புதைக்கப்படும் பண்பாடு, கடலூர் சீனு

 இனிய ஜெயம்

சென்ற வாரம் புதுச்சேரி நண்பர்களுடன் ஒரு சிறிய உலாவாக, அனந்தமங்கம் சமணர் குன்று, கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம், மாமண்டூர் பல்லவர் குடைவரைகள், உத்திரமேரூர் கல்வெட்டு மண்டபம், அச்சிறுப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் ஆலயம் இவற்றைக் கண்டு வந்தேன். நான் சில முறை சென்றது தான் என்றாலும் புதுச்சேரி நண்பர்கள் யாரும் இந்த இடங்களை பார்த்ததில்லை என்பதால் அவர்களோடு மீண்டும் ஒரு பயணம்.

பல வருடம் முன்பாக அனந்தமங்கலம் சென்றது. அங்கே இருந்த பழமையான சிவன் கோயில் முற்றிலும் காணாமல் போய், ஏதோ பெரு முதலாளி தனியார் டிரஸ்ட் வழியே கட்டிய கோமாளித்தனமான வண்ணமயமான குப்பை கூடை போன்ற ஒரு கல் கட்டமைப்பு ஒன்று அங்கே இருக்கிறது. பேய் பிடித்த இளம் பெண் தெய்வம் வாழும் கோயிலுக்குள் வர முரண்டு பிடிப்பதை போல சரவணன் கோயிலுக்குள் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தார். (சீக்கிரம் போங்க, பெருமாளுக்கு அபிஷேகம் செகண்ட் ஃப்ளோர்ல என்றார் கோயில் வாசலில் பூ விற்கும் பெண்)  வாசல் வளாகத்தில் 15 அடி உயரத்தில்  தலை பெருத்த உடல் சிறுத்த சிவன் பார்வதி சிலை, அவர்கள் பின்னே பிரீடேட்டர் படத்தில் அர்னால்டு உடன் சண்டை போடும் வேற்று கிரகவாசி போல் ஏதோ ஒன்று பூமியைப் பிளந்து நின்றிருந்தது, மணிமாறன் தான் அடையாளம் கண்டு சொன்னார், அது ஈஷா யோகா மையத்துக்காக ஜக்கி வடிவமைத்த  ஆதியோகி சிலையின் ரிப்ளிகா. அந்த இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள, முன்பு அங்கே இருந்த கோயிலில் ஒரு கல்வெட்டு உண்டு. முன்பு அங்கே பழைய கோயில் இருந்தது என்பதையும் அங்கே இந்த இடத்தின் வரலாற்றை அறிய கல்வெட்டு இருந்தது என்பதையும் இனி தமிழ் விக்கி வழியாக மட்டுமே ஒருவர் அறிந்து கொள்ள முடியும். இப்போது அந்த கல்வெட்டு எங்கே என்று எவரும் அறியார்.

அனந்தமங்கலம் சமணர் குன்று, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அனந்த நாதருக்காக அமைந்த அபூர்வமான ஒரு வழிபாட்டு இடம். நன்கு வேலி கட்டப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்படும் இடம். வருடம் இரண்டு வழிபாட்டு விழாக்கள் நடப்பதாகவும் தெரிகிறது. மிக அழகான எழில் கோலத்தில் நிற்கும் அம்பிகா யட்சி புடைப்பு சிற்பத்தை நெடுநேரம் கண்டு ரசித்தேன். நண்பர்கள் தமிழ் விக்கி இயக்கி அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் இதோ இது அதுதான் என்று அடையாளம் கண்டு அது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் அங்கே இருந்து விட்டு கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் சென்றோம்.

