காவியம் – 14

சாதவாகனர் காலம், பொயு2, அமராவதி அருங்காட்சியகம்

மனித உள்ளம் எத்தனை நெருக்கமாக இடங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பது உளநெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும்போது மட்டும்தான் அத்தனை தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஊரில் நாம் அடைந்த கொந்தளிப்பும் துயரும் பிறிதொரு ஊரில் முற்றிலும் விலகிச்சென்று விடுகின்றன. அவை முந்தைய ஊருக்குச் சொந்தமானவையாக, அங்கே மட்டும் நிகழக்கூடியவையாக நமது உள்ளம் எண்ணிக்கொள்கிறது. புதிய ஊரில் வேறு வகையான உள நெருக்கடிகள் நமக்கு இருக்கலாம். ஆனால் அவை பழையவற்றின் தொடர்ச்சி அல்ல. உளநெருக்கடிகளிலிருந்து தப்ப ஊரைவிட்டு ஓடுவதென்பது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் செய்துகொண்டிருப்பதுதான். தெரிந்த அனைத்து ஊர்களிலிருந்தும் செல்வது துறவென்று சொல்லப்பட்டது.

இரண்டு ரயில்பயணங்கள் வழியாக பனாரஸுக்கு வந்திறங்கி, பையுடன் எனது இல்லத்திற்கு நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு ஊரில் நிகழ்ந்த எதுவுமே நினைவில் இல்லை. சென்று குளித்துவிட்டு ஒருமணி நேரமாவது தூங்கிவிட்டு கல்லூரிக்கு செல்லமுடியுமா, ஸ்ரீகர் மிஸ்ரா அறையில் இருப்பாரா, என்றெல்லாம் தான் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பனாரஸ் ரயில்நிலையம், ஆட்டோர் ரிக்ஷா, சாலை, கல்லூரி முகப்பு, என் வீட்டுக்குச் செல்லும் கொன்றை படர்ந்த செங்கல் பாவிய பாதை எல்லாமே தெரிந்தவையாக, அணுக்கமானவையாக இருந்தமை ஆழ்ந்த அமைதியை அளித்தது. என்னால் அங்கே என்னை பொருத்திக்கொள்ள முடிந்தது.சிமிண்ட் சுவரில் பெயர்ந்து விழுந்த கல்லை மீண்டும் அந்தப்பள்ளத்தில் வைப்பதுபோல.

நான் நுழைந்தபோது ஸ்ரீகர் மிஸ்ரா அவருடைய வழக்கமான தூளி நாற்காலியில் அமர்ந்து, இரு கைக்கட்டைகளுக்கு நடுவே பலகையை வைத்து எதையோ ஒரு நூலில் இருந்து குறித்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்து அடையாளம் தெரியாதவர் போன்ற விழிப்புடன் கண்களை நிலைக்கவிட்டு மீண்டும் எழுதத்தொடங்கினார். அவர் புத்தகங்களிலோ எண்ணங்களிலோ ஆழ்ந்திருக்கும்போது மனிதர்களைப் பொருட்படுத்துவதில்லை. என்று அறிந்திருந்தேன். ஆகவே ஒன்றும் நான் ஒன்றும் சொல்லாமல் என் அறைக்குச் சென்றேன்.

ஆடைகளைக் கழற்றி குளித்து ஈரத்தலையை கையால் நீவியபடி குளியலறையில் இருந்து வெளிவந்தபோது அனைத்தும் சீரடைந்து எல்லாவற்றிலிருந்தும் முழுமையாக விடுபட்டிருந்தேன். அஞ்சுவதற்கு ஏதுமில்லாத, எந்தக்கவலையும் இல்லாத ,பிறிதொரு நிலத்தில் இருந்தேன். புதிய ஆடைகளை அணிந்துகொண்டு முந்தைய பயணத்தில் போட்டிருந்த ஆடைகளைப் பார்த்த போது ஒரு சிறு தொடுகை போல பைத்தானில் நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தன. அந்த ஆடைகளை அப்படியே சுருட்டி செய்தித்தாளில் பொதிந்து குப்பைக்கூடைக்குள் போட்டேன். அந்த அர்த்தமற்ற செயல் உண்மையிலேயே அந்த நினைவை என்னிடமிருந்து அகற்றியது.

