Jeyamohan's Blog, page 135
April 6, 2025
தாவர அறிமுக வகுப்புகள் (சிறார்களுக்கும்)
லோகமாதேவி நடத்திய தாவரவியல் வகுப்புகள் அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய உலகில் செயற்கையான இணையக்கேளிக்கைகளில் அடிமையாகக் கிடக்கும் தலைமுறைக்கு இயற்கையுடன் அறிமுகம் கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக அமைபவை இந்த வகுப்புகள். குழந்தைகளை செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்கு உதவியானவை. இந்த வகுப்புகளில் லோகமாதேவி நம்மைச்சுற்றி உள்ள தாவரங்களை, அவற்றின் விந்தைகளை சுவாரசியமான வகுப்புகள் மற்றும் நேரடி கானுலா வழியாக அறிமுகம் செய்கிறார். முனைவர்.லோகமாதேவி உலக அளவில் முதன்மையான தாவரவியல் ஆவண இதழ்களில் எழுதிவரும் பேராசிரியர்
மே 16 17 மற்றும் 18 programsvishnupuram@gmail.com லோகமாதேவி இணையப்பக்கம் தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது? வனம், வகுப்பு- கடிதம் மந்தாரை- கடிதம் தாவர உலகம், கடிதம் தாவரங்கள், கடிதம் தாவரங்களும் குழந்தைகளும் தாவரங்களின் பேருலகம் தீராத இன்பங்கள் தாவர உலகம், கடிதம் அறிவிக்கப்பட்ட வகுப்புகள்( இடமிருப்பவை)
சிறில் அலெக்ஸ்கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்சிறில் அலெக்ஸ் நடத்தும் மூன்றாவது கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு இது. இதற்கு முந்தைய வகுப்புகள் மிகப்பெரிய வரலாற்று- பண்பாட்டு அறிமுகமாக அமைந்திருந்தன என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
கிறிஸ்தவமே ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படை. கிறிஸ்தவ இறையியலைப் புரிந்துகொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியம், திரைப்படம் எதையும் சரிவர அறிய முடியாது. ஐரோப்பியப் பண்பாட்டை ஒட்டியே நாம் வாழும் இன்றைய நவீனப்பண்பாடும் உருவாகியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களேகூட கிறிஸ்தவ இறையியலையோ, வரலாற்றையோ அறிந்தவர்கள் அல்ல. வெறும் பக்தியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள், எஞ்சியோர் எதையும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நவீன வாசகன் உலகசிந்தனைக்குள் நுழைவதற்கு கிறிஸ்தவ இறையியல் அறிமுகம் மிக அவசியமானது. இந்து மெய்யியலை முழுதறியவும்கூட அதை அறிவதும் ஒப்பிடுவதும் அவசியமானது. சிறில் கிறிஸ்தவ இறையியலை முறையாகக் கற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்கூட. நிதானமான, நகைச்சுவையுணர்வுகொண்ட பேச்சாளர். இக்கல்வியை அளிக்க முதன்மைத் தகுதி கொண்ட ஆளுமை
நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13தொடர்புக்கு programsvishnupuram@gmail.com கிறிஸ்தவக் கல்வி இந்து ஆன்மிகத்திற்கு எதற்காக? கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம் கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம் பைபிள், கடிதங்கள் விவிலிய தரிசனம்(பறவைபார்த்தல் வகுப்புகளில் இடங்கள் நிறைவு)
[image error] ஆலயக்கலை அறிமுகம்
ஜெயக்குமார் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளில் சென்ற மூன்றாண்டுகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் திருப்புமுனை நிகழ்வென்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். நம் கலைச்செல்வங்களை, நம் மரபை ஒரே வீச்சில் அறிமுகம் செய்து ஒரு புதிய உலகுக்கு அழைத்துச்செல்லும் வகுப்புகள் இவை. இந்தியாவின் மகத்தான இந்து, பௌத்த, சமண ஆலயங்களின் கட்டமைப்பு, சிற்பங்களின் அழகியல் ஆகியவற்றை இந்த வகுப்புகள் வழியாக ஜெயக்குமார் கற்பிக்கிறார்.
நாள் மே 23 24 மற்றும் 25
வைணவ இலக்கியம்
ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார். வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்வதென்பது ஒருபக்கம் வைணவ தத்துவம் மறுபக்கம் சங்ககால அகப்பாடல்களில் இருந்து தொடர்ந்து வரும் தமிழ் அழகியல் மரபு இரண்டையும் அறிந்துகொள்வதுதான். இரண்டிலும் பயிற்சி உடைய ஒருவர் மட்டிலுமே அவ்வகுப்பை நடத்த முடியும். வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
நாள் மே 30 31 ஜூன் 1
நாலாயிரம் கடிதம் பிரபந்த வகுப்பு கடிதம் பிரபந்தக் கல்வி, கடிதம் நாலாயிரம் கடிதம் பிரபந்தம், கடிதம் கண்ணனை அறிதல், கடிதம் வைணவம் கல்வி பிரபந்த வகுப்பு கடிதம் வைணவத்தை அறிதல் வருமாறு ஒன்றில்லையேல்…April 5, 2025
நித்யாவின் காதல்பாடல்கள்.
