Jeyamohan's Blog, page 132
April 9, 2025
புதைக்கப்படும் பண்பாடு, கடலூர் சீனு
இனிய ஜெயம்
சென்ற வாரம் புதுச்சேரி நண்பர்களுடன் ஒரு சிறிய உலாவாக, அனந்தமங்கம் சமணர் குன்று, கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம், மாமண்டூர் பல்லவர் குடைவரைகள், உத்திரமேரூர் கல்வெட்டு மண்டபம், அச்சிறுப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் ஆலயம் இவற்றைக் கண்டு வந்தேன். நான் சில முறை சென்றது தான் என்றாலும் புதுச்சேரி நண்பர்கள் யாரும் இந்த இடங்களை பார்த்ததில்லை என்பதால் அவர்களோடு மீண்டும் ஒரு பயணம்.
பல வருடம் முன்பாக அனந்தமங்கலம் சென்றது. அங்கே இருந்த பழமையான சிவன் கோயில் முற்றிலும் காணாமல் போய், ஏதோ பெரு முதலாளி தனியார் டிரஸ்ட் வழியே கட்டிய கோமாளித்தனமான வண்ணமயமான குப்பை கூடை போன்ற ஒரு கல் கட்டமைப்பு ஒன்று அங்கே இருக்கிறது. பேய் பிடித்த இளம் பெண் தெய்வம் வாழும் கோயிலுக்குள் வர முரண்டு பிடிப்பதை போல சரவணன் கோயிலுக்குள் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தார். (சீக்கிரம் போங்க, பெருமாளுக்கு அபிஷேகம் செகண்ட் ஃப்ளோர்ல என்றார் கோயில் வாசலில் பூ விற்கும் பெண்) வாசல் வளாகத்தில் 15 அடி உயரத்தில் தலை பெருத்த உடல் சிறுத்த சிவன் பார்வதி சிலை, அவர்கள் பின்னே பிரீடேட்டர் படத்தில் அர்னால்டு உடன் சண்டை போடும் வேற்று கிரகவாசி போல் ஏதோ ஒன்று பூமியைப் பிளந்து நின்றிருந்தது, மணிமாறன் தான் அடையாளம் கண்டு சொன்னார், அது ஈஷா யோகா மையத்துக்காக ஜக்கி வடிவமைத்த ஆதியோகி சிலையின் ரிப்ளிகா. அந்த இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள, முன்பு அங்கே இருந்த கோயிலில் ஒரு கல்வெட்டு உண்டு. முன்பு அங்கே பழைய கோயில் இருந்தது என்பதையும் அங்கே இந்த இடத்தின் வரலாற்றை அறிய கல்வெட்டு இருந்தது என்பதையும் இனி தமிழ் விக்கி வழியாக மட்டுமே ஒருவர் அறிந்து கொள்ள முடியும். இப்போது அந்த கல்வெட்டு எங்கே என்று எவரும் அறியார்.
அனந்தமங்கலம் சமணர் குன்று, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அனந்த நாதருக்காக அமைந்த அபூர்வமான ஒரு வழிபாட்டு இடம். நன்கு வேலி கட்டப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்படும் இடம். வருடம் இரண்டு வழிபாட்டு விழாக்கள் நடப்பதாகவும் தெரிகிறது. மிக அழகான எழில் கோலத்தில் நிற்கும் அம்பிகா யட்சி புடைப்பு சிற்பத்தை நெடுநேரம் கண்டு ரசித்தேன். நண்பர்கள் தமிழ் விக்கி இயக்கி அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் இதோ இது அதுதான் என்று அடையாளம் கண்டு அது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் அங்கே இருந்து விட்டு கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் சென்றோம்.
இந்தக் கோயில் குறித்து மிக விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜேந்திர சோழன் கங்கையை கொண்டு வந்த வெற்றியை கொண்டாட அவரது குரு ஈசான சிவ பண்டிதர் முன்னின்று கட்டிய கோயில். கோயில் கட்டிட கலையில் ஆர்வம் கொண்டவர்கள் எவருக்கும் மிக முக்கியமான கோயில் இது. ஆதிட்டானம் பாதவர்க்கம் கோஷ்டம் வலபி பூத வரிகள், கபோதம், சாலை வரிகள் நாசிகைகள் கர்ண கூடுகள் முதல் கலசம் வரை கோயில் கலையில் பயின்ற ஒவ்வொன்றையும் கண்களால் தொட்டு தொட்டு அறியும் வண்ணம் முழுமை கொண்ட கச்சிதமான சிறிய கோயில். உள்ளே கோயிலை பார்த்துவிட்டு
வெளியே புல்வெளி வளாகத்தில் இருந்த மகிஷாசுர மர்த்தினி, தட்சிணாமூர்த்தி சிலைகளை பார்த்துவிட்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்தோம். ” அண்ணா நீங்க பதறி பதறி எழுதும் போதெல்லாம் எனக்கு புரியல, இப்போ நேர்ல பாக்கும்போது தான் புரியுது, இந்த ஒட்டு மொத்த கோயிலுக்கே மையம் இந்த விமானம்தான். இதுல ஒருத்தனுக்கு கிளாம்ப் அடிச்சு ஓட்டை போட்டு இந்த குழாயை செருகி வைக்கணும்னு தோனிருக்கு பாத்தீங்களா” என்று சொல்லி புஷ்ப நாதன் சுட்டிக் காட்டினார். விமான உச்சி கிரீவ கோஷ்டத்தில் ஏதோ மஹா ஃபிட்டர் கலைஞன் ஒருவன் அந்த வேலையை செய்திருந்தான். விடுங்க பாஸ் இதெல்லாம் சகஜம் என்று ஆறுதல் சொன்னேன்.
சற்று நேரம் கோயிலில் இருந்துவிட்டு மாமண்டூர் பல்லவர் குடைவரைகள் சென்றோம். இது குறித்தும் மிக விரிவாக ஆவணம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் முதல் குடைவரைகளில் ஒன்று. ஒரே தொடராக அடுத்தடுத்து அமைந்த நான்கு குடைவரை வளாகங்கள். தூண்கள் கருவறை அமைப்புகள் என மர அமைப்பிலிருந்து கல் அமைப்புக்கு வடிவங்கள் முதன் முறையாக மாறிய விதத்தை, இங்கே ஒருவர் கண்டு அறிய முடியும். நாங்கள் சென்றிருந்தபோது யாரோ ஒரு வரலாற்று ஆசிரியை தனது மாணவர்களோடு வந்திருந்தார். எல்லோருமே ஆர்வம் கொண்ட யுவன் யுவதிகள் என்று தெரியவந்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த ஆசிரியை வழியே மீண்டும் ஒரு உரையாடலாக இந்தக் குடைவரைகளின் கட்டடக்கலை, இங்குள்ள தமிழி கல்வெட்டுக்கள், இதன்பின் உள்ள வரலாறு இவற்றை பேச கேட்டு அறிந்து கொண்டோம்.
