்கு வேண்டும்… பழி மட்டும்தான் வேண்டும். நீ எனக்கு வாக்களித்தாய். நீ அதை விட்டு விலகக்கூடாது. இது என் ஆணை… உன் சொல்மேல் ஆணை.”
“நான் விலகவில்லை… பைசாச சக்தியால் உன் பழியை நான் நிறைவேற்றுகிறேன்.”
“ராதிகாவின் கொலைக்கு முதற்காரணம் எவரோ அவர் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதிலேயே மிகப்பெரிய தண்டனையை அடையவேண்டும்…”
“சரி, அதையே நிகழ்த்துகிறேன்” என்றது கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு.
(மேலும்)
நெ.து.சுந்தரவடிவேலு
[image error]நெ.து. சுந்தரவடிவேலு தமிழகக் கல்வி வளர்ச்சியின் சிற்பி. இலவச மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியான மதிய உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியில் மக்கள் திட்டமாகச் செயல்படுத்தினார். காமராஜர் ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டத்தின் வரைவை திட்டக் குழுவில் முன்வைத்து அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாக்கினார். இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர். கட்டாயக் கல்வி, இலவச சீருடத் திட்டம் ஆகியவற்றுக்குச் செயல் வடிவம் தந்தார். பஞ்சாயத்துப் பள்ளிகளையும், ஓராசிரியர் பள்ளிகளையும் ஏற்படுத்தி கிராமப்புறக் குழந்தைகள் பெருமளவில் கல்வி கற்க வகை செய்தார்.
நெ.து. சுந்தரவடிவேலுபறவைகளுடன் இருத்தல்
ஒரு பறவையைப் பார்ப்பதிலும், அதை ரசிப்பதிலும், அதன் பெயரையும், அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் உள்ள சந்தோஷத்தையும் அன்று தெரிந்துகொண்டேன். இந்த அனுபவத்தை கொடுத்த பனங்காடை எனக்குப் பிடித்த பறவையாயிற்று.
பறவைகளுடன் இருத்தல்
The talk about training one’s own mind is an excellent piece. We can see a lot of professional talks on this subject. Generally they are tailor-made talks with general advice.
The way of achievement – A LetterMay 15, 2025
வாழ்வின் அளவுகோல் எது?
நம் வாழ்க்கை மகிழ்வாக இருக்கிறதா என்பதற்கான அளவுகோல் என்ன? ஒருவர் வாழும் வாழ்க்கை அவருடைய மனதை விடச் சிறியது என்றால் அவர் மகிவானவர் அல்ல. வாழ்க்கையை பெருக்கிக் கொள்வதே மகிழ்ச்சிக்கான வழி.
தவசதாரம்
பக்கத்துவீட்டுப் பையன் மனோஜ் “நாங்க சினிமா பாத்தோம்…” என்று கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான்.
”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன்.
உள்ளே வந்தவன் வழக்கம்போல தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களை மட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று கூவியபின் வழக்கம்போல ”கடிக்காது”என்று என்னிடம் சொன்னான்.
”உள்ள வா” என்றேன்.
”எனக்கு பிஸ்கட் வேண்டாம்”என்று உள்ளே வந்தான். ”எங்கவீட்டுல டப்பா கம்ப்யூட்டர் இருக்கே” என்று லாப்டாப்பை பார்த்துச் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். பிஸ்கட் கொடுத்ததை தின்றான்.
”என்ன படம் பாத்தே?”
அவன் வாயை துடைத்துவிட்டு ஒரு பிஸ்கட்டை சட்டைக்குள் வைத்தான் ”இது ரூபிணிக்கு”
”அவளுக்கு நான் வேற தரேன். என்ன படம்?”
”தவசதாரம். கமல் நடிச்சபடம்”
”என்னது?”
“தவசதாரம்…”
”நல்ல படமா?”.
”சூப்பர் படம்..” பாய்ந்து கீழிறங்கி ”டிசூம் டிசூம்…·பைட்டு…” என்றான்.
”என்ன கதை?”
‘கதையா?”என்றான்.
”படத்தில உள்ள கதை என்ன?”
அவன் விரல்களை நக்கி ”படத்துல கதை சொல்லலியே”என்றான்.
”பின்ன கதை சொல்றேன்னு சொன்னே?”