வெளிவந்தபோது ஸ்ரீகர் மிஸ்ரா தீவிரமாக தன் புத்தகத்தில் தலைகுனிந்து ஆழ்ந்திருப்பதைக் கண்டேன். அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வெளியே நடந்து கல்லூரி நோக்கிச் சென்றேன். அன்று அவர் வகுப்புக்கு அநேகமாக வரப்போவதில்லை. அத்தனை காலையிலேயே அவர் புத்தகத்துடன் அமர்ந்திருந்தார் என்றால் விடியற்காலையில் எழுந்திருப்பார். விடியற்காலையில் எழவேண்டும் என்றால் முற்றிலும் புதிய ஒரு கருத்து அவரிடம் தோன்றியிருக்கவேண்டும். அதற்கு சான்றுகளுடன், தர்க்கங்களுடன் ,அழகிய சொற்றொடர்களுடன் ஓர் உருவத்தை அளிப்பது வரை அவரால் அந்த நாற்காலியில் இருந்து எழ முடியாது.

நான் ராதிகாவின் விடுதிக்குச் சென்றேன். அவளுடைய விடுதி எங்கள் பல்கலைக்கழக வளைப்புக்குள்ளேயே தனியாக இருந்தது. பிற கல்லூரிகளைப் போல அங்கே ஆண்கள் செல்வதற்கோ அங்கிருக்கும் பெண்களைச் சந்திப்பதற்கோ  தடையேதுமில்லை. பழைய ஓட்டுக்கட்டிடம் அது. பெரிய அறுகோண வடிவ கூடத்தில் ஆறு பெரிய சன்னல்கள். பழ்மையான ஈட்டிமரச் சோபாவில் அமர்ந்தபடி பணிப்பெண்ணான ராக்கியிடம் ராதிகா பேரைச் சொல்லி நான் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். என்னை அவளுக்குத் தெரியும். நாங்கள் காதலிக்கிறோம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என்று அவளுடைய பாவனைகள் காட்டின.

சிறிது நேரத்தில் ராதிகா வந்து என்னருகே நெருங்கி கையைப்பற்றி ”வா” என்றாள்.

அவளுடைய முகபாவனையிலிருந்த தீவிரத்தன்மை என்னை குழப்பியது. முதல் எண்ணம் என் வீட்டில் நிகழ்ந்தது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது என்பதுதான். ஆனால் தலைகுனிந்து நடந்த அவளை ஓரக்கண்ணால் திரும்பி பார்த்து கொண்டே வந்தபோது அது அல்ல பிறிதொன்று என்று தோன்றத் தொடங்கியது.

வழக்கமான சிமெண்ட் பெஞ்சில் வந்து அமர்ந்தபோது நான் அவளிடம் ”என்ன?” என்று கேட்டேன்.

அவள் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடி மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு ”சிக்கல்” என்றாள். அவள் தொண்டை ஏறி இறங்கியது.

”என்ன?” என்று மீண்டும் கேட்டேன்.

”என் அப்பா அழைத்திருந்தார். அதன்பிறகு அண்ணா.”

எனக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. ”என்ன?” என்று மீண்டும் கேட்டேன்.

”இங்கிருக்கும் எவரோ அவர்களிடம் போய் சொல்லிவிட்டார்கள்” என்றாள்.

”எதை?” என்று கேட்டதுமே அது அசட்டுத்தனமான கேள்வி என்று தெரிந்தது.

அவள் ”உன்னைப்பற்றி…உன் சாதியைப்பற்றி குறிப்பாக…” என்றாள். ”யோசித்தால் யார் சொல்லியிருக்கக்கூடும் என்று கூட கண்டுபிடிக்க முடியும். இங்கே பாட்னாவிலிருந்து பலபேர் படிக்கிறார்கள். அறிவியல் துறைகளில் ஆசிரியர்களாகக் கூட சில பேர் இருக்கிறார்கள் என்று தெரியும். என்னைப்பற்றி எளிதில் விசாரிக்கலாம். பாட்னாவில் என் அப்பா சற்றே புகழ்பெற்றவர். என் அண்ணா அத்தனை பேருக்குமே தெரிந்தவர். அவன் கயாவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான்.”

“அப்பா என்ன சொன்னார்?” என்றேன்.

அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள். பிறகு “அப்பா அண்ணனிடம்  பேசியிருக்கிறார். அவன்தான் கொதித்துப்போயிருக்கிறான். அவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்கள் மிகப்பழமையான குடும்பம். புத்தகயா பக்கம் ஏதோ அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார்கள் என்றும், பன்னிரண்டு ஆலயங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். தங்களை ஒருவகையான அரசர்கள் என்று அவர்கள் கருதுதுவதால் அவன் மேல் அவளுடைய செல்வாக்கு மிக அதிகம். அவன்தான் கத்தினான்” என்றாள்.

”திட்டினானா?” என்றேன்.

”கெட்ட வார்த்தைகள்” என்றாள்.

நான் அவள் கையைப்பற்றி ”I am sorry ” என்றேன்.