குரு நித்ய சைதன்ய யதி இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். அது ஒரு தற்செயலாக நிகழ்ந்தது. அவருடைய மாணவரான இசைவாணர் ஒருவர் அவர் எழுதிய கட்டுரைகளில் இருந்து அழகிய வரிகளை எடுத்து இசையமைத்து அவர் முன் பாடினார். அவருக்காக நித்யா எழுதியபாடல்கள் அவை. பின்னர் அவை வெவ்வேறு இசைநிபுணர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன. கேரளத்தில் புகழ்பெற்ற பாடல்களாகவும் உள்ளன.
நித்ய சைதன்ய யதி அத்வைதி. அவருடையது தூய அறிவின் வழி. வாழ்நாள் முழுக்க எந்த ஆலயத்திலும் வழிபட்டவரோ, எந்த தெய்வத்தையும் வணங்கியவரோ அல்ல. அவருடைய முன்னோடியான நாராயண குரு அத்வைதியானாலும் ஆறுமதங்களுக்குரிய துதிகளும் பாடல்களும் எழுதியவர். சங்கரரே அவ்வாறு ஆறு மதங்களுக்கும் துதிகள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நடராஜகுரு ஆலயவழிபாடு, பக்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.
நித்யாவின் பாடல்கள் பெரும்பாலும் பிரம்ம அனுபவம் சார்ந்தவை. அவ்வனுபவத்தை இசை என்றும் இயற்கையென்றும் விரித்துக்கொள்பவை. தெய்வங்கள் மிக அரிதாகவே வருகின்றன. அவரை எவரென்றே தெரியாத ஒருவர் இப்பாடல்களைக் கேட்டால் அவையெல்லாம் காதல்பாடல்கள் என்று எண்ணிக்கொள்ள எல்லா வாய்ப்பும் உண்டு. பெரும்பாலான பாடல்களில் ‘நீ’ ‘நான்’ என்னும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்றையொன்று அறியத்துடிப்பவை, ஒன்று இன்னொன்றில் கரைய விழைபவை.
இசைப்பாடல் என்பது கற்பனாவாதத்திற்குரியது. அத்வைதம் தூய அறிவின்பாற்பட்ட தர்க்கம் என்றே அறிந்திருக்கிறோம். கற்பாறையில் மலர் விரியுமா? விரியும். அந்த விந்தையைத்தான் நாம் அத்வைத இலக்கியங்களில் திரும்பத் திரும்பக் காண்கிறோம். சங்கரர் இந்தியா கண்ட மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று எப்போதுமே தோன்றிவந்திருக்கிறது. இன்று எண்ணும்போது குமாரனாசான் பாரதி வரை இந்தியாவின் மிகச்சிறந்த கற்பனாவாதக் கவிஞர்கள் அத்வைதிகள் என்பதும் வியப்பாக இருக்கிறது.
அத்வைதத்தில் ஒரு பெருந்தரிசனம் உள்ளது. இப்பிரபஞ்சத்தை எண்ணி அளக்கமுடியாத முடிவிலியாக, பெருந்திகைப்பாக மட்டும் பார்க்கும் ஓர் உச்சநிலை. இன்னொரு பக்கம் புல்நுனிப் பனித்துளியாக அதை ஒவ்வொன்றிலும் காணும் பெருநிலை. இரண்டையும் உணர்வுத்தளத்தில் கற்பனாவாதமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நித்யாவின் பாடல்கள் அந்த நெகிழ்வையும் களிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துபவை. ‘நித்ய சைதன்ய கீதங்கள்’ என்ற பேரில் நூலாக வந்த அப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையில் இசையாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
ஒரு பிந்துவாய் ஞான் ஒழுகி வந்நூ
ஒரு சிந்துவாய் நீ புல்கி என்னை
விரியும் என் ஆத்மாவின் பூர்ணிம நீ
அலியுந்நூ நின்னில் ஞான் நித்யமாயி
எத்ரயோ ஜென்மங்கள் ஸ்வப்னமாய்
நின்னே அணயுவான் மோகமாயி
ஞான் கண்ட ஸ்வப்னங்கள் எத்ர துச்சம்
நின் ஆனந்த சாகர பிரம்ம தத்வம்
*
( ஒரு துளியாய் நான் ஓடிவந்தேன்
ஒரு சிந்துவாய் நீ என்னை தழுவினாய்
விரியும் என் ஆத்மாவின் முழுநிலவு நீ
கரைகிறேன் நான் உன்னில் நித்யமாய்
எத்தனையோ ஜென்மங்கள் கனவாக
உன்னை அடைய விரும்பினேன்
நான் கண்ட கனவுகள் எத்தனை அற்பம்
உன் ஆனந்த சாகர பிரம்ம தத்துவம்)
அனுஷியா சேனாதிராஜா
[image error]ஈழத்துப்பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், பேராசிரியர், பெண்ணியச் செயல்பாட்டாளர்.
