காவியம் – 18
அறியப்படாத உருவம். பைதான் அருங்காட்சியகம். மாக்கல் செதுக்கு. பொமு 1 சாதவாகனர் காலம்மதியத்திற்குப் பின் கல்லூரியில் இருந்தபோது எனக்கு அழைப்பு வந்தது. நான் அலுவலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அடுத்த வகுப்புதான். என் அருகே தமிழரசன் வினாத்தாள் திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாள் திருத்தும்போது மட்டுமே வரும் சூள்கொட்டல்கள், அலுப்பொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. “தமிழை கொலை செய்கிறார்கள்” என்றார்.
நான் “ஆயிரம் கொலை செய்தவன் அரைவைத்தியன்” என்றேன். ”உங்களுடைய பழமொழிதான்”
சார்ல்ஸ் வந்து நின்று “போன்” என்றார்.
“யாருக்கு?” என்று தமிழரசன் எழுந்தார்.
“இந்தி ஆசிரியருக்கு” என்றான் சார்ல்ஸ்.
“ஓ” என அவர் அமர்ந்து “உங்கள் மனைவியாக இருக்கலாம்” என்றார்.
நான் மெல்லிய பதற்றத்துடன் எழுந்துகொண்டேன். ராதிகா அப்படி என்னை அழைக்க வாய்ப்பே இல்லை.
துறைத்தலைவர் அறையில்தான் தொலைபேசி இருந்தது. அது எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் தன் பெரிய நாமம் அணிந்த நெற்றிக்குக் கீழே கண்களை மிதக்கச் செய்த கண்ணாடி வழியாக பார்த்து, வெற்றிலை தளும்பாமல் மோவாயால் தொலைபேசியைச் சுட்டிக்காட்டிவிட்டு குனிந்து கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
நான் தொலைபேசியை எடுத்தபோது என் மூச்சின் ஒலிதான் அதில் சீறலாக ஒலித்தது. “ஹலோ” என்றேன்.
“துக்காராம்? மிஸ்டர் துக்காராம்? எம்.துக்காராம் பைதானி?” என்றது அந்நியக்குரல்.
என் நெஞ்சு ஓசையிட்டது. என்னால் பேசமுடியவில்லை. உடம்பு வியர்வை பூத்து நடுங்கிக்கொண்டிருந்தது. தொலைபேசியை நழுவவிட்டுவிடுவேன் என்று பயந்து இரண்டு கைகளாலும் பிடித்து காதுடன் அழுத்திக்கொண்டேன்.
“துக்காராம்? ஹிந்தி மாஸ்டர்? எம்.துக்காராம் பைதானி?”
“நான்தான்…”
“நாங்கள் இங்கே டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறோம்… ஒரு சிறு தெளிவுபடுத்தலுக்காக…”
“சொல்லுங்கள்”
“ஹலோ”
“சொல்லுங்கள்” என்றேன் சத்தமாக.
“ஒன்றுமில்லை. சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் இருந்து காகிதங்கள் வந்திருக்கின்றன. எல்லா விலாசங்களையும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சாதாரண சம்பிரதாயம்தான்… உங்கள் விலாசத்தை சரிபார்க்கவேண்டும். நீங்கள் திருமணம் பதிவுசெய்தீர்கள் அல்லவா?”
“ஆமாம்”
“அந்த சான்றிதழை எடுத்துக் கொள்ளுங்கள்… திருவாரூர் விலாசம் கொடுத்திருக்கிறீர்கள். அதன் சான்றும் தேவை… நீங்கள் இருவரும் வந்து கையெழுத்து போட்டுவிட்டுப் போகவேண்டும்”
“இருவருமா?”
“ஆமாம், போட்டோ மேல் நாங்கள் கையெழுத்து போடுவோம்… நீங்கள் கீழே கையெழுத்து போடவேண்டும். உங்கள் வீட்டுக்கு கான்ஸ்டபிள் போயிருக்கிறார். அங்கே யாருமில்லை. தொலைபேசி எண்ணை பக்கத்துவீட்டில் தந்தார்கள்”
“வருகிறேன்”
“அவர்களும் வரவேண்டும்…”
“சரி” என்றேன்.
