Jeyamohan's Blog, page 121
April 30, 2025
யாரெல்லாம் எழுதலாம்?
ஒவ்வொருவரிடமும் எழுதும்படிச் சொல்வது என் வழக்கம். ஏன் எழுதவேண்டும்? ஏன் அனைவரும் எழுதவேண்டும்? அதற்கான பதிலை திரும்பத் திரும்ப அனைவரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
மெல்லிறகின் எடையின்மை
மாயப்பாறை, மதார் கவிதைகள் வாங்க
கவிதைக்கான என் அளவுகோல் என்ன என்று நான் வெவ்வேறு வகைகளில் விளக்கிக்கொண்டே இருக்கிறேன். கருத்துக்களை கவிதையாக்குபவர்கள் மேல் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை- ஏனென்றால் எனக்கு தெரியாத ஒரு கருத்தை இதுவரை எந்தக் கவிஞனும் சொன்னதில்லை. உலகின் பெருங்கவிஞர்கள்கூட. தத்துவ சிந்தனைகளை கவிதையில் காணும்போது நாற்பதாண்டுக்கால தத்துவ மாணவனாகிய எனக்குப் புன்னகைதான் வருகிறது. தனிப்பட்ட மனஅவசங்களின் நேரடி வெளிப்பாடுகளை கவிதைகளாகக் காண்கையில் அந்த கவிஞர் தெரிந்தவர் என்றால், அந்த உணர்வுகள் உண்மையானவை என்றால், ஓர் அனுதாபக் உருவாகிறது. ஆனால் என் புனைவுலகின் உளநிகழ்வுகளின் திவலைகளுக்கு நிகரானவற்றையே நம் கவிஞர்கள் எழுதியுள்ளனர். உருவகங்கள் மேல் ஈடுபாடுண்டு, ஆனால் நான் என் நாவல்களில் உருவாக்கியுள்ள உருவகங்களின் அருகே வரும் உருவகங்களை பெரும்காவிய ஆசிரியர்களே உருவாக்க முடியும்.
எனினும் தீராத வேட்கையுடன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். தேடிக்கொண்டே இருக்கிறேன். நான் தேடுவதென்ன என்பதைக் கண்டடையும்போதே அறிகிறேன். சிந்தனையின் சுமையற்ற விடுதலையை என்று அதைச் சொல்லலாம். தன்னை குழந்தையாகவோ பித்தனாகவோ நிறுத்திக்கொண்டு கவிஞன் அடையும் முன்பத்திய கணம் இல்லாத நிலையை. அப்போது அவனில் மொழி புதியதாக நிகழ்வதை. அந்த அபாரமான எளிமையை. அந்த எளிமையில் கூடும் புதுமையை. மொழியைப் புதுப்பிப்பவை அத்தகைய கவிதைகளே. அவற்றை அடையாளம்காணவும், முன்வைக்கவும் தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருக்கிறேன். சென்ற நாற்பதாண்டுகளில் கவிதைகளைப் பற்றி தமிழில் நிறைய எழுதியவன் நான். என் பணி மொழியில் ஒரு புதிய தளிர்முளை எழுவதன் பரவசத்தையே பெரும்பாலும் எழுதியுள்ளேன்.
மதார் அவருடைய முதல் தொகுதி வழியாக என்னைக் கவர்ந்தவர். அதிலிருந்த தீவிரம் வெளித்தெரியாத எளிமையின் அழகு தமிழ்ப்புதுக்கவிதையில் மிக அரிதான ஒரு நிகழ்வு. இந்த இரண்டாவது தொகுதியில் இன்னும் தீவிரத்துடன் இன்னும் எளிமையுடன் விரிந்து எழுந்திருக்கிறார். ஒரு தொகுதியின் எல்லாக் கவிதைகளையும் அக மலர்வுடன் வாசிப்பது என்பது ஓர் அரிய வாய்ப்பு.
இரண்டு வகையான வெளிப்பாடுகள் கொண்டவை இக்கவிதைகள்
ஏமாற்றுப் பேர்வழி
எடைதூக்க
என்னையே அழைப்பாள்
கர்ப்பிணி மனைவி
ஒரு நாள்கூட கேட்டதில்லை
அவள் தூக்கி வைத்திருந்த எடையை
கொஞ்சம் வாங்கிக்கச் சொல்லி.
நானும் பார்த்தேன்
என்னடா இவ இப்படிப் பண்ணுகிறாளே என்று.
அவள் மட்டும்தான் சுமப்பாளாம்
ஒருநாள் ஆத்திரம் தாளாமல்
கேட்டே விட்டேன்
அவள் புன்னகையுடன்
கையில் தந்தாள்
அது அப்படி ஒன்றும் கனமாய் இல்லை
சரியான ஏமாற்றுப் பேர்வழி
என்னும் முதல் வகையான கவிதைகளில் இன்று சர்வதேச அளவில் நவீனக் கவிதைகளில் உள்ள உரையாடலுக்கு அருகே வரும் இயல்புத்தன்மையும் புன்னகையும் உள்ளது. படிமங்கள் கவிதையில் ஒருபோதும் இல்லாமலாகிவிடாது, கவிதையின் அடிப்படை அலகே அதுதான். ஆனால் படிமக்கவிதை சட்டென்று பழையதாகிவிட்டது. படிமம் என்றே தெரியாத படிமங்களை உருவாக்குவதே இன்றைய கவிதையின் வழி. அதன்பொருட்டே அனுபவத்துளிகளும், நேர்க்கூற்றுகளும் எல்லாம் கவிதையில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் அவை படிமங்களாக வாசகன் உள்ளத்தில் விரியும்போது மட்டுமே கவிதைத்தன்மையை அடைகின்றன. அவற்றைக் கண்டு எளிய அனுபவத்துளிகளில் ஏதேனும் கருத்தையோ, விமர்சனத்தையோ ஏற்றிக் கூறப்படும் ‘நுண்சித்தரிப்பு’கள் கவிதைகளாக எழுதிக் குவிக்கப்படுகின்றன. அந்த அனுபவத்துளியுடன் வாசகன் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அவனுக்குச் சிறு புன்னகையோ அனுதாபமோ உருவாகும் என்றால், அவை ரசிக்கவும் படுகின்றன. ஆனால் அவை அனுபவப்பதிவுகளே ஒழிய கவிதைகள் அல்ல.
ஏமாற்றுப்பேர்வழியில் அந்த குழந்தை அடையும் எடையின்மை ஓர் அழகிய படிமம். அக்குழந்தை ‘தடிமாடாக’ ஆகி பிள்ளைகக்குட்டிகளுடன் ‘செட்டில்’ ஆனபிறகும் அதே எடையின்மை கொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறை
வானைப் பார்க்கும்போதும்
சந்தேகக் கண்ணோடு
பார்க்கிறேன்
மேகத்தை
அது எதையோ
மறைத்து வைக்கிறது.
மழை
பெய்யுபோதுகூட
சந்தேகம்
வலுக்கத்தான் செய்கிறது
அது எதையோ
மறைக்கத்தான்
பெய்கிறது
என்னும் நேர்க்கூற்று வகையான கவிதையிலும் படிமம் உள்ளடங்கி பிறிதொன்றென தன்னைக் காட்டி அமைந்துள்ளது. அனைத்துமாகி, அனைத்தையும் தழுவி நின்றிருக்கும் ஒன்று தன்னை வெளிப்படுத்துவதனூடாக மேலும் மகத்தான ஒன்றை மறைக்கிறது. அந்த மகத்தானதன் உருவம் அது, அதனாலேயே அது மறைக்கவும் செய்கிறது.
இந்த இரண்டு வகைகளின் இரு எல்லைகளுக்கு நடுவே நுணுக்கமான வண்ணவேறுபாடுகளுடன் தனித்தன்மை கொண்ட கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு எப்போதும் கலைடாஸ்கோப் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. ஓரிரு வண்ணத்துண்டுகள்தான். அவை அமையும் இணைவுகளே முடிவில்லாத வடிவங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன.
மதாரின் பிரபஞ்ச அனுபவம் அவரே அறியாமல் நிகழ்ந்து, அன்றாடத்தின் எளிய அனுபவங்களிலும் காட்சிகளிலும் படிந்து அவற்றை தன்னியல்பான கவிதை வெளிப்பாடுகளாக ஆக்குகிறது. அவர் சென்றிருக்கும் தொலைவை ஒவ்வொரு கவிதையும் வெளிப்படுத்துகிறது.
மாயப்பாறை. மதார்.
காவியம் – 10
லட்சுமி, மாக்கல் சிற்பம். சாதவாகனர் காலம். பொயு1. பைத்தான் அருங்காட்சியகம்அவ்வாறு தொடங்கியது மிகத்தீவிரமான, மிகக்கொந்தளிப்பான ஓர் உறவு. ராதிகாவை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். உரையாடிய முதல் பெண். நான் நெருங்கி உரையாடிய என் தலைமுறையின் இன்னொரு நபரும் அவள்தான். இலக்கியம் பற்றிப் பேசத்தொடங்கி, அரசியல், வம்புகள் என விரிந்தது எங்கள் உரையாடல். வகுப்புகள் முடிந்ததுமே அவள் என்னை தேடி வந்தாள். காபி சாப்பிட்டுவிட்டு பேசுவதற்கு இடம் தேடிச்சென்றோம். பேசப்பேச இருவரும் ஒருவருக்கு ஒருவர் விரிந்துகொண்டே இருந்தோம்.
தன்னை அவள் ஸ்ரீகர் மிஸ்ராவிடம் அறிமுகம் செய்துவைக்கும்படிக் கோரினாள். நான் அவளை அறிமுகம் செய்துவைத்தபோது அவர் திகைத்துப் பின்வாங்கியது போலிருந்தார். வகுப்பில் அவளைக் கண்ட நினைவே அவரிடம் இல்லை. “Shy type” என்று ராதிகா சொன்னாள். ஆனால் அவர் பெண்களை அஞ்சுகிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் ராதிகாவை அவருடைய கல்லூரி அறைக்கு இட்டுச்சென்றபோது அவர் அதிர்ந்துகொண்டே இருந்தார். பேச்சே எழவில்லை. ஆனால் அவளைப் பற்றி அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.
அவருடைய உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நான் மேலும் பல மாதங்கள் கழித்துத்தான் புரிந்துகொண்டேன். அவர் தன் இயல்பை அடைந்து பேச ஆரம்பித்தபின். சொல்லப்போனால் ஒருமுறை பல்கலையில் நிகழ்ந்த பஞ்சாபி திருமணம் ஒன்றுக்கு அவருடன் சென்று திரும்பும்போதுதான் அவர் முதன்முதலாக தன் இறுக்கத்தை உடைத்து வெளியே வந்தார். அன்று அவர் சிறிது மது அருந்தினார். அவருடன் ராதிகாவும் நானும் குடித்தோம். எனக்கு குடி ஒன்றுமே செய்வதில்லை. நான் என் அப்பாவின் சேகரிப்பில் இருந்த ராணுவ ரம்மை அவ்வப்போது குடித்துப் பார்த்ததுண்டு. போதை என எதையுமே உணர்ந்ததில்லை. ஆனால் ராதிகா குடித்தால் இலகுவாகிவிடுவாள். நன்றாகச் சிவந்துவிடுவாள். சிரித்துக்கொண்டே இருப்பாள்.
அன்று அவள் சற்று கூடுதலாகவே குடித்தாள். சர்தார்ஜிகளுடன் நடனம் ஆடினாள். ஸ்ரீகர் மிஸ்ராவை நடனமாட அழைத்தாள். அவர் கோணலான சிரிப்புடன் விலகியபோது அவளே அவர் கைகளைப் பிடித்து இழுத்துச்சென்று தன்னுடன் நடனமாடச் செய்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர் எல்லா தற்கட்டுப்பாட்டையும் இழந்தார். சிரித்துக்கொண்டே ஆடினார். அவருக்கு நன்றாகவே ஆடத்தெரிந்திருந்தது. ராதிகா கைதட்டியும் சிரித்தும் அவருடன் ஆடினாள். அவர் அவளை இடைவளைத்துப் பிடித்துக்கொண்டும், தோளில் கைசுற்றிக்கொண்டும் நடனமிட்டார்.
ராதிகாவை அவள் விடுதிக்குக் கொண்டுசென்று விட்டுவிட்டுத் திரும்பும்போது ஸ்ரீகர் மிஸ்ரா பேச ஆரம்பித்தார். அவர் தனக்குத்தானே சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார். சட்டென்று என் தோளைத் தொட்டு திருப்பி தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பெண்களுக்கும் அவருக்குமான உறவைப் பற்றி. தன் தனிமையைப் பற்றி.