அனுஷியா சேனாதிராஜா
அனுஷியா சேனாதிராஜா – தமிழ் விக்கி
காட்டில் தொலைதல்- கடிதம்
காடு நாவலை வாசித்து முடித்ததிலிருந்தே உங்களுக்கு எழுத வேண்டும் என எண்ணி வந்தேன். ஒரு வார காலம் என் மனம் சந்தனக்காட்டை சுற்றிக்கொண்டும் பேச்சிப்பாறையை கற்பனை செய்து கொண்டும் செந்நாய்களின் ஊளையை கேட்டுக்கொண்டும் அய்யரின் பங்களாவைச் சுற்றிக் கொண்டும் குட்டப்பனைப் போல் பேசிக் கொண்டும் கழிந்தது.
காடு நாவல் இரண்டு விதங்களில் எனக்கு முக்கியமானதாக இருந்தது. முதலாவது நான் பள்ளி கால்லூரி நாள்களில் மிகத் தீவிரமாக கதைகளையும் நாவல்களையும் வாசிப்பவன். ஆனால் வேலையில் சேர்ந்த கடந்த 7 ஆண்டுகளாக வாசிப்பு படிபடியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. அதற்கு பணிச்சுமை, நேரமின்மை, குடும்பச் சூழ்நிலை என பல்வேறு காரணங்கள். காடு என்னை மீண்டும் வாசிப்புக்குள் சட்டையை பிடித்து இழுத்து வந்து அமரவைத்துவிட்டது. நாவலை வாங்கி வந்து படிக்க தொடங்கி மூன்று நாள்களில் முடித்துவிட்டேன். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி வாசித்துக்கொண்டே இருந்தேன். சமீபகாலமாக என்னை இவ்வளவு தீவிரமாக எந்த நூலும் ஆட்கொண்டதில்லை. இதனால் என் வாசிப்பு பழக்கம் மீண்டும் என்னை வந்து சூழ்ந்து கொண்டது போல உணர்கிறேன்.
இரண்டாவது பள்ளி இறுதியாண்டுகளிலும் கல்லூரி காலங்களிலும் புத்தக வாசிப்புடன் கவிதை செய்யுள்கள் போன்றவற்றையும் ஆர்வமுடன் படித்து வந்தேன். குறிப்பாக கல்லூரியில் தமிழாசிரியர்களுடன் செய்யுள்கள் பற்றி பேசிவதையும் விவாதிப்பதையும் புது புது தமிழ்ச் செய்யுள்களைக் கேட்டு விரித்துரைக்கச் சொல்லுவதையும் வழக்கமாக வைத்திருந்தேன். முன்பு கூறியது போல வேலையில் சேர்ந்தபின் இதுவும் நின்று போனது. காடு நாவலில் வந்துள்ள சங்கப்பாடல்கள் அதுவும் கபிலரது பாடல்கள் மீண்டும் என்னைச் செய்யுள்களை நோக்கி தள்ளின. வீட்டிலிருந்த தமிழ் செய்யுள் புத்தகங்களை எடுத்து மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
குறுந்தொகை படிக்க வேண்டும் என்ற ஆசையில் எங்கள் ஊரிலிருக்கும் இரண்டு புத்தக கடைகளில் தேடினேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சரி இணையத்தில் வாங்கலாமென்று இருந்த சமயத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அந்நூலில் சங்க நூல்களில் கபிலர் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்து கபிலம் என்றொரு நூல் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். நான் இரண்டு நாள்களுக்கு முன் எங்கள் ஊரிலுள்ள கிளை நூலகம் ஒன்றில் என்னுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பித்து, புத்தகங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் குறுந்தொகையும் கபிலம் புத்தகமும் கிடைத்தன. இரண்டுமே குறிப்புதவிக்காக வைக்கப்பட்டிருந்தன. நான் நூலகரிடம் வேண்டுகோள் வைத்து இரண்டு நூல்களையும் நான் எடுத்துச் சென்று படித்து வருகிறேன் என கோரினேன். அவர் இரண்டு புத்தகத்தையும் வாங்கி பிரித்து பார்த்துவிட்டு இதுவரை யாரும் இவற்றை எடுத்துக்கூட பார்க்க வில்லை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள் என கூறினார். கபிலம் என்ற நூலை முனைவர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் தொகுத்து உரையும் அளித்துள்ளார். NCBH பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தைப் பிரித்து பார்த்தவுடன் என்னை வியப்பில் ஆழ்த்தியது புத்தகத்தைப் பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்தும் அதை அட்டையிலேயே அவர்கள் பதிப்பித்துள்ளதும். காடு நாவலுக்கு முக்கியமான ஊக்க சக்தியாக இருந்த நூல் என குறிப்பிட்டுள்ளதை படித்தவுடன் மனம் கூறவியலா வியப்பில் ஆழ்ந்தது. கபிலரை நான் படிக்க வேண்டும் என்பது ஊழா என தெரியவில்லை, காடு நாவலில் ஆரம்பித்தது எங்கெங்கோ சுற்றி கபிலத்தை வந்தடைந்துவிட்டது.
