கதைகளை ‘சரியாக’ வாசித்தல்.
நான் உங்களின் புது வாசகன். உங்களின் எழுத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. அதன் பொருட்டு உங்களிடமே அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள விழைகிறேன். நீங்கள் எழுதிய கிடா சிறுகதையைப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த கதாபாத்திரங்கள்.
சிதம்பரம் ஒரு உணர்ச்சிவயப்படும் கதாபாத்திரம். அவனுக்கு மனிதர்களின் மனதைப் படிக்கும் பக்குவம் இல்லை. அதே நேரத்தில் அண்ணன் மற்றவர்களால் மதிக்கப்படுகின்ற குணம் பெற்றவனாய் இருக்கிறான். மனங்களை எளிதாய் புரிந்து கொள்கிறான்.
அண்ணனை கிடா முட்டாது. அதன் மனம் அவனுக்கு புரிகிறது. இதில் கிடாவும் அண்ணனும் ஒத்த குணங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதன் கம்பீரம் அங்கங்கே சொல்லப்படுகின்றது. அண்ணனின் குணங்களும் வெகுவாகப் பேசப்படுகின்றது.
சிதம்பரத்துக்கு ஜானகி மேல் இருப்பது ஒரு ஈர்ப்பு மட்டுமே. ஆனால் அண்ணன் ஜானகியை உண்மையாக விரும்புகின்றான். கடைசியில், அண்ணன் ஜானகியின் மனதை அவள் சொல்லாமலே அறிந்து தம்பிக்கு கட்டி வைக்கச் சொல்கிறான்.
“நமக்கு புடிச்சவங்களுக்கு நம்மள புடிச்சிருக்கானு பாக்கணுமில்ல” என்கிற வசனத்தில் நிறைய அர்த்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அண்ணன் கிடாயையும் புரிந்து கொண்டான், ஜானகியையும் புரிந்து கொண்டான். கடைசியில் கிடா வெட்டப்படுகிறது. அதே போல் அண்ணனின் காதலும் காணாமல் போகிறது. இதில் ஏதேனும் உருவகம் உள்ளதா?
தங்களின் பதிலும் விளக்கமும் என் இலக்கிய வாசலைத் திறக்கும் என்று நம்புகிறேன்.
அன்புள்ள
மணிகண்டன்
அன்புள்ள மணிகண்டன்,
வெண்கடல் என்னும் தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று இக்கதை. ரத்தசாட்சி என்னும் திரைப்படமாக வெளிவந்த கைதி என்னும் கதையும் இதில்தான் உள்ளது. அந்த தொகுதியை நினைத்துக்கொண்டேன்.
உங்கள் கேள்வி, பொதுவாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுவதுதான். அவர்கள் வாசிக்க தொடங்கும்போது உருவாகும் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, கதையை தொடக்கத்தில் ‘அப்படியே’ வாசிப்பார்கள். அதில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதை. அதாவது கதையில் வெளிப்படையாக உள்ளதே அதன் சாரம் என புரிந்துகொள்வார்கள். நம் கல்விமுறையும் அப்படியே கற்பிக்கிறது.
இந்நிலையில் கதையைப் பற்றிப் பேசும்போது கதையைச் சுருக்கிச் சொல்வார்கள். கதையின் பேசுபொருள் என்று கருத்து ஒன்றை சொல்வார்கள். அதாவது திரண்ட கருத்து.
மெல்ல நிறைய கதைகளை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். எளிமையான ஒரு கருத்துக்காக ஓர் இலக்கியவாதி எழுதியிருக்க மாட்டார் என்னும் புரிதலை அடைகிறார்கள். இலக்கிய மதிப்புரைகள், உரையாடல்களைக் கவனிக்கிறார்கள். இலக்கிய விமர்சனம் அறிமுகமாகிறது. இந்நிலையில் சொல்லப்பட்டது அல்ல சொல்லப்படாமல் விடப்பட்டதே கதை என்னும் புரிதலை அடைகிறார்கள்.