அவள் திரும்பி புன்னகைத்து ”எதற்கு?” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவள் ”அப்பா முதலில் கத்தினார். அதன்பிறகு அழ ஆரம்பித்தார். நான் நம் குடும்பத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கிவிட்டேன் என்று சொன்னார். படிப்பை  முடித்துவிட்டு அப்படியே கிளம்பி பாட்னாவுக்குச் செல்லும்படி சொல்கிறார்.”

”நீ என்ன சொன்னாய்?”

“அவர் நினைப்பதெல்லாம் தவறு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்னேன். யாரோ பொய்யாக வதந்தி கிளப்புகிறார்கள் நம்பவேண்டாம் என்று சொன்னேன்.”

”ஏன்?”

”நமக்கு இப்போது தேவை நேரம்தான். நான் இந்த முனைவர் பட்டத்தை வாங்கவேண்டும். இந்த ஆய்வேட்டை முடிக்க எனக்கு இன்னும் ஆறுமாதமாவது ஆகும்.”

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

“அவர் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப கெஞ்சிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார். அண்ணாவை அப்படி எளிதாக ஏமாற்ற முடியாது. மிக எளிதாக அவர் எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்துகொள்ள முடியும் .போலீஸ்காரர்கள் ஒரு பெரிய ஜாதி போல. அங்கிருந்து அவர் இங்கே காவல் நிலையத்திற்குப் பேசமுடியும். இவர்கள் என்ன சொன்னாலும் அதை அவர்கள் நம்புவார்கள். இங்கே வந்து ஒரு கான்ஸ்டபிள் விசாரித்தாலே நம்மைப்பற்றி தெரிந்துவிடும்.”

”என்ன செய்வது?” என்று நான் கேட்டேன்.

“இப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் ஒரு இரண்டு நாட்களுக்குள் சித்திரம் தெளிவாகிவிடும். இப்போதைக்கு நாம் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடையது வெறும் மாணவர் உறவு மட்டும் தான் என்று ஒரேயடியாக சாதித்துவிடுவோம். நமக்கான காலம் வரும் வரை காத்திருப்போம்” என்றாள்.

“ஆம், அதுதான் சரியான வழி” என்று நான் சொன்னேன்.

”இங்கே தான் இருக்கப்போகிறோம். சாதாரணமாகப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்ளலாம். இப்படி வந்து அமர்ந்து பேசுவது மட்டும் தான் தேவையில்லை” என்றாள்.

“ஆம்” என்றேன்.

“ஸ்ரீகர் மிஸ்ராவிடம் அவருடைய அலுவலகத்தில் சென்று நான் எல்லாவற்றையும் சொல்லிக்கொள்கிறேன். என்ன நடந்தது என்று நான் சொன்னால்தான் அவருக்குப் புரியும்” என்று ராதிகா சொன்னாள்.

அதற்கும் நான் ”ஆம்” என்றேன்.

அவள் என் கையைத்தொட்டு ”இப்படி ஒரு நெருக்கடி வருமென்று நாம் பழகத்தொடங்கும்போதே தெரிந்ததுதான். அது இத்தனை சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. சரி, வந்துவிட்டது. வந்தவரைக்கும் நல்லதுதான். சீக்கிரமே இதை முடித்து கடந்துவிடுவோம்” என்றாள். பின்பு புன்னகைத்து ”கவலைப்படாதே” என்று மீண்டும் சொன்னாள்.

அதுவரை அவளிடம் இல்லாத ஒரு தாய்மை அந்த சிரிப்பில் தெரிவது போல் இருந்தது. நான் அவளை பார்க்காமல் ”கவலைப்படவில்லை” என்றேன்.

உண்மையில் அந்தக்  கவலை எனக்குத் தேவைப்பட்டது. நான் பழைய அனைத்தில் இருந்தும் விடுபட்டு என் உள்ளம் முற்றிலும் ஈடுபடும் இன்னொரு கொந்தளிப்பில் சிக்கிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு பைத்தான் நினைவு மேலெழுந்து வந்து என்னை சுழற்றி அடிக்க ஆரம்பித்து விடுமோ என்ற சந்தேகம்  மெல்ல எங்கோ இருந்தது, அது இப்போது இல்லாதாயிற்று.  இப்போது இந்தக்கவலையில் நான் அதை துளிகூட நினைக்கப்போவதில்லை.

அவள் ”பார்ப்போம்” என்று சொல்லி எழுந்து விலகிச்சென்றாள். நான் சிமென்ட் பெஞ்சிலேயே கைகளைக்கட்டிக்கொண்டு , காற்றில் கொன்றைமரக்கிளைகள் நலுங்குவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

நான் அன்று வகுப்புக்குச் செல்லவில்லை. நேராக கல்லூரி உணவகத்திற்குச் சென்று ஒருமணி நேரம் தனியாக அமர்ந்திருந்தேன். மூன்று காப்பி குடித்தேன். அது என்னை தூங்காமல் பார்த்துக்கொண்டது. நூலத்துக்குச் சென்று என்னுடைய ஆய்வேட்டை மீண்டும் தொடங்க முடியுமா என்று பார்த்தேன். எத்தனை முயன்றபோதும் வார்த்தைகள் பொருளற்று விலகி எங்கோ தான் இருந்தன.