மண்டையைப் பிளக்கும் வெயிலில் சற்று நேரம் அங்கே இருந்து விட்டு, மதிய உணவுக்காக உத்திரமேரூர் வந்தோம். ஓட்டுக் கூரையின் கீழ் அமைந்த பழைய கட்டிடத்தில் இயங்கிய ஹோட்டல் ஒன்றில் மிக ருசியான மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, ஊரின் மையத்தில் அமைந்திருந்த உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் அமைந்த பெருமாள் கோயில் மண்டபத்தில் சென்று பிரமாதமான மதிய தூக்கம் ஒன்று போட்டோம். புஷ்பநாதன் மட்டும் வளாகத்தை சுற்றி சுற்றி வந்து முன்பு அவர் பாட புத்தகத்தில் படித்த குடவோலை முறை தேர்தல் கல்வெட்டை கண்டுபிடித்து கல்வெட்டு ஆய்வாளர் போலும் நெடுநேரம் வாசித்துக் கொண்டிருந்தார்.
மதிய உறக்கம் முடித்து மூன்று முப்பது மணிக்கு அச்சிருபாக்கம் வந்து சேர்ந்தோம். நெடுஞ்சாலைக்கு ஓரத்தில் குன்றின் மேல் சிவ சிவ என்ற மிகப்பெரிய பதாகையை கண்டோம். அங்கே குன்றின் மேல் சில வருடம் முன்பு திடீரென கிளம்பி வந்த ஒரு கோஷ்டி பிரம்மாண்ட சிலுவை ஒன்றை நட்டு வைத்து, இது என் இடம் என்று அறிவித்து அடுத்த கட்டப் பணிகளை துவங்கி மக்களை நல்வழிப்படுத்த துவங்க, வெகுண்டெழுந்த வேறொரு கோஷ்டி அங்கே முன்னரே இருந்த சிறிய சிவலிங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இது என்னிடம் கிளம்பி போயா என்று கோதாவில் இறங்க,…
சரிதான் என்று ஒரு 200 300 படி கடந்து அந்த மலை மேல் ஏறினோம். உச்சியில் படு கேவலமாக வண்ணம் பூசப்பட்டு நின்றிருந்த ஒரு 10×10 சதுர இரும்பு டப்பாவின் ,(அதன் கதவுகளில் மிக விநோதமான வடிவில் வரையப்பட்ட முருகனும் பிள்ளையாரும்) மையத்தில் பரிதாபமாக லிங்க வடிவில் குந்தி இருந்தார் வஜ்ரகிரீஸ்வரர்.
மேலிருந்து பார்க்க அச்சிறுப்பாக்கத்தின் மொத்த காட்சியும் காண முடிந்தது. ஊரின் நடுவே தேவார மூவரால் பாடப்பெற்ற ஆட்சிபுரீஸ்வரர் கோயில் நின்றிருந்தது.
ஐந்து மணிக்கு குன்றை விட்டு கீழே இறங்கி ஊருக்குள் சென்று கோயிலை அடைந்தோம். தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோயில். அப்பர் சுந்தரர் சம்பந்தர் பாடிய கோயில். பிரபலமான அப்பமோடு அவல் பொரி பாடலை அருணகிரி நாதர் இங்குள்ள விநாயகர் மீதுதான் பாடினார் என்று நினைக்கிறேன். 2000 இல் எப்போதோ வந்த போது உள்ளதை விட மாறி இருந்தது கோயில். கான்றாஸ்ட் வண்ணங்கள் பூசி கோபுரம் முதல், தரை தளம் வரை அதி சுத்தமாகவும் பளிச் என்றும் இருந்தது கோயில். ஆதீன நிர்வாக கோயில்கள் பிறவற்றை போலவே கோயிலின் உள்ளும் புறமும் எங்கெங்கும் தகர ஷெட்டுகள். கோபுரத்தின் அழகை அதன் சுதை சிற்பங்களை உள்ளே வெளியே என எங்கும் கோபுரம் அருகே நின்று பார்க்கவே முடியாது.
6 மணி வரை கோயிலில் இருந்துவிட்டு புதுவை நோக்கி கிளம்பினோம். பயணத்தின் வழியில் மொபைல் இயக்கி தலைப்பு செய்திகளை மேய்ந்தேன். ஒளரங்கசீப் கல்லறை மாட சர்ச்சை செய்தி கண்டேன். இது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல மெல்ல மெல்ல நிகழ்ந்து வரும் ஒன்றுதான் இது. இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்று கர்லா குடைவரை. மும்முறை சென்றிருக்கிறேன். மூன்றாம் முறை செல்லும்போது அந்த குன்று மொத்தாமாகவே அங்குள்ள நாட்டுப்புற வழிபாட்டு அம்மன் கோயில் நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்ப்யபட்டு விட்டது. எங்கெங்கும் கோயில் கடைகள். வலிந்து கொண்டு வந்து குவிக்கப் படும் பக்தர்கள். சாமியாட்டங்கள். (அங்கே உள்ள குடைவரையில் தனக்கொரு கோயில் கட்டும்படி ஒரு சாமியாடி அம்மா மேல் இந்த அம்மா ஆவேசித்து உத்தரவு அளித்து விட்டாள்) அத்தனை பிரம்மாண்ட குடைவரை அங்கே இருப்பதை இப்போது அங்கே செல்பவர்கள் தேடி தான் கண்டு பிடிக்க வேண்டும். சாமியாடி பெண்கள் குடைவரைக்குள் வந்து விடாது இருக்க, பெரும்பாலும் குடைவரை பூட்ட பட்டே இருக்கும். குடை வரைக்கும் முன்பாக அப்படி அங்கே ஒரு குடைவரை இருக்கிறது என்றே வெளியே தெரிந்து விடாத படிக்கு அங்குள்ள அம்மன் முகம் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான டிஜிட்டல் பேனர் கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் இன்னும் கொஞ்சம் வருஷம்தான். அங்கே அப்படி ஒரு குடைவரை இருக்கிறது என்பதை அருகர்களின் பாதை நூல் போன்ற குறிப்புகள் வழியாக மட்டும் தான் இனி ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட விஷயங்களில் வேறொரு பரிமாணம்தான் இத்தகு வேறு வகையான போராட்டங்கள். கொஞ்ச வருடம் முன்பு வீர சிவாஜி வதம் செய்த அப்சல் கான் கல்லறையை அங்கிருந்து பெயர்த்தெடுத்து வீச வேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. யாரோ ஒருவர் குறுக்கே புகுந்து அந்த கல்லறை மாடத்தை கட்டிக் கொடுத்ததே வீர சிவாஜி தான் என்ற வரலாற்று தகவலை அந்த கூட்டத்துக்கு புரிய வைக்க அன்று அந்த கல்லறை மாடம் தப்பியது. ஆனால் பிரச்சனை தொடர கோர்ட் இது சர்ச்சைக்குரிய பகுதி எவரும் வரக்கூடாது என்று உத்தரவு போட்டு அந்த இடத்தை பூட்டி வைத்தது. இப்போது அந்த இடம் என்ன நிலவரத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் லாபம் எவருக்கு என்பது இங்கே தெளிவு.
இதே விளையாட்டு தான் அவுரங்கசீப் கல்லறை மாட சர்ச்சையிலும் நடக்கிறது. பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போனால் இறுதியாக என்ன ஆகும். இது சர்ச்சைக்குரிய பகுதி யாரும் வரக்கூடாது என்று உத்தரவு போட்டு கோர்ட் அந்த இடத்தை பூட்டி வைக்கும். வழக்கம்போல லாபம் எவருக்கு என்பது வெளிப்படை.