சென்ற மாதம் வெள்ளி மலையில் தாவரங்கள் மற்றும் சூழியல் வகுப்பு முடிந்து வந்தவுடன் காடு நாவல் வாசிக்கத் தொடங்கியதால் தாவரங்களின் பால் உள்ள ஈடுபாடு மேலும் அதிகரித்துள்ளதைப் போல தோன்றுகிறது. காஞ்சிரம், மஞ்சனாரி, பலா, சந்தனம், வேங்கை போன்ற மரங்களையும் இன்னும் எங்கள் ஊரில் இருக்கும் மரங்களையும் அடையாளம் கண்டு தேடி படித்தும் வருகிறேன். எங்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் அருகில் உள்ளதால் அவற்றை பார்த்தே வளர்ந்துள்ளேன். எனினும் கபிலரது பாடல்களை படிக்கும் பொழுதும் காடு நாவலில் உள்ளது போன்ற நல்ல விவரணைகளை படிக்கும் பொழுதும் மலைகள் வேறு ஒரு பரிணாமத்தில் எழுந்து நிற்கின்றன.
வாழ்க்கையின் பல கதவுகளை திறந்துவிடும் ஒரு பொருளாக காடு நாவல் அமைந்தது என்பதில் மிகையில்லை. நன்றி.
கார்த்திக்ராஜா, பழனி.
அசலம், கடிதம்
ஆசிரியருக்கு,
“அசலம்” அசலாக நான் உணர்ந்த மாதிரியே இருக்கிறது. என்னுடைய தகப்பனார் ஊர் ஆனைப்பாறையின் மேற்காக அமைந்திருக்கும் வில்லுக்குறி கீழப்பள்ளம். வீட்டு வாசலின் நேர் கிழக்கே இந்த ஆனைப்பாறை.அசலம்.காலம் காலமாக நிற்கிறது சாட்சியாக; தந்தையார் மறைவு, பல திருமணங்கள்,பல மரணங்கள் பல வருத்தங்கள் சோகங்கள் என, ஆனைப்பாறை சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. நான் தற்போது வசிப்பது என்னுடைய தாய் வீட்டில் தோவாளையில் எனினும் வாசலின் மேற்கே ஆனைப்பாறை .தினமும் தொழுவேன்.க.நா.சுப்பிரமணியத்தின் காஞ்சன்ஜங்கா கவிதை போல கண்தான் மங்கிவிட்டது.தந்தையார் ஊருக்கு அடிக்கடி தற்போதும் செல்வேன்.பழைய தோட்டியோடு தாமரைகுளத்தில் தாமரைகள் இல்லை டைல்ஸ் கடைகள்.நாலுவழிச்சாலை.
நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையின் அருகே வில்லுக்குறியிலிருந்து வேளிமலைக்கு வயல்வழியாக நடந்து குமாரகோவில் கடைசி வெள்ளி அன்று ஒரு சிறுவர் பட்டாளம் சித்தப்பாமார்களுடன் செல்வோம்.வழியில் வள்ளியாறு தெளிந்த நீரோடை.கால்களை நனைத்து கொண்டாடுவோம்.சிவராத்திரியில் சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் மேலாங்கோட்டிலிருந்து இதே வயல்வழியில் வந்து திருவிடைக்கோடு சிவனை தொழுவார்கள்.வழியில் எங்கள் குடும்ப வலியவீட்டின் முன்பு நீராகாரம் மற்றும் சிற்றுண்டிஅன்னதானம் கொடுப்போம். நூறு வருடங்களுக்கு மேலாக நடக்கிறது.தற்போது வலியவீட்டின் இளைய தலைமுறை சிறப்பாக இப்பணியை செய்து வருகிறது. எங்கள் குடும்பமும் குடும்பக்கோவிலும் ஆனைப்பாறையின் அடிவாரத்தில் மருவத்தூர் என்ற கிராமத்தில் வாழ்ந்ததாக சரித்திரம். அண்மையில் சகோதரர்களுடன் குழந்தைகளுடன் சென்று இயற்கையை வணங்கி திரும்பினோம். பல நினைவுகள் அசலமாக ஆனைப்பாறையைச்சுற்றி வருகிறது.சில வேளை நினைப்பதுண்டு. நாம் வாழும் வாழ்க்கைக்கு இத்தகைய அசலம்தான் மெளனமாக சாட்சியாக இருக்கிறது. நம் உறவினர்களோ சொந்தங்களோ அல்ல.மீண்டும் கட்டன் சாயாவுடன் ஆனைப்பாறையை பார்த்து ரசித்து தொழுது கொண்டே எழுதுகிறேன்.உங்கள் அசலம் அசல். நன்றி.