அவர் பெண்களை வெறுக்கவில்லை, மாறாக அவர் மாபெரும் பெண்பித்தர். பெண் உடலின் அழகில் அவர் அணுவணுவாகத் திளைப்பவர். அவர் கற்ற சம்ஸ்கிருத காவியங்கள் அவரை அப்படி ஆக்காமலிருந்தால்தான் வியப்பு. அவருடைய மனைவியை அவர் தன் பதினெட்டு வயதில் மணந்துகொண்டார். அவளுக்கு அவரை விட நான்கு வயது கூடுதல். முதல் பத்தாண்டுகள் அவர் அவளிடம் வெறிமிக்க காமம் கொண்டிருந்தார். அதிலேயே விழுந்துகிடந்தார். அவருடைய தந்தையும் தாயும் அவரை வசைபாடி வீட்டைவிட்டு கிளப்ப முயன்றனர். அவர் அப்போது மாணவர். இரண்டு ஆண்டுக்காலம் படிப்பையேகூட விட்டுவிட்டார்.
அவரது மூத்தசகோதரர் கனிஷ்கா மிஸ்ராதான் அவரை பாட்னாவில் ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டார். அங்கிருந்து அவர் வாரந்தோறும் கிளம்பி வந்தார். திரும்பிப்போக ஒருநாள் பிந்தினார். கிளம்பிச்செல்லும்போது கண்ணீர் விட்டு அழுதார். பத்தாண்டுகளில் நான்கு குழந்தைகள். அவர் மனைவி பருத்து, உடல்தளர்ந்தாள். அவளுக்கு கடும் மூட்டுவலி. கூடவே ஒற்றைத்தலைவலி. காமத்தில் ஆர்வம் முற்றிலும் இல்லை. பார்ப்பதற்கு பெரிய ஸீல் போல இருந்தாள். அவள்மேல் அவருக்கு அன்பிருந்தது, ஆனால் காமம் முழுமையாக விலகிவிட்டது.
அதன்பின் அவருடைய காமம் முழுக்க கண்ணில்தான். இந்திரனை கௌதமர் சாபமிட்டு அவன் உடலெங்கும் இருந்த ஆண்குறிகளை கண்களாக ஆக்கினார். அது எல்லா ஆண்களுக்கும்தான். ஆண்களின் உடலெங்கும் ஆண்குறிகள். அவை கண்களாக மாறியிருக்கின்றன. அவன் மட்டுமே அறிந்த கண்கள், அவன் ஆண்குறியாக மாற்றிக்கொள்பவை. கண் தான் ஆணின் முதன்மைக் காம உறுப்பு. அவர் பெண்களை பார்த்துக்கொண்டே இருந்தார். நுணுக்கமாக ஒவ்வொரு பெண்ணையும் பார்த்தார். அவர்களின் உடலின் வண்ணங்களை, வடிவங்களை, அவை கொள்ளும் நுட்பமான மாறுதல்களை.
“பெண்ணுடல் பற்றி என்னிடம் கேள்… அவர்களின் வயது சற்று முதிர்ந்து மார்பகங்கள் கீழிறங்கும்போது மேல்மார்பில் ஆற்றுமணல்வரிகள் போல விழும் மெல்லிய கோடுகளைப் பார்த்திருக்கிறாயா? நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த பெண்களை இத்தனை அழகுடன் இன்று எவருமே பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் பார்த்தது காளிதாசனின் கண்களால், பாரவியின் கண்களால், பாஸனின் கண்களால்…”
அவர் பெண்களைப் பார்ப்பதை அவர்கள் பார்த்துவிடலாகாது என எண்ணினார். தன்னுடைய கௌரவம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல. அதையெல்லாம் கருத்தில்கொள்பவர் அல்ல அவர். அது அவர்களை அவமதிப்பது என்று நினைத்தார். ஆகவே எப்போதும் பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார். பெண்களை நேருக்குநேராகச் சந்திப்பதில்லை, அவர்களின் கண்களை ஏறிட்டுப் பார்ப்பதுமில்லை.
அந்த விலக்கம் அந்த நடனத்தில் உடைந்தது. அவர் ராதிகாவுடன் மிக அணுக்கமானவராக ஆனார். அதன்பின் அவள் தன் அறைக்கு வந்தபோது இயல்பாக அவளிடம் பேசினார். அவள் தோளைத்தொட்டு அழைக்கவும், தொட்டுப்பேசிச் சிரிக்கவும் அவரால் முடிந்தது. அவள் எங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கினாள். ஸ்ரீகர் மிஸ்ராவின் படுக்கையறையில் புத்தக அடுக்குகளுக்கு நடுவே அமர்ந்துகொண்டு அவள் அவரிடம் பேசிக்கொண்டே இருந்தாள். இரவு பிந்திவிட்டால் அங்கேயே இன்னொரு அறையில் தங்கிவிட்டு மறுநாள் கிளம்பினாள்.
ஆனால் அந்த உறவு முழுக்கமுழுக்க காமம் அற்றதாக இருந்தது என்பதை தொடக்கத்திலேயே கண்டடைந்தேன். அவருடைய முகமும் பாவனைகளுமே அதைக் காட்டின. அவை காமக்கள்ளமற்ற இளமைக்கு மீண்டவை போலிருந்தன. அவள் பார்வையில் அவர் ஒரு மேதை. அவர் பார்வையில் அவள் ஓர் இலக்கியமாணவி. அவ்வளவுதான், இயல்பாகவே அவ்வளவுதான். அவர் அவள் உடலைப் பார்ப்பதில்லையா? நான் அவரிடமே அதைக் கேட்டேன்.
“பார்ப்பதில்லையா? பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மகத்தான ஓவியத்தைப் பார்ப்பதுபோல. பார்க்கப்பார்க்க அவள் அழகாக ஆகிக்கொண்டே இருக்கிறாள். காவியங்களின் ஒவ்வொரு வரியும் அவள்மேல் வந்தமைந்துகொண்டே இருக்கிறது” என்றார் ஸ்ரீகர் மிஸ்ரா. ”ஆனால் நான் அதை அவளிடமே சொல்லமுடியும். அது அளிக்கும் சுதந்திரம் சாதாரணமானது அல்ல. ஆடைகளை அவிழ்த்துவிட்டு வானில் சிறகுகளுடன் எழுவது போன்றது அது. அவளைப்போன்ற ஒரு பெண்ணிடம்தான் அத்தகைய சுதந்திரம் என்னைப்போன்ற ஒருவனுக்குக் கிடைக்கும்.”
“ஆம், அவர் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார். என் உடலில்தான் அவருடைய கண் அலைந்துகொண்டே இருக்கிறது” என்று ராதிகா சொன்னாள். “ஆனால் அதில் காமம் இல்லை. அதை நன்றாகவே உணரமுடிகிறது. ஆண்களின் பார்வைகள் பெண்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் சிறுமியாக இருக்கையில் இருந்து அவர்கள் அவற்றைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். எல்லா வகைகளையும் எல்லா பெண்களும் சந்தித்திருப்பார்கள். அவருடையது ஓவியத்தைப் பார்க்கும் ரசிகனின் பார்வை.”
இருவருமே சொன்ன அந்த வரி என்னை வியக்கச் செய்தது. அதெப்படி என்று என் மனம் சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தது. “காமம் இல்லாமல் ஆணுக்கு பெண்ணைப் பார்ப்பது சாத்தியமா?” என்று ஸ்ரீகர் மிஸ்ராவிடம் கேட்டேன்.
“சாத்தியமே இல்லை. ஆனால் அப்படி ஒரு நிலையை அடையமுடியும். என் அண்டைவீட்டு தொண்ணூற்றிஐந்து வயது தாத்தா என் அக்காவின் திருமணத்தன்று அலங்காரத்துடன் அவள் நின்றபோது அவளை நன்றாகப் பார்க்க ஆசைப்பட்டு வந்து கேட்டார். இங்கே வந்து நில் குழந்தை, கிழவன் உன் அழகைப் பார்க்கிறேன் என்றார். அக்காவுக்கு வெட்கம் சிரிப்பு பெருமிதம். அவர் ஒரு மணிநேரம் அமர்ந்து ரசித்தார். ஆம், ஒரு மணிநேரம்.” ஸ்ரீகர் மிஸ்ரா சொன்னார்.
”அக்கா நின்றுகொண்டே இருந்தாள். அவளுக்கும் சலிப்பில்லை. ஆனால் கண்கள் சிவந்து அவள் வேறொருத்தியாக ஆகிவிட்டது போலிருந்தது. அவள் திரும்ப வந்தபோது கண்கள் கலங்கியிருந்தன. தனியறையில் அமர்ந்தபோது கண்களை ஒற்றிக்கொண்டாள். நான் சிறுவன், அவளிடம் ஏன் அக்கா அழுகிறாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். அவளால் சொல்லவே முடியவில்லை. நீண்டநாள் எனக்கு அந்த நிகழ்வு மனதில் இருந்தது. அவள் அவமானப்பட்டிருப்பாளா என்று பிறகு எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன்.என் இளமையின் மிகப்பெரிய புதிர் அது.
”ஒரு கட்டத்தில் புரிந்தது, அது அவமதிப்பு அல்ல. அவளை காமம் இல்லாமல் தூய அழகாக மட்டுமே பார்க்கும் பார்வை அது. யக்ஷர்களும் கந்தர்வர்களும் பார்ப்பதைப்போல. அது அவள் வாழ்வில் ஓர் உச்சம். அவள் அடைந்த இளமையின் மகத்தான தருணம். அது திரும்ப வரவே போவதில்லை… அதை அவள் அப்போது எப்படியோ உணர்ந்துவிட்டாள். முடிந்துவிட்டது, இனி இல்லை, அவ்வளவுதான் என்று அவளுக்குள் எப்படியோ தெரிந்துவிட்டிருந்தது. அதுதான் அந்தக் கண்ணீர்.
”நான் ஒன்று சொல்லவேண்டும். அந்த தாத்தா அவள் அகன்றதும் கைகூப்பி வணங்கினார். முகம் மலர்ந்திருந்தது. எழுந்து சென்றபோது என் அம்மாவிடம் ’கிழவனின் ஆத்மா அவளை வாழ்த்துகிறது மகளே. அவள் லட்சுமி ஸ்வரூபம்’ என்றார். அவரால் மேலே பேசமுடியவில்லை. சட்டென்று உடைந்தவராக ’இந்த வயதான காலத்தில் இவ்வளவு தெய்வாம்சத்தையும் பார்க்க வாய்த்தது’ என்றார். அவள் திருமணத்தில் ஐந்து பவுன் நகை போட்டார். அடுத்தமாதமே மறைந்தார்.
”அந்தத் தருணத்தை நான் காளிதாசன் வழியாகத்தான் புரிந்துகொண்டேன். பற்பல ஆண்டுகளுக்குப் பின். அப்போது அந்த அக்கா இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி மூன்றாவது பிரசவத்தில் மறைந்துவிட்டிருந்தாள். அவள் கணவன் மறுமணம் செய்துகொண்டான். அவள் குழந்தைகளுக்கு அவள் நினைவே இல்லை. எவருக்கும் அவள் நினைவு இல்லை, என் அம்மாவுக்குக் கூட. அவளை மறக்காமல், அவ்வப்போது நினைத்து விம்மி கண்ணீர்விடுபவர் என் அப்பா மட்டும்தான். அவளுடையதென எஞ்சியது ஒரு கறுப்புவெள்ளைப் புகைப்படம். அந்த கல்யாணநாளில் எடுக்கப்பட்டது
”ஒருநாள் நான் அதைப் பார்த்தேன். அப்போது காளிதாசனில் முனைவர்பட்ட ஆய்வில் இருந்தேன். காளிதாசனில் வாழ்ந்தேன். அந்த கறுப்புவெள்ளைப் படம் மங்கலானது, அழுக்கடைந்திருந்தது. அந்தக் கண்கள் இரு புள்ளிகள். ஆனால் அவற்றில் அவளிடம் அன்றிருந்த அந்த மகத்தான போதை தெளிந்து வருவது போலிருந்தது. எனக்கு மெய்சிலிர்த்தது. என்ன செய்கிறான் கவிஞன்? அன்று மலர்ந்து அன்று உதிரும் பூவில் இருக்கும் அழிவின்மையை அல்லவா அவன் பார்க்கிறான்?