”அது எங்கம்மா சொன்ன கதைல்லா?”
”என்ன கதை?”
”தவசதாரம் கதை”
இப்போது எனக்கே சற்று குழம்பியது.சரி, வேறு இடத்தில் ஆரம்பிப்போம் என்று யோசித்து ”படத்துல உனக்கு ரொம்ம்ப பிடிச்சது என்ன?” என்றேன்
”டான்ஸ¤” என்றான்.
”என்ன டான்ஸ்?”
”அக்கா ஜட்டி போட்டுட்டு ஒரு கம்பிய பிடிச்சிட்டு இப்டியே ஆடுவாங்களே… கால் எல்லாம் இப்டி இருக்குமே…” அவன் கதவை பிடித்து ஆடிக்காட்டினான்.
சரிதான் , விளையும் பயிர்.
”அப்றம்?”
”அந்த அக்காதான் மூணுசக்கர சைக்கிளிலே போற தாத்தாவை பென்சிலாலே குத்தி குன்னுட்டாங்க…சாகிறப்ப அந்த தாத்தா சிரிச்சார். ஏன்ன அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?”
”சரி”
”அது ரூபிணி ஓட்டுகிற மூணுசக்கர சைக்கிள் கடையாது. பெரிய அங்கிஸ்ல் ஓட்டுற சைக்கிள். அப்பா எனக்கு வாங்கி குடுத்தா அதுல ஏறி நான் உங்க வீட்டுக்கு வருவேன்”
சைக்கிளை திசைதிருப்பாமல் முடியாது. ”அத தவசதாரத்திலே ·பைட் உண்டுல்ல?”
”நெறைய ·பைட் உண்டு. கையிலே ஒரு கத்தி வச்சிருக்கான்ல அத வச்சு கழுத்த அறுத்துருவான்…”
”ஆரு?”
”டாய் சோல்ஜர்…வாய இப்டி வச்சுகிட்டு பேசுவான்…பிஸ்கத்த உள்ள வச்சுட்டு பேசுவோமே அப்டி…உங்க வீட்டுல ஐஸ்கிரீம் உண்டா?”.
”கெடையாதே”என்றேன்.
”டாய் சோல்ஜர் ஹெலிகாப்டரிலே வந்து ஸ்பைடர்மேன் மாதிரி கம்பிய வீசி அப்டியே கிர்ருன்னு வந்திருவான். ரொம்ப கெட்டவன். காரு ஓடுறப்ப தரையில தீ வரும் தெரியுமா? ஏன்னா அமெரிக்கால எல்லாம் தரையில எல்லாம் தீயா போட்டு வச்சிருப்பாங்க இல்ல?”
”யாரு சொன்னாங்க?”
”எங்க அப்பா”
”நீ கேட்டியா?”
”ஆமா. .. தீயிலே காலு சுடாது” அவன் மீண்டும் கையை நக்கி ”அப்பா என்னை படம்பாருடாண்ணு சொல்லி கிள்ளினார்”
துரத்தல் நடக்கும்போதே கேட்டிருப்பான் போல, அதுதான் அந்த அவசர விஞ்ஞானப் பதில்.
”அப்றம் எவ்ளோ தண்ணி…ஜுனாமி…அந்த ஜுனாமி வரும்போது குட்டிக் குட்டி கப்பல்லாம் ஆடும்..அதெல்லாம் ஜிராபிஸ்…”
”என்னது?”
”எங்கப்பா சொன்னார். டாய் சோல்ஜர் மேலே கம்பு குத்திடும்.கொடி கட்டின கொம்பு..ஆகஸ்ட் பி·ப்டீந்து கொடி இருக்கே அது…”
”என்னதுண்ணு உங்க அப்பா சொன்னார்? ஜிராபியா?”
”ஜிரா·பி…இல்ல, ஜிரா·பிஸ்… கம்ப்யூட்டரிலே செய்வாங்களே”
”ஓ” என்று புரிந்துகொண்டு ”பாட்டி?” என்றேன்.
”பாட்டி எப்டி?”
”எந்தப் பாட்டி?”
”·போட்டோ வச்சிருப்பாங்களே?”
