பெருங்கனவுகளின் முகப்பில்…
இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான குழப்பம் ஏற்பட்டது. அதையொட்டி ஒரு கேள்வி.
இணையத்தில் ஏராளமானவர்கள் வெண்முரசு நூல்களை படிப்பதையும், கூட்டுவாசிப்பில் ஈடுபட்டிருப்பதையும், கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். இந்தப் வெண்முரசு வெளிவந்தபோதிருந்தே அது தீவிரமாக வாசிக்கப்படுகிறது. அது முழுமையடைந்தபிறகு அதை வாசிப்பவர்கள் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள். தமிழில் எந்த ஒரு இலக்கியப்படைப்பும் இந்தவகையான தீவிரமான வாசிப்பைப் பெற்றதில்லை. உங்கள் படைப்புகளிலேயேகூட இந்த அளவுக்கு வாசிப்பு எந்த நூலுக்கும் கிடைத்ததில்லை என நினைக்கிறேன். அனேகமாக தினம் ஒரு விமர்சனமோ குறிப்போ என் பார்வைக்கு வந்துகொண்டிருக்கிறது.
வெண்முரசு (வெண்முரசு தொடங்கும்போது நான் பிளஸ்டூ படித்துக்கொண்டிருந்தேன்) பொன்னியின் செல்வன் அறிவிப்பு வந்தபோதுதான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டேன். இன்று எட்டு முறை முழுமையறிவு நிகழ்ச்சிகளுக்கு வந்துவிட்டேன். என் நட்புவட்டாரத்திலேயே பலர் வெண்முரசு முடித்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டுமுறை படித்தவர்கள் கூட இருக்கிறார்கள். நான் முதல் நான்கு நூல்களை படித்திருக்கிறேன்.
படித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைப்பற்றி ஏதேனும் சொல்வதற்கிருக்கிறது. காணொளிகளாகவும் ஒலிப்பதிவுகளாகவும் வெண்முரசு பெரும்பாலும் கிடைக்கிறது. வெண்முரசு வரிகள் தனித்தனியாக ஆயிரக்கணக்கில் இணையம் முழுக்க பரவியிருக்கின்றன. அதைக் கேட்டவர்களும் கேட்பவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். வெண்முரசு முழுமையாக இணையத்தில் கிடைத்தாலும் மொத்தநூல்களையும் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே அதற்கான ஒரு அழுத்தமான வாசகர்வட்டம் உருவாகியிருக்கிறது.
இன்றைக்கு வெண்முரசு வாசிக்கப்படுவதில்லை என்று அடிப்படை அறிவுள்ள எவரும் சொல்வதில்லை. ஆனால் வெண்முரசு வாசிப்பவர்களை உங்களுடைய பக்தர்கள், அடிப்பொடிகள், வட்டம் என்றெல்லாம் கேலிசெய்கிறார்கள்.வெண்முரசு வாசிப்பவர்கள் தங்களை பற்றி உயர்வாக எண்ணிக்கொள்கிறார்கள் என்ற வசைகள் காணக்கிடைக்கின்றன. அவர்களின் எரிச்சல் ஆற்றாமை எல்லாம் புரிகிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே எந்த நவீன இலக்கியநூலும் ஐந்தாண்டுகள் கழித்து பேசப்படுவதே இல்லை. சிலசமயம் ஆழமான நூல்கள்கூட பேசப்படுவதில்லை.
அண்மையில் வெண்முரசு பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை வாசித்துவிட்டு எனக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்த இடதுசாரி நண்பர் எரிச்சலுடன் சொன்னார். ‘இதையெல்லாம் சேத்தா அந்தாள் எழுதினத விட ரெண்டு மடங்கு இருக்கும் போலயே’. ஆனால் அது உண்மைதான்.