அதன்பிறகு திரும்பி வீட்டுக்கு வந்தேன். ஸ்ரீகர் மிஸ்ரா அதே நாற்காலியில் அப்படியேதான் அமர்ந்திருந்தார். அதே போன்று நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு குனிந்துகொண்டார். என் அறைக்குச் சென்று ஆடைகளை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டேன். கண்களுக்குள் வண்ணங்கள் கொப்பளிப்பதை, சிறு குமிழிகள் அலைவதை எண்ணங்களின்றி பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதோ தூங்கிவிட்டேன்.

விழித்தபோது அந்தி சாய்ந்திருந்தது ரயிலில் நான் முற்றிலும் தூங்காமலிருந்திருக்கிறேன். ஆகவே அந்த தூக்கம் மிக ஆழ்ந்ததாக, முற்றிலும் காலம் அற்றதாக இருந்தது. எழுந்தபோது நல்ல தூக்கம் அளிக்கும் தெளிவு வந்திருந்தது. இப்போது என்ன ஆயிற்று? உண்மையில் ஒன்றுமே நிகழ்வில்லை. அவர்களிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவளிடம் விசாரித்திருக்கிறார்கள். அவள் முழுமையாக மறுப்பாள். அவள் உறுதியாக என்னை மணக்கப் போவதாகச் சொன்னால் மட்டும்தான் அவர்களுக்கு கொந்தளிப்பும் கோபமும் வரவேண்டும். அவள் என்னை மணக்கவே போவதில்லை, இது மிகச்சாதாரணமான உறவுதான், அதையும் முழுக்க நிறுத்திவிடுவதாகச் சொன்னால் அவர்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

உண்மையில் இந்த விலக்கம் குறைந்தது ஏழெட்டு மாதங்களுக்கு எங்களுக்கு நல்லது. ஆய்வேட்டை முடித்து அளித்துவிடலாம். ஆறுமாதத்துக்குள் செய்யவேண்டிய அனைத்தையும் செய்துவிடலாம். எங்கோ ஒரு வேலையைக்கூட தேடிக்கொள்ள முடியும். வீடு கூட பார்த்துவிடமுடியும். மிக எளிதாக இங்கிருந்து கிளம்பிச்சென்று எங்களுக்கான ஒரு வாழ்க்கையைத் தொடங்கிக்கொள்ள முடியும். சட்டபூர்வமான ஒரு திருமணத்திற்குப்பின் எவர் எங்களை என்ன செய்யமுடியும்? இது சட்டமும் நீதிமன்றமும் உள்ள நாடு. பழையகாலம் போல அல்ல, இந்தியா மிகப்பெரிய நிலம். நாங்கள் எங்கே வேண்டுமென்றாலும் சென்றுவிட முடியும்.

எல்லாமே சரியாகவும் சாதகமாகவும் தான் இருக்கிறது என்று தோன்றியது.  நான் சட்டையைப் போட்டுக்கொண்டு அறைக்கு வெளியே வந்தபோது அந்த எண்ணம் வளர்ந்தபடியே வந்தது. சாய்வு நாற்காலியில் மல்லாந்து மூக்குக்கண்ணாடியை முகத்தில் வைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகர் மிஸ்ராவைப் பார்த்தபின் வெளியே நடந்தேன். இருட்டு பரவத்தொடங்கியிருந்தது. பாதைகளில் எவருமில்லை. அப்பால் மைதானங்களில் இருந்து விளையாடுபவர்களின் ஓசைகள் அலையலையாக கலைந்து வந்துகொண்டிருந்தன. கல்லூரி உணவகத்தை மூடிவிட்டிருந்தார்கள். ஆகவே வளாகத்தை விட்டு நடந்து வெளியே வந்து சாலையில் நின்றேன். ஆட்டோரிக்ஷாக்கள் உறுமியும் சீறியும் சென்று கொண்டிருந்தன.

எனக்குப் பசித்தது.சாலையைக்கடந்து சற்று நடந்தால் பிரபலமான ஷர்மா பிகாரி சைவ உணவகம் இருந்தது. நான் அசைவ உணவை விட்டு நெடுநாட்கள் ஆகியிருந்தது. சம்ஸ்கிருதம் பயிலத்தொடங்கும்போது அதை நிறுத்தியிருந்தேன். எனக்கு எம்.ஏ சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்த ஜோஷி என்னிடம் திரும்பத் திரும்ப அசைவத்தை விட்டுவிடும்படி சொன்னார்.