இதேதான் தமிழ் நிலத்திலும் முருகன் கோயில் குன்றினை ஏதோ சிக்கந்தர் மலை என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பி அங்குள்ள தர்க்கா வழிபாட்டுக்கு எதிராக இப்படி ஒன்றை நிகழ்த்த பார்க்கிறார்கள். இதில் உண்மையான பலிகடா என்பது (கர்லா குடைவரயில் குரல் அற்று அழியும் பௌத்த வரலாறு போல) தற்கா வணக்கமுறையை கை கொள்பவர்களும் அந்த தர்க்கா வணக்க காலாச்சாரமும்தான். சர்ச்சையில் சிக்கி தர்கா கையை விட்டுப் போனால், அந்த வழிபாட்டில் உள்ளவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே புகலிடம் மூலநூல் வாதம் பேசும் தரப்பு மட்டுமே. இதே நிலை இப்படியே ஒரு 10 வருடம் தொடர்ந்தால் வரலாறு குறித்தோ பண்பாடு குறித்தோ ஆத்மீகம் குறித்தோ எந்த அறிவும் அற்ற, வன்முறை அரசியல் வெறி மட்டுமே கொண்ட ஒரு பெரும்பான்மை மூடர் வசம், ஆத்மீகம் கலை பண்பாடு வரலாறு என நமது பாரத செல்வங்கள் அனைத்தும் சென்று விழும்.
எது குறித்தும் எந்த அறிவும் அற்ற பெரும்பான்மை. அங்கே மத அடிப்படை வாதமும் அதிகார அரசியலும் ஒன்று சேர்ந்தால் என்ன என்ன நடக்குமோ அதுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது. உள்ளபடிக்கே இதில் இந்திய பண்பாட்டு ஆர்வலர்களான தனி நபர்கள் சட்ட ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ, களப்பணி ரீதியாகவோ செய்வதற்கு ஏதும் இல்லை. ஆம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. :)
கடலூர் சீனு
எம்.கோபாலகிருஷ்ணன் உரையாடல்
எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலம். ஏப்ரல் 5 அன்று இணையவழி க.நா.சு உரையாடல் அரங்கில் கலந்துகொண்ட எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனுடனான நிகழ்வு நல்லமுறையில் நடந்தேறியது. எழுத்தாளர் யுவன் யூட்யூபில் மறைந்திருந்து பார்த்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் முறையாக கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம் என பின்னூட்டம் செய்திருந்தார். கவிஞர் மோகனரங்கன் அவர்களும் கலந்துகொண்டார் என பின்னர் புரிந்துகொண்டேன். எம். கோபாலகிருஷ்ணன் கதைகள் மற்றும் தமிழில் வந்துள்ள சிறந்த கதைகளை வருடகணக்காக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் சரவணன் கார்மேகம் என்ற இலக்கிய ஆர்வலரும் கலந்துகொண்டார்.
இந்தமுறை ஷிவானி என்பவர் வாழ்த்துப்பா பாடி ஆரம்பித்துவைத்தார். ஜாஜா அவர்களும், எம். கோபாலகிருஷ்ணனும் தொடர் உரையாடலில் இருப்பவர்கள் என நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிந்துவிட்டது. விவேக் , வேங்கை வனம் நாவலை முன்வைத்தும், பிரசாத் வெங்கட் (கலிபோர்னியா) தனியன் என்று சிறுகதையை முன்வைத்தும் சிறு உரையாற்றினார்கள். வேங்கை வனம் மச்சிலி எனும் புலியின் கதை மட்டுமல்ல, ஊடுபாவாக வரும் சரித்திர நிகழ்வுகளை எடுத்துரைத்த விவேக்கின் உரை கேட்பதற்கு சுவராஸ்யமாக இருந்தது. வாசிக்காதவர்கள் நூலை தேடிவாங்குவார்கள் என நினைக்கிறேன். பிரசாத் , தனியனின் உணர்வுகளை தனக்குள் வாங்கிக்கொண்ட வாசகனாக உரையாற்றினார். எம். கோபாலகிருஷ்ணனின் தனியனை, தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதா நாயகனுடன் ஒப்பிட்டு நினைவுகூர்ந்து பேசினார். கேள்விகள் / எண்ணங்கள் நேரத்தின்பொழுது, மலர்விழி மணியம், வால்வெள்ளி குறு நாவலை குறித்தும், பழனி ஜோதி , இறவாப் பிணி சிறுகதை குறித்தும் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்கள். எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு கவிஞர் என அவரை அழைப்பதில் ஒப்புதல் இல்லை எனும் ஒரு வட்டார ரகசியத்தை அறிந்துகொண்டதால், “குரல்களின் வேட்டை” நூலில் உள்ள கவிதைகளை வாசித்து வந்த நண்பர்கள் தங்கள் புரிதல்களை பரமரகசியமாக அவர்களுக்குள் வைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் , எம். கோபாலகிருஷ்ணன் அவர்களை ஆளுமையாக, படைப்பாளியாக ஒரு ஒட்டுமொத்தப் புரிதலை அடைந்திருப்பார்கள். நான் மற்றும் ராஜன் கேட்ட கேள்விக்கான பதிலில், அவரது நாற்பது வருட இலக்கிய அர்ப்பணிப்பினை புரிந்துகொண்டோம். நாவல் எழுதும்பொழுது தனது நேரத்தை எப்படி திட்டமிட்டு வகுத்துக்கொள்கிறார் என்பதையும், அதை தங்களிடமிருந்து இளமைக்காலத்திலேயே எப்படி கற்றுக்கொண்டார் என்பதையும் அறிந்துகொண்டோம். “இலக்கியத்தில் துரும்பளவு சாதிக்க தூண் பிடுங்கும் விசை வேண்டும்” என்று தாங்கள் கூறியதை இன்றளவும் போஸ்டராக வைத்துள்ளதாக கூறினார். சனிக்கிழமை காலையில் அவரை காண்பதற்கு செல்லலாம் என நினைப்பவர்கள் இந்த உரையாடலை கேட்டால் கொஞ்சம் யோசனை செய்வார்கள்.
யதார்த்தவாத அழகியல் புனைவுகளை படைப்பவர் என்ற மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள், வேங்கை வனம், நாவலில் புதைந்து வரும் வரலாற்றையும், அம்மன் நெசவு நாவலில் சொல்லப்பட்டிருக்கும் மரபையும் உரையாடலின் வழியாக அறிந்து அவரை ஒரு கட்டுக்குள் அடைக்கவேண்டிய படைப்பாளி அல்ல என புது அறிதலை அடைந்திருப்பார்கள். தான் மட்டுமே எழுதமுடிந்த கதைகள் என வகுத்துக்கொண்ட, கதைக்குத் தேவையான அளவே விவரணைகளை வைத்துக்கொள்ளும் கறாரான கதைசொல்லியை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொண்டோம்.
தற்காலிக இந்தி இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சி போன்ற மேடைப் பேச்சிற்கான அளவு பதில் சொல்லும் கேள்விக்கு ஹிந்தியிலிருந்து தமிழுக்கு கவிதைகளை மொழியாக்கம் செய்தவராக தன்னளவில் வாசித்த நூல்களை வைத்து பதில் சொன்னார்.