உண்மையும் அதுதான். இலக்கியம் என்பது மறைபிரதி (subtext) வழியாகத் தொடர்புறுத்துவது. சொல்லப்படாததே முக்கியமானது, அதுவே கதை உணர்த்த விரும்புவது. வாசகன் கதையை தன் கற்பனையில் விரித்துக்கொள்ளும்போதே அக்கதை உண்மையில் நிகழ ஆரம்பிக்கிறது. அக்கற்பனையை தூண்டும் ஒரு பகுதியே எழுதப்பட்டது. எழுதப்படாதது என்பது வாசகனுக்குள் அவனால் விரித்தெடுக்கப்படுவது.
ஆனால் இந்த இரண்டாவது நிலையில் வாசகன் இன்னொரு குழப்பத்தை அடைகிறான். ஒரு கதையை தான் சரியாகத்தான் வாசிக்கிறோமா என குழம்ப ஆரம்பிக்கிறான். தான் வாசிக்காத ஒரு கோணத்தை இன்னொருவர் சொல்லிவிட்டால் அது தன் வாசிப்பின் போதாமை என்றோ, அறிவுக்குறைபாடு என்றோ எண்ண ஆரம்பிக்கிறான். தாழ்வுணர்ச்சி கொள்கிறான்.
விளைவாக அவனிடம் இரண்டு பிரச்சினைகள் உருவாகின்றன. ஒன்று, மிகைவாசிப்பு. இரண்டு, மூளைசார்ந்த வாசிப்பு.
கதையை மிக அதிகமாகக் கற்பனை செய்ய ஆரம்பிப்பதே மிகைவாசிப்பு. வாசகனுக்குக் கற்பனையுரிமை உண்டு. ஆனால் கதை அளிக்கும் வாய்ப்புக்குள்தான் அது நிகழவேண்டும். ஒரு கதை நமக்குள் உருவாக்கும் நினைவுகளும் சிந்தனைகளும் எல்லாம் அக்கதையின் மீதான வாசிப்பு ஆகாது. எதைப்பார்த்தாலும் நம் சிந்தனைகளும் கற்பனைகளும் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்புண்டு. அந்தக்கதையின் நிகழ்வுகள், படிமங்கள் ஆகியவை அளிக்கும் கற்பனைக்கான வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதே நல்ல வாசிப்பு. ஒருவர் எதை வாசித்தாலும் அந்தக்கதையில் அதற்கான வாய்ப்பு உண்டா என்பதையே கவனிக்கவேண்டும்.
கதை என்பது கற்பனையை தூண்டவேண்டும். சொற்கள் வழியாக ஒரு வாழ்க்கை விரிக்கப்படுகிறது. அதை கற்பனை வழியாக நிகழ்த்திக் கொண்டு ஒரு மெய்யான வாழ்க்கையை நாம் வாழவேண்டும். அதற்குப் பதிலாக அக்கதையை ஓர் ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டு பகுதிபகுதியாக கழற்றி, பகுப்பாய்வு செய்வது வாசிப்பாகாது. அப்படிப்பட்ட அறிவுசார்ந்த வாசிப்பு பெரும்பாலும் கதையின் உயிர்த்துடிப்பை நழுவவிட்டுவிடும். மிகப்பெரும்பாலும் செயற்கையான அர்த்தங்களை எடுப்பதில்கொண்டு சென்று விடும்.
எந்தக் கதையும் ஆய்வுக்குரியவை அல்ல. கல்வியாளர்கள் ஆய்வு செய்வதுண்டு – அவர்களுக்கு இலக்கியம் முக்கியம் அல்ல, வாழ்க்கையும் முக்கியம் அல்ல. அவர்கள் கதைகளை மொழியியல் முதல் சமூகவியல் வரை பல்வேறு அறிவுத்துறைகளுக்கான கச்சாப்பொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசியலாளர்களும் கதைகளை வெறுமே அரசியல் நோக்கில், பகுப்பாய்வு செய்து வாசிக்கின்றனர். தங்களுக்குச் சாதகமான அரசியல் உள்ளதா இல்லையா என்று மட்டுமே பார்க்கின்றனர். அவர்கள் இலக்கியவாசிப்பாளர்களே அல்ல.
சரி எப்படி வாசிப்பது?