தா.சிதம்பரம்.
Acceptance of international participants
If you do accept international participants, could you kindly provide more details about your programmes that I would need to know? Additionally, do let me know if you require any further information from me. Thank you.
கல்வி நிகழவேண்டிய காடு பற்றிய உங்கள் காணொளி சிறப்பு. நீங்கள் சொல்லும் அந்த மழைக்கால ‘மூட்’ எனக்கும் காடுகளில் பலமுறை உருவானதுண்டு. அங்கே பெய்யும் மழை வேறெங்கும் பெய்வதில்லை என்று தோன்றும். சொல்லப்போனால் அங்கே அடிக்கும் வெயிலும் வேறுதான்
கல்விக்காடு, கடிதம்April 4, 2025
On Men Women and Witches- An invitation
On Men, Women, and Witches is my new book published by Juggernaut Publications, translated by Sangeetha Puthiyedath from Malayalam to English. It is a collection of autobiographical sketches, fictionalized to highlight its inner truth.
Of Men, Women and Witches – Amazonநமது குழந்தைகள், நமது பெற்றோர்
அன்புள்ள ஜெ சர்,
ராம் சிதம்பரத்தை நான் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் சந்தித்தேன், உங்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் விருது வழங்கப்பட்ட நாளில்.
எட்டாம் வகுப்பில் இருக்கிறான்.நம் நீண்டகால நண்பர் காரைக்குடி நாராயணன் மெய்யப்பனின் மகன்.நீண்டு விரிந்த அந்த Doomed!(J’s pun) University வளாகத்தில் நாம் நடந்து செல்கையில், சில செடிகளை, மலர்களை, மரங்களை சுட்டி அதன் பெயர்கள் என்ன என அவனிடம் கேட்டபடி அவனுடன் நடந்து கொண்டிருந்தேன்
ஒரு மரத்திடம் ஓடிச்சென்று அதன் இலையை பறித்து கசக்கி முகர்ந்து ‘கொய்யா!’ என்றான்.‘அந்த மரத்தோட எலய கசக்கி மோந்து பாத்தா அந்த காயோட smell வரும்‘ என்றான்.பிறகு மதிய வெயிலில் அவன் கழுத்தில் எப்போதும் இருந்த Binocularஉடன் பறவைகள் பார்க்க அந்த வளாகத்தில் சுற்றி கொண்டிருந்தான்.
அப்போது நாங்கள் நண்பர்கள் விருந்தினர் இல்லத்தின் வரவேற்பறை இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வெயிலில் வாடி சற்று சோர்வுடன் உள்ளே வந்த அவன் ஒரு இருக்கையில் சாய்ந்து கொண்டான்.சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் தொட்டியில் வளரும் ஒரு செடியின் இலைகளை சுட்டி, ‘இந்த செடியோட இலைங்க ஏன் ஓட்ட ஓட்டயா இருக்கு‘ எனக் கேட்டான்.
விழிகள் போன்ற
துளைகள் கொண்ட
இலைகள் கண்டு
அவன் தனக்குள் வினவிக்கொண்டான்.
அதை பற்றி அங்கு வேறு யாரும் பேசியிருக்கவில்லை.
(ராம் சிதம்பரத்தின் சில எழுத்துக்கள், இந்த இணைப்பில்)
https://daily.navinavirutcham.in/?p=28460
வேணு வேட்ராயன்
அன்புள்ள வேணு,
ராம் சிதம்பரம் கொண்டிருக்கும் பறவை ஆர்வம் நம் பறவைபார்த்தல் வகுப்பின் வெற்றிகளில் ஒன்று. திண்டுக்கல்லில் அவருடைய ஆர்வத்தையும் தீவிரத்தையும் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன். அந்த வயதுக்குரிய தீவிரம். எனக்கு போதிய அளவுக்கு பறவைகளைப் பற்றி தெரியவில்லை என்று பையன் கருதியதாகத் தோன்றியது. சைதன்யாவுடன் சென்று பறவைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
பலர் அப்போதே அவருடைய ஆர்வத்தைப் பற்றிச் சொன்னார்கள். ஒருவர் “இந்த வயசுப்பையன்கள்லாம் செல்போன் அடிக்டுகள்தான் சார். செல்போன் குடுக்கலைன்னா மூர்க்கமாயிடுவானுங்க. குடுத்தா அதிலே கேம் வெளையாடுறது, அப்டியே பப்ஜி மாதிரி குரூரமான வெளையாட்டுக்குப் போயிடறது…. எப்டி என்ன பண்ணி தடுக்கிறதுன்னே தெரியலை…. இவன் இப்டி இயற்கை, பறவைன்னு இருக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்றார்.