”அந்த தாத்தாவுக்கு அப்போது கிட்டத்தட்ட நூறு வயது. அவர் காமத்தை கடந்துவிட்டிருந்தார். காவியங்கள் வழியாகப் பெண்ணைப் பார். உனக்கு ஆயிரம் வயதாகும். ஈராயிரம் வயதாகும். உன் காமம் நாக நஞ்சு இறுகி ரத்தினம் ஆவதுபோலச் சுடர்விடத் தொடங்கிவிட்டிருக்கும். நான் காளிதாசன் யக்ஷன். மேகங்களில் உலவுபவன்… நான் பேசுவதெல்லாம் மேகசந்தேசம். இடிமின்னலின் மொழி. என் மொழி அல்ல, விரிந்த வானத்தின் குரல் அது… எல்லாவற்றையும் தழுவும் நீரென பொழியக்கூடியவன். எதையும் தொடாமல் வானில் உலவிக்கொண்டிருக்கிறேன்” ஸ்ரீகர் அவரது உளறலின் பெருக்கில் ஏறிக்கொண்டார்.
அன்றெல்லாம் நான் ராதிகாவிடம் பேசிக்கொண்டே இருந்தேன். கல்லூரியின் மரத்தடிகளிலெல்லாம் காதலர்கள். நாங்கள் அமர்ந்து பேசுவதற்கான இடம் நூலகம்தான். அதிலும் சம்ஸ்கிருத பகுதி. அடுக்கடுக்காக காவியங்கள். காவியங்களாலான சுவர்கள் கொண்ட ஒரு மாளிகை. அங்கே அநேகமாக எவருமிருக்க மாட்டார்கள். நானும் அவளும் மட்டும் இருப்போம். மெல்லிய குரலில் பேசிக்கொண்டே இருப்போம். வியாச காளிதாசர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீகர் மிஸ்ரா சொல்வதை எல்லாம் நான் அவளிடம் சொல்வதுண்டு. அவள் சிரித்தபடி “ஆம், அவர் அப்படித்தான். ஆனால் அப்படி நீ ஆகிவிடவேண்டாம். நீ மேகத்தில் செல்லும் யட்சனாக ஆகவேண்டாம்” என்றாள்.
”உனக்கு கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடுமா?” என்றேன்.
“ஆம்” என்றாள்.
“எப்படி?”
“உதாரணமாக சுக்விந்தர் சிங்… அவன் கண்களைப் பார்த்தாலே தெரியும். அவன் பல பெண்களைப் பார்த்தவன். நிறைய என்றால் ஏராளமாக. வகைவகையாக. அதில் திளைத்தவன்.”
“எப்படித்தெரியும்?”
“அவன் கண்களில் பெண்களுக்கான அலைதலே இருக்காது.”
“அப்படியா?” என்றேன். எனக்கு அதுவரை அவனைப்பற்றி அப்படித் தெரியாது. “எல்லா பெண்களுக்கும் இது தெரியுமா?”
“சூட்டிகையான பெண்களுக்குத் தெரியும்.“
“ஆனால் அவனிடம்தான் பெண்கள் சென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சிரிக்கிறார்கள், குழைகிறார்கள்”
“அது பெண்களின் பலவீனம். பெண்களுக்கு அப்படிப்பட்ட ஆண்களைத் தவிர்ப்பது கடினம்.”
“ஏன்?”
“நான் சொன்னேனே, அவன் கண்களில் பெண்களைப் பற்றிய ஆர்வமின்மை இருக்கும் என்று. சலிப்புடன் தன்னைப் பார்க்கும் ஆணின் கண்கள் பெண்களுக்குப் பெரிய சவால்தானே? இவன் பார்த்த பெண்களில் நான் எந்த இடம் என்று பெண்ணின் அகங்காரம் சீண்டப்படுகிறது. அவனை கவரவும், அவனை கெஞ்ச வைக்கவும் நினைக்கிறாள். அவனை வென்றதும் அப்படியே கைவிட்டு விலகிவிடலாம் என கற்பனை செய்கிறாள். ஆனால் அது பெரும்பாலும் நடப்பதில்லை.”
என்னால் அதையெல்லாம் யோசிக்கவே முடியவில்லை. நான் வாழ்ந்த உலகம் முழுக்கமுழுக்க வேறு. கிட்டத்தட்ட ஸ்ரீகர் மிஸ்ராவின் உலகம் அது.
“வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட எப்போதுமே ஆற்றல்கொண்டது. அதை பெண்கள் மறக்கவே கூடாது” என்று ராதிகா சொன்னாள். “சுக்விந்தர் ஒரு பெண்ணை வெல்ல நினைத்தான் என்றால் அவளை மட்டும் அவன் பொருட்படுத்துவதாகக் காட்டிக்கொள்ள ஆரம்பிப்பான். அவளிடம் பித்து கொண்டிருப்பதாக நடிப்பான். அவர்களுக்கு நடிக்க நன்றாகவே தெரியும். பெண்களுக்கு எப்படிப்பேசினால் பிடிக்கும் என்பது நூறுமுறை பயின்றதாக இருக்கும்.”
“அவளை ஓர் ஊசலில் ஆடவிடுவான். ஆண்மையும் திமிரும் கொண்டவனாக இருப்பான். மறுகணமே அவளிடம் பிச்சைக்காரன்போல கெஞ்சுவான். அவளுடைய ரகசிய ஆணவங்களைக் குளிரவிடுவான். அவள் அவன் படுக்கையில் விழும் வரை அவளை வென்றுகொண்டே இருக்க விடுவான். ஆனால் வெல்லமுடியாதவன், மதம்கொண்ட விலங்கு என்றும் தோன்றுவான். அந்த அலைக்கழிப்புதான் அவளைச் சிக்கவைக்கிறது. அவளால் யோசிக்கவே முடியாது. அவள் ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஆடிக்கொண்டே இருப்பாள்.” அவள் தொடர்ந்தாள்.
”அவள் தோற்கும்போது வென்றுவிட்டதாக நினைத்துக் கொள்வாள். அவனை தன் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டதாக கற்பனை செய்வாள். காளையை அடக்கிவிட்டாள். இனி அதை மெல்ல மெல்ல பழக்கி மூக்கணாங்கயிறு மாட்டிவிடவேண்டியதுதான். அதன்பின் பெருமிதத்துடன் அதை பிற பெண்கள் முன் கூட்டிச்செல்ல வேண்டியதுதான். இந்தப் பெண்களின் மனநிலையே விசித்திரமானது. அவனுடைய பிற பெண்கள் யார் யார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதை விசாரித்து அறிந்துகொள்வதைத்தான் முதலில் செய்வாள். பல நாட்களாகத் துருவித் துருவி கேட்பாள். அவனும் அதை கதைபோல விரித்துச் சொல்வான்.”
“ஏன்?” என்றேன்.
“ஒன்று, நான் இத்தனை பெண்களை வென்றேன் என்று சொல்லிக்கொள்வதற்காக. இன்னொன்று அவளிடம் பாலியல் பற்றிப் பேசுவதற்காக” என்று ராதிகா சொன்னாள். “ஆனால் அவனை அவள் வென்றதும் அந்த மற்ற பெண்கள் மேல் அச்சம் வரத்தொடங்குகிறது. அவனை அவர்களிடமிருந்து பிரிக்கவேண்டும் என வெறி எழுகிறது. அந்த பதற்றத்திலேயே அவனுடன் இருக்கும் நாட்களை நரகமாக ஆக்கிக்கொள்வாள். ஓர் ஆண்டில் அவள் அவனுக்கு சலிக்க வாய்ப்பிருக்கையில் ஒரு வாரத்தில் சலிக்கச் செய்துவிடுவாள். அவனால் கைவிடப்படுகையில் உடைந்து நொறுங்குவாள். மிகப்பெரிய இருட்டு வழியாகச்சென்று கரையேறும்போது வேறொருத்தியாக இருப்பாள்.”
“அப்படி மீள்பவர்களைக் கண்டிருக்கிறேன். ஆண்கள் மேல் கடும் கசப்பும் சலிப்பும் கொண்டிருப்பார்கள். அல்லது அப்படியே மறந்து தங்கள் ஒன்றும்தெரியாத இளமைக்கு திரும்பிச்சென்றுவிடுவார்கள். அப்படிச் செல்லமுடியாது, ஆனால் அதை நடிக்கமுடியும்.”
நான் பேசாமலேயே இருந்தேன். ஸ்ரீகர் மிஸ்ராவைப் பற்றிப் பேசப்போய் வேறெங்கோ போய்விட்டது பேச்சு. என் அகம் தவித்துக்கொண்டே இருந்தது, ஆனால் நான் ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
“நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்லவா?”
“ம்?” என நிமிர்ந்தேன்.
“எனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம் என்றுதானே?”
“இல்லை” என்று குழறி பார்வையை தாழ்த்திக்கொண்டேன்.
”சுக்விந்தர் போன்றவர்களின் இரைகள் அவர்களிடம் தேடிச்சென்று சிக்குபவர்கள். அவர்களே தேடிவந்து வெல்ல முயல்பவர்கள் என்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்களை அவர்கள் வெல்லவே முடியாது. சொல்லப்போனால் எங்களிடமிருந்துதான் அவர்கள் பெண்ணின் நஞ்சு என்றால் என்ன என்று புரிந்துகொள்வார்கள்” என்றாள்.
“எப்படி?” என்றேன்.
“நாங்கள் அவர்களின் எல்லா தந்திரங்களையும் அறிந்திருப்போம். அதையெல்லாம் மேலும் அறியும்பொருட்டு அவர்களை அணுகவிடுவோம். சிக்கிவிடுவோம் என்னும் மாயையை உருவாக்கி அலையவிடுவோம். அவனை முழுக்கப் புரிந்துகொள்ளும் தோறும் விலக ஆரம்பிப்போம். அது அவனை மூர்க்கமாக ஆக்கும். ஒரு கட்டத்தில் அவன் அப்பட்டமாக நேரடியாக ஆட்கொள்ள முயல்வான். ஏனென்றால் அவர்களுக்கு எந்த நுட்பமும் தெரியாது” அவள் தொடர்ந்தாள்.
“கற்பனை கொண்ட ஆண் பெண்வேட்டையானாக இருக்க மாட்டான். ஒரு கணமும் காதலை உணராதவன் மட்டுமே பெண்ணை வெறும் காமக்கருவியாகப் பார்க்கமுடியும். எல்லா பெண்வேட்டையர்களும் உள்ளூர பெண்வெறுப்பாளர்களும் கூடத்தான். தங்கள் நண்பர்களுடன் பேசும்போது அவர்கள் எல்லா பெண்களையும் இழிவாகவே பேசுவார்கள். பெண்களிடம் பேசும்போது மற்ற பெண்களை இழிவாகப் பேசுவார்கள்.”
நான் ”ஆம்” என்றேன்.
“அவன் மீறும் அந்தக் கணத்தில் மிகப்பலவீனமாக இருப்பான். ஒருவன் எத்தனை பலசாலியாக இருந்தாலும் கட்டைவிரலை மட்டும் ஊன்றி நின்றான் என்றால் சுட்டுவிரலால் உந்தி வீழ்த்திவிடமுடியும். அது அவனுக்கு வெளியே சொல்லமுடியாத அடி. சாவுஅடி என்போமே அது. அவனால் மறக்கவே முடியாது. மீளவே முடியாது. சில பெண்வேட்டையர்கள் அப்படியே எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு குடிகாரர்களாக ஆவதுகூட உண்டு.”
நான் புத்தகத்தைப் பார்த்தபடி “நீ அப்படி எவரையாவது அடித்திருக்கிறாயா?” என்றாள்.
“நான்குபேரை… ஒருவன் பாட்னாவில் தெருக்களில் குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறான்.”
“உனக்கு அதில் மகிழ்ச்சியா?”
“ஆமாம், நான் புத்திசாலி. எனக்கான மகிழ்ச்சி அப்படித்தான் வரமுடியும்.”
“குரூர மகிழ்ச்சி” என்றேன்.
“ஆமாம், ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருட்டு நான் வாங்கும் பழி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.”
நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “ஸ்ரீகர் மிஸ்ரா எல்லை மீறினால்?” என்றேன்.
”மீற மாட்டார். ஏனென்றால் அவருக்கு பெண் ஒரு பொருட்டே அல்ல. அவருக்கு அவருள் இருக்கும் கவிதைகளை ஏற்றிப்பார்க்க பொருட்கள் தேவை. மலர்கள், மேகங்கள், நிலா, பெண்கள்” என்றாள்.
