பெங்களூர், இன்னொரு வாழ்க்கைத்துளி
சென்ற ஏப்ரல் 17, 2025 அன்று லண்டன் செல்வதற்காக விசா நேர்முகத்தின் பொருட்டு நானும் அருண்மொழியும் சென்னை சென்றிருந்தோம். அங்கிருந்து கிளம்பி பெங்களூர் சென்றேன். அங்கே ஏப்ரல் 20 அன்று என் Of Men Women and Witches நூலின் விவாதக்கூட்டம் ஆட்டகலாட்டா அரங்கில் நடந்தது. இந்திரா நகரில் ஒரு விடுதியில் அறை போட்டிருந்தேன். அங்கே மூன்றுநாள் ஒரு துளிவாழ்க்கை.
காலையில் வழக்கம்போல ஐந்து மணிக்கு எழுந்து ஒரு நடை. இந்திரா நகரில் காலையில் ஏழுமணி வரை காபி, டீ கிடைக்கும் கடைகள் எவையும் கண்ணுக்குப் படவில்லை. ஆகவே இரண்டாம் நாள் முதல் அறையிலேயே ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு நடை கிளம்பினேன். கோடைகாலமானாலும் அதிகாலையில் பெங்களூர் குளிராகவே இருந்தது. சாலைகளின் நடுவே நின்றிருந்த மாபெரும் கொன்றைகள் இருபக்கமும் கிளைவிரித்து முழுச்சாலையிலும் கூரை அமைத்திருந்தன.
காலை எட்டு மணிக்குப்பின் பரபரப்பாகிவிடும் சாலையில் அதிகாலையில் செல்லும்போது அதுவும் ஆழ்ந்து உறங்குவதாகத் தோன்றுகிறது. அதை எழுப்பக்கூடாது என்று மிக மெல்ல, ஓசையில்லாமல் நடக்கத் தோன்றுகிறது. பெங்களூரின் மனநிலை குளிர்ப்பகுதிக்குரியது. முப்பதாண்டுகளுக்கு முன்புகூட அது ஒரு கோடைவாசஸ்தலமாக கருதப்பட்டது. “இந்த சம்மருக்கு எங்கே? ஊட்டி, கொடைக்கானல்? பெங்களுர்?” என்ற வசனம் சதிலீலாவதி படத்தில்கூட உண்டு.
எண்பதுகளில் நான் இங்கே சமேரபுராவில் வாழ்ந்த காலகட்டத்தில் பெங்களூர் குளிரானதாகவே இருந்தது. காக்கி நிறத்தில் கோட்டு போட்டுக்கொண்டு கடுக்கன் அணிந்த கிழவாடிகள் பலர் கண்ணுக்குப் படுவார்கள். இப்போது வாகனநெரிசல், மக்கள் நெரிசல், கட்டிட நெரிசல். பெங்களூரின் வெப்பநிலையும் கூடியிருக்கலாம்.
காலையில் திரும்பி வந்து கொஞ்சம் எழுதுவேன். அதன்பின் அருகே ஓர் உணவகத்தில் நின்றபடியே சிற்றுண்டி. ஆனால் உணவு சுவையானதுதான். சர்க்கரைப் பொங்கல் எல்லாம் இருந்தது. ஆனால் அறுபத்திமூன்றாண்டுகள் இனிப்புவெறியனாக இருந்த நான் முழுமையாகவே இப்போது இனிப்பை நிறுத்திவிட்டேன். ஆகவே தோசை, ரவா இட்லி… (பெங்களூரில் சிற்றுண்டி நன்றாகவே இருக்கும். ஆனால் எம்.டி.ஆர் சிற்றுண்டி என் நாக்குக்கு பிடிக்கவில்லை)
மதியம் வரை மீண்டும் எழுத்து. அதன்பின் கொன்றைமர நிழல் வழியாகவே நடந்து சென்று ஓர் ஓட்டலைக் கண்டடைந்து மதிய உணவு. ஓர் உணவகத்தில் உயிரைப்பணயம் வைத்து யோசித்து, குழம்பி, சொல்கோத்து கன்னடத்தில் ஓரிரு சொற்களும் கூட ஆங்கிலமும் கலந்து பேசி உணவை சாப்பிட்டு கைகழுவும்போது “எந்தூட்ரா இவனீக்களி களிக்ணு…” என்று அவர்கள் தனி மலபார் மலையாளம் பேசுவதைக் கேட்டேன்.
பத்தொன்பதாம் தேதி மாலையில் ராஜேஷ், சதீஷ்குமார் வந்தனர். அவர்களுடன் மெட்ரோவழியாக பிரிகேட் ரோடு சென்றோம். அங்கே சர்ச் சாலையில் புக்வார்ம் கடையில் என் நூல்களில் கையெழுத்து போட்டேன். முன்னரே சென்றுவிட்டோம். பிரிகேட் ரோடு வழியாகச் சும்மா சுற்றிவந்தோம்.
