ஒரு நினைவு, ஒரு முகம், ஒரு நூல்

சென்ற வாரம் எர்ணாகுளத்தில் இருக்கையில் எனக்கு ஓர் வாட்ஸப்  தொலைபேசி அழைப்பு. ஜெர்மனியில் இருந்து. குரல் எனக்கு தெரியவில்லை. “மாத்ருபூமியில் இருந்து எண்ணை வாங்கினேன்… என் சொந்தக்காரர் ஊரில் மாத்ருபூமி ஏஜெண்ட். அவர் வாங்கித்தந்தார். சுகமா?”

“யார்?” என்றேன்

“நான் –” என்றார்.

பெயரும் நினைவிலெழவில்லை. “மன்னிக்கவும், நான் மறந்துவிட்டேன்….நாம் சந்தித்து நீண்ட நாளாகிவிட்டிருக்கிறது என நினைக்கிறேன்”

“ஆமாம், நாற்பதாண்டுகள். சரியாகச் சொன்னால் 1984 வாக்கில் நாம் சந்தித்தோம்” என்றார். “இடம் சொன்னால் ஞாபகமிருக்கும், சென்னையில்…தொழிலதிபர் – இல்லத்தில். அன்றைக்கு நீங்கள் அரைச்சாமியார்”

என் மூளை உலுக்கிக்கொண்டது. முகம் நேர் முன்னால் என வந்து நின்றது. குரல், கண்களின் ஒளி, சிரிப்பு எல்லாமே…

“ஆ!” என்றேன். “மறுபடியும் பேசவே இல்லை”

“ஆமாம், பேசியும் நாற்பதாண்டுகள் ஆகிறது… 1985 ல் பேசினோம்… அதன்பிறகு பெரிய வாழ்க்கை…நீண்ட காலம். வாழ்க்கையே முடியப்போகிறது…எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்கள் என்று தெரியும். புகழ்பெற்றிருக்கிறீர்கள். எல்லாரும் பேசுகிறார்கள்… அமெரிக்காவிலேயே புத்தகங்கள் வரப்போகின்றன”

“எப்படித்தெரியும்?”

“நான் உங்கள் இணைதளத்தை வாசிப்பேன்”

“அப்படியா?”

“ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசிப்பேன்… இணையம் வந்தபிறகுதான் ஒரு முறை தற்செயலாக உங்களை கண்டுபிடித்தேன். 2017ல்… சும்மா பெயரை அடித்து தேடினேன். வந்துவிட்டது. தொடர்ச்சியாக வாசிக்கிறேன். எல்லாவற்றையும் அல்ல. எனக்கு பெரிய அளவில் இலக்கிய ஆர்வமோ வாசிப்போ இல்லை. கிறிஸ்தவ இலக்கியம் மட்டும்தான் வாசிப்பேன். உங்கள் சிறிய கட்டுரைகளை வாசிப்பேன். பயணக்கட்டுரைகளை வாசிப்பேன்.”

“எங்கே இருக்கிறீர்கள்?”

“ஜெர்மனியில்… நான் 1990 லேயே இங்கே வந்துவிட்டேன். என் முன்னாள் கணவர் இங்கே வேலைபார்த்தார். நானும் இங்கே வந்து நர்ஸாக வேலைபார்த்தேன். இப்போது மகனுடன் இருக்கிறேன். மகனுக்கு முப்பத்த்திரண்டு  வயது. பேரனுக்கு நான்கு வயது. பேத்திக்கு ஒரு வயது. இங்கே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வயதானவர்களுக்கு நல்ல கிராக்கி. ஆகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்”

“கணவர்…”

“அவர் ஜெர்மன் குடிமகன், மலையாளி. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். திருமணமாகி ஆறாண்டுகளிலேயே விவாகரத்து ஆகிவிட்டது. அவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டார், சென்ற ஆண்டு இறந்துவிட்டார். நான் அடக்கநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்…”

“நீங்கள் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளவில்லையா?”

“இல்லை…எனக்கு ஆர்வமில்லை. நிறைய பேர் ஆசைப்பட்டார்கள். பிடிக்கவில்லை…”

“ஏன்?”