“நான்? நான் அத்துமீறினால்?”
”உன்னால் முடியாது” என்றாள்
“ஏன்?” என்றேன்.
“உன் சாதி” என்றாள்.
நான் சட்டென்று எழுந்துவிட்டேன். அவள் பதறி எழுந்து “ராம், நில். நான் சொல்வதைக் கேள்” என்று என் கையைப் பிடிக்கவந்தாள்.
நான் வேகமாக வெளியே சென்று கிட்டத்தட்ட ஓடி விலகிச் சென்றேன். வீட்டுக்குப் போகாமல் சாலைக்குச் சென்று ஒரு டாக்ஸியை வைத்துக்கொண்டு கங்கை கரைக்குச் சென்றேன். என் பின்னால் அவள் வந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றியது. என் உடல் பதறிக்கொண்டே இருந்தது.
கங்கைக் கரையில் அஸ்ஸி கட்டத்தில் இரவு நீண்டநேரம் அமர்ந்திருந்தேன். மெல்ல் மெல்ல என் உடல் அடங்கியது. மெல்லிய தூக்கம் வருவதுபோல்கூட இருந்தது. அப்படி என்ன சொல்லிவிட்டாள்? அவள் நேரடியாகப் பேசுபவள். எந்த் பாவனையும் இல்லாதவள். அப்படி அவள் சொல்லாவிட்டால்தான் அதிசயம். நான் என்ன எதிர்பார்த்தேன்? அவள் என் சாதியைப் பற்றி தெரியாமலேயே இருப்பாள் என்றா? அதைப்பற்றி பேசுவதை நாசூக்காகத் தவிர்ப்பாள் என்றா?
அவளிடம் எந்தப் பிழையும் இல்லை. திரும்ப வரும்போது நான் அதில் தெளிவாகவே இருந்தேன். ஆனாலும் என் உள்ளம் பொருமிக்கொண்டே இருந்தது. அவளுக்கும் எனக்கும் நடுவே சாதி என்பதே இல்லாமல் இருந்திருக்கலாம். அவளுக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம்.
வீட்டில் ஸ்ரீகர் மிஸ்ரா எனக்காகக் காத்திருந்தார். என்னைப் பார்த்ததும் “எங்கே போயிருந்தாய்? ராதிகா வந்தாள், உனக்காக இதுவரை காத்திருந்தாள்” என்றார். “அவள் இருப்பதைக் கண்டால் நீ திரும்பிப் போய்விடுவாய் என்று நினைத்துதான் அவள் கிளம்பிச் சென்றாள்.”
நான் ஒன்றும் சொல்லவில்லை. சமையற்காரன் அவருக்கான இரவுணவைச் சமைத்துக்கொண்டிருந்தான். களைப்புடன் நான் மூங்கில் நாற்காலியில் அமர்ந்தேன்.
“எங்கிருந்தாய்?”
“அஸ்ஸி கட்டத்தில்”
”நல்ல இடம்” என்றார். “நல்ல ஆள்கூட்டம் இருக்கும். தனித்திருக்க உகந்த இடம்.”
நான் பெருமூச்சுவிட்டேன்.
”அவள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். நீ ஒரு அசடு என்று எனக்குத் தெரியும். அது உறுதியானதில் மகிழ்ச்சி.”
நான் புன்னகைசெய்தேன்.
“அவள் உன்னை காதலிக்கிறாள் என்று உனக்கு தோன்றியிருக்கிறதா?”
அந்தச் சொற்றொடர் வெறும் சொற்களாகவே என் செவிகளை அடைந்தது. நான் விழித்துப் பார்த்தேன்.
“நீ அவளைக் காதலிக்கிறாயா என்று தெரிந்துகொள்ளத்தான் அவள் உன்னிடம் அதையெல்லாம் சொல்லியிருக்கிறாள். நீ அவள் கன்னிதானா என்று எண்ணினாய். அதை தெரிந்துகொள்ள விரும்பினாய்.”
“இல்லை” என்றபடி எழுந்துவிட்டேன்.
“ஆனால் உன் சந்தேகம் உன் காதலை அவளுக்கு உறுதிப்படுத்திவிட்டது. அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவள் உன்னை காதலிக்கிறாள். அதை என்னிடம் சொன்னாள். அந்த முட்டாளிடம் திட்டவட்டமாகச் சொல்லுங்கள், வேண்டுமென்றால் சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுளாக எழுதிக்கூட கையில் கொடுக்கலாம் என்றாள்.”
நான் மீண்டும் அமர்ந்தேன். என் தொடை மட்டும் துள்ளிக்கொண்டே இருந்தது. ஒரு சொல்கூட இல்லாமல் மனம் ஒழிந்துகிடந்தது.
“அவள் உன்னை திருமணம் செய்துகொள்ள, உன் குழந்தைகளுக்கு தாயாக ஆக விரும்புகிறாள்… போதுமா?” என்றார் ஸ்ரீகர்.
நான் சட்டென்று என் முகத்தை கைகளால் பொத்திக்கொண்டு குனிந்து அமர்ந்து விசும்பி அழத்தொடங்கினேன்.
(மேலும்)
ஏ.என். பெருமாள்
அ.நா. பெருமாள் தமிழகக் கல்வித்துறையின் முறைமைகளின்படி ஆய்வுநூல்களை எழுதினார். அவை சீராகத் தரவுகளை தொகுத்தளிப்பவை. தொடர் ஆய்வுகளுக்கு உதவுபவை. நாடகவியல், இசையியல், சிற்பவியல் ஆகியவற்றைச் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.
ஏ.என். பெருமாள்
ஏ.என். பெருமாள் – தமிழ் விக்கி
தானே செல்லும் வழி – பாபநாச கார்த்திக்
மேடையுரை பயிற்சி வகுப்பில் தங்கள் பொறுமைக்கும் அறிவின் கருணைக்கும் நன்றி. கிட்டத்தட்ட நூறு உரைகளை பொறுமையுடன் கேட்டீர்கள். உங்களிடம் மேற்கொண்டு இந்த விண்ணப்பத்தை வைப்பது அதீதம் தான்.
The talk on God and Nyaya Shastra is excellent. Today only a few can read the books like Nyaya Kusumancali. If someone like you gives us a concise version of it through a speech, we can at least understand the content of that great book.
God, Nyaya- A LetterApril 29, 2025
பெங்களூர், இன்னொரு வாழ்க்கைத்துளி
சென்ற ஏப்ரல் 17, 2025 அன்று லண்டன் செல்வதற்காக விசா நேர்முகத்தின் பொருட்டு நானும் அருண்மொழியும் சென்னை சென்றிருந்தோம். அங்கிருந்து கிளம்பி பெங்களூர் சென்றேன். அங்கே ஏப்ரல் 20 அன்று என் Of Men Women and Witches நூலின் விவாதக்கூட்டம் ஆட்டகலாட்டா அரங்கில் நடந்தது. இந்திரா நகரில் ஒரு விடுதியில் அறை போட்டிருந்தேன். அங்கே மூன்றுநாள் ஒரு துளிவாழ்க்கை.
காலையில் வழக்கம்போல ஐந்து மணிக்கு எழுந்து ஒரு நடை. இந்திரா நகரில் காலையில் ஏழுமணி வரை காபி, டீ கிடைக்கும் கடைகள் எவையும் கண்ணுக்குப் படவில்லை. ஆகவே இரண்டாம் நாள் முதல் அறையிலேயே ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு நடை கிளம்பினேன். கோடைகாலமானாலும் அதிகாலையில் பெங்களூர் குளிராகவே இருந்தது. சாலைகளின் நடுவே நின்றிருந்த மாபெரும் கொன்றைகள் இருபக்கமும் கிளைவிரித்து முழுச்சாலையிலும் கூரை அமைத்திருந்தன.
காலை எட்டு மணிக்குப்பின் பரபரப்பாகிவிடும் சாலையில் அதிகாலையில் செல்லும்போது அதுவும் ஆழ்ந்து உறங்குவதாகத் தோன்றுகிறது. அதை எழுப்பக்கூடாது என்று மிக மெல்ல, ஓசையில்லாமல் நடக்கத் தோன்றுகிறது. பெங்களூரின் மனநிலை குளிர்ப்பகுதிக்குரியது. முப்பதாண்டுகளுக்கு முன்புகூட அது ஒரு கோடைவாசஸ்தலமாக கருதப்பட்டது. “இந்த சம்மருக்கு எங்கே? ஊட்டி, கொடைக்கானல்? பெங்களுர்?” என்ற வசனம் சதிலீலாவதி படத்தில்கூட உண்டு.
எண்பதுகளில் நான் இங்கே சமேரபுராவில் வாழ்ந்த காலகட்டத்தில் பெங்களூர் குளிரானதாகவே இருந்தது. காக்கி நிறத்தில் கோட்டு போட்டுக்கொண்டு கடுக்கன் அணிந்த கிழவாடிகள் பலர் கண்ணுக்குப் படுவார்கள். இப்போது வாகனநெரிசல், மக்கள் நெரிசல், கட்டிட நெரிசல். பெங்களூரின் வெப்பநிலையும் கூடியிருக்கலாம்.
காலையில் திரும்பி வந்து கொஞ்சம் எழுதுவேன். அதன்பின் அருகே ஓர் உணவகத்தில் நின்றபடியே சிற்றுண்டி. ஆனால் உணவு சுவையானதுதான். சர்க்கரைப் பொங்கல் எல்லாம் இருந்தது. ஆனால் அறுபத்திமூன்றாண்டுகள் இனிப்புவெறியனாக இருந்த நான் முழுமையாகவே இப்போது இனிப்பை நிறுத்திவிட்டேன். ஆகவே தோசை, ரவா இட்லி… (பெங்களூரில் சிற்றுண்டி நன்றாகவே இருக்கும். ஆனால் எம்.டி.ஆர் சிற்றுண்டி என் நாக்குக்கு பிடிக்கவில்லை)
மதியம் வரை மீண்டும் எழுத்து. அதன்பின் கொன்றைமர நிழல் வழியாகவே நடந்து சென்று ஓர் ஓட்டலைக் கண்டடைந்து மதிய உணவு. ஓர் உணவகத்தில் உயிரைப்பணயம் வைத்து யோசித்து, குழம்பி, சொல்கோத்து கன்னடத்தில் ஓரிரு சொற்களும் கூட ஆங்கிலமும் கலந்து பேசி உணவை சாப்பிட்டு கைகழுவும்போது “எந்தூட்ரா இவனீக்களி களிக்ணு…” என்று அவர்கள் தனி மலபார் மலையாளம் பேசுவதைக் கேட்டேன்.
பத்தொன்பதாம் தேதி மாலையில் ராஜேஷ், சதீஷ்குமார் வந்தனர். அவர்களுடன் மெட்ரோவழியாக பிரிகேட் ரோடு சென்றோம். அங்கே சர்ச் சாலையில் புக்வார்ம் கடையில் என் நூல்களில் கையெழுத்து போட்டேன். முன்னரே சென்றுவிட்டோம். பிரிகேட் ரோடு வழியாகச் சும்மா சுற்றிவந்தோம்.
பிரிகேட் ரோடு பெங்களூர் தயாரித்து வைத்திருக்கும் சிவப்புப் பௌடர் போட்ட முகம். ஓர் ஐரோப்பிய நகரின் பாவனைகள். குட்டை ஆடை அணிந்த வெண்ணிறப் பெண்கள். தளுக்கு ஆங்கிலங்கள். பக்கவாட்டில் காபி ஷாப்கள், பப்கள், மால்கள். அதை நம்பித்தான் ‘பெங்களூர் டேய்ஸ்’ போன்ற சினிமாக்களை எல்லாம் மல்லுக்கள் எடுக்கிறார்கள்.
புக்வார்ம் புத்தகக்கடைக்கு ஐந்து மணிக்கே சென்றுவிட்டேன். நிகழ்வு ஆறுமணிக்கு. நான் வந்த தகவலை அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு என்னை தெரியாது. புத்தகங்களை பார்த்துக்கொண்டு சுற்றிவந்தேன். பெங்களூரின் நகர்மையத்தில் இப்படி ஒரு பெரிய புத்தகநிலையம் என்பது சிறப்புதான். இன்னும் இதைப்போல நான்கு ஆங்கிலப் புத்தக மையங்கள் உள்ளன. (சென்னையில் ஒன்றுகூட இல்லை).