துறைத்தலைவர் “என்ன ராம்?” என்றார்.
“போலீஸ் விசாரணை… பதிவுத்திருமணம் செய்ததைப் பற்றி…”
“ஆமாம், சிலசமயம் செய்வார்கள். அதிலுள்ள போட்டோவிலுள்ளவர்தானா நேரில் வருவது என்று பார்ப்பார்கள். சிலசமயம் போட்டோவில் இருபத்தைந்து வயதுப் பெண் இருப்பாள், நேரில் அவளைப் பார்த்தாலே தெரியும் பதினைந்து பதினாறுகூட இருக்காது”
திரும்ப வந்தபோது தமிழரசன் “என்ன சார்?” என்றார். நான் சொன்னதும் “போலீஸ் ஸ்டேஷனுக்கா? நானும் வருகிறேன்” என்றார்.
“இது வழக்கமான ஒரு விசாரணைதான்”
”ஆனால் நீங்கள் வெளியூர், ஏதாவது கேட்டால் குழம்புவீர்கள். அந்த திருவாரூர் விலாசம் பொய்…“
“ஆமாம்”
”உங்கள் ஊர்விலாசத்தை ஒருவேளை கேட்பார்கள்… நான் வருகிறேன். அல்லது தோழர் குப்புசாமி கூட வருவார். பேசிக்கொள்ளலாம். ஆயிரம் ரூபாய் கேட்பார்கள், அவ்வளவுதான்.”
“பார்க்கிறேன்… நான் ராதிகாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்”
நானும் ராதிகாவும் எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்று தமிழரசனுக்குச் சொல்லியிருந்தேன்.
நான் ராதிகாவிடம் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னேன். வீட்டுக்குச் சென்றபோது ராதிகா வந்திருந்தாள்.
“ஒன்றுமில்லை, வழக்கமான ஒரு விசாரணையாகத்தான் இருக்கும். ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் என்று தமிழரசன் சொன்னார். இரண்டாயிரம் ரூபாய் கொண்டு போவோம்.”
“அவரைக் கூப்பிடலாமே?” என்றாள்.
”வேண்டாம், அங்கே கூடுதலாக ஏதாவது பேச்சு வரலாம்… நம்மைப்பற்றிய தகவல்கள் அதிகம் வெளியே தெரியவேண்டாமே?”
“தமிழரசன் நம்பகமானவர்.”
“ஆமாம், ஆனால் அவரிடமிருந்து வெளியே கசியும்… வேண்டாம்.”
“ராம், நீங்கள் மனிதர்களை நம்பவேண்டும்.”
“சரி, நீ போன் போட்டு அவரைக் கூப்பிடு… கூட்டமாக போவோம்… அவர் கம்யூனிஸ்டு. அவர்களைக் கண்டாலே போலீஸ்காரர்களுக்கு பிடிக்காது… அங்கே போலீஸ் ஏதாவது கேட்டு இவர் ஏதாவது சொல்லி தகராறு வந்தால் அவர்கள் தோண்ட ஆரம்பிப்பார்கள்…”
“சரி, கத்தாதே… நாம் மட்டும் போகலாம். சரியா?”
நாங்கள் ஓர் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருந்தாள். நான் வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன்.
போலீஸ் ஸ்டேஷன் ரத்தச்சிவப்பு வண்ணத்தில் சாலையின் ஓரமாகவே இருந்தது. முகப்பில் கீற்றுக்கொட்டகை. அதில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். தரையில் குடிசைவாசிகள் என்று தோன்றிய சிலர் அமர்ந்திருந்தனர். ஆண்கள் குந்தியபடியும் பெண்கள் சப்பணம்போட்டும். சீருடை அணிந்த ஒருவர் ஏதோ படித்துச் சொல்ல லுங்கி கட்டி வண்ணச்சட்டை போட்ட இன்னொருவர் அதை எழுதிக்கொண்டிருந்தார். அருகே இருவர் நின்றிருந்தனர். அமர்ந்திருந்தவர்களில் ஒருவருக்கு காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.
