சித்தரிப்பும், கவிதையும்- எம்.ஶ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு

சோ.விஜயகுமாரின் கவிதைகளை நான் வாசித்ததில்லை. அப்பெயர் அறிமுகமும் இல்லை. குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் அவர் கவிதைகளை இணையம் வழியாகத் தேடி வாசித்தேன். அவருடைய கவிதைகளில் வடிவ ஒருமையற்ற ஒழுக்கு உள்ளது. அது நவீனக் கவிதைக்குரியது அல்ல. நவீனக்கவிதை ஒரு சொல் கூடுதலாகச் சொல்லப்பட்டாலும் வாசகனின் உலகுக்குள் தன் கையையோ காலையோ நீட்டிவிருகிறது என்று படுகிறது. அது வாசகனில் ஓர் எதிர்ப்பை உருவாக்கி விடுகிறது.

உதாரணமாக இந்தக் கவிதை

அம்மா எனும் இரகசிய இரைப்பை

முதல் முதலாகப் பருகத்
தரப்பட்ட முலையில்தான்
சதையின் வாசனை அறிமுகமானது
எல்லாவற்றிற்கும் முன்பாக
எல்லாவற்றையும் விட மூர்க்கமாக.

ஒரு மதிகெட்ட மத்தியானத்தில்
அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு
பாலாடையைக் கொடுத்தபோதுதான்
நிராகரிப்பும் ஏமாற்றமும் பரிச்சயமாகின.

இல்லாத பூச்சாண்டி பிடித்துப்போவான் என்றாள்
நான் முதல்முதலாகப் பயந்தேன்
இதுதான் கடைசிக் கவளமென்றாள்.

அன்று பொய்யும் நானும் சந்தித்தோம்
நான் தூங்கியதாய் நம்பிய ஓரிரவில்
அவள் கிசுகிசுத்த குரலில் முனகினாள்
கள்ளத்தனத்தைக் காதுகூடாகக் கேட்டேன்.

ஒருமுறை பிடிவாதம் பிடித்ததற்காய்
விறகைக்கொண்டு சூடு போட்டாள்
பின் அவளேதான் கண்ணீர் மல்க
மருந்து போட்டாள்.

நேசம் போன்று நோகடிக்கும் ஆயுதமில்லை
இந்த வரி அந்தத் தழும்பு பரிசளித்தது
நீதான் என் ஒரே உலகமென்றவளுக்கு
இன்னோர் உயிர் கிடைத்தபோது
அதையும் நேசித்தாள்.
ஒரே நேரத்தில் இருவர்மேல் காதல் வருமென
அவள் சொல்லிக்கொடுக்கவில்லை
ஆனாலும் கற்றுக்கொண்டேன்
இன்றேகூட உனக்கும் அவருக்கும்
சண்டை வந்தால் அவரோடுதான் போவேன்
உன்னைப் பிடிக்கும்
ஆனாலும் உனக்காக ஒருபோதும்
நான் என்னைப் பணையம் வைக்க மாட்டேனென
அடிக்கடி சொல்வாள்.

நான் சந்தித்த முதல் துரோகமும்
மிகப்பெரிய துரோகமும் அதுதான்
நேசத்தின் அதே நிலத்தில்
அவளது வேரின் அருகில்
அரளிச் செடியை அன்றுதான்
ரகசியமாய்ப் பதியம் போட்டேன்.

ஊருக்கே தலைவாரியபடி வம்புக்கதை பேசுபவள்
யாருமற்ற நேரத்தில் சீப்புக்குப் பேன் பார்த்தபடி
எதையோ புலம்பிக்கொண்டிருப்பாள்.

தனிமையின் உக்கிரத்தைத் தணிக்க
அவளருகில் பலமுறை தண்ணீர் வைத்ததுண்டு
மதுவை அருந்துவதற்குச்
சத்தியமாய் நான் காரணமல்ல.

பாவாடை நாடாவால் இறுக்கப்பட்ட
அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்
அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அவிழ்க்கப்பட்ட அரிசி மூட்டையிலிருந்துஅனுதினமும் அவள்
என்னைத்தான் அளந்தாள்
என்னையேதான் சமைத்தாள்
சிறிது சிறிதாக என்னை உண்டு செரித்தாள்.

