அன்றைய பார்வைகள்!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கம். என் பெயர் வினோத் ராஜ். நவீனத் தமிழிலக்கிய வாசகன். மிகச் சமீபத்தில், பழைய புத்தகங்களை விற்பனைச் செய்யும் நண்பரிடமிருந்து ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலை வாங்கியிருந்தேன்.

தமிழினி பதிப்பகம். முதல் பதிப்பு நவம்பர் 1999. எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பிரதியின் சிறப்பு என்னவென்றால், ‘ஞானக்கூத்தன்’ பெயர் நாவலின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. கூடவே, ‘இந்தியா டுடே மதிப்புரைக்கு’ என்றும் எழுதப்பட்டுள்ளது. தமிழினி பதிப்பகத்திடமிருந்தோ இந்தியா டுடே இதழிடமிருந்தோ மதிப்புரை வேண்டி, ஞானக்கூத்தனுக்கு வழங்கப்பட்ட பிரதி என்று அறிய முடிகிறது.

இப்பிரதியினுள், ஞானக்கூத்தன் இந்தியா டுடேவுக்கு எழுதிய மதிப்புரையின் Paper Cut மடித்து வைக்கப்பட்டுள்ளது. கூடவே, இராஜமார்த்தாண்டன் நாளிதழொன்றுக்கு எழுதிய மதிப்புரையின் Paper Cutஉம் மடித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உங்கள் பார்வைக்கு Scan செய்து அனுப்பியுள்ளேன். இராஜமார்த்தாண்டன் எழுதிய மதிப்புரையில் கடைசி வரிகள் மங்கலாக உள்ளன. அந்த மதிப்புரை வெளியான நாளிதழ் எதுவென உறுதியாகத் தெரியவில்லை. தினமணி என நினைக்கிறேன். ஜனவரி 05, 2000 அன்று வெளியாகியுள்ளது. அதைப் பென்சிலால் காகிதத்தில் குறித்து வைத்துள்ளேன்.

நன்றி.

வினோத் ராஜ்

தியாகத்தின் உயிர்ப்பலிகளின் அர்த்தம் என்ன?

ராஜமார்த்தாண்டன்

மனித வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. கலைத்துப் போட்ட நூல்கண்டைப் போலச் சிடுக்குகள் கொண்டது. பல்வேறு பார்வைகள் கோணங்களிலான தொடர்ந்த கேள்விகள், விவாதங்கள் மூலமாகவே தீர்வுகளை நோக்கிய முன்நகர்தல் சாத்தியம். ஆனால், தமிழ் நாவல்களோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு மிக எளிய, ஒற்றைப்படையான தீர்வுகளையே வாசகர் முன் வைக்கின்றன. விதிவிலக்குகள் மிகச் சிலவே அவற்றுள் ஒன்று ஜெயமோகனின் மூன்றாவது நாவலான பின்தொடரும் நிழலின் குரல்.

காலம் நிர்த்தாட்சண்யமானது. ஒரு காலகட்டத்தின் பெருங்கனவை – லட்சியத்தை – இன்னொரு காலகட்டம் முற்றாகச் சிதைத்து விடுகிறது. அப்படியானால் மனிதனின் கனவுகளுக்கு, லட்சியங்களுக்கு, தியாகங்களுக்கு அர்த்தம்தான் என்ன? மாபெருங்கனவான ரஷியப் புரட்சிக்குப்பின் ஸ்டாலினிய ஆட்சியின் போது, லட்சியத்தின் பெயரால் கொன்று குவிக்கப்பட்ட – சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களின் உயிர்ப்பலிகளுக்கு, அந்தக் கனவின் சிதைவுக்குப் பின் அர்த்தம் என்ன? கேள்விகள் தொடர்கின்றன. சார்பான கருத்துகளும் மறுதலிப்புகளும் விவாதங்களும் எதிர் விவாதங்களும் மேலும் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன.