“என்ன பண்றதுன்னு தெரியல்லைன்னு சொல்றது தப்பு. எல்லாருக்கும் தெரியும், என்ன பண்றதுன்னு. அதைச் செய்யமாட்டாங்க. காரணம் பதற்றம், போலிப்பெருமை…” என்றேன். “குழந்தைகளுக்குப் படிப்பு முக்கியம். அதிலே கவனம் குவிக்கணும். ஆனா புத்திசாலியான குழந்தையை படிப்பு படிப்புன்னு வளர்க்க முடியாது. அதோட மூளை கூர்மையானது, அந்த மூளைக்குத் தீவிரமான செயல்பாடுகள் தேவை. கற்பனை நிறைஞ்ச, நேரடியாக ஓடியாடிச் செய்யவேண்டிய செயல்பாடுகள் இருக்கணும்… அந்தக்குழந்தையை படி படின்னு ஒரு பக்கமா அழுத்தினா அது தனக்கான தப்பும்வழிகளை கண்டுபிடிக்கும். அதான் இந்த கேம் வெளையாட்டுகள். அதில் அப்டி ஒரு தீவிரம் இருக்கு. படிப்பு குடுக்காத பரபரப்பையும் வேகத்தையும் அது குடுக்கும்…”
“ஆனா வயலண்டா ஆயிடுதே?” என்றார்.
“ஆமாம், ஏன்னா அது கமர்ஷியல் தயாரிப்பு…. லாபம்தான் நோக்கம். அந்த உலகத்திலே போட்டி அதிகம். ஆகவே மேலும் மேலும் அந்தத் தயாரிப்புகளை தீவிரப்படுத்திக்கொண்டே செல்லவேண்டும். இன்றைய முதலீட்டியச் சூழலில் ஒரு பொருளை மக்கள் ஏற்பு பெறச்செய்யவேண்டும் என்றால் அதில் காமம் அல்லது வன்முறை இருந்தாகவேண்டும், ஏனென்றால் அவையே இயல்பாக கவனத்தைக் கவர்கின்றன. அதை இயல்பா எடுத்துக்க வேண்டியதுதான். கேம் விளையாடுறவங்க ஒரு கட்டத்திலே சொந்த படிப்பையும் வேலையையும் கவனிச்சுக்கிடுவாங்கன்னு எடுத்துக்கிடவேண்டியதுதான். அதான் இன்றைக்குள்ள பொதுவான வாழ்க்கைச்சூழல்…”
“ஆனா உண்மையிலே அப்டி இல்லை சார். படிப்பு சிதறிடுது. கவனம் எதிலேயும் நிக்கிறதில்லை”
“அதுவும் இந்த காலகட்டத்தோட பொதுவான போக்குன்னு எடுத்துக்கிடவேண்டியதுதான். இன்றைக்குள்ள பொதுமீடியாவிலே நேரடியா கட்டணம் இல்லை.ஆனா கட்டணம் இல்லாம ஒரு சேவை முதலீட்டியச் சூழலிலே இருக்கவே முடியாது. மறைமுகக் கட்டணம் உண்டு, விளம்பரம்தான் அது. விளம்பரத்துக்கான தரவுச்சேகரிப்பும் அடக்கம். அதுக்கு ஒருத்தர் நீண்டநேரம் இணையத்திலே இருக்கணும். மிக அதிகமான இணையதளங்களைப் பாக்கணும். அதனாலே நிகழ்ச்சிகளோட நேரத்தை குறைச்சுகிட்டே வராங்க…இப்ப முப்பது செகண்ட் ஆயிட்டுது… அதைப் பாத்து பழகிட்டா கவனம் நிக்காது. பரபரப்பா இருப்பாங்க, ஆனா எதையுமே கூர்ந்து செஞ்சு முடிக்க முடியாது”
“ஆமா சார்” என்றார் நண்பர்
“ஆனா அதுவும் இப்ப உள்ள வாழ்க்கைமுறைக்கும் வேலைக்கும் பொருந்துறதுதான். இவங்க என்ன வேலை பெரிசா செஞ்சிரப்போறாங்க? வேற அறிவியலாளர்கள் உண்டுபண்ற மென்பொருளுக்கு நிரல் எழுதுவாங்க. சிக்கல்களைச் சரி செய்வாங்க. அதுக்கு பிராப்ளம் சால்விங் திறமை மட்டும் போதும். ஒரு நடைமுறை அறிவுதான் அது. கற்பனை சிந்தனை எல்லாம் தேவை இல்லை. அந்த வேலையைச் செய்ய இந்தவகையான பிள்ளைங்களாலே முடியும். சம்பளம் கிடைக்கும். சம்பாதிப்பாங்க, செலவழிப்பாங்க… இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களை பார்த்துட்டு வாழ்வாங்க. அரசியல் பொருளாதாரம் ஒண்ணும் ஆர்வமிருக்காது… சாப்பிடுவாங்க, சுத்துவாங்க, பார்ட்டி பண்ணுவாங்க.அதான் மாடர்ன் லைஃப். அதுக்கு எதுக்கு கூர்ந்த கவனம்? இதனாலே எந்தப் பிரச்சினையும் இல்லை. இது நார்மல்தான்” என்றேன்.