இந்தக் கோயில் குறித்து மிக விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜேந்திர சோழன் கங்கையை கொண்டு வந்த வெற்றியை கொண்டாட அவரது குரு ஈசான சிவ பண்டிதர் முன்னின்று கட்டிய கோயில். கோயில் கட்டிட கலையில் ஆர்வம் கொண்டவர்கள் எவருக்கும் மிக முக்கியமான கோயில் இது. ஆதிட்டானம் பாதவர்க்கம் கோஷ்டம் வலபி பூத வரிகள், கபோதம், சாலை வரிகள் நாசிகைகள் கர்ண கூடுகள் முதல் கலசம் வரை கோயில் கலையில் பயின்ற ஒவ்வொன்றையும் கண்களால் தொட்டு தொட்டு அறியும் வண்ணம் முழுமை கொண்ட கச்சிதமான சிறிய கோயில். உள்ளே கோயிலை பார்த்துவிட்டு

வெளியே புல்வெளி வளாகத்தில் இருந்த மகிஷாசுர மர்த்தினி, தட்சிணாமூர்த்தி சிலைகளை பார்த்துவிட்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்தோம். ” அண்ணா நீங்க பதறி பதறி எழுதும் போதெல்லாம் எனக்கு புரியல, இப்போ நேர்ல பாக்கும்போது தான் புரியுது, இந்த ஒட்டு மொத்த கோயிலுக்கே மையம் இந்த விமானம்தான். இதுல ஒருத்தனுக்கு கிளாம்ப் அடிச்சு ஓட்டை போட்டு இந்த குழாயை செருகி வைக்கணும்னு தோனிருக்கு பாத்தீங்களா” என்று சொல்லி புஷ்ப நாதன் சுட்டிக் காட்டினார். விமான உச்சி கிரீவ கோஷ்டத்தில் ஏதோ மஹா ஃபிட்டர் கலைஞன் ஒருவன் அந்த வேலையை செய்திருந்தான். விடுங்க பாஸ் இதெல்லாம் சகஜம் என்று ஆறுதல் சொன்னேன்.

சற்று நேரம் கோயிலில் இருந்துவிட்டு மாமண்டூர் பல்லவர் குடைவரைகள் சென்றோம். இது குறித்தும் மிக விரிவாக ஆவணம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் முதல் குடைவரைகளில் ஒன்று. ஒரே தொடராக அடுத்தடுத்து அமைந்த நான்கு குடைவரை வளாகங்கள். தூண்கள் கருவறை அமைப்புகள் என மர அமைப்பிலிருந்து கல் அமைப்புக்கு வடிவங்கள் முதன் முறையாக மாறிய விதத்தை, இங்கே ஒருவர் கண்டு அறிய முடியும். நாங்கள் சென்றிருந்தபோது யாரோ ஒரு வரலாற்று ஆசிரியை தனது மாணவர்களோடு வந்திருந்தார். எல்லோருமே ஆர்வம் கொண்ட யுவன் யுவதிகள் என்று தெரியவந்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த ஆசிரியை  வழியே மீண்டும் ஒரு உரையாடலாக இந்தக் குடைவரைகளின் கட்டடக்கலை, இங்குள்ள தமிழி கல்வெட்டுக்கள், இதன்பின் உள்ள வரலாறு இவற்றை பேச கேட்டு அறிந்து கொண்டோம்.

மண்டையைப் பிளக்கும் வெயிலில் சற்று நேரம் அங்கே இருந்து விட்டு, மதிய உணவுக்காக உத்திரமேரூர் வந்தோம். ஓட்டுக் கூரையின் கீழ் அமைந்த பழைய கட்டிடத்தில் இயங்கிய ஹோட்டல் ஒன்றில் மிக ருசியான மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, ஊரின் மையத்தில் அமைந்திருந்த உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் அமைந்த பெருமாள் கோயில் மண்டபத்தில் சென்று பிரமாதமான மதிய தூக்கம் ஒன்று போட்டோம். புஷ்பநாதன் மட்டும் வளாகத்தை சுற்றி சுற்றி வந்து முன்பு அவர் பாட புத்தகத்தில் படித்த குடவோலை முறை தேர்தல் கல்வெட்டை கண்டுபிடித்து கல்வெட்டு ஆய்வாளர் போலும் நெடுநேரம் வாசித்துக் கொண்டிருந்தார்.