ரப்பர் தோட்டத் தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவன் தோழர் அரு ணாசலம், கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிட நிர்பந்தத்தால், அவன்மீது மிகுந்த அக்கறை கொண்ட தோழர் கெ.கெ.எம்மின் தலைமையை எதிர்த்து நின்று வெற்றி பெறுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அங்கு நடந்த சித்திரவதைகள், உயிர்ப்பலிகள் பற்றித் தோழர் வீரபத்ர பிள்ளை திரட்டிய தகவல்கள் காரணமாக அவர் தொழிற்சங்கத்திலிருந்தும் கட்சியின் வரலாற்றிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட விவரம் அறிகிறான் மனம் குழம்பி, வீரபத்ர பிள்ளையின் எழுத்துகள் மூலமாகவும் ரஷியப் புரட்சிக்குப்பின் கொல்லப்பட்ட புகாரின் வாழ்க்கையினூடாகவும் விவாதங்களினூடாகவும் பயணம் மேற்கொண்டு, இறுதியில் சில தெளிவுகளை நோக்கி நகர்கிறான். ’என் மனம் குழந்தையையே கடவுளாக ஏற்கும். அரைஞாண் குலுங்க, சிறுபண்டிய சைய, குழல் சுருள் பறக்கச் சிரித்து வரும் பெண் குழந்தையை’ என்கிறார் ஒரு சந்தர்ப்பத்தில் நாவலின் கதாபாத்திரமான எஸ்.எம்.ராமசாமி. குழந்தைகளின் களங்கமின்மையும் பெண்களின் கருணையுமே ஆண்கள் நடத்தும் புரட்சிகளையும் போராட்டங்களையும் ஓரளவிலேனும் நல்வழிப்படுத்த முடியும் என்னும் பார்வையை நாவலினூடான பயணம் உணர்த்துகிறது. குழந்தை மனைவி என்னும் பிணைப்பு இல்லையேல் அருனாசலத்தின் வாழ்க்கையும் வீரபத்ர பிள்ளையைப் போல இருளில் மூழ்கியிருக்கக்கூடும் இறுதியில் மீட்பர் வந்தபோது, அவரது எளிய கோலத்தால் அவரை, நம்ப மறுக்கிறார் பாதிரியார்.

ஆனால்-குழந்தைகள்தாம் முதலில் மீட்பரைப் புரிந்துகொண்டு அவரிடம் செல்கின்றன. புகாரினினைப் பிடித்து மேகங்களுக்குத் தூக்குவதும் லிஸிக் குழந்தைதான். இப்படி ஒரு விரிவான தளத்தைக் கொண்டுள்ளதால், இந்த நாவல் நேர்கோட்டில் அமையாமல், வரலாற்று நிகழ்வுகள், அதுதொடர்பான சிறுகதைகள். நாடகங்கள், கவிதைகள், விவாதங்கள். எதிர் விவாதங்கள் எனப் பல நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாசக அனுபவம் ஆழமும் விரிவும் கொள்கிறது.

நாவவில் வரும் ரஷிய வரலாற்று நிகழ்வுகளும் இன்றைய இந்திய அரசியல் சித்தாந்தம் மற்றும் இலக்கிய விவாதங்களும் ஜெயமோகனின் அறிவின் சாமர்த்தியமும் —- நாவலின் கலாபூர்வமான தேவைகளாகி, வாசகனுள் பல்வேறு சிந்தனைகளையும்  தேடல்களையும் புரிதல்களையும் விரிவுபடுத்துவனவாகவே அமைந்துள்ளது. இது நாவலின் சிறப்பம்சம்.

நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் ஜெயமோகனின் உத்வேகம் மிகுந்த மொழிநடை. அரசியல் சித்தாந்த விவாதங்கள், அருணாசலத்துக்கும் அவன் மனைவிக்குமிடையேயான ஊடலும் கூடலுமான இயல்பான தாம்பத்திய வாழ்க்கை, சடங்குகளின் விவரணை, குடலைப்பிடுங்கும் பசியில் வீரபத்திர பிள்ளையின் மனநிலைச் சித்திரிப்பு, அருணாசலத்தின் மனப்பிறழ்வின் கட்டறுந்த ஓட்டங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் தொழிற்சங்கத் தோழர்களின் உரையாடல்கள் —- சைபீரிய வதைமுகாம், உயிர்த்தெழுதல் காட்சி என நாவலில் வரும் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப மொழிநடையில் வேறுபாடு காட்டி மொழியின் வெளியீட்டுச் சாத்தியப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார் ஜெயமோகன்.