காவல்காரர் என்னிடம் ”என்ன வேணும்? என்றார்.
நான் “இங்கே இருந்து ஃபோன் வந்தது… ஒரு சர்ட்டிஃபிகெட் பற்றி விசாரிக்கவேண்டும் என்று”
”பாஸ்போட்டுக்கா?”
“இல்லை, மேரியேஜ் சர்டிஃபிகெட்”
“பாலுசார், மேரியேஜ் சர்டிபிகெட் விசயமா வந்திருக்காங்க”
சீருடை போடாதவர் நிமிர்ந்து பார்த்து “தனா சாரோட கேஸ்… உள்ள போங்க. லெஃப்டுலே தட்டி மறைச்சிருக்கிற ரூம்” என்றார்.
நான் ராதிகாவுடன் அந்தச் சிறிய அறைக்கு முன் சென்று நின்றேன். அங்கே ராதிகா மிக அந்நியமாக இருந்தாள். அவளுடைய நிறம், உயரம், மிடுக்கு, நீலம் கலந்த கண்கள். தமிழ்நாட்டில் அவள் அசாதாரணமான அழகி. தெருவில்கூட அவளை வேடிக்கை பார்க்காதவர்கள் குறைவு. அனைவரும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எழுதியவரும் வாசித்துக்கொடுத்தவரும் கேட்டுநின்றவர்களும் தவிர.
உள்ளிருந்து கரிய தடிமனான நாற்பது வயதுக்காரர் எட்டிப்பார்த்து “மேரியேஜ் சர்ட்டிபிகெட் விசயமாத்தானே? கூப்பிட்டிருந்தோமே?”
“ஆமாம்”
அவர் எழுந்து வெளியே வந்து என்னிடம் “வாங்க” என்று சொல்லிகொண்டு வெளியே சென்றார்.
நான் அவரை தொடர்ந்து செல்ல ராதிகா பின்னால் வந்தாள். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே சென்றதும் அவள் என்னிடம் கண்களால் எங்கே செல்கிறோம் என்று கேட்டாள்.
நான் தயங்கினேன். அவரை அழைக்கலாம் என்று தோன்றியது, ஆனால் தைரியம் வரவில்லை.
ராதிகா தமிழில் “சார், எங்கே போறம்?” என்றாள்.
“இது கிரைம் ஸ்டேஷன்மா… டாக்குமெண்ட்லாம் அந்த ஆபீஸ்லதான் இருக்கும். எல்லா பேப்பர்ஸும் கொண்டாந்திட்டீங்க இல்ல?”
“ஆமா” என்றாள்.
“காமிங்க”
அவள் காட்டிய காகிதங்களைப் பார்த்துவிட்டு “ஏம்மா, இது ரசீது… மேரியேஜ் சர்டிஃபிகேட் எங்க?” என்றார்.
”இதான் குடுத்தாங்க”
”அன்னிக்கு அதான் குடுப்பாங்க… ஒரு மாசம் கழிச்சு நேர்ல போயி சர்ட்டிபிகேட் வாங்கணும். அதான் லீகல் டாக்குமெண்ட்”
“தெரியலீங்க” ராதிகா அமைதியடைந்துவிட்டதை உணர முடிந்தது.
“சரி, இப்ப இதை குடுங்க. ஆனா ஒரு வாரத்துக்குள்ள சர்டிபிகேட் சப்மிட் பண்ணியாகணும்… போனா குடுப்பான். ஒரு ஆயிரம் ரூபா கேப்பான்…”
ஒரு வெள்ளை வேன் வந்து நின்றது. அவர் என்னிடம் “ஏறிக்குங்க” என்றார்.
“இதிலேயா?”
“ஆமா, நானும் வரணும்ல? முதல்ல நீங்க ஏறுங்கம்மா ”
ராதிகா ஏறிக்கொண்டதும் நான் ஏறி அவள் அருகே அமர்ந்தேன். ஆனால் அதே கணம் எங்களுக்குப் பின்னால் வந்து நின்றிருந்த ஆட்டோவில் இருந்து ஒருவன் ஏறி என்னருகே அமர்ந்தான். இன்னொருவன் மறுபக்கம் ஏறி அவளருகே அமர்ந்தான். சப் இன்ஸ்பெக்டர் வேனில் ஏறாமல் கதவை சாத்திவிட்டு விலகிக்கொள்ள வேன் சிறு உந்தலுடன் விரைந்து முன்னால் சென்றது.