“அசைவத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள் பலரும் ஷத்ரியர்கள். அவர் அசைவம் உண்டிருக்கக்கூடும்தான். இதெல்லாம் எனக்கும் தெரியும், ஆனால் எனக்கு உன்னிடம் ஒரு நெருக்கம் வரவேண்டியிருக்கிறது. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் நீ அசைவம் உண்பவன் என்று எனக்குத் தோன்றாமல் இருக்க வேண்டும். நமக்கிடையே இருக்கும் தூரம் மிகப்பெரியது. நான் பிராமணன், நீ மகர்”

“இல்லை நான் பங்கி” என்றேன்.

“ஆம்ம, பங்கி. நமக்கிடையே இருக்கும் அந்த தூரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளலாமே…” என்று அவர் சொன்னார்.

அன்று நான் அசைவத்தை விட்டேன். பிறகு ஒருபோதும் உண்டதில்லை. ராதிகாவை சந்தித்தபிறகு நான் எப்படியோ மானசீகமாக பிராமணனாக மாறிக்கொண்டிருந்தேன். அசைவ உணவு மட்டுமன்றி தீவிரமான மணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைக்கூட உண்ணாமலானேன். ஆகவே சர்மா உணவகம் எனக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. ஆனால் அப்போது ஏனோ அங்கே சென்று சப்பாத்தியும், நெய்விட்ட சப்ஜியும், குலாப்ஜாமூனும் சாப்பிடப் பிடிக்கவில்லை.

சாலையின் இருபுறத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றபோது சட்டென்று அசைவம் உண்டாலென்ன என்று தோன்றியது. பன்றியோ மாடோ பனாரஸ் நகரத்தில் எங்கும் கிடைப்பதில்லை. ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ கூட மிக அரிதாக ஆங்காங்கே சில விடுதிகளில் தான் கிடைக்கும். சிறிய கடைகள் அஞ்சியவை போல  தலைமறைவாக சந்தைகளின் மடிப்புகளுக்குள் எங்கோ புதைந்திருக்கும். ஆனால் வெளிநாட்டவரும், பெரியமனிதர்களும் வந்து சாப்பிடும் பெரிய உணவகங்கள் வெளிப்படையாகவே பெரிய விளம்பரப்பலகைகளுடன், விளக்கு அலங்காரங்களுடன் அசைவ உணவுக்கான அழைப்புகளை முன்வைத்திருக்கும்.

நான் ஒரு ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி அதில் ஏறிக்கொண்டேன். அசைவ உணவகம் ஒன்றை தேடிச்செல்லும்படி சொன்னேன். அவன் ”பிஸ்வாஸ் உணவகம் ஒன்று இருக்கிறது. மிகத் தரமானது” என்றான்.

நான் ”அங்கே செல்லலாம்” என்றேன்.

என்னிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். முழு உதவித்தொகையையுமே அப்படியே எடுத்து குர்தாவின் பைக்குள் வைத்திருந்தேன்.

பிஸ்வாஸ் உணவகத்தில் அப்போது பெரிய கூட்டம் ஏதும் இல்லை. இரவு எட்டு மணிக்கு மேல் தான் அங்கே நிறைய பேர் சாப்பிட வருகிறார்கள் போல. நான் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் குழம்பி மெனு அட்டையை பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவெடுக்க முடியவில்லை. எந்த உணவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. பிரியாணி என்ற பெயர் மட்டும் சட்டென்று நினைவில் ஒரு சீண்டலை உருவாக்கியது. மட்டன் பிரியாணிக்கு ஆணையிட்டேன்.

ஆனால் அது என் முன் வரும்போது அதை என்னால் உண்ண முடியுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது நான் அசைவத்தைத் தொட்டு. அசைவ உணவு குமட்டுவதாக, நினைத்தாலே அருவருப்பூட்டுவதாக எல்லாம் சைவர்கள் சொல்வதுண்டு. எனக்கும் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது என்று நான் கற்பனை செய்துகொண்டதும் உண்டு.

ஆனால் எண்ணை ஆவி பறக்க இளந்தவிட்டு நிறத்தில் பிரியாணி பெரிய பீங்கான் தட்டில் ஒரு குமிழி போல வைக்கப்பட்டு என் முன் கொண்டு பரிமாறப்பட்டபோது என் நா சுரந்துவிட்டது. ஒரு கிண்ணத்தில் தயிர் வெங்காயம். இன்னொரு கிண்ணத்தில் ஊறுகாய். பிறிதொன்றில் குழம்பு. ஒருகணத்தில் அந்த மணம் என்னை முழுக்க ஆட்கொண்டது. ஆவலுடன் அதை எடுத்து உண்ணத்தொடங்கினேன்.