ஓர் இலையை லாவகமாய்த் தரை சேர்க்கும்
அந்திக்காற்று போல
எல்லாத் தன்மைகளுக்கும்
ஒரு புடவையின் நுனியில் விழும்
வழவழத்த முடிச்சு போல
எல்லாத் துயர்களுக்கும்
எல்லாவற்றிற்கும் அவள்தான் பழக்கினாள்.

என் தாயைப் போலப் பார்த்துக்கொள்
என்றபோது ஒருத்தி
நான் உன் தாய்போலல்ல
அந்தளவிற்கு நல்லவளும் அல்ல என்றாள்
ஓத்தா எனும் வார்த்தைக்குச்
சிரிக்கத் தொடங்கியது அப்படித்தான்.

என் அம்மாவின் பதின் பருவமே எனப் பிதற்றியபோது
முத்தத்திலிருந்து விலகிய ஒருத்தி
அதன்பிறகு
என் கண்களைச் சந்திக்கவில்லை
அம்மாவிற்கு மாதவிடாய்
ஏன் சீக்கிரமே நின்றுபோனதென
அறிந்தது அப்போதுதான்.

உன் அம்மாவை நான் பார்த்துக்கொள்வேன்
உன்னை எவ்வளவு பிடிக்குமோ
அதே அளவிற்கு உன் அம்மாவையும் பிடிக்கும் என்றவள்
நான் கொலை செய்யும் முன்னே
செத்துப்போனாள்
அம்மா இறந்துபோவதாக
அடிக்கடி கனவு வர ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.
அம்மா அழுகக்கூடாதென்றுதான்
எனக்கடுத்து உடைந்தழுகிய கருமுட்டையை
அரளிச் செடி அருகே புதைத்து வைத்தேன்
அதன் பூக்களின் வண்ணம்
முட்டையிலிருந்து வந்தது.

அவள் பைத்தியக்காரத்தனமாக
ஏதும் செய்யக்கூடாதென்று
பூச்சிக்கொல்லியைச்
செடியின் வேரில் ஊற்றி வைத்தேன்.

உணவைச் செரிக்கும் அமிலத்தின் நதியில்
அவளது வயிற்றுக்குள் மிதந்தபிறகுதான்
இங்கு வந்து சேர்ந்தேன்
அவள் என்னை அடிக்கடி அணைத்துக்கொண்டாள்
அடிக்கடி முத்தமிட்டாள்
அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக
உண்டு செரித்தேன்
அவள் நடந்து நடந்து
தள்ளாடித் தள்ளாடி
தவழ்ந்து தவழ்ந்து
என் இரைப்பைக்குள் வந்து சேர்ந்தாள்.

இரைப்பை எனப் பெயரிடப்பட்ட
கல்லறைப் பலகைக்கு அருகில்
என் பெயருள்ள ஒரு கள்ளிச் செடியும்
ரத்தச் சிவப்பான பூக்களோடு
பெயரற்ற ஓர் அரளிச் செடியும் இருப்பது
யாருக்கும் தெரியாது
என் இரைப்பைக்கு
அம்மாவின் பெயர் வந்ததும்.

(நன்றி நீலம் இதழ்)

இந்தக் கவிதையின் நீளத்தை இக்கவிதை நியாயப்படுத்துகிறதா, இந்தக் கவிதையின் எந்தெந்த பகுதிகள் வாசகனின் கற்பனை நிகழவேண்டிய களத்திற்குள் நீட்டிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் முதலில் விவாதிக்கவேண்டிய விஷயம் என்று படுகிறது.

இந்த நீளம் ஏன் வருகிறது? இக்கவிதையின் மையமாக, ஈட்டியின் கூர்முனை போல, வருவது அம்மாவும் இரைப்பையும் என்னும் புதுமையான படிமம். ஒரே சமயம் விந்தையாகவும், அதேசமயம் நம்பகமாகவும் இருப்பதே அதன் ஆற்றல். அதனால்தான் இந்தக் கவிதை நல்ல படைப்பாக ஆகிறது.