முதலில், நீங்கள் வாசிப்பது சரியான வாசிப்பா என ஐயப்படாதீர்கள். சரியான வாசிப்பை நிகழ்த்த முயலாதீர்கள். நீங்கள் வாசிப்பது உங்கள் வாசிப்பு. அதை இன்னொருவர் வாசிக்கமுடியாது. நீங்கள் உங்கள் வாழ்வனுபவம், உங்கள் உணர்வுநிலைகளைக் கொண்டு வாசிக்கிறீர்கள். அப்படி ஒவ்வொருவரும் வாசிக்கலாம். வாசிப்பு என்பது ஓர் அந்தரங்கச் செயல்பாடு.செயற்கையாக, அறிவார்ந்து படைப்பை பகுப்பாய்வு செய்யாதீர்கள். படைப்பைப் பற்றிய இலக்கியக்கொள்கைகள், அரசியல் கொள்கைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாதீர்கள். அந்தப்படைப்பாளியே அதையெல்லாம் சொல்லியிருந்தாலும்கூட.படைப்பை எழுதப்பட்ட ஒரு மொழிவடிவம் என நினைக்காதீர்கள். அதை ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என நினைக்கையில்தான் ஏன் அப்படி உருவாக்கினார் என்று யோசிக்கிறீர்கள். அது உண்மையிலேயே நிகழ்ந்தது என எண்ணுங்கள். ஒரு வாழ்க்கைத்துண்டு என எண்ணுங்கள். நீங்களே நேரில் ஒரு வாழ்க்கையை பார்க்கிறீர்கள். அது எவரும் திட்டமிட்டு உருவாக்கியது அல்ல. தானாக நிகழ்ந்தது. அப்படியென்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? அதற்கு எப்படி பொருள்கொள்வீர்கள்? உங்கள் வாழ்க்கையனுபவம், உங்களுடைய சொந்த அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி பொருள்கொள்வீர்கள் அல்லவா? அப்படியே இலக்கியப்படைப்பையும் பொருள்கொள்ள முயலுங்கள்.நீங்கள் வாசித்ததும் பொருள்கொண்டதும் குறைபட்டதாக இருக்கலாம். அக்கதை உங்களுக்குள் வளரட்டுமே. கொஞ்சநாள் கழித்து மேலும் பிடிகிடைக்கலாமே. எவ்வளவோ வாழ்க்கையனுபவங்கள் பல ஆண்டு கழித்து நமக்கு புரிகின்றன அல்லவா? உடனே முழுக்கப்புரிந்தாக வேண்டும் என பிடிவாதம் தேவையில்லை.சரி, இப்போது கிடா கதைக்கு வருகிறேன். இப்படி வைத்துக் கொள்ளுங்கள். அது நான் எழுதிய ஒரு கதை அல்ல. அதில் நானே இல்லை. அது உண்மையில் நிகழ்ந்தது. நீங்கள் அருகே நின்று அதைப் பார்க்கிறீர்கள். அப்படி ஓர் அண்ணன் தம்பி உறவை, உரையாடலை நீங்கள் உண்மையில் கவனிக்கிறீர்கள். உரையாடலை கேட்கிறீர்கள். அந்நிகழ்வை எப்படி புரிந்துகொள்வீர்கள்? அதில் உங்களுக்கு என்னென்ன கேள்விகள் எழும். என்னென்ன உணர்வுகள் தோன்றும்? அதையே இங்கும் அடையுங்கள். அவ்வளவுதான் வாசிப்பு.
உங்களுக்கு என்னென்ன தோன்றினாலும் அதுவே உங்களுடைய வாசிப்பு. அதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் தன் வாசிப்பைச் சொல்வார். அதைக்கேட்டால் உங்களுடைய வாசிப்பு இன்னொரு கோணத்தை அடையும். நிஜவாழ்க்கையையும் நாம் அப்படி பேசிப்பேசித்தானே புரிந்துகொள்கிறோம். இலக்கியம் என்பது நாம் வாசித்து அடையும் வாழ்க்கை, வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படியே இலக்கியத்தையும் புரிந்துகொள்வோம்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