ஜாஜா ஒவ்வொரு கேள்விக்கும் உரைக்கும் அவரது பார்வையையும் எடுத்துச்சொன்னதால், விடுபட்டவைகள் ஒன்றிணைய எம். கோபாலகிருஷ்ணன் எனும் தமிழிலக்கிய ஆளுமையை முழுமையாக புரிந்துகொள்ள இந்த நிகழ்வு நல்லதொரு ஆவணமென ஆகிவந்துள்ளது.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
வைணவ இலக்கிய அறிமுகம்
வைணவ இலக்கியம்
ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார்.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஆழ்வார் பாடல்களின் கவித்துவத்திற்குள் உணர்ச்சிகரமாகச் செல்லும் ஓர் அனுபவப் பயிற்சிதான். வைணவ இலக்கியங்களின் மொழி ஆயிரமாண்டு தொன்மையானது. ஆகவே ஓர் ஆசிரியரின் உதவி அவற்றைக் கற்றுக்கொள்ள தேவையாகிறது.அவற்றின் தத்துவப்பின்புலத்தை உணர்வதற்கும் வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதலுடன் கூட்டாக அமர்ந்து கற்பதென்பது மிகத்தீவிரமான ஓர் உணர்வுநிலையை உருவாக்கும். ஒரு வகுப்பில் நாம் கற்றுக்கொள்ளும் வைணவ இலக்கியத்தை பல ஆண்டுகள் நூல்கள் வழியாகக் கற்கமுடியாது.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
நாள் மே 30 31 ஜூன் 1
நாலாயிரம் கடிதம் பிரபந்த வகுப்பு கடிதம் பிரபந்தக் கல்வி, கடிதம் நாலாயிரம் கடிதம் பிரபந்தம், கடிதம் கண்ணனை அறிதல், கடிதம் வைணவம் கல்வி பிரபந்த வகுப்பு கடிதம் வைணவத்தை அறிதல் வருமாறு ஒன்றில்லையேல்… அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்பறவையியல் அறிமுகம்- இடங்கள் நிறைவுதாவரவியல் அறிமுகப் பயிற்சிகள் இடங்கள் நிறைவுகர்நாடக சங்கீத அறிமுகம்- இடங்கள் நிறைவுஆலயக்கலைப் பயிற்சிகள் இடங்கள் நிறைவுவரவிருக்கும் பயிற்சிகள்தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலைதில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை. தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.
இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.
முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாவது நிலை தியான வகுப்பு இது. தில்லை செந்தில் பிரபு பிற இடங்களில் நடத்திய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
முந்தைய வகுப்பு உளக்குவிப்பு – கவனக்கூர்மைக்கான முதல்நிலை பயிற்சிகள் அடங்கியது. இப்பயிற்சி அதன் இரண்டாம் நிலை. அகத்தை கட்டுப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதற்கான கூடுதல் செயல்முறைகள் கொண்டது. வெவ்வேறு செயற்களங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது மிக உதவியானது.நாள் ஜூன் 6 7 மற்றும் 8
இந்திய தத்துவம் நான்காவது நிலைஇந்திய தத்துவம் நான்காவது நிலையின் முதல் அணி மே மாதம் நடைபெறுகிறது. அதில் மூன்றாம் நிலை முடித்தவர்கள் கலந்துகொண்டனர். எஞ்சியவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்
நாள் ஜூன் 20 21 மற்றும் 22
About learning Vedas…
Hello Mr. Jeyamohan, I saw your post on Vedhas. Are there any plans to start classes in the near future? I am sixty-five years old, and I am reluctant to learn in the traditional way. Traditional methods are not effective for me. They won’t teach me either.I am waiting for their response.
தங்கள் காணொளிகளில் ஒரு விரைவு எப்பொழுதும் தென்படுவதை பார்க்கிறேன்.சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாக ஆனால் விரைவாக வெளிக்கொண்டு வந்து விடுவீர்கள். பொதுவாக ஆன்மீக உரையாற்றுபவர்கள் மென்மையாக ,மெதுவாக பேசுவார்கள் என்ற தன்மை உண்டு.அதிலும் அவர்கள் சொல்லாமல் விட்ட கருத்துக்கள் உண்டு.
மதமும் தத்துவமும் வேறு- கடிதம்April 8, 2025
ஆசான் என்னும் சொல்!
கமல்ஹாசன் – தேடலின் பேரழகு
இனிய ஜெயம்
சமீபத்தில் கண்ட கமல் ஹாசன் அவர்களின் இந்த புகைப்படம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரது துறையில் அடுத்து வரவிருக்கும் புதிய விஷயங்கள் மீது நிகழும் கல்வி அறிமுக பயிற்சி பட்டறை அரங்கின் முன் நின்று அங்கே பயில சென்ற சூழலில் அவர் வெளியிட்ட புகைப்படம் இது.
தான் ஈடுபாடு கொண்ட துறையில் தொடர்ந்து கற்றபடியே இருப்பது, அந்த கல்வியைத் தேடி எந்த நொடியிலும் கிளம்பி செல்லும் மன நிலையிலேயே வாழ்வது கலை மீது ஈடுபாடு கொண்ட எவரிடமும் இருக்க வேண்டிய ஒரு உயர் தகுதி என்றே சொல்வேன்.
கடந்த உருது வகுப்பில் சிங்கப்பூரில் இருந்து இந்த வகுப்புக்காக மட்டுமே கிளம்பி வந்திருந்த ப்ரதீபா எனும் இளம் வாசகியை கண்ட போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
கமல் வயது என்ன இந்த பிள்ளையின் வயது என்ன? கற்றலுக்கு கல்வி அளிக்கும் மகிழ்ச்சியை அடைய கிளம்பி செல்வதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல. வயது போலவே காசு பணத்தின் இருப்பும் ஒரு பொருட்டு அல்ல. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்கிறது நம் மரபு. கல்வி எனும் மகிழ்ச்சியை அடைய எதுவுமே ஒரு தடை இல்லை. அதற்கு இருக்க வேண்டியது கற்றல் எனும் பரவசம் மீது தளராத ப்பேஷன், வேலை, பொண்டாட்டி பிள்ளை, லீவு கிடைக்கவில்லை, முட்டுகால் வலி போன்ற (உதற விரும்பாத) மொண்ணை காரணங்களை உதறிவிட்டு எழும் நிலை என்ற இரண்டு மட்டுமே.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
நான் இருபதாண்டுகளாக அறிந்து, அணுக்கமாக நோக்கிவரும் ஆளுமை கமல். அவரிடம் நான் வியக்கும் முதன்மைக்குணம் என்பது அறிந்துகொள்வதற்கான அவருடைய தணியாத வேட்கைதான்.
அவருக்கு இப்போது அகவை எழுபதைக் கடந்துவிட்டது. திரைப்படத்துறையில் அவருடைய அனுபவம் அறுபதாண்டுகளுக்கும் மேல். தமிழ் சினிமாவுடன் வளர்ந்துவந்தவர், அவருடைய வாழ்க்கைவரலாறு கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் வரலாறுதான். சினிமாவில் உச்சநட்சத்திரம் என்னும் இடத்தை அடைந்துவிட்டார். நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான நாயகநடிகர், இன்று அவருடைய தொழிலின் உச்சகட்ட வெற்றியில் இருக்கிறார். வெற்றிகரமான இயக்குநராகவும் திரைக்கதையாசிரியராகவும் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு நவீனத்தொன்மம் என்ற அளவில் தன்னை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார். இன்று அவருடைய ஒரு நாளுக்கான ஊதியம் ஒருகோடி ரூபாய் அளவுக்கு. ஆனால் கிளம்பிச்சென்று புதிய ஒன்றைக் கற்பதற்காக மாணவராக, மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார். மாணவன் என்பதை பெருமையுடன் அறிவித்துக்கொள்கிறார்.