வேனுக்குள் பின்னால் ஒருவன் இருக்கைக்கு அடியில் ஒளிந்து அமர்ந்திருந்தான். அவனும் அதே வேகத்தில் எழுந்து அவள் முகத்தில் ஒரு டவலை வைத்து அழுத்தினான். இன்னொருவன் அவள் இரு கைகளையும் அழுந்தப்பற்றிக்கொண்டான். அவள் திமிறித்துடிக்க என்னருகே அமந்திருந்தவன் என் முகத்தில் டவலை வைத்து அழுத்தினான்.
அந்த நெடி என் நுரையீரலை நிறைத்தது. என் மூச்சு அந்த திரவத்தின் நெடியாக மாறியது. அவன் அந்த துவாலையை நெகிழ்த்தினான். நான் ஆவேசத்துடன் மீண்டும் மூச்சை இழுத்ததும் அதே விசையுடன் மேலும் அழுத்திக்கொண்டான். அப்படியே நாலைந்து முறை. என் தலை கனத்து வந்தது. என் கழுத்து நரம்பு துடித்து துடித்து வலித்தது. தலையின் எடையை உடலால் தாங்க முடியவில்லை. உள்நாக்கு தளர்ந்து தொண்டைக்குள் பின்னடைவதுபோலிருந்தது. எண்ணங்கள் சிதைந்து தொடர்ச்சி இல்லாத சொற்களும் பிம்பங்களும் ஆயின.
எனக்கு தன்னுணர்வின் மிச்சம் அப்போதும் இருந்தது. மயங்கிக்கொண்டிருக்கிறேன், நானும் ராதிகாவும் அபாயத்தில் இருக்கிறோம், விழித்துக்கொள்ள வேண்டும் என்னும் பதற்றம் இருந்தாலும் உடலின் எல்லா தசைகளும் தளர்ந்து அப்படியே சரிந்து தூங்கவேண்டும் என்றும் தோன்றியது.
நான் விழித்துக்கொண்டபோது அந்த வேன் நின்றிருந்தது. அந்த அமைதிதான் என்னை திகைத்து விழிக்கச் செய்தது. நான் அபாயத்தில் இருக்கிறேன், ஓடும் வேனில் கடத்தப்படுகிறேன் என்ற என் தன்னுணர்வுதான் முதலில் உருவாகியது. மறுகணமே அந்த அமைதி. என்னருகே ராதிகா சரிந்து தூங்கிக்கொண்டிருந்தாள். என் இரு பக்கமும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் அசைந்ததும் அவர்களில் ஒருவன் ஏதோ சொன்னான். இன்னொருவன் அதற்குப் பதில் சொன்னான்.
நான் ராதிகாவின் தோளைப்பிடித்து உலுக்கி “ராதிகா, ராதிகா” என்றேன். அவள் முனகியபடி அசைந்தாள்.
என்னருகே அமர்ந்திருந்தவன் என் தோளை அழுந்தப் பிடித்து கீழிறக்கினான். “ம்” என்ற ஒலியாலேயே ஆணையிட்டான். பின்னால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து இறங்கியவன் நான் பனாரஸில் பார்த்த குண்டன். அவன் அருகே வந்ததும் நான் சட்டென்று முழங்காலில் மண்டியிட்டேன். என்னை அறியாமலேயே கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்… நான் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறேன்… தயவுசெய்து… எங்காவது கண்காணாத இடத்திற்குப் போய்விடுகிறேன். திரும்ப வரவே மாட்டேன்” என்று நான் கைகூப்பி கெஞ்சினேன்.