அதேசமயம் நான் கவனித்த ஒன்று உண்டு. பழைய பதிவுகளைத் தேடிப்பார்த்தால் வெண்முரசு வெளிவந்து கொண்டிருந்த போதும் , வெளிவந்து முடிந்த பின்னரும் , அதைப்பற்றி ஏராளமாக எதிர்த்து எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் எவரென்றே தெரியாத சிறிய எழுத்தாளர்கள் அவர்கள். ‘வெண்முரசை வரும் வாசிக்கப்போவதில்லை, யாரும் வாசிப்பதில்லை, வீம்புக்காக ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது, அதற்கு சமகாலத்துடன் எந்த உறவும் இல்லை, அதற்கு சரித்திர ஆதாரம் இல்லை, ஆகவே அது நூலக அடுக்கில் தூங்கும்’ என்றெல்லாம் சிலர் எழுதித்தள்ளியிருக்கிறார்கள். வெண்முரசை நீங்கள் அறிவித்தபோதே ஞாநி உள்ளிட்ட பலர் அப்படி எழுதியிருக்கிறார்கள். ‘காகித வீணடிப்பு’ என்றும் எழுதியிருக்கின்றனர்.
அந்த எதிர்ப்புகளுக்கும் ஏளனங்களுக்கும் பல படிநிலைகள் உள்ளன. ‘வெண்முரசு எழுதவேண்டியதே இல்லை என்றும், எவருமே வாசிக்கப்போவதில்லை’ என்றும் ‘வெட்டிவேலை’ என்றும் முதலில் சொன்னார்கள். ‘முடிக்கவே போவதில்லை’ என்று அதன்பின் சொன்னார்கள். அதன்பின் ‘அதை வாசகர்கள் கைவிட்டுவிட்டனர், எவருமே வாசிப்பதில்லை’ என்றார்கள். அதன்பின் ‘எல்லாரும் அதை மறந்துவிட்டனர்’ என்றார்கள். இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வெண்முரசு பற்றி இதெல்லாம் சொல்வதற்கு முன் அது உண்மையில் என்ன என்று கூட அவர்கள் புரட்டிப் பார்த்ததில்லை என்றே தெரிகிறது.
இன்றைக்கு அந்த எதிர்ப்பு எழுத்துக்களை ஒரே இரவில் படிக்கையில் அதை எழுதியவர்களை எண்ணி ஆச்சரியம்தான் வருகிறது. அவர்களுடைய ஆற்றாமை புரிகிறது. அவர்கள் எழுதியவற்றை அவர்களே இன்றைக்குப் படிக்கமாட்டார்கள். சரித்திரத்தில் தூசிமாதிரி இவர்கள். ஆனால் வெண்முரசு போன்ற ஒரு படைப்பை எழுதும்போது இந்த வகையான நையாண்டிகளும் எதிர்ப்புகளும் உங்களுக்குச் சோர்வை அளிக்கவில்லையா? குறைந்தபட்சம் எரிச்சலையாவது அளிக்கவில்லையா? எப்படி இந்த அற்பத்தனங்களைக் கடக்கமுடிந்தது?
நான் பெரிய விஷயங்களைச் செய்யவேண்டும் என்னும் கனவுடன் இருப்பவன். ஆனால் ஒரு சாதாரணச் செயலைச் செய்யும்போதே எனக்கெல்லாம் இந்த வகையான அற்பத்தனங்கள் அளிக்கும் கடுப்பு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இதை எப்படிக் கடப்பது?
ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஸ்ரீராம்,
உங்கள் கடிதத்தின் கடைசிப் பத்திக்காக மட்டும் இந்தப் பதில். பெரிய விஷயங்களைச் செய்யவேண்டும் என்னும் கனவு இளமை முதல் ஆட்கொண்டிருப்பதென்பது மிகப்பெரிய ஒரு ஆசி. அது வாழ்க்கையை சலிப்பற்றதாக ஆக்குகிறது. சில்லறை விஷயங்களில் சிக்கிக்கொண்டு நாட்களை வீணாக்காமல் தடுத்துவிடுகிறது. நம்மை நாமே எண்ணி நிறைவுகொள்ளச் செய்கிறது. அக்கனவுடன் வாழ்பவர்களே அளிக்கப்பட்ட வாழ்க்கையை மெய்யாகவே வாழ்கிறார்கள்.
உண்மையில் பெருங்கனவு கொண்டவர்களுக்கு மிகப்பெரிய தடை சிறிய திட்டங்களுடன் சிறியவாழ்க்கை வாழ்பவர்களே. பெருஞ்செயலுக்குக் கனவுகாணும் ஒருவன், அதற்கு முயல்பவன் அந்த சிறிய வாழ்க்கை கொண்டவர்களை அச்சுறுத்துகிறான். அவர்களை தங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சிக்கும், ஆற்றாமைக்கும் தள்ளிவிடுகிறான். ஆகவே அவர்கள் அவனை கொசுக்கள் போல மொய்த்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒரு பெரிய புறத்தடைதான்.