நானறிந்து தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே கமல் அளவுக்கு புதியன கற்பதில் இத்தனை வெறிகொண்ட எவருமில்லை. அதன்பொருட்டு தன் வணிகத்தைக்கூட பொருட்டாக எண்ணாதவர்கள் இல்லை. தமிழ்சினிமாவின் எல்லா துறைகளையும் அறிந்தவர், எல்லா துறைகளிலும் புதுமைகளை கொண்டுவந்தவர், மீண்டும் அதே வேட்கையுடனிருப்பவர். இணையாக ஒன்றுண்டு, அவருடைய ஆர்வம் சினிமா மட்டும் அல்ல. சினிமா அவருடைய முதன்மைக்காதல், அவ்வளவுதான். அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என எல்லா இலக்கியமரபுகளிலும் அடிப்படையான அறிவும், நுணுக்கமாகப் பேசும் அவதானிப்புகளும் உண்டு.
இந்திய இசை, மேலையிசை மேல் தொடர்ந்த தேடலுண்டு, ஆழமான பயிற்சியும் உண்டு. அவரால் பல வாத்தியங்களை வாசிக்கமுடியும். பாடகர், நினைத்தால் ஒரு படத்துக்கு இசையமைக்க முடியும். அவருக்கு இந்திய நடனம், ஐரோப்பிய நடனம் ஆகியவற்றில் பயிற்சி உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது, தொடர்ச்சியாக அக்கலைகளை கவனித்தும் பயின்றும் வருபவர். இதற்கெல்லாம் அப்பால் அவருக்கு என்னென்ன ஆர்வம் என்று நான் வியப்பது எப்போதும்தான். தட்டச்சு இயந்திரங்களின் பரிணாமம் பற்றியோ பட்டாம்பூச்சி சேகரிப்பது பற்றியோகூட அவரால் உடனடியாகப் பேசமுடியும்.
சாமானியர்களுக்கு கல்வி ஒரு சுமை. முடிந்தவரை கற்காமலிருக்கவே அவர்கள் முயல்வார்கள். அவர்களின் மூளை சிலந்திவலை போல, குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே அது தாங்கும். அதற்குமேல் எடையுள்ள பூச்சி மாட்டினால் சிலந்தி வலையை அறுத்து அதை தப்பவிட்டுவிடும். (இன்றைய சமூக ஊடக அறிவிலிகளின் மூளை இலைகளைப்போல. அது எச்சங்களைத்தவிர அனைத்தையும் நழுவவிட்டுவிடும்) அறிஞர்களுக்குக் கல்வி என்பது பெரும் கொண்டாட்டம். அவர்கள் இவ்வாழ்க்கையில் அடையும் பேரின்பம் என்பது கற்றல்- கற்பித்தல் – படைத்தல் மூன்றும்தான். ஆகவே அவர்கள் ஒருபோதும் கல்வியை நிறுத்திக்கொள்வதில்லை. நாட்டாரியல் முன்னோடிகளில் ஒருவரான அ.கா.பெருமாள் நாட்டாரியலைக் கற்று முடித்துவிட்டாரா என்ன? நான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் என்ன செய்கிறீர்கள் என்பேன். என்ன கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே பதில்சொல்வார்.
கற்றுக்கொண்டிருப்பவரை நோக்கி சாமானியர் சொல்லும் வியப்புச்சொல் ‘இன்னும் சின்ன வயசு மாதிரியே கெளம்பிப் போறார்’ என்பதுதான். அவர் கற்றுக்கொண்டே இருப்பதனால்தான் இளமையாக இருக்கிறார். கற்றல் நிற்கும்போது அகம் உறைந்துவிடுகிறது. தேடல் நின்று வாழ்க்கை சுழல ஆரம்பிக்கிறது. அதுவே முதுமை. நம்மில் பலர் 24 வயதில் வேலை அமைந்ததும் இனி புதியதாக எதையும் கற்கவேண்டியதில்லை என எண்ணிவிடுகிறார்கள். கொஞ்சம் மூளையைச் செலவழிக்கவேண்டியிருந்தால்கூட அதை உடனே தவிர்த்துவிடுகிறார்கள். அறிவம்சமே இல்லாத கேளிக்கைகள், வம்புகள் மட்டுமே அவர்களை ஈர்க்கின்றன. அவர்கள் அந்த வயதிலேயே முதுமையைத் தொடங்கிவிடுகிறார்கள்.
கற்றுக்கொள்பவர்கள் அறிவார்கள், கல்வி ஒருவரை தேடிவந்து மடியில் அமர்ந்துகொள்ளாது. அப்படி தேடிவருவது நமக்கான கல்வியும் அல்ல. அது உள்நோக்கம் கொண்டது. வணிக உள்நோக்கம், அரசியல் உள்நோக்கம். கல்வியை நாம்தான் தேடிச்செல்லவேண்டும். அது நிகழுமிடத்தில் சென்று அமரவேண்டும். அதற்கான சுற்றத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கல்விக்காக கையேந்துபவர்களுக்கு மட்டுமே கற்பிக்கவேண்டும் என்னும் நெறி பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருந்தது. இன்றும்கூட அந்த மனநிலை கற்பிப்பவர்களிடம் உள்ளது, உலகமெங்கும். கற்றலுக்கு நீங்கள் என்ன விலை அளிக்கிறீர்கள் என்பதே அக்கல்வியின் மதிப்பை உருவாக்குகிறது. கட்டணம் மட்டும் அல்ல. பொழுது, பயணம், கவனம் எல்லாமே விலைதான். கமல் அடையும் இக்கல்வியின் மதிப்பு பலகோடி ரூபாய் அல்லவா?
கல்விக்கு எதிரான மனநிலை என்பது தேக்கநிலைதான். தேக்கம் மூளையில் உள்ளது. புதியவற்றைக் கற்பதென்பது இருக்குமிடத்தில் இருந்து முன்னகர்வது. அது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் சிலவற்றை கைவிடுவது. நம் சொகுசான அமர்வில் இருந்து அகல்வது. அதை சோம்பல்கொண்ட மூளைகள் விரும்புவதில்லை. ‘என்ன அவசியம்? இப்போதே எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது?’ என்று அது நம்மிடம் சொல்கிறது. அதை நாம் நமக்கேற்ற வகையில் விளக்கிக்கொள்கிறோம். ‘ஆர்வமிருக்கு, நேரமில்லை’ என்கிறோம். ‘அவ்ளவுதூரமா?’ என்கிறோம். ‘இந்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒழிஞ்சுதுன்னா ஆரம்பிக்கலாம்’ என்கிறோம். ‘நமக்குத் தெரிஞ்சதுக்கே இங்க மதிப்பில்லை’ என்கிறோம். ‘அப்டி என்ன புதிசா?’ என்கிறோம். அதற்கெல்லாம் முடிவே இல்லை.