”படத்துலே பாட்டி கடையாது. அசின் தான் உண்டு. அவுங்க பொம்மைய வச்சுகிட்டு பெருமாளேண்ணு பாட்டு பாடி கா·பின்லே போட்டு மூடிருவாங்க… சினிமால எல்லாம் காட்டுவாங்களே டெட்பாடிய கா·பீன்ல போட்டு மூடி ப்ரேயர் பண்ணி மண்ண அள்ளி போட்டு…” .
”சரி, பாட்டி இருந்தாங்க மனோஜ்..நீ பாத்தே”
அவன் ஐயத்துடன் ”அசினா?” என்றான்
”பாட்டி பாட்டி.. ” நானே நடித்து காட்டினேன். “ஆராவமுது ஆராவமுதன் எம்புள்ள!”
”ஆ, ஒண்ணுக்குப்போகனும்ணு சொல்லுவாங்களே”
”ஆமா அவங்கதான்”
”அவங்க நல்ல பாட்டி”என்றான் சுருக்கமாக.
”தாடிவச்சுகிட்டு ஒருத்தர் டான்ஸெல்லாம் ஆடுவாரே” என்று எடுத்துக் கொடுத்தேன்.
”ரூபிணிக்கு ரெண்டு பிஸ்கட் வேனுமாம்…அவ இல்லேண்ணா அழுவா”
”சரி குடுக்கேன்…இந்த தசாவதாரத்ல- இல்ல தவசதாரத்தில ஒரு மாமா பெரிய தொப்பிவச்சு தாடியோட வந்து டான்ஸ் ஆடுவாங்களே…”
”ஆமா..சுடிதார் போட்டிருப்பாங்களே, அவங்கதானே?” என்றான் உற்சாக வேகத்துடன். ”வெத்தில போட்டு துப்புவாங்க…அக்குத்தாத்தா மாதிரி…” எழுந்து எம்பிக்குதித்து ”அப்றம் கயித்த கட்டிகிட்டு இப்டியே ஜம்ப் பண்ணி… சூப்பர் பாட்டு..ஜுனாமியிலே ஒரு கொழந்தைசெத்துப்போச்சு. கறுப்புமாமா வந்து கால் மாட்டி.. மக்களேண்ணு கூப்பிடுவாரே”
”உசரமான ஒருத்தர் கூடவருவாரே”
”ஆமா…அவர் காலிலே கம்பு கட்டிட்டு நடக்கிறார். எங்கப்பா சொன்னார். மூஞ்சியிலே மாஸ்க் போட்டிருப்பார். எதுக்காக உடம்பிலே ஊசி குத்துறாங்க?”
”யார?”
“தாடி வச்சவர?”
”அவரு நல்லவருல்லா? அதனால கெட்ட ராஜா ஊசியால குத்துறார்.”
”சாமிசெலைய கடலில போட்டுட்டாங்க..போட்டுல போயி… அப்றம் ஜுனாமியிலே ஜிராபிஸ் வந்தபோது…”
”என்னது?” என்றேன், துணுக்குற்று.
”தண்ணி…நெறைய தண்ணி வந்ததுல்ல அப்ப…கார்லாம் போட்டுமாதிரி போச்சு..ஆனா கார் மிதக்காது முழுகிரும்.போட்டுதான் மிதக்கும்…ஒரு பிஸ்கெட் எனக்கா?”
”சாப்பிடு”என்றேன். ”உங்கம்மா என்ன கதை சொன்னாங்க?”
”எந்த கதை?”
”தவசதாரம் கதை?”
”சாமிசெலை ஒடைஞ்சதனால கடலில தூக்கி போட்டுட்டாங்கள்ல? அது அப்டியே ஜிரா·பிஸ்ல, இல்ல, ஜுனாமியிலே திரும்பிவந்திட்டுது. கன்யாகுமரியிலே நாம செருப்ப தூக்கி போட்டா திரும்பி வந்திரும்ல? சுகுணா அக்காவோட செருப்பு வரல்லை. அவ அழுதா…”
”அப்றம் அந்த செலையை என்ன செஞ்சாங்க?”
”மறுபடியும் கடலில ஆழமா கொண்டு போட்டிருவாங்க…அம்மா சொன்னாங்க” .
என்ன ஒரு தெள்ளதெளிவான கதை.
”ஒரு ·பிஷ் கூட அப்ப அங்க நீந்திட்டிருந்திச்சே?”