ஆனால் அவனுக்குரிய அகத்தடைகளுடன் ஒப்பிட இந்தப் புறத்தடைகள் ஒரு பொருட்டே அல்ல. அகத்தடைகள் பலவகை. முதல்விஷயம் அவன் செய்ய எண்ணும் அந்தப் பெருஞ்செயல் மேல் உருவாகும் அவநம்பிக்கைதான். அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பயன், அதை எவர் மதிப்பார்கள், யாராவது வாசிக்கிறார்களா, எதிர்காலம் அதை மறந்துவிடுமா என்றெல்லாம் உள்ளிருந்து ஒரு தீவிரமான சோர்வு உருவாகும். அதுவே மிகப்பெரிய அகத்தடை.
அந்தப் பெருஞ்செயலால் இழப்பவற்றைப் பற்றிய சார்ந்த ஆசையும் ஏக்கமும் அடுத்த பெருந்தடை. ஒன்றையே இலக்காக்கிச் செல்வதனால் சிறிய பலவற்றை இழந்துவிடுகிறேனா என்னும் குழப்பம் வந்துகொண்டே இருக்கும். சாமானிய வாழ்க்கையின் இன்பங்கள், சாமானியருடனான உறவு எல்லாம் இல்லாமலாகிறதா என்று அகம் தடுமாறும். உலகியலில் இருந்துகொண்டு நம் நலம்நாடும் அணுக்கமான நம் உறவுகள் அதைச் சொல்லிச் சொல்லி நம்மை பின்னுக்கிழுத்தபடியே இருப்பார்கள்.
இப்படி பல தடைகள். நுணுக்கமாகப் பார்த்தால் வெளியே நம்மைக் கடிக்கும் கொசுக்கள் அல்ல உண்மையான பிரச்சினை. அவர்கள் எளிய தொல்லைகள். ஆனால் அவர்கள் நம்முடைய முதன்மை அகத்தடையாகிய ஐயங்களைத்தான் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் கொஞ்சம் செவிகொடுத்தாலே நம் அகம் அந்த ஐயங்களால் இருள ஆரம்பித்துவிடும்.
நான் கொசுக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்களை அன்றுமின்றும் அனுதாபத்துடன் புரிந்துகொள்கிறேன். அவர்கள் எனக்கு அணுக்கமானவர்களாக இருந்தால் முற்றிலும் விலக்கிவிடுவேன். ஏனென்றால் அவர்கள் செயலாற்றுவதற்கு இடர் விளைவிக்கிறார்கள். எனக்குத் தொடர்பற்றவர்கள் என்றால் என் உலகில் அவர்கள் இல்லை என்றே எண்ணிக்கொள்வேன். ஆகவே நீங்கள் குறிப்பிடும் எதிர்ப்புகள், நையாண்டிகள், ஆலோசனைகள் எதையுமே நான் அறிந்ததே இல்லை என்பதே உண்மை.
வெண்முரசு போன்ற ஒரு படைப்பு அவர்களைச் சிறிதாக்குகிறது, அவர்களின் இருப்பையே அணுவளவாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் என்னதான் செய்யமுடியும்? அந்த ஆற்றாமையை அழுதுகூட தீர்க்கக்கூடாது என்று சொல்லக்கூடுமா என்ன? முதலில் புலம்புவர்கள். பின்னர் அந்தச்சாதனை நிகழவே இல்லை, அதை நாங்கள் பார்க்கவே இல்லை என்று பாவனை செய்வார்கள். அவர்களும் இங்கு வாழ்ந்தாகவேண்டுமே.
ஒருமுறை ஒரு சினிமா அலுவலகத்தில் பொன்னியின் செல்வன் நூல் மேஜைமேல் இருந்தது. அதை ஒரு தயாரிப்பாளர் கையில் எடுத்துப் பார்த்தார். அவரிடம் திகைப்பு ‘இது என்ன சார்?” என்று என்னிடம் கேட்டார்.
அது கதை என்றும், அதை மக்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னேன்.
‘இவ்ளவு பெரிய புக்கையா? படிக்கிறாங்களா? எவ்ளவு வருசம்சார் ஆகும் படிக்க?’ என்றார்.