கற்பதன் பொருட்டு உலகின் எல்லைவரை கிளம்பிச் செல்பவர்கள் அழியாத இளமை கொண்டவர்கள். அணுவளவும் வீணாகாத வாழ்க்கை கொண்டவர்கள். உண்மையான மகிழ்ச்சியை வாழ்வில் அடைபவர்கள். அவர்கள் இங்கே மிகச்சிறுபான்மையினர். ஆனால் அவர்களால்தான் இவ்வுலகம் உருவாக்கப்படுகிறது. மற்றவர்கள் அதில் குடியிருப்பவர்கள் மட்டுமே.
ஒரு மரம், ஒரு பண்பாடு- கடிதம்
ஒரு 4 வயது குன்னத்துக்கல் பொன்னுமணியின் இளமையில் நிகழ்ந்த, ஒரே ஒரு அரிதான இனிமை நிகழ்வு அவனது மரணப் படுக்கையில் வாசகனை வந்தடைகிறது. அதன் ஆழம், நம்மை நெகிழத் செய்து, அந்த இனிமை அச் சிறுவனின் வாழ்வில் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தைக் கொடுக்கிறது.
கட்டுவதற்கு ஒரு சிறிய கோமணம்கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதையெல்லாம் மறந்து, கூட்டு வண்டியில் பயணிக்கும் போது, இருளில், வண்டி போகும் தாளக் கதியில், கனவும், நனவும் கலந்த மோனநிலையில், தாயின் சிறிய கவனிப்பில் நெகிழும் அந்தச் சிறுவனுக்கு, அதுதான் அவனது குடும்பத்தினரின் கடைசி நாள் என்பது எவ்வளவு கொடூரமான ஊழ் அல்லது பிரபஞ்ச விதிகளின் ஏற்பாடு!
அந்த அனாதை சிறுவன், பின்னாட்களில் சூன்யத்திலிருந்து சாம்ராஜ்யம் நிறுவி, பொன்னு பெருவட்டராக, பெரிய செல்வந்தனாக, சமூக அந்தஸ்துடன், பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து, தனது மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது சுய பரிசீலனையில், அவரது நினைவின் அடுக்குகளில் தேடிக் கிடைத்தவை நம்மை வந்தடைகின்றன. அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களின் நல்லியல்புகள், சல்லித்தனங்கள் என ஒரு பெரிய சித்திரம் கிடைக்கிறது.
பொன்னு பெருவட்டரின் மகன் செல்லையா பெருவட்டர், மருமகள் திரேஸ், பேரன்கள் பிரான்ஸிஸ், லிவி ஆகியோர், அவரது கடைசி நாட்களின் பிற பயணிகள்.
மருமகள் திரேஸ் விநோதமானவர். வாழ்வில் அவர் மட்டுமே முக்கியம், வேறு யாருக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடாது என நினைப்பவர். போலித்தனங்களில் நிபுணத்துவம் கொண்டவர் என்றே கொள்ளலாம். தன் மீது அதீத அன்பு பொழியும் தந்தையுடனான உறவைக்கூட, தனக்குக் கிடைக்கும் லாபக் கணக்குகளால் மட்டுமே அமைத்துக் கொண்டவர். அவரது வாழ்வில் உண்மையான அன்பிற்கு இடமேயில்லை. பணக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக செல்லையா பெருவட்டரை மணந்தவர். எதிலும் நிறைவு இல்லாதவராய், பிறரின் அங்கீகாரத்தைத் நாடும் வலையில் மாட்டிக்கொண்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக்கொண்டேயிருக்கிறார். கணவர் செல்லையா பெருவட்டரும், கடைசி மகன் லிவியும் போலித்தனங்களில் மூழ்கியிருப்பது இவருக்கு வசதியானது கூட.
மூத்த மகள்கள், திருமணமாகிப் போய்விட, மூத்தமகன் பிரான்ஸிஸ் இதிலிருந்து தப்ப முயலாமல், மூழ்கிக் கொண்டிருக்கிறான்
பிரான்ஸிஸும் ஒரு வகையில் சுயநலவாதியே. தனது குடும்பம் தரும் போலித்தனங்களை ஏற்கமுடியாதவன், குடும்பம் தரும் சௌகர்யங்களைப் பயன்படுத்திக்கொண்டு குடி, காமம் என்பவற்றை வடிகாலாகக் கொள்கிறான். தனது தாத்தாவின் வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்திருந்தும், அதனை ஒரு திறப்பாகக் கொண்டு, தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயன்றும் அதில் நிலைக்க முடியாதவன்.
விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும் பிரான்ஸிஸ், தாயின் மார்பில் இருந்து எட்டிப் பார்க்கும் ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்ந்து, அதனை உணர்ந்து சட்டென்று மனதைத் திருப்பும் அவனில், இந்த உலகில் இருக்கும் இனிமைகளைப் விடுத்து அவனது குடும்பத்தார் மேல் இருக்கும் கசப்பில் மூழ்கிக்கிடக்கும் பிடிவாதமான அவனது மனம் தெரிகிறது.
ஸ்ரீதரனின் வீழ்ச்சியை விரிவாகப் பேசும் தன் தந்தை செல்லையா பெருவட்டரை அருவருக்கிறான் பிரான்ஸிஸ். தங்கத்தின் புறவாழ்வுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் கனவானாக அவனது தந்தை தன்னைப் பிறரிடம் காட்டிக்கொள்வதன் மூலம், தங்கத்தின் அகத்தை நிந்தித்துக் கொண்டே இருக்கிறார். தம்பி லிவி வேறுவகையில் நிந்திக்கிறான். தங்கம் வேறுபட்டவள் எனத் தெரிந்தும், அவளை அந்தச் சுழலுக்குள் சிக்குவதைத் தவிர்க்க, பிரான்ஸிஸ் எதுவும் செய்யாமல் இருந்துவிடுகிறான்.
அவனது செயலின்மைகளுக்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், அவன் அதை மீறி எதுவும் செய்யவில்லை. மாறாக, அவனது தாத்தா, பொன்னு பெருவட்டார் செயல்படுவதற்கு ஆயிரம் தடைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி தன்னை நிறுவிக்கொண்டவர்!
தன் நடத்தையால் சுகேசினியிடம் குற்ற உணர்ச்சியடையும் அவன், இறுதியில், குடும்பத்தாரின் போலித்தனங்களை எதிர்த்து நிற்கும் போது, குற்ற உணர்ச்சி இல்லாதவனாய், முன்னே செல்ல தயாரானவனாகிறான்.
திரேஸுக்கு முற்றிலும் எதிர்மாறானவர், பொன்னு பெருவட்டரின் மனைவியான பெரிய பெருவட்டத்தி. பெருவட்டர் வாங்கி கொடுக்கும் நகைகளையெல்லாம், அதுவும் தனது உடுப்பின் ஒரு பகுதி எனச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அணிந்து மகிழ்பவர். வீட்டில் வேலை பார்ப்பவர்களையெல்லாம் அமர்த்தி உணவு பரிமாறி மகிழ்பவர். அடுத்தவர்க்கு அன்பைப் கொடுப்பதையே பிரதானமென வாழ்ந்தவர்!