பிரியாணி அத்தனை சுவையானதென்று முன்பு எப்போதுமே நான் அறிந்திருக்கவில்லை. அதன் ஒவ்வொரு பருக்கையும் சுவை கொண்டிருந்தது வயிறு நிறைந்து அதிலிருந்த எண்ணை மார்பை கரிக்கத் தொடங்கவில்லை என்றால் இன்னொரு பிரியாணிக்கு ஆணையிட்டிருப்பேன். பழச்சாறு வேண்டுமா என்று பரிமாறுபவன் வந்து கேட்டான். ஒரு சாத்துக்குடி பழச்சாறு சொன்னேன். அதைக் குடித்து முடித்து அவனுக்கு சிறிய தொகையையும் வைத்துவிட்டு வெளியே வந்து கையிலெடுத்துக்கொண்ட சிறு குச்சியால் பல்லைக்குத்தியபடி ,சாலையில் வண்ணங்களின் பெருக்காக வண்டிகள் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு நின்றபோது உடம்பு தளும்ப நீர் நிறைந்த குடம் போல் அமைதி கொண்டிருந்தது.

சுஹாஸ் தாராவாலா  “எப்போதெல்லாம் சோர்வு தெரிகிறதோ அப்போதெல்லாம் சென்று உடல் நிறையுமளவுக்கு , மூச்சுத்திணறுமளவுக்கு சாப்பிடுவதுண்டு” என்று என்னிடம் ஒருமுறை சொன்னான். ”சாப்பாடு உள்ளத்தின் சோர்வையும் கொந்தளிப்பையும் ஆற்றிவிடும். உடலால் இருப்பதே முக்கியமென்று எண்ண வைக்கிறது. சாப்பிட்டு முடித்து நிறைந்த வயிற்றுடன் நிற்கும்போது இங்கே எதுவுமே பொருட்டல்ல என்று தோன்றும். சாப்பிட முடிகிறது, சுவை என ஒன்று இருக்கிறது, இப்போது நிறைந்திருக்கிறேன். இதற்கப்பால் ஒன்றுமில்லை என்று எண்ணம் ஓடும்”.

அது எவ்வளவு உண்மை !அக்கணம் எனக்கு நேற்றும் நாளையும் இல்லாமலிருந்தது.  எண்ணவோ வருந்தவோ ஏதுமில்லை. பதற்றங்கள் பயங்கள் எதுவுமில்லை. ஒரு மதர்ப்பு உடலெங்கும் இருந்தது. அந்த நிதானத்தை கொண்டாட விரும்பினேனேன். ஓட்டலின் மேட்டிலிருந்து கீழே வந்து அங்கிருந்த மிகச்சிறிய பீடாக்கடையில் ஒரு இனிப்புப் பீடா வாங்கி போட்டுக்கொண்டேன். அதை மென்றபடி ஒரு ஆட்டோ ரிக்ஷாவுக்காக கைகாட்டினேன். அவன் வளைத்து என்னை நோக்கி வந்தான்

அந்த ஆட்டோ ரிக்ஷாவை முந்தி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா என் முன் நின்றது. அதிலிருந்து உயரமான ஒருவன் இறங்கி என்னை நோக்கி வந்தான். இன்னொருவன் ஆட்டோவிலிருந்து இறங்கி அதன் அருகிலேயே நின்றான். அந்த ஆட்டோவின் ரிக்ஷா டிரைவர் சரிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் கை காட்டிய ஆட்டோ ரிக்ஷா தயங்கி, அவர்களைப் பார்த்தபின் விரைந்து வளைந்து முன் சென்றது.

என்னை நோக்கி வந்தவன் ”ராம்?” என்றான்.

நான் ”ஆம்” என்றேன்.

“உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.

நான் ”யார் நீங்கள்? எதற்கு?” என்றேன்.

அவன் என் தோளில் கைவைத்து ”வண்டியில் ஏறு” என்றான்.

”இல்லை நான்…” என்று சொல்லப்போனேன்.

அவன் கை என் கையை இறுகப்பிடித்தது. ”வண்டியிலேறினால் நாம் பேசலாம். ஏறமாட்டாய் என்றால் இங்கேயே உன்னைக் குத்தி சரித்துவிட்டு போய்விடுவேன்” என்றான்.

என் உடல் நடுங்கி துள்ளத் தொடங்கியது. ”இல்லை நீங்கள் ஆளறியாமல்…” என்றேன்.

”நீ யார் என்று எனக்குத் தெரியும். உன்னிடம் தான் நான் பேசவேண்டும் வா” என்றான்.