கம்யூனிஸ சித்தாந்தத்தின் செயல்பாட்டை மட்டுமே விமர்சிக்கும் நாவல் அல்ல இது ஒழுக்கம் அறம், சமயம், அரசியல் சார்ந்த அனைத்துச் சித்தாந்தங்களும் அவை நிறுவனங்களாகிச் செயல்படுத்தப்படும்போது பெரும் அழிவுகளை ஏற்படுத்தின இவற்றைச் சித்திரிப்பதன் மூலம் மானிட, அறம் குறித்தான ஆழ்ந்த தேடல்களின் வெளிப்பாடுதான் இந்த நாவல் இது. நாவலின் பல இடங்களில் உரையாடல்கள் மூலமாகச் சுட்டிக்காட்டவும் படுகிறது. ஒரு பேரழிவை நிகழ்த்திய சமீபத்திய வரலாற்று நிகழ்வு என்றவகையிலேயே, மானிட அறம் குறித்தான தேடலுக்குப் பொருத்தமான பின்னணியாக ஸ்டாலின் காலத்திய சோவியத் வரலாறு நாவலில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

காந்தி, தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, புகாரின், சுந்தர ராமசாமி. ஞானி, ஜெயமோகன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் கதாபாத்திரங்களாக வந்து விவாதங்களிலும் கலந்துகொள்வது வாசகரை நாவலினுள் மிக நெருக்கமாக உறவு கொள்ள வைக்கிறது தமிழில் இதுவரை வெளிவந்துள்ள அரசியல் நாவல்களில் விரிவான தளத்தில் இயங்கும் முதன்மையான நாவல் இதுதான்.

நாவலின் சம்பவங்களுக்குப் பொருத்தமான அற்புதமான வண்ண ஓவியங்களுடன் கூடிய வெகுநேர்த்தியான, சிரத்தையான அச்சமைப்பு. மிக முக்கியமான இந்தக் கலைப்படைப்புக்கு மேலும் கௌரவம் சேர்க்கிறது.

ராஜமார்த்தாண்டன்ஜனவரி 05, 2000

வரலாறு தத்துவம் புனைவு – விரிவான விவாதங்களையும் பலவிதமான புனைவுகளையும் உள்ளடக்கிய நாவல்

அச்சில் 700 பக்கங்களுக்கு மேல் பரவி ஓடும் ஜெயமோகளின் இரண்டாவது நாவல் இது. தாவலின் பருமனைப் பார்த்தாலே ஆசிரியரின் உழைப்பு சொல்லிக் காட்டாமலே விளங்கக் கூடியது. ஆனால் அந்தப் பருமனைத் தருவது கதை என்பதைக் காட்டிலும் உள்ளே அனுமதிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வரலாறு, கம்யூனிச தத்துவத்தைப் பற்றிய விவாதம், இன்னும் அது தொடர்பான புனைவுகள் என்பது பொருந்தும். 12 பெரிய தலைப்புகளும் அதற்குள் சிறு அத்தியாயங்களுமாக அமைந்திருக்கும் இத்தாவல் விறுவிறுப்பாகவும் சலிப்பாகவும் இயங்குகிறது. சலிப்புக்குக் காரணம், ஆசிரியர் வீரபத்திரப்பிள்ளை என்ற பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்ய மேற்கொண்ட யுக்தி. ஆனால் இந்த சலிப்பை அகவாரசியமாகக் கொண்டுவிடக்கூடாது. விளைவு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை வாசகனின் அவசரத்துக்கு இடம் தராததால் ஏற்படும் சலிப்பு. இது பிரமிக்கத்தக்க வகையில் நேராக்கப்படுகிறது. தொழிற்சங்கிகளான அருணாச்சலம். கெ.கெ.மாதவன் நாயர், வீரபத்திரப்பிள்ளை, ரஷ்யத் தலைவரான புகாரின் இவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கம் பெறுகிறார்கள். இவர்களில் பின்னிருவர் அரூபிகள். கெ.கெ.மாதவன் நாயர் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறார் என்றால், அருணாசலம் அதிநுட்பமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நாவலில் ’மட்கி’ என்ற ஒரு சொல்தான் ஜெயமோகனை அளவுக்கு அதிகமாகப் பற்றிக்கொண்டுள்ளது. ஆனால் எழுதுகை என்பதில் சிறிதளவும் சோர்வடையாத இந்த நாவல் பல சந்தர்ப்பங்களில் மனதை நெகிழ வைக்கிறது. ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வதெப்படி என்ற நாடகம் ஒரு ஜன்னி கண்ட தன்மையில் உருவாகிறது. த்வன்யா லோகம் என்ற ஸம்ஸ்கிருத நூல் ஸ்தாயி பாவம், சஞ்சார பாவம் என்று பேசும். அதற்கு இந்த அத்தியாயம் அற்புதமான எடுத்துக்காட்டு. கடுங்குளிர் கவிதைகள் என்ற இதில் உள்ளடங்கிய தொகுப்பில் விடுதலை என்ற கவிதை சில்லிட வைப்பதாகும். கவிதைகள், நாடகங்கள், குறிப்புக்கள் தவிர கடிதங்களும் உறுப்புக்களாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவலில், தமிழின் முதல் நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம். கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் முதலியவற்றிலேயே கடிதங்கள் கதை மாந்தர்களின் பரிவர்த்தனைக்குக் கருவியாக்கப்பட்டுள்ளன. ’57 நெ. மாதா கோவில் வீதி, காரைக்கால், ஆதித்ய வாரம்’ என்று வலது கைப்பக்கத் தலைப்பில் குறிப்பிட்டு அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம். ஒரு கடிதத்தை வரைகிறது. ஆதித்ய வாரம் என்றால் ஞாயிற்று வாரம்.

