‘இன்றைய காந்தி’ இன்று…
காந்தியின் எளிமையின் செலவு என்னும் கேள்விபதில் என் இணையப்பக்கத்தில் 23 ஜூலை 2008 ல் வெளிவந்தது. அதுதான் இன்றைய காந்தி என்ற இந்த நூலின் தொடக்கம். ஒரு வாசகர் கேட்ட எளிமையான கேள்விக்குப் பதிலாக அதை எழுதினேன். தொடர்ச்சியாக கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. நானும் பதில் எழுதிக்கொண்டே இருந்தேன். பின்னர் அவற்றை இன்றைய காந்தி என்ற பேரில் தொகுத்து நூலாக்கினேன். பல பதிப்புகள் வெளிவந்த மிகப்புகழ் பெற்ற அந்நூல் காந்தி பற்றிய இளைய தலைமுறையினரின் பார்வையையே மாற்றியமைத்த முன்னோடிப் படைப்பு என இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
அன்றில் இருந்து இன்று காலம் எவ்வளவு மாறிவிட்டது. அன்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. காந்தி அதன் முகமாகக் கருதப்பட்டார். ஆளும்கட்சிக்கு எதிரான எல்லா கோபங்களும் காந்திமேல் குவிந்தன. காந்தியை அரசு தன் முகமாக வைத்திருந்தது. ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியையே அனைவரும் அறிந்திருந்தார்கள். பாடநூல்களில் படித்தனர். அமைப்பை எதிர்ப்பதென்றால், சுதந்திரமாகச் சிந்திப்பதென்றால் காந்தியை நிராகரிக்கவேண்டும் என்று புரிந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இங்கே இருந்த பெரும்பாலும் எல்லா அரசியல் தரப்பினருக்கும் காந்தி எதிரியாக இருந்தார். திராவிட இயக்கமும், இடதுசாரிகளும், தலித்தியர்களும் காந்தியை வெறுத்தனர். பெரும்பாலானவர்கள் வசைபாடினர், அவதூறு செய்தனர், அவரை திரித்து முன்வைத்தனர். அரிதாகச் சிலரே ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் மாற்றுப்பார்வைகளையும் முன்வைத்தனர். இந்துத்துவர் காந்தி கொலையின் பழியால் பின்னடைவு கொண்டிருந்த காலகட்டத்தில் காந்தியை மாபெரும் இந்துச் சான்றோர்களின் நிரையில் வைத்து வெளியே பேசினர், ஆனால் அகத்தே வெறுப்பு கொண்டிருந்தனர். காங்கிரஸ்காரர்கள் நேருவின் மரபையே விரும்பினர், காந்தியை நேருவின் பொருட்டு மௌனமாக நிராகரித்தனர். சர்வோதயர்கள், காந்திய கல்விநிலையத்தவர்களுக்கு காந்தி ஒரு வணிகமுத்திரை மட்டுமே.
ஆனால் காந்திக்கு எவருமில்லாமல் போகவில்லை. காந்தியத்தை வாழ்க்கைமுறையாக எடுத்துக்கொண்ட மாபெரும் சமூகப்பணியாளர்கள் இந்தியாவெங்கும் இருந்துகொண்டுதான் இருந்தனர். உண்மையில் அவர்களே ஆக்கபூர்வமான அரசியலைச் செய்தனர். அவர்களிடமிருந்தே நான் காந்தியைக் கற்றுக்கொண்டேன். ஜி.குமாரபிள்ளை, சுகதகுமாரி, மேதாபட்கர், சுந்தர்லால் பகுகுணா, கிருஷ்ணம்மாள்- ஜெகந்நாதன் முதல் ஈரோடு வி.ஜீவானந்தம் வரை. நுண்ணலகு அரசியல், மாற்று அரசியல் என மெய்யான சமூகமாற்றத்தை நோக்கிச் செயல்பட்ட அனைவரையுமே காந்திதான் வழிநடத்தினார்.