நான் கால் தளர்ந்து நின்றிருக்க, என் தோளைப்பிடித்து தள்ளிக்கொண்டு சென்று, ”ஏறு” என்றான்.

அப்போதும் என்னால் நானாக ஆட்டோவில் ஏற முடியவில்லை. அவன் என்னைத்தள்ளி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு என் மறுபக்கம் ஏறிக்கொண்டான். ஆட்டோ உறுமலுடன் அதிர்ந்து கிளம்பியது.

ஆட்டோவில் இருவருக்கும் நடுவே நான் அமர்ந்திருந்தேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இருபுறமும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

”நீங்கள் யார்? என்ன பேசவேண்டும்” என்றேன்.

”பாட்னாவிலிருந்து எங்களை அனுப்பியிருக்கிறார்கள். பயப்படாதே, உன்னைக் கொல்லப்போவதில்லை. அடிக்கவும் போவதில்லை. உன்னிடம் பேசத்தான் வந்திருக்கிறோம். பேசாமலிரு” என்றான்.

இன்னொருவன் ”நீ கத்திக் கூச்சலிட்டால் உன்னைக் கொன்று தூக்கி வீசிவிட்டுப் போவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அது எங்களுக்கு கஷ்டமும் இல்லை” என்றான்.

”நான் ஒன்றும் செய்யவில்லை. எனக்கு ஒன்றும் தெரியாது நீங்கள் வேறு யாரையோ…” என்று நான் சொல்லும்போதே என் குரல் உடைந்தது. கண்ணீர் வந்து முட்டியது.

அவன் ”நீ யாரென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் என்ன பேசப்போகிறோம் என்றும் உனக்கு தெரியும்” என்றான்.

கைகூப்புவது நெஞ்சில் இரண்டு கைகளையும் சேர்த்துவைத்து நடுங்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. எங்கானாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஆட்டோ கங்கையின் ஆளொழிந்த கரையொன்றில் சென்று நின்றது. ஓரிரு இருசக்கர வண்டிகள் மட்டும் அவ்வப்போது எங்களைக் கடந்து சென்றன.

”இறங்கு” என்று அவன் சொன்னான்.

நான் இறங்கி நின்றதும் அவன் இறங்கி என் அருகே நின்றான்.

மிகப்பெரிய உடல் கொண்டவன். கைகள் கால்கள் எல்லாமே பெரியதாக இருந்தன. இரண்டு காதுகளிலும் வெள்ளியில் கடுக்கன் போட்டிருந்தான். இன்னொருவன் இறங்கி அவனுக்குப் பின்னால் நின்றான். இரு கைகளையும் தன் கால் சட்டைப்பைக்குள் வைத்திருந்தான்.

குண்டன் என்னிடம் ”உன்னிடம் விரிவாக எதையும் பேச வரவில்லை. நீ எங்கள் பெண்ணிடம் நட்பாக இருக்கிறாய் என்று தெரியும். அவள் உன்னை விடமாட்டாள் என்றும் தெரியும்” என்றான்.

நான் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவளுடைய தந்தையும் அண்ணாவும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் சொன்னால் அவள் கேட்கப்போவதில்லை. அப்படியென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீ அவளை விட்டுவிட வேண்டும். இன்றே இப்போதே திரும்பி உன் வீட்டுக்குச் சென்று உன் ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலேறி உன் சொந்த ஊருக்குப் போகவேண்டும். அங்கே ஒருநாள் நீ இருக்கலாம். மறுநாளே அங்கிருக்கும் வீட்டையும் காலி செய்துவிட்டு முற்றிலும் புதிய ஒரு ஊருக்கு சென்றுவிடவேண்டும். அவள் உன்னைத் தேடி அங்கு வந்தால் அங்கும் உன்னைக் கண்டுபிடிக்கக் கூடாது. இனி அவள் எத்தனை முயற்சி செய்தாலும் உன்னை கண்டுபிடிக்கவே கூடாது. புரிகிறதா?”

அவன் என் தோளில் வைத்த கை என்னால் சுமக்கமுடியாத அளவு எடைகொண்டிருந்தது. “அவள் வாழ்க்கையிலிருந்து நீ முழுக்கவே அகன்றுவிடவேண்டும். அவள் எப்படி உன்னைக் கண்டுபிடித்தாலும் அது உன்னுடைய தவறு என்று தான் எடுத்துக்கொள்வோம். அவள் உன்னைக் கண்டுபிடித்த இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் உன்னை வெட்டி உன் தந்தையை வீசியது போல சாக்கடைக்குள் வீசுவோம்” என்றான்.