ஒய்யாரத்து சத்து மேனோன் மலையான மொழியில் எழுதிய இந்துலேகா (1889) என்ற நாவலில் ஒரு அத்தியாயம் முழுவதும் உலக விசாரம் செய்யப்படுகிறது. நாத்திக வாதமும் இந்திய தேசிய காங்கிரஸும்தான் இந்த அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகின்றன. ஆங்கிலம் படிப்பது ஆபத்தானது என்றால் அந்த ஆபத்தை தான் வரவேற்பதாகக் கூறிய சந்து மேனோனின் கருத்துக்கு நேர்மாறாக தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல என்ற வேதநாயகம் பிள்ளை தனது பாத்திரமான ஞானாம்பானைப் பேச வைக்கிறார். அத்தியாயம் 41. 42களில் நீதித்துறைப் பற்றியும் கல்வித்துறை பற்றியும் செய்யப்படும் இந்தப் பிரசங்கங்களைக் குறித்து இவ்வளவும் தான் செய்த பிரசங்கம் என்று யாராவது எண்ணிவிடப் போகிறார்களே என்று கடைசியில் ’என்றாள் ஞானாம்பாள்’ என்று அத்தியாய இறுதியில் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். இப்படி க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். இந்து லேகாவின் அத்தியாயத்தைப் பற்றி, அந்த அத்தியாயம் கதையின் மேன்மைக்குத் துணைபுரியவில்லை என்று கெ.அய்யப்பப் பணிக்கர் குறிப்பிட்டிருக்கிறார். தங்களது அன்றாடத் தன்மையுள்ள வாழ்வைத் தவிர கதை மாந்தர்கள் இலக்கிய, அரசியல். ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு அவற்றைப் பற்றி விவாதிப்பது வாசகர்களுக்குப் பிடித்தமான விஷயமல்ல. பிரதாப முதலியார் சரித்திரம் மற்றும் இந்துலேகா இரண்டிலும் அதற்குரிய நியாயங்களை ஆசிரியர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. கதைக்கு மாறான செய்திகளைக் குறித்த ஆட்சேபம் நியாயமானதுதான். ஆனால் கதாபாத்திரத்தின் வாழ்க்கையே அன்றாடத் தன்மையிலிருந்து விலகியிருக்கிற பட்சத்தில் இந்தத் தடைக்கு ஏற்பில்லை. ஜெயமோகனின் இந்த நாவல் இவ்வகையைச் சேர்ந்தது. அன்றாட வாழ்க்கை பின்தள்ளப்படுவதும் அது தனக்குரிய இடத்தைப் பற்றிக் கொள்ளத் தீவிரமாகப் போராடுவதும் நாவலை அசாதாரணமாக்குகிறது. ஆண்களே பெருமளவு பங்கு பற்றும் நிறுவனங்களில் காம விகாரங்கள் தலையெடுப்பது பற்றியும் இந்த நாவலில் பேசப்படுவது கவனிக்கப்பட வேண்டும். இதைத் தவிர விரசங்களும் உண்டு. விரசமும் ரசாபாசமும் நவீன இலக்கியத்தின் அறிகுறிகளாகிவிட்டன தொடக்கத்திலிருந்தே. இந்த நாவலைப் பலவிதமாகப் படிக்கலாம். 70ன் தொடக்கத்தில் ஸோல் ஸெனிட்சின் எழுதிய நாவல்களைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு இந்த நாவலைப் படித்து முடித்தபோது ஏற்பட்டது. ஜெயமோகனின் முந்தைய நாவலான விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. அதையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது இந்நாவல்.

ஞானக்கூத்தன், இந்தியா டுடே, மே 17, 2000

பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க

contact@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.