அச்சம் என்பது…
எங்கள் வீட்டில் பூனைகளின் தலைமுறைகள் பெற்று பெருகி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அருகே அரைச்சதுப்பு நிலங்கள் இருப்பதனால் பூனையோ நாயோ தேவை என்பது அருண்மொழியின் எண்ணம். தண்ணீர்ப்பாம்புகள் முதல் நச்சுப்பாம்புகள் வரை இப்பகுதியில் இருக்கலாம். ஆனால் பூனைகளை செல்லப்பிராணிகளாக வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. வீட்டுக்கு வெளியேதான். சோறுகொடுப்பது, அப்பால் நின்று வேடிக்கைபார்ப்பதுடன் சரி. பூனைகளும் அந்த எல்லைகளைப் பேணுகின்றன.
பூனைகளின் முடி நமக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது என் எண்ணம். பூனைகள் தங்கள் நக்கி உடலில் பூசிக்கொள்ளும் எச்சில்கலந்த திரவம் குறிப்பிட்ட சில நுண்ணுயிரிகளைக் கொண்டது. நாயின் உடலில் பெருகும் பூஞ்சைகள், உண்ணிகள் எவையும் பூனையுடலில் இல்லாமலிருப்பது அதனால்தான். அந்த நுண்ணியிரிகள் மானுட உடலில் நுழைந்து செல்களுக்குள் வாழ்பவை, மூளைகளை சென்றடைபவை என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூனைகளை தொட்டுக்கொஞ்சுபவர்கள் உளச்சோர்வை அடைகிறார்கள். உளச்சோர்வுள்ளவர்கள் பூனைகளை தொட்டுக்கொஞ்ச விரும்புகிறார்கள். இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளா, அறிவியல் ஊகங்களா தெரியவில்லை. ஆனால் எதற்கு வம்பு? (ஆனால் பூனையுடலில் வாழும் நுண்ணியிரிதான் தான் வாழும்பொருட்டு நம் மூளைக்குள் புகுந்து அங்கே வாழ்ந்து பூனைமேல் பிரியத்தையும் உளச்சோர்வையும் உருவாக்குகிறது என்பது நல்ல புனைவென்றே தோன்றுகிறது)
எங்கள் வீட்டை நம்பியே வாழும் பூனை ஒன்று எப்போதும் உண்டு. (பார்க்க வம்சம்) அதன் இரு கண்களும் இரண்டு வண்ணங்களில் இருக்கும். அது மிக அரிதான ஒன்று என்கிறார்கள். அது இங்கே ‘குடியிருக்கிறது’. அதன் கணவனாக ஒரு கடுவன் அவ்வப்போது வந்து உணவைப் பகிர்ந்து உண்டு இங்கே வாழும். கிளம்பிவிடும். அது போனபின் இது கர்ப்பமாகியிருப்பது தெரியும்.
ஆண்டுக்கு இரண்டு மூன்று குட்டிகள். அவை கொஞ்சநாள் இங்கே வாழும். சில குட்டிகள் இறந்துபோகும். சில குட்டிகள் காணாமலாகும். சில பெண்குட்டிகள் அன்னையின் தோழிகளாக கூட இருக்கும். சில கடுவன் குட்டிகள் ‘தடிமாடுகளாக’ ஆன பின்னரும் அம்மாவுடனேயே இருக்கும். நாங்கள் வெளியூர் பயணம் செய்கையில் வீடு கொஞ்சநாள் பூட்டியிருந்தால் அவை வேறு வாழ்விடம் தேடிச்செல்லும். திரும்பி வரும்போது அம்மாக்காரி மட்டும்தான் மீண்டும் வருவாள்.