“நீங்க இப்டிச் சொல்வீங்கன்னு நினைக்கவே இல்லை” என்றார்.
“நான் எதையும் மிகையாக்கிச் சொல்ல விரும்பலை….ரொம்ப குறைவான குழந்தைகளுக்குத்தான் சராசரிக்கு மேலான அறிவும் நுண்ணுணர்வும் இருக்கு. நாம எல்லா குழந்தைகளையும் சராசரியா ஆக்கத்தான் முயற்சி பண்ணிட்டே இருக்கோம். பெரும்பாலும் எல்லா குழந்தையும் சராசரியா ஆயிடுது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற குழந்தைதான் சிதறிப்போயிடுது… அந்த அபாயம் இருந்துட்டேதான் இருக்கு”
“அதுக்கு என்ன பண்றது? அதைத்தான் கேட்க வர்ரேன்” என்றார்.
“அதுக்கான வழி அந்தக் குழந்தையோட கற்பனைக்கும் சிந்தனைக்குமான ஒரு உலகத்தை சின்னவயசிலேயே அறிமுகம் செய்றதுதான். வாசிப்பு, இயற்கையோட இணைந்திருக்கிறது ரெண்டும்தான் அதுக்கான வழி. ஒரு கட்டத்துக்குப்பிறகு சொந்தமா எதையாவது உருவாக்கிறதுக்குள்ள நுழையவைக்கணும். எழுதலாம், ஆராய்ச்சி செய்யலாம், பயணம் செய்யலாம்…கூடவே படிப்பையும் கொண்டுபோனா அந்தக்குழந்தைக்கு கவனக்குவிப்பு இருக்கும். இன்னைக்குள்ள சிதறல்கள் இருக்காது” என்றேன். “ஆனா பிரச்சினை இருக்கிறது நம்ம பெற்றோர்கள்கிட்டதான். அவங்க குழந்தை வளக்கிறது குழந்தைக்காக இல்லை, தங்களுக்காக”
நான் அதற்கு முந்தையநாள் வந்த ஓர் உரையாடலைச் சொன்னேன். ஒருவருக்கு தன் மகனை பறவைபார்த்தல் வகுப்புக்கு அனுப்ப ஆசை. அவனுக்கும் ஆசை. ஆனால் அவன் அம்மா சம்மதிக்கவே இல்லை. கோடைகாலம் முழுக்க வெவ்வேறு வகுப்புகளை ஏற்பாடு செய்துவிட்டார். எல்லாமே அடுத்த ஆண்டு பள்ளிக்கல்விக்கான முன்பயிற்சிகள்.பையன் நன்றாகப் படிப்பவன், அதெல்லாம் தேவையே இல்லை. ஆனால் அது அந்த அம்மாவின் மானப்பிரச்சினை. அவருடைய வட்டத்தைச் சேர்ந்த எல்லா பெண்களும் தங்கள் குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இவர் பையன் போகாவிட்டால் கௌரவம் அல்ல, கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது.
ஆண்டுக்கு ஐந்துக்கு மேல் பெற்றோர்கள் அதீதமான படிப்பு அழுத்தம் காரணமாக உளச்சோர்வுக்கு ஆளான குழந்தைகளுடன் எங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் அவர்களை உளவியலாளர்களிடமே செல்லச்செய்கிறேன். ஏனென்றால் அச்சிக்கல் உருவானபின் அவர்களே உதவமுடியும். அதற்கு முன்பு என்றால் தில்லை செந்தில்பிரபு அல்லது குருஜி சௌந்தர் உதவலாம். அவர்களும் பலருக்கு உதவியுள்ளனர். அந்நிலைக்குச் செல்வதற்கு முந்தைய நடவடிக்கை என்பது இளமையிலேயே இயற்கையுடன் வாழச்செய்தலே. அதை நம்மவர் செய்வதில்லை, அவர்களின் கணக்குகள் வேறு, பதற்றங்கள் வேறு.