“உன்னை விட முடியாது… எவ்வளவோ சொன்னோம், நீ கேட்கவில்லை. உனக்கான கெடு முடிந்துவிட்டது” என்று அவன் சொன்னான். “உன்னை இங்கேயே கொல்லப்போகிறோம். நீ வேண்டுமென்றால் அலறி அழலாம்… இங்கே எத்தனை கத்தினாலும் யாரும் வரப்போவதில்லை…”
“அவளை விட்டுவிடுங்கள்… அவள் எந்த தப்பும் செய்யவில்லை. நான்தான் அவள் என்னுடன் வரவில்லை என்றால் செத்துவிடுவேன் என்று சொல்லி அவளைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.”
“அதை அவளிடமே கேட்டுக்கொள்கிறோம்” என்று குண்டன் சொன்னான்.
மிக ஆச்சரியமாக என் பயம் நடுக்கம் எல்லாம் போய்விட்டன. என் மூளை நிதானமாக வேலைசெய்தது. “உங்களுக்கு தேவை நான்தானே? என்னை கொல்லுங்கள். அவளை உயிருடன் கொண்டுசெல்லுங்கள். ஒரு வேளை அவள் அண்ணன் அவளைக் கொல்லச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் அம்மாவும் அப்பாவும் அதைச் சொல்லவே மாட்டார்கள். அவளைக் கொன்றால் அவர்கள் ஒருவேளை கோபம் அடைவார்கள். அது உங்களுக்கே தீமையாக முடியலாம்… அவளைக் கொண்டு சென்று அவள் பெற்றோரிடம் ஒப்படையுங்கள். அவர்கள் முடிவுசெய்யட்டும்… அவர்கள் கொல்லச்சொன்னால் கொன்றுவிடுங்கள்…”
என்னை கவனிக்காதவனாக “அவளை இறக்கு” என்று குண்டன் ஆணையிட்டான்.
சென்னையின் புறநகர் பகுதி அது என்று தெரிந்தது. அருகே மிகப்பெரிய ஏரி ஒன்று மென்மையான ஒளியுடன் விரிந்து கிடந்தது. அப்பால் ஒரு நெடுஞ்சாலையில் ஒளியுடன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றுகொண்டே இருந்தன. அவற்றின் ஓசை தொடர்ச்சியான முழக்கமாகக் கேட்டது. மிகத் தொலைவில் நகரத்தின் பல்லாயிரம் விளக்குகள் கனல் புள்ளிகள் போல செறிந்து அதிர்ந்துகொண்டே இருந்தன.
அவர்கள் இருவர் ராதிகாவை காரிலிருந்து இழுத்து கீழிறக்கினர். அவள் கால்கள் தள்ளாடி தரையில் அமர்ந்தாள். அவள் கூந்தல் அவிழ்ந்து முதுகில் விழுந்தது. அவள் முகம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை.
“அவள் ஒன்றும் செய்யவில்லை… நாங்கள் இங்கே வந்து இப்படி தங்கியது யாருக்குமே தெரியாது. என்னுடன் அவள் வந்ததற்கே சான்று இல்லை. அவளை அவள் சாதியிலேயே யாருக்காவது திருமணம் செய்துவைக்க முடியும்” என்றேன்.
“பேசாதே” என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர்களிடம் “அவளை விழிக்கச் செய்யுங்கள்” என்றான்.
ஒருவன் ஒரு பிளாஸ்டிக் குப்பியில் இருந்து நீரை கையில் ஊற்றி அவள் முகத்தின்மேல் அறைந்தான். அவள் அதிர்ந்து முனகியதும் மீண்டும் நீரை வீசினான். அவள் சட்டென்று எழுந்துகொண்டு “ஆ” என்றாள். என்னை உடனே பார்த்துவிட்டாள். “ராம்!”
குண்டன் அவளிடம் “நான் உன் அண்ணனின் ஆள். ஏற்கனவே இவனை கிழித்தவன் நான்தான். அப்போது ஓர் எச்சரிக்கை விட்டேன், இவன் கேட்கவில்லை. இவன் கணக்கு முடிந்தது. இவனைக் கொல்லப் போகிறோம். உன்னை கொல்லாமல் விட முடியும். ஆனால் நீ நினைக்கவேண்டும்” என்றான்.