அண்மையில் நான் ஐந்து நாளில் முடித்தேன் என்றேன். திகைத்துவிட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு வாட்ஸப் செய்தியையே மெதுவாக படிப்பவர் அவர்.
அவரைப் போன்றவர்களே தமிழகத்தில் 90 சதவீதம் பேர். இங்கே முகநூலில் உலவுபவர்கள் அவர்களைவிட கொஞ்சம் மேல், ஒரு பத்து பக்கம் வரை அவர்களில் சிலரால் வாசிக்கமுடியும். சோட்டா எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் மேல், அவர்கள் ஆண்டுக்கு இருநூறு பக்கம் வரை வாசிப்பார்கள். அவர்கள் தங்கள் அளவைக் கொண்டே பிற அனைவரையும் பார்ப்பவர்கள். அவர்களால் உண்மையான வாசகர்களை புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு நல்ல வாசகன் வெண்முரசு போன்ற படைப்பில் இருந்து பெறுவதென்ன, அவன் அடையும் அகநிலை என்ன என்றெல்லாம் உணரவே முடியாது. அவன் எப்படி வாசிக்கிறான் என்றுகூட புரியாது.
வெண்முரசுக்கு மட்டும் அல்ல, ஆயிரம் ஆண்டு கடந்த கம்பராமாயணத்திற்குக் கூட இன்னும் தீவிரமான வாசக உள்வட்டம் உள்ளது. நம் இம்பர்வாரி வாசகர்களின் குழுமம் கம்பராமாயணத்தை வாசித்து முடிக்கவிருக்கிறது. வெண்முரசு வாசிக்கப்பட்டு முடிந்தபின் அதே உணர்வுநிலையுடன் வாசிக்கத்தக்க இன்னொரு நூல் தேவை என எண்ணி அவர்கள் கம்பராமாயணத்துக்குச் சென்றார்கள்.
கம்பராமாயணம் என்றுமே ’பொதுமக்களால்’ படிக்கப்படாது. அந்தந்த காலத்தில் பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வந்துகொண்டே இருக்கும். கூளப்பநாயக்கன் காதலும் விறலிவிடுதூதும்தான் அவை வெளியான காலகட்டத்தில் புகழ்பெற்றவை. ஆனால் கம்பராமாயணம் அப்போதும் ஒரு தீவிர வாசகர் வட்டத்தால் படிக்கப்பட்டது. அதன் பின்னரும் பட்டது. என்றும் படிக்கப்படும். தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாக என்றும் இருந்துகொண்டிருக்கும். அதைத்தவிர்த்து தமிழை எண்ணமுடியாது.
வெண்முரசு சமகாலப் பிரச்சினைகளைப் பேசுகிறதா? சமகாலப் பிரச்சினைகளைப் பேசும் படைப்புகள் உண்டு, அவை சமகாலத்தைக் கடக்காது. சமகாலத்துக்கு அவை தேவைதான். ஆனால் மானுடனின் என்றுமுள்ள பிரச்சினைகளைப் பேசும் நூல்களே செவ்வியல் படைப்புகள். ஆகவே செவ்வியல் நூல்கள் என்றுமுள்ள ஒரு களத்தில் வைத்தே மானுடப்பிரச்சினைகளைப் பேசும்.
உதாரணமாக, கம்பராமாயணம் சோழர்கால யதார்த்ததைச் சொல்லும் காவியம் அல்ல, அதில் சோழநாடே இல்லை. கம்பராமாயணம் நிகழும் களம் வழிவழியாக வந்த தொன்மங்களுக்குரிய உலகம். தொன்மங்கள் அகாலத்தில் நிலைகொள்பவை. சிலப்பதிகாரமோ, சீவகசிந்தாமணியோகூட அப்படித்தான். அவை சமகாலத்தை காட்டுபவை அல்ல. ஆனால் கம்பராமாயணத்தில் சோழர் காலகட்டத்து எல்லா அகச்சிக்கல்களும் உண்டு. முழு மானுடகுலத்திற்குமான சிக்கல்களாக கருதியே அவற்றை கம்பன் பேசியிருப்பான்.
