வெறும் உரைகள்
நலம் அறிய விழைகிறேன்.முழுமையறிவு காணொளிகள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. நண்பர்கள் பலர் உங்களை இக்காணொளிகள் வழியாக அறிந்துகொண்டு வருகிறார்கள். என்னிடம் அவற்றைப் பற்றிக் கேட்கும்போதும் உரையாடும்போதும் மனம் மகிழ்கிறது. மிக முக்கியமாக, அவர்களை மூலகட்டுரைகளை நோக்கியும் இலக்கியப் படைப்புகளை நோக்கியும் இவை கொண்டு செல்கின்றன.
இவை அனைத்தையும் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற ஒலி பகிரும் தளங்களில் வெளியிட்டால் மேலும் பலரை சென்றடையும் என்று நினைக்கிறேன். காதில் அணியும் கேட்பான் அனைவரிடமும் சென்றுவிட்ட இக்காலகட்டத்தில் ‘பாஸிவ் லிசனிங்‘ என்பது இளைஞர்கள், பொதுப் போக்குவரத்துப் பயணிகள், கார்/பைக் ஓட்டிகள் இடையே பெருவாரியாகப் பெருகியுள்ளது. எனவே உங்கள் உரைகள் மேலும் பலதரப்பட்ட மக்களிடையே சென்று சேர இது நிச்சயம் வழிவகுக்கும்.
அதற்கான வழிமுறைகள் என்னவென்று இனிமேல் தான் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஒப்புதல் கிடைத்தால் நானும் எனது நண்பனும் இப்பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறோம். ஒரு புதிய கணக்கு தொடங்கி அதில் இதுவரை வந்த மொத்த காணொளிகளையும் ஒலிக் கோப்புகளாக பதிவேற்றுகிறோம். பணி முடிந்ததும் அதன் நுழைவு ஐடியையும் கடவுச்சொல்லையும் உங்களிடம் பகிர்கிறோம். நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் உங்களுக்கும் குழுவினருக்கும் வசதியாக இருக்கும்.
நன்றி.
தங்கள்,
கிஷோர் குமார்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் பதில் கடிதம் வந்ததைக் கண்டு துள்ளி எழுந்த காலைப் பொழுதை உவகையுடன் எண்ணிக்கொள்கிறேன். அனுமதி அளித்தமைக்கு மிக்க நன்றி. ஸ்பாடிபையில் சானல் தொடங்கி முதல்கட்டமாக 20 பதிவுகள் இட்டுள்ளேன். புத்த முழுநிலவு நாளில் இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்து வரும் குரு பூர்ணிமாவுக்குள் இதுவரை வந்த அனைத்து காணொளிகளையும் பதிவேற்றி விடுகிறேன்.
இப்பணிக்காக மீண்டும் உங்கள் காணொளிகளை முழுக்க கண்டது உங்களுடன் முழுநாள் செலவழித்து உரையாடியதைப் போன்ற உணர்வை அளித்தது . முன்னர் அடிக்கடி உங்களுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த நான், திடீரென ஏதோ ஒரு மனத்தடையினால் நிறுத்திவிட்டேன். தளத்தைத் தினமும் வாசிப்பது, வெண்முரசில் உலாவுவது என எல்லாம் வழக்கம்போல நடந்தாலும், பழைய உரையாடல் மனநிலைக்குப் பலமுறை முயன்றும் செல்ல முடியவில்லை. இக்காணொளிகள் அந்த தடையை உடைத்தெறிய உதவியாய் இருந்தன. கட்டுரை, கதை வாசிப்பதுடன் இதுவும் இப்போது அன்றாடத்தில் ஒன்றாகிவிட்டது.
அனைத்திற்கும் நன்றி!
கிஷோர்
ஒலிவடிவில் முழுமையறிவு உரைகளைக் கேட்க
Spotify Channel Link : https://open.spotify.com/show/0y50fkVMI8NARfZz82LQ13?si=eztqLs1GQWidvX0Zud4iRw
அன்புள்ள கிஷோர்,
நன்றி.
வெறும் ஒலியாகக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. என்ன வேறுபாடு என்று பார்த்தேன். காணொளியாகக் கேட்கையில் இன்னொருவருடன் உரையாடுவதுபோல தோன்றுகிறது. வெறும் ஒலிவடிவமாகக் கேட்கும்போது எனக்கு நானே தனிப்பட்ட முறையில் உரையாடிக் கொள்வதுபோலத் தோன்றுகிறது. ஒருவேளை இரண்டுமே சரியாக இருக்கலாம். நன்றி.
இப்படி ஒலிவடிவாகக் கேட்பதன் அவசியம் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். காணொளிகளை ஒலிவடிவாகவே அவர் கேட்பதாகச் சொன்னார். காணொளிகளை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு என்றார். படிப்பது, பார்ப்பது ஆகியவற்றுக்கு அதற்கான நேரம் ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. கேட்பது பிற பணிகளுக்கு நடுவே நிகழும்.