காலைநடைக்கு கதவைத் திறந்தால் வாசலில் மிதிமெத்தையில் மூன்று குட்டிகளுடன் சுருண்டு கிடந்தாள் இரட்டைக்கண்ணி. நான் ஊரில் இல்லாத பத்துநாளுக்குள் ஈன்று புறந்தந்த வாரிசுகள் அவை. ஒருவார வளர்ச்சி. என் காலோசை கேட்டதும் எழுந்து வெளியே சென்றாள். குட்டிகள் மின்வேகத்தில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டன. அன்னை சலிப்புடன் சற்று தள்ளி முற்றத்தில் சென்று படுத்து என்னைப் பார்த்து ”என்ன வே?” என்றாள். நான் அவளிடம் அதிகம் பேசுவதில்லை, அவள் அருண்மொழியின் தரப்பைச் சேர்ந்தவள், கடித்துக் கிடித்து வைத்தால் எதற்கு வம்பு?
காலைநடை முடிந்து திரும்பி வந்தேன். முற்றத்தில் அதே இடத்தில் மூன்றுகுட்டிகளை கால்களுக்கு நடுவே போட்டபடி அன்னை படுத்திருந்தாள். என் காலடியோசை கேட்டு வாலை கொஞ்சம் நெளித்து, செவிகளை திருப்பி, இரட்டைநிறக் கண்ணால் பார்த்தாள். குட்டிகள் ஒளிந்துகொண்டன.
ஆனால் அதில் ஒரு முறைமை இருந்தது. அதை அதிகாலையிலும் கவனித்திருந்தேன். மூன்று குட்டிகளில் ஒரு குட்டி சிறு ஓசைக்கே சட்டென்று பாய்ந்து முழுமையாக மறைந்துகொண்டது. பூனை, நாய் , மனிதன் உட்பட எல்லா குட்டிகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு, முகத்தை மறைத்துக் கொண்டால் ஆளே மறைந்துவிட்டதாக அவை எண்ணிக்கொள்ளும். பூந்தொட்டிக்கு அப்பால் வால் நெளிந்தது. பின்பு இப்பால் பாதி முகம் என்னை எட்டிப்பார்த்தது. எப்போதுமே அந்தக்குட்டி (அவளா அவனா?) தான் முதலில் அஞ்சிப் பாய்ந்து ஒளிந்துகொள்கிறது.
இரண்டாவது குட்டி கொஞ்சம் யோசித்து, கவனித்து, அதன்பின் இன்னொரு பக்கம் ஒளிந்தது. ஆனால் நன்றாகவே மறைந்துகொண்டு விட்டது. மூன்றாவது குட்டி என்னை கூர்ந்து நோக்கியபடி அப்படியே அமர்ந்திருந்தது. ஆனால் மந்தமாக இல்லை. பார்வை விலகவில்லை.
நான் செல்பேசியில் காணொளி பதிவுசெய்தேன். செல்பேசி நெருங்குவதைக் கண்டபின் மூன்றாம் குட்டி எழுந்து அப்பால் ஒளிந்தது. ஆனால் அங்கே நின்று நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தது. நான் ஒன்றும் தவறாகச் செய்யவில்லை என புரிந்துகொண்டதும் முதலில் அதுதான் திரும்ப வந்தது. அடுத்து மற்ற பூனைக்குட்டிகள். கடைசியாக வந்தது முதலில் சென்றதுதான்.
பூனைக்குட்டிகளைக் கவனித்தால், முதலில் ஒளிந்துகொண்டதுதான் சோனி. அதுதான் நடுங்கிக்கொண்டே இருந்தது. கடைசியாகச் சென்றது குண்டு. தாய்ப்பாலில் பெரும்பகுதியை முண்டியடித்து உறிஞ்சுவது அதுதான். சூழலை தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்கிறது அது, கூடவே அந்த இரண்டாவது பூனைக்குட்டிக்கு ஆதரவளிக்கிறது, ஆறுதலும் சொல்கிறது. பயந்துநடுங்கும் சோனியை அது கண்டுகொள்வதே இல்லை.
நான் என் நண்பரான வனவியலாளரிடம் அதைப்பற்றி கேட்டேன். “அப்படியே புலிக்கும் இது பொருந்தும். மூன்றில் ஒன்றுதான் உயிர்வாழும். சிலசமயம் இரண்டு. அந்த சோனி வாழ வாய்ப்பே இல்லை. தைரியமானதுதான் வாழ்வதற்கு வாய்ப்பு மிகுதி. இங்கே அந்த தைரியசாலியின் ஆதரவு இருப்பதனால் இரண்டாவது பூனைக்குட்டியும் வாழ வாய்ப்புண்டு…”
“ஆனால் எச்சரிக்கையாக இருப்பது நல்ல குணம்தானே?” என்றேன்.