மதிய உறக்கம் முடித்து மூன்று முப்பது மணிக்கு அச்சிருபாக்கம் வந்து சேர்ந்தோம். நெடுஞ்சாலைக்கு ஓரத்தில் குன்றின் மேல் சிவ சிவ என்ற மிகப்பெரிய பதாகையை கண்டோம். அங்கே குன்றின் மேல் சில வருடம் முன்பு திடீரென கிளம்பி வந்த ஒரு கோஷ்டி பிரம்மாண்ட சிலுவை ஒன்றை நட்டு வைத்து, இது என் இடம் என்று அறிவித்து அடுத்த கட்டப் பணிகளை துவங்கி மக்களை நல்வழிப்படுத்த துவங்க, வெகுண்டெழுந்த வேறொரு கோஷ்டி அங்கே முன்னரே இருந்த சிறிய சிவலிங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இது என்னிடம் கிளம்பி போயா என்று கோதாவில் இறங்க,…

சரிதான் என்று ஒரு 200 300 படி கடந்து அந்த மலை மேல் ஏறினோம். உச்சியில் படு கேவலமாக வண்ணம் பூசப்பட்டு நின்றிருந்த ஒரு 10×10  சதுர இரும்பு டப்பாவின் ,(அதன் கதவுகளில் மிக விநோதமான வடிவில் வரையப்பட்ட முருகனும் பிள்ளையாரும்) மையத்தில் பரிதாபமாக லிங்க வடிவில் குந்தி இருந்தார் வஜ்ரகிரீஸ்வரர்.

மேலிருந்து பார்க்க அச்சிறுப்பாக்கத்தின் மொத்த காட்சியும் காண முடிந்தது. ஊரின் நடுவே தேவார மூவரால் பாடப்பெற்ற ஆட்சிபுரீஸ்வரர் கோயில் நின்றிருந்தது.

ஐந்து மணிக்கு குன்றை விட்டு கீழே இறங்கி ஊருக்குள் சென்று கோயிலை அடைந்தோம். தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோயில். அப்பர் சுந்தரர் சம்பந்தர் பாடிய கோயில். பிரபலமான அப்பமோடு அவல் பொரி பாடலை அருணகிரி நாதர் இங்குள்ள விநாயகர் மீதுதான் பாடினார் என்று நினைக்கிறேன். 2000 இல் எப்போதோ வந்த போது உள்ளதை விட மாறி இருந்தது கோயில். கான்றாஸ்ட் வண்ணங்கள் பூசி கோபுரம் முதல், தரை தளம் வரை அதி சுத்தமாகவும் பளிச் என்றும் இருந்தது கோயில். ஆதீன நிர்வாக கோயில்கள் பிறவற்றை போலவே கோயிலின் உள்ளும் புறமும் எங்கெங்கும் தகர ஷெட்டுகள்.  கோபுரத்தின் அழகை அதன்  சுதை சிற்பங்களை உள்ளே வெளியே என எங்கும் கோபுரம் அருகே நின்று பார்க்கவே முடியாது.