புத்தகங்களை இணையத்திலும் வாங்கலாம் என்பவர்கள் பெரும்பாலும் புத்தகங்கள் படிக்காதவர்கள். புத்தக்கடை பித்து, புத்தகக் கண்காட்சிப் போதை இல்லாத வாசகர்கள் இருக்கமுடியாது. எவருக்கும் புரியும் விஷயம்தான். எல்லாவற்றையுமே இணையம் வழியாக வாங்கலாம், ஆனால் ‘ஷாப்பிங்’ அனுபவம் கடைகளுக்குச் சென்றால்தான். அங்கே நாம் காண்பது பொருட்களின் ஓர் உலகத்தை. பொருட்கள் பற்றிய அறிதல் உருவாகிறது. தொட்டும் பார்த்தும் நாம் பொருட்களை துளித்துளியாக அனுபவித்துக்கொண்டே செல்கிறோம் என்பதே ஷாப்பிங் என்பதை ஓர் அனுபவமாக ஆக்குகிறது.
புத்தகங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் அனுபவம் அறிவியக்கம் பற்றிய ஓர் அறிதல்தான். என்னென்ன நூல்கள் வருகின்றன, எவை புகழ்பெற்றிருக்கின்றன, இன்னும் வாசிக்கப்படும் பழையநூல்கள் என்னென்ன என ஒரு புத்தக்கடை அளிக்கும் சித்திரம் நுணுக்கமான ஒன்று.
புக்வார்ம் புத்தக்கடையில் ஒரே சமயம் பல சிறு அறைகளில் பல வாசகர்ச்சந்திப்பு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுக்கு அங்கே இலவச இடம் அளிக்கிறார்கள். ஒவ்வொன்றாக வெளியே நின்று பார்த்துக்கொண்டு நகர்ந்தேன்.
புக் கிளப் என்னும் இத்தகைய தொடர்சந்திப்புகள் வாசிப்பையும் சிந்தனையையும் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொள்ள மிக அவசியமானவை. உலகமெங்கும் நிகழ்பவை. கோவை விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலக மாடியிலும் சொல்முகம் கூட்டம் நிகழ்கிறது. புதுச்சேரி, சேலம், ஈரோடு, சென்னை, காரைக்குடி என பல ஊர்களில் நம் நண்பர்கள் தொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட சந்திப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்றன. பெங்களூரில் ஆட்டக்கலாட்டாவில் பெங்களூர் நண்பர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கிறார்கள். சென்னையில் மானசா பதிப்பகம் அலுவலகம் அடையாறில் அமையவிருக்கிறது, அங்கே ஆங்கில நூல்களுக்கான ஒரு புக் கிளப் சந்திப்பை மாதந்தோறும் நடத்த சைதன்யா திட்டமிட்டிருக்கிறாள்.
ஆனால் மிகக்குறைவாகவே தமிழ் வாசகர்களுக்கு இந்தச் சந்திப்புகளின் தேவை புரிகிறது. இயல்பான சோம்பல், உலகியல் விஷயங்களுக்கு அளிக்கும் முதன்மை ஈடுபாடு ஆகியவற்றால் கணிசமானவர்கள் இவற்றுக்கு வருவதில்லை. நம் குடும்பங்களும் இவற்றுக்கு எதிரானவை. ஆகவே இவற்றில் கலந்துகொள்வதே ஒரு போராட்டம்தான்.
ஏன் இவை தேவை? இலக்கியம், கலை ஆகியவற்றிலான ஈடுபாடு என்பது இயல்பாக நீடிக்கக்கூடியது அல்ல. ஏனென்றால் அவற்றில் கட்டாயம் என ஏதுமில்லை. அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்கு தொடர் முயற்சி தேவை. அதற்கு புத்தகச் சந்திப்புகள் அளவுக்கு உதவியானவை வேறில்லை.
ஆட்டக்கலாட்டா விவாதம்ஆறுமணிக்கு சதீஷ் சபரிகே வந்தார். கையெழுத்திட அமர்ந்தேன். நான் எண்ணியதைவிடவும் நல்ல கூட்டம். கடையினர் கணக்கிட்டதை விடவும் புத்தகங்கள் விற்பனையாயின. இறுதியில் கடையில் இருந்த என்னுடைய எல்லா நூல்களும் விற்றுப்போய் சிலருக்குக் கொடுக்க முடியாமலும் ஆகியது. என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள்.
மறுநாள் மதியம் ஒரு மணிக்கு இந்திராநகர் அருகிலுள்ள ஒரு பூங்காவில் நண்பர்களைச் சந்தித்தேன். நண்பர்கள் அடங்கிய வாட்ஸப் குழுவில் அறிவித்திருந்தோம். தேவதேவன் வந்திருந்தார். இலக்கியம், தத்துவம், வேடிக்கை என பொதுவான ஓர் உரையாடல். அதன்பின் அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு ஆட்டகலாட்டாவுக்குச் சென்றேன்.
ஆட்டகலாட்டா அரங்கு சிறியது. நாங்கள் எதிர்பார்த்திருந்தது ஐம்பதுபேர். அரங்கு நிறைந்து பாதிப்பேர் சூழ்ந்து நிற்குமளவுக்கு நண்பர்கள் வந்திருந்தனர். பாவண்ணன் அரங்குக்கு வந்திருந்தார். சதீஷ் நூலை முந்தைய நாள்தான் வாங்கிக்கொண்டு சென்றார். முழுக்க வாசித்துவிட்டு வந்து நுணுக்கமான கேள்விகள் வழியாக அரங்கை அவரே நடத்தினார். மிகச்சிறந்த உரையாடல். அங்கும் நூல்களில் கையெழுத்திட்டேன். நூல்கள் அனைத்துமே விற்று முடிந்தன.
Of Men Women and Witches உண்மையில் ஒரு மணிநேரத்தில் விரைந்து வாசிக்கத்தக்க ஒரு சிறு நூல். என் நூல்களை வாசிப்பவர்களுக்கு தொடக்கநூலாக அளிக்கத்தக்கது என்று சதீஷ் பேசும்போது சொன்னார். வந்திருந்த பலர் ஏற்கனவே வாசித்துவிட்டு வந்து மீண்டும் பிறருக்காக வாங்கினர்.
18 அன்று பெங்களூரின் விடுதியில் தனித்திருக்கையில் நீண்டநாட்களாக என்னுள் அலைபாய்ந்து கொண்டிருந்த ஒரு நாவலுக்கான தொடக்கவரி அமைந்தது. ”கதைகளைச் சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மாதான் என்னிடம் சொன்னாள்.” காவியம் என்னும் தலைப்புடன் இந்நாவலை நான் முதலில் எழுதத் தொடங்கியது விஷ்ணுபுரம் எழுதி முடித்ததும் 1999ல். அன்றுமுதல் பத்துமுறைக்குமேல் தொடங்கி கைவிட்ட நாவல்.
நான்கு அத்தியாயங்கள் எழுதியதும் கதைக்களமான பைத்தான் என்னும் பிரதிஷ்டானபுரிக்கே சென்றாலென்ன என்று தோன்றியது. ஈரோடு கிருஷ்ணனிடம் நான் பைதானுக்கு கிளம்புகிறேன், வருகிறீர்களா என்று கேட்டேன். கிளம்புவோம் என்றார். பத்தொன்பதாம்தேதி ஔரங்காபாதுக்கு விமானச்சீட்டு பதிவு செய்தோம். ஆட்டகலாட்டா நிகழ்வு முடித்து எட்டரை மணிக்கு நண்பர் புவனேஸ்வரியின் காரில் ஏறி நேராக விமானநிலையம்.
இரவெல்லாம் பயணம். நடுவே மும்பையில் நான்குமணிநேரம் காத்திருப்பு. ஆறரை மணிக்கு ஔரங்காபாத், அங்கிருந்து காரில் ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து எட்டரை மணிக்கு பைத்தான். அங்கே நான்கு நாட்கள். முற்றிலும் அயல்நகர் ஒன்றில், கோதாவரியின் கரையிலமைந்த இந்தியாவின் தொன்மையான நகர் ஒன்றில். புதைந்த கனவுக்குமேல் இன்னொரு துளிவாழ்க்கை.
அங்கே சென்றபின் இன்னொன்று நிகழ்ந்தது. எழுதிய நான்கு அத்தியாயங்களையும் நிராகரித்து அங்கு அமர்ந்து ஏழு அத்தியாயங்கள் புதியதாக எழுதினேன். முற்றிலும் புதியதாக நாவல் எழுந்து திரண்டு உருவாகி விசைகொண்டு என்னை எடுத்துக்கொண்டு முன்செல்லத் தொடங்கியது. அந்த பழைய நான்கு அத்தியாயங்களை யாராவது நல்லவிலைக்கு கேட்டால் விற்றுவிடலாம் என்று கிருஷ்ணன் சொன்னார்.
காவியம் – 9
யட்சன், சாதவாகனர் காலம், பொயு1. மாக்கல்செதுக்கு. பைதான் அருங்காட்சியகம்அவள் பெயர் ராதிகா, ராதிகா தேஷ்பாண்டே. இந்தி இலக்கியத்தில் நவீன காவியங்களைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை செய்துகொண்டிருந்தாள். பாட்னாவில் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியின் மகள். அவளுடைய அண்ணன் காவல்துறையில் உயரதிகாரி. ராதிகா என்னைவிட ஒரு வயது குறைவானவள், ஆனால் என்னைவிட ஓராண்டு முன்னதாகவே முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கிவிட்டிருந்தாள். எங்கள் ஊர் வழக்கப்படி நான் ஏழுவயதில்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். பாட்னாவில் அவள் பயின்ற ஊரில் நான்கு வயதிலேயே பள்ளிக்கல்வி தொடங்கிவிடும். உண்மையில் அவள் இரண்டு வயதிலேயே பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து மூன்று வயதில் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தவள். பாட்னாவின் மிக உயர்ந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலுமாக படிப்பை முடித்தவள். இலக்கியம் மீதான ஆர்வத்தால் முனைவர் பட்ட ஆய்வுக்கு வந்த அரிதான சிலரில் ஒருத்தி.
அவளுக்கு உண்மையாகவே இந்தி இலக்கிய மேதைகள் பற்றியும் வங்க இலக்கிய மேதைகள் பற்றியும் மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தாள். வங்காளத்தின் நவீன அறிவியக்கத்தின் ஒரு பகுதியாகவே அவள் உருவாகி வந்திருந்தாள். அவளுடைய பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வங்காளிகள். வங்காளத்தின் வரலாற்றையும், அங்குள்ள கலாச்சார இயக்கங்களையும் நன்கறிந்திருந்தாள். வங்க இலக்கியம் வழியாக அவளுக்கு வங்காளத்தில் உருவான நக்ஸலைட் இயக்கம் மேல் ஒரு வகையான கற்பனாவாதக் கவர்ச்சி இருந்தது. தாகூரின் விஸ்வபாரதியில் சேரவேண்டும் என எண்ணியிருந்தாள். ஆனால் அவளுக்கு கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் இல்லை. எப்போதுமே அவளுக்கு தேர்வுகள் ஒத்துவரவில்லை. ஆகவேதான் பனாரஸுக்கு வந்தாள்.
ராதிகா நவீன இலக்கியம் பற்றி முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சேர்ந்த பிறகு ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப பிரேம் சந்த், கிஷன் சந்தர் என்று எளிய தலைப்புகளையே எடுக்கக் கண்டபோது ஏற்பட்ட ஆணவச் சீண்டலினால் இந்தி காவியங்களைப் பற்றி ஆய்வு செய்வதாக முடிவுசெய்தாள். அத்துடன் ஹிந்தியின் ரீதிகாலம் எனப்படும் கற்பனாவாதக் காலத்துக் கவிதைகள் மேல் ஒரு தனிப்பட்ட ஈடுபாடும் அவளுக்கு இருந்தது. மகன்லால் சதுர்வேதியா, பாரதேந்து போன்றவர்களின் கவிதைகளை மனப்பாடம் செய்திருந்தாள். ஆதுனிக கால கவிஞர்களில் மகாதேவி வர்மா, நிரலா என அவளுக்கான கவிஞர்கள் இருந்தனர்.