பிஸ்கட் தின்னப்பட்டு வாய் துடைக்கப்படும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அதன் பின் ”…அந்தப்படத்துல கமல் எத்தனை வேஷத்தில நடிச்சிருக்காரு தெரியுமா?”என்றேன்.
”எத்தனை?”
”ப்ப்ப்பத்து!”
இவ்ளவுதானா என்ற பாவனையுடன் அடுத்த பிஸ்கட்டை எடுத்தான். ”அது ரூபிணிக்குல்ல?”
”அவளுக்கு பிஸ்கட் பிடிக்காது”
தின்று முடிப்பது வரை மீண்டும் காத்திருந்தேன்.
”ஆனை அக்காவை தூக்கி குச்சியிலே குத்திவச்சது. டாய் சோல்ஜர் அவளை டுமீல்னு”
”அந்த டாய் சோல்ஜர் யாரு தெரியுமா? அது கமல்தான்.அப்றம் அந்த உசரமான ஆள் அவரும் கமல்தான். அப்றம் கராத்தே சண்டை போடுவாரே அவரும் கமல்தான்…”
”தீ மேலே கார் ஓட்டிட்டு போறவர்?” என்றான்.
”அவரும் கமல்தான். அந்த பாட்டிகூட கமல்தான்…”
”பாட்டி வேஷம் போடல்லை…எப்பமுமே பாட்டியாத்தான் இருக்காங்க..” என்றான்.
எப்படி விளக்குவது? ”…அந்த பாட்டி …அதாவது அந்த பாட்டிக்குள்ள கமல் மாமா இருக்காங்க…”
சொல்லியிருக்கக் கூடாது. பீதியுடன் ”உள்ரயா ?”என்றான்.
”ஆமாம்”என்றேன் பலவீனமாக.
”தின்னுட்டாங்களா?”
என்னடா சிக்கலாகப்போய் விட்டது என்று எண்ணி ”கன்யாகுமரியில பயில்வான் பொம்மைக்குள்ள பொயி நீ போய் கையை ஆட்டியிருக்கேல்ல அத மாதிரி..” என்றேன்.
அவன் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. ”பாட்டி அழுதாங்க…நல்ல பாட்டி..கைமட்டும் அவளோ பெரிசு… வையாபுரி குச்சிமேல ஓடுறப்ப கீழ விழுந்திட்டான்”
”பத்து வேஷம் நடிச்சிருக்காங்க தெரியுமா?”
”யாரு?”
”கமல்” .
”கமல் யாரு இதில?”
”அதான் பைக் ஓட்டுவாரே…அசின்கூட…அவருதான் மத்த எலலருமே…” என்றேன்
”அந்த டாய் சோல்ஜர் உசரமான ஆள் எல்லாருமே கமல்தான்”
”அப்ப கமல் யாரு?”
எனக்கே தசாவதாரத்தின் கதை கேயாஸ் ஆகிவிட்டதனால் பையனை அனுப்பிவிடலாம் என்று எண்ணினேன்.
அவனே ”எங்கம்மா கூப்பிடுறாங்க…”என்று கட்டிலில் இருந்து இறங்கி ”உங்க கம்பூட்டர் குடுப்பிங்களா? படம்பாத்துட்டு குடுக்கிறேன்” என்றான்.
”அது உடைஞ்சிரும்” என்றேன் ”உங்கப்பாகிட்ட கேளு”
”எங்கப்பா கிட்ட பைசா இல்லியே. அவரு பூவர் மேன்….பூவர் மேன் ஹேஸ் நோ மனி. எங்க மிஸ் சொன்னாங்க”
”சரி”என்றேன். ”அவர் கிட்ட நான் சொல்றேன்”
அவன் வெளியே போய் ”ஈரோ கடிக்குமா?”என்று கேட்டபின் ”ஈரோ! ஈரோ!”என்று குரல்கொடுத்து கேட்டருகே போனான். என்னை நோக்கி திரும்பி ”நாங்க சினிமா படம்பாத்தமே…”என்றான் “சூப்பர் படம்”
“என்ன படம்?”
“தவசதாரம்!” அவன் கற்பனை பைக்கை கிளப்பி டுர்ர் என்று சென்றான்.
(மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jun 30, 2008 )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