நம் அரசியல்சூழலால் இங்கே உருவாக்கப்பட்ட காந்தி மீதான கசப்புகளும் அவதூறுகளும் ஒருபக்கம் இருந்தாலும், தமிழிலக்கியச் சூழலில் காந்தி என்றுமே எழுத்தாளர்களின் முன்னுதாரண மானுடராகவே இருந்தார், இன்றும் அவ்வாறுதான் நீடிக்கிறார். கா.சி.வெங்கடரமணி, எம்.எஸ்.கல்யாணசுந்தரம் சி.சு.செல்லப்பா போன்ற காந்திய யுக எழுத்தாளர்களில் தொடங்கி சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதல் பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தேவிபாரதி வரை. எங்கள் தலைமுறைக்குப்பின் கலைச்செல்வி, சுனீல்கிருஷ்ணன் என காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் தமிழ் நவீன எழுத்தாளர்கள்.
ஆனால் இணையம் உருவானபோது நம் சூழலின் மேம்போக்கான காந்திக்காழ்ப்புகளே வெளிப்பட்டன. ஒவ்வொரு அக்டோபர் 2 அன்றும் காந்திக்கு எதிரான கசப்புகள், அவதூறுகள், திரிபுகள் இணையத்தில் பெருக்கெடுக்கும். அதற்கு எதிரான விளக்கங்களாகவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. இக்கட்டுரைகள் தொடர் எதிர்வினைகளை உருவாக்கின. இன்று காந்தி பற்றி தமிழகத்தில் எழுதப்படும் ஏறத்தாழ எல்லா கட்டுரைகளிலும் இவற்றின் தாக்கம் உண்டு.
2016 ல் இந்துத்துவம் ஆட்சியமைத்தது முதல் காந்தி குறித்த அரசியல் நிலைபாடுகள் மாற்றமடையலாயின. இந்துத்துவர்கள் தங்கள் முகமூடிகளைக் களைந்து காந்தியை தேசத்துரோகி என்று முத்திரையடிக்கும் எல்லைவரைச் சென்றனர். ஏற்கனவே அத்தரப்பில் தமிழில் ஓங்கிய குரலாக ஒலித்தது ராதா ராஜன் என்னும் சாதிவெறிகொண்ட பெண்மணியின் நூல்தான். ஆன்மிகமான தீராநோய் பாதித்தவர் என்றே அவரை நான் மதிப்பிடுகிறேன். அவர் கருத்துக்களுக்கு எந்த அறிவார்ந்த அடிப்படை மதிப்பும் இல்லை. ஆனால் அக்கருத்துக்களை நான் சமநிலை கொண்டவர்கள், நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்று நம்பியவர்கள் கூடச் சொல்ல ஆரம்பித்தனர். ஒவ்வொருவராக வேறு வண்ணத்தில் வெளிப்படலாயினர்.
மறுபக்கம் காந்தியை எதிர்த்தவர்கள் அவருடைய பெறுமதியை அடையாளம் காணலாயினர். முதன்மைத்தரப்பினர் தலித்தியர். அம்பேத்கரை முன்னுதாரணமாகக் கொண்டு காந்தியை வெறுத்தவர்கள் அவர்கள். ஆனால் காந்தி தலித் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை அவர்கள் மெல்ல புரிந்து கொள்ளலாயினர். காந்தி தலித் மக்களுக்கான மாபெரும் ஆயுதம் என்றும், காந்தியைக் கொண்டே வளர்ந்துவரும் இந்துமேலாதிக்க வெறியை , ஆசாரவாதமும் பழமைவாதமும் கலந்த இருண்ட அரசியலை எதிர்கொள்ளமுடியும் என்று அறிந்தனர்
அவ்வாறு முன்வந்த முதல் ஆளுமை என நானறிந்தவர் வெ.அலெக்ஸ். என் இன்றைய காந்தி நூல் அவருடைய பார்வையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. என்னை வந்து சந்தித்து என் அணுக்க நண்பராக ஆனார். அம்பேத்கரை எதிர்த்தவர் என்னும் முறையில் இங்கே தலித்தியர்களால் நிராகரிக்கப்பட்ட எம்.சி.ராஜா மீது அவருக்கு புதிய பார்வை உருவாக அந்நூல் வழிவகுத்தது. அவருடைய எழுத்து பிரசுரம் என் நூல்களை வெளியிட்டது. இன்றைய காந்தி நூலை வெளியிட அலெக்ஸ் மெய்ப்பு நோக்கி, நிறைய அரிய படங்களையும் சேர்த்து வைத்திருந்தார். தீயூழாக அவர் குறைந்த அகவையில் மறைய நேரிட்டது.