அவள் பாட்னாவில் வாழ்ந்த காலம் வரைக்கும் இந்திக் கவிதைகளை முஷைராக்களில் கேட்டதில்லை. ஆகவே அவை அவளுக்கு சீரான சொற்பகுப்பு கொண்ட வரிகளாகவே அவளுக்குள் இருந்தன. அவளுடைய சூழலில் ஆங்கிலக் கவிதைகளை வசனமாக வாசித்துக் கேட்கும் வழக்கம் இருந்தது. இந்திக் கவிதைகளையுமே அப்படித்தான் அவள் வாசித்திருந்தாள். முனைவர் பட்ட ஆய்வுக்காக பனாரஸ் வந்து அங்கு தற்செயலாகச் செல்ல நேர்ந்த சில முஷைராக்களில் இந்தி, உருதுக்கவிதைகள் ஒலியிசைவுடனும் தாளக்கட்டுடனும் இசைப்பாடலுக்கு நிகராக முன்வைக்கப்படுவதைக் கண்டு அவை முற்றிலும் வேறு வகையானவை என்பதைப் புரிந்துகொண்டாள். அவற்றின் ஒலி என்பது இசையே என்று அறிந்தாள். இந்தியக் கவிதைகளை இசையிலிருந்து பிரிக்க முடியாது பிரிக்கக் கூடாது என்று பின்பொருமுறை பேசும்போது என்னிடம் சொன்னாள்.
”அடிப்படையில் ஆங்கிலம் உரைநடை சார்ந்தது. அதன் சொற்களும் சொல்லிணைவுகளும் எல்லாமே ஒரு மின்பொறியின் உறுப்புகள் போல கச்சிதமானவை, ஆகவே கூரிய உரைநடையை அதில் உருவாக்கமுடியும். அதன் செய்யுள்வடிவங்களில் ரைம் தவிர அனைத்துமே நெறிப்படுத்தப்பட்ட உரைநடைதான். அதிலுள்ள பாடல்களில் கூட ஒரு உரைநடைத்தன்மையே உள்ளது. அதன் மாபெரும் கவிஞர்களான ஷேக்ஸ்பியரும் மில்டனும்கூட ஒருவகையான உரைநடையையே கவிதைகளாக எழுதினர். ஆகவே ஆங்கிலக்கவிதை மிக எளிதாக உரைநடை நோக்கி வர முடிந்தது. ஆங்கிலச் செய்யுளில் ரைம் வடிவில் உள்ள இறுதிச்சொல் ஒற்றுமை தவிர இசையொழுங்கு என்பதே இல்லை. ஆனால் இந்தியின் மிகச்சிறந்த கவிதைகளை எல்லா வார்த்தைகளிலும் இசையொழுங்கு இருக்கும்படி அமைக்க முடியும். அப்படி ஒரு வாய்ப்பிருக்கும்போது அதைத் தவிர்த்துவிட்டு வசனகவிதைக்குச் செல்வதென்பது ஒற்றைக்காலனுடன் போட்டி போடுவதற்காக நாமும் ஒற்றைக்காலில் ஓடுவது போன்றது” என்று அவள் சொன்னாள்.
அவளுடைய இசைக்கவிதைகளுக்கான ஆர்வம் தான் முனைவர் பட்ட ஆய்வை காவியங்களை நோக்கி கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் இந்தி மரபுக்காவியங்களைப் புரிந்துகொள்வதற்கு இந்தியின் வேராக அமைந்த சமஸ்கிருத காவியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்திக்கவிதைகள் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சம்ஸ்கிருத கற்பனாவாதக் கவிதைகளின் தொடர்ச்சியாகத்தான் அமைந்திருந்தன. ‘சம்ஸ்கிருதத்தை அறியாமல் இந்தியை அறிய முடியாது, ஒரு கனியை அந்த மரத்தை தவிர்த்து அறியமுடியாது என்பதுபோல” அவள் என்னிடம் சொன்னாள்.
அதை அவள் தொடங்கியபோது அவளுடைய வழிகாட்டி அது அவளை மிகப்பெரிய சுற்றலில் கொண்டு விட்டுவிடும் என்று எச்சரித்தார். சமஸ்கிருதத்தைத் தொட்டவர்கள் அதில் பொருட்படுத்தும்படியாக எதையாவது எழுதுவதற்கு குறைந்தது ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிடும். அதன்பிறகு அவர்கள் திரும்பவும் முடியாது. சம்ஸ்கிருதம் ஒருவரின் மனநிலையை மாற்றியமைத்துவிடுவது. ஏனென்றால் அது பேச்சுமொழி அல்ல. ஆகவே அதில் மாற்றமே இல்லை. மாறாத ஒன்று தனக்கேற்ப அனைத்தையும் மாற்றிவிடுவது. ஆகவே அதைத் தவிர்ப்பது தான் நல்லது என்று சொன்னார்.
”சம்ஸ்கிருத காவியங்களை மேற்கோள் காட்டினாலே உன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேடு ஏதேனும் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பார்வைக்கு சென்றுவிடும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கணப்பித்து பிடித்த அரை மனநோயாளிகள். சொல் சொல்லாகப் பிரித்து ஆராய்ந்து தங்களிடம் வரும் பெரும்பாலான முனைவர் பட்ட ஆய்வேடுகளை திருப்பி அனுப்பிவிடுவார்கள். அந்த மனநோயாளிகளைப் பயந்தே சம்ஸ்கிருதத்தில் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்பவர்கள் மிகக்குறைவு. அவர்களைச் சொல்லி குற்றமில்லை இலக்கணவாதிகள் என்ற வேட்டை நாய்கள் சம்ஸ்கிருதத்தில் உருவானது பதிமூன்றாம் நூற்றாண்டில். அவர்களுக்கு எழுநூறு எண்ணூறு ஆண்டுகாலம் நீண்ட வரலாறு இருக்கிறது” என்று அவளுடைய வழிகாட்டி சொன்னார்.
ஆனால் ராதிகாவின் இயல்புக்கு எச்சரிக்கைகள் எல்லாமே அவளை மேலும் தூண்டவே செய்யும். அவள் இன்னும் உறுதி கொண்டவள் ஆனாள். உன்னால் முடியாது என்று அவளை நோக்கிச் சொல்வது போல அது. அவள் வளர்ந்த விதம் காரணமாக பெண் என்று அவளை நோக்கி ஒருவர் சொல்வதே இழிவுபடுத்துவதாக நினைப்பாள். ஐந்து வயதிலேயே பாட்னாவின் தெருக்களில் சைக்கிள் ஓட்டத்தொடங்கியவள் அவள். பதினெட்டு வயதிலேயே அனுமதி இல்லாமலே கார் ஓட்டத்தொடங்கியவள். விமானம் ஓட்டும் கனவு கூட அவளுக்கு இருந்தது. பாரச்சூட்டில் இருந்து குதித்திருக்கிறாள். கங்கையில் ஹயாக்கிங் செய்திருக்கிறாள். இமையமலையின் நான்கு சிகரங்களில் ஏறியிருக்கிறாள். அவள் மேலும் தீவிரமாக சம்ஸ்கிருதத்திற்குள் நுழையவே பேராசிரியரின் அறிவுரை வழி வகுத்தது.
அப்படித்தான் அவள் என் அருகே வந்து அமர்ந்தாள். அங்கு வருவதற்கு முன்பு ஸ்ரீகர் மிஸ்ராவைப் பற்றி நூலகங்கள் வழியாகக் கேள்விப்பட்டிருந்தாள். அவருடைய நூல்களின் தொகுப்பு சம்ஸ்கிருதப் பிரிவில் வரிசையாக அமைந்திருக்கும். அவற்றில் ஒன்றிரண்டை எடுத்துப் புரட்டிப்பார்த்திருந்தாள். அவை அவளுக்கு முற்றிலும் புரியாதவையாக இருந்தன. அதுவே அவளை அவரை நோக்கிக் கொண்டுவந்தது. அவருடைய வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் அவர் சொல்லும் நூல்களையும் மேற்கோள்களையும் மட்டும் குறிப்பு எடுத்துவிட்டுச் செல்வார்கள், அவர் பேசும் பிற விஷயங்கள் அவர்களுக்குப் புரியாது, பொருட்படுத்தவும் மாட்டார்கள். அவள் அவரை முழுக்கவனத்துடன் கூர்ந்து செவிகொண்டாள்
ஸ்ரீகர் மிஸ்ராவை நேரில் பார்த்தபோது முதலில் அவளுக்குச் சற்று ஏமாற்றம் தான். சம்ஸ்கிருதம் என்ற சொல்லுடன் இணைந்திருக்கும் கம்பீரமோ ஆசாரமோ பழமையோ அவரிடம் இருக்கவில்லை. அவள் பின்னால் ஒருமுறை என்னிடம் சொன்னது போல ஒரு ஜமீந்தார் வீட்டில் கணக்கெழுதும் குமாஸ்தா போலிருந்தார். அவர் குரல்கூட மிக மெல்லியது. சம்ஸ்கிருதச் சொற்களில் பெரும்பாலானவை அடிவயிற்றின் முழக்கத்துடன் சொல்லப்படவேண்டியவை, அவர் பேசியது வேறொரு மொழி போலிருந்தது. வகுப்பிலும் அவள் அவநம்பிக்கையுடன் தான் அமர்ந்திருந்தாள். வகுப்பு தொடங்கியபோது மெல்லிய ஆர்வம் வந்தது. அதன்பிறகு மிகப்பெரிய குழப்பமும் எரிச்சலும். வகுக்கு நிகழும்நேரம் முழுக்க கையில் ஒரு பென்சிலை வைத்துச் சுழற்றிக்கொண்டே இருந்தாள்.
நாங்கள் வெளியே வந்தபோது அவள் என்னுடன் நடந்தபடி ”Lets have a coffee” என்றாள்.
“Sure” என்று நான் சொன்னேன். நாங்கள் இருவரும் கல்லூரியின் உணவகத்திற்கு சென்றோம்.
எங்கள் கல்லூரி உணவகம் நெரிசலானது மாணவர்கள் பாதிப்பேர் அங்குதான் இருப்பார்கள் என்று தோன்றும். கூச்சலிட்டுக்கொண்டும், சிரித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், கைகளைத் தட்டிக்கொண்டும், தாங்கள் இளமையாக இருப்பது ஓர் அரிய விஷயமென்று திடீரென்று தாங்களே உணர்ந்தவர்கள் போலிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்னும் கதாபாத்திரத்தை நடிக்கிறார்கள் என்று தோன்றும். அந்தக் கதாபாத்திரம் இந்தித் திரைப்படங்களால் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதோ இவன் அனில் கபூர், அவன் ஜாக்கி ஷெரோப். இன்னொருவன் கோவிந்தா, அப்பால் ஒருவன் மிதுன் சக்கரவர்த்தி… ஏதேனும் ஒரு நடிப்பை அளிக்காமல் தன்னியல்பாக அங்கு இருந்தவர்கள் ஒரு சிலரே. அவர்கள் எந்த வகையிலும் வெளிப்படவில்லை. அவர்கள் இருப்பதே தெரியவில்லை. மாணவர்களாக இருக்கையில் வெளிப்பாடென்பதே போலிசெய்வதும் நடிப்பதும்தான். தன்னியல்பாக வெளிப்படுவதற்கான அகம் எதுவும் அவர்களிடம் இல்லை. படிப்போ அறிவோ தன்னடையாளமோ.
நான் எண்ணிக்கொண்டிருப்பதையே அவள் சொன்னாள் ”சலிப்பூட்டுவது இவர்களுடைய இந்த நடிப்புதான்.”
நான் ”அவர்கள் இங்கே வெளிப்பட வேண்டுமென்றால் நடிக்க வேண்டும்” என்றேன்.
அவள் என்னைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்து ”உண்மைதான்” என்று சொல்லி ”இங்கே நடிக்காமல் இயல்பாக இருப்பவர்களை நாம் கவனிப்பதே இல்லை” என்றாள்.
நாங்கள் ஒரு சிறு மேஜையில் அமர்ந்தோம் காபிக்கு அவளே உத்தரவிட்டாள். சாய்ந்துகொண்டு ”அவருக்கு என்ன?” என்று என்னிடம் கேட்டாள்.
அவள் சொல்வதை நான் புரிந்துகொண்டேன்.
”அவர் அப்படித்தான்.” என்றேன். “அவர் ஒரு மேதை…மேதைகள் அப்படித்தான்”
அவரைப்பற்றி என்னுடைய எண்ணங்களை அவளிடம் சொல்லி அவளை வியக்க வைக்கலாம் என்று எனக்குத் தோன்றினாலும் அவளைப்போன்ற ஒருவர் மிக எளிதாக நான் வேறொருவகை நடிப்பில் இருக்கிறேன் என்று மதிப்பிட்டு விட வாய்ப்பிருந்தது. அவளை கவர எவ்வகையிலும் முயலக்கூடாது என எண்ணிக்கொண்டேன்.