ராதிகா சுற்றுமுற்றும் பார்க்க குண்டன் “இங்கே யாருமில்லை… கத்தினாலும் அந்த வண்டிகளின் ஓசையில் ஒன்றும் கேட்காது” என்றான். “நீ முடிவெடுக்கலாம்”
அவள் நிதானமடைந்தாள். “என்ன?”
“நீ இவனை விட்டுவிட வேண்டும். எங்களுடன் வந்து உன் சாதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இவனை மறந்துவிடவேண்டும்… அதை இப்போதே இவன் முன் நீ ஒப்புக்கொண்டால் உயிருடன் எங்களுடன் பாட்னாவுக்கு வரலாம்.”
“ராதிகா, நீ இவர்களுடன் போ. நீ உயிருடன் இரு… என்னைப்பற்றி யோசிக்காதே” என்று நான் சொன்னேன்.
“வாயை மூடு முட்டாள்” என்று ராதிகா என்னை நோக்கி சீற்றத்துடன், மூச்சொலிபோல சீறும் குரலில் சொன்னாள். “நான் உயிருடன் இருந்தால் இந்த நாய்களை சும்மா விடமாட்டேன். இவர்களை தூக்குமேடைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன். அந்த அயோக்கியனையும் அவனுடைய பெற்றோரையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்… அவனுக்கு என்னை நன்றாகவே தெரியும்… என்னை உயிருடன் விடவே மாட்டான்.”
“ராதிகா நீயே ஏதோ எண்ணிக் கொள்ளாதே, என்னை மறந்துவிடு” நான் அவனிடம் “அவள் ஏதோ சொல்கிறாள்… ஆனால் அவள் என்னை மறந்துவிடுவாள்… நானே சொல்கிறேன்” என்றேன்.
“நான் உன்னை கைவிட்டுவிட்டேன் என்ற வார்த்தையை கேட்டுக்கொண்டு நீ சாகவேண்டும், அதுதான் இந்தப் பதர்கள் எதிர்பார்ப்பது. அது ஒருபோதும் நடக்காது… ராம் இந்த பன்றிகளிடம் கெஞ்சாதே… நாம் கௌரவமாக சாவோம்… டேய், கொல்வதென்றால் எங்களை சேர்த்தே கொல்… கொன்றுவிட்டு கிளம்பு.”
“கொல்லத்தான் போகிறோம்” என்று அந்தக் குண்டன் சொன்னான். “ஆனால் நீ இன்னொரு முறை யோசிக்கலாம். அப்படி கடைசிக்கணத்தில் உயிருக்கு ஆசைப்பட்டு கெஞ்சியவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கிறேன்.”
“சீ, நாயே… உன் முன்னால் நான் கெஞ்சுவேன் என்று நினைத்தாயா? இதோ பார், நான் இவர் மனைவி. இவருடைய குழந்தை என் வயிற்றில் இருக்கிறது. நான் இவர் மனைவியாகத்தான் சாவேன்.”
“த்தூ…” என்று துப்பியபடி அவன் முன்னால் பாய்ந்தான். அவன் கையில் என்ன இருந்தது என்று நான் இருட்டில் சரியாகப் பார்க்கவில்லை. அவளை அவன் என்ன செய்தான் என்றும் பார்க்கவில்லை. அவள் அப்படியே பின்னால் சரிந்து குழைந்து விழுந்தாள். அவள் முதுகு தரையில் அறைபடும் ஓசை கேட்டது. அவளுடைய அறுபட்ட தொண்டைவழியாக ரத்தமும் மூச்சும் வெளியேறும் குழறல்போன, கொப்புளம் போன்ற ஓசை.
நான் “ராதிகா!” என்று அலறியபடி முன்னால் பாய்ந்தேன்.