அம்மா நம் வயிற்றுடன் இணைந்தவள். அம்மாவின் வயிற்றுடன் நாம் இணைந்துள்ளோம். வயிறு என்பது primordial ஆன ஒன்று. உயிர்களின் முதல் உறுப்பு அதுதான். அதனாலேயே அது ஒரு archetype. அதிலிருந்து பிறந்த படிமம் ஆதலால் இது வலுவானதாக இருக்கிறது.

ஆனால் இந்தக் கவிதையிலுள்ள பல படிகளினாலான சித்தரிப்புகளுக்கு அந்தப் படிமத்துடன் என்ன தொடர்பு? அந்தப் படிமத்தை விட்டு பல படிகளாகக் கீழிறங்கி அம்மாவுக்கும் கவிதைசொல்லிக்குமான உறவு, அம்மா கவிதைசொல்லியின் பிற உறவுகளில் ஊடுருவுதல் என பல நிலைகளில் பரந்து செல்கிறது.

அப்படி பரந்து செல்லவேண்டுமென்றால் இது ஒரு குறுங்காவியமாக அமைந்திருக்கவேண்டும். குறுங்காவியம் என்றால் இந்த ஒற்றைப் படிமம் போதாது. பல படிமங்களின் தொடுப்புதான் குறுங்காவியம். படிமங்களை தொடுப்பதற்கு ஒரு கதை அல்லது narration என்பதுதான் குறுங்காவியங்களின் பொதுவான வழிமுறை. அல்லது படிமங்களின் உள்ளார்ந்த பொதுத்தன்மையையே சரடாகக் கொள்ளலாம். ஆனால் பெருங்கவிஞர்களே அதைச்செய்ய முடியும். ஒரே ஒரு படிமத்தை விரிவான ஒரு சித்தரிப்பின் பகைப்புலத்தில் பொருத்தி ஒரு குறுங்காவியத்தை அமைக்க முடியாது. அப்படியென்றால் இது ஒரு நீள் கவிதைதான். அதாவது நீண்டுபோன ஒரு கவிதை.

அந்த சித்தரிப்புகள் எல்லாமே சாதாரணமான பேச்சு ஆக உள்ளன. அவற்றில் கவித்துவமே இல்லை. அந்த மையப்படிமத்தின் சாயல்கொண்ட துணைப்படிமங்கள் கூட இல்லை. அல்லது நுணுக்கமான வாழ்க்கைத் தருணங்களோ அதைப்போன்ற கவனிப்புகளோ இருக்கலாம், அவையுமில்லை. அந்தச் சித்தரிப்புகள் எளிமையானவையாக உள்ளன. அம்மாவுடனான உறவின் திரிபுகள், அம்மாவால் உருவான உறவின் திரிபுகளை இத்தனை நீட்டிச் சொல்ல இக்கவிதைக்குள் இடம் இல்லை.

ஒரு நல்ல கவிஞனின் உண்மையான சவாலே இதில்தான் உள்ளது. கவிதையற்ற பகுதிகளை தீட்டித் தீட்டிக் கூர்மையாக்கி, கவிதை நிகழ்ந்த பகுதிகளுக்குக் கிட்டத்தட்ட அருகே கொண்டுவருதலில் என்று சொல்லுவேன். கவிதை அதுபாட்டுக்கு தானாக வந்தமைந்துவிடும். கவிதையற்ற பகுதிகளை கவிதை நோக்கிக் கொண்டுச்செல்லத்தான் மொழிப்பயிற்சி, வடிவப்பயிற்சி எல்லாம் தேவை.