”எனக்கும் தோன்றியது… அவர் பாவனை ஏதும் செய்யவில்லை. ஆனால் சொற்களில் தொலைந்து போகிறார்” என்றாள்.
நான் மிகக்கவனமாக சொல்லெடுத்து, குறைவான உணர்ச்சியும் தளர்வான தர்க்கமும் தெரியும்படியாக பேசினேன். ”எல்லா அறிஞர்களுக்கும் இப்படி ஒரு பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கான ஒரு வட்டம். சிலர் மிகையுணர்ச்சி நோக்கி செல்கிறார்கள். சிலர் இது போல தர்க்கம் அற்ற ஒரு நிலையை அடைந்து தன்னோட்டமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள்”
ஆனால் அந்த வரியே அவளுக்கு மிகப்பிடித்திருந்தது இருகைகளையும் மேஜை மேல் ஊன்றி என்னை நோக்கி சற்றே முன்னகர்ந்து “ஆம் நான் இப்படி யோசித்ததே இல்லை. அவர்களுக்கு அப்படி ஒரு சிறு தனி இடம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்தப்பாடங்களிலுள்ள தர்க்கங்கள் அவர்களை எந்திரங்களாக்கிவிடும்” என்று சொன்னாள்.
அவள் முன்நகர்ந்தபோது அவள் குர்தாவின் மேல் விளிம்பு வழியாக பளிச்சிடும் வெண்ணிறம் கொண்ட மார்புகளின் தொடக்கப்பிளவு தெரிவதை ஒருகணம் பார்த்துவிட்டு நான் என் விழிகளை பின்னெடுத்துக்கொண்டேன்.
”அவர் சொன்னதில் உருப்படியாக ஏதாவது உள்ளதா?” என்று அவள் என்னிடம் கேட்டாள்.
நான் புன்னகைத்து ”அது தொடர்ச்சியாக அவரை பின்னால் சென்று அவர் அதுவரைக்கும் ஒட்டுமொத்தமாக சொன்ன அனைத்தையுமே புரிந்துகொண்டு அந்த இடைவெளிகளை தானாக நிரப்பிக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் பொருள்படும். மற்றபடி தனிக்கருத்தாக அவற்றை எடுத்துக்கொள்ள முடியாது. முனைவர் பட்ட ஆய்வுக்கு எந்த வகையிலும் அவை உதவியாக இருக்காது. முனைவர் பட்டமென்பது இதுவரைக்குமான ஆராய்ச்சிகளை எந்த அளவுக்கு மாணவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பயிற்சியாகத்தான் இங்கே உள்ளது. ஆகவே இதுவரைக்குமான சிந்தனைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட முறைப்படி தொகுத்துக் கொடுத்தால் அதைத்தான் விரும்புகிறார்கள். புதிய சிந்தனை முனைவர் பட்ட ஆய்வில் இருக்கக்கூடாது என்று என்னுடைய ஆசிரியர்கள் எல்லாருமே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள்” என்றேன்.
அவளுடைய கண்கள் மாறுபடுவதைக் கண்டேன். எதையும் பெண்ணுக்கான சவாலாக எடுத்துக்கொள்ளும் அவளுடைய குணத்தின் முதல் வெளிப்பாட்டை அப்போது தான் கண்டேன். புன்னகைத்தபடி அது ”ஆண் பெண் எல்லாருக்கும் தான்” என்றேன்.
“ஏன் கூடாது? ஏன் புதிய சிந்தனையை முன்வைக்கக்கூடாது?” என்றாள். ஆனால் அப்போதுகூட முகம் சீற்றத்தைக் காட்டியது.
“புதிய சிந்தனையை முன்வைக்கலாம். ஆனால் நம்முடைய ஆய்வேட்டை மதிப்பிடப்போகிறவர் நாம் யாரென்றே தெரியாத ஒருவர். பலசமயம் முற்றிலும் வேறொரு அறிவுத்தளத்தை சேர்ந்தவர். அவருக்கும் புரியும்படியும் அவர் நிறைவுறும்படியும் ஓர் ஆய்வை எழுதுவதென்பது அத்தனை எளிய விஷயம் அல்ல. அப்படி நாம் எழுதினாலும் கூட அவர்கள் அதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையே மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பவர்கள். அந்தத் தெரிந்த தளத்தில் ஓர் அரைக்காலடி முன்னால் வைப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். இது அப்படி அல்ல, இது முற்றிலும் புதிய ஒன்று. அவர்களை குழப்பிவிடும்… சிலசமயம் சீற்றமும் கொள்ளவைக்கும்.”
“இவர் சொன்னதா, இதுவா புதுக்கருத்து?”
“ஆம்” என்றேன்
”கிறுக்குத்தனம்” என்று அவள் உதட்டைச் சுழித்தாள்.
”கிறுக்குத்தனம் என்பது நாம் தர்க்கபூர்வமானது என்று நம்பும் ஒரு வட்டத்திலிருந்து ஓர் அடியாவது வெளியே எடுத்து வைப்பது. ஒரு சிறு கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் கொஞ்சம் கூட எனக்கு ஆர்வத்தை ஊட்டுவது இல்லை” என்றேன்.
அவள் புன்னகையுடன் ”அப்படியென்றால் என்னிடம் ஆர்வம் இருக்கிறதா இல்லையா?” என்றாள்.
”சற்று முன் ஆய்வேட்டை வழக்கமாகத்தான் செய்யவேண்டும் என்று சொன்னபோது உன் கண்ணில் ஒரு சீற்றம் வந்து போய்விட்டது. அது உன்னுடைய கிறுக்குத்தனம் தான். அதுதான் உன்னை சுவாரசியமானவளாக ஆக்குகிறது” என்றேன்.
அவள் சிரித்து ”அந்தப்பாராட்டு எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள்.
”மனிதர்கள் சில சமயம் ரேசர் பிளேடு போல இருக்கிறார்கள், மிகக்கூர்மையாக. கூர்மைதான் அதனுடைய அழகு. ஒரு பொருள் எந்த அளவுக்கு கூர்மையானதோ அந்த அளவுக்கு அழகானது. அந்தக் கூர்மையான பகுதிதான் அதில் அழகானதாகவும் ஒளி கொண்டதாகவும் இருக்கிறது. ஒரு மனிதனின் கிறுக்குத்தனம் தான் அவனுடைய கூர்மை. ஒரு மனிதனின் கிறுக்குத்தனம் தான் அந்தச் சமூகத்தின் கூர்மை” என்று நான் சொன்னேன்.
அக்கணத்தில் ஒன்று புரிந்தது. அவளை நான் வென்றுவிட்டேன். ஒரு பெண்ணிடம் அவளுக்கு மிகப்பிடித்தமான ஒரு பாராட்டை சொல்வதென்பது சாதாரணமானதல்ல. ராதிகாவிடம் அவள் அழகையோ அல்லது பழக்கவழக்கங்களையோ புகழ்ந்து எவராவது பேசியிருந்தால் அதை அவள் அவமதிப்பாகவே எடுத்துக்கொள்வாள். நான் அப்போது பேசியது புகழ்ச்சிதான், ஆனால் அவள் எதிர்பார்த்திருந்த புகழ்ச்சி. பழைய சம்ஸ்கிருத காவியங்களில் ஒரு பெண் தன் மனதுக்குள் நினைத்திருக்கும் ஒரு பாடலை பாடும் கதாநாயகனை விரும்பி மணப்பதுண்டு. அவள் கனவில் கண்ட ஒரு பொருளை சொல்லிவிடுபவனை காதலனாக ஏற்றுக்கொள்வதுண்டு. அது ஓர் உருவகம். உண்மையில் எல்லாக் காதல்களும் அப்படித்தான்.
”அவர் சொன்னதற்கு ஏதேனும் பொருளிருந்தால் எனக்குப் புரியும்படி சொல்ல முடியுமா?” என்று அவள் கேட்டாள். அந்த தணிவு ஒருவேளை அவள் தன் வாழ்வில் ஓர் ஆணுக்கு அளித்த முதல் பரிசாக இருக்கலாம்.
நான் ”இங்கு சம்ஸ்கிருத காவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, பல காலகட்டங்களாக, பலவகை அழகியலுடன் கொத்துக் கொத்தாகக் குவிந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மகா காவியப்பிரஸ்தானம் என்ற இயக்கமே தொடங்கி மிகப்பெரிய அளவில் முன் சென்றிருக்கிறது. இத்தனை காவியங்கள் செறிந்து குவிந்து கிடக்கும் ஒரு மொழியில் இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு சரடு இருக்க முடியுமா? ஒரு காட்டில் பல்லாயிரம் மலர்கள் இருக்கின்றன, செடிகள் இருக்கின்றன, வேர்கள் கவ்வியிருக்கின்றன என்றால் அனைத்துக்கும் பொதுவாக இருப்பது எது? அந்த மண்ணில் இருக்கக்கூடிய உப்பு. எல்லா செடிகளின் ரசத்திலும் அது இருக்கும். அதைப்போன்ற ஒன்று சம்ஸ்கிருதம் என்ற மொழியில் இருக்க முடியுமா?”
அவள் கண்கள் கவனம்கொள்வதைக் கண்டேன். கூரிய பெண் ஒருத்தி கவனிக்கிறாள் என்றதும் சொற்கள் பெருகாத ஆண் யார்?
”அது ஒரு புதிய கேள்வி அல்ல. அப்படி ஒரு கதை உண்டு. சம்ஸ்கிருதம் என்பது விண்ணில் கைலாயத்தில் சிவன் அவையில் அமர்ந்திருந்த ஒரு யக்ஷன். அங்கே நூறு கோடி யக்ஷர்கள் ஒவ்வொரு நாளும் சிவனை மகிழ்விக்கும்பொருட்டு இசையையும் கவிதையையும் முழக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இசை கடல். கவிதை அதன்மேல் வீசும் காற்று. அந்த அலைகடலின் ஒரு துளிதான் நான்கு வேதங்களும். அவர்கள் நான்கு யக்ஷர்கள். சிவனை மகிழ்வித்து அவரது அருளைப்பெற்று அவர் காலடியில் அமர்ந்திருந்தனர். சிவன் ஆணைப்படி மண்ணில் வேதமென வந்தனர்” என்று நான் சொல்லத் தொடங்கினேன்.
”மண்ணில் அப்போது அசைவனவும் அசைவற்றவையுமாகிய பொருட்கள் பெருகி நிறைந்திருந்தன. அவற்றின் நடுவே மானுடர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக இருந்தது. ஒவ்வொரு மனிதரும் தனித்தனியாக இருந்தனர். ஒன்றுக்கு இன்னொன்றுடன் தொடர்பில்லை. அவற்றை இணைக்கும் பொதுவான ஏதுமில்லை. ஆகவே எதற்கும் அர்த்தம் இருக்கவில்லை. ஒன்றுக்கு பிற அனைத்தும் சேர்ந்து அளிப்பதே அர்த்தம். அர்த்தமில்லா பிரபஞ்சம் அலைபாய்ந்தது. அது அச்சுறுத்தியது, துயர் அளித்தது, வெறுமையை எஞ்சவைத்தது
”ஆகவே ரிஷிகள் தவம் செய்தனர். அனைத்தையும் இணைக்கும் ஒன்று தேவை என்று அவர்கள் கோரினர். ரிஷிகளின் தவம் பெருகிப் பெருகி கைலாயத்தை அடைந்து அங்கு ஒரு வண்டின் மீட்டல் போல அந்த இசைக்கடலுக்குள் தனியாக ஒலிக்கத் தொடங்கியபோது அதைக்கேட்டு மகிழ்ந்த சிவன் அந்த நான்கு யக்ஷர்களையும் மண்ணுக்கு அனுப்பினான். அவர்கள் நாதமழையாக பூமியின்மேல் பொழிந்தனர். அனைத்தையும் நனைத்து தழுவினர். நீர் ஓடையென்றும், ஆறென்றும் ஆகி மண்ணின் நரம்புவலையாக ஆவதுபோல வேதங்கள் அனைத்தையும் இணைத்தன.