அவன் “த்தூ” என்று மீண்டும் துப்பியபடி தன் கையில் இருந்த நீளமான கத்தியால் என்னை வெட்டினான். நான் ராதிகாவை நோக்கிக் குனிந்ததனால் அந்த வெட்டு என் தோளிலும் கழுத்திலுமாக விழுந்து அப்பால் சென்றது. வெட்டுபட்ட இடத்தை அழுத்தியபடி நான் முழங்காலில் மடிய அவன் இன்னொரு முறை வெட்டினான். ஆனால் அவன் கைதான் என் தோளில் விசையுடன் பட்டது. நான் தெறித்தவன் போல உருண்டு சென்று அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆழமான ஓடைக்குள் விழுந்தேன்.
கெட்டியான சாக்கடை பெருகிச்சென்றுகொண்டிருந்த ஓடை. “பிடி, பிடி அவனை” என்று அவன் கூவ இருவர் சாக்கடைக்குள் டார்ச் லைட்டை அடித்தனர். ஆனால் நீரின் விசை அதிகமாக இருந்தது. அது என்னை இழுத்துச்சென்றது. சிமிண்ட் குழாய்க்குள் என்னை உந்தி செருகியது.
நான் உள்ளே இருந்த ஒரு கல்லில் முட்டி குழாயின் நடுவே சிக்கி நின்றுவிட்டேன். என் மேல் சாக்கடைநீர் பெருகி கொப்பளித்து கடந்து சென்றது. வெளியே பேச்சுக்குரல்களைக் கேட்டேன். அவர்கள் உள்ளே டார்ச் அடித்துப்பார்த்தனர். சற்றுநேரத்தில் மறுபக்கமிருந்தும் டார்ச் அடித்துப் பார்த்தனர். இருபக்கமிருந்தும் ஒளி என்னை அணுகவில்லை. அந்த மடைக்குள் என்னென்னவோ சிக்கியிருந்தன. எனக்கு சற்று அப்பால் ஒரு பழைய டயர் நெடுக்குவாட்டில் இருந்தது. அதன்மேல் டார்ச் ஒளி அசைந்துகொண்டிருந்தது.
இருண்டு நீண்ட குகைக்குள் கடும் நாற்றத்துடன் கரிய நீர் பெருகிச்சென்றுகொண்டிருந்த ஒலியைக் கேட்டுக்கொண்டு நான் அசைவற்று அமர்ந்திருந்தேன். என் தோளிலும் கழுத்திலும் எரிச்சல் இருந்தது. அங்கே ஆழ்ந்த வெட்டுக்காயம் இருக்கலாம், குருதியிழப்பால் நான் சாகலாம்.
நான் சாகவே விரும்பினேன். அந்த சாக்கடை என் ரத்தத்தில் கலக்கவேண்டும். என் ரத்தமே சாக்கடையாக வேண்டும். நான் செத்து இங்கேயே மட்கிவிடவேண்டும். என் எலும்புக்கூடுகூட கண்டடையப்படக்கூடாது. நான் இருந்தமைக்குத் தடையமே இருக்கக் கூடாது. இருக்கிறது, அங்கே வெளியே ராதிகாவின் உடல் கிடக்கிறது. அவள் வயிற்றுக்குள் வளரத் தொடங்கிய கரு இருக்கிறது. அதுவும் எஞ்சப்போவதில்லை.
அவர்கள் விலகிச்சென்றிருக்கவேண்டும். வெளியே கார்கள் செல்லும் ஓசை ஏதும் உள்ளே கேட்கவில்லை. நீரின் கலங்கலும் கொப்பளிப்புமான ஓசை மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தது.
சட்டென்று எனக்கு மிக இதமான ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் சிறு குழந்தையாக இருக்கும்போது போர்வையை அப்படி தலைக்குமேல் போட்டுக்கொண்டு மணிக்கணக்காக ஒளிந்திருப்பேன். அதன்பின் சிறு பதுங்கிடங்களில் எலிபோல சுருண்டு அசையாமல் இருப்பேன். அப்போது என்னிடம் எப்போதுமிருக்கும் பதற்றம் முழுமையாக அகன்று அதன் நிம்மதி என்னில் நிறையும். என் உடலில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த ரத்தம் என்னை எடையற்றவனாக ஆக்கியது. என் உடல் சுருங்கிச் சுருங்கி ஒரு சிறு சுண்டெலியளவுக்கு ஆகிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