அவன் குரல் எனக்கு மட்டும் பேசுவதுபோல் ஒலித்தது. சற்று குனிந்து நின்றிருந்த அவனுடைய பெரிய முகத்தின் கண்கள் உணர்ச்சியே இல்லாமல் கண்ணாடிக்கோலிகள் போலிருந்தன. ”நீ அந்தச் சாக்கடையிலிருந்து நீந்தி மேலெழுந்து வந்துதான் இவ்வளவு படிக்கிறாய். சாக்கடைக்கு வெளியே ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டுமென்றால் உனக்கு வேறு வழியில்லை. சாக்கடைக்குள் திரும்ப வேண்டுமென்றால் அது உன் விருப்பம்.”

நான் என் இருகைகளையும் நெஞ்சில் அழுத்தி நடுங்கிக்கொண்டு நின்றிருந்தேன்.

”சொல்வது புரிகிறதா?” என்று அவன் கேட்டான்.

நான் தலையசைத்தேன்.

”நான் ஒன்றும் வெறும் ரௌடி இல்லை. நானும் பட்டப்படிப்பு முடித்தவன்தான். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்கிறேன். இதில் பல கொலைகளை செய்வது போல் ஆகிவிட்டது. ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறேன். எனக்கு அஸ்வத் தேஷ்பாண்டே உதவி செய்திருக்கிறார். அவருக்கு நான் திரும்ப உதவி செய்யவேண்டும். செய்த கொலைகளுக்கு மேல் இன்னொரு கொலை என்றால் அது எனக்கு பெரிய பிரச்னை அல்ல. அத்துடன் உன்னைப் போன்ற ஒரு மகரை கொலை செய்து வீசினால் எவரும் கேட்கப்போவதில்லை. உன் தந்தையைக் கொன்ற வழக்கு கூட இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்” என்றான்.

”வேண்டாம், நான் விலகிக்கொள்கிறேன்” என்றேன்.

”முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும். புரிகிறதல்லவா? அதாவது இனி அவள் உன்னை தன் கண்களால் பார்க்கக்கூடாது. அது எத்தனை வருடம் ஆனாலும் சரி. ஒருவேளை அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, அறுபது எழுபது வயதாகிவிட்டிருந்தாலும் கூட திரும்ப அவள் உன்னைப் பார்க்கக்கூடாது. எப்போது அவள் மீண்டும் உன்னைப் பார்த்தாலும் அதற்கு மறுநாள் நீ கொலை செய்யப்படுவாய்” என்றான்.

”தெரிகிறது” என்றேன்.

அவன் மோவாயைத் தடவியபடி, ”சரி நாங்கள் கிளம்புகிறோம். நீ இங்கிருந்து நடந்து சென்று ஏதோ ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் செல். ஆனால் இது வெறும் பேச்சல்ல என்று உனக்குத் தெரியவேண்டும். இந்த நாளை நினைக்கும்போதெல்லாம் உனக்குள் ஒரு பயம் வரவேண்டும். இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இந்த பயம் ஒருமணி நேரத்தில் குறைந்துவிடும்.அசட்டுத் துணிச்சலும் வந்துவிடும்”

அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை வந்தது. ”உன் உடலில் நல்ல வலுவான ஒரு தழும்பு இருக்கவேண்டும். எப்போது அதைப்பார்த்தாலும் இந்த நாள் நினைவுக்கு வரவேண்டும்” என்றபின் திரும்பி ”பாய்…” என்றான்.

அவனுக்குப் பின்னால் நின்றவன் சட்டென்று முன்னால் வந்து ஓங்கி என் இடுப்புக்குக்கீழே உதைத்தான். இரு கால்களுக்கு நடுவே ஓர் அலைபோல் அடித்த வலியில் பல்லை இறுகக்கடித்து முனகியபடி நான் குப்புற விழுந்தேன். அவன் என்னைக் கீழே போட்டு காலை வீசி வீசி மிதித்தான். பிறகு என்னைப் புரட்டிப்போட்டு கத்தியால் என் முழங்கையை குத்தி புஜம் வரைக்கும் நீளமாக இழுத்துக் கிழித்தான். என்னை உதைத்துப் புரட்டிப் போட்டுவிட்டு திரும்பி ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

என் கையிலிருந்து சூடான ரத்தம் பெருகி ஆடை முழுக்க நனைந்தது. இன்னொரு கையால் காயத்தை அழுந்தப் பிடித்துக்கொண்டேன். விரல்கள் நடுவே ரத்தம் பெருகியது. வலிக்கவில்லை, ஆனால் ரத்தம் என்னை பதற்றப்படுத்தியது. உடலில் விழுந்த அடிகள் எங்கெங்கோ வலித்தன. இரண்டுமுறை எழ முயன்றபிறகு நான் மயங்கி மல்லாந்து விழுந்துவிட்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.