”நான்கு வேதங்களும் கடல் போல அலைகொண்டு கிடந்தன. அவற்றை உலகியலாக ஆக்கவேண்டியிருந்தது. அவை அளித்த ஞானத்தை அன்றாடத்தில் பயன்படுத்த வேண்டியிருந்தது. மீண்டும் ரிஷிகள் சிவனை எண்ணி தவமியற்றினர். சிவன் ஐந்தாவது யக்ஷனை மண்ணுக்கு அனுப்பினார். அது தான் காவியம். காவிய யக்ஷன் இங்கே வந்து அந்தர்யாமியாக வைரங்களில் ஒளியாகவும், மலர்களில் வண்ணங்களாகவும், இலைகளில் வடிவமாகவும், உயிர்களில் அசைவாகவும், நீரில் சுவையாகவும், காற்றில் இசையாகவும் பரவி நிறைந்தான். அவன்தான் அத்தனை நல்ல காவியங்களிலும் வெளிப்படுகிறான்.
”காவியச்சுவையாக அமைந்துள்ள யக்ஷன் பற்றி இப்போது கிடைக்காத மறைந்து போன காவியம் ஒன்று உண்டு. அந்த யக்ஷன் தன்னிடம் பேசுவதாக ஸ்ரீகரர் அடிக்கடி சொல்வதுண்டு. தன் அறைக்குள் அவன் வாழ்வதாகவும் ஒருமுறை சொன்னார். இரவில் அவர் அறைக்குள் ஓசைகேட்டு ஒரு முறை எழுந்து சென்றேன். கைகளை வீசி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். ’யார்?’ என்று நான் கேட்டேன். ’யக்ஷன்! அந்தக் காவிய யக்ஷன்! இங்கிருக்கிறான்’ என்று கூச்சலிட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது
”’இத்தனை காவிய நூல்கள் இருக்கையில் அவன் இங்கிருக்கமாட்டான் என்று எப்படி நான் நினைத்தேன்? இதோ பார், அவன் இங்கிருக்கும்போது என்னால் தூங்க முடியாது. நாளையே இந்த புத்தகங்களையெல்லாம் இங்கிருந்து அகற்றிவிடு. எல்லாவற்றையும் நூலகத்துக்கு கொண்டு போய்விடு’ என்று அவர் நடுங்கும் குரலில் சொன்னார். அன்று இரவு நெடுநேரம் காய்ச்சல் வந்தவர் போல அந்த யக்ஷனைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
”’கொண்டு போய்விடு…என்னால் தூங்க முடியவில்லை… என் உடலில் ஒரு விசித்திரமான இனிமை இருந்துகொண்டே இருக்கிறது. என் நரம்புகள் வீணைக்கம்பியாக ஆகிவிட்டதுபோல. என் ரத்தத்தில் அதிமதுரம் கலந்துவிட்டதுபோல… மீண்டும் மீண்டும் உடலுறவின் உச்சம் நிகழ்ந்துகொண்டே இருப்பதுபோல் இருக்கிறது. என்னால் தூங்க முடியவில்லை. என் பற்கள் கூசுகின்றன. என் உடல் புல்லரித்துக்கொண்டே இருக்கிறது. நான் தூங்கியாகவேண்டும்… கொண்டுபோய்விடு’ என்று அவர் திரும்பத் திரும்பச் சொன்னார்.
”ஆனால் மறுநாள் காலையில் ’நேற்று ஏதோ உளறினேன். அந்தப்புத்தகங்கள் எல்லாம் அங்கிருந்து போனால் எனது அறைக்கு என்ன பொருள்? தெய்வமில்லாத கருவறைபோல. அத்தனை வெறுமை இங்கிருக்கும். அந்த யக்ஷன் இங்கிருந்து என் உயிரை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட அது என்னுடைய மோட்சம். அவன் இங்கிருக்கட்டும். அவன் என் தெய்வம். எல்லா தெய்வங்களும் கொல்பவையும் அருள்பவையும் தான். எப்போது அருள்கின்றன ஏன் கொல்கின்றன என்று உபாசகன் சொல்லிவிட முடியாது. தெய்வத்திற்கு அளிப்பதொன்றே அவன் செய்யக்கூடியது. நல்ல உபாசகன் தெய்வத்திடம் அருளைக்கூட கேட்பதில்லை. என்னுடன் இரு நானாக இரு என்று மட்டும் தான் கேட்கவேண்டும். ஆம் அது தான் உண்மை’ என்றார்.”
”இந்தக்கதையை நான் இதுவரை கேட்டதில்லை” என்றாள்.
”நாங்கள் சொல்லும் கதைகளை நீ வழக்கமான சம்ஸ்கிருத இலக்கண நூல்களிலோ அலங்கார நூல்களிலோ பார்க்க முடியாது, இவை வேறு” என்று நான் புன்னகையுடன் சொன்னேன். ”இன்று இதுவரை அவர் சொன்ன எதற்கும் சம்மந்தமில்லாத ஒன்றை சொன்னார். எனக்கே அது புதிதாகவும் திகைப்பாகவும் தான் இருந்தது. இன்று அவர் சொன்னது அந்த யக்ஷன் கண்ணுக்குத்தெரியாத ஒரு கரடி என்று…”
”கரடியா?” என்று அவள் திருப்பிக்கேட்டாள்.
”ஆம், ஒரு காட்டு விலங்கு. மூர்க்கமானது ஆனால் தேனில் திளைக்கும் வரம் கொண்டது.”
என்னையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு சட்டென்று அவள் எழுந்தாள். அதன்பிறகு திரும்ப அமர்ந்து கைகளை நீட்டி என் கைகளைப் பற்றிக்கொண்டு ”இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள்.
என் கைகளைப் பற்றியிருந்த அவள் கைகள் ஈரமாக நடுங்குவதை நான் உணர்ந்தேன்.
(மேலும்)
அறிதல்முறை, கடிதம்
ஆசிரியர் ஜெயமோகனின் ‘மூன்று அறிதல் முறைகள்‘ என்னும் உரையை தனியாக அமர்ந்து முழுக்கக் கேட்டேன்.
மூன்று அறிதல் முறைகள் என கற்பனை – Imagination, தர்க்கம் – Logic, உள்ளுணர்வு – Intuition ஆகியவற்றை குறிப்பிடுகிறார். இந்தியாவிற்கு வெளியே அவர் ஆற்றிய முதல் தத்துவ உரையான இதில் மிகத் தெளிவாக நம்மை அளித்து உள்வாங்கக்கூடிய வகையில் பேசினார்.
கற்பனைக்கு உதாரணமாக கலையும், தர்க்கத்துக்கு புறவயப்பார்வை (objectivity), பொதுமைப்படுத்துதல் (generalization), நிலையானத்தன்மை( certainty) அதே நேரத்தில் தன்னையே ரத்து செய்து முன்செல்லும் நோக்கு, வடிவம் (structure) ஆகியவற்றைக் கொண்ட அறிவியலையும், உள்ளுணர்விற்கு நமது அறிவு, பண்பாட்டு அறிவு, மொழி அறிவு, மானுட அறிவு என அதன் வழிகளை ஊற்றுக்கண் நோக்கி செலுத்தினார்.
‘மூளை என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு நிகழ்வு என்றவர் கூறியது எனக்கு ஒரு திறப்பை அளித்தது. ஏனெனில் இதே மூளை மாற்றமடையாமல் இருந்தால் நாம் எப்போதும் ஒரே மனநிலையில் ..குறிப்பாக ஒரே மனநிலையில் அல்லவா நீடிப்போம்.
அதற்கு உதாரணமாக Phineas Gage என்னும் அமெரிக்கக் கட்டிடத் தொழிலாளியின் விபத்தை மேற்கோள்காட்டி, அதில் Gage மூளையில் பலத்த சேதத்துடன் உயிர்பிழைத்து கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை வாழ்ந்து மறைந்ததை சொன்னார் .
கற்பனைக்கு உதாரணமாக யானையின் தும்பிக்கையையும், தர்க்கத்திற்கு அதன் காலையும் கூறினார். அறிவியலால் மாற்று சக்தி படைக்க முடியாத இரண்டு உறுப்புகள் உண்டு. அது யானையின் தும்பிக்கை மற்றும் மனிதனின் நாக்கு என்றதெல்லாம் நம்மை தொடர்ந்து யோசிக்கவைக்கும் வெளிச்சங்கள்.
தும்பிக்கை கொண்டு யானையால் மரத்தை வேரோடு பிடுங்கவும் முடியும், பூவை கசங்காமல் எடுக்கவும் முடியும் என்றது முரணியக்கம் கலந்த கவிதை செயல்பாடே.
Generic Intelligence என்பது Bio Intelligence ன் ஓர் அங்கம், Bio Intelligence என்பது Cosmic Intelligence ன் சிறு துளியே என்றார். நம்மை அந்த துளியினும் துளி என உணரவைக்க உதவும் சொற்கள் அவை.
நம்மை பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் உணர்வதுதான் ஞானம், தியானம் என்று கூறினார். மூன்று அறிதல் முறைகளும் ஒன்றுடன் ஒன்றிணைந்தே நாம் காணும் கவிதை, அறிவியல் எல்லாம் படைக்கப்படுகின்றன என்றார். இங்கு சற்று நிதானமாக யோசித்தால். ஆம் அது எவ்வளவு சரி என்றே தோன்றியது.
இந்த மூன்று அறிதல்முறைகளையும் நாம் நமது அன்றாட வாழ்வில், துறையில், கல்வியில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.
மூன்று அறிதல் முறைகள் இணைவதற்கு உதாரணமாக ..கற்பனையை உருவாக்குவது உள்ளுணர்வே என்றும்.. அதை செயலாக்குவது தர்க்கம் என்றும் கூறினார். நடுகல்நடும் முறை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்காலத்தில் இருந்ததற்கு அதுவே சாட்சி எனக் கூறினார்.
ஆனால் அதை வரையறுத்து நிறுவமுடியாது என்பதையும் அவர் குறிப்பிடாமலில்லை. Humanity யை நிலத்தடி நீருக்கு உவமையாக சொல்லி மார்க்ஸ், பிராய்டு, ஐன்ஸ்டீன் ஆகியோரின் செயல்களை சிந்தனைகளை மேலோட்டமாக எடுத்துரைத்தார். நாம் இவைகளில் எந்த அளவுக்கு ஆழம் நோக்கி செல்கிறோமோ அதுவே நம்மை மேலெழச்செய்யும் என அவருக்கே உரியபாணியில் சுட்டிக்காட்டினார்.
நடராஜ குருவின் ‘அறிவு ‘ என்பதற்கான வழிகளாக அவர் எடுத்து கூறியது புறவய உலகம் (objective world), சொந்த அறிவு (my knowledge), பண்பாட்டறிவு (culture knowledge), உயிரறிவு (bio knowledge), பிரபஞ்ச அறிவு (Cosmic Knowledge) அதாவது பிரம்மம். பிரம்மத்தை தன்னைத் தானே தின்பது, பார்ப்பது என அழகாகக் கூறினார். சூரிய கிரகணத்திற்கு ராகு கேதுவை வைத்து ஓர் விளக்கம் அளித்தார்.
Egypt mythology, Greek Mythology & Hindu mythology இவற்றுக்கான ஒற்றுமையை சொல்லி. இவைகளில் egypt mythology யே பழமைவாய்ந்தது என்றார். கற்பனை எப்படி உருவாகிறது, அதில் மற்றவர்களின் எண்ணங்கள் எப்படி இணைகிறது, அதன் விளைவாக ஞானம் எப்படி எய்தப்படுகிறது என தெளிவாக விளக்கி உரையை முடித்தார்.
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாசித்து வருகிறேன். தொடர்ந்து இந்து மெய்யியல் மற்றும் வேதாந்தம் சார்ந்த அறிமுக நூல்களை வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு இவ்வுரை எனக்கு பேருதவியாக இருந்தது இருக்கிறது.
– கே.எம்.ஆர்.விக்னேஸ்
சிங்கப்பூர் இலக்கியக்கூடுகைகள்: அழகுநிலா
நலமா? நான் நலம். உங்களது ‘எப்போதும் அருளும் தெய்வம்‘ என்ற காணொளியைக் கண்டேன். எவ்வளவு உண்மையான சொற்கள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கோவிட் கால வீடடங்கல் காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள சில நண்பர்கள் இணையம் வழியாக உங்களது ‘காடு‘ நாவலை வாசித்துப் பேசலாமென முடிவு செய்தோம்.
The discourse on Tamil literature has broadened my perspective. I had the impression that Tamil literature is an attempt to reach the global standard of literature, and there are some brave attempts, too.
On Tamil Literature
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