பிரிகேட் ரோடு பெங்களூர் தயாரித்து வைத்திருக்கும் சிவப்புப் பௌடர் போட்ட முகம். ஓர் ஐரோப்பிய நகரின் பாவனைகள். குட்டை ஆடை அணிந்த வெண்ணிறப் பெண்கள். தளுக்கு ஆங்கிலங்கள். பக்கவாட்டில் காபி ஷாப்கள், பப்கள், மால்கள். அதை நம்பித்தான் ‘பெங்களூர் டேய்ஸ்’ போன்ற சினிமாக்களை எல்லாம் மல்லுக்கள் எடுக்கிறார்கள்.
புக்வார்ம் புத்தகக்கடைக்கு ஐந்து மணிக்கே சென்றுவிட்டேன். நிகழ்வு ஆறுமணிக்கு. நான் வந்த தகவலை அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு என்னை தெரியாது. புத்தகங்களை பார்த்துக்கொண்டு சுற்றிவந்தேன். பெங்களூரின் நகர்மையத்தில் இப்படி ஒரு பெரிய புத்தகநிலையம் என்பது சிறப்புதான். இன்னும் இதைப்போல நான்கு ஆங்கிலப் புத்தக மையங்கள் உள்ளன. (சென்னையில் ஒன்றுகூட இல்லை).
புத்தகங்களை இணையத்திலும் வாங்கலாம் என்பவர்கள் பெரும்பாலும் புத்தகங்கள் படிக்காதவர்கள். புத்தக்கடை பித்து, புத்தகக் கண்காட்சிப் போதை இல்லாத வாசகர்கள் இருக்கமுடியாது. எவருக்கும் புரியும் விஷயம்தான். எல்லாவற்றையுமே இணையம் வழியாக வாங்கலாம், ஆனால் ‘ஷாப்பிங்’ அனுபவம் கடைகளுக்குச் சென்றால்தான். அங்கே நாம் காண்பது பொருட்களின் ஓர் உலகத்தை. பொருட்கள் பற்றிய அறிதல் உருவாகிறது. தொட்டும் பார்த்தும் நாம் பொருட்களை துளித்துளியாக அனுபவித்துக்கொண்டே செல்கிறோம் என்பதே ஷாப்பிங் என்பதை ஓர் அனுபவமாக ஆக்குகிறது.
புத்தகங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் அனுபவம் அறிவியக்கம் பற்றிய ஓர் அறிதல்தான். என்னென்ன நூல்கள் வருகின்றன, எவை புகழ்பெற்றிருக்கின்றன, இன்னும் வாசிக்கப்படும் பழையநூல்கள் என்னென்ன என ஒரு புத்தக்கடை அளிக்கும் சித்திரம் நுணுக்கமான ஒன்று.
புக்வார்ம் புத்தக்கடையில் ஒரே சமயம் பல சிறு அறைகளில் பல வாசகர்ச்சந்திப்பு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுக்கு அங்கே இலவச இடம் அளிக்கிறார்கள். ஒவ்வொன்றாக வெளியே நின்று பார்த்துக்கொண்டு நகர்ந்தேன்.
புக் கிளப் என்னும் இத்தகைய தொடர்சந்திப்புகள் வாசிப்பையும் சிந்தனையையும் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொள்ள மிக அவசியமானவை. உலகமெங்கும் நிகழ்பவை. கோவை விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலக மாடியிலும் சொல்முகம் கூட்டம் நிகழ்கிறது. புதுச்சேரி, சேலம், ஈரோடு, சென்னை, காரைக்குடி என பல ஊர்களில் நம் நண்பர்கள் தொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட சந்திப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்றன. பெங்களூரில் ஆட்டக்கலாட்டாவில் பெங்களூர் நண்பர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கிறார்கள். சென்னையில் மானசா பதிப்பகம் அலுவலகம் அடையாறில் அமையவிருக்கிறது, அங்கே ஆங்கில நூல்களுக்கான ஒரு புக் கிளப் சந்திப்பை மாதந்தோறும் நடத்த சைதன்யா திட்டமிட்டிருக்கிறாள்.
ஆனால் மிகக்குறைவாகவே தமிழ் வாசகர்களுக்கு இந்தச் சந்திப்புகளின் தேவை புரிகிறது. இயல்பான சோம்பல், உலகியல் விஷயங்களுக்கு அளிக்கும் முதன்மை ஈடுபாடு ஆகியவற்றால் கணிசமானவர்கள் இவற்றுக்கு வருவதில்லை. நம் குடும்பங்களும் இவற்றுக்கு எதிரானவை. ஆகவே இவற்றில் கலந்துகொள்வதே ஒரு போராட்டம்தான்.
ஏன் இவை தேவை? இலக்கியம், கலை ஆகியவற்றிலான ஈடுபாடு என்பது இயல்பாக நீடிக்கக்கூடியது அல்ல. ஏனென்றால் அவற்றில் கட்டாயம் என ஏதுமில்லை. அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்கு தொடர் முயற்சி தேவை. அதற்கு புத்தகச் சந்திப்புகள் அளவுக்கு உதவியானவை வேறில்லை.