6 மணி வரை கோயிலில் இருந்துவிட்டு புதுவை நோக்கி கிளம்பினோம். பயணத்தின் வழியில் மொபைல் இயக்கி தலைப்பு செய்திகளை மேய்ந்தேன். ஒளரங்கசீப் கல்லறை மாட சர்ச்சை செய்தி கண்டேன். இது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல மெல்ல மெல்ல நிகழ்ந்து வரும் ஒன்றுதான் இது. இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்று கர்லா குடைவரை. மும்முறை சென்றிருக்கிறேன். மூன்றாம் முறை செல்லும்போது அந்த குன்று மொத்தாமாகவே  அங்குள்ள  நாட்டுப்புற வழிபாட்டு அம்மன் கோயில் நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்ப்யபட்டு விட்டது. எங்கெங்கும் கோயில் கடைகள். வலிந்து கொண்டு வந்து குவிக்கப் படும் பக்தர்கள். சாமியாட்டங்கள். (அங்கே உள்ள குடைவரையில் தனக்கொரு கோயில் கட்டும்படி ஒரு சாமியாடி அம்மா மேல் இந்த அம்மா ஆவேசித்து உத்தரவு அளித்து விட்டாள்) அத்தனை பிரம்மாண்ட குடைவரை அங்கே இருப்பதை இப்போது அங்கே செல்பவர்கள் தேடி தான் கண்டு பிடிக்க வேண்டும். சாமியாடி பெண்கள் குடைவரைக்குள் வந்து விடாது இருக்க, பெரும்பாலும் குடைவரை பூட்ட பட்டே இருக்கும். குடை வரைக்கும் முன்பாக அப்படி அங்கே ஒரு குடைவரை இருக்கிறது என்றே வெளியே தெரிந்து விடாத படிக்கு அங்குள்ள அம்மன் முகம் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான டிஜிட்டல் பேனர் கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் இன்னும் கொஞ்சம் வருஷம்தான். அங்கே அப்படி ஒரு குடைவரை இருக்கிறது என்பதை அருகர்களின் பாதை நூல் போன்ற குறிப்புகள் வழியாக மட்டும் தான் இனி ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட விஷயங்களில் வேறொரு பரிமாணம்தான் இத்தகு வேறு வகையான போராட்டங்கள். கொஞ்ச வருடம் முன்பு வீர சிவாஜி வதம் செய்த அப்சல் கான் கல்லறையை அங்கிருந்து பெயர்த்தெடுத்து வீச வேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. யாரோ ஒருவர் குறுக்கே புகுந்து அந்த கல்லறை மாடத்தை கட்டிக் கொடுத்ததே வீர சிவாஜி தான் என்ற வரலாற்று தகவலை அந்த கூட்டத்துக்கு புரிய வைக்க அன்று அந்த கல்லறை மாடம் தப்பியது. ஆனால் பிரச்சனை தொடர கோர்ட் இது சர்ச்சைக்குரிய பகுதி எவரும் வரக்கூடாது என்று உத்தரவு போட்டு அந்த இடத்தை பூட்டி வைத்தது. இப்போது அந்த இடம் என்ன நிலவரத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் லாபம் எவருக்கு என்பது இங்கே தெளிவு.

இதே விளையாட்டு தான் அவுரங்கசீப் கல்லறை மாட சர்ச்சையிலும் நடக்கிறது. பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போனால் இறுதியாக என்ன ஆகும். இது சர்ச்சைக்குரிய பகுதி யாரும் வரக்கூடாது என்று உத்தரவு போட்டு கோர்ட் அந்த இடத்தை பூட்டி வைக்கும். வழக்கம்போல லாபம் எவருக்கு என்பது வெளிப்படை.

இதேதான் தமிழ் நிலத்திலும் முருகன் கோயில் குன்றினை ஏதோ சிக்கந்தர் மலை என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பி அங்குள்ள தர்க்கா வழிபாட்டுக்கு எதிராக இப்படி ஒன்றை நிகழ்த்த பார்க்கிறார்கள். இதில் உண்மையான பலிகடா என்பது (கர்லா குடைவரயில் குரல் அற்று அழியும் பௌத்த வரலாறு போல) தற்கா வணக்கமுறையை கை கொள்பவர்களும்  அந்த தர்க்கா வணக்க காலாச்சாரமும்தான். சர்ச்சையில் சிக்கி தர்கா கையை விட்டுப் போனால், அந்த வழிபாட்டில் உள்ளவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே புகலிடம் மூலநூல் வாதம் பேசும் தரப்பு மட்டுமே. இதே நிலை இப்படியே ஒரு 10 வருடம் தொடர்ந்தால் வரலாறு குறித்தோ பண்பாடு குறித்தோ ஆத்மீகம் குறித்தோ எந்த அறிவும் அற்ற, வன்முறை அரசியல் வெறி மட்டுமே கொண்ட ஒரு  பெரும்பான்மை மூடர் வசம், ஆத்மீகம் கலை பண்பாடு வரலாறு என நமது பாரத செல்வங்கள் அனைத்தும் சென்று விழும்.

எது குறித்தும் எந்த அறிவும் அற்ற பெரும்பான்மை. அங்கே மத அடிப்படை வாதமும் அதிகார அரசியலும் ஒன்று சேர்ந்தால் என்ன என்ன நடக்குமோ அதுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது. உள்ளபடிக்கே இதில் இந்திய பண்பாட்டு ஆர்வலர்களான தனி நபர்கள் சட்ட ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ, களப்பணி ரீதியாகவோ செய்வதற்கு ஏதும் இல்லை. ஆம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. :)

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.