“ஆம், அதைவிட துணிவே தேவையான குணம். துணிவுக்கு ஆதாரமாக இருப்பது அறிவு. துணிவான அந்தக் குட்டி உங்களைப் பற்றி புரிந்துகொள்ள முயலும், சீக்கிரமே புரிந்துகொள்ளும். அது பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம். பாருங்கள் இரண்டு மூன்று நாட்களில் அது உங்களிடம் வந்து உணவு போடும்படி கேட்கும்…. அறிவே அச்சத்தை அகற்றுகிறது. அறிவுள்ளவை வாழவேண்டும் என்பதே இயற்கையின் நெறி. பிறப்பிலேயே அந்தந்த குணங்கள் உருவாகி விடுகின்றன”
“சரி, அப்படியென்றால் ஏன் அந்த பயந்த குட்டி பிறக்கவேண்டும்?”
“மூன்றும் மூன்று இயல்புகள். மூன்றும் மூன்று சாத்தியக்கூறுகள். ஒருவேளை அந்த சோனிக்குட்டிக்குச் சாதகமான சூழல் இருந்தால் அது வாழும், துணிந்ததும் அடுத்ததும் இறந்துவிடும். உதாரணமாக, நீங்கள் ஒருவேளை அஞ்சி நடுங்கும் அந்தப் பூனைக்குட்டிமேல் அனுதாபம் கொண்டு அதற்கு பாலூட்டி வளர்க்க வாய்ப்புண்டு அல்லவா? இயற்கை மூன்று இயல்புகளையும் சோதித்துப் பார்க்கிறது. இயற்கைக்கு அதில் பேதம் ஏதும் இல்லை”
இயற்கை என்று இவர் சொல்வது கடவுளையா என்று குழம்பினேன். “இப்படி கேட்கிறேன் டாக்டர், இந்த மூன்று குணங்களில் எது நல்லது, தேவையானது?”
“தெரியவில்லை. சிலசமயம் மெலனின் இல்லாமை போன்ற குறைபாடுகளைக்கூட இயற்கை பேணி தொடர்ந்து வரச்செய்கிறது, அதற்கும் ஏதோ தேவை இருக்கலாம் என இயற்கை என்ணுகிறது. அந்த இரட்டைக்கண் கூட அப்படிப்பட்ட ஒரு தனி இயல்புதான்…”
“சரி இப்படி கேட்கிறேன். வீரமும் துணிவும் ஒரு பக்கம். கனிவும் அன்பும் இன்னொரு பக்கம். எது இயற்கையில் உள்ள தேவையான இயல்பு?”
“இதுவரையிலான விலங்கு வாழ்க்கையைக்கொண்டு இப்படிச் சொல்லலாம். மந்தை விலங்குகளுக்கு கனிவும் அன்பும் ஆற்றலாக ஆகின்றன. தனித்த வேட்டை விலங்குகளில் வீரமும் துணிவும். ஆனால் மந்தை விலங்குகளில் துணிவும் வீரமும் கொண்டதுதான் தலைவன்…. வேட்டைவிலங்குகளில்கூட கனிவை பயன்படுத்தி எதிரியுடன் தேவையானபோது சமரசம் செய்துகொள்ளும் விலங்குகளே மேலும் ஆற்றலுடன் உள்ளன… ஆனால்…”
“சரி விடுங்கள். இது மிகவும் தத்துவார்த்தமாக போகிறது…”
“ஆனால் ஒன்றே ஒன்று உறுதியாகச் சொல்லலாம். தயக்கம், அச்சம் கொண்டவை அழிய விதிக்கப்பட்டவை’
நான் பெருமூச்சுவிட்டேன். “தெரிகிறது” என்று போனை அணைத்தேன்.
வம்சம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

