கவிஞனைக் கண்டடைதல்- எஸ்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ,
சோ.விஜயகுமாரின் கவிதைகளை இணைய இதழ்களில் ஆங்காங்கே வாசித்ததுண்டு. இன்ஸ்டாகிராமிலும் அவருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். இணைய இதழ்களில் கவிதை வாசிப்பதன் பிரச்சினை என்பது அதன் பெருக்கம்தான். Abundance is the curse of postmodern era. நிறைய வந்து கொட்டும் கவிதைகளில் இருந்து ஒரு கவிஞனைத் திரட்டிக்கொள்ள முடிவதில்லை. உதிரியாக வரிகள் நினைவில் நிற்கின்றன. அவற்றுக்குப் பின்னால் உள்ள கவிஞனின் personality நினைவில் உருவாவதில்லை.
கவிஞனின் அந்த personality என்பது poet-personality தானே ஒழிய தனிப்பட்ட personality அல்ல. எல்லா கவிதைகளுக்குள்ளும் ஒரு சரடு ஆக ஓடும் அந்த இணைப்புதான் அந்த poet-personality. கவிதைகள்தான் அதை திரட்டி நமக்கு அளிக்கின்றன. கவிதைகள்தான் அதை உருவாக்குகின்றன. கவிஞன் கவிதைகளில் அதை இயல்பாக வெளிப்படுத்துகிறான்.
அப்படி ஒரு personality உருவானதென்றால் அதன்பிறகு நம்முள் அவன் கவிதைகள் கூடுதல் பொருள் அளிக்க ஆரம்பிக்கின்றன. தனியாக அவ்வளவு முக்கியமில்லாத கவிதைகள்கூட ஒட்டுமொத்தமாக கவிஞனின் மனமாக வெளிப்படும்போது ஆழமானவை ஆகிவிடுகின்றன. அதாவது கவிஞனின் எல்லா கவிதைகளும் சேர்ந்து ஒரு கவிதையை அர்த்தப்படுத்துகின்றன. இப்படித்தான் கவிதைகள் உலகம் முழுக்க வாசிக்கப்படுகின்றன. இதனால்தான் கவிஞர்களைப் பற்றித்தான் இலக்கிய விமர்சனம் அதிகமாகப் பேசியிருக்கிறது. கவிதைகளைப் பற்றி அல்ல.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது போன்ற ஒரு முக்கியமான அங்கீகாரம் ஓர் இளங்கவிஞனுக்கு அளிக்கப்படுவது இதனால்தான் முக்கியமானதாக ஆகிறது. அந்தக் கவிஞன் முன்வைக்கப்படுகிறான். நாம் அவன் எழுதிய எல்லா கவிதைகளையும் தேடி வாசிக்க ஆரம்பிக்கிறோம். அவனை ஒரு poet-personality ஆக தொகுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம். அது அவன் கவிதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. கவிதைகளில் சிதறிக்கிடக்கும் கவிஞனை இப்படித்தான் நாம் compose செய்துகொள்கிறோம்.
சோ.விஜயகுமாரின் கவிதைகளை நாலைந்து நாட்களாக வாசிக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளையும் வாசித்தேன். அவருடைய பேட்டிகளையும் வாசித்தேன். அவருடைய பேட்டிகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவை வழக்கமாக நவீனக் கவிதைகள் எழுதுபவர்கள் என்னென்ன சொல்வார்களோ அவற்றை எதிரொலி செய்பவையாக இருந்தன. தனித்தன்மை என ஏதும் தெரியவில்லை. கட்டுரைகள் வழியாக அவரை ஓரளவு அணுக முடிந்தது.
சோ.விஜயகுமாரின் கவிதைகள் பலவகையான எதிரொலிகளுடன் தொடங்கியிருக்கின்றன என்று தோன்றியது. உதாரணமாக
கண்களை யாரும்
உற்றுப் பார்ப்பதில்லை!
மாடோ, ஆடோ, யாதாயினும்
வெட்டும்போது அதன் கண்களை
யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!
(சோ.விஜயகுமார் கவிதைகள் வாசகசாலை இணைய இதழ்)
என்னும் கவிதை ஒரு சரியான மனுஷ்யபுத்திரன் கவிதை. (ஆனால் மனுஷ்யபுத்திரனின் நல்ல கவிதைகளின் தொடர்ச்சியாக அமைந்து இதுவும் ஒரு நல்ல கவிதையாக உள்ளது).
அதேபோல
முந்தி விநாயகனுக்கான துதி
ஊர்த்தலைவர் வரும் வரை நீளுமென்பது
எழுதப்படாத விதி
(சோ. விஜயகுமார் கவிதைகள். வாசகசாலை)
என்ற கவிதையை இன்று பலரும் எழுதிவரும் micro narration வகையிலான கவிதைகள் என்று சொல்லலாம். வெய்யில் போன்ற கவிஞர்கள் இவற்றை எழுதிவருகின்றனர்.
இந்த வகையான எதிரொலிகள் வழியாகவே கவிஞர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த எதிரொலிகளில் அவர்கள் முன்னோடிகளில் இருந்து நுணுக்கமான ஒரு வேறுபாட்டை அடைகிறார்கள். அந்த வேறுபாடு ஒரு மரத்தின் தடியில் சிறிய முளை எழுவதுபோல. அது தனி மரமாக வளர்ந்து எழுகிறது.
பூக்கடை அருகே
வசிக்கும் புற்றெறும்புக்கு
வாசமலர்
வேறொன்றுமில்லை! வசந்தகாலம்!
என்ற வரிகளில் ஒரு தனிக்குரல் எழுவதன் அழகு உள்ளது. அப்படி தொடக்ககாலக் கவிதைகள் பலவற்றில் ஒரு கவிஞன் எழுவதைக் காண முடிகிறது.
தன்னிலிருந்து தோண்டப்பட்ட கல்
தன்மீதே எறியப்படும் போது
நீரின் வளையங்களில் எல்லாம்
கர்ப்பப்பையின் சுவடுகள்!
என்பதுபோன்ற வரிகளில் அசலான ஒரு கவிஞன் வெளிப்படுகிறான். நீர்வளையங்களை கருப்பையாக உருவகிப்பதில் உள்ள இயல்பான கற்பனைதான் என்னைப் பொறுத்தவரை கவிதை. அடிவயிற்றுப் பிரசவவரிகளை நீரில் காண்பவனே உண்மையான கவிஞன்.
ஒரு நல்ல கவிஞனை அடையாளம் காட்டியதற்கு நன்றி. கவிஞன் தன் பாதையில் தன்னை கண்டடைந்து நிறுவிக்கொள்ளவேண்டும் என வாழ்த்துகிறேன்.
எஸ். பாஸ்கர்
சித்தரிப்பும், கவிதையும்- எம்.ஶ்ரீனிவாசன் இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