ஆட்டக்கலாட்டா விவாதம்ஆறுமணிக்கு சதீஷ் சபரிகே வந்தார். கையெழுத்திட அமர்ந்தேன். நான் எண்ணியதைவிடவும் நல்ல கூட்டம். கடையினர் கணக்கிட்டதை விடவும் புத்தகங்கள் விற்பனையாயின. இறுதியில் கடையில் இருந்த என்னுடைய எல்லா நூல்களும் விற்றுப்போய் சிலருக்குக் கொடுக்க முடியாமலும் ஆகியது. என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள்.
மறுநாள் மதியம் ஒரு மணிக்கு இந்திராநகர் அருகிலுள்ள ஒரு பூங்காவில் நண்பர்களைச் சந்தித்தேன். நண்பர்கள் அடங்கிய வாட்ஸப் குழுவில் அறிவித்திருந்தோம். தேவதேவன் வந்திருந்தார். இலக்கியம், தத்துவம், வேடிக்கை என பொதுவான ஓர் உரையாடல். அதன்பின் அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு ஆட்டகலாட்டாவுக்குச் சென்றேன்.
ஆட்டகலாட்டா அரங்கு சிறியது. நாங்கள் எதிர்பார்த்திருந்தது ஐம்பதுபேர். அரங்கு நிறைந்து பாதிப்பேர் சூழ்ந்து நிற்குமளவுக்கு நண்பர்கள் வந்திருந்தனர். பாவண்ணன் அரங்குக்கு வந்திருந்தார். சதீஷ் நூலை முந்தைய நாள்தான் வாங்கிக்கொண்டு சென்றார். முழுக்க வாசித்துவிட்டு வந்து நுணுக்கமான கேள்விகள் வழியாக அரங்கை அவரே நடத்தினார். மிகச்சிறந்த உரையாடல். அங்கும் நூல்களில் கையெழுத்திட்டேன். நூல்கள் அனைத்துமே விற்று முடிந்தன.
Of Men Women and Witches உண்மையில் ஒரு மணிநேரத்தில் விரைந்து வாசிக்கத்தக்க ஒரு சிறு நூல். என் நூல்களை வாசிப்பவர்களுக்கு தொடக்கநூலாக அளிக்கத்தக்கது என்று சதீஷ் பேசும்போது சொன்னார். வந்திருந்த பலர் ஏற்கனவே வாசித்துவிட்டு வந்து மீண்டும் பிறருக்காக வாங்கினர்.
18 அன்று பெங்களூரின் விடுதியில் தனித்திருக்கையில் நீண்டநாட்களாக என்னுள் அலைபாய்ந்து கொண்டிருந்த ஒரு நாவலுக்கான தொடக்கவரி அமைந்தது. ”கதைகளைச் சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மாதான் என்னிடம் சொன்னாள்.” காவியம் என்னும் தலைப்புடன் இந்நாவலை நான் முதலில் எழுதத் தொடங்கியது விஷ்ணுபுரம் எழுதி முடித்ததும் 1999ல். அன்றுமுதல் பத்துமுறைக்குமேல் தொடங்கி கைவிட்ட நாவல்.
நான்கு அத்தியாயங்கள் எழுதியதும் கதைக்களமான பைத்தான் என்னும் பிரதிஷ்டானபுரிக்கே சென்றாலென்ன என்று தோன்றியது. ஈரோடு கிருஷ்ணனிடம் நான் பைதானுக்கு கிளம்புகிறேன், வருகிறீர்களா என்று கேட்டேன். கிளம்புவோம் என்றார். பத்தொன்பதாம்தேதி ஔரங்காபாதுக்கு விமானச்சீட்டு பதிவு செய்தோம். ஆட்டகலாட்டா நிகழ்வு முடித்து எட்டரை மணிக்கு நண்பர் புவனேஸ்வரியின் காரில் ஏறி நேராக விமானநிலையம்.
இரவெல்லாம் பயணம். நடுவே மும்பையில் நான்குமணிநேரம் காத்திருப்பு. ஆறரை மணிக்கு ஔரங்காபாத், அங்கிருந்து காரில் ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து எட்டரை மணிக்கு பைத்தான். அங்கே நான்கு நாட்கள். முற்றிலும் அயல்நகர் ஒன்றில், கோதாவரியின் கரையிலமைந்த இந்தியாவின் தொன்மையான நகர் ஒன்றில். புதைந்த கனவுக்குமேல் இன்னொரு துளிவாழ்க்கை.
அங்கே சென்றபின் இன்னொன்று நிகழ்ந்தது. எழுதிய நான்கு அத்தியாயங்களையும் நிராகரித்து அங்கு அமர்ந்து ஏழு அத்தியாயங்கள் புதியதாக எழுதினேன். முற்றிலும் புதியதாக நாவல் எழுந்து திரண்டு உருவாகி விசைகொண்டு என்னை எடுத்துக்கொண்டு முன்செல்லத் தொடங்கியது. அந்த பழைய நான்கு அத்தியாயங்களை யாராவது நல்லவிலைக்கு கேட்டால் விற்றுவிடலாம் என்று கிருஷ்ணன் சொன்னார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