இன்றைய வாழ்க்கையில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் வேலைகள், மூளை தேவையில்லாத வேலைகளே மிகுதி. எப்படியோ நம் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் இப்படி செலவிடப்படும்படி ஆகிவிட்டிருக்கிறது. பொழுதை அப்படிச் செலவிடுவது நம்மைச் சலிப்புக்குச் செலுத்துகிறது.
கடந்த காலகட்டங்களிலும் இத்தகைய எளிய வேலைகள்தானே இருந்தன என்று கேட்கலாம். உண்மை. ஆனால் இன்று கூடவே வேறு இரண்டு விஷயங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. ஒன்று தனிமை. இன்னொன்று நம் அறிவுத்தரத்தின் வளர்ச்சி.
சென்ற காலகட்டங்களில் மக்கள் தனியாக இல்லை. கிராமங்களில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் எளிய வேலைகளைச் செய்பவர்கள் கூட்டமாக, குழுவாக இருந்தார்கள். பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். சில வேலைகளில் பாடல்களும் இணைந்திருந்தன. நாம் இன்று நமக்கு அணுக்கமான சிறு சூழலுக்கு வெளியே முற்றிலும் தனித்திருக்கிறோம்.
சென்ற காலங்களில் மக்கள் என்ன வேலை செய்தார்களோ அதே அளவுதான் அவர்களின் அகமும் அறிவும் இருந்தது. அதில் நிறைவடைந்திருந்தனர். இன்று நாம் என்ன வேலை செய்கிறோமோ, எந்தவகையான அன்றாடம் கொண்டிருக்கிறோமோ அதைவிட நம் அகமும் அறிவுத்தரமும் அதிகம். ஆகவே நம்மில் பெரும்பகுதி நம் வேலையிலும் அன்றாடத்திலும் ஒட்டாமல் அப்பால் எஞ்சி நிற்கிறது. அது ஒன்றும் செய்யாமல் இருக்கிறது, சலிப்படைகிறது.
அதற்காகவே நாம் சமூகவலைத்தளங்களை நாடுகிறோம். அவை அளிக்கும் பலவகையான செய்திகளில் ஈடுபடுகிறோம். அவை உருவாக்கும் பொதுவான கருத்துகளை நம் சிந்தனைகளாக கொள்கிறோம். இதுவே சராசரி. பெரும்பாலும் எவரும் அதைக் கடப்பதில்லை. அதைக் கடந்து வருபவர் ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர். அவர் அந்தச் சராசரியாலும் சலிப்படைந்திருக்கிறார். தனக்கான சொந்தச் சிந்தனைகளை நாடுகிறார். தன்னை மெய்யாகவே தூண்டும் சிந்தனைகளை கேட்க விரும்புகிறார். நான் உத்தேசிப்பது அவர்களை மட்டுமே.
இந்த ஒலிப்பதிவுகள் காணொளிகளை விட தெளிவாக இருப்பதுபோல் உள்ளன. இவை இன்னும் அழுத்தமாக ஒருவரின் செவிகளுடன் பேசும் என நான் நினைக்கிறேன். இப்போது இவற்றைக் கேட்கையில் இவற்றில் உள்ள தயக்கங்களே எனக்கு அதிகமாக கவனத்தில் படுகின்றன. அவை நான் யோசிக்கும் இடைவெளிகள். சொல்லுக்காக, கருத்துக்காக, மானசீகமாக எதிரே இருப்பவரின் எதிர்வினைக்காக தயங்கும் இடங்கள் அவை.
இளமையில் என் சிந்தனைப் பயிற்சி என்பது சுந்தர ராமசாமியுடனும், ஆற்றூர் ரவிவர்மாவுடனும், பி.கே.பாலகிருஷ்ணனுடனும், எம்.கங்காதனுடனும், ஜி.குமாரபிள்ளையுடனும், இறுதியாக குரு நித்ய சைதன்ய யதியுடனும் தொடர்ச்சியான உரையாடலில் இருந்தது. அவர்கள் என்னுடன் பேசியது கொஞ்சம். நான் அவர்களுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டது மிக அதிகம். அவர்கள் எவரும் இன்று இல்லை. ஆனால் அவர்களுடன் நான் கொண்ட உரையாடல் இதுவரை அறுபடவில்லை.
இன்று காலை 5 மணிக்கு எழுந்து காலைநடை சென்றபோது சுந்தர ராமசாமியின் ஒரு பழைய பேச்சை எண்ணி, அவருக்கான என் மறுப்பையும் ஏற்பையும், விரிவாக்கத்தையும் அவரிடமே சொல்லிக்கொண்டு சென்றேன். அவர் என்னுடன் இருப்பதுபோல் இருந்தது.
என்னுடன் என் நண்பர்கள் கொண்டுள்ள அந்த உரையாடல் அறுபடாமல் நீள ஒரு தொடர்பூடகமாக இந்த உரைகள் இருக்கும் என்றால் நல்லது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