ராம் சிதம்பரம் தனித்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அவரது ஆரம்பக்கல்வி அமெரிக்காவில். அவர் அப்பா மெய்யப்பன் அமெரிக்கப் பணியை உதறி இந்தியா வந்தவர். இயற்கைவேளாண்மை செய்கிறார், கணிப்பொறித்துறை பணியையும் தொடர்கிறார். அவருக்கும் இன்றைய சூழல் தெரியும். நாம் குழந்தைகளை அவர்களுக்குரிய உலகங்களை நோக்கி கொண்டுசெல்லவே முடியும். அவர்கள் வெல்வது அவர்களின் தனித்திறமையால். அந்தவகையான ஒரு வழியை மகனுக்குக் காட்டியுள்ளார்.
ஜெ
சித்திரக் கதைகள்
1948-ல் வெளிவந்த ‘டமாரம்’ இதழில் ‘சித்திரக் கதை’ இடம் பெற்றது. 1949-ல் ‘சித்திரக்குள்ளன்’ சிறுவர் இதழிலும் ’காட்டுச்சிறுவன் கண்ணன்’, ‘வேதாள உலகத்தில் விச்சு’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன. இவையே தமிழின் முதல் சித்திரக் கதைகளாகக் கருதப்படுகின்றன.
சித்திரக் கதைகள் – தமிழ் விக்கி
க. நா. சு. உரையாடல் அரங்கு – எம். கோபாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் கூடுகைகள் இப்பொழுது அமெரிக்க மாநிலம் வாரியாகவும் நகரங்களை மையப்படுத்தியும் நடப்பதை தாங்கள் கவனித்திருப்பீர்கள். டாலஸ் நண்பர்கள் இருவாரத்திற்கு ஒரு முறை சந்தித்து வெண்முரசு வரிசையில் இமைக்கணம், புதுமைப்பித்தனின் காஞ்சனை என கலந்துரையாடுகிறார்கள். கலிபோர்னியா பே ஏரியா-வில், மாதமொரு முறை குறைந்தது முப்பது முப்பந்தைந்து நண்பர்கள் ஒரு நூலகத்தில் கூடி, கு.பா.ரா. நா. பிச்சமூர்த்தி, பா. சிங்காரம் என இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் குறித்துப் பேசி விவாதம் செய்கிறார்கள். இந்தக் கூடுகையில் படைப்பாளிகளை கண்டு பேசமுடியவில்லை என்ற ஒரு குறை உண்டு. அதை நிவர்த்திசெய்யும் பொருட்டு க.நா.சு. உரையாடல் அரங்கை தொடந்து நடத்தலாம் என உள்ளோம்.
வருகின்ற சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) இணையவழி அரங்கிற்கு, திருப்பூரை, அதன் சுற்றுவட்டாரத்தை, நெசுவுத் தொழிலை தனது யதார்த்தவாத புனைவுகளின் வழியாக பதிவு செய்து வாசகர்களுக்கு வாழ்க்கையை மாயம் எதுவும் இல்லை நிஜம்தான் எனக் காட்டும், எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களை விருந்தினராக அழைத்துள்ளோம். நாங்கள் அவரை அணுகி தேதி குறித்துப் பேசி இரு மாதங்கள் இருக்கும். நண்பர்கள், கிண்டிலிலும், இந்தியா சென்று திரும்பிய நண்பர்களிடம் சொல்லி அனுப்பி என ஆசிரியரின் நூல்களை வாங்கி வாசித்து, சக நண்பர்களுக்கு அவரவரது அவதானிப்புகளை குறிப்புகள் எழுதி விவாதித்து தயார் நிலையில் உள்ளார்கள். எம். கோபாலகிருஷ்ணன் படைப்புகளை வாசிப்பின் வழியாக அறிமுகம் ஆன அளவிற்கு அவரை நேரில் சந்தித்து அளவளாவியது குறைவு என்பதால், நண்பர்கள் மிக்க ஆர்வமுடன் அவரை சந்திக்க காத்திருக்கிறார்கள். தங்களையும், உலகம் முழுக்க விரவியிருக்கும் வாசக நண்பர்களையும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2025, மாலை 7:30 மணி IST / காலை 9:00 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
7:30 PM IST / 9:00 AM CST : வாழ்த்துப்பா
7:35 PM IST / 9:05 AM CST : அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
7:40 PM IST / 9:10 AM CST : வேங்கை வனம் நாவலை முன்வைத்து சிறப்பு உரை – விவேக் சுப்ரமணியன்
7:55 PM IST / 9:25 AM CST : தனியன் சிறுகதையை முன்வைத்து சிறு உரை – பிரசாத் வெங்கட்
8:05 PM IST / 9:35 AM CST : கேள்வி பதில் நேரம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com / contact@vishnupuramusa.org
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