இலக்கியத்தில் மானுடனின் என்றுமுள்ள பிரச்சினைகளை நாடுபவர்களே செவ்வியல் நூல்களை வாசிக்கிறார்கள். சமகாலப் பிரச்சினைகளை நாடுபவர்களுக்கு செவ்வியல் படைப்பு உரியது அல்ல. அப்பிரச்சினைகள் அன்றாடம் சார்ந்தவை, அதற்கான எழுத்தும் அன்றாடம் சார்ந்ததே. அத்தகைய எழுத்துக்கள் அன்றாடம் தோன்றி, வாசிக்கப்பட்டு, மறையும். தல்ஸ்தோய் ஆனாலும், வெண்முரசு ஆனாலும், கம்பன் ஆனாலும், ஹோமர் ஆனாலும் செவ்வியலின் வாசகர்கள் முற்றிலும் வேறு. அவர்கள் என்றும் இருப்பார்கள்.
நவீனச் சூழலில் நாம் இன்னொரு மனநிலைக்கும் பழகிவிட்டிருக்கிறோம். அதை நுகர்வு மனநிலை எனலாம். நுகர்வோனைக் கருத்தில்கொண்டே எதையும் அணுகுவது. உற்பத்தி என்பது நுகர்வோனின் தேவைக்கும் ரசனைக்கும்தான் என்னும் கொள்கை. இந்த மனநிலையே நவீனத்துவத்தின் அடிப்படை. இலக்கியப் படைப்புகள் சமகால வாசகனின் வாசிப்புக்காக எழுதப்படுபவை என்பது அதன் நம்பிக்கை. அவனே அதை தீர்மானிக்கவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நவீனத்துவ (Modernist) பார்வையில் சமகால வாசகனுக்கு தொடர்புறுத்துவதற்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. அவனுக்கு தொடர்புறவில்லை என்றால் அப்பகுதி தேவையற்றது. நவீனத்துவ வாசகன் எந்த நூலை படித்தாலும் ‘கொஞ்சம் நீளம்’, ‘இன்னும் சுருக்கியிருக்கலாம்’, ‘இந்தப்பகுதி தேவையே இல்லை’, ‘இதெல்லாம் ஜாஸ்தியா இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதைக் காணலாம். நவீனத்துவம் பின்நவீனத்துவத்தால் நொறுக்கப்பட்டு, அதற்கடுத்த பின்பின்நவீனத்துவ காலமும் வந்துவிட்டது. ஆனால் அந்த மனநிலையில் உறைந்தவர்களால் வெளியேற முடியாது.
ஒரு செவ்வியல் படைப்புக்கு சமகால வாசகன் என்பவன் இல்லை. அது எப்போதைக்கும் உரிய பிரச்சினைகளைப் பேசுவது. அதற்காகவே காலம் அற்ற ஒரு கதைவெளியை எடுத்துக்கொண்டிருப்பது. ஆகவே அதன் வாசகனும் காலம்கடந்த ஒருவனே. என்றும் வந்துகொண்டே இருப்பவன் அவன். ஆகவே எந்தச் செவ்வியல் ஆக்கமும் சமகால வாசகனை இலக்காக்கி அவனுக்குப் புரியும்படியும் அவனுக்குப் பிடிக்கும் படியும் வெளிப்படாது. அது உருவாகும்போதுள்ள காலம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல.
உதாரணமாக, விஷ்ணுபுரத்தின் சிறந்த வாசகர்கள் அது வெளிவந்த பின் பிறந்தவர்கள். அது வெளிவந்த காலகட்டத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு அன்று பெருமளவில் வாசிக்கப்பட்ட பல படைப்புகளின் பேசுபொருளும் சூழலும் பழையதாகிவிட்டன. ஆகவே அவை இன்றைய இளைஞர்களால் வாசிக்கப்படுவதே இல்லை. விஷ்ணுபுரத்திற்கு அந்தச் சமகாலத்தன்மை இல்லை. அது 2030 வாக்கில்தான் ஆங்கிலத்தில் சர்வதேசப்பதிப்பாக உலகவாசகர்களை நோக்கிச் செல்லவிருக்கிறது.