தனது அந்நியோன்யமான மனைவியை இழந்து, உடல் வலுவையெல்லாமும் இழந்து படுத்திருக்கும் பொன்னு பெருவட்டருக்கு, அவர் அழைக்காமலேயே இளமைக்கால நினைவுகள் வந்து வந்து போகின்றன. ஒரு 4 வயதுக் குழந்தை, தனது தாய் தந்தையரை இழந்து நிற்கும் போது, பேச்சி அதற்கும் அன்னையாகி, தன் குழந்தைகளுடன் அழைத்துச் செல்கிறாள். பின்னர், தனது சொந்தக் குழந்தைகளுக்கு, நோயாளிக் கணவனுக்கு மற்றும் தனக்கே உணவுப் பஞ்சம் என்ற நிலையில் அந்தக் குழந்தையை வீட்டைவிட்டு துரத்தும் கொடுமைக்காரியாகும் நிலை பரிதாபமானது.
ஒரு மனித உயிருக்கு அத்தியாவசமாகிய உணவு, உறைவிடம், உடை போன்றவை அந்த குழந்தைக்கு அமையாமல் போனது துரதிர்ஷடமே. அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலால், பேச்சியில்லாத சமயம் அந்த வீட்டிற்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகள் எதையோ ஒளித்துக் கொள்ள முயலுவதைப் பார்க்கிறது, அதனுடைய கைவிடப்பட்ட நிலை கோபமாக மாறுகிறது. ஒரு சிறு சுட்ட கிழங்குத் துண்டை மறைக்க முயலும் குழந்தையுடனான சண்டையில், ஏற்கனவே நோஞ்சானாயிருக்கும் பேச்சியின் அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது.
இதை நம்ப முடியாமல், வீட்டிற்கு வெளியேயிருக்கும் ஒரு புதரில், கொட்டும் மழையில், எப்படியாவது அந்தக் குழந்தை எழுந்து நடந்து விடாதா என்று பயத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைப் பருவ பொன்னுமணியைப் பார்க்கும் போது, ஒரு துளிக் கண்ணீரும், வாழ்வு ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் தோன்றுகிறது.
அவனைப் பாதுகாக்க யாருமில்லாத, நல்லது கெட்டது எவையெனத் தெரியாத நிலையில் நிகழ்ந்த ஒரு மரணத்திற்காக தனது 84வயதில் மரணப்படுக்கையில் குற்றவுணர்வு கொண்டு தெய்வ மன்னிப்பு கேட்க விழையும் பொன்னையா பெருவட்டரின் உள்ளம் பெருங்கருணை கொண்டதல்லவா! அதையும் கிடைக்கவிடாமல் விதி சதி செய்கிறது.
இன்னொரு பூதம், அறைக்கல் அப்புக்குட்டனுடன் நடந்த கடைசி சந்திப்பை நினைவுபடுத்திக் கிளம்புகிறது. இந்தச் சந்திப்பில் பெருவட்டரின் அகத்தில் நடந்தவை நமக்குத் தெரியவரவில்லை.
பொன்னுமணியையும், கூடவந்த சுமையாட்களையும் காலையிலிருந்து மதியம் வரை காக்க வைத்தது, கீழ்ச்சாதிக்காரர்கள் என முத்திரை குத்தி தனிப்பாதையில் நடக்க வைத்தது, அவனிடம் நேரடியாகப் பேசாதது, அறைக்கல் குடும்பத்துக்கு அப்போது எந்த வகையிலும் உதவாத ஒரு காட்டு நிலத்தை உபயோகித்து அதற்கு குத்தகை கொடு என்று காரியஸ்தர் மூலம் கூறிய மேட்டிமைத்தனத்தின் மீதான கோபம் அவரை அப்புக்குட்டனை நிராகரிக்க வைத்ததோ?
அறைக்கல் அப்புக்குட்டனை நிராகரிக்கும் பெருவட்டர், ரப்பர் திருடிய குஞ்சிமுத்துவுக்கு இரங்கும் போது அவரது உள்ளம் கனிவை நோக்கித் திரும்புகிறது என நினைக்கிறேன்.
ஒருவேளை இந்த மாற்றம் தான், தனது மரணப் படுக்கையில், தன்னைக் காணவந்த அறைக்கல் பாஸ்கரன் நாயரில் அப்புக்குட்டனைக் கண்டு கண்ணீர் வடிக்கிறாரோ?
மனித மனம் எல்லாவற்றையும் சேகரித்துக் கொள்கிறது. பின்னர், வாழ்வின் வெவ்வேறு தருணங்களில், செயல்களின் மீதான மதிப்பீடுகள் மாறி, மனிதனது வெளிப்பாடுகளும் மாறும் விந்தைதான் என்ன!
அறைக்கல் பாஸ்கரன் நாயர், மனித மனதின் விந்தையான இயக்கங்களுக்கு இன்னொமொரு உதாரணம்.
பொன்னு பெருவட்டரின் கண்ணீரைக் கண்டு நெகிழ்வதும், தன்னுடைய மகனின் நிலையைக் கண்டு பரிதவிப்பதும் அறைக்கல் பாஸ்கரன் நாயரில் நிகழ்கிறது. ஒரு மின்னல் வந்து போனது போல ஒரு கணப் பொழுதில் அவை மறைகின்றன. உடனே, சுயநலமான, கணக்கீடுகள் கொண்ட ஒரு குரூர மனமாக மாறி செல்லையா பெருவட்டரின் பணத்தை ஏமாற்றுவதை சாமர்த்தியமாகச் செய்கிறார். ஒரு போலிப் பாவனைக்காரர் இன்னொரு போலிப் பாவனைக்காரரால் தோற்கடிக்கப் படுகிறார்!
விதி உருட்டி விட்ட இரண்டு பகடைக் காய்கள் வேலப்பனும், தங்கமும். தன்னைச் சுற்றி எரியும் வறுமையிலும், அம்புகளாகக் குத்தும் பரிதாபப் பார்வையிலிருந்தும் தப்பிக்க முயல்கிறார்கள். ஒரு பட்டாம் பூச்சி போல வாழ முயன்று, இவற்றினின்று விலக முயலும் தங்கத்திற்கு அறைக்கல் குளமே அடைக்கலமாகிறது. தன் மீது திணிக்கப்பட்ட அவலத்தால் உடலும், மனமும் மட்கிய வேலப்பன், எல்லாவற்றையும் உதறித் தள்ளி, புது உலகு நோக்கிப் போகிறான்.
கண்டன்காணியும் பொன்னு பெருவட்டரும் காட்டில் ஒன்று சேர்ந்து உழைத்து முன்னேறியவர்கள் என்றாலும், சில விஷயங்களில் எதிர்முனையில் உள்ளார்கள்
1. கண்டன்காணி இயற்கையுடன் ஒன்றியவராக அன்பையும், கனிவுமே பிரதானமாகக் கொண்ட வெள்ளந்தியான குழந்தைத்தனம் கொண்டவர். பெருவட்டரோ, காட்டை தனது செல்வ மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தி, தனது சமூகத்து மேல் போர்த்தப்பட்ட கீழ்மைகளைத் தவிர்க்க, சமூக அங்கீகாரத்துக்காக, பணம், செல்வாக்கு, சம்பாதித்து, அன்பிடமிருந்தும் தனது குடும்பத்தினரிடமிருந்தும் வெகுதூரம் சென்றுவிட்டவர்.