“நான் பக்தியில் ஈடுபாடுகொண்டுவிட்டேன்… மகனை வளர்த்து ஆளாக்கினேன்”

“அப்படியா?”

“உண்மையைச் சொல்லப்போனால் ஆண்களிடம் மனம் செல்லவில்லை. சலிப்பூட்டுகிறார்கள்… ஆகவேதான்… ஏனென்று உங்களுக்கும் தெரியும்”

“எனக்கா?” என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “உங்களுக்கு என்ன வயது?”

“அறுபத்திரண்டு…” பின்னர் சிரிப்பு. “உங்களை விட ஒரு வயது குறைவு”

“ஓகோ”

“ஜெர்மனியில் நான் இருக்கும் நகர் வழியாகச் சென்றிருக்கிறீர்கள். அதுவும் தெரியும்”

“அப்படியா?”

“ஆமாம், மலையாளத்தில் பாஷாபோஷிணியில் என்னைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். உறவிடங்கள் தொகுதியில் அந்த கதை இருக்கிறது. அது இருபதாண்டுகளாகப் பதிப்பில் உள்ளது. ஆனால் நான் கேள்விப்படவே இல்லை. நான் சொன்னேனே, என் வட்டம் வேறு. முழுக்க முழுக்க கத்தோலிக்க வட்டம் இது… இப்போது இந்த நூலை வாசித்தேன்… ஆங்கிலத்தில் வந்திருப்பதனால்தான் வாசித்தேன். எனக்கு மலையாள எழுத்துக்களே மறந்துவிட்டன. நான் மலையாளம் பேசுவதுகூட மிகக்குறைவு. ஊருக்கு வந்தது மகன் திருமணத்தின்போதுதான்…”

“எது?”

“சங்கீதா புதியேடத்து எழுதியது… இல்லை மொழிபெயர்த்தது… ”

Of Men Women and Witches

“ஆமாம், அந்த புத்தகம் பற்றி உங்கள் இணையதளத்தில்தான் வாசித்தேன். ஒரு பிரதி வாங்கி அனுப்பும்படி அண்ணன் மகனிடம் சொன்னேன். அவன் அனுப்பினான். அதில்தான் என்னைப் பற்றிய கட்டுரையை வாசித்தேன்”

நான் பேசாமலிருந்தேன். என்ன சொல்வது? மன்னிப்பு கோரவேண்டுமா என்ன?

“சங்கீதா நன்றாக மொழிபெயர்த்திருந்தார்”

“ஆம்”

“எளிதாகப் படிக்க முடிந்தது”

“ஆமாம்”

மீண்டும் ஒரு நீண்ட மௌனம்.

“எல்லாம் ஏசுவின் விருப்பம்”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு பேசியபோது அவர் குரல் மாறியிருந்தது. “அன்று நீங்கள் எடுத்த முடிவு ஆழமான ஒன்று. என் அதற்குப்பிந்தைய வாழ்க்கையே சான்று .  அதை தற்செயலாக எடுத்தீர்கள் என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அது பிழை. அது தற்செயல் அல்ல. பிற்காலத்தில் நீங்கள் என்னவாக ஆகவேண்டுமோ அது உங்களுக்குள் கரு வடிவில் இருந்திருக்கிறது. உங்கள் ஆழ்மனதுக்குத் தெரியும். அந்த மனமே அம்முடிவை எடுத்தது. அதைத்தான் நான் ஏசுவின் ஆணை என்று சொல்கிறேன்” என்றார்.

“ஆம்” என்றேன்.

“நாம் மீண்டும் பேச வாய்ப்பில்லை என நினைக்கிறேன்” என்றார். சிரித்து “அதுதான் ஏசுவின் ஆணை என்று படுகிறது”

நான் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை

“கர்த்தர் உடனிருக்கட்டும்…”

“நன்றி” என்றேன்

போன் தொடர்பு அறுபட்டபோது நான் எண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒன்று தோன்றி எண்ணையும், தொடர்புத்தகவல்களையும் முழுமையாக அழித்தேன்.சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை.

நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி. பெருமூச்சுடன் எழுந்து வெளியே நடக்கத் தொடங்கினேன். நல்ல இரவு. கோடைகாலத்தின் விண்மீன்கள் நிறைந்த இருண்ட வானம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.