வெண்முரசின் இன்றைய மிகச்சிறந்த வாசகர்கள் அது எழுதப்படும்போது சிறுவர்களாக இருந்தவர்கள். அவர்கள் பழைய வாசிப்பின் சுமை இல்லாதவர்கள். ஆகவே இயல்பாக அதனுள் நுழைய அவர்களால் முடிகிறது, அதை நுணுக்கமாக உணரமுடிகிறது. அவர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள், அவர்களுக்கு என்றும் புதியதாக வெண்முரசு இருந்துகொண்டும் இருக்கும்.
அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு, அது அழகியல் நிறைவு. செவ்வியல் நாடுவது அழகியல்நிறைவை மட்டுமே. இதை நான் திரும்பத் திரும்ப விளக்கியிருக்கிறேன். கோபுரங்களிலுள்ள அத்தனை ஆயிரம் சிற்பங்களும் எவரேனும் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. ஒட்டுமொத்தமாக அவை எல்லாம் இணைந்து ஒரு வடிவ நிறைவை உருவாக்குகின்றன, அதையே செவ்வியலும் இலக்காக்குகிறது.
ஒரு மரம் ஏன் இலைகளே இல்லாமல், கிளைதாங்காமல் பூக்கவெண்டும் என்று கேட்போமா என்ன? தேவைக்குத்தான் மலர் என்றால் எதற்கு அத்தனை மலர்கள்? அது மரத்தின் முழுமைவெளிப்பாடு, இயற்கையின் வெளிப்பாடு. அவ்வாறே எந்தச் செவ்வியல்படைப்பும் ஓர் ஆசிரியரின், ஒரு பண்பாட்டின் முழு வெளிப்பாடு. எவருமே பார்க்கவில்லை என்றாலும் மலர்கள் மலரும். எவருமே வாசிக்கவில்லை என்றாலும் செவ்வியல் நிகழும்.
உங்கள் கேள்விக்கே வருகிறேன். உங்கள் செயல் மகத்தானது எனில் அது உங்களுடைய, உங்கள் சமூகத்தின் முழுமையின் ஒரு வெளிப்பாடே. அதற்கு எவருடைய ஏற்பும் தேவையில்லை. எவரும் அதை அறியவும் தேவையில்லை. அதை நிகழ்த்தும்போது நீங்கள் மலர்ந்து கொப்பளிக்கிறீர்கள். முழுமை கொள்கிறீர்கள். அதன்பொருட்டு மட்டுமே செயல்படுங்கள். அச்செயலில் நீங்கள் அடையும் நிறைவே அதன் பயன். வெண்முரசு எழுதியதும் நான் என்னை கடந்துசென்றேன், வெண்முரசு எழுதிநிறைந்ததே எனக்கான பயன். அதன்பின் அடுத்த படைப்புகளுக்கு நகர்ந்தேன்.
உங்களில் நிகழும் அந்த உச்சத்தை எளியோர் புரிந்துகொள்ளமுடியாது. உச்சங்களையே பொதுவாக எளிய உள்ளங்களால் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே உங்கள் உலகில் அவர்களுக்கு இருப்பே தேவையில்லை. அவர்கள் வாழ்ந்து மறையும் ஒரு சிறு உலகம் உண்டு, அங்கே நீங்கள் செல்லமுடியாது. அவர்களும் இங்கு வரமுடியாது. அந்த தெளிவே பெருஞ்செயல் புரிவோனுக்கு இருந்தாகவேண்டிய அடிப்படை.
ஜெ
இம்பர்வாரி வாசகர்களின் குழுமம்(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887) இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா? மழைக்காவியம் ஊழின் பெருங்களியாட்டு – அருணா ஐந்து முகங்கள் – கடிதம் காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை வெண்முரசின் குரல்கள் அன்பெனும் மாயை -கலைச்செல்வி இளமையின் வண்ணங்கள்- கடிதம் குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன் தீ – கடிதம் மழையின் காவியம் விண்திகழ்க! கனவின் நுரை மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும் மலர் மயங்கியறியும் மெய்மை தளிர் எழுகை அன்னைவிழிநீர் அறிகணம் ஊழ்நிகழ் நிலம் எங்குமுளப் பெருங்களம் மைவெளி ஊழின் விழிமணி அனைத்தறிவோன் விழிநீரின் சுடர் மீண்டெழுவன களிற்றியானை நிரை – ஆதன் களிற்றியானை நிரை ‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவ ணன் இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன் கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன் ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை ‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை ‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன் ‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