யாப்பு முறையில் எழுதப்படும் கவிதைகளுக்கு யாப்பு என்ற பொதுவான ஓசையமைப்பு அளிக்கும் வசதி உண்டு. புதுக்கவிதைக்கு அது இல்லை. புதுக்கவிதையில் அவ்வாறு கவிதையற்ற பகுதியை எப்படி தீட்டுவது என கவிஞன் மட்டுமே முடிவெடுக்க முடியும். செறிவான, சுருக்கமான உரைநடையை அமைக்கவேண்டும். அது கொஞ்சம் நீண்டால்கூட கவிதையை நெரிக்க ஆரம்பித்துவிடும். மையப்படிமத்தின் சாயலைக் கொண்ட பிற படிமங்களை உருவாக்கலாம். அந்த உணர்ச்சிநிலைகளை கொஞ்சம் நீட்டலாம். (மனுஷ்யபுத்திரன் அதைத்தான் செய்கிறார்) பொதுவாக சுருக்கமான flat ஆன சித்தரிப்பை அளிப்பதுதான் நல்லது.

விஜயகுமாரின் இந்தக் கவிதையில் அந்த சித்தரிப்புப் பகுதிகளில் மொழி கூர்மையில்லாமல் சாதாரணமான பேச்சுபோல உள்ளது. கவிதை வாசகன் சலிப்புடன் ஸ்க்ரோல் செய்து கீழே வரும்படி அமைந்துள்ளது. அதுதான் இக்கவிதையின் மிகப்பெரிய பலவீனம்.

முதல் முதலாகப் பருகத்
தரப்பட்ட முலையில்தான்
சதையின் வாசனை அறிமுகமானது

என்ற தொடக்க வரி ஒரு நல்ல கவிதைக்குரியது. அதற்கான உள்ளார்ந்த ஓசைநயமும் கொண்டது.

அதன்பிறகு வரும் சித்தரிப்புகளில் பல மிகச் சாதாரணமானவை. உதாரணமாக

‘நீதான் என் ஒரே உலகமென்றவளுக்கு இன்னோர் உயிர் கிடைத்தபோது அதையும் நேசித்தாள்.ஒரே நேரத்தில் இருவர்மேல் காதல் வருமென அவள் சொல்லிக்கொடுக்கவில்லைஆனாலும் கற்றுக்கொண்டேன்.இன்றேகூட உனக்கும் அவருக்கும் சண்டை வந்தால் அவரோடுதான் போவேன் உன்னைப் பிடிக்கும் ஆனாலும் உனக்காக ஒருபோதும் நான் என்னைப் பணையம் வைக்க மாட்டேனென அடிக்கடி சொல்வாள்.’

என்ற பத்தி ஒரு கவிதையில் இடபெறத்தக்கதே அல்ல.அது ஒரு சாதாரணமான பேச்சு அல்லது நினைவுதான். அத்தகைய நான்கைந்து பத்திகள் இக்கவிதையில் உள்ளன.

உணவைச் செரிக்கும் அமிலத்தின் நதியில்
அவளது வயிற்றுக்குள் மிதந்தபிறகுதான்
இங்கு வந்து சேர்ந்தேன்.

என்ற வரியில்தான் தொடக்கவரியின் தீவிரமான கவித்துவத்தை இக்கவிதை மீண்டும் சென்று சந்திக்கிறது. அங்கே உச்சமும் கொள்கிறது. ஆனால் அதன்பின்னரும் கவிதை நீள்கிறது.

இக்கவிதையின் இரண்டாவது சிக்கல் தன்னியல்பாக எழுதும் படிமத்திற்கும், மூளையால் சிந்தித்து உருவாக்கப்படும் படிமத்திற்கும் இடையிலான மோதல். அரளிச்செடி, பூச்சிக்கொல்லி எல்லாமே கட்டமைக்கப்பட்ட படிமங்கள். கவிதையில் கட்டமைக்கப்பட்ட படிமங்களுக்கு இடமில்லை. ஒரு முதன்மைப் படிமத்தை வலுப்படுத்த அவை வரலாம். தனியாக வந்தால் வாசகனுக்கு அவை ஒவ்வாமையையே ஊட்டும். கவிதையை வாசிக்க வருபவன் சிறந்த வாசகன். கவிஞனை விடவும் சிந்தனை ஆற்றல் கொண்டவர்கள்தான் பெரும்பாலும். அவர்களுக்குக் கவிஞனின் சிறிய மூளையை கண்டால் சலிப்புதான் உருவாகும்.