இன்னொருவர் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம். காந்திய இயக்கம் தமிழகத்தில் தலித் கல்விக்காக ஆற்றிய பெரும்பணியை வரலாற்று மறதியில் இருந்து மீட்டு ஆதாரங்களுடன் பதிவுசெய்தவர் அவர். அதன்பின் தலித் சிந்தனையாளர்களின் பார்வையில் படிப்படியான மாற்றம் உருவாகியது. இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் கூட காந்தியை நட்புசக்தியாகப் பார்க்கலாயினர். இந்த நூல் எழுதப்பட்டபோது கடுமையான எதிர்நிலைபாடுகளை எடுத்தவர்கள் பலர் இன்று அம்மனநிலையில் இல்லை.
ஆனால் இந்நூல் ஒரு குறிப்பிட்ட அரசியல் – வரலாற்றுச் சூழலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இது காந்தியை ஒரு நவீன தத்துவசிந்தனையாளராக அடையாளம் காண்பது. தத்துவத்தை நடைமுறைகள் வழியாக முன்வைத்தவர் அவர். ஆகவே அவரது செயல்களில் இருந்து அவர் முன்வைத்த தத்துவத்தை திரட்டிக் கொள்ளும் பொறுப்பு நமக்குண்டு. இந்நூல் அதற்கான முயற்சி.
இந்நூலின் தரவுகளில் பெரும்பாலானவை நான் இந்நூலுக்காக, அந்தந்த கட்டுரைகளுக்காக, திரட்டியவை. இவற்றை முழுமையானவை முற்றிலும் பிழையற்றவை என்று சொல்ல மாட்டேன். ஒரு காந்திய ஆய்வாளரின் நூல் அல்ல இது. காந்தியை கண்டடைய முற்படும் ஓர் எழுத்தாளனுடையது . இந்நூலின் தரவுப்பிழைகள் பல சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியுள்ளேன். சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. காந்தியைப் பற்றிய அரிய தரவுகள் இதில் இல்லை என்று நினைக்கிறேன். இதிலுள்ளது காந்தியை வரலாற்றிலும், தத்துவக் களத்திலும் வைத்து புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் செய்யப்பட்டிருக்கும் முயற்சிதான். அந்தக் கோணத்திலேயே இந்நூல் முக்கியமானது.
இந்நூல் காந்தியின் அரசியலை, ஆன்மிகத்தை, சமூகப்பார்வையை அவருடைய நீண்ட வாழ்வின் பரிணாமம் வழியாக, அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் வைத்து தொகுத்துக் கொள்ள முயல்கிறது. வழக்கமான அரசியல் பார்வைகள், காந்திபக்தி நோக்குகள் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று இது ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. இன்றைய சமகாலச் சிந்தனைகளை, நவீனத்துவத்தையும் பின்நவீனத்துவத்தையும் கடந்து சென்று உருவாக்கப்பட்ட இப்பார்வை புதிய தலைமுறைக்காக காந்தியை வகுத்தளிக்கிறது.
பதினைந்தாண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ்ச்சூழலுடன் விவாதித்துவரும் இந்நூலின் புதிய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் முந்தைய பதிப்பை வெளியிட்ட தமிழினி பதிப்பகத்திற்கும் நன்றி
ஜெ
(விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள இன்றைய காந்தி நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை)
இன்றைய காந்தி வாங்க(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக இன்றைய காந்தி வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887)Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