2. பிறப்பிலிருந்து இறப்புவரை மென்மையும் பெண்மையும் கொண்ட ஒரு வாழையைப் போல, எப்போதும் கனிந்து பிறருக்கு மகிழ்வைக் கொடுப்பவர் கண்டன்காணி. ஒரு ரப்பர் மரம் போல, தானும் காயப் பட்டு பிறரையும் காயப்படுத்தி, அந்த காயங்களின் வலி தாளாமல் தவிப்பவர் பெருவட்டர்.
வாழைத் தோப்புகளை பெண்மையையும் மென்மையும் கொண்டவையாகவும், தாய்மை ததும்பிய அந்த தோப்புகளின் மேல் ஆக்கிரமிப்பு செய்த மூர்க்கமான ஆண்மைத்தனத்தின் வெளிப்பாடே, அவற்றை அழித்து ரப்பர் தோட்டங்களாக மாற்றியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் மரத்திலிருந்து பால் எடுத்து செல்வம் சம்பாதிப்பதை, அதன் ஆன்மாவைக் காயப்படுத்திச் செய்யும் செயலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லையா பெருவட்டருக்கு 20 வயது ஆகும்போது, பொன்னு பெருவட்டர் அங்கிருக்கும் மற்றவர்களைப் போல, தானும் மாவட்ட கலெக்டரை, பிஷப்பை அழைத்து விருந்தளிக்க வேண்டும் அதற்கு தனது அப்போதைய வீடு சரிப்படாது என்பதற்காக, முதன் முறையாக செல்லையாவிடமும் பேசி, ஒரு புதிய பங்களா கட்டி, மதமாற்றமும் செய்து கொள்கிறார். இப்போது அவர்கள் சமூகம், அரசியல், அதிகார மையங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். அவை அந்தக் குடும்பத்துக்கு மகிழ்வைக் கொண்டு வந்தது உண்மை. அதன் பின்னால் பொன்னு பெருவட்டரின் கடும் உழைப்பும், முயற்சியும் இருந்தது. சிக்கல் என்னவென்றால், அப்புக்குட்டனைக் கைவிட்டது, பாரம்பரிய விவசாயத்தைக் கைவிட்டு ரப்பருக்கு மாறியதெல்லாம், அவரின் இறுதிக் காலத்தில் கண்ணீர் மல்கச் செய்கிறது.
தந்தையிடம் பயந்த, தயக்கங்கள் நிறைந்த செல்லையா பெருவட்டரின் வாழ்வில் அந்த பங்களா, மலையடிவாரத்தில் தயங்கி நின்றவனை, யாரோ மலையுச்சியில் தூக்கி வைத்தது போல் ஆகிவிடுகிறது. அங்கிருந்து அவர் உலகைப் பார்க்கும் பார்வையே மாறிவிடுகிறது. அறைக்கல் அப்புக்குட்டனின் மேட்டிமைத்தனத்தைப் பார்த்திராத அவருக்கு, அது வந்து ஒட்டிக் கொண்டது ஊழ். சுகபோகங்கள் மேல் இருந்த தயக்கத்தை இல்லாமலாக்கி, எந்தக் கூட்டத்திலும் அவர் தாழ்வாக உணராதபிடி உள்ளூர கர்வம் நிரம்பியவராக்கியது அந்தப் பங்களா. ஆனால் அதை உருவாக்கிய பொன்னு பெருவட்டரும் அவரது மனைவியும் அதனால் எந்த பாதிப்பும் இல்லாதவர்களாகவே இருந்தனர்.
காட்டு நிலம் கொடுத்தமைக்காக அப்புக்குட்டன் நாயர், பின்னாட்களில் பொன்னு பெருவட்டரிடம் உதவி கேட்க, அது மறுக்கப் படுகிறது. பின்னர், அறைக்கல் குடும்பத்தின் ஒரு வாரிசான வேலப்பன் மூலம் செல்லையா பெருவட்டரிடமிருந்து மிரட்டி உதவி வாங்கப்படுகிறது. இப்படியாக ஒரு வட்டம் நிறைவு பெறுகிறது. ஆனால், இதற்காக கொடுக்கப்பட்ட பலிகள்தான் எத்தனை?
மாதவன் நாயர் என்னும் ஒரு தனிமனிதனின் வீரத்தாலும், விவேகத்தாலும் உருவாகிய அறைக்கல் பாரம்பரியம், சில நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகினாலும், பின்னர் வீழ்ச்சியடைந்தது. பொன்னு பெருவட்டர் ராஜ்யத்துக்கும் அதுவே நிகழ்கிறது. தன்னிடம் ஒன்றுமேயில்லாதபோது, மனிதன் உன்னதத்தின் மேல் விழைவு கொள்கிறான். அதை நோக்கி நகர்கிறான். எல்லாம் இருக்கும்போது, ஆணவம் தன்னை ஆக்கிரமிக்க அனுமதியளித்து அழிவில் வீழ்கிறான்! இவை எப்போதுமே கட்டாயம் இப்படித்தான் நடக்கும் என்றில்லை. ஆனால், பெரும்பாலான வரலாறுகளில், பல தனி மனித வாழ்க்கைகளிலும் பெரும்பாலும் இப்படி நிகழ்ந்திருக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
வேதம் கற்றல்…
வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே, வரும் காலங்களில் வேதம் கற்றுத்தர வகுப்புகள் தொடங்கும் எண்ணம் ஏதேனும் இருக்கிறதா? எனக்கு வயது அறுபத்தி ஐந்து ஆகிவிட்டதால் பாரம்பரிய முறையில் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. மேலும் கற்றுத்தரவும் மாட்டார்கள். தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்
Your short video on commentary movements in the Indian philosophical tradition is a great start to understanding our traditional wisdom. Like others, I also had some negative notions about this.
The commentary tradition…ஓர் அழைப்பு
Of Men Women and Witches
Book Talk about the new book written by eminent Tamil author Jeyamohan.
Venue: Attakalatta, Indira Nagar, Bangalore.
Date and Time: 20 April 2025 Evening 5 o’clock
Participants: Satish Chaprike, Kannada author
Sangeetha Puthiyedath (Translator)
and Jeyamohan, author
An extraordinary memoir from one of Tamil Nadu’s most acclaimed novelists
The great Tamil novelist Jeyamohan came from the region of Tamil Nadu that originally belonged to Travancore (in Kerala), and grew up in a unique, syncretic culture straddling two distinct worlds.
In this memoir, originally written in Malayalam, he draws a vivid picture of his family which followed the matriarchal family systems of Kerala. He especially focuses on his powerful mother and grandmother, who pitted their wills against and were constantly at odds with his abusive father. Moving between the stories of his parents’ marriage, his often-unhappy childhood, falling in love and becoming a writer, Jeyamohan also tells the story of the region he comes from, stretching the form of the memoir from family to history.
Beautifully written and profoundly imagined, Of Men, Women and Witches is another masterwork from this great novelist.
நண்பர்களை நிகழ்வுக்கு அழைக்கிறேன்
(இந்த அழைப்பிதழையும் செய்தியையும் தாங்கள் தொடர்புகொண்டுள்ள சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸப் குழுமங்களிலும் பகிரும்படி கோருகிறேன். பெங்களூருக்கு வரமுடியாதவர்களாக இருப்பினும் பகிரலாம். நூல் பற்றிய செய்தி சென்று சேர்வதே முக்கியம்.)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