கடைசியாக கவிதை நிகழ்ந்தபின் அதை கவிஞனே தொகுத்துப் பேசி முடிப்பது என்பது நவீனக்கவிதையில் ஒரு பிழை. (ஆனால் பழைய ரொமாண்டிக் கவிதைகளில் அந்த முறை உள்ளது)

இரைப்பை எனப் பெயரிடப்பட்ட
கல்லறைப் பலகைக்கு அருகில்
என் பெயருள்ள ஒரு கள்ளிச் செடியும்
ரத்தச் சிவப்பான பூக்களோடு
பெயரற்ற ஓர் அரளிச் செடியும் இருப்பது
யாருக்கும் தெரியாது
என் இரைப்பைக்கு
அம்மாவின் பெயர் வந்ததும்.

என அந்த இயற்கைப் படிமத்தையும் செயற்கைப் படிமங்களையும் இணைக்கும் தொகுப்புடன் முடிகிறது என்பது இக்கவிதையின் பலவீனங்களில் இறுதியானது.

தமிழ்க்கவிதை பற்றி விரிவான விமர்சனங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன. க.நா.சு, பிரமிள், சுந்தர ராமசாமி (பசுவையா), ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய பல ஆயிரம் பக்கங்கள் நீளும் கவிதை விவாதங்கள் உள்ளன. சுகுமாரன், விக்ரமாதித்யன் போன்ற பல கவிஞர்கள் கவிதைகளைப் பற்றிய மதிப்புரைகளிலும் முன்னுரைகளிலும் கவிதை பற்றிப் பேசியிருக்கின்றனர். கவிதை எழுதவரும் இளங்கவிஞர்கள் அவற்றையும் படிக்கவேண்டும்.

கவிதை தன்னிச்சையாக வரும். எழுதுபவன் கவிஞனாக இருந்தால்போதும். ஆனால் அது சரியான கவிதையாக இருக்கவேண்டும் என்றால் அதிலுள்ள கவிதையல்லாத பகுதிகள் கவிஞனால் கவிதைக்கு அருகே கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்குத்தான் கவிதையின் வடிவம், மொழி ஆகியவற்றை பயிலவேண்டும். கவிதை அழகியலை கூர்ந்து பார்க்கவேண்டும்.

அந்த வகையான வாசிப்பு மிகக்குறைந்துவிட்டதோ என்று இளைஞர்களின் கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம் நினைப்பதுண்டு. நானிருக்கும் நாட்டில் இதற்கெல்லாம் முறையான வகுப்புகளே உண்டு. நான் வாசிக்க நேர்ந்த பல கவிதைகள் கவிஞனின் பயிற்சியின்மையால் நழுவவிடப்பட்டவை. அந்தப் போதாமையை இந்தக் கவிதையை வாசிக்கும்போதும் உணர்ந்தேன். அவர்கள் காத்திரமான கவிதை விவாதங்களை வாசிப்பதை விட எளிய அரட்டைகளையே நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்தக் கவிதை இப்போதிருக்கும் நிலையிலும் முக்கியமான கவிதையே. ஏனென்றால் உண்மையான ஓர் உணர்வுநிலை, அதை வெளிப்படுத்தும் ஒரு வலுவான படிமம் இக்கவிதையில் நிகழ்ந்துள்ளது. கவிஞனுக்கே எங்கே கவிதை நிகழ்ந்துள்ளது என்று பிரித்தறியவும், அதை முன்வைக்க பிற பகுதிகளை கூர்மையாக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என்பதன் சான்றாக இக்கவிதை உள்ளது.

இளங்கவிஞர்களுக்கான விருது என்பது ஒரு அங்கீகாரம் அல்ல. அது ஒரு கவனப்படுத்தல்தான். அதற்கான தகுதி கொண்ட கவிஞர் என்றுதான் விஜயகுமாரை நினைக்கிறேன். அவர்மேல் வாசகர்களின் கவனம் விழும்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைத்து மேலே செல்லவேண்டிய பொறுப்பும் அவருக்கு உள்ளது. இளங்கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

எம்.ஶ்ரீனிவாஸ்

இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.